இனிய நாள். அற்புதமான நாள். மேப்பில் தம்பதியரின் அகத்துயரை, வெய்யோன் ஒளியின் பொன் தம்பங்களாலும் இயற்கைப் பெருக்கின் கெட்டிப்பசுமையாலும் ஆன ஜூன் மாதப் பருவநிலை பரிகாசம் செய்தது. அவர்களது உரையாடல் இந்த இயற்கையின் அற்புதத்தை ரசிக்கும் ஆவலைக் குன்றச்செய்து, தங்களது துயரையே எண்ணி நோகும் தற்புலம்பல்கள் மட்டுமே ஆகி இருந்தது. அது மட்டுமே அங்கு நிலவிய இயற்கைப் பேரழகின் மீதான ஒற்றைக் கறை என்று அப்போது தோன்றியது. வழக்கமாக இந்தப் பருவத்தில் அவர்கள் தோலில் கரும்புள்ளிகள் தோன்றியிருக்கும். ஆனால் இங்கிலாந்தில் இருந்து ஓராண்டு கழித்துப் பறந்து வரும் தமது மூத்த மகளை வரவேற்ற போது அவளைப் போலவே பெற்றோரும் வெளிறி இருந்தார்கள். ஆனால் ஜூடித் தனது பிறந்த நிலத்தின் மீது செறிவுடன் பொழியும் செழுஞ்சுடர் சூரியக் கதிர்களை வியந்து நோக்கத் தவறவில்லை. அவர்களும் உடனடியாக எதையும் சொல்லி அவளது மீள்வருகையின் மகிழ்வைச் சிதைக்க எண்ணவில்லை. சில நாட்கள் காத்திருந்து, அவளது பயணக் களைப்பு நீங்கிய பின், நேரம் கச்சிதமாகப் பொருந்தி வருகையில், காஃபியோ, காக்டெயிலோ, குவாண்ட்ரோவோ அருந்தியபடியே நுட்பமான வார்த்தைகளால் தங்களது முடிவுக்கு வடிவம் தந்த காரண காரியங்களைப் பற்றிப் பேச வேண்டும். நீள்புடவியோ, அவர்களது மூடிய சாளரங்களுக்கு வெளியே, தன் வருடாந்திர வித்தையைத் தன்போக்கில் நிகழ்த்தித் தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டிருந்தது. ரிச்சர்ட் உயிர்த்தெழுகை தினத்தில் வீட்டைவிட்டுக் கிளம்ப நினைத்தார். ஜோன்தான் நான்கு பிள்ளைகளும் தத்தம் தேர்வுகளில் தேறி, ஆண்டு விழாக்களைச் சிறப்புற முடித்து, இனிய கோடையில் இங்கு வந்து ஒன்றுகூடும் வரை காத்திருப்போம் என்று கட்டாயமாகச் சொல்லிவிட்டாள். எனவே அவர் அன்பாலும் அச்சத்தாலும் தவித்தபடி சாளரத்திரைகளைத் தைப்பது, புல்வெட்டும் எந்திரங்களைக் கொண்டு புதர்களை ஒருக்குவது, தங்களது புதிய டென்னிஸ் கட்டாந்தரையை மட்டமாக்கிப் பள்ளங்களைச் சமனாக்குவது போன்ற பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார்.
ஆட்டக்களம். களிமண் களம். குளிர்பருவம் கடந்ததால் குழிகளாலும் சூறைக்காற்றினாலும் நிலத்தின் அடுக்குகள் உரிந்தும் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தங்கள் நட்பு வட்டத்தில் யாருக்காவது மணமுறிவு ஏற்படும்போது அந்த இணையரது வீடுகளின் தோற்றம் எப்படியெல்லாம் மேம்பட்டது என்பதை மேப்பில் தம்பதியர் கண்டிருக்கிறார்கள். தம் மண வாழ்க்கையின் இறுதி முயற்சி அது என்பதைப் போலப் பிரியவிருக்கும் தம்பதியர் வீட்டைச் சரிசெய்யும் பணிகளில் செறிவுடன் ஈடுபடுகிறார்கள். இவர்கள் வீட்டிலேயே சுவரின் சுண்ணாம்புப் பொடி பறக்கப் பறக்க நடந்த பெரிய சண்டையின்போதுகூடச் சமையற்கட்டு பொலிவடைந்தது கண்கூடு. ஆயினும் கடந்த கோடையில் கானரிப் பறவையைப் போல் ஒலியெழுப்பிய நிலச்சமனி ஆங்காங்கே டெய்சி மலர்ப்புள்ளிகளை ஏந்தியிருந்த புல்வெளியில் இறங்கி களேபரம் செய்து அதைக் களிமண் தரையாக மாற்றியபோதும் சடை பின்னியிருந்த ஆடவர் குழு ஒன்று அதில் இறங்கி களிமண்ணையும் சிதைத்து மேடுபள்ளமாக ஆக்கியபோதும் அந்த உருமாற்றம் அவர்களுக்கு அச்சுறுத்தலாகத் தோன்றவில்லை. மாறாக, துடுக்குத்தனமான ஒரு கொண்டாட்டமாகத்தான் தோன்றியது. நிலத்தை விளையாட்டுக்காக வெட்டுவதை அத்தம்பதியர் கண்டிக்கவில்லை. அடுத்துவந்த இளவேனிற்காலத்தில் ஒவ்வொரு காலையிலும் யாரோ கட்டிலை ஆட்டி எழுப்புவதைப் போன்ற திடுக்கிடலுடனேயே விழித்தெழுகின்ற ரிச்சர்ட் வெறுமையாகக் கிடக்கும் டென்னிஸ் களத்தை – வலைத்தடுப்பும் சுருக்குக் கயிறும் கொட்டகையில் கட்டியே கிடந்தன – தனது நிர்பந்திக்கப்பட்ட தனிமையின் மனநிலைக்கான உருவகமாக உணர்ந்தார். களிமண் தரை ஆங்காங்கே நொறுங்கி விரிசல்களாகவும் குழிகளாகவும் இருந்தது. அது எளிய தொடக்கநிலை வேலையாகவும் தீராத தலைவலியாகவும் ஒரே சமயத்தில் காட்சியளித்தது. நாய்கள் அங்கே தாவி உல்லாசமாக விளையாடி வந்திருக்கின்றன. ஓடை நீரால் அரிப்பு உண்டாகி இருந்தது. தனது பூட்டிய இதயத்திற்கு இந்த நாளை எதிர்கொள்ளும் நிலைமை ஒருபோதும் வராது என்று நம்பி இருந்தவர் ரிச்சர்ட்.
ஆனால் அது இப்போது வந்தே விட்டது. ஒரு வெள்ளிக்கிழமை. ஜூடித் தன் பிறப்பிடத்துடன் இணைக்கத்திற்கு வந்துவிட்டாள். மீண்டும் ஒருமுறை வேலைகளும் முகாம்களும் பயணங்களும் அவர்களைப் பல்வேறு திசைகளில் சிதறடித்திடும் முன்பு நான்கு குழந்தைகளும் ஒன்றுகூடியிருந்தனர். ஜோன் படிப்படியாக அவர்களுக்குச் செய்தியைச் சொல்ல வேண்டுமென விரும்பினாள். ரிச்சர்டுக்கு மேசையில் அமர்ந்து நேரடியாக அறிவிப்பதே எண்ணம். ஜோன்தான் ‘நேரடியாக விசயத்தை அறிவித்துவிட்டால் நாம் நமது கடமைகளைத் தவிர்ப்பதாகிவிடும்’ என்றாள். ’அவர்கள் சண்டையிட்டு விளையாடியபடி நாம் சொல்லவருவதில் கவனம் செலுத்தாமலேயே மும்முரமாக இருந்துவிடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே முக்கியமானவர்கள், உங்கள் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தார் இல்லை.’
‘சரி, சரி. நான் ஏற்கிறேன்.’ ஜோனுடைய திட்டம் கச்சிதமானது. அன்று மாலை அவர்கள் ஜுடித்துக்குச் சற்றே காலம் தாழ்ந்த வரவேற்பு இரவுணவை அளித்தனர். கல் இறாலும் சாம்பெய்னும் பரிமாறப்பட்டன. பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பாக அவளை ஒரு குழந்தை வண்டியில் படுக்க வைத்து வாஷிங்டன் சதுக்கத்தில் இருக்கும் ஐந்தாம் வீதியில் தள்ளியபடியே அவர்கள் நடந்தார்கள். ஆனால் இப்போது விருந்து முடிந்ததும் அவளை வீட்டிலிருந்து வெளியேற்றி அவளுக்குத் துணையாகச் சிற்றோடை வரை நடந்து தாம் சொல்லவிருக்கும் உண்மையைப் பாதுகாக்க வேண்டுமென உறுதிமொழி வேண்டியபடி சொல்ல அணியமாகினர். அதன்பிறகு போஸ்டனுக்கு ராக் இசைக் கச்சேரிக்காகச் செல்லவிருக்கும் ரிச்சர்ட் ஜூனியருக்குச் சொல்லிக்கொள்ளலாம். இல்லாவிடில்கூட கச்சேரி முடிந்து மீள்கையில் அவன் தொடர்வண்டியில் பயணிக்கும்போதோ, சனிக்கிழமை அதிகாலையில் அவன் வேலைக்குச் செல்லும் முன்பாகவோகூட அறிவிக்கலாம். அவனுக்குப் பதினேழு வயதாகிறது. கோல்ஃப் மைதானத்தைப் பராமரிக்கும் அணியில் பணியாற்றி வருகிறான். அதற்குப் பிறகு இளையவர்கள் ஜானுக்கும் மார்க்ரெட்டுக்கும். அவர்களுக்கு எப்போது வாய்ப்பு கிட்டுகிறதோ அப்போது அறிவித்துவிடலாம்.
ரிச்சர்ட் ‘துடைப்பான் வைத்து துடைத்து அது முன்பு இருந்ததைப் போன்ற நிலைக்கு செய்துவிட்டேன்’ என்றார்.
‘இதைவிடச் சிறந்த திட்டம் ஏதும் தோன்றுகிறதா? இந்தத் திட்டத்தின்படி சனிக்கிழமை முழுவதும் எத்தனை கேள்விகளுக்கு வேண்டுமானாலும் நிதானமாகப் பதில் சொல்லலாம், உங்கள் அற்புதமான விடைபெறலுக்கு முன் பைகளையும் ஒருக்கலாம். நேரம் கிடைக்கும்.’
’இல்லை’ என்று சொன்னார். அதன் பொருள் வேறு நல்ல திட்டம் தன்னிடம் இல்லை என்பது. அந்தத் தொனி ஒரு அரைகுறை உத்திரவைப் போலவும் தன்னைக் கட்டுக்குள் வைப்பதற்கான மறைமுக வேண்டுதல் போலவும் தோன்றியபோதும் அவளுடைய சொல்லையே ஏற்றார். ஜோனுடைய குறுவேலைப் பட்டியல், நிதி கணக்கீடு, அவளுடன் பழகிய ஆரம்ப காலத்தில் அவள் வைத்திருந்த மிதமிஞ்சிய விரிவுரைக் குறிப்புகள் ஆகியவற்றில் ஒன்றைப் போல அத்திட்டம் தோன்றியது. அவளுடைய திட்டம் அவருக்கு முன்னிருந்த வெளியைக் கத்திகள் பொதிந்த சுவர் கொண்ட மதில்களாக மாற்றிவிட்டிருந்தது. ஒவ்வொரு சுவரும் மறுபுறத்தில் என்ன மர்மத்தை வைத்திருக்கிறோம் என்று காட்டாமல் கண்கட்டுபவை.
இளவேனில் முழுவதும் அகமும் புறமுமான உலகில் அவர் சஞ்சரித்து வந்தார். அதில் தடைகளும் பிரிவினைகளும் நிறைந்திருந்தன. அவரும் ஜோனும் தம் பிள்ளைகளுக்கும் உண்மைக்கும் இடையேயான மெல்லிய திரையாக நின்றனர். ஒவ்வொரு கணமும் இறந்தகாலம் ஒருபுறமிருந்தும் நினைவிலும் எண்ண முடியாத பாரம் தரும் தற்போதைய நிகழ்காலம் மறுபுறமிருந்தும் பிரிவின் வதையை அளித்தது. நான்கு கத்திகளால் கிழிந்து, பின் மதில்களைக் கடந்து நிற்கும் ஓரிடத்தில் ஒரு தெளிவற்ற வாழ்க்கை அவருக்காகக் காத்திருந்தது. சூரிய ஒளியைப் போல் மிகத் திடமாகக் கண்ணீரைத் தவிர்த்து வந்ததை அறிவார். அவரது கபாலம் ஒரு ரகசியத்தைப் பதுக்கி வைத்திருந்தது. ஒரு வெள்ளை முகம், அஞ்சியும் தெளிந்தும் இருக்கும் முகம். மிக அறிந்ததுபோலவும் அந்நியத்தன்மை கொண்டும் மிளிரும் முகம்.
கடுமையான மனக்குமைச்சலுக்குப் பின் தான் நீங்கிய பிறகான இல்லம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதிலேயே வெறியாக ஈடுபட்டார். சாளரத் திரைகளை மாற்றுவது, பலகணியைச் சரிசெய்வது, கதவு தாழ்ப்பாள்களைப் பொருத்துவது. தப்பியோடும் கலைஞன் தனது தப்பித்தலுக்கு முன்பாக தான் இருந்த இடத்தைக் கதகதப்பானதாக ஒருக்கி மாற்றும் செயலுக்கு இணையான பணிகள்.
பூட்டு. திண்ணைப்பகுதியின் திரையிட்ட கதவுகளில் ஒன்றை அவர் மாற்றியாக வேண்டிய நிலைமை. இந்தப் பணி இதைப் போன்ற பணிகளில் பெரும்பாலும் நிகழ்வதைப் போலவே நினைத்ததைவிட கடினமானதாக இருந்தது. பழைய அலுமினியப் பூட்டு அரிப்பினால் சிக்கிக்கொண்டது. அதை உருவாக்கியவர்கள் வேண்டுமென்றே அதற்கு எந்தவித உபகருவியும் செய்யாமல் விட்டிருந்தனர். மூன்று இரும்புக் கடைகளில் அந்தப் பூட்டிற்கான திறவுக்கிடுக்கி கிடைக்கவில்லை. மாறாக அவற்றைக் கொண்டு நுழைத்தால் வெகு எளிதாக மாட்டிக்கொண்டது. இன்னொரு புதிய துளை போட வேண்டியிருந்தது. சிறிய மரத்துண்டுகளுடனும் பெரிய ரம்பங்களையும் கொண்டு துளையிட்டாக வேண்டும். பழந்துளை ஒன்று மரத்துண்டால் மூடிக்கொண்டிருந்தது. உளிகள் வலுவற்றிருந்தன. ரம்பம் துருவேறி இருந்தது. அவரது விரல்கள் உறக்கமில்லாததால் வீங்கி இருந்தன. புறக்கணிப்பின் உலகில் எதையும் பொருட்படுத்தாது பொழிந்துகொண்டிருந்தது சூரியன். புதர்கள் கத்தரிப்பு செய்யப்படாமல் வடிவிழந்திருந்தன. வீட்டின் காற்று வீசும் திசையில் இருந்த சுவர் பகுதியில் சாயம் செதில்களாக வழிந்திருந்தது. அவர் சென்ற பிறகு வீட்டிற்குள் மழை நீர் புகுகக்கூடும். பூச்சிகள் செத்து அழுகிக் கிடக்கும். விரைவில் இழக்கப்போகிற அவரது குடும்பம் விழிப்புணர்வின் விளிம்புகளில் இருந்து நழுவிவரும் நிலையில், அவரோ திருகிகள், தாங்கிகள், விவரங்கள் அடங்கிய வழவழப்பான தாள், உலோகத் துகள்களோடு போராடிக்கொண்டிருந்தார்.
அயல் தேச வாழ்விலிருந்து மீள வந்திருக்கும் இளவரசி ஜுடித் திண்ணையில் அமர்ந்திருந்தாள். அவள் எரிபொருள் பற்றாக்குறை, நிலவறையில் இருந்தபடி வெடிகுண்டுகளுக்கு அஞ்சியது, நடனப்பள்ளிக்குச் செல்லும் பாதையில் பாகிஸ்தானிய கூலியாட்கள் காம விழிகளுடன் தன்னைப் பின்தொடர்ந்து வந்தது உள்ளிட்ட கதைகளைச் சொல்லி அனைவரையும் திகைப்பூட்ட முயன்றாள். இடையிடையே ஜோன் வீட்டிற்கு உள்ளும் புறமும் வந்துபோனாள். இயல்பைவிட அதிக மெளனத்தை வலியச் சூடிக்கொண்டு நடந்தவள், பூட்டோடு அவர் போராடுவதைப் பாராட்டினாள். இது கடைசி வேலை அல்ல, இதுபோல இன்னும் நிறைய வீட்டு வேலைகளை இருவரும் நெடுங்காலம் தொடர்ந்து செய்யவிருப்பதைப் போல அவள் பாராட்டு தொனித்தது. அவர்களுடைய இளைய மகன் ஜான் சடுதியில் பதினைந்து வயதாகி அழகனாகத் தோன்றினான். தன் செவியில் ஒவ்வொரு சுத்தியல் அடியும் ஓலத்தைப் போல் விழும்படி குத்துமதிப்பாகத் தன் தந்தை கதவின் ஒரு பகுதியில் அடித்தபடி இருக்க, ஜான் அதைச் சில நிமிடங்கள் இறுகப் பற்றியிருந்தான். இளைய மகள் முந்தைய இரவு ஒரு கொண்டாட்டத்திற்குச் சென்று களித்து வந்திருந்ததால் இத்தனை இரைச்சலுக்குப் பின்னும் ஊஞ்சல் படுக்கையில் படுத்து ஆழ்தனிமையில் முகம் வெளிற, தீர்க்கமாக உறங்கினாள். சூரிய ஒளியைப் போலவே காலமும் யாரையும் பொருட்படுத்தாமல் கசிந்தது. சூரிய கதிர்கள் மெல்ல சாய்கோணத்தில் விழுந்தன. இன்று நீண்ட நாட்களில் ஒன்றாக இருந்தபோதும் போதுமான நெடுமை அதில் இல்லை. பூட்டு சொடுக்கொலி எழுப்பித் தன் வேலையைச் செய்யத் தொடங்கியது. அவர் வென்றுவிட்டார். ஒரு கோப்பை மது அருந்தியபடி தன் மகள் சொல்லும் கதைகளைக் கேட்கலானார். அவள் ’அத்தனை ரம்மியமாக இருந்தது’ என்றாள். ‘இத்தனை கொடுமைகளுக்கு நடுவிலும் அத்தனை இறைச்சி வெட்டிகளும் இனிப்பு ரொட்டிக் கடைக்காரர்களும் மெழுகுவத்தி ஒளியில் கடைகளைத் திறந்து வைத்திருந்தனர். அவர்கள் அனைவருமே துணிவும் எழிலும் பொங்க காட்சியளித்தனர். செய்தித்தாள்களின் வாயிலாக அங்கு நிகழ்வதை அறிபவருக்கு அது மிக கொடுமையாகத்தான் தெரியும். “எரிபொருள் வரிசையில் மக்களை மக்கள் சுட்டுக்கொல்கின்றனர்; குளிரில் அனைவரும் உறைகின்றனர்!”’
ரிச்சர்ட் அவளைக் கேட்டார். ‘நீ இப்போதும் நிரந்தரமாக இங்கிலாந்திலேயே வாழ விரும்புகிறாயா?’ நிரந்தரமாக, இந்த எண்ணம், இந்தச் சொல் இப்போது வலுவாக அவரை அண்டி வந்து தொண்டையை அழுத்தியது.
காலாதீதத்தில் எங்கோ தொலைவில் குழந்தையாக இருந்தபோது கொண்ட விழிகளுடன் மலர்ந்த தனது நீள்வட்ட முகத்தை அவரை நோக்கித் திருப்பி ‘இல்லை’ என்று ஜூடித் மனம் திறந்தாள். அவள் உதடுகள் சாரமும் திருப்தியும் கொண்டு பேசின. ‘இங்கு வருவதற்காகத்தான் நான் தவித்திருந்தேன். நான் அமேரிக்கன் இல்லையா?’ அவளை அவர்கள் முழுமையாக வளர்த்தனர். அவரும் ஜோனும் நான்கில் அவளை மட்டும் சேர்ந்து மிகவும் சிரமப்பட்டு வளர்த்திருந்தனர். இப்போது அவள் ஒரு பெண். பிற பிள்ளைகளுக்கு இன்னும் கொஞ்சம் வளர்த்தல் தேவைப்படுகிறது. இருந்தபோதும் ஜூடித்திடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே – அவளுடைய நினைவுகள்! முதல் குழந்தை! அவர்கள் இருவரது கைகளையும் ஒவ்வொரு மழலைக் கையாலும் பற்றி பாலமாக நடந்தது என எல்லாம் சேர்ந்து – அவரைப் படுத்தியது.
அவரது முகத்துக்கும் கண்ணீரைத் தேக்கி வைத்திருந்த திடத்திற்கும் இடையேயான சிறு நூலிழை அறுந்தது. விருந்து உணவுக்கு முன்பாகத் தன் தொண்ட வறள அமர்ந்தார் ரிச்சர்ட். சாம்பெய்ன், கல் இறால் உணவு யாவும் சூரியச் சாய்கதிர்களின் மிளிர்வில் தனித்தனியாகத் தெரிந்தன. அவர் அவற்றைப் பார்த்தபடி கண்ணீரால் ருசித்தார். கண் சிமிட்டினார், விழுங்கினார், காய்ச்சல் வந்ததை நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இருந்தபோதும் கண்ணீர் வழிவது நிற்கவில்லை. அது ஒரு துளையில் இருந்து சொட்டவில்லை. மெல்லிய சவ்வின் வழியாக ஊடிப் பரவி நிதானமாக, தூயதாக, முடிவின்றி, மனமிளகும்படி சிந்துகிறது. அவருடைய கண்ணீரே அவருக்குக் கேடயமாக, பிறருடைய முகங்கள், கூடுகை, கள்ளம் கபடமின்றி பேசிக்கொண்டிருக்கும் இந்த இறுதிக் கூட்டம் என அனைத்துக்கும் எதிரான கேடயமாக இருந்தது. அவர் இறுதியாகக் குடும்பத்தலைவன் பொறுப்புடன் அமர்ந்திருக்கும் இந்தக் கூடுகையில் சிந்தி வழிந்தது. கல் இறாலின் முதுகை உடைத்தபோது அவரது நாசியிலிருந்தும் நீர் கொட்டியது. அவர் உறிஞ்சிய சாம்பெயினை உப்பு மேலும் ருசியாக்கியது. அவரது மென்னை விழுங்க முடியாதபடி உணவை இறுக்கிப் பிடித்தது. அவரால் தன்னைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை.
அவரது கண்ணீரைப் புறக்கணிக்கவே அவரது பிள்ளைகள் முயன்றனர். அவரது வலப்பக்கத்தில் அமர்ந்திருந்த ஜுடித் ஒரு சிகரெட்டைக் கொளுத்தி வான் நோக்கி அதீத ஆற்றலுடனும் பரவசத்துடனுமான வெளிச்சுவாசத்தை நிகழ்த்தினாள். அவளுக்கு அடுத்து அமர்ந்திருந்த ஜான், வண்ணமயமான கல் இறால் சடலமாகக் கிடக்க, அதில் மிஞ்சியிருந்த பகுதிகளான காலையும் வாலையும் தீவிரமாக உற்றுநோக்கும் பாவனையில் தலையைக் குனிந்தான். மேசையின் எதிர்புறத்தில் அமர்ந்திருந்த ஜோன் அவரை ஒரு கணம் வியப்பு மேலிடப் பார்த்ததும் அவளது நிந்தனை சடுதியில் முகப்பழிப்பாக அல்லது மன்னிப்பாக மாறியது. ஒருவேளை அது அவரது உத்தியமைக்கும் திறனுக்கான வணக்கமாகவும் இருக்கலாம். அவர்களுக்கிடையே படிகக் குவியல்களாகச் சிந்தி வந்த கூரிய கண்ணீர் நினைவுகளை மார்க்ரெட் பார்த்தாள். அவள் பார்வை ஒரு கடையின் பொருட்களைச் சாளரத்தின் வழியாகக் கண்டு தனதாக்கிக்கொள்ள ஏங்கும் பார்வையாக இருந்தது. அவள் பதிமூன்று வயதானதால் பீன் என்று பட்டப்பெயரில் அழைக்கப்படுவதில்லை. ஆனால் சமையற்கட்டில் தட்டுகளையும் தாம்பாளங்களையும் கழுவியபடி ‘அப்பா ஏன் அழுகிறார்?’ என்ற கேள்வியை மார்க்ரெட்டுக்கு முன்பு ஜான்தான் கேட்டான்.
ரிச்சர்டுக்கு அந்தக் கேள்வி செவியில் விழுந்தது. அதற்கு வழங்கப்பட்ட முணுமுணுப்பான பதில்தான் கேட்கவில்லை. அதன்பிறகு பீன், ‘ஓ! இல்லை! இல்லை!’ என்று அழும் குரல்தான் கேட்டது. நெடுநாட்களாக எதிர்பார்த்த உணர்ச்சிமிகுந்த ஓலத்தின் முதல் ஓசை.
ஜான் ஒரு சட்டியில் பச்சை காய்கனிக் கலவையுடன் திரும்பி வந்தான். தன் தந்தையைக் கடுமையான பார்வையுடன் ‘அவர்கள் சொன்னார்கள்’ என்ற சொற்களைச் சொல்லும் வரை இடவலமாகத் தலையாட்டியபடி இருந்தான்.
’என்ன சொன்னாள்?’ ரிச்சர்ட் சத்தமாகவும் சினத்துடனும் கேட்டார்.
தந்தையின் கவனச்சிதறலை அவரது பாணியிலேயே கண்டிக்கும் விதமாக அமர்ந்து அமைதியாகச் சொன்னான். ‘பிரிவு பற்றி!’
ஜோனும் மார்க்ரெட்டும் மீள வந்தார்கள். குழந்தை ரிச்சர்டின் கலங்கிய பார்வையில் உயரம் குறைந்தவளாகத் தெரிந்தாள். ராட்சசனைக் கண்ணால் பார்த்துவிட்டதும் அச்சம் ஒழிந்து மனக்கலக்கம் மறைந்து மனம் இளகியதைப் போலிருந்தாள். மேசைக்கிடையில் இருவர்களுக்கு இடையேயான தொலைவுகள் பன்மடங்கு பெருகின. ஜோனைப் பார்த்து கத்தினார். ‘உனக்குத் தெரியும்! எப்போதுமே உனக்குத் தெரியும்!’ ஆனால் அவரது மென்னை அழுத்திப் பிடித்ததில் நடந்துகொண்டிருப்பதை மிகத் தெளிவாகப் பொருள் கொள்ள முடியவில்லை. எங்கோ சேய்மையில் இருந்தபடி ஜான் நிதானமாகவும், பொருள் பொதிந்தும், அவர்கள் பேசி வைத்ததைச் சொல்லிக்கொண்டிருக்க அதைப் பிரிவின் பயிற்சியாகக் கண்டார். அவளும் தந்தையும் இது அவர்களுக்கு நன்மை பயக்கும் என்று நினைத்தனர். அவர்களுக்குச் சிந்திக்க நேரம் தேவை. அவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் விரும்பும் போதும் போதுமான அளவு ஒருவரையொருவர் மகிழ்வித்துக்கொள்வதில்லை.
தன் அன்னையின் குரலைப் படியெடுத்தவாறு – அதிலும் அவள் இளமையில் மிகவும் விட்டேற்றியாகப் பேசும் தொனியில் – சொன்னாள் ஜூடித். ‘இது மிகவும் அற்பமான விசயம். ஒன்று நீங்கள் இருவரும் சேர்ந்து வாழுங்கள், இல்லாவிடில் மணமுறிவு செய்துகொள்ளுங்கள்.’
நில ஓட்டிலிருந்து எழுந்து வந்து பாறை மீது மோதிய அலையைப் போல பதற்றத்துடனும் கொந்தளிப்புடனும் ரிச்சர்ட் அழுதார். அது இன்னொரு பெரிய கொந்தளிக்கும் அலையால் மூடப்பட்டது. உள்ளொடுங்கு பண்பாளனாகிய ஜான் இப்போது மேசையில் சினந்து சினந்து பெருகினான். அநேகமாக, தனக்கு முன் தன் தங்கை இந்த விசயத்தை அறிந்துகொண்டது அவனுக்கு அளவுகடந்த சினமூட்டியது. ’ஏன் எங்களிடம் சொல்லவில்லை?’ என்று அவனிடமிருந்து வரச் சாத்தியமே இல்லை என்று தோன்றும் பேரொலியில் கேட்டான். ‘உங்கள் இருவருக்கும் ஒத்துப்போகவில்லை என்பதைச் சொல்லியிருக்க வேண்டும்.’
கண்ணீரையும் கடந்து சொற்களைக் கண்டடைய முடியாமல் ரிச்சர்ட் துணுக்குற்றார்.
‘நாங்கள் மிகவும் ஒத்துப் போயிருக்கிறோம். அதனால்தான் இந்தப் பிரச்சினை குறித்து எங்களுக்கே தெரியவில்லை.’ நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் நேசிக்கவில்லை என்பதுதான் அவர் சொல்லியிருக்க வேண்டிய மீதம். ஆனால் அதை அவரால் சொல்ல முடியவில்லை.
ஜோன் அவருக்காகத் தன் பாணியில் ‘நாங்கள் எப்போதும் – குறிப்பாக எங்கள் குழந்தைகளை – மிகவும் நேசிக்கிறோம்’ என்று சொல்லி முடித்தாள்.
ஜான் அதிகமாகத் தடுமாறவில்லை. ’எங்களைப் பற்றி உங்களுக்கு என்ன அக்கறை?’ என்று கத்தினான். ‘நாங்கள் உங்களைப் பொறுத்தவரை சின்னப் பிள்ளைகள் – பொருட்கள் அவ்வளவுதானே!’ சகோதரிகளுடைய சிரிப்பு அவனையும் சிரிக்கத் தூண்டியபோதும் அவன் பகடி செய்வதைப் போல அதை மடைமாற்றினான். ‘ஹா ஹா ஹா!’ ஜூடித்தின் வருகைக் கொண்டாட்டத்தில் பிள்ளைகள் அதிகமாக சாம்பெய்னைக் குடித்து போதை ஏறி இருந்ததை ரிச்சர்டும் ஜோனும் சடுதியில் உணர்ந்தனர். நாடக மேடையின் மையத்தை இழந்துவிடக்கூடாது என்ற கவனத்துடன் ஜூடித்திடமிருந்து சிகரெட்டை எடுத்தான். கீழ் உதட்டில் இருந்து தொங்கும்படி வாயில் பிடித்தபடி ஒரு கொள்ளைக் கூட்டத் தலைவனைப் போல முறைத்து பார்த்தான்.
ரிச்சர்ட் அவனை விளித்து ‘எங்களுடைய சிறிய பொருட்கள் அல்ல நீங்கள்’ என்றார். ‘எங்கள் வாழ்வின் அச்சாணியே நீங்கள்தான். ஆனால் இப்போது போதுமான அளவு வளர்ந்துவிட்டீர்கள்.’
சிறுவன் அப்போது தீக்குச்சியைக் கொளுத்தினான். அவன் புகைபிடித்து இதுவரை யாரும் பார்த்ததில்லை. நல்ல பையனாக இருப்பவன் என்பதே அவன் மீது அனைவரும் வைத்திருக்கும் பிம்பம். தீக்குச்சியைத் தன் சிகரெட்டில் பற்ற வைக்காமல் தன் அம்மாவின் முகத்தை மெல்ல மெல்ல நெருங்கினான். இறுதியில் அவள் அதை ஊதி அணைத்தாள். தீப்பெட்டியின் குச்சிகள் அனைத்தையும் ஒரு கீறலில் கொளுத்தி ஒரு சிறிய பந்தத்தையே உருவாக்கி அதைத் தன் அன்னையின் முகத்துக்கு நேரே பிடித்தான். தீப்பிழம்பு ரிச்சர்டின் விழிகளை அடையும் போது கண்ணீரில் நிறப்பிரிகை அடைந்து குழப்பமான ஒளியாகத் தெரிந்தது. அது எப்படி அணைந்தது என்பதை அவர் அறியவில்லை.
மார்க்ரேட் ‘நடிப்பதை நிறுத்துங்கள்’ என்று சொன்னதைக் கேட்டவர் சிகரெட்டை இரண்டாக ஒடித்து ஒரு பாதியை வாய்க்குள் போட்டு மென்று அதன் சக்கையை நா நுனியில் நீட்டித் தன் தங்கையிடம் காட்டும் ஜானைப் பார்த்தார்.
ஜோன் அவரிடம் பேசினாள். பல வழிகளில் ஒரு மலையைப் போன்று அவளுக்குப் பொருள்படும்படி பேசிப் புரியவைக்க முயன்றதுண்டு. ‘பல ஆண்டுகளாக இதைப் பற்றி பேசினேன்… நம் குழந்தைகள் நமக்கு உதவுவார்கள்… நானும் தந்தையும் சேர்ந்து…’ இதைக் கேட்டபடியே மகன் ஒரு திசுத்தாளில் தன் காய்பழத் துண்டங்களை எடுத்து அதை உருண்டையாக உருட்டி வாய்க்குள் போட்டான். மேசையில் இருப்பவர் யாரேனும் சிரிப்பார்களா என்று சுற்றிப் பார்த்தான். ஒரு சிரிப்பும் இல்லை. ஜூடித் ‘கொஞ்சமாவது முதிர்ச்சியோடிரு’ என்று மட்டும் சொன்னாள். அவள் வாயிலிருந்து பிளம் பழம் போலச் சுருளாகப் புகை வந்தது.
மூச்சு திணறவைக்கும் இந்த உணவு மேசையில் இருந்து எழுந்த ரிச்சர்ட் தன் மகனை வெளியே அழைத்துச் சென்றார். வீட்டிற்குள் மாலையிருள் கசியத் தொடங்கியிருந்தபோதும் வெளியே ஒளி நிறைந்திருந்தது. உச்சக் கோடையின் வீணான இன்னொளி. இருவரும் சிரிக்க, ஜான் கீரையைப் புதரில் துப்புவதைப் பார்த்தார். அவன் கைகளைப் பற்றினார். சதுரமான உட்கரங்கள் மென்மையாக இருந்தபோதும் ஆணுடையது என்று விளம்பின. தொடர்ந்து பற்றியபடி இருந்தார். இருவரும் புற்தரையில், டென்னிஸ் களத்தைத் தாண்டி ஓடினர். நிலச்சமனி மண்ணை நகர்த்தி அமைத்திருந்த தற்காலிக கரையில் டெய்சி மலர்கள் புள்ளிகளாக இருந்தன. அவர்கள் வழமையாகக் குடும்பத்தோடு பேஸ்பால் விளையாடும் சமநிலத்தினைக் கடந்து விரிந்திருந்த பசும்புல்வெளி சூரிய வெளிச்சத்தால் மிளிர்ந்து நின்றது. தோல் சவ்வில் ஒளி ஊடுருவதைப் போல இலைகளில் வடிகட்டப்பட்டு ஒழுகியது சூரியவொளி. ‘என்னை மன்னித்துவிடு, மன்னித்துவிடு’ என்று ரிச்சர்ட் குமைந்தார். ‘இங்கு செய்த அனைத்து வேலைகளிலும் எனக்கு உதவ முயன்றது நீ ஒருவன்தான்.’
சாம்பெய்னுக்கும் கண்ணீருக்கும் இடையில் கேவியபடி ஜான், ‘நீங்கள் பிரிவது மட்டுமில்லை. இந்தக் கொடிய ஆண்டே எனக்கு வலிதான். எனக்கு பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை, நண்பர்களும் அங்கு இல்லை. வரலாற்று ஆசிரியர் ஒரு பறக்காவெட்டி.’
தங்களது கண்ணீரால் ஏற்பட்ட நடுக்கம் குறைந்து ஒரு கதகதப்பை உணர்ந்தவர்களாய் ஒரு மேட்டின் ஓரத்தில் அமர்ந்தனர். அவர்கள் குரலில் ஒரு அமைதி குடிகொண்டிருந்தது. மகனின் வன்மையான ஆண்டைப் பற்றி உற்று கவனிக்கத் தொடங்கினார் ரிச்சர்ட். வீட்டுப் பாடங்களால் நிறைந்த வார நாட்கள், தாயும் தந்தையும் கீழ்தளத்தில் தமது பிரிவைப் பற்றி கடுமையாக உரையாடும்போது விளையாட்டு விமானங்களோடு அவன் கழித்த வார இறுதி நாட்கள் பற்றி எல்லாம் அறிந்தார். எத்தனை சுயநலம்! எத்தனை குருட்டுத்தனம்! ரிச்சர்ட் இப்படி யோசித்ததும் தனது எரிவிழிகளை உள்ளங்கைகளால் தேய்த்தார். அவர் தன் மகனிடம், ‘உன்னை வேறு பள்ளிக்கு மாற்றுவதைப் பற்றி பேசுவோம். இத்தனை துயருடன் வாழ்வது இச்சிறிய வாழ்வுக்கு உகந்ததல்ல.’
அவர்களால் என்ன சொல்லிக்கொள்ள முடியுமோ அதைச் சொல்லிவிட்டபோதும் அந்தத் தருணம் அப்படியே முடியக்கூடாது என்று இருவரும் விரும்பினர். தொடர்ந்து பள்ளிக்கூடத்தைப் பற்றியும், டென்னிஸ் தரையைப் பற்றியும், அது முதல் கோடையில் இருந்ததைப் போல மீண்டும் செம்மையாக உருமாறுமா என்றெல்லாம் பேசியபடி இருந்தனர். அதை ஆராய்ந்து பார்ப்பதற்காகச் சென்று சில இடங்களைத் தட்டிப் பார்த்தனர். இந்தத் தருணத்தைச் சற்றே வலுக்கட்டாயமாக நீட்டிக்கும் விதமாக ரிச்சர்ட் தன் மகனை அந்த இடமே அற்புதமாகத் துலங்கிக் காட்சிதரும் ஒரு புள்ளிக்கு அழைத்துச் சென்றார். நீல உலோகமென கிடக்கும் நதி, மரகதச் சேற்றுநிலம், மெல்லொளியில் மென்பட்டுத் துணியைப் போலச் சிதறிக் கிடக்கும் உள்வளைவுத் தீவுத்துண்டுகள், நெடுந்தொலைவில் வெண்ணுரைகளாக உடைந்து கிடக்கும் கடற்கரைப் பகுதிகள். ‘பார்! இவை எல்லாம் நிரந்தரமான அழகைச் சூடிக்கொண்டிருக்கின்றன. நாளை வந்தாலும் இவை இப்படியே எழில் கொஞ்சும்!’
‘எனக்குத் தெரியும்’ என்று ஜான் சொன்ன பதில் நிதானத்தை இழந்து தொனித்தது. அந்த இன்தருணம் முடிந்திருந்தது.
வீட்டில் மற்றவர்கள் ஒயின், சாம்பெய்ன் புட்டிகளைத் திறந்து நன்கு குடித்திருந்தனர். மூன்று பெண்களும் மேசையை விட்டு இன்னும் அகலாமல் அரட்டையடித்தனர். ஜோன் அமர்ந்திருந்த இடம் தலைமை இடமானது. அவள் திரும்பி அவனிடம் கண்ணீரற்ற தன் விழிகளைக் காட்டி ‘எல்லாம் சரியா?’ என்று வினவினாள்.
‘நாங்கள் நலமே’ என்று சிறு வெறுப்புடனும் பாரம் குறைந்தது போன்ற உணர்வுடனும் சொன்னார். அவர் இல்லாமலேயே விருந்து தொடர்ந்தது.
படுக்கையில் அவள் விவரித்தாள். ‘எனக்கு அழுகை வரவில்லை. ஏனென்றால் இளவேனில் முழுவதும் நான் அழுதுகொண்டே இருந்தேன். இது உண்மையில் நியாயமே இல்லை. இது உங்கள் திட்டம் என்றபோதும் நானே உங்களைத் துரத்தியடிப்பதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்.’
‘மன்னித்துவிடு’ என்றார். ‘என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. நிறுத்தவே விரும்பினேன் என்றபோதும் முடியவில்லை.’
‘இல்லை, நீங்கள் நிறுத்த விரும்பவில்லை. நீங்கள் அதை விரும்பவே செய்தீர்கள். நீங்கள் உங்கள் பாணியில் அறிவிப்பை வெளியிட்டீர்கள்.’
‘அதைச் சொல்லி முடித்துவிட வேண்டுமென நான் விரும்பியது உண்மையே.’ அவர் ஏற்றுக்கொண்டார். ‘கடவுளே.. இந்தப் பிள்ளைகள் அற்புதமானவர்கள். இனிமையும் துள்ளலும் நிறைந்தவர்கள்.’ வீட்டிற்குத் திரும்பி வந்த ஜான் தன் அறையில் ஒரு மாதிரி விமானத்தைப் பொருத்தி முடித்துவிட்டு அவர்களுக்குக் கேட்கும்படி, ‘நான் நன்றாகத்தான் இருக்கிறேன். யாரும் கவலைப்படத் தேவையில்லை’ என்று கத்திச் சொன்னான்.
’அது மட்டுமில்லை’ தன் இளகிய நிலையில் பேச்சைத் தொடர்ந்தார் ரிச்சர்ட். ‘நாம் குறிப்பிட்ட காரணங்களை யாருமே மறுத்துப் பேசவில்லை. மூன்றாம் நபரைப் பற்றி யாருமே கேள்வி கேட்கவில்லை. ஜூடித்தும்கூட!’
’எத்தனை உணர்ச்சிகரமானது!’ ஜோன் சொன்னாள்.
அவளை அணைத்தார். ‘நீயும் அற்புதமானவள்தான். அனைவருக்கும் ஊக்கமும் துணையும் அளித்தவள். நன்றி.’ தான் இன்னும் இந்தப் பந்தத்தில் இருந்து ஒட்டின்றிப் பிரிந்துவிடவில்லை என்பதைக் குற்ற உணர்வுடன் அகத்தில் அறியலானார்.
‘உங்களுக்குத்தான் இன்னும் டிக்கியிடம் சொல்ல வேண்டி இருக்கிறதே!’ என்றாள். இந்தச் சொற்கள் அவரது கண்முன் மாபெரும் மலையை நிறுத்தி இருளை மூட்டியது. அதன் உறைபனிக் காற்று பாரமாகி நெஞ்சை அழுத்தியது. நான்கு குழந்தைகளில் மூத்த மகனே அவரது அகத்திற்கு நெருக்கமானவன். ’அந்த அறிவிப்புக்கு நான் எந்தவிதமான உதவியும் செய்யமாட்டேன்’ என்று ஜோன் குறிப்பிடத் தேவையில்லை.
‘நான் அறிவேன். நானே அந்த வேலையைச் செய்கிறேன். நீ உறங்கு.’
சில நிமிடங்களிலேயே அவளது சுவாச ஒலி குறைய அவள் உறக்கத்தின் மடியில் வீழ்ந்தாள். பதினொன்றே முக்கால் மணி. கச்சேரியில் இருந்து திரும்பி வரும் டிக்கியின் தொடர்வண்டி ஒன்றே காலுக்கு வந்துசேரும். ரிச்சர்ட் ஒரு மணிக்கு ஒலிப்பு மணியைப் பொருத்தினார். வாரக்கணக்கில் அவர் மோசமாகத் தூங்கியிருந்தார். இமைகளை மூடும்தோறும் கடந்த ஒரு மணி நேரமாக நடந்தவை யாவும் அவரை வாட்டின. ஜூடித் கூரையைப் பார்த்து ஒருவித விலக்கத்துடன் நீள்மூச்செறிந்தது, பீனுடைய ஊமைப் பார்வை, அவரும் ஜானும் அமர்ந்த நிலத்தில் கசிந்து பரவிய சூரியவொளி! அவர் முன்பிருந்த மலை அவரை நெருங்கியது, அவருக்குள் செறிந்தது. அது மிகப்பெரியதாக, எடைமிக்கதாக இருந்தது. தன் தொண்டையில் உணர்ந்த அடைப்பு காணாமல் போயிருந்தது. கொலையுண்டவள் போல அவரது மனைவி அருகே உறங்கினாள். அவரது உடலே உலையெனக் கொதித்தது, நெஞ்சுக்குள் அடர்த்தி மிகுந்து அழுத்தம் பெருகியது. அவர் மஞ்சத்தில் இருந்து எழுந்து சட்டை அணிந்தார். அவள் மெலிதாய் விழித்து திரும்பினாள். அவளிடம் ‘ஜோன் இதையெல்லாம் அழித்து பழைய நிலைக்குத் திரும்ப முடியுமெனில் நிச்சயம் அதைச் செய்வேன்’ என்றார்.
‘எங்கிருந்து தொடங்குவீர்கள்?’ எனக் கேட்டாள். எங்கிருந்தும் தொடங்க முடியாது. அவருக்கு அவள் எப்போதும் தைரியம் அளித்திருக்கிறாள். இருளில் காலுறை கிடைக்காததால் வெறும் சப்பாத்தை மட்டும் அணிந்தார். கீழ்தளத்தில் பிள்ளைகள் உறங்கியபோதும் அவர்களது சுவாசம் மெலிதாகக் கேட்டது. நடந்த கூத்தில் விளக்குகளை அணைக்காமலேயே தூங்கி இருந்தனர். அவர் சமையற்கட்டு விளக்கைத் தவிர பிற அனைத்தையும் அணைத்தார். மகிழுந்தை இயக்கினார். அது கிளம்பிவிடக்கூடாது என நம்பினார். சாலையில் நிலவொளி மட்டும் துணை இருந்தது. சாலையின் இரு மங்கிலும் இருந்த இலைப்பசுமையை ஊடுருவித் துணைவரும் நண்பனைப் போலிருந்தது. அத்தனை தனித்திருக்காத நகரத்தின் மையம் இந்நேரத்தில் விநோதமான ஒலிகளை எழுப்பியது. ஒரு வங்கியின் படிகட்டுகளில் டி-சட்டைகள் அணிந்த சிறுவர்களின் அணிக்கு ஒரு சீருடையணிந்த இளம் காவலர் உதவிக்கொண்டிருந்தார். ரயில்நிலையங்களைத் தாண்டி இருந்த பல மதுக்கூடங்களும் திறந்திருந்தன. வாடிக்கையாளர்கள் – பெரும்பாலும் இளைஞர்கள் – மெல்லிய ஒளி கசிந்த அறையின் உள்ளும் புறமும் கோடையின் தனித்துவத்தைச் சுவைத்தபடி சென்று வந்தனர். அவர்கள் கடந்தபோது மகிழுந்துகளில் இருந்து குரல்கள் ஒலித்தன. செறிவான உரையாடல் நடப்பதாகத் தோன்றியது. ரிச்சர்ட் வண்டியை நிறுத்தினார். அவரது களைப்பு தலையை இருக்கையில் தளர்வாக வைக்கத் தூண்டியது. சாலையில் பரபரப்பாக ஒளிரும் பல்வேறு விளக்குகளின் பளிச்சிடலில் இருந்து கண்களைப் பாதுகாப்பது போல பயணியர் இருக்கையில் தலை வைத்தார். திரைப்படங்களில் ஒரு கொலைகாரன் விழாவின் சலசலப்புக்கு மத்தியில் தன் பயங்கரத்தை அரங்கேற்றுவது போலிருந்தது. ஆனால் திரைப்படங்களில் செங்குத்தாக ஒருவன் தொங்கிக்கொண்டிருக்கும் சரிவைக் காட்ட மாட்டார்கள். அதிலிருந்து நீங்கள் ஒருபோதும் ஏறிவர முடியாது, கீழே விழத்தான் முடியும். பேருந்து இருக்கையின் தொகுப்பு நார்கள் அவரது கன்னத்தினால் சூடேறின. அவருக்கு ஒரு தொலை நினைவில் வீசும் வெனிலாவின் மணத்தை ரகசியமாய் அளித்தன.
ரயில் வண்டியின் சீழ்க்கையொலி அவரை நிமிரச் செய்தது. சரியான நேரத்திற்கு வந்துவிட்டது. அது தாமதமாக இருக்கக்கூடும் என்று அவர் சிந்தித்தார். உருளைத் தட்டிகள் இறங்கின. அது முன்னோக்கி வருவதை மணியொலி துள்ளலுடன் அறிவித்தது. பேருடல உலோகம் படுக்கை வசத்தில் குழலூதியபடி நிறுத்தத்தை நோக்கி வருகிறது. அரையுறக்கத்தில் இருந்த பதின்மர்கள் விழித்தெழுந்தனர். அதில் அவரது மகனும் ஒருவன். இந்த நள்ளிரவில் தன்னைச் சந்திக்க வந்திருக்கும் தந்தையைப் பார்த்து எந்த வியப்புணர்வையும் டிக்கி காட்டிக்கொள்ளவில்லை. இயல்பாகத் தன் இரு நண்பர்களோடு மகிழுந்துக்கு வந்தான். அவர்கள் இருவரும் இவனைவிட உயரமாக இருந்தனர். அவன் நன்றியைக் குறிப்புணர்த்தும் விதமாகத் தந்தைக்கு வணக்கம் சொல்லிவிட்டு உடனடியாகப் பயணிகள் இருக்கையில் தொப்பென அமர்ந்தான். நண்பர்கள் பின்னிருக்கைகளில் அமர்ந்தனர். ரிச்சர்டுக்கு, இவர்களை வீட்டில் கொண்டுசேர்க்கும் வரை சில நிமிடங்கள் தன் அறிவிப்பைச் சொல்ல வேண்டியதில்லை என்ற எண்ணம் ஆறுதல் அளித்தது.
‘கச்சேரி எப்படி இருந்தது?’ என்று அவர் கேட்டார்.
‘பயங்கரமாக இருந்தது’ என்று பின்னிருக்கையில் இருந்த ஒருவன் சொன்னான்.
‘கொடுமையாக’ என்றான் இன்னொருவன்.
‘பரவாயில்லை’ என்று டிக்கியிடமிருந்து பதில் வந்தது. அவன் இயல்பாகவே தீவிரமற்றவன். மிகவும் நடுநிலைமையுடன் இருக்கக்கூடியவன் என்பதாலேயே குழந்தைப் பருவத்தில் நடுநிலை அற்ற உலகின் தலைவலிகளை, வயிற்று வலிகளை, குமட்டல்களை அவன் பட்டறிய வேண்டி இருந்தது. இரண்டாவது நண்பனையும் அவனது வீட்டில் இறக்கிவிட்ட பின்பு உளறலைப் போலப் பேசினான். ‘அப்பா என் கண்கள் கொதிக்கிறது. என்னால் தாங்க முடியவில்லை. நீண்டு அடர்ந்து கிடந்த புல்வெளியை நாளெல்லாம் வெட்டி ஒருக்கியிருக்கிறேன்.’
‘நம்மிடம் இன்னும் அந்தக் கண்மருந்துத் துளிகள் இருக்கிறதா?’
‘சென்ற கோடையில் அது ஒரு நன்மையும் பயக்கவில்லை.’
‘இப்போது உதவலாம்.’ ரிச்சர்ட் வெறுமையாக இருந்த வீதியில் விரைவாக ஒரு யு – திருப்பம் அடித்தார். வீட்டிற்குச் சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார். இப்போது அந்த மலை அவரது தொண்டைக்கு வந்து அடைத்தது. ‘ரிச்சர்ட்’ என்று தன் கண்களைத் தேய்த்தபடி இருந்த மகனைப் பார்த்து பதற்றத்துடன் கத்தினார். ‘நான் உன் வாழ்க்கையை இலகுவாக்கும் பொருட்டு வரவில்லை. நானும் உன் அம்மாவும் உனக்காக ஒரு செய்தி வைத்திருக்கிறோம். இன்றைய தினங்களில் உன்னைச் சந்திப்பதே அருகிவிட்டது. ஒரு கெட்ட செய்தி.’
‘பரவாயில்லை.’ அந்த உத்தரவாதம் மென்மையாக இருந்தபோதும் புவி அழுத்தத்தால் பீறிடும் நீறுற்றின் முனை போல அந்தப் பதில் விருட்டென வெளிவந்தது.
மீண்டும் அழுகை வந்து கண்ணீரால் மூழ்கடிக்கப்படுவேனோ என்று ரிச்சர்ட் அஞ்சினார். ஆனால் மகனுடைய குரல் ஆண்மையைக் கோருவதாக நிலைத்து, உலர்ந்து ஒலித்தது. ‘இது கெட்ட செய்திதான் ஆனால் கடும் துயரச் செய்தியாக இருக்கத் தேவையில்லை. குறைந்தது உனக்கேனும். இதனால் உணர்ச்சி ரீதியாக குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்றபோதும் உன் வாழ்வில் இது எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது. உன் வேலையைத் தொடர்ந்து பார். செப்டம்பரில் பள்ளிக்கு மீளச் செல். நீ செய்யும் செயல்களைக் கண்டு நானும் உன் அம்மாவும் மிகுந்த பெருமை கொள்கிறோம். அது எப்போதும் மாறாமல் இருக்க விரும்புகிறோம்.’
’ம்.’ மகன் மென்மையாக, உட்சுவாசத்திற்கு முன்பாகத் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு சொன்னான். வீதியின் மூலைக்குத் திரும்பினார்கள். தீயில் எரியும் கோட்டையைப் போல அவர்கள் வழமையாகச் செல்லும் தேவாலயம் மிளிர்ந்தது. ரிச்சர்ட் மணமுடிக்க விழையும் பெண்மணியின் வீடு பசுமையான நிலத்தைத் தாண்டி இருந்தது. அவளது படுக்கையறை விளக்கு எரிந்தது.
‘நானும் உன் அம்மாவும் பிரிந்துவிட முடிவெடுத்துள்ளோம்’ என்றார். ‘கோடை முழுவதும், சட்டப்பூர்வமாகப் பிரியவில்லை, மணமுறிவுக்கு விண்ணப்பிக்கவும் இல்லை. அது எப்படி இருக்கும் என்று உணர்ந்து பார்க்க நினைக்கிறோம்? சில ஆண்டுகளாகவே நாங்கள் ஒருவரையொருவர் போதுமான அளவு மகிழ்வித்துக்கொள்வதில்லை. உனக்கு அப்படி எப்போதாவது தோன்றியிருக்கிறதா?’
‘இல்லை’ என்றான் மகன். அது நேர்மையான உணர்ச்சிவயப்படாத ஒரு பதில். வினாடி வினாப் போட்டியில் சரியா தவறா என்று சொல்வதைப் போல.
இந்த உண்மையைத் தற்காலிகமாக மகிழ்ந்து விபரங்களைக் கரடுமுரடாக அடுக்கத் தொடங்கினார் ரிச்சர்ட். அவரது தொகுப்பு வீடு நகரத்தின் மறுபக்கம் இருந்தது, அவரது போக்குவரத்து, விடுமுறை கால ஏற்பாடுகள், குழந்தைகளுக்கான பலன்கள், கோடையின் நகர்வும் வகைப்பாடுகளும். டிக்கி அனைத்தையும் உள்வாங்கியபடி ‘மற்றவர்களுக்குத் தெரியுமா?’ என்று வினவினான்.
’ஆம்.’
‘அவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள்?’
‘பெண் பிள்ளைகள் அமைதியாகவே எடுத்துக்கொண்டார்கள். ஜான் மட்டும் சற்று தடுமாறினான். கத்தினான், ஒரு சிகரெட்டைத் தின்றான், தன் கைக்குட்டையைப் பழ உருண்டையாக்கினான். தான் பள்ளிக்கூடத்தை எத்தனை வெறுக்கிறான் என்று சொன்னான்.’
‘அவன் சொன்னானா?’ என்று சிரித்தான்.
‘ஆம். எங்கள் விசயத்தைவிட பள்ளிக்கூடம்தான் அவனை மிகவும் கவலையடையச் செய்கிறது. அவன் வெடித்து கத்தியது அவனை மிகவும் இளக்கியிருக்கிறது. இப்போது பாரம் குறைந்த உணர்வு அவனுக்கு.’
‘அப்படியா செய்தான்?’ மீண்டும் மீண்டும் கேட்டது அவனது திகைப்பின் முதல் குறியாக இருந்தது.
‘ஆமாம் டிக்கி. நான் உன்னிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். உனது தொடர்வண்டி வருவதை எதிர்நோக்கிக் காத்திருந்த ஒரு மணி நேரம்தான் என் வாழ்விலேயே மோசமான நேரம். இதைக் கடுமையாக வெறுக்கிறேன். வெறுக்கிறேன். இதுவே என் தந்தையாக இருந்தால் இப்படிச் செய்வதைவிட இறப்பதே மேல் என்று நினைத்திருப்பார்.’ இதைச் சொன்ன உடன் மிகவும் இலகுவாக உணர்ந்தார். மலையின் பாரத்தை இப்போது தன் மகன் மீது ஏற்றிவைத்துவிட்டார். அவர்கள் வீட்டை அடைந்தனர். நிழலைப் போல விருட்டென மகிழுந்தில் இருந்து எழுந்த டிக்கி விளக்கெரியும் சமையற்கட்டைக் கடந்தான். ரிச்சர்ட் அவனைத் தொடர்ந்து சென்று ‘பால் வேண்டுமா? வேறேதும் வேண்டுமா?’ என்று கேட்டார்.
‘ஒன்றும் வேண்டாம். பரவாயில்லை.’
‘நாளைக்கு நீ விடுப்பு எடுத்துக்கொள்ளேன். நான் தொலைபேசியில் உன் அதிகாரியிடம் உனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிடட்டுமா?’
’இல்லை பரவாயில்லை.’ அந்தப் பதில் அவனது அறையின் கதவு நிலையில் இருந்து மங்கலாக ஒலித்தது. கதவு கடுமையாக அடித்துச் சாத்தப்படும் என்று ரிச்சர்ட் எதிர்பார்த்தார். ஆனால் கதவு மென்மையாக மூடப்பட்டது. அந்த மென்னொலி வலி ஏற்படுத்துவதாக இருந்தது.
ஜோன் உறக்கத்தின் முதல் படுகையில் ஆழ்ந்திருந்தாள். அவள் தெளிந்து எழுவதில் தாமதம் ஏற்பட்டது. ரிச்சர்ட் இரண்டாவது முறை, ‘நான் அவனிடம் சொல்லிவிட்டேன்’ என்று சொல்ல வேண்டி இருந்தது.
‘அவன் என்ன சொன்னான்?’
‘பெரிதாக ஒன்றுமில்லை. நீ சென்று அவனுக்கு நல்லிரவு சொல்லி வருகிறாயா? தயவுசெய்து?’
அவள் அறையில் இருந்து குளியல் மேலாடையை அணியாமலேயே வெளியேறினாள். அவர் இரவு உடைக்கு மாறி கூடத்தில் நடந்தார். டிக்கி ஏற்கெனவே மஞ்சத்தில் படுத்திருந்தான். அவனருகே ஜோன் அமர்ந்தாள். மகனது வானொலி மெல்லிய இசையை முனகியது. அவள் தன் அறைக்குச் செல்ல எழுந்தபோது விளக்கமுடியாத ஒரு ஒளி – மர்மமான நிலவொளி – வீசியது. அவள் உடலை இரவுடையின் ஊடாக அடிக்கோடிட்டுக் காட்டியது. அவள் அமர்ந்து குழிந்திருந்த சூடான இடத்தில் இப்போது ரிச்சர்ட் அமர்ந்தார். அவர் அவனிடம் ‘உனக்கு வானொலி இப்படி ஒலித்தாக வேண்டுமா?’ என்று கேட்டார்.
’எப்போதுமே இப்படித்தான்.’
‘இது உன்னை எழுப்பாதா? நானாக இருந்தால் எழுந்திடுவேன்.’
‘இல்லை.’
’உறக்கம் வருகிறதா?’
‘ஆம்.’
’நல்லது. நீ எழுந்து வேலைக்கு போக வேண்டும் என்று விரும்புகிறாயா? நேற்று கடிய இரவைச் சமாளித்திருக்கிறாய்!’
‘நான் போக வேண்டும். அவர்கள் என்னை எதிர்பார்த்திருப்பார்கள்.’
பள்ளியில் இந்தக் குளிர்காலத்தில்தான் முதன்முறையாக உறக்கமின்றியும் உயிர்வாழ முடியும் என்று கண்டுகொண்டான். சிசுவாக இருந்தபோது அசையாமல், தன்னைப் பார்த்துக்கொள்ளும் தாதிகளை அச்சுறுத்தும் வகையில் வியர்த்துக் கொட்டக் கொட்ட உறங்குவான். பதின்மத்தில் பிற குழந்தைகளைவிட முதல் ஆளாக உறங்கச் செல்வான். இப்போதும் தொலைத்தொடர்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தன் பழுப்பு நிற மயிரடைந்த கால்களை மடக்கிச் சுருக்கி உறங்கிடுவான். ‘எல்லாம் நன்மைக்கே! நல்ல பையன்! டிக்கி இதைக் கேள். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். உன்னை எவ்வளவு நேசித்தேன் என்பது இப்போது வரை எனக்கே தெரியாமல் இருந்தது. எது எப்படிப் போனாலும் நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன். உண்மையாக.’
ரிச்சர்ட் குனிந்து திரும்பியிருந்த மகனது முகத்தில் முத்தமிட நினைத்தபோது மகனோ பலமாகத் திரும்பி தன் ஈரக் கன்னங்களோடு அவரைக் கட்டியணைத்து அவரது உதடுகளில் பெண்ணுதடுகளில் இடுவதைப் போல மென்வேட்கையுடன் முத்தமிட்டான். தந்தையின் செவியில் அந்தரங்கமான, மதிநலமிக்க ஒற்றைச் சொல்லை முனகினான்: ‘ஏன்?’
ஏன். அச்சொல் காற்றைக் கிழித்து வரும் பேரொலியாக ஒலித்தது. கூரிய கத்திக் குத்தாக இருந்தது. வெறுமையை நோக்கி திறந்துவிடப்பட்ட சாளரமாக இருந்தது. காத்திருந்த வெள்ளை முகம் மறைந்து, வடிவமற்ற இருள் சூழ்ந்தது. ரிச்சர்ட் தன்னிலை மறந்தார்.
*
ஆங்கில மூலம்: Separating by John Updike, The Collected Stories, Published by Library of America, Sep.2013 Edition.