சோதனைக் குடுவை – சில்வியா பிளாத்

by மதுமிதா
0 comment

சுவாரஸ்யமான சில மருத்துவமனைக் காட்சிகளைக் காட்டு என்று பட்டியைக் கெஞ்சிக்கொண்டே இருந்தேன். அதனால் ஒரு வெள்ளிக்கிழமை அனைத்து வகுப்புகளையும் வெட்டிவிட்டு நீண்ட வார விடுமுறை எடுத்துக்கொண்டேன். அவன் எனக்கான வேலைகளைக் கொடுத்தான்.

நான்கு பிணங்கள் இருந்த அறையில், வெள்ளைக் கோட்டு ஒன்றை அணிந்துகொண்டு ஒரு உயரமான நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். பட்டியும் அவனுடைய நண்பர்களும் பிணத்தை அறுத்துக்கொண்டிருந்தனர். அந்தப் பிணங்கள் மனிதத்தன்மை இல்லாத தோற்றம் கொண்டிருந்தாலும், அவை என்னைச் சற்றும் பயப்படுத்தவில்லை. அவை கருமையான ஊதா நிறத்துடன், பதனிட்ட தோலைப்போல விறைத்துப்போய் பழைய ஊறுகாய்ப் புட்டியின் நெடியுடன் இருந்தன.

அந்த வேலை முடிந்ததும், பட்டி என்னை முன்கூடத்துக்கு அழைத்துப்போனான். அங்கே பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்ட சிசுக்கள் வைக்கப்பட்டிருக்கும் பெரிய கண்ணாடிப் புட்டிகள் இருந்தன. முதல் புட்டியில் இருந்த கரு பெரிய வெண்ணிறத் தலையுடன் இருந்தது; தவளை போன்ற அதனுடைய சுருண்ட உடலின் மேல் அந்தக் குழந்தையின் தலை வளைந்து கவிழ்ந்திருந்தது. அடுத்தப் புட்டியில் இருந்த சிசு இன்னும் பெரிதாக இருந்தது; அதற்கு அடுத்த புட்டியில் இருந்த சிசு அதைவிட இன்னும் பெரியதாக இருந்தது; கடைசிப் புட்டியில் இருந்த சிசு இயல்பான ஒரு குழந்தையின் அளவில் இருந்தது. அந்தக் குழந்தை என்னைப் பார்த்து சிறிய பன்றிக்குட்டி சிரிப்பதுபோலச் சிரிப்பதாகத் தோன்றியது.

இந்த பயங்கரமானவற்றையெல்லாம் நான் அமைதியாகவே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். பிணத்தின் நுரையீரலைப் பட்டி கூறாக வெட்டிப் பார்த்ததை, நான் என்னுடைய முழங்கையைப் பிணத்தின் வயிற்றில் ஊன்றிக் கவனித்துக்கொண்டிருந்தபோது மட்டும், ஒரே ஒருமுறை துள்ளிக் குதித்தேன். அடுத்த ஒன்றிரண்டு நிமிடங்களுக்குள் என்னுடைய முழங்கையில் எரிவது போன்ற உணர்வினை அடைந்தேன். பிணம் அரைகுறை உயிரோடு இருப்பதாலேயே இந்த வெம்மை இருந்திருக்கலாம் என்ற ஆச்சரியத்துடன் நாற்காலியிலிருந்து பதற்றத்துடன் குதித்துக் கீழே இறங்கினேன். பிணத்தைப் பதப்படுத்த உப்புநீர்க் கரைசலில் ஊற வைத்ததாலேயே இந்த சூடு ஏற்பட்டது என்று பட்டி எனக்கு விளக்கம் கூறியதும், நான் நிதானமடைந்து மறுபடியும் நாற்காலியில் ஏறி அமர்ந்துகொண்டேன்.

மதிய உணவுக்கு முன்பாக பட்டி என்னை நுண்ணுயிரியால் ஏற்படும் இரத்தசோகை, மற்றும் பல நோய்களைக் குறித்து நடந்த விரிவுரையினைக் கேட்க அழைத்துப் போனான். அங்கே நோயாளிகளைத் தள்ளுவண்டியில் மேடைக்கு அழைத்து வந்து கேள்விகளைக் கேட்டுவிட்டு, திருப்பி அழைத்துச் சென்றார்கள். வண்ண ஸ்லைடுகளைப் போட்டுக்காட்டினார்கள்.

எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. ஒரு ஸ்லைடில், கன்னத்தில் மச்சத்துடன் அழகிய யுவதி சிரித்துக்கொண்டிருந்தாள். ‘அந்த மச்சம் தோன்றிய இருபது நாட்களில் அவள் இறந்துவிட்டாள்’ என்று மருத்துவர் கூறியதும், அனைவரும் ஒரு கணம் மௌனமாக இருந்தனர். அப்போது வகுப்பு முடியும் மணியடித்துவிட்டது. அதனால், அது என்ன மச்சம் என்பதும், அந்தப் பெண் ஏன் இறந்தாள் என்பதும் எனக்குத் தெரியவில்லை. மதியத்துக்கு மேல் நாங்கள் ஒரு குழந்தை பிறப்பதைப் பார்க்கப் போனோம்.

மருத்துவமனையின் நடைபாதையோரம் இருந்த ஒரு அறையிலிருந்து, முகத்தை மூடும் வெள்ளை முகமூடித் துணியையும், மெல்லிய வலைத்துணியையும் பட்டி எனக்கு எடுத்துக் கொடுத்தான்.

பட்டி அந்த வலைத்துணியை என் தலையில் முடி தெரியாமலும், வெள்ளை முகமூடித் துணியின் வழியாக என் கண்கள் மட்டும் தெரியும்படியும் சுற்றிக் கட்டினான். இந்தக் காட்சியை ஓய்வெடுத்துக்கொண்டிருந்த, சிட்னி க்ரீன்ஸ்ட்ரீட் போல உயரமான பருத்த மருத்துவ மாணவன் ஒருவன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் ஏளனமாக குறும்புத்தனமாய் இளித்தான். ‘உன்னுடைய தாய் மட்டுமாவது ஒருவேளை உன்னை விரும்பலாம்’ என்றான்.

அவன் எவ்வளவு குண்டாக இருக்கிறான் என்றும், ஒரு மனிதனுக்கு அதுவும் இளைஞனுக்கு இப்படிக் குண்டாக இருப்பது எவ்வளவு துரதிர்ஷ்டமான விஷயம் என்றும் நான் யோசித்துக்கொண்டிருந்தேன். மேலும், எப்படி ஒரு பெண்ணால் நின்றபடியே, அவனுடைய பெரிய வயிறில் வளைந்து சாய்ந்து அவனை முத்தமிட முடியும் என்று எண்ணிக்கொண்டிருந்ததால், அவன் என்னை எள்ளியதை உடனே என்னால் உணர முடியவில்லை. எப்படி ஒரு தாயால் ஒரு குண்டான மனிதனை மருமகனாக விரும்ப முடியும் என்று அவன் மூக்கை உடைக்கும் விதமாக நான் பேச நினைத்தபோது அவன் போய்விட்டிருந்தான்.

சுவரில் இருந்த  வரிசையான துளைகளைக் கொண்ட விநோதமான ஒரு மரத்தட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான் பட்டி. அதில் ஆரம்பித்த ஒவ்வொரு துளையும் வெள்ளி டாலர் நாணயத்தைப் போல இருந்தது. அதைத் தொடர்ந்த வரிசையான துளைகள் முடியும்போது கடைசித் துளை ஒரு விருந்துத் தட்டின் அளவில் முடிந்திருந்தது.

‘நல்லது நல்லது’ என்றவன், ‘இந்த நிமிடம் யாரோ ஒருவருக்குக் குழந்தை பிறக்கப்போகிறது’ என்று கூறினான்.

பிரசவ அறையின் வாசல் கதவுக்கு அருகே பட்டிக்குத் தெரிந்த, வளைந்து சோர்ந்த தோள்களுடன் மெலிந்த மருத்துவ மாணவன் ஒருவன் நின்றிருந்தான்.

‘ஹலோ வில், இப்போது பிரசவம் பார்க்கும் பணியில் யார் இருக்கிறார்?’ என்று கேட்டான் பட்டி.

‘நான்தான், இதுதான் என்னுடைய முதல் பணி’ என்றான் வில் சோர்வாக. அவனுடைய வெளிறிய நெற்றியில் வியர்வைத்துளிகள் அரும்ப ஆரம்பித்திருந்தன.

வில் மூன்றாவது ஆண்டு மாணவன் என்றும், அவன் தன்னுடைய படிப்பை முடித்துப் பட்டம் பெறுவதற்கு முன்பு, எட்டுப் பிரசவம் பார்த்து குழந்தைகளை வெளியே எடுக்க வேண்டுமென்றும் பட்டி என்னிடம் கூறினான்.

அவன், அந்த அறையின் கோடியில் ஏற்பட்ட பரபரப்பைக் கண்டான். எலுமிச்சைப் பச்சை மேலங்கிகளையும், தலைக்காப்பும் அணிந்திருந்த சிலர் செவிலிகளுடன் எங்களை நோக்கி ஒழுங்கில்லாத ஊர்வலத்தைப் போல, வெள்ளையான பெரிய மொத்தையான மூட்டை ஒன்றை ட்ராலி வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தனர்.

வில் என்னுடைய காதுகளில், ‘நீ இதைப் பார்க்கக் கூடாது, இதைப் பார்த்தால் நீ எப்போதும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பமாட்டாய். அவர்கள் பெண்களை உள்ளே வந்து பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். இது மனித இனத்துக்கு முடிவாக ஆகிவிடும்’ என்றான். நானும் பட்டியும் சிரித்துவிட்டோம். பிறகு பட்டி, வில்லின் கைகளைப் பற்றிக் குலுக்க, நாங்கள் அனைவரும் அறைக்குள் சென்றோம்.

அந்தப் பெண்ணை அவர்கள் தூக்கி ஏற்றிவிடும் படுக்கை மேஜையைப் பார்த்து திடுக்கிட்டுப் போனேன். என்னால் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை. அனைத்து விதமான கருவிகளும் கம்பிகளும் குழாய்களும் ஒரு மூலையில் ஒன்றுக்கொன்று பிரித்துணர முடியாதபடி இணைக்கப்பட்டிருந்தன. பார்க்கவே பயப்படும்படியாக, சித்திரவதை செய்யும் மேஜை போல இருந்தது.

அந்தப் பெண்ணின் அருகிலிருந்து சில அடிகள் தள்ளி, நானும் பட்டியும் ஜன்னலருகே நின்றிருந்தோம், அங்கிருந்து எல்லாவற்றையும் சரியாகப் பார்க்க முடிந்தது. வயிறு மிகப் பெரியதாக இருந்ததால், அவளுடைய முகத்தையோ உடலின் மேல் பாகத்தையோ என்னால் பார்க்க முடியவில்லை. பார்ப்பதற்கு அவளிடத்தில் எதுவும் இல்லாதது போலவும், மிகப்பெரிய சிலந்தி உப்பிய வயிறுடன் இருப்பது போன்றும் இருந்தது. அவளுடைய மெலிதான பாவப்பட்ட கால்கள் உயரத்தூக்கி கட்டப்பட்டன. குழந்தை பிறக்கும்வரை விடாமல் அவள் சத்தமாக முனகிக்கொண்டே இருந்தாள். மனிதக் குரல் போலில்லை அது.

அந்தப் பெண்ணுக்கு வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்ததாகவும் அவள் வலியில் முனகிக்கொண்டிருந்தது போலிருந்தாலும் நிச்சயமாக அது வலியென்று அவளுக்குத் தெரியாதாம். ஏனென்றால் அவள் மயக்கமான உறக்கத்திலிருந்தாள் என்று பிறகு பட்டி கூறினான்.

இங்கே கடும் வலியைத் துளித்துளியாக உணர்ந்து அந்தப் பெண் துடித்துக்கொண்டிருந்தாள். இல்லையென்றால் இப்படி அழுதிருக்க மாட்டாள். வீட்டுக்குப் போனதும் இந்த வலியை மறந்துவிட்டு இன்னொரு குழந்தைக்கு அவள் தயாராகிவிடுவாள். ஏனென்றால், அந்த மருந்து அவள் எந்த அளவு மோசமான வலியை எதிர்கொண்டிருந்தாள் என்பதை மறக்கடித்திருக்கும். அவளுடைய நீண்ட இருளான இரகசியமான ஒரு பகுதியில் வலி அவளைத் திறந்து மூடக் காத்திருந்தது.

தலைமை மருத்துவர், வில்-லை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தவர், அந்தப் பெண்ணிடம், ‘முக்கித் தள்ளுங்கள். முக்கித் தள்ளுங்கள் திருமதி டோமோலில்லோ. அழகான பெண் குழந்தை இது. முக்கித் தள்ளுங்கள்’ என்றார். கடைசியாக அவளுடைய கால்களுக்கிடையே மழித்த யோனிப் பிளவிலிருந்து கருமையான தெளிவில்லாத பஞ்சு போன்ற ஒன்று வெளிப்படுவதைப் பார்த்தேன்.

‘குழந்தையின் தலை’. முனகிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் காதுகளில் பட்டி முணுமுணுத்தான்.

ஆனால் அந்தக் குழந்தையின் தலை எதனாலோ அங்கேயே மாட்டிக்கொண்டது. மருத்துவர், வில்-லிடம் வெட்டி எடுக்க வேண்டும் என்றார். அந்தப் பெண்ணின் தோலில் கத்தரிக்கோலால் துணியைக் கத்தரித்து வெட்டுவது போல வெட்டும் ஓசை கேட்டது; அடர்ந்த சிவப்பு நிறத்தில் இரத்தம் பெருகி ஓட ஆரம்பித்தது. உடனே, வில்-லின் கைகளில் குழந்தை வெளிவர ஆரம்பித்தது. ஊதா நிறத்துடனும், வெண்ணிற மாவால் பூசியும், மெலிதாய் இரத்தம் வழிய இருந்த குழந்தையை வைத்துக்கொண்டு, வில் ‘கீழே போட்டுவிடுவேன்… கீழே போட்டுவிடுவேன்… கீழே போட்டுவிடுவேன் போலிருக்கிறதே…’ என்று அச்சத்துடன் கூறினான்.

‘இல்லை. நீ கீழே போட மாட்டாய்’ என்ற மருத்துவர், வில்-லின் கைகளிலிருந்து எடுத்து குழந்தையைத் தடவிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்; குழந்தையின் மேலிருந்த நீல நிறம் போய்விட்டது. இப்போது குரல் கட்டியிருப்பதைப் போன்றதொரு கரகரத்த குரலில் வீறிட்டழ ஆரம்பித்த குழந்தையை நான் பார்த்தேன். ஆண் குழந்தை.

அந்தக் குழந்தை செய்த முதல் வேலை மருத்துவரின் முகத்தில் சிறுநீர் கழித்ததுதான். பின்னர் நான் பட்டியிடம், ‘இப்படி நடப்பது… இது எப்படி சாத்தியம்’ என்றேன். அவன் கூறினான், ‘இது அசாதாரணமாகத் தெரிந்தாலும், இப்படி நடக்குமென்று எதிர்பார்க்காவிட்டாலும், இது சாத்தியம்தான்’ என்றான்.

குழந்தை பிறந்ததும் அறையில் இருந்தவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்தனர். செவிலியர் குழந்தையின் மணிக்கட்டில் பட்டையைக் கட்டினார்கள்; கண்களை ஒரு குச்சியின் முனையில் இருந்த பஞ்சால் துடைத்தனர்; குழந்தையை ஒரு துணியால் சுற்றி சணல்நார் கட்டிலில் கிடத்தினார்கள். மருத்துவர்கள் அந்தப் பெண்ணின் வெட்டுண்ட தோலினை நூல் கோர்த்த நீண்ட ஊசியால் தைத்தனர்.

யாரோ அந்தப் பெண்ணிடம், ‘திருமதி டோமோலில்லோ… பிறந்தது ஆண் குழந்தை’ என்று சொல்லும் குரலைக் கேட்டேன். ஆனால் அந்தப் பெண் தலையைத் தூக்கிப் பார்க்கவுமில்லை, பதில் சொல்லவுமில்லை.

‘நல்லது. இந்த அனுபவம் எப்படி இருந்தது?’ அறைக்குப் போகும் பாதையின் குறுக்கே நாற்கோணப் புல்வெளியை நாங்கள் கடந்து போகும்போது திருப்தியான உணர்வுடன் கேட்டான் பட்டி.

‘அற்புதம். இது போலவே தினமும் ஏதாவது ஒன்றைப் பார்க்க வேண்டும்.’

குழந்தைகளைப் பெறுவதற்கு வேறு ஏதும் வழி இருக்கிறதா என்று அவனிடம் கேட்க நான் விரும்பவில்லை. எனக்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், குழந்தை உன்னிலிருந்து வெளியே வரும்போது அது உன்னுடையதுதான் என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். அத்தனை வலியையும் உணரவேண்டுமானால் நீ விழித்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

எல்லாம் முடிந்ததும், அந்தப் பிரசவ மேஜையில் முழங்கையை ஊன்றி நான் ஏறுவதாகக் கற்பனை செய்தேன் –  அலங்காரமற்ற அச்சமூட்டும் கற்பனை. ஆனால், பிரகாசமான சிரிப்புடன், என் கூந்தல் இடுப்பு வரை புரள… புழுவைப் போல வளைந்த, ஏதாவதொரு பெயருள்ள என்னுடைய முதல் குழந்தையைப் பெறும் கற்பனை.

‘ஏன் அதன் உடல் முழுக்க மாவால் பூசி மூடப்பட்டிருக்கிறது?’ பேச்சைத் தொடர்வதற்காக இந்தக் கேள்வியைக் கேட்டேன். பட்டி வெண்ணிற மெழுகுப்பூச்சு குழந்தையின் மேல்தோலைக் காப்பதாகச் சொன்னான்.

நாங்கள் பட்டியின் அறைக்குத் திரும்பினோம். அவனுடைய அறை எனக்கு ஒரு துறவியின் அறையை நினைவுபடுத்தும். வெற்றுச் சுவர், வெற்றுப் படுக்கை, வெற்றுத் தரையுடன் அது இருந்தது. மேஜையில் க்ரே எழுதிய ‘அனாடமி’, தடிமனான பிற புத்தகங்களுடன் இருக்கும். பட்டி மெழுகுவத்தியை ஏற்றினான்; டுபோன் மதுப்புட்டியைத் திறந்தான். பின்னர் படுக்கையில் அருகருகே படுத்துக்கொண்டோம். பட்டி ஒயினைச் சுவைத்தான்; நான் கொண்டுவந்திருந்த புத்தகத்திலிருந்து ‘நான் பயணம் செல்லாத இடம்’ கவிதையை சத்தமாக வாசித்தான்.

என்னைப்போல ஒரு பெண் கவிதையில் மூழ்கிப்போய் காலம் கழிப்பதில் ஏதோவொன்று இருக்கின்றதென்று கண்டுபிடித்ததாகப் பட்டி என்னிடம் கூறினான். அதனால் ஒவ்வொரு முறை நாங்கள் சந்திக்கும்போதும் நான் அவனுக்குச் சில கவிதைகளை வாசித்து அதில் நான் என்ன உணர்கிறேனோ அதை அவனுக்கு எடுத்துச் சொல்வேன். இதுவும் பட்டி கூறிய யோசனைதான். அவன் எப்போதும் வார விடுமுறையைத் தேர்ந்தெடுத்தான். அதனால் நேரத்தை நாங்கள் வீணடிக்கவில்லை. பட்டியின் தந்தை பேராசிரியர். அதனால் பட்டியும் ஆசிரியராவான் என்று நினைத்தேன். அவன் எப்போதும் ஏதேனும் ஒன்றை எனக்கு விளக்கிச்சொல்ல முயன்று புது விஷயங்களை அறிமுகப்படுத்துவான்.

ஒரு கவிதையை நான் வாசித்து முடித்ததும், சட்டென அவன், ‘எஸ்தர், நீ எப்போதும் ஒரு ஆணைப் பார்த்ததே இல்லையா?’ என்று கேட்டான்.

அவன் கேட்ட விதத்தைப் பார்க்கையில், அவன் சாதாரணமாக ஆணைப் பார்த்தாயா என்பதைப் பற்றிக் கேட்கவில்லை என்பதும், ஆடையில்லாத ஆணைப் பார்த்தாயா என்பதும் புரிந்தது.

‘இல்லை. சிலைகளில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.’

‘நல்லது. என்னைப் பார்க்க வேண்டுமென்று நீ நினைக்கவில்லையா?’

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்னுடைய தாயாரும் பாட்டியும் இப்போது சமீபகாலமாக என்னிடம் பட்டி வில்லார்டைப் பற்றி அவ்வப்போது பேச ஆரம்பித்தார்கள். அவன் நல்ல பையன் என்றும், எவ்வளவு நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவன் என்றும், தேவாலயத்தில் இருப்பவர்கள் எப்படி அவன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டான மனிதன் என நினைக்கிறார்கள் என்றும், பெற்றோரிடமும் பெரியவர்களிடமும் அவன் எவ்விதம் மரியாதையாக நடந்துகொள்கிறான் என்றும், விளையாட்டு வீரனாக, அழகாக, அறிவுடன் இருக்கிறானென்றும் சொல்ல ஆரம்பித்திருந்தனர்.

நான் அவனைப் பற்றி என்னவெல்லாம் கேள்விப்பட்டிருந்தேனென்றால், அவன் மிகவும் நல்லவன்; களங்கமில்லாத பையன்; அவன் பெண்களிடத்தில் கனிவுடன் நடந்துகொள்கிறான், அதனால் அவனுக்கான பெண்ணும் அதற்கேற்றாற்போலத் தூய்மையாக இருக்க வேண்டும். அன்புடன் நடந்துகொள்ள வேண்டும். அதனால் எனக்கு உண்மையிலேயே பட்டியிடம் ஏதும் தீங்கு இருப்பதாகத் தெரியவில்லை.

‘சரி. நல்லது. அதைக் கேட்பாய் என்று ஊகித்தேன்.’

நான் பட்டியை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் கால்சராயை அவிழ்த்து நாற்காலியில் போட்டான். நைலான் வலைத்துணியால் ஆன உள்ளாடையையும் நீக்கினான்.

‘இவை குளிர்ச்சியானவை. இதையெல்லாம் எளிதாகத் துவைக்கலாம் என்று என்னுடைய அம்மா சொல்லியிருக்கிறாள்’ என்றான்.

என் முன்னால் அப்படியே நின்றான். நான் அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். வான்கோழியின் கழுத்தும், தொங்கும் மடல்களும் மட்டுமே நினைவுக்கு வர மிகுந்த சோர்வடைந்தேன்.

நான் எதுவும் சொல்லாததில் பட்டி கவலையடைந்தான். ‘நீ என்னைப் பார்த்து பழக்கமாகிக் கொள்ளவேண்டும். இப்போது நான் உன்னைப் பார்க்கிறேன்’ என்றான்.

ஆனால் அவனுக்கு முன்னால் ஆடையின்றி இருக்க வேண்டுமென்றால், போஸ்டர் புகைப்படம் எடுக்க, கேமராவுக்கு முன்பு நிற்பதைப்போல இருந்தது. கல்லூரியில் முழுக்க ஆடையின்றி முழுமையாகவும் பக்கவாட்டுக் கோணத்திலும், கல்லூரியின் அடையாளக் கோப்புக்காக, எவ்வளவு நேராக இருக்கிறாய் என்பதை, ஏ, பி, சி, டி என்று குறிப்பதற்காகப் புகைப்படமெடுக்க நின்றிருந்ததைப் போன்ற மனநிலையே இருந்தது.

அதனால், ‘ஓ! இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாமே…’ என்றேன். சரி என்று பட்டி உடையணிந்துகொண்டான்.

பிறகு நாங்கள் முத்தமிட்டுக் கட்டி அணைத்துக்கொண்டோம். இப்போது எனக்குக் கொஞ்சம் மனத்துக்கு இதமாக இருந்தது. நான் மீதமிருக்கும் ஒயினைக் குடித்தேன். பட்டியின் படுக்கையின் ஓரத்தில் கால்மேல் காலிட்டு அமர்ந்துகொண்டு தலைவார ஒரு சீப்பைக் கேட்டேன். முடி முகத்தை மறைக்கும்படி சீப்பால் கூந்தலை வாரிக்கொண்டேன்; பட்டியால் இப்போது என் முகத்தைப் பார்க்க முடியாது. உடனே நான் கேட்டேன், ‘பட்டி, உனக்கு வேறு பெண் யாருடனாவது தொடர்பு இருந்திருக்கிறதா?’

எது என்னை அவனிடம் இப்படிக் கேட்க வைத்தது என்று தெரியவில்லை. அந்த வார்த்தைகள் என் வாயிலிருந்து தானாகவே வெளியே வந்திருந்தன. பட்டிக்கு எவளுடனாவது தொடர்பு இருந்திருக்கும் என்று நான் எப்போதும் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அவன், ’இல்லை. நான் என்னைத் திருமணம் செய்துகொள்ள இருக்கும், பரிசுத்தமான கன்னிப்பெண்ணான உன்னைப் போலிருக்கும் ஒருத்திக்காக என்னைப் பாதுகாத்து வருகிறேன்’ என்று சொல்வானென்று எதிர்பார்த்தேன்.

ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை. அவன் முகம் வெளிறிப்போனது.

‘உனக்கு யாருடனாவது தொடர்பு இருக்கிறதா?’

‘என்ன கேட்கிறாய்? தொடர்பா?’ வெற்றுக்குரலில் பட்டி கேட்டான்.

‘யாருடனாவது படுத்திருக்கிறாயா?’ பட்டிக்கு அருகில் இருந்த என் முகத்தை மறைக்கும்படி கூந்தலைச் சீவிக்கொண்டிருந்தேன். சிறிய குழற்கற்றைகள் என் கன்னங்களில் தொங்கின. ‘நிறுத்து. பேசாதே. எதுவும் சொல்லாதே. என்னிடம் எதையும் சொல்லிவிடாதே’ என்று கத்த வேண்டும் போலிருந்தது. ஆனால் நான் கத்தவில்லை. அமைதியாக இருந்தேன்.

‘ஆமாம். தொடர்பு உள்ளது’ என்றான் கடைசியில்.

நான் முழுவதுமாக உடைந்து நொறுங்கிவிட்டதைப் போல உணர்ந்தேன். முதல்நாள் இரவிலிருந்து பட்டி வில்லார்ட் என்னை முத்தமிட்டு நான் நிறையப் பையன்களுடன் வெளியே போயிருக்கக்கூடுமென்று சொன்னான்; அவனைவிட நான் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறேனென்றும், அனுபவம் மிக்கவளாக இருக்கிறேனென்றும் என்னை உணர வைத்தான்; அணைத்தல், முத்தமிடுதல், செல்லமாய்ச் சீராட்டுதல் என்று அவன் செய்த அனைத்தையும் அவனை நான் இயல்பாகச் செய்ய வைத்தேனென்றும் என்னால் ஈர்க்கப்பட்டு அவன் தவிர்க்க இயலாது இவ்விதம் நடந்துகொண்டதாகவும் நினைத்திருந்தேன். இப்போது இத்தனை நாட்களாக அவன் ஒன்றும் தெரியாத அப்பாவி போல என்னிடம் நடித்திருக்கிறான் என்பதைக் கண்டுகொண்டேன்.

‘அதைப் பற்றி எனக்குச் சொல். யாரவள்?’ சீப்பினால் முடியை மெதுவாக மிக மெதுவாகச் சீவினேன். சீப்பின் பல் ஒவ்வொரு முறையும் என்னுடைய கன்னத்தில் குத்தியது.

நான் கோபப்படவில்லையென்று அறிந்து பட்டி சற்றே ஆசுவாசமடைந்தான். அவன் எப்படி அந்தச் செயலில் விழுந்தான் என்பதை யாரிடமேனும் சொன்னால் இன்னும் ஆசுவாசமடைவான் என்று தோன்றியது.

யாரோ அவனை இதில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியிருக்கிறார்கள். இதை அவனாகவே ஆரம்பித்திருக்கவில்லை, அது அவனுடைய குற்றமல்ல. சென்ற கோடைக்காலத்தில் கேப் காட் ஹோட்டலில் அவன் வேலை செய்துகொண்டிருந்தபோது, உணவு பரிமாறும் பணிப்பெண்தான் அவனிடம் அப்படி நடந்துகொண்டாள் என்றான். அவள் அவனை விந்தையாக உற்றுப் பார்த்ததையும், அடுக்களையில் பணிக்குழப்பத்தில் அவன் மேல் அவள் தன் மார்பகங்களை உரசுவதையும் பட்டி கவனித்தான். கடைசியில் ஒருநாள் அவளிடம் உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்டுவிட்டான். அவள் அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து, ‘எனக்கு நீ வேண்டும்’ என்று சொல்லிவிட்டாள்.

அவன் அவளிடம் அப்பாவியாக, ‘பார்ச்லே மல்லித்தழையைப் பரிமாற வேண்டுமா?’ என்று கேட்டிருக்கிறான்.

‘இல்லை. ஏதோ ஒரு இரவில் நீதான் வேண்டும்’ என்று அவள் சொல்லிருக்கிறாள். அப்படித்தான் அவன் தன்னுடைய தூய்மையையும் ஒழுக்கத்தையும் இழந்தான்.

முதலில் அவன் அவளுடன் ஒருமுறை மட்டுமே படுத்திருக்கிறான் என்றுதான் நினைத்தேன். ஆனால் உறுதி செய்துகொள்ள அவனிடம் இது குறித்துப் பலமுறை கேட்டதும், அவன் தனக்கு நினைவில்லையென்றும் மீதிக் கோடைக்காலம் முழுக்க வாரத்துக்கு இருமுறை அவளுடன் சேர்ந்து இருந்திருக்கலாம் என்றும் கூறினான். நான் மூன்றைப் பத்தால் பெருக்க முப்பது கிடைத்தது. இது எல்லாக் காரணங்களையும் கடந்து ரொம்பவும் அதிகமாகிவிட்டது. அதற்குப் பிறகு எனக்குள் ஏதோ உறைந்து போனது போலிருந்தது.

கல்லூரிக்குத் திரும்பிய பிறகு, நான் மூத்த மாணவிகளிடம் ஒருவர் மாற்றி இன்னொருவரிடம், அவர்கள் அறிந்திருக்கும் ஒரு பையன் திடீரென்று அவர்களிடம் தான் ஒரு கோடைக்காலத்தில் ஒரு பணிப்பெண்ணுடன் முப்பது இரவுகள் உறங்கினேன் என்று சொன்னால் என்ன செய்வீர்கள் என்று கேட்கத் தொடங்கினேன். ஆனால் அந்த மாணவிகள் எல்லா ஆண்களும் அப்படி இப்படித்தான் இருக்கிறார்கள் என்றும், திருமணத்துக்கு நிச்சயம் செய்தால் தவிர அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது என்றும் கூறினார்கள்.

உண்மையில், பட்டி வேறு யாரோ ஒருத்தியுடன் உறவாடியது என்பது என்னைத் துன்புறுத்தவில்லை. அனைத்து வகையான மக்களும் ஒருவருடன் இணைந்து படுக்கிறார்கள்; இதுவே இன்னொருவனாக இருந்தாலும் நான் மேலும் பல சுவரஸ்யமான விபரங்களைக் கேட்டிருப்பேன். நானும் வேறு யாருடனோ சென்று கிடந்துவிட்டு இதை மறந்திருப்பேன்.

என்னால் தாங்க இயலாத விஷயம் என்னவென்றால், பட்டி நான் கவர்ச்சியானவள் என்றும், அவன் சுத்தமானவன் என்றும் நடித்துக்கொண்டு, அந்தப் பணிப்பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறான் என்பதும், அந்த நேரங்களிலெல்லாம் என் முகத்துக்கு எதிரே ஒழுக்கமானவனைப் போலச் சிரித்திருக்கிறான் என்பதுமே.

‘உன்னுடைய தாயார் அந்தப் பணிப்பெண்ணைப் பற்றி என்ன நினைக்கிறார்?’ என்று அந்த வார விடுமுறையில் பட்டியிடம் கேட்டுவிட்டேன்.

பட்டி அவனுடைய தாயாருடன் திகைப்பூட்டும் அளவில் மிகவும் நெருக்கமாக இருப்பான். அவன் எப்போதும், அவனுடைய தாயார் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவுமுறைகளைப் பற்றிச் சொல்லியதைக் குறிப்பிட்டுப் பேசுவான். மேலும் அவள், ஆணும் பெண்ணும் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்னும் கருத்தைக் கொண்டவள். நான் முதன்முதலாக அவளுடைய வீட்டுக்குப் போனபோது அவள் என்னைத் தொடர்ந்து எனக்குள் தேடுவது போல உற்றுப் பார்த்தாள்; நான் கன்னிப்பெண்ணா இல்லையா என்று ஆராய்ந்து பார்க்க முயல்கிறாள் என்று நினைத்தேன்.

நான் நினைத்தது போலவே பட்டி தடுமாறிப் போனான். ‘ஆமாம். அம்மா என்னிடம் க்ளாடிஸ் பற்றி கேட்டாள்’ என்று ஒத்துக்கொண்டான்.

‘நீ என்ன சொன்னாய்?’

‘ஆமாம் என்று சொன்னேன். க்ளாடிஸ் ஒரு சுதந்திரமான இருபத்தியொரு வயதான வெள்ளைக்காரப் பெண்ணென்று சொன்னேன்.’

இப்போது எனக்குப் பட்டியைப் பற்றிப் புரிந்தது. அவன் எனக்காக அவனுடைய தாயிடம் கடுமையாகப் பேச மாட்டான். அவன் எப்போதும் அவனுடைய அம்மா சொல்வதாகச் சொல்வான், ‘ஆண் விரும்புவது துணையை. பெண்ணோ பாதுகாப்பை விரும்புகிறாள்’, ‘ஆண் எதிர்காலத்துக்கான அம்பாக இருக்கிறான். பெண் அந்த அம்பு விடுபடும் நாணாக இருக்கிறாள்.’ இதையே நான் சலித்துப் போகும் வரையில் தன் தாயார் கூறியதாகத் திரும்பத் திரும்பச் சொல்வான்.

ஒவ்வொருமுறையும் நான் விவாதம் செய்ய முயல்வேன். அப்போதெல்லாம் பட்டி சொல்வான்: இப்போதும் அவர்களுடைய வயதைக் கடந்தும், அவனுடைய தாய் அவன் தந்தையிடம் மகிழ்ச்சியாக இருக்கிறாள்; இது எவ்வளவு சிறப்பான விஷயம் என்பான். இது வாழ்வின் உண்மையை, எது என்ன எப்படி என்பதை அவள் அறிந்திருந்தாள் என்பதையே காட்டுகிறது.

நல்லது. நான் பட்டி வில்லார்டிடம் இருந்து என்றைக்குமாய் விலக முடிவுசெய்தேன். இது அவன் அந்தப் பணிப்பெண்னுடன் படுத்தான் என்பதற்காக அல்ல, ஆனால் அவனுக்கு அனைவரிடமும் அதைச் சொல்லும் தைரியமும் நேர்மையும் இல்லை; அதை எதிர்கொள்ளும் ஆளுமையும் இல்லை.

முன்னறையில் தொலைபேசி மணியடித்தது. யாரோ ஒருவர் பாடல் இசைக்கும் குரலில் அழைத்தார், ‘எஸ்தர், பாஸ்டனிலிருந்து உனக்கு போன்.’

ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. பாஸ்டனில் இருப்பவர்களில் எனக்குத் தெரிந்தவன் பட்டி மட்டுமே. கடிதங்களைவிட தொலைபேசியில் பேசுவது அதிகச் செலவாகும் என்பதால் அவன் எப்போதும் என்னை போனில் அழைத்ததே இல்லை. ஒருமுறை உடனே எனக்குத் தெரிவிக்க வேண்டிய ஒரு விபரத்தைக்கூட தொலைபேசியில் அழைத்துச் சொல்லாமல், தன் கல்லூரி முழுக்கச் சுற்றி, யார் அந்த வாரக் கடைசியில் என்னுடைய கல்லூரிக்கு வருகிறார்கள் என்று கண்டுபிடித்து அவனிடம் எனக்கான கடிதத்தைக் கொடுத்தனுப்பினான். அன்றே எனக்கு அது கிடைத்துவிட்டது. அதனால், அவனுக்குக் கடிதத்தை அனுப்பச் செலவுசெய்து ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய அவசியம்கூட இல்லை.

பட்டிதான் பேசினான். அந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் எடுக்கப்பட்ட நெஞ்சு எக்ஸ்ரே அவனுக்குக் காசநோய் இருக்கிறது என்று காட்டியதாகவும், அடிரோண்டாக்ஸ்-சில் இருக்கும் காசநோய் வந்த மருத்துவ மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையுடன் காசநோய் மையத்துக்குப் போவதாகவும் சொன்னான். சென்ற வார இறுதியிலிருந்து அவனுக்கு நான் ஏன் கடிதம் எழுதவில்லையென்றும், நமக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை, அதனால் வாரத்துக்கு ஒருமுறையாவது எனக்குக் கடிதம் எழுது என்றும், கிறிஸ்துமஸ் விடுமுறையில் தன்னை ஒருமுறையாவது பார்க்க வருமாறும் கூறினான்.

பட்டி இத்தனை மனக்குழப்பத்துடன் பேசி நான் கேட்டதில்லை. அவன் தன்னுடைய கச்சிதமான உடல் ஆரோக்கியத்தில் கர்வம் கொண்டிருந்தான். அவன் எப்போதும் என்னிடம், நான் மூக்கு அடைத்துக்கொண்டு மூச்சுவிட முடியாமல் தவிக்கும்போது இது மனத்தின் உணர்ச்சிகளால் உடலுக்கு ஏற்படும் நோயென்று சொல்வான். இது ஒரு மருத்துவனின் மிகையான மனோபாவம் என்று நினைத்தேன், இதற்குப் பதிலாக இவன் உளவியல் மருத்துவனாவதற்குப் படித்திருக்கலாம். ஆனால், இதை நான் நேரடியாக அவனிடம் சொல்லவில்லை.

நான் பட்டியிடம் அவனுக்குக் காசநோய் வந்ததற்கு வருந்துவதாகச் சொல்லிவிட்டு இனி கடிதம் எழுதுவேன் என்றும் உறுதியளித்தேன். ஆனால் போனை வைத்ததும் நான்  சற்றும் வருந்தவில்லை. நிம்மதியாக உணர்ந்தேன். இந்தக் காசநோய் என்பது அவன் அனைவரையும்விட சிறப்பாக வாழ்வதுபோல இரட்டை வேடமிட்டு வாழ்ந்ததற்காக அவனுக்குக் கிடைத்த தண்டனை என்று நினைத்தேன். மேலும் இது எனக்கும் எத்தனை சாதகமான விஷயம்; கல்லூரித் தோழிகள் யாரிடமும் பட்டியுடனான உறவு முறிந்துவிட்டதாகச் சொல்ல வேண்டியதில்லை. மேலும் டேட்டிங் போவதற்கான தேதிகளை மறுபடியும் தேட வேண்டியதுமில்லை.

நான் சிரமமேயின்றி மிகவும் எளிதாக அனைவரிடமும் பட்டிக்குக் காசநோய் வந்துவிட்டதென்றும், எங்களுக்கு ஏற்கெனவே முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்றும் கூறினேன். சனிக்கிழமை இரவுகளில் நான் படிக்கும்போது அவர்கள் என்னிடம் கனிவுடன் நடந்துகொண்டார்கள். ஏனென்றால், என்னுடைய உடைந்த இதயத்தை மறைக்க நான் வேலை செய்வதாகவும் நான் மிகவும் தைரியமாக இருப்பதாகவும் அவர்கள் நினைத்துக்கொண்டனர்.

*

சில்வியா பிளாத் எழுதிய “The Bell Jar” நாவலின் மொழியாக்கமான “சோதனைக் குடுவை “-யிலிருந்து ஒரு பகுதி. தமிழினி வெளியீடு.