இசையின் முகங்கள் (பகுதி 3): ஷ்யாம்

by ஆத்மார்த்தி
0 comment

19.03.1937 அன்று சென்னையில் அவதரித்த சாமுவேல் ஜோசப் என்கிற இயற்பெயரைக் கொண்ட ஷ்யாமுக்கு அந்தப் பெயரை வழங்கு பெயராக்கியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. தக்ஷிணாமூர்த்தி, சலீல் சவுத்ரி, ஆர்.டி.பர்மன், டி.ஜி.லிங்கப்பா, ராஜேஸ்வர ராவ், பெண்டியால நாகேஸ்வர ராவ், சலபதி ராவ் போன்ற இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் சியாம். எம்.பி.சீனிவாசன், ஆர்.பார்த்தசாரதி, தக்ஷிணாமூர்த்தி, எஸ்.எம்.சுப்பையா, விஸ்வநாதன் ராமமூர்த்தி எனப் பல புகழ்வாய்ந்த இசையமைப்பாளர்களிடம் வயலின் கலைஞராக வேலை பார்த்த அனுபவம் மிக்கவர். முதல் படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கருந்தேள் கண்ணாயிரம். 1972ஆம் வருடம் வெளிவந்தது. ஷியாம், பிலிப்ஸ் இருவரும் சேர்ந்து இசையமைத்திருந்தார்கள். அடுத்து நடிகர் ரவிச்சந்திரனின் சொந்தப் படம் அப்பா அம்மா. அதற்கு இசையமைத்தார் ஷியாம். ஆர்.சி.சக்தியின் உணர்ச்சிகள் 1976ஆம் வருடம் வெளிவந்தது. இதில் இரண்டு பாடல்களை ஷ்யாமே பாடியிருந்தார்.

மனிதரில் இத்தனை நிறங்களா – ஆர்.சி.சக்தி இயக்கி கமல்ஹாசன், முரளி மோகன், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்த படம். இந்தப் படத்தில் மழை தருமோ என் மேகம், பெண்ணே பூமியடி ஆகிய இரண்டு பாடல்களும் நல்ல பிரபலமடைந்தன. பஞ்ச கல்யாணி 1979ஆம் வருடம் வெளிவந்தது. இதில் எஸ்.பி.பி பாடிய சோலோ பாடல் “பூமா தேவி போலே வாழும் ஜீவன் நீதானே” என்பது மனதைக் கரைத்துவிடுகிற வல்லமைகொண்ட பாடல். இதிலேயே இன்னொன்று, “ராசா வந்தானடி”. இது ஒரு டூயட் பாட்டு. வாணி ஜெயராம், சந்திரபோஸ் பாடியது. நீ சிரித்தால் நான் சிரிப்பேன் படத்தில் “உன்னைப் படைத்ததும் பிரம்மன்” என்று எஸ்.பி.பி பாடிய பாடலின் இடையிசை சற்று இந்துஸ்தானி தன்மையில் இருந்தது கூறத்தக்கது. மௌலி இயக்கிய மற்றவை நேரில், வா இந்த பக்கம் ஆகியவை ஷ்யாம் இசையில் பெயர் சொல்லும் படங்கள். “மழைக்கால மேகங்கள்” என்று ஒரு பாடல், கள் வடியும் பூக்கள் படத்துக்காக இசையமைத்தது.

இதயம் பேசுகிறது, குப்பத்துப் பொண்ணு, நன்றி மீண்டும் வருக, ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது, குழந்தை இயேசு, நலம் நலமறிய ஆவல், சந்தோஷக் கனவுகள், விலங்கு, தேவதை, நான் நன்றி சொல்வேன், தேவைகள், அந்தி மயக்கம், விலாங்கு மீன், பாசம் ஒரு வேஷம், சலனம், ஜாதிப் பூக்கள் போன்றவை ஷியாம் இசையமைத்த படங்கள். ஷ்யாம் இசையில் சொல்லப்பட வேண்டிய பாடல்கள் பல உண்டு. குறிப்பிட்ட பாடல்களில் கஜல் தன்மையையும் எதிர்பாராப் புதுமையையும் ஒருங்கிணைத்து இசைத்தவர் ஷ்யாம். இடையிசை மன்னர் என்று புகழக்கூடிய அளவுக்கு இவரது பாடல்களின் இண்டர்ல்யூட்கள் கோலோச்சின.

ஷ்யாம் மாஷே அதிகம் உணரப்படவில்லை. அவரொரு இசை மேதை என்பதற்குப் பல பாடல்கள் சாட்சி சொல்லும். எழுபதுகளினூடே அவர் பிறப்பித்த பல பாட்டுகள் முக்கியமானவை. இன்னொரு முக்கிய விஷயம் குரல்களை அவர் மேலாண்மை செய்த விதம். ஒரு இசையமைப்பாளர் வெறுமனே பாடலை உருவாக்குவதோடு ஒதுங்குபவரில்லை. அப்படி ஒதுங்கிக்கொள்ள முடியாது. அந்தப் பாடலை நிகழ்த்துபவரும் அவரே. எந்த ஒரு பாடலும் ஒரே ஒருமுறைதான் நிகழ்கிறது. பிறகெல்லாம் அந்த நிகழ்வின் பிரதிகள் மாத்திரமே மீண்டும் மீண்டும் உருக்கொள்கின்றன. இதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் ஒரே ஒருமுறை சென்றுவந்த சுற்றுலாத் தலம் ஒன்றின் ஞாபக மீவருகைகளைப் போலத்தான் ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு பாடலைக் கேட்பது நிகழ்த்தப்படுகிறது. அந்தப் பாடலின் பதிவின் போது நிகழ்ந்த ஒற்றை என்பதன் பிரதிபிம்பங்கள்தான் கேட்கையில் ஒலிக்கும் பாடலானுபவமெல்லாம்.

ஷ்யாம் மலையாளத் திரையிசையின் முக்கிய மைல்கல். “ஒரு பூந்தணலும் முந்திரியும் ஓமர்கய்யாம் கண்டு பாடி” என்ற பாடலை ஜேசுதாஸ் பாடிய நளினம் இருக்கிறதே.. அதை எப்படி வியந்து முடிப்பது? ஜேசுதாஸ் அது போலப் பல பாடல்களைப் பாடியிருப்பதாகத்தான் தன்னைத் திறந்துகொள்ளும். இடையிசையில் அத்தனை சங்கதிகளை வைத்திருப்பார் ஷ்யாம். பி.மாதுரியும் ஜேசுதாஸூம் அந்தப் பாடலின் நடுப்பகுதியைக் கடந்ததெல்லாம் உலகத்தரம். நன்கு சமைத்தளிக்கப்படுகிற மீனுடலின் நடுப்பாகத்தை நினைத்துக்கொள்ளுங்கள். அத்தனை சுவையை அந்தப் பாடலும் வழங்கும்.

“அரபிக்கடலில் ஆயிரம் ராவுகள்” என்ற வரி மீண்டும் மீண்டும் ஒலிக்கும். இந்தப் பாடலைக் கேட்பதற்குப் பிரியம் கொண்டோர் மாத்திரம் இந்தச் சுட்டிக்குச் சென்று திரும்பவும்.

மது தயாரித்து இயக்கி நாயகனாகத் தோன்றிய காமம் குரோதம் மோகம் படத்தில் ஸ்வப்னம் காணும் பெண்ணே என்ற பாடல் மாஷேயின் அடிபொளிகளில் ஒந்நு. இதொரு டூயட் பாட்டு. இதை எழுதியவர் பரனிக்காவு சிவக்குமார். ஜேசுதாஸ், சுஜாதா மோகன் சேர்ந்து பாடிய கானமிது.

ஓர்மயுண்டோ ஓர்மயுண்டோ கொஞ்சம் வேகதாள கானம். சரிதா என்ற படத்துக்காக ஜெயச்சந்திரன், மல்லிகா சுகுமாரன் பாடிய பாடல். உறக்கம் வராத ராத்ரிகள் பாடலை ஜேசுதாஸ் வித்தியாச உற்சாகத்தோடு பாடினார். உடன் பாடியவர் விஜயா பெனடிக்ட். பாடலின் துவக்கமே படத்தின் பெயரும். ரௌடி ராமு நல்லிசை நற்படம். கானமே பிரேம கானமே ஜேசுதாஸ், வாணி சேர்ந்து பொழிந்த கானமழை. கேட்டால் தித்திக்கும் ரொமாண்டிக் தேனமுதம்.

ஜன்மங்களை ஜீவ தந்திரியில்

தளும்பும் சங்கீதமே

சைதன்யமாய் சங்கல்பமாய்

துடிக்கும் சௌரப்யம் நீ என்னுமேனுள்ளில் 

வாசிக்கும் போதே தேன் சொட்டும் இத்தனை காதலை ஊற்றிப் பிழிந்து எழுதியவர் பிச்சு திருமலா. இதே படத்தில் மஞ்சின் தேரேறி பாடல் ஷ்யாமின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று. இதனைப் பாடியவர்கள் எஸ்.ஜானகியும் வாணி ஜெயராமும் ஆவர். தோன்றியவர்கள் சாரதாவும் ஜெயபாரதியும். இங்கே தமிழில் “மனிதரில் இத்தனை நிறங்களா” படத்தில் இதே பாடல் “பொன்னே பூமியடி” என்று தமிழுக்கு வந்தது. இடையிசைத் தூவல்கள் எல்லாமே தொன்மத்தின் இருளோடு சின்னஞ்சிறிய சோகச் சாய்வுடன் அமைந்த பாடல். பொதுத்திசை நகர்தல் சந்தோஷமாகத்தான் இருந்தது. இந்த நுட்ப முரண் இசையைப் பொறுத்தவரை ஆகச்சிறந்த விளைதலைத் தந்துவிடுவது.

ஒரு மதுரக்கனாவின் கே.ஜே.ஜேசுதாஸ் பாடியது. கனா மறயத்து படத்துக்காக ஷ்யாம் இசைத்தது . சிந்தூரத் திலகவுமாய் துள்ளிக்குயிலே என்ற பாடல் மதுவெள்ள மயக்கம். குயிலெனத் தேடி படத்தில் தாஸ் பாடியது. மணி வீணையுமாய் மது கானவுமாய் என்ற மெல்லிய பாடல் ஜெயச்சந்திரன் ஸோலோ. ப்ளாக் பெல்ட் படத்தில் இடம்பெற்றது. இந்தப் பாடலைக் கேட்கும் போது இனம்புரியாத உணர்வுகள் நம்மை அழுத்துவதை உணர முடிகிறது. காட்டுக் குறிஞ்சிப்பூவும் சூடி சொப்னம் கண்டு மயங்கும் என்ற பாடல் சதீஷ்பாபு பாடிய சோலோ. ராதா என்ன பெண்குட்டி படப்பாடல்.

நளதமயந்தி கதையிலே என்ற பாடல் ஷ்யாமின் கேரள வைரங்களில் முக்கியமானது. ஜேசுதாஸ் உருக்கிய பொன் நகை இந்தப் பாடல். சரணத்துக்கு முந்தைய ஃப்யூஷன் கொத்து ஒன்று பூத்து வரும். அட்டகாசம்! பூவும் நீரும் பெய்யுன்னுமானம் பாடல் ஒரு மந்திர மழை. இஷ்டப்ராணேஸ்வரி படத்துக்காக ஜெயச்சந்திரன், வாணி இணைந்து வார்த்த குரல் சிற்பம். இசையில் ஷ்யாம் செய்ததொரு அற்புத ஜாலம். சத்யன் அந்திக்காடு தாமரப் பூங்காட்டு போலே ஜேசுதாஸ் கௌசல்யா சேர்ந்து பாடிய டூயட். படம் நீயோ ஞானோ.

மேற்கத்திய இசைக்கருவிகளின் தாக்கம், சாஸ்த்ரிய இசை மீதான பிடிமானம், ஃப்யூஷன் எனப்படுகிற புத்திசை மீதான நாட்டம், இவை யாவும் ஒருங்கே அமையப்பெற்ற ஓர் அபூர்வம் ஷ்யாம். சென்ற நூற்றாண்டின் ஏழாம், எட்டாம் தசாப்தங்களில் கேரளத் திரையிசை வானில் உதயமான இரண்டு நபர்கள் மிக முக்கியமானவர்கள். முன்னவர் ஷ்யாம், பின்னவர் ஜெரி அமல்தேவ். இதில் இந்த இருவருமே ஒரே வகைமையும் நாட்டமும் ஒருமித்த நிறைய பாடல்களை உண்டாக்கியது இரசிப்பிற்குரியது. ஷ்யாம் நூற்றுக்கும் அதிகமான படங்களை மலையாளத்திலும் முப்பத்தைந்து படங்கள் வரை தமிழிலும் இசையமைத்தார். எந்த வகைமைக்குள்ளும் தனியே சிடுக்கித் தொகுக்க முடியாவண்ணம் யூக மீறல்களுடன் பாடல்களை அமைத்தார். குரல்களுக்கும் இசைவாரிதிக்குமான தொடர் பந்தயத்தைப் பற்பலச் சுற்றுகளுக்கு நடத்திப் பார்த்தவர் ஷ்யாம்.

தமிழில் பாலு, மலையாளத்தில் தாஸேட்டன், இரு மொழிகளிலும் இவர்களுக்கு அடுத்தாற்போல் சுசீலா, வாணி, ஜெயச்சந்திரன், ஜானகி, கிருஷ்ணச் சந்திரன் ஆகியோரது குரல் வாழ்வின் திகைக்க வைக்கும் மறக்கவியலாத பல பாடல்களை உருவாக்கி அளித்தவர் ஷ்யாம் என்பது நுட்பமானது. ஷ்யாம் இடையிசை மீது மிகுந்த நாட்டம் கொண்டவர். பாடலுக்கு நடுவே அவர் தூவித் தருகிற சின்னஞ்சிறிய உற்சாகங்கள் கான வேடிக்கை நிகழ்த்தும். இசையைப் பெருமிதமாகவும் ஆழ்ந்த சொல்லறுதலாகவும் மாறி மாறிப் படைக்கத் தலைப்பட்டவர் ஷ்யாம். பல்லவியிலிருந்து பாடல் இயங்கத் தலைப்படுகிற உற்சாகத்தை ஒற்றைக் குறுகலுடன் முடித்துவிடாமல் பாட்டினூடே பல்வேறு சிறு, மத்திம இசை மாறல், தொனி, குரல் ஆகியவற்றில் புதிய சேர்மானங்களையும் பழைய விலக்கங்களையும் ஏற்படுத்தியவண்ணம், பாடலை நளினப்படுத்திக்கொண்டே செல்வதில் வல்லவர் ஷ்யாம். தன் பாடல்களில் மேற்கத்திய, கிறிஸ்தவ இசை ஆதிக்கங்களை நேரடியாகப் பரவலாக்கம் செய்யாமல், மேலதிக கான பா’வங்களாகவே அவற்றை மேலாண்மை செய்த வகையில் ஷ்யாம் ஆச்சரியமூட்டினார். வெகு சில அபாரங்களை எப்போதும் உச்சாடனம் செய்துகொண்டிருக்கக் கூடிய தொடர் வழிபாட்டு முறைமை ஒன்றைப் போல இசையால் தன் பெயரை அடைந்தவர் ஷ்யாம்.

‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்தில் ‘மழைதருமோ என் மேகம்’ பாடல் அந்த வகையினது. தானே ஒளித்து வைத்த பொருளைத் தேடித் தவிக்கவிட்டு, தானும் சேர்ந்து தேடுவது போல் பாவித்துத் தளர்ந்த ஒரு புள்ளியில் அதுவாகவே இயல்பாகக் கிடைத்தாற் போல் கிடைக்கச் செய்கிற மனோபாவ வினோதம் ஒன்றினைப் பாட்டுக்கு உட்படுத்தினாற் போல் நன்மையும் தீமையுமற்ற குரலில் இதைப் பாடினார் பாலு. உண்மையில் கேட்கிறதா அல்லது கேட்பது போல் தோற்றமளிக்கிறதா என்று வியக்கவைக்கும் ஒரு குரலில் இதன் ஹம்மிங்கை ஏற்படுத்தினார் சுசீலா. இந்தப் பாடலில் பாலுவின் குரலைக் கவனித்தால் மொழிகடந்த ஒரு சிறுதுளி கர்வம் ஒன்றைத் தன் குரலில் காட்டியிருப்பார். அதுவும் பாடகராக, அவருடையதாக நமக்குத் தோற்றம் அளிக்காது, பாடுகிற பாத்திரத்தில் போய்த் தன்னைச் சேர்ப்பிக்கிற மழைச் சொற்பம் போல அது.

‘பொன்னே பூமியடி’ மலையாளத்தில் முதலில் வேறு படத்துக்கு ஷ்யாம் இசையமைத்த பாடல். இருந்தாலும் தமிழில் கூடுதலாய் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது நிசம். மலையாளத்தில் பாடும்போது பேணப்பட்ட ஸ்வர ஒழுங்கு சற்றே கலைந்து, கூடுதல் ஆனந்தமாய்க் கிளர்ந்து பரவியது. அதுவே முதலில் விளைந்த மூலப்பாடலில் சற்றே கலைந்த சோகம் தமிழில் இல்லை. கடலாழம் என்றே மலையாளம் மொழிந்தது.

‘வா இந்தப் பக்கம்’ மௌலி இயக்கத்தில் ஷ்யாம் இசைத்த படம். இந்தப் படத்தில் ஒரு ஃப்யூஷன் பாடல். மேற்கத்தியப் பாய்ச்சலும் இந்துஸ்தானி நிரவலும் தெம்மாங்குத் தூறலும் நாட்டுப்புறத் தாவலுமாக இந்தப் பாட்டு அள்ளித்தந்த உணர்வூட்டம் அபாரமானது. எஸ்.பி.பாலசுப்ரமணியமும் வாணி ஜெயராமும் பாடிய இந்தப் பாடலில் ஷ்யாம் சகலகலா வித்தைகளைத் தோற்றுவித்தார். பாடலாக்கமும் காண்போரைக் கவரும் வண்ணம் அமைந்திருந்தது. ஷ்யாம் இசைத்த படங்களில் மௌலி இயக்கத்தில் உருவான ‘வா இந்தப் பக்கம்’ படத்துக்குத் தனியோர் சிறப்பிடம் என்றும் உண்டு. திரையுலகத்திற்குப் பி.சி.ஸ்ரீராம் அறிமுகமானது இந்தப் படத்தில்தான். பிற்காலத்தில் இந்திய அளவில் தன் ஒளிப்பதிவுக்காகப் புகழப்பட்ட அவரது ஆரம்பப் படமான இந்தப் படத்தின் பாடல்களில் நிற ஜாலங்கள் பலவற்றைத் தோற்றுவித்தார். கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோரது வரிசையில் ஷ்யாமுடன் பாடற்கூட்டு அமைத்த கவிஞர் வைரமுத்து பல சிறப்பான பாடல்களை யாத்திருக்கிறார். அப்படியானவற்றில் நிச்சயம் “இவள் தேவதை” பாடல் தனிக்கவனம் ஈர்ப்பதுதான்.

இவள் தேவதை இதழ் மாதுளை  
நிலா மேடையில் கலா நாடகம்  
நிலா மேடையில் கலா நாடகம்  
கனாக்கள் இல்லை
காண்பதுண்மையே..

(இவள் தேவதை)

இந்தப் பாடலை இத்துணை கவித்துவத்தோடு தொடங்கித் தந்தார் வைரமுத்து. இதன் இரண்டாம் சரணம் காதலெழுத்தின் உச்சம் என்றால் தகும்.

நாணத்தில் நீ இருப்பாய்  
மோனத்தில் நான் இருப்பேன்  
உள்ளங்கையில் அமர்த்துவேன்  
கன்னம் தொட்டு நிமிர்த்துவேன்
இறகு நனையும் வரைக்கும்

மயில்கள் மழையில் நனைந்து துள்ளாதோ  
இமைகள் அசையும் ஒலியைக்கூட

செவிகள் புரிந்துகொள்ளாதோ

கலை பழகும் பொன்னேரம்

தலையணையும் தள்ளாடும்  
விரல்களில் ஒரு மின்சாரம் பாயும்

(இவள்)

இந்தப் பாடலை பாலு பாடிய தொனியில் ஒரு பணிவும் தன்னைச் சமர்ப்பிக்கும் காதல் யாசக பாவமும் நிரம்பி இருக்கும். அதுவே வாணி ஜெயராமின் குரலோ அதிகாரத் தெம்மாங்காய்த் தென்றல் திருடும். எங்கு சென்றால் என்னடா, என்னவன் நீ, என்னிடம் வந்தாக வேண்டுமல்லவா என்கிற இறுமாப்பும் அதிகாரமும் நிரம்பித் தொனிக்கும் இன்பத் தூறலாய் இதனைப் பாடினார் வாணி.

இதே படத்தில் ஷ்யாம் இசையில் எண்பதுகளின் மறக்க முடியாத இன்னுமொரு பாடல் உருவானது. ஷ்யாம் என்றதும் நினைவுக்கு வரக்கூடிய இன்னோர் அற்புதம். பி.சி.ஸ்ரீராமின் இருளில் ஒளியைப் பருகும் படமாக்கல் முறைக்கான ஆரம்பத் தடங்களில் ஒன்றாக இதனைக் கொள்ளலாம். அத்தனை அழகான காதல் பாடல் இல்லை என்று போற்றுமளவுக்கு இதனைப் படம் செய்தார் மௌலி. பிரதாப் போத்தனும் உமா மருதபரணியும் நடித்திருந்தனர். மழைக்கு முந்தைய கசகசப்பை, ஒரு விதமான வியர்வைத் தருணத்தை, காற்றுக்கு ஏங்கும் மனவாட்டத்தை, நீர் பருகித் தீராத பெருந்தாகத்தை, சொல்லித் தீராத காதல் வாட்டத்தை, இன்னபிறவற்றை எல்லாம் இசையில் தோற்றுவித்தார் ஷ்யாம்.

ஆனந்த தாகம்

உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி

நேரம் பார்க்குமே

மென்மையின் அத்தனை மலர்தலையும் உட்படுத்தியபடி இதனைப் பாடியிருந்தார் தீபன் சக்கரவர்த்தி. உடன் பாடியவர் எஸ்.ஜானகி. காலம் கடந்து இன்றும் ஒலிக்கிற வானொலிக் கீற்று இந்தப் பாட்டு.

சிவச்சந்திரனுக்கு ஒரு பாடல் தந்தார் ஷ்யாம். பாலுவும் ஜானகியும் பாடியது. “நீ சிரித்தால் நான் சிரிப்பேன்” என்பது படத்தின் பெயர். இந்தப் பாடலை எழுதியவர் புலமைப்பித்தன். ஆழ்ந்த இசையறிவும் நுட்பமான கவியுணர்வும் ஒருங்கமைந்த புலவர் அவர். மெட்டு நிலத்துக்குள் பூத்துக் குலுங்கும் வார்த்தை மலர்த்தோட்டம் என்றே அவர் தருகிற பாடலைச் சொல்ல முடியும். ஷ்யாமின் மனவோட்ட இசைக்கு ஏற்ற பாடலாக இதனை யாத்தார் புலவர்.

உன் சிரிப்பு அது புன்சிரிப்பு

இதயத்தின் உயிர்த்துடிப்பு

பருவத்தின் எதிரொலிப்பு

உனை கண்ட ரதி முகத்தில் ஏனோ வியப்பு

உன் அணைப்பு அது நம் பிணைப்பு

இளமையின் தனிச்சிறப்பு
குளுமையில் சுடும் நெருப்பு

மன்மதன் மதி முகத்தில் ஏனோ திகைப்பு

இதனைப் பாலு பாடிய விதம் பாலைச் சுண்டக்காய்ச்சிப் பாகு வார்த்தாற் போன்றதொரு குரலில் அமைந்திருந்தது. இந்தப் பாடலும் ஷ்யாமின் வழக்கமான முத்திரைக்குரிய பாடலாகவே அமைந்தது. மலைப்பயணத்தின் சின்னச்சின்ன ஏற்ற இறக்கங்களும் வளைதல் நெளிதல்களுமாய்ப் பாடலெங்கும் மாற்ற மலர்கள் மகரந்தம் சேர்த்தன. இதே படத்தில் பாலுவுக்கொரு சோலோவும் அமைந்திருந்தது. ஷ்யாமின் இசை விஸ்தீரணமும் கற்பனைப் புரவியின் நெடுந்தொலைவுப் பாய்ச்சல்களும் புரியத்தரும் வண்ணம் இந்தப் பாடல் இன்றும் ஒலிக்கின்றது. “உன்னைப் படைத்ததும் பிரம்மன் ஒருகணம் திகைத்து நின்றிருப்பான்” எனத் தொடங்கும் இதனையும் புலவர் புலமைப்பித்தனே இயற்றித் தந்தார்.

பாதி முகத்தை மறைக்கும் உந்தன்
கூந்தலின் கருமை கண்டு
வானில் மிதக்கும் மேகக்கூட்டம்
மறையும் நாணம்  கொண்டு

உருகுவதற்கும் ஒரு அளவு இல்லையா மிஸ்டர் பாலு என்று ஒரு அதட்டல் போடலாமா என நம்மை எண்ண வைக்கும் அளவுக்கு அப்படி ஒரு உருக்கம். ஷ்யாமின் ஆனந்தக் கிறக்கம் இந்தப் பாடல்.

கண்ணீரில் எழுதாதே படத்தில் ஜானகி பாடிய பாடல் வாசமலர் பூத்திருச்சு.

வாசமலர் பூத்திருக்க
வேற மலர் பார்த்திருக்க
தோகை மயில் ஆடக்கண்டு
தோழிகளைக் கூட்டிக்கொண்டு
போறவழி போகவிட்டு
பொக்கிஷங்கள் அள்ளித்தந்து
தருமோ தருமோ கண்மணியோ
ஆத்துக்கு அந்தப்புறம் அஞ்சாறு தென்னமரம்
ஆத்துக்கு அந்தப்புறம் அஞ்சாறு தென்னமரம்
மச்சான் வரப்போறான் மணமாலை போடப் போறான்
மச்சான் வரப்போறான் மணமாலை போடப் போறான்

எழுபதுகளின் எல்லையில்தான் ஜானகிக்குத் தமிழில் அதிகதிக எண்ணிக்கையிலான பாடல்கள் தொடர்ச்சியாகப் பாடக் கிடைத்தன. குழுவும் தனியுமாய்ப் பாடக் கிட்டிய பாட்டிது. ஜானகிக்கு எப்போதுமே கோரஸ் நிறைந்து பெருகும் பாடல்கள் நன்கு எடுபடும். இந்தப் பாடலை எழுதியவர் கங்கை கொண்டான். படம் 1979ம் ஆண்டு வெளியானதேவதை. இதை இயக்கவும் செய்தார் கங்கை கொண்டான்.

விஜயன் சக்கரவர்த்தி, வடிவுக்கரசி, இன்னபிறர் நடித்த படம் ஊஞ்சல். இதில் ஒரு பாடல் “சிரிச்சா சிலுசிலுங்குது எனக்கு நெனச்சா குளுகுளுங்குது” என்ற பாடல் இடம்பெற்றது. ஜானகி, பாலு டூயட் இது. உற்சாகப் பெருவெள்ளப் பாடல். பலமான தபலா இசையோடு குன்றாத மகிழ்வோடே பாடி நிறைகிற பல்லவி, வளமான காற்றுக்கருவிகளின் இசைத்தொடர்ச்சியோடு சரணத்தை நாடிச்செல்வது பேரழகு. பழமையும் புதுமையும் கைகுலுக்குகிற இசையால் இதனை நிறைத்தளித்தார் ஷ்யாம்.

“பல நாளும் பார்த்தாச்சு பசி வரலாச்சு” என்ற இடத்தை வருடித் தருவார் பாருங்கள்.. ஒரே ஒரு பாலுதான். “ஆசை வெச்சி கேட்டுபுட்டேன் ஒன்னே ஒன்னடி” என்று குழைவார்.. இது சர்வ நிச்சயமாக பாலுவின் டபுள் ஹாட்ரிக் சிக்சர் என்றால் தகும். இரண்டாம் சரணத்துக்கான இசை அத்தனை வித்தியாசமாக எழுந்திருக்கும். தொடர்ந்து இந்தப் பாடலைத் தன் வசம் ஆக்குவார் ஜானகி. இந்த இரட்டைத் தன்மைதான் ஷ்யாமை மற்ற யாவரிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது என்பதென் நம்பகம். இதுவரை சொன்னதெல்லாவற்றையும் திருத்தி எழுதலாம் என்றாற் போல் பாடலை இரு விள்ளலாக்கி, பாதியைப் பாலுவின் கைகளிலும் மீதியை ஜானகியின் கைகளிலும் தந்து பாடச்செய்வதெல்லாம் மகா நுட்பம். ஒரு பண்டிகைக் கொண்டாட்டம் நிறைந்தாற் போலவே ஒலித்து முடிக்கும் இந்தப் பாடல்.

மௌலி இயக்கத்தில் ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது படத்தில் பாஞ்சாலி இவளா என்ற பாடல் ஜேசுதாஸ் பாடிய வினோதம். இதிலேயே மாடி மொட்டை மாடி என்ற குழுப்பாடலைப் பலர் பாட இசைத்தார் ஷ்யாம் மாஷே. “பனியே வா பஞ்சுமழையே வா” எனத் தொடங்கும் சலனம் படப்பாடல் இந்தியில் ஆரம்பிக்கிறது பாடல். எழுதியவர் பாரதிப் பிரியன். ஹம்மிங், இந்தி தொகையறா இரண்டும் பாடியவர் எஸ்.பி.பாலு. தமிழில் தொடர்பவர் ஜேசுதாஸ். தாசும் பாலுவும் சேர்ந்து பாடியவற்றின் வரிசையில் இடம்பெறுகிற வித்தியாசமான பாடல் இது. சலனம் படத்திலேயே “என் மனம் உன்னிடம் ஆசைகள் என்னிடம்” பாடல் ஜேசுதாஸ், சுசீலா டூயட். பாரதிப் பிரியன் எழுதிய பாடல். இதுவும் கேட்க அருமையான பாடல்தான். அந்தி மயக்கம் படத்தில் “பூவே வா வா” பாடல் தொடக்க இசை நெடியது. 1.52 நிமிடங்களுக்கு நீளக்கூடியது. எஸ்.பி.பி சோலோ. வெஸ்டர்ன் இசைப்பாடல், பெப்பி சாங். குழைந்து ஐஸில் ஆழ்த்துகிற பாலுவின் குரல்.

“ஒரு பார்வை பார்த்தாலென்ன” ஜாலி ஆப்ரஹாம் பாட, புலமைப்பித்தன் எழுதிய சோலோ. வித்தியாசமான ஜதி, இடையிசைக் கலத்தல், சேர்மானம் என யாவுமே சிறப்புற அமைந்த பாடல் இது. புனித மலர் படத்திலேயே ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடிய டூயட் “மலைவானின்” எனத் தொடங்கியது. கௌசல்யா, லத்திகா சேர்ந்து பாடிய “மகராணி” என்ற பாடலும் கவனம் ஈர்த்தது. இவை இரண்டுமே ஆலங்குடி சோமு எழுதியவை. “ஆடுங்கள் பாடுங்கள்” எஸ்.பி.பாலு பாடிய இன்பந்தரும் சோலோக்களில் ஒன்று. இதனை எழுதியவர் கங்கை அமரன். இதயம் பேசுகிறது படம். இதே படத்தில் கவியரசு கண்ணதாசன் எழுதிய வித்யாசமான பாடலொன்றைப் படைத்தார் ஷ்யாம் மாஷே. அந்தப் பாடலைப் பாடியவர்கள் பி.பாலமூர்த்தியும் டி.கௌசல்யாவும். “வாராய் கண்ணே” என்று தொடங்குவது. இன்றெல்லாம் இனிக்கவல்ல நற்பாடல். “மூடி வச்ச தாழம்பூவு மூக்கைத் தொளைக்கிது” மலேசியா வாசுதேவன் வாணி ஜெயராம் பாடியது. அந்தி மயக்கம் படப்பாடல்களை எழுதியது கவிஞர் இரா.வைரமுத்து என்று பெயர் வருகிறது. இதுவொரு தெம்மாங்குத் தொன்மம்.

துடிப்பிசைப் பாட்டுகளுக்கென்று பெரிய மவுசு ஏற்பட்டது எழுபதுகளின் இறுதியில். உலக அளவில் ராப் பாடல்களின் மீதான தாகம் உச்சத்தைத் தொட்டது. என்ன செய்தாலும் துள்ளத் துடிக்க இசைத்தால்தான் ஆயிற்று என்று உலகமே சின்னதோர் பார்வை மாற்றத்தோடு பார்க்கத் தலைப்பட்டது. போனி எம் ஆல்பம் திரைசாரா இசைக்கொத்துகளில் முன்னர் அறியாத பெருவிருப்பத்தை அடைந்தது. அந்தத் தொகுப்பின் செல்வாக்கு உலக நிலங்களின் பல்வேறு திரை ஆக்கங்களில் எதிரொலிக்க ஆரம்பித்தது. ராப், ஜாஸ், ப்ளூ என்று மூவகை இசைக் கோலங்களை ஒருங்கிணைத்த இசைவடிவாகத் திரைத்தேவையை அமைக்க முற்பட்டோர் பலர். ஷ்யாம் அடிப்படையிலேயே மேற்கத்திய இசைக்கருவிகளின் மீது பிரேமை கொண்டவராக இருந்தது இயல்பாகவே ஷ்யாமுக்கு சாதகமாக அமைந்திருக்கக் கூடும். பாடல்களின் பெருவடிவ மாற்றத்துக்கு முயன்ற இசைஞர்களின் வரிசையில் ஷ்யாமுக்கு மிக முக்கிய இடம் உண்டு என்றபோதிலும் தமிழ் என்ற சமுத்திரத்தில் அவருடைய இசைவடிவுகள் பெரிய தாக்கத்தையோ மாற்றத்தையோ ஏற்படுத்தாமல் போனது சோகமே.

இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் மலையாளத்தில் ஷ்யாம் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுக்குத் தமிழில் ஏன் நடைபெறவில்லை என்பதான வினாவுக்கான விடையறிதலிலிருந்துதான் தொடங்க வேண்டியிருக்கிறது.

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, வீ.குமார், இளையராஜா, சங்கர் கணேஷ், சலீல் சௌத்ரி, விஜயபாஸ்கர், கோவர்தன், ஜெயவிஜயா, சந்திரபோஸ், கங்கை அமரன், வி.எஸ்.நரசிம்மன், டி.ராஜேந்தர், கே.ஜே.ஜாய், ஜி.கே.வெங்கடேஷ், சக்கரவர்த்தி ராமானுஜம், எல்.வைத்யநாதன், குன்னக்குடி வைத்யநாதன், ஏ.வி.ரமணன், ரமேஷ் நாயுடு, குணசிங், ராஜன் நாகேந்திரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜி.தேவராஜன், பாம்பே ரவி, ரவீந்திரன், ஏ.ஏ.ராஜ், பப்பி லகரி, லக்ஷ்மிகாந்த் பியாரிலால், ஆர்.டி.பர்மன், பீ.கே.ஜவஹர், எம்.பி.ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் ஓடிக்கொண்டிருந்த மைதானத்தில்தான் ஷ்யாமும் ஓட நேர்ந்தது. தமிழ்த்திரை வரலாற்றின் ஹெவி ட்ராஃபிக் காலகட்டமொன்றில் உள்ளே நுழைந்து நாற்பது படங்கள் வரைக்கும் இசையமைத்தவரான ஷ்யாம், இங்கே மாபெரும் இயக்குநர்கள், முன்வரிசை நாயகர்கள் எனப் பெரிய அந்தஸ்துள்ள படங்கள் என்ற வரையறைக்கு உட்பட்ட படம் எதற்கும் இசையமைக்கவில்லை.

அவருக்குக் கிடைத்தவை பெரும்பாலும் கலைச்சாய்வும் வணிக விலக்கமும் கொண்ட படங்கள், அல்லாது போனால் சிக்கனமாக எடுக்கப்பட்ட வணிக முகாந்திரப் படங்கள், இவை மட்டுமே. என்றபோதும் ஷ்யாம் என்கிற இசைஞரின் பெயர் சொல்லுகிற இத்தனை பாடல்களைக் குறுகிய காலம், குறைந்த அளவிலான படங்கள் என்கிற இரண்டு எல்லைகளுக்கும் உட்பட்டுக்கொண்டே சாதித்தவர். எழுபதுகளில் எப்படி வீ.குமாரோ எழுபத்து ஐந்து முதல் எண்பத்தைந்து வரையிலான இருவேறு ஐந்தாண்டுகளைக் கொண்ட தசாப்தத்தில் நினைவில் நிற்கும் இத்தனை பாடல்களும் பின்னணி இசையும் ஷ்யாம் மாஷேயின் பேர் சொல்லிக்கொண்டே இருக்கும் ஞாபகப் புஷ்பங்கள். தன் பாடலைத் தனியதொரு துருவ நட்சத்திரமாக மின்னச்செய்த வகையில் ஷ்யாம் என்றும் நினைவுகொள்ளத்தக்க இசைமேதை. மெலடிப் பூங்கொத்து அவருடைய பாடல்கள்.

வாழ்க இசை!

-தொடரலாம்.

*

முந்தைய பகுதிகள்:

  1. கமல்ஹாசன்
  2. வீ.குமார்