“சுவாதியும் பரணியும் ஏகப்பொருத்தம்னு கல்யாணம் பண்ணி வச்சாங்க பாரு. அவங்கள சொல்லணும்.”

“கொஞ்சம் பொறுப்பா. பொறுமையா ட்ரை பண்ணிப் பாக்கலாம்.”

“நல்லா போய் சிக்கிருக்கு. மூடக்கூட முடியல. வந்த மொதல் நாளே வெனை. மொத்த ட்ரிப்போட மூடையும் காலி பண்ணியாச்சு.”

“எப்படி வெளில எடுக்கறது இப்போ. ஒன்னு கார்ட் போய்ருக்கும். இல்ல கார்ட் ரீட் பண்ற அந்த ஸ்லாட் போயிருக்கும். அந்த ஸ்லாட் போயிருந்தா போச்சு. மொத்த காமெராவுக்குமே வொலதான். கார்ட் போயிருந்தா ஒன்னும் இல்ல. புதுசு வாங்கிக்கலாம். ஆனா இங்க எங்க போய் கடையத் தேடுறது? கடைய தேடுறதுலயே நேரத்த கழிக்கவா இவ்ளோ செலவு பண்ணி வந்துருக்கோம். எதாயிருந்தாலும் மொதல்ல இத வெளில எடுத்தாகணுமே?”

“உன்ன எவன் அவளோ வேகமா சொருக சொன்னது? உன் கையில கொடுத்தேன் பாரு.. என்ன சொல்லணும். இந்த வேலயகூட சரியா செய்யத் தெரியல.”

“இங்க இப்படி நிக்க வச்சு கத்தாதப்பா. அங்க போய் அந்த ஆலமரத்தடில வச்சு என்னன்னு பாப்போம். கொஞ்சம் பொறுமையா இரு.”

“வெரல் இடுக்குல வச்சு இழுத்தும் நகத்தால நெம்பியும் எடுக்கலாம்ன்னு பாத்தா.. டைட்டா உள்ள மாட்டிருக்கு. பல்லால கடிச்சு இழுக்கலாம்ன்னு பாத்தா மூடி இடிக்குது. என்ன பண்றது இப்போ? ஏன் சொருகும் போது அது சரியா நொழையாதப்பயே தெரிலயா ஒனக்கு? அவளோ ஈசியா உள்ள போயிருக்காதே. அத்தோட இல்லாம நல்லா அழுத்தி வேற வச்சுருக்க. இப்படி பாதி உள்ள மாட்டியும் பாதி வெளில நீட்டியும் இருக்கு.”

“நான் அதை உள்ள போடும் போது பெருசா எதுவும் தெரியலப்பா. கொஞ்ச நேரம் அமைதியா இரு. நான் ட்ரை பண்ணிப் பாக்கறேன். ப்ளீஸ்.”

அவளும் தன் விரல்களை வைத்துப் பலமுறை முயன்று பார்த்தாள். எதுவும் சரிவரவில்லை. செல்லுலார் ஜெயில் வளாகத்தில் இருந்து வெளியே வந்தோம். அப்போதுதான் உள்நுழைந்திருந்தோம். இது அந்தமானில் எங்கள்  முதல் நாள். இன்று காலைதான் சென்னையில் ஏறி போர்ட் ப்ளேரின் வீர்சாவர்க்கர் விமான நிலையத்தில் இறங்கியிருந்தோம். இரண்டு மணி நேரப் பயணம். எங்கள் பயண ஷெட்யூல்படி இன்று மாலை போர்ட் ப்ளேரின் புகழ்பெற்ற இந்த செல்லுலார் ஜெயில்.

அருகில் இருந்தவர்களிடம் எவரிடமாவது குறடு போன்ற ஏதேனும் பொருள் இருக்குமா என்று கேட்டுப் பார்த்தோம். எவரிடமும் இருக்கவில்லை. சரி, குறடை வைத்து வெளியே எடுத்தால் மட்டும் எல்லாம் சரியாகிடுமா என்ன? அந்தக் குறடின் இழுவையில் காமெரா ஸ்லாட்டுக்கு எதுவும் பாதகம் வந்துவிடக்கூடாது. பூ மாதிரி வெளியே எடுக்கவேண்டும். அப்படி ஏதாவது ஆகிவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

இருட்டத் தொடங்கியிருந்தது. இங்கே மாலை நாலரை நாலே முக்காலுக்கெல்லாம் இருட்டத் தொடங்கிவிடுகிறது. இந்தியாவின் தலைநிலத்திற்கும் இதற்கும் சுமார் முக்கால் மணி நேர வித்தியாசம்.

அருகில் இருந்தவர்களிடம் ஏதேனும் காமெரா கடை இருக்குமா என்று கேட்டோம். ஆபீர் தீன் பஜார் செல்ல வேண்டும் என்றார்கள். இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவு. போய்விட்டு வரமுடியுமா? புது இடம் வேறு. பார்க்க வந்தது ஒன்று. பார்க்க நேர்வது மற்றொன்று. இவ்விடத்தை நாளையும் பார்த்துக்கொள்ள முடியாது. நாளை காலையே கப்பலில் வேறொரு தீவுக்குச் செல்ல வேண்டும். இதுபோன்ற பயணங்களில் எல்லாம் சரியாக இருக்க வேண்டும். இப்படி ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் அதை அப்படியே விட்டுவிட்டுத்தான் அடுத்ததற்குச் செல்ல நேரிடும். வேறு வழியில்லை.

மாலை ஐந்தரைக்கெல்லாம் இங்கே செல்லுலார் ஜெயில் வளாகத்தில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி ஆரம்பித்துவிடும். அதற்குப் பதிவுசெய்து வைத்திருந்தோம். அதனை விட்டுவிட்டும் போக முடியாது. ஒரு டிக்கெட்டின் விலையே அறுநூறு ரூபாய்.

அவளைப் பார்த்தேன். அவள் என்னைப் புரிந்துகொண்டது போல, “நான் போய்ட்டு வரேன். ஆட்டோல. நீ உள்ள போய் பாத்துட்டு இரு” என்றாள்.

“நீ என்ன பைத்தியமா? எங்க, என்னன்னு போய் கேப்ப? அவங்களே குத்துமதிப்பா சொல்றாங்க. தெரியாத எடம் வேற. எங்கன்னு போய் அலைவ?”

“இல்ல பரவால்ல. நான் போய் என்னன்னு பாத்துட்டு வரேன். எவ்ளோ நேரமானாலும் பரவால்ல.”

“சரி.. தொலை” என்று காமெராவை அவளிடம் தந்துவிட்டு நான் மட்டும் சாலையைக் கடந்து மறுபக்கம் சென்றேன்.

எதிர்சாரியில் நின்றுகொண்டு அவள் என்னதான் செய்கிறாள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் ஆட்டோவுக்காக கை காட்டிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது என் கண்களையும் அவள் பார்வை சந்தித்துச் சென்றது. அவளைக் கடந்துசென்ற எல்லா ஆட்டோக்களிலும் ஆளிருந்தார்கள்.

நான் மறுமுனையில் இருந்து கத்தினேன். “ஒன்னும் வேணாம், வா.”

அவளும் செய்கையால் ‘இல்லை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று காண்பித்தாள்.

“ப்ச்ச். ஒன்னும் வேணாம். வா.”

நான் “ப்ச்ச்” என்று சொன்னது அவளது காதுகளுக்கு எட்டியிருக்காது. ஆனால் அதை உச்சரிக்கும்போது இருக்கும் என் புருவ நெளிவுகளின் போக்கைத் தூரத்தில் இருந்தே உணர்ந்துகொள்ள அவளால் இயலும். அவள் சரியாகச் சாலையைக் கடந்து என் பக்கமாய் வந்தாள்.

“ஒன்னும் வேணாம், பாத்துக்கலாம்” என்றேன்.

“இல்லப்பா, நான் போய் என்னன்னு பாத்துட்டு வரேனே? என்னை விடேன்.”

“நான் சொல்றேன்ல? வா” என்றேன்.

இருவரும் மீண்டும் செல்லுலார் ஜெயிலின் வளாகத்திற்குள் நுழைந்தோம். செல்லுலார் ஜெயிலின் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது. அதுவரை வளாகத்தைச் சுற்றிவரலாம் என்று நடந்தோம். இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கென்றே முந்நூறு பேர் வரை அமரும்படியான இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இரண்டு மணி நேர நிகழ்ச்சி.

அதற்குப் பிறகு நான் அவளுடன் பேசவில்லை. அவளும் அப்படியே வந்துகொண்டிருந்தாள். நான் அவளை விட்டுச்செல்வது போலத் தாண்டித் தாண்டிச் சென்றேன். அகலக் காலடி எடுத்து வைத்து நடந்தேன். நான் அவளைவிட ஒரு அடி உயரமானவன். என் ஒற்றை காலடிக்கு அவள் இரண்டு காலடிகள் எடுத்து வைக்கவேண்டும். அப்போதுதான் அவளால் நிகர் செய்ய முடியும். நான் அகலக் காலடி எடுத்து வைத்தால், என் கூடவே வரவேண்டுமானால், அவளுக்கு என்னைத் துரத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அதனாலேயே அப்படி நடந்தேன்.

ஆனால் சில கணங்களிலேயே நான் நினைத்தது எவ்வளவு தவறு என்று தோன்றிவிட்டது. அவள் இயல்பாகவே திமுதிமுவென்று கால்களை ஆழப் பதித்து சரசரவென வேகமாக நடந்துசெல்வாள். வீட்டிற்குள்ளேயே அவள் நடை அப்படித்தான் இருக்கும். சாதாரணமாக நடந்துசெல்லும் போதே ஏதோ அவசரத்திற்குப் போவது போலத்தான் இருக்கும். அம்மா அடிக்கடி, “அவளுக்கு கால் பரபரக்கிறது” என்பாள்.

எங்கள் வீட்டில் அனைவரும் நிதானமானவர்கள். நான் எப்போதாவது அவளைப் ”பறக்காவட்டி” என்று சொல்லிச் சீண்டுவதுண்டு. பின்னர் விளையாட்டாக, “உன் கால்ல மட்டும் யாரு எப்பவுமே வெந்நீர் தண்ணிய ஊத்திட்டு வராங்க?” என்பேன். சில சமயங்களில், “உனக்கு நடக்கவே கூடாது. இந்த தரையே வேணாம். பறக்கணும் இல்லையா?” அவளைச் சரியான பறவை ஜென்மம் என்று எண்ணிக்கொள்வேன். கால் பரபரப்பதால் காரியமும் பரபரக்கும். அத்தனை சுறுசுறுப்பு. எந்த ஒரு வேலையையும் சீக்கிரமாக முடித்துவிடுவாள்.

ஒரு கட்டத்தில் நான் அவளைவிட்டு ஒழிந்து நடக்கலாம் என்று எண்ணினேன். முடிந்த வரை அவளோடு நடப்பதைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். அவள் முன் சென்றால் நான் பின்னால் தங்கி நின்றுவிடுவேன். அவள் திரும்பிப் பார்க்கும்போது பக்கவாட்டில் எதையோ, எவரைப் போலவோ பார்த்துக்கொண்டிருப்பேன். ஏதேனும் திருப்பம் இருந்தால் திரும்பி அங்கே நுழைந்துவிடுவேன். எனக்கு நான் மட்டும் நடக்க வேண்டும். அவள் தனியாக நடக்கட்டுமே? கூடவேதான் நடந்தாக வேண்டுமா? என்ன ஆகிவிடப் போகிறது இப்போது? எனக்கு இப்போது தேவைப்படும் அதே ஆசுவாசம் அவளுக்கும் வேண்டியிருக்கும்தானே?

செல்லுலார் ஜெயிலை முன் வாயிலில் இருந்து பார்த்தபோது “v” வடிவில் இருந்தது. அந்த v வடிவம் இணையும் இடத்தில் மூன்று அடுக்குகளிலான கண்காணிப்பு மாடம். இந்தக் கண்காணிப்பு மாடம் சக்கரத்தின் அச்சு போல. அதில் இருந்து ஆரக்கால்கள் மாதிரி அனைத்து திசைகளிலும் பிரிந்துசெல்லும் ஏழு பக்கவாட்டுக் கட்டிடங்கள். அதில் மூன்று அடுக்குகளிலாகச் சிற்றறைச் சிறைகள். முன்பு இப்படி மொத்தம் அறுநூற்று தொண்ணூற்றியாறு தனித்த அறைகள் இருந்ததாம். ஆனால் இதன் ஏழு ஆரக்கால்களில் நான்கு எப்போதோ கடல் சீற்றத்தினாலும் நிலநடுக்கத்தினாலும் இடிந்துவிட்டிருக்கின்றன. மிஞ்சிய மூன்று மட்டும் இப்போது இருக்கின்றன.

நாங்கள் அந்தக் கண்காணிப்பு மாடத்தை அடைந்திருந்தோம். அவளோடு சேர்ந்து படியேறப் போனவன், சட்டென்று ஓரிடத்தில் திரும்பி மறைந்து சென்றுவிட்டேன். தேடட்டும் அவள்! வேண்டுமென்றால் தேடி வரட்டும். இல்லை, வர வேண்டாம். நான் இப்படிச் செய்தது அவளுக்குப் புரிந்திருக்கும். என்னை அவள் புரிந்துகொள்வாள். அப்படி இல்லையென்றால்  மறுமுறை பார்க்கும்போது நான் உணரச் செய்துவிடுவேன்.

நான் முதல் அடுக்கில் ஏறி மூன்றாம் கட்டிடத்திற்குள் நுழைந்தேன். ஒவ்வொரு சிற்றறையாகச் சென்று உள்ளே கண்டுவிட்டு வந்தேன். நான் அவளிடம் இருந்து ஒளிந்துகொள்கிறேனா என்ன? இங்கு வந்திருப்பது இந்த ‘ஒளிஞ்சாம் புடிச்சு’ விளையாட்டுக்குத்தானா? வெளியே நடைபாதை போர்டிகோவில் நடந்து வந்தபோது அவள் என்னை எங்கிருந்தாவது கவனிக்கிறாளா என்று நோட்டமிட்டவாறு வந்தேன். அவள் அந்தக் கண்காணிப்பு மாடத்தில் இருந்தால் ஒழிய என்னைக் கண்டுபிடிக்க இயலாது. ஒருவேளை, நான் இருக்கும் இந்தக் கட்டிடத்திற்கு அடுத்து இருக்கும் அந்தக் கட்டிடத்தில் அவள் இருந்தால்? அங்கிருந்து என்னைப் பார்த்துவிடக்கூடுமோ? எதிரிலே சுற்றிலும் முற்றிலும் பார்த்தேன். இந்தப் பகுதியின் முகப்பு அடுத்தப் பகுதியின் பின்சுவரைப் பார்த்துக்கொண்டிருந்தது. முடியவே முடியாது என்று உறுதிப்படுத்திக்கொண்டு அவளைப் பற்றிய எண்ணங்களே இல்லாமல் நடந்தேன்.

அரை மணி நேரமாக அங்கேயே ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டிருந்தேன். சுட்ட செங்கற்கள் அடுக்கிக் கட்டப்பட்டச் சிறை. பர்மாவில் இருந்து கொண்டுவரப்பட்ட செங்கற்கள் என்று படித்திருந்தேன். எல்லா அறைகளிலும் செங்கல் புழுதி தரையில் குவிந்து கிடந்தது. சிறைக்குள் ஈரச்செம்மண்ணின் வீச்சம் அடித்தது. மண் இறுகி இறுகிக் கல் ஆகிறது. சுவராகிறது. சிறை ஆகிறது. அந்தச் சிறை இன்று உதிர்ந்து உதிர்ந்து பொருக்குமணல் குவியலாகித் தன் விடுதலையைத் தேடிக்கொள்கிறதோ?

நான் அப்போது நான்காம் கட்டிடத்தின் இரண்டாம் அடுக்கில் ஏதோ ஒரு சிற்றறைக்குள் நின்றிருந்தேன். அங்கிருந்து சிறையின் கம்பிக்கதவை விலக்கி வெளியே வர முற்பட்டபோது, சிறைக்கதவைப் பற்றிய வேறொரு கைகளைக் கண்டேன். எதிரிலே அவள். அவளும் என்னைக் கண்டு எவரோ ஒருவர் போலத் தன் கண்களை அகற்றிக்கொண்டாள். “ம்ம். அந்த இது இருக்கட்டும்” என்று உள்ளுக்குள் திளைத்தவாறு வெளியே சென்றேன்.

அவள் என்னைத் தேடவில்லை. இல்லை, தேடி அலுத்திருப்பாள். அவள் கண்களுக்கு முன் நான் எதிர்ப்படும் போது எப்போதும் உண்டாகும் அந்தச் சுபாவம் இல்லை. அது ஏதும் அற்றவளாய்த்தான் அவள் அந்தச் சிறையின் அறைக்குள் நுழைந்திருக்கிறாள். என்னால் நிச்சயமாகச் சொல்லிவிட முடியும் அவள் கண்களில் நான் அப்போது இல்லை என. அப்படியென்றால் இந்தச் சந்திப்பு தன்னிச்சையானதுதான். நானும் அவளும் நினைக்க முற்படாமலேயே நிகழ்ந்திருக்கிறது.

பின்னர் நிகழ்ச்சி ஆரம்பமாகும் அறிவிப்பு காதில் விழுந்தது. நான் எனக்கான இருக்கையில் அமர்ந்துகொண்டேன். சிறிது நேரம் கழித்துதான் அவள் வந்து அமர்ந்தாள். இரண்டு மணி நேரமாக ஓடியது அந்த நிகழ்ச்சி. காலாபாணி எனும் இந்தச் சிறை உருவாகிய கதை – கிழக்கிந்திய கம்பெனி – சுதந்திரப் போராட்ட காலகட்டம் – கைதிகளின் வருகை – டேவிட் பேரி – அவன்  சிறைக்கைதிகளுக்கு இழைத்த வன்கொடுமைகள் – சாவர்க்கரின் சிறைவாசம் – இரண்டாம் உலகப்போர் – ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு – நேதாஜி ஏற்றிய முதல் சுதந்திர இந்தியக் கொடி – இவையெல்லாம் ஒலிக்கோர்வையாக ஓடவிடப்பட்டன. ஒலியமைப்பு ஒரு திரைப்படத்தைப் போலவே உணர்ச்சிகரமாக இருந்தது. சிறைச்சாலையின் சுவர்களில் ஆங்காங்கே விதவிதமான வண்ண விளக்குகளைப் பொருத்தியிருந்தனர். காட்சிக்கு ஏற்றாற்போல் அவற்றிலிருந்து ஒளி பாய்ச்சப்பட்டுக்கொண்டிருந்தது. அத்தகைய ஒளியில் இருந்தே எங்கள் கண் முன் கடல் எழுந்தது. அதன் நீர்த்திரை அலைவுகள் எழுந்தன. மனம் ஒன்றிப் பார்த்திருந்தால் நல்ல அனுபவமாகவே இருந்திருக்கும். 

நிகழ்ச்சி முடிந்தவுடன் எழுந்து வெளியே வந்தோம். அவள் என்னைப் பார்த்து ஒருமுறை புன்னகைத்தாள். நான் கண்டுகொள்ளவில்லை. 

“இன்னும் கோவம் போலயா?” என்றாள்.

நான் “ப்ச்ச்” என்றேன்.

தங்கும் விடுதிக்கு எங்களை அழைத்துச் செல்வதற்கான கார் வந்திருந்தது. நாங்கள் வெளிவரும்போதே கார் டிரைவர் எங்களை அடையாளம் கண்டுகொண்டு ஏற்றிக்கொண்டார்.

ஏறி அமர்ந்தவுடன், இவளே ஹிந்தியில், “பாயிசாப், ஆப்கே காடிகா டூல் பாக்ஸ் மே கோயி இத்னா சோட்டா சா கட்டிங் பிளேயர் ஹை?“ என்றாள். 

“இஸ்கோ பாஹர் நிகல்னா ஹை” என்று காமெராவை எடுத்துக் காட்டி காண்பித்தாள். டிரைவர் “தேக்தா ஹூன் மேம்சாப்” என்றுவிட்டு கீழிறங்கித் தேடிப் பார்த்தார். “உசே நிகல்னேவாலி கட்டிங் பிளேயர் நஹி ஹை மேம்ஜி. இதர் சப் படே வாலாக்கா ஹை” என்றார். 

“ராஸ்தே மே கோயி பஜார் ஹை க்யா? உதர் கோயி காமிரா ஷாப் கி ஆஸ்பாஸ் காடி ரூக்கியே பையா. இஸ்கோ டீக் கர்ணா ஹை.”

அவர், “போகும்போது அந்தப் பஜார் வழியாகச் செல்லப்போவதில்லை. சுற்று. உங்களின் விடுதி கொஞ்சம் நகருக்கு வெளியே அமைந்துவிட்டது. ஒரு மணிநேரம் பயணம் செல்ல வேண்டும். மேலும் மணி இப்போதே எட்டை நெருங்கிவிட்டது. நான் உங்களை விடுதியில் விட்டுவிட்டு, வண்டியை ஒப்படைத்துவிட்டு, மீண்டும் 9.45க்குள் படகுத்துறைக்குச் சென்று அப்பால் இருக்கும் விம்பர்லி கூஞ்சில் உள்ள என் வீட்டிற்குச் செல்ல வேண்டும். மன்னிக்கவும்” என்றார். 

இவள், “சரி” என்று வண்டியை எடுக்கச் சொன்னாள். என்னுடைய எண்ணங்களை நான் சொற்களாக்காமல் சலிப்புடன் வெளியே பார்த்துக்கொண்டு வந்தேன். இதுவாவது ஒரு நகர்ப்புறம். நாளை ஹாவ்லாக் தீவு. அந்தத் தீவில் என்ன இருக்கப்போகிறது? இங்கேயே சரி செய்துகொண்டால்தான் உண்டு. பயணத்தின் நான்காம் நாள் பாராதங் தீவு. அங்கே அதன் அலையாத்திக் காடுகளில் உவர் மண்ணின் சுவாச வேர்களில் ஊறும் ஏதோ ஒரு வகை உண்ணிப்பூச்சியைக் கொத்தித் தின்ன வரும் ஆர்டிக் செங்கழுத்து நாரையின் தரை இறங்கலை எப்படிப் படமாக்க இயலும் இனி? நாரையின் அலகு சுவாச வேரின் கூர்முனையை நொடிக்கும் குறைவான பொழுதில் தீண்டி இரையை எடுத்துச்சென்றுவிடும். அதனைப் பார்க்கும் கண் நமக்கு வாய்த்திருக்கிறதா? நொடியை நான்காயிரம் கூறுகளாகப் பகுத்து இயங்கும் என் கருவிக்கு வாய்த்திருக்கிறது. அது பதிவுசெய்துவிடும். ஒரு குளிர்நிலப் பறவைக்கு வெப்பமண்டலக் காடு உணவைத் தருவிக்கிறது. கணத்துக்கும் குறைவான கால அளவில் அந்தத் தொடுகை நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. அந்தத் தொடுகையைப் பதிவுசெய்து வைத்துக்கொள்ளாமல் எப்படி?

அவள் வழியில் தென்பட்ட இரண்டு மூன்று காமெரா கடைகளைக் கண்டுகொண்டு வண்டியைச் சட்டென நிறுத்தச் சொல்லி, “பாஞ்ச் மினிட் பையா” என்றுவிட்டு சடசடவெனக் கீழிறங்கி விசாரித்துவிட்டு வந்தாள். எதுவும் பெரிதாகப் பலனளிக்கவில்லை.

வண்டியில் இருந்து இறங்கிய பின்னர், “மேம்ஜி மை ஏக் காம் கார்தா ஹூன். உசி தரஹ் சோட்டாசா கட்டிங் பிளேயர் மேரா கர் கே ஆஸ்பாஸ் கோயி மிலா தோ, கல் சுபஹ் லேகர் ஆத்தா ஹூன்” என்றார். 

இவள், “நாளைக்கும் எங்களை அழைக்க நீங்கள்தான் வருவீர்களா?” என்று கேட்டாள். அவர் “ஆம்” என்றார். “காலை எட்டு மணிக்கு உங்கள் கப்பல் போர்டிங். அதற்குள் தயாராகிவிடுங்கள்” என்றார். 

ஒருமுறை விடுதியின் ரிசப்ஷனில் விசாரித்துப் பார்த்தாள். அவர்களும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இரவு உணவுக்காக ஆளுக்கு நான்கு புல்காவும் நான்கு ரொட்டியும் தாலுமாக ஆர்டர் செய்துவிட்டு மேலே எங்கள் அறைக்குச் சென்றோம். 

கடைசியாக ஒருமுறை அவளிடம் இருந்து காமெராவை வாங்கி விரல் இடுக்கில் வைத்துப் பிடுங்கிப் பார்த்தேன். வலது கை கட்டை விரலின் நகக்கணுவில் கீறல்பட்டு மெலிதாக இரத்தம் கசிந்தது. காமெராவை ஓரமாக வைத்துவிட்டு விரலை வாயில் வைத்துச் சப்பிக்கொண்டேன்.

நான் குளித்து இரவுணவை முடித்துவிட்டு உறங்கப் போனேன். அவள் சாப்பிட்டாளா கொண்டாளா என்று பார்க்கவில்லை. அன்றைய நாளின் அயர்ச்சியில் நன்றாக உறங்கிப்போனேன். 

நள்ளிரவில் ஏதோ சலம்பல் ஒலிகேட்டு தொந்தரவு செய்தது. நான் தூக்கக் கலக்கத்தில் “ப்ச்ச், என்ன இது?” என்று போர்வையை விலக்கி இருட்டில் குன்றிய வெளிச்சத்தில் துழாவிப் பார்த்தேன். 

இரவு விளக்கை அணைத்து வைத்துவிட்டு என் அருகில் அமர்ந்து இவள்தான் அழுதுகொண்டிருக்கிறாள். அழுகையை முழுங்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த அவளிடம், “என்ன அங்க கணகணன்னு? தூக்கம் கெடுதுல்ல?”

அவள் பதில் பேசவில்லை.

“அழறியா? சரி அழு. ஆனா சத்தம் வராத மாதிரி அழு” என்றேன்.

*

மறுநாள் கப்பலில் சரியான நேரத்திற்குள்ளேயே ஏறிவிட்டிருந்தோம். போர்ட் பிளேரில் இருந்து ஹாவ்லாக் தீவுக்கு இரண்டு மணி நேரப் பயணம். காலை எழுந்தவுடனேயே நேற்று வந்த டிரைவர் போன் செய்தார். அவர் வேறுசில பயணிகளை அழைத்துக்கொண்டு பாராதங்கிற்கு விடிகாலையே கிளம்பிவிட்டதாகவும் எங்களை அழைத்துச்செல்வதற்கு வேறொரு நபர் வருவதாகவும் சொல்லியிருந்தார்.

ஃபீனிக்ஸ் பே என்னும் இடத்தில் இருந்து எங்கள் கப்பல் புறப்பட்டது. குளிர்சாதன இருக்கைகள் அமைந்த க்ரூஸ் வகை பயணியர் கப்பல். இருக்கையில் இருந்து எழுந்து வெளியே வந்து கொஞ்ச நேரம் கப்பலைச் சுற்றிப் பார்த்தோம். பிறகு அடித்தரை தளத்திற்கு இறங்கி கப்பலின் முன்முனைப் பகுதிக்கு அருகில் பயணிகள் நின்று பார்ப்பதற்காகப் போடப்பட்டிருந்த பகுதியில் கடலைப் பார்த்தவாறு நின்றுகொண்டோம். அருகில் வேறெவரும் இல்லை. கப்பல் கடலெனும் நீலத்திரையை இரு பக்கமாய்க் கிழித்துப் பகுத்துச் சென்றுகொண்டிருந்தது. பகுப்பின் ஒரு பக்கம் நான் இருந்தேன். மறுபக்கம் அவள் இருந்தாள். 

ஆர்ப்பரிக்கும் நீலம் நம் கண்களை நிறைக்கிறது. துளிக்கணம்கூட நிலைத்திட முடியாத பேரிருப்பு நம்மை நிலையிழக்கச் செய்கிறது. வெறும் கொந்தளிப்பு. கண்முன் எழுகின்ற ஒவ்வொரு அலையும் பித்து. மீறல். பசியாறச் சுழன்றெழும் நீல நிற நாக்கு. ஒன்று நம்மை அதற்கு முற்றிலுமாக அளிக்கச் செய்துவிடும் அல்லது அது நம்மை முழுவதுமாகக் கொண்டுவிடும். எதிலும் அது மிச்சம் வைக்காது. எப்படியோ அந்த முழுமையை அது அடைந்தே தீரும். நான் என்னை அதன் முன் தொலைத்துக்கொண்டிருந்தேன். “ம்” என்கிற ஒரு சொல்லை அது சொன்னால் போதும், நான் என்னை அதற்கு அளித்துவிடுவேன். கொஞ்சம் குனிந்து கையை நீட்டி கப்பலின் அடியை அறைந்துகொண்டிருந்த கடலலைகளில் இருந்து கொப்பளித்தெழும் வெண்நுரைகளை விரல்களில் வாங்கியவாறு இருந்தேன். அவள் என் பக்கமாக வந்து என் இன்னொரு கையைப் பிடித்துக்கொண்டாள். நான் தன்னிலை மீண்டு அவள் பிடியை உதறிவிட்டு மேலே ஏறி வந்து அமர்ந்துகொண்டேன்.

ஹாவ்லாக் தீவில் எங்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்கு வந்து பைகளையெல்லாம் வைத்துவிட்டு உணவருந்தி, எங்களின் அன்றைய நாளின் திட்டத்தைத் தொடங்கினோம். எங்கள் திட்டப்படி இன்று ஹாவ்லாக் தீவின் நீமோ பீச்சில் ஸ்கூபா டைவிங். முன்பே இருவரின் பெயர்களையும் எங்கள் டூர் ஆர்கனைசர் ஸ்கூபா டைவிங்கிற்காகப் பதிவுசெய்து வைத்திருந்தார். அன்றைய நாளுக்கு அது மட்டுமே. 

ஹாவ்லாக் தீவை இந்திய அரசு ஸ்வராஜ் த்வீப் என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறது. இங்குள்ள அனைத்து தீவுகளுக்குமே ஏதோ ஒரு மனிதனின் பெயர்தான் இருந்திருக்கிறது. ராஸ் ஐலேண்ட், ஹாவ்லாக் ஐலேண்ட், நீல் ஐலேண்ட் இப்படி.. அன்று இருந்த ஆங்கில அதிகாரிகளின் பெயர்தான் இடப்பட்டிருக்கிறது.

மனிதர்கள் அடிப்படையில் தனித்தனித் தீவுத்தன்மையைத்தானே கொண்டிருக்கிறார்கள்? இப்பெயர் சூட்டல் மறைமுகமாக அதைத்தான் சொல்ல வருகிறதோ? ஒருவேளை அதனாலோ? மனிதர்களிடம் புழங்கும் இந்த வகையான ‘பெயர்வழி’ அடையாளப்படுத்துதலே சுரண்டலின் முதல் படி. என்னைக் கேட்டால் ஒரு மனிதனுக்குப் பெயரிடுவதே பெரும் பாவம். அவனை அப்படியே விட்டுவிடவேண்டும். உயிரியலால் அவன் வெறும் மனிதன் மட்டும்தான். இல்லை, இல்லை, அதுவும்கூட வேண்டாம். அவன் இங்கு மற்றுமோர் உயிர் மட்டுமே.

இந்திய அரசு என்னதான் பெயர் மாற்றி வைத்திருந்தாலும் இன்னும் அந்தப் பழம்பெயர்தான் புழக்கத்தில் இருந்து வருகிறது. வெறும் அரசு ஆவணங்களில், அலுவலகப் பலகைகளில் மட்டும்தான் மாற்றி வைக்கப்பட்டிருக்கும் புதுப்பெயர்கள் இருக்கும் போல. இந்தியத் தலைநிலத்தின் வாசியான நம்மைப் போன்றவர்களுக்கு ஹாவ்லாக் தீவு, நீல் தீவு என்றால் அது கொடுக்கும் கிளர்ச்சி வேறு. ஏதோ ஒரு வெளிநாட்டுத் தீவைப் போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. அதுவொரு நல்ல விளம்பர உத்தி.

படகுத்துறைக்கு அருகிலேயே இருக்கிறது அந்தக் கடற்கரை. கடற்கரையின் ஓரங்களில் அலையாத்தி மரங்களின் வேர்ப் பின்னல்களையும் அவற்றின் புடைப்புகளையும் அரித்துச் சென்றுகொண்டிருந்த கடல் அலைகள். கரை முழுதும் வெண்மணல். அக்கடற்கரையே பிறை வடிவில் இருந்தது. தூரத்தில் கரையில் இருந்து கயிற்றால் கட்டப்பட்டிருந்த ஒரு மஞ்சள் நிறப் படகு, நீர் நெளிவில் அளாவிக்கொண்டிருந்தது. கரையில் இருந்து திரும்பிப் பார்த்தால் கரை ஓரங்களை முழுதுமாக ஆக்கிரமித்திருந்த தென்னை மரங்களின் வளைந்த ஆகிருதி. பின்னர்தான் உணர்ந்தேன். நாங்களே ஒரு தென்னந்தோப்பினைக் கடந்துதான் அழைத்து வரப்பட்டிருந்தோம்.

உச்சி ஏறி இருந்த ஒளியில் அத்தென்னைகளின் வளைந்த கருநிழல்கள் அந்த வெண்மணல் படுகையின் மேல் கரியத் திட்டுகளாக சரிந்து கிடந்தன. கடல் ஆங்காங்கே மயில் கழுத்து நீலமும் பச்சையுமாக மினுங்கிக்கொண்டிருந்தது. தாழ்வான பகுதியின் நீலம் சற்று மேடான வெண்திட்டுப் பகுதிகளில் பளிங்கு போலக் காட்சியளித்தது. 

இத்தகைய பளிங்குப் பகுதிதான் கடல் உயிரிகளைக் காண்பதற்கு ஏதுவாக அமைந்துவிடுகிறது. இதன் பளிங்குத்தன்மைக்குக் காரணம் அடியில் இருக்கும் பவளப்பாறைகளே. இங்கு அவை மிகுதியாக காணப்படுகின்றன. பவளப்பாறைகள் வெண்சுண்ணத்தினால் ஆனவை. அவை சூரிய ஒளியை வாங்கி கடலடியில் இருந்து அதனை நன்கு பிரதிபலிக்கின்றன. ஆகையினாலே இங்கு கடல் கண்ணாடி விரிப்பைப் போலக் காட்சியளிக்கிறது. என்ன வித்தியாசம் என்றால் இதுவொரு நெகிழும் கண்ணாடி விரிப்பு.

அவள் எங்கள் பதிவெண்ணை அங்கிருந்தவர்களிடம் காண்பித்தாள். அவர்கள் அதனைக் குறிப்பெடுத்துக்கொண்டனர். அவர்கள் அவளிடம் இந்தியில் எங்களோடு இரண்டு டைவர்ஸ் உடன் வருவார்கள் என்றனர். அவள், ‘வேண்டாம். ஒருவர் போதும். தனக்கு டீப் ஸீ டைவிங் நன்றாகத் தெரியும்’ என்று அவர்களிடம் சொன்னாள். கைப்பேசியில் வைத்திருந்த தனது ஸ்கூபா டைவிங் சான்றிதழின் நகலை அவர்களிடம் காண்பித்தாள். திருமணத்திற்கு முன்னர் வரை அவளும் அவளது சில நண்பர்களும் வார இறுதிக்கிழமைகளில் ஈசியாரில் உள்ள கோவளம் கடற்கரையில் “ஸீ டைவிங்” பயின்றிருப்பதாக என்னிடம் எப்போதோ சொல்லியிருக்கிறாள். 

அவர்கள், “இருந்தாலும் நாங்கள் உங்களைப் பரிசோதித்து விட்டுத்தான் சொல்வோம்” என்றனர். எங்கள் உடைமைகளை அவர்களிடத்தில் விட்டோம். நான் கடலுக்குள் மூழ்கி எட்டிக்கூட பார்த்தது இல்லை. எங்களோடு ஒருவர் உடன் வந்தார். பெங்காலிக்காரர். எங்களிடம் உடைந்த ஆங்கிலத்திலும் இந்தியிலும் மாறி மாறிப் பேசினார். அவரே எங்களுக்கு உடுப்புகளைத் தந்து மாற்றிக்கொள்ளச் சொன்னார். 

நீர் நுழைய முடியாத ரெக்ஸின் ஆடை. உடல் முழுதுக்கும் மேல் வேறு, கீழ் வேறு என்றில்லாமல் ஒரே அங்கிதான். அதை அணிந்துகொண்டு வந்து கடலில் இறங்கினோம். அவர் எங்களுக்கு நீந்தத் தேவையானவற்றைக் கட்டி நீரில் இழுத்து வந்துகொண்டிருந்தார்.

இடுப்பளவு ஆழத்தில் நின்றுகொண்டு அவர் எங்களுக்கு முறைமைகளை விளக்கினார். கடலுக்கு அடியில் செய்கை பாஷைதான். அதனால் சில செய்கைகளைக் கவனத்தில்கொள்ளச் சொன்னார். கை விரல்களை சூப்பர் என்பது போலக் காண்பித்தால் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கையின் ஐந்து விரல்களையும் விரித்து நீரில் அளைந்தவாறு காண்பித்தால் இக்கட்டில் இருப்பதாகவும் கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தால் மேலே செல்ல வேண்டும் என்றும் அதையே கீழ் நோக்கிக் காண்பித்தால் கீழே செல்லலாம் என்று பொருள்படும் என்றும் விளக்கினார்.

அவளைப் பார்த்தேன். தனக்கு எல்லாம் முன்பே தெரியும் என்பது போல ஒரு பாவனையைக் காண்பித்தாள். அவர் எங்களுக்கான ஆக்சிஜன் சிலிண்டரை அணிவித்தார். பின்பு கண்களுக்குள் நீர் உட்புக முடியாத காகுல் அணிவிக்கப்பட்டது. அதன் கண்ணாடித் தளத்தில் வெள்ளை படிந்து பார்வை மங்கித் தெரிந்தது. அதனைக் கழற்றிவிட்டு தான் கொண்டுவந்திருந்த ஏதோ ஒரு திரவத்தால் கண்ணாடிப் பரப்பைத் துடைத்துக் கொடுத்து அணியச் சொன்னார். அதனை நான் மாட்டிக்கொண்டபோது நாசியின் இரு பக்கங்களிலும் இறுக்கி அழுத்தியது. எனக்கு மூச்சடைத்தது. கடலுக்குள் மூக்கால் மூச்சுவிடக்கூடாது, வாயினால்தான் விட வேண்டும் என்று சொல்லி வாயைத் திறக்கச் சொன்னார். ரப்பரால் ஆன குழாய் ஒன்றை வாயில் இடுக்கினார். அதில் நன்றாகப் பற்களைப் பதித்துக்கொள்ள வேண்டும் என்றும் வாயை ஒரு கணமும் குவித்துவிடக்கூடாது என்றும் சொன்னார். மூச்சுவிட வேண்டும் என்றால் பற்களின் வழியே இதன் மூலம் முயலுங்கள் என்றார். எப்போதாவது உப்பு நீர் வேண்டுமென்றால் வாயைக் குவித்து அருந்திக்கொள்ளுங்கள் என்று சொல்லிச் சிரித்தார். பின்னர் பிளாஸ்டிக் துடுப்புகளைத் தந்து கால்களில் அணிந்துகொள்ளச் சொன்னார்.

“சரி, ஆழப் பகுதிக்குச் செல்லலாமா?” என்றார்.

அவள், “எத்தனை அடி ஆழம்?” எனக் கேட்டாள்.

“நாற்பதடி” என்றார் இவர்.

“நான் உங்களை ஒருமுறை பரிசோதிக்க வேண்டும்” என்று அவளிடம் சொல்லி, “உங்களால் இயலவில்லை என்றால் கரையில் இருந்து ஒரு ஆளைக் கூப்பிட்டுவிடுவேன்” என்று சிரித்தவாறு சொன்னார். 

என்னை நிற்கச் செய்துவிட்டு கொஞ்சம் ஆழப்பகுதிக்கு அவளை அழைத்துச் சென்றார். என்னால் இதனை அணிந்துகொண்டு மூச்சுவிட முடியாதது போலிருந்தது. பயம் அதிகரித்துக்கொண்டே வந்தது. நின்ற இடத்திலேயே முங்கிப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு பத்து நிமிடம் சென்றிருக்கும். எதிரில் அவர்கள் இருவரும் தலைப்பட்டார்கள். அவள் ஆழத்தில் அங்கேயே நின்றிருந்தாள். என்னை இவர் வந்து அழைத்துச் சென்றார். 

எனக்குப் பயமாக இருப்பதாகச் சொன்னேன். மூச்சுவிடச் சிரமமாக இருப்பதாகவும் கரையேறி விடுகிறேன் என்றும் சொன்னேன். “பயப்பட வேண்டாம். ஒருமுறை சென்று பார்த்தால் தெளிந்துவிடும்” என்றார். “உங்களால் முடியவில்லை என்றால் நான் சொல்லிக்கொடுத்த செய்கையைக் காட்டுங்கள். மேலே வந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் உள்ளே செல்லலாம். நான் உங்களைக் கூட்டிச்செல்கிறேன்” என்றார்.

மேலும், “உங்கள் மனைவி நன்றாக நீந்துகிறார். தனியாகச் சமாளித்துவிடுவார்” என்று சொன்னார். “அவர்களுக்கு உங்களைப் பற்றித்தான் கவலையே. உங்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார். கவலையை விடுங்கள், செல்லலாம்.” 

கடலுக்குள் ஆழ்ந்தோம். முதல் சில நாழிகைகளுக்கு அச்சம் பிடுங்கி எடுத்தது. பார்வை நன்றாகத் தெரிகிறதா? உடன் வருபவர் என்னைப் பிடித்துக்கொண்டிருக்கிறாரா? நீருக்கு மேல் என்றால் தொடுவுணர்வு இருக்கும். நீருக்குள் என்னால் எதனையும் உணர முடியவில்லை. பற்களை நன்றாக அந்த ரப்பர் கட்டைகளில் அழுத்திக் கடித்துக்கொண்டேன். பயத்தைப் போக்க அது ஒரு நல்ல பயிற்சியாகப்பட்டது. பிறகு வாயால் முடிந்த வரை மூச்சை வெளியேற்றினேன். ஆசுவாசமாக இருந்தது. தாடையை உயர்த்திப் பார்த்தபோது, என் மூச்சுக்காற்றின் குமிழ்கள் என் தலைக்கு மேலேறிச் சென்றுகொண்டிருப்பது தெரிந்தது. அவற்றில் சற்று பெரிய குமிழ் ஒன்றுக்குள் மெதுவாக நகர்ந்து சென்றுகொண்டிருந்த ஒரு கரிய நிற மின்னும் மீன் புகுந்துகொண்டது. அம்மீன் குமிழின் அக்காற்றிடையில் துடித்தபோது அந்தக் குமிழ் உடைந்து இன்னும் சில சிறிய குமிழ்களாக ஆகியது. நிலத்தில் நின்றிருந்தேன் என்றால் மயிர்க்கூச்செறிந்திருக்கும். அதற்கு மேலே சூரிய ஒளி கடலுக்குள் ஊடுருவும் வெண்ணொளி வட்டம் புலப்பட்டது. என்னிலிருந்த பயம் அகன்றிருந்தது. இனி என்னால் சமாளித்துவிட முடியும்.

என் உடன் வந்தவர் ‘எல்லாம் சரியா?’ என்று என் கண்முன் செய்கை காட்டினார். நானும் சரி என்றே செய்கையால் காண்பித்தேன். இவர் எங்கிருக்கிறார்? எனக்கு மேலேயா? எவருடைய கை இது? சரி, இவள் எங்கிருக்கிறாள்? இவளும் என் கூடவேதான் வருகிறாளா? சுற்றியும் பார்த்தேன். அவள் இருப்பது போலவே தெரியவில்லை. இன்னும் ஆழத்துக்குப் போகலாமா என்று கேட்டு மேலிருந்து கை வந்தது. நானும் என் கட்டை விரலைத் தாழ்த்திக் காண்பித்தேன். கடல் பரப்பின் மேல்கலங்கல்கள் ஓய்ந்து எல்லாம் துலங்கி வருவது தெரிந்தது. 

இது முற்றிலும் வேறொரு உலகம். வெறும் இளநீல வெளி. சுற்றியும் பவளப்பாறைகள். வண்ண வண்ண மீன்கள். இந்த இளநீல வெளி, வண்ணங்களை நமக்கு இன்னும் நெருக்கமாகக் காட்டித் தருகின்றனவா என்ன? அம்மீன்களுக்கு ஏன் அதன் ஓரங்களில் மட்டும் அத்தகைய மினுமினுப்பு? 

எதுவோ அங்கங்கு ஓரிடத்திலேயே ஒட்டி நின்றுகொண்டு ஆற்றங்கரையோர நாணல் காற்றில் அளாவுவது போல அளாவுகிறது – அந்த அளாவுதல் இங்கு நீரால் நிகழ்கிறது – என்ன உயிரி அது? இது தாவர இனத்தைச் சேர்ந்ததா? இல்லை விலங்கினத்தைச் சேர்ந்ததா?

அதன் ஆடும் தண்டுகள் இத்தனை மென்மையாகத் தெரிகிறதே! பார்க்கத்தான் அப்படி இருக்குமா? தொட்டுப் பார்த்தால்? அதன் தண்டின் நுனிகளில் மட்டும் தண்டின் நிறம் கூடி மெருகி ரேடியம் ஒளிபோலத் துளிர்த்துக்கொண்டு மினுக்கிறதே? அனைத்து தண்டுகளிலுமே அப்படி இருக்கிறது. எப்படி? எதற்காக? ஒருவேளை இது கடல் புல்லா? நிலத்தில் நீராகிய துளியைப் புல் தாங்கி நிற்பது போல, இது நீரில் ஒளியைத் தாங்கி நிற்கிறதா?

என் உடம்பில் வெறும் பார்வை மட்டுமே இயங்கிக்கொண்டிருப்பது போலப் பிரமை எழுந்தது. வந்து அதிக நேரம் ஆகியிருக்குமா? நீருக்குள் காலம் அதே மாதிரிதான் செயல்படுமா என்ன? அப்போதெனப் பார்த்து என்னைத் தாண்டி ஒரு உருவம் நீந்திக் கடந்துசென்றது. அது அவள்தானோ? வேறெவரும் இல்லைதானே? அவள்தான் என்று எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது?

அது அவள்தான். வலக்கை மணிக்கட்டில் சிவப்பு நிற நூல் கட்டியிருப்பது தெரிந்தது. எப்படி தனியாகவே நீந்துகிறாள் இவள்? சட்டென்று நீலவெளிக்குள் மறைந்துவிட்டாள்.

“இன்னும் ஆழம்?” என மேலிருந்து ஒரு கை வந்தது. நானும் “செல்வோம்” என்றேன். நான் வருவதைப் பார்த்து எதுவோ தன் கூட்டுக்குள் ஒடுங்கிக்கொண்டது. ஒரு உடைந்த மண்பானையைப் போல அதன் கூடு இருந்தது. பானையின் வாய்ப்பகுதியில் தன்னைத் திறந்து விரித்து வைத்திருந்தது, சலனம் ஏற்பட்டதும் தன் விரிப்பை உள்ளிழுத்துக்கொண்டது. இதே போன்று வேறு சிலவும் வெவ்வேறு வடிவங்களில் வெண்பாறை இடுக்குகளில் தென்பட்டன.

அவர் என்னை ஓரிடத்தில் நிறுத்திவைத்தார். என் கண்முன் நான் முன்பு கண்ட மாதிரியான நாணல் போல் ஓரிடத்திலேயே ஒட்டிக்கொண்டு அசைந்துகொண்டிருந்த அந்த உயிரினம். நீரோட்டத்தில் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது. மண் நிறத் தண்டுகள் நுனி சிவந்து ஊசலாடிக்கொண்டிருந்தன. அங்கேயே சில நேரம் இருந்தேன். அவற்றைச் சுற்றிப் பல்வேறு வண்ண மீன்கள் சென்றன. 

அனைத்து மீன்களும் அதன் அருகில் வந்து விலகி, அதன் மேல் படாமல் வளைவுப்பாதையில் சென்றுகொண்டிருந்தன. ஒரு கணம் அந்தப் பேயாட்டம்தான் அவற்றை விரட்டிவிடுகிறதோ என்று எண்ணிக்கொண்டேன்.

உறைந்துபோய் ஒரு கணம் நானே என் கையை நீட்டி ஆடிக்கொண்டிருந்த அந்தத் தண்டுகளைத் தொட முயன்றேன். ஏமாந்து போய்விட்டேன். நான் இன்னும் அதனை நெருங்கியிருக்கவில்லை. என் கைகள் அதன் மேல் படவில்லை. நீருக்குள் நம் வெளியும் விரிந்துவிடுகிறது போல.

மேலே இருந்தவர் நான் செய்வதைப் பார்த்துவிட்டு என்னைச் சற்று பின்னால் இழுத்தார். பின்னர் என் கண்முன் ‘கூடாது’ என்பது போலச் செய்கை செய்தார். என் இன்னொரு கையை எவரோ பிடித்து நிறுத்தியது போல இருந்தது. தடுத்து நிறுத்திய கையின் மணிக்கட்டில் சிவப்பு நிற நூல். அவளேதான்.

நாம் இன்னும் ஏன் இதே இடத்தில் இருக்கின்றோம் என்று எண்ணினேன். எப்படி இதனை அவரிடம் கேட்பது? அப்போது தூரத்தில் நீலப்பரப்பில் இருந்து ஆரஞ்சு நிறத்தினாலான இரு ஒளிப்பொட்டுகள் துலங்கி வருவது தெரிந்தது. அவை எங்களை நோக்கி வந்தன. ஆரஞ்சு நிறத்திலான இரு மீன்கள். அகன்ற வாயுடன் இருந்த சிறிய மீன்கள். உடலில் ஆங்காங்கே அந்த ஆரஞ்சு நிறத்தைக் குறுக்குவாட்டில் பிரித்தவாறு வெள்ளை நிறத் திட்டுகள் தென்பட்டன. அவை மற்ற மீன்களைப் போல வளைவுப்பாதையில் செல்லாமல் ஆடிக்கொண்டிருக்கும் அந்தத் தண்டுகளை நோக்கிச் சென்றன. இரண்டும் அந்த உயிரினத்தைச் சுற்றிச் சுற்றி வந்து அந்தத் தண்டுகளுக்குள் சென்று ஒளிந்துகொண்டன. அந்தத் தண்டுகளில் வாய் பதித்துக்கொண்டு வால் துடுப்பை மட்டும் அதிர்த்திக்கொண்டிருந்தன. அந்த மீன்கள் மீண்டும் மீண்டும் எனச் சுற்றி வந்து விளையாடிக்கொண்டிருந்தன. நான் அவை இரண்டும் சிக்கி மாட்டிக்கொண்டுவிடுமோ என்று பயந்தேன். மற்ற மீன்கள் விலகிப்போன போது இவை மட்டும் தைரியமாக எப்படி உள்ளே சென்றன? 

நான் என் அருகில் திரும்பிப் பார்த்தேன். அவளைக் காணவில்லை. நான் அந்த மீன்களையே நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு அசௌகரியம் என்னை மேலும் இருக்கவிடாமல் செய்தது. மூச்சிரைத்தது. நான் என் கைகளைக் கிடைமட்டமாக வைத்து நீரில் அளாவினேன். மேலும் கட்டை விரலை மேல் நோக்கிக் காண்பித்தேன். இரண்டு செய்கைகளையும் மாற்றி மாற்றி மேலே இருந்தவருக்கு காண்பித்துக்கொண்டிருந்தேன். என்னை அவர் ஒரே இழுவையில் மேல் நோக்கிக் கொண்டுசென்றார். நீரில் எனக்கு என் எடை தெரியவில்லை. கண் மூடித் திறப்பதற்குள் மேலே வந்துவிட்டிருந்தேன். 

மேலே வந்த பிறகு அவசர அவசரமாக என் காகுலையும் வாய் அடைப்பையும் நீக்கினேன். வாயை நன்றாகத் திறந்து மூச்சுவிட்டேன். எனக்கு இந்தக் காற்றுவெளிதான் தோதுபடும் போல. நீர்வெளி வேண்டவே வேண்டாம்.

அவர், “இப்போது எல்லாம் சரியாகிவிட்டதா?” என்றார். நான் “ஆம்” என்றேன். 

“எதனால் இப்படி ஆகிறது?”

“ஆழம் மிகுந்த இடமல்லவா? அதனால் காற்றழுத்த மாறுபாடு காரணமாக இருக்கலாம். ஒன்றும் கவலைப்படத் தேவையில்லை.”

“கொஞ்சம் நிதானித்துக்கொள்ளுங்கள்.”

நான் வான்வெளியைப் பார்த்தேன். பின்னர் அவரிடம், “மற்ற மீன்களால் செல்ல இயலாத போது இந்த ஆரஞ்சு மீன்களால் மட்டும் எப்படி அதற்கருகில் செல்ல முடிந்தது?” என்று கேட்டேன்.

“நீங்கள் நீமோ மீன்களைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லையா? Finding Nemo படம் பார்த்திருப்பீர்கள்தானே?” என்றார்.

நான் “இல்லை” என்றேன்.

“அப்படியா? ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் பார்த்த அந்த ஆரஞ்சு நிறத்தில் இருந்தவை.. நீமோ மீன்கள்” என்றார். 

நான் “அந்தத் தாவரம்?” என்றேன்.

“அது தாவரம் இல்லை. அதுவும் ஒரு விலங்குதான். Anemone என்று பெயர்”

“ஓ! நான் அதனைத் தாவரம் என்று எண்ணிவிட்டேன். அப்படியென்றால் நீரில் அளைந்துகொண்டிருந்த அவை என்ன?”

“அவை அந்த உயிரினத்தின் கொடுக்குகள். அவற்றின் நுனியில் விஷம் இருக்கும். நுனியில் மினுமினுத்துக்கொண்டிருந்ததே? அது அந்த விஷம்தான். நீங்கள்கூட கை வைக்கச் சென்றீர்களே? நான் தடுத்தது அதனால்தான். அது நம்மீது பட்டால் கொட்டியது போல் கடுத்து வலிக்கும். தன்னைத் தேடிவரும் மீன்களைக் கொட்டி தனக்குள் கொண்டுசென்று உண்டு செரித்துவிடும்.”

“ஆனால் அது அந்த ஆரஞ்சு மீன்களை மட்டும் ஏன் எதுவும் செய்யவில்லை?”

“அவை இரண்டுக்குள் ஏதோ ஒரு உடன்படிக்கை இருக்கிறது போல. கடல் அவற்றை அப்படித்தான் வைத்திருக்கிறது” என்றார். 

நான் எனக்குள்ளேயே எண்ணிப் பார்த்துக்கொண்டேன். “அந்த ஆரஞ்சு நீமோ மீன்கள் அந்த அனிமோன்களின் கொட்டுதலைத் தாங்கிக்கொள்கின்றனவா, இல்லை அந்த அனிமோன்கள் அவற்றைக் கொட்டுவதில்லையா?”

தூரத்தில் ஒரு தலை நீருக்குள்ளிருந்து தட்டுபட்டது. அவள்தான். என்னைக் கண்டுகொண்டுவிட்டாள். உள் நீச்சல் அடித்து என்னருகில் அடுத்தக் கணம் வந்துவிட்டாள். பறவை ஜென்மம் என்று இவளை எண்ணியிருந்தேன். அது தவறு. இவள் சரியான மீன் ஜென்மம்.

என்னிடம் வந்து, “என்ன ஆச்சு?” என்று பதற்றமாகக் கேட்டாள். நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள் உடன் வந்தவர் அவளிடம் நடந்ததை விவரிக்க ஆரம்பித்துவிட்டார். சரி அவரே சொல்லிவிடட்டும்.

“இப்போ ஒன்னும் இல்லையே? எல்லாம் நார்மல்தானே?” என்று என்னைப் பார்த்து தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள்.

அவரே, “ஒன்னும் கவலைப்படத் தேவையில்லை, மேம்சாப். சிந்தா மத் கரோ” என்று அவளைத் தேற்றினார்.

பின்னர் அவளிடம் நான் ‘Finding Nemo’ படத்தைப் பார்த்திருக்கவில்லை என்று சொல்லிவிட்டு “நீங்களாவது பார்த்திருக்கிறீர்கள்தானே?” என்று கேட்டார்.

அவள், “படம்தானே? பாத்துருக்கேன் பையா. காலேஜ் மே ஃப்ரெண்ட்ஸ் கே சாத்தி” என்றாள்.

அவருடன் பேசிக்கொண்டிருந்த போது, நான் இன்னும் இறுக்கம் களையாதிருப்பதை அவ்வப்போது ஓரக்கண்ணால் நோட்டமிட்டாள்.

பிறகு என்னிடம், “நாம இப்ப கிளம்புவோமா? இல்ல, இன்னும் கொஞ்ச நேரம் ஸ்பெண்ட் பண்ணலாமா?” என்றாள்.

நான் அதற்கு மட்டும் வாய் திறந்தேன். “நீ வேணும்னா போய் பாத்துட்டுவா. நான் இவரோட இங்க வெய்ட் பண்றேன்.”

அவள் “சரி” என்று தலையாட்டிவிட்டு மீண்டும் கடலுக்குள் ஆழ்ந்தாள்.

டைவிங் முடித்துவிட்டு விடுதிக்குத் திரும்பும் போது, விடுதி நடக்கும் தூரத்தில்தான் இருக்கிறது என்று அறிந்துகொண்டோம். வந்தபோது பார்த்திருந்த அந்தத் தென்னந்தோப்புக்கு இடைப்பட்ட ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தோம்.

“இன்னும் கோவம் போகலையா?”

நான், “இல்ல, அது பத்தி பேசாத. ஏதாவது சொல்றதுன்னா சொல்லு, கேட்டுட்டு வரேன். என்னை எதுவும் பேசச் சொல்லி நச்சரிக்காத” என்றேன்.

அவள், “சரி” என்றுவிட்டு, “நீ எந்த மூட்ல இப்போ இருக்கன்னு தெரியல. ஆனா இதை நான் சொல்லிடறேன். I wanted to keep this as a pleasant surprise. But I could not.”

நான் அலட்சியமாக என்ன என்பது போல் பார்த்தேன். அவள் வலது கையின் உள்ளங்கையைத் திறந்து காண்பித்தாள். உள்ளே சின்னஞ்சிறிய சிப்பி ஓடு இருந்தது.

“நம்ம செகண்ட் அன்னிவெர்சரி ஃகிப்டா இதை நான் உனக்கு கொடுக்கறேன். நீ போன வருஷம் நாம உன் சொந்த ஊர் போயிருந்தப்போ அங்க வச்சு கிராமத்து கொளத்துலேந்து நீயே உன் கையால ஒரு வெள்ளை அல்லிப்பூவை தண்டோட பறிச்சுட்டு வந்து என் கையில தந்தியே?”

நான் அதனைக் கேட்டுக்கொள்ளப் பொறுக்காதவனாய், “இப்போ அந்த கதையெல்லாம் எதுக்கு? நான் இப்போ இதை வாங்கிக்கணும் அவ்ளோதானே? சரி, கொடு” என்றேன். அதனை வாங்கி ஒழுங்காகக்கூடப் பார்க்காமல் என் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு அவள் கண்களில் கண்ணீர் துளிர்ப்பதைக் கண்டும் காணாதவாறு நடந்தேன்.

அன்றைய இரவில் முழிப்பு தட்டி விழித்துக்கொண்டேன். அருகில் இருந்த நைட் லாம்பைப் போட்டேன். நெஞ்சுப் பகுதியில் ஏதோ உறுத்துவது போல் இருந்தது. சட்டைப்பையில் நான் போட்டிருந்த அந்தச் சிப்பி ஓடுதான். 

அதனை வெளியே எடுத்துப் பார்த்தேன். சின்னஞ்சிறியது. மேல் கீழாக இரு ஓடுகள். பின்னால் இரு ஓடுகளுக்கும் ஒரு சிறு இணைவு. வெண்ணிறத்தில் வரி வரியாக மடிந்து இணைவுப் பகுதியில் பொன்னிறத்தில் இருந்தது. அதன் வாய்ப்பகுதி இரு பக்கமும் அகன்று திறந்திருந்தது. மூடினால் அழகாகப் பொருந்திப் போகும் விளிம்புகொண்டிருந்தது.  

நான் எழுந்து தலையணையை மடியில் வைத்து சாய்ந்து அமர்ந்துகொண்டேன். இவள் அருகில் நன்றாக ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். 

நான் அந்தச் சிப்பியை என் உள்ளங்கையில் வைத்து மென்மையாக வருடிப் பார்த்தேன். பின்னர் அதன் வாயை மூடச்செய்யலாம் என்று எண்ணி இரு ஓடுகளையும் மேலும் கீழுமாக விரலிடுக்கில் வைத்து மெலிதாக அழுத்திப் பார்த்தேன். நல்ல திடமாக இருந்தது. முயற்சி கைகூடவில்லை. ஒருவேளை சிப்பியை உள்ளிருந்தபடிதான் மூட முடியுமோ என்னவோ? அப்படியென்றால் அதற்குள் அந்த உயிரி இருக்க வேண்டும். அதற்கு உயிர் இருக்க வேண்டும். அவற்றோடு அந்த உயிரிக்கு மூடத்தோன்ற வேண்டும்.

மீண்டும் ஒரு முறை முயன்று பார்த்தேன். பலனில்லை. மீண்டும் ஒரு முறை, மீண்டும் ஒரு முறை. சுருக்கென்று ஏறியது. இனி அதனை அப்படியே அழுத்தி உடைத்துவிட்டாலும்கூட நன்றாகத்தான் இருக்கும். திடமான ஒரு அடித்தளத்தில் வைத்து முயன்று பார்க்க வேண்டும் என்றெண்ணி அருகில் இருந்த நைட் லாம்ப் டேபிளில் அதனை வைத்து என் கட்டை விரலால் என் மொத்த எடையையும் அதன் மேல் செலுத்தி அழுத்தினேன். சட்டென எகிறிப் பறந்த அது, நான் இன்று காலை திறந்து வைத்துவிட்டுச் சென்றிருந்த என் காமிராவின் அடிப்பகுதியில் துருத்திக்கொண்டு நின்றிருந்த அந்த மெமரி கார்டை வாய்மூடிக் கவ்விப் பிடித்திருந்தது.

3 comments

Kumaarananthan March 14, 2022 - 12:05 pm

நிறைவான கதை இருவருக்குமான வேறுபாடு அதனால் உண்டாகும் விலகல் மனநிலை மற்றும் காதல் மனநிலை ஆண் பெண் மன செயல்பாடு போன்ற பல விஷயங்களை அசைபோட வைக்கிறது வாழ்த்துக்கள்

கலியபெருமாள் March 29, 2022 - 4:39 pm

மொழியும் நடையும் அருமை , சொல்ல வந்ததையும் , தகவல்களையும் சுருக்கமாகவும் மனதில் பதியும் விதமாகவும் இருந்தது நன்றி

நடை முறையில் சாத்தியமான பின்னிணைப்பு

Krishnamurthi Balaji April 13, 2022 - 8:32 pm

சிறப்பான எழுத்து. நல்ல கதை. இருவருக்கும் ஆன ஊடல்கள் மற்றும் நிகழ்வுகள் மிக இயல்பாக உள்ளன. இயல்பான நடை. சரளமான மொழி. வாசிப்பவர்களை அந்த இடத்திற்கே கொண்டு செல்லுகிறது. அதுவும் தண்ணீருக்குள் உள்ள உலகம், நீந்தும் செயலுக்கான பாதுகாப்பு, இயல்பாக உண்டாகக்கூடிய பயம் போன்றவை மிக அழகாக விளக்கப் பட்டுள்ளன. மிகவும் ரசித்துப் படித்தேன்.

Comments are closed.