தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 12): நிலமும் திரையும்- செந்தில் ஜெகன்நாதனின் மழைக்கண்

2 comments

ஈரோடு நண்பர் குமரன் எனக்கு அறிமுகமானது இருபதாண்டுகளுக்கு முன்பு. சென்னையிலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தார். அவரை எனக்கு அறிமுகப்படுத்திய ராஜேந்திரன் ‘அஜித்துக்கு கதை சொல்லிருக்காரு’ என்று மிதப்புடன் சொன்னது நினைவிலிருக்கிறது. சினிமாவுடன் தொடர்புடைய நபரை முதன்முதலாகச் சந்தித்தது அப்போதுதான். சினிமாவைவிட சினிமாவின் உருவாக்கம் குறித்த தகவல்கள் எப்போதும் ஆர்வமூட்டுபவையாக இருந்த ஒரு பருவம். அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பதுபோல அடங்கிய குரலில் புன்னகைத்தபடியே பேசிக்கொண்டிருந்த குமரனை இரண்டு மாதம் கழித்து ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்தபோது சற்றே அதிர்ச்சியுற்றேன். “இங்க என்ன பண்றீங்க?” என்று கேட்ட என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு வீடியோ கேமராவுடன் அவசரமாய் நகர்ந்தார். “பொண்ணு மாப்ளே அருந்ததி பாக்கறதை எடுக்கணும். அப்றம் பேசலாம்.” அடுத்த நாள் ரயில்நிலைய நடைமேடையில் தேநீரை அருந்தியபடியே சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. “சூட்டிங் இருந்தாதான் மெட்றாஸ்ல இருக்க முடியும். ஒரு மாசமா ஒன்னும் அமையலை. அதான் இங்க ஓடி வந்துட்டேன். ஆவணி மாசம் பாருங்க, நெறைய முகூர்த்தம். அஞ்சு கல்யாணம் புக் ஆயிருக்கு. வீடியோ போட்டோன்னு கொஞ்சம் வருமானம் வரும். முடிச்சுக் குடுத்துட்டு அங்க போயிருவேன்.”

நான் கோவைக்கு வந்தபிறகும்கூட குமரன் இப்படி ஈரோட்டுக்கும் சென்னைக்குமாய் அல்லாடிக்கொண்டுதான் இருந்தார். ‘வளசரவாக்கத்துல ஆபிஸ் போட்டாச்சு’ என்று சில சந்தர்ப்பங்களிலும் ‘தனுஷுக்கு கதை சொல்லிருக்கேன். இந்தத் தடவை ஓகே ஆயிடும்’ என்று வேறு நாட்களிலும் ‘ரெண்டு ஹீரோ சப்ஜெக்ட். விஷால் ஓகே சொல்லிட்டார்’ என்றும் உற்சாகம் குறையாமல் சொல்வார். அப்போதெல்லாம் அவர் தோளில் கல்யாண வீடியோ கேமராவைச் சுமந்தபடியேதான் இருந்தார். 

இதுபோன்ற லட்சக்கணக்கான கதைகள் உண்டு கோடம்பாக்கத்தில். ‘மழை’ சிறுபத்திரிக்கை வெளிவந்த சமயம் சினிமாக் கனவில் வாழ்க்கையைப் பணயம் வைத்துவிட்டு எப்படியாவது ஒரு நாள் ஜெயித்துவிடுவோம் என்று நம்பிக்கையை ஈரத்துணியாக வயிற்றில் போட்டுக்கொண்டு போராடும் உதவி இயக்குநர்களைப் பற்றிய ஒரு குறுநாவலை எழுதத் தொடங்கியிருந்தார் யூமா வாசுகி. அந்தக் குறுநாவல் எழுதி முடிக்கப்படவில்லை.

கனலியில் வெளியான ‘நித்தியமானவன்’ கதையைக் குறித்து பாதசாரி எழுதிய குறிப்பைப் பார்த்துவிட்டு அதைத் தேடிப் படிக்க நேர்ந்தபோது குமரனையும் யூமா வாசுகியையும் நினைத்துக்கொண்டேன். ஏற்கெனவே சொல்லப்பட்ட களம் என்றபோதும் அந்தக் கதையை நகர்த்தியிருந்த விதமும் எளிய கதையினூடே தற்செயல் போல வெளிப்பட்டிருந்த நுட்பங்களும் கவனிக்கத்தக்கதாய் இருந்தன. பொருட்படுத்தத்தக்க ஒரு சிறுகதை எழுத்தாளராகச் செந்தில் ஜெகன்நாதனை அறிமுகப்படுத்தியது.

மூன்று தலைமுறைகளின் தமிழ்ச் சமூக வாழ்விலும் வரலாற்றிலும் அரசியலிலும் பெரும் செல்வாக்கு செலுத்தியிருப்பது தமிழ் சினிமா. இன்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவாகவும் லட்சியமாகவும் விளங்கும் வசீகரம். இதில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு என்பது லட்சத்தில் ஒருவனுக்கே என்ற யதார்த்தத்தை அறியாதவர்களல்ல யாரும். ஆனால், அந்த ஒருவன் நானே என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே கூட்டத்திலிருந்து தன்னை விலக்கி நிறுத்திப் பார்க்கச் செய்கிறது. ஒருவகையில் அபத்தம் என்றாலும் அது இல்லையென்றால் அங்கே நின்று சமாளிக்கவோ சாதிக்கவோ முடியாது. அப்படியொரு வைராக்கியம் ஒருவனுக்கு வாய்க்க வேண்டுமெனில் அவனது பின்னணி என்னவாக இருக்கும்? எங்கோ எதையோ தொலைத்துவிட்டு இங்கு வந்து தேடுகிறானா? அல்லது சொந்த ஊரில் பிழைக்க வழியில்லாமல் இங்கே வந்து தடுமாறுகிறானா? அல்லது யாருக்கோ எதையோ நிரூபிக்கவேண்டும் என்ற வேட்கையா? அல்லது சினிமாவை உள்ளபடியே அறிந்துகொண்டு அதில் சாதிக்க வேண்டும் என்ற தீவிரமா? ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களும்கூட. 

ஆறாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைவு. ஒரு சனிக்கிழமையன்று காலையில் அம்மா தறியிலிருந்து எழுந்தவுடன் நான் குழியில் இறங்கினேன். மெல்ல வாட்டமிடத் தொடங்கினேன். தோளில் நூல் மூட்டையுடன் அப்போதுதான் உள்ளே வந்த அப்பா என்னைப் பார்த்தார். “மொதல்ல எந்திரிச்சு வெளிய வா.” புரியாமல் மேலே வந்தவனின் தோளில் கைவைத்தார் “இந்தப் பொழப்பு எங்களோட போகட்டும். நீ போயி நல்லா படி.”

பொதுவாக, பெற்றோர்கள் பலருக்கும் அப்படியொரு எண்ணம் எழுவது இயல்பே. என்னைத் தறிக்குழியிலிருந்து மேலே வரச்செய்த அப்பாவின் அந்தச் சொல் போல ஏதோவொரு வார்த்தைதான் பலரையும் சென்னையை நோக்கிச் செல்வதற்கான உந்துதலாக இருக்கவேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது பணத்தையும் புகழையும் அடைவதுதான் என்றால் இரண்டையும் ஒன்றாகத் தரவல்லது சினிமா அல்லவா?

விளைநிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கி வீட்டு மனைகளாகும் சூழலில், மாதக்கணக்கில் மண்ணில் உழைத்து விளைச்சல் கண்ட பின் கணக்கு பார்த்தால் மிஞ்சுவது கடனே என்ற நிலையில் ஒரு விவசாயியின் பிள்ளையும் அப்படித்தான் யோசிப்பான். நிலத்தில் பாடுபட்டு வாழும் எண்ணம் இருந்தபோதும் நீர்வரத்து, வேலைக்கு ஆட்கள், விளைபொருட்களுக்கான விலை என்று எதுவுமே அந்த எண்ணத்துக்கு ஆதரவாக அமையாத சூழலில் வேறொரு பிழைப்பைத் தேடிப்போக நேர்கிறது. விவசாயமே இந்தியாவின் வாழ்வாதாரம் என்று சொல்லப்பட்டபோதும் அந்தத் தொழிலில் ஆர்வமுடனும் நம்பிக்கையுடனும் இளைஞர்களை ஈடுபடச்செய்யும் எந்தவொரு காரணியும் சாதகமாக இல்லை. அரசுத் துறையோ தனியார் நிறுவனமோ அல்லது இன்றைய தொழில்நுட்பத் துறையோ எதுவானாலும் மாதச் சம்பளம் அடிப்படையிலான பணிகள் சாத்தியமாக்கும் நிலையான வருமானம், உத்தரவாதமான வாழ்க்கைத் தரம் இரண்டையும் விவசாயம் உறுதிப்படுத்துவதில்லை. இன்று விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களில் அதிக சதவீதம் இரண்டு தலைமுறைக்கு முந்தையவர்களே.

மண்ணில் வாழ வழியின்றி கனவைத் துரத்தியோடும் இளைஞர்களின் இந்த ஊசலாட்டமே செந்தில் ஜெகன்நாதனின் கதையுலகம். 

தீவிரத்துடன் முயற்சி செய்யும் ஒவ்வொரு முறையும் இறுதியில் தோல்வியே கிடைக்கிறதென்றாலும் சோர்ந்து போகாமல் அல்லது வேறு வழியில்லாமல் மீண்டும் அதே தீவிரத்துடன் முயற்சியில் ஈடுபடச் செய்யும் கவர்ச்சியைக் கொண்டிருப்பது சினிமா மட்டுமல்ல, நிலமும்தான்.

ஒரேயொரு வாய்ப்பு, அதைக் கைப்பற்றிக்கொண்டு உச்சத்தைத் தொட்டுவிடலாம் என்ற உதவி இயக்குநரின் அசைக்க முடியாத நம்பிக்கையே அவனைத் தொடர்ந்து அதில் விழுந்துகிடக்கச் செய்கிறது. அதே நம்பிக்கைதான் ஒரு விவசாயியையும் ஊக்கப்படுத்தி உழைக்கச் செய்கிறது. ‘இந்தக் கட்டாப்புல ஓரளத்திக்கு வெளைஞ்சிருச்சுன்னா போதுமப்பா, எல்லாத்தையும் செரி பண்ணிர்லாம்’ என்று தலையில் உருமாலையைச் செருகிக்கொண்டு நிலத்தில் இறங்கச் செய்கிறது.

உழைப்பும் நம்பிக்கையும் ஒன்றுதான் என்றபோதும் முக்கியமான இரண்டு காரணிகள் இரண்டு துறைகளையும் வேறுபடுத்துகின்றன. சினிமாவில் வெற்றி பெறும் ஒருவனுக்குப் புகழும் பணமும் வாய்த்துவிடும். பெரும் புகழ், பெரும் செல்வம் இரண்டுமே கிடைத்துவிடும் உத்தரவாதம் உண்டு. ஆனால் விவசாயத்தில், நிலத்தில் பாடுபட்டு வெல்கிற ஒருவனுக்கு இவை கிட்டுவதில்லை. நஷ்டமில்லாமல் தப்பிக்கவோ அல்லது கொஞ்சம் லாபம் ஈட்டவோ முடியும். நிச்சயமாய் புகழ் கிடைக்காது. 

‘மழைக்கண்’ கதையைத் தமிழினியில் படிக்க நேர்ந்தபோது இந்தப் போராட்டத்தின் இன்னொரு பக்கத்தை உணர முடிந்தது. பூமியுடன் பிணைந்த வாழ்வின் பல்வேறு சிடுக்குகளையும் அதன்பொருட்டு சந்திக்க நேரும் அவலங்களையும் திருத்தமாகச் சொன்ன கதை. சின்னஞ்சிறு பூச்சிக் கடி குடும்ப வாழ்வைச் சீரழிக்கவும் புரட்டிப்போடவும் போதுமானதாக இருக்கிறது. பூமியை நம்பி மண்ணில் உழைப்பவர்களையும் ஒட்டுமொத்தமாய் புரட்டிப்போட சுற்றிலும் பல்வேறு காரணிகள். ஒன்றிலிருந்து தப்ப முடியும்போது இன்னொன்றுக்குப் பலியாக நேர்ந்துவிடுகிறது. கணந்தோறும் கண்விழித்து, விளைந்து நிற்கும் பயிரைப் பாதுகாக்க வேண்டும். நொடிப்பொழுது அலட்சியமோ கவனமின்மையோ முதலுக்கே மோசமாகப் போகும்.

விளைச்சல் பொய்க்கும்போது கடன் சுமை ஏறுகிறது. கடனுக்காக நிலம் கைவிட்டுப் போகிறது. அந்தத் துக்கத்தை எந்தவொரு விவசாயியும் தாங்கிக்கொள்வதில்லை. அத்துயரின் வாதையிலிருந்து தப்பும்பொருட்டு போதையில் வீழ்கிறார்கள் அல்லது மாய்த்துக்கொள்கிறார்கள். மீள முடியாத இருண்ட ஆழத்துக்குள் அமிழ்ந்து போகிறார்கள். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்வது என்பதைக் காட்டிலும் நிலத்தை மீட்க முடியாத துயரமே அவர்களைக் கொல்கிறது. ‘அன்பின் நிழலி’ல் வதைபட்டு மருத்துவமனையில் கிடக்கும் தகப்பனும் அப்படியொருவனே. 

நோய் நொடி அண்டாது உழைப்பவன் உறுதியாக இருக்கும் வரையில் நிலமும் பிழைக்கும், குடும்பமும் சமாளிக்கும். துரதிர்ஷ்டவசமாய் விபத்தோ நோயோ தாக்கும்போது உயிர்பிழைக்க முடியாமல் போவதோடு அத்தனை காலமும் உழைத்துச் சேர்த்தவற்றையும் பூமியையும்கூட இழக்க நேர்கிறது. பிற தொழில்களில், அரசுப் பணிகளில் உள்ளதுபோல விவசாயிக்கு ஓய்வூதியமோ பணிக்கொடையோ கிடையாது. ‘நெருநல் உளளொருத்தி’ கதையின் ராமஜெயம் உயிர்த்துறக்கும்போது இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு பூங்கொடி, விதைநெல்லையும் பத்தாயத்தையும்கூட விற்றுப் பசியாறும் அவலத்தைச் சந்திக்கிறாள்.

இந்த மூன்று கதைகளிலும் செந்தில் ஜெகன்நாதன் நிலத்தை நம்பியிருக்கும் விவசாயியின் பிரச்சினையை, அவல நிலையை முதன்மையாக முன்னிறுத்தவில்லை. உரத்த குரலில் பேசவில்லை. கதைகளின் ஓட்டத்தினூடே ஒரு மெல்லிய சரடாக மட்டுமே ஊடாட விட்டிருக்கிறார். அத்தகைய புனைவுத்தியே இக்கதைகளைப் பிரச்சாரத் தொனியிலிருந்து விலக்கி நிறுத்தியுள்ளது. எளிமையான சொற்களில், செறிவான ஒரு வாக்கியத்தில் அவரால் அத்தகைய ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது. 

உத்தரவாதமற்ற வாழ்விலிருந்து வேறொரு பாதையைத் தேர்ந்தெடுக்க எண்ணும் பிள்ளைக்கும் அப்பாவுக்குமான உறவு சீரானதாக அமையாது. சராசரியாக எழும் முரண்களைவிட சற்று மூர்க்கமானதாகவே இருக்கும். ‘எவ்வம்’ கதையில் உள்ள தந்தையைப் போல ஒருவர் தன் சுயநலத்துக்காக எதிர்காலத்தைக் குறித்து எந்தக் கவலையுமின்றி பிள்ளைகளைக் கொடுஞ்சூழலில் தள்ளும்போது, சந்தர்ப்பம் வாய்த்தால் அவரிடமிருந்து அவர்கள் தப்பியோடவே எண்ணுவார்கள். சிறுவன் என்ற நிலையை அவனுக்குள்ள உடல்நலக் குறைவை தனக்குச் சாதகமானதாகவும் சூழலிலிருந்து தப்பிப்பதற்கான காரணமாகவும் கையிலெடுத்துக்கொள்ளும் தந்தையைப் புரிந்துகொள்ளும்போது இருவருக்குமிடையிலான உறவு முறிந்து போகிறது. எதைக் கொண்டும் மீட்க முடியாத விரிசல்.

உயிர் இயல்பாகவே அன்னையரிடம் அடைக்கலம் புகும் பிள்ளைகளைத் தந்தையரின் இந்தப் போக்கு மேலும் அம்மா பிள்ளைகளாக்குகிறது. நிலத்திலும் வீட்டிலும் அயராது உழைப்பவர்களைக் குடிபோதையில் அடித்து நொறுக்கும் அப்பாக்கள் மன்னிக்க முடியாத எதிரிகளாகிறார்கள். அவர்களின் மரணத்தை விழைகிறார்கள். தந்தையர்களிடமிருந்து மேலும் விலகுவதும் அன்னையர்களிடம் அதைவிடக் கூடுதலாய் நெருங்குவதுமான சமன்பாட்டை செந்தில் ஜெகன்நாதனின் கதைகளில் பார்க்க முடிகிறது. 

தந்தையரிடமிருந்து தப்பி எங்கிருந்தோ வந்தவர்களும் நிலத்தை இழந்து பிழைக்க வந்தவர்களும்தான் வடபழனியில் விடிகாலையில் உதிரிப் பாத்திரங்களுக்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். ‘நட்சத்திரமாக ஆகிவிட வேண்டுமெனத் துடிக்கும் மின்மினிகளாக’ அன்றாடங்களைக் கடக்கிறார்கள்.

சினிமாவில் வாய்ப்புக்காகக் காத்திருப்பவனை விடுத்துச் செல்லும் ஒருத்தியைத் தன் மகளுக்காக அதே சினிமாவில் வாய்ப்பு கேட்டு அவனிடமே வந்து நிற்கச் செய்கிறது காலம். குழந்தைகளை நட்சத்திரங்களாக்குவதையே லட்சியமாகக் கொண்ட அன்னையர்களின் நீண்ட வரிசை ஒன்றும் இருப்பதைச் சொல்லும் ‘ஆடிஷன்’ கதை ஒரு காதல் கதைபோல எழுதப்பட்டிருந்தாலும் வாழ்வின் சுழல் விதியையே மையம் கொண்டிருக்கிறது.

மனித உறவின் தீராத புதிர்களை, விடுவிக்க முடியாத சிக்கல்களைத் தொட்டுக் காட்ட முனையும் கதைகள் தனித்துவம் பெற்றுவிடுகின்றன. இத்தனை ஆண்டு காலமும் இலக்கியம் முட்டித் திறக்க முயலும் கனத்த ஒரு கதவின் மீது இந்தக் கதைகளும் தம்மளவில் விசையுடன் மோதுகின்றன என்பதே அவற்றுக்குச் சிறப்பான தகுதியைத் தருகின்றன.

அண்ணனின் மூன்றாவது பிள்ளையைத் தத்தெடுத்து வளர்க்கிறாள் தங்கை. அண்ணனின் அகால மரணத்தைத் தொடர்ந்து குடும்பம் நிலைகுலைகிறது. உள்ளதனைத்தும் போய் வறுமை மட்டுமே எஞ்சி நிற்கிறது. காலங்கனிந்து கருவுற்றதை அறிந்த தங்கை, மூன்று ஜீவன்கள் ஒருவேளை பசியாறவே வழியின்றி தவிக்கும் அண்ணனின் குடும்ப நிலை தெரிந்தும், தத்தெடுத்த பிள்ளையை மீண்டும் அண்ணியிடமே அனுப்பத் தீர்மானிக்கிறாள். இரண்டு பெண்களுக்கு இடையிலான அழுத்தமான மனமோதல்களினூடே ‘தாய்மை’யின் இயல்பான போக்குகள் வெகு நுட்பமாக இக்கதையில் வெளிப்பட்டுள்ளன.

‘நெருநல் உளளொருத்தி’ தங்கையின் மனப்போக்குக்கு நேர் எதிரானது ‘காகளம்’ ராமஜெயத்தின் உள்ளம். ‘இன்னா செய்த’வனுக்கு ‘நன்னயம்’ செய்யும் பெருந்தன்மை கொண்டது. பிணமாகக் கண்ணாடிப் பெட்டிக்குள் கிடத்தப்பட்டவரின் முகம் பார்த்தும் கண்ணீர் பெருக்க முடியாத அளவுக்குக் குறுகுறுக்கச் செய்கிறது. துரோகங்களின் எடை ஒரு தட்டில் கூடும்போது அதைச் சமன்செய்ய இன்னொரு தட்டில் பெருந்தன்மையின் எடையைக் கூட்டி வைப்பதுதான் நியதி.

*

சினிமாவில் இருக்கும் ஒரு எழுத்தாளனின் கதைகளில் திரைக்கதைக்கான அடையாளங்கள் தன்னிச்சையாகவே அமைந்துவிடுகின்றன. ‘சுறுசுறுப்பாக இயங்கும் சினிமா படப்பிடிப்புத் தளத்தைப் பார்க்கும்போது நூற்றுக்கணக்கானோர் வடம் பிடித்து இழுக்கும் மாயுரநாதர் கோவிலின் ஐப்பசி மாதத் தேரோட்டம் நினைவில் வந்து போனது’, ‘அங்காயி வாயகன்ற சட்டியில் உள்ளங்கையில் தண்ணீரை இறைத்து அரிசி களைந்துகொண்டிருந்தாள். ஒரு இலந்தை விதையளவிலிருந்த கல் அவளின் விரல்களுக்கிடையே போக்குக் காட்டிக்கொண்டிருந்தது’ என்பதுபோல கதைகளின் சூழலையும் பின்னணியையும் மிக எளிதாகக் கட்டமைத்துவிட முடிகிறது.

‘மண்ணின் ஒவ்வொரு அசைவும் அம்மாவுக்கு அத்துப்படி’, ‘முதலாளியின் உள்ளங்கையிலேயே நாற்பது வருடங்களாக எடைக்கற்கள் ஏறியிருந்தன’ என்று கச்சிதமான சில சொற்களில் கதாபாத்திரத்தின் குணநலன்களை உணர்த்த வாய்க்கிறது. 

அதே சமயத்தில் காட்சி ஊடகமான சினிமாவில் ரசிகனின் கற்பனைக்கான இடமில்லாத சூழலில் உணர்ச்சி அழுத்தத்துடன் காவியத்தன்மையை ஏற்றுவதற்காக அதிகப்படியாய் ஒரு நகர்வை செய்ய வேண்டியதாகிறது. புனைவெழுத்தில் அதற்கான தேவை இல்லை. சரியான ஒரு இடத்தில் அப்படியே நிறுத்திவிட்டு கூடுதலாய் ஒரு வார்த்தை சொல்லாமலே கதையின் கனத்தைக் கூட்டிவிட முடியும். உதாரணமாக ‘அன்பின் நிழல்’ கதையின் முடிவைக் கவனிக்கலாம். குழந்தையைப் போல உறங்கிக்கொண்டிருக்கும் அப்பாவின் நெற்றியில், பயமாக இருந்தாலும் தயங்கியபடியே, முத்தமிடுகிறான் மகன். இந்த முத்தமும் ‘இந்த இருபத்தெட்டு வயதில் நினைவுக்குத் தெரிந்து அப்பாவுக்கு நான் கொடுத்த ஒரே முத்தம் இதுதான்’ என்ற வாக்கியமும் திரைமொழிக்கானது. ‘அப்பாவைப் பற்றிய கசப்பெல்லாம் மறந்து, அவரிடம் வெறுக்கவே முடியாத ஒரு தோற்றம் வந்திருப்பதை உணர்ந்தேன்’ என்கிற முந்தைய வரியே சிறுகதைக்குப் போதும். ‘நெருநல் உளளொருத்தி’ கதையின் கடைசிப் பத்தியுமே ஒரு திரைக்கதையாளருடையதே. சிறுகதையாளர் அதற்கு முந்தைய வரியுடனே கதையை நிறுத்தியிருப்பார்.

‘எவ்வம்’, ‘காகளம்’, ‘நெருநல் உளளொருத்தி’, ‘மழைக்கண்’ போன்ற தலைப்புகளைப் பார்க்கும்போது கதைக்கான தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் செந்தில் ஜெகன்நாதன் கூடுதல் முனைப்பைக் காட்டுவதைப் புரிந்துகொள்ள முடியும். தனித்த அடையாளத்தின் வழியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியே அவ்வாறான முனைப்பை உருவாக்குகிறது.

அதேவேளையில் கதைச் சூழல்களையும் கதாபாத்திரங்களையும் உரையாடல்களையும் எளிமையாகவும் கச்சிதமாகவும் இயல்பாக அமைத்துவிட முடிந்திருக்கிறது. சக மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களது பாடுகளையும் அருகிலிருந்து கவனித்தவர்களுக்கு இந்த நுட்பங்கள் திருத்தமாகக் கைகூடிவிடும். மாயவரத்துக்கும் சென்னைக்குமான இடைவிடாத இலக்குகள் கொண்ட பயணம், செந்தில் ஜெகன்நாதனுக்கு எண்ணற்ற மனிதர்களையும் அவர்களின் அலைக்கழிப்புகளையும் அல்லாடல்களையும் நெருக்கமாய் காணும் வாய்ப்பைத் தந்திருக்கிறது. எனவேதான் புனைவு சார்ந்த வேறெந்த செயற்கையான கருவிகளையும் கைக்கொள்ளாமல் வாழ்வின் சாரத்தையும் அனுபவத்தின் ஆழத்தையும்கொண்ட நேர்த்தியான கதைகளை எழுத முடிந்திருக்கிறது.

வாழ்க்கையை எப்படி அணுகவேண்டும், எது வெற்றி, எது இலக்கு என்பது போன்ற அடிப்படைக் கேள்விகளை அணுகுவதில் உள்ள ஒரு தலைமுறையின் தடுமாற்றத்தை, குழப்பத்தை இக்கதைகளில் உணரமுடிகிறது. அவ்வாறான மனநிலைக்குக் காரணமான நடைமுறைகளையும் சூழலையுமே இக்கதைகள் பகுத்துக் காட்ட முயல்கின்றன. புறச்சூழலின் அழுத்தத்துக்குச் சற்றும் குறையாத தீவிரமான நெருக்கடியைத் தரும் அகச்சூழலை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகளை எங்கிருந்து அடைய முடியும் என்ற தேடலின் சுவடுகளை இவற்றில் காணமுடிகிறது. இத்தகைய கேள்விக்கான பதில்களை, தேடலுக்கான திசைகளை ‘மழைக்கண்’, ‘காகளம்’, ‘நெருநல் உளளொருத்தி’ போன்ற புனைவுகளின் வழியாகவே கண்டடையவும் முடியும்.

*

முந்தைய பகுதிகள்:

 1. தந்தையர்களும் தனயர்களும் – தூயனின் சிறுகதைகள்
 2. அன்னையின் சித்திரங்களும் சாதியின் முகங்களும் – சுரேஷ் பிரதீப் சிறுகதைகள்
 3. நடுவில் இருக்கும் கடல் – சித்துராஜ் பொன்ராஜ் கதைகள் 
 4. உழைக்கும் சிறுவர்களின் துயர உலகம் – ராம் தங்கம் கதைகள்
 5. கலையும் வண்ணங்களும் மறையும் காட்சிகளும் – கிருஷ்ணமூர்த்தியின் கதைகள் 
 6. போரும் காமமும் – அனோஜன் பாலகிருஷ்ணன் கதைகள்
 7. இருண்ட வானில் ஒளிரும் நட்சத்திரங்கள் – கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதைகள்
 8. புனைவெழுத்தின் புதிய சாத்தியங்கள் – சுனில் கிருஷ்ணனின் கதைகள்
 9. அகத்தின் ஆழம் தேடி – மயிலன் ஜி.சின்னப்பனின் கதைகள்
 10. கதை சொல்லாத கதைகள் – கமல தேவியின் கதைகள்
 11. துலா முள்ளின் அசைவுகள் – பா.திருச்செந்தாழையின் கதைகள்

2 comments

எபிநேசர் ஈசாக் July 25, 2022 - 10:47 pm

இச்சிறுகதைத்தொகுப்பு வாழ்வியலோடு மனநிலையோடு மிக மிக இலகுவாய் ஒட்டிக்கொள்கிறது.இக்கட்டுரையும் இக்கதைகளைப்போலவே அடுத்த வரிகளை தேட வைக்கிறது.மிகச்சிறப்பு.செந்தில் சகோ இன்னும் உயரங்களை எட்ட வாழ்த்துகள்.

செந்தில் ஜெகன்நாதன் July 28, 2022 - 12:12 pm

மிக்க நன்றி சகோ

Comments are closed.