கடந்த நான்கைந்து தினங்களாக வானிலை அறிவிப்புகளையும் அது சார்ந்த கணினி முன்மாதிரிகளையும் உற்று நோக்கிக்கொண்டிருந்தேன். வரும் மார்ச் (2022) ஒன்றாம் தேதி தொடங்கி பதினெட்டாம் தேதிவரை இடையில் மூன்று நாட்கள் மட்டும் இடைவெளி விட்டு, தமிழகத்தின் பல இடங்களில் மழைக்கூறு இருப்பதாகக் கணிப்புகள் காட்டின. எனக்கு உடனடியாகச் சத்திரப்பட்டி சந்திரபோஸ் அண்ணனை அழைக்க வேண்டுமெனத் தோன்றியது. ஏனெனில் போன வருடம் காய்ந்தும் கெட்டவர், பெய்தும் கெட்டவர். முன்னோர்கள் அவருக்குக் கடத்திய, தன்னுடைய பாரம்பரிய அறிவை முன்னிறுத்தி மழைப் பட்டத்தை எதிர்நோக்கி தன்னுடைய வானம் பார்த்த, மானாவாரி பூமியில் முதலில் மக்காச்சோளம் போட்டார்.
கணுக்கால் உயரத்திற்கு விளைந்து நின்றபோது, எதிர்பார்த்த மழை பொய்த்தது. நாணலைப் போல இளைத்துச் சிறுத்த சோளப் பயிர்களின் தலைவாடுவதை அருகில் இருந்து பார்த்தேன். மூன்று மாதக் குழந்தையொன்று சவளைப் பிள்ளையாய் உருமாறி, அது தன் அந்திமத்தைக் கண்களில் காட்டுவதைப் போல உணர்ந்தேன். சோளப் பயிரின் உயிரடங்கி அதன் ஒளி மங்குவதைக் காணச் சகிக்கவில்லை. மழையில்லாததால் காயத் தொடங்கிய சோளத் தோட்டத்தினுள் இறுதியாய் அவர் தனது மாடுகளை மேயவிட்டார். சண்டித்தனம் செய்யும் காங்கேயம் மாடு, குழந்தையொன்று பிஸ்கெட்டைக் கடிப்பதைப் போல அவக் அவக்கென பச்சையம் உதிர்ந்த இலைகளை மென்றுகொண்டிருந்தது. தனலட்சுமி என்கிற பெயரையுடைய அது தன்னளவில் மகிழ்ச்சியாய் உணர்ந்திருக்கக் கூடும்.
“மாடு மேய்றதுக்கு ஒழைச்சமேரிக்கு ஆயிப்போச்சு. எனக்கு மட்டும் சொளையா விதை, பூச்சி மருந்து, களைமருந்து, உரம்ணு போட்ட வகையில ஒன்னேகால் லட்சம் ரூபாய் பஸ்பமாயிடுச்சு. இந்த பகுதில இதுமாரி பலகோடி ரூபா நஷ்டம் ஆயிடுச்சு. ஏதோ மாட்டுக்கு பத்துநாள் தீவனம் கிடைச்சதுங்கற அளவில சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்” என்றார் கண்களில் மஞ்சள் படலத்தைத் தேக்கி. தனலட்சுமி அவர் பேசியதை ஓரக்கண்ணால் உற்றுநோக்கியதைப் போலத் தோன்றியது எனக்கு.
அவர் சொன்னபிறகு வண்டியை எடுத்துக்கொண்டு அந்தப் பகுதி முழுவதையும் சுற்றி வந்தேன். நீரின்றி விதைத்தவைகள் அத்தனையும் காய்ந்து சருகாய்க் காற்றிலாடிக்கொண்டிருந்தன. மறுபடி மழைக்கூறு தொடங்கியது. அந்த முறை சோளத்தை எடுத்துவிட்டு சூரியகாந்தி போட்டார் சந்திரபோஸ் அண்ணன். விடாது பெய்த பெருமழையால் சூரியகாந்தியும் அவரை நோக்கி மலர்ந்து சிரிக்கவில்லை. அழுகிப்போய் தலைதொங்கிய சூரியகாந்திப் பூக்கள் அந்தப் பகுதி முழுவதும் நின்றிருந்ததையும் கனத்த இதயத்தோடு இன்னொரு முறை சுற்றிப் பார்த்தேன். அந்தப் பகுதி நிலங்களைச் சேர்ந்த அத்தனை சந்திரபோஸ்களும் என் கண்முன்னே நிழலாடினர் அப்போது.
இந்தமுறை சந்திரபோஸிற்கு சோளம் நன்றாக விளைந்துவிட்டது. இப்போது அதை அறுவடை செய்யும் முனைப்பிலும் இருக்கிறார். அதனால்தான் மார்ச்சில் வரப்போகும் மழை குறித்த செய்தியை அவசரமாக அவரிடம் கடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். செய்தியைக் கேட்டவுடன் உடனடியாகவே திகைத்துப் போனார். “என்னங்க காலக் கொடுமையா இருக்கு. மச்சைப் பிளக்கிற மாசிப் பனிம்பாங்க. பங்குனி மழை பாழ்மழைன்னு சொல்வாங்க. இங்க எல்லாமே இப்ப மாறிப் போயிடுச்சே” என்றார் கலக்கமாக.
இதே மாதிரி சில வருடங்களுக்கு முன்பு ஒரு பங்குனி மாதத்தில் தோட்டத்துச் சாலை வீட்டின் வெளியே, விடாது பெய்துகொண்டிருந்த மழைக் குளிருக்கு இதமாய்க் கம்பளியைப் போர்த்திக்கொண்டு நான் தூங்கியதையும், அப்போது வந்து நின்று அவர் இதே வார்த்தைகளை என்னிடம் சொன்னதையும் மறுபடியும் ஞாபகப்படுத்தினேன். அவரிடம் சொல்வதற்கு அச்சமயத்தில் வார்த்தைகளே இல்லை. தொலைபேசியின் அந்தப் பக்கத்தில் நெடிய மௌனம் ஒன்று மட்டும் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. கையறு நிலையில் வீசிய கனத்த அகக்காற்று அது.
இனிமேல் சொல்லப்போவதும்கூட காற்றின் கதைதான். பஞ்சபூதங்களில் என்னளவில் காற்றிற்கே முதலிடம் தருவேன். வானையும் கடலையும் தொட்டுத் தடவிச்செல்லும் மூச்சுக்காற்றுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. எல்லாவற்றையும் எனப் பொத்தாம் பொதுவாய்ச் சொல்வதைவிட, மழையைத் தீர்மானிக்கிறது என நேரிடையாகவே குறிப்பிட்டுவிடலாம். கடலில் காற்று ஏதாவதொரு சித்து விளையாட்டினை மேற்கொள்ள வேண்டும், அப்போதுதான் நிலத்திற்கு மழை என்பது பாலபாடம். கடலில் ஒன்றுமே நடக்கவில்லையெனில், நிலக்காற்று என்பது வெற்றுக்காற்றுதான். அது வெற்றுக்காற்றா, மழைக்குறி கொண்ட காற்றா என்பதை ஒருகாலத்தில் அட்சர சுத்தமாய்க் கணித்தவர்கள் இப்போது எங்கே போயினர்? ஒரே வடகிழக்குக் காற்றுப் பருவம்தான். ஆனால் எதிரெதிர் முனையில் நின்று பெய்தும் காய்ந்தும் கெடுத்தது எப்படி, ஏனிந்த மாற்றம், பாரம்பரிய அறிவு பொய்த்துப் போனது எப்படி என அதுகுறித்து பலவாறு சுற்றிச் சுற்றி, பிரண்டைக் கொடியைப் போலச் சிந்தித்துப் பார்த்தேன்.
முதலில் நாம் வாழும் நிலத்தைப் போர்த்தி பசுமைகொள்ளச் செய்யும் மழை என்கிற மாமருந்திற்கு தமிழ் வாழ்வு தற்சமயம் கொடுத்திருக்கிற இடம் என்ன என்பதில் இருந்து அந்தக் கொடியைப் படரவிட்டேன். குறிப்பில் இருக்கும் சங்க இலக்கிய காலம் தொட்டு மழையை எவ்வாறெல்லாம் கொண்டாடியிருக்கிறார்கள்? அதற்குத்தான் எத்தனையெத்தனை பெயர்கள்? எத்தனையெத்தனை விவரணைகள்? ஆனால் இன்றைய அன்றாட வாழ்வு அவை அத்தனையையும் இப்போது நினைவின் குப்பை மேட்டில் ஒரு சாணியைப் போல அள்ளித் தூக்கி எறிந்துவிட்டது.
சமீபத்தில் மலையாளப் படமொன்றைப் பார்த்தேன். வெளிப்புற அரங்கில் திருமணம் செய்யக் காத்திருக்கிறது ஒரு இணை. அப்போது மழை வலுத்துப் பெய்கிறது. “அதெப்படி ஏப்ரலில் இப்படி மழை பெய்கிறது?” எனக் கேட்கிறது ஒருகுரல். “ஏதோ வங்கக் கடல்ல ஒரு சிஸ்டம் ஒன்று உருவாகியிருக்காம். அதான் மழை” என பதில் வசனம் வருகிறது. சாதாரண காட்சிதான் அது. ஆனாலும் மழை குறித்த கூருணர்வு அக்காட்சியில் மிதந்த வசனத்தில் இருப்பதைக் கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஒருநிலம் எவ்வாறு இயற்கையோடு இன்னமும் தன்னை ஒட்டி வைத்திருக்கிறது என்பதற்கான கட்டியங் கூறலாகவும் இருந்தது.
பதிலுக்கு இன்னொரு ஒப்பீட்டையும் சேர்த்துச் சொல்கிறேன். நாவலொன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். அம்மனுக்கு ஆடிமாசக் கூழ் ஊற்றுகிறார்கள். அப்போது விடாமல் காலையில் இருந்து மாலைவரை அடித்துப் பெய்கிறது மழை என ஒரு வரி ஊடே வருகிறது. தலையில் அடித்துக்கொள்ளலாம் போலவிருந்தது எனக்கு. ஆடி மாதத்தில் இப்படி அடித்துப் பெய்யுமா மழை என உள்ளுக்குள் கேள்வி ஓடியபோதே, ஏன் பங்குனியில் பெய்யும் போது, ஆடியில் பெய்யாதா என்கிற பதில் கேள்வியும் கூடவே எழுந்தது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், மழை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த அத்தனை அறிவையும் தற்காலம் இழந்துவிட்டது. ஒருகாலம் வரை தற்காலத்தில் அடக்கமான நானுமே அதற்குச் சாட்சியாகவும் இருந்தேன்.
எப்போதிருந்து நான் மழையைக் கவனிக்கத் தொடங்கினேன்? எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. பசுபதி அத்தையுடன் கோவில்பட்டி ராமசாமித் தியேட்டரில் மாவீரன் படம் பார்க்கக் குடும்பத்தோடு மதியக் காட்சிக்குப் போயிருந்தோம். மாலை வெளியே வந்தபோது, என்னுடைய இடுப்பு வரை மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதுதான் நான் பார்த்த முதல் மழைவெள்ளம். அதற்கடுத்து திருநெல்வேலி விளையாட்டு விடுதியில் படித்துக்கொண்டிருந்த போது மாலையில் மழை வந்துவிடக்கூடாது என வேண்டிக்கொண்டே வந்தது ஞாபகத்தில் இருக்கிறது. ஏனெனில் மழை வந்தால் மைதானத்தில் விளையாட முடியாது, வேறு உடற்பயிற்சிகள் செய்யச் சொல்லி வலியுறுத்தி விடுவார்கள். எங்களது வேண்டுதல்களை மீறி அடித்துப் பெய்த மழையை அண்ணா விளையாட்டரங்க படிக்கட்டுகளில் அமர்ந்து வெறுப்போடு நோக்கியிருக்கிறேன்.
கோவில்பட்டி சாலையில் சாரலடிக்கையில், “என்ன நைனா குத்தாலத்துல சீசன் தொடங்கிருச்சு போல. நைட்டு கடையைச் சாத்திட்டுப் போலாமா” என லோடுமேன் அண்ணன்கள் குசுகுசுப்பாய்ப் பேசிக்கொள்கிற காட்சி இப்போதும் நினைவில் எழுகிறது. அதேபோல் சென்னைக் கிறித்துவக் கல்லூரி வளாகத்தினுள் முதன்முதலாக அடியெடுத்து வைத்தபோது, அந்தக் காலை நேரத்தில் மரங்களை எல்லாம் இருள்மூடி அடர்மழை பெய்துகொண்டிருந்தது. கந்தக பூமியில் இருந்து வந்தவனுக்கு அதனாலேயே அந்த வளாகம் அவ்வளவு பிடித்தும் போனது. அதற்கடுத்து வேலை நிமித்தமாகத் தெருத் தெருவாகச் சுற்றி அலைந்த போது நடுச்சாலையில் நனைந்துகொண்டே அழுதது நினைவில் தங்கியிருக்கிறது உப்புக் கரிப்பாய்.
இந்தியா டுடேவில் வேலைபார்த்த போது கடலூர் மழை வெள்ளத்தை நேரில் பார்த்த அனுபவத்தை வாழ்நாளில் மறக்கவே முடியாது. ஊழிக்காலம் என்றால் இவ்வாறுதான் அமையுமோ என்றுகூட எண்ணத் தோன்றியது. எனக்கு முன்னே கடல் போல் நீர் எழுந்து ஓடிக்கொண்டிருந்தது. நீருக்கடியில் ஒரு கிராமம் மூழ்கியிருப்பதாகச் சொன்னார் உடனிருந்தவர். அப்படியே அதற்குள் குதித்தால் என்ன என ஒரு மின்னல்வெட்டு எண்ணமும் வந்துபோனது அப்போது. சென்னையைப் புரட்டிப்போட்ட டிசம்பர் மழை வெள்ளத்தில் படகொன்றில் ஏறிப்போன வரைக்கும்தான் மழைக்காட்சிகள் என் மனதுள் பதிந்திருக்கின்றன.
‘ஆனால் அவையெல்லாம் எந்த மாதத்தில் பெய்தவை? தமிழ் நிலத்தைச் சுற்றிப் படர்ந்திருக்கும் முக்கடலில், எக்கடல் பிரசவித்த மழையது? பருவ மழையா? காற்றுச் சுழற்சி மழையா? தாழ்வுநிலை மழையா? புயல் சின்ன மழையா? வெப்பச் சலன மழையா?’ என எந்த வேறுபாடுகளும் எனக்கு உரைத்ததே இல்லை. அதைவிட முக்கியமானது என்னவெனில், இப்படியெல்லாம் வரையறைகள் உண்டெனக் கிஞ்சித்தும் தெரியாதெனக்கு. வானில் இருந்து பொத்துக்கொண்டு ஊற்றுவது எல்லாமே ஒரே மழை என்கிற எளிமையான புரிதலே இருந்தது எனக்கு. இயற்கை சார்ந்த வாழ்வியலுக்கு நுழைந்த பின்னரே மேகமூட்டம் மெதுவாய் விலகியது எனக்குள்.
நான் வாழ்கிற நிலத்தை உற்றுப் பார்க்கத் தொடங்கிய பிறகே வானும் கடலும் எனக்குப் படிப்படியாகப் பிடிபட ஆரம்பித்தன. வானை நோக்கி வாய்பிளந்து காத்திருக்கிற ஒரு பச்சையிலையாய் உற்றுநோக்கிக் காத்திருக்கையில், இலையெல்லாம் உதிர்ந்து நிற்கிற வேம்பு துளிர்க்க, தவறாமல் பெய்துவிடும் ஒருமழையைப் போல என் அகம் அச்செயலோடு ஒட்டி உறவாடத் தொடங்கியது. அச்சுழற்சியில் நானுமே ஒரு மழையாய் மாறியிருந்தேன். மழைப்பேச்சு என ஒன்று இல்லாத நாளே இல்லை என எப்படி நான் மாறிப்போனேன் என்பதில் எனக்கே இன்னமும் வியப்புண்டு.
வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் மூன்றும் என் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிப்போனதே, இன்னொரு கை உருட்டிய சோழிகளின் விளையாட்டே. மூன்றிற்குள்ளும் சுழலும் கடல் சார்ந்த காற்றின் போக்கை, வானியல் கணிப்புகளின் வழியாகக் கூர்ந்து நோக்கத் தொடங்கினேன். நாற்திசையில் இருந்தும் மாறி மாறி அடிக்கிற காற்று எப்படியான வித்தைகளைக் காட்டுகிறது என்பதைப் பள்ளி மட்டத்தில் இருந்தே பாடமாகச் சொல்லித்தர வேண்டும் என்கிற கருத்தும் எனக்குள் வலுப்பட்டது. இப்போது தனியார் வானிலை அறிஞர்கள் பலர் இதுகுறித்து விரிவாய் இணையத்தில் வகுப்பெடுக்கிறார்கள். நித்தமும் விவசாயிகளுக்காக இதை ஒரு சேவையைப் போலச் செய்கிறவர்களும் இருக்கிறார்கள். தகடூர் ந.செல்வக்குமார் போன்றவர்கள் தன்னலம் கருதாமல் இவ்வானியல் அறிவுப்புச் சேவையைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்கின்றனர். அவர்கள் வழியாக நுனிப்புல் மேய்ந்ததை இங்கே சொல்கிறேன், அவ்வளவே.
பொதுவாகவே தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழை மட்டுமே மழை ஆதாரம். தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரை முக்கடலும் சங்கமிக்கிற கன்னியாகுமரி மற்றும் கேரளாவை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே பெய்யும். தமிழகத்தையும் மேற்கே உள்ள அரபிக்கடலையும் குறுக்கே ஊடாக மேற்குத் தொடர்ச்சி மலை பிரிப்பதாலேயே இவ்வியற்கைச் செயல்பாடு என்பதையும் புரிந்துகொண்டேன். ஒருவேளை மேற்குத் தொடர்ச்சி மலையென ஒன்று இல்லாமல் போயிருந்தால், மேற்கே அரபிக் கடலில் உருவாகும் கடல் சார்ந்த காற்று நிகழ்வுகள் தமிழக நிலப்பரப்பிற்கும் தென்மேற்குப் பருவமழையைக் கொண்டுவரக்கூடும். எனவேதான் வாயகன்ற வடகிழக்கிலிருந்து மட்டும் மழை தமிழகத்தைப் போர்த்திப் பெய்கிறது.
தென்மேற்குப் பருவ மழை காலத்தில் தமிழகத்தில் பெய்வது வெப்பச் சலனமழை என்பதை அறிந்தேன், வானியல் அறிஞர்களின் வழி. அக்காலகட்டத்தில் பெய்யக்கூடிய வெப்பச் சலன மழையுமேகூட அதிகபட்சம் ஒரு மணிநேரத்தில் இருந்து இரண்டு மணிநேரம் மட்டுமே தொடர்ச்சியாகப் பெய்யக்கூடியது. அதிலும் வெப்பச் சலன மழை என்பது எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் பெய்கிற வலிமையுடையதும் இல்லை. என்னுடைய நண்பர்கள் சிலர், “கோடம்பாக்கத்தில பெஞ்சது. ஆனா தாம்பரத்தில பெய்யலை. நான் மழை பெஞ்சதுன்னு சொன்னா நம்ப மாட்டேங்குறாங்க. தாம்பரத்துக்கு போனா வெயில் வாட்டியெடுக்குது” என தென்மேற்குப் பருவமழை காலகட்டங்களில் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
முன்பெல்லாம் அப்படி அவர்கள் சொல்கையில் நானுமே வாய் பிளந்து கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் அவர்களுக்கு விளக்கத் தலைப்பட்டுவிட்டேன். ஆனால் அதிலுமே இன்னொரு முக்கியமான காற்று சார்ந்த சிக்கலுமுண்டு. நான் வாழ்கிற தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதி பாலக்காடு கணவாய் காற்று நுழைகிற பகுதி. பாலக்காடு கணவாயைக் கடந்து அக்காற்று என்னுடைய ஊரான கணக்கன்பட்டியைக் கடந்து மணப்பாறை திருச்சி வழியாக தஞ்சாவூரை அடைந்து அப்படியே வங்கக் கடலில் இறங்குகிறது. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி கடலில் இருக்கிற ஏதோவொரு சுழற்சியை நோக்கிப் பயணம் செய்கிறது காற்று. அதேபோல் செங்கோட்டை கணவாய்ப் பகுதியில் இருக்கிற ஊர்க்காரர்களுக்குமே இச்சிக்கல் உண்டு.
இருக்கிற நிலத்தில் தரை வெப்பம் உயர்ந்து புழுக்கம் இருக்க வேண்டும். ஊரில் கொடி ஆடாமல், காற்றாடி சுற்றாமல் கப்பென வானம் இருக்கிற போதுமட்டுமே காற்றுப் பகுதிக்கு மழை. மேற்கில் நாங்கள் இருக்கிற ஊரில் உயரக்கூடிய வெப்பத்தைக் காற்று தள்ளிக்கொண்டு போய் கிழக்கில் குவிக்கும். அந்த மாதிரியான நேரங்களில் வங்கக் கடலோரத்தில் இருக்கிற ஊர்களில் வெப்பச் சலன மழை பொழியும். ஊரில் இருந்து எனக்குத் தொலைபேசி செய்யும்போது, “பொங்கிண்ணே காத்தடிக்குதா? கப்புன்னு வானம் இருந்தா நமக்கு மழைண்ணே. தெக்க இருந்து சாயந்திரம் போல குளிர்காற்று வந்தா நமக்கு மழைண்ணே” எனச் சொல்லக் கற்றுக்கொண்டேன்.
பொதுவாக இந்த மாதிரியான வெப்பச் சலன மழை காலத்தில் துளியூண்டு மேகம் வானில் இருந்தாலே போதுமானது. ஒரு இடத்தில் இடியுடன் தொடங்கும் மழைக்குத் தோதாக வானம் மேகங்களை உடனடியாகவே தன்னளவில் உற்பத்தி செய்துகொள்வதையும் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அதனால்தான் வெறித்து வெயில் சுட்டெரிக்கிற வானத்தைப் பார்த்து டெல்டா விவசாயிகள் ஏமாந்துபோய், தங்களது அறுப்பை மழைக்கு நனையக் கொடுத்துவிடுகிறார்கள். நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து நாசம் என்பது போன்ற செய்திகளுக்கெல்லாம் பின்னணி இதுதான்.
வெப்பச் சலன மழையைப் பொறுத்தவரை எந்த நேரத்தில் எங்கே தொடங்கும் என்பதைக் கணிக்கவே முடியாது. கூர்ந்து கவனித்து அதிலேயே ஊடாடினால் அதை உணரவும்கூடும். “இன்னைக்கு வானம் ரெம்ப உக்கிரமா இருக்கு. புழுக்கம் சாஸ்தியா இருக்கு. மழை உறுதி” என நிலத்தில் கால்பாவி நடப்பவர்கள் கணிப்பதையும் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். பின்னொரு நாள் நானுமே நிலத்தில் கால்பாவி நடப்பவனாகவும் ஆகிப்போனேன்.
ஆனால் பருவமழைதான் தமிழகமெங்கும் போர்த்திப் பெய்யக்கூடிய ஆதார சக்தியையுடையது. அதிலும் இலங்கைக்கு அருகில் ஒரு கடல்சார்ந்த நிகழ்விருந்தால், அது டெல்டாவையும் தென்மாவட்டங்களையும் ஒருசேரப் போர்த்தும். அதன் வெளிவட்டம் நன்றாக விரிந்திருந்தால் வட கடலோரத்தையும் அது சேர்த்து அணைத்து சென்னை, ஆந்திரா வரை மழை முத்தமிடும் என்பதெல்லாம் எனக்குப் படிப்படியாகப் புரிய ஆரம்பித்தது. கடல் என்பது வானைத் தொட்டுக்கொண்டு விரிந்திருப்பது. அதன் அடிமுடியை இன்னமும் யாரும் அறியவில்லை என்பதைப் போல, மழையிலுமே இதுபோல ஏராளமான கணக்கு வழக்குகள் இருக்கின்றன.
ஆரம்பநிலை சார்ந்த உதாரணத்திற்கு மட்டுமே இதையெல்லாம் இங்கே சொல்லி இருக்கிறேன். மேலும் ஆழங்கள் இருக்கின்றன இதில். அதிலும் நான் வானியல் அறிஞனும் அல்ல. வானியலைக் கற்கிற மாணவன் என்கிற அடிப்படையில் நான் படித்த தொடக்கப் பாடங்களை மட்டுமே இங்கே சொல்லவும் செய்திருக்கிறேன். உயரழுத்தம், மேற்கத்திய இடையூறு என இதற்குள் வேறுபல கணக்கீடுகளும்கூட இருக்கின்றன. இப்போது நிலவும் குளிர்காற்று இமயமலையில் இருந்து வருவது என்பதை உணர்ந்த கணத்தில் உள்ளுக்குள் ஒரு பனிக்கட்டி சில்லிட்டது எனக்கு. நானே இமயமலை அடிவாரத்தில் நிற்பதைப் போலவும் உணர்ந்தேன். இந்திரா நகரில் இருப்பவனை நோக்கி இமயமலை நகர்ந்து வந்ததோ?
எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், சாதாரண மழைதானே, காற்றுதானே என இயற்கை சார்ந்த நிகழ்வைக் கடந்துபோய்விடக் கூடாது என்பதற்காகவே. அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவிலும் முறையே தென்மேற்கில் இருந்தும் வடகிழக்கில் இருந்தும் காற்று பயணிக்கிறது. இக்காற்றுதான் இந்தியாவில் நிலவும் வெயில், மழை என எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இந்தியா மட்டுமா? கடலிற்குள் தொங்கியபடி நிற்கும் எல்லா நாடுகளின் நிலப்பரப்பின் தலைவிதியையும் கடலும் காற்றும் மட்டுமே தீர்மானிக்கின்றன. இங்கேதான் அந்த முக்கியமான விஷயத்தைச் சொல்லவும் வேண்டியிருக்கிறது. இதைப் பற்றி நான் ஏற்கெனவே நிறைய எழுதிவிட்டேன் என்பதால் சுருங்கச் சொல்லத் தலைப்படுகிறேன்.
கண்ணுக்குத் தெரியாத சுழற்சி நம் நிலத்தில் ஒரு சக்கரத்தைப் போல பல்லாயிரம் ஆண்டு காலம் சுற்றிக்கொண்டிருக்கிறது. பங்குனி மழை பாழ் என அச்சுழற்சிதான் கற்றும் தந்தது. பொய்க் கருமேகங்கள் திரண்டு மழை வருவதைப் போல போக்கு காட்டுவதைக் கருவோட்டம் என அடையாளம் கண்டு பிரித்தும் வைத்தது. ஐப்பசி அடைமழையென்றது. ஆடிக் காற்று அம்மியைத் தூக்கும் என்றது. ஆனால் போன ஆடியில் காற்றுப் பகுதியான எங்கள் ஊரிலேயே ஒரு வாரம் மட்டுமே தலையைத் தட்டும் ஆடிக்காற்று அடித்தது. ஏனெனில் மேற்கே காற்றின் போக்கு வேறொரு திசைமாறுதலை அடைந்திருந்தது. இப்படி பழைய கணக்குகள் எல்லாம் பல்லிளிக்கத் தொடங்கிவிட்டன இப்போது.
பழைய கணக்குகள் போட்டுத் தந்த மண்சாலையில் நடைபோடும் வண்டி மாடுகளையொத்த சந்திரபோஸ்கள் இதனால்தான் திடீர் மாற்றங்களால் கதிகலங்கிப் போகிறார்கள். அவர்கள் கற்ற அத்தனை வானியல் வித்தைகளையும் ஒரு திசைமாறுதல் காற்று அடித்துக்கொண்டு போய்க் கடலில் தள்ளிவிடுகிறது. கணிக்கவே இயலாதளவிற்கு கடல் மாற்றம் கண்டிருக்கிறது, அல்லது கடலை நாம் அப்படி மாற்றி வைத்திருக்கிறோம். முன்பெல்லாம் புயல் என்றால் எப்போதோ நிகழ்ந்த தனுஷ்கோடி புயலைப் பற்றி மட்டுமே உதாரணங்களைக் காட்டிக்கொண்டிருந்தோம். கடந்த ஐந்து வருடங்களை எண்ணிப் பார்த்தால், ஒக்கி, கஜா, வர்தா… என எத்தனை புயல்கள்? அதனால் ஏற்பட்ட பொருள், உயிர் இழப்புகளையெல்லாம் பட்டியலிட வேண்டுமா என்ன? புயல்களுக்கே பெயர் வைக்கும் யுக காலத்தில் நுழைந்தும்விட்டோம். புயலில்லாமல் இனி ஒருவருடமும் கடக்காது என்பதை இப்போதே குறித்து வைத்துக்கொள்ளலாம். இனி வானியல் என்பதை அறியாமல், அறிந்துகொள்ள விருப்பமே இல்லாமல் பயணம் செய்கிற காலகட்டம் முடிந்து விட்டதற்கான அறிகுறிகள் வடகிழக்கு வானில் பருந்துக் கூட்டத்தினைப் போல வட்டமிடவும் தொடங்கிவிட்டன.
நாம் வாழும் நிலத்தை நிறைத்திருக்கிற வானையும் கடலையும் உற்றுப் பார்த்துக் கற்கிற தலைமுறை இனி இங்கே உருவாக வேண்டும் எனச் சூழலியல் வல்லுநர்கள் இப்போது உரக்கச் சொல்லத் தொடங்கி உள்ளார்கள். பருவநிலை மாற்றத்தால், அதிகரிக்கும் வெப்பமயமாதலால் கடல், ஆடியில் கூழ் வாங்கிக் குடிக்கிற மாரியம்மாளைப் போல உக்கிரமாக மாறியிருக்கிறது. காற்று அதன் மடியில் கிடந்து, வழி தவறிய கடமானைப் போல கொம்புகளையாட்டிப் புரள்கிறது. தேவகன்னியர் புரண்டு படுத்தால் புயலெனச் சொல்கிறது கனேடிய முதுமொழி ஒன்று. வானையும் கடலையும் நிலத்தையும் காற்றையும் பொத்திப் பாதுகாக்கிற பொறுப்புண்டு நமக்கென்பதை உணர்கிற கட்டத்தில் நிற்கிறோம். ஏனெனில் உக்கிரம் கொண்ட தேவகன்னியர் கடலிற்குள் காத்து நிற்கிற காலமிது!