சிறிய ஆற்றுப்பாலத்தைத் தாண்டிய அம்பாஸிடர், இருபுறமும் வாழை மரங்கள் நிறைந்திருக்கும் தோப்பு வழியாக மெதுவாக முன்னேறியது. முழங்காலளவு ஆற்றுநீருக்குக் கீழே விரிந்திருந்த தூய வெண்மணற் பரப்பைப் பார்த்தபடி வந்த மரியத்தின் கண்கள் இந்தத் திடீர் பச்சைய உலகிற்குள் சட்டென மயங்கித் தவழ்ந்தன. காளியப்பன், டிரைவருக்கு அருகே அமர்ந்து வழி சொல்லிக்கொண்டிருந்தார். மரியத்தின் அருகே உலர்ந்த நரைமுடிகள் பறக்கத் திரவியம் உறங்கிக்கொண்டிருந்தான். காலில் போடப்பட்டிருந்த பேண்டேஜின் மீது மஞ்சளான மருந்துக் களிம்பு தடம் போட்டிருந்தது. திரவியத்தின் காலில் நரம்புகள் பிதுங்கி வெளிவந்து, சமீப நாட்களாக ஒவ்வொன்றாக அழுத்தம் தாளாமல் உடைந்து இரத்தக்கசிவாக மாறத் துவங்கியிருந்தன. நீண்ட காலமாக மூடைகளுக்கு நடுவே நின்று பழகிய உடல். தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருக்கும் அவனை மரியம் இன்னதெனக் கூறமுடியாத வாஞ்சையோடு பார்த்தாள்.

”மழைக்காலம்னா எடுத்தேறி வரமுடியாத பாதை.”

காளியப்பன் அவராகக் கூறிக்கொண்டார். வாழைத்தோப்புகளிற்கு நடுவே ஒன்றிரண்டாக வீடுகள் தென்படத் துவங்கியிருந்தன.

”அந்த போஸ்ட்டுக்கு கிட்டயே நிறுத்திக்க, கொஞ்சம் நடக்கணும்” என்றபடியே கால்களால் செருப்புகளைத் துழாவிய காளியப்பன், மரியம் பக்கம் திரும்பி, ”நடந்துருவானா?” என்றார்.

மீண்டுமொருமுறை எக்கி திரவியத்தின் கால்கட்டைப் பார்த்தார். திரவியம் அசங்கலாக விழித்து நிமிர்ந்து அமர்ந்துகொண்டிருந்தான்.

“செருப்பு வேணாம், பாதம் வீக்கமா இருக்கு. சும்மாவே நடந்து வரேன்.”

மரியம் அதே கண்களோடு திரவியத்தைப் பார்த்தாள். அவளுக்குப் பிடித்த, தன்னைத் தளர்ந்தவனாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளாத திரவியத்தின் முகம். ஒவ்வொருமுறை பணம் எண்ணும்போதும் மரியத்தின் முகத்தில் அவளால் கட்டுப்படுத்தவே முடியாதபடி வந்துவிடுகின்ற பெருமிதத்தின் மின்மினிச் சுருக்கங்களுக்காகவே ஓடிய கால்கள். காளியப்பன் உட்பட எல்லோருமே அவளைப் பணப்பைத்தியம் என மனதிற்குள்ளோ வெளிப்படையாகவோ கூறியபோதெல்லாம் அந்தப் பைத்தியத்திற்குள் முகம் பொத்தியபடி அழுகின்ற ஒரு சிறுமியின் முகத்தையே திரவியம் உணர்வான். உண்மையில் அவளுக்கு மகிழ்ச்சி என்கிற ஒன்று இல்லவேயில்லை. அதை யாரும் சொல்லிக்காட்டக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பணவெறி எக்காளம் எல்லாம்.

நடந்து செல்கின்ற சிறிய பாதை வழியேவும் வாழை மரங்கள் கூடவே வந்தன. அந்தத் தோப்பிற்குள் சிறிய வாய்க்காலும் செல்ல வேண்டும். குளித்துவிட்டு நடந்த உடல்களிலிருந்து வழிந்த நீர் இன்னமும் ஈரமான ஒரு நேர்க்கோட்டைப் பாதையோரம் கொண்டு சென்றது. கூடவே சிறுவர்களின் கூச்சல்களும்.

”இப்ப இருக்குற வீட்டை வாங்கிட்டானா? இவ்ளோ தள்ளி வந்து வாடகைல இருந்தானாக்க சரியான முட்டாப்பய.”

காளியப்பன் வயிற்றை எக்கி வேட்டி நுனியைத் திணித்தபடி, “எங்க! இப்பதான் ரெண்டு மூணு லைனு எச்சு போறேன்னான். நாலு காசு நிக்கிற சமயம். இவ மூணாவத ஈண்டுட்டா. வச்ச காசெல்லாம் அழுதாச்சுன்னு போனவாட்டி வந்தப்ப புலம்புனான்.”

இதைக் கூறி முடித்தவுடன் மரியத்தின் முகத்தில் அவளறியாமலே வந்திருக்கக்கூடிய இறுக்கத்தை அவரால் பார்க்காமலேயே உணரமுடிந்தது.

வேலிப்படலில் பூசணிச்செடி ஏறி பிணைந்திருக்க, சிறிய தந்தூபிகளைப் போலப் பூசணிப்பூக்கள் வெயிலில் பாடிக்கொண்டிருந்தன. சிறிய காரைவீடு. வாசல் திண்ணையில் மூத்தவன் அமர்ந்து சிலேட்டில் எழுதிக்கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்ததும் வீட்டிற்குள் திரும்பி, “அம்மா..” என்றான். 

கொல்லைப்புறத்தில் ஏதோ பாத்திர வேலையாக இருந்தாள் சித்திரை. ஈரத்திட்டுகள் படிந்த சேலையோடு வெளியே வந்தவளின் முகம் மெல்லிய மலர்ச்சிக்கும் கண்கள் சிறிய யோசனைக்கும் சென்று மீண்டன. காளியப்பன் மூத்தவனின் அருகிலேயே அமர்ந்துவிட்டார். மரியம் மிகவும் தலைதணித்தபடி உள்ளே நுழைந்தாள். திரவியம் கட்டுப்போட்ட காலைப் பதனமாக எட்டு வைத்தபடி சுவர்மூலையில் கிடந்த சேரை நோக்கிச் சென்றான். அதே மூலையில் தொங்கிய சேலைத்தூளிக்குள் களுக்கெனப் பிஞ்சு உடல் ஒன்று புரண்டு படுக்க, தண்டையணிந்த அதன் சிறிய கால் ஒன்று எட்டிப்பார்த்தது. திரவியம் தன்னிச்சையாகத் தனக்குத்தானே வாயைப்பொத்தி உஸ்ஸென்று கொண்டான். அவனது அந்த முகத்தைப் பார்த்ததும் மரியத்திற்கு இலேசான புன்னகை வந்தது. சித்திரை எதுவோ ஆற்றி எடுத்து வருவதற்கு சமையல்திட்டிற்குள் நகர்ந்துகொண்டாள். மரியத்தின் அந்தப் புன்னகை அடுத்து தன்னை ஏறிடும்போது அதனை அவளால் எதிர்கொள்ள முடியாது. எதையோ சூடு பண்ணிக்கொண்டிருக்கும் சித்திரையை மரியம் பார்த்தபடியிருந்தாள். அழுக்கான பழைய மெழுகுவர்த்தியைப் போல சித்திரை வியர்வைக்குள் நின்றிருந்தாள். அறைச்சுவரின் ஓரத்தில் சிறிய பாலித்தீன் சுவர்களால் கைப்பிடியளவு போடப்பட்டு அட்டைகளில் கோர்க்கப்பட்ட அருசளவு சாமான்களின் குவியல் கிடந்தது. திலகர் இப்போது சைக்கிளில் இந்த அட்டைக் கோர்வைகளைக் கொண்டுசென்று கிராமம் கிராமமாக விற்று வருகிறான் என காளியப்பன் சொல்லியிருந்தார். 

“சித்திரை, எதும் வேணாம். விடு.”

தனது காலை ஒரு அழுக்குத்துணி மூடையின் மீது தூக்கி வைத்தபடி திரவியம் கூறினான். 

”நடுவுள்ளவன் எங்க?”

“ந்தா, வாய்க்கா பக்கமா எங்கியாச்சும் ஆடிக்கிட்டு கிடப்பான்க்கா.”

மரியம் தனது வயர்கூடையிலிருந்து சீனிச்சேவு பொட்டலத்தை வெளியே எடுத்து வைத்தபடி, “காளியண்ணே, அவனை வரச்சொல்லுங்க” என்றாள்.

கையில் சிலேட்டோடு, சீனிச்சேவு பொட்டலத்தின் முன் நின்றபடி சித்திரையின் முகத்தைப் பார்த்தான் பெரியவன்.

“அட எரும! சாப்டுறா”.

திரவியத்தின் வழக்கமான பலசரக்கு கடை குரல் அவனைச் சட்டெனக் கழுத்துப் பக்கம் கூசச்செய்து அமர வைத்தது. சித்திரை கொடுத்த டம்ளர்களை வாங்கிக்கொண்டு, “ஏம்ப்பா, சுத்தி காடா கெடக்கே! மழைக்கு பூச்சி எதுவும் வருமா? குழந்தைங்களை வச்சுக்கிட்டு..” தனது வழக்கமான திகைப்பான கண்களோடு மரியம் கேட்டாள்.

“எப்பவாச்சும்க்கா, இவரு வீட்டைச் சுத்தி சீமெண்ணை தெளிச்சு வைச்சிருவாரு.”

ஒவ்வொரு மழைக்காலத்திலும் சித்திரை விழித்தே கிடப்பாள். அசதியில் உறங்கும் திலகரை எழுப்பித் திட்டவும் செய்வாள். ஆனால் இதைச் சொல்லும்போது, திலகரின் மீது அவர்கள் உணரும்படி குரலில் வந்துசேர்ந்த கனிவை அவளே ஆச்சரியமாக உணர்ந்தாள். 

மரியம் தலையசைத்தவளாக, “ந்தா இவங்களுக்கு கால்கட்டு மாத்த வேண்டியிருந்துச்சு. இப்பல்லாம் ரொம்ப நேரம் கல்லாவுல உக்கார முடியலை. காளியண்ணன் மகன் பால்ராஜுதான் காலேஜ் முடிச்சு வந்து பாத்துக்கிறான். அதான் கட்டு மாத்த வந்தோம். காளியண்ணன் ஒரு எட்டு போய்ட்டு வருவோமான்னு கேட்டாரு, அதான் சட்டுனு வரவேண்டியதா போச்சு. இல்லேன்னா இந்தப் பிள்ளைக்கு எதுனாச்சும்…”

“ஏங்க்கா, இருக்கட்டுமே. இப்ப என்ன?” டம்ளர்களை எடுத்தபடி சித்திரை திரும்பவும் சமையல்கட்டிற்குள் சென்றுகொண்டாள். வாசலில் காளியப்பன் கால்நீட்டி சாய்கின்ற முஸ்தீபுகள் கேட்டது. சீனிச்சேவின் வினோத கிளைகளைப் பார்த்தபடியிருந்தான் பெரியவன். திரவியம் தனது கால்வலியில் ஆழ்ந்தவாறே, சட்டை பட்டன்கள் கழன்றிருக்க அரைக்கண் மூடியிருந்தான். சித்திரை டம்ளர்களை அடுக்கியபடி, தொட்டிலையும் அருகே அயர்ந்து கிடக்கின்ற திரவியத்தையும் அமைதியாகப் பார்க்கின்ற மரியத்தைப் பார்த்தாள். சட்டென வீடு முழுக்க வந்துவிட்ட நிசப்தத்தில் மரியமும் சித்திரையும் மெல்லிய தவிப்போடு தங்களை எங்கெங்கோ ஒளித்துக்கொள்ள முயன்றுகொண்டிருந்த பழைய சதுரங்கப் பலகையொன்றில், அழுகைகளோடும் கோபங்களோடும் பிரிந்து சென்ற யானைகளும் குதிரைகளும் ஆண்டுகளின் களைப்போடு மீண்டும் எதிர்கொள்கின்ற சித்திரத்தைப் போல கிடந்தது வீடு. தொட்டிலுக்குள் குழந்தை நமட்டைக் கடித்தபடி அவர்களின் பழைய நாளொன்றைப் பார்ப்பது போல ஓருணர்வு இருவருக்கும்!

2

நிறைந்த பால்செம்பிலிருந்து இடுக்கிவைத்து வெளியே எடுக்கப்பட்டு, சிறிய துணியால் அழுந்தி துடைக்கப்பட்ட நெக்லஸை, தனது மரப்பெட்டியின் நிறைந்த நகைக்குவியலுக்கு மத்தியில் பத்தில் ஒன்றாகப் போடும் முன்பாகத் தலையை இரகசியமாகத் தழைத்து ஒருமுறை நுகர்ந்துபார்த்தாள் மரியம். தங்கத்திற்கேயுரிய சுறுசுறுவென நாசியைத் தீண்டுகிற மின்மணத்தோடு பாலின் வெம்மையான கவுச்சி வாசனையும் சேர்ந்தெழுந்தது. அவளையறியாமல் உதட்டில் மலர்ந்துவிட்ட ஒரு புன்னகையோடு திரும்புகையில் சித்திரையின் அழுது ஓய்ந்துவிட்ட – அதன் வழியாகச் சுடுகின்ற தீர்க்கம் வந்துவிட்ட – கண்களை நேருக்கு நேர் மோதினாள். ஒருகணம் உள்ளம் பதறிவிட்டது. அவள் பார்க்கப் பார்க்க தன் உதட்டில் அரும்பிவிட்ட சிரிப்பைச் சன்னஞ்சன்னமாக அணைத்தபடி வந்தவள், ஒரு புள்ளியில் சித்திரையின் கண்களுக்கெதிரான தனது மினுங்குகின்ற கண்களின் கூர்மைக்கு மாறிவிட்டாள். அந்தப் பார்வைக்கு முன் தன்னைத் தழைத்துக்கொண்ட சித்திரை சற்று முன் தோடுகள் கழற்றப்பட்ட தனது வெற்றுக் காது மடல்களை மென்மையாக நீவியபடி எங்கோ திரும்பிக்கொண்டாள். 

”வெள்ளாகுளத்து கடைக்கணக்கிலிருந்து எவ்வளவு வருது திரவியம்?”

தனக்கு முன்னே பரப்பி வைக்கப்பட்டிருந்த வரவு செலவு நோட்டுகளின் பக்கங்களைப் புரட்டியவாறு, பழுப்பாகிவிட்ட காகிதங்களினாலான பத்திரங்களின் வியாக்கியானத்தைப் படித்துப் பார்த்து தலையாட்டிக்கொண்டே இரு கூறாக பிரித்து வைத்த மூத்த கணக்காள் காளியப்பன் கேட்டார்.

குண்டுபல்பின் மஞ்சள் வெளிச்சத்திற்குக் கீழே வெற்றுடம்புடன் அமர்ந்து நிமிர்ந்து பாராமல் சாப்பிட்டுக்கொண்டிருந்த திரவியம், சுவரைப் பார்த்துக்கொண்டே நாவால் துழாவியபடி, “அதுல வந்த லாபக்கணக்குலதான இவன் கடைக்கு உளுந்து கொள்முதல் செஞ்சு போட்டேன். அந்த கணக்குக்கு இதை நேர் வச்சிருங்க.”

கலைந்த தலையும் பயந்த கண்களுமாகத் தனக்கு முன் உட்கார்ந்திருந்த திலகரைக் காளியப்பன் பரிதாபமாகப் பார்த்தார்.

“அந்த வருஷம் உளுந்து நல்ல நட்டம் வாங்கிருச்சுலண்ணே”.

கசந்துவிட்ட சிரிப்போடு, திக்கலான குரலில் இருவரையும் பொதுவாகப் பார்த்தபடி திலகர் குழறினான். குடித்துக்கொண்டிருந்த தண்ணீரை வாய் முழுக்க உப்பியபடி கையில் செம்போடு திரும்பிய திரவியம், “லாவம் வர்றப்பல்லாம் என்கிட்டயா வந்து குடுத்த? கிட்டங்கில என்னா சரக்கு வருது, சீசன் என்னா, நெலவரம் என்னான்னு தெரியாம டவுன்ஹால் ரோட்டுல புரோட்டா திங்க போனேன், ரீகல் டாக்கீஸ்ல மூணு ஷோ பாத்து வந்தேன்னு லும்பனாட்டம் அலைஞ்சா வர்ற லாபமும் நட்டமாத்தாண்டா போகும்.”

பேசி முடிக்கும்போது வந்த தும்மலைத் தொடர்ந்து ஒன்றிரண்டு பருக்கைகள் தொண்டைக்குள்ளிருந்து உதட்டில் வந்து விழுந்தன. 

“ஏஞ்ச, பெசாம சாப்பிடுங்க. அதான் கணக்கு நேர் இருக்குல்ல. கணக்குக்கு காசை நேர் பண்ணிட்டு கிளம்பிருவாங்க. சும்மா தின்னுட்டு எந்திரிங்க.”

சித்திரை கழற்றி வைத்திருந்த மிச்ச நகைகளை அள்ளிப் பாலில் போட்டு எடுத்து வடிகட்டி பிறகு மரப்பெட்டியில் வைத்துப் பூட்டியவாறே, “காளியப்பண்ணே, யார் காசும் நமக்கு வேணாம். எழுதி வைச்ச கணக்குக்கு நேர் செஞ்சிட சொல்லுங்க. போதும்” என்றாள் மரியம்.

திலகரின் பக்கம் வைக்கப்பட்டு, கணக்கு வாசித்து வாசித்து அவன் ஈடுகட்ட வேண்டிய தொகைக்குத் தீர்வாக திரவியம் பக்கம் எடுத்து வைக்கப்பட்ட பத்திரங்களை அந்த மரப்பெட்டியின் மேலே வைத்து பிடித்தவாறு எழுந்து தங்களது அறைக்குத் தூக்கிச் சென்றாள். 

”ஏ திரவியம், எல்லாக் கணக்கும் வரவு காலத்துல முடிஞ்சா அவனுக்கு என்னய்யா எஞ்சும்? கொள்முதல் முழுக்க உன்னை நம்பித்தானய்யா விட்டான். நெலவரம் விழுகுற நேரத்துல இம்புட்டு உளுந்தை வாங்கி அவம் தலையில கட்டினா அவன் என்னத்துக்கு ஆவான்? காக்கா தலைல பனம்பழம் கணக்கா! கல்லாப் பெட்டிக்கும் வீட்டுக்குமா வளந்த பையன்ல! உன்னளவு நாலு திசை அறிஞ்சவனா அவன்? நீ பாத்து எதுனா ஒத்துக்கலாம்ல, நிறைமாச வயித்துக்காரிய கைல வச்சுகிட்டு இந்த நேரத்துல பிரிவினை போடுறியே, நல்லாவா இருக்கு?”

விரலில் குழிந்து எடுத்த சுண்ணாம்பை நாக்கிற்கு உறைப்பு காட்ட மறந்தவராக கேட்டுவிட்டு காளியப்பன் அமைதியானார்.

“அண்ணே, என்னை என்னமோ பாவியாக்கும்படி பேசுறீங்களே? இதுக்கு போன சீசன்ல வாங்குன சரக்குலயெல்லாம் குளுந்து வந்த லாபத்தை நான் எதுவும் கேட்ருக்கேனா? அம்மாவும் போயி நாலு மாசம் ஆச்சு. ந்தா இவ வயித்து பிள்ளைக்காரியா நிக்குறா. நாளைக்கு மரியமும் ஈண்டுட்டான்னா அப்புறம் பங்காளிகளா நிப்பானுக. அதாம் இப்பவே பிரிச்சுக்கலாம்னு பேசி ஒத்துக்கிட்டாச்சு. அலைஞ்சு திரிஞ்சு பாடுபட்டவன்னு சொல்லி பங்குக்கு மேல காலரைக்கா படி போட்டு குடுறான்னா கெஞ்சுறேன். உள்ளதுக்கு கணக்கு நேர் செஞ்சுட்டு போடான்னு சொன்னா அது குத்தமா?”

கையைத் துண்டால் துடைத்தபடி புடைத்த வயிற்றோடு நின்று இவர்களைப் பார்த்தான் திரவியம். இதுநாள் வரை எல்லோரும் ஒன்றாக வாழ்ந்த வீடுதான். ஆனால் சில கணக்குப் புத்தகங்களும் பத்திரங்களும் நடுவே இருக்க, நின்றபடி கேள்வி கேட்கின்ற திரவியத்தின் முன்பு அழுக்குப் பொம்மைகளைப் போல் உட்கார்ந்திருந்தனர் திலகரும் சித்திரையும். கூசிப்போனதன் அடையாளமாக குறுக்கிக்கொண்ட உடல்மொழி வந்திருந்தது அவர்களில். 

திலகர் கடைக்கென எழுந்து வரத்துவங்கிய காலத்திலேயே அவனது அண்ணன் திரவியம் வெள்ளாகுளத்துக் கடையில் ஊறிய புளியாக அனுபவம் கொண்டிருந்தான். காட்டு விலங்கிற்கான வலுவான கால்களோடு வெள்ளாகுளத்துக் கடையில் திரவியம் தொழில் கற்றுக்கொண்டிருக்க, இளையவன் திலகருக்கு கள்ளிக்குடியில் வேறொரு கடையைக் கிளையாகத் திறந்து வைத்து அங்கே நேரிடையாக கல்லாவிலேயே போய் அமர வைத்தான். தம்பியை அலங்கரித்து அழகு பார்க்கின்ற அண்ணனின் பெருந்தன்மையென ஊரே நெகிழ்ந்திருக்கும்போது, காளியப்பண்ணன் மட்டும் பெருமூச்செறிந்து கொண்டார். ஆறு வயதிலிருந்தே அவர் பார்த்து வளர்ந்த குழந்தைகள். திரவியத்தின் இந்தச் செயலால் திலகர் எதிர்கொள்ளப் போகின்ற சிதைவுகளை நீரடிக் கூழாங்கல்லாக அவர் அறிந்தே இருந்தார். காய்ப்புப் பிடிக்காத கையும் புளிக்கறை படியாத நகங்களுமாக கல்லாவில் அமர்ந்து பணம் எண்ணிச் சிரிக்க வைப்பது அண்ணன் தம்பி வியாபாரத்தில் ஒரு நீண்ட நாளுக்கான சூதுகளில் ஒன்று.

சொகுசாக இருக்க வைப்பதன் வழியே சோம்பேறியாக்கிவிட்டு ஆயுதங்கள் ஏந்த வேண்டிய வேளையில் கையில் கூச்சத்தை வரவைக்கின்ற திட்பம். வெள்ளாகுளத்து கடையிலிருந்தே திலகரின் கடைக்குத் தேவையான சகல சரக்குகளும் அனுப்பப்பட்டன. திலகரின் கடை முழுக்க முழுக்க நன்னீரால் குளிப்பாட்டிய சிறிய தாவரம் போல எளிய மகிழ்ச்சிகளில் நிறைந்திருந்தது. திலகருக்குக் கொள்முதல் செய்கின்ற அனுபவத்திற்கு வாய்ப்பேயில்லை. வேப்பமுத்து பொறுக்கிவரும் கூடைக்காரிகளிடமும் கள்ளிறக்கித் திரும்பும் பனையேறிகளிடமும் அவன் மிருதுவான வியாபாரியாகச் சிரித்துக்கொண்டிருந்தான். எல்லாம் அப்பா இறக்கும் வரைதான். அவர் இறந்த சில நாட்களிலேயே வெள்ளாகுளத்துக் கடை தனது சப்ளையை நிறுத்திக்கொண்டது. முந்தைய நாள்வரை அனுப்பிய பொருட்களுக்கு ரூபாயை அள்ளிச்சென்றான் திரவியம். ஒரே வாரத்தில் கள்ளிக்குடி கடை சீக்காளியாகிப் போனது. பரிதவிப்போடு திரவியம் பக்கம் திரும்பிய காளியப்பன் அவனது முகத்தில் கண்டது முற்றிலும் வியாபாரத்தன்மை கொண்ட ஒரு சிரிப்பை; ஈரப்பதம் எங்கெங்கு இருந்தாலும் தனது வேர்களை அனுப்பி இரகசியமாக உறிஞ்சிவிட்டு, செழித்து நிற்கின்ற நாணலின் திமிரான நிமிர்வை.

திலகர் அதற்குக்கூட கலங்கவில்லை. கடை சரிந்த சூட்டோடு பிரிவினையும் எழுதி, அவன் பக்கம் வந்த சொற்பச் சொத்துகளையும் நஷ்டமாக்கிய கணக்கிற்காகத் திரவியம் எழுதிவாங்கப் போகிறான் எனத் தெரிந்ததும், திசையெங்கும் சூன்யமாகி கண்பார்வை இழந்தவனைப் போல அவன் உடைந்தமர்ந்திருந்தான். சித்திரை வழக்கமான அதே சிறுமியின் பார்வையுடன் தனது துளித்துளியான நகைகளை உள்ளங்கையில் நீட்டி, ”இதை வெச்சு வேறெங்கியாச்சும் கடை போடலாமா?” என்றாள்.

வயிற்றிலிருக்கும் சிசு மீதான கனவுகளிலேயே இவ்வளவு நாட்கள் மிதந்திருந்த அந்தக் கண்களில் அழுகையென ஈரம் எதுவும் வழியவில்லை. ஆனால் அச்சமும் திகைப்புமானவொன்று இடமும் வலமுமாய் நடந்துகொண்டிருந்தது. உண்மையில் திலகருக்கு ஒரு கடையைத் தொடங்குவதற்கான அரிச்சுவடி தெரியாது. நன்னீரால் வளர்ந்த தாவரத்தின் முதல் கோடைக்காலம் அது. அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அடிவயிற்றில் மோசமான வலி மின்னலிட்டது. காயடிக்கப்பட்ட விலங்கின் முதல் நாளைப் போல உடலெல்லாம் காறித்துப்ப முடியாத ஒரு கசப்பும், வலியும் தன்மீதே சுரந்து பெருகிக்கொண்டிருந்தன. திரவியத்தின் காலில் விழுந்தாவது தன்னைக் காப்பாற்றி மேடேற்றிவிடுமாறு கெஞ்சுவது தப்பில்லையென உள்ளுக்குள் எதுவோ பலகீனமாக முனங்க முனங்க, தான் எவ்வளவு பெரிய தோல்வியாளன் என்பதை முழு உடல் எடையாக உணர்ந்தான். எங்கேனும் மோதிச் சிதறச்செய்து இந்த அவமானத்தின் எடையைத் துகள்துகளாக நொறுக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் சித்திரையின் அந்தக் கண்கள்! அவை அவனைவிடப் பூஞ்சையானவை. சிறிய வயிற்றுமேட்டில் கை வைத்தவளாக எதுவோ ஒரு காட்டுக்கோவிலிற்கு அவளை நல்ல வெயிலில் கூட்டிச்சென்ற போது முன்சிகை பறக்க வியர்வையில் வழிந்த குங்குமத்தோடு அவள் பேரசதியாக நின்ற சித்திரம் அவன் கையைப் பிடித்துக்கொண்டேயிருந்தது.

இரண்டாவது பெண்ணாக வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளன்றே சித்திரை தன்மீது ஊர்கின்ற அந்தப் பார்வைக்கான கண்களைக் கண்டுபிடித்தாள். அவை மரியத்தினுடையவை. கடை சாத்திவிட்டு வீடு திரும்பும் மனிதர்கள் குளிக்கப் போகின்ற நேரத்தில், அந்த நள்ளிரவிலும் முழு சம்மணம்போட்டு அழுக்குப் பைகளில் பொதியப்பட்டு வருகின்ற தாள்களை, நாணயங்களை அவள் எண்ணுகின்ற காட்சியும் அவ்வளவு விரைவாக ரூபாய்த் தாள்களை எண்ணி எண்ணித் தள்ளுகின்ற அந்த விரல்களும் சித்திரை பார்த்தறியாதவை. தூக்கக் கலக்கக் கண்களோடு அடுப்பங்கரைக்குள் செல்லும் சித்திரையை விழியோரமாகப் பார்த்தபடி மரியம் தலையசைத்துச் சிரித்துக்கொள்வாள். அந்தச் சிரிப்பில் என்ன இருக்கிறது என்பதே சித்திரைக்கு விளங்காது. ஆனால் ஏதோவொரு பந்தயத்தில் வெகுவேகமாக முன்னேறி ஓடுகின்றவரின் கண்களிற்குள் பற்றியெரிகின்ற  வெறியும், உலகில் வேறு யாருக்கும் பிடிக்காத தனக்கே தனக்கு மட்டுமான ஆவேச எக்களிப்பையும் உள்ளடக்கிய சிரிப்பு அது.

மரியத்தால் கண்டுகொள்ளப்படாத வீட்டின் மாடக்குழிகளில் சித்திரை தீபமேற்றுகின்ற மாலைகளில் ஏதேனும் கணக்கு நோட்டுகளை எடுக்க வருகின்ற காளியப்பன், “இதுக்கெல்லாம் வெளிச்சங்காட்டி எவ்வளவு வருசமாச்சு! மரியத்துக்கும் இந்த லட்சணமெல்லாம் கொண்டுவரத் தெரியும். பிள்ளைக்கு ஆனா ஆர்வமில்ல.. நீ வை வை” என்பார்.

வழித்தடம் இல்லாத காட்டிற்குள் தனது கொம்புகளால் கொடிகளையும் இலைகளையும் பழங்களையும் சீறிக்குத்தி பின்னால் எறிந்துவிட்டு ஆவேசமாகத் தனது வழியை உண்டு பண்ணிச் செல்கின்ற காளைகளிற்குப் பின்னே அந்தச் சிதறி எறியப்பட்டவைகளுக்குள்ளிருந்து பழங்களையும் விதைகளையும் தனித்தனியாகப் பொறுக்கி வைத்துப் பாதுகாத்துக்கொண்டே வருகின்ற கைகள் மரியத்தினுடையவை என்பது காளியப்பனின் எண்ணம். அது உண்மையும்கூட. சம்பாதித்த அடுத்த நொடியில் அந்தப் பணத்தின் மீதான பாதுகாப்பை உறுதிசெய்ய ஆட்கள் இல்லாத வியாபாரிகளின் குறுகிய, பயந்த வாழ்க்கைக் கதைகளை அவர் அறிவார். திரவியம் போன்ற நுட்பமும் சாதுர்யமும் வீரியமும் கூடிய மனிதனை நிம்மதிப்படுத்த, மரியம் போன்ற – தன் தசைக்குள்ளிருக்கும் இன்னொரு பெண்ணைக் கடந்துவிட்ட – பெண்ணால்தான் இயலும். திரவியத்தை மகிழ்விக்க வேண்டி மரியம் ஒவ்வொரு முறையும் தனக்குள்ளிருக்கும் நைச்சியத்தை வெளிப்படுத்தி வெளிப்படுத்தி ஒரு கட்டத்தில் அதுவாகவே ஆகிப்போனாள்.

திலகருக்குத் தனது அண்ணியைக் காணும்போதெல்லாம் அவளது இந்த ஆளுமையின் பொருட்டு மெல்லிய பெருமிதம் வந்துசெல்லும். சித்திரையின் காதருகே, “இந்த தெரு முழுக்க இருக்கறவனுக எங்க தாத்தாவழி பங்காளிங்கதான். எல்லாரும் படிச்சு படிச்சு பெருமை கொண்டவனுங்க. எங்க அண்ணி வந்தபிறகுதான் வாய்க்கும் கைக்குமா போய்க்கிட்டிருந்த கடை லாபத்துல கொஞ்சங் கொஞ்சமா ஈரம் பிடிச்சது. இல்லாட்டி இந்த நிலை இருந்திருக்காது.”

சித்திரை புன்னகைத்துக்கொள்வாள். வீட்டிலிருந்து தள்ளியிருக்கும் பழைய கோவிலுக்குத் தினசரி விளக்கேற்றப் போய்வருவதற்குள் பூக்காரியிடமும் பிச்சைக்காரர்களிடமும் அவள் ஏமாந்து திரும்புகின்ற ஒவ்வொரு முறையும் திலகரால் அவள் நோகடிக்கப்படுவாள். ஒரு பெண்ணின்மீது அந்தக் கேலிகள் ஏற்படுத்துகின்ற அழகான வெகுளித்தன அழுகைகளை, அந்த அழுகைக்குப் பிறகு அவள் மேலும் சிறுமியாக யவ்வனம் கொள்வதை மரியம் பார்த்துக்கொண்டேயிருப்பாள். மிக வெகுமதியான திலகரின் பாராட்டுகளைவிட அப்போது தன்னிடம் இல்லாமலாகிவிட்ட ஏதோவொன்றை அவளது உள்ளம் தேடிக்கொண்டே இருக்கும். 

வீட்டின் மூலையில் இருளடைந்து கிடந்த கிணற்றை போயர்கள் வைத்துத் தூர்வாரி, அதில் தெளிந்து மேலேறிய நீர்மட்டத்திற்குப் பூக்களைத் தூவி விளக்குக் காட்டிய நான்காவது நாளில் சித்திரையின் தேதி தள்ளிப்போனது. மரியம் அப்போது நாணயங்களைச் சிறிய சிறிய கோபுரங்களாக அடுக்கி எண்ணிக்கொண்டிருந்தாள். சித்திரை திலகரிடம் முணுமுணுவென ஏதோ கூறிக்கொண்டிருப்பதன் ஓசைக் குழைவுகளை, அவர்களே அறியாமல் அவர்கள் மகிழ்ந்து வெளிப்படுத்திய சிரிப்பின் விளிம்பில் ஒட்டியிருந்த ஜரிகை வெளிச்சங்களை மரியம் கவனித்துவிட்டாள். அவளது கைகள் நடுக்கமாக, வேகமாக, முன்னிலும் சிரத்தையாக நாணயங்களை எண்ணின. தன் முன்வந்து  நிற்கப்போகின்ற மகிழ்ச்சியான பாதங்களைப் பார்க்கும் முன்பாக, சிக்கலும் ஆழமுமான கணக்கு வழக்குப் பேரேட்டின் எண்ணிலா எண்களுக்குள் தன்னை ஒளித்துக்கொள்ளத் துடிப்பவளாக பரபரத்தாள். ஞாபக மறதியாக எங்கோ வைத்துவிட்ட தனது இயல்பான முகங்களிலொன்று அவளது கைகளிற்குத் திரும்ப வராமலே வெயிலில் இளகிக் கரைந்துகொண்டிருப்பதைத் தூக்கத்திற்குள் கத்த முயல்பவளைப் போலப் பதறலாக உடல்முழுவதும் உணர்ந்தாள். 

சிறிய மேடிட்ட வயிற்றுடன் சித்திரை வீடு முழுக்கத் திரிந்த நாட்களில், மரியம் காளியப்பனுடன் பேரேட்டுப் புத்தகங்களில் மேலும் மேலுமாக மோதிக்கொண்டிருந்தாள். இன்னமும் பூக்காரிகளிடமும் பிச்சைக்காரர்களிடமும் ஏமாறுபவளாகச் சித்திரை ஒளிர்ந்துகொண்டிருந்த அந்த நாட்களில் மரியம் கடை வரவு செலவுகளில் வாளின் கூர்மையுடன் தனது இருப்பை மினுங்கச் செய்துகொண்டாள். சித்திரையின் கண்களில் வெளிப்படுகின்ற- எல்லோராலும் விரும்பப்படுகின்ற – அந்தச் சிறுமித்தன்மை காணாமலாகி ஒரு பெண்ணாக அவள் தன்னை வெளிப்படுத்தி முன்வைக்கும் போது அவளைச் செதில் செதிலாக வெட்டி எறிகின்ற வாளின் உடலைப் போல மரியம் தனது நைச்சியத்தைத் தீட்டிக்கொண்டிருந்தாள். பாறைப்புடவுகளில் பெய்கின்ற மழையைப் போல லாபத்தில் ஊறித்தளும்பி திரவியத்தின் கடை மேலேறிக்கொண்டிருந்தது.

அம்மா இறந்த பத்து நாட்களில் எழுத்துப்பூர்வமான பாகப்பிரிவினை முடிந்தது. அது நிகழ்ந்த இரண்டொரு நாளில் இந்த இரவு வந்துவிட்டது. சித்திரையால் புடவையின் முன்பக்கக் கொசுவங்களை அழகழகாக மடித்துச் சொருகிக்கொள்ள முடியாத வயிற்றின் கர்ப்ப மேடிட்ட நாட்கள். அவள் தனது ஒவ்வொரு நகையாகக் கழற்றிக் கொடுத்துவிட்டு பொட்டுத் தங்கம் இல்லாத, கலங்கலான நீர் நிரம்பிய கண்ணாடிப் பாத்திரத்தைப் போல தூணில் சாய்ந்துவிட்டாள். மரியம் உள்ளே பீரோவைத் திறந்து நகைகளை எடுத்துவைக்கும் ஓசை கேட்டபடி இருந்தது. தாங்கள் எதிர்கொண்டிருக்கும் துயரான விடியலை எண்ணி அவள் குமைந்துகொண்டிருந்த நொடியில், ஈரமான மணலில் மிதித்தெழும் பாதத்தைப் போல அவளது வயிற்றின் மேட்டில் பிஞ்சுப் பாதங்கள் உதைத்துச் சுழன்று சென்று கூசச்செய்தது. திரவியத்தின் முன்னே கைதியைப் போல அமர்ந்து நைந்து போனவனாக பேசிக்கொண்டிருக்கும் திலகர் இயல்பாகத் திரும்பி சித்திரையைப் பார்த்தான். அடிவயிற்றின் அந்தக் கூச்சத்தை மறைக்கவியலாமல் சித்திரை புன்னகைத்தாள். திலகரும் எல்லாத் துயர்களையும் தாண்டி வந்து ஒரு கணம் அந்தப் புன்னகை தெரிவிக்கின்ற செய்தியைத் தீண்டி மகிழ்ந்தான். அறையிலிருந்து வெளியேறி வந்த மரியம் அந்தப் பரிமாற்றத்தின் இரகசிய இழையை, அந்த இழையின் மெல்லிய நூலேணி வழியே அவர்களிருவரும் இந்தத் துயரத்திற்கு வெளியே சென்று கண்டு மகிழ்ந்த கனவைப் பார்த்தாள். வாளின் கூர்நுனியால் வெட்டிட முடியாத நுரைக்குமிழி போல அந்த மகிழ்வு மிதந்தேறி அவளுக்கு அகப்படாமல் விலகிச்சென்றது.

காளியப்பன் எவ்வளவோ சொல்லியும் அந்த இரவிலேயே அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டுமெனத் திரவியம் சொல்லிவிட்டான். மரியம் எதுவும் சொல்லாமல் நின்றிருந்தாள். உக்கிரமான ஒரு நாடகத்தின் இறுதிக் காட்சியென்பது அதை எழுதிய கைகளை மீறித் தன்னிச்சையாக நிகழ்ந்து மேலெழும் சில கணங்கள் உண்டு. அவள் சித்திரையை வீழ்த்த விரும்பினாள். சித்திரை ஒருபோதும் போட்டியிட வந்ததில்லை. அவளால் அடைய முடியாத அந்த மேடிட்ட வயிற்றிற்காக மிகப்பெரிய சதுரங்கத்தில் தனது யானைகளையும் குதிரைகளையும் பிரம்மாண்ட உயிரிகளாக வளர்த்து நிறுத்தியிருந்தாள். 

நகைககளைக் கழற்றக் கழற்ற சித்திரை வெகு எளிமையான ஒரு பெண்ணாகிப் போனாள். ஆனால் அந்த எளிமையின் மெழுகு வெளிச்சம் அவளை விட்டுப் போகவேயில்லை. திரவியத்தின் காலைப் பார்த்தபடி திலகர் படுதோல்வியாளனாகக் கசிந்துகொண்டிருந்தான். அவன் அழுகையின் தொனியோடு தனது இயலாமையை முன்வைத்தபடி இருக்கும்போதெல்லாம் திறமையற்ற ஒரு ஆணின் மீது படிகின்ற அவலட்சணங்களைப் பெறாமல் வாரி அணைத்துக்கொள்ள வேண்டுமெனத் தோன்றுகின்ற சிறுவனைப் போல மாறியிருந்தான். மரியம் நிகழ்த்தியிருந்த காய் நகர்த்தல்களில் எல்லாமே துல்லியமாகக் கூடிவந்தது. அவள் விரும்பிய அழுகை உட்பட. ஆனால் அதற்கு வெளியே சென்று அவர்கள் கனவு காண்பதற்கான துளியளவு வெளிச்ச ஊற்றை அவளால் ஒருபோதும் அடைக்க முயலவில்லை. அவள் அமைதியாக அமர்ந்துவிட்டாள். திரவியம் தனது ஆவேசப் பேச்சின் கனத்தைத் தாங்கவியலாதவனாக மாடிக்குச் சென்றுவிட்டான். 

3

சிறிய வீறிடலோடு குழந்தை தொட்டிலிற்குள் புரண்டது. எங்கோ ஆழத்தில் கிடந்து பதறி எழுந்தவளாக சித்திரை அதனை நோக்கிச் சென்றாள். வாசலுக்கு வெளியே நீள்கின்ற பாதைத்தடத்தின் மீது கவிந்து வருகின்ற இருளைப் பார்த்தவாறே உறைந்திருந்தாள் மரியம். இந்த வீறிடல்கூட தீண்ட முடியாத அவளது தனிமை அது. அவளைக் கடக்கும்போது சித்திரை மென்மையாக, “பசி. பால் தர்ற சமயம்” என்றாள்.

மெல்ல அதிர்ந்து தன்னியல்பிற்கு வந்த மரியம், “ஆங்.. ம்” என்றாள்.

மடியில் பாலுறிஞ்சுகின்ற குழந்தையோடு, அருகே சிலேட்டில் கிறுக்குகின்ற பையனோடு இருளிற்குள் சித்திரை அமர்ந்திருந்தாள். வாய்க்காலில் ஆடி முடித்த ஈர உடலோடு நடுவிலுள்ளவன் அம்மணமாக நின்றுகொண்டிருந்தான். ஒரு கையால் மடிக்குழந்தையின் முதுகில் தட்டிக்கொண்டே இன்னொரு கையால் அவனது ஈரமான உடலைத் துடைத்து விட்டாள் சித்திரை. பழைய அழுக்கான மெழுகிலிருந்து வழிந்த ஸ்படிகத் துளிகள் போல குழந்தைகள் சூழ அவள் அமர்ந்திருந்தாள். மரியத்திற்கு குளிரில் வெடவெடத்து நிற்கின்ற அந்தச் சிறிய உடலைத் துடைத்துவிட வேண்டும் போலிருந்தது. 

சித்திரை மூன்றாவதாக உண்டாகியிருப்பதைக் கேள்விப்பட்டு, எல்லா வைராக்கியங்களையும் கைவிட்டு காளியப்பனை அனுப்பி வெளிப்படையாகவே கேட்டு வரச்சொன்னாள் மரியம்.

என்ன சொல்வதென்றே தெரியாத தத்தளிப்போடு திலகர் அமர்ந்திருக்க, சித்திரை சமையல்கட்டில் தனியே அழுதுகொண்டிருந்தாள்.

“அது எப்படிங்க! என்னால ஏலாதுண்ணே. அக்காக்கே அது தெரியும்ணே. கால்ல வேணா விழறேன், அவங்க மேல எந்தத் தாங்கலும் எனக்கு இல்லண்ணே. ஆனா என்னால ஏலாதுண்ணே.”

திலகரால் பெருமூச்சுடன் அதைச் சொல்ல மட்டுமே முடிந்தது. காளியப்பனால் அந்த அழுகைக்கும் அரற்றலுக்கும் முன் மூச்சு விடக்கூட முடியவில்லை.

அதையெல்லாம்விட அந்தப் பதிலை மரியத்திடம் எப்படிச் சொல்வதெனப் பரிதவிப்பும் பயமுமாக அவர் திரும்பும்போது அடைந்த மன அலைச்சல் கொடூரமானது. ஆனாலும் போய் கூறவே செய்தார். அமைதியான குரலில் அவர் கூறக்கூற, முற்றிய விறகொன்றின் மீது தீ படருவதைப் போல அவள் முகமெங்கும் மிடுக்கான இறுக்கம் பரவியது. அவர் கூறி முடித்த பிறகு, நெடுநேரம் அமைதியாக யோசித்தபடி இருந்தாள். பிறகு கஷ்டமான ஒரு சிரிப்போடு, “சரிண்ணே. தோணுச்சு, அதான். நாளைப்பின்ன வாய்விட்டு கேட்காமப் போய்ட்டோம்னு ஆகிடக்கூடாது இல்லயா?” என்றவாறு மேலும் சிரிக்க முயன்றாள். ஆனால் எதிலோ சிக்கிக்கொண்டதைப் போல உதடு திணறியது.

பாதைத்தடத்தை இருள் முழுமையாக நிறைத்திருக்க, வாழையிலைகள் இருளுக்குள் எண்ணற்று நின்றிருந்தன. வெளியே வந்து மரியத்தின் தோளில் கைவைத்து நின்ற திரவியம், “ஏன் இவ்ளோ நேரம்! ரொம்ப தூரம் லயன் போக வேணாம்னு சொல்லு சித்திரை. கடன் எதுவும் விடவேணாம்னும் சொல்லு. இவனுக்குத் திரும்ப கேட்கத் தெரியாது” என்றவாறு மெல்ல நடந்தான்.

மூத்தவன் டார்ச்சை அடித்தபடி முன்னே செல்ல, காளியப்பன் அவனோடு ஏதோ பேசியபடி நடந்தார். வாழைத்தோப்பிற்குள் நீர் பெருகியோடுகின்ற சப்தத்திலேயே காற்றில் குளிர் ஏறிக்கொண்டிருந்தது. 

காரில் ஏறிக்கொள்ளும் முன்பு மூத்தவனின் கையில் சில ரூபாய்த் தாள்களைத் திரவியம் திணித்தான். அவன் பதறியபடி பாதை முடிவில் நின்ற சித்திரையைப் பார்த்தான். அவள் மென்மையாகத் தலையசைத்தாள்.

அம்மாவின் சேலைத்தலைப்பைப் பிடித்தபடி நடுவிலுள்ளவன் நிற்க, கைக்குழந்தை வெற்றுடம்பில் குளிர்க்காற்றை வாங்கியவாறு சித்திரையின் கன்னத்துச் சூட்டை நக்கியபடியிருந்தது. நீண்ட முகப்பு வெளிச்சத்தை உமிழ்ந்தவாறே கார் கிளம்ப ஆயத்தமாக, ஜன்னல் வழியாகக் கிளம்புகிறோம் என்னும் விதம் தலையசைத்த மரியம், “குளிர்காத்தா இருக்கு. குழந்தைக்கு பொத்திவிடு” என்றாள்.

நடுவிலுள்ளவன் கையிலிருந்து உருவிய சேலைத்தலைப்பால் குழந்தையை முற்றிலும் போர்த்தினாள் சித்திரை. திடீரென தன்மீது கவிந்த இருளைக் கிழித்தபடி தனது முகத்தை முண்டி வெளியே வந்தது அதன்முகம். தன்னை மறந்து அந்தச் சிறிய கண்களின் சிரிப்பைப் பார்த்தபடி பால்வாசனை எழுகின்ற அதன் முகத்தை நுகர்ந்து முத்தமிட்டாள் சித்திரை. பிறகு, சட்டென எதையோ அடக்க முயன்றவளாக தன்னை நிதானித்துக்கொள்ளும் முன்பாக, ஜன்னல் கண்ணாடி பதறி விரைந்து மேலேறுவதைப் பார்த்தாள். பிறகு, நீண்ட நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.

11 comments

Muthu Kannan August 30, 2021 - 8:29 am

பல பல உவமைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது கதை. வரிவரியாய் படிகிறது மனதில். சமீபமாக என்னை ஆட்கொண்ட எழுத்து உங்களுடையது. வாழ்த்தும் அன்பும்.

panneerselvam August 31, 2021 - 10:15 am

Very good story.

கோபால் மனோகர் August 31, 2021 - 4:07 pm

அசத்தி விடும் கதை ?

முத்துவேல் August 31, 2021 - 5:46 pm

கண் முன் பல குடும்பங்கள் வந்து செல்கிறது

ரமேஷ் kalyaan August 31, 2021 - 8:22 pm

சாதாரண குடும்பங்களில் பொருளாதார அதிகாரம் நிறுவ முயலும்போது நடைபெறும் உள்ளரசியல் அழகாக வந்திருக்கிரது. இருப்பு இன்மை எனும் விஷயம் மெதுவாக வேறொன்றாக மாறுவதே கதையின் அழகு.

SAKTHI L September 1, 2021 - 10:22 am

எது எதிராளியிடம் இல்லையோ அதையே ஆபரணமாக அணிகிறான் மனிதன் எனும் விலங்கு.

அ. ராஜ்குமார் September 10, 2021 - 6:01 am

ஆபரணம். பால் வீச்சம் மாறா ஆபரணம். அதில் தான் எத்தனை வேலைப்பாடு! என்னவோர் செய்நேர்த்தி! உருக்கி எடுத்து விட்டீர்கள். கலைஞனய்யா நீர்! மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

ப. சரவணமணிகண்டன் September 20, 2021 - 5:37 am

உங்கள் கதைகளைப் படிக்கும்போதெல்லாம் நான் சிலிர்ப்பிற்கும் சிதறலுக்கும் உள்ளாகிறேன். குத்தித் துளைக்கும் மொழிநடை. துல்லிய மனச்சித்திரங்களை உருவாக்கும் மொழிநடை. இந்தக் கதையில் திலகரின் இடத்தில் என் மாமனாரைப் பொருத்திப் பார்த்துக்கொள்கிறேன்.
முப்பது ஆண்டுகளாக அவர் குடும்பம் கண்ட வறுமையை இன்று ஓரளவேனும் அவரின் இரண்டு பெண்களும் துடைத்தெறிந்திருக்கிறார்கள். ஆனால், அந்த நிலையை வந்தடைவதற்கு திலகர் எனப்படுகிற வெங்கடேசன் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. சித்திரை என்கிற கௌரிதான் எல்லாமும் செய்தார்.
தினக்கூலி இருபது ரூபாய்க்காக பாபினில் நூல் இழைத்துத் தரும் வேலைக்குச் சென்றிருக்கிறார். எப்படியோ பல்லைக் கடித்து, பெரும் வைராக்கியத்துடன் தன் இரு மகள்களையும் படிக்க வைத்தார். அந்த இருவருள் ஒருவர் பார்வைத்திறன் குறையுடைய என் இணையர் விசித்ரா.
இன்று விசித்ரா ஓர் அரசு ஆசிரியர். கைநிறையச் சம்பாதித்துத் தன் தங்கையைப் பொறியியல் படிக்க வைத்து, தகுதியான வேலை மற்றும் மணவாழ்வு பெறச் செய்திருக்கிறார்.
ஐயா, துவந்தத்தில் ஒரு திறப்பு என்றால், ஆபரணத்தில் வேறுவகையான சிலிர்ப்பு. இப்படிப்பட்ட எழுத்தாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்துகொண்டே இருக்கும் எங்கள் அன்பிற்குரிய ஆசிரியர் ஐயா ஜெயமோகன் அவர்களுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள்.

வன்மீகநாதன் November 17, 2021 - 10:27 pm

கருத்து என ஒன்று தேவைப்படாமல் உள்ளது உள்ளபடியே கதை வளர்கிறது. உங்கள் கைவசம் ஒரு நேர்த்தியான கதை சொல்லும் திறன் உள்ளது. மரியத்தின் முக இறுக்கத்தை பார்க்காமலேயே காளியப்பன் காண்பதாகட்டும், திலகரின் கையை பிடித்துக்கொண்டு நிற்கும் பேரசதியான சித்திரையின் சித்திரமாகட்டும் அனைவரின் வாழ்க்கையிலும் நிகழ்ந்த ஆனாலும் வார்த்தைகளில் வடிக்கப்படாத உணர்வுகளாகவும் அது இங்கே திறம்பட வெளிப்பட்டிருப்பதாகவும் எண்ணுகிறேன். திரவியத்தின் கால் கட்டு மட்டும் ஏதோ ஒரு கருத்தை சுமந்து கொண்டு நிற்பதாக தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.

Comments are closed.