‘யதார்த்தவாதம்’ என்கிற வடிவம் நாவல்களுக்கு உகந்தது. குறிப்பாக, புறச்சூழல் சார்ந்த சித்திரிப்புகளை உருவாக்குவதே பல யதார்த்தவாத நாவல்களின் பண்பாக இருந்து வருகிறது. ஆனால் ‘மணல் கடிகை’ அகச் சித்திரிப்பில் பெருவெற்றியடைந்த நாவல். நாவலில் நிகழும் புறவயமான நிகழ்வுகளையும்கூட வரலாற்று முரணியக்கமாக அணுகாமல் மனிதர்களுடைய அகத்தின் நீட்சியாகவே கோபாலகிருஷ்ணன் படைத்திருக்கிறார்.
ஐந்து கதாபாத்திரங்கள்:
ஒரு நேர்காணலில் எம்.கோபாலகிருஷ்ணன் தனக்குப் பிடித்த நாவலாசிரியர் ‘தஸ்தாயேவ்ஸ்கி’ என்று கூறியதை வாசித்திருக்கிறேன். இந்த நாவலில் சந்தேகமேயின்றி கரமசோவ் சகோதரர்களின் பாதிப்பு உண்டென்றே நான் கருதுகிறேன். மூன்று வெவ்வேறு விதமான குணச்சித்திரங்களின் மோதல்தான் அந்த நாவல்.
ஐந்து குணச்சித்திரங்கள் வெவ்வேறு வண்ணங்களாய் காலமெனும் வெள்ளைத் துணியில் படிந்து, பெருகி, அந்தக் கலவையில் யாவும் வண்ணமாகி உச்சம் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் நிறமிழந்து காலமே எஞ்சி நிற்பதைச் சொல்கிற நாவல் இது.
1981-ல் ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் வெளிவருகிற போது கதையில் இடம்பெறும் ஐவரும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டுத் திருப்பூர் எல்லையில் இருக்கிற மலையிலிருந்து ஊரைப் பார்க்கிறபோது நாவல் தொடங்குகிறது. அதற்குப் பிறகு வெவ்வேறு காலகட்டங்களில் ஊர் எல்லையில் இருக்கும் பல மலைகளுக்கு வருகின்றனர். சரியாகக் கால் நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு மலையில் நின்று ஊரைப் பார்க்கிற போது தங்கள் வாழ்விலும் இந்த ஊரிலும் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்த பிறகும் ஐவரும் உள்ளுக்குள் அப்படியே இருப்பதை உணர்வதோடு நாவல் நிறைவுபெறுகிறது.
உண்மையில், இது மனிதர்களின் குணச்சித்திரங்களுக்கு இடையிலான மோதலை விவரிக்கும் நாவலன்று. மனிதக் குணச்சித்திரங்கள் யாவும் மனம் உணரும் பிரமைகள். சூழலால் நிகழும் அர்த்தமில்லாத வெறும் குறிகள் என்பதே இந்த நாவல் உணர்த்த விரும்பும் தரிசனம். அந்த வகையில் இது ‘கரமசோவ் சகோதரர்களிடமிருந்து’ நுட்பமாக வேறுபடுகிறது.
தஸ்தாயேவ்ஸ்கி பேராறுகள் மோதிக்கொள்கிற போது உருவாகும் நீரின் சுழிப்பில் கவனம் வைக்கிறார். எம்.கோபாலகிருஷ்ணன் மோதலின் உக்கிரம் தணிந்து நம்மைக் கடந்துபோவதும் நீர்தானே என்பதைக் கவனித்தபடி மலைத்து நிற்கிறார்.
சிவாவைப் பொறுத்தவரை அவன் சுழன்றோடும் பெருவெள்ளத்தில் பத்திரமான தெப்பத்தைப் பற்றிக் கொள்கிறவன். அவனைப் பற்றியபடி உடன் வருகிறவர்களைச் சிவா தண்ணீரில் தள்ளிவிடுவதில்லை. அதே நேரத்தில் வலிந்து காப்பாற்றவும் முனைவதில்லை. விமலா, அருணா, லிடியா, ரவி என்று எவருக்குமே அவன் துரோகம் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர்களை விட்டு விலகினால்தான் நதியின் போக்கில் மிதந்து செல்ல முடியும் என்கிற நிலை வருகிறபோது அவன் அவர்களைக் குற்ற உணர்ச்சியுடன் கைவிடுகிறான். அந்தக் குற்ற உணர்வால் உருவாகும் பயமே அவன் பற்றிக்கொள்கிற தெப்பம். அவன் தப்பித்துச்செல்ல வேண்டும் என்பதற்காகவே நீரில் குதித்தவன். அவனை இயக்கிக்கொண்டிருப்பது இரண்டே விஷயங்கள். அவன் அப்பா அடிக்கடி சொல்லும் ‘தறிக்குழியியிலிருந்து தப்பித்துப் போய்விட வேண்டும்’ என்கிற கனவும் ஒரே ஒரு முறை ஜோசியன் சொன்ன ‘இவனுடைய ஜாதகம் காமாந்தகனுடையது’ என்கிற கணிப்பும்தான்.
ஆனால் இந்த இரண்டும் அவன் மனம் உருவாக்கிக்கொள்ளும் பாவனைகள் மட்டுமே. அவன் மனதின் ஆழத்தில் உமாவின் நிர்வாணமும் அவள் மரணத்தால் உருவாகும் குற்ற உணர்வுமே மீந்திருக்கின்றன. அந்த இரண்டிலிருந்தும் தப்பிக்கவே அவன் மேலே குறிப்பிட்ட ‘பாவனைகளே தான்’ எனக் கருதிக்கொள்கிறான். சித்ராவுடனான முயக்கத்தில் அவன் கண்விழித்துக் காண விரும்புவது உமாவையே. விமலாவிடமும் அருணாவிடமும் தேடி ஏமாந்ததும் அவளையே. எத்தனை பெரிய உயரத்திற்குச் சென்றுவிட்ட பிறகும் அந்த வெற்றிகளே ஒரு தறிக்குழியாகி அவனை மூடுகிற போதுதான் ‘சித்ராவின் அப்பாவிடம் படிப்பிற்காகக் கையேந்தி நின்ற ஒருவன் இப்போது அவன் மகளுக்குக் கணவனாகியிருக்கிறான், அவ்வளவுதான். வேறெதுவும் பெரிதாய் நிகழவில்லை’ என்பதை உணர்கிறான். தான் பாதுகாப்போடு நெடுந்தூரம் வந்துவிட்டதாய்க் கருதிய நதி வட்டமாகவே சுழன்றோடுவதை அவனே உணர்கிற போதுதான் அவன் உருவாக்கிக்கொண்ட குணச்சித்திரம் உதிர்ந்து விழுகிறது.
திருச்செல்வம் சிவாவுக்கு நேர் எதிரானவன். அவனிடம் லட்சியங்களே இல்லை. அவன் நதியில் குதிக்கிறவனில்லை. கரையில் நின்றபடி குளிப்பதையும் நீச்சலின் கவனத்தோடு செய்கிறவன். அவனிடம் அகம், புறம் சார்ந்த தடுமாற்றங்களே இல்லை. அதற்கப்பால் விலகிச்செல்வதற்கான மனமும் வாய்க்கவில்லை. தாயைச் சிறுவயதிலேயே இழந்தவன், சுய ஒழுக்கத்தை மட்டுமே கைத்துணையாகப் பற்றிக்கொள்கிறான். ‘நா எச்சி வச்சு குடிச்ச காபி மாமா’ என்று மாமன் மகள் மேனகா அடித்தொண்டையில் மோகத்தோடு சொல்கிறபோதும், அவளே ‘உரிமை’ என்கிற பெயரில் வேலை வாங்குகிறபோதும் அவன் எந்தச் சலனமும் இல்லாமல் வெறுமனே செயல்புரிகிறவனாக இருக்கிறான்.
ஐவரில் காம எண்ணங்களால் துளியளவும் அலைக்கழிக்கப்படாதவனாகத் திரு மட்டுமே காட்டப்பட்டிருக்கிறான். வெற்றிகளின் போதும் தோல்வியின் போதும் சமநிலை மாறாமலிருக்கிறான். திருப்பூரின் இயல்புக்குப் பொருந்தாத தன் மனதின் தன்மையை உணர்ந்து பெரிய லட்சியங்களுக்கு இடம் கொடுக்காமலே தன் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்திற்குத் தயாராகும் போது திரு இன்னொருவனாகிறான்.
சண்முகம் இன்னதென்று வகைப்படுத்த முடியாத குணச்சித்திரம். அவனைக் காமாந்தகன், மனதின் அடிப்படை இயல்புகளால் அலைக்கழிக்கப்படும் கலைஞன், தேடல்கள் நிறைந்த விசித்திரன் என்றெல்லாம் விதவிதமாக யோசிக்கிற வகையில் அவனுடைய குணச்சித்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. (மற்ற நான்கு கதாபாத்திரங்களின் இயல்புத்தன்மை ஒப்பீட்டளவில் சண்முகம் பாத்திரத்தில் காணக் கிடைக்கவில்லை) ஆனால், இவை அனைத்துமே அவன் வலிந்து தன் மீது உருவாக்கிக்கொள்ள முனைகிற பிம்பங்களே என்பதை உணர முடியும். திருவைப் போலவே இவனும் சிறுவயதிலேயே தாயை இழந்தவன். ஆனால் திரு எதைப் பற்றிக்கொண்டானோ அதை விட்டுத் தொலைப்பதையே தன் வாழ்வாக்கிக்கொண்டவன். தன்னைக் குறித்த பிம்பம் தனக்குள்ளேயே கலைந்தபோது,
‘பெண்ணென்றால் பேரிரைச்சலிடுகிறாயே மனமே?
பெண் என்பவள் யார்?
பெற்றுக்கொண்டால் பெண்
பெறாத வரையில்
பிரகாசமான இருள்’
(பிரான்சிஸ் கிருபா)
என்கிற தெளிவை வந்தடைகிறான். நதியில் குதிக்காமல் கரையில் நடந்தபடியே நதியைப் புரிந்துகொண்டதாய் இறுமாந்திருந்தவன், கனவு கலைந்து நின்றுவிடும் தருணமே சண்முகத்திற்கான திறப்பாக அமைகிறது.
அன்பழகனும் பரந்தாமனும் ஒரு வகையில் சிவாவின் ஆளுமையால் பாதிக்கப்பட்டவர்கள் என்றே கூற முடியும். பரந்தாமன் தன் கலகத் தன்மையாலும் அன்பழகன் வீம்பு நிறைந்த சுயமரியாதையாலும் அதைத் தாண்ட முயன்று தோற்கிறார்கள்.
தன் திறமையில் கால்வாசிகூட இல்லாத சிவா மிகப்பெரிய முதலாளியாக மாறியது எப்படி என்கிற கேள்வியே அன்பழகனை ஆட்டிப்படைக்கிறது. ஒவ்வொரு தோல்வியின் முடிவிலும் அவன் பிடிவாதமாகப் பழைய பாதையிலேயே செல்கிறான். அவனுக்குத் தான் வெல்வதைவிட ‘சிவாவின் அணுகுமுறை தவறு’ என்பதைத் தன் வெற்றியால் உணர்த்த வேண்டும் என்கிற ஆழ்மன ஆசை உண்டு. தன்னைத் தோல்வியடைந்த சாமுராயாக உருவகித்தபடி சுய இரக்கத்தில் சுகம் காணும் இயல்பு அவனைப் படுபாதாளத்தில் தள்ளுகிறது. சிவா எவற்றையெல்லாம் வெகு இயல்பாக எடுத்துக்கொண்டு கடந்துசெல்கிறானோ அவை அனைத்தையும் அன்பழகன் தீவிரமான பிரச்சினையாக்கிக்கொள்கிறான். தன் அண்ணி சாமியாருடன் ஓடிப்போனதையும் திரும்பி வந்ததையுமே சிவா சாதாரணமாக எடுத்துக்கொள்கிறான். ஆனால் அக்கா சாந்திக்குத் தன் நண்பரான குடுமி அண்ணாச்சியோடு உருவான உறவை அன்பழகனால் கடைசி வரை புரிந்துகொள்ளவே முடிவதில்லை. சிவா துரோகங்களை மனித இயல்பென்று தெரிந்து வைத்திருப்பதாலேயே அவற்றை விளையாட்டாகக் கடந்துசெல்கிறான். அன்பழகன் இயல்பான உணர்வுகளைக்கூடத் துரோகங்களாகவே அர்த்தப்படுத்திக்கொள்கிறான். புற வாழ்வில் மட்டுமல்ல, அக வாழ்விலும்கூட அவன் பெண்ணுடலைத் தீண்டாத கட்டாய பிரம்மச்சாரியாகவே வலம் வருகிறான். அனுபவிக்கத் துடித்துவிட்டு நிகழ்கிறபோது மனம் கூசி அருவருப்பு கொண்டு கை நழுவிப்போன பின் நினைத்து நினைத்து ஏங்குகிறவனாகவே அவன் அகத்திலும் புறத்திலும் காட்சி தருகிறான். அவன் நதியில் பயணம் செய்யவே இல்லை. கரையில் நிற்பவர்களுக்குத் ‘தான் யார்?’ என்பதை உணர்த்த நீச்சலடித்துக் காட்டியபடியே நகராமல் மிதக்கிற நீச்சல் வீரன் அவன்.
பரந்தாமனும் அதே மாதிரிதான். தான் செய்தது தவறென்று உணர்த்தும் அது சரியானதென்று தனக்குத்தானே நிரூபிக்கும் தீராத யத்தனிப்பில் தன்னைக் காயப்படுத்திக்கொள்கிறவன். பூங்கொடி தவறான தேர்வென்று தெரிந்த பிறகும் அவன் மனம் விலகிவிட்ட பாழுங்கிணற்றையே சுற்றி வருகிறது. சண்முகம் தன் பராக்கிரமங்களை எல்லாம் அதிகமாகப் பரந்தாமனிடமே கொட்டுகிறான். மற்றவர்களைவிட உடலளவில் வலு கூடியவனான பரந்தாமனின் மிகப்பெரிய பிரச்சினை அலைபாயும் மனம். அந்த மனமே விழிப்புணர்வின்றி பூங்கொடியைத் தேர்வுசெய்கிறது. தன் தேர்வின் தோல்வியை மறைப்பதற்கான சூதாட்டத்தில் அவன் மொத்த வாழ்வையும் பணயம் வைக்கிறான். அவன் இடையிலேயே கரையேறி அதற்குப் பின்பும் நிறைவுகொள்ளாமல் நதியின் நினைவிலேயே வாழ்கிறவன்.
குறியீடாக அணுகினால், நதியுடனான ஐந்து மனிதர்களின் உறவைச் சம்பவங்களால், உணர்வுச் சுழிப்புகளால், நாடகீயத் தருணங்களால் விரித்துக்காட்டும் எம்.கோபாலகிருஷ்ணன், ‘நதியும் தாமும் வேறன்று’ என்று ஐவரும் மனவொருமையோடு உணர்கிற தருணத்தை இறுதியில் காட்சிப்படுத்துவதே இந்த நாவலின் உச்சபட்ச வெற்றியாகும்.
பெண் கதாபாத்திரங்களும் காமமும்:
இந்த நாவலில் கணக்கற்ற பெண் கதாபாத்திரங்கள் வழி காமத்தின் பல்வேறு பரிமாணங்களைச் சுட்டிக்காட்ட ஆசிரியர் விழைகிறார்.
திரை பிம்பத்தைக் (எம்.ஜி.ஆர்) கண்டு காம வயப்படும் உமா (“நீ தொட்டா தலைவர் தொட்ட மாதிரி இருக்குடா சிவா”) அந்தப் பிம்பத்தின் மீதான மோகத்தாலும் யதார்த்த வாழ்க்கை தந்த ஏமாற்றத்தாலும் தன் உடல் பண்டமாய் மாற்றப்பட்ட பரிதவிப்பாலும் ஒரே ஒரு சொல்லுக்காக சுயமரியாதை கொண்டு எரிதழலாய் ஒளிர்ந்து அடங்குகிறாள்.
விமலாவின் காமம் வேறு மாதிரியானது. அது ஆண்களைப் போல் அதிகார விளையாட்டுடன் தொடர்புடையது. அவள் சிவாவுடனான முயக்கத்தை அதிகார விளையாட்டாகவே கைக்கொள்கிறாள். அவனைத் தான்தான் எப்போதும் வெல்வதாக நினைத்து அந்தப் பாவனை தரும் சுகத்தாலேயே வாழ்வில் தோற்கிறாள்.
அருணா தன் பயத்திற்கான மருந்தாகவே காமத்தைக் கருதுகிறாள். மருந்தே உணவாகிற எல்லையைத் தொடுகிற போது அதற்கே உணவாகிறாள்.
சித்ரா கனிவின் வெளிப்பாடாகவே காமத்தைக் கருதுகிறாள். ஆனால் அவளையும் அறியாமல் வாழ்ந்து கெட்டவளின் பாதுகாப்புணர்வு அதற்குள் ஒளிந்திருக்கும் சிறு நாகமெனச் சிவாவைக் கொத்தி ஆட்டம் நிகழ்கிற போதெல்லாம் பாதியிலேயே கலைந்துவிடுகிறது.
பூங்கொடிக்குக் காமம் என்பது உடலின் தினவன்றி வேறில்லை. மனதின் பாவனைகளைக் கொஞ்சமும் பூசிக்கொள்ளாத விலங்கின் இயல்பே அவள் காமமாகிறது. சண்முகத்தின் மனைவியும் இதே இயல்பு கொண்டவள்தான். இருவரின் குடும்பச் சூழலும் காமத்தின் பாவனைகளே தேவைப்படாத மிருக நிலைக்கு அவர்களை இட்டுச்செல்கிறது.
கணவனின் அண்மையை மீண்டும் மீண்டும் தேடி ஏமாந்து அவனை மாற்ற இயலாமல், தான் வழி மாறி பழைய பாதைக்கே மீளும் சுந்தரத்தின் மனைவியும் செட்டியாரிடம் மீள முடியாத துக்கத்திலேயே மாண்டுவிட்ட விசாலாட்சியும் காமத்தின் புரிந்துணர முடியாத மர்மப் பசியை நமக்கு உணர்த்துகின்றனர்.
தன் மானத்தையும் உயிரையும் காப்பாற்றிய ஒரே காரணத்திற்காகத் தன் உடலை வலிந்து குடுமி அண்ணாச்சியிடம் ஒப்படைக்கிற சாந்தி, ‘பெண் உடலுக்கு இந்தச் சமூகம் நிர்ணயிக்கும் விலையை’ உணர்ந்து தேர்ந்துகொள்கிற இடத்தில் தான் இருக்கிற சூழலை உருவாக்கியதாலேயே குடுமி அண்ணாச்சி மீது காமம் கொள்கிறாள்.
திலகவதி குடும்பத்தினர் ஒரு எல்லையில் நின்றால், டைப் இன்ஸ்டிடியூட் பெண் மறுஎல்லையில் நின்று சண்முகங்களைக் குழப்பி பெண்ணெனும் மாயப் பிசாசமாகி காமத்தின் குறியீடாகிறார்கள்.
பூட்டிய அறையில் நடிகையுடன் காமத்தை அனுபவித்த கதையைத் துறவியான பிறகும் சுப்ரமணியத்தால் களிப்புடனேயே நினைவுகூர முடிகிறது. அதற்கு நேர் எதிராக நவாப் மீது கொண்ட ஒரு தலையான காமத்திற்காக அவனை நுட்பமாகப் பழிவாங்கும் பாக்யா, விபத்திற்குள்ளான கணவனைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காகக் கிறித்தவப் பெண்ணாகி ஊரெல்லாம் திட்டு வாங்குவதையும் எம்.கோபாலகிருஷ்ணன் சித்திரித்திருக்கிறார்.
காமத்தின் மர்மத்தை ஆசிரியர் பல இடங்களில் விளக்குகிறார். ஒரே நேரத்தில் வெற்றிகரமான தொழிலதிபராகவும் தீராத காமாந்தகனாகவும் வலம்வரும் சிவா மட்டுமே இதைத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறான். புரியாமலேயே புரிந்தது போல் பாவனை செய்யும் சண்முகத்திற்குக் காமமே சத்ருவாகி மறக்க முடியாத அடியைத் தருகிறது.
காமம் என்பதை உடல் உறவைத் தாண்டிய ஒன்றாகவும் எம்.கோபாலகிருஷ்ணன் உணர்கிறார். குடுமி அண்ணாச்சிக்குத் தொடர்வண்டியில் ஓர் இளம்பெண்ணோடு நிகழ்கிற சில நிமிட உரசல்கள் தருகிற பரவசத்தையும், தான் பார்த்துப் பார்த்து ஏங்கிய பெண்ணின் நிர்வாண உடல் புணரக் கிடைத்தும் அன்பழகன் அருவருப்போடு ஓடி வருவதையும் ஒப்பிட்டால் இந்த உண்மை புரிய வரும்.
‘பொம்பள சொகங்கிறது டிரெஸ்ஸ அவுத்துட்டு படுத்து அவசரமா முடிச்சிட்டு எந்திரிச்சுக்கிறதில்லை. அதெல்லாம் மூணு வேளையும் வயுத்துக்கு கொட்டிக்குறோமில்லை? அதே மாதிரிதான். ஆனா நா சொன்ன மாதிரி கொஞ்ச நேரம். அது எது மாதிரின்னு திட்டமா சொல்ல முடியலை. அதான். அதுக்கு மேல வேறெதுவுமில்லை’ என்று குடுமி அண்ணாச்சி அன்பழகனிடம் சொல்லும் இடத்தையே ஆசிரியரின் காமம் குறித்த தரிசனமென்று நான் உணர்கிறேன். உடல் சார்ந்த காமத்தை நிராகரித்து ஆத்மாவின் காதலை வழிமொழியாமலேயே இரண்டுக்கும் நடுவிலிருக்கும் வேறொரு அம்சத்தைத் தொட்டுக் காட்டியிருப்பது நாவலின் சிறப்பம்சங்களில் ஒன்று.
திருப்பூர் நகரத்தின் சித்திரம்:
எம்.கோபாலகிருஷ்ணன் படைத்துக் காட்டுகிற திருப்பூர் இன்றைய திருப்பூர் இல்லை. ஒன்றிய அரசின் குளறுபடியான பொருளாதாரக் கொள்கைகளுக்குப் பிறகு இன்று மீந்திருப்பது பனியன் அணிந்த குபேரன் ஒருவனின் எலும்புக்கூடு மட்டுமே.
ஆனால் எம்.கோபாலகிருஷ்ணன் எண்பதுகளில் இருந்து இரண்டாயிரத்து ஐந்து வரையிலான ‘திருப்பூரின் பொற்காலத்தைச்’ சித்திரிக்கிறார். காலகட்டத்தைக் குறிப்பதற்காகவே நாவலில் அலைகள் ஓய்வதில்லை சுவரொட்டி, எம்.ஜி.ஆருக்கான வெளிநாட்டு சிகிச்சை, எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்தி மரணங்கள், பாபர் மசூதி இடிப்பு, முத்து படத்தின் ‘ஒருவன் ஒருவன் முதலாளி.. உலகில் மற்றவன் தொழிலாளி’ பாடல், கோவையில் அத்வானி மேடையில் நிகழவிருந்த குண்டுவெடிப்பு, குஜராத் கலவரம், வீரப்பன் சாவு, திருப்பூர் குமரன் நூற்றாண்டு விழா என்று பல சம்பவங்களைக் கதைப்போக்கில் இடம்பெறச் செய்திருக்கிறார்.
‘பணம்’ என்பது நடுத்தரக் குடும்பத்தின் தீராக் கனவாக உருமாற ஆரம்பித்த காலகட்டத்தின் திருப்பூர் சித்திரமே இந்த நாவல். ஒன்றிய அரசின் இறுக்கமான தொழில் கொள்கைகள் கைவிடப்பட்டு சாமான்யர்கள் அதுவரை நினைத்துப் பார்க்கவே முடியாத பொருளாதாரச் சுதந்திரத்தை அடைய முடிந்த காலகட்டத்தை இந்த நாவலில் கண்டுணர முடியும். வண்ணான் குடும்பத்தில் பிறந்த சம்பங்கி, பிசிறு வெட்டுகிறவளாக வாழ்க்கையை ஆரம்பித்து மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனத்தை நடத்துகிற இடத்தை நோக்கி நகர்வதை நாவல் மிகச் சரியாகக் குறிப்புணர்த்துகிறது. இன்னொரு புறத்தில் சம்பங்கி வயதுடைய ஆயிரக்கணக்கான பெண்கள் பொருளாதார ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் விரும்பியோ விரும்பாமலோ சுரண்டப்படுவதை ஆசிரியர் நுட்பமாகச் சித்திரித்திருக்கிறார். ‘வெடி நைட்’ என்கிற பெயரில் நிகழும் இரவு நேரப் பணியின் போது ‘சால்னா கேசட்’ போடப்பட்டு உணர்வுகள் தூண்டப்படும் காட்சியும் மொட்டை மாடிச் சித்தரிப்பும் இதற்குச் சிறந்த உதாரணங்கள். நம்மால் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்குப் பொருளாதாரச் சுழற்சி திருப்பூரில் நிகழ்ந்திருந்தாலும் அதன் உபவிளைவுகளின் எதிர்பக்கங்களையும் நாவல் மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.
நாவலில் பனியன் கம்பெனிகளில் சிறுவர்கள் வேலை செய்வது குறித்த காட்சிகள் கூர்மையான பார்வையோடு இடம்பெற்றிருக்கின்றன. அரசின் சட்டங்களை முதலாளிகள் தனக்குச் சாதகமான பார்வையோடு வளைத்துப் போடுவதை நாவல் எதிர்பார்வையோடு மட்டும் பார்க்கவில்லை. கிராமங்களில் பள்ளிகளில் இருந்து விரட்டப்பட்டு தான்தோன்றியாக, வேலையின்றி அலையும் பல சிறுவர்களுக்கு இந்தச் சட்டமீறல்களே வாழ்வின் மீதான நம்பிக்கையைத் தந்து, புது வாசலைத் திறந்து வைக்கிற மற்றொரு கோணத்தை மாதவன் கதாபாத்திரம் வழி சுட்டிக்காட்டுகிறார். காவல்துறை – ஏஜெண்ட் – கம்பெனி என்று நீளும் இந்தக் கண்ணியை மிக அழகாக எம்.கோபாலகிருஷ்ணன் சித்தரித்திருக்கிறார். சட்டங்களை இறுக்கமாக அப்படியே பின்பற்றாமல் நெகிழ்வோடு அதைச் செயல்படுத்துகிற போது உருவாகும் நன்மைகள் குறித்த மாற்றுச் சித்திரம் இது.
தனக்கென்று வாய்த்த கொஞ்ச நேரத்தில் கம்பெனி டெய்லர்களுக்காக வாங்கிய தேநீரைக் கீழே வைத்துவிட்டு, கோபுரத்துடன் கூடிய மணல் கோவில் எழுப்பி, நகத்தில் படிந்த மணலைச் சுண்டிய கையோடு சில நிமிடங்கள் அங்கேயே மூச்சொலியுடன் தூங்கி, திடீரென்று எழுந்து தூக்குவாளியோடு கம்பெனியை நோக்கி விரையும் கடைப்பையனின் சித்திரம் நாவலின் அபூர்வமான தரிசனங்களில் ஒன்று.
திருப்பூரின் தொழில் வளர்ச்சி குறித்த இடதுசாரிப் பார்வையும் அவற்றின் போதாமைகளும் தோழர் ராஜாமணிக்கும் சிவாவின் நண்பர்களுக்கும் இடையே நிகழும் விவாதங்கள் வழி பேசப்பட்டிருக்கின்றன. முதலாளிகள் கொள்ளை லாபம் அடைந்தாலும் வேறு எங்கும் இல்லாத அளவுக்குத் தொழிலாளிகளுக்குச் சம்பளம் கிடைப்பதால் திருப்பூரில் போராட்டங்களுக்கான தேவையே இல்லாமல் ஆகிவிட்டது. அதனாலேயே தோழர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்கிறவர்களாகச் சுருங்கிவிட்டனர் என்கிற விமர்சனம் நாவலில் முன் வைக்கப்படுகிறது. (“வீரப்பனை சுட்டுட்டா அதிரடி படை எதுக்கு?” என்று அன்பழகன் தோழரை நக்கல் செய்வான்) போஸ்டர் ஒட்ட டீக்காசு கேட்டவனை, ‘விஷமிகளைக் கட்சியைவிட்டு நீக்குகிறோம்’ என்றெழுதிவிட்டு அதைப் பார்த்தே மறுநாள் சிரிக்கிற தோழர்களை நாவல் காட்சிப்படுத்துகிறது. இந்த விமர்சனங்களையெல்லாம் தாண்டி ஊதியம், போனஸ் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கிற மிதமிஞ்சிய உயர்வுக்கு அடிப்படையாக இருந்த கட்சியின் செல்வாக்கை ராஜாமணி சுட்டிக்காட்டுவதையும் நாவல் பதிவுசெய்திருக்கிறது.
பொருளாதாரம் தாண்டி சுற்றுச்சூழல் நோக்கில் சாயப்பட்டறைகளின் கழிவுகள், தொழிற்சாலைகளின் விளைநில ஆக்கிரமிப்புகள் ஆகியவை இந்த நாவலில் விமர்சன நோக்கில் பேசப்படுகின்றன. ‘சுடுகாட்டில்கூட பறவைகள் பறக்கும். இங்க பாரு அதுவுமில்ல’ என்று சுப்ரமணியம் கூறுவார். விளையாட்டாகச் சாயப்பட்டறை முதலாளியின் உருவத்தைக் களிமண்ணில் செய்து, ‘இதை அந்த சாக்கடையில முக்கியெடுக்கணும்’ என்று மயில்சாமி கோபம் கொள்கிற இடம் முக்கியமானது.
நாவல் முழுவதையும் ‘சாதி’ கண்ணுக்குத் தெரியாமல் ஆக்கிரமித்திருப்பதை நுட்பமான வாசகர்கள் உணர முடியும். திருப்பூர் நகரத்தில் இந்தத் தொழில் இஸ்லாமியர் ஒருவரால் இருபதுகளில் உருவாகியிருந்தாலும் பனியன் கம்பெனிகள் பெருமளவில் கைவசமிருப்பது கொங்கு வேளாளர்களிடம் மட்டுமே. தறிவேலை செய்கிற தேவாங்கர்கள், முதலியார்கள், செட்டியார்கள் ஆகியோர் கம்பெனி வேலையால் கிடைக்கும் வசதிக்காக அவற்றை நோக்கி ஓடுகிறார்கள். அவர்களில் சிலர் உழைப்பால் உயர்ந்து முதலாளிகளாக மாறுவதை கொங்கு வேளாளர்களால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. ஒன்று திரண்டு வீழ்த்துவதற்கான வியூகங்களை அமைக்கின்றனர். மானுட சமத்துவம் பேசும் பொதுவுடைமைக் கட்சியிலும் சாதி லாபி எதிரொலிக்கிறது. ‘நீ கவுண்டன். பேச்சுவார்த்தைக்கு வரலாம். ஒரு செட்டியாரோ முதலியாரோ சரிசமமா இங்க வந்து உக்காரலாமா?’ என்று முதலாளிகள் பேசுவதால் கட்சிக்குள்ளும் கவுண்டர் அல்லாத தோழர் முருகானந்தம் ஓரம் கட்டப்படுகிறார். ‘ஒர்க்கிங் பார்ட்னராகச்’ சேர்த்துக்கொள்ளப்படும் அன்பழகனைப் பார்த்த முதல் நொடியிலேயே கூச்சமேயின்றி தியாகுவின் அப்பா, ‘தம்பி நீ கவுண்டனா?’ என்று கேட்கிறார். அந்த லாபியே அவனைக் கம்பெனியை விட்டு வெளியேற்றுகிறது. சொந்தமாகக் கம்பெனி வைத்து பெரிய ஆளாக வளரும் தேவாங்கர் சமூகத்தைச் சேர்ந்த சிவா, கவுண்டர் லாபியைச் சமாளிப்பதற்காகத் தொழிலில் நொடித்துப்போன முதலாளி மகள் சித்ராவை மணக்கிறான். ஆனால் அப்போதும் அவர்கள் அவனைத் தம் ஆளாக ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. ஒரு விசேஷத்தில், ‘இதுதான் சித்ரா கவுண்டனா?’ என்று விவரம் தெரியாமல் சிவாவைப் பார்த்துக் கேட்ட கிழவியை எல்லோரும் திட்டுகிறார்கள். மணப்பெண்ணுக்கான சீர் செய்யக்கூடச் சித்ராவே போதுமென்கின்றனர். செட்டியாரின் பெயரால் ஆரம்பித்த கம்பெனி சித்ராவின் பெயருக்கு மாற்றப்பட்ட பிறகே ஏற்றுமதி நிறுவனமாக வளர்கிறது. வண்ணார் சமூகத்தில் பிறந்த சம்பங்கியின் வளர்ச்சியை எல்லாவற்றையும் கடந்த சாமியாரான சுப்ரமணியால்கூட அங்கீகரிக்க முடிவதில்லை. ‘அவள் வளர்ச்சி குறித்து மகிழ்ச்சியோடு பேசும்போது சுப்ரமணியின் முகம் இருண்டு போவதை’ சிவா கவனிக்கிறான்.
இந்த நாவலில் சுப்ரமணியம் என்கிற சாமியார் வருகிறார். தன்னை மீறி வளரும் மகன் மீது மனவிலக்கம் கொண்டு தொழிலைவிட்டு ஒதுங்கிவிடுவார். அவனைத் தன் பாசத்தால் தீவிரமாக ஆதரித்த மனைவியும் மகனும் விபத்தில் இறந்ததால் இவர் சாமியாராகிவிடுவார். பொதுவாக, பல நாவல்களில் சாமியார் கதாபாத்திரங்கள் நாவலில் பேசப்படும் தீவிர லௌகீகத் தன்மை, காம மோக குரோதங்கள் ஆகியவற்றைச் சமன்படுத்தும் நோக்கிலேயே படைக்கப்பட்டிருக்கும். இல்லையென்றால் அந்தச் சாமியார்களின் போலித்தனங்கள் அம்பலப்படுத்தப்பட்டிருக்கும். இந்த நாவலில் சாமியார் சுப்ரமணியம் காவியணிந்த சாதாரண மனிதராகவே வந்துபோகிறார். தீவிரமான தத்துவ விவாதங்கள் நாவலில் நிகழவேயில்லை. சாதிப்பற்று, காமம், குடும்பப் பாசம் ஆகியவற்றைத் துறக்காதவராகவே அவர் படைக்கப்பட்டிருக்கிறார். திருப்பூரின் அதிவேக வாழ்க்கை, சுற்றுச்சூழல் சீரழிவு, விவசாயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றின் மீது மட்டுமே அவருக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. அந்தச் சாமியாரும்கூட மானுடத்தின் தீராத தேடல்களுக்கு விடைசொல்வதைவிட, திருப்பூருக்கான பிரத்யேகச் சாமியாராகவே படைக்கப்பட்டிருக்கிறார்.
கவித்துவ உச்சமின்மை:
சீரான வேகத்தில் சுவாரஸ்யமாக நகரும் நாவலின் மிகப்பெரும் குறையாக நான் கருதுவது உச்சகட்ட நாடகீயத் தருணங்கள், கவித்துவமான காட்சிகள், மானுடத்திற்கு அப்பால் கண்டடைய முடிகிற மகத்தான உணர்வுகள் ஆகியவற்றை இந்த நாவல் வாய்ப்பிருந்தும் தவிர்த்திருப்பதுதான். மொழியை நாவலாசிரியர் கையாளும் பாங்கும்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். பல காட்சிகளை அற்புதமாகப் படைக்கும் திறன்பெற்ற நாவலாசிரியர், உரையாடல்களின் வழி தத்துவ விசாரணையோ கவித்துவ உச்சமோ கொள்ள வேண்டிய தருணங்களைத் தவறவிட்டிருக்கிறார். இயற்கை சார்ந்த வர்ணனைகளிலும் போதுமான உயரத்தை எட்டவில்லை. குறிப்பாக, நாவலில் ஐந்து இடங்களில் நண்பர்கள் மலை மேல் சந்திக்கின்ற காட்சிகளும், கோவில், மண்டபம், இயற்கை சார்ந்த வர்ணனைகளும், தொப்பி அணிந்த பைத்தியக்காரன் பற்றிய சித்திரிப்புகளும் அவை நிகழ்த்தியிருக்க வேண்டிய முழுமையான பாதிப்பை நமக்குள் உருவாக்கவில்லை. அந்தச் சந்திப்புகளும் சண்முகத்தின் வீட்டில் நிகழும் உரையாடல்களும் நாவலின் சம்பவங்களுக்கு விளக்கம் தரும் பாணியிலேயே எழுதப்பட்டிருக்கின்றனவே அன்றி அவற்றில் வேறு விதமான உச்சங்கள் இல்லை.
இந்தச் சிறு பலவீனங்களைக் களைந்துவிட்டுப் பார்த்தால் இந்த நாவல் தமிழ்ப் புனைவுலகின் மகத்தான ஆக்கங்களில் ஒன்று. ஊரை வைத்து உருவாக்கப்பட்ட கதையில், மனிதர்களின் தீர்ந்துவிடாத உணர்வுகள் வண்ணங்களால் பெருகி சாயம் போவதைக் காண்கிறபோது மணலாய் உதிரும் மனதின் பாவனைகள் காலமாகி உறைந்து நிற்பதை இந்த நாவலை எப்போது வாசித்தாலும் உணர முடியும்.
3 comments
நான் படிக்காத இந்த நாவல் தங்கள் விமர்சனவழி படிக்கத்தூண்டுகிறது.சமூக, வட்டார தளங்களில் மனித ஆன்மாவைப்பிசைந்து சமைக்கப்பட்டதாகத்தெரிகிறது.
கட்டுரையை வாசிக்க வாசிக்க ஒரு நாவலை வாசித்த உணர்வு ! ஒரு நாவல் பற்றி இப்படியெல்லாம் அலச முடியுமா ?!!!
அற்புதம் ! மனிதர்களை பற்றி அவர்கள் குணங்களை பற்றி!!!…அழகாக, சரியாக புரிந்து வைத்திருக்கிறார் பேராசிரியர்!.மனித குணச்சித்திரங்கள் யாவும் மனம் உணரும் பிரம்மைகள் !!! அடடா இதை புரிந்து கொள்ள முடியாமல் தானே மனிதன் குழம்பிப் போகிறான் !…. எவ்ளோ இயல்பாக சொல்லிவிட்டார்!.
அதுவும் காமம் பற்றி, அதில் வரும் பெண் கதாபாத்திரங்களின் உணர்வுகள்… இறுதியாக, அண்ணாச்சியின் மொழியில், அதை பேசியிருப்பது…. பேராசிரியரின் touch அது !!!
நாவல் விவரிக்கும் அன்றைய திருப்பூரின் முகத்தையும், சரியாக சுட்டிக்காட்ட தவறவில்லை.
ஒரு நல்ல கட்டுரை வாசித்த நிறைவு !!
பசிநேரத்தில் அறுசுவை உணவு கிடைத்த பிரதிபலிப்பாய் பேராசிரியரின் விமர்சனம். கதையைக் கண்முன்னே நிறுத்தும் லாவகம். சமுகக் கட்டமைப்பில் இப்போது காமமே மிஞ்சி நிற்கும்போது எழுத்தாளனின் கைகளும் அதைப் பற்றிக் கொள்வதில் தவறில்லை. கைகளின் எழுதுகோலுக்கு அன்பும் வாழ்த்தும் ????
Comments are closed.