சீர்காழி கோவிந்தராஜனும் கண்டஸாலாவும் சேர்ந்து பாடினால் ஒரு பாடல் என்ன மாதிரி பரவசத்தை நல்குமோ அப்படி ஒரு குரலாய் ஒலித்தார் ஷங்கர் மகாதேவன். அவர் குரலை 2000ல் ரிதம் படப் பாடலான தனியே தன்னந்தனியே பாடலின் போது கேட்டதற்கும் 1999 ஆம் ஆண்டு களஞ்சியம் இயக்கத்தில் வெளியான நிலவே முகம் காட்டு படத்தில் இடம்பெற்ற சிட்டு பறக்குது குத்தாலத்தில் பாடலின் போது கேட்டதற்கும் பல வித்தியாசங்கள். இளையராஜா அந்தப் பாடலுக்குத் தேர்ந்தெடுத்துக் குழைத்திருந்த இசைவார்ப்பு ஃப்யூஷன் வகைமையிலானது. ஒருமித்த தீர்மானத்தை எப்போதும் ரத்துசெய்துகொண்டே இருக்கவல்லதான ஃப்யூஷன் புதிரிசையை மிஞ்சி ஒரு குரல் ஒலிக்கும் போது பிறழ்பேதமாகிப் பாடலின் இனிமை கெடும். அதுவே புதிரிசைக்குக் கட்டுப்பட்டு அடங்கி ஒலித்ததென்றால் வரிகளும் இசையும் இரு துண்டுகளாக, குரலோ திருவிழாக் கூட்டத்தில் தொலைந்த குழந்தை போல் அல்லாடும்.
அப்படியானால் புதிரிசைப் பாடலைப் பாடுவதற்கான குரல் தேவை எத்தகையது? ஈடுகொடுத்து எப்போதும் இணை பிரியாமல் கூடவே வலம் வருகிற விசுவாசப் புரவி ஒன்றாய்த் திகழ வேண்டும். பாடலும் குரலும் ஒருமித்து நிகழ வேண்டும். அப்படியான குரல்களில் ஒன்றுதான் ஷங்கரின் குரல். அந்த வல்லமைக்கான உதாரணப் பாடல்தான் “சிட்டு பறக்குது குத்தாலத்தில்” பாடல். ஷங்கர் குரலோடு இயைந்து பாடியதில் சுஜாதாவின் மத்தாப்புக் குரலையும் புகழ்ந்தாக வேண்டும். இந்தப் பாடல் உள்ளும் புறமும் சாயம் போகாத சாஸ்வத கானமாய் இருபத்திச் சொச்ச வருடங்களைத் தாண்டியும் இனித்து ஒலித்து உற்சாகத் தெப்பமாய் வலம் வருகிறது.
ஷங்கர் மகாதேவன் குரல் ஒருவிதமான வெறுப்புக்கு அப்பால் நிலவுகிற பேரமைதி ஒன்றைப் பாடல்களில் உணர்த்தித் தருவதாக இருந்தது. ரிதம் படத்தில் தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன் என்ற பாடலைக் கேட்கும்போது கோபம் கலந்த கரவொலிகளைத்தான் தந்தேன் என நினைவு. “எல்லாம் சரி. இன்னும் கொஞ்சம் மென்மையாப் பாடலாமுங்களே” என்று மேடையேறிச் சொல்லிவிட்டு வரலாம் போன்றதொரு கனம். இன்னும் சொல்வதானால் துண்டுச் சீட்டொன்றில் மென்மையாகப் பாடவும் என்று இரண்டே சொற்களை எழுதிக் கைமாற்றி விடுகிற அனாமதேயக் கோபம் அது. அந்தப் பாடலின் ஸ்பெஷாலிட்டி என்று எல்லாவற்றுக்கும் அப்பால் இதனைச் சொல்வேன். மேற்படி உணர்தலை முற்றிலுமாகக் காலி செய்துவிட்டுத் தன்னைத் துரத்துகிறவனையே சரணடைவதற்காகத் திரும்பி ஓடுகிற பயங்கொண்ட குழந்தையின் விரைதல் போல அது நிகழ்ந்தது. கேட்கக் கேட்க அந்தப் பாடல் மிகவும் பிடித்தது. நான் அந்தப் பாடலில் முற்றிலுமாக உள்ளார்ந்தேன். என்னை எப்படியாவது அந்தப் பாடலுக்குள், இல்லை இல்லை, அந்தக் குரலுக்குள் கரைத்துக்கொள்ளவே விரும்பினேன். ஒருவேளை இதுவும் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் வகையறாவுக்குள் வருமோ என்னவோ!
ஷங்கர் மகாதேவன் தேசியக் குரலோன். பல மகா நிலங்களில் ஒலிக்கும் குரலுக்கு அதிபதி. புகழை வென்றுவிட்டு சினிமாவுக்குப் பாட ஆரம்பித்த சிலருள் ஒருவர். பாலக்காட்டுத் தமிழ்க் குடும்பம் ஒன்றின் வாரிசாக மகாராஷ்ட்ரத்தில் இருக்கும் செம்பூரில் 1967 ஆம் ஆண்டு பிறந்தார் ஷங்கர். பண்டிட் ஸ்ரீநிவாஸ் காலேயின் மாணவராக இசை பயிலுகிற வாய்ப்பு ஒரு ஐந்து வயது சிறுவனுக்குக் கிடைத்தால் அவன் என்னவாக வருவான்? ஷங்கர் மகாதேவனாக வந்தார். 1988 ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் அப்போதுதான் ஒரு முகமறியாத வைரஸைப் போல் மெல்லப் பரவிக்கொண்டிருந்த கணினித் துறையில் பொறியியலாளராகப் படிப்பை முடித்தவர் ஷங்கர். பாடாமல் வேலைக்குப் போயிருந்தால் நமக்கெல்லாம் ஒரு குறுந்தாடி மென்பொருள் வல்லுநராக வேறு முகம் காட்டியிருக்கக் கூடும். ஷங்கர் மகாதேவனை இசை விடவே இல்லை. இசையை அவரும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டார்.
ஒரு விதமான மிதாஸின் விரல் போன்ற குரல் ஷங்கருக்கு அமைந்தது. அவர் எதைப் பாடினாலும் பொன் மழை பொழிந்தது. ஃப்யூஷன் இசையில் இந்திய அளவில் குறிப்பிடத் தகுந்த வெற்றிகரம் அவர் படைத்தது. Breathless என்ற ஆல்பம் தொண்ணூறுகளில் காதுகள் படைத்த யாவராலும் ஆராதிக்கப்பட்ட தோரணங்களில் ஒன்றானது. இசையமைப்பாளர், நடிகர், தேசிய விருது பெற்ற பாடகர் என ஷங்கர் தொட்டெடுத்த தூரவுயரம் அபாரமானது. தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பது ஒருவித தியானம். ஷங்கரின் குரல் மாறாப் புத்துணர்வோடு வருடக்கணக்கில் ஒலித்த பிறகும் அதே புத்தம் தன்மையோடு இன்றும் தொடர்கிறது. ஷங்கர் என்றாலே உற்சாகக் கொண்டாட்டம் என்கிற பதம்தான் முகாந்திரம். மற்ற எல்லாம் பிற்பாடுதான். அந்த வகையில் எந்த மொழியிற் பாடினாலும் அந்த நிலத்தின் தன்மை மிகாமல் பாடுகிற வல்லமை கொண்ட பாடக வரிசையில் ஷங்கருக்கு நிச்சயஸ்தானம் ஒன்றுண்டு. ஷங்கர் காட்டில் எப்போதும் பாடல் மழை.
ஒவ்வொரு பாடலிலும் தனக்கான ஓரிடத்தை நோக்கி விரைகிற ஷங்கரின் குரல் அந்த இடம் வந்ததுமே சட்டென்று குழைந்து கலைந்து திரும்ப வல்லது. இந்தக் கூற்றைச் சற்றே நிதானித்துப் பார்க்கலாம். சாதாரணமாகத் தோன்றுகிறதல்லவா மேற்கூறிய ஸ்டேட்மெண்ட்? எல்லாப் பாடகரும் இப்படித்தானே என்று சொல்லத் தோன்றுகிறதா? இல்லை என்பதை உணர்வது எளிது. ஒவ்வொரு பாடலிலும் ஷங்கரின் குரல் ஒரே போல் விரைந்து-குழைந்து-கலைந்து-திரும்பி வருவது இல்லை. கிட்டத்தட்ட ஒரு பாடலை அதன் தொடக்கத்தில் இருந்து நிறைவு வரைக்கும் நூறு இடங்கள் எனக் கணித அலகு கொண்டு பகுத்துக்கொண்டால் ஒன்றிலிருந்து கிளம்புகிற அந்தக் குரல் தொண்ணூற்றொன்பது வரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் மேற்படிக் குழைந்து கலைந்து கனிந்து திரும்புவதைச் செய்ய வல்லது. ஒரு பாடல் போல் அடுத்த பாடலின் கனிதல் இராது என்பதுதான் கூடுதல் சிறப்பு. சர்க்கரையின் பொது குணாம்சம் இனித்தல் என்றாலும் ரகரகமான இனிப்புகள் உண்டல்லவா? அப்படிப் பார்த்தால் பாடுந்திறன் என்பது சர்க்கரை போன்றது என்றால் ஷங்கர் மகாதேவன் குரல் காஜூ-கத்லி.
பிலஹரி ராகத்தில் அமைந்த பாடல் கல்யாணக் கச்சேரி எனத் தொடங்கும் மடாம்பி படப்பாடல். எம்.ஜெயச்சந்திரன் இசையில் இந்தப் பாடலைப் பாடியதற்காக ஷங்கருக்கு மலையாளத்தில் சிறந்த பாடகருக்கான கேரள அரசு விருது கிட்டிற்று. இந்தப் பாடல் ஒரு உற்சாகக் கதகளி. நின்று நின்று ஒலிப்பதான இதன் அமைப்பு பாடுங்குரலை மேலுயர்த்திக் காட்டுவதான பாடல் வகையைச் சேர்ந்தது. இடையிசை தொடங்கிப் பாடலின் மொத்த உணர்வும் களியாட்டம் என்கிற ஒற்றைப் புள்ளியில் குவிவதானது. “திருமுறையில் வெயிலடியில் திமிர்தோம்” என்ற சரண வரியை ஷங்கர் கடக்கையில் சின்னதாய் ஒரு வேகத்தோடு கடந்திருப்பார். அட்டகாசப்படுத்தினார் என்றால் பொருத்தம். லேசான எள்ளலும் அதே நேரத்தில் சிறிய அகங்காரமும் கசிவதான பாடற்பாங்கு அத்தனை எழில் ததும்பும்.
உட்டிமீத கூடு எனத் தொடங்கும் உப்புக்கருவாடு பாடலின் தெலுங்குப் பதிப்பு இன்னும் அள்ளும். ஒகே ஒக்கடு என்ற பேரில் முதல்வன் தெலுங்கில் மாட்லாடிய படம்.
குமாரி பாடலை அந்நியனுக்காகத் தெலுங்கில் பாடியதும் தமிழைவிடச் சிறந்திருந்தது. அத்தனை தீர்க்கமும் ஆழமும் கொண்டு வேறாரால் பாட முடியும்? வேகப்பாடல் என்றாலே ஷங்கர் வேகதேவனை விட்டால் வேறு வழியே இல்லை என்று பகிர்ந்தாற் போலிருக்கும்.
ஹதவாடி படத்தில் வி.ரவிச்சந்திரன் இசையில் யாரு யாரு யாரு யாரு என்ற பாடலை மூச்சுவிடாத பல்லவிப் பாடலாக பாடி அயர்த்தினார் ஷங்கர் மகாதேவன். “எம்மொழி இசைத்தாலும் ஏற்கின்ற திருக்குரல்” ஷங்கர் மகாதேவனுடையது என்பதை மேற்காணும் பாடல்கள் சாட்சி சொல்லி மெய்ப்பிக்கும்.
சந்தோஷப் பதற்றத்தை ரசிகனுக்குக் கடத்தித் தருவது கடினமான காரியம். “என்ன நீ சந்தோஷமா இருக்கிறே? எனக்கென்ன?” என்று விலகவே முயலும் கேட்கும் மனத்தைக் கட்டியிழுத்து “இந்தா நீயும் வச்சிக்கோ” என்று சந்தோஷத்தைப் பகிர்ந்து தருகிற சாக்கில் அதனைப் பன்மடங்கு பெருக்கிப் பார்ப்பது சாகசம். ஆரவாரம் என்றானபின் அசலேது நகலேது? பாடலில் வரிகளினூடே சந்தோஷத்தை நிகழ்த்துவது எழுத்தின் முன்னுள்ள சவால். சோகமோ சந்தோஷமோ இசை அதனைக் கச்சிதமாய் நிகழ்த்திக் காட்டும். “ஆமால்ல, இது சந்தோஷம், இது துக்கம்” என்று கேட்கும் மனம் இசையின் கையைப் பற்றிக்கொண்டேதான் கடக்க முனையும். என்னதான் வரிகள் வலிந்து உருகினாலும் பாடுகிற குரல்தான் மாயக்கண்ணாடி. பன்மடங்கு பெருக்கிக் காட்டுகிற மகாந்திர ஜாலம் குரலால் மாத்திரமே இயலும். அதை மிகச்சரியாகப் பிறப்பித்துவிட்டால் பாடல் உடனே சூப்பர் ஹிட் வகைமைக்குள் தன்னை நுழைத்துக்கொள்ளும். அதிலும் அரிதான பாடல் காலம் கடந்து எப்போது ஒலித்தாலும் ஒற்றைப் பரவசத்தின் ஒருமுறையாகவே நிகழ்ந்தினிக்கும். அப்படி ஒரு பாடலை வசீகரா படத்திற்காக எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் ஷங்கர் மகாதேவன் பாடினார். “ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள்” எனத் தொடங்கும் பாடல் அது. வளைந்து மேலேறுகிற மலைப்பாதைப் பயணத்தின் சன்னல் நோக்குதல்களாகவே இந்தப் பாட்டின் செல்திசை-நகர்தல்கள் அமைந்தன. பெப்பி சிற்பம் என்றெல்லாம் வர்ணிக்கும் வண்ணம் இந்தப் பாடலைத் தார்ச்சாலையின் கருமை தெரியாமல் கொட்டிப் பூத்திருக்கிற பனிப்பொழிவாகவே பாடித் தந்தார் ஷங்கர். இதே பாடலை ஓ நவ்வு சாலு எனத் தெலுங்குப் பதிப்புக்காகப் பாடினார் ஷங்கர். தமிழை விடவும் ஒரு படித் தேன்பாகு கூடியொலித்திருக்கும் ஷங்கரக் குரல்.
ஒரு ஐநூறு நாளான தேனானது
அவள் செந்தூரம் சேர்கின்ற இதழானது
அவள் அழகென்ற வார்த்தைக்கு அகராதிதான்
நான் சொல்கின்ற எல்லாமே ஒருபாதிதான்
இந்த இரண்டு வரிகளையும் ஷங்கர் பாடுவதைக் கேட்டாலே காதல் சாபல்யம் ஆகிக் குழைந்து சிலிர்க்கும் ரசிக மனம். இவையே தெலுங்கில் இன்னும் மின்னும்.
அலைபாயுதேவில் ஏ.ஆர்.ரஹ்மான், க்ளிண்டென் கேரேஜோ ஆகிய இருவருடனும் இணைந்து என்றென்றும் புன்னகை பாடினார் ஷங்கர்.
முதல்வனே முதல்வனே, உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு ஆகிய இரண்டும் முதல்வன் படத்தில் ஷங்கர் பாடிய பாடல்கள். “தெனாலி இவன் பயத்துக்கு” எனத் தொடங்கிற்று தெனாலியின் தலைப்புப் பாட்டு. “மன்மத மாதம் மன்மத மாதம்” பாடல் பார்த்தாலே பரவசம் படத்தில் இடம்பெற்றது. சங்கமம் படத்தின் ஆகச்சிறந்த பாடலான “வராக நதிக்கரை ஓரம்” எனப் பல பாட்டுகளைப் பாடியிருக்கிறார் ஷங்கர் மகாதேவன்.
ரஹ்மான் இசையில் கீழ்வருகிற நான்கு பாடல்கள் ஷங்கர் பாடியவற்றுள் முக்கியமானவை என்பது என் எண்ணம்.
“என்ன சொல்லப் போகிறாய்” என்பது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படப் பாட்டு. இதுவொரு ஃப்யூஷன் கூத்து. கேட்கும் போது ஒரு கனவை உடைத்தாற் போல் ஒலிக்கும். பார்க்கும் போது ஒரு நிஜத்தைத் திருத்தினாற் போல அயர்த்தும். ஷங்கரின் குரல் பூ உதிர்தலாய் மனமெலாம் நிறைந்து கமழும்.
ஆய்த எழுத்து படத்தின் “ஹே குட்பை நண்பா” பாடலை சுனிதா சாரதியுடன் சேர்ந்து உச்சஸ்தாயியில் நரம்புகள் அதிர அதிர பாடியிருந்தார் ஷங்கர். (இதே போன்றதொரு உச்சகட்ட அதிர்வை நாடோடிகள் படத்தின் “சம்போ சிவசம்போ” பாடலிலும் பின்னர் நிகழ்த்திக்காட்டினார்.)
ராவணன் படத்தில் இடம்பெற்ற “காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி”. மொத்தப் படத்தையும், அதன் காட்சிகள் வசனங்கள் முகபாவ மனோநிலைகள் யாவற்றையும், இந்த ஒரு பாடலுக்குள் மிஞ்சியிருப்பார் ஷங்கர் மகாதேவன். இந்தப் பாடலை நீக்கிவிட்டுப் பார்த்தால் அந்தப் படம் அந்தரம்.
நான்காவது, ஸ்டார் படத்தின் பாடல்.
தோம் கருவில் இருந்தோம்
தோம் கருவில் இருந்தோம்
கவலையின்றி கண் மூடிக் கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்தவுடன் கண் தூக்கம் தொலைந்தோம்
அப்போது அப்போது போன தூக்கம்
நம் கண்களிலே
எப்போது எப்போது வந்துசேரும்
விடை தோனலையே
தண்ணீரில் வாழ்கின்றேன்
நான்கூட மச்சாவதாரம்தான்
(தோம் கருவில்)
அலைகளை அலைகளை பிடித்துக்கொண்டு
கரைகளை அடைந்தவன் யாருமில்லை
தனிமையில் தனிமையில் தவித்துக்கொண்டு
சௌக்கியம் அடைவது நியாயமில்லை
கவலைக்கு மருந்து இந்த ராஜ திரவம்
கண்ணீர்கூட போதையின் மறுவடிவம்
வழி எது வாழ்க்கை எது விளங்கவில்லை
வட்டத்துக்கு தொடக்கம் முடிவுமில்லை
கற்பனை வருவது நின்றுவிடும்
(தோம் கருவில்)
ஜனனம் என்பது ஒரு கரைதான்
மரணம் என்பது மறுகரைதான்
இரண்டுக்கும் நடுவேயோடுவது
தலைவிதி என்னும் ஒரு நதிதான்
வாழ்க்கையின் பிடிமானம் ஏதுமில்லை
இந்தக் கிண்ணம்தானே பிடிமானம் வேறு இல்லை
திராட்சை தின்பவன் புத்திசாலியா
அதில் மதுரசம் குடிப்பவன் குற்றவாளியா
பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை இது
மண்ணுக்குள் முடிகிறதே
விஷயம் தெரிந்தும் மனித இனம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கின்றதே
(தோம்)
ஷங்கரைத் தவிர வேறார் பாடினாலும் இந்தப் பாடல் இத்தனை சிறந்திராது என்பது நிசம். யாராவது இதை முணுமுணுத்தால்கூட ‘இது ஷங்கர் பாட்டாச்சே’ என்று மனம் பதறும். அந்த அளவுக்குத் தானே அதுவாகி அதுவே தானுமானார் ஷங்கர். இந்தப் பாடல் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பாலும் நின்று நிலைக்கும் என்பது என் எண்ணமல்ல, தீர்மானம், நம்பிக்கை, எட்ஸெட்ரா.
அனேகமாகத் தனக்குப் பாட வாய்ப்பளித்த அத்தனை இசைஞர்களோடும் விரல்கள் தீருமளவுக்கு வெற்றிப் பாடல்களைப் பாடியிருக்கிறார் ஷங்கர். தேவா இசையில் ஷங்கர் பாடிய எனக்குப் பிடித்த பாடல் ஜூன் ஜூலை மாதத்தில் (ப்ரியமானவளே). கட்ட கட்ட கட்ட கட்ட நாட்டுக்கட்ட (ஜெமினி), தின்னாதே என்னைத் தின்னாதே (பார்த்தேன் ரசித்தேன்) எனப் பரத்வாஜ் இசையில் அவர் பாடியவையும் மனம் பற்றியவையே. “குயிலுக்கு கூகூகூவென” ஃப்ரெண்ட்ஸ் படப் பாடலை இசைஞானி இளையராஜா இசையில் பாடினார். ஷங்கர் பாடியது என எல்லாப் பாடல்களுமே தனியே தெரிவது அவருடைய பலம். அதுவே சிலர் கூற்றுக்கு மத்தியில் அவருடைய பலவீனமாகவும் பார்க்கப்படக் கூடும். ஸோ வாட்?
இந்த நூற்றாண்டில் தமிழ் யுவர்களின் மன அடைதல்கள், விலக்கங்கள் யாவற்றையும் சேகரித்துத் தொகுத்தாற் போலத் தன் பாடுங்குரலைக் கையாள்வது ஷங்கரின் நற்திறன். இந்த இடம் முக்கியமானது. தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என எல்லா மொழிகளையும் தாண்டித் தனக்கும் தமிழுக்கும் இடையிலான ஏதோ ஒரு பிணைப்பைக் காலத் தொடர்ச்சியினூடான சிறு பற்றுதலைத் தன் குரல் மூலமாகத் தமிழ்ப் பாடல்களில் ஷங்கர் மகாதேவன் உணர்ந்து உணர்த்துவது நுண்மையானது. அவருடைய ஸ்பெஷாலிட்டி என நான் கருதுபவைகளில் முதன்மையானதும் அதுவே. யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் ஷங்கருக்கும் இடையே இந்தப் பேசாப் புரிந்துணர்தல் எளிதில் நிகழ்வதாகக் கருதுகிறேன். அவர் இசையில் ஷங்கர் பாடிய பாடல்கள், “என் அன்பே என் அன்பே” (மௌனம் பேசியதே), காதல் வெப்சைட் ஒன்று (தீனா), மனசு ரெண்டும் பார்க்க (காதல் கொண்டேன்), ஹே பேபி பேபி (ஏகன்).
இந்த நான்கு பாடல்களும் வெவ்வேறு கதைச்சூழல், பாத்திர வார்ப்பு, கவிபுனைவில் வித்தியாசம் எனப் பல விதங்களில் வேறுபடுகின்றவை. காதலேக்கம், ஆடவ மனத்தின் சொல்லொணாத் தனிமை, ஏக்கப் பகிர்தல் போன்றவை நான்குக்கும் இடையில் நிலவுகிற ஒற்றுமைகள் எனக் கொள்ளலாம். ஷங்கரின் குரலும் யுவனின் இசையும் பிரியாமற் கடல்வரை தொடர்ந்தேகுகிற இணைநதிகளாகவே இவற்றில் பயணம் செய்திருப்பதை இன்றும் என்றும் ரசிக்க முடிகிறது. வணிகத் தேவையான திரைப்பாடல் உருவாக்கத்தில் இத்தகைய துல்லியமும் பாசாங்கற்ற நேர்தலும் அரிதானவை.
காதல் கொண்டேன் படத்தின் வருகையின் போது தனுஷ் அறியப்பட்ட நடிகரில்லை. அந்தப் படத்தின் நாயக பாத்திரத்தின் ஆன்மாவாகவே அந்தப் பாடலைப் பாடினார் ஷங்கர் மகாதேவன். படத்தின் மொத்த உணர்வுகளைத் தொகுத்து ஒன்றாய் உருட்டினாற் போல் இன்றும் மனத்தில் பந்தாடுகிறது பாடல். பின்னர், தனுஷை நாடெங்கும் அறியச்செய்த “மன்மத ராசா” பாட்டையும் அதிவேக உற்சாக அமளியுடன் பாடித் தந்தார் ஷங்கர்.
ஆல் தோட்ட பூபதி நானடா, படம் யூத், இசை மணிஷர்மா. மலையுச்சிக்கும் கடலாழத்துக்கும் மீண்டும் மறுபடியும் சென்று திரும்புகிற மாயப் பேருந்தெனவே தன் குரலை வாரித் தந்தார் ஷங்கர் மகாதேவன். “ஆல் தோட்ட பூபதி” பாடலை எப்போது திறந்தாலும் நூற்றாண்டு கண்ட சாக்லேட் பிராண்ட் தரக்கூடிய அதே புத்துணர்ச்சித் தித்திப்புத் தீற்றலாய்த் தன்னை நிகழ்த்துகிறது. ஒருவித மந்தகாசத்தைப் பாடலினூடே படரச் செய்திருப்பார் ஷங்கர். பழைய காலமொன்றின் அங்கலாய்ப்பைத் தற்கணத்துக்கு மாற்றித் தந்தாற் போல் தோன்றியது. அந்தப் பாடலை முதன்முறை கேட்கும் போதே இது நின்று விளையாடும் என எண்ணச் செய்தது. அதுவே நிகழவும் செய்தது.
திருமலை படத்தில் “நீயா பேசியது என் அன்பே” வேகமாய் ஒலித்து நிறையும் முன்தொகை வரிகளைத் தாண்டி நீயா பேசியது என்று பாடலைத் தொடங்குகிற இடத்தில் கேட்பு மனங்கள் அனைத்தையும் ஒற்றைப்புள்ளியில் தொகுத்து உறையச் செய்யும் ஷங்கரின் குரல். காதல் பாடல்கள் என எடுத்துக்கொண்டால் காலச்செல்வாக்கு மிகுந்தவை சோகப் பாடல்களே. மற்ற சோக வகையறா பாடல்கள் அனைத்தையும் தாண்டிய வேறொரு வெறுமைப் பாலையாய் நீண்டுகொண்டே செல்லும் கணக்கற்ற ஒலித்தல்கள் அவற்றுக்குண்டு. ஒரு திரைப்படத்தைத் தூக்கி நிறுத்துகிற வல்லமை ஆகச்சிறப்பாய்க் கட்டமைகிற சோகப் பாடல் ஒன்றுக்கு உண்டு என்பதை மெய்ப்பிக்கிற பல வெற்றிக் கதைகளை இந்தியத் திரைவான் கண்டிருக்கிறது. திருமலை படத்துக்காக வித்தியாசாகர் இசையில் ஷங்கர் மகாதேவன் பாடிய “நீயா பேசியது” பாடல் அப்படியான சோகத் திருவிழா. ஒப்பீடற்ற ஒற்றை.
வித்தியாசாகருக்கும் ஷங்கருக்கும் இடையிலான வெற்றிகரத்தைப் பேசுவதற்கு மேலும் பாடல்கள் உண்டு. “தாலாட்டும் காற்றே வா” என்கிற பூவெல்லாம் உன் வாசம் படப்பாடல் வித்தியாசாகர்-ஷங்கர் இணைந்த பாடல்களில் இன்னுமோர் பண்டிகை. அள்ளித் தந்த வானம் படத்தில் ஒலிக்கும் வாடி வாடி நாட்டுக்கட்ட பாடலை மறக்கவே முடியாது. செவிகளின் சர்வதேச வரைபடத்தில் இந்தப் பாடல் ஒலிக்காத ஒரு புள்ளியைக்கூடச் சுட்ட முடியாது. இன்றைக்குக் கேட்டாலும் இந்தத் தினத்தை மீட்டுத் தந்துவிடக்கூடிய ஆனந்தக் கூத்தாகவே வருடிப் பெய்யும் வார்த்தை மழை.
தூள் படத்தில் வித்தியாசாகர் இசையில் காற்றில் மென் தூறலைக் கலந்தாற் போன்ற குரலில் “ஆசை ஆசை இப்பொழுது” என வருடினார் ஷங்கர் மகாதேவன். வானொலி தேசங்களை ஆளுகிறது இந்தப் பாடல், இன்னும் வாழ்கிறது.
விஜய்க்கு ஷங்கர் பாடிய எல்லாமே பெருவெற்றிப் பாட்டுகள். சரக்கு வச்சிருக்கேன் எறக்கி வச்சிருக்கேன் (ஷாஜகான்), நான் அடிச்சா தாங்க மாட்டே (வேட்டைக்காரன்) மச்சான் பேரு மதுர (மதுர), மாம்பழமாம் மாம்பழம் (போக்கிரி), கட்டிப்புடி கட்டிப்புடிடா (குஷி), கலகலக்குது (பத்ரி), கை கை கை கை வைக்குறா (பகவதி), வா வா வா என் தலைவா (சச்சின்), கும்பிட போன தெய்வம் (திருப்பாச்சி), வாடா வாடா (சிவகாசி) ஆகிய பாடல்களைப் பாடியிருந்தார். ஷங்கர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவே. ஆனால் அவற்றுள் வெற்றி பெற்ற பாடல்களின் கணக்கெடுத்துப் பார்த்தால் அனேகமாக நூறு சதவீதத்தை நெருங்குகிற எதேனும் ஒரு எண் விடையாய் வந்து நிற்கும். அப்படி, தான் பாடிய அனைத்துமே ஹிட் பாடல்கள் என்கிற வெற்றிகரச் சரிதத்துக்குச் சொந்தக்காரர் ஷங்கர்.
இசையமைப்பாளர் ஷங்கர் மகாதேவனும் ஆச்சரியத்தின் தொடர்ச்சியாகவே நிகழ்வது திண்ணம். எஸான், லாய் ஆகிய இருவருடன் இணைந்து தமிழில் ஷங்கர் இசையமைத்த படங்கள் மூன்று. ஆளவந்தான், விஸ்வரூபம் இரண்டும் கமல்ஹாசன் படங்கள். முன்னதை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, பின்னதைக் கமல்ஹாசனே இயக்கி இருந்தார். யாவரும் நலம் படம் சர்வதேசப் புகழ்பெற்ற மற்றொரு தமிழ்ப்படம். இதை இயக்கியவர் விக்ரம்.கே.குமார்.
யாவரும் நலம் உலகளவில் அயர்த்திய திரைநவீனம்.
காற்றிலே வாசமே காதலின் ஸ்வாசமே
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா
கொஞ்ச நாளா நானும் நீயும்
கொஞ்சிக் கொள்ளும் நேரங்கள் தேயுதே
மேற்காணும் பாடலை ஷங்கரும் சித்ராவும் பாடியிருந்தார்கள். காலத்தை யூகிக்க விடாமல் முன்னும் பின்னுமாய்க் கலைத்து விசிறிவிடுவது இந்தப் பாடலின் சிறப்பம்சம். இந்தப் படமே அமானுஷ்யத் திரை நிலத்தை அடிப்படையாகக் கொண்டது. புத்திசாலித்தனமான திரைக்கதையின் எதிர்பாராமையை இசையின் வழியே தக்கவைத்துத் தந்தது சிறப்பு. இந்தப் பாடலின் இடையே தாளக் கருவிகளின் உபயோகம் அத்தகைய புத்திசாலித்தனத்தைப் பிரதிபலிப்பது நல்லதோர் சான்று. இருப்பது தெரியாமல் தபலா இசையைப் பயன்படுத்தியது மேதைமை.
ஷங்கர் மகாதேவன் கம்போஸராகப் படைத்த பாடல்களில் அவரே பாடிய ஆளவந்தான் படத்தின் பாடல் “ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான்”. விரைவிசை கொண்ட வேகப் பாடல். அதிலேயே, “உன் அழகுக்குத் தாய் பொறுப்பு” பாடலை ஷங்கர், சுஜாதா மோகன் இணைந்து பாடியிருந்தனர். இந்திப் பதிப்பான அபேய் படத்திலும் இவற்றை ஷங்கரும் சுஜாதாவுமே பாடினர் என்பது கூறத்தக்கது. “அழகுக்கு” பாடல் ஒரு மென்மலர் கானம். இன்றெல்லாம் கேட்பவரை அயர்த்தவல்ல மெலடி. சொல்லொணாத் துயரின் இருண்மை பொங்குகிற ஸ்தாயியில் அந்தப் பாடலின் செல்திசை நகர்தல்களை அமைத்திருந்தார் ஷங்கர். அந்தப் படத்தில் கமல்ஹாசன் பாடிய கடவுள் பாதி மிருகம் பாதி பாடல் காலத்தால் அழியாத குரலுருவக் கல்வெட்டாகவே கனத்து நிலைக்கின்றது. எப்போது திறந்தாலும் ஒரே குகையிருளைக் காணத் தருகிற அனுபவமாக அதன் கேட்பனுபவம் விரிவது அதீத எழில். அதிலேயே ஆப்பிரிக்கா காட்டுப்புலி பாடலும் அசட்டுத்தனமான மேம்போக்கான அனந்தத்தை வியாபிக்கத் தருகிற பாடல். படம் முடியும் கணம் வரைக்கும் அந்தப் படத்தின் எதிர்நாயகம் ஆளவந்தான் அலையஸ் நந்து கதாபாத்திரத்தின் கட்டுப்பாட்டிலேயே திரைக்கதையின் பிரயாணம் அமைந்திருக்கும். அதனால் குறிப்பிட்ட விலக்கத்துடனேயே பாடல்களின் நிகழ்கணங்கள் தென்படும். அதனை நன்கு உணரத் தரும் வண்ணமே குரலும் இசையும் கொண்டு பாடல்களை அமைத்திருந்தார் ஷங்கர்.
விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற “உன்னைக் காணாது நானிங்கு நானில்லையே” பாடல் ஒரு மாயாமுத்தம். சட்டென்று வேறொன்றாகக் கலைந்து திரியக்கூடிய வாழ்வின் நிலையாமையை ஒத்த திரைக்கதையின் மாயக் கதுப்பாகவே அந்தப் படத்தின் முற்பகுதி அமைந்திருக்கும். “காண்பன யாவும் மறையுமென்றால்” எனும் பாரதி வரிக்கேற்ப நமக்குக் கிடைக்கிற அத்தனை சலன பிம்ப நகர்வுகளும் பிற்பாடு கலைந்தழிந்து வேறு பூக்கவிருக்கும் முற்கதைத் திரையாடலின் நடுவாந்திரம் அப்படி ஒரு பாடல். மாயம் என்கிற ஒற்றை வார்த்தையைத்தான் மறுபடியும் உபயோகிக்க நேர்கிறது. நடனம் கற்பிக்கும் ஆசிரியராக கமல்ஹாசன் தன் மாணவியருடன் ஆடுவது போல் திரைச்சூழல். அந்த இடத்தில் கிருஷ்ண நேயத்தைப் பாடலின் மையப்பொருளாக்கிக் கமல்ஹாசன் எழுதி நடிக்க, ஷங்கர் இசையமைத்துப் பாடிய பாடல் இது. காலம் உள்ளளவும் ஷங்கர் மகாதேவனை ஒரு இசையமைப்பாளராகவும் கமல்ஹாசனை ஒரு பாடலாசிரியராகவும் நிலை நிறுத்தவல்ல மேதைமைத் தோய்வு இந்தப் பாடலின் சாரம்.
அதிநவநீதா அபிநய ராஜா கோகுல பாலா
கோடி ப்ரகாஷா விரக நரக ஸ்ரீ ரக்ஷக மாலா
எத்தனை முறை நான் ஏங்கிச் சாவேன்
இத்தவணை எனை ஆட்கொள்வாயா
சூடிய வாடலை சூடிய வா
களவாடிய சிந்தை திரும்பத்தா
பூதகியாக பணித்திடுவாயா
பாவை விரகம் பருகிடுவாயா
ஆயர் தம் மாயா நீ வா (ஆயா மாயா)
1
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
(மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா)
க்ருஷ்ணா..
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
நிதம் காண்கின்ற வான்கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனாகூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே…
உன்னைக் காணாமல், உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல், உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே
நளினி மோகன ஷியாமள ரங்கா
நடன பாவ ஸ்ருதிலய கங்கா
சரிவர தூங்காது வாடும்
அனுதினம் உனக்காக ஏங்கும் ராதாதான்
உனக்கென ராதாதான்
உனக்கொரு ராதாதான்
2
அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக்கொண்டேன்
ஒன்றாகச் செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
எதிர்பாரமலே… அவன்
எதிர்பாராமலே….அவன்
பின்னிருந்து வந்து எனை பம்பரமாய்ச் சுழற்றிவிட்டு
உலகுண்ட பெருவாயன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை
இந்தப் பூங்கோதை மறந்தாளடி
உடல் அணிந்த ஆடை போல்
எனை அணிந்துகொள்வாயா
இனி நீ இனி நீ
கண்ணா..
தூங்காத என் கண்ணின் துயில்
உரித்த கண்ணன்தான்
இனி நீ இனி நீ
இது நேராமலே நான்
உன்னை பாராமலே நான்
இந்த முழு ஜென்மம் போயிருந்தால்
என்று அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா!
இந்தப் பாடல் பார்க்கும் போது கதையின் நடுவே தானுமொரு அலையாய் நீர்மத்தோடு நீராய்ச் சேர்ந்தொழுகிக் கலந்து தென்படுகிறது. கேட்பனுபவத்தில் இந்தப் பாடல் மாபெரும் கனாத்திரை ஒன்றாக விரியவல்லது. இதன் சொற்களும் பாடிய குரலும் பின்னிசையும் சேர்ந்து ஏற்படுத்துகின்ற அனுபவமானது உறக்கத்தில் ஆழ்கையில் மூடிய கண்களுக்குள்ளே தோன்றவல்ல பிம்பத் தெறல்களின் கணிதத்துக்கு அப்பாற்பட்ட கூடுதல் ஒன்றெனவே தொடக்கமும் முழுமையும் அற்ற அநித்ய கனவின் நினைவைப் போன்றது. சொல்லித் தீராதது இசை. ஷங்கர் மகாதேவன் இசைஞர். என்றும் தீராப் புகழுக்குத் தகுந்தது அவரது இசைக்கொடை. விஸ்வரூபம் திரைப்படத்தின் மேற்சொன்ன பாடல் அதற்கொரு சான்றாவணம்.
தன் சரித்திரத்தின் தொடக்கத்திலிருந்தே சாதனைகளைப் படைத்தபடி தொடர்வது ஷங்கர் மகாதேவனின் ஸ்பெஷாலிடி. ஸ்பைடர் மேன் தாவிச்செல்கிற மாய நகர்தல்களைப் போல் தன் பாடல் இழைகளைப் பற்றிக்கொண்டு விண்ணில் பறக்கும் பாடல் நட்சத்திரன் ஷங்கர் மகாதேவன். இசையே வாழ்வாய் நிகழும் அவர் பாடிய பாடலின் தொடக்க வரிகளை இங்கே பகிர்வது பொருத்தம் என நினைக்கிறேன்.
என்றென்றும் புன்னகை. முடிவிலாப் புன்னகை
-தொடரலாம்.
*
முந்தைய பகுதிகள்:
- கமல்ஹாசன்
- வீ.குமார்
- ஷ்யாம்
- மலேசியா வாசுதேவன்
- ஹரிஹரன்
- பி.ஜெயச்சந்திரன்
- ஹரீஷ் ராகவேந்திரா
- இசையில் இருவர்
- எண்பதுகளில் சங்கர் கணேஷ்