மஞ்சள் பலூன்கள்

6 comments

முட்டைகள் மோதிக்கொள்வதைப் போன்ற வழுவழுப்பான ஒலியைத் தொடர்ந்து, மேஜையின் விரிந்த பச்சையின் மீது நிறம் நிறமான நாய்க்குட்டிகளைப் போல பில்லியர்ட்ஸ் பந்துகள் ஓடிவருகின்ற சித்திரத்தை மனதிற்குள்ளேயே உணர்ந்தேன். கண்களைத் திறக்க விரும்பாத ஆழத்திற்குள் ஞாபகம் நின்றிருந்தது. நீருக்குள் மூழ்கிக்கொண்டிருப்பவனது உயர்த்திய ஒரு கையைப் போல, நிகழ்காலத்தில் அதன் அசிங்கமான கூச்சல்களுக்கு மத்தியில் ஒட்டிக்கொண்டுள்ள ஒரு துளி பிரக்ஞை, பதற்றத்தையும் தலைவலியையும் தீவிரப்படுத்தியது. நாற்காலியின் பின்னே தலையைத் தொங்கவிட்டு உடலை நன்றாக நீட்டிக்கொண்டேன். பின்னந்தலையில் ஸ்டிக்கின் நுனி இடித்ததைத் தொடர்ந்து மிக மென்மையான குரலில் ஒரு ”சாரி”யும் வந்தது. தொண்டை வரை தளும்பிக்கொண்டிருக்கும் வெதுவெதுப்பான திரவத்தின் சீறலான தகிப்பை உடல் முழுக்க உணர்ந்தேன்.

உடலின், மனதின் இறுக்கப்பட்ட பட்டைகளில் மெல்லிய நெகிழ்தல்கள் உருவாகி வந்தன அல்லது அப்படி எண்ணிக்கொண்டேன். ஞாபகங்கள் உருகிய வெறும் மனிதனாக எஞ்ச; புதிய நிர்வாணத்தோடு ஏதோ ஒரு கரையில் ஈரஞ்சொட்டச் சொட்ட எழுந்து நடக்க; முழுவதும் மறந்துவிட்ட எனது பழைய ஞாபகங்கள்; துண்டிக்கப்பட்ட அழுகிய உறுப்பைப் போல எதிர்க்கரையில் வெயிலில் பொசுங்கி நாறுவதை எவ்விதத் துணுக்குறலுமின்றி வெறுமையான கண்களால் பார்க்க விரும்புபவனாக; மதுவின் லாவாக்கள் தளும்பிக்கொண்டிருக்கும் உடலில் உணர்வுகளை ஒவ்வொன்றாக எரித்துக்கொண்டிருந்தேன். இன்னமும் மூழ்கிடாத ஒரு உள்ளங்கையின் தவிப்பைக் கண்டபோது நிரஞ்சனாவின் முகமும், வாயில் கவ்விய குட்டியைப் போல எனது கைகளுக்கு அகப்படாமல் மனதிற்குள் அங்குமிங்குமாக அவளது ஞாபகங்களைப் பற்றி அலைகின்ற எனது முட்டாள்தனத்தையும் கண்டேன். அவளால் ஊட்டி வளர்க்கப்பெற்ற எனது முட்டாள்தனம். அந்தச் சிறிய சதுரப்பெட்டியில் அவளின் பொருட்டு ஒவ்வொரு முறையும் எலும்புகள் உடைய மடங்கி அமர்ந்திருந்த காட்சிகள் தோன்றி எழுந்தன. அவளிடமிருக்கும் போது குழைந்துவிட்ட என் பாவனைகளின் அருவருப்பு, வலிந்து ஒடிக்கப்பட்ட எனது மிடுக்குகளில் நான் மட்டுமே உணர முடிகின்ற ஊனம், இவையனைத்தும் ஒன்று திரண்டெழ, கண்களைத் திறவாமலேயே உள்ளூர மிகக் கசந்து, “நாய்.. நாய்” எனச் சட்டையில் எச்சில் வழிய என்னையே திட்டிக்கொண்டேன்.

ஒரு கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்குவதற்கான இடைவெளியில் பிரபஞ்சமே தன் இலைகளை உதிர்த்து ஆறப்போட்டிருக்கும் காலத்தில் வாழ்வின் முக்கிய முடிவுகளைத் தவிர்க்க வேண்டுமென எனக்கு யாரும் சொல்லித்தரவில்லை. கோடைகாலத்தில் துருவேறியிருந்த என் மூர்க்கமான – இயல்பான – நடவடிக்கைகளில் மழைக்காலத்திற்கு முந்தைய கனிவுகளை நானே வெவ்வேறு தனிமைகளில் உணர்ந்துகொண்டிருந்தேன். படபடத்து எரிந்த தீச்சுடர்கள் நீங்கி மெழுகின் திரியில் இசைமை வருவதைப் போல, எனது தினசரிப் பதற்றங்களிலிருந்து துள்ளலுக்கு என்னை மாற்றிக்கொண்டிருந்தது பருவம். எனது மகிழ்ச்சியின் உச்சத்தில் அது ஏனென்றே அறியாமல் நான் திளைத்திருந்தேன். நிரஞ்சனாவின் வருகைக்கு முன்பே நான் அவ்வளவு பழமையானவன் இல்லையென்றும் புதிய நீரூற்றைப் போல இனிய தருணங்களை உருவாக்கத் தெரிந்தவனென்றும் உள்ளூர நம்பினேன். ஆனால் மனிதன் துயரங்களை விரும்பியுண்ணும் ஒரு விலங்கு. மகிழ்ச்சி உடலையும் மனதையும் மிக இலேசாக்கிப் பறக்க வைக்கின்ற சந்தர்ப்பங்களில் ரொம்பவே பயந்துவிடுகின்ற விலங்கு. ஒரு துளி துயரத்தின் ஈரத்தில் விரும்பி ஒட்டிக்கொள்கின்ற காகிதம் போல, மிக மகிழ்வான சந்தர்ப்பங்களில் அதன் அழுத்தத்தைக் குறைப்பதற்காகத் தெரிந்தே தேர்ந்தெடுக்கின்ற துயர முடிவுகொண்ட பல விசயங்களைப் போல, நான் நிரஞ்சனாவைச் சந்தித்திருந்தேன். 

முற்றிலும் இருவேறான முரண்களால் பிரகாசிக்கும் இரண்டு கோளங்கள் ஒன்றையொன்று கடக்கும்போது ஒன்றின் ஜ்வாலையை இன்னொன்று விழுங்க முயல்கின்ற சுவாரஸ்யமான விளையாட்டைத் தொடக்கத்தில் நாங்கள் மகிழ்ந்து நிகழ்த்திக்கொண்டிருந்தோம். அவ்வளவு மகிழ்வான காலங்கள். முரண்களால் பிணைந்து கொள்கின்றவைகளில் இருக்கின்ற ஈர்ப்பும் வலுவான எதிர்விசையும், ஒரு துளி குருதி சொட்ட வேட்டையென நிகழ்கின்ற சீண்டல்களும் காதலை அதன் இறைமைக்கு நகர்த்திக்கொள்கின்ற வழிகளென ஒவ்வொரு நாளும் உணர்ந்த நாட்கள். 

ஒன்றையொன்று விழுங்கிட யத்தனிக்கும் இந்த யுத்தத்தின் வழியெங்கும் எங்களது காதலும் காமமும், மாமிசங்களாலான பூக்களைப் போல, நாங்கள் மட்டுமே உணர்கின்ற, விரும்புகின்ற, துய்க்கின்ற, தன்னிலைகளை அடைந்திருந்தன. இருவரில் யாராவது ஒருவர் சீண்டலினால் அல்லது புறக்கணிப்பினால் படுமோசமாகக் காயம்பட்டு மௌனித்துத் தனித்திருக்கும் போதெல்லாம் வென்றவர் தன் சதையை அரிந்து தின்னத்தருகின்ற முடிவுகளும் உண்டு. மூர்க்கமான எல்லாக் காதல்களிலும் முதலில் அழுபவரே வெல்கிறார். நிரஞ்சனா அழுகின்ற போதெல்லாம் எனது கோளத்தின் பிரகாசத்தை நான் அவளிடம் இழந்தேன். நான் மௌனமடையும் போதெல்லாம் அவளது கோளத்தின் சிறுபரப்பை நான் அபகரித்தேன். சந்திப்பதற்கு முன்பு நாங்கள் தனித்தனியாக அனுபவித்த அவரவரின் மகிழ்ச்சியை இந்த ஆட்டத்தில் சூதாக வைக்கும்வரை எல்லாமே மிளிர்வாகவே சென்றுகொண்டிருந்தன.

இன்னும் கொஞ்சம் குடிக்க வேண்டும் போலிருந்தது. கண்களைத் திறந்தேன். கசகசப்பான வர்ண வழிதல்கள். குடியின் வழியே மனிதன் தனிமையடைந்த பிறகு, சட்டெனத் திரும்பவும் இவ்வளவு மந்தையான மனிதர்களைப் பார்க்கும்போது பெரும் சோர்வு நேர்கிறது. இதோ, இந்த எதிர்மேசையில் பெல்ட்டிற்குக் கீழே தொந்தி வழிகின்ற மனிதனும் குடிக்கிறான். பில்லியர்ட்ஸ் மேசையருகே குடித்துப் போதையுற்றவன் போல நடித்தபடி நண்பர்களிடம் பாவனை செய்கின்ற கச்சிதமான உடைத்தோற்றம் கொண்ட மனிதனும் குடிக்கிறான். ஒவ்வொரு மிடறு மதுவும் சப்தங்களை அழித்து நினைவுகளை எரித்து மனதில் இளங்குருத்தில் நம்மைத் தவழச்செய்கின்ற போது மீண்டும் மீண்டும் குடித்தே ஆகவேண்டி இருக்கிறது. ஒரு சின்ன இடைவெளியில்கூட பிரக்ஞையின் கை நம்மைத் தலைமுடி பற்றி மேலேற்றிவிடும். நான் குடிக்கக் குடிக்கத் தனிமை அடைபவன். நிரஞ்சனாவோடு தனித்திருந்த இரவுகளில் தீப்பற்றி எரிகின்ற கலவிக்குப் பிறகு, நான் அமைதியாகக் குடித்துக்கொண்டிருப்பேன். சற்று முன்னிருந்த அவளது காதலன் நீங்கி, சதா அவளது கோளத்தோடு மோதுகின்ற மல்யுத்தக் கரங்கள் உடைந்து அமைதியாகக் குடிப்பேன். ஒரு நள்ளிரவு யாத்ரீகனுக்கேயுரிய அளவற்ற கருணையோடும் மௌனத்தோடும், ஜன்னல் வழியே அடங்கிவிட்ட சாலையை நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, சிறிய நாய்க்குட்டியைப் போல என் முன் அமர்ந்தபடி என்னைப் பார்த்துக்கொண்டிருப்பாள்.

காதலும் சிறிய கேலியும் பொதிந்த குரலில், “யசோதரையை நீங்குகின்ற இரவில் புத்தனின் கண்களில் திரண்ட ஒரு துளி கண்ணீரில் தெரிவது எவ்வளவு பெரிய தோல்வி?”

நான் சிரித்துக்கொள்வேன். அதற்கு வேறேதும் பதில்கள் இல்லை. பதிலாக ஏதேனும் சொல்லச் சொல்ல மேலும் மேலும் தோற்கும் இடம் அது. நான் வெறுமனே சிரித்துக்கொள்வேன் அப்போது. 

உண்மையில் அந்த போதைக்கு நடுவேகூட, எனது சிந்தனைகள் அவளது இதுபோன்ற கேள்விகளால் படுகுழப்பமடைந்து அதற்கான ஆங்காரமான எதிர்வினைகளைத் தேடிக்கொண்டேயிருக்கும். படுக்கையில் எதிர்கொண்ட பிறகும், ஒரு பெண்ணை ஆணால் மேலதிகமாக எங்கே போட்டியிட அழைப்பதென்கிற குழப்பமும், காமம் தீர்ந்தவுடன் இயல்பாகவே வருகின்ற ஒரு வெறுமையுணர்வு இவளிடம் எப்படி அதீத காதலாக உருமாறி விடுகின்றது என்கிற பதற்றமும் என்னை மேலும் தோல்வியுற்றவனாகவே காட்டுகின்ற கணங்கள் அவை. அந்தக் காதல் வழிகின்ற உடலோடு, தீப்பிழம்பைப் போல என் பின்னால் தழுவியபடி நான் பார்க்கின்ற சாலைக் காட்சிகளைக் கழுத்தில் முத்தமிட்டபடி, அவளும் பார்க்கும்போது சமுத்திரத்தில் மிதக்கின்ற சிறிய பழத்தைப் போல என் இருப்பை உணர்வேன். ஒரு தோல்வி, காதலில் மட்டுமே சிறிய நிம்மதியையும் கொண்டுவருகிறது.

மேஜையின்மீது நிசப்தத்தில் போடப்பட்டிருந்த அலைபேசி திக்கித் திக்கி மின்னியது. 

நிரஞ்சனா.

அவ்வளவு போதைக்கு நடுவிலும் கண்கள் மீண்டும் மீண்டும் தெளிவாக அந்த பெயரைப் படித்து விரிந்தன. நெரிக்கப்பட்ட கழுத்திலிருந்து வெளிவருகின்ற திணறலைப் போல ஒளிர்ந்து தவிக்கும் அவளது பெயர். நான் எடுக்கவில்லை. அநேகமாக நாங்கள் பேசிக்கொள்ளாத நீண்ட இடைவெளி விழுந்த முதல் ஊடல் இது. ஊடல் என்பதெல்லாம் நாகரீகச் சொற்கள். எங்களுக்குள் நிகழ்ந்துகொண்டிருப்பது போர். கொஞ்சம் உணர்ச்சிப்பெருக்கில் நான் கூறிவிட்டதாக உணர்ந்தாலும், இதோ திக்கித் திணறுகிற அவளது குரலின் பரிதவிப்பைப் பார்த்தபடி எனக்குள் மேலெழும் உணர்வுக்குள் போரின் வெற்றியோடு வருகிற குருதி வாசமும் சேர்ந்திருக்கிறது. நிகழ்ந்தது என்னவெனத் துல்லியமாக நினைவில்லையெனினும் இந்த முறை வாக்குவாதத்தின் இறுதியில் நான் முதலில் மௌனமானேன். அவளது சொல்லால் உள்ளுக்குள் தாக்குண்டதன் மௌனம். காதலின் வாக்குவாதத்தில் தோற்பவரே ஜெயிக்கிறவர். நான் தோல்வியடைந்தவனாக, கோபத்தை அடக்கியவனாக அறையிலிருந்து வெளியேறும் நீண்ட நேரம் வரை எனது முதுகிற்குப் பின்னால் நிரஞ்சனா உற்சாகமாகச் சிரித்துக்கொண்டிருந்தாள். அவளைக் குற்ற உணர்வு கொள்ளச் செய்கிறவனாக, நான் தளர்ந்து வெளியேறினேன்.

என்னைத் தாக்கி வீழ்த்திய அந்தப் புன்னகையில் மெல்ல மெல்ல துரு ஏறச் செய்கின்ற இடைவெளிகளை அவளது அழைப்பைப் புறக்கணிப்பதன் வழியாக நான் உருவாக்கிக்கொண்டிருந்தேன். இந்தச் செய்கைகளின் வழியே அவளிற்குள், இந்தக் காதலிற்குள் கனியக்கூடிய ஒரு அருவருப்பான பழத்தின் ருசிகொண்ட முத்தத்தைத் தொடர்ந்து நாங்கள் மீண்டும் ஒன்றிணையும் நாளிலிருந்து, மிக நீண்ட தொலைவுகளிற்குள் பிரியப் போகிறோம் என்கிற உண்மையைத் தீச்சுடரின் வெப்பமாக உள்ளுக்குள் உணர்ந்தேன். சமீபமாக நாங்கள் பேசிக்கொள்ளாத நாட்களிலெல்லாம் நான் ஏதேனும் வெறுமையையோ துயரையோ உணர்ந்தேனா என்றால் சட்டென ஆமாம் எனச் சொல்ல வரவில்லை. எதிலேயோ வலுவாகப் பிணைக்கப்பட்ட என்னை, தளைகளை உடைத்து அவள் வருவதற்குள் வெகுவேகமாக அந்த மலையடிவார வீட்டிலிருந்து நானே விடுவித்துக் கூட்டிச்செல்வது போன்ற சுதந்திரமும், ஒரு பிரியமான கைதியை விரும்பிப் பார்க்க வரும்போது அவன் தப்பிச்சென்றுவிட்டதன் அதிர்ச்சியை உணர்கின்ற நிரஞ்சனாவின் பரிதாப முகமும் என்னை மேலும் குழப்பமும் அந்தரங்க உற்சாகமும் கொள்ளச்செய்தன. 

எனது மனதும் பிடிவாதமும் எதிர்பாராத நொடியில் நெகிழ்ந்துவிடும் போதெல்லாம், அவமானப்பட்ட சிரிப்போடு எனக்குள்ளேயே திரும்பிச்செல்கின்ற ஒருவனை உணர்கிறேன். முடிவாக, நான் நிரஞ்சனாவிடம் சொல்ல முனைந்து சொல்லவியலாமல் தடுமாறும் இடம் இதுதான். நீயோ நானோ தீர்ந்துவிட்ட உறவில் இது காலாவதி ஆகின்ற தருணங்கள். காலாவதியாகாத எவற்றிற்குமே பயன்மதிப்பு இல்லை நிரஞ்சனா. ஞாபகங்களாக எஞ்சும் போதுதான் நமது புகைப்படங்களில் யதார்த்தத்தைவிட உயிர்ப்பு வருகின்றது. குறைந்தபட்சம் நாம் இந்த உறவை, அதன் தசையுருகி நீர் வற்றிக் காயும் வரை பிரிவில் வைப்போம். ஒரு நீண்ட உறவின் முடிவில் அது நிச்சயம் காலாவதியாக வேண்டும்.

இந்த முறையாவது எனது புறக்கணிப்பை அன்பின் பெயரால் மன்னிக்காதே நிரஞ்சனா. நான் மேலும் குற்றங்கள் புரிந்து உன்னை உடைக்கும் முன்பு எனக்கு விடுதலை கொடு. நீ ஒவ்வொருமுறை என்னை மன்னித்து முத்தமிடும்போதும் நான் மேலும் மேலும் உன்முன் பாவனை கொள்கிறேன். எனது ஒப்பனைகளின் கனத்தின் கீழே மூச்சுத் திணறுகிறது. நீ இன்னமும் இந்த உறவில் சுவாரஸ்யமும் இயல்புமாக இருக்கிறாய் என்பதே என்னைக் குற்ற உணர்ச்சி கொள்ளச் செய்கிறது நிரஞ்சனா. ஒருவேளை நீயும் என்னைப் போல உள்ளுக்குள் சோர்ந்துவிட்டதை மறைக்கவே ஒவ்வொரு முறையும் ஒரு பேரலையின் எழுச்சியை நிகழ்த்தி இந்த மணலின் உலர்தலை நீக்கிக்கொள்கிறாயா நிரஞ்சனா? நம் இருவரில் யார் தூக்கிச் சுமப்பது இந்த ஞாபகங்களை என்கின்ற அச்சத்தின் பொருட்டே நாம் மாறி மாறி முத்தம் என்கிற பெயரில் நாவால் பாம்புக்குட்டிகளைப் போலப் பிணைந்துகொள்கிறோமா?

விரலில் ஒட்டிய ஒரு நீர்க்குமிழியை இன்னொரு விரலிற்கு கைமாற்றுவது தவிர, சட்டென வெட்டி அந்தரத்தில் எறிய முடியாததன் அவஸ்தைதான் இந்த ஊடல் விளையாட்டுகளா நிரஞ்சனா? நான் சோர்ந்துவிட்டேன். உனது அழைப்புகளைப் புறக்கணிப்பதன் வழியே, நீ அடைந்திருப்பதாக நான் நம்பக்கூடிய குற்ற உணர்ச்சி எனக்களிக்கின்ற மகிழ்ச்சியைக்கூட நான் கப்பம் வைக்கிறேன் நிரஞ்சனா. நீ அடுத்தமுறை அழைக்கும்போது நான் நிச்சயம் எடுப்பேன். மிகுந்த கர்வமும் உறுதியுமான குரலில், முடித்துக்கொள்ளலாம் என நீ கூறுவதை நான் எந்த மிகைபாவனையுமின்றி இயல்பாக அங்கீகரிக்கிறேன் நிரஞ்சனா. உனது பிரிவின் அழைப்பிற்காக நான் காத்திருக்கிறேன்.

இதோடு ஆறாவது முறையாக எனது அழைப்பு தவறுகிறது. அலைபேசியை டீபாயில் போட்டுவிட்டு எழுந்து சோம்பல் முறித்தேன். ஏதேனும் ஒரு அழைப்பில் அவன் உடைந்த குரலோடு, “சொல்றீ… இப்ப என்ன?” எனச் சொல்லுகிற சிறிய மூக்கு நாய்க்குட்டிக் கோபத்தைக் கேட்பதற்காகவே அழைத்துக்கொண்டிருந்தேன். ஊடலின் ஒரு குழந்தை அந்த நாய்க்குட்டி குரல். உண்மையில் ஓர் ஆண், கையில் ஏந்திக்கொள்கின்ற அளவு போன்சாய் மரமாக மாறுகின்ற சித்திரங்கள் அபூர்வமானவை. அவன் அப்போதுதான் அழகாகவும் இருக்கின்றான். அப்படியொன்றும் அவனை அடித்து வீழ்த்துகின்ற எந்தத் தாக்குதலையும் என் உரையாடல் நிகழ்த்தியிருக்காது. எனினும் இதுவொரு விதி. காயம்பட்டது போல நடிப்பதும், காயத்திற்கு மருந்தாக இதோ நான் காத்திருக்க வைக்கப்படுவதன் வழியாக உருவாகிவருகின்ற மருந்தும். மிகமிகப் பழைய விளையாட்டுதான். யாரேனும் இதை விளையாடிக்கொண்டிருக்கும் போது பார்க்கின்ற நான் அபத்தமாக உணர்வதும்கூட. ஆனால் அதனை நாம் நிகழ்த்தும்போது, விளையாட்டு உணர்வுப்பூர்வமாகிறது. அபத்தம் என்பது வெகுளித்தனமும் பரிசுத்தமும் இணைந்த குழந்தையாகிறது. எனக்குப் பிடித்த இசையை ஒலிக்கவிட்டபடி ஒரு கப் தேநீர் எடுத்துக்கொண்டேன். பிறகு, நட்சத்திரங்கள் அழைக்கின்ற வானை நோக்கி பால்கனியில் அமர்ந்துகொண்டேன்.

*

இனி மீண்டும் அழைக்கப் போவதில்லை. எனது கடலிற்கு வெளியே, விருப்பத்துடன் தனியாக நிற்கின்ற கப்பலை நான் எப்படி இழுத்து வருவது? அதை நினைக்கும்போது அவன் மீதிருந்த காதலின் நெகிழ்வையும் மீறி சட்டென ஒரு சீறல் தோன்றி மறைந்தது. எனது அலைகளால் தீண்ட முடியாத தனிமையை அது எவ்வாறு தேர்ந்துகொள்ளலாம் என்கின்ற ஆங்காரத்தின் சீறல். அந்தரங்கம் என்பது ஒரு உறவில் அதன் சகல வாசனைகளோடும் துர்நாற்றங்களோடும் ஒருவர் மீது ஒருவர் கொட்டிக் கவிழ்த்துக்கொள்வது. கத்தரித்துக் கத்தரித்து அளிக்கின்ற பூகளில் வந்துவிடுகின்ற பிளாஸ்டிக் தோற்றத்தை ஒரு நிமிடம் மனம் உணர்ந்தது. அவ்வப்போது அவன் தனியாக இருக்க விரும்புவதாகக் கூறுகின்ற தருணங்களிலெல்லாம், ஒரு மிருதுவான புன்னகையோடு, “அது உன் சுதந்திரம், நீ அதைக் கேட்பதோ நான் அனுமதியளிப்பதோ முட்டாள்தனம்” என்பேன். அப்போதெல்லாம் என்னிடம் அவன் ஒப்படைத்துச் செல்கின்ற ஏதோவொன்றை மிகுந்த காதலுடனும் கதகதப்புடனும் எனது கருவிற்குள் வைத்திருப்பேன்.

புணர்விற்கு முன்பு இரு பெரும்பாறைக்கிடையே கால் மடக்கி அமர்கின்ற பெண் யானை தனது துதிக்கையின் வழி ஆண் யானையிடம் வாக்கு கேட்கும் எனப் படித்திருக்கிறேன். புணர்ச்சி ஆவேசத்தின் இறுதியில் மண்ணிற்குள்ளும் பாறைக்குமிடையே சிக்கிக்கொண்ட பெண் யானையை ஆண் யானை விடுவித்து எழுப்ப வேண்டும் என்கிற சத்தியம் அது. அவன் தனிமைக்கெனக் கூறிச்செல்கின்ற ஒவ்வொரு முறையும், நான் மகிழ்ச்சியோடு, மண்ணிற்குள் புதைந்த பாதி உடலோடு, முன்பு நிகழ்ந்த காதலின் தருணங்களை எண்ணியவாறே பாறைக்குள் சிராய்த்து நிற்கின்ற உடலோடு நின்றிருக்கின்றேன்.

மீண்டும் அவன் திரும்பி வரும்போது, எனது காத்திருப்பை, அதன் வழியே எனக்குள்ளே உருவாகியிருக்கும் கழிவிரக்கத்தை அணுஅணுவாகக் கிழித்தெறிவது போலப் படுஆவேசமாக முத்தமிட்டு ஆரம்பிப்பான். எனது தனிமையைச் சிறிதுகூட பொருட்படுத்தாத இரக்கமற்ற முத்தங்கள். ஆனால் அவை எவ்வளவு உயிர்ப்பானவை. எனது கழிவிரக்கத்தை மறைக்கும் விதமாக நானே உருவாக்கி வைத்திருந்த ஆங்காரங்களை வெளிப்படுத்தலாமா வேண்டாமாவென நான் தயங்கி நிற்பதை சிறிதும் உணராதவனாக, சாலையில் என்மீது மோதவருகின்ற வாகனத்தின் முன்னிருந்து இயல்பான அக்கறையோடு, “ப்ளாட்பார்ம்ல ஏறிட்டுத் திட்டுடி” எனச் சொல்லியபடி சிகரெட் பாக்கெட்டைத் துழாவிக்கொண்டிருப்பான். எனக்கு முன்னால் நடந்துசெல்கின்ற அவனது பின்னங்கழுத்தை அப்படியே பற்களால் கடித்து வைக்க வேண்டுமென்கின்ற ஆவேசம் எழும். பிறகு எப்போதும் அது படுக்கையிலேயே போய் முடியும். இரக்கமற்றவனாக, இலட்சியம் செய்யாதவனாக முத்தமிட்ட எல்லாத் தருணங்களிலும் அவனது கண்களுக்குள் என்னைத் தாராளமாக இறங்கி உள்ளே புக அனுமதிக்கின்ற ஏதோவொரு வழியை நான் மிகுந்த சந்தோஷத்துடன் பார்த்தபடியிருப்பேன்.

என்னிடம் பாவனை கொள்ளாத அந்த மூர்க்கத்தின் வெளிச்சத்தில் எனது காதலை மேலும் சுடர்பற்றிக் கொள்ளச் செய்வான். கருணையற்ற கரங்களால் எனது அகங்காரத்தின் முலைகளைப் பற்றும்போதெல்லாம் அவை தேவாலயத்தின் மெழுகைப் போல அவனது உள்ளங்கைக்குள் உருகிக் குலையும். மனதார மகிழ்ந்த நிறைவுடன் அவன் சிகரெட் பற்றவைத்தபடி வேறெதையோ தீவிரமாகப் பேசத் தொடங்கும்போதெல்லாம், சற்றுமுன் எனக்குள் தன்னைக் கரைத்துப் புதிதாகப் பிறந்த குழந்தையின் முகத்தைப் போல அவனைப் பார்த்தபடி எனது உடைகளை இலேசாக மேலே சுற்றிக்கொள்வேன். பண்படுவதை விரும்பாத அந்தக் காதலின் தருணத்தில் உண்மை இருந்தது. அந்த உண்மையின் வெளிச்சத்தில் கருணையின்மையும் அலட்சியமும் அசலான மெய்யொளியோடு அவனை வசீகர விலங்காக என்முன் நிறுத்தியிருந்தன.

ஆனால் மிகச்சமீபமாக அந்த அலட்சியத்தின் மிருதுவான நெருஞ்சிமுள் முனைகளில் ஒரு வாளின் கூர்நுனியின் ஸ்பரிசத்தை நான் உணர்கிறேன். மிகுந்த கவனத்தோடு அவன் திட்டும்போதெல்லாம் நான் ஒவ்வொரு படியாகக் குளத்திற்குள் இறக்கிவிடப்படுகிறேன். சிறிதுகூட கனவை விரும்பாதவனாக, கனவு உயிர்கொள்கின்ற இரவை அஞ்சுகிறவனாக, பதற்றத்தோடு அவன் ஜன்னல்களைத் திறக்கும்போதெல்லாம், முழுவதும் திறந்தவளாக, இன்னமும் போதம் தெளியாதவளாக நிர்வாணமாக இருளுக்குள் நின்றிருக்கும் எனது குழந்தைத்தனத்தின் மீதும் காமத்தின் மீதும் அசிங்கமாக உணரச்செய்கின்ற வெளிச்சம் பாய்கிறது. அந்த வெளிச்சத்தின் சூட்டில் எனது காதலின் வெகுளித்தன உறுப்புகள் அழிந்து மொண்ணையாகின்றன.

பனிக்குடத்தின் வெதுவெதுப்பிற்குள் உறங்கியபடி வளர்கின்ற சிறிய சதைபிடித்த உயிரியைச் சட்டெனக் கிழித்து வெளியே எடுப்பதைப் போல அவன் படுயதார்த்தத்திற்குச் சொல்லாமல் கிளம்பிச்செல்கின்ற நாட்கள் சமீபமாகப் பெருகியிருக்கின்றன. 

இப்போது நான் கவனமாக இருக்கிறேன். காமத்தின் இளகிய எந்தப் புள்ளியிலும் அவன் என்னை நிறுத்தி வெளியேறும் முன் தலைமுடிகளைச் சுழற்றிப் பின்னலிட்டபடி அவனுக்கு முன்பாக எழுந்து நிற்பவளாக; விளையாட்டுத்தனத்தின் எதிர்பாராமைகள் நீங்கிவிடுபவற்றில் வந்துவிடுகின்ற இயந்திரத்தனத்தை நாங்கள் அடிக்கடி உணர்கிறோம். ஒவ்வொரு முறை அவனில் வெளிப்படுகின்ற இயந்திரத்தின் கீழே நசுங்கிக் கிடக்கிற எனக்குப் பிரியமான அந்த விலங்கை.

பிறகு நீண்ட நேரம் அவள் யோசிக்கவில்லை. நிதானமாக, இதற்குமுன் மகிழ்ந்த காலத்தில் அவன் குரலில் வெளிப்படுகின்ற அதே காதலோடு அவனுக்கு ஒரு குறுஞ்செய்தியை அவள் எழுந்து நடந்தபடி தட்டச்சு செய்யத் தொடங்கினாள். குடித்து வைக்கப்பட்ட காபிக் கோப்பையின் மீது மிக அமைதியாக மழையின் துளிகள் வீழத் தொடங்கியிருந்தன.

*

காரின் முகப்புக் கண்ணாடியில் மழை விழுந்துகொண்டிருக்க, குறுஞ்செய்திக்கான அழைப்பு வெளிச்சமாக மின்னி அடங்கியது. ஒரு மரத்திற்குக் கீழே மென்மையாகக் காரை நிறுத்திவிட்டு செய்தியைத் திறந்தேன். இவ்வளவு நேரம் எனக்குள் திரட்டி வைத்திருந்த புழுக்கத்தை விடுவிக்கின்ற சொற்கள். எப்படி வெளிப்படுத்துவதெனத் தெரியாமல் நான் பதுங்கிச் சேகரித்த ஆயுதங்களை அர்த்தமிழக்கச் செய்கின்ற அவளது வரிகள். எனது போதை வடிந்துகொண்டிருந்தது. சட்டென மிகவும் தனியனாகி விட்டது போன்ற உணர்வு குவிய, சுதந்திரத்தின் முழு எடை என்னை நசுக்கி உள்ளிழுத்தது. எனது கரங்கள் இலேசாக நடுங்கிக்கொண்டிருந்தன. நான் விரும்பியவொன்றை அவள் மென்மையாகக் கையளித்திருந்தாள். வழக்கமாக எனக்குள் எழுகின்ற மூர்க்கத்தை நான் இழந்திருப்பதையும், அச்சத்தோடோ சிறிய உடைபடுதல்களோடோ நான் திணறுவதை உணர்ந்தேன். சற்றுமுன்னிருந்த எனது மூளையை மிதித்து கூழாக்க வேண்டுமென ஆவேசம் எழுந்தடங்கியது. காரின் முகப்பு வெளிச்சம் பாய்கின்ற தார்ச்சாலையின் மீது நீரின் எண்ணற்ற கால்கள் இறங்கிக்கொண்டிருந்தன. மிகவும் வேடிக்கையான எனது மனநிலையை நினைத்து என்மீதே எரிச்சல் வந்தது.

*

மழை நின்றபிறகு கிளம்பலாம் எனச் சொல்லிவிட்டு பேசிக்கொண்டிருந்த நண்பர்கள் ஒவ்வொருவராகக் கிளம்பிக்கொண்டிருந்தனர். இன்னமும் மழை நிற்கவில்லை. நீண்ட மாதங்களுக்குப் பிறகு நாங்கள் இன்று சந்தித்திருந்தோம். தொடர் காய்ச்சலால் நலிவுற்று, இயல்பு திரும்பிக்கொண்டிருந்த என்னைப் பார்க்க வந்திருந்த நண்பர்களோடு நிரஞ்சனாவும் வந்திருந்தாள். இந்த நாட்களுக்கு முன்னர் ஒரு நீண்ட அத்தியாயத்தையே நாங்களிருவரும் இணைந்து முடித்து வைத்திருக்கிறோம் என்பதைத் துளி அளவுகூட வெளிக்காட்டிக்கொள்ளாத பாவனைகளோடு என்னை நலம் விசாரித்தாள். பிறகு நண்பர்களோடு சேர்ந்தமர்ந்து வேடிக்கையாகப் பேசியபடியிருந்தாள். நான் எவ்வளவோ இரகசியமாகப் பார்த்தும்கூட அவளது தெளிந்த முகத்தில் மெல்லிய இரகசியச் சுழிவுகூட எழவில்லை. மொறுமொறுப்பான திருத்தமான உடைகள் அவளது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தின. அவளையே வேவுபார்த்த எனது கண்களைப் பேச்சினூடாகச் சிரித்தபடி அவள் மோதும்போதுகூட, ‘வா வந்து விளையாடு’ என்பதைப் போல என்னைக் கடந்து சென்றன.

மழை மேலும் வலுத்தபோது கடைசி நண்பனும் கிளம்பிச் சென்றிருந்தான். நிரஞ்சனாவும் நானும் மாடி பால்கனியிலிருந்து அவனைக் கையசைத்து வழியனுப்பியபோது, மரத்திற்குக் கீழே மழையில் சிலிர்த்தபடி நின்ற நிரஞ்சனாவின் ஸ்கூட்டி முழுவதும் மரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள் அப்பிக்கிடந்தன. இன்னொரு டீயை அவளுக்குக் கொடுத்துவிட்டு எதிரில் அமர்ந்தேன். நாங்கள் பார்க்கின்ற தூரத்தில் கட்டில் இருந்ததே எங்களைத் தர்மசங்கடத்திற்குள்ளாக்கியது. நாங்கள் வேறு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம். அந்தரங்கத்திலிருந்து பொதுவான தளத்திற்குத் திரும்புவதைப் போல அபத்தமான உடல்மொழியும் குரலும் வேறெப்போதும் நேர்வதில்லை. ஒரு பழைய வரைபடத்தின் மீது நிகழ்காலம் புதிய தடங்களோடு எங்களை அழைத்துக்கொண்டிருந்தது.

வழக்கத்தைவிட கூடுதலான உற்சாகம் மிக்க குரலில் அவள் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். ஆழம்வரை கலங்கி, பிறகு நிதானமாகத் தெளிந்து, ஸ்படிகமாக மின்னுகின்ற குளத்து நீரின் தூய்மை கொண்ட முகம் அவளுக்கு வந்திருந்தது. முழுவதுமாக தனக்குள் மகிழ்ந்திருக்கின்ற அந்த முகம். ஒரு கை நீரள்ளிப் பருகுவது போல இரு உள்ளங்கைக்குள்ளும் அந்த முகத்தை ஏந்திப் பார்த்துக்கொண்டே இருக்கவோ, அல்லது உலர்ந்துவிட்ட உதடுகளால் அவளது நீரூற்று போன்ற உதட்டினைக் கவ்வி உறிஞ்சிக்கொள்ளவோ அழைக்கின்ற முகம். மெலிதாக எனக்குள் பெருமூச்சு எழுந்தது. 

*

நீண்ட நாட்களுக்குப் பிறகு, தன்னை மறைத்துக்கொள்ளாமல் வெளிப்படுத்திக் கொள்கின்ற அவனது பெருமூச்சைப் பேச்சினூடே நான் கவனித்துதான் கடந்தேன். உடல் நலிவிலிருந்து தேறிவருகின்ற ஆணின் வர்ணங்களற்ற புகைப்படம் போன்ற வசீகரமும் மெல்லிய கரகரக் குரலும் கொண்ட மனிதனாக அவன் பார்த்துக்கொண்டிருந்தான். குறிப்பாக ஒரு புதியவனைப் போல ஆர்வங்கொண்ட அந்தக் கண்கள்.

அந்தப் பழைய அத்தியாயங்களின் காலத்தில் எங்களிடையே இருந்த உறவில் யாரேனும் தருபவராக, ஒருவர் இறைஞ்சுபவராக, ஒருவர் காத்திருப்பவராக இன்னொருவர் அதைத் தவிர்ப்பதற்கென எங்கெங்கோ சுற்றியலைந்து களைத்துப் போனவராக- இருந்த கணங்களெல்லாம் மின்னி எழுந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் தாங்கவியலாதவனாக அவன் என்னிடம் கேட்கவிருந்த சுதந்திரத்தை அவன் கேட்கும் முன்பே நான் நெகிழ்த்தியிருந்தேன். அவனுக்குள்ளிருந்து தன்னை மறைத்துக்கொள்ளாமல் வந்த வேண்டுதல் அது. சரி, தவறு என்கின்ற அறிவின் கறைபடியாத சின்ன கேவல். அவனது பண்படாத காதலின் அழகைப் போல, படு இறைச்சியான காமத்தைப் போல, எஞ்சுகின்ற வெறுமையின் அசலான குழந்தை அந்தக் கேவல். 

அதைப் புரிந்துகொண்டவளாக வழியனுப்பிய போது உள்ளுக்குள் மெலிதான கர்வத்தைக்கூட உணர்ந்தேன். இழப்பாக உணர்ந்த வெற்றிடத்தில் தளும்பத்தளும்ப மேலேறி நிறைத்துக்கொண்டிருந்த ஒன்று இருந்தது. அதற்கு என்னால் பெயரிட முடியவில்லை.

*

வெளியே இருளுக்குள் சன்னமான இசையைப் போல மழை பெய்துகொண்டிருந்தது. நாங்களிருவரும் தனித்திருப்பதை சகஜமாக்கும்படியான உரையாடல்களுக்கான அத்தனை சொற்களும் தீர்ந்துவிட்டன. ஒரே ஒரு சொல்லால் திறந்துவிடும்படி தனிமையின் சுவர்கள் தேய்ந்திருக்க, இருவர் கண்களும் தீண்டிக்கொள்ளும்போது எங்களை மீறி உள்ளுக்குள்ளிருக்கும் ஒன்று முத்தமிட்டுக்கொள்கிறது. 

வரைபடத்தின் இறுதிப்புள்ளியென நிற்கிறது படுக்கையறையின் கட்டில். மழைக்கும் தனிமைக்கும் நடுவே அதைப் பார்க்கின்ற போதே உடல் முழுவதும் பரவுகின்ற கதகதப்பில் மென் உணர்வுகள் உடைந்துவிடுகின்றன. இதற்கு முன்பாக அங்கே சென்று சேர்ந்த பசும்புல் தடங்கள் முழுக்கப் பிரிவின் மண் மூடிவிட்டிருந்தது.

உருவிய வாளைப் போல விழுந்த மின்னலின் கீற்று ஒன்று வீடு முழுக்கக் கண்கூசும் வெளிச்சத்தை நிறைத்துச் சென்றது. பற்றியெரிகின்ற கட்டிலுக்குத் தள்ளி நாங்கள் காய்ந்த சுள்ளிகளைப் போல அமர்ந்திருந்தோம். ஆனால் இதற்கு முன்பு இல்லாத வகையில் இருவருக்குள்ளும் பதுங்குகின்ற விலங்கின் முதுகைப் போன்றதொரு கவனம் உள்ளுக்குள்ளிருந்து எழுந்து வந்தது. 

6 comments

panneerselvam September 29, 2021 - 4:46 pm

என்ன ஒரு அற்புதமான எழுத்து. வாழ்த்துக்கள் திரு.

LAKSHMINARAYANAN October 6, 2021 - 5:53 pm

எனது படைப்பை தமிழினிக்கு அனுப்ப விழைகிறேன். தொடர்பு மின்னஞ்சல் ஏதேனும் உண்டா?

gokulprasad23 October 6, 2021 - 8:21 pm
கறுப்பி May 21, 2022 - 6:58 am

மிகப் பெரிய அனுபவ வாசிப்பு, ஒவ்வொரு சொல்லாக அர்த்தக் களிப்பொடு வாசித்து முடித்தேன். அவன். அவள் போல திருச்செந்தாழை எழுத்தினூடு கர்வமும், ஈகோவும் ஊடாடிக்கொண்டேயிருக்கின்றன. உங்கள் ஒவ்வொரு கதையும் பெரியதொரு அனுபவமாய் என்னை உழலச் செய்கின்றது. நன்றி

Comments are closed.