முத்தங்கள் பூக்கும் மரம்: கண்ணகன் கவிதைகள்

by கண்ணகன்
0 comment

குறுக்கும் நெடுக்கும்

இழைகளாக உடல்களைப் பின்னி அமைந்திருக்கும்

பெருவலையின் மையத்தில்

பாம்புகளின் சிரசுகள் எல்லாம் ஒன்றிணைந்து

ஒரு சிலந்தியைப்போலாகிக் காத்துக்கிடக்கின்றன.

சலித்துவிட்ட நிலமும் நீரும் விலகி

பறப்பதற்குப் பழகிக்கொண்டிருக்கும்

பச்சைத் தவளைகளுக்குச்

சிறகுகள் முளைக்கத் தொடங்கியிருப்பதற்கும் முன்னதாகவே.

*

பகல் நதியில்

நீர்க்கோழிக் குஞ்சுகளின் விளையாட்டுச் சுவடுகள்

அப்போதைக்கப்போதே

அழிந்துகொண்டிருந்தன

விலக்கப்பட்டவனின் கனவுகளைப்போல.

நுணாப்பூ வாசம்கொண்ட

வெளிச்சம்

வெளியெங்கும் பொழிந்துகொண்டிருக்க

இரவு நதியில்

பௌர்ணமிக்குள் மிதக்கிறது பாசி.

வேளியில் தழைத்திருக்கும்

பசுங்கொடியின்

நெற்றுக்குள்ளிருந்து வெடித்து விழும்

குன்றிமணியின்

கறுப்பு முனையளவேயான ஒர் இரவும்

சிவப்பு முனையளவேயான ஒரு பகலுமாக

கழிந்தும்விடுகிறது அவனின் நாள்.

*

என்னைப் பற்றிய விமர்சனம்போல்

குழந்தை

கிறுக்கத் தொடங்குகிறது.

முதலில்

ஒழுங்கற்ற ஒரு சிறு வட்டம்.

பிறகு

விளிம்பைச் சுற்றிலும்

சீரற்ற நீளங்களில் கோடுகள்.

தீட்டுகையில் 

மஞ்சள் நிறம் தீர்ந்துபோக

நிபந்தனையற்ற வெவ்வேறு நிறங்களை

நிரப்புகிறது வட்டத்தில்.

என்னவென்று கேட்டுச் சிரிப்பவரிடம்

சொல்கிறது

மழலைக்குள் வெயில் சுடர்த்தி

‘ச்ஊர்யன்…’

*

வலை பற்றி

வலைஞனே

நதிக்குள்ளிருந்து எதையேனுமன்றி

ஒருபோதும்

பிடித்திருக்கவே முடியாது

நதியை.

*

மீன்கொத்தி

இரந்து பெறுவதைவிடவும்

பிடிக்கப் பழகுதல்

சாலச் சிறந்ததென்று

ஞானோபதேசம் செய்தமைக்கு

மிக்க நன்றி.

தந்துதவ நினைத்த தூண்டில்

உங்களிடமே இருக்கட்டும்;

வலைகளும்கூட.

பசிவருத்தும் இளைப்பாறலுக்குப் பின்

மீண்டும் பறப்பேன்

நதியைத் தேடி

மீன்கொத்தி யான்.

*

பாரம் தாங்காமல் அறுந்துவிடப்பார்க்கும்

சிலந்திவலையின்

நுண்ணிழைகளில் கோத்திருக்கும்

பனித்துளிகளை

தன் வெற்றுக் கழுத்துக்கான முத்தாரமாய் ரசித்து

கற்பனையில் நிற்கிறாள்

மெய்மறந்த கோபிகை.

முண்டாசுக் கட்டில் செருகியிருக்கும்

நாணற்பூ

வெண்மயில் பீலியாய் மிளிர

பப்பாளி இலைக்காம்பில் துளைகளிட்டு

புல்லாங்குழல் இசைப்பதாய்ப் பாவிக்கிறான்

அவளைத் தன்பால் மயக்க

ஆநிரை மேய்க்கும் கோகுலன்.

காவிரிக் கரையோரக் காடுகளில்

கௌதாரிக்குக் கண்ணிவைத்து

நேற்றைய பகலில்

நிதானமான போதையுடன் காத்திருந்தவர்கள்

பசி மறக்க விளையாடிய ஆட்டக்களத்தில்

ஆடுகளுக்கும் புலிகளுக்கும் பதிலாய்

உதிர்ந்து கிடக்கின்றன

கருவேலம்பூக்கள்.

*

தலைகீழ்

கோபுரத்தில் வாழும்

புறாக்களுக்கென்ன,

சிட்டுக்குருவிகளுக்குத்தான் தேவை

சுயமாய்

ஒரு கூடு.

ஒரு கூடு

சுயமாய்

சிட்டுக்குருவிகளுக்குத்தான் தேவை.

புறாக்களுக்கென்ன,

கோபுரத்தில் வாழும்.

*

சருகில் இளைத்திருக்கும்

நரம்புகளுக்குள் பாயும் வெறுமையைப் பற்றி

பெயரற்ற பூக்களிடத்தில் உரையாடிக்கொண்டிருக்கும்

நிலவின் ஒளிப்பதங்களை

மனமுருகி கேட்டுக்கொண்டிருக்கிறது

குருபக்தி மிக்க சீடனைப்போல் இரவு.

சிதிலமான இசைக் கருவியை வருடுவதைப்போல்

மின்மினிகள் ஊர்ந்துகொண்டிருக்கும்

கிளைகளில் துயிலும் இலைகளுக்கிடையில்

உதிர்வதற்காய் விழித்திருக்கும் பூக்களின் நறுமணம்

கிளர்த்துகிறது என் வேதனையை.

வலிக்கும் காயத்திலிருந்து குருதியைப்போல்

துயரம் கசியத் தொடங்கிய தருணம்

எழுதிவிட பாவித்து

எழுதுவதற்கீடாய்

பெரும் பித்துடன் முதுமரத்தைக் கட்டியணைத்து

முத்தங்களிடுகிறேன்.

நித்யா,

இக்கவிதையைப் படிக்கும்

உன் கனவில் வரலாம்

முத்தங்கள் பூக்கும் மரம்.

*

நேற்று

சிறுநேர தாமதத்துக்காகப் பெற்ற

இழிவசை நினைத்தஞ்சி

தலைகுளித்து

நீளக் கூந்தலைத் தளர்த்திப் பின்னிய

ஈர சடை

முதுகில் ஆடை நனைக்க

வெகுசீக்கிரம் வந்து

பூட்டிக் கிடக்கும் கடைவாசல் படிக்கட்டில்

அமர்ந்திருந்த சிறுமியின் பொருட்டு

தொல்லுலகில் இன்று

எல்லோர்க்கும் அடிக்கும் வெயில்.

*

கடைசி முத்தம்

அன்றைய கடைசி முத்தம்

கடைசி முத்தமாகவே இருந்த

இன்றைய நம்

கடைசி சந்திப்பில்

அவரவர் கன்னங்களில் முத்தமிட்ட

அவரவர் கண்ணீர்த் துளிகளை

அவரவராகவே துடைத்துப் பிரிகிறோம்

கடைசியாக!

கடைசி என்பது எதன் தொடக்கம்?