மோப்பநாய்

1 comment

மேசையில் அந்தக் கோப்பைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, விறைத்து நின்று வணக்கம் வைத்தனர் என்னுடைய இளம் அதிகாரிகள். கோப்பை எடுத்து அந்தரத்தில் தூக்கி வைத்துக் கூர்ந்து பார்த்தேன். இஸ்மாயில், வயது ஐம்பத்தி ஐந்து என மேலே எழுதியிருந்தது. 

“எவ்ளோதான் போராடறது? லூசாட்டம் சொன்னதையே சொல்றாரு. அப்புறம் அமைதியாயிடறாரு. என்னோட தலையில ஆணி வச்சு யாரோ நங்கு நங்குன்னு அடிச்ச மாதிரி இருக்கு” என்றான் எனக்குக் கீழ்ப் படிநிலையில் பணிபுரியும் இளம் அதிகாரி ஒருத்தன். அவனது சட்டை முழுக்கவே வியர்வையால் ஈரமாகி இருந்தது. பதிலுக்கு ஒன்றும் வார்த்தையாகச் சொல்லாமல், செருமிக்கொண்டே எழுந்து அவர்களுடன் போனேன்.

பெஞ்ச் ஒன்றிற்குக் கீழே காலை விரித்து அமர்ந்திருந்தார் இஸ்மாயில். நெஞ்சில் கொத்தாய் வெண்முடி அப்பியிருந்தது. எனக்கு முன்னே ஓடிப்போய், அதிகாரிகள் அவரை எழுப்பி நிறுத்தித் தயார்செய்து வைத்தனர். அப்போதும் முகத்தைக் கவிழ்த்து நின்றுகொண்டிருந்தார். நான் போனவுடன் சட்டென நிமிர்ந்து, “ஜிகாத் வரப்போகுது. இந்த இடத்தைக் கைப்பத்தாம விடமாட்டோம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தலையைக் குனிந்துகொண்டார். அந்த முகத்தை எங்கோ பார்த்தது போல இருந்தது எனக்கு. திரும்பவும் தலையைத் தூக்கச் சொல்லி அதிகாரிகளிடம் சங்கடத்துடன் சைகை காட்டினேன். அவர்கள் வலுக்கட்டாயமாக அவரது தலையை உயர்த்தினார்கள். கட்டுப்படுத்த இயலாமல் “இஸ்மாயில் அண்ணே” என எனக்குள் யாரும் அறியாதவண்ணம் சொல்லிக்கொண்டேன்.

வேறு ஒன்றும் பேசாமல் அறைக்குத் திரும்பி வந்தபோது, பின்னாலேயே வால்பிடித்த மாதிரி என்னுடைய அதிகாரிகளும் விரைவோட்டமாய் வந்து நின்றார்கள். “இந்த கேஸ நான் பார்த்துக்கறேன்” என்றேன் சொற்சிக்கனமாய். அவர்களும் மறுப்பேதும் சொல்லாமல் வணக்கம் வைத்துச் சென்றார்கள். அதிலொருத்தன் மட்டும், “இந்த கேஸூ மட்டும் என்ன ஸ்பெஷலாம்” என்கிற மாதிரி உதட்டைச் சுழித்துவிட்டுச் சென்றான். அதையும் நான் உன்னிப்பாகக் கவனித்திருந்தேன். என் முதுகிற்குப் பின்னால் அமர்ந்து என்னை நானே கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன், என்னிடமேவா? சின்னப் பயல். மூளைக்குள் அவனைக் குறித்து வைத்தேன் வழக்கம்போல. அவர்கள் போன பிறகு கோப்பை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.

இஸ்மாயிலைப் பற்றித் திரட்டப்பட்ட தகவல்கள், மேய்கிற கோழி கோலமாவு டப்பாவைத் தட்டிவிட்டதைப் போலச் சிதறிக் கிடந்தன. நகரில் என்னுடைய அலுவலகம் தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் கிளையாகச் செயல்பட்டது. நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளைப் புலனாய்ந்து எனக்கு மேல் இருக்கும் இன்னொரு அலுவலத்திற்குக் கோப்பாக அனுப்ப வேண்டும். சின்னச் சின்னக் கைது நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்ளலாம். பாதுகாப்பிற்கு ஆயுதங்களுமுண்டு எங்களிடம். ஆனால் அந்தப் பிரிவு வந்தவுடன் அவர்களிடம் கோப்பெழுதி ஒப்படைத்துவிட வேண்டும். எங்கள் அலுவலகத்தில் கோப்பு எழுதுவதில் விற்பன்னன் என்பதால், என்னுடைய மேலதிகாரிகள் எந்த வழக்கிற்கும் என்னைத்தான் எழுதச் சொல்வார்கள். 

“நீ கேஸ் எழுதுனா படிக்கவே சுவாரசியமா இருக்குய்யா. ஒரு கதை மாதிரி எழுதற” என்பார் என்னுடைய உயரதிகாரி. அதனாலேயே அந்த அலுவலகத்தில் தவிர்க்க முடியாதவனாகவும் இருந்தேன். எனக்கென்று சிறப்புச் சலுகைகள் அலுவலகத்தில் இருந்தன. அதன் அடிப்படையில்தான் அந்த வழக்கை நான் பார்த்துக்கொள்கிறேன் எனச் சொன்னபோது, எந்த மறுப்பும் இல்லாமல் அந்த அதிகாரிகள் வெளியேறியும் போனார்கள்.

எழுந்து இஸ்மாயிலைப் பார்க்கப் போகலாமா என நினைத்தேன். குனிந்து கைகளைப் பார்த்தபோது, கோப்பை என்னையறியாமல் நான் பற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. இஸ்மாயிலைப் பற்றித் திரட்டப்பட்ட தகவல்கள் ஒன்றிணைந்து ஒருகாலமாய் மாறி, புகையைப் போலச் சூழ்ந்துகொண்டது என்னை. கால்களில் இருவேறு நிறச் செருப்பை அணிந்த மனிதன் ஒருத்தன் அக்காலத்தின் குறுக்கே நடந்தான்.

எல்லா அண்ணன்களைப் போலவே எங்கள் ஊரில் தலைப்பிரட்டை போல அலைந்தவர்தான் இஸ்மாயிலும். அவருக்கு அடுத்து இரண்டு தங்கைகள் இருந்தார்கள். இஸ்மாயில் ஒரு ஆட்டுக்கறிக் கடையில் வேலை பார்த்தார். ஒருதடவை அந்த அண்ணியோடு இருந்தபோது, அவரால் மேற்கொண்டு செயல்பட முடியவில்லை. “நான் என்ன கூத்தியாளா உனக்கு? நீதான் தயாராகிக்கணும். மாடுகூட அதுவாத்தானே தயார் ஆகுது?” என்று வெடுக்கெனச் சொல்லிவிட்டார்.

சுண்டித் தளர்ந்து போய் எழுந்த இஸ்மாயில், அதற்கடுத்து பலமுறை பல இடங்களில் தயாராக முயன்றிருக்கிறார். அவரால் எழவே முடியவில்லை என்பதால் மனதை விட்டுவிட்டார். தன் மனைவியும் பிறரும் சொன்னது மற்றவர்களுக்கும் தெரிந்திருக்கும் என உறுதியாக நம்பிக்கொண்டார். ஊரில் எதிர்ப்படுகிற ஆட்கள் எல்லோருடைய கண்களையும் சந்திப்பதைத் தவிர்க்கத் தொடங்கினார். தனது சண்டித்தனங்களையெல்லாம் ஒதுக்கி ஒழுக்கமாய் வேலைக்குப் போகத் தொடங்கினார். 

குனிந்த தலைநிமிராமல் கறியை மரமேடையில் போட்டு வெட்டிக்கொண்டிருப்பார். மிச்ச நேரங்களில் எதன்மீதும் பிடிப்பில்லாமல், அலைபாய்கிற கண்களோடு அவர் சுற்றுவதை ஆட்டுக்கறிக் கடை உரிமையாளர் இப்ராஹீம் அண்ணனும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். லேசுபாசாக இஸ்மாயிலின் மனைவியை அழைத்து விசாரிக்கவும் செய்தார். 

ஒருநாள் பேச்சோடு பேச்சாக இஸ்மாயில், “நான் பேசாம உங்க மார்க்கத்துக்கு வந்திடறேன். மனசு சாந்தமாவே இல்லை. தறிகெட்டு குதிரை மாதிரி ஓடுது. நிதானமா இருக்க வேறொன்னைத் தொத்திக்கலாம்ணு தேடுது. நீங்களும் வழிகாட்டுவீங்க” என்றார் இப்ராஹீமிடம். “வர்றோம்னு சொல்றவங்களை வராதேன்னு நான் எப்படிச் சொல்ல முடியும்? யாருக்கு எந்த நேரத்தில எந்தக் கதவு தெறக்கும்ணு யாருக்குத் தெரியும்? உன் மனசு போல அமையட்டும். எல்லாம் மேல இருக்கவன் போடற கட்டளை. ஆனா பல்லுலகூட தண்ணிபடாம, சூரிய அஸ்தமனம் வரை பசியை கட்டுப்படுத்தி வருஷா வருஷம் ஒரு மண்டலத்துக்குப் பக்கத்தில விரதம் பிடிக்கணும். அதுக்கு நீ சரிப்பட்டு வருவீயா? சட்டிச் சோறு திங்கறவனாச்சே நீய்யி” என்றார் இப்ராஹீம். ”வயித்தைக் காயப்போட்டே ஆகணும்ங்கற இடத்தில இப்ப நான் நிக்கேன் மொதலாளி” என்று சொல்லி அவரும் சரியென்று தலையை ஆட்டினார். அவருடைய பெயர் அப்படித்தான் இஸ்மாயில் ஆனது.

அவரது பழைய பெயரின் நினைவுகளை அந்த ஊரின் ஞாபகத்தில் இருந்தே அவர் விடாப்பிடியாகப் போராடி அழித்துவிட்டார். முன்னொரு காலத்தில் அவரது பழைய பெயரைச் சொல்கிறவர்களிடம் அத்தோடு உறவை முறித்துக்கொண்டார். அவரது பழைய பெயரை உச்சரிப்பதை ஒரு தண்டனையைப் போல, அவமரியாதை செய்வதைப் போல எடுத்துக்கொண்டார். அதற்குப் பயந்தே அப்பெயரை உச்சரிக்கப் பலரும் தயங்கினார்கள். கைலியை முழங்கால் வரைக்கும் உயர்த்திக்கட்டி, தாடி வைத்து மீசையை மழித்து அவர் இஸ்மாயிலாகவே மாறிப்போன போது, ஊரும் அவருக்கு அந்தப் பெயர்தான் என்பதை ஒத்துக்கொண்டது.

அவரது பழைய பெயரை எல்லோருமே மறந்து போனார்கள் ஒருகட்டத்தில். மனதிற்குக் கிடைத்த புது உற்சாகத்துடன் கறிக்கடையில் சுழன்று பணியாற்றத் தொடங்கினார். ஆரம்பத்தில் வேறு மார்க்கத்திற்கு மாறாமல் சுணக்கம் காட்டிய தேவகி அக்காவும் அவரது உற்சாகத்தைப் பார்த்துவிட்டு கறுப்புத் தலைத் துணியைப் போட்டுக்கொண்டு, பொட்டு வைப்பதையும் பூ வைப்பதையும் நிறுத்தி இருந்தது. ஆனால் குழந்தைகள் மட்டும் மல்லிகைப் பூ அணிந்து விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன்.

இஸ்மாயிலின் தங்கை ஒருத்திக்குத் திருமணம் செய்து வைக்கும் விழாவில்தான் நாங்கள் முதன்முறையாகப் பிரியாணி சாப்பிட்டோம். என்னுடைய கூட்டாளிகள் என்னையும் அழைத்துக்கொண்டு போனார்கள். சிவப்பு நிறத்தில் மட்டன் துண்டுகள் அந்த மஞ்சள் சோற்றிற்குள் கிடந்தன. தொப்பி அணிந்திருந்த இஸ்மாயில் கையில் ஒரு தட்டோடு வந்து கறித்துண்டுகளை மேலும் அள்ளிப்போட்டார் எங்கள் இலையில். “தொப்பம்பட்டி சீரக சம்பா அரிசி. அரைமணி நேரத்தில மறுபடி பசிக்க வச்சாத்தான் நல்ல பிரியாணி” என அந்த ஊருக்குப் பிரியாணியை இஸ்மாயில்தான் அப்போது அறிமுகப்படுத்தினார்.

அதற்கடுத்து நான்கு ரோடு சந்திக்கும் மேட்டில் முதன்முதலாகப் புரோட்டா கடை போட்டவரும் அவர்தான். சில நேரங்களில் உற்சாகமாக இருக்கையில், என்னைக் கையைப் பிடித்து இழுத்துப் போய் அமரவைத்து, சுடச்சுட புரோட்டாவைக் கைகளில் தூக்கிப் புரட்டியபடி வந்து இலையில் போட்டு, பின்னர் பிய்த்துப் போடுவார். சிகப்பு நிறமாய் எண்ணெய் மினுங்க சால்னாவை ஊற்றிவிட்டு, “சிவகாசிக்கு போனப்ப இந்த சால்னாவை சாப்பிட்டேன். அப்படியே அந்த சுவையை நம்ம கடையில கொண்டு வந்திட்டேன். இப்ப ஊரே இந்த சால்னாவுக்கு அடிமை” என்றார். அதற்கடுத்து பள்ளி கல்லூரிப் படிப்பிற்காக வெளியே போனபோது, இஸ்மாயிலைப் பார்ப்பது குறைந்து போயிருந்தது.

இடையில் விடுமுறையில் வந்திருந்தபோது, பையன்களோடு போய் கொஞ்சம் குடித்துவிட்டுக் கடையில் உரிமையாய் வம்பிழுத்துக்கொண்டிருந்த போது, “எந்திச்சு வெளிய போடா குடிகார நாயே” என்றார் இஸ்மாயில். ’இல்லைன்ணே’ என மேற்கொண்டு சொல்ல முயன்றபோது அந்த வார்த்தையை மறுபடியும் சொல்லிவிட்டு கழுத்தில் கை வைத்துத் தள்ளினார். பையன்கள் மத்தியில் எனக்கு அவமானமாகப் போய்விட்டது என்பதால், நானும் அவரது நெஞ்சைப் பிடித்துத் தள்ளியபோது, அவர் பக்கத்தில் இருந்த எச்சில் இலைச் சட்டியின் மேல் விழுந்தார்.

குப்பையில் கிடந்த கிழிந்த வாழை இலையொன்று அவரது கழுத்துக்குப் பக்கத்தில் ஒட்டிக்கொண்டது. அதைக் குனிந்து பார்த்தவர், எழுந்து ஓடிவந்து என் சட்டையைப் பிடித்துப் பின்னோக்கி இழுக்கவே, அவரது கையோடு போனது அது. கடும் கோடையே ஆனாலும், உடலில் இருக்கும் தேமல் காரணமாகச் சட்டையில்லாமல் திறந்தேமேனிக்கு என் வீட்டில்கூட நின்றதில்லை, அது என் வழக்கமும் அல்ல. என் பள்ளி சிநேகிதி ஒருத்தியும் கூட்டத்தில் நின்று இதைப் பார்த்தவாறிருந்ததைக் கண்டேன். ஆங்காங்கே குளத்தில் படர்ந்திருக்கிற பாசியைப் போல என்னுடலில் பரவியிருந்த சிவப்புத் தேமல் திட்டுகள் எரிந்தன. ஓடிப்போய் இஸ்மாயிலின் இடுப்பில் பலத்தைத் திரட்டி மிதித்தேன். அடுப்பிற்குள் இருந்து விறகுக் கட்டை ஒன்றை உருவிக்கொண்டு என்னை நோக்கி ஓடிவந்த போது, என் நண்பர்கள் அவரைச் சூழ்ந்து தூக்கித் தரையில் போட்டு அமுக்கினார்கள். அவரது உடல் மண்ணில் கிடத்தப்பட்டது.

என் சித்தப்பா ஒருத்தர் கூட்டத்தில் இருந்து முன்னேறி வந்து இஸ்மாயிலைப் பார்த்து, “துலுக்கப் பயலுக்கு அவ்வளவு ஏத்தம் வந்திருச்சோ” என்றார். பக்கத்தில் நின்ற இப்ராஹீம் அண்ணன், “சின்னப்புள்ளை சண்டைக்கு எதுக்குப்பா மார்க்கத்தை இழுக்கற?” என்றார். “எங்க பையனைக் கொல்றதுக்கு அவன் வருவான். எங்க கையி பூப்பறிச்சிக்கிட்டு நிக்குமா? இந்தச் செய்தி மட்டும் எங்க அண்ணனுக்கு போகட்டும். இந்த இஸ்மாயில் என்ன ஆகப்போறான்னு பாருங்க. ஒழுங்கா அவனை மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க மாமா” எனக் கடையின் முன்நின்று பாக்கெட் சாராயம் அடித்த போதையில் அலறி, இஸ்மாயிலின் சட்டையைப் பிடிக்கத் துடித்துக்கொண்டிருந்தார் சித்தப்பா.

கடையின் கல்லா பக்கத்தில் நின்று உடலில் இருந்த மண்ணைத் துடைத்துக்கொண்டே ”எவன் கால்லயும் என்னால விழ முடியாது. போடா மயிரேன்னு கும்பிட்ட சாமியையே தூக்கிப் போட்டுட்டு வந்தவன் நான்” எனச் சொல்லிவிட்டு என்னை முறைத்து நின்றார் இஸ்மாயில். கடைசியாய் இஸ்மாயிலின் முறைக்கிற கண்களைத்தான் பார்த்தேன். அதுவே அவருடைய ஞாபகமாகவும் என்னுள் தங்கியது.

அந்தச் சண்டை பெரியளவு பிரச்சினையாக ஆகும் எனத்தான் ஊரில் எல்லோரும் நினைத்தார்கள். இரண்டு தரப்பும் அதை நோக்கித் தன்னைத் தயார்செய்யவும் தொடங்கியது. ஆனால் அப்பா எல்லோரையும் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, “தொழில் நடத்துற இடத்தில எவனாச்சும் போயி குடிப்பானா? அது என்ன ரெகார்ட் டான்ஸ் ஆடற எடமா?” என்றார். எல்லோரும் அமைதியாய் அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். ”மாடு எந்நேரமும் எதையாச்சும் மேய்ஞ்சுகிட்டே இருக்க மாதிரி இதையே அசை போட்டுக்கிட்டு இருக்காத” என்றார் அப்பா என்னிடம். இஸ்மாயில் ஏதாவது செய்துவிடுவான் எனப் பாட்டியொருத்தி மட்டும் நீண்ட காலம் பயமுறுத்திக்கொண்டே இருந்தாள் வீட்டில். 

அதற்குப் பிறகு இஸ்மாயிலின் திசைப் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. அவர் ஞாபகம் வந்தாலே சால்னாவைப் போல உறைப்பாய் அவர் மீதான வெறுப்பும் எழும். “இனிமே குடிச்சிட்டு இந்தப் பக்கம் வராதீங்கடா” என எளிமையாக அன்றைக்கு மன்னித்து விட்டிருக்கலாமே அவர்? அதற்கான வாய்ப்பிருந்தும் அவ்வாறு செயல்படவில்லையெனில், அம்மனநிலைக்குப் பின்னால் இருந்தது எது? சில நேரங்களில் இப்படி யோசிக்கவும் செய்திருக்கிறேன். இவ்வாறெல்லாம் சுற்றிச் சுற்றி யோசிக்கும் இயல்பு தொழில்நிமித்தமாகவும் வந்து என்னோடு ஒட்டிக்கொண்டது.

என்னுடைய பையனுக்கு மொட்டையடிக்கப் போனபோது ஊரில் சந்தனக்கூடு பெருவிழா என்றார்கள். எனக்கு அதைப் பற்றி எல்லாம் ஒன்றுமே தெரியவில்லை. இஸ்மாயில்தான் இது மாதிரியான இஸ்லாமிய விழாக்களை ஊரில் இப்போது ஒருங்கிணைக்கிறார் என்றார்கள். அவரது பெயரைக் கேட்கும் போது அப்போதும் எரிச்சல் வந்தடங்கியது. ஆனால் இரவு விளக்கொளியில் சப்பரம் மாதிரி ஒன்றினை, மல்லிகைப் பூச்சரத்தைப் போர்வை போலப் போர்த்தித் தூக்கிக்கொண்டு போன காட்சி ரம்மியமாக இருந்தது.

அத்தரும் மல்லிகையும் கலந்த மணம் அந்தப் பகுதியையே நிறைத்தபோது எல்லோருமே மகிழ்ச்சியாக இருந்தார்கள். நானுமே அன்றைக்கு அந்தப் புகைமூட்டத்திற்கு நடுவே உற்சாகமாக உணர்ந்தேன். அதற்கடுத்து அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் என் காதில் வந்து சேரவில்லை. வழிபாட்டு இடம் சார்ந்த சில மதச் சண்டைகளில் அவர் பெயரைச் சம்பந்தப்படுத்தி அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை எனப் போனபோது சொன்னார்கள். 

அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு எங்களது தரப்பில் ஒரு பையன் இஸ்லாமியப் பெண்ணைக் காதலித்திருக்கிறான். அதை எதிர்த்து இஸ்மாயில் அவரது மார்க்கத்து ஆட்களோடு எங்களது குடியிருப்பிற்கு வந்து சலம்பிச் சென்றதாகவும் சொன்னார்கள். சிறுசண்டை மூள்வது போல உருவான சூழலைப் பொம்பிளையாட்கள் எல்லோரும் சேர்ந்து தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இஸ்மாயில் சில சிக்கல்களோடும் அறியத் தொடங்கினார் ஊரில். அதையெல்லாம் அறிந்துகொள்ள விரும்பாமல் வேறொரு திசையில் நான் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தேன்.

இஸ்மாயிலின் முகத்தை என் நினைவில் இருந்து அழிக்கவே என் உள்மனமும் சொன்னது. உக்கிரமான அந்த வெயில் காலத்தில் கடை வாசலில் வெறும் மேனியோடு நின்றது வடுவாகவே என்னுள் தங்கியிருந்தது. அந்தக் காட்சி நினைவிற்கு வரும்போதெல்லாம் நெஞ்சில் ஒரு அழுத்தம் வந்து போகும் எனக்கு. ஒருநாள் கையில் கிடைத்தால் தக்க பாடம் புகட்ட வேண்டும் அவருக்கு என நண்பன் ஒருத்தனிடம் அப்போது சபதமும் செய்திருந்தேன்.

கோப்பின்படி, எங்களுடைய ஊரில் இருந்து அவர் எப்படி இப்போது அருப்புக்கோட்டைக்குப் போனார் என்கிற தகவல் எனக்குப் பிடிபடவே இல்லை. எங்களுடைய உள்ளூர் உளவாளியை அழைத்து அந்தத் தகவல்களைத் திரட்டித் தரச்சொன்னேன். அவன் அதுகுறித்து எனக்குத் தொலைபேசியில் குறுகிய நேரத்திற்குள்ளாகவே விரிவாகச் சொன்னான். அருப்புக்கோட்டையில் உள்ள தீவிரக் குழுவொன்று அவரைக் குறிவைத்துச் செயல்பட்டு அவர்கள் பக்கம் இழுத்திருக்கிறார்கள். வந்துபோக செலவுக்குக் கையில் காசு கிடைத்த வகையிலும், இஸ்மாயிலுக்குமே அங்கே உலவுவது பிடித்திருந்திருக்கிறது.

ஊக்கமான இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் கொண்டுபோய் விடவேண்டும் என்பதே அவருக்கான பணி. அவரை நோக்கி வந்த இளைஞர்களுக்கும் அவர் வரப் போக கைச்செலவை வாங்கித் தந்து ஊரில் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தித் தந்தார். அவர்களுக்குள் வாட்ஸ் அப் குழுவொன்றும் அமைக்கப்பட்டு அதற்குள் தீவிர கருத்துகளைப் பேசிக்கொண்டிருந்தனர். வந்துபோனால் தங்கிக்கொள்ளும்படி சின்ன வீடொன்றையும் இஸ்மாயிலுக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

நல்லபடியாக எல்லாமும் போய்க்கொண்டிருந்தபோது, திடீரென அந்தக் குழுவில் இஸ்மாயில் வேறு மாதிரியாக நடந்துகொள்ளத் தொடங்கி இருக்கிறார். “நான்தான் இந்தக் கூட்டத்திற்குத் தலைவன். என் கையில் இருக்கும் இளைஞர்களைக் கொண்டு முக்கிய நகரங்களைத் தாக்கி அழிக்கப் போகிறேன். எனக்குப் பொட்டி வந்துவிட்டது. எல்லோரும் என் தலைமையில் ஒன்றிணையுங்கள்” என்றெல்லாம் பேசத் தொடங்கி இருக்கிறார். ஒருகட்டத்தில் எல்லோரையும் ஒருமையில் அசிங்க அசிங்கமாகத் திட்டியிருக்கிறார்.

குழுவின் ரகசியக் கூடுகைகள் பற்றிச் சம்பந்தமே இல்லாத பலருக்கு அவர் பார்வேட் செய்திகளை அனுப்பி இருக்கிறார். அது பலப்பல கைகளுக்கும் பரவியிருக்கிறது. அந்தக் குழு அவரைத் துயரமாகக் கருதி அவரிடம் இருந்து தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டது. அந்தக் குழுவின் வாட்ஸ் அப்பிலும் அவரைத் தடைசெய்து வைத்தனர். அவருடனான தங்களுடைய எல்லா அடையாளங்களையும் தடயமின்றி மறைத்துக்கொண்டனர். கோபமான இஸ்மாயில் தனக்கென ஒரு குழுவைத் தொடங்கத் திட்டமிட்டு இளைஞர்களிடம் பேசிக்கொண்டிருந்த போதுதான், எங்களுடைய விசாரணை வலைப்பின்னலில் சிக்கினார்.

அவர் அந்த வாட்ஸ் அப் குழுவில் எழுதிப் பகிர்ந்த வாசகங்களை எல்லாம் அந்தக் கோப்பில் குறித்திருந்தார்கள். அவரது தாக்குதலின் இலக்கில் உலகின் பெரிய நகரங்கள் பலவும் இருந்தன. பழுப்படையத் தொடங்குகிற கட்டத்தில் இருக்கிற இளமஞ்சள் நிறத்தில், ஏதோவொரு புத்தகத்தில் இருந்து கிழிக்கப்பட்ட, சில நகர வரைபடக் காகிதங்கள்கூட அவரிடம் இருந்தன. புரோட்டா கடை போட்டிருந்த இஸ்மாயில் அதையெல்லாம் எவ்வாறு அறிந்தார் என்பதில் எனக்கு வியப்பு மேலிட்டது. அவரது சொந்த வீட்டுப் புகைப்படங்கள் எனச் சிலவற்றை அதில் இணைத்திருந்தார்கள். மேற்கூரை உதிர்ந்து சிதிலமான வீட்டின் முன்னே அமர்ந்து அவரது மனைவி தலையில் முக்காடு ஒன்றைப் போட்டு, பாத்திரம் கழுவுகிற காட்சியைப் புகைப்படம் ஒன்றில் பார்த்தேன்.

என்னிடம் தொலைபேசியில் உளவு சொன்னவனை அழைத்து, “ஏதாச்சும் சம்பாதிச்சிருக்காரா?” என்றேன். “அது தெரியலைங்கய்யா. ஆனா அவரு சம்சாரத்தையும் பொண்ணையும் பார்த்தா பஞ்ச பராரியாத்தான் தெரியறாங்க. மூக்கு காதிலகூட ஒரு பொட்டுத் தங்கம் இல்லை. அதில மூத்த பொண்ணு சமீபத்தில தவறிடுச்சாம். இவரும் சண்டை சச்சரவில வீட்டைவிட்டு வெளியேறிட்டாரு” என்றான். இந்தத் தகவல்களை எல்லாம் அவன் என்னுடைய விசாரணை அதிகாரிகளிடம் சொல்லவே இல்லை என்பதையும் அறிந்தேன். ஊருக்குள் அதுவரை குரலை உயர்த்திப் பேசிக்கொண்டிருந்தவர், எங்களுடைய ஆட்கள் விசாரணைக்குத் தூக்கிய போதிலிருந்து கப்பென வாயை மூடிக்கொண்டார் என்று சொன்னார்கள். நீண்ட விசாரணையில் அந்த ஒற்றை வரியை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாராம்.

தன்னைப் பற்றிய தகவல்கள் எதையுமே சொல்ல மறுத்திருக்கிறார். பின்னர் அவரோடு அலைந்துகொண்டிருந்த இன்னொருத்தரைப் பிடித்து மூட்டைப்பூச்சியைப் போல நசுக்கி விசாரணை போட்ட பிறகே, இஸ்மாயில் பற்றிய தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. அதற்குப் பிறகுதான் அந்தக் கோப்பு என்னிடத்தில் மெருகேற்றம் கோரி வந்தமர்ந்தது. இன்னும் உக்கிரமான விசாரணைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. கத்தரிவெயில் காலம் என்பதால், அன்று எல்லோருமே சோர்வாக இருந்தார்கள் என்பதும் ஒரு காரணம்.

இந்தச் சிறப்புப் பிரிவைப் பொறுத்தவரை எந்த எளிய சந்தேகத்தையும்கூட மிச்சம் வைக்காமல் அலசி ஆராய்வோம். கடந்து மறைகிற எலியின் வால் நுனியைக்கொண்டே அதன் முழு உருவத்தை நினைவில் திரட்டும் பூனையாகத்தான் வளர்க்கப்பட்டிருக்கிறோம். சின்ன அசிரத்தைகூட மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் என்பதால் மோப்ப நாயைவிட ஒருபடி மேலாக. அதுவும் நாங்களும் ஒன்றெனக்கூடச் சில சமயங்களில் தோன்றும்.

ஒரு சின்னத் தவறுக்குக்கூடத் தயவு தாட்சண்யம் கிடையாது இங்கே. கொஞ்சம் அசந்தாலும் இவ்வமைப்பு, தலைகுப்புறத் தள்ளிவிடும் வாழ்வை. அதற்கப்புறம் மீதிக் காலத்தில் வழக்கு, நீதிமன்றம், பணிநீக்கம் என அல்லாடிக்கொண்டிருக்க வேண்டும் என்பதால், இங்கே மற்ற துறைகளைக் காட்டிலும் கவனம் அதிகம். சந்தேகத்தின் சிறு வாய்ப்பைக்கூடக் குற்றத்திற்கு வழங்கிவிடுவோம். கோட்டைத் தொட்டால் மட்டுமல்ல, கோட்டிற்கு அருகில் வந்து நின்றால்கூட இங்கே குற்றம்தான். இந்த அமைப்பில் அதுவரை நான் இவ்வாறான விஷயங்களில் சறுக்கியதே இல்லை. இந்த வருட குடியரசு தின அரசுப் பதக்கம்கூட எனக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தது.

நீண்ட நேரமாக அவரைப் பற்றி யோசிப்பது அயர்ச்சியை உண்டு பண்ணியது. கூடவே, விசாரணையை முடிப்பதற்குக் குறைவான நேரமே இருந்தது. அடுத்து வரும் அதிகாரிகளிடம் அவரை ஒப்படைக்க வேண்டும். எழுந்து அவர் இருந்த அறையை நோக்கி நடந்து போனேன். குனிந்து தன் பெருவிரல் நகத்தைப் பிய்க்க முயன்றுகொண்டிருந்தவர், என் அசைவைக் கண்டதும் நிமிர்ந்து பார்த்துவிட்டுத் திரும்பவும் குனிந்துகொண்டார்.

என் பொறுப்பில் இருக்கிற வழக்கின் வழக்கமான விசாரணை முறையைத் தொடங்கினேன். என்னோடு கடைசிப் படிநிலையில் இருந்த காவலன் ஒருத்தனும் உடனிருந்தான். நான் அமைதியாகக் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவே இல்லை. தலையைக் குனிந்து மௌனமாகவே அமர்ந்திருந்தார். இடையில் குரலை உயர்த்திக் கேள்வியைக் கேட்டபோதும், அவர் குனிந்தே இருந்தார். என் பக்கத்தில் நின்ற காவலன் எரிச்சலுற்று, “ஒப்பன ஓழி. அதிகாரி கேட்கறாரு. ஊமை மாதிரி ஆக்டா கொடுக்கிற. நெஞ்சில இருக்க பாலை கக்க வச்சிருவேன்” என என்னுடைய அனுமதி இல்லாமலேயே ஓங்கி அவருடைய நெஞ்சில் மிதித்தான். சுவரோடு நெருங்கிப் போய் அமர்வதற்கு முன் என் கண்களை உற்றுப் பார்த்து விலகினார் இஸ்மாயில். கழுத்தில் கடிவாங்கிய எலியைப் போலத் துடித்து ஒடுங்கியது அவர் பார்வை.

அவனைப் பார்த்து முறைத்தவுடன் திருப்பி உதைக்கத் தூக்கிய காலைக் கீழே போட்டான். வெளியில் போய் நிற்குமாறு அவனுக்குச் சைகை காட்டினேன். அவன் வெளியே போன பிறகும் உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை என் முதுகு உணர்ந்தது. நகர்ந்து அவர் முன்னால் போய் நின்றேன். வெற்று மேலோடு அமர்ந்திருந்த அவர் என் பூட்ஸ் கால்களை உற்றுப் பார்ப்பது தெரிந்தது. அவரது தலைக்கு மேல் இருந்து “தங்கப்பாண்டி” என்றேன். ஒரு வெண் செம்பருத்திப்பூ மலர்வதைப் போல நிமிர்ந்து என்னைப் பார்த்தார். நொடிக்கும் குறைவான நேரம் அந்தக் கண்களில் ஒரு மலரொளி வந்துபோய் அடங்கியதைப் பார்த்தேன். உணர்வெதையும் வெளிக்காட்டாத என் கண்களைக் குறுகுறுவெனப் பார்த்துவிட்டு, முகத்தை உடனடியாக இறுக்கமாக மாற்றியபின், “ஜிகாத் வந்திரும். உங்க நகரத்தைக் கைப்பத்தாம விடமாட்டோம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தலையைக் குனிந்துகொள்வதற்கு முன்பு அவரது இதழோரம் சிரிப்பொன்று வழிந்தோடி மறைந்ததைக் கவனித்தேன்.

அந்த அறையைவிட்டு வேகமாக வெளியேறி, என்னுடைய மேசையில் அமர்ந்து அவரது கதையைக் கோப்பில் கோர்வையாக எழுதிக் கையொப்பம் இட்டு பொறுமையாய்ச் சிகப்பு நாடாவால் கட்டி முடித்தேன்.

ஏதோ உள்ளுக்குள் உந்துதல் உணர்வெழவே, மோப்பநாயைப் போல அறைச் சன்னலை நோக்கிப் போனேன். வெளியிலிருந்து அத்தரும் மல்லிகையும் இணைந்த மணம் என் அறைக்குள் நுழையத் தொடங்கியது.

1 comment

முரளிதரன் July 28, 2022 - 11:07 pm

கதையின் முடிவை வாசகர்களிடம் விட்டு விட்டீர்களே அருமை

Comments are closed.