உள்ளாடை நனைந்ததில் திக்கென்றிருந்தது. இப்படித்தான் அடிக்கடி நனைந்துபோகும். தெரிந்ததுதான். இருந்தும் மனசு அவசர அவசரமாய் கணக்கு போட்டுப் பார்த்தது. இருபத்தியிரண்டு நாட்களாகியிருந்தன. இருபத்தியிரண்டில் வருவதற்கு வாய்ப்பேயில்லை. இருபத்தைந்திலிருந்து எதிர்பார்க்கலாம். இருபத்தியெட்டிற்குள் கட்டாயம் வந்துவிடும்.
நிறம் மாறியிருந்தால் பிரச்சினையில்லை. சிவப்பு அச்சம் தரும் நிறம். வெள்ளை சமாதானம். மனதைச் சமப்படுத்தும். இருந்தும் அதுவும் கசகசப்புதான். வடித்த கஞ்சி போல, சில சமயம் பாலேடு போல… நடக்க நடக்க உடலோடு உராயும் உள்ளாடையின் கொழகொழப்பு எதிராளியின் புருவங்களை உயர்த்த வைக்கும். முகத்தின் சுருக்கங்கள் அவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும்.
ஒரு கப் நீரூற்றிக்கொண்டால் தேவலாமென்றிருந்தது. அடித்து ஊற்றிக்கொள்ள வேண்டும். பின்பு சுடிதாரில் அழுந்த துடைத்துக்கொள்ளலாம். சற்று இதமாயிருக்கும். அது வெள்ளைதான் என்று மனசு அடித்துச் சொல்லிற்று. ரஞ்சனி அந்தப் பெரிய மரமல்லி மரத்தினடியில் ஒதுங்கினாள்.
“அப்பெல்லாம் எங்களுக்கு யாரு அது வாங்கிக் குடுத்தா… உள்பாவாட நனையும். ஒக்கார்றப்ப இழுத்து விட்டுக்கிட்டு ஒக்காருவோம். வெட்டச்சூடு ஒடம்பு. எப்பப் பாத்தாலும் பாவாட ஈரமாயிட்டேயிருக்கும்.”
அம்மா ஒருமுறை முகம் சுழித்துச் சொன்னாள்.
“இப்ப போட்டுக்கயேன். நான் வாங்கித் தர்றேன்.” ரஞ்சனி கண்ணடித்துச் சிரித்தாள்.
“எல்லாம் வத்திப்போச்சு. இனிமே எதுக்கு? யாரும் பாக்காதப்ப காலை அகட்டி வச்சு ஒரு தொடை தொடைச்சிக்கறது. காலம் அப்படி போச்சு.”
அம்மாவின் முகம் தாழ்ந்திருந்தது.
மரமல்லிப்பூக்கள் தரையில் உதிர்ந்திருந்தன. நீண்ட காம்புடைய வெள்ளைப்பூக்கள். காலைப் பனியில் பூக்கள் சில்லிட்டன. கால்களில் பட்ட பூக்கள் குளிர்ந்து சிலிர்க்க வைத்தன. ரஞ்சனி ஒரு பூவை எடுத்து கையில் வைத்து அழகு பார்ப்பது போல் சிறிதுநேரம் நின்றிருந்தாள். குப்பை போட வந்த எதிர்வீட்டுப் பெண் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு குப்பைப் பையை வீசியெறிந்துவிட்டு உள்ளே போனாள். தெருவில் யாருமில்லை என்பதை ரஞ்சனி உறுதிசெய்துகொண்டு சட்டெனச் சுடிதாரில் அழுந்தத் துடைத்துக்கொண்டாள். அம்மாவின் ஞாபகம் வந்தது.
“நல்லத குடுத்தியோ இல்லியோ கெட்டத குடுத்துட்ட…”
“ஆமா, நான் குடுத்தேன். போடி இவளே…”
அம்மாவின் இடக்கைப் பழக்கம் ரஞ்சனிக்கு வாய்க்கவில்லை. தோசை சுடுவதிலிருந்து, தலை சீவுவது, வீடு பெருக்குவது வரை எல்லாம் இடக்கையால்தான். சிங்கார் சாந்தை இடக்கையால் அழகாக வட்டமாக இட்டுக்கொள்வதைப் பார்த்து ரஞ்சனியும் பல தடவை முயன்று தோற்றிருக்கிறாள். அம்மாவுக்கு கருகருவென நீண்ட முடி. ரஞ்சனியுடையது பூஞ்சை முடி.
“உன் முடியத் தர்றியாம்மா? ஆசையா இருக்கு.”
இழுத்து தன் தலையோடு சேர்த்து வைத்து கூந்தலை முன்னால் போட்டு கண்ணாடியில் அழகு பார்ப்பாள். அம்மாவுக்கு நல்ல வடிவான உடல். ரஞ்சனி நேர்க்கோடு.
“அவுங்கத்த மாதிரி ஒடம்புவாகு. அதுங்க ரெண்டும் கோடு கிழிச்சாப்ல இருக்குங்க. அப்படியே வந்து பொறந்துருக்கு இதுவும்.”
அம்மாவுக்கு வாய் ஓயாது.
“ஒழுங்கா பேடட் பிரா போடு.”
தோழியின் அறிவுரையின் பேரில் உடலில் கொஞ்சம் வசீகரம் கூடிப்போனது. எதிரே வருபவர்கள் தன்னைக் கவனிக்கிறார்கள் என்று உணரும்போது திடுமென இதயம் அதிரும். அது ஒருவித புது சுகத்தைத் தந்தது. துணிக்கடைக்குப் போனால் முதலில் உள்ளாடைப் பிரிவுக்குத்தான் செல்வாள். வெவ்வேறு கம்பெனிகளின் விதவிதமான ரகங்களைக் காட்டச்சொல்லிப் பார்ப்பாள். தொட்டுப் பார்த்து மிகவும் நுணுக்கமாகத் தேர்வுசெய்வாள். விளைவு பீரோவில் பேடட் ரகங்கள் அதிகமாய் சேர்ந்துவிட்டிருந்தன.
உடலின் நிமிர்வு கொஞ்சம் தைரியத்தைத் தந்தது. சுடிதாரை மீறித் தெரியும் கவர்ச்சி செயற்கையானது என்று யாருமறியப் போவதில்லை. அதுவே குதூகலமாயிருந்தது. சுடிதாரின் நிறத்துக்குப் பொருத்தமாக நிறைய வாங்கி வைத்துக்கொண்டாள்.
“அசத்தறடி…” என்றாள் தோழி.
அம்மா தன் பங்குக்கு ஏதேதோ கை வைத்தியம் செய்தாள்.
“இதெல்லாம் எதுக்குடி? எனக்குப் புடிக்கல” என்றாள்.
ரஞ்சனிக்கும் பிடிக்கவில்லைதான். குதூகலத்தை மீறிய ஒவ்வாமை மனதில் எரிச்சலை உண்டு பண்ணிக்கொண்டேயிருந்தது. அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் முதல்வேலையாக உள்ளாடையை உருவியெறிவாள். அப்போது, ஒட்டிக்கொண்டிருந்த அட்டைப்பூச்சியை வழித்து வீசியது போல பெருமூச்சு எழும். ஓவல் வடிவக் கண்ணாடியின் முன்னே வெற்று மார்புடன் நின்றிருப்பாள்.
கடவுளின் கொஞ்சூண்டு கருணை போல மலர்ந்திருக்கும் ஸ்தனங்களை வெறுப்புடன் உற்று நோக்குவாள். சிலசமயம் முகம் சுழித்து அழ ஆரம்பிப்பாள். அது பல நேரங்களில் நீள் அழுகையாய்த் தொடரும். கோபத்துடன் மார்புகளைக் கசக்கிவிட்டுக்கொள்வாள். இரு கைகளையும் குழித்து மூடிக்கொள்வாள். உள்ளங்கை அளவுகூட போதுமானதாயிருந்தது அழுகையின் வீரியத்தைக் கூட்டிற்று.
உடன் பணிபுரியும் ராதிகாவின் மார்புகள் தளும்பி வழிவதை நினைவுக்குக் கொண்டுவந்து ஓங்கி தலையில் கொட்டிக்கொள்வாள். ராதிகா அபூர்வமாய்த்தான் புடவை உடுத்துவாள். புடவையில் மறையும் வடிவம் சுடிதாரில் விம்மித் தணியும். துப்பட்டா சரியும் நேரங்களில் ரஞ்சனியின் பார்வை இயல்பாய் அவள் மேல் படிந்து அவசரமாய் விலகும். கோவில் சிலையின் அதீத வளர்ச்சிக்கு இணையான ஸ்தனங்கள்.
“பஸ்ஸுல கூட்டத்த சாக்கா வச்சு பொறுக்கிப் பசங்க தொழாவுறானுங்கடி. பத்திக்கிட்டு வருது” என்று புலம்பிய ராதிகா திடீரென ஒருநாள் ஸ்கூட்டியில் வந்திறங்கினாள்.
“இனிமே தடவுற தொந்தரவு இல்லாம நிம்மதியா ஆபீசுக்கு வந்துட்டுப் போவேன்.”
தோள்களைக் குலுக்கி அவள் சொன்னபோது குலுங்கிய அழகுகளை ரஞ்சனியின் கண்கள் அனிச்சையாக வெறித்தன.
“நீயும் பேசாம லோனைப் போட்டு வண்டி வாங்கிக்கயேன்.”
அம்மா திடீரென ஒருநாள் சொன்னாள்.
“நானும் அதாம்மா யோசிக்கிறேன். வண்டி இருந்தா லீவு நாள்ல உன்னை ஏத்திக்கிட்டு ஊரை வலம் வரலாம்ல?” தலையாட்டிக் கேட்டாள்.
“எங்க போவலாம் சங்கரான்னுதான் இருக்கு.”
அம்மாவின் உதடுகள் சுழித்தன.
“இருவத்தினாலு வயசாவுது. மாநெறம். ஆனா நல்ல லச்சணம். ஒல்லியாதான் இருப்பா. கல்யாணமானா சதை போட்டுடப் போவுது” என்பாள் அம்மா.
“உன் பொண்ணுக்கு நீதாம்மா மார்க்கெட்டிங் ஆபீசர்…”
ரஞ்சனி தலையிலடித்துக்கொண்டு சிரிப்பாள்.
ராதிகா அவளைப் பார்த்த வேகத்தில் ஸ்கூட்டியைக் கிறீச்சிட்டு நிறுத்தினாள்.
“எங்கடி போயிக்கிட்டிருக்க?”
“பஸ் இந்தப் பக்கம் வராதாம். ஏதோ மீட்டிங்காம். அதான் பஸ் ஸ்டாண்ட் போய்க்கிட்டிருக்கேன்.”
“ஒக்காரு நான் கொண்டுபோய் விடறேன்.” அமரப்போனவளை அவசரமாய் நிறுத்தினாள்.
“நீ ஓட்டுறியா…?”
ரஞ்சனிக்குக் கண்கள் விரிந்தன.
ராதிகா இறங்கி பின்பக்கம் வருவதற்குள் ஒருமுறை சுடிதாரில் அழுந்தத் துடைத்துக்கொண்டு வண்டியைப் பற்றிக்கொண்டாள்.
வண்டி பள்ளத்தில் இறங்கியபோது ராதிகாவின் மென்ஸ்பரிசம் முதுகில் அழுந்திற்று. உடல் சிலிர்த்தது. வேண்டுமென்றே இரண்டு மூன்று முறை பள்ளத்தில் இறக்கி ஏற்றினாள்.
“புது வண்டிடி. பாத்து ஓட்டு…”
ராதிகாவின் உடல் அழுந்திற்று. ரஞ்சனி ஹேண்ட்பாரை இறுகப் பற்றிக்கொண்டாள். அசுரத்தனமாகச் செலுத்தி எதன் மீதாவது மோத வேண்டும் போலிருந்தது. கீழுதட்டைக் கடித்துக்கொண்டாள். ஹெல்மெட் முகத்தை மறைத்திருந்ததில் அதன் தீவிரத்தன்மை எதிரே வருபவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போனது. கால் விரல்கள் மடங்கி நிமிர்ந்தன.
பாலத்து சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் கதாநாயகி பாதி மார்பு திறந்து காட்டி சிக்கனமாகப் புன்னகைத்துக்கொண்டிருந்தாள். ரஞ்சனியின் கண்கள் அவள் மார்பில் பதிந்திற்று. மிரர் வேலைப்பாடு செய்த ஜாக்கெட் புடைத்திருந்ததில் தலையை உலுக்கிக்கொண்டாள்.
“துப்பட்டாவை மறந்துட்டுப் போயிட்டியாடி…?”
அம்மா சேரில் கிடந்த துப்பட்டாவைக் காட்டிக் கேட்டபோது ரஞ்சனி பதில் சொல்லவில்லை. கழிவறைக்குள் புகுந்து மடேரெனக் கதவை அறைந்து சாத்தினாள். பேண்ட்டின் நாடா முடிச்சை நீக்கி அவிழ்த்து குந்துகால் வைத்து அமர்ந்தாள். வாளியில் தளும்பிய நீரைக் கப்பில் மோந்து ஆத்திரம் தீருமட்டும் அறைந்து ஊற்றிக்கொண்டாள். குளிர்ந்த நீர் அந்தரங்கப் பிரதேசத்தைத் தழுவி ஓடியபோது மனதுக்கு ஆசுவாசமாயிருந்தது. மெல்ல எழுந்து நின்றவள் ஆடைகளைக் களைந்து வீசிவிட்டு சுவரில் சாய்ந்து நின்றாள்.
“வெட்டச்சூட்டுக்கு வெந்தயம் நல்லது. தெனமும் ஊரவச்சு முளைகட்டி குடு” என்று கோகிலா சொன்னதிலிருந்து அம்மாவுக்கு இரவு வெந்தயம் ஊறவைக்கும் வேலை சேர்ந்துகொண்டது. வெந்தயக்கசப்பு தொண்டையைப் பிடித்தது. வெறும் வயிறு குமட்டிக்கொண்டு வந்தது.
“காபி குடிச்சிட்டு திங்கறேம்மா…”
ரஞ்சனியின் கெஞ்சல் அம்மாவிடம் எடுபடவில்லை.
“வெறும் வயத்துல தின்னாதான் பலன் கெடைக்கும். ஒடம்பு தேறணும்னா ஒழுங்கா முழுங்கித் தொலை.”
அம்மாவின் கடுப்பேறிய முகம் ஓரொரு சமயம் எரிச்சலில் சுருங்கும். இயலாமையில் எழும் வெறுப்பை மறைத்துக்கொள்ள அவள் சட்டென முகத்தைத் திருப்பிக்கொள்வாள்.
“வெள்ளைப் படுறது நின்னுடுச்சின்னா ஒடம்பு நல்லா பூரிச்சு வந்துடும். டாக்டர்ட்ட போனா மருந்து, மாத்தர குடுத்து கட்டுப்படுத்திடுவாங்க. ஆனா அது கொஞ்ச நாளைக்குதான். மாத்தரைய நிப்பாட்டுனா மறுபடியும் பட ஆரம்பிச்சிரும். அதனால கை வைத்தியமா செஞ்சுதான் அதக் கட்டுப்படுத்தணும்.”
கோகிலா சொல்ல அம்மா தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள்.
வார, மாதப் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கும் மருத்துவக் குறிப்புகள் ஒவ்வொன்றாக அரங்கேறின.
“இப்ப கொஞ்சம் தேவலாம் போல இருக்காடி…?”
நாலைந்து நாட்களில் இந்தக் கேள்வி வந்துவிழும். தேவலாம் போலத்தான் ரஞ்சனிக்கும் தோன்றும். மெதுவாகத் தலையசைத்து வைப்பாள். அம்மாவின் சந்தோஷம் கரைகாணாது போகும். வைத்தியம் தீவிரமடையும். அளவுகள் கூடும். இரண்டாவது கேள்விக்கு ஒருவாரம் இடைவெளி விடுவாள்.
“இப்ப எப்படி இருக்கு…?”
ரஞ்சனியின் பார்வை எங்கோ இருக்கும். உதடுகள் பிதுங்கும். அம்மாவுக்கு உள்ளே இடிந்து போகும். அந்த வைத்தியம் அத்தோடு விடைபெறும்.
இரவுக்குச் சில்வண்டுகள் உயிர் கொடுப்பதாக ரஞ்சனி நினைத்துக்கொள்வாள். இரவுகளை அவள் மிகவும் விரும்பினாள். இருள் ஒரு பாதுகாப்பு. உடல் தெரியாத இருட்டில் தன்னைக் கரைத்துக்கொள்வதாக உள்ளே கற்பனை ஓடும். எவரும் பார்க்க முடியாது தன்னுடலை இருள் போர்த்திக்கொள்வது அவ்வளவு பிடித்திருந்தது. ஆனாலும் பகலில் தன்மேல் பார்வை விழ அவள் ஏங்கினாள். ஆணின் வசீகரப் பார்வையில் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்பதை அவள் பெரிதும் விரும்பினாள்.
அதற்காகவே எதிரே வருபவர்களின் கண்களை எதேச்சையான பாவனையில் ஆராய்வாள். இப்போதெல்லாம் கொஞ்சம் பார்க்கத்தான் செய்கிறார்கள். மெத்தென்ற உள்ளாடையின் தழுவலில் சில மோதல்கள் நிகழ்ந்தன. பேருந்தின் கூட்ட நெரிசலில் வேண்டுமென்றே இடித்துவிட்டு ‘சாரி’ சொன்னார்கள். ரஞ்சனி பரவாயில்லை என்பது போலத் தலையசைத்து உள்ளூர சிலிர்த்தாள்.
சில்வண்டுகள் ரீங்கரித்தன. விடிவிளக்கின் வெளிச்சத்தில் அம்மா ஒரு ஓவியம் போல உறங்கிக்கொண்டிருந்தாள். ஒருக்களித்தவாக்கில் படுத்திருந்தவளின் முந்தானை விலகிச் சரிந்திருந்தது. ரஞ்சனி கண்களை மூடிக்கொண்டாள்.
அம்மாவைப் பார்ப்பது பிடிக்கவில்லை. கண்களைப் பிடுங்காவிட்டால் காட்சி மனதில் நிலைத்துவிடும். அது எரிச்சலை உண்டாக்கும். மூளையில் உறைந்துபோகும். பின் அக்காட்சியிலிருந்து மனதை அப்புறப்படுத்தவே முடியாது. அந்தப் பயம் அவளுக்கு. அப்படியும் சில நேரங்களில் வெண்திரட்சி தட்டுப்பட்டுவிடும். ரஞ்சனி அலமலந்து போவாள்.
மனதைச் சமப்படுத்த முடியாமல் அறைக்குள் புகுந்து கண்ணாடி முன் நின்றுவிடுவாள். உடைகளைக் களைந்துவிட்டு ஆங்காரமாய் உடலை நோக்குவாள். இலேசான குமிழ்களாய் மொட்டு விட்டிருக்கும் அரும்புகள் அவளைப் பார்த்து கேலியாய்ச் சிரிப்பது போலத் தோன்றும் உணர்வில் கைகளைப் பெருக்கல் குறியாக்கி தோளில் பற்றிக்கொள்வாள். வயிறு குழைய அப்படியே நின்றிருப்பாள். மனதின் இரைச்சல் அடங்கும் வரை நின்ற கோலத்திலேயே இருப்பாள்.
சிலநேரம் கைகளைப் பின்னால் வளைத்துக் கோர்த்துக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தி நிற்பாள். அப்போது சற்று பெரிதானதைப் போலத் தோன்றும். மூக்கு விடைக்க அழுதுகொண்டே சிரிப்பாள். உடனே கைகளை விடுவித்து அவசர அவசரமாகக் கண்களைத் துடைத்துக்கொள்வாள். ஒருமுறை கண்ணாடியை நெஞ்சோடு அழுந்த அணைத்துக்கொண்டாள். சில்லிட்ட கண்ணாடி, மார்புகளை சிலிர்க்கச் செய்தது. உள்ளே எரிந்த தீ மெல்ல மெல்ல அவிந்திருந்தது.
அழுகை கொஞ்சம் அடங்கியது. அவள் தன் இரு கரங்களையும் கோர்த்து வயிற்றில் பதித்துக்கொண்டாள். பெருமூச்சு விடுத்து அப்படியே தளர்ந்து குந்தினாள். கண்கள் மூடி எதுவமற்று கரைந்துவிட பெரும் பிரயாசைப்பட்டாள். ஜன்னல் திரைச்சீலைகள் அசைந்தன. பூக்கள் சிதறிய திரைச்சீலைகள் அவளின் சோகத்தைப் பங்குபோட்டுக்கொள்வது போல் அசைந்தாடின. மென்காற்று அவளுடல் தழுவி ஆசுவாசப்படுத்த முனைந்தது. இடைவிடாத தழுவல் இதமான ஸ்பரிச உணர்வைத் தந்ததில் ரஞ்சனி கண்களை மூடிக்கொண்டாள். அம்மாவின் குரல் கேட்டது.
“உள்ளாற என்ன பண்ற….”
புரண்டு படுத்த அம்மா விழிப்பு தட்டி குரல் கொடுத்தாள்.
“வர்றம்மா….”
மெலிதாய் முனகினாள். பல நேரங்களில் கண்களின் சிவப்பு காட்டிக் கொடுத்துவிடுமென்று அச்சமாயிருக்கும். அம்மாவிடம்கூட இயலாமையை வெளிப்படுத்த அவமானமாயிருந்தது. கரை உடைத்து வரும் வெள்ளத்தைப் பலவந்தமாக அடக்குவாள். அம்மாதிரி நாட்களின் இரவுகள் பெரும் பாதுகாப்பானவையாக அவளை நம்பவைக்கும். அம்மா படுத்ததும் உறங்கிவிடுவாள். அது ரஞ்சனிக்கு வரப்பிரசாதமாகி விட்டிருந்தது.
வெள்ளத்தை இஷ்டத்துக்கு உடைப்பெடுக்கச் செய்து தலையணையை நனைப்பாள். தெருவில், பேருந்தில் அலுவலக லிஃப்ட்டில் உடன்வரும் பெண்களின் முகங்கள் பற்றி அவள் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. அவளின் பார்வை கழுத்துக்குக் கீழே நிலைத்திருக்கும். செழுமையான பெண்களைக் கண்டால் அவள் முகம் சுருங்கிப்போவாள்.
‘நெஞ்ச நிமித்திக்கிட்டு குதிர மாதிரி என்ன நடை வேண்டிக்கெடக்கு…’ என்று மனதிற்குள் கத்துவாள்.
“யூரின் கண்ட்ரோல் பண்ண முடியலையா உனக்கு..?”
அப்போதுதான் கவனித்தது போல ராதிகா ஒருநாள் கேட்டாள். ஆறுமாதப் பழக்கத்தில் உரிமையோடு வந்து விழுந்த கேள்வி. ரஞ்சனிக்கு அவள் மார்புகள் மீதுதான் எரிச்சல். அவளைப் பிடிக்கும். எத்தனையோ முறை வேலையில் அவள் தவறு செய்தபோது அருகிலிருந்து திருத்தியிருக்கிறாள். அவளை இருக்கையில் அமர்த்தி இவள் குனிந்து சொல்லித்தருவாள். அப்போது அனிச்சையாக பார்வை ஆடைக்குள் நுழையும். அரைகுறையாய்த் தெரியும் முலைகள் வயிற்றில் தீப்பந்தத்தால் துழாவும். பற்களைக் கடித்து கைவிரல்களை மடக்கிக்கொள்வாள்.
“எதுக்குடி அடிக்கடி போற…?”
ராதிகா விடாப்பிடியாகக் கேட்டாள்.
“யூரினரி பிராப்ளம் இருந்தா போவணும் போல தோணிக்கிட்டேயிருக்கும். அதானே….. ?”
அவளே மறுபடியும் கேட்டதில் ரஞ்சனி தலையசைத்தாள்.
அலுவலகம் கிளம்பும் நேரத்தில் எந்த பெர்ஃபியூமை உபயோகிக்கலாம் என்பதில் ரஞ்சனிக்குக் குழப்பம் ஏற்படும். மூக்கைத் துளைக்கும் பெர்ஃபியூம் அவளுக்குப் பிடிக்காது. இதமான வருடல் போன்ற வாசனை ரொம்பப் பிடிக்கும். அதனைப் பார்த்துப் பார்த்து தேர்வுசெய்வாள். உடலின் இயல்பான வாடை குறித்த ஒரு உணர்வு தீப்பொறி போல் கனன்றுகொண்டேயிருந்தது.
“ஒரு வாடையுமில்ல. ஒனக்குத்தான் தோணுது. அப்படித் பாத்தா நான் எப்படி பயந்துருக்கணும். என்னளவுக்கு ஒனக்கில்லையே. கொறைச்சல்தான். அத நெனச்சு சந்தோஷப்படு…”
அம்மாவுக்கு பெர்ஃபியூம் அடித்துக்கொள்வது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ரஞ்சனி இரண்டு அக்குளிலும் பீய்ச்சிக்கொள்வதைப் பார்த்துவிட்டு முகம் சுழிப்பாள். டேபிளை நிறைத்த திரவிய பாட்டில்களை அவள் போனபிறகு வெறுப்போடு நோக்குவாள்.
ஒருநாள் அம்மாவுக்குத் திடீரென அந்த எண்ணம் உதித்தது.
“பேசாம தெனமும் ஒரு நாப்கினை வச்சிக்கிட்டுப் போயிடேன்.”
தீர்வுகண்டுவிட்ட தினுசில் ஒளிர்ந்த கண்கள் ரஞ்சனியின் அலட்சியமான முகத் திருப்பலில் சுருங்கின.
“ஏன்டி?”
“மாசத்துல ஏழு நாள் வச்சிக்கிட்டுப் போறதே எரியுது. இதுல தெனமும் வச்சா தோலு வழுவுண்டு போயிடும். புரியுதா…?”
அம்மாவுக்குத் தலை கவிழ்ந்தது. பேசாமல் உப்புமாவைக் கிளறினாள். ரஞ்சனி ஐந்தாவது படிக்கும்போது முதலில் அதைக் கண்டாள். பார்த்தமாத்திரத்தில் திக்கென்றாகிப் போனது. உடலிலிருந்து வெளியேறிய அத்திரவம் அசூயையைத் தந்ததோடு பயத்தை அதிகம் தந்தது. அம்மாவிடம் ஓடினாள்.
“என்னன்னு தெரியலம்மா. இங்க பாரேன்.”
பாவாடையைத் தூக்கியவளைப் பார்த்து அம்மாவுக்குச் சொரேரென்றது. நெஞ்சில் கைவைத்து நின்றுவிட்டாள். பார்த்தபிறகே மூச்சு வந்தது.
“ஒன்னுமில்லியேம்மா….?”
“இல்ல போ” என்று சொல்லிவிட்டாளேயொழிய தன் உடம்புவாகு வாய்த்துவிட்டதில் சோர்ந்து போனாள். அவளுக்கும் கிட்டத்தட்ட அந்த வயதிருக்கும் போதுதான் பட ஆரம்பித்தது.
“பொண் ஜென்மமே போராட பொறந்த ஜென்மம்” என்பாள் அவள் அம்மா. பழைய உள்பாவாடைத் துணிக்கிழிசல் ஏனோ ஞாபகத்துக்கு வந்தது. சின்னதும் பெரிதுமான நாடுகளின் வரைபடங்கள் போன்ற பரவல்கள். அழுத்தி, கசக்கித் தேய்த்து அலசியும் போகாத சிவந்த ஓரங்கள்.
“நல்லா கசக்கித் தொலை. இல்லாட்டி வீச்சமடிக்கும்.”
அம்மா நறுக்கென்று கொட்டுவாள். மழைநாட்களில் மறைவிடத்தில் காயும் துணியிலிருந்து அடிக்கும் கவிச்சி வாசம் குடலைப் புரட்டும்போது அவள் அம்மா சொன்னதை நினைத்துக்கொள்வாள்.
“கத்தாழைய தோல் சீவிட்டு நல்லா அலசி அடிச்சி மோர்ல கலந்து குடுத்தா வெள்ளைப்போக்கு மட்டுப்படும்.”
டிவியில் நலம்தரும் நாட்டு வைத்தியம் நிகழ்ச்சியில் சொன்னார்கள். அம்மா குறிப்புப் புத்தகத்தை எடுத்து எப்போதும் அருகில் வைத்திருப்பாள். அதையெடுத்து குறித்துக்கொண்டாள். புத்தகம் குறிப்புகளால் நிரம்பி வழிந்தது. குறிப்பெழுத ஆரம்பிக்கும் முன் தவறாமல் பிள்ளையார் சுழி போடுவாள்.
“புள்ளையாரப்பா.. இந்த குறிப்பாவது நல்லா வேலை செய்யணும்.”
அட்சரம் பிசகாமல் முணுமுணுப்பாள். அவ்வப்போது அலைபேசியில் கோகிலாவிடம் ஆலோசனை கேட்பாள்.
நர்சரியிலிருந்து இரண்டு கற்றாழைத் தொட்டிகள் வந்திறங்கிவிட்டன. வாள் போன்ற கற்றாழை வீச்சு, வீச்சாய் வளர்ந்திருந்தது. அதை வெட்டுவதற்கு அம்மா புதுக்கத்தி வாங்கி வைத்திருந்தாள். ஏற்கனவே இரண்டு கத்திகளிருந்தன.
“அதெல்லாம் சாணைப் புடிக்காம கெடக்கு. சரிப்பட்டு வராது.”
அம்மாவுக்குப் புதியதாய்த் தொடங்குவதைப் புதிதிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்றிருந்தது. ஏனோ இது கைகூடி வருமென்று தோன்றிவிட்டது. முதல்நாள் மாலை விளக்கேற்றும்போது கத்தியை சாமிப் படத்தின் முன் வைத்து கேசரி நைவேத்தியம் செய்தாள். மனம் விம்மித் தணிந்துவிட்டது. கத்தி பளபளப்பாய் இருந்தது.
“நடு வெரலளவு வெட்டினாப் போதும்.”
வலதுகை கத்தியை இறுகப் பற்றியிருந்தது.
“நாப்பத்தெட்டு நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா நின்னுடும்.”
உள்ளே குறிப்பு ஓடியது. ரஞ்சனி வாயில் பிரஷுடன் பின்னால் நின்றிருந்தாள். கற்றாழை மடல்கள் இளம்பச்சையில் செழித்திருந்தன.
“ஏழு தடவை அலசணும். அப்பதான் கசப்பு போவும். நல்லா அலசி மிக்சியில அடிச்சி மோர்ல கலந்து குடிக்கணும்.”
அந்தப் பெண்மணிக்கு நல்ல வளமான குரல். அம்மா ஒரு மடலை வாகாகப் பிடித்து கத்தியை வைத்ததுமே அது வழுக்கிக்கொண்டு இறங்கியது. அவ்வளவு கூர்மை. துண்டாய்க் கையோடு வந்த மடலிலிருந்து சொட்டிற்று கொழகொழப்பான வெண்ஒழுக்கு. ரஞ்சனி ஓங்கரித்தபடி உள்ளே ஓடினாள். அம்மா பட்டெனக் கற்றாழை மடலை வீசிவிட்டு புரட்டிய வயிற்றைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டாள்.
2 comments
Excellent narration.
Hearty congrats Ms. Kuruthiga❤
பலருக்கு நடக்கீம் தொடர்கதையைக் கருவாக எடுத்துக்கொண்டு ,யாருமே சொல்லாத சிறுகதை..!.அருமை கிருத்திகா வாழ்த்துகள்
Comments are closed.