தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் (பகுதி 7): கு.அழகிரிசாமியின் சமூகப் பார்வை

by மானசீகன்
1 comment

கு.அழகிரிசாமியின் கதை வெளியெங்கும் எளிய மனிதர்களே நிறைந்திருக்கிறார்கள். அவர் கதைகளில் வருகிற கதாபாத்திரங்களின் மிக முக்கிய குணாம்சமாகப் பசி இருக்கிறது.

யாரோ சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலையை வழித்துச் சாப்பிடுகிற ராஜா (ராஜா வந்திருக்கிறார்), பக்கத்து வீட்டில் தந்த கஞ்சியை சகோதரன் ‘நியாயம்’ பேசிக் கொட்டிவிட்டதற்காக அம்மா மீது கோபம் கொள்ளும் சிறுவன் (இருவர் கண்ட ஒரே கனவு), பசியை வெல்வதற்காக உடலைத் தந்துவிட்டு காசைப் பார்த்தவுடன் உலகத்தைப் பார்த்துச் சிரிக்கும் இளம்பெண் (திரிபுரம்), செருப்பு தொங்க விடப்பட்ட மரத்தில் முருங்கைக்காய் திருடி குழம்பு வைக்கச் சொல்லிவிட்டு அதனைச் சாப்பிட முடியாமல் குற்ற உணர்வு கொள்ளும் நல்ல பெருமாள் பிள்ளை (முருங்கை மர மோகினி), வெட்டி வீறாப்பும் ஜாதிப் பெருமிதமும் கொண்டலைந்தாலும் பசியின் ஆக்கிரமிப்பால் முருகேசம் பிள்ளையிடம் கெஞ்சி இட்லி கேட்கும் வீரப்பத் தேவர் (சுயரூபம்), பசியால் யாசிக்கும் குருட்டுத் தகப்பனின் சோற்றிலேயே மண்ணள்ளிப் போடும் குழந்தைகள் (பேதமை) என்று பல கதாபாத்திரங்களின் நிழலாய் பசி கூடவே வருகிறது.

ஆனால் அவருக்கு முன்பும் பின்பும் சில எழுத்தாளர்கள் எழுதியதைப் போல் அவர் பசியை மிகைப்படுத்தி இரக்க உணர்ச்சியைத் தூண்டவில்லை. பசியெனும் மிருகத்தின் வாயில் சிக்கித் தவிக்கும் எளிய உயிர்களைப் பரலோக சாம்ராஜ்யத்தின் பக்கமோ, இகலோக சாம்ராஜ்யத்தின் பக்கமோ அறைகூவி அழைக்கவில்லை. அதே நேரத்தில் மேல்தட்டுப் பார்வையோடு பசியைக் கண்டு ‘உச்’ கொட்டியபடி கடந்துபோவதையோ, ‘இது அவன் தலைவிதி’ என்கிற உபதேசத்தையோ அவர் எழுத்தில் மருந்துக்கும் காண முடியாது. பசியைச் சமூக ஆய்வுப்பொருளாகக்கூட அவர் அணுகவில்லை.

அழகிரிசாமி வெவ்வேறு சூழல்களில் உருவாகும் மனிதர்களின் பசியை வெறுமனே காட்சிப்படுத்தியிருக்கிறார். அதற்கான காரணங்களையோ தீர்வுகளையோ உரத்த குரலில் பேசுவதில்லை. பசியின் உப விளைவாக மனித குணாம்சத்தில் ஏற்படும் மாற்றங்களையும் பசியையும் விஞ்சி நிற்க முயன்று தோற்றுப்போகும் மனிதப் பிடிவாதங்களையும், பசியின் கொடும் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் மனிதர்களை இந்தச் சமூகம் எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறது என்பதையுமே அவர் அடையாளம் காட்ட முனைகிறார். இந்த விஷயத்திலும் அவரிடம் செயல்படுகிற ஒரே விஷயம் கருணை மட்டுமே. இயற்கைச் சக்திகளால் கைவிடப்பட்ட அல்லது இயற்கையின் பேரருளுக்கு அப்பாலிருக்கிற எளிய மனிதர்களின் கையாலாகாத நிலையை அவர் கருணையோடு நோக்குவதே இந்தக் கதைகளின் பிரதான அம்சம். இந்தக் கதைகள் உருக்கமான குரலில் பேசி நம்மை உரத்து அழ வைப்பதற்காக எழுதப்பட்டவை அல்ல. அந்தப் பக்கம் திரும்பி கண்ணைத் துடைத்துக்கொண்ட பின்னும் மீந்திருக்கும் ஈரத்தைச் சமநிலையோடு பகிர முனையும் கனிந்த பெரியவரின் குரலாக அவர் கதைகள் நமக்குள் விரிகின்றன.

சில தருணங்களில் ‘எது தர்மம்?’ என்பதும்கூட மனிதர்களுக்கேற்ப, சூழல்களுக்கேற்ப, வர்க்கங்களுக்கேற்ப மாறுபடும். தன் சுயநலனுக்காகத் தர்மத்தைத் தீர்மானிக்கும் மனித சுயநலத்தைக்கூட அவர் பேசவில்லை. உண்மையில் அந்தப் பக்கம் இருப்பவர்க்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு தனக்கே தெரியாமல் தீமை செய்துவிடுகிற வர்க்க மனோநிலையை மிக அழகாக ‘தர்ம ராஜ்யம்’ கதையில் சுட்டிக்காட்டி விடுகிறார். கோட்டுக்கு இந்தப் புறத்தில் இருப்பவர்களின் விதிகளை அடிப்படையாக வைத்து அந்தப் பக்கம் நிற்பவர்களுக்கான தர்மத்தைத் தீர்மானிக்க முடியாது என்கிற நுட்பமான உணர்வைப் பேசும் கதை அது.

அந்தக் கதையில் வரும் முதலாளி மகன் நாராயணசாமி காலை ஒன்பது மணிக்கே படுக்கையில் இருந்து எழுகிறவன். அவனுக்கு வேலைக்குப் போக வேண்டிய கட்டாயமில்லை. ஆனால் அவன் ஏழைகளின் மீது பரிவுகொண்டவன். கடும் குளிர் வாட்டும் நாளொன்றில் தந்தையின் வேண்டுகோளுக்கிணங்கி வேலைக்கு வரச்சொல்வதற்காகச் சுடலையாண்டித் தேவரை அதிகாலையில் எழுப்பச் செல்கிறான். அதீதமாக வாட்டும் குளிரால் தேவரும் மனைவியும் சுருண்டு படுத்திருப்பதைக் கண்டு எழுப்பாமல் பரிவோடு திரும்பி வந்துவிடுகிறான். முதலாளி கோபத்துடன் வேறு ஆட்களை வேலைக்கு வரச்சொல்லி விடுகிறார். உண்மை தெரிந்த தேவருக்கு வறுமை காரணமாகக் கடுங்கோபம் வருகிறது. ‘தேவரின் மனபலத்துக்கு எறும்புக்குள்ள சக்தி இருந்தாலும் நாராயணசாமி சாம்பலாகிக் காற்றில் பறந்திருப்பான்’ என்று அழகிரிசாமி எழுதுகிறார். ஆனால் அப்போதும்கூட தேவருக்குத் தான் நன்மை செய்ததாகவே நாராயணசாமி நம்பிக்கொண்டிருக்கிறான். பல தருணங்களில் நாராயணசாமி மனநிலையில் இருந்துதான் ஏழைகளைக் குறித்த பரிவின் சித்திரங்கள் பக்கம் பக்கமாக எழுதப்படுகின்றன. இறுகப் போர்த்திக்கொண்டிருக்கும் கம்பளியின் நூலால் குளிரை உணர முடியாது என்பதே அழகிரிசாமியின் கட்சி. இந்தக் கதையையே அவர் கம்பளியை உருவிவிடும் மனோநிலையில் எழுதியிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

வர்க்கப் பேதத்தின் லட்சுமணக்கோட்டை அப்படியே சாதியின் பக்கம் நகரத்திக்கொண்டு போய் அவர் எழுதிய கதை ‘விதவை’. காந்தியின் போதனைகளாலும் சுயமரியாதை இயக்கத்தின் சிந்தனைகளாலும் நாற்பதுகளில் ‘விதவைகளுக்கு வாழ்வளித்தல்’ என்கிற விஷயம் மிகப்பெரிய முற்போக்கு அந்தஸ்தைப் பெற்றிருந்தது. இலக்கியவாதிகள் அந்தப் பின்னணியைக் கொண்ட கதைகளைப் படைப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். ஆனால் உண்மையில் இது பிராமணச் சாதிக்கு மட்டும்தான் முற்போக்கான விஷயம். ஏனென்றால் அவர்கள் முற்போக்கென்று கருதி புரட்சிகரமாகப் பேசிக்கொண்டிருந்த விஷயம் பல பிற்பட்ட சாதிகளின் நீண்ட நாள் வழக்கமாக இருந்தது. ‘விதவை’ கதையை அழகிரிசாமி வழக்கமான கோணத்தில்தான் ஆரம்பிக்கிறார். கலை ரசனை கொண்ட இளம் விதவை பாப்பாவைத் தன் நண்பன் ராகவனுக்கு மறுமணம் முடித்து வைப்பதற்காகவே ஊருக்கு அழைத்து வருகிறான் ரகு. இருவரும் முற்போக்காளர்கள். ராகவனுக்கும் அவள் தோற்றமும் இசை ரசனையும் பிடித்துவிடுகிறது. ஆனால் திருமணத்திற்கு முன்பாகவே ராகவன் ஊரைவிட்டு ஓடிவிடுகிறான். அப்போதுதான் ஓர் உண்மை தெரிய வருகிறது. அவன் பெயர் ராகவன் இல்லை, கடிதத்தின் கீழ் ‘வேலாயுதம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. ‘வேலாயுதம் என்பது யார் எனத் தெரியாமல் மூவரும் திகைத்தார்கள்’ என்று கதை முடிகிறது. சமூக யதார்த்தம் கொஞ்சம்கூட மாறாமல் இருக்கிற சூழலில் உயர் சாதியினர் தம்மை முற்போக்கானவர்களாகச் சமூகத்தில் காட்டிக்கொள்ள வரித்துக்கொண்ட முற்போக்கு மோஸ்தரில் தானும் சிக்கி, அடையாளக் குழப்பங்களாலும் குற்ற உணர்வாலும் மடிந்துபோகிற வேலாயுதத்தின் கதையைச் சொல்வதன் வாயிலாக அழகிரிசாமி நம் சமூகத்தில் எழுந்து வரும் நவீனத்துவத்தின் குரலுக்குள் உறைந்திருக்கும் சாதீய இடைவெளியையும் சுட்டிக்காட்டி விடுகிறார்.

கீழ் வர்க்கத்தினர் உயர் சமூகத்தவரின் அங்கீகாரத்துக்காக ஏங்கித் தம்மையே தொலைப்பதை அழகாகச் சொன்ன கதை ‘வெறும் நாய்’. ஒரு தெரு நாய் முனிசாமியின் வீட்டில் ஒட்டிக்கொண்டு வளர்கிறது. அது டாக்டரின் பங்களா நாயை விரட்டுகிறது. அதைப் பொறுக்க முடியாத டாக்டர் அதனைக் கல்லால் அடிக்க முனைகிறார். அது தப்பிவிடுகிறது. டாக்டர் கோபத்தை முனிசாமியின் மீது காட்டுகிறார். அதற்குப் பிறகு டாக்டரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகவே முனிசாமி நாயைத் துரத்திவிடுகிறான். சகல சேவைகளும் புரிகிறான். ஆனால் அவர் அவனைப் பயன்படுத்திக்கொள்கிறாரே தவிர மனிதனாகக்கூட மதிக்கவில்லை. நீண்ட நாள் கழித்தே இந்த உண்மையை முனிசாமி உணர்கிறான். அந்தத் தெரு நாய் டாக்டரைக் கடித்த உடன் அதைக் கையில் ஏந்தி முனிசாமி பரிவோடு தடவிக்கொடுப்பதாகக் கதை முடிகிறது. டாக்டர் தன்னையும் நாயாகவே கருதியிருக்கிறார்; ஆனால் நாய்க்கு இருக்கிற ரோஷத்தைக்கூட நாம் தொலைத்துவிட்டு அலைகிறோம் என்று அவன் உணர்வதே கதையின் மையம்.

இந்தக் குரலின் நீட்சியையே ‘தேவ ஜீவனம்’ கதையிலும் காண முடியும். அந்தக் கதையில் ஒரு தகப்பன் மூன்று இளம்பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்காமல் அவர்களின் இளமையை வீணாக்கிக்கொண்டிருப்பான். ஆனால் கதையில் வரும் மாடுகளும் நாய்களும் கட்டுப்பாடுகளின்றிச் சுதந்திரமாக அலையும். இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிற அருணாச்சல முதலியார் ‘மனிதன் தேவனாக மாறுவது எப்படி?’ என்கிற சாமியாரின் உபதேசத்தைக் கேட்ட பிறகு, ‘இவங்க மிருகம் மாதிரிகூட வாழ முடியலயேன்னு தவிக்கிறாங்க. என்னைக் கேட்டா இவங்களை முதலில் மிருகமாக்கணும். மிருகம்னா அடிச்சுத் திங்கிற மிருகம்னு சொல்லல. ஒரு நாய் மாதிரி, நரி மாதிரி, காக்கா மாதிரி, குருவி மாதிரி. ஒரு படி மேலே ஏறின மாதிரி. அதுக்குப் பிறகு மிருகங்களை எல்லாம் மனுஷங்களாக்கணும். மனுஷங்களாக்குன பிறகு தேவர்களாக்கணும்’ என்று கூறுவார்.

ஒரு வகையில் இது கு.அழகிரிசாமியுடைய குரல் என்று சொல்ல முடியும். மிருகங்களுக்குக்கூட உணர்ச்சிகளுக்கான தீர்வுகள் கிடைத்துவிடுகின்றன. எளிய மனிதர்கள் அதற்கும் வாய்ப்பில்லாத கீழான நிலையில் இருந்துகொண்டு மனுஷப் பிறவிக்காகக் குற்ற உணர்வுகொண்டு தேவனாவதற்காக வேண்டிக்கொள்ளும்படி பணிக்கப்படுகிறார்கள் என்பதே அவர் புரிதல். அவர் கதைகளின் பிரதான அம்சமும் இதுதான்.

அதனால்தான் ஊரே பஞ்சத்தில் சிக்கித் தவிக்கிறபோது பூசாரி மனைவி வறுமையின் கொடுமையால் அம்மனின் சேலையை யாருக்கும் தெரியாமல் உடுத்திக்கொள்கிறாள். நிர்வாணமாக இருக்கும் அம்மனைக் கண்டு ஊரே அதிர்கிறது. சாமியாடும் காளி இந்த உண்மையை ஊர்த்திருவிழாவில் அம்மன் குரலில் வெளிப்படுத்த முயலும்போது கொஞ்சமும் அசராத பூசாரி மனைவி, ‘சாமிகிட்டவே திருடற கெதிக்கு என்னைய ஆளாக்கியிருக்கியே? நான் வேற என்னத்தைக் கெட்டுவேன் சொல்லு’ என்று ரௌத்ரத்தோடு கேட்கும் போது சாமியே அடங்கிப்போகிறது.

எளிய மனிதர்களை இவ்வளவு பரிவோடு நோக்கும் அழகிரிசாமி அவர்களுக்குள் உருவாகிவிடும் கீழ்மைகளையும் அடையாளம் காட்டத் தவறவில்லை.

‘வாத்தியாரம்மாள்’ கதையில் தங்கச்செயினைத் தோட்டத்தில் தவறவிட்ட வாத்தியாரம்மாள் துணைக்குப் படுக்க வரும் வேலம்மாள் மீது பழி போடுகிறாள். மீண்டும் செயின் கிடைத்தவுடன் செய்வதறியாமல் முருகன் கனவில் வந்து குறி சொன்னதாகக் கதை விடுகிறாள். தன் மீதான களங்கம் துடைக்கப்பட்ட பிறகு அதே களங்கத்தை இரகசிய வஸ்துவாகத் தழுவிக்கொள்ள ஆயத்தமாகும் வேலம்மாள் டீச்சரின் கம்மலை நிஜமாகவே திருடுவதோடு கதை முடிகிறது.

இந்தச் சமூகத்தில் வாழும் எளிய மனிதர்கள் கர்ம வினையாலோ பிறப்பின் விதிகளாலோ இப்படி ஆனவர்களில்லை. அதற்குப் பின்னால் சமூகத்தின் கொடும் விதிகள் இருக்கின்றன. அந்த விதிகளே அவர்களையும் ஆட்டி வைக்கின்றன. எல்லா எதிர்க்குரல்களும் மற்றொரு பொம்மலாட்டமாகவே மாறிவிட போலியான கனவுகளை அவர்களிடம் போதிப்பதை விடுத்து, ‘எந்த உணர்வையும் பதிலுக்குப் பிடுங்கிக்கொள்ளாமல் கொஞ்சம் சோறு கொடுத்து தூங்கச் செய்யுங்கள்’ என்கிற கனிவின் குரல்தான் அவர் கதைகளை மட்டுமல்ல, அரை நூற்றாண்டுக்குப் பிறகும் வாசிப்பவர் உள்ளங்களையும் சேர்த்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.

(நிறைவுற்றது)

*

முந்தைய பகுதிகள்:

  1. கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம் – பகுதி 1
  2. கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம் – பகுதி 2
  3. கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம் – பகுதி 3
  4. கு.அழகிரிசாமியின் படைப்புகளில் குழந்தைகள்
  5. கு.அழகிரிசாமியின் கதைகளில் தொன்மம்
  6. கு.அழகிரிசாமியின் கதைகளில் பெண்கள்

1 comment

Poothathan Ramasundaram January 31, 2022 - 8:33 pm

மிகவும் அருமை

Comments are closed.