”அடுத்ததாக நீங்கள் ஃபார்ச்சூனிற்குச் செல்கிறீர்களா?” எனத் தொடங்கினாள் ஹாரியட். பதிலாக, தோட்டத்தின் ஒரு மூலையில் நீரூற்றின் அடிக்கிண்ணத்தில் இருந்த கசிவினை ஆய்ந்துகொண்டிருந்த ராபர்ட் வெஸ்ட்ஃபீல்டையும் ஹரால்டையும் நோக்கி அதிர்ச்சியான ஒரு பார்வையை வீசினாள் அப்பெண். அவ்வளவு நேரடியாக அப்படிக் கேட்டது குறித்து வருந்தினாள் ஹாரியட். ஏதெல் அதற்குப் பதில் கூறியபோது அது வார்த்தையாக அன்றி வெறும் காற்றாகவே வெளிப்பட்டது.
”நாங்கள் பிறகு போய்க்கொள்ளலாம் என நினைக்கிறேன். அங்கே அவனுக்கு மிகச் சிரமமாய் இருக்கும், உங்களுக்குத் தெரியும்தானே? அங்கே அவன் சென்று நெடுநாட்களாயிற்று.” அதன்பிறகு அவள் மீண்டும் அமைதியாகிவிட்டாள்- நிஜம்தான், அவள் அங்கிருந்து இவ்வளவு தொலைவு வந்ததே இல்லை – வெஸ்ட்ஃபீல்டை அழைத்தாள் ஹாரியட். ஏதெல் தனது திறமையின்மையைக் கையாள முடியாமல் தோற்பது குறித்து, தவிர்க்க முடியாமல் தனக்குள் கசப்பு எழுவதை ஹாரியட்டால் உணர முடிந்தது.
”வாருங்கள் ராபர்ட். பயணத்தினால் ஹரால்ட் களைத்திருப்பான். மட்டுமின்றி, அவனும் ஏதெலும் பேசிக்கொள்ள நிறைய இருக்கும்.”
உடனே ஹரால்டும் அவனது மனைவியும் அதை மறுப்பது போல அவசர அவசரமாக எதையோ கூறத் தொடங்கினர்.
“நமது தோட்டங்களை ஒரே ஒரு சுவர் பிரிக்கிற இவ்வளவு அருகாமையில், உங்களுடன் இங்கே ஆர்க்-கில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றாள் ஏதெல் உடனடியாக. “ஹரால்டிற்கு அது மிக உதவியாய் இருக்கும். உங்களுக்கும் அவனுக்கும் இடையே நிறைய பழைய தொடர்புகள் இருக்கின்றனவே திருமதி. வெஸ்ட்ஃபீல்ட்.”
இரண்டு ஆண்களும் தேநீர் மேசைக்குத் திரும்பியிருக்க, தன் மனைவியின் வார்த்தைகளைச் செவியுற்ற இளையவனின் அழகிய பழுப்பு முகம் அதிருப்தியை வெளிப்படுத்தும்படி வெறுமையை உடுத்திக்கொண்டது.
ஏதெல் அவனைக் கீழ்ப்பார்வை பார்த்தாள், என்றாலும் தான் சொன்ன வார்த்தைகள் எவ்வளவு துரதிர்ஷ்டமானவை என்பதை அவள் உணர்ந்தாளா என்பதை ஹாரியட்டால் கண்டறிய முடியவில்லை. சரியாக அணிந்துகொள்ளாத பெரிய தொப்பிக்குள்ளும் சோபையான வெள்ளை கவுனிற்குள்ளும் தொய்வாக இருந்தவள், தான் ஒன்றும் அவ்வளவு கடுமையானவளில்லை என்பது போல் தோன்றியது நிச்சயம். எனினும் ஏதோ ஒரு வகை நோய்மை அவளது இலக்கற்ற தன்மையினை ஊடுருவத்தான் செய்தது. குளிர்மையான நீரோட்டத்தினால் மர்மமாகத் தாக்கப்பட்டுவிட்டது போல, தனது கழுத்துக்குட்டையைத் தோள்களைச் சுற்றிப் போர்த்தியபடி தேநீர் மேசைக்குப் பின்புறம் சுருங்கிக்கொண்ட அவளைப் பார்த்தபோது அப்படித்தான் தோன்றியது.
விடைபெறும் பொருட்டு வெஸ்ட்ஃபீல்ட் தம்பதியினர் எழுந்து இணைந்துகொண்டனர். விருந்தினர்களுடன் வாயிலை நோக்கி நடக்கும் வழியில் மனைவியின் அருகில் நகர்ந்துகொண்ட ஹரால்ட் அவளது தோளில் தன் கரங்களை மெலிதாக இட்டுக்கொண்டதும், தனது இருண்மையிலிருந்து மெல்ல வெளியேறி புன்னகைத்தாள் அவள்.
வாயிலில் நின்றுகொண்டிருந்த அவர்கள் இருவரையும் ஹாரியட்டால் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. தன் குடைக்குள்ளிருந்து நிமிர்ந்து அவள் அவர்களை நோக்கியபோது, இறுக்கமான பழுப்பு முகத்துடனும் எங்கோ ஆழ்ந்த புன்னகையுடனும் அவன் காட்சியளிக்க, தன் மென்மைக்குள்ளும் அலைக்கழிப்பிற்குள்ளும் மிதந்தபடி கவிழ்ந்திருந்தாள் அப்பெண்.
தங்களது சொந்தத் தோட்டத்தின் வெயில்கூசும் சதுக்கத்தினை அடைந்தவுடன், சாந்திடப்பட்ட சுவரின் கரிய நிழலில் கிடத்தப்பட்டிருந்த பிரம்பு நாற்காலிக்குள் தன்னை அமிழ்த்திக்கொண்ட ஹாரியட் தன் கணவனிடம் உறுதியாகக் கூறினாள்-
”இங்கே வர வேண்டுமென அவன் ஏன் அவ்வளவு விரும்பினான் என்பது இப்போது எனக்குப் புரிந்துவிட்டது அன்பே. நேற்று அவளை முதன்முதலில் சந்தித்தபோதே என்னால் அதை உணர முடிந்தது. இப்போது அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்த பிறகு எல்லாமே தெளிவாகிவிட்டது. அவளை ஃபார்ச்சூனிலிருந்து தூர வைக்க வேண்டுமென்பதற்காகத்தான் அவளை அவன் இங்கே அழைத்து வந்திருக்கிறான். அதில் நாம் அவனுக்கு உதவ வேண்டும் எனவும் எதிர்நோக்குகிறான்.”
தனது ரோஜா மரங்களைக் கவனமாக ஆராய்ந்துகொண்டிருந்த வெஸ்ட்ஃபீல்ட், தன் மனைவியை ஆர்வமுடனும் வெளிப்படையான ஆச்சரியத்துடனும் நோக்கினார். அப்பார்வையில் வெளிப்படுகிற கேள்வியின் தொனியை அவள் மிக நன்றாக அறிவாள்.
”அவனது துக்கத்தையும்விட வெளிப்படையான ஒரு விஷயம் இருக்குமென்றால், அது அவள் ஃபார்ச்சூனிற்குச் செல்ல முடிவெடுத்துவிட்டாள் என்பதுதான்“ எனத் தொடர்ந்தாள் ஹாரியட்.
”அவர்களுக்குத் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்குமேல் அவனால் அவளைச் சானலில் தொடர்ந்து வைத்திருக்க முடியவில்லை என நினைக்கிறேன். எனவே நம்மைச் சாக்காக வைத்து அவளை இங்கே திசைதிருப்பியிருக்கிறான்.”
செடிகளைக் கத்தரிப்பதிலிருந்து நிமிர்ந்த வெஸ்ட்ஃபீல்ட், “நிச்சயமாக,” என ஒப்புக்கொண்டார். “அவர்கள் இருவருக்கிடையே ஏதோ பிரச்சினை இருக்கிறதென்பதை யாராலும் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால், வேறு நூறு காரணங்கள் இருக்கலாமெனும் போது, அது ஏன் ஃபார்ச்சூன் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும்! வெவ்வேறு நோக்கங்களின் பொருட்டு மாறுபட்டு நிற்க மனிதர்களுக்கு ஏராளம் வாய்ப்புகள் இருக்கின்றனவே!”
“ஹ்ம்! ஆனால் ஃபார்ச்சூன்…” என்று பெருமூச்சிட்ட அவரது மனைவி, “அவனது ஒட்டுமொத்தக் கடந்தகாலத்தின் ஒற்றைப் பிரதிநிதி ஃபார்ச்சூன்தான். அது எலனாரேதான். பாவம் இவளை அவன் அங்கே எப்படி அழைத்துச் செல்வான் ராபர்ட்? அது ரொம்பவும் கொடூரமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு மேன்மையான இடத்தில் இவள் பரிதாபமாய்த் தோற்றமளிப்பாள்!”
“இவளை அவனால் திருமணம் செய்ய முடிந்திருக்கிறதென்றால், அவனால் அவளை ஃபார்ச்சூனிற்கு அழைத்துச் செல்லவும் முடிய வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.” தொடர்ந்து பதிலளித்தார் ராபர்ட் வெஸ்ட்ஃபீல்ட்.
“ஓ, அவன் அவளைத் திருமணம் செய்தது! அதற்கு எங்களைத்தான் – அவனதும் எலனாரதும் பழைய நண்பர்களாகிய எங்களைத்தான் – பழிகூற வேண்டும். நாங்கள் அவனை ஏமாற்றிவிட்டோம். அவனது இழப்பின் எல்லையைத் தாங்க முடியாமல் நாங்கள் அவனுக்கு எதிராக நடந்துகொண்டு விட்டோம். ஒரு இடிபாடின் அடியிலிருந்து இழுத்து வரப்பட்ட மனிதனின் வெறும் ஒரு துண்டாகவே காட்சியளித்தான் அவன். எலனார் இறந்தபிறகு அவனிடம் எதுவுமே முழுமையானதாக இல்லை என்னும் விதமாக! அவர்கள் இருவரும் இணைந்தே வளர்ந்திருந்தனர். நாங்கள் அவன் குறித்து அஞ்சினோம், அவனை இந்தியாவிற்கு அனுப்புவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். அவன் அங்கே இன்னொரு திருமணம் செய்துகொள்வான் என்றும்கூட நம்பினேன் நான். அவன் ஏதெலைத் திருமணம் செய்துகொண்ட சேதி வந்தவுடன் அத்தோடு அவன் இது எல்லாவற்றையும் முடித்துக்கொள்வான் என எண்ணினேன். அவனும் எல்லோரையும் போல வழக்கமான ஒரு அத்தியாயமாகிவிடுவான் என எண்ணினேன். ஆனால் பாருங்கள், அவன் அப்படி ஆகவில்லை; அவன் முன்னிலும் அதிகமாகத் தனித்துவிடப்பட்டான். அவளில்லாமல் அவனால் எதையுமே சிறப்பாகச் செய்யமுடியவில்லை. பாருங்கள், அவனால் இதைக்கூடச் செய்ய முடியவில்லை.”
”இதைக்கூட?” தனது தோட்டவேலையை அப்படியே நிறுத்திவிட்டு வினவினார் வெஸ்ட்ஃபீல்ட். “அவனுக்கு இன்னொரு மனைவியைத் தேர்ந்தெடுக்க எலனார் உதவியிருப்பாள் என்று நீ சொல்லுவதாக நான் புரிந்துகொள்ள வேண்டுமா?”
அவரது குரலில் வெளிப்பட்ட தீவிரத்தை அலட்சியப்படுத்தியபடி, “இப்போது அவன் சிக்கியிருக்கிற இப்படி ஒரு நிலையிலிருந்து எலனார் அவனை நிச்சயம் காத்திருப்பாள். இப்படித் தன் ஒவ்வொரு செயலாலும் அவனைக் காயப்படுத்துகிறவளல்லாத ஒரு பெண்ணை அவள் அவனுக்குக் கண்டறிந்திருப்பாள். ஏதெல் கொஞ்சமும் உறுதியற்ற பெண்! திறனற்ற, அச்சம் நிறைந்த பெண். அவளது நடைகூட நம்மை எரிச்சலூட்டுவதாக இருக்கிறதை நீங்கள் கவனித்தீர்களா? சாதாரண டீ மேஜைக்கு நடக்கும்போதுகூட ஏதோ வலியை மிதிப்பது போலவும், மன்னித்தும் பொறுத்தும் தாங்கிக்கொள்வதும் போன்ற ஒரு நடை. தன்னுடைய ஒழுங்கற்ற தோற்றம் பற்றிய சிந்தையால் இவ்வளவு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிற ஒருவரை நான் கண்டதேயில்லை. அச்சிந்தை ஒரு துயர்மிகு வேட்கையைப் போல அவளை உருக்கி விழுங்கிவிடுகிறது. அவன் எப்படி உணர்கிறான் என்பதை நான் அறிவேன்; தனக்குப் பிடித்தவற்றை அவள் நேசிக்கிற விதத்தை அவன் வெறுக்கிறான், தனக்குப் பிடிக்காதவற்றை அவள் வெறுக்கிற விதத்தையும் அவன் வெறுக்கிறான். நான் சொல்வதைக் குறித்துக்கொள்ளுங்கள், அவள் ஃபார்ச்சூனை இலக்காக்கியிருக்கிறாள். குறைந்தபட்சம் அதையேனும் அவன் அனுமதிக்க மாட்டான். ஃபார்ச்சூனில் எலனார் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அந்த இடம் மிக ஆழமாகவும் பொக்கிஷமாகவும் அவனது அந்தரங்கத்தில் இருக்கக்கூடியது. அந்தப் பெண் அதனைத் திட்டமிட்டுவிட்டாள், அதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுவிட்டாள். அது ஒரு அடையாளமாக இருக்கிறது, இவள் மனம் அதையே எண்ணிக்கொண்டுள்ளது; அதிலிருந்து விலக்கி வைக்கப்படுவதை அவளால் தாங்க முடியாது. நேற்று நான் அவளைக் காணச் சென்றபோது, சற்றும் தாமதியாமல் தன் கணவனைப் பற்றி என்னிடம் விளக்கத் தொடங்கிவிட்டாள். அவள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறாள் என நான் எண்ணிவிடக் கூடாதென்கிற அச்சம் கொண்டவள் போல் தோன்றினாள் அவள்.”
தன் மனைவி மேலும் மேலும் கடுமையாகிக்கொண்டே செல்லச்செல்ல, தனது தோட்டத்து நாற்காலியில் சாய்ந்தபடி பிற்பகல் உறக்கத்தின் அரவணைப்பிற்குள் பாதி சரண் புகுந்திருந்தார் வெஸ்ட்ஃபீல்ட்.
கொட்டாவியைக் கவனமாகத் தணித்தபடி, “தான் மீளமுடியாத எதற்குள்ளோ சிக்கிவிட்டோம் என்கிற துயர்மிகு சிந்தையைப் போக்கவே பாவம் அக்குழந்தை போராடுகிறாள் என்றே எனக்குத் தோன்றுகிறது. தனது நிச்சயமின்மையை நாகரீகமாக மறைக்க முயல்கிறாளாய் இருக்கும்.”
சிகமார் இலைகளின் நிழல் விளையாடும் அவரது முகத்தை ஒரு நொடி உற்று நோக்கிய ஹாரியட் கருணையுடன் புன்னகைத்தாள். ”அவள் நாகரீகமாக எதையோ மறைக்க முயல்கிறாள் என்னும் கருத்தே வேடிக்கையாக இருக்கிறது. என்றால் உங்களுக்கு அவளை அவ்வளவுதான் தெரிந்திருக்கிறது!” என்றபடி பெருமூச்சுவிட்டாள். ”ஹரால்டை ஏமாற்றியது போலவே அவள் உங்களையும் ஏமாற்றி இருக்கிறாள். அவள் எதிலும் தலையிடமாட்டாள் என்றுதான் அவன் நம்பியிருக்கிறான்; இவனது வருகைகளையும் வெளியேறல்களையும் நிலவொளி ததும்பும் புன்னகையுடன் அனுமதித்தபடி அவனது கருணையை சுவாசித்தபடி தன்னைப் பார்த்துக்கொள்வாள் என அவன் நம்பியிருக்கிறான். ஆனால் அவளது அத்தனை அமைதியையும், விட்டுக்கொடுக்கும் கவித்துவத் தொனியையும் தாண்டி, அவளிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும், முன்னிறுத்திக்கொள்ளும் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் கொடூரத்தைத்தான் அவனால் பொறுத்துக்கொள்ள முடியாமல் போயிருக்கிறது. இவளைப் போன்றவர்களை நான் முன்னரே பார்த்திருக்கிறேன். அவர்களது தன்முனைப்பை வாழ்வின் ஒவ்வொரு நாளும் நீங்கள் கத்தரிக்க முயன்றாலும் அடுத்த தினமே அவை புதிதாகவும் இன்னும் ஆர்வத்துடனும் மீண்டும் வெளிப்படுவதை உங்களால் உணர முடியும். பளிங்கிலிருக்கும் சிறிய கீறல்தான் அவள் கண்களில்படும். அவள் என்ன விரும்புகிறாள் என உங்களுக்குத் தெரிகிறதா?“ பளிச்சிடும் கண்களுடன் நிமிர்ந்து அமர்ந்த திருமதி. வெஸ்ட்ஃபீல்ட், “அவனது மனதில் எலனார் பெற்றிருந்த இடத்தை அவள் அடைய விரும்புகிறாள்; அவளால் அது முடியாது என்பதை அவள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள்.”
காதுகளுக்கு மேலிருக்கும் விறைத்த பொன்னிற மயிர்களை குழப்பத்துடன் வருடியபடியே, “ஆனால், அவள் ஏன் அப்படி ஆக முடியாது என எனக்குப் புரியவில்லை? அவன் அவளை மணமுடித்திருக்கிறான். அதைவிடக் குறைவான ஒரு இடத்தை அவள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?”
“ஐயோ, ராபர்ட்!” அவன் ஏதோ அசிங்கமான ஒன்றைக் கூறிவிட்டது போல இடைமறித்தாள் ஹாரியட். “உங்களுக்கு அவர்களைப் பற்றி எதுவும் தெரியாது. எலனார்தான் அவனை உருவாக்கினாள். அவளது படைப்பு அவன். மிக மோசமாகியிருக்க வேண்டிய நிலையிலிருந்து அவள்தான் அவனைக் காத்தாள்.”
கேலியாகச் சிரித்தார் வெஸ்ட்ஃபீல்ட்.
“என்றால், தன்னியல்பில் – அடிப்படையில் – அவன் அவ்வளவு மோசமாய் இருந்தானா?”
“இருக்கலாம், ஆனால் அப்போதும்கூட இப்போதிருப்பதைவிட அவன் நன்றாகத்தான் இருந்தான். ஏனோ அவன் இயல்பான குணநலன்களைக் கொண்டிருக்கவில்லை. இவ்வுலகில் பிறந்த எல்லோரிலும் அதிக முதிர்ச்சியற்றவனாக அவன் இருந்தான். இளமையே அவனை ஒரு நோய் போல் தாக்கியது; கிட்டத்தட்ட அது அவனைக் கொன்றிருந்தது. சுயவிழிப்பு குறித்த சிந்தையில் அதீதமாய் ஆழ்ந்திருந்த அவன், அதற்குத் தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்திருந்தான். அதைப் பற்றியே பேசியும் காண்பவர்களிடமெல்லாம் அதைத் திணித்தும் கொண்டிருந்தான் – கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் நின்றபடி பரிசுப்பொதிகளைப் பிரித்து உற்சாகக் குரலெழுப்பும் மனநிலையிலிருந்து என்றேனும் அவன் வளர்வானா என்றுகூட நான் சந்தேகித்திருக்கிறேன். தான் அனுபவிக்கிற எதுவும் தான் மட்டுமே உணர்கிற தனித்துவமானவை அல்ல என்பதை அவன் அறிந்திருக்கவில்லை, ஆனால் அதை அவன் உணர்கிற விதம் அவனுக்கு மட்டுமே உரியது என அவன் நம்பினான் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.”
“எலனாரைச் சந்தித்தபோது அவன் தன்னை முற்றிலும் அவளிடம் தொலைத்துவிட்டான், அதுதான் அவனுக்குத் தேவையாகவும் இருந்தது. அவள் இயல்பிலேயே நிதானத்தையும் உறுதியையும் கொண்டவளாய் இருந்தாள். விவேகத்துடன் அவள் நடந்துகொள்ளாத சூழல் என்ற ஒன்றே இருந்ததில்லை. அவளால் எல்லா மனிதர்களிடமிருந்தும் பொருள்களிலிருந்தும் மகிழ்ச்சியைப் பெற முடிந்தது. ஆனால் ஒருபோதும் அவள் அவற்றால் ஏமாற்றமடைந்ததில்லை. அந்தப் பகுத்தறிதலை அவள் கைக்கொண்டது அறிவினால் அல்ல, அது முழுவதும் தூய உணர்வுகளின் சாயலையே கொண்டது என்பதுதான் அதன் அழகும் தனித்துவமும்.”
“அடுத்து என்ன நடந்ததென்பதை உங்களாலேயே கணிக்க முடிந்திருக்கும். அவனிடமிருந்த அத்தனையையும் மதிப்பிற்குரியதாகவும் உபயோகமானதாகவும் ஆக்கக்கூடிய ஒன்றை அவள் அவனுக்குத் தந்தாள். நாங்கள் எல்லோரும் நினைத்ததைவிட நுணுக்கமான இழை அவனிடம் இருந்திருக்கிறது, அதை அவள் கண்டுகொண்டாள். திறன்களைக் கண்டறிவதில் அவள் எப்போதுமே தவறியதில்லை.”
“அவர்களுக்குத் திருமணம் ஆன இரண்டு வருடங்களுக்குப் பிறகு நான் ஆறு வாரங்கள் ஃபார்ச்சூனில் அவர்களுடன் தங்கியிருந்தேன். அப்போதும்கூட, அவர்களுக்கிடையே இருந்த சாத்தியங்களையும் அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு தந்துகொள்ள முடிந்ததென்பதையும் என்னால் கண்டுணர முடிந்தது. தொடர்ந்து அவர்கள் அப்படியேதான் இருந்தனர். அவர்களுக்கு எல்லாமே இருந்தது – குழந்தைகளைத் தவிர. அவர்கள் சுயநலம் மிக்கவர்களாய் இருந்தார்கள் என நான் நினைக்கிறேன். ஒருமுறை எலனார் என்னிடம் சொன்னது போல, அவர்கள் ஒருவர் மற்றவரையும் நித்திய வாழ்வையும் மட்டுமே விரும்பினர். அதை விவரிக்கவெல்லாம் எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது மிகக் கம்பீரமானதாகவும் உறுதியானதாகவும் இருந்தது.”
II
படர்ந்துகிடக்கும் நிலப்புரபுத்துவ எச்சங்களைச் சுமந்தபடி ஆர்க்– லா– பத்தாய்க்குப் (Arques-la-Bataille) பின்புறம் உயர்ந்திருக்கும் பசுமையான மலைகளில் ஹாரியட் ஒரு நாள் நடந்துகொண்டிருந்தாள். அதிகாலைச் சூரியனின் மாயப்பொன்னொளி இன்னமும் பரவியிருக்க, பழைய கோட்டைகளின் விளிம்புகளைச் சுட்டியபடி மடிந்திருக்கும் வழுவழுப்பான புல் மடிப்புகளிலும் பிளவுகளிலும் பனித்துளிகள் மின்னின. திறந்து விரிந்த பசுமையான எல்லைகளையும், சிறிய நதியின் பளபளக்கும் வளைவுகளையும், மின்னும் வெண் பிர்ச் மரத் தோப்புகளினூடாகக் காணும்போது, அழகிய வண்ணங்கால் தீட்டிய சித்திரமென கீழே கிடந்தது நார்மன் தேசம்.
தோள்களின் மேல் சிறுகுடையும் வெண் காலணி முழுக்கப் பனியின் சாம்பல் நிறமுமாய், அகழியின் உள்விளிம்பில் அமைந்திருந்த கோபுரமொன்றின் அடித்தளத்தை அவள் சுற்றி வந்தபோது, கோபுரத்தின் சுவர்மடிப்பின் கீழ் நிழல் மூலையில், உலர்புல் தொப்பியைக் கண்களின் மேல் சரித்தபடி கிடந்த ஓர் ஆணின் மேல் கால் வைத்துவிட்டாள்.
“அட! என்னாயிற்று ஹரால்ட் ஃபோர்ஸைத்?” அதிர்ச்சியுடன் வினவினாள் ஹாரியட்.
அவன் எழுந்துகொண்டதும் முகத்தில் சூரிய ஒளி படிந்தது.
“தயவுசெய்து உட்காருங்கள்,” என்றான். “அங்கே உலர்வாக இருக்கிறது, காட்சியும் அற்புதமாக இருக்கிறது.”
“நான் வந்தபோது நீ காட்சிகளை இரசித்தது போல் தெரியவில்லையே.” குடையைக் கழற்றிவிட்டு, அவனது அக்கறையற்ற காலை ஆடையையும், கனத்த விழிகளையும், மழிக்கப்படாத, சோகம் ததும்பும் முகத்தினையும் பார்த்தபடி வினவினாள் ஹாரியட். ”என்றாலும் நான் அமர்கிறேன்”. அன்புடன் அவனிடம் உறுதிகூறியவள், “உன்னை அரிதாகத்தான் பார்க்க முடிகிறது. ஏன் நீ என்னைப் பார்க்க வரவே இல்லை? அதன் பொருட்டுதான் இப்போது அமர்கிறேன்” என்றாள்.
தயக்கத்துடன், அவளது காலணியையே கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்த ஹரால்ட் ஃபோர்ஸைத்தின் கீழுதடு சற்றே பிதுங்கியபடியிருந்தது; அவனையறியாமல் வெளிப்பட்டுவிடுகிற இப்பழக்கத்தை அவனது சிறுவயதில் அவள் இரசித்திருக்கிறாள்.
“ஒருவேளை, ஒருவேளை.. எனக்கு அதற்கான தைரியம் இல்லாமல் இருந்திருக்கலாம்,” எனப் பதிலளித்தான்.
“என்றால், எதோ ஒரு வகையில், சகிக்க முடியாத முட்டாள்தனம் உடையவள் என நீ என்னைக் கருதியிருக்கிறாய்?” கடிந்துகொண்டாள் ஹாரியட்.
“உங்களையா? ச்சே, இல்லை! நான் அப்படிச் செய்யவில்லை, செய்யவும் மாட்டேன். உங்களால் எப்படி அப்படி நினைக்க முடிகிறது?” ஒரு நீலப்பாறையின் சரிவில் அவள் அமர உதவியபடி இணக்கமான உடல்மொழியை வெளிப்படுத்தினாலும், அவளது கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தான் அவன்.
“பிறகு ஏன் நீ தயக்கத்துடன் அங்கேயே நிற்கிறாய்?”
“நான் இங்கிருந்து கிளம்பிவிடுவதுதான் உங்களுக்கு நல்லதென யோசித்துக்கொண்டிருக்கிறேன்,” சிறிய முகச்சுழிப்புடன் அவளை ஒரு நொடி பார்த்தவன், “அதிகாலைகளில் சில சமயங்களில் நான் மிகவும் மோசமான மனநிலையை வெளிப்படுத்துகிறவனாகி விடுகிறேன்.”
புல்தரையைத் தனது குச்சியால் குத்தியபடி நின்றவனை மிகுந்த அன்புடன் நோக்கினாள் திருமதி வெஸ்ட்ஃபீல்ட். இருபது வயதில் இருந்ததைவிடக் கொஞ்சமும் முதிர்ச்சியடையாமல் இவன் எப்படி முப்பத்தியெட்டு வயதை எட்டினான் என வியந்தாள். என்றாலும், அவர்களது மகிழ்ச்சி அவர்களுக்கு அளித்திருக்கும் பரிசு அதுதான். அது அவர்களை இளமையாக வைத்திருந்ததெனில், பெருமையும் பிரகாசமுமிக்க இளமையை அளித்திருந்ததெனில், அதேதான் வேறு எந்த இடத்திற்கும் நகர்வதிலிருந்து அவர்களைத் தடுத்திருந்தது. அவனது மலரும் காலத்தினை நீட்டித்த அது, அவனைக் கனியச் செய்யத் தவறிவிட்டது. வயது முதிர்வதை அனுமதிக்கும்போது நிறைய விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் அவன் அவ்விதம் எதையும் இழக்கவில்லை, வயதாவதைப் பற்றிக் கற்றுக்கொள்ளக்கூட இல்லை, இன்னமும் ஒரு சிறுவனைப் போலவே திருப்பித் தாக்குகிறான்.
தனக்கு அருகில் இருக்கும் புல்தரையை ஹாரியட் சுட்டியவுடன் அவன் சட்டென அங்கே அமர்ந்துகொண்டான்.
“நிஜத்தில் இன்று காலையில் யாரையும் பார்ப்பதற்கு நான் தகுதியானவனாக இல்லை. இந்த முதல் சில மணிநேரங்கள்…“ தோள்களைக் குலுக்கிக்கொண்டவன் அருகிலிருந்த புற்களை வேகமாக ஒவ்வொன்றாகப் பிடுங்கத் தொடங்கினான்.
“உனக்கு மிகச் சிரமமானவையாய் இருக்கின்றனவா?”
அவன் தலையசைத்தான்.
“ஏனென்றால் அவைதான் உனது மகிழ்ச்சிமிக்க தருணங்களாய் இருந்தன. இல்லையா?“ உரையாடலின் நுனியைப் பற்றியபடி தொடர்ந்தாள் ஹாரியட்.
“இது விநோதம்தான்,“ அமைதியாகப் பதிலளித்தான், “ஆனால், அதிகாலைகளில் ஏனோ அவளை நான் நிச்சயம் கண்டறியப் போகிறேன் எனத் தோன்றுகிறது. ஒரு நாளின் இந்தச் சமயத்தில் நமக்கு அதீத ஆற்றல் இருக்கிறதென நினைக்கிறேன், சுற்றியிருப்பவற்றை ஆழமாக உணர முடிகிறது அப்போது.”
“என் அன்புச் சிறுவனே! உனக்கு இது இன்னும் இத்தனை கடினமாக இருக்கிறதா?”
“இது எனக்கு எப்போதேனும் சுலபமாகக்கூடும் என நீங்கள் ஒரு நொடி நினைத்தீர்களா என்ன?” ஒரு சிறிய புன்னகையுடன் வினவினான் அவன்.
“நான் அப்படி நம்பினேன். ஆமாம், அப்படி நம்பினேன்.”
ஃபோர்ஸைத் தலையசைத்தான். “நான் ஏன் உங்களைப் பார்க்க வரவில்லை என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்.” சட்டென விஷயத்திற்கு வந்தான் அவன்.
ஹாரியட் அவனது கரங்களைத் தொட்டாள். “நீ என்னிடம் அச்சம்கொள்ள வேண்டாம். நீ அவளை நேசித்த அளவிற்கு நான் அவளை நேசித்தேனா தெரியவில்லை, ஆனால் அவளை நேசித்த அளவிற்கு நான் வேறெதையும் நேசித்ததில்லை.”
“எனக்குத் தெரியும். நான் இங்கே வந்ததற்கு அதுவும் ஒரு காரணம். நான் அவளுக்கு அறிமுகம் ஆன காலத்தில் நீங்கள் எப்போதும் அவளுடன்தான் இருந்தீர்கள், உங்களுடன் இருக்கும்போது அவளைப் பார்ப்பது சுலபமாக இருந்தது. சில சமயங்களில் அவளது உருவம் – படிகளில் இறங்கிவருகிற, தோட்டத்தைக் கடக்கிற, கைகளை நீட்டுகிற உருவம்- மங்கலாவது போல எனக்குத் தோன்றுகிறது, அது என்னை அச்சுறுத்துகிறது. சில இடங்களும் சில மனிதர்களும் எனக்கு அவளுடைய உணர்வைத் தருகின்றன.” ஒரு திடுக்கிடலுடன் நிறுத்திய அவன், ஒரு கூழாங்கல்லை எடுத்து, அகழிக்கு மறுபுறம் குவளைப்பூக்களால் மஞ்சள் நிறம் பெற்று மெதுவாய்க் கடக்கும் நூற்றாண்டுகளால் மென்மையாகவும் ஆழமற்றும் ஆக்கப்பட்ட சரிவான கரைக்கு எறிந்தான்.
“ஆனால் ஹரால்ட், வேறெந்த இடத்தையும்விட அவள் உனக்குள்தான் அதிகமாக இருப்பாள். அங்கிருக்க வேண்டுமென்றுதான் அவள் விரும்பினாள், அதைத்தான் அவள் சுவாசித்தாள், பல ஆண்டுகளாய் அதைத்தான் அவள் மனதில் சுமந்தாள்.”
தன் கரங்களுக்குக் கீழிருந்த வெற்றிடத்தைக் கூர்ந்து வெறித்த அவன், புற்களை மென்மையாகப் பறிக்கத் தொடங்கினான். அவன் பேசியபோது ஒலித்த உடைந்த குரல் அவளை திடுக்கிடச் செய்தது.
“முன்பு அது அப்படித்தான் இருந்தது, ஆனால் இப்போது நான் அதை இழந்து விடுகிறேன் – சில சமயங்களில் வாரக்கணக்கில்கூட. ஒரு மென்மையான வாசனையை நாசியில் இருத்திக்கொள்ள முயலும்போது அதைவிட நெடியான ஒரு வாசனை தோன்றி முன்னதை மங்கச் செய்துவிடுவது போன்றது அது.”
“என் அன்பிற்குரிய சிறுவனே, நான் இதற்கு என்ன சொல்வது?” அவளது கண்கள் மிகவும் மங்கலாகிவிட்டதால், அவன் அங்கிருக்கிறான் என்பதை உறுதிசெய்ய அவள் தன் கரங்களை நீட்டினாள். அதை அழுத்திய அவன் ஒரு நொடி அதைப் பற்றிக்கொண்டான்.
“நீங்கள் எதுவும் சொல்லத் தேவையில்லை. என்னால் நீங்கள் நினைப்பதை உணர முடிகிறது. நாம் எப்படி எல்லாவற்றையும் பழகிவிடுகிறோம் என்பதும் நம்மால் அது குறித்துச் செய்ய ஒன்றுமில்லை என்பதும் பிரம்மாண்டமாகத் தெரிகிறது. என்னுடனேயே இருப்பதாக அவள் மட்டும் உறுதியளித்திருந்தால் – ஒரு அடையாளத்தை விட்டுச்சென்றிருந்தால், புல்லிலோ விசும்பிலோ ஒரு நிழலை விட்டுச்சென்றிருந்தால் – அதுவே போதுமானதாக இருந்திருக்கும். என்னை என் காயங்களுடன் தனியே விடுங்கள் என்பதைத் தவிர இப்போது நான் வேண்டுவது எதுவுமில்லை. இவ்வளவுதான் என்னிடம் எஞ்சியிருக்கிறது. அதுதான் இவ்வுலகில் விலைமதிக்க முடியாத விஷயம்.”
“ஆனால் என் இனிய ஹரால்ட், இது மிகவும் கொடுமையாக இருக்கிறது! நீ இப்படிச் செய்வதை அவளால் தாங்கியிருக்க முடியாது.” உந்தப்பட்டு முனகினாள் ஹாரியட்.
“ஆமாம், அவளால் முடிந்திருக்கும். அவளால் அதைச் செய்ய முடிந்திருக்கும். அவளது வேதனையிலும் நிறைவின்மையிலும் அவளால் என்னை உயிர்ப்பித்திருக்க முடிந்திருக்கும்.”
போதும் என உணர்த்தும் விதமாக அவனை நோக்கிக் கைகளை நீட்டினாள் திருமதி. வெஸ்ட்ஃபீல்ட். அவளைக் காதலித்த காலங்களில், கட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்த காலங்களில், அவளோடு இங்கே புல்வெளியில் பலமுறை படுத்திருந்திருக்கிறான். அவன் இப்படிக் கொஞ்சம்கூட மாறாமல் இருக்கிறான் என்பது நம்ப முடியாததாக இருந்தது. அவன் வளரவுமில்லை, ஞானமடையவுமில்லை, முன்பைவிட சற்று முன்னேறவுமில்லை. அவன் மேலும் மேலும் எலனாராகி விட்டிருக்கிறான். அவனது சிக்கலின் துயரம் அவளைப் புத்துணர்வுடன் தீண்டியது, கைகளைக் கண்களுக்குக் கொண்டுசென்றவள், “என் பரிதாபம் மிக்க சிறுமி ஏதெல், உன்னால் எப்படி இதைச் செய்ய முடிந்தது?” என்றாள்.
அவன் கிளம்புவதைக் கேட்ட அவள் நிமிர்ந்து பார்த்த போது சுவரின் பாதி உயர தூரத்தினைக் கடந்திருந்தான். அவள் அவனை அழைத்தபோது, அவன் தொப்பியை அர்த்தமின்றி அசைத்துவிட்டு மலையின் வழுவழுப்பான பச்சை முகட்டினைக் கடந்து செல்வதைக் காண முடிந்தது. சுவரின் வெம்மையில் சாய்ந்துகொண்ட ஹாரியட் அவ்விடத்தின் ஆழ்ந்த அமைதிக்குள் தன்னைப் புகுத்திக்கொள்ள முயன்றாள். எத்தனையோ முட்டாள்தனங்களும் வேட்கைகளும் அங்கேதான் தம்மை நிகழ்த்திக்கொண்டன – இப்போது புற்களின் அமைதியாய்ப் படிந்திருக்கின்றன. என்றாலும், ஒருவித வலி அவளுள் துடித்துக்கொண்டே இருந்தது. ஃபோர்ஸைத் இவ்வளவு நேரம் படுத்திருந்துவிட்டுச் சென்ற இடத்திலிருந்து ஒரு துர்வாடை போல எழுந்து அவளுக்கும் வயல்களுக்கும் பழத்தோட்டங்களுக்கும் நதியின் சாம்பல்பச்சை விளிம்புகளுக்கும் இடையே பரவுவது போல் இருந்தது அந்த வலி. இறுதியாக, ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து எழுந்துகொண்ட போது, “ஓ, என் இனிய எலனார்! உன் மீது நான் இரக்கம் கொள்கிறேன், நீ எங்கிருந்தாலும் சரி, உன் மீது நான் இரக்கம் கொள்கிறேன், உன்னால் உணர முடிகிறதா?” என்று தனக்குள் முனகிக்கொண்டாள்.
III
இடையில் இருந்த மௌனம் கலைக்கப்பட்டுவிட்ட பிறகு, ஃபோர்ஸைத் அடிக்கடி திருமதி வெஸ்ட்ஃபீல்டின் தோட்டத்திற்கு வந்துசென்றான். அவள் தையல் வேலை செய்வதைப் பார்த்தபடியோ, அவளுடன் மலையுச்சியின் இடிபாடுகளிலோ நதிக்கரையிலோ வளமிக்கப் பண்ணைகளுக்கு ஊடாகவோ நடந்தபடியோ காலைப்பொழுதுகள் அனைத்தையும் கழித்தான். அவன் மிகக்குறைவாகவே பேசினான் என்றாலும், அவள் வெகு இயல்பாகப் பேசுவதற்கான இடத்தை அளித்திருந்தான். எலனார் ஸான்ஃபோர்டுடனான தனது பால்ய காலத்தைப் பற்றி இயல்பாகவும் சுதந்திரமாகவும் அவள் பேசியபோது அவன் மிக்க நன்றியுடன் அவற்றைக் கேட்டபடியே அமைதியாகப் பின்தொடர்ந்தான். பாரிஸில் உள்ள ஒரு கான்வெண்ட் பள்ளியில் அவர்களது நாட்களைப் பற்றி; ஸினெக்டடியிலிருந்து கொணர்ந்த சிறிய தேவதாரு தலையணையுடன் சேர்த்துத் தைத்து வைத்திருந்த ’மேனன் லெஸ்கால்ட்’ புத்தகத்தின் பிரதியைப் பற்றி; தனது பிறந்த தினத்தின் போது கைதேர்ந்த திட்டங்களின் மூலம் ஆல்பனியிலிருந்து வந்த ஒரு கபடமற்ற அத்தையின் பாதுகாவலில் அவளது அத்தனை ரோஜாக்களையும் பெர்-த- செய்ஸ் சுடுகாட்டிற்கு அனுப்பி முஸாயின் வில்லோ மரங்களுக்குக் கீழே வரிசைப்படுத்த வைத்தாள் என்பதைப் பற்றி.
அவனுடன் இருப்பதில் ஹாரியட்டிற்கு ஒருவித அமைதி நிறைந்த மகிழ்ச்சிகூட ஏற்பட்டது. அவன் நிலைமையைச் சீர்படுத்த முயல்கிறான் என அவள் நினைத்தாள்; அவள் அவனை நம்பலாம் என்றும் முதன்முதலில் மலையில் சந்தித்தபோது நிகழ்ந்த அவளைச் சிதைத்த அந்த நிகழ்வு மீண்டும் நடந்தேறாது என உறுதியளிக்க முயல்வதாகவும் தோன்றியது. எலனாரைப் பற்றி அவன் பேசியதெல்லாம், அவர்களது அன்பின் அழகைப் பற்றி மட்டுமேயாக இருந்தது. அதை நினைவுகூர்வதில் அவள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். அவர்கள் ஒருவேளை சுயநலம் மிக்கவர்களாய் இருந்திருக்கலாம், ஆனால் அது ஒருபோதும் சோம்பலாகப் பரிணமிக்கவில்லை. அவர்களது ஆர்வங்களை அவர்கள் செயலாக்கினர்; அவர்களது அன்பு ஒருபோதும் தேங்கிப் போய்விடவோ மந்தமான நடுத்தர வயதை எட்டிடவோ இல்லை. அது எப்படி இரண்டு மனிதர்களால் பத்து முழு ஆண்டுகள் அவ்வளவு நெருக்கமாய்ப் பிணைந்து நிறைந்திருக்க முடிந்தது என்று ஹாரியட் தனக்குள் பலமுறை கேட்டுக்கொண்டாள். அதிலும் உச்சம் என்னவென்றால், அந்தச் சமயத்தில் அவர்கள் செய்த செயல்களும் சென்ற இடங்களும் சந்தித்த மனிதர்களும் அவர்களது வாழ்க்கை நாடகத்திற்கு இசை சேர்த்த வெறும் தற்செயல்கள் மட்டுமே.
ஆனால் அதன் முடிவோ, சொர்க்கத்தின் செயலால், வெகு சீக்கிரமே வந்துவிட்டது. வாய்ஸில் இருக்கும் அவர்களது சொந்த இடமான ஃபார்ச்சூனில் மூன்று தின உடல்நலிவு, அத்துடன் முடிந்துவிட்டது. தனது வழியைத் தானே கண்டறியும்படியாக அவன் வெற்றுவெளியில் தூக்கி எறியப்பட்டான்; மையத்தை நோக்கி ஏங்கியபடியே வட்டத்தின் பகுதிகளில் போராடிக்கொண்டிருக்கும்படியாக விடப்பட்டான்.
ஒரு நாள், வயல்களினூடாக நடக்கலாம் என ஹாரியட்டை ஹரால்ட் கேட்டுக்கொண்ட போது, ஊரைக் கடந்தவுடனேயே, அவன் ஏதோ முக்கியமாகச் சொல்லப் போகிறான் என அவள் உணர்ந்துகொண்டாள். தோட்டத்திற்கு நடுவே ஒரு விடுதியில் உயர்ந்த பீச் மரத்தினாலான மஞ்சள் களிமண் சுவரருகே அமர்ந்து அவர்கள் உணவருந்திய போது, அவ்வூரிலிருந்து கிளம்பப் போவதாக ஹரால்ட் தெரிவித்தான்.
“எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. ஒரு வாரத்திற்கோ இரண்டு வாரத்திற்கோ இருக்கலாம். நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டுவிடக் கூடாது. இந்தக் கடந்த வாரங்களில் நீங்கள் எனக்குச் செய்திருக்கும் நன்மையைப் பற்றி நீங்கள் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. ஆனால், ஆனால்… இது நாங்கள் போட்டுக்கொண்ட ஒரு ஒப்பந்தம்,“ பலவீனமாகச் சிரித்தபடி அவன் விளக்கினான். “இயர்ஸிற்கு அருகில் மத்தியத் தரைக்கடலில் ஒரு சிறிய நகரில் நாங்கள் ஒருமுறை சிக்கிக்கொள்ள நேர்ந்தது. எங்களுக்கு அது மிகவும் பிடித்துப் போனதில் சில நாட்கள் அங்கே தங்கினோம். அங்கிருந்து கிளம்பியபோது ஒவ்வொரு வருடமும் திராட்சைகள் பழுக்கிற இந்த நாட்களில் நாம் இங்கு வரவேண்டும் என எலனார் கூறினாள். ஆனால் அதுதான் அவளது கடைசி ஆண்டு என்பதால் நாங்கள் ஒருமுறைகூட அங்கு மீண்டும் செல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும் அதே வாரத்தில் நான் அங்கு சென்றேன். அங்கிருக்கும் எல்லோருக்கும் அவளை நினைவிருக்கிறது. அது ஒரு சிறிய இடம்.”
ஹாரியட் அவனையே பார்த்தபடி கவனமாகக் கேட்டுக்கொண்டாள். மேலேறிய ஒரு குட்டி கருப்புப்பூனை அவனது கரங்களைப் பாதங்களால் தட்டியும் உணவளிக்கும்படிச் சப்தமெழுப்பியும் உரசியது.
“அதனால்தான் நீ அடிக்கடி வெளியே செல்கிறாயா? ஏதெல் சொன்னாள். ஏதோ வேலையின் பொருட்டு என்று அவள் சொன்னாள், ஆனால் நான் அதை நம்பவில்லை.”
“அது அப்படி ஆனது குறித்து நான் மன்னிப்பு கோருகிறேன். இந்த விஷயத்தில் நான் எப்போதுமே மோசமாக நடந்துகொள்வதாகத்தான் நினைக்கிறேன்.” முகத்தையும் கைகளையும் கைக்குட்டையால் பரிதாபமாகத் துடைத்துக்கொண்டவன், நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி எழுந்துகொண்டான். “பாருங்கள்”, தனது நடைத்தடியால் மண்ணில் கணித வடிவங்களை வரைந்தபடியே தொடர்ந்தான், “என்னால் எதிலுமே நிலைத்திருக்க முடியவில்லை, நிம்மதியடைய முடியவில்லை. நான் ரொம்பவும் அலைக்கழிகிறேன். சில சமயங்களில், முக்கியமான இடங்கள் என்னைத் தம்மை நோக்கி இழுக்கின்றன – எங்களுக்கு முக்கியமாய் இருந்த இடங்கள்.” ஒரு நொடி அமைதியானவன், யோசித்தபடியே தொடர்ந்தான், “அவள் இல்லாத அந்த இடத்திற்குச் செல்வதும் எனக்கு அவள் இருந்த இடத்திற்குச் சென்றது போலவேதான் இருக்கிறது. நான் அதனை அத்தனை ஆர்வமுடன் எதிர்நோக்குகிறேன், சென்றடைகிறேன்.”
ஹாரியட்டால் ஒட்டுமொத்தமாக அவனை அப்படி வெறுத்திட முடியவில்லை. ஏனென்றால் அவன் சொன்னது போல, அவளால் அதை உணர முடிந்தது. டாலியாக்களும் சூரியகாந்திகளும் தேனீக்களின் ரீங்காரமும் நிறைந்த அந்த அமைதியான வெளிச்சம் மிக்க தோட்டத்தில் அமர்ந்தபடி, அத்திப்பழங்களையும் ஆட்டுப்பாலையும் அருந்தி கொடி முந்திரிகள் சேகரிக்கப்படுவதைப் பார்த்து அவர்கள் வளர்ந்த இந்த மீன்பிடிக் கிராமம் பற்றி எலனார் சொன்னதை ஹாரியட் நினைவுகூர்ந்தாள்; அவர்கள் அங்கிருந்து கிளம்ப வேண்டிய நேரம் வந்தபோது வண்டிக்குள் அமர்ந்து, பரந்த மத்தியத் தரைக்கடல் கரையோடிணைந்தபடி அழுதவாறே வந்தாள் . ஒருபோதும் வலியினாலோ சோர்வினாலோ அழுதிராத அவள் அப்போது அழுதாள் என அன்புடன் குறிப்பிட்டாள் ஹாரியட். அங்கிருந்து கிளம்புவதால், நீல விரிகுடாவையோ லாவண்டர் மலர்களையோ பைன் மலைகளையோ அவர்கள் பிரியவில்லை, இணைந்திருந்த அந்தத் தனிப்பட்ட தருணங்களையே அவர்கள் பிரிந்தனர். எப்போதுமே அவர்கள் அதை இழக்கத்தான் வேண்டியிருந்தது. ஒவ்வொரு புதிய நாளும், வானிலும் கடலிலும் இதயத்திலும் புதிய வண்ணங்களைக் கொணர்ந்தது என்றாலும், அவை ஒருபோதும் ஒன்றே போல் இருக்க முடிந்ததில்லை. நாளையும் இதே போல் அழகானதாகத்தான் இருக்கும் என்னும் உண்மை அவர்களை ஒருபோதும் திருப்திப்படுத்தியதில்லை. அவர்களுக்கு எல்லாமே வேண்டியிருந்தது. ஆமாம், என்னவாய் வேண்டுமானாலும் இருக்கட்டும், அந்த இருவரும் கம்பீரமும் உறுதியும் மிக்க ஒலிம்பியர்கள்.
பிற்பகலில் அவர்கள் வீட்டை நெருங்கியபோது ஃபோர்ஸைத் சட்டென ஹாரியட்டை நோக்கித் திரும்பினான். “நான் இங்கே இல்லாத போது நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.”
“வேலை சார்ந்தா? ஓ, சரி, எனக்குப் புரிகிறது.”
“உங்களால் என்ன முடிகிறதோ நீங்கள் அதை அவளுக்குச் செய்வீர்கள், சரிதானே?” அவன் தயக்கத்துடன் கேட்டான். “வாழ்க்கையே நரகமாய் இருக்கிறது அவளுக்கு. நான் அவளுக்குச் செய்ததை இல்லாமலாக்க ஏதேனும் வழி இருந்தால் நான் நிச்சயம் அதைச் செய்வேன், நிச்சயம்.”
ஒரு நொடி தாமதித்த ஹாரியட், “ஆனால் இது இப்படியே தொடரவும் முடியாது, இல்லையா?”
“ஆமாம், ஆமாம், நான் அறிவேன்,” என்றான் யோசனையோடு. “ஆனால் அதுவல்ல பிரச்சினை. சில சமயங்களில், அவளை விட்டுவிடும்படி எலனார் சொல்வதாக எனக்குத் தோன்றுகிறது; அதாவது அவளால் இனியும் இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதென்றும் அவளை இச்சூழலிருந்து விடுவிக்க அவள் வேண்டுகிறாள் என்றும் கூறுகிறாள்.”
ஹாரியட் அவனது முகத்தைப் பார்க்க முயன்றாள். ஆனால் அவன் வேறுபுறம் திரும்பியிருந்தான்.
IV
இரண்டு வாரங்கள் தாண்டியும் ஃபோர்ஸைத் திரும்பி வராமல் இருந்தான், அவன் எப்போது வரக்கூடும் என யாருக்குமே உறுதியான தகவல் வந்ததாகவும் தெரியவில்லை. இதற்கிடையே திருமதி. வெஸ்ட்ஃபீல்ட் அவனது மனைவியிடம் ஓரளவிற்கு நெருங்கியிருந்தாள். அவளுக்கு எந்த அளவிற்கு இதில் பொறுப்பிருக்கிறது என்பது பற்றியெல்லாம் தெரியவில்லை. வெஸ்ட்ஃபீல்டிடம் சொன்னது போல, அவளைத் தேடுவதும் உரையாடுவதும் எப்போதும் நிகழ்ந்துகொண்டிருந்தது. மறுபுற நிகழ்வுகளை முற்றிலும் மறைக்கிற உயரத்தைத் தோட்டத்துச் சுவர் கொண்டிருக்கவில்லை. சரளைக்கல் பாதையில் அப்பெண் தனது பயந்த மடிந்த அடிகளை எடுத்துவைத்து நடப்பதைப் பார்க்கும்போது, ஹாரியட்டிற்குள் பெரும் கோபம் எழுந்தது. தோட்டத்துத் தொப்பியின் கீழிருந்து அவளது ஆர்வமுள்ள விழிகள் எட்டி நோக்க, முள்ளில் கிழிந்த ஏழைப் பெண்ணொருத்தியின் ஆடை போல அவளது அபத்தமான பாவாடை அவள் பின்னே தரையில் இழுத்துக்கொண்டு சென்றது.
அவர்கள் இருவரும் இணைந்து தேநீர் பருகிய நீண்ட சோபையான பொழுதுகளில் அந்தப் பெண்ணுடைய நியாயமும் எதிர்பார்ப்பும் கொஞ்சம் கொஞ்சமாக ஹாரியட்டிற்குப் புரியத் தொடங்கியது. யாராலும் விளக்க முடியாத ஒரு இடத்தில் அவள் இருந்தாள். அவளுக்கான நியாயமானது ஹாரியட்டினை மேலும் சிரமப்படுத்துவதாக இருந்தது, ஏனென்றால் அவள் அதை முற்றிலும் மறுக்க விரும்பினாள். வாசித்தபடியும் நடந்தபடியும் பேசியபடியும் அவர்கள் இருந்தபோது தங்களுக்குள் அவர்கள் அனுமதிக்காத உரையாடல் ஒன்று அங்கே இருந்துகொண்டே இருந்தது. அது அந்தப் பெண்ணின் நீண்ட அமைதியான வேண்டுகோள்கள் நிறைந்த தோற்றத்தில் இருந்தது; பதற்றத்துடன் அவள் கோர்த்தும் விடுவித்தும் கொண்டிருந்த மெலிந்த கைகளில், இடைவிடாத அவளது நடையில் இருந்தது. அவள் எதையோ திட்டமிடுகிறாள், தினந்தோறும் அதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறாள் எனத் தீர்க்கமாக உணர்ந்த ஹாரியட், அது எதுவானாலும் தான் அதற்குத் துணை நிற்கப் போவதில்லை என வெஸ்ட்ஃபீல்டிடம் தெரிவித்தாள்.
“அவன் இதை எப்படிச் செய்தான் என என்னால் மிகச்சரியாகப் புரிந்துகொள்ள முடிகிறது.” தன் கணவனிடம் உறுதிப்படுத்தினாள் ஹாரியட்.
“எலனாரைப் பற்றிப் பேசுவதற்காகத்தான் அவன் இவளைத் திருமணம் செய்திருக்கிறான். இவர்களது உறவின் மையமாக எலனார்தான் இருந்திருக்கிறாள். மீதமிருக்கிற மொத்த உலகமும் அவனை அவன் பொறுப்பிலேயே விட்டுவிட்டு வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட, இப்பெண்தான் நின்று கருணை செய்து அவனது மனதைக் கொட்டச் செய்திருக்கிறாள். தன்னால் எல்லாக் கணவன்களையும் போல இருக்க முடியாதென்பதை உணராத அவன், தன்னால் எல்லோரையும் போல ஒரு மனைவியைக் கொள்ள முடியாதென்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டான் என்று நான் நினைக்கிறேன். ஆறுதல்படுத்துவதிலேயே அவள் திருப்திகொண்டு விடுவாள் என அவன் நினைத்திருக்கிறான், காயத்தை ஆற்ற முற்படுவாள் என அவன் கனவிலும்கூட நினைக்கவில்லை.”
ஏதெல்லுக்கும் இதில் முழுப் பொறுப்பு இருக்கிறதென்பதே ஹாரியட்டின் வாதம். தியாக மனநிலையில் அவள் அதற்குள் தன்னை அனுமதித்துவிட்டாள், கற்பனாவாதத்தில் அவ்விடத்தில் தன்னை வைத்து விருப்புடன் இரசிக்க முடிந்த அவளால் நிஜ வாழ்வில் அதனை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒருவிதமான உணர்வெழுச்சியில் அவள் அவனைத் திருமணம் செய்துகொண்டுவிட்டாள். இப்போது தவிர்க்க முடியாமல் – தான் மட்டுமே அவனது ஒரே சிந்தையாக இருக்க வேண்டும் என விரும்புகிற ஓர் இடத்திற்கு வந்துவிட்டாள். அவள் அவனுக்கு என்னவாக இருக்கிறாள் அல்லது இல்லாமல் இருக்கிறாள் என்பதெல்லாம் பகடை உருட்டலின் முடிவினை ஒத்திருந்தது, அது நடுங்கும் பிணைக்கைதிகளின், காட்டுமிராண்டித்தனத்தின் சாயல் கொண்டிருந்தது. மேலும் தன்னை இந்த எல்லை வரை அனுமதித்துக்கொண்ட, ஆனால் இன்னும் குறிப்பிடத்தக்க எந்த இடத்தையும் அடையாத ஒரு பெண்ணிடமிருந்து எதை வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம் என்பதையும் ஹாரியட் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது.
“அவள் கண்டிப்பாக எதையோ செய்யவிருக்கிறாள்,” என ஹாரியட் அறிவித்தாள். “ஆனால் இப்போது அவளால் என்ன செய்ய முடியும்? அவளிடம் என்ன ஆயுதம் எஞ்சி இருக்கிறது? தன்னை இவ்வளவு சிதறிக்கொண்ட பிறகு, எப்படி அவள் தன்னை ஒருங்கிணைத்துக்கொள்ளப் போகிறாள்? அவள் என்ன செய்வாள் என்பதுதான் திகிலாக இருக்கிறது. அது நிச்சயம் பலனில்லாமல்தான் போகப்போகிறது, போலவே அது நிச்சயம் நாடகீயமான தருணங்களைக் கொண்டிருக்கப் போகிறது.”
என்றாலும், ஒரு நாள் காலையில் அவள் நேரிட்ட பிரச்சினையை கொஞ்சமும் எதிர்நோக்கியிருக்கவில்லை. வெளிறிய கோபம் நிறைந்த முகத்துடன், உறக்கத்தில் நடப்பதைப் போன்று ஏதெல் அவளது தோட்டத்தில் நுழைந்து மறுநாள் ஃபார்ச்சூனிற்குத் தன்னுடன் வரமுடியுமா எனக் கோரியபோது ஹாரியட் அதிர்ந்து திகைத்து அமர்ந்துவிட்டாள்.
“ஆனால், என் இனிய பெண்ணே, நீ அங்கே தனியே போய்த்தான் ஆகவேண்டுமா?”
“ஹரால்ட் இல்லாமல் என்று கேட்கிறீர்களா?” சப்தமேயின்றி கேட்டாள் ஏதெல். “ஆமாம். நான் போய்த்தான் ஆகவேண்டும் என நினைக்கிறேன். அங்கே போவதற்கு அவன் மிகவும் அஞ்சுகிறான். என்றாலும் அவனது விஷயங்களுக்குச் சென்று சேராமல் அவன் திருப்தியடைய மாட்டான் என நினைக்கிறேன். அந்த அதிர்ச்சியை எதிர்கொண்டு அதிலிருந்து மீறிவிட்டால் அவன் மகிழ்ச்சியாகிவிடுவான். நான் அங்கே முதலில் செல்வது அவனுக்கு அதைச் சுலபமாக்கித் தரும்.”
ஹாரியட் வெறித்தாள். “இதை அவன்தான் முடிவுசெய்ய வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா? அந்த இடத்தை முடிந்த அளவு மறக்க வேண்டும் என்றுகூட அவன் விரும்பலாம்.”
“அவன் மறப்பதில்லை,” சட்டென பதிலளித்தாள் ஏதெல். “அவன் எப்போதும் அதையே நினைத்துக்கொண்டிருக்கிறான். அங்கே அவன் வாழ்ந்துதான் ஆக வேண்டும்; அதுதான் அவனுடைய வீடு.” ஒரு சீறலான சிறிய தேம்பலுடன் தொடர்ந்தாள், “அவனை அங்கிருந்து விலக்கி வைக்கக்கூடாது.”
“இது சார்ந்து அவனோ அல்லது வேறு யாருமோ எதுவும் செய்ய முடியும் என எனக்குத் தோன்றவில்லை.” வறட்சியாகப் பதிலளித்தாள் ஹாரியட்.
“அவன் அங்கு வாழ வேண்டும்.” ஏதெல் தன்னியல்பாகப் பதிலளித்தாள், “நான் முதலில் அங்கே செல்வது அவனுக்கு அதைச் சுலபமாக்கித் தரும்.“
“எப்படி?” திருமதி. வெஸ்ட்ஃபீல்ட் திணறினாள்.
“எப்படியாவது.” கைக்குட்டையை விரல்களைச் சுற்றி திருகியபடி குழந்தையைப் போல் பதிலளித்தாள். “நாம் காலை ரயிலில் ஏறினால் பிற்பகலில் அங்கே சென்றுவிடலாம். நிலையத்திலிருந்து அது அருகில்தான் இருக்கிறது, எனக்குத் தெரியும்.” ஹாரியட்டைக் கெஞ்சுவது போல் பார்த்தாள். “நீங்கள் என்னுடன் வந்தால் அது அவனுக்கு இன்னும் அதிக இஷ்டமாயிருக்கும் என்பது உறுதி.”
ஹாரியட் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டவாறே தரையில் கூர்மையாக நோக்கினாள். “இதில் நான் எப்படி உதவ முடியும் என நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை ஏதெல். அது சரியானதாகவும் எனக்குப் படவில்லை.”
ஏதெல் நிமிர்ந்து அசையாமல் அமர்ந்தாள். நீர் நிறைந்த அவளது கண்கள் நிறைந்து தளும்பி கன்னத்தில் கண்ணீர் மெதுவாக இறங்கியது. “இது தவறாக உங்களுக்குப் படுவது குறித்து மன்னியுங்கள். அப்படித் தோன்றும்போது நீங்கள் நிச்சயமாக வரமுடியாது. என்றால், நாளை நான் தனியாகச் சென்றுகொள்கிறேன்.” எழுந்துகொண்டவள், நிச்சயமற்ற மனநிலையால், நாற்காலியின் பின்பகுதியைப் பற்றியவாறு உறுதியாக நின்றாள்.
ஹாரியட் வேகமாக அவளை நோக்கி நகர்ந்தாள். அப்பெண்ணின் வேட்கைமிகு பிடிவாதத்தில் ஒரு சக்தி இருந்தது.
“ஆனால், என் அன்பிற்குரிய குழந்தையே, நான் உடன் வரவேண்டும் என ஏன் விரும்புகிறாய்? அதனால் என்ன நன்மை நடந்தேறும்?”
நடுங்கியும் கண்ணீர்விட்டபடியும் இருந்த அவளிடம் ஒரு நீண்ட அமைதியே நிலவியது. இறுதியாக ஏதெல் முணுமுணுத்தாள். “நீங்கள் அவர்களது தோழி என்பதால் அவ்வாறு நினைத்தேன். நீங்கள் என்னுடன் இருந்தால், அது சற்று பிரச்சினையற்றதாகத் தெரியும்.” திடும்மெனத் தோன்றிய ஓர் உணர்வுத் திருகலில் அவளது தோள்கள் குலுங்கின, தனது கரங்களால் முகத்தின் மீது அழுத்தினாள். “பாருங்கள்,” அவள் தடுமாறினாள், “நான் ரொம்பவும் தோற்றிருக்கிறேன். எனக்கு – யாருமே இல்லை.”
தொய்வடையும் அவளது மெல்லிய உடலில் உறுதியாகத் தன் கரங்களைச் சேர்த்த ஹாரியட், “சரி, குறைந்தபட்சம் உன்னுடைய இந்த முயற்சிக்கு நான் துணை நிற்கிறேன். என்ன பலன் கிடைக்கும் எனத் தெரியவில்லை, என்றாலும் நான் வர ஒப்புக்கொள்கிறேன். நீ தனியாகச் செல்வதைவிட நான் உடன் வருவதையே நான் விரும்புகிறேன். ராபர்ட்டிடம் சொல்லி நமக்கு ரயில் சார்ந்த ஏற்பாடுகளைச் செய்யச் சொல்கிறேன்.”
அதீத சோர்வை வெளிப்படுத்துகிற தொனியுடன் அவள் தன்னை விடுவித்துக்கொண்டாள். “நாங்கள் இங்கே இருப்பது உங்களுக்குச் சிரமம்தான். நாங்கள் இங்கே வந்திருக்கவே கூடாது. உங்களிடம் நான் இவ்வளவு உரிமையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. உங்களை உடன் அழைத்துச் செல்லும் முன்பாக, நான் ஏன் ஃபார்ச்சூனிற்குச் செல்கிறேன் என்கிற உண்மையான காரணத்தை உங்களுக்குச் சொல்லிவிட வேண்டும்.”
“உண்மையான காரணமா?” திருப்பிக் கேட்டாள் ஹாரியட்.
“ஆமாம். அவன் இப்போது அங்குதான் இருக்கிறான் என நான் நினைக்கிறேன்.”
“ஹரால்டா? ஃபார்ச்சூனிலா?”
“ஆமாம். ஐந்து நாட்களாக அவன் என்னிடம் தொடர்புகொள்ளவேயில்லை. முன்பு போண்டாய்ஸிலிருந்து ஒரு தந்தி மட்டுமே வந்தது. அது ஃபார்ச்சூனிற்கு வெகு அருகில்தான் இருக்கிறது. அதன்பிறகு அவனிடமிருந்து ஒரு வார்த்தையும் இல்லை.”
“ஐயோ குழந்தையே, எவ்வளவு பயங்கரமானது! இங்கே வந்து என்னிடம் அதைப் பற்றிச் சொல்.” ஹாரியட் அவளை ஒரு நாற்காலிக்கு இழுக்கவும் அவள் அப்படியே அதில் சரிந்தாள்.
“நான் என்ன நினைத்து பயப்படுகிறேன் என்பதைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. தூக்கத்தை இழந்து எல்லா வகையான பயங்கரங்களையும் கற்பனை செய்துகொண்டிருக்கிறேன். எல்லா நினைவுகளுடனும் நாட்கணக்கில் அவன் அங்கே தனியாக அடைந்து கிடந்தால் அவனுக்கு என்னவாகியிருக்கும் என்று யார் அறிவார்கள்? அவன் யாருடனாவது இருந்தால் எனக்கு இப்படியெல்லாம் தோன்றியிருக்காது. ஆனால் இப்போது – நீங்கள் அனைவரும் எனக்கு எதிராக இருக்கிறீர்கள்! உங்கள் யாருக்குமே இது புரியவில்லை. நான் அவனை அலைக்கழியச் செய்வதாக நீங்கள் நினைக்கிறீர்கள். (முதல்முறை அவளது குரல் இகழ்ச்சியின் உணர்ச்சியைச் சூடிக்கொண்டது). ஆனால் அவனைக் காப்பதற்கு வேறு வழியில்லை. அது அவனை அப்படியே கொன்றுகொண்டிருக்கிறது. லண்டனிலிருந்த போது ஒருமுறையும், இந்தியாவை விட்டுக் கிளம்புவதற்கு முன்பு ஒருமுறையும் அவன் இரண்டு முறை மிக மோசமாக நோய்வாய்ப்பட்டான். இந்த மனநிலையிலிருந்து அவனை வெளிக்கொணராவிட்டால் அவன் எந்த நிலைக்கும் செல்லக்கூடும் என லண்டன் மருத்துவர் சொன்னார். அவர்கள் என்னை அவனைவிட்டு நீங்கக்கூடச் சொன்னார்கள். பாருங்கள், நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.”
ஹாரியட் அவளுக்கருகில் இருந்த ஒரு ஸ்டூலில் அமர்ந்து அவளது கைகளை எடுத்துக்கொண்டாள்.
“என்றால், நீ ஏன் அவனைவிட்டுப் போய்விடக்கூடாது இனியவளே?”
தோட்டத்துச் சுவரை வெறித்தாள் அப்பெண். “என்னால் முடியாது – இப்போது முடியாது. முன்பு ஒருவேளை நான் அப்படி விலகியிருக்கலாம்.” வெடிக்கிற அழுகையுடன், “ஐயோ! அதைப் பற்றிப் பேசாதீர்கள். முடிந்தால், அவனைக் காப்பதற்கு எனக்கு உதவுங்கள்.”
“நான் வேண்டுமானால் தனியாக ஃபார்ச்சூனிற்குச் செல்லட்டுமா ஏதெல்?” நம்பிக்கையுடன் வினவினாள் ஹாரியட்.
அப்பெண் தலையசைத்தாள். “இல்லை. நான்தான் உங்களை அனுப்பினேன் என அவன் தெரிந்துகொள்வான். நான் அஞ்சுவதாக நினைப்பான். நான் அஞ்சுகிறேன்தான், ஆனால் அவன் நினைப்பது போல் அல்ல. நான் எதிலுமே அவனுக்கு இடைஞ்சல் செய்ததில்லை. ஆனால் இதை இப்படியே விடவும் முடியாது. நான் போவேன், அவன் முடிவு மட்டும் செய்ய வேண்டும்.”
ஏதெல்லைப் பத்திரமாக அவளது வீட்டிற்கு அனுப்பிய பிறகு, நூலகத்தில் வேலையாய் இருந்த கணவனிடம் திரும்பிய ஹாரியட் தான் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பைப் பற்றிக் கூறினாள். இத்திட்டத்தை அவர் அழுத்தமாக எதிர்த்தார். அயர்ச்சியும் குழப்பமும் தருவதாய் இருக்கிற ஃபோர்ஸைதின் பிரச்சினைகளுக்குள் அவள் மேலும் மேலும் தலையிடுவதையும் அவர் விரும்பவில்லை. பக்கத்து வீட்டின் பைத்தியக்காரத்தனங்களிலிருந்து தப்பித்து கோடைகாலத்தை ஸ்விட்சர்லாந்தில் கழிப்பதுதான் அவரது இப்போதைய உச்சபட்ச விருப்பம் என்றும் வெளிப்படையாக அறிவித்தார்.
“ஃபார்ச்சூனிற்குச் செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தால் அவள் தீவிரமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறாள்,” என விளக்கினாள் ஹாரியட். “இதுவரை தான் அனுமதிக்கப்படாமல் இருந்த ஒரு வெளிக்குள் நுழைவதற்கான வாய்ப்பாக அதை அவள் ஏனோ கருதுகிறாள். நான் அந்தச் சிறிய முயற்சியில் அவளுக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக்கொள்ள முடியாது. எனவே நான் அவளுக்கு வாக்களித்துவிட்டேன். அத்தோடு, எலனாரது பொருட்கள் அனைத்தும் இருக்கிற அந்த இடத்திற்கு அவள் போகிறாளென்றால்..”
“அப்படியாயின், அவளை வெளியே நிறுத்துவதற்காகத்தான் நீ போகிறாய். உள்ளே அனுமதிப்பதற்காக அல்ல.” வெஸ்ட்ஃபீல்ட் ஊகமாய் வெளிப்படுத்தினார்.
“எனக்கு அது தெரியவில்லை, அதை உங்களிடம் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் இருவருக்காகவும்தான் அங்கே செல்கிறேன் – அவளுக்காகவும் எலனாருக்காகவும்.”
V
மலையேறும் பாதையில் பாதித் தொலைவில், கீழிருக்கும் நதியின் பச்சை வளைவுகளைப் பார்த்தபடி பசுமைவெளிக்கிடையே பார்ச்சூன் நின்றுகொண்டிருந்தது. அதை நெருங்கும்போது, இங்கே வந்து கண்களுக்கு ஓய்வுகொடுப்பது எவ்வளவு நன்றாய் இருக்கும் என எலனார் சொன்னதை ஹாரியட் நினைவுகூர்ந்தாள். வேறெங்குமே வானம் இவ்வளவு சாம்பல் நிறமாய் இல்லை, நதிகள் இத்தனை தெளிவாய் இல்லை, சமவெளிகள் வனத்துடன் இவ்வளவு அழகாய்ப் பிணைந்திருக்கவும் இல்லை. அந்த வீடு இருந்த மலைக்குக் கீழே ஒரு தீவு இருந்தது; அதில் வைக்கோல் தயாரிப்பவர்கள் ஏதோவொரு பயிரின் நீண்ட கதிர்களூடாக தங்களது அரிவாளை அசைத்தபடி அதன் இரண்டாம் விளைச்சலை அறுவடை செய்துகொண்டிருந்தனர். கண்ணாடி போன்ற நதியைக் கடக்கும்பொருட்டு பெரிய மரப்படகுகளில் ஏறுவதற்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.
வண்டியைச் சாலையிலேயே நிறுத்தச் சொல்லுமாறு ஏதெல் வேண்டியதால், இரண்டு பெண்களும் இறங்கி லிண்டன் மரங்களுக்குக் கீழோடிய சிறிய பாதையில் நடந்துசென்றனர். புதர்களை வெட்டிக்கொண்டிருந்த ஒரு வயதான மனிதர் இவர்களை ஆர்வமுடன் கவனித்தார். அவர் வெட்டுகிற ஓசையையும் தீவிலிருந்து அரிதாக வந்த குரலோசைகளையும் தவிர்த்து அங்கே வெளிறிய வெளிச்சமான அமைதியே நிலவியது. இவர்களது வருகை அதை உடைப்பதற்கான எத்தனங்களற்ற தயக்கத்துடன் இருப்பதை ஹாரியட் கவனித்தாள். சோர்வினால் ஏற்பட்ட எரிச்சலுடன் அவள் ஏதெல்லைப் பார்த்தபோது, அவளது மென்மையான வலுக்கட்டாயமான நடையில் ஏதோ நேர்மறையான இரகசியத்தன்மை இருப்பதாகத் தோன்றியது.
முன்கதவு திறந்திருந்தது. ஆனால் அவர்கள் அதை நெருங்கும்போது தோட்டத்தின் பின்புறத்திலிருந்து கூன்விழுந்த முதியவள் ஒருத்தி அவர்களை அழைத்தபடி ஓடிவந்தாள். அவளது மேலங்கி முழுக்கக் காய்கள் நிறைந்திருந்தன. ஏதெல் பதற்றமின்றி அவளை எதிர்கொண்டு பதிலளித்தாள். “நான்தான் திருமதி ஃபோர்ஸைத். அவர் எனக்காகக் காத்திருக்கிறார். அவருக்கு உடல்நலமில்லை என்பதை நான் அறிவேன். நீங்கள் எங்களது வருகையை அவருக்குத் தெரிவிக்கத் தேவையில்லை.”
வணக்கங்களாலும் கேள்விகளாலும் தன்னை நிதானப்படுத்திக்கொண்ட அம்முதியவள் ஏன் முன்னரே தெரிவிக்கவில்லை என்று கேட்டுக்கொண்டாள். உடனே அம்மையாருக்கும் அவரது தோழிக்கும் அறைகளைத் தயார்செய்து விடுவதாகத் தெரிவித்தாள்.
ஆனால் ஏதெல் அவளைக் கடந்து வாயிலிலும் படிகளிலும் மிதப்பது போல் சென்றாள், ஹாரியட் அவளைத் தடுக்க முயன்றபடியே பின்தொடர்ந்தாள். அவர்கள் வரவேற்பறையையும் நூலகத்தையும் கடந்து, ஹரால்டின் படிப்பறைக்குள் நுழைந்து, முன்னர் எலனாரது அறையாக இருந்த அறைக்குள் நேராக நுழைந்தனர்.
“தயவுசெய்து நாம் இங்கே அவனுக்காகக் காத்திருக்கலாம் ஏதெல்,” ஹாரியட் கிசுகிசுத்தாள். “யாரையும் இப்படிச் சென்று தொந்தரவு செய்வதற்கு நமக்கு உரிமை இல்லை.”
ஆனால் ஏதெல் ஏதோ மந்திரத்தால் கட்டுண்டவள் போல் இருந்தாள். படிப்பறையிலிருந்து எலனாரது உள்ளறைக்குச் செல்லும் கதவில், ஒரு கனமான திரை தொங்கிக்கொண்டிருந்தது. அவள் அதை உயர்த்தியதும் அவர்கள் அங்கேயே அமைதியாக நின்றனர். ஹாரியட்டின் நினைவில் இருந்தது போலவேதான் அது காட்சியளித்தது. அழகிய திரைச்சீலைகள், இறைவழிபாட்டு மேசை, லூயி சீஸ் கால மரச்சாமான்கள்– கொஞ்சமும் மாறாமல் இருந்தன. ஹரால்டின் புகைப்படம் இருந்த இடத்தில் கான்ஸ்டண்டால் வரையப்பட்ட எலனாரின் ஓவியம் மாட்டப்பட்டிருந்தது மட்டுமே ஒரே ஒரு மாறுதல். படுக்கையில் கால்பகுதிக்குக் குறுக்காக டென்னிஸ் கால்சட்டை, சட்டை அணிந்தபடி ஹரால்ட் படுத்திருந்தான். கதவைப் பார்த்தவாறு ஒருக்களித்துப் படுத்திருந்த அவனது கரம் தலையின் மேல் கிடந்தது. கவனமாக இருந்து பழகியதாலோ என்னவோ அவர்கள் அவன்மேல் பார்வையைச் செலுத்தியதும், விழித்துக்கொண்ட ஹரால்ட் அதிர்ந்து தடுமாறியபடி எழுந்துகொண்டான்.
“ஏதெல், என்ன நடந்ததென்று நீ இப்படி..?” கோபமாகக் கத்தினான் அவன்.
அவள் இப்போது போதுமான அளவு பயந்துவிட்டாள். தலை முதல் பாதம் வரை நடுங்கியவள், கரங்களை மார்போடு சேர்த்து இறுக்கமாக அழுத்திக்கொண்டாள். “வரக்கூடாது என்று நீ என்னிடம் ஒருபோதும் சொல்லவில்லை.” மூச்சுவாங்கியபடி, “உங்களால் வரமுடியாதென்று மட்டும்தான் சொன்னீர்கள்” என்றாள் சீற்றமான எதிர்ப்புடன்.
படுக்கையின் கால்களை இரு கைகளாலும் இறுக்கமாகப் பற்றிக்கொண்ட ஹரால்டின் குரல் கோபத்தில் நடுங்கியது. “தயவுசெய்து கீழே சென்று வரவேற்பறையில் காத்திரு. நான் திருமதி. வெஸ்ட்ஃபீல்டின் உதவியுடன் என்னைத் தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.”
இன்னொரு அடி உள்ளே எடுத்து வைத்து வாயில்திரையை தனக்குப் பின்புறம் விழவிட்ட ஏதெல்லின் கண்களில் ஏதோ பாய்ந்தது. “நீ என்னுடன் வரும்வரை நான் போகமாட்டேன் ஹரால்ட்.” வலுவற்ற தோள்களை உயர்த்திக்கொண்டவள், தன்னைச் சுற்றிலுமிருந்த அறையை, தன் கணவனை, ஹாரியட்டை, இறுதியாக- சித்திரத்தில் ஒளிர்ந்த அவளது வெறுப்புமிக்க முகத்தைப் பரிதவிப்புடன் பார்த்தாள். “இப்படி இரகசியமாக இங்கே வருவதற்கு உனக்கு உரிமையில்லை.” என்று வெடித்தாள். ”அது எலனாருக்கும் அசிங்கம், எனக்கும் அசிங்கம். எனக்கு அவள் குறித்து எந்த அச்சமுமில்லை. நீ எனக்குச் செய்வதையெல்லாம் கண்டு அவள் உன்னை வெறுக்கத்தான் செய்வாள். நீங்கள் எல்லோரும் கட்டமைப்பது போல அவள் ஒன்றும் அத்தனை மோசமானவளாய் இருந்திருக்க மாட்டாள் – ரொம்பவும் பொறாமை!”
இறுக்கிய கைகளுடன் பரபரத்துத் திரும்பிய ஹரால்ட் தலையை நிமிர்த்தி ஓவியத்தைப் பார்த்தான்.
“பொறாமையா? யார் மீது –கடவுளே!”
“ஹரால்ட்!” எனக் கனிவுடன் அழைத்தாள் திருமதி. வெஸ்ட்ஃபீல்ட்.
ஆனால் அவள் தாமதித்துவிட்டிருந்தாள். வெட்டப்பட்டுவிட்டது போல அப்பெண் தரையில் சரிந்திருந்தாள்.
VI
ஃபார்ச்சூனிற்குச் சென்றுவந்த நான்கு வாரங்களுக்குப் பிறகான ஒரு மழை இரவில், ஃபோர்ஸைத் கையில் தொப்பியுடன் அவளுக்கு நல்லிரவு தெரிவித்து விடைபெற்றான். ஹாரியட் சோர்வாகவும் துயருடனும் காணப்பட்டாலும் ஃபோர்ஸைத் அமைதியாகக் காணப்பட்டான்.
“ஃபார்ச்சூனில் எனக்கு நீ ஒரு வாய்ப்பு தந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி ஹரால்ட். அது வேற்றார் கைக்குச் செல்வதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அது எப்படி இருந்ததோ அப்படியே நான் பராமரிப்பேன்; நீ அதை உறுதியாக நம்பலாம். எப்போது நீ அங்கே வர விரும்பினாலும்…”
ஃபோர்ஸைத் அவசரமாக இடைமறித்துப் பேசினான். “நான் அங்கே திரும்ப வருவேனென்று எனக்குத் தோன்றவில்லை திருமதி வெஸ்ட்ஃபீல்ட். ஏதாவது மாற்றங்கள் செய்ய விரும்பினால் நீங்கள் தயங்காமல் செய்யலாம். ஏற்கனவே நான் உங்களிடம் சொல்ல முயன்றது போல, இனி அது எனக்குத் தேவைப்படாதென்றுதான் நினைக்கிறேன். என்னிடம் எவ்வளவு வரமுடியுமோ அவ்வளவு அவள் என்னுள் வந்துவிட்டாள்.”
“இன்னொரு ஆளின் மூலமாக?”
இலேசாகச் சிரித்தபடி தலையை ஆட்டினான் ஹரால்ட், “இன்னொரு வழியாக. அவள் வாழ்ந்து மறைந்துவிட்டாள் ஹாரியட். நான் இங்கிருப்பதெல்லாம் அவளை வெளிப்படுத்துவதற்காகத்தான். அதுவே அதீத பரிதாபத்திற்குரியதுதான் என்றாலும் என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்ய வேண்டும். நிச்சயிக்கப்பட்ட காலத்தைத் தாண்டியும் நான் வாழ நேரிடலாம் – ஆனால் அவள் எப்போதும் பெருந்தன்மையுடையவளாய் இருந்தாள்.”
திருமதி வெஸ்ட்ஃபீல்டை நோக்கி கரங்களை நீட்டியவன், அவனைத் தக்கவைக்க முயல்வது போல அவள் தயங்கியதை மீறி, அவளது கரங்களை எடுத்துப் பற்றிக்கொண்டான்.
“நாளை காலை நீங்கள் கிளம்புவதற்கு முன் நான் ஏதெல்லை வந்து பார்க்கிறேன் என்று சொல். அவளது செய்திக்கு நன்றி கூறினேன் என்றும் சொல்.” முணுமுணுத்தாள் ஹாரியட்.
“தயவுசெய்து வாருங்கள். நான் இருந்தபோதும்கூட, கிளம்புவதற்காக எல்லாவற்றையும் அவளே தயார்படுத்தியதால் சோர்வாகிவிட்டாள். அவளை நான் மீண்டும் சர்ரேக்கு அழைத்துச் சென்றவுடன் அவள் பழையபடி ஆகிவிடுவாள். அமெரிக்காவிற்குச் செல்வதில் அவள் ஆர்வமாய் இருக்கிறாள். நல்லிரவு, அன்பிற்குரியவரே” எனக் கூறியவாறே வராண்டாவைக் கடந்து விடைபெற்றவன், சரளைப் பாதையினைக் கடந்துசென்று கதவினை மூடினான். வரவேற்பறையை மெதுவாகக் கடந்த ஹாரியட், கணவனது படிப்பறைக்குச் சென்று விறகடுப்பிற்கருகில் அமைதியாக அமர்ந்துகொண்டாள்.
வேலையிலிருந்து எழுந்துகொண்ட வெஸ்ட்ஃபீல்ட் அவளை அக்கறையுடன் பார்த்தார்.
“அந்தப் பைத்தியக்காரனை நீ ஏன் முன்னரே வீட்டிற்கு அனுப்பவில்லை ஹாரியட்? நேரம் நள்ளிரவையும் கடந்துவிட்டது, நீயும் மிகவும் சோர்வாகி விட்டாய். உன்னைப் பார்த்தால் பேய் போல் இருக்கிறது.” ஒரு இழுப்பறையைத் திறந்தவர் அவளுக்கு ஒரு கோப்பை வைன் ஊற்றித்தந்தார்.
“எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது அன்பே. வயதாவதை உணரத் தொடங்கிவிட்டேன் நான். இன்னும் இளமையைத் தக்கவைத்துக்கொள்ளும் தெம்பு கொஞ்சமும் எனக்கில்லை. நான் ஃபார்ச்சூனை விலைக்கு வாங்கி அங்கே என்னை ஒப்படைக்கப் போகிறேன். கடந்தும் மறந்தும்விட்ட இனிமையான நினைவுகளுக்கிடையே நான் மகிழ்ச்சியாக முதுமை அடைவேன்.”
அவளது நாற்காலியின் கரத்தில் அமர்ந்துகொண்ட வெஸ்ட்ஃபீல்ட் அவளது தலையைத் தன்னோடு சேர்த்துக்கொண்டார். “நிஜமாகவே அவன் அதை விற்கப்போகிறானா? அவன் போதுமான அளவு மீண்டுவிட்டான், இல்லையா?
“ம், அவன் என்னுள்ளிருக்கும் இதயத்தை உருகச் செய்கிறான். அவன் என்னை ரொம்பவும் வயதானவளாகவும் தனிமையாகவும் உணரச் செய்கிறான்; நானும் அவனும் ஏதோ வேறொரு காலத்தின் எச்சங்கள் என்பது போல – கடந்துவிட்ட இனிமையான காலத்தினுடையவர்கள் போல. அவன் எல்லாவற்றையும் விட்டு நீங்குகிறான். அவளது குழந்தை பிறந்ததும் அவன் அவளை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறான்.”
”அவளது குழந்தையா?”
“ஆமாம். ஃபார்ச்சூனில் நிகழ்ந்த அந்தப் பயங்கரமான நாளிற்கு முன்புவரை அவன் அதை அறிந்திருக்கவில்லை. அவள் யாரிடமும் அதுகுறித்துச் சொல்லியிருக்கவில்லை. இது அவனை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துவதாகச் சொல்கிறான் – எல்லாவற்றையும் ஈடுகட்டிவிடும் என்கிறான். ஐயோ, ராபர்ட்! எலனார் மட்டும் அவனுக்குக் குழந்தைகளை விட்டுச் சென்றிருந்தால், இது எதுவுமே நிகழ்ந்திருக்காது.”
ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு, “அவன் மகிழ்ச்சியாய் இருக்கிறான் என்று நீ நினைக்கிறாயா?” என வினவினார் வெஸ்ட்ஃபீல்ட்.
“எனக்குத் தெரியும். அவன் அவளிடம் மிக மென்மையாகவும் புரிதலுடனும் நடந்துகொள்கிறான்.” கண்ணீரைத் துடைத்துக் கொள்வதற்காக இடைவெளி எடுத்துக்கொண்ட ஹாரியட் கணவனது தோள்களில் தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். “இவன் இதை இவ்வளவு அழகாகக் கையாளுவான் என நான் நம்பியிருக்கவே மாட்டேன். வாழ்வில் முதன்முறையாக, இந்த முதிர்ச்சியற்ற, வேட்கைகொண்ட முட்டாள் பெண்ணின் வாயிலாக அவன் தனது சாத்தியங்களை அறிந்துகொண்டுவிட்டது போல் தோன்றுகிறது. ஆனால் எலனார் அவனுக்கு ராஜாங்கங்களைப் பரிசளித்தாள்…”
நீண்ட நேரத்திற்கு அவனது தோள்களில் மெலிதாக அழுதுகொண்டே இருந்தாள் அவள். அதன்பிறகு அவள் யோசனை செய்வது போல் தோன்றியது. இறுதியாக அவள் நிமிர்ந்த போது அவரது கண்களைப் பார்த்து நன்றியுடன் சிரித்தாள். “சரி, நாம் ஃபார்ச்சூனை வாங்கிக்கொள்ளலாம் என் இனியவரே. அவர்களுக்குப் பிறகு மீதமிருக்கிற அத்தனையையும் நாம் வைத்துக்கொள்ளலாம். அவன் ஒருபோதும் திரும்பி வரமாட்டான்; அவனில் என்னால் அத்தனை நம்பிக்கையையும் சக்தியையும் உணர முடிந்தது. அவன் தொடர்ந்து அதைச் செய்து மேலும் மேலும் மெருகேறுவான்.” அவளது உதடுகள் மீண்டும் துடிக்கத் துவங்கினாலும், தனது கலங்கிய கண்களுக்குள்ளிருந்து அவள் புன்னகைத்தாள்.
“எலனாருக்கு இது தெரிந்தால், அவள் மிகவும் மகிழ்வாள் என நம்புகிறேன். ஏனென்றால், அவள் – என் இனிய எலனார் – வேறெதையும்விட அவனை நேசித்தாள், அவள் மீதான அவனது காதலையும்விட!”
*
ஆங்கில மூலம்: Eleanor’s House by Willa Cather, Willing Muse and Eleanor’s House, Dodo Press, 2008 Edition.