எட்டு நிமிடங்கள்

2 comments

இது நான் உனக்கு எழுதும் மூன்றாவது கடிதம், அதாவது நம் விவாகரத்திற்குப் பிறகு.

உனக்கான கடிதங்களை ‘அன்புள்ள’ என்று ஆரம்பிப்பதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு இருப்பதில்லை ராஜி. எல்லாக் கடிதங்களையும் அப்படித்தான் தொடங்க வேண்டுமா என்ன! இதற்கு முன்பான என் முதல் கடிதத்தை, “சௌக்கியங்களைத் திருடிச்சென்றவளுக்கு” என்று ஆரம்பிக்க நினைத்து, பிறகு “எப்படியிருக்கிறாய் ராஜி?” என மாற்றியிருந்தேன். இரண்டாவதில், “நெடுந்தூரப் பயணமொன்றுக்கு என்னைத் தயார்செய்தவளுக்கு” என்று எழுத நினைத்து, “மூன்று வருடங்கள் ஓடிவிட்டது ராஜி” என ஆரம்பித்திருந்தேன். இதோ, இப்போதுகூடப் “பாலாவை எனக்குப் பிடித்திருக்கிறது” என்று தொடங்க நினைத்து..

நீ பழக்கப்படுத்திவிட்டிருந்த Butterfly Dance இசைத்துக்கொண்டிருக்கிறது ராஜி. யானியின் அந்த ஒற்றைப் பியானோ ஒவ்வொருமுறை உயிர் உருவும்போதெல்லாம், எடுத்துக்கொள்ளெனக் கண்கள் மூடி அனுமதிப்பது நரக சுகம். மனம் ஒரு விசயத்திற்குத் தயாராகும்போது, கொஞ்சமாய் இசையைச் சேர்த்துக்கொள்வது பற்றி நீ அடிக்கடி சொல்லியிருக்கிறாய்.

தொலைபேசி உரையாடல்களைவிடக் கடிதங்கள் சௌகரியமாய் இருப்பது பற்றி நம்மிடையே கருத்து வேறுபாடு இருந்ததேயில்லை. ஆம்! இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் அத்தனையையும் குரல்களால் வெளிப்படுத்துவது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

“பாலகுமாரை நெருக்கமா பார்க்கும்போதெல்லாம் எனக்கு எரெக்ட் ஆகுது ராஜி.”

“வ்வாட் த ஃபக்?”

சிரித்துக்கொள்கிறேன். குரல்களைவிட எழுத்துகள் நிதானத்தைக் கொடுப்பவை, குரல்களைவிட எழுத்துகள் நேசிக்க வைப்பவை.

பாலாவிற்கும் இசை என்றால் கொள்ளைப் பிரியம். அலுவலக மின்னஞ்சலுக்காக நான் எடுத்துவர மறந்த பென்ட்ரைவிற்கு மாற்றாய், பாலாவிடமிருந்து வாங்கி கணினியில் இணைத்தபோது எத்தனை பாடல்கள் வைத்திருந்தான் தெரியுமா! அருகருகே தொட்டிலில் உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளாய் தனித்தனி மின்பெட்டிகளில் வகைபிரித்து அடைத்திருந்த நூற்றுக்கணக்கான குரல்கள், நூற்றுக்கணக்கான வாத்தியங்கள். பென்ட்ரைவை திருப்பிக்கொடுக்கும்போது எதுவும் சொல்லாமல் புன்னகைக்க மட்டும் செய்திருந்தேன். டவுன்ஹால் ரோட்டின் பழைய புத்தகக்கடையொன்றில் ரஷ்யப்புரட்சி பற்றி கடைக்காரரிடம் ஒருசேர நாம் விசாரித்துக்கொண்டபோது முதன்முறையாக உன்னைப் பார்த்து அப்படித்தான் புன்னகைத்திருந்தேன்.

கடைசியாக அலைபேசியில் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருந்தபோது மோத்தி பற்றி விசாரித்திருந்தாய். நானும் “நல்லாயிருக்கு” என்கிற ஒற்றை வரியில் முடித்துக்கொண்டிருந்தேன். எங்கிருந்து ஆரம்பித்தது என்பதற்கும் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது என்பதற்கும் அதிக வித்தியாசங்களில்லை ராஜி. நம் வீடுகளைப் பொறுத்தவரை “நன்றாகப் போவது“ எனும் வரையறைக்கு ஒரே அர்த்தம்தான். எந்த மாற்றமுமின்றி திரும்பத் திரும்ப அதையே செய்துகொண்டிருப்பது. அதாவது ஒரே மாதிரி பல் துலக்குவது, ஒரே மாதிரி ஆடை உடுத்துவது, ஒரே மாதிரி சிரிப்பது, ஒரே மாதிரி அழுவது. எப்போதாவது அந்த ‘மாதிரி’யில் ஏதேனும் மாற்றம் நிகழும்போது வீட்டில் உள்ளவர்கள் திணறிப்போகிறார்கள். பதற்றமடைகிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள். வலியால் அலறியபடி குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக்கொண்டிருந்த மோத்தியை கண்ணிமைக்காமல் வெறித்தபடி நின்றுகொண்டிருந்தவனைப் பார்த்து அம்மா அப்படித்தான் பயந்திருந்தாள். எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது ராஜி. கொதிக்கும் நீரை மோத்தியின் மீது நான் ஊற்றும்வரை.

உன்னைப் போலவே பாலாவுக்கும் அழகான கண்கள். சட்டென அதிர்ச்சியடையும் போதெல்லாம் நேருக்கு நேராய் கண்கள் விரியப் பார்த்துக்கொண்டு நிற்பான். இதோ.. இப்போது நீ நின்றுகொண்டிருப்பதைப் போல.

விக்டோரியா ஹோட்டலில் நாம் வழக்கமாய் அமரும் மேசையை இடம் நகர்த்தியிருக்கிறார்கள். தேநீர்க் கோப்பைகள்கூட மாற்றப்பட்டிருக்கின்றன. உனக்குப் பிடித்தமான வெளிர்பச்சை நிறப் பீங்கானுக்குப் பதிலாகக் குறுக்குவாக்கில் வெள்ளைக் கோடுகள் போட்ட ஊதா நிறக் கோப்பைகளை அடுக்கியிருக்கிறார்கள். சுவரில் புதிதுபுதிதாக வால் ஸ்டிக்கர்கள் முளைத்திருக்கின்றன, இலைகளைத் தூக்கிச்செல்லும் பறவைகள், தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருக்கும் மரங்கள், ஆங்காங்கே கொஞ்சம் நட்சத்திரங்கள் என்பதாய் பகலுக்கும் இரவுக்கும் நடுவிலான அந்தியை மிதக்கவிட்டிருக்கிறார்கள். பாலாவுக்கு அந்த நட்சத்திரங்களை ரொம்பவே பிடித்திருந்தது. சில்வியா பிளாத்தின் கதைகளை ஒப்பிட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான்.

இப்போது நீ குழப்பத்தின் உச்சத்தில் இருக்கலாம் அல்லது இதெதையுமே காதில் வாங்காமல் மோத்தியைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருக்கலாம். நானும் அப்படித்தான் பாலாவுடன் உரையாடிக்கொண்டிருக்கையில் அவன் காதுமடல்களைக் கவனித்துக்கொண்டிருந்தேன். ரொம்பவே மிருதுவான காதுமடல்கள் கொண்டவர்களுக்கு எதிரில் உட்கார்வதன் சிரமம் திரும்பத் திரும்ப உனக்கு வாய்த்திருக்கிறதா ராஜி?

எல்லாமே நேற்று நடந்ததுபோல் இருக்கிறது. எல்லாமே..

“நாம கல்யாணம் செய்துக்கலாமா நிரஞ்சன்?” என்று காபி கோப்பையிலிருந்து கண்ணெடுக்காமல் நீ என்னைக் கேட்டது,

“பாவம், விடிய விடிய கத்திகிட்டே இருந்துச்சு, நாம வளர்த்துக்கலாமா?” என்றபடி மோத்தியை நம் வீட்டுக்கு நீ தூக்கிக்கொண்டு வந்தது,

“ம்யூச்சுவலா அப்ளை செஞ்சா சீக்கிரம் கிடைச்சுடும்தானே?” என்கிற உரையாடலை ஆரம்பித்தது,

“ஹாய் ஐயாம்…“ என்று உனக்குச் சிவராமன் அறிமுகமானது போலவே, “ஹி இஸ் மிஸ்டர் பாலகுமார்” என்று ஹெச்ஆர் எனக்குப் பாலாவை அறிமுகம் செய்துவைத்தது.

முதல் சந்திப்பிலேயே பளிச்செனச் சிரித்துவைத்த பல்வரிசை, நடுவிற்குக் கொஞ்சம் பக்கவாட்டாய் வகுடெடுத்துச் சீவியிருந்த தலைமுடி, நேர்த்தியாக டக்கின் செய்யப்பட்ட உடை என எல்லாமே பாலாவுக்கு மிகச்சரியாய்ப் பொருந்தியிருந்தது ராஜி.

“ஹலோ.. ஐயாம் நிரஞ்சன்.”

பாலாவுக்கு மிருதுவான கைகள், உன்னைப் போலவே. முதல் அறிமுகத்திற்குப் பிறகு கை குலுக்கும் பழக்கம் ஆண்களுக்குள் இருப்பதில்லை என்பது எத்தனை வருத்தம் தரக்கூடியது! அன்றாடச் சந்திப்பில் இதென்ன பைத்தியக்காரத்தனம் என்று தோன்றலாம்தான். ஸ்பரிசத்தின் முக்கியத்துவமென்பது யாருடைய அண்மை தேவைப்படுகிறது என்பதிலிருக்கிறது ராஜி. அந்தப் புத்தகக் கடைக்காரர் உனக்குப் பதில் சொன்ன விதத்திலிருந்தே நீ அடிக்கடி அங்கு வருவாய் என்பதைத் தீர்மானித்து, நான்கு நாட்கள் தொடர்ந்து அந்த நேரத்திற்கு வந்து நின்றிருந்தது பைத்தியக்காரத்தனமில்லைதானே! ஐந்தாவது நாளில் நீ தொலைவில் வந்துகொண்டிருந்தாய், ஒரு மேகத்தைப் போல. காற்றில் பறந்துவரும் சருகைப் போல. என்னைப் பார்த்தவுடனே மிகுந்த பரிச்சயமுடையவளைப் போல் புருவத்தை உயர்த்தி லேசாகச் சிரித்துவைத்தாய். பிறகு ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும்போதும், தடைதாண்டும் ஓட்டத்தில் எகிறிக் குதிப்பதுபோல் புருவம் குதித்துப் புன்னகைப்பது வழக்கமாகியிருந்தது.

உன் புருவமுயர்த்தும் சாயலொன்று பாலாவிடமிருந்து வெளிப்பட்டிருந்த போதாக இருக்கலாம் அல்லது உன் சாயல் துளியளவுமில்லாத முற்றிலும் புதிதான ஒரு புன்னகையை, பிறந்த குழந்தையைக் கையில் கொடுப்பதுபோல் எனக்கே எனக்கென அவன் பரிசளித்த போதாக இருக்கலாம். இதில் ஏதாவதொன்றில்தான் பாலாவை எனக்குப் பிடிக்க ஆரம்பத்திருக்க வேண்டும்.

முதுகில் கொதிநீர் பட்டதும் துடித்து அலறிய மோத்தியை நீ பார்த்திருக்க வேண்டும் ராஜி.

நடந்துகொண்டே உரையாடுவதற்கென நாம் தேர்ந்தெடுத்திருந்த ரிசர்வ் லைன் காலனியின் நெடுஞ்சாலை போலவே, மோத்தியும் தனக்கானவொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தது. வீட்டின் மாடியிலிருந்து தண்ணீர் இறங்குவதற்காகப் போடப்பட்டிருந்த பைப்பிற்கு அடியில், தரைக்கும் பைப்பின் வளைந்த பகுதிக்கும் நடுவிலான இடைவெளிதான் எப்போதும் அதன் ஃபேவரைட். பசியோடிருக்கையில், வயிறு நிறைய சாப்பிட்டிருக்கையில், விளையாடிக் களைத்துவிடுகையில், எதையாவது யோசித்துக்கொண்டிருக்கையில் என மோத்திக்கு எல்லாவற்றிற்குமான அணைப்பென்பது அங்கிருந்துதான் கிடைத்திருந்தது. முதுகின் அனலைத் தாங்கவியலாது வெகுநேரம் அலறியபடி குழாயினடியில் மூச்சுவாங்க அண்டிக்கொண்டிருந்ததைப் பார்த்து அம்மாதான் கலங்கிப்போயிருந்தாள்.

அம்மா இப்போதெல்லாம் உன்னைப் பற்றிய விசாரிப்புகளைக் குறைத்துக்கொண்டிருக்கிறாள் ராஜி. எப்போதாவது சிவராமன் பற்றிக் கேட்பதுண்டு. இரத்த அழுத்தத்திற்கு மாத்திரை போட ஆரம்பித்ததிலிருந்து கொஞ்சம் நிதானமாகி இருக்கிறாளோ என்னவோ! வீட்டிலிருந்து வெளியேறுவதென முடிவெடுத்த அன்று அவள் கூச்சல் போட்டது பற்றி உனக்கு எந்தப் புகாருமில்லை என்பதில் அம்மாவுக்கு ஏக வருத்தம். சமாதானப்படுத்த அல்லது சண்டையிடச் செய்யாத எதிராளிகள் ஏமாற்றத்தைக் கொடுக்கிறார்கள்.

சிவராமன் நலம்தானே?

ஜான்சனுக்குப் பதிலாய் என்னுடைய டீமில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாலோ என்னவோ, ஆரம்பத்தில் பாலா என்னால் தவிர்க்க முடியாதவனாகிப் போயிருந்தான். தோளில் தட்டிக்கொள்வதாகட்டும், அருகருகே உட்காருவதாகட்டும், தீவிரமாய் உரையாடுவதாகட்டும், பாலா கொஞ்சம் தனித்துத் தெரிந்திருந்தான் அல்லது நான் அவனைப் பிரித்துப் பார்க்கப் பழகியிருந்தேன்.

மனிதர்கள் எதையாவது உன்னிப்பாய்க் கவனிக்கும்போதோ அல்லது வாசித்துக்கொண்டிருக்கும் போதோ, அவர்களையும் அறியாமல் ஒரு பழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள் ராஜி. அனிச்சையாய் உன் பெருவிரலை மற்ற நான்கு விரல்களுடன் ஒன்றின்மீது ஒன்றை அழுத்தி நீ சொடுக்கிட்டுக்கொள்வது போலவே பாலாவுக்கும் ஒரு பழக்கமிருக்கிறது. வாசித்துக்கொண்டிருக்கும் பக்கத்தின் நுனியைக் கெட்டியாகப் பற்றிக்கொள்வது. அதாவது முதல் வரியைப் படித்துக்கொண்டிருக்கும் போதே பக்கத்தைத் திருப்புவதற்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்வது. அப்படியே இடதுகை ஆள்காட்டி விரலால் மீசையை வகுடெடுத்துக்கொள்வான். கடலை இரண்டாகப் பிரித்த நிகழ்வைப் புராணமொன்றில் படித்திருக்கிறேன். கறுப்பு நிறத்திலான மீசைக்கடல்! அதைக் கவனிப்பதற்காகவே ஒவ்வொருமுறையும் நான் தயார்செய்த ரிப்போர்ட்களைச் சரிபார்த்துக் கொடுக்கும்படி அவனிடம் நீட்டுவதுண்டு.

“நூத்துல தொண்ணூறு பேருக்கு அந்தப் பழக்கமிருக்கும்.”

இருக்கலாம். இருக்கட்டுமே!

ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட கேள்விகளை உனக்கும் சேர்த்து நானே கேட்டுக்கொள்கிறேன் ராஜி.

“சாதாரண நட்போ என்னவோ!”

”கிளர்ச்சியை சாதாரண நட்புனு சொல்லி யாரை ஏமாத்திக்கணும்?”

காலருக்கு அடுத்துள்ள பட்டன் வழியாக மார்பு ரோமம் தெரியும்போது மட்டுமல்ல, பின்னந்தலையைக் கோதிக்கொள்ளும் விதமாகட்டும், கைச்சட்டையின் மணிக்கட்டுப் பகுதியை முக்காலுக்கு மடித்துவிடுவதாகட்டும், பேசிக்கொண்டிருக்கும்போது காய்ந்துவிட்ட உதடுகளை நாவினால் ஈரமாக்கிக்கொள்வதாகட்டும், நான் பரவசமடைந்திருக்கிறேன் ராஜி. ஜான்சனிடம், ஹெச்.ஆரிடம், வேறு எந்த ஆணிடத்திலும் உண்டாகாத பரவசம். இன்னும் சிறிது நேரம் அருகிலேயே இருக்க வேண்டுமென ஒவ்வொரு முறை கிளம்பும்போதும் தோன்றியிருக்கிறது. மோத்திகூட அப்படி நினைத்துதான் அன்றைக்கு என்னைச் சுற்றி வந்துகொண்டிருந்ததோ என்னவோ!

மோத்தி அதற்குப்பின் என் அருகில் வருவது பாதியாகக் குறைந்திருக்கிறது ராஜி. அதன் கண்களில் எனக்கான வெறுப்பைத் தக்கவைத்தபடியே உலாத்திக்கொண்டிருப்பதை நான் கவனிக்காமலில்லை. குளிக்க விளாவுவதற்காக எடுத்துச்சென்ற நீரை, எந்தக் காரணத்தினால் அதன் மீது தெளித்தேன் என்பதை இதுவரை நூறு முறையாவது யோசித்திருக்கிறேன். யோசனைகள் நம்மை என்னவாய் மாற்றியிருக்கின்றன என்பதற்கு எதை உதாரணமாக எடுத்துக்கொள்வது!

”மோத்தி பேசாம இரு.”

”ப்ச், சும்மா இரு மோத்தி.”

”ப்போனு சொல்றேன்ல?”

”இப்ப போறியா இல்லையா?”

சூரியனிலிருந்து கதிர்கள் பூமிக்கு வந்துசேர எட்டு நிமிடங்களாகுமாமே! ஒருவேளை சூரியன் தன்னை நிறுத்திவிட்டால் அது நமக்குத் தெரிவதற்கும் அதே எட்டு நிமிடங்களாகும், ரைட்? எதனாலென்று புரிவதற்குள் எல்லாமே முடிந்துவிடுவது போல. மோத்திகூட அந்த எட்டு நிமிட ஆசுவாசத்தில்தான் என் காலைச்சுற்றி வந்துகொண்டிருந்தது.

”உனக்கென்ன பைத்தியமா?”

கையிலிருந்த ப்ளாஸ்டிக் மக்கை ஆவேசமாய்த் தட்டிவிட்டபடி அம்மா கத்தியது இப்போதுகூட மண்டைக்குள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது ராஜி.

வீடே அதிரும்படியான டெசிபலில் மோத்தி அலறுவதைக் கேட்டு அவள் சந்துப்பக்கம் ஓடிவருவதற்கும் என்ன நடந்திருந்ததென என் சிந்தனைக்கு உறைப்பதற்கும் பதினொரு நொடிகள் தேவைப்பட்டிருந்தன. முழு ஆயுளையும் குற்றவுணர்ச்சியெனும் பாதாளச் சிறைக்குள் உட்கார வைக்கும் பதினொரு நீளமான நொடிகள்!

காந்தலுக்கு மஞ்சளைப் பூசிவிட்டுக்கொண்டிருந்தபோது அதன் கண்களைப் பார்த்திருக்க வேண்டும் நீ. வாழ்நாளின் அத்தனை துயரங்களும், அத்தனை வெறுப்பும், அத்தனை ஏமாற்றங்களும் நிறைந்த ஒன்றிலிருந்து எழும் இயலாமையானது, பார்க்கும் எல்லாவற்றிலும் விழும் தன் பிம்பத்தின் மீது கல்லெறியத் தயாராகின்றது.

அன்றைக்குத்தான் பாலகுமாரிடமிருந்து முதன்முதலாகக் குறுஞ்செய்தி வந்திருந்தது.

”அட்வான்ஸ் ஹேப்பீ பர்த்டே நிரஞ்சன்.”

அன்று இரவுதான் நான் இரண்டாவது முறையாக அழுதிருந்தேன் ராஜி.

அது மோத்திக்கானதாக இருந்திருக்கலாம், பாலாவுக்கானதாக, உனக்கானதாக அல்லது எனக்கானதாகக்கூட.

யாருக்கானதாகவும் இல்லாத அழுகையைத் தனக்கானதாய் தக்கவைத்துக்கொள்வது எவ்வளவு சுயநலம்!

”அது ஏன் திடீர்னு பாலகுமார் மேல?”

வாஸ்தவம்தான், ‘அது ஏன் திடீர்னு ராஜிமேல?’ என்று இதுவரை என்னை நான் கேட்டுக்கொண்டதில்லை.

நமக்குப் பிடித்த “அன்புள்ள மான்விழியே“ பாடலை அட்சர சுத்தமாய் பாடிக் காட்டும் மயிலண்ணன், உன்னை விசாரித்ததாய் கூறியிருந்தார். ஒவ்வொருமுறையும் ”நலம் நலம்தானா முல்லை மலரே” என்கையிலெ்லாம் நீ ரசிப்பதைக் கவனித்துவிட்டு, “சுகம் சுகம்தானா முத்துச்சுடரே“ என்று கூடுதல் உற்சாகமாய் பாடும்போது மயிலண்ணனின் குரலுக்குத் தனியொரு வசீகரம் வந்துசேர்ந்திருக்கும். கண்மூடி லயித்துப் பாடுகிறவர்களைப் பக்கத்திலிருந்து பார்ப்பதென்பது ஒருபோதும் சலிப்பதில்லையென நீ குறிப்பிட்டிருந்தது ஞாபகமிருக்கிறது. கடைசியாக நான் அவரைச் சந்தித்தபோது, “ஞாயிறு என்பது கண்ணாக”ப் பாடச்சொல்லி கேட்டிருந்தேன். அப்போதுதான் அவருக்கு உன்னைப் பற்றி விசாரிக்க வேண்டுமெனத் தோன்றியிருக்கக்கூடும்.

இந்நேரத்திற்கு நீ மோத்தியை என்னிடமிருந்து அபகரித்துச்செல்ல யோசித்திருப்பாய், அல்லது பாலாவிடமிருந்து என்னை விலகியிருக்கச் சொல்ல முடிவெடுத்திருப்பாய், ரைட்?

“What if” என்பதைவிட நிஜங்கள் மோசமாய் இருப்பதில்லை ராஜி.

பிரியமானவரின் மரணத்தைத் தீயிலிட்டுத் திரும்பிய வெறுமையை ஒரு சுயமைதுனத்தால் போக்க முடியுமெனில் உடைந்தழுவதில் தவறில்லைதானே!

”தமிழ்நாட்டுல இடமே இல்லன்னா புனேவுக்கு அப்ளை பண்றீங்க?”

இரண்டரை மாதங்களாக அலுவலகத்தில் கேட்காத ஆள் பாக்கியில்லை. பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்திருக்கிறேன் என்று சொன்னால் நீ நம்புவாயா? அதுவும் புனேவுக்கு?

பாலாகூடச் சிலமுறை தன் வருத்தத்தைத் தெரிவித்திருந்தான். போக வேண்டாமென, போகத்தான் வேண்டுமாவென முகம் பார்த்துக் கேட்கும்போதெல்லாம் அவனைக் கட்டியணைத்து அழவேண்டும் போலிருந்தது, சிரித்து வைத்தேன். எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக்கொள்வதென மனம் தயாராகும்போதெல்லாம் தோளின்மீது ஒரு பட்டாம்பூச்சி உட்கார்ந்துகொள்கிறது. பாலா என் உதடுகளைத் தொட்டபோதுகூட அப்படித்தான் உணர்ந்திருந்தேன் ராஜி.

”என்னோட போதைங்கறது உன் கீழுதட்டு மேல தங்கியிருக்குற நீர்த்தன்மைல இருக்கு.” 

உடல் வாசனைகள் பற்றிய மும்முரமான உரையாடலுக்கு நடுவே திடீரென நீ சொன்னதும் கொஞ்சம் தடுமாறிச் சிரித்திருந்தேன் நினைவிருக்கிறதா?

“உங்க லிப்ஸுக்கு இந்த சிகரெட் அட்டகாசமான ஃப்ரேம் நிரஞ்சன்.”

ஃபீல்டு விசிட் முடிந்து கிளம்புகையில் தன்னிடமிருந்த பொன்னிற எஸ்ஸே சிகரெட் பெட்டியிலிருந்து ஒன்றை உருவிக்கொடுத்தவன், புகைத்துக்கொண்டிருந்த என் உதடுகளைப் பார்த்து இப்படிச் சொன்னபோது அதே போலத்தான் தடுமாறியிருந்தேன். பிறகு ஆளுக்கொரு முறையென பாலாவும் நானும் புகைத்துக்கொண்டோம், ஒரு முத்தத்தைப் பரிமாறிக்கொள்வதைப் போல. கடைசி இழுப்பிற்குச் சட்டென என் உதடுகளில் சிகரெட்டை வைத்துத் தன் விரல்களால் ஒற்றியெடுத்தவன், ஒன்றும் பேசாமல் நகர்ந்து சென்றபோது நான் திணறிப்போயிருந்தேன் ராஜி. அருகாமைகள் ஏன் இத்தனை போதையைக் கொடுக்கின்றன!

காலையில் புனே செல்வதற்கான தகவல் உறுதியாகியிருந்த நிலையில்தான் தனியாகப் பேசவேண்டுமெனப் பாலாவை விக்டோரியாவிற்கு அழைத்துச் சென்றிருந்தேன். ஊதா நிறக் கோப்பைகளுக்கென்றே தனி வாசனைகளிருக்கிறதோ என்னவோ, பழைய வாசனைகள் அத்தனையிலிருந்தும் துண்டுத் துண்டாய் உடைந்து பாலாவுக்கு எதிரில் உட்கார்ந்திருந்த போதுதான் அந்த உரையாடலை ஆரம்பித்திருந்தேன்.

அலமாரியிலிருந்து புத்தகங்களை அட்டைப்பெட்டிக்குள் வைக்கும்போது நீ முதன்முதலாய் பரிசளித்திருந்த ‘சஹீர்’ கண்ணில்பட்டது ராஜி. ”மகிழ்ச்சியான தருணமொன்றில் நிறைய நிறைய பிரியங்களுடன்“ என்று கையெழுத்திட்டிருந்தாய். ஒவ்வொருமுறையும் உன் பெயரின் மீது படரும் விரல்கள் கொஞ்சமாய் நடுங்கிப் பின் நிதானத்திற்கு வருகின்றன.

அனல்நீர் சிதறிய தழும்பு, மோத்தியின் அடர் கறுப்புத் தோலில் விக்டோரியாவின் நட்சத்திரங்கள் போலவே வெண்ணிறமாய் படிந்துவிட்டிருக்கிறது. அதை ஒருபோதும் நான் தொட்டுப் பார்க்க மோத்தி அனுமதிப்பதில்லை. கிளம்புவதற்காகப் பைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்ததைத் தூரத்தில் நின்று சிறிதுநேரம் பார்த்தபடியே இருந்துவிட்டு, பிறகு எதுவும் செய்யாமல், தன் இஷ்டமான இடத்திற்குச் சென்று படுத்துக்கொண்டது.

அலுவலகத்தில் நாளை காலை ரிலீவிங் ஆர்டர் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதோடு சின்னதாய் ஃபேர்வெல் மீட்டிங்கும். அபத்தங்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கும்போது நிகழும் கொண்டாட்டங்கள், அருவருப்பைக் கொடுக்கத் தவறுதேயில்லை ராஜி. பிறகு, மாலை 5:50க்கு ரயிலேறத் தீர்மானித்திருக்கிறேன், பேருந்துகளும் விமானங்களும் தர முடியாத ஆசுவாசங்களை ரயில் பயணங்கள் கொடுக்கின்றன.

அம்மாவிடமிருந்து மோத்தியை நீ எப்பொழுது வேண்டுமானாலும் தூக்கிச்செல்லலாம். மோத்தியும் அதைத்தான் விரும்பியிருக்கக்கூடும்.

ஃபேர்வெலில் கூட்டத்திற்கு நடுவே நாளை உட்காரப்போகும் பாலாவின் முகம் வந்துபோகிறது. விவாகரத்திற்கு முடிவெடுத்த அன்று உன் முகமும், காயத்தைத் தொடவிடாமல் நகர்ந்து நின்றபோது மோத்தியின் முகமும் இருந்தது போலவே. 

எதுவும் பேசாமல் எழுந்துசென்றவனின் கைகளில், எனக்கெனவே அனல் நிரம்பிய கோப்பையொன்று பத்திரமாய் இருக்கலாம் ராஜி. பைப்பிற்கு அடியில் உறங்கிக்கொண்டிருந்த மோத்தியை எட்டிப்பார்க்கின்றேன், உலகின் அத்தனை அமைதியையும் கையகப்படுத்தியது போல அது உறங்கிக்கொண்டிருக்கிறது.

ஒரு கடிதத்தை “இப்படிக்கு“ என்றுதான் முடித்துவைக்க வேண்டுமா என்ன?

சூரியனுக்கும் பூமிக்குமிருக்கும், மோத்திக்கும் எனக்குமிருக்கும் இடைவெளியான அதே எட்டு நிமிடங்களுடன்..

-நிரஞ்சன்.

2 comments

சபரி சொ.ராஜலிங்கா August 30, 2022 - 9:09 am

மனிதன் வகைப்படுத்திய அத்துனை உணர்வுகளுக்கும் அடையாளம் தந்த கடிதம்…..

Indra Priyadharshini S September 6, 2022 - 8:21 am

அபத்தங்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கும்போது நிகழும் கொண்டாட்டங்கள், அருவருப்பைக் கொடுக்கத் தவறுதேயில்லை.. ❤❤❤❤❤

Comments are closed.