இசையின் முகங்கள் (பகுதி 4) : மலேசியா வாசுதேவன்

by ஆத்மார்த்தி
1 comment

மலேசியா வாசுதேவன் ஒரு தொடுவானத் தென்றல். வாசுவின் குரல் இருக்கிறதே அது மிக மிக உன்னதமான வித்தியாசமான முழுமையான போதுமான ஒரு குரல். அதனால் ஒரு சோர்விலாப் பறவை போல் எந்த மலை உச்சிக்கும் சென்று திரும்ப முடியும். பிடிவாதம் குன்றாத நெடுங்கடல் மீன் ஒன்றினைப் போல் எம்மாதிரியான ஆழத்தையும் தொட்டுப் பார்த்து மீள முடியும். அடைய முடியாத எல்லைகளுக்குத் தன்னை விரித்துக்கொள்வது அபாரம். மலேசியா வாசுதேவன் குரல் பூரணம். பெருகிக் கடலான நதி.

ரஜினியை நாயகத் துதி செய்த பாடல்கள் அவருடைய பிம்ப ஆளுமையைக் கட்டமைக்கப் பெரிதும் உதவின.

இரசிகனுக்கு நட்சத்திர நாயகத்தின் ஒரு பட முடிவுக்கும் அடுத்ததன் ஆரம்பத்துக்கும் இடை கால மௌனத்தில் தனிப்பட்ட கிளர்தலாகவும், வேரூன்றிய கிறக்கமாகவும், அந்த நடிகனின் மீதான தொடர் மயக்கம் ஒன்றை வெவ்வேறு சதமானங்களில் அவனது ஒவ்வொரு பிரத்யேக இரசிகனும் பராமரிக்க முற்படுவான். இதை அவன் ஒரு தலைவன் மீதான அடிபணியும் தொண்டனின் விசுவாசமாக, தன் மனத்துக்குள் உருவகப்படுத்திக்கொள்வான். திரையைத் தாண்டி, தனக்குப் படர்க்கையில் எங்கோ இடவல மாற்றங்களுடன் வாழ்ந்துயிர்க்கும் சமகாலச் சகமனிதர்களுள் ஒருவன் என ஒருபோதும் அவன் தன் மனத்துக்கு உகந்த நாயகத்தை நம்ப விரும்பமாட்டான். தேவலோக ராஜராஜன் என்றே மனப்ரிய நாயகத்தை நிறுவ முற்படுவான். பிம்பம் திரையில் உதிர்க்கும் வசனங்களைத் தன் வாழ்க்கைக்குள் நிஜ உரைகளாகக் கற்பிதம் செய்துகொள்வது, இதன் விளைவான மனவிலக்கங்களுள் ஒன்று. மேலும், நாயகனின் உடை, பழக்கவழக்கங்கள், நன்மை தீமைகள், கண்ணாடி, தொப்பி உள்ளிட்ட உப பண்டங்கள் என மனநெருக்கமான சந்தடி ஒன்றினுள் நாயகம் குறித்த பல்வேறு உபநுட்பத் தரவுகளும் இடம்பெற்று இருக்க முனைவான்.

பாட்டுப் புத்தகம், பாடல் கேசட்டு, பட பூஜை துவங்கி, ரிலீஸ் வரைக்கும் ஒருதலைக் காதலின் காத்திருத்தலுக்கு ஒப்பாக, விரும்பி ஏற்கும் மனச் சுருக்கத்தைக் கைக்கொள்ளுவான். ஒரு படத்தை அதன் திரையிடல் தேதி அன்று முதல் காட்சியில் காண்பது அவனைப் பொறுத்தவரை அவனே வடிவமைக்கிற சுயதனிப் பண்டிகை ஒன்றின் கொண்டாட்ட முற்று. பெரும்பாலும் இந்திய சினிமாக்கள், பண்டிகைகளுடன் நெருக்கப் பிணைப்பு கொண்டவை. மேற்கில் பண்டிகை தினங்களில் படம் வெளியாவதைத் திட்டமிட்டுத் தவிர்ப்பார்கள். அதே சமயத்தில், இந்திய சினிமா கொண்டாட்டத்திலிருந்து கிளம்பி, அல்லது கொண்டாட்டத்தை மறுதலித்துவிட்டு, திரைப்படங்கள் பார்ப்பதை ஒரு தைரிய விளையாட்டெனவே பரீட்சார்த்தம் செய்து, அதில் வென்றும் இருக்கிறது.

தமிழ் நிலத்தில் தீபாவளி, பொங்கல் இரண்டும் மாபெரும் திரையிடல் நேர்தல்கள். தமிழ்ப் புத்தாண்டு, ஆகஸ்டு 15, காந்தி ஜெயந்தி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஆடி 18, வைகுண்ட ஏகாதசி, எனப் பல தினங்கள் திரைப்பட வெளியீட்டை உட்படுத்தியபடி, கொண்டாட்டங்களாக மாறுவது, பொதுச் சமூகத்தின் பண்டிகைக் கொண்டாட்டத் தேட்டத்திலிருந்து, நட்சத்திரப் பிம்பம் மீதான கரவொலிகளைத் தனியே கத்தரித்து, வருவாய் அறுவடை செய்துவிட முனையும் வியாபார சூசகம்தான். தன் பெயர்கூடத் தெரியாத ஒருவனின் பொய்த் தோற்றம் ஒன்றின் வரையறுக்கப்பட்ட நிஜம் மற்றும் நிழல்களை வழிபடுகிற இரசிக மனோநிலை நாயக பிம்பத்தின் வேட நேர்தல்களை வழிபாட்டுத் தலங்களின் விக்கிரகச் சிற்பங்களெனவே வரவேற்க முற்படுகிறது. சினிமா என்பது பிம்பச்சாலை. தொடர் கட்டமைப்பில் கதையில் இடம்பெறக்கூடிய உருக்கமான காட்சிகள், சண்டை, காதல், பாசம், நட்பு, நகைச்சுவை, சவால், பழிவாங்குதல், வெற்றி, தோல்வி, இயலாமை, நிராகரிப்பு, ஏன் மரணம் வரை எல்லாவற்றையும் நிஜத்துக்கும் புனைவுக்கும் இடையிலான புகை பொங்கும் கனா வெளி ஒன்றில் சர்வ காலமும் அபரிமிதமான மீவுருவாக்கம் செய்துகொண்டே இருக்க விரும்பும் இரசிகனுக்கு நாயக ஆராதனையில் மிக முக்கியமான இடுபொருட்களில் ஒன்றுதான் பாடல் என்பது.

எம்ஜிஆருக்குப் பிறகு நாயக முதல் இடத்தை நோக்கி நகர்ந்து வருவதற்கான வாய்ப்பு சிவாஜி, கமலஹாசன் என்கிற இருவரைத் தவிர (எம்ஜிஆரின் முதல் இட இணை சிவாஜி, அவரது இளவலாகவே அந்த இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த அடுத்த தலைமுறை நடிகர் கமலஹாசன்) வேறு யாருக்கெல்லாம் இருந்தது என்கிற எழுபதுகளின் சுவாரசியப் பட்டியலைக் குறுக்கே அடித்துவிட்டு, அந்த இடத்துக்கு வந்தவர் ரஜினிகாந்த். இந்த உலகில் தன்னியல்பாக நடக்கிற எதுவின் பின்னாலும், எவற்றின் பின்னாலும், தன்னியல்பின் திட்டம் ஒன்று இருந்தே தீரும். இன்றிலிருந்து உற்றுநோக்கினால் பார்த்துப் பார்த்துக் கோர்க்கப்பட்ட நல்மணி மாலை ரஜினிகாந்தின் பிம்ப உயரம். காலத்தின் வினோதப் புதிர்மை, அவருடைய நாயகத்துவத்தைக் கட்டமைத்துத் தந்த அகத்திறப்புப் பாடல்கள், (உ-ம்: ‘மை நேம் இஸ் பில்லா’, ‘நான் பொல்லாதவன்’, ‘ராஜாவுக்கு ராஜா நான்தான்’, ‘வந்தேண்டா பால்காரன்’, ‘நான் ஆட்டோக்காரன்’, ‘அதாண்டா இதாண்டா’) பல பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி, ரஜினிக்குண்டான முதற்பொருத்தக் குரலாக இன்றளவும் நிலைக்கிறார். அதே சமயத்தில் பாலுவுக்குப் பிறகு, ரஜினிக்கான நிகர் பொருத்தக் குரலாக டி.எம்.எஸ், யேசுதாஸ், மனோ, ஹரிஹரன் துவங்கி, பல்வேறு குரல்மீன்களைத் தாண்டி, முதல் மீனெனத் தனித்து ஒலிப்பவர் மலேசியா வாசுதேவன்.

“ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு” என்ற வரியை எடுத்துப் பார்த்தால் அதை எத்தனை சிரத்தையோடு பாடினார் வாசு என்பது புலப்படும். “என் தெய்வம் தந்த” என்று எடுப்பார், “என் தெய்வம் தந்த” என்று சரிவார். பாசம் என்பதைக் கர்வமாகவும் வீழ்தலாகவும் உணர்த்துவதற்கான குரல் வாசுவிடம் வாய்த்திருந்தது. “ஆகாய கங்கை பூந்தேன் மலர்ச்சோலை” என்ற இன்னொரு பாடலும் வாசுவின் முத்திரையுடன்தான் நேர்ந்தது. சின்னதொரு குதூகலத்தைப் பாட்டுப்படுத்தினாற் போல் மொத்தப் பாட்டையும் கடந்திருப்பார்.

மலேசியா வாசுதேவன் 76 முதல் 96 வரை இருபதாண்டு காலத்தில் ரஜினிகாந்தின் முதல் சில படங்களில் தொடங்கி தேனிசைத் தென்றல் தேவா இசையில் ‘அருணாச்சலம்’ படத்தில் ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ பாடல் வரை, அனேகமாக நூறு பாடல்கள் வரை பாடியிருக்கக் கூடும். காட்சி ரூபமாகப் பல்வேறு பாத்திரத் தோன்றல்களில் அழகான பல பாடல்கள் உண்டெனினும் கூடுதலாய்க் காணாப் பேரழகு ஒன்றை, ஒரு இரகசியத்தை வெளிச் சொல்லுகிற கட்டியக்காரனைப் போல் ரஜினிக்காகப் பாடினார் வாசு. இந்த உலகின் விளங்கித் தீர முடியாத வார்த்தைகளில் ஒன்றுதான் அமைப்பு என்பது. அதென்னவோ கமலுக்கும் வாசுவுக்கும் அப்படிப் பொருந்தாது. ரஜினிக்கும் வாசுவுக்கும் இடையில் ஒரு மனப்பசை வார்ப்பு, குரலையும் முகத்தையும் ஒட்டிப் போட்டது.

பட்டு வண்ணச் சேலைக்காரி
எனைத் தொட்டு வந்த சொந்தக்காரி
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை  

பாடல் தொடங்கும் இடத்திலேயே தன் வசியவார்ப்பைத் தொடங்குவார். எங்கேயோ கேட்ட குரலா அது..? எங்கேயும் கேட்கும் குரலல்லவா? வெவ்வேறு கலயங்களில் நிரம்புகிற மழை நீரைப் போல வேறுபடுத்தித் தன் குரலைப் பல விதங்களில் பிரித்துத் தரத்தெரிந்தவர் மலேசியா வாசுதேவன். அதனால்தான் எஸ்.பி.பாலசுப்ரமண்யம் என்கிற முதல் பொருத்தக் குரலைத் தாண்டி, மலேசியா வாசுதேவனின் குரல் ரஜினிக்கு வொர்க்கவுட் ஆனது. கணிக்க முடியாத பூநாக வீர்யம் ஒன்றைத் தன் பல பாடல்களில் நிகழ்த்தினார் வாசு.

மாவீரன் ரஜினியின் சொந்தப் படம். இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களையுமே வாசுதான் பாடினார். “சொக்குப் பொடி” என்ற பாடல், “சொந்தமில்லே” என்ற பாடல் இரண்டையும் தாண்டி, “ஏ மைனா” பாடலாகட்டும், “நீ கொடுத்ததை திருப்பிக் கொடுத்தா” டூயட்டாகட்டும் “வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே” பாடலாகட்டும் விதவிதமாய்ப் பெருகி ஒலித்தன. குரல் தீபங்களாய் ஒளிர்ந்தன. இதே படத்தில் “எழுகவே படைகள் எழுகவே” பாடல் வானளைந்த பாடற்பருந்து. அநேகமாக, வைரமுத்து- இளையராஜா இணைந்து பணியாற்றிய கடைசிப் பாடல் இதுவாகத்தான் இருக்கக்கூடும்.

பின்னாட்களில் அதிசயப் பிறவி படத்தில் எல்லாப் பாடல்களையும் ரஜினிக்காகப் பாடினார் மலேசியா வாசுதேவன். “தானந்தனக் கும்மி கொட்டி” பாடல் ஒரு நிலவு முழுமையாய் ஒளிர்ந்தது. இந்தப் படத்தில் குரலால் என்னென்ன வாய்க்கும் என்பதைத் தன் ஜால வித்தகத்தால் நிறுவினார் மலேசியா வாசுதேவன். “உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாடத் தோணும்” பாடல் கிராமியத் தெம்மாங்கு. “இதழெங்கும் முத்துகள் சிந்தட்டும்”, “பாட்டுக்குப் பாட்டு எடுக்கவா” இரண்டும் வெஸ்டர்ன் விதவிதங்கள். “அன்னக்கிளியே சொர்ணக்கிளியே சந்தேகம் உனக்கு ஏனம்மா” பாடலும் மந்தாரத் தெப்பம்தான். அதிசயப்பிறவி படத்தின் ஆதாரஸ்ருதியாக அதன் பாடல்கள் பலம் சேர்த்தன.

ரஜினி என்கிற முதல்நிலை பிம்பத்தைத் தூக்கி நிறுத்திய பாடல்களில் மிக முக்கியமான பாடல்கள் இரண்டைப் பாடியவர் மலேசியா வாசுதேவன். ரஜினியின் பேர் சொல்லி ஒலிக்கும் பத்து பாடல்களை எடுத்தால்கூட முதல் மூன்று இடங்களில் இந்த இரண்டு பாடல்களும் இடம்பெறும் என்பது என் கணிப்பு. “ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை” என்ற பாடல் இன்றளவும் மனத்திரைகளில் வேகமும் விரைதலும் நிரம்பிய யார்க்கும் அடங்காத சூறைக்காற்றை ஒத்த புயல்நிகர் அசைவுகளுடனான அடங்காக் குதிரை ரஜினியை முன்னிறுத்த வல்லது. இதே பாடலை ரீமிக்ஸ் செய்துபார்க்கும் போதெல்லாம்கூட அசலுக்குப் பக்கத்தில் நிற்க முடியாத நிழல்களாக நகல்கள் உதிர்ந்தது வரலாறு.

அடுத்த பாடல் முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்ற “பொதுவாக எம் மனசு தங்கம்” என்ற பாடல். ரஜினி இரசிகர்களைக் கட்டிப் போட்டிருக்கும் மந்திரக் கயிறெனவே இதனைச் சொல்ல முடியும். இந்தப் பாடல் அடைந்த வெற்றி அநாயசமானது. இதே படமும் முக்கியமாக இந்தப் பாடலும் மீவுரு செய்யப்பட்டுப் படுதோல்வி அடைந்ததற்கும் ஒரே ஒரு ஒற்றை என்ற அளவில் மூலப்படத்தையும் பாடலையும் ரஜினி என்ற சூர்ய பிம்பத்தின் மீதான இரசிக வாஞ்சையும் காரணங்களாக அமைந்திருக்கக்கூடும்.

பாயும் புலி படத்தில் “ஆப்பக்கட அன்னக்கிளி” வாசு ரஜினிக்குப் பாடிய உற்சாகத் தேன் தூறல்களில் ஒன்று. “அன்னை மடியில் கண் திறந்தோம்” என்று கொடி பறக்குது படத்தில் உருக வைத்த வாசு, “என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்” என்று மாவீரனுக்காகச் சீறினார். “என்னோட ராசி நல்ல ராசி” என்று மாப்பிள்ளை படத்தில் உயர்ந்து ஓங்கினார். “எத்தனையோ பொட்டப்புள்ள” என்ற பாடல் ரஜினிக்கு அட்சரமாய்ப் பொருந்திய மூன்று முகம் படப்பாடல்.

பாலுவுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார் வாசு. உல்லாசப் பறவைகளில் “எங்கெங்கும் கண்டேனம்மா” என்று வித்தை காட்டினர். ராம்லட்சுமண் படத்தில் “ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சி” என்ற டான்ஸ் பாடல் இடம்பெற்றது. “நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்” அதில் ஒரு மறக்கமுடியாத மாமழை. ரஜினிக்கு பாலுவும், கார்த்திக்குக்கு வாசுவும் நல்லவனுக்கு நல்லவனில் “நம்ம முதலாளி” பாடினர், அப்படியே சத்யராஜுக்கு வாசு பாட, “என்னம்மா கண்ணு” விண்ணளந்தது. கராத்தே மணிக்கு “பட்டுக்கோட்ட அம்மாளு” பாடலை வாசு பாட, ரஜினிக்குப் பாலு பாடினார்.  வெற்றி விழா படத்தில் பிரபுவுக்குப் பாடினார். சட்டம் படத்தில் “நண்பனே எனது உயிர் நண்பனே” பாடலைச் சரத் பாபுவுக்காகப் பாடினார் வாசு. சின்ன தம்பி பெரியதம்பி படத்தில் “மாமன் பொண்ணுக்கு” பாடல் ஒரு நற்பிரபலப் பாடலே. முதல் வசந்தம் படத்தில் “சும்மா தொடவும் மாட்டோம்” என்ற ஜாலியான பாடலைப் பாலுவுடன் வாசு சேர்ந்து பாடினார். படத்தில் சத்யராஜூடன் சேர்ந்து ஆடினார் வாசு. “ஒரு பாடல் சொல்கிறேன்” பாடலை ஹம்சலேகா இசையில் புதியவானம் படத்தில் சேர்ந்து பாடினர். வில்லாதி வில்லனில் “புறப்படு தமிழா” என்ற பாட்டும் இணைந்து பாடியதே.

வாயில் விரல் சூப்பிக்கொண்டு, கண்களாலேயே பேசிக் காணவாய்க்கிற ஒரு குண்டுக் குழந்தை போலத்தான் வாசுவின் குரலும். யாருக்குத்தான் பற்றாது? 80, 90களில் ஒரு சொல் அதிகம் புழங்கியது, ‘ஈஷிக்கொண்டு’ என்று. தான் பாடும் யாருடைய முகத்திலும் ஈஸியாக ஈஷிக்கொண்ட குரல் மலேசியா வாசுதேவனுடையது.

பல வினோதங்களைப் பாடியவர் வாசு. சிவாஜிக்கு, டி.எம்.எஸ்ஸுக்கு மாற்றாகப் பொருந்திய ஒரே குரல் வாசு. பாக்யராஜுக்கு அவர் பாடிய பல பாடல்கள் வினோத மலர்கள். ‘காதல் வைபோகமே’, ‘தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி’, ‘வான் மேகங்களே’, ‘எண்ணி இருந்தது ஈடேற’, ‘அதோ அந்தத் தென்றல்’, கமலஹாசனுக்கு 16 வயதினிலே படத்தில் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு”, “செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா” ஆகிய இரண்டு பாடல்களையும் பாடியவர் வாசு. சிகப்பு ரோஜாக்களில் கமலுக்காக மலேசியா வாசுதேவன் பாடிய ‘இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது’, ஒரு வாளி நிறைய ஐஸைக் கொட்டினாற்போல் வாசு பாடிய பாடல். ‘காதல் தீபம் ஒன்று’, ‘காதல் வந்திருச்சு’ என கல்யாண ராமனில் தொடுவானத் தென்றலாகவும், தூவானத் தூறலாகவும் தானே மாறினார் வாசு. “தண்ணி கருத்திருச்சி” பாடலில் இளமை ஊஞ்சலாடினார் வாசு. சட்டம் என் கையில் படத்தில் வாசு, கமல் கூட்டிசை “கடைத்தேங்காயோ வழிப்பிள்ளையாரோ” என்று வெரைட்டி காட்டிற்று. அதே படத்தின் ஆதுரம் பொங்கும் “ஆழக்கடலில் தேடிய முத்து” பாடலில் உருக்கினார் வாசு. கடல் மீன்களில் அவர் பாடிய “என்றென்றும் ஆனந்தமே” ஒரு இன்ப லஹரி இன்னிசை லாகிரி. சவால் படத்தில் “கை நல்ல கையப்பா” என்ற பாடல் வாசுவினுடைய குரலில் ஒலித்தது. சங்கர்லால் பட இசைப்பேழையில் மூன்று பாடல்கள் வாசு குரலில் இடம்பெற்றன. எல்லாம் இன்பமயம் படத்தில் “மாமன் வீடு”, “பர்லா பர்லா” ஆகிய இரண்டு பாடல்களைப் பாடினார் வாசு. சிம்லா ஸ்பெஷல் படத்தில் மனோரமா, மலேசியா வாசுதேவன் இணை சேர்ந்து பாடிய பாட்டு “குத்துற குத்தில” எனத் தொடங்குவது.

சகலகலா வல்லவனில் “நிலா காயுது” பாடல் வெப்பத் தெப்பமாக உருக்கி உருகிய பாடல். தமிழ் நிலத்தில் மிகுந்த செல்வாக்கைத் தக்க வைத்த எண்பதுகளின் பாடல்களுள் தலையாயது. இதே படத்தில் “கட்டவண்டி கட்டவண்டி” பாடலைப் பாடி அனாயாசம் செய்தார் மலேசியா வாசுதேவன். புன்னகை மன்னன் படத்தில் டபுள் ஆக்ட் கமலுக்காக “மாமாவுக்குக் குடும்மா குடும்மா” பாடினார். பேர் சொல்லும் பிள்ளை படத்தில் “வெளக்கேத்து வெளக்கேத்து வெள்ளிக்கிழமை” பாடல் இவருடையதுதான். மகராசன் படத்தில் “ராசா மகராசா”, “எந்த வேலு”, “அவனா இவனா தெரியாது” என மூன்று பாடல்களைப் பாடியவர் வாசு. மகராசனுக்குப் பிறகு கமல்ஹாசனுக்கு மலேசியா வாசுதேவன் பாடவில்லை.

‘எனக்குள் ஒருவன் யார் யார்’ அவர் குரலின் இன்னொரு பாட்டுமலர். ‘பேரு வெச்சாலும் வெக்காமப் போனாலும்’ என்கிற பாடல் இந்தக் கணத்தையும் காற்றையும் ஆள்கிறது. ‘புதியன பிறந்தது பழையன கழிந்தது’ பாடலைத்தேவர் மகனில் வாசு பாடினார்.

கேப்டனுக்கு நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தில் “வாங்கடா” பாடலைப் பாடினார். “போராடடா” என்ற அலை ஓசை படப்பாடல் இன்றும் ஒலிக்கிறது. சாட்சி படத்தில் இடம்பெற்ற “மாறிவிடு” என்ற பாடல் கவனிக்கத்தக்கது. நல்ல நாள், சிறைப்பறவை, செந்தூரப்பூவே, உழவன் மகன் படங்களிலெல்லாம் தலா இரண்டு பாட்டுகள் வாசுவினுடையது. “ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன்” பாடல் அம்மன் கோவில் கிழக்காலே படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலானது. தாயன்பன் இசையில் சொல்வதெல்லாம் உண்மை படத்திலும் க்ளப் சாங் ஒன்றைப் பாடினார் வாசுதேவன். “வாழ்க்கை ஒரு” எனத் தொடங்கும் பாடல் கூலிக்காரன் படத்தில் டி.ராஜேந்தர் இசையமைப்பில் வாசு பாடியது. வீரன் வேலுத்தம்பி, காலையும் நீயே மாலையும் நீயே, உள்ளத்தில் நல்ல உள்ளம் உழைத்து வாழ வேண்டும், தர்மம் வெல்லும், வீரம் வெளஞ்ச மண்ணு, பெரியண்ணா, தாயகம், அலெக்ஸாண்டர் போன்ற படங்களில் கேப்டனுக்காகப் பாடினார் வாசு.

“சந்தைக்கடை செல்லாயி”, “ஏத்தமய்யா ஏத்தம்” – இரண்டு பாடல்களும் நினைவே ஒரு சங்கீதம் படத்திற்கானவை. தெற்கத்திக் கள்ளனில் “தில்லா டாங்கு டாங்கு” நல்ல பிரபலம். நல்லவன் படத்தில் “மேளம் கொட்டி தாலி கட்ட நேரம் நெருங்குது” பாட்டு ஹிட் ஆனது. “நினைத்தது யாரோ”, “சிட்டா சிட்டா சினுக்குத்தான்”, “இசையில் நான் வசமாகினேன்” ஆகிய மூன்று பாடல்களும் பாட்டுக்கொரு தலைவனுக்காக வாசு பாடியளித்த பாட்டுகள். “நீ பொட்டு வச்ச தங்கக்குடம்” பாடல் பொன்மனச் செல்வனுக்காக வாசு அசத்திய பாடல். இதே படத்தில் இன்னும் இரண்டு பாடல்களைப் பாடினார் வாசு. “சரியோ சரியோ நான் காதலித்தது”, “ஒன்னோட ரெண்டுன்னு” ஆகிய இரண்டு பாடல்களும் எங்கிட்ட மோதாதே படத்திற்கானவை. இதிலேயே “அஞ்சு பைசா பத்து பைசா” என்ற பாட்டையும் விஜயகாந்துக்காகப் பாடினார் வாசு. சின்னக்கவுண்டரில் “சுத்தி சுத்தி உன் வாலைக் கொஞ்சம்” என்ற பாடல் பிரபலமான ஒன்று. “மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி” பாடலைச்சர்க்கரைத் தேவனுக்காகப் பாடினார். இதிலேயே “எல் ஓ வீ ஈ” என்ற பாடலுடன் துளிப்பாடல் ஒன்றையும் பாடியிருந்தார் வாசு.

கார்த்திக் படங்கள் பலவற்றில் வாசுவின் பாடல்கள் உண்டு. இளஞ்சோடிகள், கண்ணே ராதா, அதிசயப்பிறவிகள், வீரன் வேலுத்தம்பி, கண் சிமிட்டும் நேரம், உரிமைகீதம், எதிர்காற்று, வணக்கம் வாத்தியாரே, நாடோடி பாட்டுக்காரன், உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன், பிஸ்தா ஆகிய படங்களில் கார்த்திக் ஹிட்ஸ் பலவற்றை மிளிரச்செய்தவர் வாசுதேவன். கன்னிப்பொண்ணு– நினைவெல்லாம் நித்யா, அழகே உன்னை எண்ணி – வாலிபமே வா வா, மேகதீபம்– ஆகாய கங்கை , ஊட்டிக்குளிரு– ஆயிரம் நிலவே வா, குயிலுக்கொரு நிறமிருக்கு– சொல்லத் துடிக்குது மனசு, கட்டிவச்சுக்கோ– என் ஜீவன் பாடுது, இளம் வயசுப் பொண்ணை– பாண்டி நாட்டுத் தங்கம், ஏதோ மயக்கம்– இதயத் தாமரை, பட்டிக்காட்டுப் பாட்டு, பல்லாக்கு குதிரையிலே– பெரியவீட்டுப் பண்ணக்காரன், தேவதை போலொரு பெண்ணிங்கு– கோபுர வாசலிலே, ஏலமலைக் காட்டுக்குள்ளே– நாடோடித் தென்றல், ஆரம்பம் நல்லாருக்கும்– பூவரசன் போன்றவை அவற்றுள் சில.

சத்யராஜூக்கு கடலோரக் கவிதைகளில் சோக வெர்ஷன் “அடி ஆத்தாடி” பாடலைப் பாடினார் வாசு. வேதம் புதிது படத்துக்காகத் தேவேந்திரன் இசையில் “மாட்டு வண்டி சாலையிலே” என்ற அற்புதத்தைப் பாடியவர் வாசுதேவன். கங்கை அமரன் இசையில் ஜீவா படத்தில் இடம்கொண்ட அழகிய பாடல் “சங்கீதம் கேளு”. “உன்னப் பார்த்த நேரத்துல” என்ற பாடல் மல்லுவேட்டி மைனருக்காக வாசு உருக்கித் தந்த பொன்பாளம். இதிலேயே “அடி மத்தளம்தான்” என்ற வித்தியாசப் பாடலும் வாசுவுடையது. விடிஞ்சா கல்யாணம், பூவிழி வாசலிலே, ஆளப்பிறந்தவன், முத்துக்கள் மூன்று, இனி ஒரு சுதந்திரம், அஞ்சாத சிங்கம், ஜல்லிக்கட்டு, பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கனம் கோர்ட்டார் அவர்களே, தாய்நாடு, சின்னப்பதாஸ், அன்னக்கிளி சொன்ன கதை, வாத்தியார் வீட்டுப்பிள்ளை, மதுரைவீரன் எங்க சாமி, நடிகன், வேல கெடச்சிடுச்சி, கட்டளை, பங்காளி, வீரப்பதக்கம், தோழர் பாண்டியன், உடன்பிறப்பு, மாமன் மகள், பகைவன் ஆகிய படங்களில் சத்யராஜூக்குப் பாடியிருக்கிறார் மலேசியா வாசுதேவன்.

பிரபுவுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் சாலப்பொருந்தும். “பூவே இளைய பூவே” காலகாலப் பாடல். “சுகராகமே” கன்னிராசி படத்தில் அபாரம், அடுத்தாத்து ஆல்பர்ட் படத்தில் “இதயமே நாளும் நாளும் காதல் பேசவா” ஒரு சூப்பர் ஹிட் பாடல். இந்தப் படத்தில் ஐந்து பாடல்களைப் பாடினார் மலேசியா வாசுதேவன். இங்கே நான் கண்டேன், கதை நாயகி, சாதனை, மலையோரம் மயிலே, ஒருவர் வாழும் ஆலயம், ராகங்கள் மாறுவதில்லை, முத்து எங்கள் சொத்து, சூரக்கோட்டை சிங்கக்குட்டி, வெள்ளை ரோஜா, ராஜா வீட்டுக்கன்னுக்குட்டி, கைராசிக்காரன், எழுதாத சட்டங்கள், இருமேதைகள், நாம் இருவர், நீதியின் நிழல், ராஜ ரிஷி, மேகம் கருத்திருக்கு, காவலன் அவன் கோவலன், சின்னப்பூவே மெல்லப்பேசு, அறுவடை நாள், இவர்கள் வருங்காலத் தூண்கள், பூப்பூவாப் பூத்திருக்கு, என் உயிர் கண்ணம்மா, மணமகளே வா, மனசுக்குள் மத்தாப்பூ, என் தங்கச்சி படிச்சவ, ரத்த தானம், தர்மத்தின் தலைவன், பூவிழி ராஜா, மூடுமந்திரம், நினைவுச்சின்னம், நல்ல காலம் பொறந்தாச்சு, காவலுக்குக் கெட்டிக்காரன், பொண்ணு பாக்கப் போறேன், சத்திய வாக்கு, கும்பக்கரை தங்கய்யா, தாலாட்டு கேக்குதம்மா, பாண்டித்துரை, நாங்கள், சின்னவர், உத்தம ராசா, பெரிய குடும்பம், பசும்பொன், சின்ன வாத்தியார் ஆகியவை பிரபுவுக்காக வாசுதேவன் பாடிய படங்கள்.

ராமராஜனுக்கும் அழகான பல பாடல்களைப் பாடினார் மலேசியா வாசுதேவன். நம்ம ஊரு நல்ல ஊரு, கிராமத்து மின்னல், பாட்டுக்கு நான் அடிமை, என்னை விட்டுப் போகாதே, செண்பகமே செண்பகமே, ராசாவே உன்னை நம்பி, இரயிலுக்கு நேரமாச்சு, நம்ம ஊரு நாயகன், எங்க ஊரு மாப்பிள்ளை, கரகாட்டக்காரன், ராஜா ராஜாதான், மனசுக்கேத்த மாப்பிள்ளை, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, ஊரு விட்டு ஊரு வந்து, மில் தொழிலாளி, பொண்ணுக்கேத்த புருஷன், வில்லுப்பாட்டுக்காரன், தேடி வந்த ராசா, அம்மன் கோயில் வாசலிலே, சீறிவரும் காளை போன்ற படங்களில் ராமராஜனுக்காகப் பாடினார் மலேசியா வாசுதேவன்.

மலேசியா வாசுதேவனின் குரல் தமிழுக்கானது. மொழிகளைக் கடந்த குரல் அல்ல அவருடையது. அதனால்தானோ என்னவோ தன் சமகாலச் சகாக்கள் சிலபலரால் பிறப்பிக்கவே முடியாத தனித்த, நுண்ணிய உணர்தல்களை அவர் படைத்துக் காட்டினார் போலும். பெண் குரலுக்கே உரிய சிணுங்கல், சிருங்காரம், நளினம், தாய்மை போன்றவற்றை வாசுவால் தன் குரலினூடே பிறப்பிக்க முடிந்தது. சன்ன செவ்வகமான காசோலையில் நெடிந்து வழிகிற ஒரு பெரும் பத்திரத்தில், கீழே வலப்புற மூலையில் கையெழுத்துக்கென்று ஒரு பிரத்தியேகத் தலம் இருக்கும், இல்லையா? அப்படி, தான் பாடுகிற ஒவ்வொரு பாடலிலும் ஏதேனும் ஒரு அல்லது சில இடங்களைத் தன் தனி முத்திரைக்காக உண்டுபண்ணிக் கொள்ளக்கூடிய சாமர்த்தியம் அவருக்கு இருந்தது. டூயட் பாடல்களின் போது, கூடப் பாடுகிறவரிடம் சகலத்தையும் விட்டுக்கொடுக்கிறாற் போல், கிட்டத்தட்ட ஓர் அடிமையின் சரணடைதலைப் போலவே உள்ளார்ந்து இயைந்து ஒலிக்கும் வாசுவின் குரல் மேற்சொன்ன கையெழுத்து ஸ்தலம் வந்ததும் சட்டென்று குரளி கண்விழித்து, அதுவரை தந்த அத்தனையையும் சிமிட்டுப் பொழுதில் பறித்துத் தன் வசமாக்கிக் கெக்கலிக்கும். இந்த வசியத்தை எனக்குத் தெரிந்து வாசு தன்னுடன் பாடும் பாடகியர் மட்டும் அல்ல, பாலு உள்ளிட்ட அனைத்துப் பாடகர்களிடமும் செய்திருக்கிறார். பிசகினால் இது ரைவல்ரி எனப்படும் பகையாகிவிடும். ஆனால் தனக்கொன்றும் தெரியாத பாவனையில் ஒரு குழந்தையின் எதிர்பாரா சாகசமாகவே இதைச் செய்துபார்க்கும் வாசுவின் குண விசேஷம், அவரது மந்திரவாதமாகவே நிலைபெற்றது.

யாருக்குப் பாடுகிறோம் என்பதை முற்றிலுமாகச் சட்டை செய்யாத ஒரு பாடகராகவும் அவரே இருந்தார். நடிக முகத்தில் அல்ல, பாடலின் ஆன்மாவில் போய்த் தன் குரலைப் பொருத்தினார் வாசு. உடலெல்லாம் மணி பெருக வளையவரும் கோவில் மாடு உறங்கும் போதுகூட அந்த மணிச்சப்தத்தை யூகிக்கவும், சர்வகாலமும் அதைக் கேட்டும் கேளாது ஒன்றெனப் பாவிக்கவும் ஆன இரட்டைத் தன்மைக்கு மனப்பழக்கம் கொண்டிருக்கும். அப்படித்தான் வாசுவும் தன் ஒவ்வொரு பாடலையுமே அதுவரையிலான தன் மொத்தப் பாடல்களையும் அழித்துவிட்டுப் பாடக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்தபடியால் முதற்பாடல் பாடுகிற கற்றுக்குட்டி ஒருவனின் வியர்வை பெருகும் பதற்றக் கடலாய் ஒவ்வொரு பாட்டையும் அணுகுவதற்குப் பதிலாக, யாருமற்ற அந்தகாரத்தில் தானும் தன் பாடலுமாய்ப் பொழுது கழிக்கிற நாடிலிப் பறவை ஒன்றைப் போல் போதுமான தானியமாகவே தன் பாடல்களைக் கடந்தார்.

இசையமைப்பு, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என அந்த மிருது மனிதர் செய்துபார்த்த எல்லாமுமே அவருக்கு மிகச் சுமாரான விளைதல்களையே பரிசளித்த போதிலும், தன் குரலை இயக்குகிற மனத்தை நோக்கி, யாதொரு துன்பியல் தரவுகளும் பாதித்துவிடா வண்ணம் பார்த்துக்கொள்ள அவரால் முடிந்தது. மலேசியா வாசுதேவன் பல மறக்க முடியாத பாடல்களைத் தன்வயம் செய்து பாடித்தந்த “பாடல் ராஜா”. “ஆயிரம் மலர்களே மலருங்கள்” பாடல் ஒரு அதிசயம். ராஜேந்தர் இசையில் பல பாடல்களை அடித்து தூள் செய்தவர் மலேசியா வாசுதேவன். “அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே” கலக்கி எடுத்த பாடல். தரையில் வாழும் மீன்கள் படத்தில் “அன்பே சிந்தாமணி” பாடல் உருக வைக்கும் தளிரிசைத் தென்றல். மண் வாசனை படத்தில் “அரிசி குத்தும் அக்கா மகளே” பாடல் விண்ணை அளைந்த வெற்றிகரம். சங்கர் கணேஷ் இசையில் விதி படத்துக்காக “தேவதாஸூம் நானும் ஒரு ஜாதிதானடி” என்று ரகளை செய்தார் வாசு. இதயத்திலே ஒரு இடம் படத்தில் “காலங்கள் மழைக்காலங்கள்” ஒரு மிருதுவான மெல்லிசை பவனி. சங்கர் குரு படத்தில் “காக்கிச் சட்டை போட்ட மச்சான்” பாடல் ஊரையே கலக்கிற்று. “கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு” பாடல் அடைந்த பிரபலம் அளவில்லாதது. “கோவில்மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ” பாடல் இன்றும் ஒலிக்கும் தேன்பாகு.

மலேசியா வாசுதேவனால் எல்லா விதமான பாடல்களையும் பாட முடியும். கலைஞானி கமல் மலேசியா வாசுதேவனின் 75 ஆம் பிறந்த தினத்தை ஒட்டி ஒரு காணொளிப் பேட்டியில் இப்படி வாழ்த்தினார். “என் நண்பர் மலேசியா வாசுதேவனால் எஸ்.பி.பி குரலிலும் பாட முடியும், டி.எம்.எஸ் குரலிலும் பாட முடியும், ஜேசுதாஸ் குரலிலும் பாட முடியும் ” என்று. இது மேலோட்டமாய்ப் புகழ்வதல்ல. இந்தக் கூற்றின் அர்த்த விரிதல் நம்மை வியப்பூட்டுகிறது. இதைவிடத் துல்லியமாக மலேசியா வாசுதேவனை யாராலும் அவதானித்துவிட முடியாது. உதாரணமாக, இளையராஜா இசையில் ‘கண்மணி’ படத்தில் ‘ஆசை இதயம்’ என்கிற பாடலைப் பற்றிச் சொல்லலாம். இந்தப் பாடலை வேறு யாராலுமே அவர் அளவுக்குப் பாடிவிட முடியாது என்று மெச்சத்தக்க வகையில் இந்தப் பாடலை மகா சாதனையாகவே படைத்துத் தந்தார் வாசு. ஒரு பாடலை இசையைத் தாண்டி வரிகளில் கசிந்துவிடாமல் அத்தனை துல்லியமாகத் தன் குரல் கொண்டு கத்தரிக்க முடியும் என்பதை அந்தப் பாடலில் செய்து காண்பித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் “மோனோலிசா மோனோலிசா” என்ற பாடல் தனித்து ஒலிக்கின்ற அபூர்வம். தனக்கே உரித்தான மணிக்குரலில் இதைப் பாடினார் வாசு. கிழக்குச் சீமையிலே படத்துக்காகத் “தென் கிழக்குச் சீமையில செங்காத்து பூமியில” பாடலைத் தன் தேவ குரலால் வருடித் தந்தார் வாசுதேவன். கருத்தம்மா படத்தில் “காடு பொட்டக் காடு” பாடலைப் பாரதிராஜாவோடு சேர்ந்து பாடினார். மின்சாரக் கனவு படத்தில் “பூ பூக்கும் ஓசை” பாடலை வாசு பாடிய விதம் புத்துணர்வுடன் அமைந்தது.

சாமந்திப்பூ, பாக்குவெத்தலை, இதோ வருகிறேன், ஆயிரம் கைகள், கொலுசு போன்ற படங்களுக்கு இசையமைத்த மலேசியா வாசுதேவன், நீ சிரித்தால் தீபாவளி என்ற படத்தை இளையராஜா இசையமைப்பில் தயாரித்து இயக்கினார். முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உள்பட 100 படங்களுக்கு மேல் நடிகராக மிளிர்ந்தார்.

சோகப் பாடல்களில் மலேசியா வாசுதேவன் கையளித்த நுட்பங்கள் அநேகம். ஒரு ஞான நடுக்கத்தை அவரால் மட்டுமே உருவகிக்க முடிந்தது. சில குகை இருள் ஆழங்களை வேறு யாரும் வாசு போல் முயன்றதுகூட இல்லை. கொண்டாட்ட மலையின் சிகரமாகவும் மௌன சாகரத்தின் ஆழமாகவும் அவரே இருந்தார். சர்வ வல்லமை என்று சொல்ல இயலாதெனினும், பொருட்படுத்தத்தக்க தனித்துவ வல்லமை அவருடைய வித்தகம். காற்றோடு உறவாடுகிற ஈரம்தானே மழை? அப்படி இசையோடு கலந்து புழங்கித் தனித்துத் திரும்பிய குரல் மலேசியா வாசுதேவனுடையது. திருப்ப முடியாத பூங்காற்று, தமிழ் மொழியின் தனித்துவம் மலேசியா வாசுதேவன். வாழ்க இசை.

-தொடரலாம்.

*

முந்தைய பகுதிகள்:

  1. கமல்ஹாசன்
  2. வீ.குமார்
  3. ஷ்யாம்

1 comment

A MOHAMED SHABIULLA December 8, 2021 - 6:11 pm

இளையராஜாவின் அநியாய பாகுபாட்டால் அடைய வேண்டிய உச்சத்தை இழந்தவர்.
மின்சாரக் கனவு படத்தில் ஹம்மிங் மட்டும் பாட வைத்து அவரை கொன்றது திரை உலகம்.
மறக்க முடியாத திறமை யாளன் அவர்.

Comments are closed.