இசையின் முகங்கள் (பகுதி 6): பி.ஜெயச்சந்திரன்

by ஆத்மார்த்தி
0 comment

பளியத் ஜெயச்சந்திரன் (எ) பி.ஜெயச்சந்திரன் 03.03.1944 அன்று பிறந்தவர். சிறுவயது முதலே இசையார்வம் கொண்டவர். அவருடைய இன்ஸ்பிரேஷன் கே.ஜே.ஏசுதாஸ். இருவருமே தமிழில் மிகவும் கொண்டாடப்படுகிற கேரளக் குரலாளர்கள் என்பதில் தொடங்கி, பேசுவதற்குப் பல விஷயங்கள் உண்டு. ஜி.தேவராஜன் இசையில் ஸ்ரீ நாராயண குரு (1986) மலையாளப் படத்திற்காக ஒரு டூயட் உட்பட மூன்று பாட்டுகளை ஜெயன் பாடியிருக்கிறார். அந்தப் படத்தில் சிவசங்கர சர்வ சரண்ய விவோ எனும் சோலோ அவருக்குச் சிறந்த பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது. மலையாளத்துக்கு அடுத்தாற் போல் தமிழில் ஆயிரம் பாடல்கள் வரை திரைப்படங்களுக்காகப் பாடியிருக்கக் கூடியவரான ஜெயச்சந்திரன், எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் முதலாவதாக நானெழுத விரும்புகிற இசைஞரின் பெயர்.

ஜெயச்சந்திரனின் குரல் வித்தியாசமான வகை ஒன்றினைச் சேர்ந்தது. அவர் தமிழில் அறிமுகமான படம் அனேகமாக அலைகளாக இருக்கக்கூடும். அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடுகிற குரல் வகை எல்லோருக்கும் வாய்க்காது. இந்த அதிகம்- குறைவு என்பதெல்லாம் கிடைக்கும் வாய்ப்புகளைப் பொறுத்தது மாத்திரமல்ல. குரலின் தன்மை, ஒரு பாடலை அதன் திரையிசைத் தேவைக்கு ஏற்ப புரிந்துகொண்டு உள்வாங்கிப் பாடுகிற வல்லமை, அதற்கு எடுத்துக்கொள்ளக்கூடிய காலம், ஒத்திகை முறை, புரிதல் எனப் பல கூறுகளைப் பொறுத்து அமைவது. ஒருவர் மிக எளிதாக ஒரு பாடலை அதன் திரைப்படத் தேவைக்கு ஏற்ப பாடிவிடுகிறார் என்றால், அவரது குரல் நன்றாக எடுபடும் பட்சத்தில், மிக வேகமாக அதிக எண்ணிக்கையிலான பாடல்களை அவரால் பாட முடியும்.

இதில் உள்ளடங்கி இருக்கக்கூடிய இன்னொரு விஷயத்தைப் பார்க்கலாம். குரலுக்கும் நிலத்துக்கும் இடையிலான தொடர்பு. இதே காலகட்டத்துக்குச் சற்று முன் பாடவந்த மற்றுமொரு பாடகர் ஜேசுதாஸ். ஜேசுதாஸைக் காட்டிலும் அதிகத் தமிழ்ப் பாடல்களைப் பாடுவதற்கான வாய்ப்பு ஜெயச்சந்திரனுக்குக் கிடைத்ததை ஒருபுறம் இருத்தினால், ஜேசுதாஸ் பாடிய கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களுமே பரவலாகக் கவனம் பெற்ற சூப்பர்ஹிட் பாடல்களாகவே அமைந்ததை மறுபுறம் இருத்த முடியும். இந்த இருவரின் வேறுபட்ட குரல்கள் சேர்ந்து உருவாக்கிய சித்திரம் அது. எப்போதுமே மலையாளம் கலக்காத குரலுக்கெனத் தனிப் பிரயத்தனம் எதையும் மேற்கொள்ளாதவர் ஜேசுதாஸ். அவருடைய கன்னட, தெலுங்கு, ஹிந்திப் பாடல்களிலும் ஒரு சில இடங்களிலாவது கேரள வாசனையோடு கடப்பது அவர் வழக்கம். இது குறைபாடல்ல. அவருடைய குரலின் தன்மை. ஜேசுதாஸின் குரலில் கரைந்துபோக நேர்கிற பல பாடல்களின் ஒட்டுமொத்த உணர்தலின் பிரதி நிழல் ஒன்றெனவே இத்தகைய மலையாளத் தன்மையை உணர்வதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த இடத்தில், மலையாளத் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஜெயச்சந்திரன் அளித்த நேர்காணலைப் பார்க்கும் போது எனக்குக் கிட்டிய அனுபவத்தைச் சேர்த்துப் பகிரத் தோன்றுகிறது. தமிழில் தன் பாடல்கள் குறித்தெல்லாம் அதில் பேசும் ஜெயச்சந்திரன், எம்.எஸ்.விஸ்வநாதனைத் தன் காட்ஃபாதர் என்கிறார். அவருடைய அன்புக்கு உலகத்தில் ஈடேதும் இல்லை என நெக்குருகிப் பேசுகிறார். இளையராஜா சாதாரணமாய் அறிமுகமாகி உச்சம் தொட்ட மேதை எனச் சிலாகிக்கிறார். தனக்குப் பாடுவதற்கான பாடல் வாய்ப்புகளைத் தந்த எல்லா இசையமைப்பாளர்களுடனும் தனக்கு இருந்த தொழில்சார் உறவு பற்றிய நுட்பமான விவரங்களைத் தந்துகொண்டே ஜெயன் உதிர்த்த ஒரு தகவல்தான் இங்கே எழுத வேண்டியதாக இருந்தது. தமிழில் தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பிலிருந்தே தமிழிலேயே பாடலை வாசித்து, உட்கிரகித்து தான் பாடியதாகவும், மலையாளம் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடல் வரிகளைத் துண்டு துண்டாக எழுதிக்கொண்டு பாடுவதில் தனக்கு ஒருபோதும் உவப்பில்லை என்று தெரிவித்தார்.

தமக்கு உசிதமான மொழியில் பாடலின் வரிகளை எழுதி வைத்துக்கொண்டு பாடுவது பலரது வழக்கமாக இருந்த காலகட்டத்தில்தான் ஜெயச்சந்திரன் மாத்திரம் இப்படி தனித்ததைச் சொல்லுகிறார். இது நியம- மீறல் சூழலின் நிர்பந்தம், பழக்கவழக்கம் என்பனவற்றை எல்லாம் மீறி ஒருவரது தொழில் மீதான ஈடுபாடு, கலை மீதான பற்றுதல் ஆகியவற்றைக் குறித்து விளக்கிச் சொல்வதாக அமைகிறது. தன் அடிப்படைக் குணமாகவே இதனைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒருவரால் இதனைக் கடுமையாக நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடிக்க முடிந்திருக்கிறது. பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு பாடகரின் குரலும் வேறு ஒரு அல்லது சில பாடகர்களின் குரல் வகைமையோடு ஒத்திசைந்து பயணிப்பதாகத்தான் அமையும். அதே நேரத்தில் தனக்கான தனித்துவத்தை ஒளிரச் செய்வதாகவும் விளங்கும். கர்நாடக சங்கீதத்தில் பேர் பெற்ற பாடகர்கள் பலரும் திரைப்பாடல்களைப் பொறுத்தமட்டிலும் குறைவான பாடல்களையே பாடியிருப்பதும் பாடாமலே தவிர்ப்பதும்கூட இரண்டு துறைகளுக்கும் இடையிலான முறைமை வேறுபாட்டின் அடிப்படையிலானது. ஜெயச்சந்திரனின் குரல் மிருதுவான ஓரிடத்திலிருந்து தொடங்கி கனமான ஒரு தலத்தை நோக்கிப் பயணிக்கக்கூடியது. மென்மையின் அடியாழத்துக்கு இறங்கியதும் இல்லை, மாபெரும் கனத்தோடு இயங்கியதும் இல்லை. இந்த மென்மைக்கப்பால், அந்தக் கனத்துக்கு முன்னால் என்று அவரது குரலின் இயங்குதளத்தை வரையறுத்துவிட முடியும்.

ஜெயச்சந்திரனின் குரல் ஒரு நம்பக ஒழுங்கோடு பெருக்கெடுக்கக் கூடியது, பிசிறில்லாத வகையிலானது. எத்தனை ஏற்றி இறக்கிப் பாடினாலும் வெளித்தெரியாத நரம்பு ஒன்றினால் கட்டப்பட்டு இருக்கக்கூடிய வாடாத மலர்களைப் போல் தனித்துவ ஒருமை ஒன்றோடு எப்போதும் ஒலிப்பது. எழுபதுகளின் தொடக்கத்தில் அந்தக் குரல் எப்படி ஒலித்ததோ அதே போலவே தொண்ணூறுகளின் எல்லையிலும் ஒலிக்க முடிந்தது. எந்த இசையமைப்பாளருடைய செல்லப்பிள்ளையாகவும் அவர் இருந்ததில்லை. எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், இளையராஜா, சங்கர் கணேஷ், குமார், சந்திரபோஸ், ஏ.ஆர்.ரகுமான் என ஒரு நெடுங்காலப் பயணத்தை அந்தக் குரலால் நிறைத்தளிக்க முடிந்திருக்கிறது. எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடவில்லை என்றாலும் ஒரு காலத்தில் குறிப்பிட்ட மனோநிலைகளின் குரலாக அவர் ஒலித்தார்.

காதலின் தனித்த உணர்வுகளைப் பாடல்களில் பிறப்பித்த வகையில் ஜெயச்சந்திரனின் பல பாடல்கள் மறக்க முடியாதவை. காத்திருத்தலின் வாதையை, ஏக்கத் துயரை, ஊடலின் வலியினை, துரோகத்தின் எதிர்பாராப் புதிர்மையை, அவநம்பகத்தை, எதிர்பார்த்தலை, பிரார்த்தனையைத் தன் பாடல்களெங்கும் படர்த்தினார். ஜெயச்சந்திரன் தனிப்பாடல்களில் பெரிய மனநிறைவைப் பிரதிபலித்தவர். டூயட் பாடல்களிலும் குழுப் பாடல்களிலும் சற்று முன் பின்னாய் மாற்றம் கொண்ட குரல்களோடு இயங்கியவர். தன்னோடு பாடுகிற குரலுக்கு ஏற்றாற்போல் சற்றே சமரசம் செய்துகொண்டு பாடுகிற ஆற்றல் அவர் குரலில் இயல்பாகவே அமைந்திருந்தது. இந்த முரண் நுட்பமானது. இத்தகைய மாறுபட்ட வெளியீட்டைப் புறவய நிர்பந்தத்தின் மூலம் சாத்தியப்படுத்திவிட முடியாது. சின்னஞ்சிறிய நுட்பங்களை, நசிவற்ற ஒழுங்கோடு மீண்டும் மீண்டும் உருத்தர முடிகிற பேராற்றல் அவரது குரலியல்புகளில் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜேசுதாஸ், சீர்காழி கோவிந்தராஜன் எனத் தான் இணைந்து பாடிய பாடகர்களோடும் சுசீலா, வாணி, எஸ்.ஜானகி உட்படப் பாடகியருடனும் பொருந்தி ஒளிர்தலும் விலகலுமாய்ப் பல பாடல்களைப் பாடித் தர அவரால் முடிந்தது.

அலைகள் படத்தில் பொன்னென்ன பூவென்ன கண்ணே என்ற பாடல் விஷ்ணுவர்தன், சந்திரகலா தோன்றும் ஒரு கருப்பு-வெள்ளைப் பாடல். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த படம் இது. ஜெயச்சந்திரன் தமிழில் தன் கணக்கைத் தொடங்கிய பாடலே தனியாகத் துல்லியமாக ஒதுக்கித் தந்தது.

மார்கழியில் மாலையிலே மலர்ந்ததும் ஓர் மல்லிகைப்பூ
யார் வருவார் யார் பறிப்பார் யார் அறிவார் இப்போது

இந்த இரண்டாம் தொகையை ஜெயச்சந்திரன் பாடியது அலாதியான விதம். சின்ன நுட்பம், நுண்ணிய உணர்வு, கம்பீரமும் சின்னப் படபடப்பும் கலந்தாற் போன்ற தன்மை இது. அரிதான தோற்றுவித்தல். “ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னை” என்று இந்தப் பாடலின் பல்லவியை ஜெயச்சந்திரன் கையாண்ட விதம் அத்தனை உசிதம்.

ஏ.எம்.ராஜா அல்லது பீ.பி.ஸ்ரீநிவாஸ் இருவருடைய குரலிலும் எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்கும் அதிகப் பாடல்கள் இல்லை. இந்த இரண்டு நட்சத்திரங்களுக்கும் பொதுவான பிரதானக் குரலாக டி.எம்.சவுந்தரராஜன் விளங்கினார். சீர்காழி கோவிந்தராஜனும், சி.எஸ்.ஜெயராமனும், திருச்சி லோகநாதனும்கூட சில பல பாடல்களைப் பாடியிருக்கின்றனர். என்றாலும், அந்த இரண்டு நடிகர்களை நினைத்த மாத்திரத்தில் நினைவுக்கு வரும் குரல்முகம் டி.எம்.எஸ்.தான். இதே போல ஜெமினி தொடங்கி ரவிச்சந்திரன் வரைக்கும் ஸ்ரீனிவாஸ், ஏ.எம்.ராஜா, ஏ.எல்.ராகவன் எனப் பலர் பாடினர். இது திரையுலகத் தேவை, வகைமை நிமித்தம் சார்ந்த இயக்கம். அப்படி எழுபதுகளின் மத்தியில் அறிமுகமான ஜெயச்சந்திரனின் பாடுங்குரல் எந்த ஒரு நடிகருக்குமான பிரதானக் குரலாகத் தனித்து ஒளிர்ந்து ஒலிக்கவில்லை. இது நன்மையோ தீமையோ அற்ற நிதர்சனம் மட்டுமே. தன் பாடக வாழ்வெங்கும் எந்த ஒரு நடிகருக்குமான பாடகராகத் தனிக்காமல் பல முகங்களுக்கான குரலளிப்பை நல்கியிருக்கிறார் ஜெயச்சந்திரன். கமல்ஹாசனுக்கு அதிகம் பாடவில்லை. மற்றபடி ரஜினி தொடங்கி பிரபுதேவா வரைக்கும் யாவர்க்குமான பேரமுதாகவே விளங்கிற்று அவர் குரல்.

ஒரு கொடியில் இரு மலர்கள் படத்தில் எம்.எஸ்.வி இசையில் சுசீலாவோடு ஒரு பாடலைப் பாடியிருந்தார் ஜெய். கண்ணனின் சன்னிதியில் என் கண்மணிப் புன்னகையில் என்று தொடங்கும் வாலி எழுதிய இந்தப் பாடலின் இரண்டாம் பகுதியில்தான் ஜெய் பாடுவார். 3.20 நிமிடம் ஒலிக்கும் பாடலில் அவர் குரல் 2.20லிருந்துதான் ஒலிக்கத் தொடங்கும்.

கொண்டவன் துணையோடு
நெற்றிக் குங்கும மலரோடு
தங்கை மங்கலம் பெறவேண்டும்
அந்நாள் கண்களில் வரவேண்டும்

பிசிறே இல்லாத பாட்டமுது. சற்றே உருக்கமான தீர்க்கமான தொனியில் ஒரே தெளிவாய்ச் சென்று நிறையும் பாடல்.

வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் பாடலில் துரோகத்தின் கண நேரக் குரூரத்தை எதிர்கொள்ளவியலாமல் திணறும் காலகாலத் தவித்தலைப் பாடலினூடாகப் பிழிந்து தந்தார் ஜெயச்சந்திரன்.

நீதிக்குத் தலைவணங்கு படத்தில் எத்தனை மனிதர்கள் எனத் தொடங்குகிற இதனை எம்.எஸ்.வி இசையில் எழுதியவர் நா.காமராசன். “எத்தனை மனிதர்கள் உலகத்திலே அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே” என்ற பாடல் செமி பேதாஸ் வகையிலான சோலோ பாடல். சற்றே கேவல் குரலில் முழுப்பாடலும் ஒலிக்கும். “யாரோ ஒருவன் தோட்டமிட்டான் அதில் யாரோ பலனை அனுபவித்தான்” என்ற வரியை அருமையாகக் கடந்திருப்பார். இடையிசை மிகப் பலமான கோர்வைகளால் அமைந்திருந்தது. கேட்க இனிமையான கானம்.

எம்.ஜி.ஆர் வினோதமான நடிகர். உணர்வுகளை மிக நுட்பமான இழைகளாக்கித் தன் இயல்பான பாவங்களால் வேறுபடுத்திவிடக் கூடியவர். தன் பிம்பப் பேருருவுக்குத் தானே இரையானவர். இல்லாமற் போனால் தன் நடிக வாழ்வின் இரண்டாம் பாகத்தில் அற்புதமான பல வித்தியாச வேடங்களைப் பரிணமித்து, பேரொளிர்தல் ஒன்றினைச் சாத்தியப்படுத்தி இருக்க அவரால் முடிந்திருக்கும். 1967ஆம் ஆண்டுக்குப் பின்னால் அவரைக் காட்டிலும் அவர் நிழல் பலம் வாய்ந்ததாக மாறலாயிற்று. அதனைக் கண்டு அவரே அஞ்சத் தொடங்கினார். தன் ஒவ்வொரு அசைவையும் தன் பிம்பத்துக்காகவே பார்த்துப் பார்த்து உருவாக்கலானார். அவருடைய படத்தின் கதைகள் தொடங்கி, காட்சிகளின் பின்புலத்தில் தூரத்தில் தெளிவற்றுத் தெரிகிற செடிகொடிகளின் அசைவுகளைக்கூட உசிதம், பங்கம் என்ற இரட்டைச் சூட்சுமத்துக்குள் பொருத்திப் பார்ப்பதன் மூலமாகக் கொள்வதும் தள்ளுவதுமாகத் திகழ்ந்தார். அவரது சமகால சகாவான சிவாஜி கணேசன் மித வேடங்களிலிருந்து மிகை வேடங்களுக்கு மாறிச் சென்றதும் எம்.ஜி.ஆர் தன் நிழலைத் தொடர ஆரம்பித்ததும் வணிக ரீதியிலான ஆதாயங்களுக்காக எனச் சித்தரிக்கப்பட்டாலும், தேர்ந்தெடுக்காத சாலை ஒன்றின் நீள அகலங்களையும் அவை கூடவே அழைத்து வராமல் இல்லை.

அந்த வகையில் எழுபதுகளுக்கு அப்பால் மேற்சொன்ன இருவரை விடவும் இவர்களது மூன்றாம் பங்காளியான ஜெமினி கணேசன் புன்னகை, நான் அவனில்லை, சுடரும் சூறாவளியும், வெள்ளிவிழா போன்ற மாறுபாடுகளை முயன்று பார்த்த வகையில் தனித்து ஒளிர்வதாக  வகைப்படுத்த முடியும். இந்த இடத்தில் ஜெயச்சந்திரன் எழுபதுகளெங்கும் பாடக் கிடைத்த பாடல்களில் இந்த மூவருக்குமே சொல்லிக்கொள்ளும்படியான பாடல்களைப் பாடி இருக்கிறார் என்பதும் மூவருடைய பாடல் கீர்த்தியில் ஜெயன் பாடிய அந்தப் பாடல்களுக்கும் தனியோரிடம் இருப்பதுவும் சிறப்பான செய்திகளே. ஜெமினியின் 100ஆவது படம் நான் அவனில்லை. பல வேடமாறித் தோன்றல்களோடு பயணமாகிற பாத்திரம். ஒரு அபலையை அப்பாவி போல் நடித்து ஏமாற்றுகிற எத்தனுக்கான பாடல் மந்தார மலரே மந்தார மலரே என்று ஒலிப்பது. எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து கீதமாக்கியது.

ஜீசஸ் படத்தில் இரண்டு பாடல்களைப் பாடினார் ஜெயன். இன்னொரு படமான இதய மலரில் அன்பே உன் பேரென்ன ரதியோ என்ற பாடலைக் கமல்ஹாசனுக்காகக் குழைந்தளித்தார் ஜெயச்சந்திரன். சிவாஜி படமான பைலட் ப்ரேம்நாத்தில் ஜெயன் பாடிய அழகி ஒருத்தி இலங்கை நகரில் என்ற பாடல் நல்ல பிரபலமடைந்தது. பெரிதும் விரும்பப்பட்ட நேயர் விருப்பப் பாடலான இது படத்தில் ஜெய்கணேஷுக்குத் தரப்பட்டது. அதைப் போலவே நல்லதொரு குடும்பம் படத்தில் இளையராஜா இசையில் செவ்வானமே பொன்மேகமே பாடல் டி.எல்.மகராஜன், ஜெயச்சந்திரன் இருவரும் கல்யாணி மேனன், பி.எஸ்.சசிரேகா இருவரோடும் சேர்ந்து பாடியது. படத்தில் சிவாஜி தோன்றாத பிறர்க்கான இன்னொரு பாடலாகவே இடம்பெற்றது. சிவாஜி வாயசைக்க ஜெயச்சந்திரன் பாடிய பாடலாக நெஞ்சில் உள்ள காயம் ஒன்று எனத் தொடங்கும் ரிஷிமூலம் படப்பாடல் ஒலித்தது.

நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டுத் தீர்ந்தது
என்னை இன்று நானே காண நேரம் வந்து சேர்ந்தது

இதுதான் பல்லவி. இங்கேயே பெருகும் ஆதுரமும் வாழ்வின் அலட்சியமும் ஒருங்கமையும் புள்ளியிலிருந்து பாட்டைத் தொடங்கியிருப்பார் ஜெயச்சந்திரன். சோகச் சித்திரமான பரீட்சைக்கு நேரமாச்சு படத்தில் இடம்பெற்ற ஒரு ஓசையின்றி மெளனமாக பாடலிலும் தனக்கு வழங்கப்பட்ட வேலையைக் கச்சிதமாய் நிறைவேற்றியிருந்தார் ஜெயச்சந்திரன். எம்.எஸ்.வி இசையில் சிவாஜிக்குப் பாடிய பாடல் இது.

நதியைத் தேடிவந்த கடல் ஜெயலலிதாவின் கடைசிப் படமாக இருக்கக்கூடும். அது நிஜமானால் அவர் அபிநயித்த கடைசிப் பாடல், அந்தப் படத்தில் இடம்பெற்ற தவிக்குது தயங்குது ஒரு மனது பாடல்தான். அதை ஷைலஜாவோடு பாடினார் ஜெயச்சந்திரன். அந்தப் பாடல் ஒரு மாமழைக்கு ஒப்பான பேரானுபவம். அத்தனை தீர்க்கமும் தனித்துவமும் கொண்டு நிறைந்தது. கங்கை அமரன் எழுதிய புத்தம்புதிய சொல்லாடல்களுக்கான பாடல் இஃது.

தவிக்குது தயங்குது ஒரு மனது… தினம் தினம் தூங்காமலே…
ஒரு சுகம் காணாமலே… அது தொடர்ந்து… எனை படர்ந்து…
ஏதோ சொல்கின்றது… மனம் எங்கோ செல்கின்றது…
தவிக்குது தயங்குது ஒரு மனது…

அது தொடர்ந்து “எனைப் படர்ந்து ஏதோ சொல்கின்றது மனம் எங்கோ செல்கின்றது” என்று பல்லவியைப் பூர்த்தி செய்கிற அழகைப் பேசி முடிக்கவா முடியும்..? அப்போதுதான் பெருங்கடலைத் திறந்தாற் போல் அள்ளியடித்துக்கொண்டிருந்தார் ராஜா. இன்னொரு பக்கம் பாடலின் வரிகள் அடித்து நொறுக்கின. இரண்டையும் அனாயாசமாகக் கையாண்டு தன் குரலால் நிரம்பினார் ஜெயன். அந்தக் காலகட்டத்தில் ராஜா இசையமைத்த பல பாடல்களினூடாக இந்தத் “தவிக்குது தயங்குது” பாடலின் இடையிசைத் துளிகளின் செல்வாக்கினை இன்றும் இனம் பிரித்து உணரமுடிகிறது. அந்த வகையில் தவிக்குது தயங்குது என்கிற பாடல் மரத்தின் விழுதுகளாய் அந்தப் பாடல்கள் பெருகி ஒலிக்கின்றன.

பாலாபிஷேகம் செய்யவோ உனக்குத்
தேனாபிஷேகம் செய்யவோ
அலங்காரவல்லி திருநாமம் சொல்லி
மலர்கொண்டு பூஜை செய்யவோ

என்ற பாடலை முத்தான முத்தல்லவோ படத்துக்காக வாலி எழுதினார்.

இந்தப் படத்தின் கதையைப் பாலசுப்ரமணியம் எழுதியிருந்தார். திரைக்கதை, வசனம் எழுதிப் பாடல்கள் அனைத்தையும் வாலியே எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதனும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் சேர்ந்து பாடிய எனக்கொரு காதலி இருக்கின்றாள் அபரிமித வெற்றிகரத்தை ருசித்தது. ஒரு பேரொலிப் பாடலின் இருத்தலின் கீழ் பிற பாடல்கள் ஒளிர்வதும் நிகழும், அதைவிட ஒளிந்து வீழ்வதும் அதிகம். அந்தப் பாடலைத் தாண்டி ஒலித்ததே இந்த டூயட் பாடலின் வசீகரத்துக்குச் சான்று. இந்தப் பாடலின் கடைசிச் சரணத்துக்கு முந்தைய இசைக்கோவை தொன்மம் மிகுந்து ஒலிக்கும். விஸ்வநாத தேவாம்ருதம். இன்னமும், “என்னிடம் ரகசியமா இந்த அச்சமும் நாணமும் அவசியமா” என்ற வரியைப் பாடும் போது சொந்தச் சோகமொன்றைப் பகிர்கிறாற் போலவே பாடினார் ஜெய். சுசீலாவோடு அவர் இணைந்து பாடியவற்றில் இரசவாதம் செய்யும் பாடல் இது.

சின்னச் சின்ன நுட்பங்கள். முந்தையதிலிருந்து விலகிப் பெருகும் நதியோட்டத்தின் மீறலும் சாரலுமாய்த் தன் பாடல்களைப் படர்த்தினார் ஜெயச்சந்திரன். அனேக பாடல்கள் கிறங்கடிப்பவை.

நான் வரைந்த ஓவியமே
நல்ல தமிழ்க்காவியமே
நான் சிரிக்க நீ அழுதால்
நீ சிரிக்க நானழுவேன்

என்ற தனிச்சோகப் பாடல். எல்லாம் அவளே படம். ஜெயச்சந்திரனின் புகழ் சொல்லும் மற்றொரு பாடல்.

ஒரு தலை ராகம் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய கடவுள் வாழும் கோவிலிலே கற்பூரதீபம் என்கிற பாடல் சொல்லொணா சோகத்தை பறைசாற்றுவதாக அமைந்தது. இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே அறிதலும் வெற்றியும் அடைந்தவையே. புதிய நிகழ்தலாக டி.ராஜேந்தர் இசையும் இயற்றமிழுமாய்த் திரையில் நிகழ்ந்திருந்தார். இந்தப் படத்தின் மிதமிஞ்சிய சோகத்தைப் பிழிந்தெடுத்த பாடலாக ஜெயன் பாடிய இந்தப் பாடல் அமைந்தது.

கிழக்கே போகும் ரயில் படத்தில்,

மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்பு குயிலும் நீதானோ

என்கிற பாடல் எண்பதுகளுக்கு முன் ஜெயச்சந்திரன் பாடிய புதுவிதப் பாட்டு. இதனை எழுதியவர் முத்துலிங்கம். பல்லவி முழுவதும் வினவுதல் கொண்டே அமைக்கப்பட்டிருந்தது. நல்ல முறையில் உள்வாங்கி பாடினார் ஜெயச்சந்திரன். சரணத்தின் முதல் வரியில் “நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்” என்று வாக்கிய முற்று காணப்படும். பிறகு அதிலும்,

வளையோசை காதிலே சிந்து பாடுதே
பளிங்கு சிலையே பவழக் கொடியே
குலுங்கி வரும் இடையில் புரளும்
சடையில் மயக்கும் மலர்க்கொடி

என்று எழுதியிருப்பார் முத்துலிங்கம். அதன் ஒத்திசைந்த ஒழுங்கமைவில் இருந்து பாடல் விலகி வெவ்வேறு புற மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் இதன் சரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மின்னல் ஒளியெனக் கண்ணைப் பறித்திடும்
அழகோ தேவதையோ
அங்கம் ஒரு தங்கக் குடம் அழகினில்
மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
துள்ளும் இதழ் தேன்தான்
அள்ளும் கரம் நான்தான்
மஞ்சம் அதில் வஞ்சிக்கொடி
வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் பண் பாடிடும்
பெண்ணோவியம் செந்தாமரையே
மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்
பலகோடிகள் ஆசையே வந்து மோதுதே
கரும்பு வயலே குறும்பு மொழியே
இளமையெனும் தனிமை நெருப்பை அணைக்கும்
பருவ மழை முகில்
மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ

கவியரங்கக் கவிதை ஒன்றின் தீர்க்கமும் வேகமும் கலந்தாற் போல் நிறைவினை ஏற்படுத்தியது இந்தப் பாடல். பாரதிராஜாவின் அனேக படங்களில் பாடலினூடாகப் பலவித வித்தியாசங்களை முயன்றுள்ளார் இளையராஜா. அவற்றிலொன்றே இந்தப் பாடல். அதுவரையிலான ஜெயச்சந்திரனின் பவனியில் புதிய திருப்பமாக இந்தப் பாடலின் வெற்றி உருவாக்கித் தந்த கவனத்தைச் சுட்ட முடிகிறது. எல்லா விதமான பாடல்களையும் பாடவல்ல குரலாக ஜெயச்சந்திரனைக் கருதுவதற்கான முகாந்திரத்தை இந்தப் பாடல் வலுவாக்கித் தந்தது.

எழுபதுகளில் இந்தியத் திரையுலகில் விளைந்த மாபெரும் முத்துக்குளியல் ரஜினிகாந்தின் வருகை. அடுத்த காலத்தை ஆள வந்த ராஜா என்பதற்கு முந்தைய ராஜபாட்டையில் வீறுநடை போட்டார். படங்களும் பாடல்களும் மாத்திரமல்ல, தனக்குக் கிடைத்த நிழலடி நிழலைக்கூடத் தன் வெற்றிக்கான ஆயுதமாக மாற்றிக்கொள்ளக்கூடிய வல்லமை ரஜினியிடம் இருந்தது. படிகளில் ஏறிவரக்கூடிய பவனி அல்ல, ரஜினி ஸ்பைடர்மேன் போல் தனக்கான இழைகளைத் தன் கை நுனியால் ஏற்படுத்திக்கொண்டு இடம்விட்டு இடம் தாவி ஏறிச்செல்லும் மின்னலின் ஒளிவேகம் அவரது பாய்ச்சலானது. இந்த விதத்தில் எதிர்பாராத பல மிதவோசை வேடங்களையும் தாங்கினார் ரஜினி. ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படம் அதுவரையிலான ரஜினியின் எதிர்வல்லமை, சர்வகலா சாத்தியங்கள் அத்தனையிலிருந்தும் விலகிய வேறொரு கடினப்பாதையைத் திறந்துவிட்டது. கால்கள் கட்டப்பட்ட குதிரையின் பயணகாலத் தனிமை போலொரு வேடம். அதற்கு இசையால் இளையராஜாவும் எழுத்தால் பஞ்சுவும் ஒளியூட்டினார்கள். எஸ்.பி.முத்துராமன் இதனை இயக்கினார். இந்தக் குரல்தான் இத்தகைய சோகத்துக்கு ஆகும் என்ற முன்முடிவோடு வழங்கப்பட்டாற் போல் வாழ்க்கையே வேஷம் என்ற பாடல் வென்றொலித்தது. ஜெயச்சந்திரன் பாடியவற்றில் எனக்கு மிகப் பிடித்த ஒன்று இந்தப் பாடல். இதனை மறக்கவே முடியாது.

வறண்ட நிலம் நீரைத் தேடுது
கசந்த மனம் ஞானம் பேசுது

என்று பஞ்சு எழுதி இளையராஜா இசைத்த பாடல் வரிகளை ஜெயச்சந்திரன் மனமுருகப் பாடி இருப்பார்.

வைதேகி காத்திருந்தாள் படத்தில் மூன்று பாடல்கள். ஒன்று தேடலின் காவியம். பின்னது வேதனையின் சாட்சியம். அடுத்தது சந்தோஷத்தின் சிறு பதற்றம். மூன்று பாடல்களையும் அடுத்தடுத்த மூன்று தினங்களில் பாடிப் பதிவுசெய்ததாகக் குறிப்பிடுகிறார் ஜெயச்சந்திரன். மூன்றே தினங்களில் மூவாயிரம் ஆண்டுப் பயிர்களாக விளைந்தெழுந்தன பாடல்கள். முதல் இரண்டும் தனிப்பாடல்கள். மூன்றாவது சேர்ந்தொலிக்கும் பாடல். ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு பாடல் ஜெயச்சந்திரன் அதுவரை அடைந்திருந்த அத்தனை புகழினையும் இரட்டித்துத் தந்தாற் போல் பெரும் வெற்றியைப் பெற்றொலித்தது. எங்கே திரும்பினாலும் அந்தத் தருணத்தை ஒலித்த பாடலாக மாறியது. வைதேகி காத்திருந்தாள் விஜயகாந்த், ரேவதி நடிப்பில் உருவான படம். ஆர்.சுந்தர்ராஜனின் தொடர் வெற்றிகளில் மற்றொன்று. இந்தப் படத்தின் பாடல்கள், குறிப்பாக ராசாத்தி பாடல், படத்துக்கான முதல் அடையாளமாகவே இன்று வரை ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. வாழ்வில் காதலின்றிக் கசந்து வழிகிற கையறு தன்மையைப் பறைசாற்றுகிற பாடல்களில் முதன்மையாக இன்றும் நின்றொலிக்கிறது இந்தப் பாட்டு.

தாலாட்டுப் பாடலின் அனுசரணையோடு ஒலித்தது காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பாடல். இரவுகளை ஆக்கிரமித்த பாடலாக இதனைச் சொல்ல முடிகிறது. “எதுவுமே வேண்டாம் உன்னைத் தவிர” என்கிற ஒற்றை இழைதலைப் பாட்டுக்குள் பெயர்த்துத் தந்தார் இளையராஜா. ஜெயச்சந்திரனுக்காகவே அளவெடுத்துத் தைக்கப்பட்ட ஆயத்த ஆடை ஒன்றினைப் போல் அமைந்துவிட்டது இந்தப் பாட்டு. சரணம் முடிகிற இடத்தில் “நெஞ்சமும் புண்ணாச்சு காரணம் கண்ணாச்சு” என்பதைத் தனக்கே உரிய ஆழ் அமைதியோடு பிறப்பித்தார் ஜெயச்சந்திரன். இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இந்த இரண்டு பாடல்களுக்கும் பொருந்தாத வேறொன்றாய் அமைந்ததினாலேயே விரும்பப்பட்ட பாடலாக மாறியிருக்கும் என்பது என் கருத்து. ஜெயச்சந்திரனின் பாடல் வாழ்வின் முக்கியமான படமாக வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களும் அமைந்தன.

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் அழகான பாடல். விஜயகாந்த், ராதிகா தோன்றும் காதல் ஏகாந்த வருடல். சொல்லொணாத் துயராகப் பெருக்கெடுக்கிற ஊடலின் நடுவாந்திரம். அலையேதுமற்ற நீர்நிலையில் ஆட்டமின்றி நிலைக்கும் படகிலமர்ந்தபடி சமரசம் பேசிப் பார்க்கும் காதல் தேடல் ஒன்றின் சொல்வழித் தோய்தலாகவே இந்தப் பாடல் அமைந்தது. இதற்கான மைய இசையும் உப இசைக்கோர்வைகளும் என எல்லாமே கச்சிதமாக அமைந்த வெப்பத் தெப்பம். பாடல் கேட்பவர்களைக் கையைப் பற்றிக்கொண்டு வெகு தூரம் அழைத்துச் சென்றுவிடுகிற மாய வல்லமையோடு ஒலிக்கக்கூடியது. ஒரு பாடல் என்று இதனைக் கொள்ளலாகாது. அவரவர்க்கான கதைகளைத் திறந்து தருகிற கடவுச்சீட்டாகவும் காற்றெலாம் அலைகிறது. காலமெல்லாம் நிறைந்து வழிகிறது. இறுகிச் சிலைப்பதல்ல. கசிவதன் பேர்தான் காதல் என்பதை மெய்ப்பிக்கிற மற்றொன்று.

ஒரு சரித்திரப் பாடலைப் போல் அமைந்த டூயட் அதிகாலை நிலவே அலங்கார சிலையே என்கிற பாடல். உறுதிமொழிக்காக எஸ்.ஜானகியோடு இணைந்து பாடினார் ஜெயச்சந்திரன். பொதுவாகத் தன் படங்களின் பாடல்களை ஆர்.வி.உதயகுமாரே எழுதிக்கொள்வார். இந்த பாடலைப் பொறுத்தவரை தீர்க்கம் என்று சொல்லும் வண்ணம் ஒவ்வொரு சொல்லையும் அதற்கே உண்டான முழுமையான ஒலிக்குறிப்போடு வருடினாற் போல் பாடினார் ஜெயச்சந்திரன்.

மணிக்குருவி உனைத் தழுவ மயக்கம் பிறக்கும்
பருவக்கதை தினம் படிக்க கதவு திறக்கும்

இந்த வரிகளில் மணிக்குருவி ஆகட்டும், மயக்கம் பிறக்கும் ஆகட்டும், பருவக் கதை ஆகட்டும், கதவு திறக்கும் ஆகட்டும், அவற்றுக்கு உண்டான மொழியழகோடு பாடினார் ஜெயச்சந்திரன். இதற்கு இணைச்சரணத்தில் ‘ரதி மகளும் அடிபணியும் அழகு உனக்கு’ என்பதை அப்படிச் சிறப்பித்திருப்பார். “அதிகாலை நிலவே அலங்காரச் சுடரே புது ராகம் நீ பாடி வா” என்று ஜானகி பாடியதற்கும் “அலங்காரச் சிலையே புது ராகம் நான் பாடவா” என்று ஜெயச்சந்திரன் பாடியதற்கும் இடையிலான வித்தியாசம் எக்கச்சக்கம். ஜெயச்சந்திரனின் முத்திரைப் பாடல்களில் ஒன்றானது இது.

பெரும் பொருட்செலவில் ஆபாவாணன் எடுத்த திரைப்படம் இணைந்த கைகள். ராம்கி, அருண் பாண்டியன் இருவரும் சேர்ந்து தோன்றிய ஒரு ரயில் பாடல் இன்றும் இனிக்கிறது. எழுதியவர் ஆபாவாணன். அந்தி நேரத் தென்றல் காற்று அள்ளித்தந்த தாலாட்டு என்பது இதன் தொடக்கம். இந்தப் பாடலை எஸ்.பி.பி.யுடன் இணைந்து பாடினார் ஜெயச்சந்திரன். கேட்டால் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று.

ராஜா இசையில் இன்னொரு இனிய பாடலைப் பாடினார் ஜெயச்சந்திரன். உள்ளம் கவர்ந்த கள்வன் 1987இல் வெளிவந்த படம். இந்தப் படத்தில் ஒரு தனிப்பாடல்,

எம் மனச பறிகொடுத்து உன் மனசில் இடம் பிடித்தேன்
கற்றுத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே கண்ணே

என்று தொடங்கும் பாடல் பல்லவியின் அந்த இரண்டாம் பகுதியை யாராலும் தொட முடியாத ஆழத்திலிருந்து எடுத்தாண்டு இருப்பார் ஜெயச்சந்திரன். “கற்றுத் தந்த வித்தை எல்லாம் காட்டட்டுமா கண்ணே” அத்தனை அழகாக ஒலிக்கும். எப்போதாவது இன்று கேட்கும்போதும் பாடல் வெளிவந்த காலத்தையும் சேர்த்து திறந்து தருகிற வல்லமைகொண்டது இந்தப் பாட்டு.

சொல்லத் துடிக்குது மனசு படத்தின் முகமாகவே எனது விழி வழி மேலே என்கிற ஜாலியான பாடல் அமைந்தது. ஜெயன் சோகப்பாட்டின் சோகத்தைக் குன்றி ஒலிக்கிற கடிவாளத்தைப் போல் பல பாடல்களில் பாடியிருக்கிறார். அதே போன்று சந்தோஷப் பாடல்களில் ஆனந்தத்தைத் தணிக்கை செய்கிற வரைகோடொன்றெனவே பாடுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். “எனது விழி வழி மேலே” பாடல் மதுவூடிய கிறக்கமாக மலர்ந்தது. சின்னதொரு குதூகலத்தில் ஆணி அடித்தாற் போல் தொனியை நிரந்தரித்துப் பாடினார்.

காதலின் அறியாமையைப் பாடிய பாடல் சூரக்கோட்டை சிங்கக்குட்டிக்காக அமைந்தது. காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ என்று பல்லவி அணையும். அந்தக் கடைசிச் சொல்லான ‘ரசிக்கலாம்’ என்பதை மட்டும் சொல்லறியாக் காதலோடு கையாண்டார் ஜெயச்சந்திரன். தழுவாத கைகளுக்காகப் பாடிய ஒன்னா ரெண்டா தாமரைப்பூ பாடலுமே தன்னால் ஆனமட்டிலும் காதலில் கசிகிற சாமான்யனுக்கான கான வாதாடலாகவே நிகழ்ந்தது. ராஜா இசையில் அமைந்த இன்னொரு மரகதத் தீற்றல் ஒரு வானவில் போலே பாடல். இதைக் கேட்டுக் கேட்டுத் தேய்ந்துபோனது வானொலிக் காற்று எனத் தக்க அளவில் வானளந்தது பாடல்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் குறிப்பிடத்தகுந்த பல பாடல்களை ஜெயச்சந்திரன் பாடினார். அவற்றில் கிழக்குச் சீமையிலே படத்தில் இடம்பெற்ற கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி என்கிற பாட்டு பரவலான கவனத்தை ஈர்த்தது. வண்டிச்சோலை சின்ராசு படத்தில் சித்திரை நிலவு சேலையில் வந்தது என்ற பாட்டு, மே மாதம் திரைப்படத்தில் என் மேல் விழுந்த மழைத்துளியே என்கிற பாட்டு, கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நெஞ்சில் ஜில் ஜில் ஜில் என்ற பாட்டு போன்றவற்றை ரஹ்மான் இசையில் ஜெயச்சந்திரன் பாடியிருந்தார். இந்தப் பாடல்கள் இன்றும் எல்லோராலும் இரசிக்கப்படும் பாடல்களாக இருப்பது நிஜமே.

“என் மேல் விழுந்த மழைத்துளியே” பாடலை மறக்கவே முடியாது. இசை, வரி இரண்டையும் தாண்டிய வேறொன்றாகக் குரல் விளைந்தது. அத்தனை மென்மையை நிதானமாக மாற்றி ஒவ்வொரு வரியினூடும் சிறு தூறலைப் போல் பிறப்பித்துத் தந்ததெல்லாம் ராஸ்கல் வேலை. “இரவைத் திறந்தால் பகல் இருக்கும், என் இமையைத் திறந்தால் நீயிருப்பாய்”. இந்த “இமையை” என்ற சொல்லைக் கவனியுங்கள், இலேசாய்த் ததும்பியிருப்பார். ஜெயச்சந்திரனை அமரவைத்து திருஷ்டி சுற்றிப் போடத் தோன்றும்.

காதல் பாடல்களில் தனித்த வகைகொண்டு ஒலிப்பவை உலர்தன்மைப் பாடல்கள். Dry-love-songs பாடிய குரல் சற்றே அன்னியப்படுவதோடு கேட்கிற நமக்கும் நம் மேல் மனத்தினூடேயே ஒலித்து அடங்கும். நம்மால் எத்தனை முறை கேட்டாலும், எத்தனை ஆழ்வது போல் தோற்றமளித்தாலும், பாடல் நிகழும்போது அத்தனை ரசவாதமும் நிகழுமே அன்றி முடிகிற கணத்தில் சட்டென்று விலகிவிடுவோம். முடிந்த பிறகு நமக்குள் அதிர்கிற வகைமையில் இவை சேர்வதில்லை. அது தனி, இது தனி என்பதுதான் அர்த்தம். இந்த உலர்தன்மைப் பாடல்களைத் தனியே தொகுத்தால் ஆயிரம் பாடல்கள் வரும். “ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்” தொடங்கி “செந்தமிழ்த் தேன்மொழியாள்” தொட்டுப் பல பாடல்களைச் சொல்ல முடியும்.

இந்த வகைமையில் தமிழில் ஆகச்சிறந்த பாடல் என்று என் தேர்வாக உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் பாடலைச் சொல்வேன். மேலொன்று சொல்வதானால் “தங்கத் தாமரை மகளே” என்கிற பாலுவின் இரசவாதம். இவ்வகைப் பாட்டுகளின் பேரரசனாகவே ஜெயச்சந்திரன் திகழ்ந்து வருகிறார். சென்ற அத்தியாயத்தில் நாம் கண்ட ஹரிஹரன், ஜாலி ஆப்ரஹாம் ஆகியோர் ஜெயச்சந்திரனுக்கு அடுத்து இவ்வகைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர்கள் என்பது என் கருத்துக் கணக்கு. போகட்டும், இங்கே அப்படியான ஜெயச்சந்திரனின் முத்திரை பதித்த வித்தகப் பாடல் ஒன்றைப் பார்க்கலாம்.

பிள்ளை நிலா (1985) படத்தில் ராஜா மகள் பாடல். இளையராஜா இசையில் வாலி எழுதியது. பாடலில் ஹம்மிங் தந்தவர் எஸ்.ஜானகி. மனோபாலா இயக்கத்தில் மோகன், ராதிகா நடித்த படம். முழுவதுமாக ஜெயச்சந்திரன் ஸ்கோர் செய்த பாடல்களில் இதுவும் ஒன்று. வாலியின் பேரெழுச்சிப் பாடலின் அத்தனை வரிகளையும் தன் குரலால் அர்த்தம்கூட்டிப் பாடினார் ஜெயச்சந்திரன். தன்னை விட்டால் இந்தப் பாடலை இப்படிப் பாடுவதற்கு வேறாரும் இல்லை என்பதை மெய்ப்பித்த வண்ணம் பாடினார். குரலால் நிகழ்த்திய கான ஆலிங்கனம் இது. காலத்தைக் கடந்து பொழிகிற  சாஸ்வத மழை.

ராஜா மகள் ரோஜா மகள்
வானில் வரும் வெண்ணிலா

வாழும் இந்தக் கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா

ராஜா மகள்  

பன்னீரையும் வெந்நீரையும் உன்னோடு நான் பார்க்கிறேன்
பூ என்பதா பெண் என்பதா நெஞ்சோடு நான் கேட்கிறேன்
முள்ளோடுதான் கள்ளோடுதான் ரோஜாக்களும் பூக்கலாம்
அம்மாடி நான் அத்தோடுதான் உன் பேரையும் சேர்க்கலாம்
கோபம் ஒரு கண்ணில் தாபம் ஒரு கண்ணில்
வந்து வந்து செல்ல விந்தை என்ன சொல்ல
வண்ண மலரே

ராஜா மகள்  

ஆடைகளும் ஜாடைகளும் கொண்டாடிடும் தாமரை
வையகமும் வானகமும் கை வணங்கும் தேவதை
நீயும் ஒரு ஆணை இட பொங்கும் கடல் ஓயலாம்
மாலை முதல் காலை வரை  சூரியனும் காயலாம்
தெய்வ மகள் என்று தேவன் படைத்தானோ
தங்கச் சிலை செய்து ஜீவன் கொடுத்தானோ
மஞ்சள் நிலவே  

ராஜா மகள்

இந்தப் பாடலின் எந்த ஒரு வரியையும் சாதாரணமாய்க் கடக்கவில்லை. ஒவ்வொரு பூவாய் மாலை கோப்பது போலவே அத்தனை சொற்களையும் தனித்தனியே தன் ஆன்ம நரம்பில் கோத்தெடுத்து மாலையாக்கினார். சரணங்கள் நிறைகிற இடத்தில் வருகிற வண்ண மலரேவும் மஞ்சள் நிலவேயும் மொத்தப் பாடலையும் தன்னுள் பொதிந்துகொள்கிற மாய வசியத்தை நிகழ்த்திக் காட்டின. மனத்தினடியில் முழுப்பாடலும் மலர்ப்பதியனாய் வெகு சில பாடல்களே தங்கும். இந்தப் பாடல் அப்படியானதொரு தங்கம்.

ஜெயச்சந்திரன் பாடிய இன்னுமொரு சிருங்கார நாதம் பூந்தென்றலே நீ பாடிவா என்கிற சர்க்கரைப் பாடல். மனசுக்குள் மத்தாப்பு படத்துக்காகச் சித்ராவுடன் சேர்ந்து பாடிய டூயட். ஆரம்பத்திலேயே மனசைப் பறித்து வான் தோப்பில் எறிந்திருப்பார் ஜெயன். அற்புதம்.

எஸ்.ஏ.ராஜ்குமாரின் முதல் படம் சின்னப் பூவே மெல்லப் பேசு. இதன் டைட்டில் பாடலைப் பாடியவர் ஜெயச்சந்திரன். இந்தப் பாடல் ராஜ்குமாருக்கு மாபெரும் இசை முகவரியைத் திறந்து தந்தது. எஸ்.ஏ.ராஜ்குமார் இயல்பாகவே இசைக்கேற்ப பாடல் புனையும் ஆற்றல் படைத்தவர். முதல் படத்தின் முதல் பாடலைத் தானே எழுதி இசையமைத்தவர். வானொலி நிகழ்வுகளில் திரும்பத் திரும்ப நேயர் விருப்பப் பாடலாக ஒலித்தது இந்தப் பாடல். தொடக்க இசைக்கான உதாரணங்களைத் தொகுத்தால் முதல் பத்துக்குள் இந்தப் பாடல் இடம்பெறும். அத்தனை எழிலூட்டி இசைத்திருந்தார் ராஜ்குமார்.

இலேசான சோகச் சாய்வுடன் ஏகாந்தத்தை வியந்து விகசிக்கும் பாடலாக இது அமைந்தது. கிறங்க வைத்தார் ஜெயச்சந்திரன் என்று சொல்லலாம்.

பாவையின் தேன் குழல் மேகமோ
பொன் வானத்தில் வரைந்திடும் கோலமோ
கண்கள் நீரினில் நீந்திடும் மீன்களோ
எந்தன் காதலை மை எனப் பூசவோ
சின்ன பாதங்கள் தாங்கிடும்
பொன்னெழில் மேனியை அள்ளவோ
கொஞ்சம் கிள்ளவோ

எனப் பாடலைக் கீழே இறக்கிக்கொண்டு வந்து முடிக்கும் இடம் அபாரம். “ஆனந்த சங்கமச் சந்தமே” என்றெல்லாம் கேளாச் சொற்களோடு ஒலித்த இந்தப் பாட்டு, ஜெயச்சந்திரனின் தனிப் பாடல்கள் பேழையில் முதல் வரிசையில் இன்றும் வீற்றிருக்கிறது.

பாடலின் நகர்தலை யூகிக்க முடியாத புதிர்மையோடு நகர்த்துவதில் விற்பன்னரான ராஜ்குமாரின் இசையில் பூவே உனக்காக படத்துக்காக ஜெயச்சந்திரன் பாடிய சொல்லாமலே யார் பார்த்தது காதல் எனும் உணர்தலுக்கான எல்லாக் காலத்துக்குமான கானவுருவச் சிற்பம் என்றால் பொருந்தும். அந்தப் பாடல் ஒரு தலைக்காதலர்களுக்கான கடவுச்சீட்டாகவே இன்றும் கொண்டாடப்படுவதைக் காண முடிகிறது. பல பாட்டுச் சேனல்களுக்கான நிரந்தர மென்பண்டமாகவே ஒலித்தோங்குகிறது.

ஒரு பாடகன் பாட்டின் எந்த வரியிலும் எந்த ஒரு சொல்லாலும் அல்லது உணர்வாலும் அந்தப் பாடலுக்குள் தன்னைப் பதிக்காமல் விலகியே பாடுவது என்பது ஒரு கலை. அதில் ஜெயச்சந்திரன் பேரரசன். அதைத்தான் மேற்காணும் பாடல் மெய்ப்பிக்கிறது. இங்கே மேலுமொரு பாடல் இத்தனை அர்த்தங்களையும் இன்னும் வலுவாகப் பறைசாற்றிவிடுகிறது. நெடுங்காலம் மறையாப் பெருநிலவாக ஒளிர்ந்துகொண்டிருக்கக்கூடிய மதுமழைத் தூறல் இந்தப் பாடல்.

தொண்ணூறுகளின் மத்தியில் ஒரு படம். பி.எஸ்.நிவாஸ் இளையராஜாவின் அன்புக்குரிய ஒளிப்பதிவாளர், இயக்குநர். இவரது இயக்கத்தில் பாரதிராஜா நாயகனாகத் தோன்றிய கல்லுக்குள் ஈரம், நிழல் தேடும் நெஞ்சங்கள், எனக்காகக் காத்திரு ஆகிய மூன்றிலுமே ராஜா காதலாகிக் கசிந்தே உருகியிருப்பார் பாட்டுருவில். எனக்காகக் காத்திரு படத்தில் ஜெயச்சந்திரன் அபினிக் குரலால் பாடிய பாடி வா தென்றலே என்றொலிக்கும் பாடல் மறக்கவே முடியாத மென்மெலடித் தாமரை.

அப்படியான நிவாஸ் இயக்கிய மேலுமொரு படம் செவ்வந்தி. அதில் ஒரு பாடல் செம்மீனே செம்மீனே.

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப்பொண்ணுக்கு
செவ்வாழைக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்

“ச்செம்மீன்” என்கிற மலையாளப் பதத்தை மறக்கடிக்கும் வண்ணம் செம்மீன் என்ற சொல்லைத் தமிழுட்படுத்திப் பாடினார் என்றால் தகும். “உங்கிட்டச் சொன்னேனே” என்பதன் இடையில் வருகிற அழுத்தமோ இணைவோ இல்லாமல் சொன்னேனே என்ற சொல்லை உதிர்த்த விதம் பேரெழில். செவ்வந்தி, செவ்வாழை என ஒவ்வொரு சொல்லையும் நாவை உளியாக்கிச் செதுக்கி எடுத்தாலொழிய இப்படியொரு வார்ப்பு அசாத்தியம். ஜெயச்சந்திர சாகசம்.

“என் விரலால் பொட்டு வைக்க நெற்றியொண்ணு வாடுதிங்கே” என்ற வரியைக் கடப்பார் பாருங்கள்… அதற்கடுத்து “நான் திரும்பி வரும்வரைக்கும் நீரின்றி வாடும் இள நாத்து, ஓடை நீரின்றி வாடும் இள நாத்து” என்று பொங்கிப் பிரவகிப்பார். நீரற்ற நதி என்றால் தகும்.

சோகத்தைப் பிழியத் தருவதைவிட அதனைக் கட்டுப்படுத்திய மடைமாறுதல் ஒன்றாக்கி வழங்குவது கலையின் சிறப்பு. இந்தியத் திரையிசை உலகில் அதனை அதிகம் சாத்தியம் செய்தவர் ஜெயச்சந்திரன். பாடல் மகாராஜாக்களின் மத்தியில் உணர்வுகளின் பேரெழிலாய்த் தன் குரலை நிகழ்த்தித் தந்த மாயவாதி. பாடியது போதும் என்று எப்போதும் சொல்ல முடியாத பொன்னூறும் குரலாச்சர்யம் ஜெயச்சந்திரன். போதுமான ஒருவன்.

-தொடரலாம்.

*

முந்தைய பகுதிகள்:

  1. கமல்ஹாசன்
  2. வீ.குமார்
  3. ஷ்யாம்
  4. மலேசியா வாசுதேவன்
  5. ஹரிஹரன்