விடிந்தால் கல்யாணம்.
“விரைவாக ஓட்டு!“ என்கிறார் முதலாளி.
குன்றுகள் இருக்கிற பகுதி. வளைவுகள் திரிவுகள் அதிகம். செப்பனிடப்படாத பாதை. நான் இடைவிடாமல் அல்லாடி முன்னேறிச் செல்வதை அவர் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்? ஆனால் நாளை கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து முடித்தாக வேண்டும். எனது பணிகளை மனதில் தொகுக்கும்போது எனக்கே மலைப்பு உண்டாகிறது என்றால், நாளை விஜயலட்சுமி கழுத்தில் தாலி கட்டப்போகிற அவருக்கு எவ்வளவு கெடுபிடிகள் அழுத்தும்? முக்கியமான பணிகளில் ஒன்றாக இருந்த காரியத்துக்கு இப்போது சென்றுகொண்டிருக்கிறோம். அது மங்களம் அக்காவை ஒதுக்கி நிறுத்துவது.
நிறைய சரிவுகளில் இறங்கினால் வருகிற ஒரு மறைப்பில்தான் அக்காவின் வீடு இருக்கிறது.
மரங்கள் மூடி, வெயில் விழாத அந்த வீட்டுக்குள் நுழைந்த உடன் முதலாளி மங்களத்தை இழுத்துப் போட்டுத் தாக்கினார். முஷ்டி மடக்கி, ஒரு பயில்வானை நேரிடுவது போல, கண்மூடித்தனமான குத்துகள். இதென்ன மல்யுத்தமா? மல்லாக்க விழுந்து கிடந்து கிரீச்சிட்டவளின் முகத்தின் மீது காலால் மிதித்ததில் அவளுடைய உதடு கிழிந்துவிட்டது. இரத்தமும் எச்சிலுமாக ஒழுகியது. அவள் சபதமாகக் கத்த முடியாமல் பேசுவது உறுமல் போலிருந்தது. அவளது அழகு குலைந்து அடிபட்ட நாய் போலத் தரையில் இழுபடுவது அவருக்கு ஆனந்தத்தை ஊட்டியிருக்க வேண்டும். தொடைகளைத் தட்டிக்கொண்டு சிட்டிகை போட்டார்.
மங்களம் அக்கா ஒரு விதவை.
மூலையில் ஒதுங்கி நின்று சிறுநீர் கழித்துவிட்ட அந்தப் பையன் அவளுடைய மகன்தான். மூன்றாவது படிக்கிறான். முதலாளிதான் படிக்க வைக்கிறார்.
அப்போது அவளது புருஷன் பேர் பெற்ற யோக்கியன். குடும்ப விலங்கு. அந்த மாதிரி பொண்டாட்டி, பாப்பாவை உருகினவன் யாரும் இருக்க முடியாது. அது தெய்வத்துக்குப் பொறுக்கவில்லை என்று பலரும் சொல்வார்கள். ஒருத்தன் எந்த மனக்கீறலும் இல்லாமல் சுத்த பத்தமாக வாழ்ந்து போய்விடுவதாவது? யாரோ டிக்கெட் போட கற்றுக்கொடுத்தார்கள். விளையாட்டாக இருந்தது. அதில் கொஞ்சம் காசு பார்த்த ஆவேசம், ஒரே வருடத்தில் அவனைச் சரித்தது. காலம் காலமாகச் சூதில் இருக்கக்கூடிய விதிகள் அவனைக் கரணம் போட வைத்தன. கடன்காரர்கள் கழுத்தைப் பிடிக்க நெருக்கும்போது இருந்த வேலையும் முடிந்துவிட்டிருந்தது. கட்டின மனைவி அவனைப் பொருட்படுத்தாமல் சீ என்றாள். சாப்பாடே இல்லாத போதும், முகமெல்லாம் வீங்கி மின்னிக்கொண்டிருந்தது. அப்புறம் ஒருநாள், இரண்டு நாள் அல்ல, பொழுதுக்கும் இரத்த வாந்தி எடுத்துக்கொண்டு விழுந்து கிடந்தான். ஒரு சுபதினத்தில் மாடுகள் இறங்கி ஊறுகிற அழுக்குக் குட்டையில் தண்ணீர் குடித்த பிறகு அந்த உயிருக்கு விடுதலை கிடைத்துவிட்டது.
ஒரு கேரள லாட்டரி டிக்கெட் புக்கிங் முதலாளி என்கிற முறையில் மங்களத்துக்கு அவர் உபகாரம் செய்ய விரும்பினார். நாளடைவில் அவளோடு படுத்துக்கொள்ளவும்தான். ஆயிரம் நோவுகளைச் சமாதானம் பண்ணிக்கொண்டு அலுப்பில் இருந்த மங்களத்துக்குச் சரணாகதி ஒரு தீர்வல்லவா? குப்பைத்தொட்டியில் கிடக்கிற அழுகின பழத்தை ஈக்கள் மொய்க்கிற பாங்கில் இருந்த ஆம்பிளை உபத்திரவங்கள் ஒழிந்தன. முக்கியமாக நோஞ்சான் குழந்தைக்குத் தேனும் பாலும் இறைச்சியும் ஊட்டினாள். அவள் முதலாளிக்காகத் தலை குளித்து, துளசி சூடி, அந்தியில் தீபம் பொருத்துவது அவ்வீட்டை ஒரு கோயில் போல எண்ணிக்கொள்ள வைத்தாலும், பையன் தூங்கிய பிறகு அவள் நடனமாட வேண்டும். அதற்கு முன் மிலிட்டரி ரம் இரண்டு லோட்டாக்கள். அவள் அந்த விதியை மட்டும் மீறிக்கொண்டு குடி பழகினாள். கலாரசனை மிக்க முதலாளி, அவள் அவ்வப்போது நடனம் தவறுவதை எச்சரிக்கை செய்துகொண்டிருந்தார்.
பல நாட்களிலும் அப்படி போடு, போடு, போடு சோபிக்கவில்லை என்று முதலாளி என்னிடமே வருந்தியிருக்கிறார். குடி வெறியில் மொத்த துணிகளையும் அவிழ்த்து வீசி ஆடுவது அவரைப் பொறுத்தவரை ஆபாசம். அதற்குக் கலை நுட்பங்கள் இருக்கின்றன என்பார் ஆழ்ந்த சிந்தனையுடன்.
எங்காவது வழி தவறிவிட்டோமா என்கிற ஒரு சந்தேகம் வந்தது.
லட்சுமியைப் பார்த்த அந்த நிமிடத்தில், அவர் மங்களத்தை ஒதுக்க முடிவுசெய்து காரணத்துக்குக் காத்திருந்தார்.
ஊர்ப் பெரிய மனிதர்கள் பலரும் வந்திருக்கிறார்கள்.
முதலாளி, மாதம் ஒரு தொகையைத் தருவதாக வாக்களித்தார்.
கூட்டு ரோடில் ஹார்ட்வேர்ஸ் வைத்திருக்கிற ராபர்ட் மட்டுமல்ல, இனிமேல் ஒரு ஆம்பளையும் இந்த வீட்டுக்கு வரக்கூடாது, முக்கிய நிபந்தனை அது. முதலாளி, தானும் வரமாட்டேன் என்பதையும் சொல்லிவிட்டார்.
“நான் எனது திருமணத்துக்கு அப்புறம் ஒரு குடும்பஸ்தனாக அடக்கம் காக்க விரும்புகிறேன்.”
புது மனைவியுடன் மந்திரிகளும் முந்திரிகளுமாக இருக்கிற பல சபைகளுக்கும் ஏறி இறங்கிப் பெருமிதம் கொள்ள அவரது மனம் துடிப்பதை எண்ணி வந்தவர்கள் யாவரும் கலங்கினார்கள்.
ஒருவர் மட்டும் மிகுந்த பணிவுடன் நொறுக்கப்பட்ட ராபர்ட்டின் கடைக்கு ஈடு கொடுக்க முடியுமா என்று தயக்கத்துடன் கேட்டார்.
ஒருவர் கல்யாணம் என்கிற புனித வழிக்குப் போகும்போது, அதில் அசூயைபட்டு, ஒரு பெண் கற்பு தவறியதைப் பெரிய மனிதர்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என்பதாக முதலாளி குரல் கமறிக் கேட்டபோது ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் நொறுக்கப்பட்ட கடையை ராபர்ட் திறக்கிற வரை காத்திருப்போம். மீண்டும் அது நொறுக்கப்படும். மற்றவர்களுக்கும்கூட ஒரு எச்சரிக்கை விடுப்பது நமது கடமை அல்லவா?
பலசரக்குக் கடையில் பட்டியல் போட்டுக் கொடுத்து இருந்ததைத் தயாராக வைத்திருந்தார்கள்.
ஜீப்பில் ஏற்றிக்கொண்டோம். இந்த முறை முன்பைவிட சிரமமான நிலை. மேடுகளை மெதுவாகத்தான் ஏற முடியும். சாயந்திரம் கனிந்து வந்தது. வெகு தூரத்தில் தெரிகிற அந்தப் பெருமலையின் சிகரத்தில் சூரியன் இறங்கிப்போக காலெடுத்துவிட்டான். காற்றில் குளிர் கூடிக்கொண்டு வருகிறது.
முதலாளி ஒரு இடத்தில் ஜீப்பை நிறுத்தி முகம் கழுவிக்கொண்டார். என்னிடமிருக்கிற சீப்பை வாங்கித் தலையைச் சீவிக்கொண்டார். என்னிடம் பாட்டு போடச் சொல்லி சீழ்க்கை அடித்துக்கொண்டே வந்தார். அவ்வப்போது உற்சாக மிகுதியால் தோள்களை அசைத்துக்கொண்டார். என்ன சொல்லுவது, ஒரு கட்டத்தில் என்னையேகூட பாசமாக அணைத்துக்கொண்டார். எனக்கும் சந்தோஷமாக வந்தது.
மளிகைப் பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தேன்.
லட்சுமியின் அம்மாவும் அம்மம்மாவும்தான் வந்து நின்றிருந்தார்கள். அது ஒரு வகையான பவ்யம். முதலாளியும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டார். சொல்ல என்ன இருக்கிறது? எல்லாம் மங்களத்தைச் சுற்றி வளைத்த கதைதான். கேட்பாரில்லை என்கிற ஒரு பின்னணி மட்டும் முதலாளிக்குப் போதும். இந்தக் குடும்பங்களின் கதையை விவரிக்கப் புகுந்தால் பொதுவாகவே அது கேட்ட கதைகளாகத்தானிருக்கும். வாழ்வில் தோற்றுப்போவது, இதில் என்ன புதுமையிருக்கிறது?
காரப் பணியாரமும் மாங்காய்த் தொக்கும் வைத்தார்கள்.
முதலாளி அதை வேண்டாம் என்பதாக மறுத்து, “நாளை நான் தாலிக் கட்டப் போகிறவளை வரச்சொல்லுங்கள். பார்க்க வேண்டும்” என்றார்.
பணியாரம் அவ்வளவு பிரமாதமாக இருந்தது. நான் நிதானமாகக் கடித்து ருசித்து விழுங்கினேன். இருந்தாலும் உள்ளே செல்லுவது சிரமமாக இருந்தது.
லட்சுமியை முதியவள் அழைத்து வந்தாள்.
அவளது அம்மா எங்கேயோ பார்த்துக்கொண்டு நின்றாள்.
லட்சுமியைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு மனசு வழுக்கும். ஐயா, அதற்கு இருப்பது தெய்வம் போல அழகு. அவள் நிற்பதைப் பார்க்க இந்தக் கண்கள் எல்லாம் போதாது. அவளது கண்களில் இருந்துவந்த கண்ணீர் பல்பு ஒளி மோதி மின்னிட்டது. அவள் அவருடைய முகத்தைப் பார்த்து நின்றாள். அவருக்குள் பொங்கிய அசட்டுச் சிரிப்பை மறைத்து கோணலாக நிற்பதில் இருந்து நிமிர்வில் நின்றார். ‘என்ன?’ என்பது போன்ற சண்டியப் பார்வை பார்த்தார். ஓர் அறை விடலாமா என்றும், அவளை இந்தக் கணமே மண்டி போட வைத்துவிடலாம் என்றும் அவருக்குள் ஓடியதை மறைக்கிற சிரமம் எனக்குப் புரிவதாக இருந்தது. குனிந்து ஒரு சாக்கைப் பிரித்து அதில் இருந்து ஒரு அச்சு வெல்லத்தை எடுத்து அவளுடைய வாயில் வலுக்கட்டாயமாகச் செருகினார்.
“சப்பிக்கொண்டிரு! காலையில் வருகிறேன்!”
அவர் அதற்கு மேல் எதையும் சொல்லவில்லை. அவளைத் தள்ளிவிட்டார். அவள் உள்ளே சென்றுவிட்டாள்.
நாளைய கல்யாண ஏற்பாடுகளைப் பற்றிக்கூட அவர்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இங்கே வந்து இந்தக் குடும்பத்தாரை அள்ளிக்கொண்டு சென்றுவிட வேண்டியதுதான். உலகளந்த பெருமாள் கோயிலில் அத்தனை விஷயங்களும் வரிசையாகவும் மும்முரமாகவும் நடந்து முடியும். ஜங்க்ஷனில் இருக்கிற காதர் சார்தான் புகைப்படங்களும் வீடியோவும் எடுக்கப் போகிறார்.
நான் உள்ளே சென்று கை கழுவிவிட்டு வந்து வண்டியை எடுத்தேன்.
அவர் கொஞ்ச நேரம் எதையும் பேசாமல் வந்தார். தான் சிந்தனையில் இருந்தேன் என்பதை நிரூபிக்கும் விதமாக அவர் தொண்டையைக் கணைப்பது தெரியும். சும்மாவேனும் செத்துப்போன முதல் மனைவியை நினைப்பதாகச் சொன்னார். அடுத்ததாக, டாக்டர் படிப்பு படிப்பதற்காக ஜார்ஜியா அனுப்பபட்ட தனது மகனை எண்ணுவதாகச் சொன்னார். பொய்தான். அவனுக்கு நாளைக்கு நடக்கப்போகிற திருமணத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். அது எப்படியென்று தெரியவில்லை என்று விசனப்பட்டார்.
கொஞ்சம் அமைதி.
அதிகமான இருள் பகுதியைக் கடந்துகொண்டிருந்தோம். இன்றைக்கு நிலா இல்லை. ஓரிரு பெருமூச்சுகளைக் கேட்டேன். அவருடைய முகம் சரியாகத் தெரியவில்லை.
“லட்சுமிக்கு உண்மையில் என் மீது கொள்ளை ஆசை!“
இதுதான் அவருடைய உண்மையான நெருக்கடி.
“பெண்களுக்கு மனதில் அவ்வளவு ஆசைகள் இருக்கும். வெட்கத்தால் அதை வெளியே சொல்ல மாட்டார்கள்!“
நான் இதில் தலையிட விரும்பவில்லை. சொல்லிக்கொள்ளட்டும்.
“மங்களம்கூட இதைக் கூறி இருக்கிறாள். அவள் பருவம் எய்தி மறைப்பில் உட்கார்ந்திருந்த போதே என் மீது கண் வைத்திருக்கிறாள். அன்பளிப்பு கொடுத்துவிட்டு நான்தான் கண்டுகொள்ளாமல் வந்துவிட்டிருக்கிறேன்!“
“ஓஹோ? அப்படியா? இது புதிய செய்தி!“
கண்டிப்பாக அவள் இதை ராபர்ட்டிடமும் கூறி இருக்கலாம். சிரிக்கிற குரல் கேட்டது.
“வாயில் வைத்துவிட்டு வந்தேன் இல்லையா? அந்த அச்சு வெல்லத்தை என்னை நினைத்தவாறு சப்பிக்கொண்டிருப்பாள்!“
சொன்னேனே, இருள், மேலும் இருள்.
லட்சுமியின் வாயில் இருந்த அச்சு வெல்லத்தை நான் இப்போது வாயில் வைத்து உருட்டிக்கொண்டிருப்பதை அவரால் பார்க்க முடியாது.
1 comment
அச்சு வெல்லம்
Comments are closed.