மகத்தான படைப்பாளிகள் அனைவரும் பெண் பாத்திரங்களைச் சித்திரிப்பதில் வல்லவர்கள். ஆண்கள் குறிப்பிட்ட சட்டகங்களுக்குள் அடங்கிவிடுவார்கள். பெண்கள் அப்படியல்ல. மலை உச்சியில் உருவெடுக்கும் சிறு நீர்க்கசிவு முதல் விரிந்து பெருகும் கடல் வரை விதவிதமான வடிவங்கள் காட்டும் நீரோட்டத்தைப் போன்றவள் பெண். கசிந்து, பெருகி, குதித்து, இறங்கி, சீறி, நடந்து, நெளிந்து, பிரிந்து, புணர்ந்து சங்கமமாகிற வரை நீர்கொள்ளும் அத்தனை பாவனைகளையும் பெண்ணிடமும் காண முடியும். ஆணின் இயல்புகள் புறச்சூழல்களால் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. பெண் அந்த நிமிடத்து உணர்வில் வாழ்கிறவள். ஆணின் வாழ்க்கை தடம் மாறுவதற்கும் தடுமாறுவதற்கும் அவன் இயல்பு கடலுக்குள் பந்தென வீசியெறியப்பட்டு அலைகழிக்கப்படுவதற்கும்கூட பெண்ணே காரணமாக இருக்கிறாள். தெரிந்தோ தெரியாமலோ ஆணைப் பிணைத்திருக்கும் கயிறு பெண்களின் கைகளிலேயே இருக்கிறது. ஆனால் அது கண்ணுக்குத் தெரியாத கயிறு. பிறருக்கு மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட ஆணே அதை அறிவதில்லை. காலில் கயிறு கட்டப்பட்ட ஒருவன் ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற விசித்திரமே ஆண்களின் வாழ்க்கை. பெண்ணே ஆணை இயக்குகிறாள். உண்மையில் இது பெண்களால் தீர்மானிக்கப்படும் ஆண்களின் உலகம். அந்த உலகத்தை இயக்கிக்கொண்டே எதுவுமே தெரியாமல் பாவனை செய்பவர்கள் பெண்கள். ‘ஆணாதிக்க உலகம்’ என்று மேலோட்டமாகச் சொல்லப்பட்ட வார்த்தைகளை விலக்கிவிட்டு ஆழமாக மனங்களுக்குள் பயணித்து நொடிக்கொருமுறை உருமாறும் பெண்களின் குணச்சித்திரத்தைக் கூர்ந்து கவனிப்பவர்களே மகத்தான படைப்பாளிகளாக உருமாறுகிறார்கள். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அப்படிப்பட்ட ஓர் அபூர்வ படைப்பாளி கு.அழகிரிசாமி
அழகிரிசாமியின் மூன்று பெண்கள்:
அவருடைய கதை மாந்தர்களில் மூன்று பெண்கள் மிகவும் பிரபலமானவர்கள். அந்த மூன்று கதைகளை எல்லோரும் படித்திருப்பார்கள்.
1. தாயம்மாள்
2. பாலம்மாள்
3. அழகம்மாள்
ஆகியோரே அந்த மூவர். இதில் முதலிரு பெண்களின் பெயரை அவர் கதைத்தலைப்பாகவே வைத்துவிட்டார். தாயம்மாள் என்பது ‘ராஜா வந்திருக்கிறார்’ கதையில் வருகிற அம்மா கதாபாத்திரத்தின் பெயர். தமிழ்ச் சிறுகதை உலகின் மகத்தான பெண்களைப் பட்டியலிட்டால் கண்டிப்பாகத் ‘தாயம்மாளுக்கு’ மிக முக்கியமான இடம் உண்டு. அபூர்வமான கருணை வாய்க்கப் பெற்ற அந்தக் கதாபாத்திரம் அவருடைய நிகரற்ற படைப்புச் சாதனை.
ஆனால் இந்த மூன்று பெண்களையும் ஒப்பிட்டால் நமக்குக் கிடைக்கும் சித்திரமே வேறு. மூவரில் ‘தாயம்மாள்’தான் இளையவள். பாலம்மாளையும் அழகம்மாளையும் சம வயதுக்காரிகளாகக் கருத இடமிருக்கிறது. அவர்கள் இருவரும் இளமையைக் கடந்து நாற்பதுகளில் கால்பதித்து விட்டவர்கள். மூவருக்குமிடையே மிக முக்கியமான நான்கு ஒற்றுமைகளை இனம் காண முடியும்.
1. அதீதமான தாய்மை உணர்வு
2. பிறர் மீதான இரக்க உணர்வு
3. தீராத வறுமை
4. சகலத்தையும் விட்டுத்தரும் தியாகம்
இந்த மூவரையும் ஒரே பெண்ணாகக்கூட கருதி மதிப்பிட முடியும். குழந்தைகள் மீதான பேரன்பால் சகலத்தையும் தியாகம் செய்து அதையே சுகமெனக் கருதி யாரோ ஒரு வழிப்போக்கன் மீதும் கருணை கொண்டு அன்பின் அமிர்தத்தை அவனுக்கும் தந்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறவள் தாயம்மாள்.
ஆனால் ‘தியாகம்’ என்பது குடும்பம், சமூகம் போன்ற அமைப்புகளுக்கு நல்லதே தவிர சம்பந்தப்பட்ட மனிதருக்கு அல்ல. ஒரு கட்டத்தில் அந்தத் தியாகமே சிலுவையாக மாறி அழுத்தும். அப்போது நாம் காண்பது அவர்களின் வேறொரு சொரூபத்தை. ‘தியாகத்தின்’ கூடுதல் சுமையைத் தாங்க முடியாமல் தடம் மாறிவிட்ட பெண்தான் ‘அழகம்மாள்’.
‘அவள் தியாகத்தின் பெருமையையும் மறந்தாள், துயரத்தையும் மறந்தாள்’ என்று அந்த மனநிலையை அழகிரிசாமி சொல்லில் வடிக்க முனைகிறார்.
‘பாலம்மாள்’ தடம் மாறத் தெரியாத அளவுக்கு வெகுளி. அவள் தியாகத்தால் மரத்துப் போனவள். அவளால் கண்ணீர் சிந்தி சுய இரக்கத்துக்குள் மட்டுமே புதைந்து போக முடியும். நம்முடைய இந்தியக் குடும்பங்களில் பெண் தியாகம் செய்வதால் மட்டுமே தெய்வநிலைக்கு உயர்த்தப்படுகிறாள். அவள் தாயம்மாளாகவே இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். கடைசியில் பாலம்மாளாக மனம் உடைந்து போவாள் என்பதும்கூட சமூகத்திற்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவளுக்குள் வெடித்துக் கிளம்பும் அழகம்மாக்களை எவருமே அறிவதில்லை. தியாகத்தை இந்தக் கோணத்தில் விளக்குவதற்காக மூன்று கதைகளையும் அழகிரிசாமி திட்டமிட்டு எழுதினார் என்று நான் சொல்ல வரவில்லை. இந்தக் கருத்துத் தொடர்ச்சி தற்செயலாக அவர் கதைகளில் கூடிவந்திருக்கிறது. கால வரிசைப்படி பார்த்தாலும் தாயம்மாளைப் படைத்த பிறகே பாலம்மாளையும் அழகம்மாளையும் எழுதியிருக்கிறார். ‘தாயம்மாள்’ அவருடைய இலட்சிய உருவகம் என்றால் அவள் பாலம்மாளாகவோ அழகம்மாளாகவோ மாறிவிடக் கூடாது என்கிற பதைபதைப்பு அவரிடம் இருந்திருக்கிறது. அது அவர் கண்டறிந்த கருணையிலிருந்தும் கனிந்த மனதிலிருந்தும் பிறந்த உணர்வு. அவருடைய படைப்பு மனம் தன்னையுமறியாமல் நம்மிடம் திறந்து கட்டிய பெண் மன இரகசியங்களின் கதவுகளே இந்த மூன்று கதைகளும்.
‘தியாகம்’ என்கிற உணர்வின் மீதான அவருடைய மன விலகலுக்கு சாட்சியாக வேறு கதைகளும் உள்ளன. ‘குழந்தையின் தியாகம்’ என்கிற கதையில் கணவனை இழந்து கைக்குழந்தையோடு வாழும் பெண்ணை பெண்டாள்வதற்குச் சமயம் பார்த்திருக்கும் காமாந்தக முதலாளி, குழந்தையின் மரணத்தினால் குற்ற உணர்வும் அதிர்ச்சியும் அடைகிறான். இந்த மாற்றத்தைக் ‘குழந்தையின் தியாகம்’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டு அதையே தலைப்பாகவும் வைத்திருக்கிறார். சமூகத்தால் வர்ணங்கள் பூசப்பட்டுக் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விஷயத்திற்குப் பின் எவருமறியாமல் ஒளிந்திருக்கும் உணர்வுச் சுரண்டலை கையும் களவுமாகப் பிடித்து காட்சிப்படுத்தி விடுவதால்தான் அவர் மிக முக்கியமான படைப்பாளியாக இன்றும் கொண்டாடப்படுகிறார்.
அவர் ‘தியாகத்தைக்’ கூர்ந்த நுட்பத்தோடு விமர்சித்த மற்றொரு சிறுகதை ‘ சிரிக்கவில்லை’. அந்தக் கதை நாயகி பாப்பம்மாள் செய்வதும் தியாகம்தான். தனக்கு முத்தம் கொடுத்துவிட்டு வேறொருத்தியை மனைவியாக்கிக் கொண்ட பிறகும் அவளால் ராஜாராமனை மறக்க முடியவில்லை. அந்த அன்பை அவன் மனைவிக்கும் பகிர்ந்தளித்து அவர்களுடைய வீட்டின் சம்பளம் வாங்காத வேலைக்காரியாக நடந்துகொள்கிறாள். ‘குழந்தை’ அவன் ஜாடையில் பிறந்த பிறகுதான் அவளுக்குத் தன் தியாகத்தின் அபத்தம் புரிய வருகிறது. ஆனால் இந்தக் கதை முந்தைய கதைகளிலிருந்து ஓர் இடத்தில் வேறுபடுகிறது. அந்தக் கதைகளில் வரும் பெண்களைப் போல் தான் செய்துகொண்டிருப்பது ‘தியாகம்’ என்பது அவளுக்குத் தெரியாது. அதைத் தெரிந்துகொண்ட அடுத்த நொடியிலேயே அவனைப் பார்த்ததும் வழக்கமாக மலருகிற சிரிப்பு மறைந்து போகிறது. ‘எங்க வீட்டுக்குந்தான் ராஜா வந்திருக்கிறார்’ என்று ரேகை சாஸ்திரியைப் போல் கையை நீட்டிப் பேசும் மங்கம்மாளிடம் மலர்ந்துகொண்டிருந்த அதே சிரிப்புதான் பாப்பம்மாளிடமும் நிபந்தனையற்ற காதலாகி வழிந்தது. அவள் மனதளவில் பெரிய மனுஷியாக மாறுகிற போதுதான் இந்தத் தியாகம் தன்னையே பலியாக உட்கொண்டிருப்பதை உணர்கிறாள். உடலை விழுங்கிவிட்டு தலையை மட்டும் வெளியே விட்டுவைத்திருக்கும் மலைப்பாம்பிடமிருந்து உதறி மீள்வதைப் போல் அந்தத் ‘தியாகத்தின்’ பிடியிலிருந்து வெளியேறுகிறாள்.
‘அவளுடைய மானசீகப் பற்று வரவுக்கணக்கில் பெரிய தப்பு விழுந்துவிட்டது. பற்று வரவுக் கலங்களில் வரவு வைக்க வேண்டியதைப் பற்று என்றோ, பற்று என்று எழுத வேண்டியதை வரவு என்றோ எழுதிவிட்டாள்’ என்றுதான் கதை முடிகிறது.
‘முத்தத்திற்காக மட்டுமே முத்தத்தைப் பெற்றுக்கொண்ட’ எளிய பெண் தன் உணர்வுகள் தனக்குத் தெரியாமல் தன்னாலேயே வியாபாரமாக்கப்பட்டு இப்போது நஷ்டத்தில் மூழ்கிக்கிடப்பதை உணர்கிற இடம் முக்கியமானது.
அழகிரிசாமியும் தாய்மையும்
இந்தியக் குடும்பங்களில் ‘பெண்’ என்றாலே அவள் தாய்தான். மற்ற பருவங்கள் யாவும் அதற்கான முன்னோட்டங்கள் மட்டுமே என்றே பலரும் கருதுகின்றனர். ‘தாய்மையை’ கடவுளுக்கு நிகரான ஒன்றாகச் சித்திரித்து நிஜமான யதார்த்தத்தை விட்டு அந்தப் பெண்களை விலக்கி வைத்தனர். பெண்களும் அதை விரும்பி ஏற்று அதன் சுகங்களுக்குள் மூழ்கி, சுமைகளுக்குள் விழுந்து தத்தளித்தனர். தன் அற்பத்தனங்களை நிறைவேற்றிக்கொள்ளவும் அதையே முகமூடியாகப் பயன்படுத்தினர். தன் கால்களில் பிணைக்கப்பட்ட சங்கிலியைக் கொண்டே ஆண்களின் கையைக் கட்டிப்போட்டனர்.
தமிழ்ச் சிறுகதையின் தொடக்க காலத்திலேயே இதனைப் பெரிய அளவில் கட்டுடைத்தவர் கு.அழகிரிசாமி. அழகம்மாள் கடைசியில் சொந்த மகனிடமே அன்னையாக நடந்துகொள்ளாமல் வெறும் பெண்ணாகி பாவனை செய்கிறாள். பாலம்மாளுக்குத் தாய்மையே அதிர்ச்சி தரும் உணர்வாக உருமாறுகிறது. அவள் வாழ்வே ‘அணிய முடியாத கம்மலாகி’ மனதை உறுத்துகிறது. ‘தாயம்மாளிடம்’கூட தாய்மை உணர்வு வேறொரு பரிணாமம் அடைந்து கருணையாக மாறுகிற இடமே நம்மால் இரசிக்கப்படுகிறது. அவள் தன் தாய்மையின் தடைகளைத் தாண்டி கருணை பொருந்திய மனுஷியாக மலர்வதற்குக்கூட தனக்கே தெரியாமல் மங்கம்மாள்தான் காரணமாக இருக்கிறாள். தன் சொந்தக் குழந்தையின் களங்கமின்மையைப் பற்றிக்கொண்டதால் அவளுக்கென்று பிரத்யேகமாகத் திறந்துகொண்ட பரலோக சாம்ராஜ்யத்தின் கதவுகள் அவை. அன்னையாக இருப்பதாலேயே அவளுக்கு அது வாய்க்கவில்லை. அன்னை என்கிற குறுகிய வெளியைக் கடந்து பரந்த வெளியில் தன்னையிழந்து நின்றதாலேயே அவளடைந்த உயரமது.
‘என் பிள்ளைகளை விடவா இந்தப் பீத்தல் பெரிசு?’ என்று தெளிவோடு சேலையைப் போர்த்திவிடும் அன்னை தாயம்மாளைவிட, ‘நீ என்னை சோதிக்கத்தான் வந்திருக்கேடா’ என்று புலம்பிக்கொண்டே கணவனின் துண்டை அழுதபடி ராஜாவுக்குத் தரும் இடத்தில் அவள் வழமையான அன்னை அல்ல. தாய்ப்பால் நின்றுவிட்ட மார்பில் கருணை சுரக்கிற இடத்திற்குத் தாயம்மாள் சென்றுவிடுகிறாள்.
விபச்சாரம் காட்சியாக வரும் அவருடைய இரண்டு கதைகளிலும் ‘அன்னைகளே’ அந்த விபச்சாரத்திற்குக் காரணமாகிறார்கள். நிகழ்வதற்கு முன்னால் அந்த அன்னைகளிடம் இருந்த குற்ற உணர்வுகூட பணத்தைப் பார்த்தவுடன் காணாமல் போய்விடுவதைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
‘தாயின் சம்மதம் பெற்று தாயின் கண் முன்பாகவே பசியின் காரணமாக ஒரு கன்னிப்பெண் தன் கற்பை விற்கும் கோர நாடகம் இந்த இரவில் அரங்கேறியது’ என்று ‘திரிபுரம்’ கதையில் குறிப்பிடுகிறார்.
‘மாறுதல்’ கதையிலும் அம்மாவே மகளை அனுப்பி வைக்கிறாள். மகளோடு உடலுறவு கொள்ளாமல் பணம் தருகிற போது, ‘நாங்கள் ஏழைகளாக, பிச்சைக்காரர்களாக இருந்தால் உங்கள் உபச்சாரத்தை நாடலாம். நாங்கள் கௌரவமாக விபச்சாரம் செய்து பிழைக்கிறோம். விபச்சாரிக்கு நன்கொடை கொடுப்பானேன்?’ என்று வந்தவனிடம் அன்னை சீறுகிறாள். ஆணோ பெண்ணோ அவர்களுக்குத் தாய்மையைவிட, கற்பைவிட, சக மனிதர்களுக்கு முன் சுயமரியாதையாக வாழ்வதே முக்கியமானது என்கிற புரிதலை இந்தக் கதை வழங்குகிறது. இந்த இரு கதைகளும் தேய்வழக்காகிவிட்ட ‘அம்மா’ எனும் பழைய சட்டகத்தை நான்காக முறித்து யதார்த்தமெனும் சுடுநெருப்பில் போட்டுவிடுகின்றன.
‘முகக்களை’ என்கிற கதையில் அம்மா – மகள் உறவுக்குள் ஒரு கட்டத்தில் முளைக்கும் விளக்க முடியாத கசப்புணர்வை அடையாளம் காட்டுகிறார். அந்தக் கதையில் வரும் தேவகியம்மாள் அவலட்சணமான பெண். நீண்ட நாட்களாகப் பெண் கிடைக்காத பாண்டுரங்கன் தனக்கு வரன் கிடைத்த சந்தோஷத்தில் அவளைக் ‘களையான பெண்’ என்று கூறிவிட அவள் மனம் அதிலேயே சிக்கிக்கொள்கிறது. தன் மகள் வயதுக்கு வந்த பிறகும் தேவகியம்மாள் இளைஞர்களைக் கண்டு வெட்கப்படுகிறாள். வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் இளைஞன் மீது மகளுக்கு உருவாகும் காதலைக் கண்டு அவளுக்கு ஏற்படும் ஆங்காரத்தின் வேரைப் பாண்டுரங்கம் அடையாளம் காணும் இடம் முக்கியமானது.
‘மானம் கெட்டவ! அவன் இவ கையை பிடிச்சு இஸ்க்காம பொண்ணு கையை பிடிச்சுட்டானேன்னு இவளுக்கு ஆத்திரம் சார்’ என்று அவர் சத்தம் போடுகிறார்.
அழகான பதின்ம வயது மகளைக் கண்டு தாய் பொறாமைப்படுவதாக,
‘உன்னிடமிருந்து
பறந்து சென்ற
இருபது வயது எனும் மயில்,
உன் மகள் தோளில் அமர்ந்து
தோகை விரிப்பதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்.
காலியான கிளைகளில்
மெல்ல நிகழ்கின்றன..
அஸ்தமனங்கள்
சூர்யோதயங்கள்
அன்பின் பதட்டம்’
என்கிற கவிதையை தேவதச்சன் எழுதியிருப்பார். இந்தக் கதையில் வருகிற தேவகியம்மாளுக்கு முடிவில் ஏற்படுவது அதே உணர்வுதான். கூடுதலாக, தன் அவலட்சணம் குறித்த தாழ்வு மனப்பான்மையைக் கவன ஈர்ப்பாக மாற்றிக்கொண்ட நடுத்தர வயதுப் பெண்ணின் உளவியலும் பேசப்படுகிறது. இந்தக் கதையில் தேவகியம்மாளின் பிரசவக்கோடுகளை மானசீகமாக அழித்துவிட்டு அவளை வெறும் பெண்ணாகவே நம் முன் அழகிரிசாமி நிற்க வைத்துவிடுகிறார்.
தியாகத்தின் மீதான விமர்சனம்:
‘இரு சகோதரர்கள்’ கதையிலும் அண்ணன் மனைவியான சாரதா சின்ன வயது கொழுந்தனுக்கு அன்னையாகவே இருந்து அவனை வளர்க்கிறாள். ஆரம்பத்தில், தம்பிக்காக அண்ணன் சகலத்தையும் தியாகம் செய்து அவனைப் படிக்க வைக்கிறான். தம்பி வேலைக்குச் சென்ற பின் அண்ணன் குடும்பத்துக்காக திருமணமே செய்துகொள்ளாமல் ‘பதில் தியாகம்’ செய்கிறான். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உணர்வுகளால் உந்தப்பட்டு அவன் தன் அண்ணியையே ஆட்கொள்ள நினைக்கிற போது அவள் விருப்பமோ எதிர்ப்போ இல்லாமல் வெறும் கல்லைப் போல் கிடந்து அவனைச் சலனமில்லாமல் பார்க்கிறாள். இரு சகோதரர்களின் தியாகங்களுக்கு நடுவே ஒரு பெண் உடலாலும் உணர்வுகளாலும் பலிகடாவாகி குருதி வழியக் கிடப்பதை அழகிரிசாமி பதைபதைக்கும் மொழியோடு காட்சிப்படுத்தியிருப்பார். பாசத்தால் நிகழும் ஆண்களின் தியாகமும்கூட பெண்ணின் தலையில் வந்து விடிவதை நுட்பமாகக் குறிப்புணர்த்தும் கதை இது.
பெண்களின் தியாகத்தை மிகைப்படுத்தி, படிப்பவர்கள் மீது உணர்வுச் சுரண்டல் நிகழ்த்தும் எழுத்தாளர்களின் மீது அவருக்கு ஆழ்ந்த விமர்சனம் இருந்திருக்கிறது. அந்தக் கோபம்தான் ‘புரட்சி எழுத்தாளரின் கதாநாயகி’ கதையில் வெளிப்படுகிறது. அடிபம்பில் தண்ணீர் அடிப்பதற்குச் சோம்பல்பட்டு வேலையை விட்டுப்போன வேலைக்காரி மங்களம் உழைக்காமல் சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காகத் தன் குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு வெளியே சென்று விபச்சாரம் செய்கிறாள். இந்த உண்மைகள் தெரியாமல் அவள் மீது போலியான இரக்கம் கொண்டு ஒரு எழுத்தாளர் ‘வழுக்கி விழுந்த சகோதரி’ என்ற பெயரில் அவள் கதையை நாவலாக எழுதுகிறார். நாவல் அந்தப் பெண்ணைத் தியாகியாக்கி அவள் மீது மிகையான இரக்கத்தைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. அதைக் கேட்டவுடன் கதைசொல்லிக்கு கோபம் வந்து எழுத்தாளரைத் திட்டுகிறார். உண்மையை உணர்ந்ததும் இருவரும் சிரிப்பதாக கதை நிறைவுறுகிறது. இந்தக் கதையில் தியாகம் என்கிற உணர்வைப் பயன்படுத்தி பெண்ணின் மீது மிகை உணர்வுகளை ஏற்றி வைத்து வாசகர்களைச் சுரண்டும் போலித்தனத்தை அழகிரிசாமி தோலுரிக்கிறார்.
அழகிரிசாமியின் காதல் கதைகள்:
அழகிரிசாமி யதார்த்தவாத எழுத்தாளர். அவரால் எந்தப் பெண்ணையும் அவளுடைய அன்றாடப் பிரச்சினைகள் சார்ந்தே யோசிக்க முடியும். அவர் பெரும்பாலும் உடல் ரீதியான வர்ணனைகளை எழுதுவதே இல்லை. வனப்பான முலைகளும் மெல்லிடையும் எடுப்பான பின்புறமும் கொண்ட பெண் அவர் முன்னால் வந்து நின்றாலும் அழகிரிசாமி அவள் கண்களில் படிந்திருக்கிற கண்ணீரை, உடல்மொழியில் வெளிப்படும் போலியான பாவனைகளின் வேரை, முகத்திலிருக்கும் கடந்த கால சோகத்தை, பார்வையில் படரும் பொறாமையை, விரல்களில் நெளியும் நூற்றாண்டு படபடப்பை நுட்பமாகக் கண்டறிந்துவிடுகிறார்.
அவருடைய காதல் கதைகள் இரண்டு வகையானவை.
1. உயர் நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் போலியான பாவனைகளை விமர்சிக்கும் கதைகள்.
2. காதலின் மகிழ்ச்சியை உணர விடாத ஏழ்மையின் துயரத்தைச் சித்தரிக்கும் கதைகள்.
‘காதல் போட்டி’, ‘காதல் பிரச்சினை’, ‘சொல்லும் பொருளும்’, ‘அழகின் விலை’ ஆகிய கதைகளில் ஓரளவு வசதி படைத்த பெண்கள் நகர்ப்புறத்து நாகரிகத்தின் போலியான பாவனைகளில் சிக்கிக்கொண்டு காதலைத் தனக்கான பிரச்சினையாக உருமாற்றிக்கொள்வதை நுணுக்கமாகப் படைத்திருக்கிறார்.
‘காதல் போட்டி’ கதையில் வருகிற பெண் நிஜத்தில் தன் ஈகோவைத்தான் காதலிக்கிறாள். தன்னைப் புறக்கணித்தவனை வெல்ல வேண்டும் என்கிற முனைப்பே அவளிடமிருந்து காதலாக வெளிப்படுகிறது. ‘அழகின் விலை’ அதன் மறுபக்கத்தைப் பேசுகிறது. ஆணின் அழகு மீது ஈர்ப்பு கொண்ட பெண், தன் பிடிவாதத்தையே காதலாகக் கருதி சுட்ட பிறகும் தீயைச் சுற்றிவரும் விட்டிலைப் போல் அழிந்துவிடுவதை அந்தக் கதையில் பேசியிருக்கிறார். ‘சொல்லும் பொருளும்’ கதையின் நாயகியை ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஜெஸ்ஸி பாத்திரத்துக்கான முன்னோடியாகச் சொல்ல முடியும். உண்மையில் அவளுக்கு என்ன வேண்டும் என்று அவளுக்கே தெரியாது. அவள் நினைப்பது வேறு, பேசுவது வேறு.
‘என் சொல்லும் என்னை மோசம் செய்துவிட்டது. துரதிருஷ்டவசமாக நீங்கள் எனது சொற்களையும் எண்ணங்களையும் மட்டுமே புரிந்துகொண்டீர்கள். என்னையல்ல’ என்று அவனுக்குக் கடைசிக் கடிதம் எழுதுகிறாள்.
ஒவ்வொரு முறையும் அவனைக் குத்திக் கிழித்து, தன்னையும் சுய வதைக்கு ஆளாக்கிக்கொள்கிறாள். எல்லாம் முடிந்த பிறகும் இந்தக் கடிதத்தை எழுதி அவனையும் அழ வைத்து தானும் அழுகிறாள். இந்தக் கதைகளில் அழகிரிசாமி பேசியிருப்பது காதலை அல்ல. போலியான பாவனைகளால் வலிந்து உருவாக்கிக்கொள்ளும் ஈகோவை அவர்கள் காதலாகக் கருதுவதை திரை விலக்கிக் காட்டியிருக்கிறார்.
வேறு சில கதைகளில் சமூக யதார்த்தம் காதலையே உணர முடியாத அளவுக்குப் பெண்களைக் கல்லாக்கியிருப்பதையும் அழகாகப் படைத்துக் காட்டியிருக்கிறார்.
‘விட்ட குறையைத் தொட்ட குறை’ கதையின் நாயகி நீலாவின் பிரச்சினை அதுதான். அவளால் தன் யதார்த்தத்தை விட்டு வர முடியாது. ஆனால் காதலும் வேண்டும். அவனது திருமணச் செய்தி அவளைக் கோபப்படுத்துகிறது. உண்மையில் அவள் கோபம் தன் சூழலின் மீதுதான். ஆனால் அதை ஒத்துக்கொள்ள முடியாமல் அவன் இயல்பாகக் கையைத் தொட்டதற்கு ‘அயோக்கியன்’, ‘துரோகி’ என்று மிகப்பெரிய வார்த்தைகளைப் பேசுகிறாள். அந்தக் கோபத்தைத் தொடர்ந்து வளர்த்தெடுக்கிறாள். அந்தக் கோபமே தன்னைச் சுய வதையிலிருந்து காப்பாற்றும் என்பதை அவள் மன ஆழத்தில் உணர்ந்திருப்பாள்.
‘ஜாதியாச்சாரம்’ கதையில் காதலித்து மணந்துகொண்ட கணவனின் ஒப்புதலுடனே மனைவி விபச்சாரம் செய்கிறாள். ‘மற்றொரு பயிற்சி’ கதையில் காதலையும் கடமை போல் செய்ய நேர்கிற பெண்ணாக ஜகதா சித்தரிக்கப்படுகிறாள்.
‘காதல் என்பது ஆபிஸ் வேலையில் ஒரு பகுதியைப் போல் அவ்வளவு யந்திர கதியில் மாமூலாக இருந்தது ‘ என்று அந்தக் காதலை விவரிக்கிறார். அவளை ஊர் சுற்ற அழைக்கும் காதலனிடம், ‘என்னால ஒரு பயமும் இல்லங்கிறதுதான் எங்கம்மாக்கு இருக்கிற ஒரே சந்தோஷம். அதை நாம இல்லாம பண்ணிட வேணாம்’ என்று மறுக்கிற இடத்தில் யந்திரமாக மரத்துவிட்ட அவள் மனம் அடையாளம் காட்டப்படுகிறது. அவன் கைகளைப் பிடித்தபடி பரவசத்தோடு காதலைச் சொல்லுகிற இடத்திலும்கூட அவள் நேர்காணல் செய்யும் மேலதிகாரியைப் போல் கேள்வி மேல் கேள்வி கேட்டு எதிர்காலப் பாதுகாப்பை உறுதிசெய்கிறாள். திருமணம் செய்துகொண்ட பிறகு இரு வீடுகளிலும் குடும்பம் நடத்தக்கூட இடமின்றி அவரவர் வீட்டில் தனித்தனியே வாழ்கின்றனர். அவனுக்கான தேவைகளையும் அவளே நிறைவேற்றுகிற சூழலின் கசப்பால், ‘என் காசில் பஸ் ஏறிப்போய் எனக்கு புருஷனா இருக்க வேண்டாம்’ என்று சீறுகிறாள்.
இந்தக் கதைகளில் முதல் தலைமுறையாகப் பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த நடுத்தர வர்க்கத்து வாழ்க்கைச் சூழல் அவர்களின் மனதில் முளைக்கும் பருவச் சிறகுகளை இரக்கமின்றி கிள்ளி எறிவதையே காட்சிப்படுத்தியிருக்கிறார்.
அவர் கதையில் காதல் தேவதைகளுக்கான தேடலே இல்லையா என்றொரு கேள்வி எழலாம். ‘கண்ணம்மா’ கதையில் இதற்கும் விடையிருக்கிறது. அந்தச் சொல்லே ‘தேவதைக் காதலை’ நினைவூட்டும் சொல். இந்தக் கதையில் சிறு வயதில் நேசித்த பெண்ணை மலேசியா வந்த பிறகும் நாயகன் தேடிக்கொண்டேயிருக்கிறான். ஆனால் அவள் சாயல்கொண்ட வேறொரு பெண்ணைத் (தங்கம்) தற்செயலாகச் சந்திக்கிறான். மிகுந்த கஷ்டத்தில் இருக்கும் அவளுக்கு மனைவியின் அனுமதியோடு பல உதவிகளைச் செய்கிறான். அப்படிச் செய்கிற போதெல்லாம் கண்ணம்மாவுக்கே அனைத்தையும் செய்வது போல் பரவசம் கொள்கிறான். ஒருநாள் நிஜ கண்ணம்மாவைச் சந்திக்க நேர்கிறது. அவள் சுத்தமாக வேறொருத்தியாக மாறிப்போயிருக்க இவன் மிகப்பெரிய ஏமாற்றமடைகிறான். மனைவி இப்படிச் சொல்லி அவனை ஆறுதல்படுத்துவதாகக் கதை முடிகிறது.
‘கவலைப்படாதீங்க. அவ தங்கம்மா ஜாடைல இருக்கான்னு நினைச்சுக்கங்க. இனி அவ மேலயும் ப்ரியம் வந்திடும்.’
மிக நுணுக்கமான மனோவியல் பார்வையுடன் எழுதப்பட்ட வரிகள் இவை. இந்த வரிகள் ‘குறைகளே இல்லாத ஒளி பொருந்திய காதலைக்’ கட்டுடைக்கின்றன. யதார்த்தத்தின் சுடு நிஜத்தை அப்படியே ஏற்கிற கருணையே சகல விஷயங்களையும்விட உயர்ந்தது. மற்றவை யாவும் மனதின் மயக்கங்களே என்றுரைக்கும் ஞானியின் கன்ன வருடல் இந்தச் சொற்களில் உண்டு. ஒருவகையில் இதுதான் அழகிரிசாமி கண்டடைந்த மகத்தான படைப்புத் தரிசனம் எனலாம்.
-தொடரும்.
*
முந்தைய பகுதிகள்:
- கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம் – பகுதி 1
- கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம் – பகுதி 2
- கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம் – பகுதி 3
- கு.அழகிரிசாமியின் படைப்புகளில் குழந்தைகள்
- கு.அழகிரிசாமியின் கதைகளில் தொன்மம்