நன்மக்கள் – ஃப்ளானரி ஓ கானர்

by எஸ்.கயல்
0 comment

தனிமையில் இருக்கையில் சலனமற்ற ஒரு முன்னோக்கு முகபாவனை, ஆட்களைக் கையாளும்போது பயன்படுத்துவதற்கென அப்படியே நேர்மாறான ஒன்று என இரு வேறுவிதமான முகபாவனைகளைத் திருமதி ஃப்ரீமேன் தன் கைவசம் வைத்திருந்தாள். அவளுடைய முன்னோக்கு முகபாவனை, நிதானமாக அதே சமயம் வேகமாக முன்னேறிச் செல்லும் ஒரு கனரக வகை டிரக் போன்றது. அவளுடைய கண்கள் இடமோ வலமோ திரும்பாமல் இருந்தாலும் வாசித்துக்கொண்டிருக்கும் சிறுகதையின் இடையில் ஒரு மஞ்சள்நிற அடிக்கோடிட்ட வாசகத்தைக் கண்டதும் நம் கவனம் அதன் மீது திரும்புவதைப் போலத் திரும்பக் கூடியவை. அந்த இன்னொரு உணர்ச்சியை அவள் எப்போதாவதுதான் பயன்படுத்துவாள். ஏனெனில் தான் பேசிய ஒரு வரியைக்கூட மாற்றிப் பேசவேண்டிய அவசியமே அவளுக்குப் பெரும்பாலும் ஏற்பட்டதில்லை. ஆனால் அவ்வாறு நிகழும்போது அவளுடைய முகம் அப்படியே அசைவற்று இருக்கும். அவளுடைய கறுத்த விழிகள் கிட்டத்தட்ட கண்ணுக்குப் புலப்படாத ஒரு அசைவுடனிருக்கும். அப்போது அவை காட்சியிலிருந்து மறைந்துவிடுவது போலத் தோற்றமளிக்கும். அத்துடன், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட தானிய மூட்டைகள் போல திருமதி ஃபிரீமேன் திண்ணென்று அங்கு நின்றுகொண்டிருந்தாலும் அந்தக் காட்சியைப் பார்ப்பவர் கண்களுக்கு அவள் அங்கிருந்து மறைந்துவிட்டாற் போலிருக்கும்.

இது போன்ற நேரங்களில் திரு.ஹோப்வெல் அவளிடம் எதைப் பற்றியும் பேசமாட்டார். திருமதி ஃபிரீமேன் இரைச்சலான சத்தத்துடன் தேவைக்கதிகமாகப் பேசுவாள். எந்த விஷயத்திலும் அவள் மீது தவறு இருப்பதாக அவளை ஏற்றுக்கொள்ளவைக்க நம்மால் முடியாது. அப்படியே அசையாது நிற்கும் அவளைப் பேசவைக்க முடிந்தாலும்கூட, “நான் அப்படி ஒன்றைச் சொல்லியிருக்கலாம். ஒருவேளை அப்படி நான் சொல்லி இருக்கமாட்டேன்” என்பது போன்று எதையாவது சொல்வாள். அவ்வாறில்லை எனில், சமையலறை உச்சியில் அடுக்கப்பட்டிருக்கும் அழுக்கு படிந்த குப்பிகளின் மீது தன் பார்வையைச் செலுத்தியபடி, “சென்ற கோடைக்காலத்தின் போது வாங்கி அடுக்கிய அத்திப்பழங்கள், நீங்கள் சரியாகச் சாப்பிடாததால் இன்னும் அப்படியே இருக்கின்றன” என்பாள்.

அவர்கள் தங்களுடைய மிக முக்கியமான வேலையைக் காலை உணவின் போது சமையலறையில் மேற்கொள்வார்கள். திருமதி ஹோப்வெல் தினமும் காலை ஏழு மணிக்குக் கண்விழித்ததும் முதல் வேலையாகத் தன்னுடைய அறையிலும் ஜாயினுடைய அறையிலும் இருக்கும் எரிவாயு ஹீட்டர்களின் மின்னோட்டத்தை இயக்கி குளிரை மட்டுப்படுத்துவாள். ஜாயின் தலைமுடி பொன்னிறத்தில் இருக்கும். அவளுக்குச் செயற்கைக் கால் பொருத்தப்பட்டிருந்தது. முப்பத்தி இரண்டு வயதாகியிருந்தாலும் பெருமளவு கல்வி பயின்றிருந்தாலும் ஜாயை ஒரு குழந்தை போலத்தான் திருமதி ஹோப்வெல் கருதினாள். தன் தாய் உணவு உட்கொள்ளும் நேரத்தில் கண்விழித்து, குளியலறைக்குள் அசமந்தமாக நுழைந்து ஜாய் அதன் கதவை அறைந்து சாத்திய சிறிது நேரத்துக்குள் திருமதி ஃபிரீமேன் அந்தக் கதவின் பின்பக்கம் வந்து நிற்பாள். “உள்ளே வா” என்ற அம்மாவின் அழைப்பு கேட்கும். உடனே அவர்கள் தாழ்வான குரலில் பேசிக்கொள்வார்கள். எது யாருடைய குரல் எனப் பிரித்தறிய இயலாத அளவுக்கு அது இரகசியமாக ஒலிக்கும்.

குளியலை முடித்துவிட்டு ஜாய் வீட்டுக்குள் நுழையும்போது வழக்கமாக வானிலை அறிக்கை முடிவடைந்து, திருமதி ஃபிரீமேனின் மகள்களான கிளைனீஸ் அல்லது கரமேய் குறித்த தகவல் அறிக்கை வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கும். ஜாய் அவர்களை கிளிசரின் என்றும் கேரமல் என்றும் அழைத்தாள். சிகப்புநிறத் தலைமுடியுடைய பதினெட்டு வயது கிளைனீசுக்கு ஏகப்பட்ட விசிறிகள் இருந்தனர். பொன்னிறத் தலைமுடி கொண்ட அவளுடைய தங்கை கரமேய்க்குப் பதினைந்து வயதுதானிருக்கும். ஆனால் அதற்குள் திருமணமாகி, பிள்ளைத்தாய்ச்சியாக இருந்தாள். எதையும் சாப்பிட முடியாமல் அவள் தொடர்ந்து வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாள். மருத்துவர் இறுதியாகத் தந்த அறிக்கை வந்ததில் இருந்து துல்லியமாக அவள் எத்தனை முறை வாந்தியெடுத்தாள் என்ற குறிப்புகளைத் திருமதி ஃபிரீமேன் திருமதி ஹோப்வெல்லிடம் காலை வேளைகளில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

தனக்குத் தெரிந்த வரையில் கிளைனீசும் கரமேயும் மிகச் சிறந்த பெண்கள் என்றும், திருமதி ஃபிரீமேன்தான் மிகச் சிறந்த பெண்மணி என்றும், எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்ல உகந்தவள் என்றும் அங்கு சந்திக்க நேரிடும் எவரிடம் வேண்டுமானாலும் அவளைத் தயக்கமின்றி அறிமுகப்படுத்தலாம் என்றும் எல்லோரிடமும் சொல்வது திருமதி ஹோப்வெல்லுக்கு மிகப் பிடித்தமான ஒன்று. அதன் பிறகு ஃபிரீமேன் தம்பதியரை எப்படி அந்த வீட்டில் குடியமர்த்த நேரிட்டது என்பதையும், அவர்கள் இறைவனால் அவளிடம் கொண்டுவந்து சேர்க்கப்பட்டவர்கள் என்பதையும், நான்கு வருடங்களாக அவள் அவர்களை எப்படிப் பேணிப் பாதுகாக்கிறாள் என்பதையும் கூறுவாள். அவள் அவர்களை இவ்வளவு நீண்ட காலம் குடித்தனக்காரராக வைத்திருந்ததற்குக் காரணம் அவர்கள் சமுதாயத்தில் கீழான நிலையில் இல்லாமல் மேட்டுக்குடி மக்களாக இருந்ததுதான்.

ஃபிரீமேன் தம்பதியினர் தங்களைப் பற்றி அறிந்துகொள்ளும் பொருட்டு இதற்கு முன் அவர்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளருடைய எண்ணைத் தந்திருந்தனர். திருமதி ஹோப்வெல் அந்த எண்ணை அழைத்தபோது அவர், “திரு ஃபிரீமேன் என்னவோ சிறப்பாக விவசாயம் செய்வார்தான். ஆனால் மற்றவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதில் திருமதி ஃபிரீமேனை மிஞ்ச இந்த உலகில் வேறு ஆளே இல்லை” என்றார். “அவளுக்கு எல்லாவற்றைப் பற்றியும் எல்லாமே தெரிய வேண்டும். ஒரு விஷயம் நடந்துமுடிந்து அதன் சூடு ஆறுவதற்குள் அவளுக்கு அது தெரியவில்லையென்றால் அவள் தலையே வெடித்துவிடும். திரு ஃபிரீமேனைப் பொறுத்தவரை என்னால் நிச்சயமாக நற்சான்று அளிக்க முடியும். ஆனால் என்னாலும் என் மனைவியாலும் ஒரு நொடிகூட அதற்கு மேல் அந்தப் பெண்மணியைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை எங்களுக்கு ஒரு நாள் ஏற்பட்டது” என்றார். இதைக் கேட்டதில் இருந்து அவர்களைக் குடிவைப்பது குறித்த முடிவைத் திருமதி ஹோப்வெல் சில நாட்களுக்குத் தள்ளிப்போட்டாள்.

குடியிருக்க வீடு கேட்டு அவர்களைத் தவிர யாரும் விண்ணப்பிக்காததால் வேறு வழியின்றி அவர்களையே ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் திருமதி ஹோப்வெல்லுக்கு ஏற்பட்டது. ஆனால் திருமதி ஃபரீமேனை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அவள் அப்போதே மிகத் தெளிவாக முடிவுசெய்துவிட்டாள். அந்தப் பெண் எல்லா விஷயங்களும் தனக்குத் தெரிய வேண்டும் என்கிற குணமுடையவள் என்பதால் எல்லா விஷயங்களையும் அவளுக்குத் தெரிய வைப்பது, எல்லா விஷயங்களுக்குள்ளும் அவளைப் பிணைப்பது என்று திருமதி ஹோப்வெல் முடிவுசெய்தாள். அதாவது எல்லா விஷயங்களுக்கான பொறுப்பையும் அவளிடம் தந்து அவளை அதற்குப் பொறுப்பாளியாக நியமித்துவிடுவது என்பதுதான் அந்த முடிவு. திருமதி ஹோப்வெல்லுக்கு எனச் சொந்தமாக மோசமான குணங்கள் எதுவும் இல்லை. ஆனால் மற்றவர்களின் குணங்களை ஆக்கப்பூர்வமான விதத்தில் பயன்படுத்திக்கொள்ளும் திறன் அவளுக்கு இருந்தது. இப்படியாக நான்கு வருடங்கள் ஃபிரீமேன் தம்பதியரை அவள் தன் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்க அனுமதித்திருந்தாள்.

‘குறையற்றது என்று எதுவுமில்லை’ என்பது திருமதி ஹோப்வெல்லுக்கு மிகப் பிடித்த பொன்மொழிகளில் ஒன்று. அவளுக்குப் பிடித்த இன்னொன்று, ‘அவ்வளவுதான் வாழ்க்கை’ என்பது. அப்புறம், ‘அவரவர்க்கென ஒரு கருத்து இருக்கும்’ என்கிற மிக முக்கியமான இன்னொன்று. இந்தச் சொற்றொடர்களை எல்லாம் வழக்கமாக மேஜையின் அருகே அமர்ந்திருக்கையில் மென்மையான வற்புறுத்தும் தொனியில் அவள் சொல்வது, ‘அவளைத் தவிர வேறெவருக்குமே அது தெரியாது’ என்பது போலிருக்கும். கனத்த உருவமுடைய ஜாயின் முகத்திலிருந்த அனைத்து உணர்ச்சிகளையும் அவளுடைய மாறாத சினம், சிறு தடயமின்றி அழித்துவிட்டிருந்தது. அவள் நட்பிணக்கமற்ற தன் நீல நிறக் கண்களுடன் பக்கவாட்டில் இருந்து அவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். குருட்டுத் தன்மையை விரும்பி அடைந்து, அதைத் தொடர்ந்து தக்கவைக்கும் வழிமுறை அறிந்த ஒருவரின் பார்வையாக அது இருந்தது. 

திருமதி ஹோப்வெல், ‘வாழ்க்கை என்பது அவ்வளவுதான்’ என்று திருமதி ஃபிரீமேனிடம் சொன்னால், அவள், “இதை நான் எப்போதுமே நினைப்பதுண்டு” என்பாள். எந்த விஷயத்தையும் அவளைத் தவிர வேறு எவராலும் முதன்முதலில் நினைத்திருக்க இயலாது. அவளைத் தவிர வேறு யாராலும் அதை நினைத்திருக்க வாய்ப்பே இல்லை. அவள் திருமதி ஹோப்வெலைவிட வேகமாக இருந்தாள். அவர்கள் அந்த வீட்டுக்குக் குடிவந்த சில நாட்களுக்குப் பிறகு திருமதி ஹோப்வெல் அவளிடம் பேசும்போது, “நீங்கள் ஒரு அதிவிரைவு வண்டி” என்று கண் சிமிட்டினாள். திருமதி ஃபிரீமேன், “அது எனக்குத் தெரியும். நான் எப்போதுமே வேகமாக இருப்பேன். மற்றவர்களைவிட வேகமாக இருப்பதற்குச் சிலரால்தான் முடியும்” என்றாள்.

“ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்” என்றாள் திருமதி ஹோப்வெல்.

திருமதி ஃபிரீமேன், “ஆமாம். பெரும்பாலானோர் அப்படித்தான்” என்றாள்.

“இந்த உலகம் வித்தியாசமான மனிதர்களால் ஆனது”.

“இதை நான் எப்போதுமே நினைப்பதுண்டு”.

இம்மாதிரியான உரையாடல்களைக் காலை உணவின்போதும், அதைவிட அதிக அளவில் மாலை நேரச் சிற்றுண்டியின் போதும் ஜாய் கேட்டுப் பழகியிருந்தாள். சில சமயங்களில்  இரவு உணவின்போதும் இது நடப்பதுண்டு. விருந்தினர் யாருமற்ற நேரங்களில் திருமதி ஹோப்வெல்லும் ஜாயும் சமையலறையிலேயே உணவு உண்டனர். அது அவர்களுக்கு வசதியாகவும் இருந்தது. அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் எதோ ஒரு கட்டத்தில் திருமதி ஃபிரீமேன் எப்படியோ அங்கு ஆஜராகிவிடுவதோடு, அவர்கள் சாப்பாட்டை முடிக்கும்வரை அவர்களைப் பார்த்தபடி அங்கேயே நிற்பாள். கோடைக் காலமாக இருந்தால் வாசலில் நிற்பவள், குளிர்காலமென்றால் தன்னுடைய ஒரு முழங்கையை குளிர்சாதனப் பெட்டியின் மீது ஊன்றி நின்றுகொண்டு அவர்களைக் குனிந்து பார்த்துக்கொண்டோ, தன்னுடைய ஸ்கர்ட்டின் பின்பக்கத்தை இழுத்துவிட்டபடி எரிவாயுவினால் இயங்கும் அறையைச் சூடேற்றும் கருவியின் அருகேயோ நிற்பாள். சில சமயங்களில் சுவரின் மீது சாய்ந்தபடி தன்னுடைய தலையை இடம் வலமாக ஆட்டுவாள். அங்கிருந்து கிளம்புவதற்கான அறிகுறியே அவளிடம் தென்படாது. இவையெல்லாமே திருமதி ஹோப்வெல்லுக்குப் பெரும் சோதனையாக இருந்தது. ஆனால் அவள் மிகுந்த பொறுமைசாலி. எதுவுமே குறைபாடற்றதாக இருக்காது என்பதை உணர்ந்திருந்தவள். ஃபிரீமேன் தம்பதியரிடம் அவள் மேட்டுக்குடி வர்க்கத்தினரைக் கண்டாள். இந்தக் காலகட்டத்தில், இந்த வயதில் மேட்டுக்குடியினர் குடித்தனக்காரர்களாகக் கிடைத்தால் அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதே புத்திசாலித்தனம் என நினைத்தாள்.

சமூகத்தில் கீழ் நிலையில் இருந்த ஆட்களுடன் அவளுக்கு ஏராளமான அனுபவம் இருந்தது. ஃபிரீமேன் தம்பதியருக்கு முன்பிருந்த குடித்தனக்காரர்கள் எவரையுமே ஒரு வருடத்திற்கு மேல் அவள் அங்கு குடியிருக்கவிடவில்லை. அந்த விவசாயிகளின் மனைவியர் நாம் வெகுகாலம் நம்மோடிருக்க விரும்பும் வகையான பெண்கள் இல்லை. நெடுங்காலத்துக்கு முன் தன் கணவரை விவாகரத்து செய்திருந்த திருமதி ஹோப்வெல்லுக்கு வயல்களில் தன்னுடன் நடை பயில்வதற்கு ஒரு ஆள் தேவைப்பட்டது. அவள் இதற்காக ஜாயை வற்புறுத்த நேர்ந்தால் ஜாய் தன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு படு மோசமாக எதாவது பேசுவாள். திருமதி ஹோப்வெல், “சந்தோசமாக வரமுடியாதென்றால் நீ வரவே வேண்டாம்” என்பாள். தன் கால்களைக் குறுக்கி வைத்து, தோளை விறைப்பாக்கி, கழுத்தை இலேசாக முன்புறம் சாய்த்தபடி நிற்கும் ஜாய், “உனக்கு வேண்டுமென்றால்  சொல். நான் இங்குதான் இருக்கிறேன். இதோ ‘இப்படி’ இருக்கிறேன்” என்பாள்.

ஜாய்க்குப் பத்து வயதிருக்கையில் அவர்கள் ஒருமுறை வேட்டைக்குச் சென்றபோது ஜாயுடைய காலில் தவறுதலாகக் குண்டு பாய்ந்துவிட்டது. இதனால் திருமதி‌ ஹோப்வெல் தன் மகளின் இத்தகைய நடத்தையை மன்னித்தாள். தன் மகளுக்கு முப்பத்தி இரண்டு வயதாகிறது என்பதையும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவள் ஒற்றைக் காலுடன் வாழ்வதையும் நினைத்துப் பார்க்கவே திருமதி ஹோப்வெல்லுக்குக் கடினமாக இருந்தது. இயல்பாக நடக்கக்கூடிய மகிழ்வான நிகழ்வுகள் ஏதுமற்ற, ஒரு சிறு நடன அசைவைக்கூட செய்திராத முப்பது வயதான குண்டுப் பெண்ணாகத் தன் மகளைப் பற்றி நினைப்பது அவள் இதயத்தைக் கிழித்தது. அதைவிட இன்னும் சிறு குழந்தையாக அவளைப் பாவிப்பதே திருமதி ஹோப்வெல்லுக்கு மகிழ்ச்சி அளித்தது. அவளுடைய உண்மையான பெயரே ஜாய்தான். ஆனால் அவளுக்கு இருபத்தியொரு வயதாகி அவள் வெளியே செல்லத் தொடங்கியதுமே அவள் அதைச் சட்டப்படி மாற்றிக்கொண்டாள். ஜாய் என்ற அழகான தன் பெயரைச் சட்டப்பூர்வமாக மாற்றிக்கொள்ளும்வரை இது பற்றி அவள் தன் அம்மாவிடம் எதுவுமே சொல்லவில்லை. அனைத்து மொழிகளிலும் தேடிச் சலித்து, இருப்பதிலேயே அசிங்கமான ஒரு பெயரைத்தான் அவள் தேர்ந்தெடுத்திருப்பாள் என்று திருமதி ஹோப்வெல்லுக்கு நன்றாகத் தெரியும். இப்படியாக ஜாயினுடைய சட்டப்பூர்வமான பெயர் ஹல்கா என்று மாறியது.

இந்தப் பெயரை நினைத்தபோதெல்லாம் போர்க்கப்பலின் அகன்ற மேற்பகுதிதான் திருமதி ஹோப்வெல்லின் நினைவுக்கு வந்தது. அவள் தன் மகளை அந்தப் பெயரைக் கூறி அழைக்காமல் ஜாய் என்றே எப்போதும் அழைப்பாள். ஜாய் அதற்கு இயந்திரகதியில் பதில் சொல்வாள். அம்மாவுடன் வயல்வெளிகளில் நடைபோவதில் இருந்து தன்னைக் காப்பாற்றிய திருமதி ஃபிரீமேனை ஹல்கா பொறுத்துக்கொள்ளக் கற்றுக்கொண்டாள். கிளைனீசும் கரமேயும் அந்த வீட்டில் இருந்ததால் அவர்களையும்! திருமதி ஹோப்வெல்லின் கவனம் அவர்கள் பக்கமாகச் சிறிது சிதறியது. இல்லையெனில் அவளுடைய முழு கவனமும் ஹல்கா மீதே இருந்திருக்கும். அந்த வகையில் கிளைனீசும் கரமேயும்கூட ஜாய்க்குப் பயன்பட்டனர். திருமதி ஃபிரீமேனிடம் கடுமையாக நடந்துகொள்ளத் தன்னால் இயலவில்லை என்பதை உணர்ந்த போது ஜாய்க்கு திருமதி ஃபிரீமேனைச் சிறிதும் பிடிக்காமல் போனது. விசித்திரமான மனக்கசப்புகளைத் தன்வசம் கொண்ட திருமதி ஃபிரீமேன், பல நாட்கள் தொடர்ந்து யாருடனும் கலகலப்பாகப் பேசாமல் அமைதியாக இருப்பாள். ஆனால் அவளுடைய மகிழ்வின்மைக்கான காரணத்தைப் பார்த்தால் அது எப்போதுமே முக்கியமற்ற ஒன்றாக இருக்கும். ஒரு நேரடித் தாக்குதலோ, காமம் வழிகிற பார்வையோ, கண்ணெதிரே அப்பட்டமாகத் தெரியும் ஒரு அசிங்கமான விஷயமோ எதுவுமே அவளைப் பாதிக்காது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஒரு நாள் அவள் ஜாயை ‘ஹல்கா’ என்று அழைக்கத் தொடங்கினாள்.

இது தெரிந்தால் திருமதி ஹோப்வெல் கோபப்படுவாள் என்பதால் திருமதி‌ ஃபிரீமேன் எப்போதுமே அவள் கண்முன்னே இப்படி அழைக்கமாட்டாள். தானும் ஜாயும் வீட்டைவிட்டு வெளியே ஒன்றாக இருக்க நேர்கையில், எதையாவது பேசிக்கொண்டே வந்து இறுதியில் ‘ஹல்கா’ என்று முடிப்பாள். பெரிய கண்ணாடி ஒன்றை அணிந்திருக்கிற ஜாய் எனும் ஹல்காவின் முகம் இதைக் கேட்டதுமமே, திருமதி ஃபிரீமேன் தன்னுடைய அந்தரங்கத்துக்குள் அத்துமீறி நுழைந்ததைப் போல கோபத்தில் சிவந்துவிடும். அவள் அந்தப் பெயரைத் தன் அந்தரங்கமான விஷயமாகக் கருதினாள். மிக அசிங்கமாக இருப்பதாலேயே அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தவளுக்கு அதன் அதியற்புதப் பொருத்தம் பிறகுதான் பிடிபட்டது. உலைக் களத்தில் தங்கியிருக்கிற, மோசமாக வியர்வை வழிகிற அக்னி தேவதை போலவும், எவருடைய குரலுக்கு இறைவி வந்து நின்றாகவேண்டும் என்று அனைவரும் நினைக்கின்றனரோ அந்தப் பெயரைப் போலவும் ஹல்கா எனும் பெயர் அவளுக்குத் தோன்றியது. அப்பெயரைத் தன்னுடைய ஆகச் சிறந்த கலைப் படைப்பாக அவள் கருதினாள். அவளுடைய மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று அவளுடைய அம்மாவால் அதை முற்றிலுமாக அழித்தொழிக்க முடியவில்லை என்பதுதான். அதைவிடப் பெரிய வெற்றி அவளால் ஜாயிலிருந்து தன்னை ஹல்காவாக மாற்றிக்கொள்ள முடிந்தது என்பதே. ஆனாலும் அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு அதன் மூலம் திருமதி ஃபிரீமேன் அடைந்த மகிழ்ச்சி அவளை எரிச்சல்படுத்தியது. 

எதையும் சந்தேகத்துடன் உன்னிப்பாக உற்றுப் பார்க்கிற திருமதி ஃபிரீமேனின் எஃகு போன்ற கூர்மையான கண்கள் எதோ ஒரு இரகசியத்தைத் தேடிக் கண்டடையப் போவது போல ஹல்காவின் முகத்தைக் கடந்து இன்னும் ஆழமாக வேறெங்கோ ஊடுருவிச் சென்றன. ஹல்காவைப் பற்றிய எதோ ஒரு விஷயம் அவளை ஈர்த்தது. தன்னுடைய செயற்கைக் கால்தான் அவளை ஈர்த்தது என்பதை ஹல்கா பிறகு புரிந்துகொண்டாள். இரகசிய தொற்றுநோய்கள், மறைக்கப்பட்ட உருக்குலைந்த உடல் உறுப்புகள், குழந்தைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவை குறித்த தகவல்களின் மீது திருமதி ஃபிரீமேனுக்குத் தனிப்பட்ட விருப்பம் இருந்தது. நோய்களைப் பொறுத்தவரை நீண்ட கால நோய்களும் குணப்படுத்த முடியாதவையும்தான் அவளுடைய விருப்ப வகைகள். வேட்டையின்போது நிகழ்ந்த விபத்தைப் பற்றியும், அவளுடைய கால் எப்படி வெடித்துச் சிதறியது என்பதையும், அவள் சுயநினைவை இழக்கவில்லை என்பதையும் திருமதி ஹோப்வெல் திருமதி ஃபிரீமேனிடம் விளக்கமாகக் கூறுவாள். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்வைப் போல ஒவ்வொரு முறையும் திருமதி ஃபிரீமேனால் அதை ஆவலுடன்  கவனித்துக் கேட்க முடியும்.

அன்று காலை கொடூரமான ஒரு சத்தத்துடன் ஹல்கா சமையலறைக்குள் நுழைவது கேட்டது. அந்த மோசமான சத்தமில்லாமல் அவளால் நடக்க முடியும் என்பது திருமதி ஹோப்வெல்லுக்கு உறுதியாகத் தெரியும். ஆனாலும் அத்தகைய ஓசை எழுப்பியபடி ஹல்கா வந்தாள். உள்ளே நுழைந்ததும் அவர்களை ஒரு பார்வை பார்த்தாளே தவிர எதுவும் பேசவில்லை. சிகப்பு நிற கிமோனோவை (ஜப்பானியர்களின் பாரம்பரிய உடை) அணிந்து திருமதி ஹோப்வெல் தன் தலைமுடியின் சுருள் தன்மையைப் பாதுகாக்க மெல்லிய துணியால் அதைக் கட்டிக்கொண்டு உணவு மேஜையினருகே அமர்ந்து தன் காலை உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். திருமதி ஃபிரீமேன் தன்னுடைய முழங்கையைக் குளிர்சாதனப் பெட்டியின் மீது தொங்கவிட்டுக்கொண்டு உணவு மேஜையைப் பார்த்தபடி இருந்தாள். அடுப்பில் முட்டைகளை வேகவைத்த ஹல்கா, தன் கைகளைக் கட்டிக்கொண்டு வழக்கம்போல அவர்கள் எதிரே நின்றுகொண்டிருந்தாள். திருமதி ஹோப்வெல் ஹல்காவை நிமிர்ந்து பார்த்தாள். அப்போது திருமதி ஃபிரீமேனுக்கும் ஹல்காவுக்கும் இடையே மறைமுகமான பார்வைப் பரிமாற்றம் நிகழும். அவள் இதேமாதிரி தொடர்ந்து அமைதியாக மட்டும் இருந்துவிட்டால் பார்வைக்கு அவ்வளவு ஒன்றும் மோசமாக இருக்க மாட்டாள். இனிய முகபாவனையால் அழகூட்ட முடியாத அளவுக்கு அவளுடைய முகம் அப்படியொன்றும் அழகற்றதில்லை. எல்லாவற்றிலும் நல்ல விஷயங்களையே பார்ப்பவர்கள், பார்வைக்கு அழகாக இல்லையென்றால்கூட அழகாகவே காட்சியளிப்பார்கள் என்று திருமதி ஹோப்வெல் சொல்வதுண்டு.

ஜாயை இப்படிப் பார்க்கும்போதெல்லாம் தன் குழந்தை முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற நினைவு எழுவதை ஹோப்வெல்லால் தவிர்க்க முடிவதில்லை. அந்தப் படிப்பால் ஜாயிடம் எந்த மாற்றமும் நிகழவில்லை. இப்போது அவள் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றுவிட்டபடியால் இனி கல்லூரிக்குச் செல்வதற்கான எந்தச் சாக்குபோக்கும் அவளிடம் இல்லை. தங்களுடைய நேரத்தை இனிமையாகச் செலவழிப்பதற்காகப் பெண்கள் கல்விக்கூடங்களுக்குச் சென்று பயில வேண்டும் என்று திருமதி ஹோப்வெல் நினைத்தாள். ஆனால் ஜாய் அவற்றைக் கடந்துவிட்டாள். மறுபடி அங்கு செல்லுமளவுக்கு ஜாய்க்கு உடல் பலமும் இல்லை. மிகக் கவனமாகப் பார்த்துக்கொண்டால் நாற்பத்தி ஐந்து வயதுவரை அவள் உயிர் வாழ வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் திருமதி ஹோப்வெல்லிடம் கூறியிருந்தனர். ஜாயின் இதயம் பலவீனமாக இருந்தது. இல்லையென்றால் இந்தச் சிகப்பு மலைகளையும் மேட்டுக்குடி மக்களையும் விட்டு நெடுந்தொலைவு போய்விட்டிருப்பேன் என்பதை ஜாய் வெளிப்படையாகக் கூறுவாள்.

எங்காவது ஒரு பல்கலைக்கழகத்தில் ஜாயின் பேசுபொருள் குறித்த புரிதலுடைய மாணவர்களிடையே அவள் வகுப்பெடுத்துக்கொண்டிருந்திருப்பாள்‌. சோளக் கொல்லை பொம்மை போல இங்கு அமர்ந்தபடியே திருமதி ஹோப்வெல்லால் அதைக் கற்பனை செய்து பார்க்கவும் அதைக் குறித்துப் பேசவும் முடிந்திருக்கும். ஆனால் இப்போதோ ஆறு ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பழைய ஸ்கர்ட்டும், சாயம் போன குதிரை வீரனின் உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற முழுக்கைச் சட்டையும் அணிந்தவாறு நாள் முழுக்க இந்த வீட்டிலேயே அமர்ந்திருக்கிறாள். இது முட்டாள்தனமானது என்றும் இதிலிருந்தே அவள் இன்னும் குழந்தைதான் என்பதும் தெரிவதாக திருமதி ஹோப்வெல் கருதினாள். ஜாய் அறிவாளிதான். ஆனால் சிறிதும் விவேகமற்றவள். வருடங்கள் செல்லச் செல்ல மற்றவர்களிடமிருந்து அவள் வித்தியாசமானவளாக மாறிக்கொண்டே போவதாகவும், அவளுடைய உப்பிப் பெருத்த உடல், கடுமையான சுபாவம், மாறுகண் ஆகியவை மென்மேலும் வளர்ந்துகொண்டே போனதாகவும் திருமதி ஹோப்வெல்லுக்குத் தோன்றியது.

அத்துடன் ஜாய் பேசக்கூடிய விநோதமான விஷயங்கள் இருக்கிறதே! சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உணவு வாயில் இருக்க, எந்த முன்னெச்சரிக்கையும் செய்யாமல் திடீரென உணவு மேஜையில் இருந்து முகம் சிவக்க எழுந்து, தன்னைப் பெற்ற அம்மாவிடமே, “பெண்ணே! எப்போதாவது நீ  உன்னுள் நோக்கி இருக்கிறாயா? உன்னுள் ஆழ்ந்து பார்த்து நீ யாராக இல்லை என்று பார்த்திருக்கிறாயா? கடவுளே!” என்று உரக்கக் கத்தி, பிறகு தொடர்ந்து பேச சக்தியிழந்து, தன் உணவுத் தட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டு, “நாம் நம்முடைய சொந்த ஒளி இல்லை என்று மெல்பிரான்ச் (Malebranche) சொன்னது சரிதான். நாம் நம்முடைய சொந்த ஒளி இல்லை” என்பாள். இந்த சம்பாஷனை அப்போது நிகழ்ந்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை இன்று வரை திருமதி ஹோப்வெல்லால் புரிந்துகொள்ள முடியவில்லை.

“புன்னகை புரிவதால் யாருக்கும் எந்த நட்டமும் ஏற்பட்டுவிடாது” என்றாள் திருமதி ஹோப்வெல். ஜாய் இதைத் தன் புத்திக்குள் செலுத்தக்கூடும் என்று நினைத்தே அவள் இதைச் சொன்னாள்.

ஜாய் தன் ஆராய்ச்சிப் படிப்பைத் தத்துவ இயலில் செய்துவைத்திருப்பது திருமதி ஹோப்வெல்லுக்குப் பேரிழப்பைத் தந்தது. “என் மகள் ஒரு செவிலி” என்றோ “என் மகள் ஒரு பள்ளி ஆசிரியை” என்றோ சொல்லலாம். “என் மகள் ஒரு வேதியியல் பொறியாளர்” என்றுகூட சொல்லலாம். ஆனால், “என் மகள் ஒரு தத்துவவியலாளர்” என்று நம்மால் சொல்ல முடியாது. இந்தத் தத்துவம் போன்ற விஷயங்கள் எல்லாம் கிரேக்கர்கள், ரோமானியர்களுடன் முடிந்து போனவை. நாள் முழுக்க ஒரு குழிவான நாற்காலியில் கழுத்தை அழுந்தவைத்தபடி அமர்ந்து எதையாவது படித்துக்கொண்டிருக்கும் ஜாய், எப்போதாவது நடைபயிற்சி செய்வாள். ஆனால் நாய்களையோ பூனைகளையோ பறவைகளையோ இயற்கையையோ அழகிய இளைஞர்களையோ அவளுக்குப் பிடிப்பதில்லை. இளைஞர்களை அவள் பார்க்கும் விதம் அவர்களின் முட்டாள்தனத்தை அவளால் நுகர்ந்து பார்க்கமுடிவது போலிருக்கும்.

ஒரு நாள், ஜாய் ஒரு நூலைப் படித்துக்கொண்டிருந்ததை திருமதி ஹோப்வெல் பார்த்தாள். இடையில் அவள் அதை வைத்துவிட்டுப் போகவும், அதைத் திறந்து பார்த்த திருமதி ஹோப்வெல், அதிலிருந்த எதோ ஒரு பக்கத்தை எடுத்து வாசித்தாள். “ஆனால் அறிவியலோ தன்னுடைய தெளிந்த நுண்ணறிவையும், தீவிரத்தன்மையையும் மீண்டும் புதிதாக உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் தன்னுடைய அக்கறை ‘எது என்ன’ என்பது குறித்து மட்டுமே என்று அறிவியல் அறிவிக்க வேண்டும். அறிவியல் மட்டும் இருந்தால் அச்சமும் பொய்யான நம்பிக்கைகளும் எப்படிச் சாத்தியமாகும்? அறிவியல் சொல்வது சரி என்றால், ஒரு விஷயம் உறுதிப்படுகிறது. இன்மை குறித்த எது ஒன்றைப் பற்றியும் அறிவியல் எதுவும் அறிந்துகொள்ள விரும்பவில்லை. இன்மை குறித்த அறிவியலின் கடுமையான அணுகுமுறை என்பது இதுதான். இன்மை பற்றி எதுவும் அறிந்துகொள்ள வேண்டாம் என்று நாம் விரும்புவதன் மூலமாகவே இது நமக்குத் தெரிகிறது” என்று அதில் இருந்தது. பென்சிலால் நீல நிறத்தில் அடிக்கோடிடப்பட்டு இருந்த இந்த வரிகள் தீய சக்திகளை விரட்டுவதற்காகச் சொல்லப்படுகிற, எளிதில் புரிந்துகொள்ள இயலாத மந்திர உச்சாடனம் போல திருமதி ஹோப்வெல்லுக்குத் தோன்றியது. வேகமாக அந்த நூலை மூடிவைத்தவள் காய்ச்சல் கண்டவளைப் போல அந்த அறையைவிட்டு வெளியேறினாள்.

இன்று காலை ஜாய் உள்ளே நுழைந்தபோது திருமதி ஃபிரீமேன், “இரவு உணவுக்குப் பிறகு நான்கு முறை வாந்தி எடுத்துவிட்டாள். இரவு மூன்று மணிக்குப் பிறகும்கூட தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தாள். நேற்றெல்லாம் நிலைப்பேழையின் இழுப்பறைகளில் எதையோ தேடி சலசலப்பான சத்தமேற்படுத்திக் கொண்டும், அடுத்து எதன் மீது தாக்குதல் நடத்தலாம் என்று யோசித்தபடி அப்படியே நின்றுகொண்டும் இருந்தது தவிர நேற்று முழுதும் அவள் வேறெதுவும் செய்யவில்லை” என்று கரமேயைப் பற்றி புகார் கூறிக்கொண்டிருந்தாள்.

காபி குடித்தபடி, “அவளை ஒழுங்காகச் சாப்பிடச் செய்யுங்கள்” என்று முணுமுணுத்த திருமதி ஹோப்வெல், தனக்கு முதுகு காட்டி ஸ்டவ் அருகே நின்றிருந்த ஜாயைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பைபிள் விற்பனை செய்வதற்காக வந்திருந்த விற்பனைப் பிரதிநிதியிடம் ஜாய் என்ன பேசியிருப்பாள், அவளால் எவ்விதமான உரையாடலை அவனுடன் நிகழ்த்தியிருக்க இயலும் என்று திருமதி ஹோப்வெல்லால் கற்பனை செய்துபார்க்க இயலவில்லை.

கெச்சலாகவும் உயரமாகவும் இருந்த அந்த இளைஞன் தொப்பி அணிந்திருக்கவில்லை.  அதற்கு முன் தினமும் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டவன், இன்று வந்திருக்கிறான். தன் கையில் வைத்திருந்த கறுப்பு சூட்கேசின் பாரம் தாங்காமல் கதவின் மீது ஒரு பக்கமாகச் சாய்ந்தான். கீழே விழுந்துவிடுவது போன்றிருந்த அந்த நிலையிலும் மகிழ்ச்சி ததும்பும் குரலில், “இனிய காலை வணக்கம்! திருமதி சிடார்ஸ்” என்று சொல்லிக்கொண்டே அந்த சூட்கேசைத் தரைவிரிப்பின் மீது வைத்தான். பளீரென்ற நீல நிற சூட்டும், தேவையான அளவுக்கு காலின் மேற்புறம்வரை இழுக்கப்பட்டிராத மஞ்சள் நிறக் காலுறைகளுடனும் இருந்தவன் பார்ப்பதற்கு அவ்வளவொன்றும் மோசமாக இல்லை. அழுந்தவாரிய பழுப்பு நிறத் தலைமுடிக் கற்றையொன்று துருத்திக்கொண்டிருந்த பெரிய எலும்புகளுடைய அவனுடைய முகத்தின் முன்நெற்றியில் கிடந்தது. 

அவள், “நான் திருமதி ஹோப்வெல்” என்றாள்.

“ஓ” என்றவன், வியப்படைந்தது போல நடித்தாலும் அவன் கண்கள் என்னவோ ஒளிர்ந்தன.

“அஞ்சல் பெட்டியில் திருமதி செடார்ஸ் என்று இருந்ததைப் பார்த்ததால் உங்கள் பெயர் திருமதி செடார்ஸ் என்று நினைத்தேன்” என்றவன் இனிமையாகச் சத்தமெழுப்பியபடி ஒரு சிரிப்பு சிரித்தான். 

“திருமதி ஹோப்வெல்! நீங்கள் நலமா?” என்று அவள் கைகளைக் குலுக்கியபடி மறுபடி சிரித்தவனின் முகம் உடனேயே தெள்ளத் தெளிவாக மாறியது. பேசுவதை இடையில் நிறுத்திவிட்டு தீவிரமாக அவளைப் பார்த்து, “நான் சில முக்கியமான விஷயங்களைப் பேசுவதற்காக வந்திருக்கிறேன் அம்மையீர்” என்றான். அவள் மெல்லிய குரலில், “நல்லது. உள்ளே வாருங்கள்” என்றாள். இரவு உணவு தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில் வந்ததால் அவனைப் பெருமகிழ்ச்சியுடன் அவளால் வரவேற்க இயலவில்லை.

வரவேற்பறைக்குள் நுழைந்தவன் அங்கிருந்த கைப்பிடிகளற்ற ஒரு நாற்காலியின் நுனியில் அமர்ந்து, கையிலிருந்த சூட்கேசைத் தன் கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டு அந்த அறையைப் பார்வையிட்டான். அது, அந்த அறையை வைத்து அவளை அவன் அளவீடு செய்வதைப் போலிருந்தது. இரண்டு தாழ்வான நிலையடுக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெள்ளித் தட்டுகள் பிரகாசமாக மின்னின. இவ்வளவு எழிலுடைய நேர்த்தியான ஒரு அறையை அவன் இதுவரை பார்த்திருக்கவே மாட்டான் என்று அவள் தனக்குள் முடிவுசெய்து கொண்டாள். “திருமதி ஹோப்வெல்” என்று பேசத் தொடங்கியவனின் குரல் மிக நெருக்கமானவர்களிடம் பேசுகின்ற தொனியில் ஒலித்தது. 

“நீங்கள் தேவாலயப் பணிகளில் நம்பிக்கை உடையவர் என்று எனக்குத் தெரியும்”.

“ஆமாம்” என்று முணுமுணுத்தாள்.

“எனக்குத் தெரியும்” எனச் சொல்லிவிட்டு நிறுத்தியவன், தன் தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான். அது, அதிபுத்திசாலியான ஒருவனைப் போல அவனைக் காட்டியது.

“நீங்கள் ஒரு நல்ல பெண்மணி. என் நண்பர்கள் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள்” என்றான்.

திருமதி ஹோப்வெல்லுக்கு யாராவது அவளை முட்டாளாக்க நினைத்தால் பிடிக்காது. 

“நீங்கள் எந்தப் பொருளை விற்பனை செய்ய வந்திருக்கிறீர்கள்?” என்றாள்.

“பைபிள்கள்” என்றவனின் கண்கள் அந்த அறையை வேகமாக நோட்டம்விட்டன.

“உங்கள் வீட்டின் வரவேற்பறையில் உங்கள் குடும்பத்தினருக்கான ஒரு பைபிள் இல்லை. அது ஒன்றுதான் இந்த இடத்தில் குறையாகத் தோன்றுகிறது” என்றான்.

“கடவுள் மறுப்பாளரான என் மகள் வீட்டின் வரவேற்பறையில் பைபிள் வைப்பதற்கு அனுமதிக்கவில்லை” என்று அவளால் சொல்ல முடியவில்லை.

“நான் என் பைபிளை என் படுக்கைக்குப் பக்கத்தில் வைத்துக்கொள்கிறேன்” என்று விறைப்பாகக் கூறினாள். பொய். அது வீட்டின் உட்புறக் கூரையில் எங்கோ கிடந்தது.

“அம்மையீர்! ஒரு பைபிள் வரவேற்பறையில் இருக்க வேண்டும்” என்றான்.

“அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. நான் என்ன நினைக்கிறேன் என்றால்….” என்று சொன்னவளை இடைமறித்து, “அம்மையீர்! கிறித்துவர்களைப் பொறுத்தவரை பைபிள் என்பது அவர்களுடைய இதயத்தில் இருப்பதோடு வீட்டின் ஒவ்வொரு அறையிலும் இருந்தாக வேண்டும். நீங்கள் ஒரு கிறித்துவர் என்று எனக்குத் தெரியும். உங்கள் முகத்தில் உள்ள ஒவ்வொரு வரியும் அதைச் சொல்கிறதே” என்றான்.

எழுந்து நின்றவள், “எனக்குப் பைபிள் வாங்க விருப்பமில்லை. அத்துடன் என் இரவு உணவு அடுப்பில் கருகிக்கொண்டிருக்கிறது” என்றாள்.

அவன் உடனே எழுந்திருக்காமல் தன் கைகளை மட்டும் முன்னும் பின்னுமாக அசைத்து, அவற்றைப் பார்த்தபடி மென்மையான குரலில், “இங்கே பாருங்கள் அம்மையீர். உங்களிடம் ஒரு உண்மையைச் சொல்கிறேன். இப்போதெல்லாம் யாரும் பைபிள் வாங்க ஆசைப்படுவதில்லை. அத்துடன் நான் மிக சாதாரணமான ஒரு மனிதன். ஒரு விஷயத்தை எப்படிச் சொல்லவேண்டும் என்றுகூட எனக்குத் தெரியாது. நான் ஒரு கிராமத்தான்” என்றான்.

தோழமை உணர்வற்ற அவளுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தவன், “உங்களைப் போன்ற நல்லவர்கள் என்னைப் போன்ற கிராமத்து ஆட்களிடம் எந்த விதமான  பரிவர்த்தனைகளையும் விரும்புவதில்லை”.

“மேட்டுக்குடி வர்க்கத்தினர் நேர்மையும் நாணயமும் மிக்கவர்கள்! அது மட்டுமின்றி நாமெல்லோருமே வெவ்வேறு விதமானவர்கள். இந்தப் பூமி சுழல்வதற்கு அத்தனை வகையான மனிதர்களும் தேவை. அதுதான் வாழ்க்கை” என்று இரைந்து பேசினாள்.

“மிகச் சரியாகச் சொன்னீர்கள்” என்றான்.

உணர்ச்சிவசப்பட்டவளாக, “உலகத்தில் போதுமான மேட்டுக்குடி வர்க்கத்தினர் இல்லாததுதான் பிரச்சினை என நான் நினைக்கிறேன்” என்றாள்.

அவனுடைய முகம் இப்போது பிரகாசமடைந்தது. “நான் இன்னும் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லையே! என் பெயர் மான்லி பாய்ண்டர். வில்லோஹோபியைச் சுற்றி அமைந்துள்ள ஒரு ஊரைச் சேர்ந்தவன். அதை ஒரு இடம் என்றுகூடச் சொல்ல இயலாது. பக்கத்தில் இருக்கிற ஒரு இடம். அவ்வளவுதான்” என்றான்.

“நீ கொஞ்சம் பொறு. நான் சமைத்துக்கொண்டிருந்த உணவை அடுப்பில் அப்படியே விட்டுவிட்டு வந்திருக்கிறேன். அது என்னாயிற்று என்று பார்க்க வேண்டும்” என்றாள்.

சமையலறைக்குச் சென்றவள் கதவருகே நின்று ஜாய் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தாள். “நேர்மை, நாணயம் போன்ற கதைகளையெல்லாம் விட்டுத் தொலையுங்கள். நாம் சாப்பிடலாம்” என்றாள்.

திருமதி ஹோப்வெல் வேதனையுடன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு காய்கறிகள் வெந்துகொண்டிருந்த அடுப்பை அணைத்தாள்.

“என்னால் யாரிடமும் கடுமையாக நடந்துகொள்ள முடியாது” என்று முணுமுணுத்தவள் மறுபடியும் வரவேற்பறைக்குள் நுழைந்தாள்.

அவன் சூட்கேசைத் திறந்து தன் இரண்டு கால் முட்டிகளின் மீதும் ஒரு பைபிள் வீதம் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

“உங்கள் நேர்மையான பேச்சை நான் பாராட்டுகிறேன். கிராமத்தைத் தேடிப் போனால் தவிர நேர்மையான மக்களைப் பார்க்க முடிவதில்லை” என்றான்.

“எனக்குத் தெரியும். அவர்கள்தான் உண்மையில் போலித்தனமற்ற ஆட்கள்” என்றபோது கதவின் சிறு விரிசல் வழியாக ஒரு முனகல் சத்தம் அவள் காதுகளில் விழுந்தது.

“இங்கு வரும் நிறைய இளைஞர்கள் கல்லூரியில் சேர முயல்வதாக உங்களிடம் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நான் அவ்வாறு சொல்லப் போவதில்லை. ஏனோ தெரியவில்லை. நான் கல்லூரிக்குப் போகவே விரும்பவில்லை. என் வாழ்வை நான் தேவாலயப் பணிக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என்றான். பிறகு குரலைத் தாழ்த்தி, “எனக்கு இதயத்தில் பிரச்சினை இருக்கிறது. நான் அதிக காலம் உயிர் வாழ மாட்டேன். நம்முடைய உடலில் எதோ சிக்கல், நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று நமக்குத் தெரிந்த பிறகு…” என்று சொல்லி நிறுத்திவிட்டு அவளை உற்றுப் பார்த்தான்.

அவனுக்கும் ஜாய்க்கும் ஒரே விதமான உடல்நலக் கோளாறு! தன்னுடைய கண்களில் நீர் பெருகுவது அவளுக்குத் தெரிந்தது. ஆனால் சமாளித்துக்கொண்டு மெல்லிய குரலில், “நீங்கள் எங்களுடன் இரவு உணவு உண்டபிறகு இங்கிருந்து கிளம்பலாமே! அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும்” என்றாள். அதைச் சொன்ன அடுத்த நொடியே அவள் வருத்தமடைந்தாள். கூச்சம் நிறைந்த குரலில், “நிச்சயமாக அம்மா. எனக்கும் அது மகிழ்ச்சியான ஒன்றே” என்றான்.

அறிமுகம் செய்துவைக்கப்பட்டதும் ஜாய் அவனை ஒரு பார்வை பார்த்ததோடு சரி, அதற்குப் பிறகு சாப்பிட்டு முடிக்கும்வரை அவன் பக்கம்கூடத் திரும்பவில்லை. அவளிடம் அவன் ஏதேதோ பேசியும்கூட அது தன் காதில் விழாதது போல அவள் நடித்தாள். ஜாயின் கடுகடுத்த தன்மையுடன் வாழப் பழகிவிட்டிருந்த திருமதி ஹோப்வெல்லால்கூட அவள் அதை வெளிப்படையாக அவனிடம் காட்டியதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

தன் மகளுடைய பண்பு நயமற்ற நடத்தையைச் சமாளிப்பதற்காகத் தன் விருந்தோம்பல் பொங்கி வழிய வேண்டியிருப்பதை நினைத்துப் பார்த்தாள். அவனைப் பற்றி மேலும் ஏதாவது பேசும்படி அவனை வற்புறுத்தினாள். பன்னிரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ஏழாவதாகப் பிறந்ததையும், அவனுக்கு எட்டு வயதிருக்கையில் அவனுடைய அப்பா மரத்துக்கு அடியில் சிக்கி மிக மோசமாக நசுங்கிப் போனதையும், இரண்டு துண்டுகளாக வெட்டுப்பட்டுக் கிடந்த அவருடைய உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறிப் போயிருந்ததையும் அவன் கூறினான். மிகக் கடுமையாக உழைத்த அவனுடைய அம்மா தன் குழந்தைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற பள்ளிக்கூடத்தில் கல்வி கற்க வைத்தாள். அத்துடன் மாலை நேரங்களில் தவறாமல் பைபிள் வாசிக்கச் செய்தாள். இப்போது அவனுக்குப் பத்தொன்பது வயதாகிறது. கடந்த நான்கு மாதங்களாக அவன் பைபிள் விற்பனை செய்துவருகிறான். அன்றைய தினம்வரை அவன் எழுபத்து ஏழு பைபிள்களை விற்பனை செய்திருந்தான். இன்னுமிரண்டு பைபிள்களை வாங்கிக்கொள்வதாக யாரோ உறுதியளித்திருந்தார்கள்.

மக்களுக்குச் சேவை செய்ய விரும்பியவன் அதற்கு ஒரே வழி சமய போதகராவதுதான் என்று நினைத்தான். “வாழ்வை இழந்தவன் அதை மீண்டும் அடைவான்” என்று இயல்பாகப் பேசியவனின் குரல் அவ்வளவு உண்மையாகவும், நேர்மையாகவும், தீவிரமாகவும் இருந்தது. அதைக் கேட்ட திருமதி ஹோப்வெல்லால் புன்னகைக்கவே இயலவில்லை. உணவுத்தட்டிலிருந்து மேஜை மீது உருண்டு விழ இருந்த பட்டாணிகளை ஒரு பிரட் துண்டை வைத்துத் தடுத்தவன், பிறகு தன்னுடைய தட்டைச் சுத்தப்படுத்த அந்தத் துண்டைப்  பயன்படுத்தினான். அவன் கத்தியையும் முள்கரண்டியையும் பயன்படுத்தும் விதத்தை ஜாய் ஓரக்கண்ணால் பார்ப்பதை திருமதி ஹோப்வெல் கவனித்தாள். ஜாயின் கவனத்தை ஈர்க்க முயல்வது போல பேரார்வத்துடன் இடையிடையே ஒரு அவசரப் பார்வையை அவள் மீது அவன் வீசிக்கொண்டிருந்ததும் திருமதி ஹோப்வெல் கண்ணில் பட்டது.

சாப்பிட்டு முடித்த பின் உணவு மேஜையின் மீதிருந்த பாத்திரங்களை அகற்றிய ஜாய் அடுத்த நொடியே அங்கிருந்து மறைந்துவிட்டாள். அந்த இளைஞன் ஹோப்வெல்லுடன் பேசுவதற்கான வாய்ப்பு இப்போது மறுபடி உருவாகியது. அவன் தன்னுடைய குழந்தைப் பருவம் குறித்தும், தன்னுடைய தந்தை விபத்தில் சிக்கியதைப் பற்றியும், அவருக்கு நேர்ந்த பல்வேறு விஷயங்களைக் குறித்தும் சொல்லிக்கொண்டிருந்தான். ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வந்த கொட்டாவியை வெளியே விட முடியாமல் அவள் திணறினாள். நகரத்தில் உள்ள ஒருவரைச் சந்திக்க முன்பே ஏற்பாடு செய்திருந்தததால் வெளியே கிளம்ப வேண்டும் என்று அவள் கூறும்வரையில் இரண்டு மணி நேரமாக அவன் அங்கேயே அமர்ந்திருந்தான். தன்னுடைய பைபிள்களை எடுத்துக்கொண்டு அவளுக்கு நன்றி கூறி அங்கிருந்து கிளம்புவதற்குத் தயாரானவன், வெளிப்புறக் கதவிற்குச் செல்லும் வழியில் நின்றபடி அவளுடைய கைகளை அழுந்தப் பற்றி, “நான் பைபிள் விற்பனை செய்யச் சென்ற எந்த இடத்திலுமே இப்படிப்பட்ட  இனிமையான ஒரு பெண்மணியைச் சந்தித்ததே இல்லை” என்று கூறியவன், “இங்கு நான் மறுபடி வரலாமா?” என்று கேட்டான். அவள் அவனைச் சந்திப்பது எப்போதும் தனக்கு மகிழ்ச்சி தரும் ஒன்று என்றாள்.

வெளியே நின்றுகொண்டிருந்த ஜாய் எங்கோ தொலைவில் பார்த்தபடி இருந்தாள். தன்னுடைய கனமான சூட்கேசின் பாரம் தாங்காமல் பக்கவாட்டில் சாய்ந்தபடி படிகளில் இறங்கி அவள் நின்றிருந்த இடத்தினருகே போய் அவளை எதிர்கொண்டான். அவன் பேசியது திருமதி ஹோப்வெல்லின் காதுகளில் விழவில்லை. ஆனால் ஜாய் அவனுக்கு என்ன பதில் சொல்லியிருப்பாள் என்ற நினைப்பே அவளை உடல் நடுங்க வைத்தது. ஒரு நிமிடத்திற்குப் பிறகு ஜாய் அவனிடம் ஏதோ சொல்வதும் அதற்கு அவன் தன்னுடைய கையால் உற்சாகமாக சைகை காட்டி பதில் சொல்வதும் அவளுக்குத் தெரிந்தது. ஒரு நிமிடத்திற்குப் பிறகு ஜாய் மறுபடி ஏதோ சொல்லவும் அந்த இளைஞன் அவளுக்கு மீண்டும் பதில் கூறுவதையும் பிறகு அவர்கள் இருவரும் கதவை நோக்கி ஒன்றாக நடந்துசெல்வதையும் பார்த்தாள். கதவு வரை, அதாவது அவ்வளவு நீண்ட தூரம், ஜாய் அவனுடன் நடந்து சென்றாள். அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை ஹோப்வெல்லால் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை. ஆனால் அதை ஜாயிடம் கேட்கவும் அவளுக்குத் துணிவில்லை.

குளிர்சாதனப் பெட்டிக்கு அருகே முதலில் நின்றிருந்த திருமதி ஃபிரீமேன், திருமதி ஹோப்வெல் தன்னைக் கவனிக்க வேண்டி, தண்ணீர் சூடாக்கும் கருவிக்கு அருகே நகர்ந்து திருமதி ஹோப்வெல் இருந்த இடத்திற்கு இன்னும் சிறிது நெருங்கி வந்தாள். அவள் சொல்வதைக் கவனிப்பதாகக் காட்டிக்கொள்வதற்காக திருமதி ஹோப்வெல் தன் கழுத்தை அவள் பக்கமாகத் திருப்பி உட்கார வேண்டியிருந்தது. 

“கிளைனீஸ் நேற்றிரவு மறுபடி ஹார்வி ஹில்லுடன் வெளியே சென்றாள். அவளுடைய கண்ணில் ஒரு சிறு கட்டி வந்திருக்கிறதாம்” என்றாள். அவன் யார் என்று சட்டென நினைவுக்கு வராத திருமதி ஹோப்வெல், “ஹில்! வாகனப் பழுதுபார்க்கும் இடத்தில் வேலை செய்கிறானே அவனா?” என்றாள். “இல்லை. இவன் வர்ம மருத்துவம் பயில்கிறான். அவளுக்கு மூன்று நாட்களாக கண் கட்டி இருக்கிறதாம். நேற்றிரவு அவளை வீட்டில் கொண்டுவந்து விடும்போது அவன், “நான் அதை அகற்ற முயல்கிறேன்” என்றான். அவள், “அது எப்படி முடியும்?” என்று கேட்டதற்கு, “நீ அந்தக் காரின் இருக்கையில் படுத்துக்கொள். அது எப்படி என்று நான் காண்பிக்கிறேன்” என்றதும் அவன் சொன்னது போலவே அவள் படுத்துக்கொண்டாள். அவனுடைய தலை அவளுடைய கழுத்துப் பகுதியருகே சென்றது. அவளுடைய கழுத்தை நெட்டி முறித்தான். அவள் அவனை அங்கிருந்து கிளப்பி அனுப்பும்வரை இவ்வாறு பல முறை நடந்தது. அவளுக்குக் கண் கட்டியெல்லாம் ஏதுமில்லை. அதற்கான ஒரு சிறு அறிகுறியும் அவளிடம் இல்லை” என்றாள் திருமதி ஃபிரீமேன். திருமதி ஹோப்வெல், “இதற்கு முன் நான் இப்படி ஒன்றைக் கேள்விப்பட்டதே இல்லை” என்றாள்.

திருமதி ஃபிரீமேன், “திருமணப் பதிவர் ஒருவரின் முன்னிலையில் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவன் கேட்டதற்கு, திருமணப் பதிவு அலுவலகத்தில் மணம் செய்துகொள்வதில் தனக்கு விருப்பமில்லை என்று கிளைனீஸ் சொல்லியிருக்கிறாள்”.

“கிளைனீஸ் அருமையான பெண்ணாயிற்றே? கிளைனீஸ், கரமேய் இருவருமே அருமையான பெண்கள்தான்” என்றாள் ஹோப்வெல்.

“லைமேனுக்கும் கரமேய்க்கும் திருமணம் நடந்த நேரத்தில் திருமணச் சடங்குகளை மிகப் புனிதமானதாக உணர்ந்ததாகவும், திருமணச் சடங்குகளை நடத்திய மத போதகர் ஐநூறு டாலர்களுக்கு மேல் வாங்கிக்கொள்ளவே மாட்டேன் என்று கூறியதாகவும் லைமேன் கரமேயிடம் கூறியிருக்கிறான்”.

அடுப்புக்கு அருகே நின்றிருந்த ஜாய், “எத்தனை டாலர்கள் வாங்கினாராம்?” என்று கேட்டாள்.

“ஐநூறு டாலர்களுக்கு மேல் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று அவர் சொன்னதாக லைமேன் கூறியிருக்கிறான்” என்று திருமதி ஃபிரீமேன் அதையே திரும்பச் சொன்னாள்.

“சரி. நம் அனைவருக்கும் இப்போது நிறைய வேலை இருக்கிறது” என்றாள் திருமதி ஹோப்வெல். 

“அப்போது அந்தச் சடங்குகள் மிகப் புனிதகரமானதாக லைமேனுக்குத் தோன்றியிருக்கிறது. கரமேய், மருந்துகளுக்குப் பதில் உலர வைக்கப்பட்ட பிளம் பழங்களைச் சாப்பிட வேண்டும் என்றும் அவளுடைய மன அழுத்தத்தினால்தான் தசைப்பிடிப்பு ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவளுடைய மன அழுத்தம் எதனால் உருவாகிறது என்று நான் நினைப்பது உங்களுக்குப் புரிகிறதா?” என்றாள் திருமதி ஃபிரீமேன்.

திருமதி ஹோப்வெல், “அவளுடைய உடல்நலம் சில வாரங்களில் தேறிவிடும்” என்றாள்.

“அவளொரு முட்டாள். இல்லையென்றால் அவள் உடல்நிலை இவ்வளவு மோசமாகி இருக்காது” என்றாள் திருமதி ஃபிரீமேன்.

ஓடுகள் நீக்கப்பட்ட இரண்டு முட்டைகளை ஒரு தட்டிலும், தளும்ப நிரப்பியிருந்த ஒரு காபிக் கோப்பையையும் எடுத்துக்கொண்டு வந்த ஹல்கா, அவற்றை மேஜை மீது வைத்துவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தாள். இது, அப்போது அங்கிருந்து கிளம்ப உத்தேசித்திருந்த திருமதி ஃபிரீமேனை நகரவிடாமல் செய்து, அவளிடம் எதாவது கேள்வி கேட்கத் தூண்டுவதாக இருந்தது. தன் அம்மாவின் கண்கள் தன் மீது நிலைத்திருப்பதை ஜாயால் உணர முடிந்தது. தன்னிடம் சுற்றி வளைத்துக் கேட்கப்படும் முதல் கேள்வி பைபிள் விற்க வந்தவனைக் குறித்ததாக இருக்கும் என்று யூகித்தாள். ஆனால் அவள் அதை விரும்பவில்லை என்பதால், “அவன் அவளுடைய கழுத்தருகே எப்படிப் பாய்ந்தான்?” என்று கேட்டாள்.

அவன் எப்படிப் பாய்ந்தான் என்று திருமதி ஃபிரீமேன் விளக்கமாகக் கூற ஆரம்பித்தாள். “அவனிடம் ஒரு மெர்குரி 55 ரக கார் இருக்கிறது. ஆனால், 36 பிளைமௌத் வகை கார் மட்டுமே வைத்திருந்தால்கூட போதும். ஆனால் மத போதகர் தலைமையில் திருமணம் செய்துகொள்கிற ஒருவனையே மணக்க விரும்புவதாகக் கிளைனீஸ் கூறுகிறாள்” என்றாள்.

ஜாய், “ஒருவேளை அவனிடம் ஒரு 32 பிளைமௌத் வகை கார் இருந்திருந்தால்?” என்று கேட்டாள்.

“36 பிளைமௌத் வகை கார் என்றுதான் கிளைனீஸ் சொன்னாள்” என்றாள் திருமதி ஃபிரீமேன்.

திருமதி ஹோப்வெல், “கிளைனீஸ் அளவுக்குப் பொதுப்படையான அறிவுள்ள ஒரு பெண்ணைப் பார்ப்பது அபூர்வம்” என்றாள்.

இளம் பெண்களிடமுள்ள பொதுப்படையான அறிவையே தான் மெச்சுவதாகக் கூறியவள், முன் தினம் அங்கு வந்திருந்த பைபிள் விற்பனை செய்யும் இளைஞன் இப்போது தன் நினைவுக்கு வருவதாகக் கூறினாள்.

“கடவுளே! பேசியே கொன்றுவிட்டான். ஆனால் அவன் நேர்மையானவனாகவும், போலித்தனமின்றியும் இருந்ததால் என்னால் அவனிடம் கடுமையாக நடந்துகொள்ள முடியவில்லை. அவனும் மேட்டுக்குடி வர்க்கத்தினன்தான். அதாவது மிகுந்த நேர்மையும் நாணயமும் உடையவன்” என்றாள்.

“அவன் இங்கிருந்து கிளம்பிச் செல்வதை நான் பார்த்தேன். அப்புறம்…. அவன் இங்கிருந்து கிளம்பிச் செல்வதை நான் பார்த்தேன்” என்ற திருமதி ஃபிரீமேனின் குரலில் இருந்த மெல்லிய மாற்றத்தில், அவன் தனியாக நடந்து செல்லவில்லைதானே என்ற உட்குறிப்பு தொக்கி நின்றது. ஜாயின் முகம் உணர்ச்சியற்று இருந்தாலும் அவளுடைய கழுத்துவரை சிவந்துவிட்டது. முட்டையோடு சேர்த்து அவள் அதை விழுங்கியது போலிருந்தது. அவர்கள் இருவருக்கு இடையே எதோ ஒரு இரகசியம் இருப்பது போல் திருமதி ஃபிரீமேன் அவளைப் பார்த்தாள்.

“இந்த உலகம் சுழல்வதற்கு எல்லா விதமான மனிதர்களும் தேவைப்படுகிறார்கள்” என்றாள் திருமதி ஹோப்வெல்.

திருமதி ஃபிரீமேன், “நாம் அனைவரும் ஒரே மாதிரி இல்லை என்பது மிக நல்ல விஷயம்” என்றாள்.

“ஆனாலும் சிலர் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள்” என்றாள் திருமதி ஃபிரீமேன்.

வழக்கத்தைவிட இரு மடங்கு ஓசையெழுப்பியபடி எழுந்த ஹல்கா தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டாள். பைபிள் விற்பனை செய்ய வந்தவனை அவள் அன்று பத்து மணிக்கு வாயிற் கதவருகே சந்திக்க உத்தேசித்திருந்தாள். பாதி இரவு இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தாள். முதலில் அதை ஒரு நகைச்சுவையாக நினைத்தவள், பிறகு அதில் நிகழக்கூடிய செயற்பாடுகளை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கத் தொடங்கினாள். அவர்களுக்கு இடையே நிகழக்கூடிய உரையாடல்களைக் கட்டிலில் படுத்தபடி கற்பனை செய்து பார்த்தாள். மேலோட்டமாக முட்டாள்தனமாகத் தெரிந்தாலும் பைபிள் விற்பனை செய்கிற ஒருவன் அறிந்திருக்க வாய்ப்பற்ற ஆழமான உரையாடல்களாக அவை இருந்தன. நேற்று அவர்கள் பேசியதுகூட இவ்வகையிலான ஒன்றுதான்.

அவளுக்கு எதிரே வந்ததும் நின்றவன், அசையாமல் அப்படியே நின்றபடியே இருந்தான். சதைப் பற்றில்லாத அவனுடைய முகம் வியர்வையுடனும் பிரகாசமாகவும் இருந்தது. அவனுடைய மூக்கு கூராக இருந்தது. உணவு மேஜையில் பார்த்ததைவிட அப்போது அவன் வேறு விதமாகத் தெரிந்தான். வியப்புடனும் ஈர்ப்புடனும் அவன் அவளை வெறித்துப் பார்த்தது, மிருகக்காட்சி சாலையில் உள்ள ஒரு அதியற்புத விலங்கை ஒரு குழந்தை உற்றுப் பார்ப்பதைப் போலிருந்தது. அவள் இருக்கும் இடத்தை அடைவதற்காக நெடுந்தொலைவு ஓடி வந்தவனைப் போல அவன் வேகமாக மூச்சு வாங்கினான். அவனுடைய பார்வையை இதற்கு முன்பே எங்கோ சந்தித்தது போலிருந்தாலும் எங்கே என்பது அவளுக்குச் சரியாக நினைவில்லை. கிட்டத்தட்ட ஒரு முழு நிமிடத்துக்கு அவன் எதுவும் பேசவில்லை. பிறகு மூச்சை உள்ளிழுப்பது போன்ற மெல்லிய குரலில், “சமைத்து இரு நாட்கள் ஆன கோழியை நீ எப்போதாவது சாப்பிட்டிருக்கிறாயா?” என்றான்.

உணர்ச்சியற்ற முகத்துடன் அவள் அவனைப் பார்த்தாள். அவன் இந்தக் கேள்வியை ஒரு தத்துவச் சமூகத்தினரின் கூட்டத்தினிடையே கருத்துக் கேட்புக்காக வைக்கலாம். அதை எல்லாக் கோணங்களிலும் பரிசீலித்துவிட்டதைப் போல அவள், “ஆம்” என்று மட்டும் அப்போதைக்கு பதில் சொன்னாள். தோள்களைக் குலுக்கிக்கொண்டு வெற்றியாளனைப் போன்ற குரலில், “அது மிக மிகச் சிறியதாக இருந்திருக்கும்” என்று அசட்டுத்தனமாகச் சிரித்தபடி பதற்றத்துடன் முகம் சிவக்கப் பேசினான். பிறகு அவளை மறுபடியும் பெருமிதத்துடன் பார்க்கத் தொடங்கினான். ஆனால் அவளுடைய முகபாவனையோ முன்போலவே எந்த உணர்ச்சிகளுமற்று இருந்தது.

“உனக்கு என்ன வயதாகிறது?” என்று மென்மையாகக் கேட்டான். அவள் உடனே பதில் சொல்லாமல் சிறிது நேரத்தைக் கடத்தி, பிறகு ஒரு தட்டையான குரலில் “பதினேழு” என்றாள். அதைக் கேட்டதும் ஒரு சிறிய ஏரியின் மேற்பரப்பில் அலை அடிப்பது போல அவன் முகத்தில் தொடர் புன்னகைகள் தோன்றித் தோன்றி மறைந்தன. “உன்னுடைய ஒரு கால், கட்டைக் காலாக இருப்பதை நான் கவனித்தேன். நீ தைரியமும் இனிமையுமுடையவள் என்று நான் நினைக்கிறேன்” என்றான். அவள் வெறுமையாக, அசைவற்று, அமைதியாக நின்றாள். “என்னுடன் முன் வாசல்வரை நடந்து வா. துணிச்சலும் இனிமையும் ஒருங்கே கொண்ட சிறு பெண்ணான உன்னை முதன் முதலில் கதவருகே பார்த்த அந்த நிமிடத்திலேயே எனக்குப் பிடித்துப்போய்விட்டது” என்றான். ஹல்கா முன்னோக்கி நடக்க ஆரம்பித்தாள். “உன்னுடைய பெயர் என்ன?” மறுபடியும் புன்னகைத்தபடி அவன் கேட்டான். அவள் “ஹல்கா” என்றாள்.

“ஹல்கா” என்று முணுமுணுத்தான். “ஹல்கா! ஹல்கா! இப்படியொரு பெயரை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதே இல்லை. நீ கூச்ச சுபாவிதானே?” என்று கேட்டான்.

மிகப் பெரிய சூட்கேசின் கைப்பிடியைப் பற்றியிருந்த அவனுடைய நீளமான சிவந்த கைகளைப் பார்த்தபடி அவள் தலையசைத்தாள். “மூக்குக் கண்ணாடி அணிந்த பெண்களை எனக்குப் பிடிக்கும். நான் நிறைய சிந்தனை செய்பவன். ஒரு தீவிரமான சிந்தனையைக்கூட தலைக்குள் ஏற்றிக்கொள்ளாத சிலரைப் போல நான் இல்லை. ஏனெனில் நான் சீக்கிரம் இறந்து விடுவேன்” என்றான். “நானும் இறந்துவிடுவேன்”. சட்டென அவளுடைய வாயிலிருந்து இந்தச் சொற்கள் வெளியே வந்துவிட்டன. 

மிகச் சிறியதாகவும் பழுப்பு நிறத்திலும் இருந்த அவனுடைய கண்கள் அதிர்ச்சியில் மினுங்கின. “நான் சொல்வதைக் கேள். ஒரே மாதிரியான கருத்துடையவர்கள், தீவிர சிந்தனைப் போக்குடையவர்கள் நிச்சயம் சந்தித்துக்கொள்வார்கள் என்பதை நீ யோசித்ததில்லையா?” அவன் தன்னுடைய ஒரு கையிலிருந்த சூட்கேசை இன்னொரு கைக்கு மாற்றிக்கொண்டு அவளுடைய கையைப் பற்றிக் குலுக்கினான். “நான் சனிக்கிழமைகளில் வேலை செய்வதில்லை. காடுகளுக்குள் நடந்துசென்று இயற்கை அன்னை என்ன ஆடை அணிந்திருக்கிறாள் என்பதைப் பார்க்க விரும்புவேன். மலைகளின் மீது நடப்பேன். நெடுந்தொலைவு செல்வேன். அது ஒரு சுற்றுலா போவது போலிருக்கும். நாளை அப்படியான ஒரு சுற்றுலாவுக்கு நாம் செல்வோமா? சரி என்று சொல்” என்றான். அவனுக்குள் இருந்து ஏதோ ஒன்று நழுவி வெளியே விழுவது போலவும், உயிரையே விட்டுவிடுவதைப் போலவும் ஒரு பார்வையை அவளை நோக்கி வீசினான். அவன் அவளை நோக்கி இலேசாகச் சாய்வது போலவும் அவளுக்குத் தோன்றியது.

அன்றிரவு அவன் அவளைப் பாலியல் ரீதியாக இச்சையூட்டுவது போல அவள் கற்பனை செய்து பார்த்தாள். அவர்கள் இருவரும் வயல்வெளிகளைக் கடந்து நெடுந்தொலைவில் இருந்த தானியக் கிடங்கு வரை ஒன்றாக நடந்து செல்வதாகக் கற்பனை செய்தாள். அவன் பாலியல் ரீதியாக எளிதாகத் தூண்டப்பட்டதில் விஷயங்கள் இந்த அளவில் வந்து நிற்பதாகவும், அடுத்ததாக இப்போது அவள் அவனுடைய கழிவிரக்கத்தைக் குறித்துச் சிந்தித்தாக வேண்டியிருக்கும் என்றும் அவள் கற்பித்துக்கொண்டாள்.

அதிபுத்திசாலித்தனம் மட்டும் இருந்தால் போதும். மிக மந்தகதியில் இயங்கும் மனதுக்குள்கூட சிந்தனையை அதனால் புகுத்திவிட முடியும். அவனுடைய கழிவிரக்கத்தைத் தன் கைகளில் வாங்கி அதை வாழ்வின் மீதான ஆழ்ந்த புரிதலாக மாற்றிவிட்டதாக அவள் கற்பனை செய்தாள். அவனிடமிருந்த மொத்த அவமான உணர்வுகளையும் விலக்கி அவற்றைப் பயனுள்ள புதிய ஒன்றாக மாற்றினாள்.

திருமதி ஹோப்வெல்லின் கவனத்தை ஈர்க்காது, சத்தங்காட்டாமல், மிகத் துல்லியமாகப் பத்து மணிக்கு வாயிற் கதவை நோக்கி நடந்தாள். சுற்றுலா செல்கையில் உணவு கொண்டுபோவது வழக்கம் என்பதை மறந்துவிட்டு, அவள் தன்னுடன் எந்த உணவையும் எடுத்துச் செல்லவில்லை. முழுக் காற்சட்டையும் அழுக்கேறி இருந்த வெள்ளை நிறச் சட்டையும் அணிந்துகொண்டாள். அவளிடம் வாசனை திரவியங்கள் ஏதுமில்லாததால் சிறு யோசனைக்குப் பின்னர் சட்டைக் காலரில் சிறிதளவு வேபக்ஸ் தடவிக்கொண்டாள். அவள் கதவருகே சென்றபோது அங்கு யாருமில்லை.

ஆளரவமற்ற நெடுஞ்சாலையின் இருபுறமும் எட்டிப் பார்த்தவள், தான்  ஏமாற்றப்பட்டுவிட்டதாக நினைத்தாள். அவனுடன் வாயிற்கதவு வரை அவள் நடந்துவர வேண்டும் என்ற தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வது மட்டுமே அவன் எண்ணமாக இருந்திருக்க வேண்டும் என நினைத்து கடும் சினமடைந்தாள். அப்போது அங்கிருந்த புதர் ஒன்றில் இருந்து திடீரென எழுந்து நின்று, தன்னுடைய புத்தம்புதிய அகலமான பெரிய தொப்பியை அவன் உயர்த்தினான். அதற்கு முன்தினம் அங்கு வந்திருந்த போது அதை அவன் அணிந்திருக்கவில்லை. ஒருவேளை இந்தச் சுற்றுலாவுக்காகவே அதைப் புதிதாக வாங்கினானோ என்று அவள் யோசித்தாள். பொன்னிறமும் பழுப்பும் கலந்த, சுற்றிலும் சிகப்பு  வெள்ளை நிறப் பட்டையுடன் இருந்த அந்தத் தொப்பி, அவனுக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தாமல் அளவில் சற்றுப் பெரியதாக இருந்தது. தன்னுடைய கருப்புநிற சூட்கேசுடன் புதருக்குப் பின்னிருந்து அவன் வெளியே வந்தான். முந்தைய தினம் அணிந்திருந்த அதே சூட்டும், அதே காலணிகளும், மஞ்சள் நிறக் காலுறைகளும் அணிந்திருந்தான்.

நெடுஞ்சாலையைக் கடந்து வந்தவன், “நீ நிச்சயம் வருவாய் என்று தெரியும்” என்றான். அவனுக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும் என்று அவள் யோசித்தாள். பிறகு சூட்கேசைக் காட்டி, “நீ ஏன் பைபிள்களையும் கொண்டு வந்தாய்?” என்று கேட்டாள். அவன் அவளுடைய கைகளைப் பற்றிக்கொண்டு அவளால் புறக்கணிக்க இயலாத ஒரு புன்னகையுடன், “கடவுள் நமக்கு எப்போது தேவைப்படுவார் என்று நம்மால் சொல்லவே முடியாது என்பதால்தான்” என்றான்.

இதெல்லாம் உண்மையில் நடந்துகொண்டிருக்கின்றவா என்று அவளுக்கு ஒரு நிமிடம் சந்தேகம் எழுந்தது. அவர்கள் அணையின் மேலேறி புல்வெளிகளில் இறங்கி காடுகளை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். படபடப்புடன் அவளுக்கு அருகே அவன் மெதுவாக நடந்துவந்தான். சூட்கேஸ் இன்று கனமாக இருப்பதாகத் தெரியவில்லை. அவன் அதைப் பக்கவாட்டில் அசைத்தபடி நடக்குமளவுக்கு அது இலகுவாக இருந்தது. பெரும்பகுதி மேய்ச்சல் நிலங்களைக் கடக்கும்ரை அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவளுடைய முதுகின் கீழ்ப்பகுதியின் மீது மென்மையாகக் கை வைத்தவன், “உன்னுடைய கட்டைக் கால் எந்த இடத்தில் இணைக்கப்பட்டுள்ளது?” என்று கேட்டான்.

அவளுடைய முகம் விகாரமாகச் சிவந்துவிட்டது. அவனைக் கோபத்துடன் முறைத்ததும் அவன் குற்ற உணர்வுக்கு ஆளாகியது தெரிந்தது.

“நான் உன்னைக் காயப்படுத்தும் எண்ணத்தில் அதைக் கேட்கவில்லை. நீ மிகுந்த துணிச்சல் உள்ள பெண். கடவுள் உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார்”.

” இல்லை” என்றவள் எங்கோ பார்த்தபடி வேகமாக நடக்க ஆரம்பித்தாள். “எனக்குக் கடவுள் நம்பிக்கை என்பதே இல்லை” என்றாள்.

இதைக் கேட்டதும் அப்படியே நின்றுவிட்டவன் அதிர்ச்சியில் சீழ்க்கை அடித்தான். பெரும் வியப்புடன் வேறெதுவும் சொல்லத் தோன்றாமல் “இல்லை!” என்று ஆச்சரியப்பட்டான். நடக்கத் தொடங்கிய அவளுக்கு அருகே துள்ளிச்சென்று தன்னுடைய தொப்பியால் விசிற ஆரம்பித்தான். ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தபடி, “பெண்கள் வழக்கமாக இது போலிருப்பதில்லை” என்றான். அவர்கள் காட்டின் எல்லையை அடைந்ததும் அவன் அவளுடைய முதுகின் மீது மறுபடி கையை வைத்து அவளைத் தன்னை நோக்கி இழுத்து ஒரு வார்த்தை பேசாமல் அவளை ஆழ்ந்து முத்தமிட்டான்.

உணர்ச்சிகளைவிட அழுத்தம் அதிகமாக இருந்த அந்த முத்தம் அவளுடைய உடலில் அதிகளவு அட்ரலினைச் சுரக்க வைத்தது. தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கிற ஒரு வீட்டின் பொருட்களை ஒரு பெட்டி முழுக்க நிரப்பி எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வருமளவுக்குச் சக்தி மிகுந்ததாக அது இருந்தது. ஆனால் அந்த ஆற்றல் முழுவதும் உடனடியாக அவளுடைய மூளைக்கே சென்றது. அவன் அவளை விடுவிக்கும் முன்பே அவளுடைய சிந்தனை தெளிவாகவும் ஈடுபாடு இல்லாமலும் இருந்தது. அது மட்டுமல்லாமல் அந்தச் சூழலுக்கு முரண்பட்டு, மனதளவில் அவனை விட்டு நெடுந்தொலைவு சென்ற அவளுடைய சிந்தனை கிளர்ச்சியுடனும் அதே நேரத்தில் பரிதாபத்துடனும் அவனைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தது. அவளை இதுவரை யாரும் முத்தமிட்டதேயில்லை. இது ஒரு மிகச் சாதாரணமான அனுபவமே என்பதும், மனதின் கட்டுப்பாட்டில்தான் எல்லா விஷயங்களும் அடங்குகின்றன என்பதையும் அறிந்துகொண்டதில் அவள் இப்போது மகிழ்ச்சி அடைந்தாள். வோட்கா என்று சொல்லிவிட்டால் சாக்கடைத் தண்ணீரைக்கூட சிலரால் மகிழ்ச்சியுடன் அருந்த முடியும். எதிர்பார்ப்பும் அதே சமயத்தில் அவளுடைய விருப்பத்தைக் குறித்து சிறிது சந்தேகமும் இருந்தது போல அவளைத் தன்னிடம் இருந்து அவன் மெல்ல விலக்கினான். இதெல்லாம் தனக்கு சகஜமான ஒன்று என்பதாக எதுவும் பேசாமல் வெகு இயல்பாக அவள் தொடர்ந்து நடக்கத் தொடங்கினாள்.

அங்கிருந்த ஒரு மரத்தின் வேர் தடுக்கி அவள் கீழே விழுந்துவிடக்கூடும் என்பதற்காக அவன் மூச்சிறைக்க பக்கவாட்டில் ஓடிவந்தான். தொங்கிக்கொண்டிருந்த நீளமான முட்செடிகளின் கூர்விளிம்புகளை அவள் கடந்து செல்லும் வரை தன் கைகளில் பிடித்துக்கொண்டிருந்தான். அவள் முன்னே செல்லச் செல்ல அவன் மூச்சிறைக்க பின்னால் ஓடி வந்தான். பிறகு அவர்கள் சூரிய ஒளி பரவிக் கிடந்த ஒரு மலைப்பகுதியை அடைந்தார்கள். அது இன்னொரு சிறு குன்றின் மீது இலேசாகச் சாய்ந்து கிடந்தது. மீதமான வைக்கோல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பழைய தானியக் கிடங்கின் துருபிடித்த கூரையை அவர்கள் கண்டார்கள். 

மலை முழுதும் வெளிர் சிவப்பு நிற களைச்செடிகள் தூவப்பட்டாற் போலிருந்தன. நடந்துகொண்டே இருந்து திடீரென ஓரிடத்தில் நின்றவன் அவளிடம், “நீ பாதுகாக்கப்படவில்லை என்கிறாயா?” எனக் கேட்டான்.

அவள் புன்னகை செய்தாள். அவனைப் பார்த்து அவள் புன்னகை செய்தது இதுவே முதல்முறை. “என் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டால் நான் பாதுகாக்கப்பட்டிருக்கிறேன் எனலாம். நீயோ நிந்திக்கப்பட்டிருக்கிறாய். ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றுதான் நான் உன்னிடம் முன்பே கூறியிருக்கிறேனே?”. அவன் முகத்தில் அவளைக் குறித்த ஒரு பெருமிதம் இருந்துகொண்டே இருந்தது. அவள் பேசிய எந்தச் சொற்களாலும் அதை அழிக்க முடியவில்லை. மிருகக்காட்சிச் சாலையில் இருந்த அதி அற்புத விலங்கொன்று கம்பிகளின் ஊடாகத் தன் பாதத்தை நீட்டி அவனை அன்பாகத் தொட்டது போல அவளை உற்றுப் பார்த்தான். அவன் அவளை மறுபடி முத்தமிட விரும்பியதாக நினைத்துக்கொண்டவள் அவனுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாக நடக்கத் தொடங்கினாள்.

“நாம் உட்கார்வதற்கு இங்கு எங்காவது இடம் இருக்கிறதா?” என்று மென்மையான குரலில் அவன் முணுமுணுத்தான். “அந்த தானியக் கிடங்குக்குப் போய் உட்காரலாம்” என்றாள்.

பார்வையிலிருந்து வேகமாக மறைந்துவிடக் கூடிய ஒரு விரைவு ஊர்தியைப் பிடிப்பது போல அவர்கள் அதிவிரைவாக ஓடிச்சென்று அதை அடைந்தார்கள். பரண் மேல் ஏறுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஏணியைச் சுட்டிக் காட்டியவன், “நாம் அங்கு போக முடியாது என்பது வருத்தமான விஷயம்” என்றான். 

“ஏன் போக முடியாது?”

அவன் பயபக்தியுடன், “உன்னுடைய கால்!” என்றான்.

அவனை அலட்சியத்துடன் பார்த்தவள், தன்னுடைய இரண்டு கைகளாலும் ஏணியைப் பிடித்தபடி மேலேறத் தொடங்கினாள். திகைத்துப் போனவனாக கீழே நின்று அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். மேலேறியவள் அந்தக் களஞ்சியத்தின் மேற்கூரையை இலாவகமாக அடைந்த பிறகு கீழே நின்றிருந்த அவனிடம், “வருவதானால் வா” என்றாள். அவன் அந்த சூட்கேசையும் எடுத்துக்கொண்டு ஏணியில் ஏறத் தொடங்கியது விசித்திரமாக இருந்தது.

“உனக்கு இப்போது பைபிள் தேவைப்படாது” என்றாள்.

அவன் மூச்சிறைத்தபடி, “அப்படி நம்மால் சொல்லவே முடியாது” என்றான். பரண் மீது ஏறிய பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அவனுக்குச் சில நொடிகள் தேவைப்பட்டன. அங்கிருந்த வைக்கோல் குவியலின் மீது அவள் அமர்ந்துகொண்டாள். தூசு நிரம்பிய சூரிய வெளிச்சம் அவள் மீது படர்ந்தது. சரக்கு வண்டியில் கொண்டுவரப்படும் வைக்கோல், மின் இயந்திரத்தின் உதவியுடன் தானியக் களஞ்சியத்தின் பரணில் வீசப்படும். அந்தத் தானியக் களஞ்சியத்தின் நுழைவாயிலைப் பார்த்தபடி ஒரு பெரிய வைக்கோல் பொதி மீது அவள் சாய்ந்து அமர்ந்திருந்தாள். மரங்கள் அடர்ந்த காடுகளின் பின்னணியில் வெளிர் சிவப்புநிறப் புள்ளிகள் கொண்ட இரண்டு குன்றுகள் தெரிந்தன. வானம் மேகங்களற்று நீல நிறமாக இருந்தது. அவளருகே அமர்ந்து அவள் தோள்களின் மீது தன் கைகளைப் போட்டுக்கொண்டு மீன்கள் சத்தமிடுவது போன்ற ஓசையுடன் அவளுடைய முகத்தில் ஒவ்வொரு இடமாக முத்தமிடத் தொடங்கினான். அவன் தொப்பியை அகற்றியிராத போதும் அவர்களுக்குத் தடங்கலாக இல்லாத அளவுக்கு அது பின்பிக்கமாக நகர்ந்திருந்தது. அவளுடைய கண்ணாடி அவனுக்கு இடையூறாக இருந்ததால் அவன் அதைக் கழற்றி தன்னுடைய பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டான்.

அவனுடைய முத்தங்களுக்குத் தன் உதடுகளால் பதில் அளிக்காமலேயே இருந்தவள், அவனுடைய கன்னங்களில் நிறைய முறை முத்தமிட்ட பிறகு அவனுடைய உதடுகளை அடைந்தாள். மீண்டும் மீண்டும் முத்தமிட்டபடி அந்த உதடுகளிலேயே தங்கிப்போனாள். அவனிடம் இருந்த மொத்த மூச்சையும் அவள் தன்னுள் செலுத்திக்கொள்ள முயல்வதைப் போலிருந்தது. அவனுடைய சுவாசம் தெளிவாகவும் ஒரு குழந்தையினுடையதைப் போல இனிமையாகவும் இருந்தது. அவனுடைய முத்தம்கூட ஒரு குழந்தையின் ஈரமான முத்தம் போலிருந்தது. அவன் அவளைக் காதலிப்பதாகவும் அவளை முதன்முதலில் பார்த்தபோதே அவளைக் காதலிப்பதை உணர்ந்துகொண்டதாகவும் குழறினான். அம்மாவால் தூங்க வைக்கப்படும் குழந்தை பாதித் தூக்கத்தின் இடையில் மிழற்றுவதைப் போலத்தான் அந்தக் குழறலும் இருந்தது. இவை அனைத்தும் நடந்துகொண்டிருந்த போது ஒரு வினாடிகூட அவளுடைய மூளை தன் கட்டுப்பாட்டை இழக்கவோ சிந்திப்பதை நிறுத்தவோ இல்லை.

“நீ என்னைக் காதலிப்பதாகச் சொல்லவேயில்லை” என்றபடி அவளிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, “நீ என்னை காதலிப்பதாகச் சொல்லேன்” என்று கிசுகிசுத்தான்.

அவனிடம் இருந்து தன் பார்வையை விலக்கிக்கொண்டவள் மேகங்களற்று வெறுமையாக இருந்த வானத்தையும், கறுத்த மலைப்பாதையையும், நெடுந்தொலைவில் இருந்த நீர் நிறைந்து ததும்பும் இரண்டு பசியநிற ஏரிகளையும் பார்த்தாள். கண்ணாடியில்லாமல் இருந்ததை அவள் உணரவில்லை. ஆனால் இந்த நிலப்பரப்பு அவளுக்கு அசாதாரணமான ஒன்றாக இல்லை. ஏனெனில் தன்னைச்சுற்றி இருப்பவற்றை அவள் எப்போதுமே கூர்ந்து கவனிப்பதில்லை.

“நீ சொல்லியாக வேண்டும். என்னைக் காதலிப்பதாக நீ சொல்லியே ஆக வேண்டும்” என்று அவன் மறுபடியும் கூறினான். எந்தவொரு செயலிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள உத்தரவாதம் தரும் முன்னர் அவள் எப்போதுமே கவனமாக இருப்பாள்.

“ஒரு விதத்தில்… அந்தச் சொல்லை மேம்போக்காகப் பயன்படுத்தினால் அப்படி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்தச் சொல்லை நான் பயன்படுத்துவதில்லை. மாயத்தோற்றங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. இன்மையின் ஊடாக அனைத்தையும் பார்ப்பவர்களுள் நானும் ஒருத்தி” என்றாள். 

அவன் முகஞ்சுழித்தான். “நீ சொல்லித்தான் ஆகவேண்டும். நான் சொல்லிவிட்டேன். நீயும் சொல்” என்றான். அவள் மிக மென்மையாக அவனைப் பார்த்தாள். “நீ ஒரு பாவப்பட்ட ஜீவன்” என்று முணுமுணுத்தாள்.

“உனக்குப் புரியாமல் இருப்பது நல்லது” என்று அவனுடைய கழுத்தில் கைவைத்து இழுத்து அவனைத் தன் மீது சாய்த்துக்கொண்டாள்.

“நாம் எல்லோருமே சபிக்கப்பட்டவர்கள். ஆனால் ஒரு சிலர் நம் கண் கட்டுகளை விடுவித்துவிட்டோம். பார்ப்பதற்கு எதுவும் இல்லை என்பதைக் கண்டுகொண்டோம். அது ஒருவிதமான விடுதலை” என்றாள். தன் முகத்துக்கு எதிரே படர்ந்துகிடந்த அவளுடைய தலைமுடியின் முனைகள் வழியே அவனுடைய கண்கள் வியப்புடன் அவளைப் பார்த்தன.

அவன், “அதெல்லாம் சரி. நீ என்னைக் காதலிக்கிறாயா இல்லையா?” என்று கிட்டத்தட்ட அழுதுவிடும் குரலில் கேட்டான்.

“ஆமாம். ஒருவிதத்தில்! ஆனால் நான் உனக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். நமக்கு இடையே நேர்மையின்மை என்பது எந்த விதத்திலும் இருக்கக்கூடாது” என்றவள், அவனுடைய தலையை மேல்நோக்கி இழுத்து அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள். “எனக்கு முப்பது வயதாகிறது. நான் ஏகப்பட்ட படிப்பு படித்திருக்கிறேன்” என்று தன்னைப் பற்றிய உண்மையைக் கூறியதைக் கேட்டு எரிச்சலுற்றவனாகத் தெரிந்தாலும் அவன் விடாப்பிடியாக இருந்தான். “எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. நீ என்னவெல்லாம் படித்திருக்கிறாய் என்பதைப் பற்றியெல்லாம் எனக்கு ஒரு துளி கவலையும் இல்லை. நீ என்னைக் காதலிக்கிறாயா இல்லையா? அது மட்டும்தான் எனக்குத் தெரிய வேண்டும்” என்றவன், அவளைப் பிடித்துத் தன் பக்கமாக இழுத்து தொடர்ந்து அவள் முகத்தில் முத்தமிட்டபடி இருந்தான்.

அவள், “ஆமாம், ஆமாம்” என்றாள். “சரி” என்றவன் தன்னுடைய கைப்பிடியை மெல்லத் தளரவிட்டான். 

“அப்படியானால் அதை நிரூபி” என்றான். அவள் கனவு மிதக்கும் கண்களால் புன்னகைத்தபடி அந்த நிலப்பரப்பைப் பார்த்துக்கொண்டிருந்தாள். எந்த முயற்சியும் செய்யாமல் அவனைப் பாலியல் ரீதியாக அவள் தூண்டியிருப்பதை உணர்ந்தாள். 

“எப்படி?” என்று கேட்டாள்.

இன்னும் சிறிது நேரம் இதைத் தள்ளிப் போடவேண்டும் என்று நினைத்தாள். அவள் மீது சாய்ந்து அவள் காதருகே தன்னுடைய உதட்டை வைத்தவன், “உன்னுடைய கட்டைக் கால் எங்கு இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காண்பி” என்று கிசுகிசுத்தான். அவள் கிரீச்சிட்டாள். அவளுடைய முகம் வெளிறிப்போனது. ஆனால் அவனுடைய பேச்சில் இருந்த விரசம் அவளுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. சில அவமானகரமான தருணங்களை அவள் சிறுவயதில் கடந்து வந்திருக்கிறாள். ஆனால் ஒரு சிறந்த மருத்துவர் புற்றுநோயின் சிறு தடயங்களையும் சுரண்டியெடுத்து நீக்குவதைப் போல அவள் பெற்ற கல்வி அந்த அவமானங்களின் இறுதித் தடம்வரை அழித்திருந்தது. அவள் எப்படி பைபிளை நம்பவில்லையோ, அதே போல அவன் கேட்ட விஷயமும் அவளிடம் எந்த உணர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்திருக்காது. ஆனால் மயிலுக்குத் தோகை போல அந்தச் செயற்கைக் கால் அவளை உணர்ச்சிவசப்பட வைக்கும் ஒரு விஷயம். அவள் தன்னைத் தவிர வேறு யாரையும் அதைத் தொடவிட்டதே இல்லை. ஒருவர் தனிமையிலும் தன் ஆன்மாவைப் பேணிப் பாதுகாப்பது போல அவள் அதைக் கவனமாகப் பொத்தி வைத்துப் பாதுகாத்து வந்தாள்.

கண்களை வேறு பக்கம் திருப்பியவாறு, “முடியாது” என்றாள்.

உடனே எழுந்து உட்கார்ந்துகொண்டவன், “எனக்குத் தெரியும். என்னை ஏமாளி என்று நினைத்து என்னுடைய உணர்ச்சிகளுடன் நீ விளையாடிக்கொண்டிருக்கிறாய்” என்று முணுமுணுத்தான்.

“இல்லையில்லை” என்று அவசரமாகக் கூச்சலிட்டவள், “அது என் கால் மூட்டில்தான் இணைக்கப்பட்டுள்ளது. கால் மூட்டில்தான். நீ ஏன் அதைப் பார்க்க விரும்புகிறாய்?” எனக் கேட்டாள்.

அவன் அவளுடைய கண்களை நீண்ட நேரம் ஊடுருவிப் பார்த்தான். “ஏனென்றால் அதனால்தான் நீ வித்தியாசமானவளாக இருக்கிறாய். நீ மற்ற யாரைப் போலவும் இல்லை”.

அவள் அசையாது அமர்ந்தபடி அவனை வெறித்துப் பார்த்தாள். அவனுடைய இச்சொற்கள் அவளை உணர்ச்சிவசப்பட வைத்ததற்கான எந்த அறிகுறியும் அவளுடைய முகத்திலோ, உறைந்து போய்க் கிடந்த  வட்ட வடிவ நீலக் கண்களிலோ இல்லை. ஆனால் உண்மையில் அவளுக்குத் தன் இதயத்துடிப்பே நின்றுவிட்டது போலிருந்தது. தன் சிந்தனையின் மூலமாகத் தன்னுடலின் இரத்த ஓட்டத்தை அவள் சீராக்கினாள். தன் வாழ்நாளில் முதன்முறையாக அசலான ஒரு அப்பாவித்தனத்தை எதிர்கொள்வதாக அவள் முடிவுசெய்தாள். கூர்மையான அறிவைக் கடந்த உள்ளுணர்வுடன் இருந்த இந்த இளைஞன் அவளைப் பற்றிய பேருண்மையைக் கண்டடைந்துவிட்டான். 

சில நொடிகளுக்குப் பிறகு கரகரப்பான உரத்த குரலில் அவள், “சரி” என்றது அவனிடம் முழுவதுமாகத் தன்னை ஒப்புக்கொடுப்பதாக இருந்தது. இழந்த தன்னுயிரை அதிசயிக்கத்தக்க வகையில் அவனிடம் மீண்டும் காண்பது போல அது இருந்தது.

விறைப்புடன் இருந்த அந்தக் காலை மிக மெதுவாக உயர்த்தத் தொடங்கினான். வெண்ணிறக் காலுறையுடனும் பழுப்பு நிறத்தில் தட்டையான காலணியுடனும் இருந்த அந்தச் செயற்கை மூட்டு, கனமான கான்வாஸ் போன்ற ஒரு பொருளுடன் பிணைக்கப்பட்டிருந்தது. ஒரு குச்சியுடன் இணைக்கப்பட்டிருந்த அது, மூட்டுகள் இணையும் பகுதியில் முடிவுற்றது. அதைத் தனியே பிரித்தெடுத்த அந்த இளைஞனின் முகத்தில் கருணை பொங்கியது. “இதை எப்படிக் காலுடன் பொருத்திக்கொள்வது, எப்படி வெளியே எடுப்பது என்பதைச் செய்து காண்பி” என்றான்.

அவள் அதை வெளியே எடுத்து மறுபடி பொருத்திக் காட்டினாள். அதன் பிறகு அவனே அதைக் கழற்றினான். இயற்கையான காலைப் போல அவ்வளவு மென்மையாக அதைக் கையாண்டான். 

ஒரு பச்சைக் குழந்தையின் குதூகலமான புன்னகையுடன், “பார்த்தாயா! இப்போது என்னாலும் இதைச் செய்ய முடியும்” என்றான்.

“அதைத் திரும்பப் பொருத்து” என்றாள். 

இந்த ஊரிலிருந்து ஓடிப்போய் எங்கோ ஒரு இடத்தில் அவனுடன் வசிக்கப் போவதாகவும், ஒவ்வொரு இரவும் அவன் அதை வெளியே எடுத்து வைத்துவிட்டு, பிறகு காலையில் மீண்டும் பொருத்தி விடுவான் என்றெல்லாம் அவள் நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

மீண்டுமொருமுறை”அதைப் பொருத்து” என்றாள்.

“இரு இரு” என்று முணுமுணுத்தவன், அவளுடைய கைக்கெட்டாதவண்ணம் அதைத் தொலைவில் வைத்துவிட்டு, “சிறிது நேரம் அது அங்கேயே இருக்கட்டும். அதற்குப் பதில் உனக்கு நானிருக்கிறேனே” என்றான். அவள் கூச்சலிட்டாள். ஆனால் அவனோ அவளைக் கீழே தள்ளி மறுபடி முத்தமிடத் தொடங்கினான். செயற்கைக் கால் இல்லாததால் அவளால் தனித்து எதையும் செய்ய முடியாமல் முழுவதுமாக அவனைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அவளுடைய மூளை சிந்திப்பதைச் சுத்தமாக நிறுத்திவிட்டு தனக்கு அவ்வளவாக பழக்கமில்லாத வேறொரு வேலையில் ஈடுபட்டிருந்தது. வெவ்வேறு விதமான முகபாவனைகள் அவளுடைய முகத்தில் முன்னும் பின்னுமாக அதிவேகமாகத் தோன்றி மறைந்தன. இடையிடையே அவனுடைய முகம் இரண்டு கூரான ஈட்டிகளைப் போல ஒளிர்ந்தபடி அந்தச் செயற்கைக் கால் நின்றுகொண்டிருந்த இடத்தை ஒரு பார்வை பார்த்துக்கொண்டது.

இறுதியில் அவள் அவனைக் கீழே தள்ளிவிட்டு, “அதை இப்போது மீண்டும் பொருத்தி விடு” என்றாள். அவன், “பொறு” என்றான். மற்றொரு புறமாகச் சாய்ந்து தன்னை நோக்கி சூட்கேசை இழுத்து அதைத் திறந்தான். வெளிர் நீல நிறப் புள்ளிகளுடைய ஒரு மிருதுவான துணி அதன் உட்பரப்பை மூடியிருந்தது. அதனுள் இரண்டு பைபிள்கள் மட்டுமே இருந்தன. அவற்றுள் ஒன்றை எடுத்தவன், அதன் அட்டையைத் திறந்தான். அது தாள்கள் ஏதுமற்று காலியாக இருந்தது. அதனுள் ஒரு பாக்கெட் ஃபிளாஸ்க் விஸ்கியும், ஒரு சீட்டுக் கட்டும், ஏதோவொரு படம் அச்சிடப்பட்ட சிறிய நீல நிறப் பெட்டியும் இருந்தன. ஒவ்வொன்றாக, சீரான இடைவெளியில் அவளுக்கெதிரே அவற்றை வரிசையாகப் பரப்பி வைத்தான். அவன் அவ்வாறு செய்தது இறைவியின் சன்னதியில் படையல் இடுவது போலிருந்தது. நீல நிறப் பெட்டியை அவளுடைய கையில் வைத்தான். அந்தப் பெட்டியின் மீது ‘இதிலுள்ள பொருள் நோயைத் தவிர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்’ என்று எழுதியிருந்தது.

அவள் அதைக் கீழே போட்டாள். அவன் அந்த ஃபிளாஸ்கின் மூடியைத் திறக்கத் தொடங்கினான். பிறகு இடையில் நிறுத்தியவன், புன்னகைத்தபடி சீட்டுக் கட்டுகளைச் சுட்டிக்காட்டினான். அது ஒரு சாதாரண சீட்டுக்கட்டாக இல்லாமல் ஒவ்வொரு சீட்டும் அதன் பின்புறத்தில் ஒரு ஆபாசப் படத்துடன் இருந்தது. “நீயும் ஒரு மிடறு குடி” என்று அவளை நோக்கி மதுக்குப்பியை நீட்டியவன், நீட்டிய கையுடன் அப்படியே சில நிமிடங்கள் நின்றிருந்தான். ஆனால் வசியப்படுத்தப்பட்டாற் போல அவள் அசையவே இல்லை.

கெஞ்சுவது போன்ற ஒரு குரலில், “நீ மேட்டுக்குடியைச் சேர்ந்த ஒருவன்தானே?” என்று கேட்டாள். அவன் தலையை உயர்த்திப் பார்த்தான். அவள் தன்னை அவமானப்படுத்த முயல்கிறாளோ என்று அவன் அப்போதுதான் யோசிக்க ஆரம்பித்தது போலிருந்தது. தன் உதடுகளை மெதுவாக உட்புறமாக மடித்தபடி, “ஆமாம். ஆனால் அது எவ்விதத்திலும் என்னைத் தடுக்கவில்லை. நானும் கிட்டத்தட்ட உன்னைப் போல்தான்” என்றான்.

“என்னுடைய காலைத் தா” என்று கேட்டாள்.

தன் காலால் அதை இன்னும் சிறிது தூரம் தள்ளிவிட்டான். “அட! வா! நாம் சந்தோஷமாக இருப்போம். இன்னும் நாம் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்ளவில்லையே” என்று நைச்சியமாகப் பேசினான்.

“என் காலைத் தா” என்று அலறியபடி அவள் அதைப் பாய்ந்து எடுக்க முயன்றாள். ஆனால் அவளை மிக எளிதாக அவன் கீழே தள்ளிவிட்டான்.

“திடீரென உனக்கு என்னாயிற்று? சிறிது நேரத்திற்கு முன்னர்தான் உனக்கு எதன் மீதும் நம்பிக்கை இல்லை என்றாய். உன்னை ஒரு வித்தியாசமான பெண் என்று நினைத்தேனே” என்று முகம் சுழித்தபடி ஃபிளாஸ்கின் மூடியைத் திருகத் தொடங்கியவன், அதை வேகமாக பைபிளுக்குள் வைத்தான்.

அவளுடைய முகம் சிவந்துவிட்டது. “நீ ஒரு கிறித்துவன். நீ ஒரு நல்ல கிறித்துவன். நீயும் அவர்கள் எல்லோரையும் போலத்தானிருக்கிறாய். சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. நீ ஒரு மாசற்ற கிறித்துவன். நீ…..” என்று அவள் சொல்லிக்கொண்டிருந்தபோது அவன் கோபத்துடன், “இது போன்ற பைத்தியக்காரத்தனமான விஷயங்களை நான் நம்புவேன் என்று நீ நினைக்கிறாயா என்ன?” என்று கொதிப்புற்ற தொனியில் கேட்டான். “நான் பைபிள் விற்றாலும் அனைத்தையும் பகுத்தறியும் ஆற்றல் எனக்கிருக்கிறது. அத்துடன் நான் குழந்தையில்லை. நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும்” என்று தற்பெருமையடித்தான். 

அவள் கிரீச்சிட்ட குரலில், “என் காலைத் தா” என்று சத்தமிட்டாள். சீட்டுக்கட்டுளையும் நீலநிறப் பெட்டியையும் மறுபடி பைபிளுக்குள் திணித்து, பைபிளை சூட்கேசுக்குள் எறிந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அதிவேகமாக அவன் அங்கிருந்து கீழே குதித்தான். அவன் அந்த செயற்கைக் காலை விரைந்து கையில் எடுப்பது தெரிந்தது. அதன் பிறகு, சூட்கேசினுள் இருபக்கமும் வைக்கப்பட்டிருந்த இரண்டு பைபிள்களின் மீது அந்தச் செயற்கைக் காலின் எதிரெதிர் முனைகள், கைவிடப்பட்ட நிலையில் சாய்த்து முட்டுக்கொடுத்து வைக்கப்படுவது ஒரே ஒரு நொடி அவள் கண்களில் பட்டது. அவன் சூட்கேசின் மேற்பகுதியை அழுந்த மூடி, அதைக் கைகளில் எடுத்து முன்னும் பின்னுமாக ஆட்டியபடியே அங்கிருந்த குழிக்குள் அதை வீசிவிட்டு அவனும் அதில் இறங்கினான். அந்த இடத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்த அவன் உருவம் மறைந்து இப்போது அவனுடைய தலை மட்டுமே அவள் பார்வைக்குக் கிடைத்தது. அவன் அங்கு நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான். அப்போது அந்தக் கண்களில் ஒரு துளி பெருமிதமும் இல்லை.

“என்னிடம் சுவாரசியமான பொருட்கள் நிறைய உள்ளன. இதேபோல ஒரு முறை ஒரு பெண்ணுடைய செயற்கைக் கண்ணை இதே விதமாக நான் அடைந்தேன். என்னைக் கைது செய்துவிடலாம் என்று நீ யோசிக்காதே. ஏனெனில் பாய்ண்டர் என்பது என்னுடைய நிஜப்பெயரே இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் நான் ஒவ்வொரு பெயரைப் பயன்படுத்துகிறேன். எந்த இடத்திலும் நான் நீண்டகாலம் தங்குவதில்லை. அத்துடன் உன்னிடம் இன்னொரு விஷயத்தையும் நான் சொல்ல வேண்டும், ஹல்கா!”

அந்தப் பெயரை அதுவரை ஒருமுறைகூட நினைத்தே பார்த்திராதது போல அவன் அதை உச்சரித்தான். “நீ ஒன்றும் புத்திசாலி இல்லை. நான் பிறந்த பொழுதிலிருந்தே எதன் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை” என்றான். பொன்னிறமும் பழுப்பும் கலந்த தொப்பியும் அதன் பிறகு அந்தக் குழிக்குள் சென்று மறைந்தன. தூசு படர்ந்த சூரிய வெளிச்சத்தில் வைக்கோலின் மீது அவள் அங்கு தனியே அமர்ந்திருந்தாள். அச்சத்தில் கலங்கிப் போன முகத்துடன் தானியக் களஞ்சியத்தின் நுழைவாயிலைத் திரும்பிப் பார்த்த போது நீல நிற சூட் அணிந்த அந்த உருவம் பசும்புள்ளிகள் பரவிக் கிடந்த ஏரியைக் கடந்து செல்வது அவளுக்குத் தெரிந்தது.

திருமதி ஹோப்வெல்லும் திருமதி ஃபிரீமேனும் வீட்டின் பின்புறம் இருந்த நிலத்தில் விளைந்திருந்த வெங்காயங்களைத் தோண்டி எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது காட்டில் இருந்து அவன் வெளியே வருவதையும், நெடுஞ்சாலையில் இருந்த புல்வெளியை நோக்கிப் போவதையும் பார்த்த திருமதி ஹோப்வெல், “என்னிடம் பைபிள் விற்பனை செய்ய முயன்ற மந்தபுத்தியுள்ள அந்த இளைஞனைப் போலத் தெரிகிறது” என்று கண்களைச் சிமிட்டினாள்.

“ஒருவேளை அங்கிருக்கும் நீக்ரோக்களுக்கு அவன் அதை  விற்பனை செய்துகொண்டிருக்கக்கூடும். அவன் மிக எளியவன். நாம் அனைவருமே அப்படிப்பட்ட எளிய மனிதர்களாக இருந்தால் இந்த உலகம் இன்னும் சிறப்பான ஒரு இடமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்றாள். 

முன்னோக்கிச் சென்ற திருமதி ஃபிரீமேனின் பார்வை அவனுடைய உருவம் மலையின் கீழ் மறையும்வரை அவனைப் பின்தொடர்ந்தது. அதன் பிறகு அவளுடைய கவனம் நிலத்தில் இருந்து அவள் அகழ்ந்து எடுத்திருந்த அழுகிப்போன வெங்காயத் தளிரின் மீது திரும்பியது.

“அவ்வளவு எளிமையானவர்களாக இருக்க சிலரால் முடியாது. என்னால் ஒரு நாளும் அவ்வாறிருக்க முடியாது என்பது எனக்குத் தெரியும்” என்றாள்.

*

ஆங்கில மூலம்: Good Country People written by Flannery O’Connor, Collected works of Flannery O’Connor, Library of America, First Edition, September 1988