கூன்வண்டு

4 comments

படுக்கையில் என் மார்பு மீது கையை ஊன்றி அதில் தலையைச் சாய்த்து, மேல்நோக்கி விழிகளை உயர்த்தி, “ஹேப்பியா இருக்கீயாடா?” என்றாள் புனிதா. நானும் உடனடியாக, “ஏன்.. நல்லாத்தான் இருக்கேன்” எனப் பொய் சொல்லிவிட்டேன். அவளோடு இருக்கையில் இப்படிப் பொய் பேச வேண்டியிருக்கிறது. மனதில் இருந்ததை அப்படியே அவளிடம் கொட்டிவிட முடியாது என்பதால், என் வார்த்தைகளைத் தணிக்கை செய்தபடியே இருப்பேன். கையில் ஜெபமாலையை வைத்து மெதுவாக ஒவ்வொன்றாய் உருட்டுவதைப் போல வார்த்தைகளைப் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் தடவித் தள்ளுவேன்.

கடைசியாய் எப்போது மகிழ்ச்சியாய் இருந்தேன் என மல்லாக்கப் படுத்து யோசித்தேன். மலைக்குப் போகையில் ஒரு திருப்பத்தில் வண்டியைத் திருப்புகையில் அதுவரை தொட்டோடிய சிந்தனைகளில் இருந்து விடுபட்டு ஐந்து நிமிடங்கள் மனம் மகிழ்ச்சியாய் உணர்ந்தது. என்னை அறியாமல் விசிலடித்தேன். காரில் ஓடிக்கொண்டிருந்த பாடலில் மனம் ஒன்றியது. அந்தப் பாடல் புனிதாவோடு காதலில் தித்தித்துக்கொண்டிருந்த போது வெளியான படத்தில் வந்தது. அப்போது மனதில் உருவான குறுகுறுப்பு இன்னமும் மறையாமல் இருந்தது. எங்கே பதுங்கி இருந்தது அதுவரை? ஐந்து நிமிடம் அந்த அனுபவம் நீண்டது. அப்புறம் அம்மலையில் இருந்து சிந்தனை என்கிற பாறை தலையுச்சியில் வந்து விழுந்தது.

இரண்டாவது தடவை என் தொழிலில் மிக முக்கியமான தொடக்கம் ஒன்றைச் செய்து முடித்துவிட்டு வந்தபோது, ஆழமான மகிழ்ச்சியை அனுபவித்தேன். பெருமிதம்கூட கண்ணில் நீர் வரவைக்கும் என்பதை உணர்ந்தேன். நான்கு நிமிடங்கள் அப்படி இருந்திருப்பேன். பின்னர் காரின் சக்கரத்திற்கு இணையான வேகத்தில் எண்ணங்கள் சுழன்றடிக்கத் தொடங்கின. இவை தவிர சமீப ஆண்டுகளில் நான் இவ்வளவு தித்திப்பான மகிழ்ச்சியில் திளைத்தது இல்லை.

தென்னம்பிள்ளைகள் வைத்திருக்கிற பகுதியில் ஒரு வண்டு உண்டு. சிவப்புக் கூன்வண்டு என அதைச் சொல்வார்கள். பார்ப்பதற்குச் சின்னக் கல் அளவிற்குத்தான் இருக்கும். ஆனால் அது ஒரு மரத்திற்குள் நுழைந்துவிட்டால், உறுதியாய் நின்ற மரத்தைக்கூட அப்படியே இரண்டாய்க் கொறித்தே அறுத்துப்போட்டுவிடும். அந்த வண்டேறிவிட்டால் மரத்தைப் பிழைத்துக் கிடத்தால் பார்க்கலாம் என்கிற கணக்கில் கைவிட்டுவிட வேண்டியதுதான். ”இத்துனூண்டு வண்டு எம்மாம் பெரிய மரத்தையும் போட்டுச் சாச்சிருது பாருங்க. எம்புட்டு சக்தி அதுக்கு” என்றார் ஒருத்தர். எனக்குப் புனிதாவைப் பற்றிய எண்ணங்கள் அந்தக் கூன்வண்டைப் போல. அதை நினைக்கத் தொடங்கிவிட்டால் வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. அப்படியே அதை அந்தரத்தில் விட்டுவிட்டு, நொய்மை ஆகி மனம் சோர்ந்து அடங்கிவிடும். ஆனாலும் அவளைக் குறித்த எண்ணம் என்கிற புலி வாலை என் மனம் சேர்த்துப் பிடித்திருக்கும். இந்த மகிழ்ச்சியற்ற என்னுடைய நிலை என் தொழிலிலும் எதிரொலித்தது. எப்போது வேண்டுமானாலும் பாத்திரம் உடையலாம் என்கிற நிலை இருந்ததால், அதைப் பாதுகாக்க வேண்டிய ஆர்வமே எழவில்லை. செயல்களில் சோர்வு பிள்ளைப்பூச்சியைப் போலச் சட்டையில் ஒட்டிக்கொண்டு வந்தது.

எனக்குப் பக்கத்து அலுவலகத்தில் பணிபுரிந்த புனிதாவிற்கும் எனக்கும் காதல் திருமணம். ஊர் உலகத்து எதிர்ப்புகளை எல்லாம் மீறி, என் சொற்ப சம்பளத்தை நம்பி வந்தாள். காதல் காலங்களில் தொலைபேசிகளில் பேசும்போது, விடிய விடியவெல்லாம் அவளோடு மனமொட்டிப் பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன். அவளிடம் சொல்வதற்கான கதைகளை நாள் முழுதும் திரட்டுவேன் ஆர்வமாய். சேர்ந்து வாழ்கையில் எல்லோருக்கும் சிக்கல்கள் இருக்கும்தான். ஆனால் என்னுடைய சிக்கல், நான் குறுகிய கால இடைவெளிகளில் வெவ்வேறு மாதிரி பந்தாடப்பட்டுக்கொண்டிருக்கிறேன். நாள் முழுவதும் மைதானத்தின் எல்லாத் திசைகளுக்கும் போய் மீள்கிறது பந்து.

அதை விளக்கிச் சொன்னால்தான் யாருக்கும் புரியும். புனிதா எந்த நேரத்திலும் வெடிக்கப் போகிற அணுகுண்டைப் போலத் திடீரென மாறிவிட்டாள். முன்பெல்லாம் அப்படி இருந்த நினைவே எனக்கு இல்லை. இப்போதுதான், ஆனால் எப்போது மாறினாள் என்று தெரியவில்லை. ஓலை வெடியாய் இருந்தாலே தெறித்து ஓடிவிடுவோம். அதுவும் தடித்த பச்சை நூல் சுற்றிய பெருங்காய டப்பா அளவில் இருக்கிற அணுகுண்டு. இந்த உதாரணத்தைவிட வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவள் கண்ணில் நீர் வழியச் சிரிப்பாள். அதைப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கிற அடுத்த நொடி, தேவையில்லாத ஒரு வார்த்தை சட்டென அவளது மனநிலையைக் குலைத்துப் போட்டுவிடும். அடுத்த நொடி மலை உச்சியில் உக்கிரமாக நிற்பாள்.

அதனைத் தொடர்ந்து நீள் அழுகை. சில சமயம் அவளைக் கோபமாக நெருங்கிப் போகையில் பதிலுக்கு நகப் பிறாண்டல்கள், அப்புறம் கையில் காலில் விழுந்து சமாதானம். பிறகு மீண்டும் கண்ணில் நீர் வழியச் சிரிப்பு. இந்தச் சங்கிலியை நாள் முழுக்க காந்தியின் ராட்டை போலக் கவனமாகச் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதில் திடீரெனச் சிக்கல் வருகையில் மீண்டும் மலையுச்சி. பிறகு பாதாளம் நோக்கி நீர் அடித்துக்கொண்டு வந்து கடைசியில் காயலில் படகு ஓடுகிற, அலையே இல்லாத பதத்திற்கு வந்துவிடும்.

இப்படி மாறி மாறி இருக்கும் நிச்சயமில்லாத தன்மை என்னை வாட்டி எடுத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் என்ன செய்வார்கள் என்பதே தெரியாத ஒருத்தருடன் எப்படி இணைந்து அமர்ந்திருப்பது? புனிதாவிடம் இருந்து என்னைத் துண்டித்துக்கொண்டு ஓடிவிட எப்போதும் எத்தனிப்பேன். அவளோடு இருக்கையில் அவள் முன்பு முன்னெடுத்த பழைய சண்டைகளை எண்ணியபடி இருப்பேன். அவள் அடுத்து மாறப்போகும் தருணத்தை உற்று நோக்கிக்கொண்டிருப்பேன். அதைப் பல சமயம், “அடுத்து இதைத்தானே பண்ணப் போற?” எனச் சொல்லிக் காட்டவும் செய்திருக்கிறேன். நான் சொன்ன மாதிரியே எல்லாச் சமயங்களிலும் அந்தச் சண்டை தொடங்கி இருக்கிறது. அப்படிக் கணிக்கிற விஷயத்தில் என்னையே மெச்சியும் கொள்வேன்.

அவளோடு இருக்கிற சமயங்களில் மட்டுமல்லாமல், பிற வேலைகள் செய்யும்போதுகூடப் புனிதாவை எடைபோட்டபடியே இருப்பேன். “இந்நேரத்தில் அவள் இருந்தால் இந்த இடத்தில் என்ன செய்திருப்பாள்? அதற்குப் பின்னால் செயல்படுகிற அவளது உளநிலை என்ன?” அவளது மாறுகிற மனநிலைகளை நூலைப் போலப் பிரித்து ஆராய்ந்துகொண்டிருப்பேன். அவள் முதல் கேள்வி கேட்கும் போதே, “இனிமே இந்த ஆர்டர்ல கேட்டு கடைசியா அங்கதான வந்து நிப்ப? அதுக்கு நான் கடைசிக் கேள்விக்கே நேரடியா பதில் சொல்லிடறேன்” என்பேன். “உன்ட்ட மனுஷங்க பேச முடியாது. வை போனை. என் தப்பு. உன்ட்ட வந்து மாட்டிக்கிட்டேன். சரியான சைக்கோ. வளர்த்திருக்காங்க பாரு” என்று இணைப்பைத் துண்டிப்பாள்.

சிலசமயம் குற்றவுணர்வு வந்து அவளை அழைத்து, “சும்மாத்தான் கூப்பிட்டேன்” என்பேன். ஆனால் அந்தத் தொலைபேசி அழைப்பின் இறுதி முனையில் நான் எதிர்பார்த்த அந்தத் துக்கம் குத்துக்கல்லைப் போல நின்றுகொண்டிருந்தது உறுதியாகும். “நாயை எதுக்கு அடிப்பானேன்? அதை எதுக்கு சுமப்பானேன்?” என்கிற மனநிலைக்கு வந்து சேர்ந்துவிடுவேன். என்றாவது ஒருநாள், “சும்மாத்தான் கூப்பிட்டேன்” என அவள் இணைப்பிற்கு வருவாள். அன்றைக்கு மிகப் பத்திரமாக ஜெபமாலையை உருட்டுவேன். எதிர்பார்த்திருந்தது நடக்க நடக்க, என் இருப்பு சமாதானமாகும். சரியான திசையில்தான் போய்க்கொண்டிருக்கிறேன் என்கிற முடிவிற்கு எளிதாக வந்து சேர்ந்துவிடுவேன்.

சமீபமாக அவளிடம் அவளது மாறுகிற மனநிலைகள் குறித்து ஆராய்ந்து எடைபோட்டுச் சொல்லவும் தொடங்கினேன். “உன் லெக்சர விடறீயா? நான் பைத்தியம் இல்லை. கடைசியா அப்படி ஆக்கிடவும் செய்யாத. அதுதான் உன் திட்டமா?” என்றாள். அந்தச் சண்டை பிரிகிற எல்லை வரை போய் நிறுத்தியது. ஒருகட்டத்தில் என்னுடைய எல்லா வார்த்தைகளுமே திரியின் நுனி நெருப்பைப் போலவே மாறிவிட்டன. நேர்கோட்டில் செலுத்தும் பொருட்டிலான முயற்சிகளை எல்லாம் கைவிட்டுக் கையறு நிலையில் நின்றேன். நிதமும் கோவில்களில் போய் மனமுருக வேண்டிக்கொண்டு நின்றிருப்பேன். ஒன்று தெய்வம் திருத்த வேண்டும், இல்லையெனில் இவள் தெய்வமாய் மாறித் திருந்த வேண்டும். வேறு வழியே இல்லை.

தப்பித்து எங்கும் ஓடிவிட முடியாத நிலையில் மீண்டும் மீண்டும் அந்தக் கூண்டிற்குள்ளேயே தஞ்சமடைகிற மாதிரிதான் வாழ்க்கை. ஒருதடவை உச்சகட்ட சண்டையில் என்னை அவதூறாகப் பேசிவிட்டாள். அவள் வாயில் இருந்து அப்படியான வார்த்தைகள் வரலாமா? அவளை நெருங்கி கழுத்திற்குப் பக்கத்தில் கையை வைத்தபோது, மேசையில் இருக்கிற கத்தியைக் காட்டிக் குத்த வந்தாள். “என்னை நீ டெம்ப்ட் பண்ற. நான் அமைதியாத்தான் இருக்கணும்னு நெனைக்கறேன். கயிறொன்ன கைல வச்சுக்கிட்டு பொம்மை மாதிரி என்னை ஆட்டுற” என்றாள் சத்தமாக. சட்டென அமைதியாகிவிட்டேன். இன்னும் சில வார்த்தைகளை நான் விட்டிருந்தால் குத்தியே இருப்பாள். ஆனால் அதன் நுனியைவிட அவள் வார்த்தைகள் என்னை அதிகமும் பதம் பார்த்தன. இனியொரு நிமிடம்கூட அவளோடு இருக்கக்கூடாது, என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து என்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினேன். அப்போது வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது.

கோபத்தில் என்னுடைய வங்கி அட்டையைத் தூக்கி எறிந்துவிட்டு வந்திருந்தேன். எங்கே போவது? கிளம்பும் போது, தப்பிவிட்ட ஆசுவாச உணர்வோடுதான் கிளம்பினேன். ஆனால் நடக்க நடக்க அனாதை போல உணர்ந்தேன். நாயகன் ஒருத்தன் அனாதையாய் உணர்ந்து பாடும் பாடலை என்னை அறியாமல் பாடினேன். மழைத் தூறலோடு சேர்ந்து வெறுமையும் அதன் இறுதியில் பரவுவதை உணர்ந்தேன். நாளையில் இருந்து எதைப் பற்றிக்கொள்வது என்கிற கேள்வி எழுந்தபோது எனக்கு அழுகை வந்தது.

அவள் கல்நெஞ்சத்தோடு என்னை அழைக்காமல் அமர்ந்து இருந்த காட்சியை யோசித்தேன். அவள் மீது திரட்டி எறிகிற அளவிற்கு வெறுப்பு மூண்டது. அந்த நேரத்தில் அவள் அழைத்து, “எங்க இருக்க?” என்றாள். ”நீ” என்றேன். “உனக்குப் பின்னாலதான்” என்றாள். காரில் ஏறியதும் அவளுமே அடக்க மாட்டாமல் அழத் தொடங்கினாள். “ரெம்ப ஸாரி” என்றாள். நான் அவளது மார்பில் முகம் புதைத்து அழுது முடித்த பின், “இப்ப இப்படி அணைச்சுக்குவ. இன்னும் கொஞ்ச நேரத்தில எப்படி வெடிக்கப் போறேன்னு யாருக்குத் தெரியும்? நாயோட கண்ணையும் பேயோட கண்ணையும் உத்துப் பார்க்கக்கூடாதுன்னு சொல்வாங்க” என்றேன். 

வெறிகொண்டு என்னை உதறியவள், “உனக்கு எந்நேரமும் என்னைக் குறை சொல்லாட்டா அடங்காது. உன்ட்ட மாட்டிக்கிட்டு நான் சீரழியறேன். என் தலையே வெடிக்கிற மாதிரி இருக்கு” என்றாள். ஆழ்ந்த அமைதி என்கிற ஆயுதத்தை எடுத்து அந்தப் பயணத்தில் தப்பித்து வீடு வந்துசேர்ந்தேன். ஆனாலும் உள்ளுக்குள் அலையடித்துக்கொண்டுதான் இருந்தது. சிலமுறை சொல்ல முயன்று வாயை அடக்கியும் கொண்டேன். எதற்காகத் திரும்பி வந்தேன்? “எந்தச் சூழ்நிலையிலும் நம்பி வந்த பொண்ணை கைவிட்டிரக் கூடாதுடா” என அம்மா சொன்னது எனக்கு நினைவில் வந்தபோது சமாதானமாக இருந்தது.

அதற்காகத் தங்க ஊசியைக் கொண்டு கண்ணைக் குத்திக்கொள்ள வேண்டுமா? அவள் குறித்து அவளது நண்பர்களோடு, அவளுக்குத் தெரியாமல் பேசத் தொடங்கினேன். என்னைத் தவிர எல்லோரிடமுமே அவள் நன்றாக இருந்தாள். “தினமும் ஒரு அரைமணி நேரம் பேசறீங்க. நாள் முழுக்க இருந்து பாருங்க. தெறிச்சு ஓடிருவீங்க” என்றேன் அவளது தோழிகள் சிலரிடம். அங்கேயும் கோப தாபங்களைப் பிரயோகிக்கிறாள்தான் என்றாலும், யாரும் தெறித்து ஓடிவிடவில்லை என்றே தெரிந்தது.

அவர்களிடம் அவள் நன்றாக நடிக்கக் கற்றுக்கொண்டாள். முந்தின நிமிடம் ஒருத்தரிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அடுத்த நிமிடம் எப்படி என்னோடு கட்டிப் புரண்டு சண்டையிட்டுக்கொள்ள முடியும்? அவள் என்னிடம் மட்டுமே இந்த அதிகப்படியான இடத்தை எடுத்துக்கொள்கிறாள் என்பதை உணர்ந்தேன். அவளுடைய எல்லா மனநிலைகளையும் வேறு எங்கும் கொட்டாமல், குப்பைத் தொட்டியாய் என்னை மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருக்கிறாள். அவள் எடுக்கிற வாந்திகளை எல்லாம் எதற்காகக் கையிலேந்த வேண்டும் என்றெல்லாம் நுணுக்கி நுணுக்கி யோசித்து ஒருகட்டத்தில் நிலைகொள்ள முடியாத பதற்றத்திற்கு ஆட்பட்டேன். அப்படி ஒருநாள் சிந்தித்துக்கொண்டிருந்த போது தொலைபேசியில் அழைத்து, “நான் மால்ல இருக்கேன். பேபி உனக்கு என்ன வேணும்?” என்றாள். பதிலுக்கு “மரியாதை” என்றபோது இணைப்பு துண்டிக்கப்பட்டது.

எனக்கு நான் கேட்டது மறுக்கப்பட்ட பிறகு, தர்காக்கள், சமாதிகள், யோகா, நவீனச் சாமியார்கள் எனத் தேடித் தேடி அலையத் தொடங்கினேன். என்னால் இந்த உறவில் இருந்து வெளியேற முடியாது. குதிரைக்கு சேனம் அது ஒத்துக்கொண்டு படுத்தபோதே அடிக்கப்பட்டுவிடும். இனி அது சரக்சரக்கெனச் சத்தத்தோடுதான் ஓடவேண்டும். எப்படி என்னை இதற்குத் தோதாய்த் தகவமைத்துக்கொள்வது என்கிற சிந்தனை மட்டும் நொடி முள்ளைப் போல என்னை விடாமல் குத்திக்கொண்டிருந்தது. இதிலிருந்து வெளியேற என்னை ஒப்புக்கொடுத்து, யார் தாழ்பணியவும் தயாராகவே இருந்தேன். இதையெல்லாம் அவளையும் செய்யச் சொல்லி வலியுறுத்திய போது, புனிதா, “எனக்கெதுக்கு அது? நீ எங்க போனாலும் யார்ட்டயாச்சும் வம்பு வளர்த்து செருப்படி வாங்கிருவ. பார்த்துகிட்டே இரு” என்றாள்.

ஆசிரமம் ஒன்றிற்கு விரைந்து, அமைதியாய்த் தியானத்தில் அமர்ந்து பார்த்தேன். மூன்று நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சோழிகளைக் கையில் போட்டுக் குலுக்குவதைப் போல உள்ளுக்குள் செய்துகொண்டிருக்கிறேன் என்பது கண்மூடி அமர்ந்திருந்தாலும், எனக்குத் தெரியுமே? எதனோடும் ஒட்டமுடியவில்லை என்பதால், கடவுள் நம்பிக்கையில் இருந்தே வெளியேறிவிடலாமா என்றுகூட யோசித்தேன். ஒருநாள் போதையில் என் கைப்பேசியில் வைத்திருந்த சாமியார் ஒருத்தர் படத்தின் மீது காறி எச்சில் உமிழ்ந்தேன். பிறகு என் நிலையை மனதிற்குள் தொகுத்து எண்ணி மன்னிப்பும் கேட்டேன்.

அமைதி ஒன்று மட்டுமே என்னுடைய கடைசி பிரம்மாஸ்திரம் என்கிற நிலைக்கே கடைசியில் வந்து நின்றேன். ஆனால் அதற்கும் அவளிடம் அனுமதி மறுக்கப்பட்டது. “எந்நேரமும் ஒரு உறவில ஒரு கான்ஸியஸ்னஸோடவே எப்படி இருக்கறது? என்னைக் குறுகுறுன்னு கண்காணிச்சுக்கிட்டே இருக்க நீ. உனக்கு நான் பைத்தியம்னு உலகத்துக்கு சொல்லணும். நீ நல்லவன்னு நம்ப வைக்கணும். அதான் உன் குறி. அதை நோக்கித்தான் நீ என்னை நகர்த்துற” என ஆரம்பமான சண்டை கடைசியில் என்னுடைய பெற்றோரை அவதூறாகப் பேசுவதில் வந்து நின்றது.

செல்போனைத் தரையில் போட்டு உடைத்தாள். “உன்னை விட்டு ஒருநாள் போகப் போறேன். நீ பிச்சையெடுக்கிற காட்சியை நான் பார்க்கத்தானே போறேன். நீ ஆடற ஆட்டத்துக்கெல்லாம் கடவுள் கூலிய கொடுப்பாரு. உன்னையெல்லாம் நம்பி வந்தேன் பாரு. என்னைச் செருப்பைக் கழட்டி அடிச்சுக்கணும். கெட் லாஸ்ட். சரியான தேவிடியா பையன். ஒரு நிமிஷம்கூட நிம்மதியா இருக்க விடமாட்டேங்கறான். செத்தும் தொலைய மாட்டேங்குறான். வண்டு மாதிரி மண்டைக்குள்ள எந்நேரமும் நொய்நொய்னு. சரியான சைக்கோ” என்று சொல்லிவிட்டுச் செருப்பை எடுத்துத் தலையில் அடித்துக்கொண்டாள்.

கதவைச் சாத்திவிட்டு வெளியே வந்தேன். இனி ஒருபோதும் திரும்புவதில்லை என முடிவெடுத்துத் திட்டமிட்டு, என் பொருட்கள் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தேன். தண்ணீர் குடிக்கப் போன போது, கிடைத்த இடைவெளியில் பார்த்தேன், அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். எதாவது கடிதம் எழுதி வைக்கலாமா என யோசித்தேன். என்ன எழுதுவது? தெரியாமல் செய்கிறவர்களுக்கு உணர்த்தலாம். அறிந்தே செய்பவளிடம் எத்தனை தடவை சொல்வது? எத்தனை தடவை சொன்னாலும் மறந்துவிட்டேன் என்று பொய் சொல்கிறாள். எதுவுமே நடக்காதது மாதிரி அப்போது அவள் சிரிக்கையில் எனக்கு வெறுப்பு மண்டிக்கொண்டு வரும். சுவருக்காவது காது இருக்கும்? இவளுக்கெல்லாம் தூக்கம் எப்படி வருகிறது?

வெளியேறி நண்பன் ஒருத்தன் இருக்கிற தேயிலைத் தோட்டத்திற்குக் கிளம்பினேன். எப்போது திரும்புவேன் என்பது அப்போது எனக்கே தெரியவில்லை. போகிற வழியில் நெஞ்சடைத்துச் செத்தால்கூட தேவலை. நெஞ்சு வலியில் காரைக் கொண்டுபோய் எதிரில் வருகிற வண்டியில் விடுவதைப் போலக் கற்பனை செய்து பார்த்தேன். வண்டியில் என்ன பாடல் ஒலிக்கிறது என்பதே தெரியாத கூர்மையான சிந்தனையிலேயே தார்ச்சாலையில் பயணம் செய்தேன்.

என்னுடைய நண்பனுக்கு எங்கள் இருவரையுமே தெரியும். அவனுடைய சமாதானங்கள் எதுவுமே செல்லுபடியாகவில்லை. “வாழ்ந்து பார்க்கறவங்களுக்குத்தான் அதோட வலி தெரியும். சும்மா நாலாவது பெக்ல ஏதாச்சும் அட்வைஸ் பண்ணத் தோனத்தான் செய்யும். அடுத்த நிமிஷம் உன் பொண்டாட்டி என்ன செய்வான்னு தெரியாம வாழ்ந்து பாரு தெரியும்” என அவனிடம் முகம் வெட்டினேன்.

கையில் ஓஷோ எழுதிய தம்மபதம் என்கிற புத்தகத்தை எடுத்துக்கொண்டு, தொலைபேசியை அணைத்துவிட்டு, அந்த மலை உச்சியை நோக்கி நடந்தேன். தேயிலைத் தூர்களை ஆட்டிப் பார்த்தேன். ஒருமுறை மின்சார வாரியத்தில் பணியில் இருந்த நண்பர் ஒருத்தர், தேயிலைத் தூரைக் காயவைத்துப் பாடம் பண்ணி மேசை மேடையாகத் தந்திருந்தார். மேலே கண்ணாடி பொருத்தப்பட்டு, அவ்வளவு உறுதியாய் இருந்தது அது. தேயிலை மரமாக வேண்டியதுதான். அதை இப்படி அடக்கி நுணுக்கிச் செடியாக வைத்திருக்கிறார்கள். தலையில் எந்நேரமும் வெட்டுப்பட்டுக்கொண்டே இருந்தாலும் இப்படி வாழ்நாள் முழுக்க குட்டையாகத்தான் என யோசித்தபடி அந்த மேட்டில் அமர்ந்து புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன்.

இதை ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். அர்த்தம் புரியாவிட்டாலும் இதைப் படிக்கையில் ஏதோ ஆசுவாசம். ஆனால் முதல் ஐந்து பக்கங்களைக்கூட என்னால் தாண்ட முடியவில்லை. மறுபடி மறுபடி நுழைந்தும் வெளியே தள்ளியது என்னை. அதில் உள்ள எண்ணங்களை அடக்குவது, தூய மனம் என்ற வார்த்தைகள் எல்லாம் அவ்வப்போது என்னைச் சுழன்றடித்தன. அந்த முறையும் என்னால் அந்தப் புத்தகத்தினுள் நுழைய முடியவில்லை.

புனிதா என்னைத் தேடிக்கொண்டிருப்பாள் என்கிற எண்ணம் வந்தபோதே, அவள் என்னைக் கத்தியால் குத்த வந்த காட்சி தெரிந்தது. என்னைக் காறி உமிழ்ந்துவிட்டு தலையில் மடார் மடார் என அடித்துக்கொண்ட சத்தமும் காதுக்குள் கேட்டது. தூரத்தில் நான் அந்தத் தேயிலைத் தூரையே கவனித்துக்கொண்டிருந்த போது என் பின்னால் காலடிச் சத்தம் கேட்டது. எங்களுடைய பங்களாவில் வேலை பார்க்கும் சமையல்காரர் சிவமணி வந்து நின்றார். ஒரு குழந்தையாய்ப் பாவித்து எனக்கு கால் அழுத்தியெல்லாம் போன தடவை தூங்க வைத்தார்.

”சீக்கிரம் கிளம்புங்க எஜமான். அந்த உர கொடவுனுக்குள்ள போயிடலாம். இன்னும் ஐஞ்சு நிமிஷத்தில மழை அடிச்சு ஊத்த போகுது. இதுகூட தெரியலையே உங்களுக்கு” என்றார். மூத்தவரான அவருடைய இருப்பு அந்நேரத்தில் எனக்குத் தேவையானதாகவும் இருந்தது. துடித்துச் சிரிக்கிற கண்களை என்னை நோக்கிக் குவித்து ”மலையில கடல் கொந்தளிக்குது போல” என்றார் கிளம்பும் முன்னர்.

சிவமணி சொன்ன மாதிரியே வானத்தைக் கருமேகங்கள் மூடி அடர் மழை அடித்துப் பெய்யத் தொடங்கியது. அதனுடன் இணைந்து குளிரும் எடுத்துக்கொண்டது. மழை அதுவரை இருந்த வெளிச்சத்தைத் தன் தும்பிக்கையால் உறிஞ்சி எடுத்துவிட்டதைப் போல இருந்தது. சிவமணி சில குச்சிகளை எடுத்து வந்து மூட்டம் போட்டார். சாக்கு மூட்டைக்கு அடியில் ஒளித்து வைத்திருந்த, ரம் பாட்டிலை எடுத்து, “எஜமான் இதையெல்லாம் குடிப்பீங்களான்னு தெரியாது. அத்துவானச் சரக்கு இது” என்றார்.

பாட்டிலை கையை நீட்டி வாங்கிக்கொண்ட போது, சிவமணி கீழே கிடந்த தம்ளர்களை நசுக்கிச் சரிப்படுத்தி, மழைத் தண்ணீரில் கழுவிக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு, “நம்மளை இந்த தண்ணி மாதிரி நினைச்சுக்கணும். கிடைக்கிற பாத்திரத்தில மனசுக்கு நிறைவா நிறைஞ்சிடணும். காட்டாறாத்தான் இருப்பேன்னு அடம்பிடிக்கக் கூடாது. சில நேரங்கள்ள சாக்கடையாகூட வாழ்க்கை ஓட வச்சிரும்” என்றார். வேகவேகமாக இரண்டு சுற்றுகள் குடித்த பிறகும் நெஞ்சில் இருந்த பாரம் விலகவில்லை. எனக்கு நடுவே குத்த வைத்து ஆடும் தீச்சுவாலையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“எஜமான் எதையாச்சும் ஊர்ல விட்டுட்டு வந்துட்டீங்களா? தொலைஞ்சுரும்னு பயப்படறீங்களா?” என்றார்.

பதில் சொல்லாமல் தீச்சுவாலையில் இருந்து கண்களை அகற்றி சிவமணியையே உற்றுப் பார்த்தேன். “மழையைக்கூட உங்களால ரசிக்க முடியலை. எந்நேரமும் எதையாச்சும் போட்டு உழட்டிக்கிட்டே இருக்கக்கூடாது எஜமான். மழை மாதிரி இருந்துட்டு போகணும். அந்தந்த நேரத்து வானத்துக்கு தகுந்த மாதிரி” என்றார்.

பகலில் நண்பனுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டிருப்பாரோ எனச் சந்தேகம் வந்து அவரையே மோப்பம் பிடிக்கிற பாவனையில் பார்த்தேன். அவர் மிக இயல்பாய் தன்னுடைய ஓட்டைப் பல்லைக் காட்டிச் சிரித்துவிட்டு, என்னை எழுந்து பங்களாவிற்கு வரச்சொன்னார். என் மனதில் இருந்த பாரம் அப்போது வற்றியதைப் போல இருந்தது. சிவமணி மீது மரியாதைகூட எனக்குள் முளைவிட்டது. அவரிடம் அனுமதி கேட்காமலேயே உச்சி ஒன்றிற்கு அருகே இருந்த சமதளம் ஒன்றைக் கடக்கையில் கையைப் பிடித்துக்கொண்டேன். உச்சி என்றாலே அங்கே சமதளம் என ஒன்று இருக்கத்தானே செய்யும்?

“எஜமான் இப்ப இந்த மலையில இருந்து விழுந்து சாக மாட்டேங்கறதுக்கு உங்களால உத்தரவாதம் குடுக்க முடியுமா? நாங்கள்ளாம் யானை புலியோட கெடந்து வாழ்றவங்க. அடுத்த செகண்டு என்ன நடக்கும்னே தெரியாத வாழ்க்கை. இப்ப நான் இருக்கேன் பாருங்க அதுதான் நெசம்” என்றார்.

நான் யோசனையுடன் நிமிர்ந்து பார்த்தேன். “மத்தியானத்தில இருந்து எஜமானை பார்க்குறேன். சில நேரங்கள்ள கடவுள் யாரையாச்சும் அனுப்பி நினைச்சதைச் சொல்ல வைப்பாருன்னு சொல்லும் எங்க அம்மா. இந்த தடவை கூலிக்காரனை அனுப்பி இருக்கார்னு நெனைச்சுக்க வேண்டியதுதான். என் பிள்ளை மாதிரி நினைச்சு சொல்றேன். எனக்கு மனசே கேட்கலை. ஏதோ பாறாங்கல் ஒன்ன தலையில தூக்கிட்டு உக்காந்திருந்தீங்க. சனியனை எதுக்கு எந்நேரமும் சுமந்துக்கிட்டு உக்காந்திருக்கீங்க? மலையே வேண்டாம்னு உருட்டி விட்ட கல்லு அது” என்றார்.

“என்னிடம்தான் பிரச்சினையா?” எனப் பொத்தாம் பொதுவாக அவருக்குக் கேட்காமல், இருளை நோக்கிக் கேட்டேன்.

“பொதுவா சொல்றேன். இந்த இருட்டு இருக்கு பாருங்க. அது பாட்டுக்கு இருக்கும். ஆனா மனசில பயம் வந்திருச்சுன்னு வைங்க. இந்த இருட்டுல மனசு பயப்படறதுக்கு எதையாச்சும் காரணம் ஒன்னைத் தேடிக்கிட்டே இருக்கும். ஒரே இடத்தில நிக்கற பாறைகூட யானையா தெரியும். இன்னைக்கு பயந்த இடத்தில காலையில வந்து நின்னு பாருங்க. நம்ம மண்டையிலயே மடேர்னு போட்டுக்கணும் போல இருக்கும்” என்று சொல்லிவிட்டு எழுந்தவர், அந்தப் புத்தகத்தைக் கையில் வாங்கி பங்களா முகப்பு ஒளியில் காட்டிக் கூர்ந்து பார்த்துவிட்டு, “படத்தில இருக்க ஆளு தங்கபஸ்பம் சாப்பிட்ட மாதிரி அம்சமா இருக்கார்” என்றார்.

பிறகு அதை என் கையில் கொடுத்துவிட்டுக் கிளம்பும் முன்னர், “கோபமோ தாபமோ அந்த செகண்டுல வாழ்றவங்க பாக்கியவான்கள் எஜமான்” என்று சொல்லிவிட்டுத் தனது குடியிருப்பை நோக்கி, ”சப்பாத்திக்கு மாவு பிசஞ்சுட்டீங்களாடா?” எனக் குரல் கொடுத்தார். எதற்காக வந்தார், எதையோ குறிப்பால் உணர்த்திவிட்டுப் போகிறாரா என்றெல்லாம் ஆற அமர குனிந்து யோசித்தேன். சட்டென ஒரு மின்னல் வெட்டியதை அது கடந்துபோன பிறகு பார்த்தேன். ஆனால் தலைக்குப் பின்னால் அந்த வெளிச்சத்தை உணர்ந்தேன்.

மென்தூறலில் நனைந்தபடி, கோபமோ தாபமோ என்கிற வார்த்தையை மறுபடி மறுபடி சொல்லிப் பார்த்தேன். புனிதா ஒரு நீள்படமாய் பல்வேறு கணங்களுக்குள் ஓடிக் கடைசியாய் மலர்ந்து அக்கணத்தில் சிரிக்கிற காட்சியில் வந்து முடிந்தாள். பதற்றங்கள் தணிந்து அமைதியாய் மூச்சுக்காற்று சீரானது. கூன்வண்டு குடைச்சலை முற்றிலும் நிறுத்தியிருந்தது. தெற்றுப்பல் தெரிய புனிதா சிரிக்கிற காட்சியை எனக்குள் நிறைத்து ”பாக்கியவான்கள்” எனச் சத்தம் வர முணுமுணுத்தேன்.

இன்னொரு தடவை புனிதா படுக்கையில் அந்தக் கேள்வியைக் கேட்டால், இதைச் சொல்ல வேண்டும் எனப் பங்களாவிற்குப் போகிற வழியில் எண்ணிக்கொண்டேன்.

“தங்கச் சாவி கிடைத்துவிட்டது”.

4 comments

Mahendra December 28, 2022 - 7:04 pm

….,………..தங்க கடப்பாரை………..😂😂😂😂😂😂😂😂🙏🙏🙏

Neethimani December 29, 2022 - 10:23 am

Love today மாதிரி இது கணவன் மனைவிக்குள் அடிக்கடி வருகின்ற ஒன்றே! ஏனென்றால் மற்றவர்களை விட அவருடன் தானே நாம் அதிக நேரம் செலவழிக்கிறோம்! என்ன தான் நெருங்கிய நட்பு என்றாலும் அவர்களை பிரிந்து இருக்கும் நேரம் அதிகம். மனைவி என்பவள் நம்ம தொப்பை மாதிரி கூடவே இருப்பது! அருமையான எழுத்தாக்கம். காதலர்களுக்கு லவ் டுடே என்றால் தம்பதியர் க்கு இக்கதை என்றே சொல்லலாம்! Kudos Saravanan!

JEYABAL December 30, 2022 - 3:33 pm

சரவணன் சந்திரனின் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று.

S.danieljeeva January 3, 2023 - 12:20 am

மிகச் சிறப்பான கதை. சந்திரன் சரவணனின் படைப்புகளை வாசிக்கின்ற பலரில் நானும் ஒருவன். நன்றியும் வணக்கமும் அவருக்கு

Comments are closed.