கதே: முழுமையான வாழ்வின் இலக்கியம்

0 comment

ஒவ்வொரு மொழியும் தன்னை அழியாப் புகழில் ஏற்றும் மகா காப்பியத்தைப் படைக்கும் ஆற்றல் கொண்ட தன் தலைமகனுக்காகத் தவமிருக்கிறது. அவன் பிறக்கும்வரை அது தன்னை மலடியாகவே கருதுகிறது. அப்படிப்பட்ட காப்பியம் பிறந்த பிறகு தாய்மையால் பூரிக்கிறது. தனக்கு இனி என்றுமே அழிவில்லை என்று இறுமாந்து கொள்கிறது. அந்தக் காப்பியம்தான் அந்த மொழிக்கும் அம்மொழி பேசும் மக்களுக்கும் அந்தத் தேசத்தையே உரிமையாக்கும் சாசனமாக அன்று முதல் மாறுகிறது. ஹீப்ரு மொழிக்கு ஒரு மோஸஸ், கிரேக்க மொழிக்கு ஒரு ஹோமர், இலத்தீன் மொழிக்கு ஒரு விர்ஜில், இத்தாலிய மொழிக்கு ஒரு தாந்தே, ஆங்கில மொழிக்கு ஒரு மில்டன், வட மொழிக்கு ஒரு வால்மீகி, தமிழுக்கு ஒரு கம்பன். அதுபோல ஜெர்மன் மொழிக்கு ஒரு கதே. அவர் படைத்த காப்பியம் ஃபௌஸ்ட்.

கடவுளும் என் தாய் தந்தையரும் எனக்கு உயிரையும் உடலையும் அளித்தனர் எனில் என் வாழ்வை எனக்கு அளித்தவர் கதே. எது மிகச் சிறந்த வாழ்வு? அதை வாழ்வது எப்படி? இந்த வினாக்கள் சிறு வயது முதலே என்னை அலைக்கழித்து வந்தன. இந்த வினாக்களுக்குத் தகுந்த பதிலை எனக்களித்தவர் கதே.

என் வாழ்வில் பெரும் செல்வங்களை, அறிவுப் பொக்கிஷங்களை நான் அடைந்தது புத்தகங்களின் வாயிலாகத்தான். என்னுடைய சொர்க்கம் என்பது எல்லையில்லா ஒரு நூலகத்தில் உலகின் உன்னதங்கள் எல்லாவற்றையும் முடிவின்றி வாசித்துக்கொண்டிருப்பதுதான். நூலகங்களில் என் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்திருக்கிறேன். அவ்வாறு களித்த ஆனந்தமயமான நாட்களில் ஒரு சில நாட்களை சேலம் ஸ்ரீ விஜயராகவாச்சாரியார் நூலகத்தில் கழித்திருக்கிறேன். கதே என்ற இந்தப் பிரமாண்டமான புதையலை நான் கண்டெடுத்தது அங்குதான். அதற்காக இன்றுவரை காலை எழுந்தவுடன் முதலில் அந்த நூலகம் இருக்கும் திசை நோக்கித் தலைவணங்குகிறேன்.

நான் மட்டுமல்ல, தன்னைத் தொட்டவர் எவருடைய வாழ்க்கையையும் பொன்னாக மாற்றாமல் விட்டதில்லை இந்த இரஸவாதி.

ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, கோல்ரிட்ஜ், அமெரிக்க ஞானி எமர்ஸன், ரவீந்திரநாத் தாகூர், அரவிந்தர், உதகை ஸ்ரீ நாராயண குரு குலத்தின் பேரறிஞர் குரு நித்ய சைதன்ய யதி என பலரும் இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்துவிட்டுத் தங்களின் வாழ்வின் போக்கையே மாற்றிக் கொண்டவர்கள்தான். குரு யதி தன்னுடைய தலையணைக்கு அடியிலேயே இவருடைய தன்வரலாற்று நூலான ‘உண்மையும் கவிதையும் என் வாழ்வில்’ என்ற நூலை வைத்திருந்தார்.

அப்படி என்ன உண்டு கதேயின் வாழ்க்கையில், இவர்கள் அனைவரும் வியந்து போக? மற்ற இலக்கியவாதிகள் நூல்களில்தான் உன்னதமான இலக்கியங்களைப் படைப்பார்கள். ஆனால் கதே அதி உன்னதமான இலக்கியங்களை மட்டும் படைக்கவில்லை, தன் வாழ்வையே தன் அறிவையே திட்டமிட்டு மிக உன்னத நிலைக்கு உயர்த்திக்கொண்டார். இன்று உலகில் சுய முன்னேற்ற நூல்கள் ஆயிரக்கணக்கில் எழுதப்படுகின்றன. கோடிக்கணக்கில் விற்பனையாகின்றன. ஆனால் நானறிந்த வரை இந்த வகைமைக்கு மிகச் சிறந்த உதாரணமாக கதேயின் வாழ்க்கை வரலாற்றையே குறிப்பிடுவேன்.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய இளமையில் தன் எதிர்காலத்தைப் பற்றித் திட்டமிடுகிறான். அவ்வாறு திட்டமிட்டதில் எத்தனை விழுக்காடு வெற்றி பெறுகிறான் என்று அவன் வாழ்வு முடிந்தபிறகு கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரு சிலரே வெற்றியடைந்திருப்பதைக் காணலாம். அந்த வெற்றியும் முழுமையானதாக இருப்பதில்லை. ஆனால் கதே தன்னைத் திட்டமிட்டு உலக மகாகவியாக மாற்றிக்கொண்டார். ஹோமருக்கு, தாந்தேவுக்கு இணையான நவீன கால மகாகவியாக மேற்குலகம் அவரை மதிப்பிடுகிறது. அதே போல் நியூட்டனுக்குப் போட்டியாக ஒளி பற்றிய தன்னுடைய விஞ்ஞானப் பகுப்பாய்வைச் சுமார் நானூறு பக்கங்களில் இலக்கிய நயத்துடன் விளக்கினார். தாவரவியல், கண்ணாடியியல், உடலியல், புவியியல் எனப் பல்வேறு அறிவியல் துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்தவர். இவர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த நூல்கள் 453. அவற்றில் சுமார் 40 நூல்கள் அறிவியல் பற்றியவை. அத்துடன், வைமர் என்ற ஒரு சிறிய சமஸ்தானத்தின் அமைச்சராகவும், முதலமைச்சராகவும், சுரங்க அதிகாரியாகவும், நாடக அரங்கின் பொறுப்பாளராகவும் எனப் பல்வேறு பொது அமைப்புகளின் நிர்வாகியாகப் பதவி வகித்துத் திறம்படச் செயலாற்றியுள்ளார். ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதியுள்ளார். தன்னுணர்வுப் பாடல்கள், தத்துவக் கவிதைகள், நாடகங்கள், நீண்ட கவிதைகள், காப்பியம், திறனாய்வு, நாவல், குறுநாவல், சிறுகதை, கடித இலக்கியம், நாட்குறிப்பு இலக்கியம், கட்டுரைகள், உரையாடல்கள் என இலக்கியத்தின் எந்தத் துறையையும் விட்டதில்லை; தொட்டதில் எல்லாம் தன்னுடைய முத்திரையைப் பதிக்காமல் இருந்ததில்லை.

ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன், ஆங்கிலம், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன் எனப் பல மொழிகளைக் கற்றறிந்தவர். ஓவியம், சிற்பம், கத்திச்சண்டை, குதிரையேற்றம், கட்டிடக் கலை, பியானோ வாசித்தல், ஆசு கவியாக நினைத்தவுடன் பாடல் இயற்றும் திறமை, அதற்கு இசையமைத்து உடனடியாகப் பாடுகிற ஆற்றல் என ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக விளங்கியவர். ஆங்கிலத்தில் கேலியாக ஒரு பழமொழியைச் சொல்வர் – எல்லாத் துறைகளிலும் கால் வைப்பான், ஆனால் எதிலும் தேர்ச்சி பெற மாட்டான். இந்தப் பழமொழியைப் பொய்யாக்கியவர் கதே. எதையும் கணித எண் கொண்டு குறிப்பது மேற்குலகின் விஞ்ஞானப் பார்வை. மனித அறிவையும் ஐ.க்யூ எண்ணாகக் குறிப்பது அவர்கள் வழக்கம். விஞ்ஞான மேதையான ஐன்ஸ்டீனுக்கு 140. நெப்போலியனுக்கு 140. வால்டேருக்கு 170. ஷேக்ஸ்பியருக்கு 170. ஆனால் கதே ஒருவருக்குத்தான் 210. டைம் லைப் நிறுவனம் மனம் என்ற பெயரில் வெளியிட்ட நூலில் வண்ணப்படங்களாக இந்த மேதைகளையும் அவர்களுடைய அறிவு எண்ணையும் தொகுத்திருக்கிறார்கள்.

ஜீனியஸ் என்றாலே மோஸார்ட் என்று ஒரு முதுமொழி மேற்குலகில் உண்டு. ஆனால் அந்த மேதமை என்ற முரட்டுக் குதிரையை அடக்கியாள அந்த மோஸார்ட்டாலும் முடியவில்லை. ஏனெனில் மேதமை என்பது ஒரு பெரும் புயல் போன்ற, காட்டாறு போன்ற ஓர் இயற்கை உந்துசக்தி. சாமியாடுவதைப் போல என்பான் சாக்ரடீஸ். ஆனால் அந்தப் பேயாட்டத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து மடைமாற்றம் செய்து தான் விரும்பிய இடங்களில் மட்டும் அந்த ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சிய ஒரே ஆளுமை நான் அறிந்தவரை உலக இலக்கியத்தில் கதே ஒருவரே.

அவருடைய வாழ்வின் வழிகாட்டியாக அவர் ஏற்படுத்திக்கொண்ட தத்துவ வாசகம் ‘சுய கலாச்சாரம்’ (Self Culture). இடைவிடாது ஆனால் பரபரப்பின்றி நட்சத்திரங்களைப் போல ஒரே சீராகத் தன் உடல், உள்ளம், உயிர், கலைகள், அறிவுத்துறைகள், ஞானங்கள் போன்ற சகல கூறுகளிலும் தன்னை மேன்மேலும் உயர்த்திக்கொண்டே போவது, ஒவ்வொரு துறையிலும் உள்ள உலகத்தரமான உன்னதங்களை எல்லாம் அனுபவித்து அதன் சாரத்தை உள்வாங்கி அந்த அலைவரிசையைத் தன்வயப்படுத்திக்கொண்டு விஞ்சி நிற்க முயல்வது. இதற்காகவே தான் ஈட்டிய கோடிக்கணக்கான செல்வத்தைத் தன்னிலேயே, தன் அறிவின் வளர்ச்சியிலேயே, தன் உள்ளத்தின் நுட்பத்தைக் கூர் தீட்டிக்கொள்வதிலேயே முதலீடு செய்துகொண்டார்.

தனி மனித வாழ்க்கையைத் திட்டமிட்டு வளர்த்துக்கொள்வது சாத்தியம்தான். அனேகமாக ஒவ்வொரு மேதையும் தன் வாழ்வில் இதையே சாதித்திருக்கிறான். ஆனால் ஒரு மொழியின் பொற்காலத்தை அவ்வாறு திட்டமிட்டு உருவாக்க முடியுமா? இந்தக் கேள்வியே பெரும்பாலும் மக்களின் மனங்களில் எழுவதில்லை. ஆனால் உலக அற்புதங்களில் ஒன்றாக இந்தச் சாதனையைத் தன் மொழிக்குச் செய்து காட்டியவர் கதே. அவர் இல்லாமல் ஜெர்மன் மொழிக்கு இலக்கிய உலகில் இன்று இருக்கும் மரியாதை நிச்சயமாகக் கிடைத்திருக்க முடியாது.

உலகச் சரித்திர ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் ஏன் கிரேக்க மொழிக்கு சுமார் ஒரு நூற்றாண்டு அளவிலே ஒரு பொற்காலம் இருந்ததைக் காணலாம். சாக்ரடீஸ், பிளாட்டோ , அரிஸ்டாடில் போன்ற தத்துவஞானிகள், சோபாகிளிஸ், அரிஸ்டோபேன்ஸ் போன்ற நாடக ஆசிரியர்கள், சேபோ, மார்ஷியல் போன்ற தன்னுணர்வுப் பாடல் ஆசிரியர்கள் என ஓர் இலக்கியப் பட்டாளமே தோன்றி கிரேக்க மொழியை இலக்கிய உலகின் சிகரங்களில் ஒன்றாக ஆக்கினர்.

ஏசுநாதருக்கு சற்று முன்பும் பின்பும் சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு இலத்தீன் மொழியில் இப்படிப்பட்ட பொற்காலம் தோன்றியது.  சிசரோ போன்ற தத்துவ ஆசிரியர்களும், விர்ஜில் போன்ற மகாகவிகளும், டெரண்ஸ் போன்ற நாடக ஆசிரியர்களும் தோன்றி இலத்தீன் இலக்கியத்திற்குப் பொற்காலத்தை ஏற்படுத்தினார்கள்.

அதே போல கிபி 15ஆம் நுாற்றாண்டில் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் தோன்றியபோது பிளாரன்ஸ் நகரில் தாந்தே, பெட்ராக் போன்ற மகாகவிகள் தோன்றி உலகப் புகழ்பெற்ற கவிதைகளைப் படைத்தனர்.

கிபி 16ஆம் நுாற்றாண்டில் இலண்டன் மாநகரில் ராணி எலிசபெத்தின் காலத்தில் இப்படிப்பட்ட ஓர் எழுச்சி ஆங்கில இலக்கியத்தில் தோன்றியது. ஸ்பென்சர், மார்லோ, ஷேக்ஸ்பியர், சர் பிரான்ஸிஸ் பேக்கன், சர் ஜான் டன் போன்ற மேதைகளின் பெரிய படையே தோன்றி ஆங்கில இலக்கியத்தின் பொற்காலத்தை ஏற்படுத்தினர்.

சரித்திரத்தின் ஏடுகளில் இவற்றையெல்லாம் கண்ட கதே இப்படிப்பட்ட ஒரு பொற்காலத்தைத் தன்னுடைய மொழிக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று ஆவல் கொண்டார். ஒரு பொற்காலம் எப்படித் தோன்றுகிறது என்று சிந்தித்தார். அறிஞர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் ஒரே இடத்தில் தங்கியிருந்து தங்களுடைய புலன்களையும் அறிவையும் சதா கூர்தீட்டிக் கொள்வதன் மூலம் அவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டுதான் மிக உன்னத இலக்கியங்கள் உருவாகின்றன என்பதைக் கண்டார். அத்துடன் கலைஞர்களின் அறிவை வறுமை வென்றுவிடுகிறது என்பதையும் கண்டார். ‘அறிவை நிச்ச நிரப்பு கொல்லும்’ என்ற வள்ளுவனின் வாசகத்தை அறிந்திருந்தார் மனோதத்துவ மேதையாகவும் திகழ்ந்த கதே. எனவே புரவலர்களாக இருந்து அரசும் பல்கலைக்கழகங்களும் கலைஞர்களையும் அறிஞர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று அறிந்தார். அதற்கு உறுதுணையாகத் தான் அமைச்சராக இருந்து பணியாற்றிய வைமர் என்ற சிறிய சமஸ்தானத்தின் அரசராகத் திகழ்ந்த கார்ல் ஆகஸ்ட் என்பவரை அணுகித் தம் கருத்தை வெளியிட்டார். அதற்கு அவரும் உடன்படவே அரசவையிலும் அரசுக்குச் சொந்தமான மாதா கோவில்களிலும் அருகே இருந்த ஜினா பல்கலைக்கழகப் பதவிகளிலும் ஜெர்மன் தேசத்தின் மிக முக்கியமான அறிஞர்களையும் கவிஞர்களையும் கலைஞர்களையும் அவர்களுடைய ஒப்புதலுடன் பணிக்கு அமர்த்தினார்.

ஹெர்டர் என்ற கிறித்துவப் பாதிரியார் கதேயின் குரு என்று போற்றப்படுபவர். இவர் மனித குல வரலாற்றை அறிவின் பரிணாம நிலைகளாகக் கண்டறிந்து மிகப் பெரிய சரித்திர நூல் ஒன்றை எழுதியவர். அத்துடன் கற்பனாவாதத்தின் (Romanticism) தந்தை என்றும் அழைக்கப்படுபவர். அவருக்கு முன்பு ஜெர்மன் இலக்கியம் பிரெஞ்சு மொழியின் இலக்கணங்களையே பின்பற்றி வந்தது. அந்த இலக்கணங்கள் பகுத்தறிவும் சமநிலையும் கொண்டு உணர்ச்சிகள் இன்றி எழுதுவது போன்றவை. இந்த இலக்கணக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிய வேண்டும், உணர்ச்சி கொப்புளிக்க வேண்டும், கற்பனை தெறிக்க வேண்டும், புயல் போல் சொற்பிரவாகம் சிந்தனைத் தடங்கலின்றி வந்து கொட்ட வேண்டும் என்று அறிவித்தவர் ஹெர்டர். இந்தப் போக்கிற்கு முன்னுதாரணங்களாக அவர் காட்டியவை நாட்டுப்புறப் பாடல்களும், ஷேக்ஸ்பியரின் கவிதைகளுமே. லெஸ்ஸிங் என்ற ஜெர்மன் கவிஞரும் திறனாய்வாளரும் அப்போதுதான் ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும் கவிதைகளையும் ஆங்கிலத்திலிருந்து ஜெர்மனுக்கு மொழிபெயர்த்திருந்தார். அத்துடன் ஷேக்ஸ்பியரின் மேதைமை பற்றி மிக விரிவான கட்டுரைகளைப் பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்தார். இவற்றையெல்லாம் கல்லூரி இளைஞரான பதினெட்டு வயது கதேவுக்குச் சுட்டிக்காட்டி ஷேக்ஸ்பியரைப் போல் எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டவர் ஹெர்டர். தன் குருவான ஹெர்டரை அரசுக்குச் சொந்தமான மாதா கோவிலில் பூசகராக நியமிக்கச் செய்தார் கதே.

அடுத்து சில்லர் (Schiller) என்ற மகாகவியைத் தனக்கு அருகிலேயே உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலைக்கு அமர்த்தி அதே ஊரிலேயே ஒரு புதிய நாடக அரங்கை நிர்மாணம் செய்து மாதம் ஒருவராக புதிய நாடகத்தை இயற்றி அரங்கேற்றுவது என்ற திட்டத்தை வகுத்தார். அத்துடன் இருவருமாகச் சேர்ந்து ஓர் இலக்கிய இதழைத் தொடங்கினர். சுமார் 10 ஆண்டு காலத்திற்கு மேல் இந்த இலக்கிய நட்பு வளமிக்க பலன்களைப் கொடுத்தது. இருவரிடமிருந்தும் உன்னத இலக்கியங்கள் பொங்கிப் பிரவகித்தன.

வீலண்ட் (Wieland) என்ற கவிஞர் வயதில் மூத்தவர். கதே தோன்றும் வரை அவரே ஜெர்மன் மொழியின் மகாகவியாகக் கருதப்பட்டவர். ஏசுவைப் பற்றி அவர் எழுதிய காப்பியமே செவ்விலக்கியமாகக் கருதப்பட்டது. அப்படிப்பட்ட மூத்த கவிஞரை அழைத்து ஒரு பதவியில் அமர்த்திக்கொண்டார். இவ்வாறே இசைக் கலைஞர்களையும் மற்ற அறிஞர்களையும் ஒரு படையாகத் தன்னைச் சூழ அமர்த்திக்கொண்டு ஜெர்மன் தேசத்தின் ஒரு சிறு நகரமாக இருந்த வைமரை அறிவுத் தலைநகரமாக மாற்றியமைத்தார்.

சாதாரணமாக இரண்டு கவிஞர்கள் ஓரிடத்தில் இருந்தால் இருவருக்கும் மத்தியில் ஒரு காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பார் பெரியார் ஈ.வே.ரா. இது இலக்கியவாதிகளுக்கு இடையே காலங்காலமாக இருந்து வருவதுதான். ஆனால் இந்தச் சிறுமைகளை எல்லாம் கடந்த பேரறிவாளன் கதே. அதனால்தான் உலகமும் சரித்திரம் வியக்கும் வண்ணம் ஜெர்மன் மொழிக்கு, அதன் இலக்கியத்திற்கு ஒரு பொற்காலத்தைத் திட்டமிட்டு அவரால் அமைத்துத் தர முடிந்தது.

யார் உயர்ந்த எழுத்தாளன் என்ற கேள்வி இலக்கியத் திறனாய்வுப் பாடநூல்களில் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த வினாவிற்கான விடையையும் நான் கதேயின் வாழ்க்கையில்தான் கண்டெடுத்தேன். எழுத்தாளன் என்பவன் ஒரு தனி மனித ஆளுமை மட்டுமல்ல, அவன் காலத்தின் குரல். காலம் என்ற படிமத்திற்கு எத்தனை முகங்கள் உண்டோ அத்தனை முகங்களையும் துல்லியமாகக் காணும் மனக்கண் கொண்டவன். இந்த ஆழமான அலைவரிசையை மூலப்படிமம் என்பார் உளவியல் ஞானி யுங். ஒரு மூலப்படிமம் என்பது மனித மூலக் கருத்துகள் என்ற அளவில் வேலை செய்வன. மரணம், அறிஞன், தாய்த் தெய்வம், குழந்தை போன்றவற்றை உதாரணங்களாகக் காட்டுவார். இந்த ஆழத்தில் ஒரு கருத்தை – உதாரணமாக கற்பனாவாதம் என்ற கருத்தை – வைத்துத் தொடர்ந்து தியானம் செய்தால் அந்தக் கருத்தின் ஆணிவேர், கிளை வேர்கள், இலைகள், விழுதுகள் என்று ஒரு முழுமரமாக அதனைக் காணலாம். என்னென்ன துறைகளில் எவ்வளவு வீச்சுடன் இந்தக் கருத்து சரித்திரத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்பதைத் தன் மனக்கண்ணில் கண்டுவிட முடியும். இந்த விளைவுகளையெல்லாம் உண்மையில் சரித்திரத்தில் நடப்பதற்கு முன்பே தன்னுடைய மனக்கண்ணில் கண்டு எழுத்தாளன் சமூகத்திற்கு அறிவித்துவிட முடியும். அவ்வாறு கதே கண்டு உலகிற்கு அறிவித்த கருத்துகள் எண்ணற்றவை. அவருடைய ஃபௌஸ்ட் காப்பியம் மூலமாகவும் காப்பிய நாயகன் மூலமாகவும் நவீன வாழ்வின் பிரச்சினைகளையெல்லாம் அக்குவேறு ஆணிவேறாக அலசிப் பார்த்து அவற்றுக்கான தீர்வுகளைக் கற்பனையுடன் இலக்கிய வடிவங்களாகப் படைத்துக் கொடுத்தார். உதாரணமாக யுங் பின்னாளில் சொன்ன தாய்த் தெய்வங்கள் என்ற மூலப்படிமம் ஃபௌஸ்ட் காப்பியத்தில் காணப்படுவதுதான். அதே போல நீட்சே சொன்ன ‘மதிப்பீடுகளின் மறு மதிப்பீடு’ என்ற முறையை முதலில் உலகிற்கு அறிவித்தவர் கதே. 

தத்துவம் என்ற சொற்கோட்டைக் கட்டுவது தவறு; அது பெரும்பாலும் பொய்யின் மேல் அமைக்கப்பட்ட கோட்டையே என்ற கருத்தை இருத்தலியல் சிந்தனையாளரான கீர்கேகார்ட் (Soren Kierkegaard) என்ற டென்மார்க் தத்துவஞானி முன்வைத்தார். அவர் வாழ்ந்த காலம் 19 ஆம் நூற்றாண்டு. ஆனால் அவருக்கு ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன் வாழ்ந்த கதே ஏற்கெனவே இந்தக் கருத்தை காண்ட் என்ற ஜெர்மன் தத்துவஞானியின் பிரமாண்டமான தத்துவக் கோட்டைகளுக்கெதிராக முன்வைத்திருந்தார். ஹென்றி பெர்க்சன் (Henry Bergson) என்ற பிரெஞ்சு தத்துவஞானி, எமர்சன், ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களெல்லாம் உள்ளுணர்வின் மூலமே வாழ்வின் ஆழத்தைத் தொட்டுப் பார்க்க முடியும், வெறும் சிந்தனையால் கூடாது என்று பின்னாளில் வாதிட்டதைப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே கதே சுட்டிக்காட்டினார்.

இன்றைய உலகில் சுற்றுச்சூழல் இயல் என்று ஒரு துறையே வளர்ந்து வருகின்றது. விஞ்ஞானத்தாலும் தொழில்நுட்பத்தாலும் விளையும் நாசங்களெல்லாம் இயற்கையின் சுழற்சி வட்டத்தை உடைத்து மனித அழிவுக்கே இட்டுச் செல்கின்றன என்று கூறுகிறது சுற்றுச்சூழல் வாதம். இந்த நாசகாரப் போக்கிற்கு மூலகாரணம் விஞ்ஞானப் பார்வையும் அதன் ஒற்றைப்படைத் தன்மையுமே. டெக்கார்ட், நியூட்டன், பேக்கன் போன்றவர்களின் குறுகிய கண்ணோட்டமும் பகுப்பாய்வு வாதமும் காரணம் என்று இவர்கள் வாதிடுகின்றனர். பகுப்பாய்வு அல்ல, முழுமையே.. மனித வாழ்வின் முழுமையே முக்கியம் என்று அன்றே வாதிட்டார் கதே. இயற்கையிலிருந்து மனிதன் அந்நியமாகிப் போகக்கூடாது, இயற்கையே மனிதனின் தாய் என்ற கொள்கை உடையவர் கதே. எமர்சன் கூறுகிறார் ‘இயற்கை அன்னை தன் ரகசியங்களையெல்லாம் வரம்பின்றி வெளிப்படுத்தியது தன் ஒரே மகன் கதே மூலமாகத்தான்.’ வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் என்ற ஆங்கில மகாகவி இயற்கையையே தெய்வமாகக் கண்டார். அவருடைய புகழுக்கு இந்தக் கருத்தே காரணம். இந்தப் பார்வையை அவர் கடனாகப் பெற்றுக்கொண்ட இடம் கதே. இவ்வாறு கதேயின் கருத்துகளால் பாதிக்கப்பட்ட அறிஞர்களையும் கவிஞர்களையும் கலைஞர்களையும் பட்டியலிட்டால் அது ஒரு மிக நீண்ட நிரலாகவே இருக்கும்.

*

இனி அவருடைய காப்பியமான ஃபௌஸ்ட் பற்றி ஒருசில வார்த்தைகள். நவீன மனிதன் யார்? இந்தக் கேள்விக்கு கடந்த ஆறேழு நூற்றாண்டுகளாகப் பல்வேறு விதமான பதில்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. கதே தன் பங்கிற்குச் சில வரையறைகளைச் செய்திருக்கிறார். தன் காப்பிய நாயகனான டாக்டர் ஃபௌஸ்ட் என்ற கதாபாத்திரத்தின் மூலம். மேற்கு உலகம் எந்த இடத்தில் கிழக்கு உலகத்திலிருந்து மாறுபடுகிறது என்றால் அந்த இடத்தை ஒரு சொல்லால் குறித்துவிடலாம். அந்தச் சொல் ‘முன்னேற்றம்’ (Progress). கிழக்கு உலகம் விதியின் மேல் மாறாத நம்பிக்கை கொண்டது. இந்த உலகம் இப்படித்தான் இருக்கும், இதனை மாற்ற முடியாது, எனவே அவ்வுலகத்தைப் பற்றிய கற்பனைகளும் ஏற்பாடுகளுமே முக்கியம் என்பது கிழக்குலகத்தின் கொள்கைகள். உலகின் எல்லா மதங்களும் இந்த விதிக்கூற்றையே மூலதனமாகக் கொண்டு வளர்ந்தவை. ஆனால் கடவுளல்ல, மனிதன்தான் முக்கியம். முயன்று தன் அறிவை வளர்த்துக்கொண்டால், தன் ஒழுக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டால் மனிதன் மேலும் மேலும் முன்னேற்றம் அடையலாம், இந்த உலகத்தையே மாற்றியமைக்கலாம்; சொர்க்கத்தை மண்ணிலேயே நிர்மாணம் செய்யலாம் என்ற சிந்தனையைக் கிரேக்கர்களிடமும் திருவள்ளுவரிடமும் நாம் காண்கிறோம். சுமார் 15 நூற்றாண்டுகள் கத்தோலிக்கத் திருச்சபை அறிவுவாதத்தை ஐரோப்பாவில் முடக்கி வைத்திருந்தது. பிறகு திடீரென கிரேக்க, இலத்தீன் செவ்வியல் இலக்கியங்களின் பாதிப்புகளால் விழிப்புற்ற மனிதன் மறுமலர்ச்சிக் காலத்தைத் தொடங்கினான். தன்னம்பிக்கையும் விதி மறுப்பும் பகுத்தறிவுவாதமும் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் கொணர்ந்தது. ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பது கிழக்கத்தியப் பழமொழி. ஆனால் இந்தக் கருத்து முற்றிலும் தவறு. போதுமென்ற மனம் வந்துவிட்டால் மேற்கொண்டு முன்னேற்றமில்லை, மனித முயற்சியில்லை, மனிதன் ஒரு சவத்தைப் போல் நடமாடும் பிணமாக வாழ ஆரம்பித்துவிடுவான் என்று கதேயின் ஃபௌஸ்ட் கூறுகிறான்.

சாத்தானுக்கும் கதாநாயகனுக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்படுகின்றது. ‘நான் இந்த விநாடி முழு நிம்மதியுடன் இருக்கின்றேன். இந்த விநாடியே தொடர்ந்து நீடிக்கட்டும்’ என்று எப்பொழுது என் மனத்தில் தோன்றுகின்றதோ அப்பொழுது சாத்தானாகிய நீ என் ஆத்மாவைக் கொண்டுசெல்லலாம் எனக் காகிதத்தில் எழுதித் தன் இரத்தத்தால் கையெழுத்திடுகிறான் கதாநாயகன், சுமார் 450 பக்கங்களில் மனித குல வரலாற்றையே கவிதையில் ஆய்வுசெய்கிறார் கதே. தீமை என்றால் என்ன? நன்மைக்கும் தீமைக்கும் என்ன தொடர்பு? மனித வாழ்வில் அவற்றின் அங்கம் என்ன? அறிவே இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவிடுகின்ற ஆற்றல் கொண்டதா? அல்லது உயிரிரக்கம்தான் அதைச் சாதிக்க வல்லதா? மனித வாழ்வில் குடும்பம், காதல், பக்தி, கலைகள், விஞ்ஞானம் இவற்றின் பங்கு என்ன? போன்ற முக்கியமான விழுமியங்கள் அனைத்தையும் கதே தன் புதிய பார்வையால் கண்டு கவிதைகளாக்குகிறார். ‘என்னென்ன புதிய பார்வைகள் எல்லாம் அவருடைய மூளையில் பயணப்படுகின்றன!’ என்று வியந்துபோகிறார் எமர்சன். பின்னாளில் தத்துவஞானி ஹெகல் பிரபஞ்ச ஆத்மாவின் பயணம் என்ற கருத்தாக்கத்தை வெளிப்படுத்தியதற்கு மூல ஊற்றை இந்தக் காப்பியத்தில் நாம் காணலாம்.

இலக்கியத் திறனாய்வில் இவரைத் திறனாய்வின் இளவரசன் என்று புகழ்கிறார் பிரெஞ்சு இலக்கியத் திறனாய்வு விற்பன்னர் செயிண்ட் போவ் (Sainte Beave). ஆங்கில விமர்சகர் மேத்யு ஆர்னால்டின் குரு போவ் என்றால் திறனாய்வுத் துறையில் கதேவின் இடத்தை நாம் யூகித்துக்கொள்ள முடியும்.

இனி ஒவ்வொரு மொழிக்கும் தனி இலக்கியம் என்றில்லை. உலக இலக்கியத்தின் பகுதிகள்தாம் இவை அனைத்தும் என்று முதலில் அறிவித்தவர் கதே. உலக இலக்கியம் என்ற சொற்றொடரையே முதலில் உருவாக்கியவர் அவர்தான். தன்னுடைய எழுபதாவது வயதுக்குப் பின் காளிதாசனின் சாகுந்தலத்தைப் படித்துவிட்டு அவரை இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்று வர்ணித்தார். காளிதாசனின் பாதிப்பால் நாடகம் எழுத முயன்றார். அதேபோல அரபுக் கவி ஹஃபிஸின் (Hafiz) கவிதைத் தொகுப்பைப் படித்துவிட்டு அதே போன்ற ஒரு முயற்சியை ஜெர்மன் மொழியில் செய்தார். இவ்வாறு உலக இலக்கியங்களில் எல்லாம் ஆழங்கால் பட்டு அந்த உன்னதங்களைப் போல் தன் மொழியில் வளம் சேர்க்க ஆசைப்பட்டார் கதே.

இனி ‘இளைய வெர்தரின் துக்கங்கள்’ என்ற இந்த நாவலைப் பற்றி சிலவற்றைப் பார்ப்போம். கற்பனாவாதம் என்ற சூறாவளி ஒரு நூற்றாண்டு காலம் ஐரோப்பா முழுவதும் சுழன்றடித்தது என்றால் அதனுடைய ஊற்றுக்கண் இந்த நாவல் என்றே சொல்லலாம். வேகமான உணர்ச்சித் தெறிப்புகள், கற்பனை கலந்த கவித்துவமான நடை. மனித வாழ்வைவிட இயற்கையின் மீது ஆழ்ந்த ஈடுபாடு, நட்பு, காதல் போன்ற மனித விழுமியங்கள் தெய்வநிலைக்குக் கொண்டுசெல்லும் யோக மார்க்கங்கள் என்றெல்லாம் இந்த நாவலில் எழுதிச் செல்கிறார் கதே. இந்த நூலை அவர் தம் 24ஆம் வயதில் எழுதுகிறார். உடனடியாக உலகப் புகழை எய்துகிறார். ஐரோப்பா முழுவதும் மனித மனங்களெல்லாம் தீப்பற்றி எரிகின்றன. வாழ்ந்தால் வெர்தரைப் போல வாழ வேண்டும் என்று ஐரோப்பிய இளைஞர்களெல்லாம் அந்தக் கதாபாத்திரத்தை ஓர் இலட்சிய புருஷனாகக் கனவு கண்டனர். அதே போல் யுவதிகளெல்லாம் வெர்தர் போன்ற இலட்சியக் காதலன் தனக்குக் கிடைக்க மாட்டானா என்று ஏங்கித் தவித்தனர்.

நெப்போலியன் இந்த நாவலைத் தான் பலநூறு முறை படித்ததாகவும் எப்போதும் தன் படுக்கை அருகில் வைத்திருந்ததாகவும் எழுதியிருக்கிறான்.

இதன் கதை மிகவும் சுருக்கமானது. முக்கோணக் காதல்தான் கதையின் சாராம்சம். கதாநாயகன் ஓர் இளைஞன். மனம் வெறுத்து தேசாந்திரியாகத் திரியும்போது தற்செயலாகச் சந்திக்கும் ஒரு பெண் மீது காதல் கொள்கிறான். அவள் ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டவள் என்று தெரிந்தும் தன் காதலை அவனால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. காதல் உணர்வு அவனைப் பேயாகப் பிடித்து ஆட்டுகிறது. ஒரு பக்கம் நட்பு, இன்னொரு பக்கம் காதல். இந்தப் போராட்டத்தில் தன்னையே அவன் இழக்கிறான். தன் உயிரைவிடக் காதலே மேலானது என்று முடிவுசெய்கிறான். அந்தக் காதலின்றி வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று தன்னையே மாய்த்துக்கொள்கிறான்.

கடிதங்களின் வழி கதை சொல்லுதல் என்ற நாவல் உத்தியானது உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் அந்நியோன்யத்தையும் தன்னை அறியும் (Sef-Conscious) மனோதத்துவ வகையிலும் நாவலாசிரியரின் திறமைகள் வெளிப்படச் சிறந்த வாய்ப்புகளை அளிக்கின்றது.

உணர்ச்சிமயமான கதையமைப்பும் ஒரு கவிஞனின் மொழியாற்றலும் சடம் போல நூற்றாண்டுகள் வாழ்வதைவிடக் காதல் வயப்பட்டு ஒருசில விநாடிகளே வாழ்ந்தாலும் அந்த வாழ்வே உன்னதமானது என்ற இலட்சியவாதமும் இந்த நூலை ஐரோப்பாவின் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கச் செய்து நாவலாசிரியனுக்கு உலகப் புகழைக் கொண்டுவந்து சேர்த்தது.

வெர்தர் என்ற ஒரு கதாபாத்திரம் ஒரு கதையின் பாத்திரமாக மட்டுமில்லாமல் மனித வாழ்வின் உன்னதமான விழுமியத்தின் குறியீடாக மாறிப்போனது. சமூகமெங்கும் காதலைப் பற்றியே பேச்சு. வெர்தரைப் போன்ற உடை, வெர்தரைப் போன்றே நடை, வெர்தரைப் போன்றே பேச்சு என்று ஒருவகையான வீர வழிபாடு தோன்றியது. இதன் விளைவாக காதலில் தோல்வியடைந்த பல இளைஞர்கள் வெர்தரைப் போன்றே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

இந்தத் துக்ககரமான செய்திகள் கதேக்கு எட்டியபோது அவர் மனம் குன்றிப் போனார். தன் தலைமுறைக்கும் எதிர்காலத் தலைமுறைக்கும் தான் பெரிய தீங்கையும் பாவத்தையும் விளைவித்துவிட்டோம் என்று உணர்ந்தார். கற்பனாவாதத்தின் பாதகங்களை அனுபவபூர்வமாக உணர்ந்தார். மனித உணர்ச்சிகளைப் பகுத்தறிவு என்ற லகான் கொண்டு அடக்கிக் கட்டுக்குள் வைக்காவிட்டால் அந்த முரட்டுக் குதிரை மனிதனைக் குப்புறத் தள்ளிக் குழியையும் பறித்துவிடும் என்ற செவ்வியல் கருத்தாக்கத்தை முதன்முதலாக அனுபவபூர்வமாக உணர்ந்தார்.

இது மொழிபெயர்ப்பு நூல். மொழிபெயர்ப்பு ஏன் அவசியமாகிறது? மாந்தர் குலம் ஒன்றே என்பதன் அடையாளம் மொழிபெயர்ப்பு. இன்று பரவலாகப் பேசப்படும் ‘உலகமயமாதல்’ வெறும் பொருளாதாரச் சுரண்டலுக்காகச் செய்யப்படாமல் உண்மையான உலகமயமாதல் ஏற்பட வேண்டுமானால் அது கலை, இலக்கிய, விஞ்ஞான, தத்துவ உலகங்களிலும் செயல்பட வேண்டும். அதற்கு மொழிபெயர்ப்பு ஒரு வழி.

உலக வரலாற்றில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு மொழிபெயர்ப்புகளே முதன்மையான காரணமாக இருந்திருக்கின்றன. கிரேக்க, இலத்தீன் செவ்வியல் இலக்கியங்களின் மொழிபெயர்ப்பினால் கி.பி.14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் முதல் மறுமலர்ச்சிக் காலம் (First Renaissance period) தொடங்கியது. வடமொழி இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளின் பாதிப்பால் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜெர்மனியில் இரண்டாம் மறுமலர்ச்சி (Second Renaissance) தொடங்கியது. தத்துவத்தில் கடப்பியம் (Transcendentalism) இலக்கியத்தில் ‘மிகு கற்பனாவாதம் (Romanticism) போன்ற தனித்த இயக்கங்கள் தோன்றின. அவற்றின் பாதிப்பால் இயற்பியலில் நிச்சயமற்ற கொள்கை (Uncertainty Principle) ஆன்மீகத்தில் புதிய யுகக் கொள்கை (NewAge Philosophy) போன்றவை மலர்ந்தன.

தற்போது உலகம் மூன்றாவது மறுமலர்ச்சிக்காக ஏங்கிக் காத்துக் கிடக்கிறது. அது ஆன்மீகமும் விஞ்ஞானமும் ஒன்றாகும் காலம். ‘விஞ்ஞான ஆன்மீகம்’ விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்படும் காலம். அப்படிப்பட்ட ஒரு துறையும், நெறியும் தமிழ்ச் சித்தர் மரபிலேயே உண்டு. இந்த உண்மையை உலகம் இதுவரை அறியவில்லை. இப்போது அறிந்துகொண்டது. அதன் விளைவுதான் கனடா நாட்டிலிருந்து பாரதம் போந்து தமிழில் உள்ள யோக நூல்களான திருமந்திரம், போகர் 7000, பதினெண் சித்தர் பெரிய ஞானக்கோவை, ஒளவைக் குறள் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் மார்ஷல் கோவிந்தன் போன்றோரின் மொழிபெயர்ப்புச் சேவை. அவருக்கும், மௌனமாக இந்த ஞானப் புரட்சியை மேற்குலகில் விதைத்து, வளர்த்து வந்த அவருடைய ஞான குருவான இக்காலத் தமிழ் முனிவர் யோகி இராமையா அவர்களுக்கும் தமிழர் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்கள்.

இந்நூலாசிரியர் எம். கோபாலகிருஷ்ணன் ஒரு கவிஞர். மூல ஆசிரியர் கதே ஜெர்மன் மொழியின் மகாகவி, கவிஞர்கள் மொழியாட்சியிலும், சொல் தேர்ச்சியிலும் மிகுந்த கவனம் கொண்டவர்கள். அதை இந்நூல் மொழிபெயர்ப்பில் காணலாம். மொழிபெயர்ப்பு என்று தோன்றாதவாறு, ஒரு மூலநூலைப் போன்றே சரளமான நடையில் மொழிபெயர்த்திருப்பதற்காக இவரைப் பாரட்ட வேண்டும். நான்கு நூல்களைத் தமிழாக்கியுள்ளார். இது அவருடைய இரண்டாவது நாவல் மொழிபெயர்ப்பு, முதல் நூல் உருசிய மொழியில் புகழ்பெற்ற அலெக்சாண்டர் சோல்சினிட்சின் எழுதிய ‘டெனிசோவிட்சின் வாழ்விலே ஒரு நாள்.’ 

ஒரு புதிய இளம் எழுத்தாளர் ஒரு கவிதை நூலை வெளியிடுமுன் குறைந்தது உலகத்தரம் வாய்ந்த பத்து கவிதைத் தொகுப்புகளையாவது வாசித்திருக்க வேண்டும். முடிந்தால் அவற்றுள் ஒன்றினையாவது தன் தாய்மொழியில் மொழிபெயர்த்திருக்க வேண்டும். அதேபோல ஒரு புதிய நாவலை எழுதி வெளியிடுமுன், உலகத்தரம் வாய்ந்த பத்து நாவல்களையாவது வாசித்திருக்க வேண்டும். அவற்றுள் ஒன்றையாவது தன் தாய்மொழியில் மொழிபெயர்த்திருக்க வேண்டும். இந்த விதி ஐரோப்பிய எழுத்தாளர்களிடையே மிகவும் பிரபலம். சரியான பயிற்சியே முறையான கல்வி என்பதே இதற்குக் காரணம். மகாகவி கதே ஆங்கில நாவலாசிரியரும் கவிஞருமான ஆலிவர் கோல்ட்ஸ்மித்தின் கவிதை நூலையும் நாவலையும் ஜெர்மன் மொழியில் பெயர்த்தார்.

யதார்த்த நாவலின் தந்தை என்று அழைக்கப்படும் பால்சாக்கின் ஒருசில நாவல்களைப் பிரெஞ்சிலிருந்து உருசிய மொழிக்கு மாற்றம் செய்து பயிற்சிபெற்று அவரையே விஞ்சி உலகப் புகழ்பெற்றவர் தஸ்தாயேவ்ஸ்கி.

இவ்விதியை நான் அடிக்கடி கூறுவதுண்டு. எம்.கோபாலகிருஷ்ணனும் முதல் மொழிபெயர்ப்பு நாவலுக்குப் பின் தனது ‘மணல்கடிகை’ நாவலை எழுதி புகழ்பெற்றார். அவர் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

*

கதேயின் ‘The Sorrows of Young Werther’ நாவலின் மொழியாக்கமான ‘காதலின் துயரம்’ நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை.