நீச்சல்காரன் – ஜான் சீவெர்

0 comment

“நேற்று நான் நிரம்பக் குடித்துவிட்டேன்” எனச் சொல்லியபடி எல்லோரும் வட்டமாக அமர்ந்திருக்கிற ஒரு வேனிற்கால ஞாயிறு அது. தேவாலயத்திலிருந்து கிளம்பும் திருச்சபையினர் அவ்வாறு கிசுகிசுப்பதை நீங்கள் கேட்டிருக்கலாம், தனது நீண்ட அங்கியுடன் மல்லுக்கட்டியபடி வருகிற மதகுருவின் உதடுகளிலிருந்தேகூட நீங்கள் அதைக் கேட்டிருக்கலாம், கோல்ஃப் புல்வெளியிலும் டென்னிஸ் மைதானத்திலும் கேட்டிருக்கலாம், தாளமுடியாத தலைச்சுற்றலில் ஆடபான் (Audubon) குழுமத்தின் தலைவர் துடித்துக்கொண்டிருக்கும் வனஉயிரிகள் பாதுகாப்பகத்தில் கேட்டிருக்கலாம். “நான் நிறையக் குடித்துவிட்டேன்” என்றான் டொனால்ட் வெஸ்டர்ஹேஸி. “நாம் எல்லோருமே நிறையக் குடித்துவிட்டோம்” என்றாள் லுஸிண்டா மெரில். “அது வைனாகத்தான் இருக்க வேண்டும்,” என்றாள் ஹெலன் வெஸ்டர்ஹேஸி. “நான் அந்தக் கிளாரெட்டை அதிகம் குடித்துவிட்டேன்.”

இது நிகழ்ந்தது வெஸ்டர்ஹேஸியின் குளத்தின் விளிம்பில் ஆகும். ஆர்டீஸியன் கிணற்றின் அடர்த்தியான இரும்புத்தன்மையுடைய நீரினால் நிரப்பப்பட்ட அந்தக் குளமானது வெளிறிய பச்சை நிறத்தைக் கொண்டிருந்தது. அது ஒரு இனிமையான நாள். தூரத்தில் வந்துகொண்டிருக்கும் ஒரு கப்பலின் முகப்பில் இருந்து காண்கையில் ஒரு நகரம் போல் தோன்றக்கூடிய அடர்த்தியான மேகக்கூட்டம் மேற்கில் திரண்டிருந்தது. அதற்கு ஒரு பெயரும்கூட இருந்திருக்கக்கூடும்- லிஸ்பன், ஹாக்கன்சாக் என்பதாக. கதிரவன் வெப்பமாய்ப் பொழிந்துகொண்டிருந்தது. ஒரு கையைக் குளத்துநீரிலும் மறுகையில் ஜின் நிரம்பிய டம்ளருமாக நெடி மெரில் அங்கே அமர்ந்திருந்தான். அவன் ஒரு ஒல்லியான மனிதன் – குறிப்பாக, இளமைக்கே உரித்தான மெலிவாக அது தோற்றமளித்தது – இளமையைத் தாண்டி வெகுதொலைவுக்கு வந்துவிட்ட போதும் அன்று காலையில் மாடிப்படியின் கைப்பிடியில் சறுக்கி வந்து, வரவேற்பறை மேசை மீதிருந்த ஆஃப்ரடைட் சிலையின் வெண்கலப்பின் புறத்தில் தட்டிவிட்டே உணவறையிலிருந்து மிதந்துவந்த காஃபியின் மணத்தினை நோக்கி அவன் துள்ளி ஓடினான். அவனை ஒரு வேனிற்கால நாளுடன் ஒப்பிட இயலும், குறிப்பாக அதன் இறுதி மணிநேரங்கள். அவனிடம் டென்னிஸ் மட்டையோ நீச்சல்பையோ இல்லாதபோதும் அவனது தோற்றம் இளமையானதாகவும் துடிப்பானதாகவும் ஏதுவானதாகவும் இருந்தது. அதுவரையில் நீந்திக்கொண்டிருந்த அவன், அந்த நொடியின் அத்தனை தன்மைகளையும், கதிரவனின் வெப்பத்தையும், அவனது மகிழ்ச்சியின் தீவிரத்தையும் தற்போது ஆழமாக சுவாசித்தான். அவை அனைத்தும் அவன் மார்பில் பாய்வதைப் போலத் தோன்றியது. அவனது சொந்தவீடு தென்புறத்தில் எட்டு மைல் தொலைவில் புல்லட் பூங்காவில் இருந்தது. அங்கே அவனது நான்கு அழகான மகள்களும் இந்நேரம் தங்களது மதிய உணவை முடித்துவிட்டு டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கக்கூடும். தென்மேற்காக வளைந்துசெல்வதன் வாயிலாகத் தனது வீட்டை நீரிலேயே நீந்திச் சென்று சேர்ந்துவிட முடியும் என அவனுக்குத் தோன்றியது.

அவனது வாழ்வு எல்லையற்றது – இச்சிந்தனை (அதில் தப்பித்தலுக்கான சூசகம் இருந்தபோதிலும்) அவனுக்களித்த மகிழ்ச்சி விளக்கிட முடியாதது. நீச்சல் குளங்களின் வரிசையை, நிலத்தடி நீரின் ஓட்டத்தை  அவன் ஒரு வரைபடவியலாளரின் கண்களுடன் காண்பதைப் போலத் தோன்றியது. அவன் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்திவிட்டான், நவீன புவியியலுக்குத் தன் பங்கை அளித்துவிட்டான்; இந்த நீரோட்டத்திற்கு அவன் லுஸிண்டா என்னும் தன் மனைவியின் பெயரைச் சூட்டுவான். அவன் தந்திரங்கள் செய்யும் கோமாளி அல்ல, முட்டாளும் அல்ல. அவன் புதுமை செய்வதில் உறுதியாய் இருந்தான். தெளிவாக இல்லாவிடினும் சிறிய அளவில் தன்னைக் குறித்த ஒரு நாயகப் பிம்பம் அவனுக்கிருந்தது. அந்த நாள் அழகாய் இருந்தது, ஒரு நீண்ட நீச்சலால் அதன் அழகை விஸ்தரிக்கவும் கொண்டாடவும் முடியும் என அவனுக்குத் தோன்றியது. 

தோளில் தொங்கிய கம்பளியாடையை அகற்றிவிட்டு நீருக்குள் தாவினான். குளத்திற்குள் தன்னை எறிந்துகொள்ளாதவர்கள் மீது ஒரு விவரிக்க முடியாத கண்டனம் இருந்தது அவனுக்கு. மார்புவல விரைவுநீச்சலைத் தேர்ந்தெடுத்த அவன் ஒவ்வொரு வீச்சிற்கோ அல்லது நான்கில் ஒரு வீச்சிற்கு என்பதாகவோ மூச்சிழுத்துக்கொண்டான். எங்கோ அவனது ஆழ்மனது மிகச்சரியாக ஒன்று – இரண்டு ஒன்று-இரண்டு என உதைப்பயிற்சியின் லயத்துடன் எண்ணிக்கொண்டிருந்தது. தொலைதூரப் பயணத்திற்கு இவ்வகை நீச்சல் வரவேற்கத் தகுந்ததல்ல என்றபோதும் நீச்சலை வெகுஜனப்படுத்தியிருந்ததனால் சில வழிமுறைகளை அடிப்படையாகவும் வழக்கமாகவும் ஆக்கியிருந்தனர். இவனது பகுதியில் விரைவுநீச்சல்தான் அடிப்படையானதாக இருந்தது. அந்தப் பச்சை நீரினால் அணைத்துக்கொள்ளப்படுவதும் அதனுள் நீடித்து இருத்தலும் சிரமமானதாகவே இருக்கும், இயல்பான நிலைக்குத் திரும்பவே மனம் விழையும் எனத் தெரிந்தது. மேலும் அவன் காற்சட்டை அணியாமல்தான் நீந்த விரும்பியிருப்பான், ஆனால் அவனது இந்தச் செயல்திட்டத்திற்கு அது இயலாதென்றே தோன்றியது. தொலைவிலிருந்த விளிம்பில் மேலே எம்பி ஏறியவன் – ஒருபோதும் அவன் ஏணியை உபயோகித்ததில்லை – புல்வெளிக்குக் குறுக்காக நடந்தான். எங்கே செல்கிறாய் என லுஸிண்டா வினவியபோது, நீந்தியே வீட்டிற்குச் செல்லவிருப்பதாகத் தெரிவித்தான்.

செல்லவேண்டிய பாதை குறித்து அவனிடமிருந்த வரைபடமும்  விளக்கப்படமும், நினைவிலும் கற்பனையிலும் மட்டுமேதான் இருந்தன எனினும் அவை தெளிவானவையாகவே இருந்தன. முதலில் க்ரஹாம்ஸ், அடுத்து ஹாம்மர்ஸ், லியர்ஸ், ஹௌலாண்ட்ஸ், பிறகு க்ராஸ்கப்ஸ். டிட்மர் தெருவைக் கடந்து பன்கர்ஸை அடையும் அவன், ஒரு சிறிய நடைக்குப் பிறகு லெவிஸையும் வெல்சர்ஸையும் லன்காஸ்டரில் இருக்கும் பொதுக் குளத்தையும் சென்றடைவான். அடுத்ததாக ஹாலரன்ஸ், ஸாக்ஸ், பிஸ்வாங்கர்ஸ், ஷர்லி ஆடம்ஸ், கில்மார்ட்டின், க்லைட்ஸ். அந்த நாள் மிகவும் இனிமையானதாக இருந்தது, இவ்வளவு தாராளமான நீர்வளம் மிக்க ஓர் உலகில் வசிக்கிறான் என்பது அவனுக்களிக்கப்பட்ட கருணையாகவும் ஆசீர்வாதமாகவும் தோன்றியது. அவனது இதயம் தளும்பியது, அவன் புல்வெளிக்குக் குறுக்காக ஓடினான். ஒரு புதிய பாதையின் வழியாக வீட்டிற்குச் செல்லவிருக்கிறோம் என்னும் எண்ணம் அவனை ஒரு புனித யாத்ரீகன் போலவும் ஆய்வாளன் போலவும் இலட்சியவாதி எனவும் உணரச்செய்தது. செல்கிற வழியெல்லாம் நண்பர்களைச் சந்திக்க முடியும் என்பதும் நண்பர்கள் அனைவரும் லுஸிண்டா நதியின் கரையில் வரிசை கட்டுவர் என்பதும் அவனுக்குத் தெரியும்.

வெஸ்டர்ஹேஸியின் நிலத்தை க்ரஹாமின் நிலத்திலிருந்து பிரிக்கும் வேலியினூடாகச் சென்றவன், பூத்து நின்ற சில ஆப்பிள் மரங்களின் கீழே நடந்து, விசைக்குழாயையும் வடிப்பானையும் வைத்திருந்த கூடத்தைக் கடந்து க்ரஹாமின் குளத்தை வந்தடைந்தான். “என்னவாயிற்று நெடி,” என்றாள் க்ரஹாம். “என்னவொரு இன்ப அதிர்ச்சி. இன்று காலையிலிருந்து நான் உன்னைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றுகொண்டேயிருந்தேன். இரு, உனக்குக் குடிக்க ஏதேனும் கொண்டுவருகிறேன்.” எந்தவொரு ஆய்வாளனும் சிந்திப்பது போலவே, உண்மையில் தனது எல்லையை அடைய வேண்டுமெனில் உள்ளூர் மக்களின் இதுபோன்ற விருந்தோம்பல் வழக்கங்களும் நடைமுறைகளும் மிக லாவகமாகக் கையாளப்பட வேண்டும் என நெடி உணர்ந்தான். க்ரஹாம் குடும்பத்தினருக்குக் குழப்பத்தை விளைவிக்கவோ கடுமையாக நடந்துகொள்ளவோ அவன் விரும்பவில்லை. இங்கே செலவழிக்க அவனுக்கு நேரமும் இல்லை. அவர்களது குளத்தின் முழுநீளத்தையும் நீந்திக் கடந்து தனது லட்சியத்தை விளக்கியவன், கனெக்டிகட்டிலிருந்து இரண்டு கார்கள் முழுக்க வந்திறங்கிய நண்பர்களால் அங்கிருந்து மீட்கப்பட்டான். அவர்கள் கூச்சலும் கொண்டாட்டமுமாக இணைந்துகொண்டிருந்த போது அவன் அங்கிருந்து நழுவினான். க்ரஹாம் இல்லத்தின் முன்பகுதியின் வழியாக இறங்கிச்சென்றவன், ஒரு முள்வேலியைத் தாண்டி ஹாமரின் வெற்று நிலத்தைக் கடந்தான். இவன் யாரென்பதைச் சரியாக அடையாளம் காண முடியாவிட்டாலும், இவன் நீந்திவருவதைத் திருமதி ஹாமர் ரோஜாக்களிலிருந்து நிமிர்ந்து நோக்கினாள். தங்களது வரவேற்பறையின் திறந்திருந்த ஜன்னலைக் கடந்து அவன் நீந்திச்செல்லும் சத்தத்தை லியர் குடும்பத்தினர் கேட்டனர். ஹௌலாண்ட்ஸும் க்ராஸ்கப்ஸும் வெளியே சென்றிருந்தனர். ஹௌலாண்ட்ஸைக் கடந்த பிறகு டிட்மர் தெருவின் வழியாகப் பன்கரது குளத்தை நோக்கிச் சென்றான். தொலைவில் ஒலித்த கொண்டாட்டத்தின் ஒலியினை அவனால் அங்கிருந்தே கேட்க முடிந்தது.

சிரிப்புகளின், பேச்சுகளின் ஒலியினை நீரானது விலக்கமடையச் செய்து காற்றிலேயே மிதக்கவிட்டதைப் போலத் தோன்றியது. பன்கர்களது குளமானது சற்று உயரத்தில் இருந்ததால் அவன் சில படிகளில் ஏறி மேல்தளத்திற்குச் சென்றபோது இருபத்து ஐந்திலிருந்து முப்பது ஆண்கள் அங்கே குடித்துக்கொண்டிருந்தனர். ரஸ்டி டவர்ஸ் மட்டுமே நீருக்குள் இருந்தான் – ஒரு ரப்பர் தெப்பத்தின்மீது அவன் மிதந்துகொண்டிருந்தான். அட! எவ்வளவு அழக்காவும் பசுமையாகவும் இருக்கிறது இந்த லுஸிண்டா நதியின் கரை! மாணிக்கத்தின் நிறம்கொண்ட நீரின் அருகே செழிப்பான ஆண்களும் பெண்களும் கூடியிருக்க, வெண் அங்கி அணிந்த சிப்பந்திகள் குளிர்ந்த ஜின் பானத்தை அவர்களுக்குப் பரிமாறினர். தலைக்கு மேலே ஒரு செந்நிற ஹாவிலாண்ட் விமானப் பயிற்சியாளர் ஊஞ்சலில் ஆடும் குழந்தையின் மகிழ்ச்சியுடன் சுற்றிச் சுற்றிச் சுற்றிப் பறந்துகொண்டிருந்தார். அவனால் அவற்றைத் தொட முடியும் என்பது போல அந்தக் காட்சியின் மீது ஒரு நொடி ப்ரியமும், கூட்டத்தினர் மீது ஒருவித அன்பும் நெடிற்குள் எழுந்தது. தொலைவில் இடியோசை கேட்டது. அவனைக் கண்டவுடன் எனிட் பன்கர் கூச்சல் எழுப்பினாள். “அட! பாருங்கள், யார் வந்திருப்பதென! என்னவொரு ஆச்சரியம்! உன்னால் வரமுடியாதென லுஸிண்டா சொன்னபோது நான் இறந்தேவிடுவேனென நினைத்தேன்.” கூட்டத்தினூடாக அவனை நோக்கி வந்தவள், இருவரும் முத்தமிட்டுக்கொண்டதும் அவனை மதுக்கூடத்திற்கு அழைத்துச்சென்றாள். மேலும் பல பெண்களை முத்தமிடுவதற்காகவும் எண்ணற்ற ஆண்களின் கைகுலுக்கல்களுக்காகவும் அவன் நிற்க நேர்ந்ததால் அந்த நடையின் வேகம் சற்றே குறைந்தது. நூற்றுக்கணக்கான கேளிக்கைகளில் அவன் ஏற்கெனவே சந்தித்திருக்கிற சிப்பந்தி புன்னகையுடன் அவனுக்கு ஜின்னும் உற்சாக பானமும் அளித்தான். தன் பயணத்தைத் தாமதப்படுத்திவிடக்கூடிய எந்த ஒரு உரையாடலிலும் கலந்துவிடக்கூடாதெனும் பதற்றத்துடன் மதுவரங்கில் ஒரு கணம் நின்றான் நெட். சூழப்படப் போகிறோம் என அறிந்தவுடன் நீருக்குள் குதித்தவன், ரஸ்டியின் தெப்பத்தில் இடித்துவிடாதபடி ஓரமாக நீந்தினான். குளத்தின் இறுதிப்பகுதியில் டாம்லின்ஸன்ஸை ஒரு மலர்ந்த புன்னகையுடன் கடந்தவன், தோட்டத்துப் பாதையில் குதித்து ஓடினான். சரளைக்கற்கள் அவன் பாதத்தைக் கிழித்தன –ஆனால் இதில் அவன் எதிர்கொண்ட ஒரே ஒரு சிரமம் இது மட்டும்தான். வீட்டை நோக்கி அவன் நடந்தபோது கொண்டாட்டங்களின் சத்தம் தேய்ந்து பங்கர்களுடைய சமையலறையில் யாரோ பந்து விளையாட்டைக் கேட்டுக்கொண்டிருப்பதைக் கேட்க முடிந்தது.

ஞாயிறு மதியம். நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களூடாகச் சென்று ஓடுதளத்தின் புல்விளிம்பில் நடந்து ஆல்வைவ்ஸ் வீதிக்குச்சென்றான். குளியலாடையுடன் சாலையில் காணப்படுவதை அவன் விரும்பவில்லையாகினும் அதிகம் கூட்டமில்லாததால் சிறிய தூரத்தைக் கடந்து லெவிஸின் வீட்டுச் சாலைக்கு நடந்தான். தனியார் உடைமை எனக் குறிப்பிடும் அடையாளமும் நியூ யார்க் டைம்ஸ் வைப்பதற்கான பச்சைக்குழாயும் அங்கிருந்தன. அப்பெரிய வீட்டின் அத்தனை கதவுகளும் ஜன்னல்களும் திறந்திருந்தபோதும் யாரும் உயிர் வாழ்வதற்கான எந்த அடையாளமும் அங்கில்லை. ஒரு நாய்கூடக் குரைக்கவில்லை. வீட்டைச் சுற்றி நடந்து லெவிஸின் குளத்தினை அடைந்தவன், அவர்கள் அப்போதுதான் அங்கிருந்து கிளம்பியிருப்பதைக் கண்டான். தொலைவில், ஜப்பானிய வண்ண விளக்குகள் தொங்கவிடப்பட்ட ஒரு நிழற்குடையின் அருகே டம்ளர்களும் குப்பிகளும் உலர்பருப்புகள் எஞ்சியிருந்த தட்டுகளும் ஒரு மேஜை மேல் இருந்தன. நீந்திய பிறகு அவன் ஒரு டம்ளரை எடுத்து தனக்குக் கொஞ்சம் பானத்தை ஊற்றிக்கொண்டான். அது அவனது அன்றைய நான்காவதோ ஐந்தாவதோ பானம், லுஸிண்டா நதியின் பாதி எல்லையையும் கடந்திருந்தான். சோர்வாகவும் சுத்தமாகவும் தனியாகவும் இருப்பது குறித்து மகிழ்வாக உணர்ந்தான்; எல்லாமே அவனுக்கு மகிழ்வளிப்பதாகத் தோன்றியது.

புயல் வரக்கூடும். அடர்த்தியான மேகங்களின் – அந்த நகரம் – அளவு அதிகரித்தும், இருண்டும் இருந்தது, அங்கே அவன் அமர்ந்தபோது இடியின் தாளத்தை மீண்டும் கேட்டான். தலைக்கு மேல், டி ஹாவிலாண்டின் பயிற்சியாளர் இன்னமும் சுற்றிக்கொண்டிருந்தார். பிற்பகலின் மகிழ்ச்சியில் விமான ஓட்டுநர் சிரிப்பதை நெட்டினால் கிட்டத்தட்ட  கேட்க முடிவது போல இருந்தது; ஆனால் மீண்டும் ஒருமுறை இடி இடித்ததும் அவர் வீட்டை நோக்கி விமானத்தைச் செலுத்தினார். ரயில் விசிலோசை கேட்டதும் இது நாளின் எந்த நேரமாய் இருக்கும் என அவன் யோசித்தான். நான்கு? ஐந்து? அந்த நேர மாகாண ரயில்நிலையத்தை யோசித்துப் பார்த்தான். சீருடையை மறைத்துத் தொங்கும், மழை அங்கி அணிந்திருக்கும் உணவுச் சிப்பந்தி, செய்தித்தாளில் சில பூக்களைச் சுற்றி வைத்திருக்கும் குள்ளன், உள்ளூர் இரயிலுக்காகக் காத்திருக்கும் அழுது ஓய்ந்த பெண். திடீரென இருள் அதிகரித்தது; வரவிருக்கும் புயலைக் கூர்ந்து அறிந்துகொண்டது போல் ஊசிக்கொண்டைப் பறவைகள் ஒருங்கமைத்த பாடலும் அந்த நொடியில்தான் தொடங்கியது. எதோ அடைப்பானைத் திருகிவிட்டது போல அவனுக்குப் பின்னாலிருந்த ஓக் மரத்தின் தலையிலிருந்து நீர் பாயும் ஓசை கேட்டது. அதன் பிறகு நீரூற்றின் ஓசை அங்கிருந்த எல்லா உயர்ந்த மரங்களின் மகுடத்திலிருந்தும் ஒலித்தது. இவன் ஏன் புயல்களை நேசித்தான், கதவுகள் அகலத் திறந்து கொண்டதிலும் புயல்மழை மூர்க்கமாக மாடியில் இறங்கியதிலும் இவன் அடைந்த பரவசத்தின் பொருள் என்ன, ஒரு பழைய வீட்டின் ஜன்னல்களை மூடுகிற எளிய பணி பொருத்தமானதாகவும் அவசரமானதாகவும் ஏன் தோன்றியது, ஒரு புயல்காற்றின் முதல் நீர்த்தாளம் ஏன் அவனுக்கு ஒரு நற்செய்தியின் மகிழ்ச்சியின் இன்ப அலையின் வருகையை அறிவிக்கும் பிழையற்ற ஒலியாகத் தெரிகிறது? அடுத்து அங்கே ஒரு வெடிச்சத்தம், வெடிமருந்தின் வாசனை, க்யோட்டோவில் திருமதி. லெவிஸ் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு (அல்லது அது அதற்கு முந்தைய ஆண்டா?) வாங்கிவந்த ஜப்பானிய விளக்கின் மீது மழை மோதியது.

புயல் ஓயும்வரை அவன் லெவிஸின் நிழற்குடையில் தங்கினான். காற்றை மழை குளிரச் செய்ததனால் அவன் நடுங்கினான். புயலின் வேகம் ஒரு மேப்பிள் மரத்திடமிருந்து அதன் சிவப்பு, மஞ்சள் இலைகளை உரித்து, சுற்றிலும் இருந்த புல்லிலும் நீரிலும் சிதறச் செய்திருந்தது. அது வேனிற்காலத்தின் மத்தி என்பதனால் மரம் நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும். என்றாலும், இலையுதிர்க் காலத்தின் சமிக்ஞை குறித்து அவன் வருத்தமாய் உணர்ந்தான். தோள்களைத் தட்டிக்கொண்டவன், தனது டம்ளரைக் காலிசெய்து வெல்சர்ஸின் குளத்தை நோக்கிக் கிளம்பினான். இதற்காக அவன் லிண்ட்லேயின் குதிரையோடுதளச் சுற்றுப்பாதையைக் கடக்க வேண்டும். அங்கே முழுவதும் புல்லாக முளைத்துக் கிடப்பதையும் உபகரணங்கள் கழற்றி வைக்கப்பட்டிருப்பதையும் கண்டு ஆச்சரியமடைந்தான். லிண்ட்லேஸ் தங்களது குதிரைகளை விற்றுவிட்டார்களா அல்லது வேனிற்காலத்திற்காக வெளியே சென்று அவற்றை ஓட்டத்தில் இறக்கியிருக்கிறார்களா?  லிண்ட்லேஸ் குறித்தும் அவர்களது குதிரைகள் குறித்தும் எதுவோ கேள்விப்பட்டது அவன் நினைவுக்கு வந்தது. ஆனால் அந்த நினைவு தெளிவானதாக இல்லை. வெறுங்காலுடன் ஈரமான புல்லில் நடந்து வெல்செர்ஸின் குளத்தை நோக்கிச் சென்றவன், அது வறண்டு கிடப்பதைக் கண்டான்.

தனது நீர்ப்பாதையின் தொடர்ச்சியில் இப்படி இடையில் ஏற்பட்ட தடை அவனை ஏமாற்றமடையச் செய்தது. பெருக்கெடுத்துப் பாயும் தலையாற்றைத் தேடிவந்து வறண்ட ஆற்றினைக் காண நேர்ந்த ஆய்வாளன் போல அவன் உணர்ந்தான். ஏமாற்றமும் குழப்பமும் அடைந்தான். வேனிற்காலத்தில் வெளியே செல்வது வழக்கமானதுதான். ஆனால் அதற்காக யாரும் ஒருபோதும் குளத்தினைக் காலியாக்கியதில்லை. வெல்சர்ஸ் நிச்சயமாக வெளியே சென்றுவிட்டனர். குளத்தின் தளவாடப் பொருட்கள் யாவும் தார்பாலினுக்குள் வைத்துக் கட்டப்பட்டிருந்தன. குளியலறையும் பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் எல்லா ஜன்னல்களும் பூட்டப்பட்டிருந்தன, முன்பக்கப் பாதைக்குச் சென்றபோது விற்பனைக்காக என்னும் வாசகம் ஒரு மரத்தில் எழுதித் தொங்கவிடப்பட்டிருந்தது. கடைசியாக அவன் வெல்சர்ஸிடம் பேசியது எப்போது – உணவருந்துவதற்காக அவர்களிடமிருந்து வந்த அழைப்பைக் கடைசியாக லூஸிண்டாவும் அவனும் எப்போது நிந்தித்தார்கள்? ஒரு வாரத்திற்கு முன்போ என்னவோ போல்தான் தெரிகிறது. அவன் நினைவுத்திறனை இழக்கிறானா அல்லது விரும்பத்தகாத உண்மைகளை உள்ளுக்குள் அழுத்திக்கொள்ளும் பயிற்சியைத் தீவிரப்படுத்தியதில் உண்மையை உணரும் தன்மையையே சேதப்படுத்திக்கொண்டானா? அடுத்ததாக, தொலைவில் அவன் டென்னிஸ் ஆட்டத்தின் சப்தத்தினைக் கேட்டான். இது அவனுக்கு உற்சாகமூட்டியது, அவனுக்கிருந்த தயக்கங்கள் அனைத்தையும் விலகச் செய்தது, இருள் சூழ்ந்த வானத்தையும் குளிர்ந்த காற்றையும் அலட்சியம் செய்யத் துணை புரிந்தது. இது நாட்டின் குறுக்காக நெடி மெரில் நீந்திக் கடக்கிற தினமாகும். இதுதான் அந்த தினம்! அடுத்து அவன் தனது பயணத்தின் மிகச்சிரமமான கட்டத்திற்குக் கிளம்பினான்.

அன்றைய தினம் நீங்கள் ஒரு ஞாயிறு பின்மதிய சவாரிக்குச் சென்றிருந்தீர்களானால், கிட்டத்தட்ட நிர்வாணமாகச் சாலை எண் 424ன் தொடக்கத்தில் அதைக் கடப்பதற்காக அவன் நின்றுகொண்டிருந்ததைக் கண்டிருக்கக்கூடும். அவன் ஏதேனும் ஆட்டத்தில் ஏமாற்றப்பட்டுவிட்டானா அவனது கார் பழுதடைந்துவிட்டதா அல்லது அவன் ஒரு முட்டாளா என நீங்கள் வியந்திருக்கக்கூடும். பியர் பாட்டில்களும் கந்தல் துணிகளும் சுவரொட்டிகளும் குவிந்து கிடக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் எல்லாவிதக் கிண்டல்களுக்கும் ஆளானபடி வெறும் காலோடு அவன் நின்றிருந்தது பார்ப்பதற்கே இரங்கத் தகுந்ததாக இருந்தது. கிளம்பும்போதே இதுவும் அவனது பயணத்தின் ஒருபகுதியாக இருக்கும் என்பது அவனது வரைபடத்தில் இருந்தது எனினும் இந்த நெரிசலும் கோடைக்கால விளக்குகளின் வெப்பமும் அவன் எதிர்பாராததாகத் தோன்றியது. அவன் கேலிக்கு ஆளானான், இகழப்பட்டான், ஒரு பியர் குவளை அவன் மீது தூக்கி வீசப்பட்டது, அந்தச் சூழலுக்கு அவனால் எந்தக் கௌரவத்தையோ நல்லியல்பையோ அளிக்க முடியவில்லை.. அவனால் திரும்பிச் சென்றிருக்க முடியும். வெஸ்டர்ஹேஸிக்கு. அங்கே இன்னமும் லுஸிண்டா வெயிலில்தான் அமர்ந்திருப்பாள். அவன் எதிலும் கையொப்பமிடவில்லை, எந்தச் சபதமும் எடுக்கவில்லை, யாருக்கும் உறுதியளித்திருக்கவில்லை – அவனுக்கேகூட. அவன் நம்பியது போல, மனிதன் எதிர்கொள்கிற எல்லாத் தடைகளுமே முன்னுணர முடிந்ததுதான் என்றபோதும் ஏன் அவனால் திரும்பிச் செல்ல முடியவில்லை? அவனது வாழ்க்கையையே பணயம் வைக்க வேண்டிய நிலை வந்தபோதும்கூட தனது பயணத்தை முடிப்பதில் அவன் ஏன் அவ்வளவு உறுதியாக இருக்கிறான்? எந்தப் புள்ளியில் இந்தக் கேளிக்கை, இந்த நகைச்சுவை, இந்த முரட்டு விளையாட்டு இவ்வளவு தீவீரமானதாய் ஆனது? அவனால் திரும்பிச்செல்ல முடியவில்லை, வெஸ்டர்ஹேஸியில் இருந்த பச்சை நீரை, அந்த நாளின் தன்மையினை  ஆழமாக உள்வாங்கியதை, நிறையக் குடித்துவிட்டதாகக் கூறிய அணுக்கமும் நிதானமுமான குரல்களை அவனால் தெளிவாக நினைவுகூரவும்கூட முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணிநேர காலத்தில், திரும்பிச் செல்வது சாத்தியமில்லை என்கிற அளவிற்கான தூரத்தினை அவன் கடந்திருந்தான்.

மணிக்குப் பதினைந்து கிலோமீட்டர் என்பதாக ஒரு முதியவன் நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலையின் மையத்தில் நீண்ட புற்தளத்தை அவனால் அடைய முடிந்தது. இங்கே அவன் வடக்கு நோக்கிச் சென்றவர்களின் கேலிக்கு ஆளானான், ஆனால் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு அவனால் சாலையைக் கடக்க முடிந்தது. லன்காஸ்டர் கிராமத்தின் எல்லையில் இருக்கும் புத்துணர்வு மையத்திற்கு அங்கிருந்து ஒரு சிறிய நடையில் அவனால் சென்றுவிட முடிந்தது. அங்கே சில கைப்பந்து மைதானங்களும் ஒரு பொதுக்குளமும் இருந்தது.

நீரானது ஒலியை விலக்கி காற்றில் மிதக்கவிட்டது போலத் தோன்றிய மாயை பன்கர்ஸில் இருந்தது போலவே இங்கும் இருந்தாலும் இங்கிருந்த சத்தம் உரத்ததாகவும் கடுமையானதாகவும் கூடுதல் கூர்மையாகவும் இருந்தது. கூட்டத்தில் நுழைந்தவுடனே இவன் சில கட்டளைகளால் எதிர்கொள்ளப்பட்டான். “அனைத்து நீச்சல்காரர்களும் குளத்தினைப் பயன்படுத்தும் முன்பு குளிக்க வேண்டும். அனைத்து நீச்சல்காரர்களும் நடைபாதையைப் பயன்படுத்த வேண்டும். அனைத்து நீச்சல்காரர்களும் தங்களது அடையாள வில்லைகளை அணிந்திருக்க வேண்டும்.” குளித்து, தனது பாதங்களை மங்கிய கசந்த திரவத்தால் கழுவியவன், நீரின் எல்லையை நோக்கி நடந்தான். அது க்ளோரின் நாற்றமடித்த தொட்டியைப் போல் தோன்றியது அவனுக்கு.

ஒரு ஜோடி கோபுரங்களுக்குக் கீழே நின்ற இரு உயிர்காப்பாளர்கள் சீரான இடைவெளிகளில் விசில் சப்தம் எழுப்பி, ஒலிப்பான்கள் மூலம், நீந்துபவர்களைக் கடிந்துகொண்டிருந்தனர். மாணிக்க நிறம் கொண்ட பங்கர்ஸின் நீரை ஏக்கத்துடன் நினைத்த நெடி, இந்த அழுக்கில் நீந்துவதன் மூலம் தன்னையும் தனது செழுமையையும் அழகையும் மாசுபடுத்திக்கொள்ள நேரும் என நினைத்தான். ஆனால் தான் ஒரு ஆய்வாளன், ஒரு யாத்ரீகன், லுஸிண்டா நதியின் ஒரு மந்தமான வளைவு மட்டுமே இது எனத் தனக்கு நினைவூட்டிக்கொண்டான். விருப்பமின்மையால் முகத்தைச் சுழித்து சப்தமெழுப்பியபடி க்ளோரினுக்குள் குதித்தவன், மோதல்களைத் தவிர்க்கும்பொருட்டு நீருக்கு மேலே தலையை உயர்த்தியபடி நீந்தியபோதும் அவன் மோதவும் நெருக்கவும் முட்டித்தள்ளவும் பட்டான். ஆழம் குறைவான எல்லைக்குச் சென்றபோது அங்கே இருந்த உயிர்காப்பாளர்கள் அவனைத் திட்டிக்கொண்டிருந்தனர். “ஏய், அடையாள வில்லை இல்லாதவனே, நீரைவிட்டு வெளியேறு.” அவன் வெளியேறினான், அவர்களுக்கு அவனைத் தொடரும் எந்த எண்ணமுமில்லை. வெயில்காப்பு எண்ணெயின் வீச்சத்தையும் க்ளோரினின் வீச்சத்தையும் கடந்து கம்பிவலை வேலியினூடாக நடந்து கைப்பந்து மைதானங்களைக் கடந்து சென்றான். சாலையைக் கடந்ததும் ஹாலரன்ஸின் தோட்டத்திலுள்ள மரங்கள் அடர்ந்த பகுதியை அடைந்தான். மரங்கள் இருந்தபகுதி சுத்தப்படுத்தப்படாமல் இருந்ததால், அவர்களது குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பீச்வேலி வழியாகப் புல்வெளியை அடையும் வரை, நடப்பது மிகச் சிரமமானதாகவும் துயரம் தருவதாகவும் இருந்தது.

அளவற்ற செல்வம்கொண்ட முதிய தம்பதியரான ஹாலரன்ஸ் அவனது நண்பர்கள். தாங்கள் கம்யூனிஸ்டுகள் எனும் பெருமிதத்திலும் அவர்கள் இருந்ததாகத் தோன்றியது. அவர்கள் மிக ஆர்வமிக்க சீர்திருத்தவாதிகள்தான் என்றாலும் கம்யூனிஸ்டுகள் இல்லை. ஆனால் அவர்கள் புரட்சியாளர்கள் எனக் குறைகூறப்பட்ட போதெல்லாம் அது அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி திருப்திப்படுத்துவதாகத் தோன்றியது. அவர்களது பீச்வேலி மஞ்சள் நிறமாய் இருந்தது, லெவிஸின் மேப்பிள் மரத்தைப் போல இதையும் நோய் தாக்கியிருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டான். தனது வருகையை அவர்களுக்கு அறிவிக்கும் பொருட்டும் அவர்களது தனிமையில் குறுக்கிடுவது குறித்த வருத்தத்தைத் தெரிவிக்கும் பொருட்டும் ‘ஹலோ, ஹலோ’ எனக் குரல் எழுப்பியபடி சென்றான். ஹாலரன்ஸ் குளியலாடை அணிந்திருக்கவில்லை. அதற்கான காரணம் ஒருபோதும் அவனுக்குச் சொல்லப்பட்டிருக்கவில்லை. எந்த விளக்கமும் உண்மையில் பொருத்தமானதாக இல்லை. அவர்களது நிர்வாணமானது சீர்திருத்தத்தின் மீதான சமரசமற்ற ஆர்வத்தின் ஒரு பகுதியே என்பதால் வேலியின் வாயிலில் உள்ளே நுழையும் முன்பு பணிவின் வெளிப்பாடாகத் தனது காற்சட்டையினைக் கழற்றிக்கொண்டான்.

நரைகூந்தலும் அமைதியான முகமும்கொண்ட பருத்த பெண்மணியான திருமதி. ஹாலரன்ஸ் டைம்ஸ் இதழை வாசித்துக்கொண்டிருந்தாள். திரு.ஹாலரன் ஒரு கரண்டியைக்கொண்டு பீச் இலைகளை நீரிலிருந்து எடுத்துக்கொண்டிருந்தார். இவனைக் கண்டது குறித்த ஆச்சரியத்தையோ அதிருப்தியையோ அவர்கள் வெளிப்படுத்தவில்லை. நாட்டிலேயே மிகவும் பழமைவாய்ந்த குளம் அவர்களுடையதாகத்தான் இருக்கும். இயற்கையான கற்களாலான தளத்துடன் செவ்வகவடிவில் அமைந்திருக்கும் அது ஒரு ஓடையின் நீரினால் நிரப்பப்படுகிறது. அங்கே எந்த விசைக்குழாயோ வடிப்பானோ பொருத்தப்படவில்லை, அந்த நீரின் நிறம் ஓடையின் ஒளிபுகா பொன்னிறத்தைக் கொண்டிருந்தது.

“நான் மாகாணத்தின் குறுக்காக நீந்திக் கடக்கிறேன்,” என்றான் நெட்.

“ஏன், யாராலும் அது முடியும் என நான் நினைத்ததேயில்லை,” என ஆச்சரியப்பட்டாள் திருமதி ஹாலரன்.

“ம்ம், நான் வெஸ்டர்ஹேஸியிலிருந்து அதைத் தொடங்கினேன்” என்றான் நெட். “கிட்டத்தட்ட நான்கு மைல் தொலைவிருக்கும்.”

ஆழமான பகுதியின் எல்லையில் தன் காற்சட்டையை வைத்தவன், ஆழம் குறைந்த பகுதிக்குச் சென்று அந்தத் தூரத்தை நீந்தினான். அவன் நீருக்குள்ளிருந்து எழுந்துகொண்டபோது திருமதி ஹாலரன், “உனக்கு நேர்ந்த துயரங்கள் குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம் நெடி” என்றார்.

“எனது துயரங்களா?” என வினவினான் நெடி. “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என எனக்குப் புரியவில்லையே.”

“அப்படியா, நாங்கள் கேள்விப்பட்டோமே, நீ உன் வீட்டை விற்றுவிட்டதாகவும் பாவம் உனது குழந்தைகள்…”

“வீட்டை விற்றுவிட்டதாக எனக்கு எதுவும் நினைவில்லையே” என்றான் நெடி. “அதோடு, என் மகள்கள் வீட்டில்தான் இருக்கிறார்கள்.”

”ஆமாம்”, திருமதி ஹாலரன் பெருமூச்சுவிட்டாள். “ஆமாம்…” அவளது குரல் பொருத்தமற்ற துயரத்தினைச் சூழலில் நிரப்பியது. நெட் உற்சாகமாகப் பேசினான். “நீந்த அனுமதித்ததற்கு நன்றி.”

“நல்லது, இனிய பயணமாக அமையட்டும்” என்றார் திருமதி ஹலோரன்.

வேலிக்கு வெளியே வந்ததும் தனது காற்சட்டையை அணிந்து அதனை இறுக்கிக்கொண்டான். அது சற்றுத் தளர்ந்திருப்பது போல் தோன்றியதும், இந்த மதியத்தின் சில மணிநேரங்களிலேயே அவன் கொஞ்சம் எடையிழந்திருக்கக் கூடுமோ என யோசித்தான். அவன் உடல் குளிர்ந்திருந்தது, அவன் சோர்ந்திருந்தான், ஹாலரன் தம்பதியின் நிர்வாணமும் அவர்களது இருண்ட நீரும் அவனை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியிருந்தன. நீச்சலுக்கு அவனது வலிமை போதுமானதாக இல்லை. ஆனால் காலையில் மாடிப்படியின் கைப்பிடியில் சறுக்கியபோதும் வெஸ்டர்ஹேஸியின் சூரியனுக்குக் கீழ் அமர்ந்திருந்தபோதும் அவனால் இதனை எப்படி யூகித்திருக்க முடியும்? அவனது கைகள் செயலற்றிருந்தன. அவனது கால்கள் ரப்பர் போலாகிவிட்டதாக உணர்ந்தான், மூட்டுகளில் வலித்தது. எலும்புகளில் உணர்ந்த குளிரும் இனி ஒருபோதும் அவனது உடல் வெப்பமாகப் போவதில்லை என்கிற உணர்வும்தான் உள்ளதிலேயே மிக மோசமாகத் தாக்கியது. அவனைச் சுற்றி இலைகள் உதிர்ந்துகொண்டிருக்க, மரம் எரியும் வாசனை காற்றில் வந்தது. வருடத்தின் இந்தப் பருவத்தில் மரத்தை யார் எரித்துக்கொண்டிருக்கக்கூடும்?

அவனுக்கு ஏதேனும் அருந்த வேண்டும் போல இருந்தது. விஸ்கி அவனைச் சூடாக்கக்கூடும், தெம்பளிக்கக்கூடும், பயணத்தின் கடைசிப் பகுதியில் அவனுக்குத் துணையாய் இருக்கக்கூடும். மாகாணத்தின் குறுக்கே நீந்துவதென்பது புதுமையானதெனவும் தீரமிக்கதெனவும் அவன் கொண்டிருந்த எண்ணத்தைப் புதுப்பித்துத் தரக்கூடும். ஆங்கிலக் கணவாயைக் கடப்பவர்கள் பிராந்தி அருந்துவதுண்டு. அவனுக்கு ஒரு தூண்டுகோல் தேவைப்பட்டது. ஹாலரன் வீட்டின் முன்புறமிருந்த புல்வெளியைக் கடந்து சிறிய பாதையின் வழியாக, தங்களது ஒரே மகளான ஹெலனுக்காகவும் அவளது கணவன் எரிக் ஸாக்ஸுக்காகவும் அவர்கள் கட்டியிருந்த வீட்டை நோக்கி நடந்தான். ஸாக்ஸின் குளம் சிறியது, அங்கே அவன் ஹெலனையும் அவளது கணவனையும் கண்டான்.

“ஏய்.. நெடி, அம்மாவின் வீட்டில் நீ மதிய உணவு அருந்தினாயா?” என வினவினாள் ஹெலன்.

“ம்ஹூம், இல்லை” என்றான் நெடி. “ஆனால் நான் உனது பெற்றோரைச் சந்தித்தேன்.” இதுவே போதுமான விளக்கமாகத் தோன்றியது. “இப்படித் திடீரென உள்ளே வந்ததற்கு மன்னிப்பு கோருகிறேன். ஆனால் நான் சற்று ஓய்வெடுக்க விரும்புகிறேன். எனக்குக் குடிக்க ஏதேனும் கிடைக்குமா?”

”ஏன், நிச்சயமாக நான் உனக்குக் கொடுக்க விரும்புவேன்” என்றாள் ஹெலன். “ஆனால் எரிக்கிற்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்த வீட்டில் அருந்துவதற்கு எதுவுமே இல்லை. மூன்று வருடங்களாக இப்படித்தான்.”

அவன் நினைவை இழந்துகொண்டிருக்கிறானா, துயர்மிகுந்த உண்மைகளை மறைத்துக்கொள்ளும் அவனது பண்பு தன் வீட்டை அவன் விற்றுவிட்டதை, அவனது குழந்தைகள் பிரச்சனையில் இருப்பதை, அவனது நண்பன் உடல்நலமின்றி இருந்தான் என்பதை மறக்கச் செய்துவிட்டதா? அவனது பார்வை எரிக்கின் முகத்திலிருந்து வயிற்றுக்குக் கீழிறங்கியது. அங்கே வெளிறிய மூன்று தையல் தழும்புகளை அவன் கண்டான். அவற்றில் இரண்டு குறைந்தது ஓரடி நீளம் கொண்டிருந்தன. அவனது தொப்புள் காணாமலாகியிருந்தது. நள்ளிரவு மூன்று மணிக்குத் தன்னுடன் இருப்பவர்களது நலத்தை உறுதிசெய்யும் பொருட்டு அலைபாயும் கரங்கள் தொப்புள் இல்லாத, பிறப்புடன் தொடர்பில்லாத, தனது தொடர்ச்சியிலிருந்து அறுபட்டுவிட்ட ஒரு வயிற்றை எப்படிப் புரிந்துகொள்ளும் என நெடி யோசித்தான்.

“பிஸ்வாங்கர்ஸின் இல்லத்தில் உனக்கு நிச்சயம் பானம் கிடைக்கும்” என்றாள் ஹெலன். “அவர்கள் ஒரு பெரிய கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இங்கிருந்தே நீ அதைக் கேட்க முடியும். கவனி!”

அவள் தலையை உயர்த்தினாள். சாலைக்கும் புல்வெளிக்கும் தோட்டத்துக்கும் மரங்களுக்கும் வயல்வெளிக்கும் மறுபுறமிருந்து ஒலித்த ஒலியை அவனால் நீருக்கு மேலே கேட்க முடிந்தது. தான் செல்ல வேண்டிய பாதையைக் குறித்து தனக்கு எந்தவொரு தேர்வும் இல்லையென்கிற உணர்வுடன், ”சரி, நான் நீருக்குள் குதிக்கிறேன்” என்றான். ஸாக்ஸின் குளிர்ந்த நீருக்குள் குதித்தவன் மூச்சுவாங்க, கிட்டத்தட்ட மூழ்கியபடி, குளத்தின் ஒரு எல்லையிலிருந்து மறுஎல்லையை அடைந்தான். ”லுஸிண்டாவும் நானும் உன்னைப் பார்க்க மிகவும் விரும்புகிறோம்” எனப் பிஸ்வாங்கர்ஸின் திசையை நோக்கியபடி கூறியவன், “நீண்ட காலமாய் வரமுடியாமல் போனது குறித்து மிகவும் வருந்துகிறோம். வெகு சீக்கிரமே உங்களை அழைக்கிறோம்” என்றான்.

சில வயல்களைக் கடந்து பிஸ்வாங்கர்ஸிடமும் அங்கிருந்து ஒலித்த கொண்டாட்டத்திடமும் சென்றான். இவனுக்குப் பானம் அருந்தத் தருவது குறித்து அவர்கள் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்வார்கள். அவனையும் லுஸிண்டாவையும் ஆண்டில் நான்குமுறை பிஸ்வாங்கர்ஸ் உணவருந்த அழைத்திருந்தனர், ஒவ்வொரு முறையும் ஆறு வாரங்களுக்கு முன்னதாகவே. திரும்பத் திரும்ப அவர்கள் புறக்கணிக்கப்பட்ட போதும் சமூகத்தின் கடுமையான, ஜனநாயகப் பண்பற்ற நிதர்சனத்தைப் புரிந்துகொள்ள விரும்பாமல் மீண்டும் மீண்டும் அழைப்பினை அனுப்பிக்கொண்டே இருந்தனர். மதுக்கொண்டாட்டத்தின் போது பொருட்களின் விலையைப் பற்றிப் பேசி, உணவின்போது சந்தை சார்ந்த ஆலோசனைகளை உரையாடி, உணவிற்குப் பிறகு மோசமான கதைகளைத் தங்களுடன் இருப்பவர்களுடன் பகிர்ந்துகொள்கிற பழக்கத்தினையுடைய வகையைச் சேர்ந்தவர்கள் அவர்கள். நெடியின் கும்பலைச் சேர்ந்தவர்கள் இல்லை. லுஸிண்டா கிறிஸ்துமஸூக்கு அழைக்கிற பட்டியலிலும்கூட அவர்கள் இல்லை. ஒருவித அலட்சியத்துடனும் கருணை மனப்பாங்குடனும் பதற்றத்துடனும் அவர்களது குளத்தை நோக்கிச் சென்றான் – நாள் இருண்டுகொண்டே சென்றது, வருடத்தின் நீண்ட நாட்களும் இவைதான். அவன் சென்று சேர்ந்தபோது கூட்டம் பெரியதாகவும் சப்தமாகவும் இருந்தது. கண் பரிசோதகரையும் கால்நடை மருத்துவரையும் நில விற்பனையாளரையும் பல் மருத்துவரையும் வரவேற்கிற பண்பினைக் கொண்டவள் க்ரேஸ் பிஸ்வாங்கர். யாருமே நீந்திக்கொண்டிருக்கவில்லை, நீரில் பிரதிபலித்த அந்தியின் ஒளி குளிர்காலத்தின் பளபளப்பினைக் கொண்டிருந்தது. அங்கே இருந்த மதுக்கூடத்தை நோக்கி அவன் நடந்தான். இவனைக் கண்டதும் க்ரேஸ் பிஸ்வாங்கர் அவனை நோக்கி வந்தாள், அவளிடமிருந்து அன்பை எதிர்பார்க்க அவனுக்கு எல்லா உரிமை இருந்தும் அவள் மிகக் கேவலமாகவே அவனை அணுகினாள்.

”என்னவாயிற்று, இந்தக் கொண்டாட்டத்தில் எல்லாமே இருக்கிறது – அழைப்பின்றி வருகிறவன் உட்பட” என்றாள்.

அவள் அவனுக்கு அவனது அந்தஸ்திற்கான மரியாதையை அளிக்கவில்லை – அதைப் பற்றி இப்போது எந்தக் கேள்வியும் இல்லை, அவன் அது குறித்து வெட்கப்படவும் இல்லை. “அழைப்பின்றி வந்தவனாக, எனக்கு ஒரு பானத்திற்கு அனுமதி இருக்கிறதா?” என்றான் பணிவாக.

“உன் இஷ்டம்” என்றாள். “அழைப்புகளை நீ சரியாகக் கவனிப்பது போல் தெரியவில்லையே.”

அவன்புறம் முதுகு திருப்பியவள் வேறு சில விருந்தினர்களுடன் சென்று இணைந்துகொண்டாள். அவன் மதுக்கூடத்திற்குச் சென்று ஒரு விஸ்கி வேண்டினான். சிப்பந்தி அவனுக்குப் பரிமாறினான் என்றபோதும் அதில் மரியாதை இல்லை. உணவுச்சிப்பந்திகள் உண்பவரின் சமூக அந்தஸ்திற்கு மரியாதை தந்து பரிமாறுகிற உலகைச் சேர்ந்தவன் அவன், ஒரு பகுதிநேர மதுக்கூடச் சிப்பந்தி இவனிடம் மரியாதையின்றி நடந்துகொள்கிறான் எனில் இவன் தனது சமூக அந்தஸ்த்தைச் சற்று இழந்திருக்க வேண்டும். அல்லது அவன் புதியவனாகவும் இவனைப் பற்றி அறியாதவனாகவும் இருக்க வேண்டும். அவனுக்குப் பின்புறம் க்ரேஸ் சொல்லிக்கொண்டிருப்பது கேட்டது. “அவர்கள் ஒரே இரவில் வருமானம் சேர்க்கக் கடுமையாக முயன்றனர். அடுத்து ஒரு ஞாயிற்றுக்கிழமை குடிபோதையில் வந்தவன், எங்களிடம் ஐந்தாயிரம் டாலர்கள் கடன் கேட்டான்.” அவள் எப்போதும் பணத்தைப் பற்றித்தான் பேசினாள். ஒரே நேரத்தில் பத்து வேலைகளைச் செய்வதைவிட மோசமானது அது. குளத்தில் குதித்தவன் அதை நீந்திக்கடந்து வெளியேறினான்.

அவனது பட்டியலிலிருந்த அடுத்த குளம் – கடைசியிலிருந்து மூன்றாவது – அவனது பழைய காதலி ஷர்லி ஆடம்ஸினுடையது. பிஸ்வாங்கர்ஸின் இடத்தில் இவன் ஏதேனும் காயம் பட்டிருந்தால் அது இங்கே சரியாகிவிடும். காதல்தான் (உண்மையில் பாலியல் மையங்கள்தான்) உச்சபட்ச நிவாரணி, வலி போக்கி, வசந்தத்தை அவனது வழியிலும் வாழ்வின் மகிழ்ச்சியை அவனது இதயத்திலும் மீண்டும் கொண்டுவரப் போகிற வண்ண மாத்திரை. அவர்கள் போன வாரம், போன மாதம், போன வருடம் தொடர்பில் இருந்தனர். அவனால் நினைவுகூர முடியவில்லை. அவன்தான் அந்த உறவை முறித்திருந்தான், அவன்தான் முடிவுசெய்கிறவனாய் இருந்தான். அவளது குளத்தைச் சுற்றியிருந்த சுவரின் வாசல் வழியாக அளவிட முடியாத தன்னம்பிக்கையுடன் நுழைந்தான். ஒரு காதலனாக, குறிப்பாகச் சட்டத்திற்குப் புறம்பானவனாக, திருமண பந்தத்தின் புனிதங்களுக்கு அடங்காத உரிமையுடன் தன் காதலியின் உடைமைகளை அனுபவிக்கிற  வகையில் அது அவனுடைய குளம் என்பது போலவே தோன்றியது. பித்தளை நிறத்தில் மின்னுகிற கூந்தலுடன் அவள் அங்கிருந்தாள். ஆனால் கடல் நீலத்தில் சீராக அலைவுற்ற நீரின் விளிம்பில் தெரிந்த அவளது உருவம் அவனில் எந்தவொரு ஆழமான நினைவையும் கிளறிவிடவில்லை. அவன் பிரிந்தபோது அவள் அழுதபோதிலும், அதுவொரு விளையாட்டுத்தனமான உறவுதான் என அவன் எண்ணிக்கொண்டான். அவனைக் கண்டதும் அவள் குழப்பமடைந்தது போல் தோன்றியது, இன்னமும் அவள் வருத்தத்தில்தான் இருக்கிறாளோ என எண்ணினான். கடவுளே, அவள் மறுபடியும் அழுவாளோ?

“உனக்கு என்ன வேண்டும்?” என்றாள்.

“நான் மாகாணத்தை நீந்தியே கடக்கிறேன்.”

“தெய்வமே… நீ வளரவே மாட்டாயா?”

“ஏன், என்னவாயிற்று?”

“ஒருவேளை நீ பணத்திற்காக இங்கே வந்திருந்தாய் என்றால், நான் இன்னும் ஒரு செண்ட்கூட உனக்குத் தரமாட்டேன்” என்றாள்.

“எனக்கு அருந்துவதற்கு ஏதேனும் தரலாமே?”

“தரலாம், ஆனால் மாட்டேன். நான் தனியாக இல்லை.”

“சரி, நான் என் வழியில் தொடர்கிறேன்.”

உள்ளே குதித்து குளத்தை நீந்தியவன், விளிம்பில் எம்ப முயன்றபோது அவனது கைகளிலும் தோளிலும் சக்தியே இல்லாமலாகிவிட்டதை உணர்ந்தான். ஏணியை நோக்கி நடந்து வெளியேறினான். கவனமாகப் பார்த்தபோது, ஒளிர்ந்துகொண்டிருந்த குளியலறையில் அவன் ஓர் இளைஞனைக் கண்டான். இருண்டிருந்த புல்வெளி வழியாக வெளியே நடந்தபோது அவனால் சாமந்திப் பூக்களின், க்ரிஸாந்திமம் மலர்களின் அடர்த்தியான இலையுதிர்கால நறுமணத்தை உணர முடிந்தது. இரவுக்காற்றில் வலிமையான வாயுபோல் அது பரவியிருந்தது. நிமிர்ந்து பார்த்தபோது நட்சத்திரங்கள் வந்திருந்ததை அவன் கண்டான். ஆனால் அவன் எதற்காக ஆண்ட்ரமெடாவை செஃபியஸை காஸியோபியாவைக் காண்பது போல் நோக்க வேண்டும்? வேனிற்காலத்தின் நட்சத்திரக் கூட்டங்களுக்கு என்னவாயிற்று? அவன் அழத் தொடங்கினான்.

வளர்ந்தபிறகு அவன் அழுவது இதுதான் முதல்தடவையாக இருக்க வேண்டும், வாழ்வில் இவ்வளவு துயரமாக, குளிராக, சோர்வாக, அச்சமாக அவன் உணர்வது நிச்சயமாக இதுதான் முதல்முறை. மதுக்கூடச் சிப்பந்தியின் கடுமையையோ ஒருகாலத்தில் முழந்தாளிட்டு வந்து இவனது காற்சட்டையைக் கண்ணீரால் நனைத்த காதலியின் கடுமையையோ அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் நீண்ட நேரம் நீந்திவிட்டான், நீண்ட நேரம் நீருக்குள் இருந்துவிட்டான், அவனது மூக்கும் தொண்டையும் நீரினால் புண்ணாகிவிட்டது. இப்போது அவனுக்குத் தேவைப்பட்டதெல்லாம் ஒரு பானமும் ஏதேனும் துணையும் தூய்மையான உலர்ந்த ஆடையும்தான். அவனால் நேரடியாகவே சாலையைக் கடந்து அவனது வீட்டிற்குச் சென்றிருக்க முடியும் என்றபோதிலும் கில்மார்ட்டினுடைய குளத்திற்குச் சென்றான். வாழ்வில் முதல்முறையாக, குதிக்காமல் படியின் வழியாகக் குளிர்ந்த நீருக்குள் இறங்கி இளமையில் எப்போதோ கற்ற பக்கவாட்டு வீச்சில்  தடுமாறியபடி நீந்தினான். க்ளைடின் குளத்திற்கு மயக்கத்துடனே தளர்ந்து நடந்தவன், அவர்களது குளத்தினை நடந்து கடந்தான் – திரும்பத் திரும்ப விளிம்பில் கைகளை வைத்து ஓய்வெடுத்தும் கொண்டான். ஏணியின் வழியாக மேலே ஏறியவன் வீட்டிற்கு நடந்துசெல்லும் தெம்பிருக்கிறதா என அஞ்சினான். அவன் செய்ய விரும்பியதை செய்துவிட்டான், மாகாணத்தை நீந்திக் கடந்துவிட்டான், ஆனால் சோர்வினால் அவன் அடைந்த மயக்கம் அவனது வெற்றியைத் தெளிவாக உணரவிடாமல் செய்தது. குனிந்து வாயிலின் தூண்களை ஆதரவாகப் பற்றிக்கொண்டவன், தனது வீட்டிற்குச் செல்லும் பாதையை நோக்கித் திரும்பினான்.

அந்த இடம் இருளாக இருந்தது. எல்லோரும் படுக்கைக்குச் செல்கிற அளவு ரொம்பவும் தாமதமாகிவிட்டதா என்ன? லுஸிண்டா வெஸ்டர்ஹேஸிலேயே இரவுணவிற்குத் தங்கிவிட்டாளா? மகள்களும் அங்கே அவளிடம் சென்றுவிட்டார்களா அல்லது வேறெங்கும் சென்றுவிட்டார்களா? ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவொரு அழைப்பையும் மறுத்துவிட்டு வீட்டிலேயே இருப்பதென அவர்கள் அனைவரும் முடிவு செய்திருக்கவில்லையா? உள்ளே எந்தக் கார்கள் நிற்கின்றன எனப் பார்ப்பதற்காக அவன் அக்கதவைத் திறக்க முயன்றபோது அது பூட்டியிருந்தது, அதிலிருந்த துரு அவனது கையோடு வந்தது. வீட்டை நோக்கிச் சென்றபோது சூறாவளியின் வேகத்தில் ஒரு மழைநீர்க்குழாய் கழன்றுவிட்டது தெரிந்தது. ஒரு குடைக்கம்பி போல அது வீட்டு வாசலின் முன் தொங்கியது, ஆனால் காலையில் அதைச் சரிசெய்துவிட முடியும். வீடு பூட்டியிருந்தது, அந்த முட்டாள் சமையல்காரியோ வேலைக்காரியோ இதைப் பூட்டிவிட்டுச் சென்றிருக்க வேண்டும். பிறகுதான் அவர்கள் வேலைக்கு ஆள் வைத்தே வெகுநாட்கள் ஆகிவிட்டதென்பது நினைவு வந்தது. அவன் கத்தினான், கதவின் மீது மோதினான், தோள்களால் அதைத் தள்ள முயன்றான், அதன்பிறகு ஜன்னலின் வழியாக உள்ளே பார்த்தபோது அந்த இடமே சூன்யமாய்க் கிடப்பதைக் கண்டான்.

*

ஆங்கில மூலம்: The Swimmer by John Cheever, Published by Vintage Classics, October, 1990 Edition.