பூட்லேரைப் பொறுத்தமட்டில் அவருடன் தொடர்பிலிருந்த பெண்களுடனேயே ஒருவர் ஆரம்பிக்கலாம். லே ஃப்லேர் டு மால் (Les Fleurs du Mal, The Flowers of Evil) தொகுதியின் முதல் கவிதை ஒரு தாயின் குரலில் தொடங்குகிறது, அனைத்துப் பெண்களின் விதிகளிலிருந்தும் தனக்காக இந்தப் பிரத்யேக விதியைத் தேர்ந்தெடுத்ததற்காக, முஷ்டியை மடக்கியபடி கடவுளிடம், கோபத்துடன் மன்றாடுவதைப் போல் அது தொடங்குகிறது:
“Since I was chosen of all my sex
bring this scandal to my bed and board
and since I cannot toss the stunted freak
as if he were a love- letter, into the fire“
இவ்விழிவை என் படுக்கைக்கும் உணவு மேஜைக்கும் கொண்டுவர
என் இனத்தில் நான் மட்டுமே தேர்வுசெய்யப்பட்டிருப்பதால்
வளன்குன்றிய இக்குரூபியை, அவனேதோ காதல் கடிதம் போல்
தீயில் என்னால் கடாச முடியாததால்..*
தாயுடனான பூட்லேரின் உறவு சற்றுச் சிக்கலானது, விநோதமான அந்தத் தாய்-மகன் நாடகத்தில் அவர் தாய் (குறைந்தபட்சம் அவரது மனதில்) பல வேடங்களில் நடித்தார்- தாய், புரவலர், க்ரியை (Muse, மியூஸ்), காதலி, இப்படிப் பல… பூட்லேரின் தந்தையின் மரணத்திற்குப் பின், அவரைவிட முப்பத்து நான்கு வயது மூத்தவரான மேஜர் ஜெனரல் ஆபிக்- உடனான தாயின் அவசரமான இரண்டாவது திருமணத்தைப் பூட்லேர் இறுதிவரை ஏற்க மறுத்தார் என்பதைச் சரிதை நமக்குத் தெளிவாகவே காட்டுகிறது. Fleurs-இன் பாரிசியன் காட்சிகள் பகுதியில் ‘நான் மறக்கவில்லை’ என்றவோர் அற்புதமான கவிதை வருகிறது, அது வெறுக்கப்பட்ட இரண்டாவது திருமணத்திற்கு முன்பு அவர்கள் (அதாவது தாயும் மகனும்) ஒன்றாகக் கழித்த நேரத்தை நினைவுகூர்கிறது, முடிவில்லாத அம்மாலைகளில் ஒவ்வொரு சாளரத்தையும் பற்றவைக்கும் சூரியன்:
“seemed like a wide eye in the wondering sky,
to contemplate our long silent meals
kindling more richly than any candlelight
the cheap curtains and much laundered cloth.“
வார்த்தைகளற்ற நம் நீண்ட உணவுவேளைகளை அசைபோட்டபடியே
எந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தைக் காட்டிலும் செழிப்பாக
மலிவுத் திரைச்சீலைகளையும் தோய்த்து நொய்ந்த துணியையும் ஒளிர்வூட்டுவதற்காக
வியக்கும் வானத்தில் அகல்விழி போல்…
மகிழ்ச்சி என்று சொன்னால் பூட்லேரைப் பொறுத்தமட்டில் இதுவே அதிகபட்சம். இங்கேயும்கூட, காரைப்பூச்சு தெய்வங்களின் வெற்றுக் கரங்களையும், சில்லொடிந்த வீனஸ் சிலையையும் நாம் கவனிக்கத் தவறவில்லை. மேலும் அடுத்தக் கவிதையே அந்த “சில்லொடிந்த வீனஸிடம்”:
“You used to be jealous of our old nurse
who sleeps warm heart and all beneath the sod“
புல்பற்றைக்கடியே கனிவான நெஞ்சுடன் உறங்கும்
நம் முதிய செவிலியைப் பார்த்து நீ ஒருகாலத்தில் பொறாமைப்பட்டாய்
என்று ஞாபகப்படுத்துகிறது. இதுபோக, ஒளிவுமறைவாகவும் கண்ணியமாகவும் ஒருங்கே தொனிக்கும், இது ஏதோ கள்ளக்காதலர்களின் சந்திப்பைப் போல், யாருக்கும் தெரியாமல் அவள் அவரை லூவரில் இரகசியமாகச் சந்திக்கவேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள். ஏனெனில் “பாரிஸில் அரட்டையடிக்க இதைவிடச் சிறப்பான இடம் கிடையாது; சலிப்புறாமல் காத்திருப்பதற்குத் தோதான சூடு செய்யப்பட்ட அறைகள், அனைத்திற்கும் மேலாக ஒரு பெண் பிறரைச் சந்திப்பதற்கு ஏற்ற கௌரவமான இடம்.”
காதல் (அதன் அனைத்து அர்த்தங்களிலும்), அன்பு, மரியாதை, நினைவேக்கம், குற்றவுணர்வு, ஊக்கம், இவை அனைத்தும் கலந்த கிறுகிறுக்க வைக்கும் பானகம்தான், பூட்லேர் தன் தாய்-வாணியிடம் கொண்டிருந்த இந்த விநோதமான உறவு. மோன் கேர் மீ அன்யூ (Mon coeur mis a nu, அப்பட்டமான என் நெஞ்சம்) போன்ற கவிதைகளில் கடவுளுக்கு அவர் விடுக்கும் வேண்டுகோள்கள் இதையே காட்டுகின்றன: “என்னை என் அன்னையைக் கொண்டும் / என்னால் என் அன்னையையும், தண்டிக்காதே.”
இறுதியில், வளர்ச்சி குன்றிய இயற்கைக்குப் புறம்பான அக்காதல் கடிதம் அதன் கருவறைக்கே திரும்பும் அந்தச் சோகமான முடிவு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, இரண்டு முறை விதவையான தாயால் பராமரிக்கப்பட வேண்டிய அவல நிலை…
“அழகைக்” கைப்பற்றுவதற்காக, பரிபூர்ணமான ஆடியில், அதன் விரிந்த கண்களின் காலமற்ற ஒளியைக்கொண்டு உலகை உறையச் செய்யும், கல்லின் கனவாக அவர் கற்பனையில் வார்த்த அழகைக் கைப்பற்றுவதற்காகப் பூட்லேருக்கு எப்போதுமே ஒரு எழுச்சியூட்டும் மியூஸ் (Muse, கலைவாணி) தேவைப்பட்டது. விழைவிற்கு ஊற்றுகண்ணாக இருப்பினும், அவ்விழைவின் பூர்த்தியை உடைமையைக் கொண்டு நிரந்திரமாகத் தவிர்க்கும் உணர்வின் உன்னதமாக்கலே இந்த மியூஸ் என்ற அருவமான உருவாக்கம். ஆனால் அந்த அருவத்திற்கோ எப்போதுமே பருண்ம உலகில் தனக்கு இணையான ஓர் உருவம் தேவைப்படுகிறது. இளஞ்சூட்டில் உறைந்து உணர்வுத்திறனையும் புலனின்பத்தையும் இணைக்கும் மென்மையான “volupte” என்று அழைக்கவல்ல ஆனந்தக் களிப்பு மிளிரும் ஓர் உலகம்.
Fleurs-இன் ஸ்ப்ளீன் – ஈடியால் (Spleen et Ideal) இந்த அருவத்தை விருப்புறுதியின் விசையால், கிட்டத்தட்ட கவிதையின் ஒரு செயலாகவே பிரதிஷ்டை செய்கிறது: “உயரம் அல்லது படுகுழியில்” இருந்து வெளிவரும், காமத்தையும் காதலையும் இருமுகமாய்க் கொண்டிருக்கும் ஜானஸவாகவும் “தேவதை அல்லது வசீகரிக்கும் அணங்காகவும்”, “கடவுள் அல்லது சாத்தானின்” தூதுவராகவும், பீடிக்கும் பிரபஞ்சத்தில் கவிஞனின் “கனமான நேரத்தை” உருமாற்றும் (ஒற்றை) ராணியாகவும்…, கவிஞனின் விருப்புறுதியால் உயிர்ப்பவள் பின்னர் அவன் அன்னியோன்யத்தின் அதிகப்பிரசங்கித்தனத்துடன் அரட்டையடிக்கும் நோய்வாய்ப்பட்டிருக்கும் க்ரியையாகவும் மாறுகிறாள்:
“Good morning, Muse, what’s wrong, something you saw
last night is left in your hollow eyes
your color’s bad, your cheeks are cold
with horror, with madness! and you don’t say a word“
“வாணியே, காலை வணக்கங்கள், என்ன ஆயிற்று,
நேற்றிரவு எதையோ பார்த்து மிரண்டது உன் கண்களில் தெரிகிறதே
வாடியிருக்கிறது உன் சருமம், உன் கன்னங்களோ சில்லிட்டிருக்கின்றன
பித்தும் பீதியுடனும்! நீயோ பேசா மடந்தையாகிவிட்டாய்”
கவிஞன் கிண்டல் செய்யும் “வாடகைக் க்ரியை’ (“The Muse for Hire”) ஆகவும் அவள் மாறுகிறாள்.
“When your belly is as empty as your purse
what will you do – harvest the stars for gold?”
கும்பியும் பணப்பையைப் போல் காலியாக இருக்கையில்
என்செய்வாய் – தங்கத்திற்காக விண்மீன்களை அறுவடை செய்வாயா?
புதுமைப்பித்தனின் வரிகளே நினைவிற்கு வருகின்றன:
வேளைக்கு வேளை
விருதாக் கவிசொல்லி
நாளும் பொழுதும்
கழிஞ்சாச்சே – ஆழாக்குப்
பாலுக்கோ விதியில்லை;
பச்சரிசிக்கோ தாளம்;
மேலுக்கேன் ஆசாரப்
பேச்சு?
“தங்கள் இரவு ரொட்டியைச் சம்பாதிப்பதற்கு வேறு வழிகளை முயலவும்” என்று அறிவுறுத்தப்பட்ட பிறகு (Daily bread என்ற சொலவடைக்குப் பதிலாக Nightly Bread என்ற இரவு ரொட்டியைத் தெரிவு செய்திருப்பது கிண்டலை மேலும் கூர்மையாக்குகிறது) அவள் ஏதோ தெருவில் நிர்வாணமாக வித்தை காட்டுபவள் போல், சலித்துவரும் வணிகர் காசை அள்ளி வீசும் வகையில், இரகசியக் கண்ணீரால் அவ்வளவு நனைந்திருக்கும் வசீகரமான சிரிப்பாணிகளைக் கட்டவிழ்த்துவிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறாள். .
மேற்கின் கவிதை மரபு எப்போதும் ஒரு உதவியாளர் மியூஸால் வழிநடத்தப்படுகிறது. இயற்கையாகவே டாண்டேவின் பீட்ரிஸ் அல்லது பெட்ரார்காவின் (Francesco Petrarca) லாரா நினைவுக்கு வருகிறார்கள், அங்கு துளையிடும் முதல் உணர்ச்சி (கிட்டத்தட்ட ஒரு காயம் என்றே சொல்லலாம், டாண்டேவுக்கு ஒன்பது வயதுச் சிறுமியின் முதல் பார்வை, பெட்ரார்காவிற்கு அவின்யானின் செயிண்ட் கிளேர் தேவாலயத்தில் லாராவுடனான அவரது முதல் சந்திப்பு.) மாம்சத்தை “ஒரு பார்வையின் தூய ஆன்மீகமாக” உன்னதமாக்கி, அதன்பின் ஒரு குறிப்பிட்ட நிலையான படிமத்திற்கு எக்காலத்திற்கும் உண்மையாய் இருக்கக் கட்டாயப்படுத்துகிறது., கனவுகளின் பிரியமான உருவத்தை ஒரு மூடநம்பிக்கையாக மாற்றவல்ல ஒரு மத உந்துதலை ஒத்திருக்கும் இந்த “உண்மையாய் இருத்தலே” மேதைமையின் தனிச்சிறப்பு என்று பூட்லேரே ஒருமுறை அடையாளப்படுத்தியிருக்கிறார். ஆனால் அந்த உருவம், ஒரு வெற்று அருவமாக இருப்பது கவிஞருக்குப் போதுமானதாக இல்லாததால், அது தூண்டும் உணர்ச்சியைப் போலவே மியூசும் பருண்மை உலகில் உருவம்கொண்டிருக்க வேண்டும் என்பதை அவர் விழைகிறார். புகழ்பெற்ற கத்தோலிக்கத் தத்துவ ஞானியும் இடைக்காலத் தத்துவத்தின் வரலாற்றாசிரியருமான எட்டியென் கில்சன் இதை மிகச்சரியாகவே விளக்கினார்: “சுருக்கமாகச் சொன்னால், காதல் இருந்தாக வேண்டும், அதன் மூலமாக அது மனிதமை சார்ந்த ஒன்றாகவே இருந்தாலும், அதைக் கேட்கும் ஆணும் கொடுக்கும் பெண்ணும் ஒரு தலைசிறந்த படைப்பின் பிறப்பையே தேடுகிறார்கள்.” எனவேதான் அவரது “முன்துஸ் முலியெப்ரிஸ்” கவிதையில் (“Mundus Muliebris, பெண்மையின் உலகம், அல்லது மேரி ஈவ்லினின் 1690ஆம் ஆண்டுப் புத்தகம் வேடிக்கையாக வர்ணித்ததைப் போல் – தாழிடப்படாத லேடீஸ் டிரஸ்ஸிங் ரூம்), தன் விருப்புறுதியின் துணிகரமான செயற்பாட்டால் அவர் கட்டெழுப்பிய கவிதைகளாலான அந்த அபாரமான கோவிலில், ஒருவர் பின் ஒருவராக மியூசின் பீடத்திற்கு உயர்த்தப்படும் அந்தப் பெண்களின் வரிசை இடம்பெறுகிறது.
பூட்லேர் ஒரு வகையில் தனது மகத்தான முன்னோர்களின் கவிதை மரபின் நீட்சியாகவே செயல்பட்டார் என்றாலும், ஒரு முக்கியமான விதத்தில் அதை உடைக்கவும் செய்தார் என்பதே உண்மை. அதுவரை, கருப்பொருளையும் அது கையாளப்படும் முறைகளையும் செவ்வியல் அழகியல் மூன்று நேர்த்தியான பிரிவுகளாகப் பிரித்தது- முதற்பிரிவில் மகத்தான, துன்பியல் சார்ந்த உன்னதமான பேசுபொருட்கள் அடங்கும். இடைப்பிரிவின் கருப்பொருட்கள் மகிழ்ச்சிகரமானவை, மனதைப் புண்படுத்தாதவை. அபத்தம், கயமை, கோரம் இவையே இறுதிப் பிரிவின் அடையாளங்கள். இப்பிரிவுகளைக் கலக்கிக் குழப்பியதே பூட்லேரின் நூதனமான கண்டுபிடிப்பு, அதாவது, பாரம்பரியமாக நடுத்தர- கீழ் பிரிவிற்கு உகந்தவை என்று கருதப்பட்ட கருப்பொருட்களை மேற்பிரிவின் உன்னதமான துன்பியல் சார்ந்த பாணியில் கையாள்வது. எடுத்துக்காட்டாக, அந்தப் பூட்லேர் மியூஸ்களில் மிகவும் பிரபலமானவரான மேடம் சபத்தியே (Madame Sabatier) சம்பந்தப்பட்டிருப்பதாகக் கருதப்படும் கவிதையொன்றை எடுத்துக்கொள்வோம், ஆ செல் கியே ட்ரோ கே (a celle qui est trop gaie, அளவுக்கதிகமாக மகிழ்ச்சியாய் இருக்குமொருவருக்கு). காதலி / மியூஸின் இல்லாமை, காதல், விரக்தி மரபில் உள்ள மற்ற பிரபலமான கவிதைகளுடன் ஒப்பிடக்கூடிய விதத்திலேயே தொடங்குகிறது:
“Often, when I would drag myself
into some leafy park
and the sun like a rebuke
would lacerate my breast“
(Against Levity, Baudelaire)
spring returns, but there is no returning
of spring for me, O heart with anguish burning
She that unlocked all April in a breath
returns not… and these meadows, blossoms, birds
these lovely gentle girls…words, empty words
as bitter as the black estates of death” (Petrarch – Sonnets, During the life of Laura).
அடிக்கடி, வேண்டாவெறுப்புடன் என்னையே இழுத்துச்செல்வேன்
இலைகள் அடர்ந்திருக்கும் ஏதோவொரு பூங்காவிற்குள்
கண்டனம் செய்வது போல் சூரியன்
என் நெஞ்சைப் பிளக்கும்
(மிகைமகிழ்விற்கு எதிராக, பூட்லேர்)
வசந்தம் திரும்புகிறது, ஆனால் திரும்புவது இல்லை
வசந்தகாலம் எனக்கு, கடுந்துயரில் தகிக்கும் ஓ நெஞ்சே
ஏப்ரல் முழுவதையும் ஒரே மூச்சில் கட்டவிழ்த்தவள்
திரும்பவில்லை… இந்தப் புல்வெளிகள், பூக்கள், பறவைகள்,
அழகுமிளிரும் இந்த மென்மையான பெண்கள்… வார்த்தைகள், வெறும் வார்த்தைகள்
மரணத்தின் கரிய பண்ணைகளைப் போல் அவை கசப்பானவை
(பெட்ராக் – சொனெட்ஸ், லாராவின் வாழ்க்கையில்).
ஆனால் அடுத்தச் சரணத்திலேயே பூட்லேரின் கவிதை மூர்க்கமான கொடுந்தொனிக்கு கிரகபேதம் செய்துகொள்கிறது:
“so deeply did the Spring’s new green
humiliate my heart
that I would punish in one rose
all Nature’s insolence…“
ஒத்துமொத்த இயற்கையின் செருக்கை
ஒற்றை ரோஜாவில் தண்டிக்கும் அளவிற்கு
வசந்தத்தின் புதுப் பசுமை ஆழமாக
என் நெஞ்சை அவமானப்படுத்தியது…
இறுதி இரண்டு சரணங்களில் அதன் கொடூரத்தின் உச்சத்தை அடைகிறது:
“to castigate your body’s joy,
to bruise your envied breasts,
and in your unsuspecting side
to gash a gaping wound
where in a final ecstasy
between those lovelier
new lips, my sister, I’ll inject
my venom into you!“
உன் தேகத்தின் களிப்பைத் தண்டிக்க
உன் பொறாமை தூண்டும் முலைகளை நசிக்க
உன் அபாயமுணரா பக்கத்தில்
வாய்பிளக்கும் வெட்டுக்காயமொன்றை ஏற்படுத்தி
ஆங்கே களிப்பின் உச்சத்தில்
அருமையான அந்தப் புத்துதடுகட்கிடையே
என் சகோதரியே, பாய்ச்சுவேன்
என் நஞ்சை உன்னுள்.
பூட்லேர் தனது வாழ்நாள் முழுவதும் மேக / பால்வினை நோயால் பாதிக்கப்பட்டார் என்ற தரவை ஒருவர் கருத்தில்கொண்டால், அந்தக் கவிதையின் கடைசி வரி அதன் மிகக் கீழ்மையான பொருளில், அதை (ஐந்து பிற கவிதைகளுடன்) ஒழுக்கக்கேட்டிற்காகக் கண்டித்துத் தணிக்கை செய்த நீதிபதிகளின் மனதில் எவ்வளவு பூதாகாரமாகத் தோன்றியிருக்கக் கூடும் என்பதை எளிதில் உணரலாம்.
இக்கவிதைகளின் அனைத்து ஆளுமைப்படுத்தல்களிலும் (personifications), பெண்ணுக்குத் தேர்வு வழங்கப்படவில்லை, மியூஸாக நியமிக்கப்படும் அவள் ஒரு பேசா விக்கிரகத்தைப் போல் எப்போதும் ஒரே மாதிரி (“Semper Eadem”) செயலாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறாள். அதே பெயரில் உள்ள கவிதையில், இந்தச் சிலை அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது, “எக்கச்சக்கமாகக் கேள்விகள் கேட்கிறாய். சற்று பேசாதிரேன்…” என்று வாய்ப்பூட்டிட்டாலும் அவளை மெச்சும் கவிஞர் தனது “காவல் தேவதை, மியூஸின்”, “கண்களின் அமைதியான புனைவில்”, மூழ்குவதைத்” தவிர வேறு எதையும் விரும்பவில்லை. ஆனால், மேடம் சபத்தியே செய்தது போல், மியூஸ் தனது பீடத்திலிருந்து இறங்கி மானுட உணர்வின் கொடுக்கல் வாங்கல் உலகில் உழல முற்படுகையிலோ, பூட்லேர் தனது அநாமதேயத்தை இழக்க முடிவுசெய்து, ஃப்லேர் டு மால் –இன் கெட்டியட்டைப் பதிப்பை அவளுக்கு அனுப்பும்போது, கவிஞர் அவளை அநியாயமாகக் கடிந்துகொள்கிறார்: “மேலும், அப்போது, சில நாட்களுக்கு முன்தான், நீ ஒரு தெய்வமாகவும், உதவுபவளாகவும் அழகாகவும் அடைய முடியாதவளாகவும் இருந்தாய். இப்போதோ நீ வெறும் பெண் மட்டுமே.” கன்ஃபெஷன் என்ற கவிதையில் தன்னையே மட்டம் தட்டிக்கொள்ளும் பாவனையில் இதற்கு மேடம் சபத்தியே எதிர்வினை ஆற்றுவது நமக்கும் கேட்கிறது:
“Nothing on earth is sure
and all our human masks cannot disguise
our human selfishness;
Beauty is merely woman’s livelihood,
a well-rehearsed routine –
the flagging dancer’s routine: to please
with automatic smiles;“
எதுவுமே உறுதியில்லா இப்பூமியில்
நம் மானுட சுயநலத்தை
நம் மானுட முகமூடிகள் மறைக்க இயலாது
அழகு என்பது பெண்ணின் வாழ்வாதாரம்
நன்கு ஒத்திகை செய்யப்பட்ட வழக்கம் –
மகிழ்விப்பதற்காக தானியங்கி புன்னகைகளை உதிர்க்கும்;
தொய்யும் நடனக் கலைஞரின் வழக்கம்
இறுதியில், ஆன்மீக விடியல்கள் தீண்டும் இழிகாமப் படுக்கைகளில் பூட்லேருக்கு எப்போதுமே “அழிவில்லாச் சூரியனைப் போல் வெற்றிபெறும் மாயத்தோற்றமே” எஞ்சுகிறது. இலட்சியப் பானை மாறாதிருந்தாலும் அதைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் களிமண்ணோ மூர்க்கமாக மாற்றப்படுகிறது. இந்த விநோதமான பானை பிடித்தலில் சில சமயங்களில் மேடம் சபத்தியே போன்றோரைப் பூட்லேர் நிராகரித்தார். மற்ற சமயங்களில் மாடல் மேரி எக்ஸ் (Marie X) போன்றோர் அவரை நிராகரித்தனர். மேரிக்கு எழுதிய கடிதம் மேடம் சபத்தியேவிற்கு அவர் எழுதிய கவிதையின் வார்த்தைகளிலேயே எழுதப்பட்டிருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல:
“உன் மூலம், மேரி, நான் வலிமையானவாகவும் சிறந்தவனாகவும் ஆகுவேன். பெட்ரார்காவைப் போல, நான் என் லாராவை எக்காலத்திற்குமானவளாக ஆக்குவேன்.. என் பாதுகாவல் தேவதையாக, என் மியூஸாக, என் மடோனாவாக இரு, அழகின் பாதையில் என்னை வழிநடத்திச் செல்.”
அவரது அனைத்து மியூஸ்களிலும், ஹேட்டியில் பிறந்த, ஃபிரெஞ்சு – ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஜான் டூவல் (Jeanne Duval) அவரது “எஜமானிகளின் எஜமானி” ஆகவும் அவரது “கறுப்பு வீனஸ்” ஆகவும் நீண்ட காலம் (கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள்) பணியாற்றினார். ஃப்லேர் டு மால்-இன் முதல் பதிப்பின் இருபது முதல் முப்பத்தைந்து வரையிலான கவிதைகள் இவருடன் தொடர்புகொண்டவை என்று நம்பப்படுகிறது. இத்தொடரைத் தொடங்கும் லே பீஷூ (Le Bijoux, நகைகள்) பிரெஞ்சு நீதிமன்றங்களால் தணிக்கை செய்யப்பட்ட ஆறு கவிதைகளில் ஒன்றாகும். அக்கவிதையில், “உலோகத்தாலும் கல்லாலும்” ஆனதொரு உலகில் “ஒளிக்கு ஒத்ததாகப்” பொருட்படும்படி ஒலிக்கும் நகைகள், வளையல்கள் சங்கிலிகளால் அலங்கரிக்கப்பட்டு, நிர்வாணமாக விரிந்து கிடக்கும் கிரியோல் பெண்ணைச் சுற்றியே அனைத்தும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அதன் நாளங்களில் சுருங்கி விரிந்தபடியே கவிதையோட்டம் செல்கிறது. நெருக்கம், தொலைதூரம், அன்னியோன்யம், பற்றின்மை, ஊக்கமளிக்கும் மியூஸ், மெக்ரெபிய அடிமை இவை அனைத்தும் ஒருவித தரிசனப் புலன்மயக்க அனுபவமாக இணைக்கப்படுகின்றன. தனது காதலியின் உடலுக்கு எதிராக ஒரு அலை போல எழும் அவரது அன்பின் “ஆழமான உறுதியான நீரோட்டங்கள்” அவரது ஆன்மாவை “அதன் ஆழ்ந்த சிந்தனையெனும் பாறை-படிக சிம்மாசனத்தில்” இருந்து வெளியேற்றுகின்றன. ப்ரூஸ்ட் மிகவும் நேசித்த புலனின்ப உச்சத்தின் அந்தியொளியில் கவிதை முடிகிறது:
“And then the lamp having given up the ghost
the dying coals made the only light in the room;
each time they heaved another flamboyant sigh,
they flushed that amber-colored flesh with blood!“
அதன்பின் விளக்கு அணைந்துவிட்டதால்
தணியும் தணல்கள் மட்டுமே அறையை ஒளிர்வூட்டின;
அழல்வண்னத்துடன் பெருமூச்சிறைக்கையில் ஒவ்வொரு முறையும்
அந்த அம்பர் சருமத்தை அவை குருதியால் நனைத்தன.
“இறந்தணையும் தணல்கள்” லே பீஷூ-வில் அழல்வண்ணமாகப் பெருமூச்சிறைத்தால், “நினைவுகளின் தாய், முழுமுதல் எஜமானி” உடனான “முடிவற்ற முத்தங்கள், வாக்குறுதிகள், வாசனைத் திரவியங்களின்” நினைவாக மட்டுமே எஞ்சும் மாலைகளை லோ பால்கோன் (Le Balcon, உப்பரிகை) கவிதையின் “உயிர்த்தெரியும் கனல்கள்” ஒளிரச் செய்கின்றன.
ஜான் சம்பந்தப்பட்ட கவிதைகள் கவிஞரின் புலனின்ப ஆன்மீகப் பட்டகங்களின் வழியே அவளை மீள்கற்பனை செய்கின்றன. அவளது கூந்தல் படிப்படியாக, பரவசமளிக்கும் விலங்கு ரோமமாகவும், இருண்ட கண்டமாகவும், கலைந்திருக்கும் நீரோட்டமாகவும், கருங்கடலாகவும், துறைமுகமாகவும், நிழல்களாலான நீலப் பெட்டகமாகவும், அற்புதமான பிடரி மயிராகவும் உருமாறுகிறது. இதைத் தொடர்ந்து அவள் அடங்கிவிட்ட துக்கங்களின் தாழி, அவனது “பாவங்களின் ராணி”, இழிவான மிருகம், கீழ்மையான கண்ணியம், உன்னதமான அவமானம், நடைகேடான தெய்வம், மந்திரக்கோலின் தாளத்திற்கு நடனமாடும் ஒரு பாம்பு என்று வர்ணிக்கப்படுகிறாள். அவள் வாயில் எச்சில்:
“surges through your teeth,
I seem to drink a devil’s brew,
salt and sovereign
as if the sky had liquefied
and strewn my heart with stars!“
உன் பற்களினூடே கொப்பளிக்கையில்,
உப்பும் இறையாண்மையும் கலந்த
சாத்தானின் கஷாயத்தைக் குடிக்கிறேன் போல,
வானம் திரவமாகி
என் இதயத்தில் நட்சத்திரங்களை அள்ளி வீசியது போல!
இறுதியாக, தொடரின் முடிவில், கவிதைகளின் இருண்மை அதிகரிக்கிறது. அனைத்து விநோத உருமாற்றங்களுக்குப் பிறகு, மியூஸ் பயங்கரமான சிதைவில் கற்பனை செய்யப்பட்டு, நிலத்தடியில் அழுகிக்கொண்டிருக்கிறாள். கவிஞர் அவளது சடலத்திடம் சொல்கிறார்-
“But as their kisses eat you up
my Beauty, tell the worms
I have kept the sacred essence, saved
the form of my rotted loves!”
ஆனால் முத்தங்களால் உன்னை உண்டழிக்கையில்
என் அழகுச்செல்லமே, அந்தப் புழுக்களிடம் சொல்
அழுகிப்போன என் காதல்களின் பவித்ரமான சாரத்தையும்
உருவத்தையும் சேமித்து வைத்திருக்கிறேனென்று.
உயிர்துறக்கும் மியூஸ், பின்னர் கல்லறைக்கு அப்பாலிருந்து தனது மேலாதிக்கத்தைச் செலுத்தும் இரத்தக் காட்டேறி ஆகிறாள், “வேகமான வாள் வீச்சொன்றால்” அனைத்தையும் முடித்து வைக்கும்படி வேண்டுகோள் விடுக்கும் கவிஞர் ஏளனமாக மறுக்கப்படுகிறார். ஏனெனில்,
“kisses would resuscitate
his vampire’s waiting corpse!”
முத்தங்களோ உயிர்ப்பிக்கும்
காத்திருக்கும் உன் ரத்தக்காட்டேரியின் சடலத்தை!
நம் நூற்றாண்டில் வாழும் வாசகி ஒருவர், பூட்லேரைப் புறநிலைப்படுத்துபவராகவும், ஏன், வடிகட்டிய பெண் வெறுப்பாளராகவும்கூட அடையாளப்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் அவருடைய கரிசனமிக்க கவிதைகளில் ஒன்றான ல பெத்திட் வீயை (Les Petites Vieilles, சிறிய பெண்மணிகள், விக்டர் ஹ்யூகோவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது) கவிதையுடன் எப்படி சமரசப்படுத்திக்கொள்வது? அக்கவிதையில் அப்பெண்களின் துயரங்களை அவை ஏதோ விநோதமானதொரு துன்ப வழிபாட்டின் ஸ்தோத்திரங்களைப் போல் பட்டியலிடுகிறார்:
“this one a martyr to her fatherland,
that one her husband’s victim and one more
doomed by her son to a Madonna’s grief
all could make a river of their tears“
இவளோ தேசத் தியாகி
அவளோ கணவனின் பலி, அதோ மற்றுமொருவள்
தன் மகனால் மடோனாவின் துக்கத்தைச் சுமப்பதற்காகச் சபிக்கப்பட்டவள்
நதியாக ஓடும் அவர்கள் கண்ணீர்.
இதனுடன் மகத்தான கவிஞரின் “பெருந்திரளில் மூழ்கும்” திறனை ஊர்ஜிதப்படுத்தும் அந்த அற்புதமான கடைசி வரிகள்:
“Flotsam, my family-ruins, my race!
Each night I offer you my last farewell!
Where will you be tomorrow, ancient Eves
under God’s undeviating paw?“
மிதவைக் குப்பைகளே, என் குடும்ப-இடிபாடுகளே, என் இனமே!
ஒவ்வொரு இரவும் உங்களிடம் இறுதி விடைபெறுகிறேன்!
பண்டைய ஏவாள்களே, கடவுளின் பிறழா கரத்தின் கீழ்
நாளை எங்கிருப்பீர்கள்?
கவிஞரை அவர்களுடன் தொடர்புகொள்ளத் தூண்டுவது அவர்களின் துன்பம் மட்டுமல்ல. அவர்களின் மகிழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார். Fleurs-க்கு முதலில் Les Lesbiennes என்ற தலைப்பையே பூட்லேர் உத்தேசித்திருந்தார். இந்தத் தீயப் பூங்கொத்தில் அருமையான் சாஃப்பிக் (sapphic) சுவைகள் பொதிந்திருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஃபெம் தமீ (Femmes Damnees, சபிக்கப்பட்ட பெண்கள்) கவிதை விழைவின் ஆரம்பக் கிளர்வுகளுடன் தொடங்குகிறது:
“Pensive as cattle resting on the beach
they are staring out to sea; their hands and feet
creep toward each other imperceptibly
and touch at last, hesitant then fierce“
கடற்கரையில் ஓய்வெடுக்கும் கால்நடைகளைப் போல் ஆழ்சிந்தனையில்
அவர்கள் கடலையே உற்றிருக்கிறார்கள்; அவர்கள் கைககால்களோ
புலப்படா வகையில் ஊர்ந்தபடியே இறுதியில் ஒரு வழியாக
ஒன்றையொன்று தொட்டுக்கொள்கின்றன, முதலில் தயக்கத்துடன், பின்னர் மூர்க்கமாக
சிறிய பெண்கள் கவிதையின் முடிவில் செய்ததைப் போல் தன் கரிசனம் மிக்க கற்பனையால் அவர்களின் வெந்துயரங்களையும் பரவசங்களையும் கவிஞர் பின்தொடர்ந்து செல்கிறார்:
“Sisters! I love you as I pity you
for your bleak sorrows, for your unslaked thirsts,
and for the love that gorges your great hearts!“
சகோதரிகளே! பரிதாபப்படுகையில் உங்கள் மீது அன்பும் கொள்கிறேன்
உங்கள் இருண்ட துக்கங்களுக்காக, உங்கள் தீராத தாகங்களுக்காக,
உங்கள் மகத்தான இதயங்களை விழுங்கும் அன்பிற்காக!
இறுதியாக, அற்புதமான ஃபெம் தமீ –டெல்ஃபினியும் இப்போலித்தும் கவிதை (Femmes Damnees, Delphine et Hippolyte). இதில் இப்போலித் சாஃபிக் அன்பின் மர்மங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறாள். மென்மையான நறுமணம் கமழும் மஞ்சத்தில் ஓய்வெடுக்கும் அற்புதமான ஆரம்பத்தில் இப்போலித்,
“reliving those caresses which had raised
the curtains of her inexperience“
தன் அனுபவமின்மையின் திரைகளை உயர்த்திய
அவ்வருடல்களைக் கற்பனையில் மீட்டுகிறாள்.
பின்னர், தான் செய்ததைக் குறித்து இப்போலித்திற்குச் சந்தேகம் ஏற்படுகையில், (வேதனை அவளைப் பீடிக்கிறது / பயங்கரமான விருந்தொன்று இரவைக் கெடுத்துவிட்டதைப் போல) டெல்ஃபினி லெஸ்பியன் காதலுக்காக வாதிடுகிறாள், மும்முரமான விவாத இறுதிப்போட்டியில் பங்கேற்பதைப் போல:
“My Kisses are light as those May-flies
which graze the great transparent lakes at sunset;
his would trace their furrows on your flesh
like the tongue of some lacerating plough –
as if you had been trampled by a team
of oxen with inexorable hooves…”
அஸ்தமனத்தில் ஒளி ஊடுருவும் பெரும் ஏரிகளை மொய்க்கும்
விரைந்தழியும் ஈசல்களைப் போல் என் முத்தங்கள் இலகுவானவை;
அவனுடையதோ பிளக்கும் கலப்பையின் கொழுநாக்கைப் போல்
உன் சதையில் உழைசால்களை விட்டுச்செல்பவை –
தவிர்க்க முடியாத குளம்புகள் கொண்ட எருதுகளின்
கூட்டமொன்றால் நீ மிதிபட்டதைப் போல
பெண்களைத் திட்டவட்டமாக இகழ்ந்த ஒருவரால் இவ்வளவு நுட்பமாக லெஸ்பியக் காதலை எழுத முடியாது என்றே தோன்றுகிறது. சர்வநிச்சயமாக அவர் குறைபாடுகள் மிக்க மனிதர்தான். ஆனால், தனிமனிதனாகத் தனக்கிருந்த ஸ்டீரியோடைப் பொதுப்படுத்தல்களைக் கடந்த கரிசனப் பார்வையை அவரால் தனது கவிதையில் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. புலனின்பம், மீபொருண்மைக்கான உத்வேகம்- இவ்விரு துருவங்களையும் தனது தரிசனத்தின் இறுக்கத்தில் ஒன்றிணைத்து, எதிர்முனைகளுக்கிடையே அவர் நிகழ்த்திய கம்பி மேல் நடக்கும் வித்தையே அவரது மேதைமை. அவருக்கு முன்பு வந்த பிரெஞ்சு ரொமாண்டிசிஸத்தின் ஜாம்பவான்களிடமிருந்து (ஷ்ட்டூப்ரியான், ஹ்யூகோ, வினீ போன்றவர்கள்) கவிதை மரபை நீட்டிக்கும் பொறுப்பை ஏற்று, அதை அவருக்குப் பின் வந்த பார்னாசியர்களுக்கும் குறியீட்டாளர்களுக்கும் (கூடீ, லெகாந்தே லீல், மல்லர்மி, வெர்லைன் போன்றவர்கள்) ஒப்படைக்கும் ஒரு சகாப்தத்தின் பிரதிநிதிக் கவிஞராகவே இருந்தாலும், பாலமாக அமைந்த இரு குழுக்களுடனுமே அவரைப் பொருத்த இயலாது. ஏனெனில் அவர் முந்தையரின் உணர்ச்சித் தீவிரத்தைப் பிந்தையரின் முறையான துல்லியத்துடன் இணைத்து, தன் சுயத்தை முற்றிலும் மறைத்துக்கொள்ள விரும்பாது அதை உன்னதமாக்க முயன்றதால், இதனாலேயே இயல்பிலும் இரசனையிலும் ஒரு ரொமாண்டிசிஸ்டாகவே இருப்பினும் செவ்வியலாளராக வெளிப்படும் கவிஞர் என்று அவரைப் பால் வலேரி வரையறுத்தார். முன்பு இருந்த குழப்பத்தை ஒழுங்குபடுத்துவதற்காக “எப்போதும் பின் வரும்” ஒன்றாகவே வலேரி கிளாசிஸத்தை அடையாளப்படுத்தினார். (“ஒவ்வொரு கிளாசிஸமும் ஒரு முந்தைய ரொமாண்டிசிஸத்தைக் கற்பனை செய்துகொள்கிறது” என்று அவர் ஒருமுறை இரத்தினச் சுருக்கமாக இதை விளக்கினார்.)
ஒருவகையில் பூட்லேர் குறியீட்டு – யதார்த்தவாதத்தின் முரண்பாடான இழைகளை ஒருங்கிணைத்தார். குறியீட்டுப் படிமங்களுக்கு அவரது கவிதையில், வாசகரின் மனதில் அவற்றின் சக்தியை நிலைநாட்டுவதற்காக, எந்த அனுபவ அடிப்படையையும் கோராத ஒரு அருவருப்பான யதார்த்தத்தின் தோற்றம் அளிக்கப்படுகிறது. Fleurs du Mal-இன் ஸ்ப்ளீன் பகுதியை ஆரம்பித்து வைக்கும் கவிதை இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. Erich Auerbach தனது கம்பீரமான The Aesthetic dignity of the Fleurs du Mal கட்டுரையில் அதன் தொடரியல் ஒற்றுமையை அடையாளம் காண்கிறார் (syntactical unity); அதாவது ஒரே வாக்கியம், மூன்று தற்காலிகச் சார்பு உட்பிரிவுகளால் ஆனது, ஒவ்வொன்றும் குவாண்ட் (Quand, எப்போது) என்ற சொல்லுடன் தொடங்குவதாக அமைந்திருப்பது, கடைசி இரண்டு சரணங்களில் விரிவடையும், பல உட்பிரிவுகளைக் கொண்ட ஒரு மூல வாக்கியம்… இத்யாதி… அதனுடன் அலெக்ஸாண்ட்ரின் மீட்டர் (மெதுவாகவும் கனமான தீவிரத்துடனும் உரைக்கப்படுவது), தாளம், சொல்லாட்சி, வடிவங்கள் இவை அனைத்தும் ஒருங்கிணைந்து “அது வெளிப்படுத்தும் ஆழ்ந்த அவநம்பிக்கையுடன் முழுமையாக ஒத்துப்போகும்” ஒரு இருண்மையான உன்னதத்தின் சாயலைக் கவிதைக்கு அளிக்கிறது. ஆனால் அதன் உயர்ந்த கருதுகோள்களுக்குப் பொருத்தமில்லாத விஷயங்கள் இருப்பதால் உன்னதம் அடியறுக்கப்படுகிறது. அருவருப்பால் வேதனையில் ஆழ்த்தப்பட்டிருக்கும் மனதின் மீது தாழ்ந்திருக்கும் வானம் “மூடி போல்” கனமாகக் கவிந்திருக்கிறது என்றொரு படிமம். அந்த மூடிக்கான வியாக்கியானம் பிந்தைய கவிதையொன்றில் நமக்கு அளிக்கப்படுகிறது: “எண்ணற்ற தலைமுறைகளின் கொதிகலனாக விளங்கும் / அந்தப் பெரும் பானையின் கருப்பு மூடி – கிட்டத்தட்ட ஒரு டீக்கெண்டி மூடியைப் போல்!”
சூழ்நிலையின் இருண்ட, மூட்டமான, மருட்சியளிக்கும் விரக்தியை, “இருட்டைக் காட்டிலும் இருண்மையான பகல்” போன்ற வரிகள் நமக்குக் காட்சிப்படுத்துகின்றன. பூமி ஒழுகிக்கொண்டிருக்கும் ஒரு நிலவறைச் சிறையாகவும் அதன் இத்துப்போன உத்திரங்களில் திக்கற்று பறக்கும் வௌவாலொன்று தலையை முட்டிக்கொள்ளும் உருவகத்திற்குப் பின் அற்புதமான சரணமொன்று வருகிறது.
“when rain falls from unrelenting clouds,
forging the bars of some enormous jail
and silent hordes of obscene spiders spin
their webs across the basements of our brains“
ஓயாத மேகங்களிலிருந்து நில்லாது பெய்யும் மழை
ஏதோவொரு மிகப்பெரிய சிறையின் கம்பிகளை வடிக்கையிலும்
நம் மூளைகளின் அடித்தளங்களில் குறுக்குமறுக்காக
ஆபாசமான சிலந்தித் திரள்கள் சத்தமின்றி வலைகளைப் பின்னுகையிலும்
ஆரம்ப மூன்று சரணங்களில் சூல்கொண்டிருக்கும் நீசமான மௌனம், நான்காவது சரணத்தில் தளைகளைக் களைந்ததுபோல் பொங்கியெழும் மணிகளின் பயங்கர அலறலாகப் பீறிடுகிறது:
“like homeless ghosts with no one left to haunt
whimpering their endless grievances“
பீடிக்க யாருமில்லா வீடற்ற பேய்கள்
முடிவிலா குறைகளைத் தேம்புவதைப் போல்
மௌனம் தனது இறையாண்மையை இறுதிச் சரணத்தில் மீண்டும் நிலைநிறுத்திக்கொள்கிறது. அதுவரையில் வாழ்ந்த வாழ்க்கை கவிஞரின் ஆன்மாவில் சவ ஊர்திகளின் துரிதகதி அணிவகுப்பாகச் செல்ல, (ஆனால் ஒப்பாரிகளோ மேளதாளங்களோ இல்லாது. ஏனெனில் ஆரவாரத்திற்குத் தகுதியற்றது என்பதால்) தோற்கடிக்கப்பட்ட நம்பிக்கையோ கண்ணீர் மல்கி நிற்க,
“… the oppressor Dread
plants his black flag on my assenting skull.“
… பீதியெனும் அடக்குமுறையாளன்
சம்மதிக்கும் என் கபாலத்தில் அவன் கறுப்புக் கொடியை நாட்டினான்.
Fleurs-ஐப் படிக்கையில், அது தனிப்பட்ட கவிதைகளின் தற்செயலான தொகுப்பு அல்ல என்பதை நாம் உணர்கிறோம். குறிப்பிட்ட கவிதையின் வாசிப்பில் அதைச் சூழ்ந்திருக்கும், அதற்கு முன்னேயும் பின்னேயும் வரும் கவிதைகளில் இடம்பெறும் ஒத்திசைவுகளும் எதிரொலிகளும் பெரும்பங்கு வகிக்கின்றன. மீள்வாசிப்புகளின் வழியேதான் நாம் இவற்றை இனம்காணப் பழகிக்கொள்கிறோம். செவ்வியல் இசைப்படைப்புகளில் வருவது போல் முன்னறிவிக்கப்பட்ட கருப்பொருட்கள் வேறு இடங்களில் புதிய வழிகளில் மேலும் விஸ்தாரமாக வார்த்தெடுக்கப்படுவதால், அவற்றின் அர்த்தச் செறிவும் குறியீட்டுத்தன்மையும் அதிகரிக்கின்றன.
பூட்லேரின் மேதைமையின் (எந்தவொரு மேதைமையின் என்றும் கூறலாம்) தனிச்சிறப்பென்பது தனிப்பட்ட விதி என்ற நதியில் தொடங்கி, காருண்யத்தின் மாயத்தால், சக மனிதர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதிகளின் கடலைப் போய்ச் சேர்வதே. பூட்லேர் வலிமையானவர் என்று அடையாளப்படுத்திய எலியட்டுமே, அவர் கஷ்டப்படுவதற்கு மட்டுமே பலம் உள்ளவர் என்று அவ்வலிமையை வகைப்படுத்தினார். துன்பத்திலிருந்து தப்பிக்கவோ அதைக் கடக்கவோ முடியாததாலேயே அவர் வலியைத் தன்பால் ஈர்த்துக்கொண்டார். ஆனால், எந்த வலியுமே குறைத்துவிட முடியாத அந்த அபரிமிதமான செயலாற்று வலிமையாலும் அபாரமான உணர்திறத்தாலும் அவரால் அவ்வேதனையைப் பகுத்தாய்ந்து ஆராய முடிந்தது. அத்தகைய ஆய்வு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு ஃப்லேர்-இன் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றான Le Cygne (The Swan, அன்னம்) சிறந்த உதாரணம்.
நெப்போலியன் III-இன் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப அவரது மந்திரி பாரன் ஹவுஸ்மன் மீளுருவாக்கம் செய்துகொண்டிருக்கும் பரீசிய நிலப்பரப்பில், ஆயிரத்து எண்ணூற்று முப்பதுகளில், லூவரின் மேற்கு முனையிலிருந்து ஒருவன் டூயிலரிக்குச் (Tuileries) செல்வதற்காக ஒரு காலத்தில் பிளாஸ் டு கர்ரூசெல் (Place du Carrousel) இருந்த இடத்தைக் கடந்துசெல்வதுதான் கவிதையின் சூழல். மீடியா ரெஸ்ஸில் (Media Res), ஒரு சிந்தனையின் நடுவில், திடீரென்று அதனுள், செவ்வியல் பாத்திரமான ஆண்ட்ராமகீ எங்கிருந்தோ குதிப்பதிலிருந்து கவிதை தொடங்குகிறது. இதுவொரு சுய-விளக்கச் சிந்தனை, தான் சிந்திப்பதைப் பற்றி தனக்குத்தானே வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு சிந்தனை, வெளியில் நூறு அடிகள் மட்டுமே நகர்ந்திருந்தாலும் காலத்தில் பல நூற்றாண்டுகள் பயணிக்கக் கூடியது:
“Andromache I think of you! That stream,
the sometime witness to your widowhood’s
enormous majesty of mourning – that
mimic Simois salted by your tears
suddenly inundates my memory
as I cross the new Place du Carrousel.”
ஆண்ட்ராமகீ நான் உன்னை நினைக்கிறேன்!
உன் கைம்மைக்கான இரங்கலின் மகத்தான கம்பீரத்திற்குச்
சிலகாலம் சாட்சியாயிருந்த அந்த ஓடை-
உன் கண்ணீரால் கரித்த அந்த சிமோய் நகலி
திடீரென்று என் நினைவில் பெருக்கெடுக்கிறது
புதிய பிளாஸ் டு கர்ரூசெலை நான் கடக்கும்போது.
யார் இந்த ஆண்ட்ராம்கீ என்றால், எனீயடின் (Aeneid) உப அத்தியாயமொன்றில், வலிமைமிக்க ஹெக்டர் என்ற “மகத்தான கைபிடித்தவனின் கைகளிலிருந்து வீழ்ந்த பிறகு”, “இழிவான கால்நடையைப் போல்”, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் கைமாறும் மறக்கப்பட்ட பாத்திரம். தனது எதிரிகளின் தேசத்தில் (எபிரஸ்) நாடு கடத்தப்பட்டு வலியை ஆசுவாசப்படுத்துவதற்காக ட்ராயின் குறுவடிவ நகலியால் (mimic) அவள் சூழப்பட்டிருக்கிறாள். ஆனால் வலியைக் குறைக்க வேண்டிய நகலியோ, தீயினால் அழிக்கப்பட்ட தன் கணவனின் ட்ராய் நகரத்தை நினைவூட்டுவதன் மூலம் அதை அதிகரிக்கிறது. எனீயடின் ஆசிரியர் வர்ஜில் சில சமயங்களில் “மாண்டுவாவின் அன்னம்” என்று குறிப்பிடுவது தேர்ந்த வாசகருக்கு ஒரு வறட்டுச் சிரிப்பை வரவழைக்கலாம். கம்பீரமான சீமோயீயை அற்பமாக நகலிக்கும் அவ்வோடை, (முன்பு மேற்கோள் காட்டப்பட்ட ல பெத்திட் வீயை –இன் கண்ணீராலான நதியை நினைவுபடுத்துகிறது) ஆண்ட்ராமகீயின் நினைவுத்தேக்கத்தை மடைதிறக்கிறது, அந்நினைவு வெள்ளம் கவிஞரின் நினைவையும் மூழ்கடிக்கிறது. ஆனால் எனீயடின் அனைத்துக் கதாபாத்திரங்களிலும், இந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரம் மட்டும் ஏன் இந்தக் குறிப்பிட்ட தருணத்தில் ஒரு கவிஞரின் மனதில் தோன்ற முடிவுசெய்கிறது? பதில் பின்னால் வரும் வரிகளில் அளிக்கப்படுகிறது:
“Old Paris is gone (no human heart
changes half so fast as a city’s face)
and only in my mind’s eye can I see“
பழைய பாரிஸ் போயே போய்விட்டது (அந்தோ! ஒரு நகரத்தின் முகம்தான்
மனித நெஞ்சைக்காட்டிலும் எவ்வளவு துரிதமாக மாறிவிடுகிறது)
மனக்கண்ணில் மட்டுமே என்னால் அதைப் பார்க்க முடிகிறது
இப்போது நாம் மீட்டமைப்பின் “பழையன கழிதலும் புதியன புகுதலும்” துயர்புலத்திலிருக்கிறோம். களைகள் பிளவுபட்ட தூண் தலைகள், சேற்றால் கறுக்கப்பட்ட பளிங்குத் தொகுதிகள், இவற்றிற்கிடையே கவிஞர் “பழைய பிளாஸ் டு கர்ரூசெல்” சாவடிகளில் ஒருகாலத்தில் மினுமினுத்த மலிவுப்பொருட்களைத் தன் மனக்கண்ணில் காண்கிறார். முந்தைய ஆண்ட்ராமகீயின் இழப்பைப் பிரதிபலிக்கும் மற்றொரு இழப்பு. இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழும் நமக்கு, மாற்றத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மனித இதயம் உணரும் வலி மிகப் பரிச்சயமானதுதானே…. “பழைய சுற்றுவட்டாரங்கள் உருவகமாகின்றன / நினைவுகளோ கல்லைக் காட்டிலும் கனக்கின்றன” என்று பிந்தைய சரணமொன்று விளக்கமளிக்கிறது.
இந்த இழப்பின் தாக்கத்தில் கவிஞர் இதற்கும் முந்தைய நினைவொன்றை அகழ்ந்தெடுக்கிறார். அதே பகுதியில் ஒரு அன்னம், தான் சொந்தம் கொண்டாடிய ஏரிகள் தற்போது காணக் கிடைக்காது, பிடிவாதமாக வடிகால்களில் கொத்தியதையும், இறக்கைகளைக் கழிவில் நனைத்ததையும் நினைவுகூர்கிறார். அதன் துண்டிக்கப்பட்ட இறக்கைகள் மூலமாக மிருகச்சாலையிலிருந்து அது தப்பித்திருக்க வேண்டும் என்பதை நாம் அனுமானிக்கிறோம். காற்று, நீர்- இவ்விரண்டையும் இழந்துவிட்ட விரக்தியில்தான் இங்கே அது புலம்புகிறது என்பதையும். ஏக்கமும் இழப்பும் பல வழிகளில் முறிந்து பிரதிபலிக்கப்படும் நினைவுக்கிடங்காகக் கவிதை மாறுகிறது- ட்ராய் இடிபாடுகள் முதல் பிளாஸ் டு கர்ரூசெல் இடிபாடுகள் அல்லது பாரிஸின் வடிகால்கள் வரை ஆண்ட்ராமகீ, கவிஞர், அன்னம் என்று மூன்று நினைவுகூர்தல்களில் அவிழும் இழப்பின் நூல்கண்டாகக் கவிதை விரிகிறது. “நினைவுகளோ கல்லைக் காட்டிலும் கனக்கின்றன” என்ற வரியின் முழுச் சுமையையும் இப்போது சிக்னே-யின் வாசகர் உணர்கிறார். ஆனால் கவிஞர் மனம் தளருவதில்லை. நினைவிலிருந்து நினைவிற்கு மூர்க்கத்துடன் தாவி, தனிமை, நாடுகடத்தல், இழப்பு ஆகியவற்றின் தொல்பொருளை வடிகட்டுகிறார். இது அவரை, ஆப்பிரிக்காவில் தொலைத்துவிட்ட பனைமரங்கள், ஃப்ரான்சின் பனிமூட்டத்தில் எதையோ தேடும் பசியாலும் காசநோயாலும் பாதிக்கப்பட்ட கறுப்பினப் பெண், வாடிய பூக்களைப் போலிருக்கும் அனாதைகள், எப்போதுமே மீண்டும் கிடைக்கவல்லா ஒன்றைத் தொலைத்துவிட்டு நிற்பவர்கள், இவர்கள் அனைவரையும் அனுதாபத்துடன் கற்பனை செய்ய உதவுகிறது. இந்த அனுதாபக் கற்பனையை நம்மிடம் ஒப்படைப்பதுடன் கவிதை முடிகிறது:
“and in the forest of my mind’s exile
a merciless memory winds it’s horn
I hear it and I think of prisoners
of the shipwrecked, the beaten
and so many more“
மனதின் நாடுகடத்தலெனும் காட்டில்
இரக்கமற்ற நினைவுக் கொம்பின் பிளறலைக் கேட்டு
கைதிகள், கப்பல் விபத்தில் சிக்கியவர்கள்,
அடிபட்டவர்கள், இன்னும் பலரையும்
நினைத்துக்கொள்கிறேன்
அந்த “இன்னும் பலரில்” இடம்பெற்றிருப்பவர்களை வாசகர்கள்தான் இனம்காண வேண்டும். தனிப்பட்ட நினைவெனும் நூல்கண்டைத் தன்வெளியில் பிரித்தவிழ்க்கையில் கவிதை, அதன் கருப்பொருளை, அழுத்தி வலியுறுத்தும் எதிரொலிக் கூடமாகச் செயல்படும் ஓர் இலக்கிய வெளியிலும் அதை அவிழ்த்துச் செல்கிறது. நாடு கடத்தப்பட்ட முன்னோடிக்கு (ஹியூகோ) அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் நாடுகடத்தப்பட்ட பூட்லேரின் அன்னம் “இகழ்ச்சியின் குளிர் கனவெனும்” உடையணிந்து, பனிக்கட்டிக்கடியே சிக்குண்டு, “எப்போதுமே அறியப்படாத பறத்தல்களின் ஒளி ஊடுருவும் தெள்ளிய பனிப்பாறையால்” பீடிக்கப்படும் மல்லர்மேயின் (Stephane Mallarme) நாடுகடத்தப்பட்ட அன்னத்திற்கு அழைப்பு விடுப்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! மல்லர்மேயின் அர்ப்பணிப்புக் கவிதையான Le Tombeau de Charles Baudelaire, பொருள்மயக்க நீழல்களுடன் முடிகிறது:
“A tutelary poison, his own Wraith,
We breathe in always, though it bring us death“
பாதுகாக்கும் விஷம், அவரது ஆவியையே,
நாம் எப்பொழுதும் சுவாசிக்கிறோம், நமக்கது மரணத்தையே கொண்டுவந்தாலும்
பூட்லேரின் கல்லறையை ஒளிரச்செய்யும் அந்த கேஸ்லைட், ஆடனின் வரிகளில் வரும் கேஸ்லைட்டிற்கு அழைப்பு விடுக்கும்:
“Trim dualistic Baudelaire,
Poet of cities, harbors, whores, Acedia, gaslight and remorse.“
நேர்த்திமிக்க இருமையான பூட்லேர்,
நகரங்கள், துறைமுகங்கள், பரத்தையர்கள், மனச்சோம்பல், கேஸ்லைட், மற்றும் குற்றவுணர்வுவின் கவிஞர்.
ஆனால் யேட்ஸின் அன்னமோ, பூட்லேரின் அன்னத்தைப் போலல்லாது, அதன் வீரியமிக்க ஆற்றலால் நம்மை அச்சுறுத்தும்:
“A sudden blow: the great wings beating still
Above the staggering girl, her thighs caressed
By the dark webs, her nape caught in his bill“
திடீரென்று ஒரு அடி: தடுமாறும் பெண்ணின் மீது
பெரும் இறக்கைகள் இன்னமும் துடித்தபடி,
கருவலைகள் தொடைகளை வருட,
பிடரியோ அலகில் சிக்கியபடி
லேடாவுடன் அந்த அன்னத்தை வலுக்கட்டாயமாக இணைத்ததன் பலனே ஹெலன், இவருக்காக எரிக்கப்பட்ட டிராய்க்காகவே பூட்லேரின் ஆண்ட்ராமகீ ஏங்கித் தவித்தார், இவரது அழகு எட்கர் ஆலன் போவின் வார்த்தைகளில் “பழங்காலத்து நைசிய மரப்பட்டைகளை” ஒத்தது; மின்சாரக் கண்களோ பூட்லேருடன் அவற்றின் அமானுஷ்ய சக்தியைப் பகிர்ந்துகொள்கின்றன. (Le Flambeau vivant, உயிருள்ள தீப்பந்தம் என்ற கவிதையில்) இப்படியே மிகைக்களிப்பின் பரவசத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கலாம்… பிரெஞ்சு மொழியில் Cygne (அன்னம்) Signe (குறி /அடையாளம்) இரண்டுமே சீன்ய என்றே உச்சரிக்கப்படுகின்றன. ஒன்றன் மேல் மற்றொன்று எழுதப்பட்டிருக்கும் பிரதிகளாலான பாலிம்ப்செஸ்ட் என அழைக்கத்தக்க இவ்வேடு, குறியீடுகளாலான ஒரு வனமும்கூட. (Correspondances, இயைபுகள் கவிதையில்) பூட்லேரின் “நினைவென்னும் மதுவை” அருந்திய வாசகரே அது அளிக்கும் களிப்பில் அவற்றை மறைவிளக்கம் செய்யவேண்டும். அத்தகைய வாசகர் அவர் விடுத்த “பயணத்திற்கான அழைப்பை” ஏற்று வேறொரு கரையைச் சென்றடையலாம். ஆங்கே,
ஆண்டாளின்
ஓரிரு நரைமுடியில்
நாலைந்து
அன்னப் பறவைகள்….
அவனுக்காக மிதந்து வரலாம்.
அதனால்தான் Fleurs du Mal (ரிச்சர்ட் ஹொவர்டின் அபாரமான மொழிபெயர்ப்பில், Additional Poems-உடன் வெளிவந்திருக்கும் பதிப்பில்) ‘அவனுடன்’ தொடங்கி ‘அவனுடனேயே’ முடியவும் செய்கிறது (Hell with you / நாசமாய்ப் போ என்று வசைபாடும் இறுதி வரியை Hell with you / சொர்க்கத்தில் உன்னோடு என்றும் பிறழ்வாசிப்பு செய்யலாம்!) மனச்சோர்வளிக்கும் சலிப்பு என்ற அரக்கனைத் தவிர்க்கும்பொருட்டு பூட்லேரின் கபட வாசனாகவும் அவரைப் பதிலிக்கும் மாற்றுப்பெயராகவும், அவரது இரட்டைச் சகோதரனாகவும் புத்தகத்தை ஆரம்பித்து பூட்லேரின் நரகத்தில் தனக்கே உரித்தான சொர்க்கத்தைத் தேடும் மென்மையான வாசகனாக அதை அவன் முடித்து வைக்கிறான்.
*
மூலநூல்கள் / மேலும் படிக்க:
- Baudelaire, Charles, Les Fleurs du Mal, Tr. Richard Howard , Godine, 1997
- Calasso, Roberto, La Folie Baudelaire, Farrar, Strauss and Giroux, 2012
- Auerbach, Erich, Scenes from the Drama of European Literature, Meridian Books, 1957
- போத்லெர், ஷார்ல், தீமையின் மலர்கள், மொ.பெ. குமரன் வளவன், Cre-A, 2012
(*கட்டுரையில் தமிழில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பூட்லேரின் கவிதை வரிகள் ஆசிரியர் மொழிபெயர்த்தவை.)