பாஸனின் வடமொழி நாடகங்கள்: சொப்பன வாசவதத்தமும் பிரதிமாவும்

0 comment

சமஸ்கிருத இலக்கியத்தில் மகாகவியாகவும் மகாகாவிய கர்த்தாவாகவும் போற்றப்படும் காளிதாசன், சாகுந்தலம் என்ற நாடகக் காவியத்தின் மூலம்தான் மகத்தானவராகக் கருதப்படுகிறார். அவருக்குக் காலத்தால் முற்பட்ட பாஸ மகாகவி (Bhāsa), சமஸ்கிருத நாடக இலக்கிய உலகத்தில் காளிதாசனுக்கு இணையாகக் குறிப்பிடப்படுகிறார். பாணினி இலக்கணத்துக்கும் பரதரின் நாட்டிய சாஸ்திரத்துக்கும் காளிதாசன் கட்டுப்பட்டவர். ஆனால் பாஸன் இவர்களுக்கும் முந்தியவர் என்பதால், அவர்களது இலக்கண வரையறைகளிடமிருந்து விடுபட்டவராகத் திகழ்கிறார்.

ஒரு இலக்கியப் படைப்பை அதன் மூல மொழியிலேயே பூரணமாக அனுபவிக்கவும் இரசிக்கவும் பரவசம் கொள்ளவும் முடியும் என்றாலும், மொழிபெயர்ப்புகள் வழியே நாம் பாஸ கவி, காளிதாஸ் ஆகிய இருவரையும் படிக்கும்போது, நாடகக் கட்டமைப்பிலும் நுட்பத்திலும் வீச்சிலும் வசீகரத்திலும் மொழி வளத்திலும் பாஸனே காளிதாசனைவிட சிறந்தவராகத் தெரிகிறார். காவ்யாலங்கார அணிகளில் மட்டுமே காளிதாசன் விஞ்சி நிற்கிறார். ஆனால் வரிக்கு வரி உள்ள அந்த அணிகள் இன்று பண்டிதத்தனமாகவும் புலமைநலம் மட்டுமே கொண்டு புதுமலர்ச்சி பெற்று விகசிக்காத பழைய மரபின் மேன்மைகளாவும்தான் தோன்றுகின்றன. பாஸனைப் போல் சாதாரண மனித உணர்வுகளும் சஞ்சலங்களும் உறவுச்சிக்கல்களும் காளிதாசனிடம் அதிகம் இருப்பதில்லை. இவைகளுக்கு அப்பாற்பட்ட களங்களிலும் கதைக்கருக்களிலுமே அவர் சஞ்சரித்துள்ளார். வைதீக, பௌராணிக கதைக்கருக்களையே பெரிதும் கையாண்டுள்ளார். ஆனால் பாஸன் செவ்வியல் சமஸ்கிருத்தில் வழக்கொழிந்த, மறக்கப் பெற்ற, மறைக்கப் பெற்ற, பைசாச மொழி போன்ற பழைய பிராகிருத மொழிகளில் சௌரசேனி வாய்மொழி வழக்காற்றியல் பிராந்தியங்களில் உள்ள கதைக்கருக்ககளை எடுத்தாண்டுள்ளார். இன்றைய மொழியில் கூறினால், காளிதாசன் பெருங்கதையாடல் மொழிபு மரபைச் சார்ந்தவர் என்றும் பாஸன் சிறுகதையாடல் மொழிபுகளைக் கைக்கொண்டவர் என்றும் எளிமைப்படுத்திக் கூற முடியும். அவர் எடுத்துக்கொண்ட இதிகாசக் கதைக்கூறுகள்கூடப் பாடமுறையில் இருந்தல்லாமல் வாய்மொழி வழக்காற்றியல் மரபுகளில் இருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார். காளிதாசனைப் போல் உபாக்கியானங்களை விரித்தெடுக்காமல் இதிகாசப் பெருங்கதைகளின் சில முக்கிய நாடகார்த்தத் தருணங்களையே காட்சிரூபப்படுத்தியுள்ளார்.

Epic என்று பொதுவாக மேலைநாட்டு இலக்கிய அரசியலில் பயன்படுத்தப்படும் சொல், நமது இந்தியத் தேச இலக்கிய அரசியலில் இதிகாசம், காவியம் என்று இரண்டாகப் பிரித்து அறியப்பெறுகிறது. வேதமொழி போன்றே இதிகாச மொழியும் செவ்வியல் சமஸ்கிருத மொழியின் தூரத்து மூத்த உடன்பிறப்புதான். (இதிகாசத்தின் சொற்பொருள், இது இவ்வாறு நிகழ்ந்தது என்பதுதான்). இதிகாச மொழிகளின் இலக்கியங்களான ராமாயண பாரதங்களில், வழக்காறுகளின் தொகுப்பான பிரம்மாண்டமான இதிகாசக் கதைப்பின்னலின் எந்தவொரு பகுதியையும் தனியே எடுத்து இரசிக்கலாம், படைக்கலாம், கலாச்சாரப்படுத்தலாம். காவியம் அப்படியில்லாமல் முழுமை கொண்டதாகவும் முழுமையில் நிறைவுகொள்வதாகவுமே இருக்கும். வியாசர் தொகுப்பாளராகவே பெரிதும் தோன்றுகிறார். வால்மீகி தொகுப்பாளராகவும் அதே சமயம் படைப்பாளராகவும் விளங்குகிறார். காவியமோ தனியொரு படைப்பாளியின் தனித்தன்மை நிறைந்தது. இதிகாசத்துக்கும் காவியத்துக்கும் உள்ள வேறுபாடு போன்றே காவியத்துக்கும் புராணத்துக்கும் வேறுபாடு உண்டு. காவியத்தைப் புனைவாக மட்டுமே பார்த்துச் சுவைக்கவும் முடியும். ஆனால் மிகு புனைவான புராணத்தை மதம், நம்பிக்கை என்பவற்றின் துணைகொண்டே பார்க்கிறார்கள். (லெவிஸ்ட்ராசின் புராணம், தொன்மக் கதை ஆய்வுக்குள் எல்லாம் இங்கே போக வேண்டியதில்லை). கடவுள் அவதாரமானாலும் ராமன் பிறந்து, கல்வி கேள்விகளில் தேர்ந்து, மணம் செய்து, பல துன்பங்களை அடைந்து, எதிரிகளுடன் போராடி வென்று, இழந்தும் பெற்றும் பிறகு மரணம் அடைந்தும்தான் காவியத்தில் நிலைபெறுவான். புராணத்தில் எல்லாம்வல்ல பரம்பொருளாக வந்து, துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம் எல்லாம் செய்து அருள்பாலிக்க முடியும். பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவன், வரலாற்றில் வாழ்ந்த அவன் அடியார்களுக்குத் தோன்றி அருள்பாலித்து மறைய முடியும்.

பாரத, ராமாயணங்களுக்கு முன்பு வழக்காற்றிலிருந்த பெருங்கதைத் தொகுப்பு பிருகத் கதை. முன்போ பின்போ அது சமணச் சார்பு பெற்று பிரபலமானதாக இருந்திருக்கிறது. அதன் கதைத்தலைவனான நாரவாணதத்தனின் தந்தையான உதயணன் கதைதான் அன்று பல காவியங்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்திருக்கிறது. பின்பு வைதீகச் சார்பும் இலக்கியத்தின் பெருக்கமும் ஆட்சியும் அதை மறைத்து அதனால் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம். இந்தியக் காப்பியங்கள் பெரும்பாலும் பிருகத் கதை, இரு இதிகாசங்கள், புத்த ஜாதகம் போன்றவற்றை மூலமாகக்கொண்டே பெரிதும் பிறந்திருக்கின்றன. ஆக்யானங்கள், உபாக்யானங்கள், புராணங்கள், சரித்திரம் (முத்ராராட்சஸம்) போன்றவற்றில் இருந்தும் எடுத்துக்கொண்டுள்ளன. பஞ்ச தந்திரம், வேதாளக் கதை, மத்த விலாசம் போன்ற கற்பனைப் படைப்புக் கதைகள் அபூர்வம்.

சமஸ்கிருதம் என்பது பிராமணர் மொழி, ஆரிய மொழி, வடநாட்டு மொழி என்ற பொதுப்புத்தி உள்ளது. வடமொழி என்றாலே சமஸ்கிருதத்தைக் குறிப்பதாக எடுத்துக்கொள்கிறார்கள். உண்மையில் இந்தியா முழுமையிலும் கல்வி மொழியாகவும், கற்றோருக்கிடையான தொடர்புமொழியாகவும் கல்வெட்டு, சாசன மொழியாகவும் பல பகுதிகளின் ஆட்சி மொழியாகவும் பல சமயங்களின் தத்துவ வியாக்யான மொழியாகவும் ஐவர்ண மொழியாகவும் சமஸ்கிருதம் இருந்திருக்கிறது. தென்னிந்தியப் பகுதியிலிருந்தே பெரும் சமஸ்கிருதப் படைப்பாளிகளும் சமய அறிஞர்களும் ஆய்வாளர்களும் தோன்றியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிறந்த, எழுந்த சமஸ்கிருதப் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகின் அங்கம்தான். இதனுடைய இலக்கிய வகைதான். இந்திய-ஆங்கில இலக்கியம் என்பது போல் தமிழ்-சமஸ்கிருத இலக்கியம் என்றுதான் இவை அழைக்கப்பட வேண்டும். (இதுவரை சில ஆய்வாளர்களால் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுச் சிதறிக் கிடந்த இவ்வகைக் கருத்துகளைச் சமீபத்தில் வெளிவந்த செஞ்சுருட்டி என்ற கட்டுரைத் தொகுப்பு நூலிலும் இனிமேல் வர இருக்கும் வழக்காற்றியல் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலிலும் பேராசிரிய நண்பர் இரா. சீனிவாசன் ஆதாரங்களோடு ஆய்வுபூர்வமாகத் தொகுத்தும் விரித்தும் பகுத்தும் விளக்கியுள்ளார்.)

பாஸனில் பழைய பிராகிருதமான ஸெளரசேனியின் ஆதிக்கமே நிறைந்திருக்கிறது. இன்றுள்ள பாஸனின் கூடியாட்டச் சாக்கையரின் பிரதிகள், இன்றைய வழக்காற்றியல் இலக்கியக் கொள்கை ஆய்வுகளின்படி, எந்தெந்த மாற்றங்களுக்கு எப்படி எப்படியெல்லாம் உட்பட்டிருக்கும் என்பதை அறிய முடியாது. பிராகிருதத்தை ஆட்சிமொழியாகக் கொண்டிருந்த மகேந்திர வர்மனின் மத்தவிலாசம் பிராகிருத நாடகம் என்றே சொல்லக்கூடியது. காபாலிகன் என்ற களிமகன் ஒருவனைக் கதைத் தலைவனாகவும் பெரும்பாலான பாத்திரங்கள் அங்கதப்படுத்தப்படும் பிரகசன நாடகத்தில், இழிசினர் வழக்குதானே பெரிதும் இருக்கும்? அதில் உயர்ந்தோர் வழக்கைத் தேடித்தானே பார்க்க முடியும்? (எனவேதான் நான் பாஸன், மகேந்திரவர்மன் போன்றோரின் படைப்புகளை சமஸ்கிருத நாடகங்கள் என்று உபதலைப்பிடாமல் வடமொழி நாடகக் காவியங்கள் என்ற பொதுவான தலைப்புகளையே தந்துள்ளதைப் பார்க்கலாம்.)

கவிகளும் த்ருஷ்ய காவிய நாடகக் கர்த்தாக்களும் ஸ்ரவ்ய காவியக் கர்த்தாக்களும் செவ்வியல் சமஸ்கிருத விமர்சகர்களும் பாஸனைப் பற்றி வியந்து அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறார்கள். காதம்பரி எழுதிய பாணபட்டன் பாராட்டுகிறார். கற்பூர மஞ்சரி என்ற பிராகிருத நாடகத்தை எழுதிய பத்தாம் நூற்றாண்டு ராஜசேகரன், பாஸனின் நாடகங்கள் அனைத்தையும் நெருப்பிலே போட்டபோது, ‘சொப்பன வாசவதத்தம்’ மாத்திரம் எரியவில்லை என்று புனைந்து புகழ்கிறார்.

1912-ல் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த டி.கணபதி சாஸ்திரிகள், கேரளத்துச் சாக்கையரின் கூடியாட்டப் பிரதிகளில் இருந்து பாஸனின் 13 நாடகங்களைக் கண்டுபிடித்து பிரசுரித்தார். (எனவே பாஸன் கேரளப் பகுதியைச் சார்ந்தவராக இருப்பதற்கும் வாய்ப்புண்டு). அதுவரை பாஸனின் பெயர் மாத்திரம் அறியப்பட்டதே தவிர அவரது படைப்புகள் வெளிப்பட்டதே இல்லை. இந்த 13 நாடகங்களிலும் பாஸன் பற்றிய அகச்சான்றுகள் எவையும் இல்லை. எனவே உறுதியாகக் கூறுவதில் சிரமங்கள் எழுந்தன. நீண்ட விவாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பின் இவை பாஸனுடைய நாடகங்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நாடகங்களிலே சௌரசேனி பிராகிருத மொழிப் பேச்சுகள் காணப்பட்டதும் நடையும் அமைப்பும் இலகுவானவையாக இருந்ததும் இவை பழைய நாடகங்கள்தான் என முடிவுசெய்யக் காரணமாயிருந்தன. நாந்தி மங்கலத்துக்கு முன்பே சூத்திரதாரன் அரங்குக்குள் பிரவேசிப்பது பாஸனுடைய எல்லா நாடகங்களிலும் காணப்படும் என்று பாணபட்டன் தனது ஹர்ஷ சரித்திரத்தில் குறிப்பிடுவதற்கேற்ப இந்த 13 நாடகங்களும் அமைந்திருந்தன. கீத் போன்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் பாஸனே இவைகளின் ஆசிரியர் என்று ஏற்றுக்கொள்கிறார்கள். பாஸனின் மூலப்பிரதிகளைக் கூடியாட்டச் சாக்கையர்கள் பாரம்பரியமாகப் பாதுகாத்து, தம் நிகழ்த்துகலை வடிவத்துக்கேற்பப் புதுக்கியபடியேதான் இருந்திருப்பார்கள். பழம் பிரதிகள் இப்படித்தான் வளர்த்தியெடுக்கப்பட்டு இன்றுவரை காப்பாற்றப்பட்டுள்ளன என்பது இன்றைய பிரதியில் கொள்கை.

பாஸன் உபயோகிக்கும் சௌரசேனி பிராகிருதச் சொற்கள், பஞ்ச காவியங்களில் முதலாவதான ‘புத்த சரிதம்’ என்ற காவியத்தை எழுதிய அஸ்வகோசர் காலத்திற்கும் பிற்பட்டவையாயும் காளிதாசனுக்கு முற்பட்டவையாயும் மொழியியலாளர்கள் கருதுகிறார்கள். எனவே பாஸன் கி.பி. 300-ல் வாழ்ந்தவர் என ஒருவாறு தீர்மானிக்கிறார்கள். கௌடில்யர் காலத்தவர் என்றும் கருதுவார்கள். செவ்வியல் சமஸ்கிருத இலக்கியம் கி.பி. நான்காம்  நூற்றாண்டில்தான் நிலைபெற்றது என்பதே இன்றைய ஆய்வாளர்கள் கருத்து. காளிதாசன் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனக் கூறுவோர், பாஸன் கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கருதுவதை மகாமகோபாத்தியாய குப்புசாமி சாஸ்திரிகள் ஆட்சேபித்துள்ளார். இலக்கிய ஒற்றுமைகளை வைத்து சொப்பன வாசவதத்தம், பிரதிக்ஞா யௌகந்தராயணம், சாருதத்தம் ஆகிய நாடகங்களை பாஸனுடையவை என்று உறுதிப்படுத்துவதுமுண்டு.

பிரதிக்ஞா யௌகந்தராயணம், சொப்பன வாசவதத்தம் ஆகிய இரண்டும் வத்ச நாட்டு அரசன் உதயணனைப் பற்றியவை. பிருகத் கதை மூலத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அதன் கதைத் தலைவனாகிய நரவாகனதத்தனின் தந்தையே உதயணன். நாலு அங்கங்களைக் கொண்ட பிரதிக்ஞா, உதயணனின் அமைச்சனாகிய யௌகந்தராயனைப் பற்றியது. இதன் தொடர்ச்சியே ஆறு அங்கங்களையுடைய சொப்பன வாசவதத்தம். ஆறு அங்கங்களையுடைய அரிமாரகம், குந்தி போஜ ராஜனின் மகள் குரங்கி என்பவளுக்கும் அரிமாரகன் என்ற அரச குமாரனுக்குமான காதல் பற்றிய நாடகம். சாருதத்தம் முழுதாகக் கிடைக்கவில்லை. முதல் நான்கு அங்கங்களே கிடைத்துள்ளன. மிருச்சகடிகம் என்ற நாடகத்தின் கதையே இதுவும் எனக் காணமுடிகிறது.

பாஸனுடைய 6 நாடகங்கள் மகாபாரதக் கதைகளை எடுத்தாண்டவை. அவற்றில் 5 ஓரங்க நாடகங்கள், வியாயோகம் என்ற நாடக வகையைச் சேர்ந்தவை. மத்யம வியாயோகம், தூத கடோத்கஜன், தூது வாக்கியம், கர்ணபாரம், ஊறுபங்கம் என்பவை இவை. பஞ்சராத்திரம் 3 அங்கங்களையுடையது. இவைகளில் மகாபாரதக் கதைகள் நாடக அமைதிக்காகப் பல இடங்களில் மாற்றம் பெற்றுள்ளன. பிதிமா, அபிஷேக நாடகங்கள் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டவை. 5 அங்கங்களைக் கொண்ட பாலசரிதம், கிருஷ்ணனின் அற்புதங்களைச் சொல்கிறது. புராண இதிகாச நிகழ்ச்சிகளை எடுத்தாண்டவற்றுள் இதுவே சிறந்தது என்பார்கள். (ஹரிவம்ச பாகவதக் கதைகள் எப்போது எழுந்தன, எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பே வாய்மொழி வழக்காற்றியல் மரபில் அவை தோன்றிவிட்டனவா என்ற கேள்வியும் இங்கே பிறக்கிறதல்லவா?). உதயணனுக்கும் வாசவதத்தைக்குமான காதல் நிகழ்ச்சிகளைக் கூறும் ‘வீணா வாசவதத்தம்’ யாரால் எழுதப் பெற்றது என்று தெரியவில்லை. இதில் கோஷவதி என்ற வீணை முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் கதை பாஸனின் நடையை ஒத்திருக்கிறது.

பாஸனின் தலைசிறந்த நாடகம் சொப்பன வாசவதத்தம். தெளிவோடும் சிக்கனத்தோடும் விவரணங்களை மட்டுப்படுத்திக் கொள்ளுதல் என்பதான பிரசாதம் என்ற இலக்கிய நுட்பத்தை இவரிடமிருந்தே காளிதாசன் கற்றார். பாஸனுக்கு அஞ்சலி செலுத்தியே தன் நாடகத்தைத் தொடங்குவார் காளிதாசன்.

பஞ்ச காவியங்களில் ஒன்றாகக் காளிதாசனின் ரகுவம்சத்தைக் கூறுவார்கள். புராண வரலாற்றுக் கதைகளின் தொகுப்பாகவே அதன் முக்கியத்துவம் இன்று விளங்குகிறது. மற்ற பஞ்ச காவியங்கள், வரலாற்று நோக்கிலேயே முக்கியத்துவம் பெறுகின்றன. உலகமே புகழும் இந்திய இலக்கியத்தின் கொடுமுடியான சாகுந்தலம் என்ற நாடக காவியம்கூட என்னை அவ்வளவாகக் கவரவில்லை. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை வரிக்கு வரி புகழ்கிறார்கள். அவற்றைப் படிக்கும்போது அவற்றின் தனித்தன்மையை உணர முடிகிறது. ஆங்கிலம் என்பதால் அப்படியிருக்கும். ஏனெனில் ஆங்கிலம் வழியாகப் படிக்கும் மிகச்சிறந்த பிற மொழி இலக்கியங்கள், குத்துயிரும் கொலையுயிருமாகத்தான் வந்துசேர்கின்றன. எனவே அவற்றின் முழுமையை உணரமுடிவதில்லை. அரைகுறையாகவே உணர்ந்து, ஊகித்து, இடைவெளிகளை நிரப்பி, அமைதி கொள்கிறோம். காளிதாசனைப் படிக்கும் போதும் இதுதான் நிகழ்ந்தது. எதற்கு இவ்வளவு மிகைப்படுத்துகிறார்கள் என்று புரிவதில்லை. சமஸ்கிருத மூலத்தில் எப்படியோ தெரியாது. வரிக்கு வரி அவர் ஏதேதோ அலங்கார (அணி) உத்திகளைத் தருவதைப் பண்டித உரைக்காரர்கள் எடுத்துக்காட்டிப் புகழ்கிறார்கள். (சமஸ்கிருத இலக்கிய இலக்கண விமர்சனத்தில் அதிகமாகப் புகழப்படும் அலங்கார சாஸ்திரம் என்ற அணி இலக்கணம் தமிழ்நாட்டில்தான் பிறந்து வளர்ந்தது என்பதையும் இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது. ஏன், காவிய இலக்கணம் கூறும் தண்டியின் காவ்யதர்சனம் காஞ்சியில் பிறந்ததுதான்.) அவர் அற்புதநவிற்சி அணியை முதன்முதலில் இந்திய இலக்கியத்திற்குத் தந்தவர் ஆகலாம். ஆனால் அவை இன்று திகட்டலையே தருகின்றன. மொழியால்தான் இலக்கியம் உருவாகிறது என்றாலும், மொழியை மீறிய சில விஷயங்களையேனும் இலக்கியம் தந்துவிடும் அல்லவா? காளிதாசனில் இது நிகழவில்லை. அவரது படைப்புகளில் மேகசந்தேசம் என்ற சிறுகாவியம் ஒன்றுதான் தேறுகிறது. ரீதி, ரஸ, த்வனி கோட்பாடுகள் பாராட்டும் பல இலக்கியங்கள் அந்த இலக்கிய உத்திகளுக்காகவே, அலங்கார (அணி) இலக்கணச் சிறப்புகளுக்காகவே புகழப்படுகின்றன. அவற்றில் சிலவே எஞ்சி நிற்கும். இனம், மதம், தத்துவம், வரலாறு, தேசியம், கொள்கைக் கோட்பாடுகள் என்பனவற்றின் அவசியங்களுக்காக இன்னும் சில படைப்புகளைப் பாராட்டலாம். (பௌத்தப் பிரதிகள், பிராகிருத பாலி இலக்கியங்கள் பற்றித் தனியே சொல்லவேண்டும்). நிற்க.

11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோமதேவரின் கதாசரித் சாகரம் மூலமாகத்தான் நாம் உதயணன் கதையை முழுமையாக முதலில் தெரிந்துகொள்கிறோம். குணாட்டியரால் பைசாச மொழியில் எழுதப்பட்ட பிருகத்கதை, அதற்குமுன் இருந்த வாய்மொழி வழக்காற்றில் இருந்து தொகுக்கப்பட்டிருக்கலாம். வேத கால ஆரியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன் இருந்த பூர்வகுடிகளின் வழக்காற்றில் இருந்தவையாகக்கூட சில கதைகள் இருக்கலாம். வைதிக இலக்கிய ஆதிக்கத்திற்கு முன்பு இக்கதைதான் இந்திய இலக்கியத்திற்கு மூலமாக இருந்திருக்கிறது.

உதயணன் கதை பிரபலமானது என்பதால் அதைப் பலரும் எடுத்தாண்டுள்ளார்கள். முன்கதைத் தகவல்களைக் கூறுவதற்கு மெனக்கெடாமல்தான் பாஸன் தன் நாடகத்தை எடுத்துச் செல்கிறார். ஐந்தாம் அங்கத்தில் உதயணன் காணும் கனவுதான் நாடகத் தலைப்புக்குக் காரணமாகிறது.

இன்று நமக்குத் தெரிய வரும் உதயணன் கதையை இவ்வாறு வரிசைப்படுத்தலாம்:

 1. பிருகத் கதா சுலோக சங்கிரகம் (புதஸ்வாமின்) கி.பி.1000
 2. பிருகத் கதா மஞ்சரி (ஷேமேந்திரர்) கி.பி. 1037 
 3. பிருகத் கதா சரித் சாகரம் (சோமதேவர்) கி.பி. 1070
 4. உதிதோதய காவ்யம்
 5. ரத்னாவளி (ஹர்ஷர்) 7 நூ.
 6. ஸ்வப்ன வாசவதத்தா (பாஸன்)  கி.பி. 3 நூ.
 7. பிரிய தர்சிகா (ஹர்ஷர்) 7 நூ. 
 8. பிரதிக்ஞா யௌகந்தராயணம் (பாஸன்) 
 9. வாசவதத்தா (சுபந்து) 6 நூ / 7 நூ.?
 10. மிருச்சகடிகை (சூத்ரகர்). கி.பி. 300-400
 11. கற்பூர மஞ்சரி (ராஜசேகரர்) 10 நூ.
 12. காதம்பரி (பாணபட்டர்) 7 நூ.
 13. பெருங்கதை (கொங்குவேளிர்). 7 நூ / 10 நூ.?
 14. வச்சத் தொள்ளாயிரம். (அழிந்துவிட்ட தமிழ்நூல்)
 15. உதயண குமார காவியம். (தமிழ் ஐஞ்சிறுகாப்பியத்துள் ஒன்று. கந்தியார் எனப்படும் பெயரற்ற ஒரு சமணப் பெண் துறவியால் எழுதப்பட்டது) 15ம் நூற்றாண்டு.

இந்தியாவில் கிரேக்க நாடகத்தின் செல்வாக்கு பரவிய காலத்தில் இந்தியாவின் அரச சபைகளில் கிரேக்க நாடகங்கள் நடித்துக் காட்டப்பட்டன. இது இந்திய நாடக வளர்ச்சிக்குத் துணை புரிந்துள்ளது என லீபர் கருதுகிறார். இந்தப் பாதிப்பு கி.பி. முதல் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் உச்சம் பெற்றிருக்கலாம். அதையடுத்து கி.பி. 100 வரை சிறந்த இந்திய நாடகங்கள் தோன்றியிருப்பது இதை வலியுறுத்தும்.

சொப்பன வாசவதத்தம் என்ற பாஸனின் நாடகத்தைப் பற்றிக் கூறும்போது, ‘கிழக்கு நாடுகளில் தோன்றிய முதல் சிருங்கார நாடகம் இது. மேலை நாட்டில் தோன்றிய முதல் சிருங்கார நாடகம் யூரிபிடிஸ் எழுதிய ஆல்ஸெஸ்டிஸ். இந்த இரு நாடகங்களின் கட்டுக்கோப்பும் ஒரே மாதிரியானவை. இரண்டும் மனைவியின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டவை. தன் எதிரே உருமாறி நிற்பவளே தன் ராணி என்பதை அரசன் கண்டுபிடிப்பதாகவே இரண்டும் முடிகின்றன’ என்கிறார் கே.ஜி. சேஷையர் என்ற ஆய்வறிஞர்.

சாதவாகனன் அரசவையில் அமைச்சராய் இருந்த குணாட்டியர் என்பவர் பிருகத்கதா எனும் நூலை பிராகிருதத்தின் ஒரு ஆதி கிளையாகிய பைசாச மொழியில் இயற்றினார். இந்நூலின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு துர்விநீதனின் ‘பிருகத் கதா’ (கி.பி. 6ஆம் நூற்றாண்டு). இதைச் சார்ந்து தமிழில் இயற்றப்பட்டது பெருங்கதை. இதன் மொழியமைப்பு இது கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் எனக் காட்டுகிறது. கோசாம்பி நகர மன்னன் உதயணன் கதையைக் கூறும் இப்பெருங்கதையை இயற்றியவர் கொங்கு நாட்டுச் சிற்றரசர்கள் குடும்பத்தைச் சார்ந்த கொங்குவேளிர். இதனால் இந்நூலுக்குக் ‘கொங்குவேள் மாக்கதை’ என்ற பெயருமுண்டு. பழங்காலத்தில் இந்தப் பெருங்கதையின் பெயர் உதயணன் கதை என்பதாகவே இருந்தது. நூலின் முற்பகுதியும் பிற்பகுதியும் சிதைந்துள்ளன. உஞ்சைக் காண்டம், இலாவாண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என ஐந்து காண்டங்களில் முறையே 27, 20, 16, 17, 9 என 99 காதைகளைக் கொண்டது இக்காப்பியம். இந்நூலின் கதைத் தொடர்பை இந்நூலின் சுருக்கமாக அமைந்துள்ள ஐஞ்சிறு தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான ‘உதயண குமார காவியம்’ என்ற நூலே நமக்கு உணர்த்துகிறது. யாப்பருங்கல விருத்தியில், குடமூக்கிற் பகவர் என்பார் பாடியுள்ள ‘வாசுதேவனார் சித்தம்’ பற்றிய குறிப்பு உள்ளது. அதுவும் உதயணன் கதையைத் தமிழில் செய்த நூல் என்பார்கள். இக்கதை நாடெங்கும் பரவியிருந்தது. எனவே தமிழில் இக்கதை காப்பியமாக்கப்பட்டதில் வியப்பில்லை. வடமொழி, தமிழ் மொழி இவற்றுக்கிடையேயான இலக்கியப் பரிமாற்றத்தையும் இது உணர்த்துகிறது. கொங்குவேளிரின் படைப்பாற்றல் காரணமாகப் பெருங்கதை ஒரு முதல் நூல் போலவே தோன்றுகிறது.

பெருங்கதை 1924-ல் உ.வே.சா.வின் குறிப்புரையோடு வெளியிடப்பட்டது. துர்விநீதன் சமஸ்கிருதத்தில் எழுதிய பிருகத் கதா என்னும் நூலே பெருங்கதையின் மூலநூலாக இருக்க வேண்டும் என்று முடிவு கூறியுள்ளார் உ.வே.சா. இது சமணக் காப்பியம். சங்க காலத்தில் செல்வாக்காக இருந்த அகவல் என்ற செய்யுள் வகையால் இயற்றப்பட்டது. வட இந்தியப் பகுதிகளைக் களமாகக்கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப் பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் என்ற பெருமை இதற்கு உண்டு. உதயணன் பிறப்பு, திருமணம், துறவு ஆகியவை பற்றிய செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. தனிப்பாடல் ஒன்று, “உருத்தக்க கொங்குவேள் மாக்கதை” (உரு=அழகு) என்று கூறியுள்ளது. சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இக்காப்பியத்தைப் பாராட்டியுள்ளார். “கபாடபுரத்தில் இருந்த இடைச்சங்கத்தில் இயற்றப்பட்டவை கலியும் குருகும் வெண்டாளியும் முதலிய செய்யுள் இலக்கியங்கள்; இந்த இலக்கியங்களை எல்லாம் ஆராய்ந்து செய்ததே உதயணன் கதை” என்று அவர் கூறியுள்ளார். நச்சினார்க்கினியர், மயிலை நாதர், நேமிநாத உரையாசிரியர், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், வீரசோழிய உரையாசிரியர் முதலியோர் உரைகளிலும் பெருங்கதை மேற்கோளாக இடம்பெற்றுள்ளது.

*

வத்தவ (வத்ச) நாட்டு கௌசாம்பி நகர வேந்தன் சதானிகன். இவன் மனைவி, வைசாலியைத் தலைநகராகக் கொண்டு சேதி நாட்டினை ஆண்ட சேடகன் மகள் மிருகபதி. இவள் நிறைமாதக் கர்ப்பம் உடையவளாய் இருந்தாள். ஒருநாள் செவ்வாடை உடுத்தி மாடியில் உறங்கிக்கொண்டிருந்தாள். சிவந்த ஆடையினால் அவளை ஒரு மாமிசத்துண்டு என்று கருதிய சிம்புள் பறவை அவளைக் கட்டிலோடு நெடுந்தொலைவு தூக்கிச் சென்றது. அவள் ஊன் இல்லை என்பதை அறிந்த பறவை, விபுலம் என்னும் மலையில் அவளை விட்டுச்சென்றது. அப்பொழுதில் அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு உதயணன் என்று பெயரும் இடப்பட்டது.

உதயணனின் தாய்வழித் தாத்தா சேதி நாட்டினை ஆண்ட சேடகன். அவனுடைய 9 மகன்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்க மறுத்ததால் கடைசி மகன் விக்கிரமனிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டுத் துறவு பூண்டான். விக்கிரமனின் தங்கை மகனே உதயணன். மலையில் மிருகபதியின் தந்தை தவம் செய்து வந்தான். அவன் தன் மகளையும் பேரனையும் கண்டு மகிழ்ந்தார். அவரே அவர்களை வளர்த்து வந்தார். அதே மலையில் இருந்த பிரமசுந்தர முனிவரின் மகன் யூகி (யௌகந்தராயணன்), உதயணனின் நண்பன் ஆனான். இருவரும் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று வளர்ந்து வந்தார்கள். கோடபதி என்னும் தெய்வ யாழையும் யானையினை அடக்கியாளும் மந்திரம் ஒன்றையும் யூகியையும், உதயணனுக்கு உறுதுணையாக முனிவர் ஒப்படைத்தார். விக்கிரமனும் துறவு பூண ஆசைகொண்டு தங்கை மகன் உதயணனிடம் ஆட்சியை ஒப்படைத்தான். உதயணன் சேதிநாட்டு அரசனானான். யூகியை முதலமைச்சர் ஆக்கினான். உதயணன் தந்தை சதானிகன் தன்னுடைய வத்த நாட்டு ஆட்சிப் பொறுப்பையும் மகனிடம் ஒப்படைத்தான். உதயணன் சேதி நாட்டை யூகியிடம் ஒப்படைத்தான். 

உதயணன் யாழிசையில் வல்லவன். அவனது யாழின் இசைக்கு மயங்கி ஒரு தெய்வீக யானை அவனிடம் வந்தது. தொடர்ந்து அவனிடமே தங்கியிருப்பதற்கு யானை மூன்று நிபந்தனைகளை விதித்தது; உதயணனின் ஒப்புதலையும் வேண்டிப் பெற்றது. அதன்படி, யானை உண்ணும் முன்பு உதயணன் உண்ணக் கூடாது; யானை மீது உதயணன் தவிர வேறு யாரும் ஏறக் கூடாது; முகபடாம் முதலிய அணிகளை அணிவிக்கக் கூடாது. இவ்வாறே உதயணனும் அதற்கு உடன்பட்டு நடந்து வந்தான். தன் மாமனது அரசையும் தந்தையின் அரசையும் பகைவரிடம் இருந்து கைப்பற்றி ஆண்டு வந்தான்.

உதயணன் ஒரு நாள் சோர்வு மிகுதியால் யானைக்கு உணவு தரும் முன்பாக, தான் உண்டுவிட்டான். இதனால் யானை அவனைப் பிரிந்து சென்றுவிட்டது. வருத்தம் அடைந்த உதயணன், யாழை இசைத்துக்கொண்டே காடு மலைகளில் எல்லாம் யானையைத் தேடி அலைந்தான்.

உஞ்சை (உஜ்ஜயினி) நகரைத் தலைநகராகக் கொண்டு அவந்தி நாட்டை ஆண்ட மன்னன் பிரச்சோதனன். அவன் மகள் வாசவதத்தை. திறை செலுத்த மறுத்த உதயணனை வஞ்சனையால் பிரச்சோதனன் சிறைபிடிக்க நினைத்தான். காட்டில் அலைந்த உதயணனை ஓர் இயந்திர யானையைப் பயன்படுத்திச் சிறைப்படுத்தினான். இதனை அறிந்த யூகி உதயணனை மீட்கத் திட்டமிட்டான். இதன்படி உச்சயினியின் பட்டத்து யானையை மதம்கொள்ள வைத்து தெரு வீதிகளில் திரியவிட்டான். பிரச்சோதனன், உதயணனைச் சிறையில் இருந்து விடுவித்தான். யானையை அடக்க வேண்டினான். யானையை அடக்கிய உதயணன் அரசனின் நன்மதிப்பைப் பெற்றான். பிரச்சோதனன் மகன்களுக்குப் படைக்கலப் பயிற்சி அளிக்கவும் மகள் வாசவதத்தைக்கு யாழ் பயிற்சி தரவும் உதயணன் பொறுப்பேற்றான். வாசவதத்தைக்கு யாழ் கற்றுத்தரும் வேளையில், இருவருக்கும் காதல் மலர்ந்தது. உதயணன் வாசவதத்தையைச் சயந்தி நகரத்திற்கு அழைத்துச் சென்று, மணம்புரிந்து வாழ்ந்து வந்தான்.

உதயணன் வாசவதத்தையுடன் கூடிக் காதல் வாழ்க்கை வாழ்ந்து வந்தான். காதல் மயக்கத்தில், அரசன் என்ற முறையில் ஆற்றவேண்டிய கடமையை மறந்தான். இதனால் இருவரையும் பிரித்தலே நாட்டுக்கு நன்மை என்பதை யூகி உணர்ந்தான். இருவரையும் பிரித்து வைக்கத் திட்டமும் தீட்டினான். அதற்கு முன்பாக, தான் (யூகி) இறந்துவிட்டதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பினான். அடுத்ததாக, வாசவதத்தையை யாரும் அறியாமல் வேறோர் இடத்திற்கு மாற்றி, அவள் தீயினால் மாண்டுவிட்ட தாகவும் செய்தி பரப்பினான். இருவரின் பிரிவையும் தாங்காத உதயணன் பெரிதும் மனம் கலங்கினான். அக்கவலையை மாற்ற இராசகிரியத்தில் இருந்த ஒரு முனிவரை அடைந்தான்.

மகதநாட்டின் தலைநகர் இராசகிரியத்தில் இருந்தபோது அந்த நகரத்து அரசன் தங்கை பதுமாவதியை மணந்தான். பின்பு தன் நகராகிய கௌசாம்பிக்கு வந்தான். அங்கு, யூகியும் வாசவதத்தையும் மீண்டும் வருவதைக் கண்டு உதயணன் மகிழ்ந்தான். பாஞ்சால நாட்டின் அரசன் ஆருணியுடன் உதயணன் பிரச்சோதனன் சார்பில் போரிட்டான். ஆருணி அடிமையாக்கி வைத்திருந்த கோசல அரசன் மகள் மானனீகையை விடுவித்துத் தன் மனைவி வாசவதத்தையின் பணிப்பெண்ணாக ஆக்கினான். மானனீகையின் பந்தாடும் திறன் கண்டு காதல்கொண்டு அவளை மணந்துகொண்டான். விரிசிகை முனிவரின் மகள் விரிசிகையையும் மணந்துகொண்டான்.

வாசவதத்தைக்கும் உதயணனுக்கும் பிறந்த மகன் நரவாண தத்தன். இந்த நரவாண தத்தன் காந்தருவ (வித்தியாதர) உலகம் சென்றான். அவ்வுலகத்தை வெற்றிகொண்டு அங்கு ஆட்சி புரிந்தான். இவன் மதனமஞ்சிகை என்ற பெண்ணை மணந்துகொண்டான். இதன் பின்னர் உதயணன், பதுமாவதியின் மகன் கோமுகனிடம் ஆட்சியை ஒப்படைத்தான். இறுதியில் துறவு மேற்கொண்டான். அவனுடைய தேவியரும் தவம் மேற்கொண்டார்கள்.

பழைய பிராகிருத மொழியான ஸௌரசேனியில் வாய்மொழி இலக்கியமாகவோ வழக்காற்றின் இலக்கியப் பிரதியாகவோ இருந்த பிருகத் கதையின் பிற்பகுதியில் ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சொப்பன வாசவதத்தம் நாடகத்தை பாஸன் சாதுர்யமாகப் புனைந்துள்ளார். உதயணன், வாசவதத்தை இருவரையும் பிரித்து வைக்க அமைச்சனாகிய யௌகந்த ராயணன் திட்டம் தீட்டி, முன்பாக, தான் இறந்துவிட்டதாகவும் பின்பு வாசவதத்தை தீயினால் மாண்டுவிட்டதாகவும் செய்தி பரப்புகிறான். இருவரின் பிரிவையும் தாங்காத உதயணன் மனம் கலங்கி, அக்கவலையை மாற்ற இராசகிரியத்தில் இருந்தபோது அந்த நகரத்து அரசன் தங்கை பதுமாவதியை மணக்கிறான். பின்பு தன் நகராகிய கௌசாம்பிக்கு வருகிறான். அங்கு, யூகியும் வாசவதத்தையும் மீண்டு வருவதைக் கண்டு உதயணன் மகிழ்ந்தான். இந்தக் கதைப்பகுதியை கற்பனை வளத்துடன் சுயமாகக் காட்சிகளைப் பின்னிப்பிணைத்து மாற்றி இணைத்து இரசமாக்கியுள்ளார் பாஸன்.

உண்மையில் வடமொழியின் பல நாடகங்கள், சொப்பன வாசவதத்தத்தின் நாடக வெளிப்பாடுகளையும் காட்சிகளையும் அப்படியே பின்பற்றியுள்ளன என்பதையே பெரும்பாலான முக்கிய சமஸ்கிருத நாடகங்களைப் படித்தபோது உணர முடிந்தது. காளிதாசனின் படைத்த மாளவிகாக்னிமித்திரம், விக்ரமோர்வசீயம், ஹர்ஷனின் ரத்னாவளி, விசாகதத்தரின் மிருச்சகடிகம் (பாஸனின் சாருதத்தம் என்ற நாடகத்தின் கதைதான் இந்த ‘மண்ணியல் சிறுதேர்’ நாடகம்) ஆகிய நாடகங்களில் வெளிப்படையாக இது தெரிந்தது. முன்னோரைப் பொன்னே போல் பின்பற்றுவதைப் பெருமையாகக் கருதிய காலகட்டத்தில் இது ஒன்றும் பெரிதல்ல. இன்றைய காலத்தில் என்றால் Plagiarism (இலக்கியத் திருட்டு) என்று தூற்றவோ அல்லது Intertextuality (ஊடிழைப் பிரதி) என்று சமாளிக்கவோ செய்வார்கள்.

இன்னும் ஒன்றையும் துணிந்து சொல்லலாம். ரிக்வேதத்தின் சில பாடல்கள், பஞ்சதந்திரம், கதாசரித் சாகரம், வேதாள பஞ்சவிம்ஸதி (விக்கிரமாதித்தன் கதை), வால்மீகி ராமாயணம், வியாச பாரதம், ஜைன ராமாயண மகாபாரதங்கள், பாஸனின் சொப்பன வாசவதத்தம், பிரதிமா, விசாகதத்தரின் முத்ரா ராக்ஷசம், மகேந்திரவர்மனின் மத்தவிலாசம், கங்காதேவியின் மதுராவிஜயம் இவை மட்டுமே நமது சமஸ்கிருத இலக்கிய ரசனைக்குப் போதுமானவை. ‘காலத்தை மீறி’ நிற்கக் கூடியவை இவையே என்று ‘பொதுப்புத்தி’யுடன் கூறத் தோன்றுகிறது. மீதி இல்லாவிட்டால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.

*

இராமாயண இதிகாசக் கதையின் வாய்மொழி இலக்கிய வடிவிலிருந்தோ வழக்காற்றின் இலக்கியப் பிரதியிலிருந்தோ இராமனின் பட்டாபிசேகம், தசரதன் புத்திர சோகத்தில் இறத்தல், இராமனின் வனவாசம், இராவணன் சீதையைக் கவர்தல் போன்ற முக்கியமான நாடகீயத் தருணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பிரதிமா நாடகத்தைப் பாஸன் சாதுர்யமாகப் புனைந்துள்ளார். இதில் பரதன் தன்நாடு திரும்புகையில் தசரதனின் பிரதிமையைக் காண நேர்ந்து நடந்த விஷயங்களைத் தெரிந்துகொள்கிறான் என்பதும் அந்தப் பிரதிமை இருந்த கோயிலிலேயே தன் அன்னையரைச் சந்திக்கிறான் என்பதும் தான் செய்யவுள்ள முடிவுகளை எடுக்கிறான் என்பதும் பாஸனின் அபரமான திருப்பமும் உச்சமும் கொண்ட நாடகக் காட்சியாகப் பாஸனால் புனைந்து படைக்கப்பட்டுள்ளது. இந்த நாடகத்தின் த்வனியோ, எக்காலத்துக்கு மான ரூபகமோதான் பாஸனின் படைப்புத்திறனின் சிகரம்.

பிரதிமா நூலுக்கு முன், பாஸனின் சொப்பன வாசவதத்தம் நூலை வெளியிடும்போது, உதயணன் கதை இன்றைய பொதுவாசகருக்குச் சரிவரத் தெரியாது என்ற நோக்கில், ஒட்டுமொத்தக் கதையையும் நாடகத் தருணத்தையும் பதிப்புரையில் விரிவாக விளக்கியிருந்தேன். ஆனால் பிரதிமா நாடகம், எல்லோரும் அறிந்த இதிகாசக் கதை என்பதால், அப்படியெல்லாம் விளக்கியுரைக்க அவசியம் இல்லாமல் போனது. இன்றைய வாசகர்கள் பாஸனின் பிரதிமா நாடகப் பின்னணியையும் அவரது நாடகீயத் தருணத்தின் தனித்திறமையையும் படித்துணர முடியும் என்ற நம்பிக்கையில் சுருக்க விளக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கேரளக் கூடியாட்டத்தில் இன்றும் பாஸனின் சமஸ்கிருத நாடகங்கள் சம்ஸ்கிருத மொழி பேசியே நிகழ்த்தப் பெறுகின்றன. பழைய மலையாள வரி வடிவத்தில் சுவடிகளில் இவை எழுதிப் பாதுகாக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு கூடியாட்ட முறையில் நிகழ்த்தப்பெறும் பாஸனின் எல்லா நாடகங்களையும் பதிவுசெய்து, ஜெர்மனியில் உள்ள வுர்ஸ்பர்க் (Würzburg) பல்கலைக்கழகம் ஆவணப்படங்களாக இணையத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழில் முன்பே சொப்பன வாசவத்தமும் பிரதிமா நாடகமும் தனித்தனியே மொழிபெயர்க்கப்பட்டு கலைமகள் காரியாலய வெளியீடாக வந்திருக்கின்றன. (ஸ்வப்ன வாசவதத்தம் – பிரதிமா (1949, 1956), ஜி. ஹரிஹர சாஸ்திரி. இவைகளை 1970களில் படித்து ருசித்தது. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இரண்டையும் சேர்த்து ஒரே நூலாக மறுவெளியீடும் செய்திருக்கிறது.) அவைகளைத் துணைக்கு வைத்துக்கொண்டும் மூல சமஸ்கிருத வடிவுடன் கூடியதும் தனியானதுமான ஆங்கில மொழிபெயர்ப்புகளைக் கொண்டும் மீண்டும் செம்மைப்படுத்தி அந்தப் பெருமைமிக்க இரு நாடகங்களையும் தமிழாக்கம் செய்து பதிப்பிக்கிறேன். பாஸன் மிகப் பின்புதான் கண்டுபிடிக்கப்பட்டார் என்பதும், அவரது படைப்புகளின் உலகப் பொதுமை குறைந்த இந்தியத் தன்மையின் பெருக்கமும் காளிதாசனுக்கு மேலாக பாஸனைக் கண்டுகொள்ள மேலை உலக இலக்கியத் தளத்திலும், வைதீக இந்திய இலக்கியத் தளத்திலும் வாய்ப்புகள் அமையாமல் போனது என்றே நம்புகிறேன்.

*

 1. சொப்பன வாசவதத்தம் (வடமொழி நாடகக் காவியம்), பாஸன். தமிழில் கால.சுப்ரமணியம், தமிழினி 2022, விலை ரூ.75.
 2. பிரதிமா (வடமொழி நாடகக் காவியம்), பாஸன். தமிழில் கால.சுப்ரமணியம், தமிழினி 2022, விலை ரூ.90.