The White Ribbon: திரைக்கதை (பகுதி 6) – மைக்கேல் ஹனகே

0 comment
  1. முதல் பகுதி
  2. இரண்டாம் பகுதி
  3. மூன்றாம் பகுதி
  4. நான்காம் பகுதி
  5. ஐந்தாம் பகுதி

51. உள்ளே / பகல்: மருத்துவரின் இல்லம்.

மருத்துவர் தன் இருக்கையில் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே பார்வையாளரது இருக்கையில் செவிலி அமர்ந்திருக்கிறாள். அவருக்குக் கர மைதுனம் செய்ய முயல்கிறாள். இப்போதும் இருவரும் முழு உடையணிந்த நிலையில் இருக்கின்றனர். தன் உடைக்கு மேல் வெண்ணிறப் புறச்சட்டையையும் மருத்துவர் அணிந்திருக்கிறார். அவள் செய்யும் வேலையைச் சற்று நேரம் உற்று கவனித்த பிறகு வெடுக்கென்று சொல்கிறார்.

மருத்துவர்

இதைச் செய்வதை நிறுத்தினால் நன்றாக இருக்கும் இல்லையா!

(அவள் முகத்தில் அறைந்ததைப் போல உணர்கிறாள். செய்வதறியாத திகைப்பு அவளிடம்.) 

மருத்துவர்

ஏன் இத்தனை பாடு படுகிறாய்? என்னைத் திகைத்துப் பார்க்கிறாய்? உனக்குத் திறமை இல்லை என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. பொருள் இல்லை. என்னால் இனிமேல் உன்னுடன் செய்ய முடியாது என்பதே இதில் தெரிந்துகொள்ள வேண்டியது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் உன்னைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது.

(அவர் எழுந்து தன் கால்சராயில் பொத்தான் இடுகிறார். அவளுக்கு உலகமே சுக்குநூறாக உடைந்தது போலிருக்கிறது.)

உன் வேலையைச் சீக்கிரம் முடித்துக்கொள்கிறாயா? என்னால் இரவெல்லாம் இங்கேயே இருக்க முடியாது.

(தலையில் இடி விழுந்தவளைப் போல குனிந்த தோரணையில் செவிலி தொடர்ந்து அமர்ந்திருக்கிறாள்.)

செவிலி

(அமைதியான குரலில்)

நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்?

மருத்துவர்

(எரிச்சலுடன்)

அட கடவுளே! நீ ஒன்றுமே செய்யவில்லை. நீ அசிங்கமாக இருக்கிறாய் அவ்வளவுதான். செயல்களில் குளறுபடிகள் செய்கிறாய். உன் தேகம் தொளதொளவென இருக்கிறது. உன் வாயில் நாற்றமடிக்கிறது. இவை போதாதா?

(அமைதி. சிறிய அறையின் இன்னொரு புறத்தில் இருந்த நோயாளிப் படுக்கையைச் சுட்டி இயல்பாகச் சொல்கிறார்.)

கொதிநீரால் படுக்கையின் மேற்பகுதியில் கிருமிநீக்கம் செய்ய வேண்டும்.

(அசையாமல் தொடர்ந்து அமர்ந்திருக்கிறாள். கூராய்வுப் படுக்கையை நோக்கி ஒரு இயந்திரகதியான பார்வையைச் செலுத்துகிறாள். அவர் அவளைப் பார்க்கிறார்.)

உலகின் அத்தனை பாரத்தையும் தன் தோளில் சுமப்பவளைப் போன்ற தோரணையில் அமர்ந்திருக்காதே. உனக்காவோ எனக்காகவோ பூமி சுழல்வதை நிறுத்திக்கொள்ளாது (விளக்குகிறார்.) எனக்கு இதை நிறுத்தவேண்டும் என்று தோன்றியது, அவ்வளவுதான். நானும் எவ்வளவோ முயன்று பார்த்தேன். ஆனால் அருவருப்பாக இருக்கிறது. உன்னோடு படுக்கும்போதெல்லாம் வேறொரு பெண்ணை – நன்றாக மணம் வீசும், இளமையான, தொய்வற்ற உடல்கொண்ட ஒருத்தியை – கற்பனை செய்துகொள்ளத் தீவிரமாக முயல்கிறேன். ஆயினும் என் கற்பனை வளத்தால் அதை வெற்றிகரமாக நிகழ்த்த முடியவில்லை. இறுதியில் அங்கு இருப்பது நீதான் என்று தெரிந்ததும் என்னால் தாங்க முடியாமல் போகிறது. என் மீது எனக்கே அருவருப்பு உண்டாகி குமட்டுகிறது. எனவே இதெல்லாம் எதற்கு?

செவிலி

பேசி முடித்தாயிற்றா?

மருத்துவர்

(அவமதிப்பு தொனியில்)

நான் பேசி முடித்து நெடுங்காலமாயிற்று.

(முகத்தைத் திருப்பிக்கொள்கிறார். செவிலியிடம் அசைவே இல்லை. நோயாளியின் நாற்காலியிலேயே இன்னும் அமர்ந்திருக்கிறாள். தலை சுற்றி வீழாமல் இருந்தபடியே நிதானமாகப் பேச அவளுக்கு நிறைய சக்தியைத் திரட்ட வேண்டியிருந்தது.)

செவிலி

இத்தனை கடுமையாகப் பேசுவதற்கு நீங்கள் பன்மடங்கு துன்பத்தில் இருக்க வேண்டும்.

மருத்துவர்

கடவுளே! மீண்டும் இந்தப் பேச்சா!?

செவிலி

நான் பார்ப்பதற்கு அவ்வளவு அழகில்லை என்பது எனக்கே தெரியும். என் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் என் வயிற்றில் உள்ள பிரச்சினையால் ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் முன்பு நாம் நெருக்கமாக இருந்தபோதெல்லாம் அது உங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. உங்கள் மனைவி உயிரோடு இருந்தபோதும் எனக்குக் குடல்புண் இருக்கத்தான் செய்தது.

மருத்துவர்

இந்தக் கொடூரமான விபரங்களை எல்லாம் விளக்கித்தான் ஆகவேண்டுமா? சரி உனக்கு உறுதிபடச் சொல்கிறேன். எனக்கு எப்போதுமே அது அருவருப்பைத்தான் தந்தது. ஆனாலும் எரிக்காவின் மரணத்தைத் தாள முடியாதிருந்தபோது யாருடனாவது என்னை இளக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் அதை ஏற்கத் தயங்கவில்லை. ஒரு மாடு கிடைத்திருந்தாலும் புணர்ந்திருப்பேன். விலைப் பெண்டிருக்காக இங்கிருந்து நெடுந்தூரம் சென்றாக வேண்டும். எனக்கு வயதாகி விட்டதால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அத்தனை தொலைவு சென்று வருவது ஆகாத காரியமாகப் பட்டது. எனவே உன்னுடைய தியாகப் புராணத்தை நிறுத்திவிட்டு, வெளியே கிளம்பு. ஆகப்போவதைக் கவனி.

(அமைதி.)

செவிலி

(தொடர்ந்து மெல்லிய குரலில்)

இது ஏன் உங்களுக்கு இப்போது தோன்றுகிறது?

மருத்துவர்

உன்னைப் பொறுத்தவரையில் எனக்கு இது எப்போது தோன்றியிருக்க வேண்டும் என்கிறாய்? மருத்துவமனையில் கிடந்தபோது நீ எத்தனை சலிப்பு தரக்கூடியவள் என்பதை நான் மறந்திருந்தேன். ஒருவன் கடும் வலியில் இருக்கும்போது உணர்ச்சிகரமாகச் சிந்திக்கிறான்.

(அமைதி.)

மருத்துவர்

(களைப்புற்றவராய்)

வெளியே போ. ஏன் வெளியே போகமாட்டேன் என்கிறாய்? உனக்குச் சுயமரியாதை என்பதே கிடையாதா?

செவிலி

(களைப்புற்ற குரலில்)

உங்களோடு இருக்கும்போது அதற்கெல்லாம் வாய்ப்பேது?

மருத்துவர்

உண்மைதான்.

செவிலி

நான் ஏதேனும் சிறுபிள்ளைத்தனமாகச் செய்துகொள்வேன் என்று உங்களுக்கு அச்சமேதும் இருக்கிறதா?

மருத்துவர்

(எரிச்சலுடன் சிரித்தபடி)

செய்துதான் பாரேன். குறைந்தது அப்படியேனும் என்னை வியக்க வை. ஆனால் கவனம். கடும் வலியும் உண்டாகக்கூடும்.

செவிலி

எனக்குப் புரிகிறது. நான் அபத்தமானவள். என்னை எதற்கும் நீங்கள் பொருட்படுத்தப் போவதில்லை.

மருத்துவர்

சரிதான்…

(அவள் அவரைப் பார்க்கிறாள்.)

செவிலி

நீங்கள் ஏன் என்னை வெறுக்கிறீர்கள்? உங்கள் பிள்ளைகளை வளர்க்க உதவியதற்காகவா? சிறுபிள்ளை என்றும் பாராமல் மகள் உறுப்பில் நீங்கள் விரலைவிட்டு ஆட்டியபோது ஒரு சொல்லும் சொல்லாமல் அமைதி காத்ததற்காகவா?

(மருத்துவர் அவளருகே சென்று அறைகிறார். அவள் முகத்தில் கண்ணீர் வழிய நெடும் அமைதி. சில நொடிகளுக்குப் பின் ‘அசைவற்று’ மீண்டும் பேசுகிறாள்.)

செவிலி

நீங்கள் உங்களையே ஏமாற்றிக்கொள்ள வழியமைத்துக் கொடுத்ததற்கா? எரிக்காவை மோசமாக நீங்கள் நடத்தியதை ஊரே அறிந்திருந்தபோதும் அவளைச் சிறப்பாகப் பார்த்துக்கொண்டதாக நீங்கள் புலம்பியதைச் செவி சாய்த்து கவனித்ததற்காகவா? காதலுக்குத் தகுதியே இல்லாதவன் என்று உங்களை நீங்களே கருதியிருந்ததை மீறியும் உங்களைக் காதலித்ததற்காகவா?

(மருத்துவர் இகழ்ச்சியான தொனியில் பெருமூச்சுவிடுகிறார்.)

மருத்துவர்

போதும் நிறுத்து. என்னைத் தனியாக விடு. எனக்கு வேலை இருக்கிறது.

(அவள் எழுந்து அவருக்கு வழிவிடுகிறாள். அவர் மேசைக்கு முன் அமர்ந்து வேலையைக் கவனிக்கிறார். அவள் அவரைப் பார்க்கிறாள்.)

செவிலி

என்னைத் துரத்திவிட்டு தனியாக வாழ உங்களால் முடியாது. உங்களை யார் சுத்தம் செய்வது? பிள்ளைகளை யார் பராமரிப்பது? சிரமமின்றி எப்படி மருத்துவத் தொழில் பார்ப்பது? நீங்கள் மனமாரப் பேசவில்லை. எத்தனை தூரம் சென்றால் இவள் தாங்குவாள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் அவ்வளவுதானே? ‘இவள் இதைத் தாங்குவாளா, இல்லை சாக்கடையில் முக்கி எடுக்கலாமா?’

(அமைதி. மருத்துவர் அவள் சொல்லைக் கேளாதவராய் வேலையைத் தொடர்கிறார். சற்று நேரம் அவரையே பார்த்திருந்துவிட்டு மென்குரலில் சொல்கிறாள்.)

நானும் களைத்திருக்கிறேன். எனக்கு இரண்டு மூளை வளராத குழந்தைகள். ஹேன்ஸும் நீங்களும். எனக்கு அதிக இம்சை தரும் குழந்தை நீங்கள்தான். 

(அவர் நிமிர்ந்து அவளைப் பார்த்து, சில நொடி மெளனத்திற்குப் பிறகு கத்துகிறார்.)

மருத்துவர்

கடவுளே! நீ ஏன் செத்துத் தொலைய மாட்டேன் என்கிறாய்?

52. வெளியே / பகல்: பண்ணை

குளிர்காலச் சூரியக் கதிர்கள் நிலத்தில் பரவுகின்றன. 

வீட்டிலிருந்து சவப்பெட்டியை ஏந்தி ஆட்கள் வெளியே வருகின்றனர். சிலர் முன்பே வெளியே காத்திருக்கின்றனர். அனைவரும் துக்க ஆடை அணிந்திருக்கின்றனர். சவச்சிவிகை ஏந்துவோர் முன்புறத்தில் ஏந்தியபடி நகர, பிறரும் தோள்தந்து நடக்கின்றனர். சவ ஊர்வலம் மெல்ல ஒருங்கு கொள்கிறது. வீட்டில் கூடியிருந்த பிறரும் ஊர்வலத்தில் இணைகின்றனர். அழுதபடி இருந்த செப்பை பவுல் தேற்றுகிறான். இறுதியாக லெனி வெளியே வருகிறாள். அவள் நமக்குத் தெளிவாகக் கேளாதபடி முதிய செவிலி ஒருத்தியைச் சற்று நேரத்திற்குத் தங்கள் வயலைப் பார்த்துக்கொள்ளுமாறு கோருகிறாள். அவள் தன் சகோதரிகளை அழைத்ததும் ஊர்வலம் நகர்கிறது.

சவ ஊர்வலம் தொடர்ந்து நகர்கிறது. வயலின் மூலைக்கு வந்து கிராமத்தை நோக்கித் திரும்பும் பாதையை அடைந்ததும் ஃபிரான்ஸ் அவர்களை நோக்கி வருகிறான். கிராமத்தாரிடமிருந்து முனகல்கள் வெளிப்படுகின்றன. அவர்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று புரியவில்லை. ஊர்வலம் மெதுவாக நகர்ந்து நிற்கிறது. ஃபிரான்ஸ் வந்துசேர்கிறான். சற்று நேரம் சவப்பெட்டிக்கு முன் அமைதியாக நின்றவன் தலை தாழ்த்துகிறான். அதன் பிறகு தன் சகோதர சகோதரிகளோடு இணைந்துகொள்கிறான். அவளும் லெனியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர். அவன் லெனியின் பக்கத்தில் நிற்கிறான். சவப்பெட்டியைத் தூக்குபவர்களிடம் அவன் சமிக்ஞை தெரிவித்த பிறகு, அது மெல்ல கிளம்பத் தொடங்குகிறது. இருப்பினும் முனகல்கள் தொடர்கின்றன. செப்பை அணைத்தபடி நடந்த பவுல், தன் அண்ணனை எதிர்பார்ப்புடன் பார்க்க, ஃபிரான்ஸ் அவன் கையை இறுகப் பற்றுகிறான். பவுல் நாணத்துடன் சிரிக்கிறான்; செப்பை இயல்பாகத் தூக்கிக்கொள்கிறான். இத்தனை இருண்மைக்கும் இடையே இந்த மக்களிடம் அவநம்பிக்கை இல்லை என்று தோன்றுகிறது.

53. வெளியே / பகல்: கிராமமும் சுற்றிச் சூழ்ந்திருக்கும் விரிநிலமும்

பனிபடர்ந்த நிலத்தின் பல்வேறு புகைப்படங்களின் தொகுப்பு. 

கதைசொல்லி

நல்ல காலநிலையுடன் ஆண்டு முடிவுக்கு வந்தது. பனிநிலங்கள் மீது மோதிய சூரியன் கண்களைக் கூசச் செய்தது. அமைதிக்காலத்தில் ஓராண்டிலிருந்து இன்னொரு ஆண்டுக்கு நகர்வது இதுவே கடைசி முறை என்று ஒருவராலும் முன்னறிவிக்க முடியவில்லை. அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டதைப் போல அந்த ஆண்டு ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது.

54. உள்ளே / நாள்: போதகரது இல்லம். வாழ்வறை.

நன்கு அணிசெய்யப்பட்ட கிறித்துமஸ் மரம். வெளியே பளீரென்ற சூரிய ஒளி. மேரியின் தலையிலிருந்தும் மார்ட்டினுடைய கையிலிருந்தும் வெள்ளை நாடாக்களைக் கழற்றுகிறார் போதகர். இந்தப் பவித்திரமான நிகழ்வைக் குடும்பத்தின் பிற அங்கத்தினர் பார்க்கின்ரனர். 

கதைசொல்லி

கிராமத்தில் குழப்பம் ஏற்படுத்திய பல விசித்திரமான நிகழ்வுகளையும் மீறி அனைவரும் கடவுளின் பிள்ளைகள், அனைவரது வாழ்வும் தன்னளவில் சிறந்தது என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்த குமுகத்தின் அங்கமாக அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதாக ஒவ்வொருவரும் எண்ணி வந்தோம்.

போதகர்

இனி இதன் தேவை உங்களுக்கு இல்லை என்ற தீர்மானத்துடன் இந்த நாடாவை உங்களிடமிருந்து அவிழ்க்கிறேன். மேரி, இந்த ஆண்டிலிருந்து நீ தேவாலயத்தின் முழுப் பங்குதாரராகக் கருதப்படுவாய். அப்பமாகவும் ஒயினாகவும் கிறித்துவின் உடலை நீ பெறுவாய். திருவிழவுக்காக அணியமாகும் காலம் இன்பமாகவும் வளமாகவும் நிறைகவே! மார்டின். நீ இந்த நொடியிலிருந்து இந்த வெள்ளை நாடாவில் இருந்து மட்டுமல்ல, இரவுகளில் உன் இளம் உடலைக் காப்பதற்காகக் கட்டிவைத்திருந்த கட்டுகளில் இருந்தும் உனக்கு விடுதலை. அறிவிலும் உடலிலும் தூய்மையைப் பேணியவாறு விழாக் களை பூண்டிருக்கும் இல்லத்திற்கு உன்னால் ஆன உதவிகளைச் செய்வாயாக. என் இனிய குழந்தைகளே உங்கள் மீது நன்னம்பிக்கை வைக்கிறேன். வளமும் நலமும் பொங்கும் புத்தாண்டு மலரட்டும்.

(பிள்ளைகளின் தலையை அவர் வருடுகிறார். குழந்தைகள் அவரது கையை முத்தமிடுகின்றனர். அன்னை தன் பிள்ளைகளை இதயப்பூர்வமாகத் தழுவுகிறாள்.)

55. வெளியே / பகல்: பண்ணை மாளிகை.

இளவேனிற்காலம். 

சீமாட்டி, சிஜி, இரட்டையர்களோடு நடந்து வரும் நாற்பது வயது மதிக்கத்தக்க தாதி ஆகியோர் மாளிகைக்கு முன்பாக வண்டியில் வந்திறங்குகிறார்கள்.

கதைசொல்லி

உயிர்த்தெழுகை பண்டிகை முடிந்து சில நாட்களில் – ஏப்ரல் கடைசி வாரத்தில் – சீமாட்டி குழந்தைகளுடன் திரும்பி வந்தாள். அவளுடன் புதிய தாதி ஒருத்தியும் வந்தாள். ஏவா எப்படியாவது இங்கு மீண்டும் வேலைக்கு வர வாய்ப்பிருக்கிறது என்ற ரகசிய நம்பிக்கை அப்போது முற்றாகத் தகர்ந்தது. சதைப்பற்றுடன் இருந்த அந்தத் தாதி இத்தாலியைப் பூர்வீகமாகக் கொண்டவள் என்றும் முதுவயதுடையவளாக இருந்தவள், பின்னால் பலரும் அறிந்தபடி, சீமாட்டி குளிர்காலத்தைக் கழித்த மத்தியத் தரைக்கடல் பகுதியில் இருந்து வந்திருந்தாள் என்பதையும் அறிய நேர்ந்தது.

(ஒரு குற்றேவல்காரி வீட்டிலிருந்து தேவையான பொருட்களுடன் வெளியே ஓடி வருகிறாள். சீமாட்டிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மூட்டைகள் இறக்கப்படுகின்றன. இத்தாலிய மொழியில் சில அறிவுரைகளைத் தாதி சொல்ல அங்கு சிறு குழப்பம் ஏற்படுகிறது. அதன் பிறகு தாதி சிஜியிடம் சொல்ல, அதை அவன் மொழிபெயர்த்து பணியாளர்களிடம் தெரிவிக்க அனைவரும் சிரிக்கின்றனர். அது மட்டுமின்றி சிறுவன் முற்றிலும் ஆளே மாறியிருக்கிறான். முன்பிருந்த தோலின் வெளிறிய நிறம் மாறி இப்போது கருத்திருக்கிறது. அவனது முடி சூரியனால் இன்னும் பளபளப்பாக்கப்பட்டிருக்கிறது. உயரமாக வளர்ந்திருந்தவன் வலுவாகவும் மகிழ்ச்சியுடனும் தோன்றுகிறான்.  சீமாட்டியும் குழப்பங்களில் இருந்து மீண்டவளாக மிகத் தெளிவுடன் காட்சியளிக்கிறாள். அவளும் சிஜியும் நேரே உள் நுழைய யத்தனிக்கும்போது மைதானத்தின் மறுபுறத்திலிருந்து ஒரு குரல் கேட்கிறது.)

ஃபெர்டினாண்டு

(குரல் மட்டும்)

சிஜி!

(சிஜி திரும்புகிறான். ஃபெர்டினாண்டு அவனைச் சாளரத்தில் இருந்து பார்ப்பதை சிஜியும் பார்க்கிறான். சிஜி பதிலுக்குக் கையசைக்கிறான்.)

சிஜி

ஓ! ஃபெர்டினாண்ட்!

ஃபெர்டினாண்டு

அங்கேயே இரு. நான் கீழே வருகிறேன்.

(சிஜி மேற்பார்வையாளரது இல்லத்திற்கு ஓட விரும்புகிறான்.)

சீமாட்டி

சிஜி இங்கேயே இரு. நீ பிறகு அவனைப் பார்த்துக்கொள்ளலாம்.

தாதி

(இத்தாலிய மொழியில்)

அவனை அனுப்புங்கள் அம்மா! இங்கு மீள வந்ததில் அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறான்.

சீமாட்டி

(உற்றுப் பார்த்துப் புன்னகைக்கிறாள்.)

சரி, நீ சென்று வா. நெடுநேரம் அங்கேயே இருக்கக் கூடாது.

(சிஜி விரைந்து செல்கிறான். சீமாட்டியும் தாதியும் ஒருவரையொருவர் ஒப்புதலளிக்கும் பார்வை பார்த்துக்கொள்கின்றனர். சீமாட்டி மெலிதாகச் சிரிக்கிறாள். இருவரும் கதவைத் திறந்து இல்லத்திற்குள் செல்கின்றனர். ஒருகணம் திறந்த கதவும் அதன் பின்னணியில் தெரியும் இருண்ட படிக்கட்டுகளையும் மட்டுமே காண்கிறோம். அதன் பிறகு சரளைப் பாதையில் நடக்கும் சீமானின் பாத ஒலிகளைக் கேட்கிறோம். பின்னர் சட்டகத்திற்குள் வரும் சீமான் வீட்டிற்குள் இருக்கும் இருண்ட படிக்கட்டுகளுக்குள் சென்று மறைகிறார். அதன்பின்னர் அவரது குரல் கேட்கிறது.)

சீமான்

பீட்ரிக்ஸ்? பீட்ரிக்ஸ்? எங்கே இருக்கிறாய்?

(சற்று நேரத்திற்குப் பிறகு தாதி வெளியே வருகிறாள்.)

தாதி

(இத்தாலிய மொழியில் அழைக்கிறாள்.)

சிஜி. உன் தந்தைக்கு வணக்கம் செய்ய வேண்டுமல்லவா?

(ஆனால் முற்றத்தின் மறுபுறத்தில் ஃபெர்டினாண்டிடம் தீவிரமாகக் கதையளந்துகொண்டிருக்கும் சிஜி அதற்குப் பதில் சொல்லவில்லை.)

56. உள்ளே / பகல்: பள்ளிக்கூடம்.

வகுப்பறைகள்.

குழந்தைகள் வெறித்தனமாக ஆட்டம் போடுகின்றனர். கூச்சலும் சண்டையுமாக இருக்கிறது. துடைப்பானும் சுண்ணக்கட்டியும் பறக்கின்றன. சிலர் தம் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேற அணியமாகின்றனர். வகுப்பு முடிந்த பிறகு நிகழும் கோலம் அங்கு உருவாகி இருந்தது. மேரி வகுப்பறை கதவருகே நிற்கிறாள். தன் வகுப்புத் தோழர்களை ஒரு கண் பார்க்கிறாள். கதவு வழியாகத் தாழ்வாரத்தில் யாரும் வருகிறார்களா என்றும் பார்க்கிறாள். அது வெறுமையாக இருக்கிறது. வகுப்புக்குள் வந்தாலும் கதவருகே -அப்போதுதான் யாரும் வந்தால் தெரிந்துகொள்ளலாம் என்பதற்காக – நிற்கிறாள். ஆசிரியர் வருவதை அறிந்து சொல்வதற்காக ஒரு கண்காணிப்பாளராக அங்கு அவள் நியமிக்கப்பட்டிருக்கிறாள் என்று தெரிகிறது. 

கூச்சல், சண்டை, சிரிப்பு தொடர்கிறது. சடுதியில் தன் தந்தையுடன் ஆசிரியர் வருவதை மேரி காண்கிறாள். அவர்கள் இருவரும் உரையாடியபடி வருகின்றனர். மேரி வகுப்புக்குள் விரைந்து ஓடி கூச்சலைக் குறைப்பதற்காகக் கதவை மூடிவிட்டு வகுப்புத் தோழர்களை நோக்கிக் கத்துகிறாள். 

மேரி

அமைதியாக இருங்கள். அவர் வருகிறார்!

(ஆனால் அங்கிருந்த அமளிக்கு இடையே மேரியின் குரல் மாணவர்களின் செவிகளை எட்டவில்லை. இரைச்சல் மெல்ல குறைகிறது. சிலர் தம் ஆட்டத்தை அடக்கிக்கொள்கின்றனர். யாரோ ஒரு சிறுவன் துடைப்பானை எடுத்து கரும்பலகையைத் துடைத்து அங்கு நிகழ்ந்த களேபரத்தின் தடயத்தை அழிக்கிறான். ஒரு சிறிய அணி மட்டும் அதைக் காதில் வாங்காமல் தொடர்ந்து ஓடிப்பிடித்து விளையாடுகிறது. மேரி அவர்களைப் பார்த்து முன்பைவிடச் சத்தமாகக் கத்துகிறாள்.

மேரி

அமைதி! கடவுளின் பெயரால் சொல்கிறேன். அமைதி!

(ஆனால் அதை மீறியும் ஓடிப்பிடித்தல் தொடர்ந்ததால் சிலர் மேரியைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்குகின்றனர். அவள் தன் அடிவயிற்றில் இருந்து பெருங்குரல் எழுப்பி கத்துகிறாள்.)

மேரி

அமைதி!!!

(அவள் கத்தவும் கதவு திறந்து போதகரும் ஆசிரியரும் உள்ளே நுழையவும் சரியாக இருக்கிறது. உடனடியாக முழு அறையும் மயான அமைதியடைகிறது. ஒரு சொல்லும் பேசாமல் போதகர் மேரியைக் காதைப் பிடித்து இழுத்து வகுப்பறை வரிசைகளைக் கடந்து பின்புறமாகத் தள்ளிச்சென்று சுவரைப் பார்த்து நிற்க வைக்கிறார். அருகே அடுப்பு இருக்கிறது. மாணவர்கள் சங்கடத்தில் அமைதியுடன் தவிக்கின்றனர். போதகர் மீண்டும் கரும்பலகை அருகே சென்று தன் கைப்பெட்டியை மேசையில் வைத்து நின்றதும் வகுப்பறையின் கூச்சல் குழப்பத்திற்குத் தானும் ஒருவிதத்தில் பொறுப்பு என்று கருதிய ஆசிரியர் பேசுகிறார்.)

பள்ளியாசிரியர்

இங்கு என்ன நடக்கிறது? ஏன் இன்னும் இங்கேயே இருக்கிறீர்கள்? இங்கு நல்லொழுக்க வகுப்பு இருக்கிறது என்பது தெரியாதா? வெளியே போங்கள்!

(குழந்தைகள் விரைந்து வெளியேறுகின்றனர். முதல் ஆளாக வெளியேற நழுவும் பிள்ளையிடம் ஆசிரியர் கேட்கிறார்.)

பள்ளியாசிரியர்

‘நன்றி ஐயா’ என்று சொல்வதில் ஏதும் பிரச்சினை இருக்கிறதா?

(உடனடியாக அனைத்து பிள்ளைகளும் ஒரே குரலில் கத்துகின்றனர்.)

குழந்தைகள்

நன்றி ஐயா! நன்றி போதகர் ஐயா!

(இறுதியாக பவுல், செனியா, சுவரைப் பார்த்தபடி திரும்பி நிற்கு மேரி உள்ளிட்ட எட்டு பேரைத் தவிர பிறர் அனைவரும் வகுப்பறையிலிருந்து நீங்கி இருந்தனர். பள்ளியாசிரியர் போதகரைத் திரும்பிப் பார்த்தார்.)

பள்ளியாசிரியர்

என்னை மன்னிக்க வேண்டும். இனி இதுபோல் நடக்காது ஐயா.

(இறுகின முகத்துடன் போதகர் தலையசைக்கிறார். கூரிய அமைதியுடன் அனைத்து இளைய பிள்ளைகளும் வெளியேறும் வரை காத்திருக்கிறார். போதகரிடமிருந்து வேறெந்த மறுவினையும் வரப்போவதில்லை என்பதைக் குறிப்பறிந்த பள்ளியாசிரியர் மெல்ல அவரை நோக்கிக் குனிந்து சொல்கிறார்.)

வருகிறேன். நன்றி போதகர் ஐயா!

போதகர்

நன்றி. சென்று வாருங்கள்.

(பள்ளியாசிரியர் வெளியேற போதகர் பிள்ளைகளைப் பார்த்து நல்லொழுக்க வகுப்பைத் தொடங்குகிறார்.)

போதகர்

பிரார்த்தனையைத் தொடங்குவோம்.

(கடவுள் வணக்கத்தை அனைவரும் ஒருமித்த குரலில் சொல்கின்றனர். அதன் பிறகு போதகர் சொல்கிறார்.)

உட்காருங்கள்.

(மாணாக்கர்கள் அமர்கின்றனர். மேரி சுவரைப் பார்த்தபடியே நிற்கிறாள். போதகரும் அமைதி காக்கிறார். சில கணங்களுக்குப் பிறகு பேச்சைத் தொடங்குகிறார்.)

இந்த நாள் எனக்கு மிக வருத்தமான நாள். இன்னும் சில நாட்களில் நாம் அனைவரும் ஒன்றாக விழாவைக் கொண்டாட இருக்கிறோம். பல மாதங்களாக இறைவனுடைய அருள் பெற்ற பொறுப்புமிக்க மனிதர்களாக உங்களை மாற்ற நான் முயன்று வருகிறேன். ஆனால் இன்று நான் காண நேர்ந்தது என்ன? மனிதனுக்குரிய மரியாதையோ ஒழுக்கமோ இல்லாத கத்தும் குரங்குக் கூட்டம்! ஏழு வயது பிள்ளைகளுடன் வகுப்பைப் பகிர்வதால் அதேயளவு குழந்தைத்தனமாக நடக்கிறீர்கள். ஆனால் என்னை வருத்தமடையச் செய்யும் இன்னொரு செய்தி யாதெனில் என் மகளே இந்த வருந்தத்தக்க வெறித்தனத்திற்குத் தலைமை தாங்கியதுதான். சென்ற ஆண்டு அவள் கூந்தலில் ஒரு வெள்ளை நாடாவை அணிவித்திருந்தேன். வெண்மை களங்கமற்ற மனத்தைக் குறிப்பது என்று நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அந்த நாடா மேரியைப் பாவச்செயல்கள், சுயநலம், அழுக்காறு, ஒழுங்கீனம், சோம்பல், பொய் போன்ற கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் நினைவூட்டாக இருக்க வேண்டும் என்று கட்டப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவள் திருந்துவாள் என்று நம்புமளவு வெள்ளந்தியாக இருந்திருக்கிறேன். ஆனால் இவளோ தனக்கு அந்த நாடாவினால் ஒரு பயனுமில்லை என்று பறைசாற்றும் அளவுக்கு வளர்ந்து முதிர்ந்துவிட்டதாகத் தோன்றுகிறது. ஒரு நல்ல கிறித்துவராக கிறித்துவ போதகரின் மகளாகத் தனக்கு உள்ள பொறுப்புணர்வை…

(அடுப்புக்கு அருகே இத்தனை நேரமும் நின்றபடி இருந்த மேரி தலைச்சுற்றித் தரையில் நொடித்து விழுகிறாள்.)

57. உள்ளே / இரவு: மருத்துவரின் இல்லம்: படிக்கட்டு.

கூடத்திலிருந்து மட்டுமே விளக்கொளி வருகிறது. ரூடோல்ஃப் இரவு உடையில் படியிலிருந்து இறங்கி வருகிறான்.

ரூடொல்ஃப்

(மென்மையாக)

செனி?

(கூடத்திற்குச் செல்கிறான். அது வெறுமையாக இருக்கிறது. ரூடோல்ஃபுக்குப் பதற்றமாகிறது. அழத் தொடங்குகிறான். இறுதியாக, படிகளில் ஏறி மீண்டும் தன் அறைக்குள் செல்கிறான். படியில் ஏறும்போது மருத்துவரின் ஆலோசனை அறையில் இருந்து ஒளி கசிவதைக் கவனிக்கிறான். மீண்டும் படிகளில் இறங்கிச் சென்று ஆலோசனை அறைக்கதவைத் திறக்கிறான். நல்ல ஒளியில் மருத்துவரும் செனியாவும் ஒருவரையொருவர் பார்த்த நிலையில் அமர்ந்திருக்கின்றனர். மருத்துவரின் முதுகு இவனுக்குத் தெரிகிறது. அதனால் நமக்குச் செனியாவின் முகமே முதலில் தெரிகிறது. அவள் பார்வையாளர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள். அவளது நாற்காலிக்கு எதிரே இவர் அமர்ந்திருக்கிறார். தன் கால்களால் அவளது கால்களைச் சுற்றிப் பிடித்த நிலையில் அமர்ந்திருக்கிறார். அவள் அழுவது தெரிகிறது.

ஒரு தெளிவற்ற சூழல் அங்கு நிலவுகிறது. என்ன நடந்திருக்கும் என்பதில் நமக்கு உறுதியில்லை.  கதவு திறந்த சத்தத்தால் துணுக்குற்ற செனியா ரூடோல்ஃபைக் காண்கிறாள்.)

செனியா

(துணுக்குறலுடனும் தன் கண்ணீர் கறை படிந்த முகத்துடனும்)

ரூடி!?

(மருத்துவர் சுழன்று திரும்பி தன் மகனைப் பார்த்துத் திகைக்கிறார். இருவரும் கையும் களவுமாகச் சிக்கியவர்களைப் போல முழிக்கின்றனர்.)

செனியா

இங்கே என்ன செய்கிறாய்? ஏன் படுக்கவில்லை?

(இதையெல்லாம் பார்த்து என்ன நினைப்பது என்று ரூடோல்ஃபுக்குத் தெரியவில்லை. ஆயினும் தன் நல்லியல்பினால் பதில் அளிக்கிறான்.)

ரூடோல்ஃப்

எனக்குத் தூக்கமே வரவில்லை.

செனியா

அதற்காக இப்படியா ஆவியைப் போல நடு வீட்டில் நடு இரவில் நடமாடுவது?

ரூடோல்ஃப்

நான் முழித்ததும் அருகே உன்னைக் காணவில்லை. 

(சிறு அமைதி. செனியா கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறாள்.)

செனியா

(சிரிக்க முயன்றவாறு)

அப்பா எனக்குக் காது குத்திவிட்டார்.

ரூடோல்ஃப்

வலித்ததா?

செனியா

கொஞ்சம்.

ரூடோல்ஃப்

அதனால்தான் அழுதாயா?

செனியா

(சிரிப்பை வரவழைத்து)

இனி அழமாட்டேன். 

மருத்துவர்

(நகையாக)

அழகு துன்பப்பட்டே ஆக வேண்டும். அப்படித்தான் சொல்கிறார்கள். குறைந்தது பெண்களுக்கேனும் அது உண்மை.

(அவர் எழுந்து முதுகைக் காட்டியபடியே நிலைப்பேழை அருகே செல்கிறார். அதில் ஏதோவொரு பொருளை வைக்கிறார். தன் சட்டையைச் சீராகத் தடவி விட்டு ரூடோல்ஃபின் அருகே வருகிறார்.)

மருத்துவர்

இப்போது மீண்டும் படுக்கைக்குச் செல். நீயும்தான் செனி.

செனியா

சரி.

(ரூடால்ஃப் தயக்கத்துடன் தன் அக்காளைக் குழப்பத்துடன் பார்க்க அவனுக்குச் செனியா விளக்கமளிக்கிறாள்.)

நான் நெடுங்காலமாக தோடு அணியவில்லை. அதனால் செவித்துளை மூடிக்கொண்டது.

(அவனிடம் காட்ட ஒரு செவியின் நுனியை இழுத்து நீட்டுகிறாள்.)

வெள்ளொளித் திருவிழாவுக்கு நாம் அனைவரும் மிக அழகாக இருக்க வேண்டுமில்லையா? எனக்குப் புதிய தோடுகள் கிடைக்கப் போகிறது. அம்மா கல் வைத்துப் போட்டிருந்தார்களே அது…

(ரூடால்ஃப் அவளை உற்றுப் பார்க்கிறான். அவள் உண்மை சொல்வதாக அவனுக்குத் தோன்றவில்லை.)

58. உள்ளே / பகல்: போதகரின் இல்லம்: படிப்பறை.

மேரி உள்ளே நுழைகிறாள். அவள் இரவு உடை அணிந்திருக்கிறாள். அவள் கூந்தல் ஈரமாகத் தலையோடு ஒட்டியிருக்கிறது. நோயுற்றவள் போலத் தோற்றமளிக்கிறாள். மெல்ல கதவை மூடுகிறாள். தந்தையின் மேசைக்குச் சென்று இழுப்பறைகளைத் திறந்து கடிதத் திறப்பானை எடுக்கிறாள். அதில் ஒரு முனை நெம்பி இருக்கிறது. அது சிறு கத்தியைப் போல இருக்கிறது. கடிதத் திறப்பானை எடுத்துக்கொண்டு, பறவைக் கூண்டுக்கு அருகே சென்றவள், அதைக் கீழே வைத்துவிட்டு அந்தச் சிறு பறவையை எடுக்கிறாள். பறவைக் கீச்சிட, அவள் மீண்டும் யாரும் வருகிறார்களா என்று கதவைப் பார்த்து உறுதிசெய்கிறாள்.

கதைசொல்லி

மேரிக்கு வலிப்பு வந்து மனநிலை நழுவி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்திய நிகழ்வு நடந்து சில நாட்களுக்குப் பிறகு அவளுக்குக் காய்ச்சல் தொடர்ந்தது. நோயாளியாக வலுவற்ற நிலையில் இருந்தாள்.

(தன் இடக்கையில் அந்தப் பறவையை எடுத்து, அதன் தலை மேல் நோக்கி இருக்கும்படி வைத்து, தன் வலதுகையில் கடிதத் திறப்பானை எடுத்தாள்.)

59. உள்ளே / பகல்: மேற்பார்வையாளரது இல்லம்.

மேற்பார்வையாளரின் மனைவி பள்ளியாசிரியரைக் கூடத்திற்கு அழைத்துச் செல்கிறாள். அவளது சட்டைக் கைகள் உயர்த்தி மடிந்திருந்தன. சமையல் மேலாடை அணிந்திருக்கிறாள். அவள் கேக் செய்துகொண்டிருப்பதால் கைவிரல்களில் மாவு ஒட்டியிருக்கவே தன் முழங்கையால் கதவைத் திறந்திருந்தாள். கதைசொல்லியின் குரல் நமக்குக் கேட்பதால் அவர்கள் என்ன பேசுகின்றனர் என்று தெளிவாகப் புரியவில்லை. இருப்பினும் அவர் தான் சந்திக்க வந்தவரைச் சந்திப்பதற்காகச் சற்று நேரம் காத்திருக்க வேண்டுமென்றும் தற்போது வேலை இருப்பதால் தன்னால் துணைக்கு அமர முடியாது என்றும் மேற்பார்வையாளரின் மனைவி தெரிவிப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

கதைசொல்லி

வெள்ளை ஞாயிறு பண்டிகைக்காக மீண்டும் ஒருமுறை குதிரை வண்டியைக் கோரி மேற்பார்வையாளரைப் பார்க்கலாம் என்று சென்றேன். திருமணப் பேச்சுக்குப் பிறகு ஒவ்வொரு வாரமும் ஏவா எனக்குக் கடிதமெழுதி வந்தாள். அவற்றின் வாயிலாக அவள் நகரத்தில் தனிமையில் உழல்கிறாள் என்று உணர்ந்துகொண்டேன். தன் கடிதங்களின் வரிகளுக்கிடையே தன் தந்தையின் தலையீட்டையும் மீறித் தன்னை வந்து பார்க்கும்படி அவள் இறைஞ்சுவதை என்னால் உணர முடிந்தது. அவளோடு சனிக்கிழமையைக் கழித்துவிட்டு ஞாயிறன்று போதகருடன் விருந்தினை ஒருங்கிணைப்பதற்காகத் திரும்பி வந்துவிட வேண்டுமெனத் திட்டமிட்டேன். மேற்பார்வையாளர் மரமறுப்பு ஆலைக்குச் சென்றிருந்தார். எந்த நேரத்திலும் திரும்பி வரக்கூடும். அவரது மனைவி வெள்ளை ஞாயிறுக்காகப் பலகாரம் செய்யும் பணியில் முனைப்புடன் இருந்ததால் அவருக்காக என்னைக் கூடத்தில் காத்திருக்கச் சொன்னாள்.

(மேற்பார்வையாளரின் மனைவி அறையை நீங்குகிறாள். அங்கு பள்ளியாசிரியர் சலிப்புடன் அமர்ந்திருக்கிறார். சற்று நேரத்திற்குப் பிறகு எழுந்து சாளரத்தை நோக்கிச் செல்கிறார். வெளியே பார்க்கிறார். முற்றம் வெறுமையாக இருக்கிறது. சடுதியில் அருகில் இருக்கும் அறையில் இருந்து ஒரு மெல்லிய பெண் குரல் கேட்கிறது. அதை உற்றுக் கவனித்தவர் மெல்ல விரிகதவருகே சென்று கண்ணாடிச் சாளரத்தின் ஊடாகப் பார்க்கிறார். அங்கு ஏனையருகே அமர்ந்தவாறு குழந்தையிடம் லீசல் பேசுவதைக் காண்கிறார். பள்ளியாசிரியர் கதவைத் திறக்கிறார். லீசல் அவரைக் காண்கிறாள். எழுந்து மரியாதையுடன் வணங்குகிறாள்.)

லீசல்

காலை வணக்கம் ஐயா.

பள்ளியாசிரியர்

வணக்கம். லீசல்…

(புன்னகைத்தபடியே தொட்டிலருகே சென்று உள்ளே எட்டிப் பார்க்கிறார் ஆசிரியர்.)

பள்ளியாசிரியர்

இவன் மிக அழகாக இருக்கிறான்.

லீசல்

ஆம். அழகன்.

பள்ளியாசிரியர்

உனக்கு இவனைப் பிடிக்குமா?

லீசல்

ஆம். மிகவும்.

பள்ளியாசிரியர்

சென்ற குளிர்காலத்தில் இவனுக்கு உடல் சுகமின்றிப் போனதாகக் கேள்விப்பட்டேன்.

லீசல்

ஆமாம். கடும் நோயுற்றிருந்தான். எப்படியோ கடவுளின் துணையுடன் மருத்துவர் இவனைக் காப்பாற்றினார்.

(நிறுத்தம். மேற்பார்வையாளர் வருகிறாரா என்பதை உறுதிசெய்வதற்காகப் பள்ளியாசிரியர் சாளரத்தின் வழியாகப் பார்க்கிறார்.)

பள்ளியாசிரியர்

நான் சென்று மீண்டும் மாலை திரும்பி வருவதுதான் சரியாக இருக்கும்.

லீசல்

இல்லை. அப்பா நிச்சயம் நான்கு மணிக்கு காஃபி அருந்த வருவார்.

(அவள் தாத்தாவின் கடிகாரத்தைப் பார்க்க அது நான்கடிக்க கால் மணி நேரத்தைச் சுட்டுகிறது. பள்ளியாசிரியர் ஒரு கணம் சிந்தித்துவிட்டு மீண்டும் கூடத்தில் சென்று அமர்கிறார்.)

பள்ளியாசிரியர்

சரி. அப்படியானால் நான் மீண்டும் பக்கத்தில் இருக்கும் அறையில் சென்று அமர்கிறேன்.

லீசல்

நான் ஏதேனும் எடுத்து வரட்டுமா? ஒரு கோப்பை காஃபி. அது நிச்சயம் இப்போது தயாராகி இருக்கும்.

பள்ளியாசிரியர்

(அவள் ஆர்வத்தைக் கண்டு புன்னகைத்தபடி)

வேண்டாம். வேண்டாம். கேட்டதற்கு நன்றி.

(அவர் கதவருகே நிற்கிறார்.)

நான் அங்கு சென்று அமர்ந்து காத்திருக்கிறேன்.

(தனக்குப் பின்னால் கதவை மூட நினைக்கிறார். சடுதியில் லீசல் பேசுகிறாள்.)

லீசல்

ஐயா!

பள்ளியாசிரியர்

என்னம்மா?

லீசல்

கனவுகள் நிஜத்தில் நடப்பது சாத்தியமா?

(எதிர்பாராத இந்தக் கேள்வியைக் கண்டு பள்ளியாசிரியர் புன்னகை செய்கிறார்.)

பள்ளியாசிரியர்

அது காரியத்தைப் பொறுத்தது. ஏன் கேட்கிறாய்?

லீசல்

(தீவிரத்துடன்)

எவ்வகை காரியம்?

பள்ளியாசிரியர்

(புன்னகையுடன்)

எந்த வகை காரியத்தைப் பொறுத்து? உங்கள் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று ஆண்டு விழாவில் பரிசு பெற நீ கனவு கண்டால் அதற்கேற்ப கடும் முயற்சி செய்து அதை உண்மையாக்கலாம்.

லீசல்

(மறுப்பது போல் மெதுவாகத் தன் தலையை ஆட்டியபடி)

இல்லை. நான் அதைக் குறிப்பிடவில்லை.

(அவள் மனத்தில் ஏதோ இருப்பதை உணர்ந்தவராய் பள்ளியாசிரியர் இப்போது நிதானமாகக் கேட்கிறார்.)

பள்ளியாசிரியர்

அப்படியெனில் நீ எதைக் குறிப்பிடுகிறாய்?

(அவரிடம் இதுபற்றி பேசுவது சரியா என்ற தயக்கத்துடன் அவரைப் பார்க்கிறாள். ஊக்கமளிப்பவர் போல அவர் தலையசைத்து அவளைச் சொல்லச் சொல்கிறார்.)

லீசல்

அதாவது உறங்கும்போது காணும் கனவு, நிஜமாகவே உறக்கத்தில் வருமில்லையா அந்தக் கனவு நிஜத்தில் பலிக்குமா?

பள்ளியாசிரியர்

(தீவிரத்துடன்)

ஏன்? நீ என்ன கனவு கண்டாய்?

(அவள் தலையைக் குனிகிறாள். ஒரு கணம் சிந்தித்துவிட்டு அவளருகே செல்கிறார் பள்ளியாசிரியர்.)

மறைக்காதே சொல். உன் மனத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்ன?

(அவள் தன் குனிந்த தலையை ஆட்டுகிறாள். சடுதியில் அழத் தொடங்குகிறாள்.)

லீசல்

(அழுதபடி)

எனக்கு எப்போதும் கெட்ட கனவுகள் வரும்.

பள்ளியாசிரியர்

(அன்பான குரலில்)

நீ என்ன கனவு கண்டாய் என்பதைச் சொல்.

(அவளது கேவல்களைக் கண்டு தன் கைக்குட்டையை அவளிடம் நீட்டுகிறார்.)

இதைப் பிடி. அமைதியாகு. என்ன சொல்ல வந்தாய் என்பதைத் தெளிவாகச் சொல்.

(கைக்குட்டையை வாங்கியவள் மூக்கைச் சிந்தி கண்ணீரைத் துடைக்கிறாள். தன் அழுகையை முற்றிலும் கட்டுக்குள் வைக்க முடியாதபோதும் அவள் நிதானமாக சுவாசிக்கத் தொடங்குகிறாள். ஆசிரியரிடம் கைக்குட்டையைத் திரும்பத் தருகிறாள்.)

லீசல்

நன்றி.

(பள்ளியாசிரியர் கைக்குட்டையைத் தள்ளி வைத்துவிட்டு மெல்லிய புன்னகையுடனும் உறுதியளிக்கும் சொற்களுடனும் அவளை அணுகுகிறார்.)

பள்ளியாசிரியர்

எல்லாம் சரி. இப்போது சொல்.

(லீசல் இருமுறை மூக்கை உறிஞ்சிவிட்டு எச்சிலை விழுங்கிவிட்டுப் பேசத் தொடங்குகிறாள்.) 

லீசல்

ஹேன்ஸி… ஒரு கனவு கண்டேன்… செவிலியின் மகன் ஹேன்ஸிக்கு…  

பள்ளியாசிரியர்

அவனைத் தெரியும். சொல். சொல்.

லீசல்

அவனுக்கு ஏதோ தீங்கான சம்பவம் நடக்கப் போகிறது. 

பள்ளியாசிரியர்

ஏதோ தீங்கு நடக்கப் போகிறதா? (லீசல் ஆர்வத்துடன் ஆமோதித்துத் தலையசைக்கிறாள்.) என்ன மாதிரி தீங்கு?

லீசல்

எனக்குத் தெரியவில்லை. சிஜிக்கு நடந்ததைப் போல. அதைவிட மோசமாக ஏதோவொன்று நடக்கப் போகிறது.

(அவள் மீண்டும் அழத் தொடங்குகிறாள்.)

அவன் மிகவும் இனிமையானவன். யாரையும் காயப்படுத்தாதவன்.

(வருத்தத்துடன் அவள் தோளைத் தழுவி ஆறுதல்படுத்துகிறார் ஆசிரியர்.)

பள்ளியாசிரியர்

சரி. சரி. அழாதே. அது வெறும் கனவுதான். அதை இத்தனை தீவிரமாக நீ எடுத்துக்கொள்ள வேண்டாம்.

லீசல்

(அழுதபடி)

அவனை அவர்கள் எப்போதும் கேலி செய்கின்றனர். அவன் எல்லாரையும் போல இல்லாமல் இருப்பதை ….

பள்ளியாசிரியர்

(அமைதியாக)

புரிகிறது. ஆனால் அவனை யாரும் துன்புறுத்த மாட்டார்கள். நீ அதை நிச்சயம் நம்பலாம்.

(லீசலால் அமைதியடைய முடியவில்லை.)

மீண்டும் கைக்குட்டை வேண்டுமா?

(அவள் வேண்டாமெனத் தலையசைக்கிறாள்.)

உன் கனவெல்லாம் உண்மையாகும் என்ற எண்ணம் உனக்கு எப்படித் தோன்றியது?

(அவள் தன் தலையைத் தொடர்ந்து ஆட்டியபடி அழுகிறாள். அவர் மீண்டும் கைக்குட்டையை எடுத்து அவளிடம் நீட்டுகிறார். அவள் அதை வாங்காததால் அவளை நிமிண்டுகிறார். அவள் குழப்பத்துடன் நிமிர்கிறாள். அவர் புன்னகையுடன் தலையசைத்தபடி கைக்குட்டையை நீட்டுகிறார். அவள் அதை வாங்கி மீண்டும் மூக்கைச் சிந்துகிறாள். மெல்ல அமைதியாகிறாள். அவளை அமைதியாக்கும் விதமாகத் தெளிவாகவும் அறிவுப்பூர்வமாகவும் சொல்கிறார்.)

கனவுகள் நிஜமாகாது. நீ சொன்ன வகை கனவுகள் நிச்சயம் நிஜத்தில் நடக்காது.

(அவர் சொன்னதை ஏற்காதவளாய் தன் தோளை உயர்த்தித் தாழ்த்துகிறாள். அவருக்கு முன் தலை குனிந்த நிலையில் கைக்குட்டையைப் பிடித்தபடி நிற்கிறாள். அவள் சில முறை சுவாசித்துவிட்டு ஒரு தீர்க்கமான பெரியவர் குரலில் சொல்கிறாள்.)

லீசல்

(தீவிரத் தொனியுடன்)

ஆனால் என் கனவுகள் சில நேரங்களில் நிஜமாகப் பலித்திருக்கின்றன.

பள்ளியாசிரியர்

என்ன சொல்ல வருகிறாய்?

(அமைதி.)

லீசல்

சென்ற குளிர்காலத்தில் புட்சல் (தொட்டில் குழந்தையைச் சுட்டுகிறாள்) நோய்ப்படும் முன்பு, என் தம்பி இவனைச் சாளரத்தைத் திறந்து கொட்டும் பனியில் வைப்பான் என்று கனவு கண்டேன். அப்படித்தான் இவன் சாவான் என்றும் நினைத்தேன். சாளரம் திறந்திருந்த ஒரு நாளில் இவனுக்குக் கடுமையாக நீர்க்கோவை பிடித்து கிட்டத்தட்ட இறக்கும் தறுவாய்க்குச் சென்று மீண்டான்.

(பள்ளியாசிரியர் செய்வதறியாது திகைத்துப் போகிறார். என்ன சொல்வதென்றே அவருக்குப் புரியவில்லை.)

பள்ளியாசிரியர்

என்ன சொல்கிறாய் நீ! நீ சொல்வது மூடத்தனம்.

(லீசல் மீண்டும் தலைகுனிகிறாள்.)

பள்ளியாசிரியர்

யாரோ ஒருவர் அன்று சாளரத்தைச் சரியாக மூடாமல் விட்டிருக்கலாம். உன் தம்பி அப்படிச் செய்வான் என்று உனக்கு எப்படித் தோன்றியது?

லீசல்

(எதிர்ப்புடன் அவரை நம்பாதவளைப் போல)

அவனுக்கு உண்டான பொறாமையினால்!

பள்ளியாசிரியர்

அப்படி நீ நம்பியதால்தான் உனக்குக் கனவாக வந்திருக்கிறது. அதற்கு எந்தப் பொருளும் இல்லை. தற்செயல் நிகழ்வுதான் அது.

லீசல்

(தலையைக் குனிந்தவாறு)

சரி.

(அவள் பார்வையைக் காண விரும்பியவராய் ஆசிரியர் குனிகிறார்.)

பள்ளியாசிரியர்

என்னைப் பார்.

(அவரைத் தயக்கத்துடனும் எதிர்ப்புடனும் அவள் பார்க்கிறாள்.)

பள்ளியாசிரியர்

இத்தகைய கதைகளை வேறு யாரிடமும் சொல்லாதே! இந்தக் கதையினால் எத்தனை பிரச்சினை உண்டாகும் என்பது உனக்குப் புரியவில்லை என்பது தெளிவு.

(அவள் மீண்டும் நிலம் நோக்குகிறாள்.)

உன் பெற்றோரிடம் இதை நீ சொல்லவில்லைதானே?

(இல்லை என்று தலையாட்டுகிறாள்.)

அப்படியானால் சரி. இதை மறந்துவிடு. நானும் மறந்துவிடுகிறேன். சத்தியமாக?

(அவள் பதில் சொல்லாததால் அவர் மீண்டும் கேட்கிறார்.)

சத்தியமாக?

(அவள் மிக நுண்ணிய அசைவால் ஆமோதிக்கிறாள்.)

நல்லது. இப்போது என்னுடைய கைக்குட்டையைத் தருகிறாயா?

(கையை அவளை நோக்கி நீட்டுகிறார். திகைப்புடன் அவள் தன் கையில் இருக்கும் கைக்குட்டையைப் பார்க்கிறாள். அதை முற்றிலும் மறந்துவிட்டவள் அவரிடம் தருகிறாள்.)

நன்றி.

(அவர் தன் கால்சராய்ப் பையில் கைக்குட்டையை வைக்கிறார்.)

இப்போது நம்மிருவரிடமும் ஒரு ரகசியம் உள்ளது. அது நமக்குள்ளேயே மட்டும் இருக்கும் என்று நீ சத்தியம் செய். புரிகிறதா?

அவள் தயக்கத்துடன் தலையாட்டுகிறாள். அவர் அவளது பார்வையைக் கோரி கவனிக்கிறார்.

லீசல்

(தயக்கத்துடன்)

சரி.

பள்ளியாசிரியர்

எல்லாம் சரி. நீ வருத்தப்படத் தேவையில்லை. ஹேன்ஸிக்கு ஒன்றும் ஆகாது. 

(சிரித்தபடி)

அவன் மீது யாருக்கும் பொறாமையே எழாது.

(தன்னைப் பரிகாசம் செய்கிறாரா என்ற ஐயத்துடன் அவரை ஓரக்கண்ணால் பார்க்கிறாள். அவரோ அவளைத் தீவிர பார்வை பார்த்து ஆமோதிக்கும் தலையசைப்பை எதிர்பார்த்து நிற்கிறார். அவள் சிறியதாகத் தலையசைத்து வைக்கிறாள். அது அவரை மகிழ்விக்க வேண்டி அசைத்ததா என்ற தெளிவில்லை.)

கனவுகள் பலிப்பதே இல்லை. அவை தேவதைக் கதைகளில் மட்டுமே நிகழும். அனைத்தையும் மறந்துவிடு.

(தலை குனிந்து நிற்பவளை அவர் உற்றுப் பார்க்கிறார். இறுதியாக ஒரு நகைச்சுவைத் துணுக்கைச் சொல்லி தீவிரத்தைக் குறைக்க முற்படுகிறார்.)

பண்டைய காலத்தில் வருங்காலத்தை முன்கணிக்க முயன்ற பெண் பிள்ளைகளை என்ன செய்வார்கள் தெரியுமா? வைக்கோல் போரில் கட்டி வைத்து சூனியக்காரிகள் என்று பட்டம் சூட்டி கொளுத்திவிடுவார்கள்.

(அவள் அவரை உருள் விழிகளால் நிமிர்ந்து பார்க்கிறாள்.)

60. உள்ளே / பகல்: போதகரின் இல்லம்: படிப்பறை.

போதகர் தன் படிப்பறைக்குள் நுழைய கதவைத் திறக்கிறார். தன் மேசைக்கு அருகே சென்று தன் கைப்பெட்டியைக் கீழே வைக்க எத்தனிக்கிறார். மேசையின் நடுவே சிறுபறவை இறகுகள் விரிந்த நிலையில் செத்துக் கிடப்பதைப் பார்க்கிறார். அதன் கழுத்தில் அவரது கடிதத் திறப்பான் குத்தி அதன் கூர்முனை அலகு வழியே வெளியே நீண்டிருக்கிறது.

-தொடரும்.