“நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகிற முப்பாட்டன் வீட்டின் முன்வாசலில் நூறாண்டுகள் தாண்டிய பெரியதோர் ஆலமரம் தழைத்து நின்றதை இன்று காலையில்தான் கண்டேன்” – ஜென் பாடல்.
புத்தனைச் சந்திக்க நேர்ந்தால் கேட்பேன். தியானமெல்லாம் வேண்டாம், துவராடை வேண்டாம், மழித்தலும் நீட்டலும்கூட. எந்தவிதமான துறவு நெறிகளும் வேண்டாம், சும்மா உங்களுடனேயே பயணிக்கட்டுமா என்று. மௌனமாக நடந்து போகக்கூடும். அப்படித்தான் செய்வார் என்று முதலிலேயே யூகித்துவிட்டதால் நான் கூடவே நடப்பேன். போகுமிடமெல்லாம் பின்தொடர்வேன். கூட்டத்தோடே வரும் ஆர்வமுள்ள தெரு நாய்க்குட்டியைப் போல. முழங்காலில் ஒட்டித் தொடரும் நாயுருவி போல. தலைக்குமேல் அடர்நீல வானத்து நிலவு போல.
புலர் காலை. கூதிர் பருவம் கடந்திருந்தது. வசந்தம் இதமாய் மேலோடி உடலைத் தழுவிப் பருகிப் பிரிந்தது மென்காற்றில் சார்ந்தூறிய இமயக் குளிர். இப்படி கற்பனையில் மட்டுமேயிருந்த புத்தரைப் பின்தொடரும் விழைவு அன்று நனவாயிற்று. வெகு இயல்பாக அனுமதி கிடைத்தது. அது அனுமதிகூட அல்ல. மிக இயல்பாக இருந்தது. வெறுமனே ஒரு தலையசைப்பு, ஆனால் அதிலொரு தீர்க்கத்தை உணர முடிந்தது. போய்க்கொண்டே இருந்தோம் கூட்டமாக. குறிப்பற்று கால் போனவாறு திரிவதாகத் தோன்றினாலும் ஒருவிதத் திட்டம் புலப்பட்டது.
எனது இருப்பை அவர் அறியவில்லை. ஆனாலும் பின்பார்வையில் என்னை அவ்வப்போது கண்டு ‘ஓ! கூட வருகிறேன் என்றவன்’ என்பது ஞாபகம் வர கடந்து போவார். சில நாட்களுக்குப் பிறகு தன் தியான உரையின் போதோ, யாரிடமாவது ஆழமாகக் கலந்துரையாடுகையிலோ, காலை நடை தியானத்தின் போதோ, பாத்திரம் ஏந்தி உணவுக்கென ஊருக்குள் மனவிழிப்புடன் நடக்கையிலோ, இரவு உறங்கிப்போவதற்கு முன்போ, நான் எங்காவது அண்மையில் இருக்கிறேனா என்று போகிற போக்கில் நோட்டமிடுவார். கண்டதும் அமைதியாகத் தான் செய்வதைத் தொடர்வார். ஊருக்குள் பிச்சை புகுவதில்கூட ஏகப்பட்ட விதிமுறைகள். சலிப்பூட்டும். அதற்கென்றே இப்படி தள்ளியிருக்க வேண்டியதாயிற்று. அவரைப் பற்றிய ஆர்வ மேலீட்டால் நான் அவரை அத்துனை நெருக்கமாகவும் துல்லியமாகவும் கண்ணுறுவதை அறிந்தும் அவர் மிக நிதானமாகத் தன் பணியைத் தொடர்வார்.
எனக்கு அவரைக் குறித்து தீர்மானமான கருத்துகள் ஏதுமில்லை. ஏன் இத்தனை பெரிய கூட்டம் அவரைத் தொடர்கிறது என்பதுதான் ஆகப்பெரிய கேள்வியாகத் திரண்டு நின்றது. கோசல ராஜ்ஜியத்தின் சாவத்தி நகரம் வணிகத்திற்கானது. பட்டுநூல் பாதையோடு இணைப்பு கொண்டிருந்தது. பாரசீகம், கிரேக்கம், சீனா, மங்கோலியா வழித்தொடர்பால் வணிகச் சிறப்பிருந்தது. பணப்புழக்கமும் வணிகப் பொருட்களும் மக்கட்கூட்டமுமாய் நள்ளிரவு வரையிலும் பரபரப்புடன் தென்படும் நகரமது. நாட்டின் முத்திசைகளையும் இணைக்கும் மையம். செல்வந்தர்களும் பரதேசிகளுமாய் நகரம் நிரம்பியிருக்கும். ஏன் மன்னர்களும் பிரபுக்களும் ராணியரும் மந்திரிகளும் அவரிடம் அடிபணிகின்றனர்? செல்வந்தர்களும் வர்த்தகர்களும்கூட அவரை அண்டுவதன் முகாந்திரம் என்ன? பரதேசிகளும் பாமரர்களும் பின்தொடர்வதன் நோக்கம்தான் யாது? இப்படி ஆச்சரியமூட்டும் கேள்விகளின் உந்துதல்.
அப்படி யார்தான் இவர், அவருக்கு வேறு வேலைகள் உண்டா? அல்லது இப்படி கூட்டிக் கிளம்பிப் போவதுதான் அவரின் பிரதான பணியா? அப்போது அவர் சாவத்தியின் ஜேத வனத்தில் தங்கியிருந்தார். அவ்வப்போது அண்மையிலிருந்த ராஜகராமா, பூர்வராமா ஆசிரமங்களுக்குப் போய் வந்தார். காலையிலும் மாலையிலும் மொத்தச் சீடர்களோடு ராப்தி ஆற்றில் நீராடிப் போனார். இக்கூட்டத்தை இழுத்துச்செல்வதன் மூலம் அவர் பெறப்போவதுதான் என்ன? ஒன்றும் அப்படி பெற்றுக்கொள்வதாகத் தென்படவில்லை.
மிக விடியற் பொழுதிலேயே எழுந்துகொள்கிறார். இரவு சீக்கிரமே தூங்கப் போகிறார். நாட்கள் தொடங்கி தட்பவெப்பம், பருவநிலை மாற்றங்கள் மிகக் குறைந்த விகிதத்திலேயே அவரது அன்றாடத்தில் தாக்கம் கொள்கின்றன. பெருமழை வெள்ளம், மணற்புயல், கடுங்கோடை, குளிர், நிலநடுக்கம் என நிகழ்ந்தால் ஒழிய. பிச்சையில் பெறப்படும் உணவைக் கொணர்ந்து யாவரோடும் பகிர்ந்துகொள்கிறார். நிழல்கொண்ட இயற்கையான வெளியிடங்களில் தியானிக்கிறார். அநாத பிண்டிகர் அன்பளிப்பு செய்த ஜேதவனம் போன்ற கட்டப்பட்ட ஆசிரம இடங்களைக் காட்டிலும் இப்படிச் சற்றே வனாந்திர அமைப்புள்ள இயற்கையான பகுதிகளையே அதிகம் விரும்புகிறார். கிடைக்கும் எந்த இடத்திலும், அமைதியான இடமென்றெல்லாம் கண்டுகொள்வதில்லை. வெளித்தலையீடுகள் குறைந்த இடமாக இருப்பது மட்டுமே போதுமானது. ஓரளவிற்குச் சுத்தமான நீண்ட நேரம் அமர, உரையாட, போதிக்க உகந்த இடம். அவ்வளவே வேண்டியிருக்கிறது. சில இடங்களைச் சுத்தம் செய்தும் குப்பைகளை, புதர்களை ஒதுக்கியும் தரித்தும் அமர ஏற்பாடுகள் நடக்கும்.
அப்படியானதொரு தயாரிப்புப் பணியில் அன்று நானும் இணைந்துகொண்டேன். அன்று அவரைத் தொடர்ந்து காட்டுப்பகுதிக்குள் சென்றதில் குதிகாலில் முள்ளேறிப் போனது. தொடர் நடையில் அது ஆழம் பாய்ந்து சீழ் பிடித்து இரணமாகிப்போக நடக்கமுடியாமல் ஓய்ந்திருக்க வேண்டியதாயிற்று. அப்பக்கமாகவோ என்னைத் தேடியோ வந்த உபாலி விபரமறிந்து உடன் மருத்துவர் ஒருவரைக் கூட்டி வந்தார். வெற்றுக்காலில் இதுபோன்ற காயங்கள் ஏற்படுவது சாதாரணமானது. அதனாலேயே ஒரு நீள் ஊசியையும் கூடவே காயம் ஆற்றும் மூலிகைப் பொடிகளையும் எப்போதும் கூட்டத்தவர் உடன் வைத்திருப்பர். ஒவ்வொரு குழுவிலும் ஓரிரண்டு மருத்துவர்கள் இருந்தார்கள். சீக்குக்கேற்ப மோர், பசு நெய், கோமியம் என்று சில மூலிகைப் பொடிகள் வைத்திருப்பார்கள். சாறு, எண்ணெய் கலந்து துறவியர்க்கும் பொது மக்களுக்கும் அவ்வப்போது சிகிச்சை மருந்தளித்தனர். முதலில் சில சொட்டு எண்ணெயைக் காயத்திலிட்டு பின் வலி மரப்பானதும் ஊசியால் மெல்லென முள்முனை அகற்றப்பெற மறுநாளே நடக்க முடிந்தது. நலம் விசாரித்த உபாலி அன்று அவருக்கும் முள் குத்தியது என்றும் ஆனால் அன்றே அம்முள்ளை நீக்கியதால் பாதகமற்றுப் போனது என்றார். அன்றன்றைய முட்களை அவ்வப்பொழுதிலேயே அகற்றுதல் அவசியம் என்றபடி முறுவலித்துப் போனார். உபாலி முன்னர் ஒரு நாவிதர். தற்போது மூத்த சீடர்களில் முக்கியமானவர், குறிப்பாக பெளத்த ஒழுக்க நெறிமுறைகளை வரையறுப்பதில். புத்தரின் பொருட்டு எதையும் தாங்கியும் பணிசெய்தும் கிடப்பவர்.
பெரும்பாலான அவரது உரைகளின் இறுதிச் சாரம் பொதுவாகத் தீயதை விலக்குவதாகவே அமையும். பிணி, மூப்பு, சாக்காடு என எவ்வுயிர்க்கும் மிகப் பொதுவான, சாதாரண வாழ் கூற்றுகள்தாம் அவரைத் துறக்கச் செய்தன என்றெல்லாம் பேசிக்கொள்வார்கள். தியானப் பயிற்சியென்றாலும் சரி, வேறு பொதுவான தனிமனிதச் சீர்மைகள் குழுவின் பொதுவான அன்றாட நடவடிக்கைகள் என எதுவானாலும் சரி, யாவற்றிலும் ஒருவிதத் தன்னுணர்வையும் அது சார்ந்த தனிமனித வாழ்முறைகளையும் சுட்டிக்காட்டுவதாகவே படும். இதற்கு ஏன் இப்படியொரு கூட்டம் சேர்கிறது என்பதுதான் இன்று வரையிலான விடைகிடைக்கா ஆச்சரியம்.
தோலாலும் ஓலைச்சுவடிகளாலுமான நூல்களையும் ஓய்வில் படிப்பார். அவை சாதாரணமாக எங்கும் கிடைக்காதவை. அரச வம்சங்களும் செல்வந்தர்களில் வெகு சிலரும் அரிய அறிவுச் சேகரமாக பொக்கிஷம்போல வைத்திருப்பார்கள். அவருக்கு அவை எப்படிக் கிடைத்தன என்று வியப்பு மிகும். துறந்தாலும் ராஜகுலத்தவரின் உள்ளோட்டம் இருக்கத்தானே செய்யும்? அவரது அறிவுத் தேடலும் மனவிரிவும் வாழ்நோக்கும் துறவுமுறையும் மேற்குணங்களால் நிரம்பி இயல்பிலேயே உயிர்களிலும் மனித வாழ்வியலிலும் கரிசனமும் அக்கறையும் வாய்க்கப்பட்டவராய் காணப்பட்டது சகஜம்தான். ஆனால் அவற்றைப் படிப்பதற்கே பேரறிவு வேண்டும். எளிமை கொண்டிருந்தாலும் அப்படித்தான் அவர் தென்பட்டார். அந்நூல்கள் கிரேக்கம், எகிப்து, பாரசீகம் போன்ற தேசங்களிலிருந்து பெறப்பட்டவை. அவற்றின் லிபிகளை அவர் அறிந்திருந்தார். அரச குலத்தவர் மொழியாக்க வல்லுநர்களைக் கூடவே வைத்திருப்பார்கள். அவர்களோடான பரிச்சயம் போலும்.
என் அப்பாவும் மலர்களிலிருந்து பெறப்படும் வாசனை மூலிகைப் பொடி, எண்ணெய், தூபங்கள் முதலியவற்றைப் பாரசீகம், கிரேக்கம், துருக்கி போன்ற தேசங்களுக்கு வர்த்தகம் செய்கிறவர் என்பதால் அந்நூல்கள் அப்பாவின் பொக்கிஷ அலமாரிகளில் மறைந்திருக்கும். ஓய்வுக்காலங்களில் அப்பாவின் தோழமைகளுடன் அளவளாவுகையில் அறிவியல், பூகோளம், வானியல், கணிதம், தர்க்கம், தத்துவம் என்றெல்லாம் பேச்சுகள் நீளும். ரப்தி ஆற்றில் குளிக்கையில் ‘நீ எந்த ஆற்றில் குளிக்கிறாய்? இது ரப்தியா வேறெதுவுமா? நீ நீயேதானா, வேறாரோவா?’ என்று ஹிராக்ளிட்டஸ் கூறியதை வைத்து கேலி பேசி தத்துவார்த்த வார்த்தைகளில் விளையாடுவார்கள்.
நேரமிருந்தால் நிறையப் பேசுவார்கள். படைத்தவன், படைப்பு என்பது அவர்களுக்கு ஏற்கெனவே பழங்கதை ஆகிவிட்டிருந்தது. படைத்தவன் என்கிற கருத்தாக்கம் தாண்டி இயற்கையின் கூறுகளைத் தரிசிப்பதே சிறந்தது என்கிற இயல் தத்துவம் கிரேக்கத்தில் பிரசித்தி பெற்றிருந்தது. கிரேக்கத் தத்துவம் ‘இங்கே ஒன்று எப்போதுமே இருந்து வருகிறது’ என்பதை நம்பியது. அனாக்சிமாண்டர், ‘இவ்வுலகம் போலப் பல்லுலகங்கள் இப்பிரபஞ்சத்தில் உண்டு. தோன்றிய யாவும் வரையறைக்கு உட்பட்டவை; எல்லையற்றதில் உலகங்கள் உருவாகிப் பின் அதற்குள்ளேயே அமைகின்றன’ என்று பேசினாராம். ‘இயற்கையின் பண்புகளை உய்த்தறிவதே மெய்யறிவு என்று பேசப்பட்டது. புலனுணர்வு நம்பகமானதல்ல. எதுவும் மாறுவதில்லை; நமது புலனுணர்வு நம்பகமற்றது’ என்ற பார்மனைட்ஸ், ‘புலனுணர்வின் வழி நாம் காணும் மாற்றம் நிஜமே; மாற்றமின்றி எதுவுமில்லை’ என்ற ஹிராக்ளிட்டஸ் ஆகியோரின் தத்துவார்த்தங்கள் சமீபத்தில் பேசப்பட்டு வந்தன. ஆனால் இவற்றைத் தாண்டி மிக இளைஞனான எம்பிடாக்ல்ஸ் சமீபத்தில் புதிய சிந்தனையை உருவாக்கினார் என்று அப்பாவின் நண்பர் தண்டபாணி ஒருமுறை விளக்கமளித்தார். பூமி, காற்று, நீர், நெருப்பு என நான்கு தனிமக்கூறுகளே யாவும், உயிர்கள், பிரபஞ்சம், கோள்கள் எல்லாம். அவை கூடிப்பிரிவதே இருப்பும் இல்லாமையும். அது சுழற்சி கொள்கிறது என்கிற விஞ்ஞானக் கூற்று அன்று அப்பாவுடனிருந்த யாவரையும் திகைக்க வைத்துக்கொண்டிருந்தது.
மிக அரிய சந்தர்ப்பங்களில் தாம் படித்தவற்றைப் பற்றி மொக்கலண்ணா, பூர்ண மைத்ரேயபுட்டா, சாரிபுட்டா போன்றோருடன் அவர் பகிர்வார். புத்தரின் போதனைகளைப் பொதுவில் விளக்கி விவாதிப்பதில் பூர்ணர் திறமைசாலி. புத்தரே வியப்புறுவார் என்பார்கள். நிறைய விவாதிப்பார்கள். கடைசியில் இங்கே இக்கணம் என்னவோ அதுவே இருப்பாகிறது என்றபடி உரையாடல்கள் நிறைவுறும். பின்னர் தியானத்திற்கோ உறங்கவோ செல்வார்கள். அறிவியல், தத்துவ விவாதங்கள் தாண்டி இந்தச் சின்னக் குழுக்களுக்கு அவர் காட்டும் வழிதான் என்ன என்றிருந்தது. உலக ஞானம் அனைத்தையும் அறிந்துகொள்கிறார். அதுபற்றி கலந்துரையாடுகிறார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் உலக நூல்களைக் கவனமாகப் படித்தாய்கிறார். பின்னர் இருப்பு, துறவு, பிச்சை, சீலம், சார்புறு பண்பு என்றும் தொடர்ந்து ஆழ்தவம், விழிப்பு, நிர்வாணம், ததாகதம், பிரக்ஞை என்று சுவாச ஆற்றலை மையமாக வைத்து தியான நிலைகளைப் பேசுகிறார். ஆழ்த்தியான ரூப அரூப ஜான நிலைகள், மெய்யறிவின் கனிகள் என்கிறார்.
சம்பந்தமற்ற இரு தடங்களில் பயணிக்கிறார். ஒற்றைக் கோட்டில் வழிகாட்டுகிறார். வர்த்தமானர், வேத ரிஷிகள் போன்ற சமகாலத்து ஞானியரைப் பற்றி அறிந்திருந்தாலும் வினவினாலொழிய அதுபற்றி கருத்தேதுமற்றவராய் காணப்படுகிறார். என்றாலும், சமகால விஞ்ஞானியர், மெய் ஞானியர் யாவரிலும் வித்தியாசம் கொண்டிருக்கிறார். அதன் பூடகத்தன்மையை உணர முடிகிறது. அறிவுக்குள் நுழைய மறுக்கிறது. சலிப்பேற்பட்டாலும் அவரைவிட்டு விலக முடியாதோர் ஈர்ப்பும் நாட்டமும் நீங்காதிருக்கிறது.
சாவத்தியின் ஜேத வனத்தில் தங்கியிருந்த சமயமது. சுந்தா, ரேவதா, நந்தா ஆகியோர் கூடிப் பேசிக்கொண்டிருந்தனர். யாரோ ஒரு நகரத்துப் பெண்மணி தன் ஒரே மகனை நோய்க்குப் பறிகொடுத்து அரற்றிப் புலம்பியபடி கூட்டத்தில் வந்து ஒப்பாரி வைத்தாள். கூட்டம் சேர்ந்தது. புத்தரை உடனே கூப்பிடும்படி அழுதாள். பிள்ளை இறந்ததால் கிட்டத்தட்ட கிறுக்காகிப் போயிருந்தாள். தோளில் கிடந்த மகனைத் தரையில் மெல்லக் கிடத்தினாள். கூட்டம் விலக சற்று நேரத்தில் புத்தர் அமைதியுடன் அவளையும் அக்குழந்தையையும் நோக்கி வந்தார். சில பெருமூச்சுகள் எழுந்து அடங்கின. ஆனால் எப்பக்கமும் பாராமல் அவளின் வேதனையையும் மிகு புலம்பலையும் அமைதியுடன் ஆழ்ந்துணர்ந்தார்.
அவள் மிக நொய்ந்து காணப்பட்டாள். வறண்டு அலங்கோலம் கொண்டிருந்தாள். பல நாட்களாகச் சாப்பிடாமல் இருந்திருப்பாள் போல. குடிக்கத் தண்ணீரும் கனிகளையும் கொடுக்கச் செய்தார். அவள் ஆசுவாசம் கொண்டாள். எப்போதனை உரைகளுமில்லை. அமைதி, அமைதி, அமைதிதான். ஆனால் அதில் வெகுவான விழிப்பின் மிகுதி புரிந்தது. அப்படியே சில மணி நேரங்கள் போயிற்று. அவள் என்ன கேட்க வந்திருக்கிறாள் என்பது எல்லோரையும்விட அவருக்கு முன்னரே புரிந்து போயிருந்தது என்றெண்ணுகிறேன். அவள் அவரையும் தன் பிள்ளையையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள். அவர் அமைதியுற்றிந்தார். பிறகு வெறுமனே தரையை வெறித்துக்கொண்டிருந்தார்.
குழந்தைக்கான இறுதிச் சடங்கிற்கோ புதைப்பதற்கோ அவள் பணம் கேட்பதாக முதலில் பட்டது. தன் பிள்ளைக்கு உயிர் கேட்கிறாள் என்று புரிய சற்றே தாமதமானது. ஆரூடத்தின்படி அப்பிள்ளை ஆளப்பிறந்தவனென்றும் ஒரு சிற்றரசனாகவேனும் திகழ்வான் என்றும் நீண்ட ஆயுளும் செல்வமும் புகழும் கொண்டவனென்றும் கூறப்பட்டுள்ளது. எனவே அப்பெண்மணி மகனின் அகால மரணத்தை மறுக்கிறாள். மன்றாடுகிறாள் என்று பிறகே புரிந்தது.
அவரின் நீண்ட மௌனத்தின் அர்த்தம் அவளுக்குப் புரிய வாய்ப்பில்லை என்று தோன்றிற்று. கொஞ்ச நேரத்திற்கு முன்னர்தான் தான் கடந்து வந்த சாவத்தி ஊரெல்லையின் தொடக்கத்தில் அவசர அவசரமாகத் தூக்கிக்கொண்டு ஓடி வருகையில் தலை சரிந்து போனான் என்றாள். குழந்தையை உற்று நோக்கினார். அவள் சற்றே ஆறுதல் அடைந்தாள். அவ்வேதனையிலும் ஊக்கம் கொண்டாள். குழந்தையைத் தொட்டுப் பார்த்தார். அவளை அருகழைத்து தலை வருடினார். அவள் மீண்டும் அரற்றினாள். செருமினாள். அவளது தேம்பலைத் தளர்த்தினார். அவள் உவப்படைந்தாள். சீவகர் மூலிகைகள் தேடி அண்மை காட்டிற்குப் போயிருந்தார். அவருக்குப் பெருங்காடுகளில் வசிக்கும் வனவாசிகளிடம் நல்லுறவிருந்தது. மூலிகைகளை அடையாளம் காணவும் காணுயிர்களிடமிருந்து பாதுகாப்புக்கெனவும் அவரோடு கூடவே இருப்பார்கள். சீவகருடன் சில துறவியரும் சென்றிருந்தனர். ஓரிரு வார காலமாகும் திரும்பி வர. உபாலி ஓடிவந்து குழந்தையைப் பரிசோதித்துவிட்டு புத்தரே பேசட்டுமென மௌனமாய் விலகி நின்றார்.
இது எப்படிச் சாத்தியமாகும் என்று சட்டென எரிச்சலும் சற்றே கோபமும் வயிற்றில் சுரந்தது. பார்ப்பவருக்கே இப்படி என்றால் அவளுக்கு எப்படி இருக்கும் என்றிருந்தது. இதைச் சொல்வதென்றால் இவர் எதற்கு என்று வெறுப்பும் அவர் மேல் இன்னும் சற்றே பகையும் கோபமும் ஆனது. அவர் மீண்டும் தலை தாழ்த்திக்கொண்டார். எந்த இறப்பறியா வீட்டிற்குச் சென்று வெண்ணெள் மணிகளைப் பெற்று வருவது? செய்தியைக் கேட்டறிவது?
இப்படி நயமற்று சான்றோரன்ன ஒருவர் செய்யக்கூடுமா? இவரை எப்படி ஞானி என்பது? இம்மாதிரியான ஒருவரைப் பின்பற்றுவது அறிவீனமன்றோ என்றிருந்தது. இப்படியொரு இயற்கைக்கு மாறான ஒரு வேலையை, அதுவும் தன் ஒரே சின்னஞ்சிறு குழந்தையை உயிர் பிழைப்புக்கென ஓடோடிக் கொண்டுவந்து மனம் பேதுற்று கண்முன்னே தரையில் கிடத்தினால், இப்படியொரு பெருஞ்சங்கடத்தைத் தருவானேன்? கொந்தளிப்பும் பேதலிப்புமான அச்சமயத்தில் ஆறுதலோடேயே நிறுத்தி இருக்கலாமே? தன்னால் இயலாதென்று கூட்டத்தை விலக்கிச் சென்றிருக்கலாமே? யாரும் ஏதும் வித்தியாசமாக நினைத்திருக்க மாட்டோமே? இப்படியொரு காரியத்தைச் செய்ய எப்படி இவருக்கு மனம் வந்தது? மூர்க்கம் கொண்டது என் உடலும் மனமும். அப்பெண் தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அழுதபடியே ஊர்ப்பக்கம் தளர்ந்து நடந்தாள். அவளுக்கும் தெரியும் போல. இது ஏதோ ஆறுதல் வார்த்தை என்று. ஆனாலும் உடன்பட்டுப் போனாள்.
எதற்கு இப்படி இவரோடு கிடந்தொழிவது என்றிருந்தது. பேசாமல் பலராம்பூரிலுள்ள மஹேத்துக்கே போய்விடலாம் போலத் தோன்றிற்று. இனியும் அங்கிருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்வெழுச்சியோடு நான் வெளியேறினேன். கூட்டத்தினர் மெல்லக் கலைந்தனர். ‘பாவம் கிச கோதமி, எப்படி வாழ்ந்தவள்’ என்று அரைகுறையாய் பொருமல்கள் செவிபட்டன. அவர் அவளைப் பின்தொடர்ந்து கொஞ்ச தூரம் நடந்தார். அவளின் போக்கையே கண்ணுற்றார். கழனி வெளி தாண்டி ஒரு மண்மேட்டில் ஏறி அவளின் திசையையே பார்த்திருந்தார். மெல்ல அங்கிருந்த மொட்டைப் பாறையொன்றில் அமர்ந்தார். அவளுரு கண் மறைவான பின்பும் அத்திசையிலேயே அவர் ஊன்றிப்போயிருந்தார். என்னதான் நினைக்கிறார் என்று குழப்பமாகவும் அவரது ஆழ்நோக்கின் இரகசியமும் புதிராய் இருந்தது.
விரிந்த இரவின் துணுக்கு நட்சத்திரங்களுக்குக் கீழே அமைதியற்று அலைந்தது மனவோட்டம். அண்மைத் தோப்பில் குயிலொன்று தன் இலயிப்பில் குரலிசைத்தது. செப்பிடுவித்தைக் குடும்பமொன்று ஒருமுறை ஊரில் சில வாரங்கள் தங்கி சாகசம் காட்டியது. ஓய்ந்த இரவில் அவ்வித்தைக் கூட்டத்துக் கிழவர் ஒருவர் மூப்பின் குரல் நடுக்கத்தோடு நாடோடிப் பாடலொன்றைக் குரலெடுத்தார்.
‘கூடு கட்டுவதல்ல யாம் பொறுப்புற்ற பணி
பரவசத் தருணங்களில்
தோன்றியபடி பாடிக் கிடப்பது
கைகூடி அமைந்தால்
உணர்வெழுச்சியில் ஒருமனதாகப்
பிணையைக் கூடிக் கலப்பது
பசி போக்க கொஞ்சம் உண்பது
நேரமிருந்தால் உண்ணலைச் சுவைப்பது
அன்றைக்கான தீனி இன்றேல்
அப்படியே கழிப்போம்
நீரைப் பருகிக் கிடப்போம்
யாக்கை சரியும்வரை
பொறுப்புகள் ஏதும் விதிக்கப்படவில்லை
உயிர்ப்போடு இருப்பதே
வெகுமதியான பெரும் பொறுப்பு
அவற்றால் பாடக் கூடுதில்லை
எமக்குக் குடம்பை கட்டத் தெரியவில்லை
பரந்து விரிந்த உலகின்
புக்கில் நுழைந்து தங்கப்போக
உரிய இடம் வாய்க்குமோ?
புகலிடம் விட்டுப் போவதற்கு
பாடித் திரிவதன்றி
மரக்கிளையில் கட்டி வைப்பதென்ன?
எனவே பாடுகிறேன்
கூடு கட்டுவதல்ல யாம் பொறுப்புற்ற பணி’
ஏறவே முடியாத மலையின் அடிவாரத்தில் எழக்கூடாமல் உடலைக் கிடத்தியபடி வயது முற்றிக் கிடக்கும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் ஓலமாய் ஒலித்தது. ஓய்வுக்கென வாய்க்காலோர புல்பரப்பில் தலைத்துண்டு விரித்துப் படுத்திருக்க தோளில் உடலைச் சுமந்து கண்ணீரும் புலம்பலுமாய்க் கிடந்த அப்பெண்மணி தோன்றிக்கொண்டே இருந்தாள். அவளின் எண்ணம்தான் என்னவாக இருந்திருக்கும்? அவரைச் சபித்திருப்பாளா? அவளுக்குப் புரியவே இல்லையா? உண்மையிலேயே அவர் சொன்னதைச் சிரத்தையுடன் உடனேற்று எள் மணிகளைக் கேட்கப் புறப்பட்டுப் போனாளா? அப்படியெனில் திரும்ப வருவாளா? உண்மை உணர்ந்தால் எப்படி திரும்ப வருவாள்? திட்டிச் சபிக்கவன்றி வேறெதற்கு அவள் வரவேண்டி இருக்கும்? அப்போதும் அவர் அப்படியே மௌனமாக அமைதி காப்பாரா? என்னதான் நடக்கிறது, நடக்கப்போகிறது? விளங்கவில்லை.
என்றாலும் அவள் போன திசை பற்றி நின்றாரே, எதற்காக? எதோ ஒன்று அவரை ஆழத்துக்குக் கொண்டுசென்றதே, என்ன அது? யோசித்துப் பார்த்தால், அவளது துக்கம் அவரின் மேல் படர்ந்திருந்ததை உணர முடிகிறது. அவளது துக்கத்தில் மிக ஆழ்ந்து போயிருந்தாரே! தன் துக்கமென, தன் வலியும் இழப்புமென. அப்படி என்றால் எள் மணிக்கான உள்ளர்த்தம் என்னவாக இருக்கும்?
அவள் மனதில் அவர் விளைக்க எத்தனித்தது என்னவாக இருக்கும்? அது எப்படியாக விருட்சப்பட அவர் முனைந்தார்? ஏதும் தோன்றாமல் அவர் தங்கியிருந்த திசையில் திரும்ப தூரத்தில் அவரின் குடிசை ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னும் தூங்காதிருக்கிறார் போலும். அவர் என்னைக் காணாது தேடியிருப்பாரோ? இருவரின் தூக்கத்திலும் அவளே திரிகிறாள். இச்சாதாரண உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிறாள். பிரபஞ்சத்தில் இறப்பு நிகழாத பிராந்தியம்தான் எது? எழுவதனைத்தும் அமிழ்ந்து போகிறதே? தற்காலிகம்தான் வியாபித்திருக்கிறது எங்கும்.
எத்தனை அற்பமான பேருண்மை. எங்கும் காணக் கிடைப்பது. பார்ப்பதற்குத்தான் கண்கள் விழித்திருக்க வேண்டும். இது அவளுக்குத் தெரியும். அவருக்கும் தெரியும். யாவருக்கும் தெரியும். ஆனால் தெரிந்ததைத்தானே ஏற்றுக்கொள்ள இயலாது மனம் மயங்கித் தவிக்கிறது. அவரவர் அறிந்தது உண்மை எனின் யாவரும் அறிந்ததே பேருண்மையோ?
பின்னிரவானது. திடீரென்று ஆள்காட்டிப் பறவையொன்று காற்றுவெளியைக் கீறியபடி கத்தியோடியது. எதற்கு அது அப்படி கூச்சலிட்டுப் பறக்கிறது? தெரியவில்லை. அதற்கிருந்த புதர்வீட்டைத் தொலைத்துவிட்டதா? வழி மறந்து தவறிற்றா? வலியுற்றுப் போனதா? என்னதான் அதற்குப் பிரச்சினை? தெரியவில்லை.
பின்னெதற்கு இத்தனை யூகங்கள்? அப்பறவைக்குத்தான் தெரியும் என்ன ஆயிற்றென்று, ஏன் பதற்றம் என்று. அப்பறவை இங்குள்ள மனிதரிடம் தனக்கான வழியைக் கேட்டால் என்ன செய்வது? பறவை மொழி தெரிந்தால் ஒழிய அதற்கு உதவ முடியாது. ஒருகால் அவருக்கு அவளது மொழி தெரியுமோ?
அதனால்தான் பறவைகளும் விலங்குகளும் மரங்களும் புலம்புவதில்லையோ? அது அறியாததின் ஞானமோ? பிற உயிரினங்களைப் போல மனிதர்க்கு வாழ்வோடு ஒப்புக்கொடுக்க முடியாததுதான் மானுடச் சாபமோ? அதனால்தான் தேடித் தேடித் திரிகின்றனரோ? மனிதர்க்கு அறிந்துணர்ந்ததின் வழியான ஞானம் மட்டுமே கை கூடுமோ?
சாதாரணத்தின் நித்தியத்தன்மையும் அதை ஊன்றி ஆய்ந்துணர்கையில் அதன் மெய்ஞான சாத்தியங்கள் புலப்படுகின்றன. மிகச் சாதாரணமான, உயிர்க்குப் பொதுவான வாழ்வியல் கூற்றுகளை அறிந்துணர்ந்ததின் தன்னுணர்வு நிலைதான் அருகதமோ? இருப்பின் அருபச் சாரத்தில் நின்று சாதாரணங்களின் மேலான சாத்தியங்களின் நிகழ்வுகளை விழிப்புடன் உற்றறிதல்தான் மெய்ஞானமோ? மாறிக்கொண்டே இருக்கும் இருப்பின் பேருண்மையில் திளைப்பதுதான் நிர்வாணமோ? இவ்வாழ்வின் இருப்பை எத்திரைகளும் அடையாளங்களுமற்று அப்படியே தரிசித்து ஒன்றற அல்ல ஒன்றெனும் உணர்வற்ற சூனியப் பேரறிவுப் பிரக்ஞையாகத் திகழ்வதுதான் சன்மார்க்கமோ?
அப்பறவைக்கு எப்படி ஆறுதல் தருவதென்று உண்மையிலேயே தெரியவில்லை. தெரியவில்லை என்பதிலிருந்தே தொடங்க வேண்டி இருக்கிறது நாட்களை, இக்கணங்களை?
ஹிராக்ளிட்டஸ் கூற்று நினைவுக்கு வந்தது… இரண்டாவது அடியெடுப்பல்ல, முதல் அடியெடுப்பிற்குள்ளாகவே அதே ஆற்றின் நீர் நம்மைவிட்டு ஓடோடி விடுகிறது என்று தோன்றிற்று. இதுவென்று எதையுமே பிடித்து வைக்க முடியாத நீளிருப்பு. அப்பெண்மணி பிடித்து வைக்கப் போராடுவது எதை? புத்தர் அவளைத் தேட வைப்பது எதை? மெய்ப்பொருள் காண்பது பேரறிவாமோ? மகா காசப்பரைப் போலொரு முறுவலிப்பு படர்ந்தது.
கிச கோதமி வருவாளா, தெரியவில்லை. போய் நாளை பார்க்கலாம் என்றுறுதி கொண்டது மனம். காற்று சுகம் தந்து நகர்ந்தது. மேகங்களும் நட்சத்திரக் கோள்களும் இடம் மாறின. இடம் மாறாமல் படுத்துறங்கப் பார்த்தது உடல். புரண்டு படுத்து உறக்கத்தில் ஆழ்ந்தது விழிப்பு. எஞ்ஞான்றும் இருப்பதற்கோர் இடமற்றுத் திகழ்வதை உய்த்தறிவதே மெய்ஞானப் பேறோ! இல்லற்ற நிலையே நிர்வாணமோ!
1 comment
Human creativity is amazing. No words. Excellent in writing. Congratulation to Mr. Amalan. God bless you sir.
Comments are closed.