அரைப் பனை

2 comments

இடிவிழுந்து எரிந்துபோய்க் கன்னங்கரேலெனப் புல்லின் நுனியளவுகூடப் பச்சையமில்லாமல், நின்றமேனிக்கு இருந்த வேப்ப மரத்தின் பின்னால் இருந்து சுடலை நடந்து வந்தபோதுதான் முதன்முறையாக அவரைப் பார்த்தேன். சாம்பல் வண்ணத்திலிருந்து, தும்பையைத் துவைத்தெடுத்த மாதிரி வெள்ளைவேட்டி சட்டையணிந்து காட்சியாய்த் தோன்றிய அவருமே அந்தக் கரிதோய்ந்த மரத்தின் நிறத்திலேயே இருந்தார். பொன்னிமலைக் கரட்டின் உச்சியில் திரிகிற மேகப் பொதியை வெட்டி எடுத்து அவரது மூக்கிற்குக் கீழே மீசையாய் யாரோ வரைந்து விட்ட மாதிரி அத்தனை வெண்மையாய் இருந்தது. மூக்கின் துவாரங்களுக்கு உள்ளே இருந்து சொல்லிவைத்த மாதிரி இரண்டு தனித்தனி வெள்ளை முடிகள், கோரைப் பற்களைப் போல வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. வேண்டுமென்றேதான் அதை அப்படி விட்டிருப்பார் போல. மூக்கைச் சுற்றி வெள்ளை, நெற்றி நிறையக் குங்குமச் சிவப்பு நிறைந்த அந்தக் கரிய முகத்தின் கண்களில் இனம்புரியாத தகிப்பு இருப்பது முதல் பார்வையிலேயே நெஞ்சில் வந்து ஒட்டியது. கண்களை வெறித்துப் பார்ப்பதன் வழியாகவே, அவரால் அத்தனை பாவனைகளையும் காட்டி எதையும் சொல்லிவிட முடியும் எனத் தோன்றியது. ஒட்டுமொத்தமாய்க் கால்நடமாட்டம் படாத மலையின் உச்சியில் இருக்கும் சிலையின் உறைந்த முகத்தை ஒத்திருந்தது அவருடையது.

“மருந்துக்கும் வாயிலயும் நெஞ்சிலயும் நல்ல சொல்லே இல்லாத ஆத்மா. எந்நேரமும் மலையில இருக்கற அட்டைப் பூச்சிமாதிரி தன் வயித்த நெறைக்க மத்தவங்க ரத்தத்தை உறிஞ்சுக்கிட்டே இருப்பான். இவன் சாமியாடியாம். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரையாம். வெளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சம்னு பேராம். ஒருதடவை சாமியாடிக்கிட்டே கேக்கறான். அரைப் பனை மர ஒசரத்துக்கு நெய் தோசை படையலா வேணுமாம். ஏத்தத்தைப் பாருங்க. பசியில நாய்க்கு குண்டி சிறுத்துச்சுன்னா குனிஞ்சு காலுக்கு கீழ கெடக்குற எதையும் திங்குமாம்” என்றார் அப்போது என்னுடன் இருந்த மயில்சாமி. அவருக்குச் சுடலை என்றாலே ஆகாது என்பதால், சுடலையைப் பற்றிய எதிர்மறையான கதைகளைக் காது வலிக்கிற அளவிற்குச் சொல்லிக்கொண்டே இருப்பார்.

இரண்டாம் தடவையாக காளியம்மன் குதிரைப் பந்திக்கு அருகில் சுடலை சாமியாடிக்கொண்டிருந்த போது நெருக்கத்தில் பார்த்தேன். கோவில் மணிச்சத்தத்தை மீறி ஒலித்தது அவரது வெண்கலக் குரல். “எட்டாத பரண் போடுவீயா எனக்கு. எட்டு அடுக்கா போடணும் பரணை. ஒரு பரணுல கோட்டை புழுங்கல் அரிசிச் சோறு வைப்பீயா? ஒரு பரணில சூலி ஆடும், ஒரு பரணில சூலி எருமையும் ஒரு பரணில சூலி பன்னிக் கறியும் ஒரு பரணில நெய்தோசையும் வைப்பீயா. சொல்லு, சொல்லு” என விபூதியை எடுத்து ஒருத்தரின் நெற்றியில் வைத்து அழுத்திப் பிடித்தவாறு உறுமிக்கொண்டிருந்தார். பலமாக ஒலித்த உடுக்கைச் சத்தத்தின் இடையில் சுற்றிச் சுழற்றுகையில் அவருடைய பார்வை ஒருதரம் என்னையும் உற்றுப் பார்த்துவிட்டு விலகியது. அதிலொரு காரமான குறுகுறுப்பு இருந்ததை உணர்ந்தேன்.

அவர் ஊருக்குள் தன்னை மாயாண்டி சுடலை என அறிவித்து இருந்தார். காளியம்மன் கோவில் கைங்கரியங்களையும் சொத்துகளையும் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லி கைலாயத்தில் இருந்து சிவன் இதற்கெனவே இவரைப் பிள்ளையாகப் பெற்று இப்பூலோகத்திற்குச் சுடலையாக அனுப்பி வைத்ததாகத் தனக்கென ஒரு தலவரலாறு வைத்திருந்தார். பழனி பெரிய கோவிலுக்குப் போய்விட்டு வரும் பக்தர்களிடம் இந்தக் கதைகளைத் தனியாக எடுத்துச்சொல்கிற ஆட்களுக்கு முறைவைத்து அவர் டீ, பலகாரம் வாங்கித் தருவதாக மயில்சாமி சொல்வார். “பூராம் பொய்க் கதைங்க. இந்த ஊர்க்காரந்தான். ரெம்ப நாள் எஸ்டேட்ல வேலை பார்த்ததா சொன்னான். அங்க இருந்து இறங்கி வந்த பெறகு ஒருவேலை குனிஞ்சு நிமிந்து செஞ்சு நான் பார்த்ததில்லை. எந்நேரமும் சீட்டு வெளையாடுவான். முருகன் கோவிலுக்குப் பக்கத்தில ஒரு லாட்ஜ் ஓனர் இவனை சீட்டு வெளையாட கூப்டு போவாரு. அவரும் ஆமையை வீட்டுக்குள்ள தூக்கி வைச்ச கதையா கை கால் வெளங்காம வீட்டுக்குள்ளயே முடங்கிட்டாரு. அவரு சம்சாரம் இந்த தெசைப் பக்கமே தலைவச்சு படுக்கக் கூடாதுன்னு இவனை செருப்பை கழட்டி அடிச்சு துரத்தி விட்டிருச்சு. அப்புறம் எங்க ஊர்க்கார பய ஒருத்தன் இருந்தான். அப்பாவியான ஆளு. அவம் மாமியார் ஆடு வாங்க கொடுத்த காசை இவனை நம்பி சீட்டாட்டத்தில தொலைச்சிட்டான். பொண்ணு எடுத்த வீட்டில அவமானம்னு வந்த ஜோருக்கு அந்தப் பய தூக்கில தொங்கிட்டான். இவம் காவு வாங்கின கதையெல்லாம் அந்தக் கரட்டில எழுதி வைக்கணும். அந்த மலை ஒசரத்துக்கு இருக்கு அவனோட பாவக்கணக்கு. சாமியாம் பெரிய சாமி” என்றார் மயில்சாமி மூச்சுவாங்க.

சுடலை நடந்துவந்தால், ஆளைப் பார்க்காமலே தூரத்திலிருந்தே எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். அவர் வளர்க்கிற மேகரை சாதிக்கெடா அவருக்குப் பின்னால் அவரை உரசிக்கொண்டு நடந்துவரும். முத்தின கெடா ஆடான அதன் மூத்திர வீச்சம் அவரது வருகையை முந்திக்கொண்டு ஊருக்கே உணர்த்தும். அதுவும் அவரும் கடந்துபோகிற வரை அப்பகுதியை வீச்சம் போர்த்தி இருக்கும். காளியம்மன் கோவிலுக்கு அந்தக் கெடாவை நேர்ந்து விட்டிருக்கிறாராம் சுடலை. தாடி வழியாக எச்சில் வழிய நின்றுகொண்டிருக்கும் அந்த ஆட்டின் வயது யாருக்குமே தெரிந்திருக்க நியாயமில்லை. வயது முதிர்ந்த மூத்தோனைப் போல, அவரோடு டீக்கடை வாசலில் நின்றிருக்கும். அந்த ஆடு யாரையும் மனிதனாக நினைத்து ஏறிட்டும் பார்ப்பதில்லை. யாராவது அடிக்க நினைத்தால் திரும்பி நின்று பாய்வதைப் போல ஒரு பாவ்லா காட்டும், அதற்கே மிரண்டு ஓடிவிடும் ஜனம்.

சுடலையைப் போலவே அந்த ஆட்டின் பிறப்பு நோக்கத்திற்கும் கதை இருந்தது. “அந்த ஆட்டை வாங்கி வந்த அன்னைக்கு கோவில் வாசல்ல நின்னு யாருக்கோ சாபம் விட்டிருக்கான். அந்தச் சத்தம் கேட்டவுங்க சொன்னாங்க. அவங்க சாகற அன்னைக்குத்தான் அந்தக் கெடாவ வெட்டுவானாம். அவன் என்னைக்கு வெட்டாறான்? யாரு அன்னைக்கு சாகப் போறான்னு ஊரே வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கு. அந்த ஆடு செத்துத் தொலையணும்னு பார்க்கோம். கெரகத்தை அதுவும் செத்துத் தொலைய மாட்டேங்குது” என்றார் தேநீர்க் கடைக்காரர். இதுபோல ஊருக்குள் அவரைச் சுற்றியும் அந்த ஆட்டைச் சுற்றியும் பல கதைகள், எவ்விடத்திலும் பரவும் கோவைக் கொடியைப் போலப் பின்னிப் படர்ந்திருந்தன. ஒட்டுமொத்தமாகவே உள்ளூர்க்காரர்கள் அவரிடம் குறிகேட்டுப் போய் நிற்பதில்லை. சுடலையின் அடிமுடி அறியாத அசலூர்க்காரர்கள்தான் அவர் காலில் விழுந்து கிடப்பதாகப் புலம்பினார் தேநீர்க் கடைக்காரர்.

சுற்றுப்பட்டு ஊர்க்காரர்கள் சிலர் அவரைப் பற்றிய நேர்மறையான சித்திரத்தை வரைந்து காட்டினார்கள். “அவரு ரெம்பத் துடியானவர்ங்க. கத்தரிக்காய் தோட்டம் ஒன்னு அவரோட பண்ணையத்தில இருந்திருக்கு. அதில திருட வந்திருக்கான் ஒருத்தன். இவரு என்ன மந்திரம் போட்டு வச்சிருந்தாரோ? அவனோட கையி அப்படியே கத்தரிக்காயில ஒட்டிக்கிச்சாம். மலையை இழுத்த மாதிரிக்கு பலத்தை திரட்டி இழுத்துப் பார்த்திருக்கான். கருவேலம் பிசினு போட்ட மாதிரி கையி காயிலயே ஒட்டிக்கிச்சாம். இவரு வந்து அவனை நெஞ்சோட உதைச்சு தள்ளுனப்பதான் அவன் தூரப் போயி விழுந்திருக்கான். சாமி சாமின்னு அந்த தெசைக்கே ஒரு கும்பிடு போட்டுட்டு ஓடிட்டான். அந்த மாதிரி இவரு வளர்த்த ஆட்டில ஒரு குட்டியைத் தூக்கிட்டுப் போயிட்டானாம் ஒருத்தன். அன்னைக்கு நைட் முழுக்க சவரட்டனையா கறி தின்ன அவன் குடும்பமே வயித்துவலி தாங்காம மேமேன்னு ஆடு மாதிரி கத்திக்கிட்டே இருந்திருக்காங்க. அப்புறம் இவரு கால்ல வந்து விழுந்து மன்னிப்பு கேட்ட பெறகுதான் வலி நின்னிருக்கு” என்றார் மஞ்சநாயக்கன்பட்டியில் இருந்துவந்த பக்தர் ஒருத்தர். இம்மாதிரியான கதைகளைக் கேட்டபடி சுடலையை நெருங்கும் நாளுக்காகக் காத்திருந்தேன். பழுக்கக் காய்ச்சிய பால்ச் சுவை நாக்கில் நெடுநேரமாகத் தங்கியிருப்பதைப் போல அறியவேண்டுமென்கிற இயல்பான உந்துதல் எனக்குள் ஒட்டியிருந்தது. சுடலை சாமியாடுகிற நேரம் தவிர்த்து ஊரில் ஒரு சத்தமும் காட்டுவதில்லை, ஆனாலும் எதற்காக அந்த ஊர் அவரை இவ்வாறு எச்சிலைப் போலத் திரட்டிக்கொண்டு மூர்க்கமாக எதிர்த்தது என்கிற காரணத்தை அறியும் ஆவலிலும் இருந்தேன்.

சுடலை குறித்த கதைகளை ஒருவாறு, களத்தில் இரைந்து கிடக்கிற நிலக்கடலைகளை மூட்டையாக்குவதைப் போலத் தொகுத்துக்கொள்ளத் தொடங்கினேன். அந்தக் கதைகள் பலவற்றில் நிலக்கடலையை வேரோடு பிடுங்குகையில் ஒட்டியிருக்கிற செம்மண்ணில் பூமியின் இளஞ்சூடு மிச்சமிருப்பதைப் போல, ஒரு மர்மமும் ஒட்டியிருந்தது. சுடலையோடு பிறந்தவர்கள் மொத்தம் ஏழு ஆண் மக்கள். இவர் நாலாவதாகப் பிறந்தவர். அவருடைய அப்பா சீனிச்சாமி அந்த ஊரில் பேர்பெற்ற முயல் வேட்டைக்காரர். மொசப்பிடிக்கிக் குடும்பம் என்றுதான் ஊரில் வர்ணிப்பார்கள். எந்நேரமும் உரித்து மஞ்சள் தடவப்பட்டு வீட்டு நிலைப்படிக்கு மேலே சற்று உயரத்தில் நான்கைந்து முயல்கள் தொங்கிக்கொண்டிருக்குமாம். “அவுங்க அப்பாரு அகப்பையில அள்ளி கறியை இலையில போடுவாரு. அப்படி வேலிக்கால்ல போற ஜீவன்களை அடிச்சு தின்னு வளர்ந்த ஒடம்பு அது. உழைக்கிறதுக்கு நோகத்தானே செய்யும்? ஆனா அவங்க அப்பாரு ரெம்ப நல்ல மனுஷன். முயலை தவிர மத்த எந்த உசுருக்கும் மனசறிஞ்சு தொயரம் தர மாட்டாரு” என்றார் சுடலையோடு சின்ன வயதில் பள்ளியில் படித்த சோலைராசு.

மீசை முளைக்கிற வயதில் அங்கேயிருந்து கிளம்பி எஸ்டேட் வேலைக்காகப் போயிருக்கிறார் சுடலை. எதற்காகத் திடீரெனக் கிளம்பிப் போனார், எத்தனை வருடங்கள் அவர் அங்கே இருந்தார் என யாருக்குமே கணக்குவழக்காய்த் தெரியவில்லை. இடையில் இரண்டுமூன்று தடவை மட்டும் அண்ணன்கள், தம்பிகள் கல்யாணத்திற்காக மலையிறங்கி வந்ததாகச் சொன்னார்கள். கடைசியாய் வந்த அவரை அவரது குடும்பம் அடித்து விரட்டியதாகவும் சொன்னார்கள். மலையேறின அவர் அதன் காரணமாகவோ என்னவோ திரும்பி இறங்க விரும்பவே இல்லை போல. அவருடைய அப்பா அம்மாவும் செத்த கேதத்திற்குக்கூட அவர் மலையிறங்கி வரவில்லை. அதன் காரணமாக உடன்பிறந்த மற்றவர்கள் அவரோடு பேச்சு வார்த்தையை நிறுத்திவிட்டதாகவும் சொன்னார்கள். மீசை அரும்பிப்போன அவர் அது வெளுத்துப் போனபிறகு ஊர்ப்பக்கம் தலையைக் காட்டி இருக்கிறார். “போனப்ப ஒரு சின்னச் செடியாத்தான் போனான். ஆனா திரும்பி வந்த பெறகு மெரட்டுற மாதிரி ஒரு காட்டு மரமா வந்து நின்னான். வந்த ஜோருக்கு தன்னோட செய்வினை வேலைகளை ஆரம்பிச்சிட்டான். அவங்க அண்ணன் தம்பிமாருக ஒவ்வொருத்தனா பொத்து பொத்துன்னு செத்து விழுந்ததை என் கண்ணால பார்த்தேன்” என்றார் மயில்சாமி. ”சும்மா சொல்லக்கூடாது” என்றதும், “நான் எதுக்கு நெஞ்சறிய பொய் பேசப் போறேன்? நான் வளக்குற மாடு லட்சுமி சத்தியமா நாஞ்சொல்றது எல்லாம் நெசம். இல்லாட்டி என் லட்சுமி செத்துட்டுப் போகட்டும்” என்றார் மயில்சாமி.

திரும்ப வந்ததில் இருந்து ஊர்க்காரர்கள் யாருடனும் அவர் பேச்சு வைத்துக்கொள்ளவே இல்லை. பழைய சிநேகிதக்காரர்கள் என்கிற அடிப்படையில் நண்பர்கள் சிலர் பேசப்போன போது, “போறீங்களா? இல்லாட்டி செய்வினை வச்சுவிடணுமா? குடும்பமா எல்லாரும் இடுப்பொடிஞ்சு கெடப்பீங்க” என்றிருக்கிறார். பயந்து விலகி, அதே பயத்துடன் அதற்கடுத்து ஏறிட்டுப் பார்த்துக்கொண்டும் அலைந்தனர். வீட்டுப் பொம்பளையாட்கள் இருந்தும் போக்கிடம் எனத் தனிக்குடும்பம் இல்லை சுடலைக்கு. காளியம்மன் குதிரை சிலைக் காலடியே கதியென்று கிடந்தவர், ஒருநாள் இரவில் எழுந்து நின்று ஊரே கேட்கும்படி ஊளையிட்டு, தன்னை மாயாண்டி சுடலை என அறிவித்துக்கொண்டார். “வயிறு எரியுதுடா. பசியடங்காம நான் மறுபடியும் மலையேற மாட்டேன்” என்றது ராவில் வந்து நிற்பவனின் குடுகுடுப்பைச் சத்தம் போல இருந்தது. அந்த அறிவிப்பு படிப்படியாகப் பக்கத்து ஊர்களுக்கும் பரவியது. வந்து நிற்கிற அசலூர்க்காரர்களிடம் பரவச பாவனை காட்டும் அவர், உள்ளூர்க்காரர்களுக்கு அளித்த பார்வைக்கு அர்த்தம்தான் என்ன? அவர் எதைப் பெற்றாரோ அதை இரண்டு மடங்காய்த் திருப்பித் தருகிறார் எனத் துணுக்குற எண்ணியும் கொண்டேன்.

அவரை நம்பி தட்சணை கொடுக்க ஆட்கள், கோவிலைச் சுற்றியிருக்கிற சிற்றூர் என்பதால் தயாராகவே இருந்தார்கள். பொதுவாகவே மலையடிவாரத்தில் எப்படியோ எல்லோரது வயிறும் நிறைந்துவிடுகிறது. அடிக்கடி சாமியார்களைப் பார்க்கப் போகிற பழக்கமுண்டு எனக்கு. வயிறு நிறைந்தால் கோழியிறகால் காதுகளைக் குடைந்தபடி அமர்ந்திருப்பார்கள் சிவனேயென. அப்படி இருப்பதற்காகத்தான் சோறு அவர்கள் இருக்கிற இடத்திற்கு வந்தடையவும் செய்கிறது என்றுகூட எனக்குத் தோன்றியிருக்கிறது. ஆனால் சுடலையிடம் சிவனேயென்பதே செல்லுபடியாகாது. அவர்தான் சிவன் பெற்று சுடலையில் போட்ட மாயாண்டியாயிற்றே? பசிபசியென அவரது கண்கள் வெறிபிடித்தாற் போல, மேய்ப்பன் இல்லாத வண்டிக் காளைகளைப் போல, ஆட்கூட்டத்தின் மத்தியில் எதையோ தேடி மேய்ந்துகொண்டிருப்பதாக உணர்ந்திருக்கிறேன். புல்லை வெறிகொண்டு மேயும் மாட்டின் நாக்கு சாம்பல் நிறத்தில் நீட்டிக்கொண்டிருக்கிற காட்சியும் அப்போது கண்முன்னே தோன்றியது.

வரும் பக்தர்கள் தரும் சன்மானம் அதிகரிப்பதை அவரை நெருங்கவே முடியாத ஊர்க்காரர்கள் தங்களது பார்வையின் வழியாகத் திரட்டிக்கொண்டார்கள். அந்த ஊரில் பெரிய பெரிய பண்ணாடிகளே குச்சியை ஊன்றி நடந்துகொண்டிருக்கும் போது ஒயிலாக டீ.வி.எஸ் 50 வண்டியில் போய் இறங்கினார் ஒருநாள். வண்டி வாகனம் அமையப் பெற்றதுமே சுடலை பக்கத்தில் தோட்டம் ஒன்றையும் குத்தகைக்குப் பிடித்தார். அமரானந்தா என்கிற சாமியின் உயிர்கூட அப்போது அங்கேதான் ஊசலாடிக்கொண்டிருந்தது. அவருடைய பக்தர் ஒருத்தர் வந்து நின்றபோது, அச்சமயம் சாமியோடு நெருக்கமான தொடர்பில் இருந்த சுடலை, “சாமிக்கு ஒரு பால் கொடுக்கிற மாடும் தொணைக் கன்னு ஒன்னும் வாங்கிக் கொடுறா” என்று சத்தமாக உறுமி இருக்கிறார். அதை அறிவிப்பாய் எடுத்துக்கொண்ட பக்தர் வாங்கிக்கொண்டு வந்த மாட்டையும் கன்றையும் ஊருக்கு மத்தியில் நடத்திக்கொண்டு போய்ப் பகுமானம் காட்டி இருக்கிறார்.

பெரியவர் ஆசியால் துயரம் தீர்ந்த பக்தர் ஒருத்தர் இவருக்கெனவே ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கி அதைப் பண்ணயம் செய்யுமாறு இவரிடமே ஒப்படைத்தார். விதைப்பு, அறுப்பு என எல்லாவற்றிற்கும் பணத்தைச் சென்னையில் இருந்து கொடுத்துவிடுவார். இவர் திருப்பி அனுப்புவதுதான் கணக்கு வழக்கு. சுடலை தன் விளைபொருட்களோடு போய் நின்றால், பக்கத்துச் சந்தை வியாபாரிகள் ஒரு வார்த்தை பேசாமல் முறையான பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். அங்கு சோழிகளைப் போலக் குலுங்கிச் சத்தம் எழுப்பும் வீணான பேச்சுகளுக்கு இடமேயில்லை. வருமானம் குறித்தெல்லாம் சென்னைக்காரர் காதிலேயே போட்டுக்கொள்ளாத அளவிற்குச் செல்வாக்கானவர். பண்ணாடி ஆனதும் சட்டெனப் பக்தர்களைச் சந்திப்பதை நிறுத்தத் தொடங்கினார். யார் போனாலும், “போறீயா செய்வினை வச்சுவிடவா?” என விரட்டத் தொடங்கினார். அவரைப் பார்த்தாலே பழைய பக்தர்கள்கூட, ஓணானை எடுத்து எதற்கு வேட்டிக்குள் விடவேண்டுமென விலகி ஓடினார்கள். யாரிடம் எதுவும் பேசாமல், வெள்ளையும் சொள்ளையுமாக ஊருக்குள் வண்டியை முறுக்கிச் சத்தம் எழுப்பியபடி மெதுவாக உருட்டிக்கொண்டே ஓட்டுவார். அவருக்குப் பின்னே அந்த ஆடு அசமந்தமாய் உடலை அசைத்து நடந்து போய்க்கொண்டிருக்கும். கொஞ்சம் முன்னே போய்விட்டால் வண்டியை நிறுத்தி சுடலை திரும்பிப் பார்ப்பார். முச்சந்தியில் நின்று ஆடு தும்மிய ஈரத்தைக் காற்று கடத்தும் அவருக்கு. அவர் கிடைத்த பணத்தையெல்லாம் காற்றைப் போல எங்கோ கரைத்தும் கொண்டிருந்தார் என்று தோன்றியது எனக்கு.

சோலைப் பைத்தியம் போல ஒரு பையன் ஊருக்குள் அலைவான். மண் தடத்தில் இரவுகளில் ஒளியெழுப்பியபடி நடந்து போகையில், திடீரென ஓரமிருக்கும் செடிப் புதர்களின் உள்ளே இருந்து எழுந்து நிற்பான். பயந்து போய் ஒளியை அவன் மீது பீய்ச்சி அடித்தால், முழு அம்மணமாகக் கைலியை நழுவக் கொடுத்து நிற்பான். நீர்ப்பூசணியை ஒத்த அவனது வயிறு பூரணமாகத் திரண்டிருக்கும். அவனை அந்தச் செடிப் புதர்களுக்கு நடுவே வெளிக்குப்போக அமர்ந்திருக்கும் நிலையிலேயே அதிகமும் பார்த்திருக்கிறேன். குனிந்து அமர்ந்து தன்னுடைய குவிந்திருக்கிற கழிவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருப்பான். உடனடியாக எழுந்து கைலியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு தேநீர்க் கடையில் வந்து நிற்பான். யாரிடமாவது கைநீட்டி வடையை வாங்கி தின்றபடியே மீண்டும் புதரை நோக்கி நடந்து வருவான்.

அவன் சுடலையின் தம்பிப் பையன் என்றார்கள் சிலர். ”அதெல்லாம் சும்மா வெளீல சொல்றது. அவந்தம்பி பொண்டாட்டிய இவன் பெண்டாண்டுட்டான். அதில பெறந்த புள்ளை அது. இவனுக்கு நல்ல பிள்ளை பெறக்குமா? அதான் சோலைப் பைத்தியமா அலையுது” என்றார் மயில்சாமி. ஊருக்குள் அந்தப் பையனின் பிறப்பை சுடலையைச் சூழ்ந்திருந்த மர்மத்தின்மீது ஏற்றினார்கள். ஒருமுறை சுடலை வண்டியில் அவரது வீட்டைக் கடக்கும்போது, அந்த அம்மா காறித் துப்பியதைத் தன் கண்ணால் பார்த்ததாக மயில்சாமி சொல்லிவிட்டு, “இவம் பாவத்தை அந்த சின்னப் பய சுமக்குறான்” என்றார் மெதுவாக. கண்களில் நீர்துளிர்த்து, இன்னொரு கதையையும் சொன்னார்.

மாரியம்மன் கோவில் திருவிழா கெடா வெட்டின் போது, பந்திக்குப் பக்கத்தில் வந்து நின்றிருக்கிறான் அந்தப் பையன். பந்தியில் அமர வைக்க அவனை அழைத்துப் போனபோது, தூரத்தில் நின்றபடியே சுடலை, “அடிச்சு வெரட்டுங்கடா அவனை. என் தெசைப் பக்கமே அவந்தலை தெரியக்கூடாது” எனச் சத்தம் போட்டிருக்கிறார். எதற்கு வம்பு என நினைத்த ஊர்க்காரர்கள் அவனை அதற்கடுத்து எந்தப் பந்தியிலும் அமர வைப்பதில்லை. தூரத்தில் இருந்து பந்தியைப் பார்த்துவிட்டு, வயிற்றைத் தடவியபடி புதர் நோக்கி அவன் வருகிற காட்சியையும் கண்டிருக்கிறேன்.

ஊரில் ஒரு திசைக்காற்று ஓய்ந்து இன்னொரு திசைக்காற்று அடிக்கத் தொடங்கிய காலத்தின் மதிய நேரம் ஒன்றில் படுத்திருந்த என்னை நோக்கி அது வந்தது. எதுவோ வந்து நிற்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பில் கண்களைத் திறந்து பார்த்தேன். எதிரே நின்ற சுடலை வேறொரு பாவனையான பார்வையுடன் என் முன்னே நின்றிருந்தார். “பாரின் சரக்கு ஒன்னு இருக்கு. சாமிக்கு ஒருத்தர் கொடுத்தாரு. மனசுக்கு தோனுற விலையைக் கொடுங்க” என்றார். உடனடியாக ஓடிப்போய் இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தபோது, பதிலே சொல்லாமல் வண்டியில் இருந்து அந்தப் பையை எடுத்துக் கொடுத்து விட்டுத் திரும்பிச் சுடலை போனபோது அந்த ஆடும் உடன்சேர்ந்து ஓடியது.

அதற்குப் பிறகு சுடலையுடன் நெருங்கிப் போகத் துணிந்தேன். அவருடைய தோட்டத்திற்கு நானாக வண்டியை எடுத்துக்கொண்டு போனேன். அவரது அருகில் போய் நின்றபோது, “இந்தக் கண்ணு இருக்குல்ல? அது எல்லாத்தையும் காட்டிக் குடுத்திடும். அதான் உங்களோட குறுகுறுப்பு பனங்கொட்டை மாதிரித் தனிச்சு தெரியுதே? கொன்னா பாவம் தின்னா தீரும். கடைசியா கங்கையில போயி முங்குனா எல்லாம் சரியாகிரும். எல்லா வயிறும் ஒரே மாதிரியா இருக்கு. மனசெல்லாம் வெறுப்பு மண்டிக் கிடக்கு. எனக்கென்ன வேத்தாள்களோட பகை? எதுக்கு வளர்ற பிள்ளை உங்க மேல அதை எறக்கி வைக்கணும்?” என்றார். அந்த நேரத்தில் சுடலையின் கண்களை உற்றுப் பார்த்தேன். அவர் வெறுப்பை விழிகளுக்குள் வைத்து அதக்கி உருட்டிக்கொண்டிருப்பதை நிச்சயமாக உணர்ந்தேன். வெறுப்பே ஒரு மூலாதாரச் சக்தியாய் மாறி எங்கள் இருவருக்கும் இடையில் உருள்வதைப் போல இருந்தது. அந்தச் சக்தியில் இருந்து தன்னைத் திரும்பத் திரும்பத் திரட்டிக்கொள்கிறார் என்று பட்டது எனக்கு. அந்த மூலாதாரம்தான் அவரது வாழ்விற்கான இருப்பும்கூட என்பதையும் உள்ளார உணர்ந்தேன். அது இல்லாவிட்டால் அவர் காற்றில்லாத வெறும் பையைப் போலத்தான். அவர் பலவிதமான பாவனைகளைத் தனக்குள் நிகழ்த்திப் பார்க்கிறார் போல. திடீரென காற்று நாங்கள் நின்றிருந்த வெளியில் குளிர்ச்சியாய் அடிக்கத் தொடங்கியது. இலகுவானதைப் போல பாவனையை மாற்றினார் சுடலை. அங்கே இருந்த கோவைக் கனியொன்றின் மீது சிறு தூறல் துளி ஒட்டியிருந்ததைப் பார்த்தேன்.

சுடலை எதுவும் பேசாமல் என்னோடு சற்றுநேரம் அமைதியாய் அமர்ந்திருந்தார். பிறகு நிதானமான குரலில், “வானம் மாதிரிதான் வயிறும். பெஞ்சும் கெடுக்கும். காஞ்சும் கெடுக்கும். ஆளாளுக்கு ஆயிரம் காரணம். அவனவன் வட்டில்ல அவனவன் முகம் தெரியும்” என்றார். முகத்தைச் சுழித்துக்காட்டி என்னைக் கிளம்பிப் போகுமாறு சைகை செய்துவிட்டு எழுந்து நடந்துபோனவர், அந்த ஆட்டுக்கிடாயின் காது மடலை விலக்கி, நகத்தால் அந்தப் பகுதியைக் கீறி, ஒட்டியிருக்கிற உண்ணிப் பூச்சிகளை எடுத்துக் கீழே போட்டு நசுக்கத் தொடங்கினார். நான் கிளம்புவதற்கு முன்பு அப்படி நசுக்கிப்போட்ட கொழுத்த உண்ணி ஒன்றின் ரத்தத்தைப் பார்த்தேன்.

சுடலையைச் சந்தித்துப் பேசியதை மயில்சாமி உள்ளிட்ட யாரிடமுமே சொல்லவில்லை. பின்னர் சந்தையில் சுடலையை ஒருதடவை ஏதேச்சையாகப் பார்த்தபோது என்னிடமிருந்து கண்களை விலக்கி நடந்துபோனார். என்னுடைய கண்களை விலக்காமல் அவரது முதுகையே நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது தெரிந்திருக்கும் அவருக்கு, நிச்சயமாய் அதை உணர்ந்தேன்.

தெற்குக் காற்று அடங்கி மேற்கில் இருந்து வேம்பின் தலையையே ஆட்டுகிற ஆடிக்காற்று அடிக்கத் தொடங்கியது. அந்தக் காலத்தில் காற்று வேகவேகமாகக் காட்சிகளை மாற்றுவதைப் போலத் தோன்றியது எனக்கு. அந்த ஊரில் வாழ்வின் காட்சிகள் மாறும் காலம் போலவும் அது இருந்தது. ஊரில் உள்ள தெரு நாய்களை யாரோ விஷம் வைத்துக் கொன்றனர். சந்துபொந்தெல்லாம் நாய்ச் சடலத்தின் வீச்சம் இருந்தபடியே இருந்தது. சுடலையின் ஆணி வேராக இருந்த அமரானந்தா சாமி செத்துப்போன கொஞ்ச நாளிலேயே அந்த மாட்டையும் கன்றையும் கொண்டுபோய் சுடலை விற்றுவிட்டதாகச் சொன்னார்கள். சென்னைக்காரர் என்ன நினைத்தாரோ அந்தத் தோட்டத்தை இன்னொருவருக்கு விற்றுவிட்டார். புதிதாக வந்த ஆட்களிடம் சுடலையின் உருட்டல் மிரட்டல் எடுபடவில்லை என்றார் சோலைச்சாமி. வந்த வேகத்திலேயே சுடலையைக் கணக்கு வழக்குகளை ஒப்படைக்கச் சொல்லிவிட்டார்களாம். தோட்டத்தில் இருந்து வெளியே வந்த சுடலை மறுபடியும் வண்டியை ஓட்டிக்கொண்டு குதிரைப் பந்தியில் போய் அமர்ந்தார். ஏற்கெனவே அவரிடம் தொண்டூழியனாக இருந்த மஞ்சநாயக்கன்பட்டிக்காரன் அவரைக் கண்டும் காணாதது மாதிரிப் போனதை உற்றுப் பார்த்தார். யோசனையுடன் எழுந்தவர், அதற்குப் பிறகு குதிரைச் சிலையின் காலடியில் போய் அமரவேயில்லை.

பெரும்பாலும் ஊர்க்காரர்கள் பார்வையில் படாதபடி அலையத் தொடங்கினார். அவர் எங்கே தூங்குகிறார் என்பதே பலருக்கும் தெரியாத ரகசியமாக இருந்தது. புதர்க்காடு ஓரங்களில் அந்த ஆட்டை அழைத்துக்கொண்டு அவர் நடந்து போனதைப் பார்த்ததாகச் சொன்னார்கள். அவருடைய வண்டி காணாமல் போயிருந்ததைக் கணக்கில் வைத்துக்கொண்டது ஊர். சுடலையைத் தேடிக்கொண்டு சில நேரங்களில் நானுமே வண்டியை எடுத்துக்கொண்டு ஓய்வான சமயங்களில் அலைவேன். அவர் நீண்ட நாட்களாகக் கண்ணில் தட்டுப்படவே இல்லை. ஒருநாள் நூறுநாள் வேலைத்திட்ட ஆளெடுக்கிற முகாமின் ஓரத்தில் அவர் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். ஊர்க்காரர்களுமே ஆச்சரியமாக அவர் அங்கு வந்துநின்ற காட்சியைப் பார்த்தார்கள். சற்று நேரம் அங்கேயே நின்றவர், என்ன நினைத்தாரோ திரும்பிப் பார்க்காமல், தெற்கே வண்டிமுனி கோவில் இருக்கிற மலையடிவாரத்தை நோக்கி நடந்து போனபோது, பின்னாலேயே தத்தித் தத்தித் துவண்டு நடைபோட்டது அந்த ஆடும்.

அவரை விரட்டிக்கொண்டு போகலாம் என எழுந்த எண்ணத்தை அடக்கினேன். அதற்கடுத்து கடைசிக்கு முந்தைய தடவை அவர் புதர் ஓரத்தில் நின்று எதையோ உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த காட்சியைப் பார்த்தேன். அக்காட்சியில் இருந்து அவர் வேகவேகமாக விலகி முதுகைக் காட்டிக்கொண்டு நடந்தார். பேருந்து ஒன்று வழிநடுவே நின்று சத்தம் எழுப்பியதால் என்னுடைய வண்டியை எடுத்துக்கொண்டு அவசரமாக அகன்றேன் அவ்விடத்திலிருந்து. அன்று இரவு மலையிறங்கிய பிறகு முதன்முறையாக அவரது வீட்டுப் படியேறி இருக்கிறார் சுடலை. அதை ஊர்க்காரர்கள் சிலர் பார்த்தும் இருக்கிறார்கள். நிலைவாசலில் நின்ற அவரது தம்பி சம்சாரம், தெருவில் இறங்கி வந்து, தலைமுடியை அவிழ்த்துப்போட்டு, மண்ணை வாரி அவரைத் தூற்றியதாக மயில்சாமி இரவில் இருவரும் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த போது சொன்னார். நிறைந்து கிடந்த நட்சத்திரக் கூட்டத்தினைப் பார்த்தபடி படுத்திருந்த நான் எப்போது தூங்கினேன் என எனக்கே தெரியவில்லை. அடித்துப்போட்ட மாதிரி அசதி அழுத்திய தூக்கம். அதற்கு நாள் நேரக் கணக்கெல்லாம் தெரியாது.

விடிந்தபோது என்னை மயில்சாமிதான் தட்டி எழுப்பினார். “ஊரைப் பிடிச்ச கெரகம் விலகிருச்சு” என்றார். எதையோ ஏற்கெனவே தீர்மானித்து எதிர்பார்த்திருந்த பாவனையில் எழுந்து அவரோடு போனேன். காளியம்மன் குதிரைச் சிலை பக்கத்தில் கூட்டமாக ஆட்கள் நின்றார்கள். நாலைந்து முதுகளைத் தள்ளி விலக்கி முன்னேறிப் போய் குதிரையின் காலடியில் கிடந்த அவரைப் பார்த்தேன். குற்றாலத் துண்டை உருமால் கட்டியிருந்த ஒருத்தர், மல்லாக்கத் திருப்பிப் போட்டார் அவ்வுடலை. மேகப் பொதியிலிருந்து விண்டு எடுக்கப்பட்ட அந்த மீசையை மழித்து, ரோக்கர் குடித்துச் செத்துக் கிடந்தார் சுடலை. வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த கண்களில் நானுணர்ந்த அந்த உணர்வு மிச்சமிருப்பதாக உணர்ந்தேன். பீடத்திற்குக் கீழே ஆடு கண்களை மூடிக் கழுத்தறுபட்டுச் செத்துக் கிடந்தது. என் உள்ளுணர்வு உந்த கூட்டத்தில் இருந்து விலகி நானிருந்த தோட்டத்திற்கு அருகில் இருந்த புதர்க்காட்டை நோக்கி ஓடினேன். பூரணத்தில் இருந்து விலகி நழுவிய சிறுதுளி ஒன்றை எதிர்பார்க்கிற மாதிரி மனம் ஒரு குவிமையத்தில் திரண்டது. சித்தம் கலங்க, சுடலை பேருருவாய் பின்னால் வந்து நின்று மட்டெனப் பிடதியில் அடித்த மாதிரி உணர்வு எழுந்தபோது நிமிர்ந்து கலங்களாய் அந்தக் காட்சியைப் பார்த்தேன்.

தூரத்தில் அந்தச் சோலைப் பைத்தியம் அமர்ந்திருந்தது. அதன் அருகே அரைப் பனை மர உயரத்திற்கு மலம் ஒரு கோட்டையைப் போல குவிந்திருந்திருந்தது. அதிலிருந்து ஒரு விள்ளலை எடுத்து வாயில் வைத்தான் அவன். முதுகிற்குப் பின்னே பழக்கப்பட்ட அந்த மூத்திர வீச்சம் என்னைப் போர்த்த நகர்ந்து வந்தது.

2 comments

suthan September 5, 2022 - 7:48 pm

படிக்க நல்லா இருந்து. ஆனால் ஒண்ணும் புரியல, எதையோ சொல்ல வர்றீங்க போல..

கோபாலகிருஷ்ணன் September 5, 2022 - 11:09 pm

நன்று. நல்ல எழுத்து நடை

Comments are closed.