1
அலுவலகக் கொண்டாட்டத்தில் மீதமாகி அந்தக் கடைநிலை ஊழியன் வீடு கொணர்ந்த பீட்ஸா பெட்டியை அவன் மனைவி பிரிக்கையில் அதில் இரண்டு துண்டங்களிருந்தன.
பீட்ஸா அந்த வீட்டிற்கு மிகப்புதிது. இந்த இரண்டை மூன்றாய்க் கூறுபோட வேண்டும். எப்போதும் இதேதான். யாரும் விட்டுத்தர மாட்டார்கள். பற்றாக்குறைப் பட்டுவாடாதான்.
முதலில் பெண். அடுத்ததாய் ஓர் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட, இரண்டாய்ப் பிறந்தது.
கிட்டிய கொடை அவர்கள் சக்திக்கு மீறியது. எல்லாவற்றிலும் சமரசம் தேவைப்பட்டது. இத்தனைக்கும் அவளும் புருஷனும் தமக்கேதும் வேண்டாமெனத் தியாகம் செய்வர்.
கத்தி எடுத்துத் துணியில் துடைத்து பீட்ஸாவை எப்படிப் பங்கிடுவதென யோசித்தாள். எத்தனை முயன்றும் அந்த முக்கோணத் துண்டுகளைச் சரிசமமாய்ப் பங்கிடுகிற கேத்திர கணிதம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி தவறவிட்ட அவளுக்குப் பிடிபடவில்லை.
இரட்டையில் ஒன்று இறந்து பிறந்திருக்கலாம் என ஒருகணம் அவளுக்குத் தோன்றியது.
திடுக்கிட்டாள். தலையை உதறினாள். கையிலிருந்த கத்தியை கீழே வைத்துவிட்டு ஒரு துண்டை மகளுக்கும் மற்றதை மகன்களுக்கும் கொடுத்தாள். நிம்மதியாய் உணர்ந்தாள்.
*
2
அந்த க்ரைம் நாவலின் கடைசிப் பக்கம் காணாமலாகியிருந்தது. அதை நான் பழைய புத்தகக் கடையில் ரூ.5க்கு வாங்கியிருந்தேன். (நாற்பதாண்டு முன் அசல் விலை ரூ.2.)
கதை அப்படியொன்றும் சுவாரஸ்யமில்லை. நடையும் திராபை. ஆனால் அதற்கு என் வாழ்க்கையோடு தொடர்பிருந்தது. அதனால் முடிவறியும் அழுத்தத்தில் இருந்தேன்.
அந்தப் பத்திரிகையை இப்போது மூடிவிட்டார்கள். ஏதேனும் பதிப்பகத்தில் நூலாக வந்திருக்கிறதா எனத் தேடினேன். இல்லை. ஃபேஸ்புக்கில் அறிவித்து சிரமப்பட்டு நான்கைந்து பேரைச் சங்கிலித் தொடராகப் பிடித்து, எழுதியவரின் முகவரி பிடித்து (“ரொம்ப வயசுக்காரர். இப்ப இருக்காரேன்னே தெரியலைங்க.“) காலையில் நேரில் போய் நின்றேன். தடித்த கண்ணாடியுடன் அதிர்ஷ்டவசமாய் உயிருடன் இருந்தார்.
அவரிடம் சொல்லிப் புரியவைக்க முயன்றேன். அது அவரது கதை என்பதே அவருக்கு நினைவில்லை. கொஞ்சம் யோசியுங்கள் எனச் சிலமுறை கேட்டபின் சற்று மௌனமாக இருந்தார். இப்போது அவருக்கு நான் எதற்கு வந்திருக்கிறேன் என்பதே மறந்திருந்தது.
ஏமாற்றத்துடன் திரும்பினேன். அன்று உறங்காமல் புரண்டுகொண்டேயிருந்தேன்.
காலையில் எழுந்ததும் தெளிவாகிவிட்டது. கிழிந்த பக்கத்தை எழுதத் தொடங்கினேன்.
*
3
எம் அடுக்ககத்தில் 96 வீடுகள். தண்ணீர் இல்லை, லிஃப்ட் வேலை செய்யவில்லை என்ற புகார்களால் நிறையும் எங்கள் வாட்ஸாப் குழுவில் இன்று காலை அச்செய்தி வந்தது.
“கார் பார்க்கிங்கில் 500 ரூபாய் நோட்டு கண்டெடுத்தேன். தொலைத்தோர் அணுகவும்.”
எனதில்லைதான். ஆனாலும் என்ன! கிடைத்தால் குடும்பத்திற்கு ஐஸ்க்ரீம் வாங்கலாம். எவரும் அதைக் கோரி வரவில்லை எனில் கேட்டுப் பார்க்கலாம் என்றுதான் தோன்றியது.
மாலை தயக்கத்துடன் அவனுக்கு வாட்ஸாப்பில் தனிச்செய்தி அனுப்பினேன்.
“இப்போதுதான் கவனித்தேன். அந்த நோட்டு என்னுடையதாய் இருக்கலாம்.”
“எதை வைத்து அப்படி நினைக்கிறீர்கள் எனத் தெரிந்துகொள்ளலாமா?”
“நேற்று பார்க்கிங்கில் காரிலிருந்து இறங்குகையில் பர்ஸைக் தவறவிட்டு எடுத்தேன்.”
“இப்படிச் சொல்லும் பதின்மூன்றாவது ஆள் நீங்கள். எனக்குத் திருப்தியாகவில்லையே!”
“சரி, இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. நீங்களே பார்த்து முடிவெடுங்கள்.”
“ஏதேனும் அடையாளம் சொல்ல முடியுமா?”
“நம்பரா எழுதி வைக்க முடியும்? குறிப்பாய் ஏதுமில்லை.”
“அப்ப நிச்சயம் உங்களுடையதில்லை. இது பழைய 500 ரூபாய்!”
*
4
நான் ஒரு காகம். நீங்கள் கேட்ட முதற்கதை என் முன்னோர்களுடையதாகவே இருக்கும்.
ஒரு பாட்டியிடம் என் தாத்தா திருடிய வடையை குரல் நன்றாக இருக்கிறதென நரி பாடக் கேட்டதில் மயங்கி இழந்தார். பிறகு பாட்டியின் மகள் வடை விற்ற காலத்தில் என் தந்தை அதே போல் திருடிப் பறக்க, நரியின் மகன் இதே வசனத்தைப் பேச, விஷயமறிந்த என் அப்பா, தன் பாத விரல்களில் வடையை இடுக்கிக்கொண்டு பாடி வடையைக் காத்தார்.
இப்போது பாட்டியின் பேத்தி வடை சுடுகிறாள். பரம்பரைத் தொழிலான வடைத்திருட்டு என்னை விடவில்லை. நரியின் பெயரனும் இங்குதான் திரிகிறான். உயிரினங்கள் குணம் மாறாதிருப்பதை வரலாறு திரும்புகிறது என்கின்றனர். நான் வடை திருடிப்போகையில் நரி வந்து சொல் மாறாது குரல் சிலாகித்துப் பாடக்கேட்டது. நிதானமாய்ச் சொன்னேன்-
“இருவரில் ஒருவர் ஏமாறுவதே வழக்கம். ஏன் நாம் சேர்ந்து இலாபமடையக்கூடாது?”
“எப்படி?”
“நீ அப்பெண்ணைப் பயமுறுத்து. நான் வடையை அபகரிக்கிறேன். பகிர்ந்துண்போம்.”
வடை இழந்தவள் துப்பாக்கியை எடுத்து தோட்டாக்களைச் சரிபார்த்துத் தயாரானாள்.
*
5
நாளை எனக்குத் திருமணம். வீட்டில் பார்த்த மாப்பிள்ளை. சற்றே அச்சமாக இருக்கிறது. கலவி குறித்த பயம். நீங்கள் நினைப்பது இல்லை. கலவி பற்றிய பட்டறிவு உண்டெனக்கு.
காதல் கவுச்சி வீசிக் கிடந்த நாட்களில் சில முறை அறையெடுத்து வெந்து தணிந்தோம். ஆணுறை அணியாமல் மாதவிலக்கு வரப் பதற்றமாகக் காத்திருந்த நினைவிருக்கிறது.
பின் அற்பக்காரணங்களை முன்னிட்டு பரஸ்பரம் பிரிந்தோம். மிகப்பழைய கதைதான். ஆனாலும் இன்று நிம்மதி குலையக் காரணம் முதலிரவில் நான் கன்னியல்ல என்பதைக் கண்டுகொள்வானோ என்ற பயம். அது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நாசமாக்கிடும்.
டாக்டர் சரவ் ஃபேஸ்புக் க்ரூப்பில் பெயரில்லாமல் போடச் சொல்லி சந்தேகம் கேட்டேன். கேலிகள் தாண்டி உருப்படியாய்த் தகவலேதும் தேறவில்லை. பிறகு நானே சில விஷயம் செய்தேன். முதலிரவில் தொடவிடாது பேசிக்கொண்டிருந்து தூங்கிப்போனேன். மறுநாள் நிறைய வெட்கப்பட்டு அரை நிர்வாணம் காட்டினேன். அடுத்த நாள் வலிப்பதாகக் கத்தி நிறுத்த வைத்தேன். இன்று எப்படியும் திறந்தாக வேண்டும். வேகமாகத்தான் இருந்தான்.
சுத்த விரிப்பில் சிவப்பாய் என் இரத்தம் சிந்த, புருஷன் புன்னகைக்க, நான் திடுக்கிட்டேன்.
*
6
ஒரே மகனுக்குத் திருமணம் ஏற்பாடுகள் செய்த போது கணவரிடம் நான் சொல்லியது ஒன்றுதான்- மருமகளிடம் சீரியல் மாமியார்கள் போல் நான் நடந்துகொள்ள மாட்டேன்.
மருமகள் வீடு வந்து முதல் ஒரு மாதம் நன்றாகத்தான் போனது. அம்மா என்றே என்னை அழைத்தாள். நானும் மகள் போலவே பாவித்தேன். மகனிடம் அவளை வெளியே கூட்டிப் போய் வரச்சொன்னேன். பரிசு வாங்கித்தரப் பணித்தேன். பின் சின்னச்சின்ன உரசல்.
ஒரு சண்டை நடந்தது. அதில் மகன் அவளுக்கு ஆதரவாகப் பேசியதுதான் முதற்புள்ளி. ஒரு துரோகம் போல் மனதில் கீறலிட்டது. அவளை ஆழமாய் வெறுக்க ஆரம்பித்தேன்.
கை பட்டால், கால் பட்டால், ஏன் கண் பட்டால்கூடக் குற்றம் கண்டறிந்து சொன்னேன். அவளும் வேடங்கலைத்து பதில் பேசத் தொடங்கினாள். மகனும் என்னிடம் முன்போல் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. அவளது சொல்படி ஆடுகிறான் என்று தோன்றியது.
இன்று அந்தத் தகவல் வந்தது. மகனுக்கு வேறொருத்தியுடன் தொடர்பு இருக்கிறதென. கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. நிம்மதியுடன் அவனைக் கண்டிக்க ஆயத்தமானேன்.
*
7
முன்னாள் காதலிக்குக் கல்யாணம். அழைப்பிதழ் வந்திருக்கிறது. ஆர்வம் குறைந்து இயல்பாக முறிந்த காதல். பிரிந்த போது என் முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளச் சொன்னாள். பிரிவுத் துயரென ஏதுமற்ற அளவு பரஸ்பரம் பிய்த்துத் தின்றிருந்தோம். அதனால் இந்தத் திருமணத்தில் வருத்தமோ, வெறுப்போ, வலியோ எனக்கில்லை.
ஆனாலும் கல்யாணத்தைப் பார்ப்பதில் ஏதோ மனத்தடை நெருடியது. போகலாமா வேண்டாமா என யோசித்து உள்ளூரில் சனி மாலையில் வரவேற்பு எனத் தவிர்க்கக் காரணம் சொல்ல முடியாத நிகழ்ச்சி நிரல் காரணமாய்ப் போகத் தீர்மானித்தேன்.
மேடையேறி, நாசூக்காய்க் கை குலுக்கி, புன்னகையுடன் பரிசளித்து வாழ்த்தினேன். கொழுப்பைக் குறைத்து வடிவாகி இருந்தாள். முற்றிலும் புது வாசனையில் இருந்தாள்.
என் பார்வையில் தடுமாறியவள், சுதாரித்துத் தன் கணவனிடம் அறிமுகம் செய்தாள்.
“என் பழைய ஆஃபீஸ் கலீக். கடைசியா எப்போ பார்த்தோம்னே நினைவில்ல.”
எனக்குச் சட்டெனச் சினமெழுந்தது. மேடையில் என் சட்டை, கால்சராயை உருவிப் போட்டுவிட்டு, பனியன், ஜட்டியைக் கிழித்தெறிந்துவிட்டு ஆவேசமாகக் கேட்டேன்.
“இப்போது ஞாபகம் வருகிறதா, டியர்?”
*
8
‘அமுதா’ என இடமார்பில் டாட்டூ குத்தியிருக்கிறேன். என் முன்னாள் காதலியின் பெயர்.
இப்போது எனக்குப் பெண் பார்க்கிறார்கள். அப்பெயரை நீக்கிவிடலாம் எனக் குத்திய கடையிலேயே விசாரித்த போது, “வலி அதிகமாக இருக்கும், நிரந்தரமாகத் தழும்பு விழும், அனைத்துக்கும் மேல் பிற்காலத்தில் பக்கவிளைவுகள் உண்டு, தயாரா?” எனக் கேட்டனர்.
இப்போது வேறு மார்க்கமில்லை. மணப்பெண்ணிடம் சொல்லிவிட வேண்டியதுதான். திருமணத்துக்குப் பின் தெரிந்து சங்கடமோ சண்டையோ ஆவதற்கு இது மேலானது.
தனியே சந்திக்க வேண்டும் எனக் குறுஞ்செய்தி அனுப்பி, பூங்காவின் பொதுவெளித் தனிமையில் சட்டை பொத்தான் அவிழ்த்துக் காட்டி முன்கதைச் சுருக்கம் நவின்றேன்.
அவள் கண்களில் நீர் கோர்த்தது. விரல்களால் அவ்வெழுத்துக்களை நீவிச்சொன்னாள்.
“எந்த வடுவும் மறையும்.”
முதல்முறையாக அவள் அழகைத் தாண்டி அவள் மீது காதல் பெருகியது. தாலி கட்டி, தாழிட்டு, பாலருந்தி, வாய் துடைத்து, இறுக அணைத்து, முத்தமிட்டுத் துகிலுரித்தேன்.
இடமுலை மீதிருந்த வட்டத்தழும்பு இருட்டிலும் பளிச்சிட்டது. சிகரெட்டால் சுட்ட புண்!
*
9
என் தல சொன்ன ‘Never Ever Give Up’ என்பதைத் தாண்டி உயிர்விட முடிவெடுத்துள்ளேன்.
தற்கொலை சுலபமல்ல. உயிராசை அப்படி. ஆனாலும் ஏன் சாகிறார்கள்? அதைவிட எதிர்கொள்ளச் சிரமமான விஷயங்களில் சிக்குவதால்தான். அப்படியான இக்கட்டில் நானிருக்கிறேன். அதனால் செத்துவிடத் தீர்மானித்துள்ளேன். முதற்காரணம் எனக்கு வேலையில்லை. (எஞ்சினியரிங் படித்தேன்.) அடுத்தது அதைக் காரணம் காட்டி காதலி பிரிந்தாள். கடைசியாய் அப்பா அம்மா சமீபமாய் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர்.
தற்கொலைக்குத் தேவை மூன்று விஷயங்கள்: தற்கொலை செய்யும் வழி, தற்கொலை செய்யும் நேரம், தற்கொலைக் கடிதம். அம்மாவின் புடவையில் தூக்கு உணர்ச்சிகரமாக இருக்கும். காதலியின் பிறந்த நாளைத் தேர்ந்தெடுத்தேன். தற்கொலையே ஒருவகையில் கைவிட்டோருக்குக் குற்றவுணர்வு ஊட்டத்தானே! தற்கொலைக் கடிதம் ஃபேஸ்புக்கில்.
எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு கதவை உட்புறமாய்த் தாழிட்டு ஃபேஸ்புக்கைத் திறந்தேன். ‘வலிமை’ பட அப்டேட் நாளை மாலை என போனி கபூர் பதிவிட்டிருந்தார்!
ஒரு நாளில் என்ன வித்தியாசம் வரப்போகிறது! நாளைக்கு ஒத்திப்போட்டு விட்டேன்.
*
10
மகள் காதலிப்பதாகச் சொன்னது முதல் அதிர்ச்சி. அவள் காதலிப்பது ஒரு பெண்ணை என்பது இரண்டாம் அதிர்ச்சி. எங்கள் கெஞ்சலையும் மிஞ்சலையும் உதாசீனம் செய்து அதிலிருந்து கொஞ்சம்கூட எங்கள் மகள் பின்வாங்காமல் நின்றது மூன்றாம் அதிர்ச்சி.
அவர்கள் பத்தாண்டுகள் முன் எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்கள்தான். அந்தப் பெண் மருத்துவக் கனவில் பேயாய்ப் படித்துக்கொண்டிருந்தவள் அதிர்ச்சிகரமாய்ப் பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று மனஅழுத்தத்துக்கு உள்ளானாள். அவர்கள் வீட்டைக் காலி செய்துகொண்டு சொந்த ஊருக்கே போனார்கள். பிறகு தொடர்பேதும் இல்லை.
இப்போது என் மகளின் கைப்பற்றி நிற்கிறாள். எளிமையாகத் திருமணம் நடத்தினோம். மகளும் மருமகளும் எம் கால்களில் விழுந்தனர். அப்பெண் தனிமையில் சொன்னாள்:
“மாமா, நான் ஏன் பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றேன் தெரியுமா? நீங்கள் எனக்குச் செய்த பாவத்தால்தான். அது என்னவென்றே சரியாகப் புரியாத வயதில் டிப்ரஷனில் விழுந்து, ஆண்களை மொத்தமாக வெறுத்து, கடைசியில் பெண்கள் மீது ஈர்ப்பு வந்தது.”
“பழிவாங்குகிறாயா?”
“இல்லை. நீங்கள் செய்யும் பிராயச்சித்தம்.”
1 comment
அருமையான விறுவிறுப்பான கதைகள்… வாழ்த்துக்கள்
Comments are closed.