அசோகன் இரண்டு இடங்களில் தொழில் படித்தான். வேலையில்லாமல் வெட்டியாகச் சுற்றிய அசோகனுக்கு அவனுடைய அண்ணன் அர்ஜூனன்தான் படியளக்கிற பெருமாள். அவருடைய பெயரைச் சொல்லித்தான் அசோகன் காக்கா தோப்பிற்குள் ஒரு முக்கிய குறு ரௌடியாகச் சுற்றியலைந்தான். அவ்வப்போது அசோகன் சிறு வியாபாரிகளை மிரட்டிக் காசு பிடுங்கவும் தொடங்கியிருந்தான். அர்ஜூனன் மாமாவிற்கு இது தெரிந்திருந்தாலும், அவரும்கூட இன்னொரு தரப்பிடம் இதையேதான் செய்தார் என்பதால் கண்டுகொள்ளவில்லை.

தாத்தாவின் அண்ணன் பையனான அர்ஜூனன் மாமா பனிரெண்டாவது படித்து முடித்ததுமே ரௌடியிசத்தில் இறங்கினார். சாதிக்காக நிறையக் கொலைகள் செய்தார். சந்தைப்பேட்டைக்குள் வியாபாரம் பெருகுகையில் சாதிச் சண்டைகளும் தொடங்கின. தாத்தா சார்ந்த சாதிக்காரர்கள் பழைய இரும்பு வியாபாரத்தில் கோலோச்சியதால், ஏலம் எடுப்பதில் வம்பு வழக்குகளும் இருந்தன. இந்தத் தரப்பு வியாபாரிகளுக்குப் பற்றிக்கொள்ள ஒரு துடுப்பு தேவைப்பட்டது.

எதிர்த்தரப்பு ஆட்களிடம் தடிதடியாக ஏகப்பட்ட ரௌடிகள் இருந்தனர். சந்தைப் பேட்டையும் நெல்பேட்டையும் அவர்களின் கைவசமே இருந்தன. பனிரெண்டாம் வகுப்பு இறுதியில், நண்பனொருத்தனின் தங்கையின் கையைப் பிடித்து இழுத்தான் எனச் சொல்லி ஒருத்தனைக் கொன்றார் அர்ஜூனன் மாமா. முடியைக் கொத்தாகப் பிடித்து ஆட்டுத் தலையைத் தூக்கி வருவதைப் போலக் கையில் மனிதத் தலையை ஏந்தி எல்லோரும் பார்க்கும்படி நடந்துவருவதைக் கண்ட ஊர், இன்னொருத்தன் உருவாகிவிட்டானெனக் குறி சொல்லிவிட்டது. சொல்லி வைத்த மாதிரி கொலையுண்டவன், அந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிற சாதியைச் சேர்ந்தவன்.

இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆட்கள் வகையாகத் திரண்டனர். பிள்ளைப் பூச்சிகள் மாதிரிச் சுற்றியலையும் சாதியில் கொலை வரை போனவர் அர்ஜூனன் மாமா மட்டுமே என்பதால், அவர் பின்னால் மற்றவர்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் அணி சேர்ந்தனர். “அந்தச் சின்னப் பயல்ட்ட ஒரு துடிப்பு இருக்கு. தூக்கின அரிவாளை யோசிக்காம, எதிரே இருக்கறது கல்லோ கடலோ உடலோ சட்டுன்னு எறக்கிடணும். கடைசி நொடில யோசிக்கவே கூடாது. அவன் முதல் சம்பவத்தையே நூல்பிசகாம சிறப்பா செஞ்சிருக்கான். பிறவிக் கொலைகாரந்தான் அவன். ஒழுக்கமா இருந்தா ஒரு சுத்து வருவான். ஆளும் பாக்க பீம மகராசன் மாதிரி ஓங்குதாங்கா இருக்கான்” என எதிர்த்தரப்பே அர்ஜூனன் மாமா குறித்து இப்படிச் சொன்னதாம்.

முதல் கொலையின் போது போன மத்திய சிறைச்சாலைக்குள் மாமாவைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள யாவாரிகள் எல்லோரும் சேர்ந்து கைமுதல் போட்டார்கள். உள்ளேயே தனியாகச் சமைத்துப் போட கையூட்டு கொடுத்துச் சாதித்தார்கள். மாமா தான் ஒரு முக்கியமானவனென அந்தச் சிறு வயதிலேயே அடியாழத்தில் இருந்து உணர்ந்தார்.

அவருடைய உடல் தோரணைகளும் அதற்குத் தோதாய் இருக்கும். சட்டி சட்டியாய்ப் பால் குடித்து வளர்ந்த உடம்பென்பதால், தேக்குக் கட்டையைப் போல இறுகியுருண்டு இருப்பார். உடற்பயிற்சிக் கூடத்திற்குப் போன வகையில் ரௌடிகளோடு சங்காத்தம் ஏற்பட்டுவிட்டது. மாமா மூச்சையடக்கி நெஞ்சை விரித்தால், அகலமாக அளவெடுத்துச் செதுக்கப்பட்ட மரக்கட்டையொன்றைப் போல, புடைத்து விடைக்கிற உறுதி தெரியும். அசோகனைப் போல அட்டைக் கரியில்லாமல், அவரது வயதையொத்த பெண்பிள்ளைகள் எல்லோரும் நிமிர்ந்து பார்க்கிற மாதிரி கொஞ்சம் மாநிறம்.

அசோகனிடம் இல்லாத ஒன்று அர்ஜூனன் மாமாவிடம் இருந்தது. அர்ஜூனன் அசோகனைவிட அதிகம் குடிப்பார் என்றாலும், தினமும் குடிப்பதில்லை. தலைதடுமாறி அலைவது ரௌடித் தொழிலில் தீண்டத்தகாதது என்பதைப் புரிந்து வைத்திருந்தார். நல்ல தொழில்காரனிடம் போதையென்பது கையில் வைத்திருக்கிற கூர்தீட்டப்பட்ட அரிவாளைப் போல, எப்போது வேண்டுமானாலும் உருவத் தயாராக இருக்கிற நிலையிலேயே தன்னை வைத்துக்கொள்வது. ஆனால் குடித்துவிட்டால், போதையே இல்லாமல் வேண்டுமென்றே அவர் செய்கிற சேட்டைகள் விஷயத்தில் அசோகனெல்லாம் எம்மாத்திரம்?

அர்ஜூனன் மாமா, நிலைதடுமாறியவனைப் போல நடித்து உடனிருப்பவர்கள், பார்வையில் தட்டுப்படுகிறவர்கள் என எல்லோரையும் இம்சிப்பார். “அவன் நடிக்கிறான்னு எனக்குத் தெரியும் மாப்பிள்ளை. சைக்கிள்ள போற வயசான ஏட்டையாவ பாத்தாகூட சட்டுன்னு அவனுக்கு அப்புறம் எப்படி விழிப்பு வருது? அவர் கடந்து போற வரைக்கும் பம்முவான்” என்றான் அசோகன். ஒருநாள் சந்தைப் பேட்டை வியாபாரம் முடிந்து ஆட்கள் கலைந்த பிறகு, வடைக் கடை போட்டிருந்த ஒருத்தனைப் போட்டு நெஞ்சில் மிதித்துக்கொண்டிருந்தார் அர்ஜூனன். “அப்புராணியான ஒருத்தனைப் போட்டு மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கிறான். நடுரோட்டில சாகப் போறான்” எனப் பார்த்தவர்கள் சாபம் விட்டார்களாம். 

அர்ஜூனனைப் பொறுத்தவரை, அடித்து விட்டுத்தான் மேலே பேசவே ஆரம்பிப்பார். “வாயில இருந்து சொல்லு வர்றதுக்குள்ள கைலருந்து செயல் சப்புனு வெளீல வந்திரணும்” என்று சொல்கிற, அவரது அந்த வேகம் எதிர்த்தரப்பை அச்சுறுத்தியது. கூடவே பணம் படைத்த வியாபாரிகள் தரப்பு ரௌடி என்பதால், அவர் மீது  கூடுதல் கவனமாக இருந்தவர்கள், சமயம் பார்த்தும் காத்திருந்தனர்.

எந்த வம்பு வழக்கிற்கும் போகாத தாத்தாவே அர்ஜூனனை வழியில் பார்த்தால், “காசு வேணும்னா சொல்லி அனுப்புல” என்பாராம். மாமாவை முக்கியப் பிரமுகராக அவருடைய ஆட்கள் வம்படியாக வளர்த்துக்கொண்டிருந்தனர். ஒருவகையில் மாமா அவருடைய சாதிக்கான பாதுகாப்பு வளையமாக மாறி இருந்தார்.

குறுகிய காலத்திற்குள்ளாகவே அர்ஜூனன் மாமா பதினான்கு கொலைகளைச் செய்திருந்தார். காசு இருக்கிற தரப்பு என்பதால், எந்த வழக்கிலும் தண்டனை கிடைக்கவில்லை. அவருக்குப் பதில் யார்யாரோ ஆஜரானார்கள். அலுமினிய வியாபாரி ஒருத்தரைக் கொன்ற வழக்கு ஒன்றிற்காக சாத்தூர் சப் கோர்ட்டில் மாமா ஆஜராகும் போது பெரிய தாத்தாவோடு நானும் போயிருந்தேன். “போலீஸ் காரியத்துக்குச் சின்னப் பிள்ளைகளை கூப்டு வரலாமா? சீக்கிரம் கிளம்புங்க. போலீஸ் பயம் போயிருச்சுன்னா, அப்புறம் இந்தச் சொகம் கண்டிரும். போற வழியில பிரியாணி கிரியாணி வாங்கிக் குடுங்க” என்ற மாமா இடுப்பில் சொருகி வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தார். “எண்ட்ட இருக்குடா அர்ஜூனா” எனத் தாத்தா சொல்லிய போது, “மருமவனுக்கு என் கையால வாங்கிக் குடுத்தாதான் திருப்தி” எனச் சொல்லிவிட்டு என் கன்னத்தைத் தட்டிச் சிரித்தார்.

சின்னப் பிள்ளையாக இருக்கையில், என்னைத் தூக்கிக்கொண்டு அசோகன் போகும் போதும், இதையே வேறு வார்த்தைகளில் சொல்வாராம். “இந்தச் செடியை வேற எங்கயாச்சும்தான் நடணும். எங்க நடறோமோ அங்கத்தைய இயல்புதான் வரும். அவனை இடுப்பில சுமந்துக்கிட்டு திரியாத. எறக்கி விட்டிரு” என்பாராம்.

அக்னி நட்சத்திர வெயில் காலமொன்றில் விளையாடி விட்டு, வியர்த்து விறுவிறுத்து வீட்டில் நுழையும் போது, மர நாற்காலியில் அமர்ந்திருந்தார் அர்ஜூனன் மாமா. வெட்கப்பட்டுக்கொண்டு ஒதுங்கி நின்றவனை அழைத்து, “வெயில்ல இருந்து வீட்டுக்கு வந்தவுடனேயே மூஞ்சிய கழுவிடணும். எப்பவும் மாமா மாதிரி ஜொலிப்பா இருக்கணும்” என்றார். அன்றைக்கு அம்மா பருப்பு ரசமும் அதலைக்காய் பொரியலும் வைத்திருந்தாள். அம்மா ஏனோ அர்ஜூனன் மாமாவை மட்டும் ஒத்துக்கொண்டாள். “தப்போ சரியோ அவனாச்சும் நாலு பேருக்கு உபயோகமா இருக்கான். இவன் வெறும் பய மாதிரி எச்சி சோறுக்கு அலையிறவன்” என்றாள்.

மாமாவுடன் வந்தவர்கள் நாகர் புரோட்டா கடையில் சாப்பிட்டுக்கொள்வதாகச் சொல்லிச் சென்றார்கள். இலைபரப்பி சோற்றைப் போடும் நேரத்தில், வெளியிலிருந்து ஒரு சத்தம் கேட்டவுடன் மாமா பதறிக்கொண்டு எழுந்து கத்தியை உருவியதும் அம்மா பயந்துவிட்டாள். வெளியே பஞ்சாரக் கூடையை கோழி தட்டி விட்டு ஓடிய சத்தமே அது.

அர்ஜூனன் மாமா போன பிறகு அம்மா, “உசுருக்கு பயந்திட்டான். இனி நிம்மதியா சோத்தில கை வைக்க முடியாது” என்றாள் அப்பாவிடம். ஒருகட்டத்திற்கு மேல், அர்ஜூனன் மாமா அதைப் போலத்தான் ஓடிக்கொண்டே இருந்தார். அசோகனும் அந்த ஓட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டான். குடிக்கும் கறிக்கும் பிரச்சினையில்லாமல் போனதால், அசோகனுக்கும் அதில் எந்த விலக்கமும் இல்லை.

அசோகனைப் பொறுத்தவரை மிரட்டிக்கொண்டிருப்பானே ஒழிய, யாரையும் அவன் அடித்து நான் பார்த்ததே இல்லை. தெருவில் திருவிழா சமயத்தில் நடந்த சண்டையின் போதுகூட மிரட்டலாக வந்து நின்றானே தவிர, யார் மீதும் கை வைக்கவில்லை. அர்ஜூனனின் தம்பி என மற்றவர்கள் இயல்பாகவே பயந்ததால், அசோகன் அந்தப் பயத்தைத் தக்கவைக்கிற மாதிரி, முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டலைந்தான்.

எனக்கு ஐந்து வயது இருக்கையில், “ரோட்டில வச்சு டேய் அசோகான்னு கூப்ட மாட்டேன்னு எண்ட்ட சத்தியம் பண்ணுடா மாப்பிள்ளை” என்றான் என்னிடம். “போடா என் டொரினா” என்றேன் பதிலாய். அதற்கப்புறம் நான் இப்படிக் கூப்பிடுவதைக் கண்டு யாராவது சிரித்தால், “மாப்பிள்ளைக்கு இப்பருந்தே டிரெயினிங் குடுக்கறேன்” எனச் சொல்லிச் சிரிப்பான். “யாரைச்சும் நீ அடிச்சிருக்கீயா” என்ற போது, “இந்தக் கையப் பாரு. எப்படிக் காய்ப்பு காய்ச்சிருக்குன்னு. கன்னத்தில அறைஞ்சே வந்த காய்ப்பு இது. உனக்கு செல்லம் குடுத்ததால வந்த வினை” என்றான்.

அர்ஜூனன் மாமாவோடு பசை போட்டு ஒட்டித் திரிகிற போதும், எதிர்த்தரப்பு ஆட்கள்கூட அவனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதில் அசோகனுக்குமே வருத்தம்தான். அதுகுறித்த பெரிய கவலைகள் ஏதுமில்லாமல், மிரட்டிச் சாப்பிடுகிற வித்தையை மட்டும் அத்தொழிலில் இருந்து கற்றுக்கொண்டான் அசோகன்.

அதற்கு நேரெதிராய் மனப்பதற்றம் கொண்ட அர்ஜூனன் மாமா, திடீரென அத்துமீறல்கள் அத்தனையையும் தன் வாழ்வில் நிகழ்த்திப் பார்க்கத் தொடங்கினார். நல்லதொன்றை எடுத்துச் சொன்ன அசோகனைக்கூட ஒருதடவை அடிக்கக் கை ஓங்கியிருக்கிறார். அசோகன் நிமிர்ந்து முறைத்ததும் கையைத் தணித்துக்கொண்டாராம்.

“அவனுக்கு அஷ்டம சனி தலையை பிடிச்சு உலுக்குது” என்றாளாம் ஆச்சி. அர்ஜூனன் மாமா ஒரு இடத்தில் நிலையாகத் தங்க முடியாது என்கிற மாதிரியான உக்கிரம் கூர்தீட்டப்பட்ட குத்தீட்டியைப் போல அவரைச் சூழத் தொடங்கியது. உயிரைக் காத்துக்கொள்ள ஊர் ஊராக ஓட எத்தனித்தார் மாமா.

கன்னியாகுமரி போகிற பேருந்தில் ஏறித் தனியாகப் படுத்துவிடுவார். காலையில் அங்கே எழுந்து இன்னொரு ஊருக்கு மறுபடியும் வேறொரு பேருந்தைப் பிடிப்பார். மாமாவோடு சில நேரங்களில் அசோகனும் போயிருப்பதாகச் சொன்னான். கையில் இருக்கிற காசைப் போட்டு அம்பாசிடர் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்கள்.

“தலைக்கிருமம் பிடிச்ச பயல்க. முத வாங்குற காரை கறுப்பு கலர்ல வாங்குவாங்களா” என்றாராம் பெரிய தாத்தா. அம்பாசிடர் வந்த பிறகு அசோகன் அதன் ஓட்டுனர் ஆனான். கூடவே நாலைந்து பேரைத் தூக்கிப் போட்டுக்கொண்டு சுற்றத் தொடங்கினார் மாமா.

கையில் காசு புழக்கத்திற்குக் குறைவில்லை என்றாலும், நிச்சயமற்ற காலத்தைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட வேண்டும். எதிர்த்தரப்பில் நிறையத் தலைகள் உருண்டுவிட்டதால், இந்தத் தரப்பில் ஒற்றைப் பெரிய தலையைத் தூக்கிவிடுவது என்பதில் தீர்மானமாக இருந்தார்கள்.

அர்ஜூனன் மாமாவோடு பள்ளியில் படித்த ஒருத்தர் டென்மார்க்கில் வேலை பார்க்கிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த அவரையும் அழைத்துக்கொண்டு எல்லோரும் திருவண்ணாமலை போயிருக்கிறார்கள். போகையில் மாமா செய்த கொலைகள், உருண்ட தலைகள் குறித்து விவரித்து, தன்னிலை உணர்ந்தவனைப் போலக் கலக்கமாகப் பேசி இருக்கிறார். உடனிருந்த நண்பர், மாமாவின் பதற்றத்தைத் தணிக்கும் பொருட்டு, டென்மார்க்கில் உள்ள இடமொன்றைக் குறித்துச் சொல்லி இருக்கிறார்.

போர்கள் நடக்கும் போது காலை ஆறு மணி தொடங்கி மாலை ஆறு மணி வரை சண்டை. அதற்கப்புறம் குண்டுகள் துளைத்து மண்ணில் வீழ்ந்து கிடக்கும் உடல்களின் நடுவே நின்று மதுவருந்திக் கொண்டாடுவார்களாம். இந்தக் கதையைக் கேட்டு முடித்ததும், “அந்த சிவாஸ் ரீகலை எடுடா அசோகா” என்றாராம் மாமா.

அன்றைக்கு உண்மையிலேயே நிலைதடுமாறுகிற அளவிற்குக் குடித்திருக்கிறார் மாமா. அவருடன் பாளையம் கோட்டை சிறையில் இருந்த பிளேடு பாட்ஷா, அப்போது திருவண்ணாமலை கோயிலொன்றில் இருக்கிற சைக்கிள் ஸ்டேண்ட் ஓனர் ஒருத்தருக்குப் பாதுகாப்பாக இருந்திருக்கிறார். அவரைப் பார்க்கத்தான் எல்லோரும் போயிருக்கிறார்கள். “ப்ளேட துண்டு துண்டா ஒடைச்சு வாயில அதக்கி வச்சிருப்பான். எதிராளி மூஞ்சில ஒரே துப்பு. எச்சிலோ என்னவோன்னு தெரியாத்தனமா தொடைச்சா மூஞ்சு முழுக்க ரத்தம் வந்திரும்” என விவரித்தான் அசோகன்.

கிரிவலமெல்லாம் புகழ் பெறாத காலம் அது. அப்போதுதான் மலையைச் சுற்றி விளக்குகள் பொருத்த ஆரம்பித்திருந்தனர். அம்பாசிடர் காரில் சாய்ந்து ஒருகையை அதில் ஊன்றி நின்றிருந்த மாமா, தன்னைக் கடந்து போன ஒருத்தரின் உச்சந்தலையில் ஓங்கி அடித்தாராம். திரும்பிப் பார்த்த அவரைப் பார்த்து, “தட்டான் சாமி” என்று சொல்லிக் கையெடுத்துக் கும்பிட்டாராம் பாட்ஷா. அசோகனும் வேண்டாமெனச் சொல்லி மாமாவின் கையைப் பிடித்து இழுத்திருக்கிறான்.

மாமாவிற்குள் மூண்ட சனிச் சுழி கேட்கவில்லை. திரும்பி நின்று அமைதியாக உற்றுப் பார்த்த தட்டான் சாமியின் கன்னத்தில் அறைந்த மாமா, “என்னைக் கும்பிடுலே பன்னிப் பயலே” என்று கத்தியிருக்கிறார். தட்டான் ஒரு அடிகூட முன்னே நகராமல், தலையை ஆட்டியபடி நின்றிருந்திருக்கிறார்.

எல்லோரும் சேர்ந்து மாமாவை இழுக்கும் போது, இடுப்பிலிருந்து கத்தியை உருவி தட்டானை நோக்கிக் காட்டி மிரட்டியிருக்கிறார். தூரத்தில் ஒரு காவலர் இதைப் பார்த்துக்கொண்டிருந்ததும், ஆளைத் தூக்கி காரின் பின்புறம் போட்டுத் தப்பித்து ஓடியிருக்கிறார்கள். “அந்தச் சாமியை அவன் தொட்டிருக்கக்கூடாது” என பின்னொருநாளில் அசோகன் சொன்னான்.

பத்தாவது பரீட்சை அப்போது நடந்துகொண்டிருந்தது. நான் கிளம்பிக்கொண்டிருந்த போது, அப்பா “அர்ஜூனனை சிங்கந்தூர் சாவடியில வச்சு…” எனச் சொல்ல ஆரம்பித்து நான் போகிற வரை சொல்லாமல் வார்த்தைகளைக் கடித்து விழுங்கினார். பரீட்சையில் மனம் போகவில்லை எனக்கு. சாயந்திரம் வந்ததும் அம்மாவிடம் கேட்டேன். ”கத்தியெடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு” எனச் சொல்லி என் கண்களை உற்றுப் பார்த்தபடி அந்தக் கதையைச் சொன்னாள்.

சிங்கந்தூர் சாவடியில் படம் பார்த்துவிட்டு, தனியாகப் புல்லட்டில் வந்துகொண்டு இருந்திருக்கிறார் மாமா. படத்திற்குப் போகவில்லை, அவருடைய தொடுப்பு வீட்டிற்குத்தான் தனியாகப் போய்த் திரும்பினார் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். தூரத்தில் இருந்து பார்த்தவர்கள் இப்படியொரு கொலையை அந்த ஊர் வரலாற்றில் பார்த்ததில்லை என்றார்கள்.

மாமாவின் உடலை பதினாறு இடங்களில் கூறு போட்டிருந்தார்கள். முகத்தில் சின்னக் காயம்கூட இல்லை. ஆனால் உச்சந்தலையில் ஆழமான ஒரு வெட்டிருந்தது. நடுவழுக்கை விழத் தொடங்கியிருந்த அவ்விடத்தில் இரண்டு விரல்கள் போகுமளவிற்கு குழியிருந்தது. ஜீவசமாதி நிலையைப் போல அமரவைத்து நடுவகிட்டில் அரிவாளின் கூர்முனையை வைத்துக் கொத்தினால்தான் அது சாத்தியம் என்றார்கள். மாமாவின் கண்ணில் மிளகாய்த் தூள் தூவியதால் வலுவாகச் சிக்கிக்கொண்டார். ஊர்க்கழிவுத் தண்ணீரெல்லாம் கலந்து சாக்கடையாக மாறிப்போன அந்தக் கால்வாயில் மாமாவின் உடல் கிடந்த இடத்தில் பன்றியொன்றும் படுத்திருந்ததாம். “அத்தா தண்டி ஈயை என் வாழ்நாள்ள பாத்ததே இல்லை மாப்பிள்ளை. ஒரு ஒத்தை ஈ அவனோட நெத்திப் பொட்டில ஒட்டிக்கிட்டு ஆஸ்பத்திரி வரைக்கும் கூடவே வந்திச்சு” என்றான் அசோகன்.

*

(சரவணன் சந்திரன் எழுதிய, ஜீரோ டிகிரி பதிப்பக வெளியீடாக விரைவில் வரவிருக்கும் அசோகர் நாவலில் இடம்பெற்றுள்ள ஒரு அத்தியாயம்)

1 comment

Kasturi G December 26, 2021 - 9:11 pm

Thanks . Absorbing style of writing . , however i am afraid this kind of eulogic writing on violent behaviour is likely to influence vulnerable readers. Especially, in the current context of consumerism and Mammon worshippers on the rise i think we need moderation .
Good luck .

Comments are closed.