(இக்கட்டுரையை ஒரு கட்சிக்கு எதிரான பரப்புரையாகவோ, ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரை உத்தேசித்த எதிர்ப்பாகவோ காணுதல் குறைபார்வை மட்டுமே. கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் அத்தனை அரசியல் கட்சிகளும் வாரிசு அரசியலைச் சிறிதும் பெரிதுமாக மேற்கொண்டுதான் வருகின்றன. அப்படியான அனைத்துக் கட்சிகளையும் தலைவர்களையும் நோக்கிய ஒரு குரல்தான் இது. ஒருவேளை, உங்கள் கட்சியையோ தலைவர்களையோ இது குறிப்பதாகக் குத்தினால் நிச்சயம் உங்களுக்குமானதே!)
*
இந்திய அரசியலையும் வாரிசு அரசியலையும் பிரிக்கவே முடியாது. அரசியல் சாசனச் சட்டப்படி இந்தியாவில் நடப்பது மக்களாட்சி ஜனநாயகம் எனினும் அச்சட்டகத்துக்குள் நின்றுகொண்டு வாரிசு அரசியலின் வழியே இங்கே நடப்பது மன்னராட்சி முறைதான்.
வாரிசு அரசியல் ஒழிக்கப்பட வேண்டும் என ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியே (கிருபாகரன், 2018) தீர்ப்பின் ஒரு பகுதியில் விமர்சனம் வைக்கும் சூழல்தான் நம் நாட்டில் நிலவுகிறது. இன்று, நேற்றல்ல; நூற்றாண்டுக்கு மேலாக இதுவே இங்கு நிலை. கவனித்தால் உதயநிதி ஸ்டாலினின் நுழைவும் உயர்வும் மட்டுமல்ல; ஜவஹர்லால் நேருவின் வரவேகூட வாரிசு அரசியல்தான். (நேருவுக்குத் தகுதி இருந்தது எனினும் அவர் மேலே உயர்ந்தது அதனால் மட்டும் அல்ல.) நம் நாட்டின் அத்தனை தேசியக் கட்சிகளிலும், எல்லா மாநிலங்களிலும் உள்ள பிராந்தியக் கட்சிகளிலும் வாரிசு அரசியல் நிறைந்து கிடக்கிறது (ஒப்பீட்டளவில் கம்யூனிஸ்ட்களிடம் சற்றுக் குறைவாக இருக்கலாம்). கட்சியினரிடமும் மக்களிடமும் வாரிசு அரசியல் இயல்பாக்கம் (normalize) செய்யப்பட்டு அரை நூற்றாண்டு ஆகிவிட்டது.
இன்றைய பாராளுமன்ற லோக்சபாவில் 23% பேர் வாரிசு அரசியலில் நுழைந்தவர்கள். நாற்பது வயதுக்குக் குறைந்த எம்பிக்களில் மூன்றில் இரண்டு பங்கு வாரிசுகள். பெண் எம்பிக்களில் 40% பேர் குடும்ப அரசியல் தொடர்புடையவர்கள். நாடு முழுக்க மாநிலச் சட்டசபைகளிலும் இதேதான் நிலைமை. எங்கும் எதிலும் வாரிசுகளே நிறைந்துள்ளனர்.
இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபால், மியன்மார் எனத் தென் கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் வாரிசு அரசியல் கொடி கட்டிப் பறக்கிறது.
2
அரசியல் என்றில்லை, எத்துறையிலும் எத்தொழிலிலும் எல்லோரும் தெரிந்தவர்களை உடன் வைத்துக்கொள்வது சகஜம்தான். அது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. ஆனால் லாபமீட்டும் பொறுப்புகளை அறிந்தே ஒருவரின் தகுதியைக் கண்டுகொள்ளாமல் நெருக்கமான இன்னொருவருக்கு அளிக்கும் போதுதான் இதில் சிக்கல் எழுகிறது.
வாரிசு அரசியலுக்கு Favoritism, Cronyism, Nepotism, Dynastic Politics என்று பல முகங்கள் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் திறமை, அனுபவம் உள்ளிட்ட தகுதிகளைப் பொருட்படுத்தாமல் குறுகிய காலத்தில் அதிகாரத்தில் உள்ள ஒருவர் தன் வாரிசுக்குப் பதவி அல்லது வாய்ப்பு வழங்குதல். பொதுவாக மூன்று துறைகளில் வாரிசு அரசியல் நடக்கும். ஒன்று வியாபாரம், அடுத்தது திரைத் துறை, கடைசியாக அரசியல். இதில் வியாபாரத்தில் வாரிசுகள் இறங்குவதைத் தவிர்க்க முடியாது. ஏனெனில் அது தனிநபர் சொத்து. வாரிசுக்குத்தான் போய்ச் சேரும். மற்ற இரண்டிலும் நடப்பதுதான் மோசம்.
“வைப்பாட்டி அரசியலுக்கு வாரிசு அரசியல் மேல்” என்று சிலர் சொல்வார்கள். ஆனால் உண்மையில் வாரிசு அரசியல் என்பது மகன், மகள், பேரன், பேத்தி இவர்களை மட்டும் குறிப்பதல்ல; சகோதரன், சகலை, மாமன், மைத்துனன், மருமகன், இவை அனைத்தின் பெண்பால் உறவுகள், மனைவி, துணைவி, காதலி, கள்ளக்காதலி, தோழி எனத் தெரிந்த எவருக்குக் கட்சியில் பதவியோ வாய்ப்போ வழங்கப்பட்டாலும் வாரிசு அரசியல்தான்.
கட்சியில் மட்டுமல்ல, திரைத்துறையிலும்கூட வாரிசு அரசியல் தவறுதான். அதனால் பாதிக்கப்படுவோர் ஏராளம். கமலின் மகள்கள் சினிமாவில் நாயகிகளாக நிற்பதுகூட வாரிசு அரசியலின் நிறம்தான். என்ன என்னவோ சமரசங்கள் செய்து கொண்டுதான் சாதாரணர்கள் சினிமாவில் நாயகியாக முடிகிறது. அதனால் மனமுடைந்து தற்கொலை செய்தோர் உண்டு. ஷ்ருதிஹாசனும் அக்ஷரா ஹாசனும் அப்படியா உள்ளே வந்தார்கள்? திறமையும் அழகும் இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம், ஆனால் கமலின் மகள் என்ற லேபிள் இல்லை என்றால் அவர்கள் இவ்வளவு சுத்தமாகவும் இத்தனை எளிதாகவும் வாய்ப்புப் பெற்றிருக்கும் சாத்தியம் குறைவுதானே? அவர் யாரிடமும் போய்க் கேட்கவில்லை என்றாலும் கமலின் செல்வாக்கு மறைமுகமாக அங்கே பயன்பட்டதுதானே? அது வாரிசு அரசியல்தானே? இன்னொரு நடிகையின் வாய்ப்பு பறிக்கப்பட்டதுதானே?
வாரிசுகளைப் பார்த்து அவர் மூக்கு அப்படியே இருக்கு, அவரது மூக்குச்சளி அப்படியே வந்திருக்கு என்றெல்லாம் உணர்ச்சிவயப்படுவதும் அந்தந்தத் துறையில் வாரிசுகளின் ஆதிக்கத்துக்கும் அரசியலுக்கும் காரணமாகிறது. அது பொதுமக்களின் பலவீனம்தான். பெற்றவரைப் போல் பிள்ளை இருப்பதில் என்னதான் வியப்பு இருக்க முடியும்? அதில் சிலாகிக்கவும் அதற்காகவே ஒருவரைப் பிடித்துப் போவதும் என்ன தர்க்கம்? தமக்கென ஓர் அடையாளத்தை வாரிசுகள் உண்டாக்கிக்கொண்டு தகுதிபெறும் வரை ஊடகங்கள் அவர்களுக்கு முக்கியத்துவம் தந்து அவர்கள் படத்தைப் பகிர்வது, கட்டுரை எழுதுவது, காவியம் எழுதுவது என்றெல்லாம் இறங்கலாகாது. இக்குறைந்தபட்ச பொறுப்புணர்வுகூட எவருக்கும் இருப்பதில்லை. வாரிசு அரசியலுக்கு ஊடகங்களும் முக்கியக் காரணம்.
3
சினிமாவைக் காட்டிலும் அதிகக் கவலை அளிப்பது கட்சிகளில் உள்ள வாரிசு அரசியல். கட்சியில் வாரிசு அரசியல் என்பது என்ன? கட்சியில் தலைமையின் வாரிசைவிடவும் தகுதி வாய்ந்தவர்கள் இருக்கும்போது வாரிசுக்குக் கட்சியின் பலம்மிக்க பதவிகளை வழங்குவது, உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் நிற்கும் வாய்ப்பு வழங்குவது, வெற்றிபெற்று எம்எல்ஏ, எம்பி ஆன பிறகு அமைச்சர் பதவியை வழங்குவது, இறுதியில் கட்சித் தலைவர், முதல்வர், பிரதமர் ஆகிய உச்சப் பதவிகளை அளிப்பது.
வாரிசு அரசியலின் நடைமுறைப் பிரச்சினைகள் என்ன? அதைப் பேசும் முன் சூழலைப் புரிந்துகொள்வோம். இன்று இந்தியாவின் தேர்தல் அரசியலின் நிலைமை என்ன? இங்கு ஒரு வேட்பாளரின் தகுதி என்பது என்ன? என் பார்வையில் மூன்று விஷயங்கள்: ஒன்று அவரது செலவு செய்யும் திறன் (பிரச்சாரம், ஓட்டுக்குக் காசு), அடுத்து அவர் நிற்கும் கட்சியின் செல்வாக்கு, கடைசியாகப் பொதுமக்கள் மத்தியில் அவரது பிரபல்யம். அறிவு, திறமை, நேர்மை, அனுபவம் உள்ளிட்ட அவரது தகுதி என்பது இங்கே கணக்கிலேயே கொள்ளப்படவில்லை எனக் கவனிக்கலாம். வாரிசு அரசியலின் ஊற்றுமுகம் இதுவே.
காசு இருந்தால் போதும், தேர்தலில் வெல்லலாம் என்ற நிலையில் பண்ணையார்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் எல்லோரும் ஏதாவது பெரிய கட்சியில் சேர்ந்து சீட் வாங்கி எம்எல்ஏ, எம்பி என்றாகி விடுகிறார்கள். இதன் அடுத்த கட்டம்தான் வாரிசு அரசியல்.
காசு இருப்பவனுக்குத்தான் கட்சியில் பதவியும் வாய்ப்பும் என்றாகிவிட்ட போது பணம் என்பதே அதிகாரமாகி விடுகிறது. கட்சியில் ஏற்கெனவே தலைமையில் இருப்பவரின் குடும்பத்தினரிடம் அதிகார முறைமீறல்களால் செய்த ஊழல்கள் வழி பணம் குவிந்து கிடப்பதே இயல்பு. ஆக, அவர்களின் வாரிசுகளிடம் அதீதப் பணமும், அதன் வழியாக இயற்கையாகவே கட்சியில் அதிகாரமும் வந்துவிடுகிறது. பலமான எதிரிகளிடமிருந்து கட்சியைக் காப்பாற்றி எடுத்துச்செல்ல நிறையப் பணமும், அதிகாரமும் கொண்ட ஒருவர் அவசியம் என்ற பிம்பம் உண்டாக்கப்பட்டு அதைச் சர்வ வல்லமை பொருந்திய வாரிசுகளே சரியாகச் செய்ய முடியும் எனக் கட்சியினரை நம்ப வைக்கின்றனர்.
பணத்தைக் குவித்து வைக்க இயலாத கட்சித் தலைமையும், அவர் வாரிசுகளும் அந்தக் கட்சியில் வாரிசு அரசியல் செய்வதில்லை அல்லது செய்ய முடிவதில்லை என்பதையும் கவனிக்கலாம். அதே போல் ஆட்சிக்கு வரவே வாய்ப்பு இல்லாத கட்சிகளிலும் வாரிசு அரசியல் இராது. போராட்டத்தை முதன்மை நோக்கமாகக் கொண்ட இடங்களிலும்கூட இது இருக்காது. (கம்யூனிஸ்ட் கட்சிகளில் வாரிசு அரசியல் குறைவாகவே இருக்கிறது.)
சரி, ஒரு வாரிசு அரசியலுக்குள் வர விரும்ப என்ன நோக்கம் இருக்கும்? தேச சேவையா? நிச்சயம் இல்லை. ஏற்கெனவே இருக்கும் பணத்தைப் பன்மடங்காகப் பெருக்குவதுதான் முதன்மை நோக்கமாக இருக்கும். அதற்கு அவர் அதிகாரத்துக்கு வர வேண்டும். தந்தை அதிகாரத்தில் இருந்தால் மட்டும் போதாது. அவரது காலத்துக்குப் பிறகு தன்னிடமும் அதிகாரம் இருக்க வேண்டும். எனவே கட்சிக்குள் நுழைந்து வாய்ப்பும் பதவியும் பெற வேண்டும். இன்னொரு விஷயம், மேலே சொன்னது போல் தேர்தல்களைச் சந்திக்கவும் வெல்லவும் பணம் அத்தியாவசியம் என்றாகிவிட்ட பிறகு களமிறங்கும் வாரிசுக்கு வேறு வழியும் இல்லை. தொடர்ந்து பதவியிலிருந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது புலி வாலைப் பிடித்த கதையாகிவிடும். ஆக, வாரிசு அரசியலில் எந்தப் பொதுநல நோக்கும் இல்லை. அதிகாரத்தைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பது மட்டுமே ஒரே இலக்கு. ஒருவேளை வாரிசால் நாட்டுக்கு ஏதேனும் நன்மை நடந்தால் அது பக்க விளைவு மட்டுமே.
ஆக, வாரிசு அரசியலால் நாட்டில் ஊழலும் அதிகாரத் துஷ்பிரயோகமும் அதிகரிக்கும்.
மக்கள்நலத் திட்டங்களில் கொள்ளையடிப்பதுதான் ஊழல். இதனால் ஒன்று மக்கள் வரிப்பணம் வீணாகும் அல்லது தரமற்ற திட்டங்கள் அமல்படுத்தப்படும். அதிகாரத் துஷ்பிரயோகம் என்பது சினிமா, ரியல் எஸ்டேட், பொதுப்பணி போன்ற சாத்தியமான இடங்களில் எல்லாம் அதிகாரத்தைக் காட்டி வியாபார ஆதிக்கம் செலுத்திப் பணம் சம்பாதிப்பது. இதனால் அங்கே ஏற்கெனவே இருப்பவன் தொழில் நசிந்து நீங்குவான்.
இவை யாவுமே தனி மனிதனை மட்டும் அல்லாது, அத்துறையைப் பாதிக்கும். சமூகத்தில் கேடு உண்டு பண்ணும். நீண்ட கால நோக்கில் தேச முன்னேற்றத்தைப் பின்னிழுக்கும்.
இன்னொன்று இத்தனை ஊழல்கள், குற்றங்கள் செய்து செல்வம் சேர்த்திருக்கும் போது சிபிஐ, ஐடி, ஈடி எனப் பல துறைகளிலிருந்து தம்மையும் பணத்தையும் பாதுகாத்து வைக்கவும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பது அவசியமாகிறது. எனவே இந்தக் கணம் ஓர் அரசியல்வாதி இனி நான் ஊழல் செய்ய மாட்டேன் என்று முடிவெடுத்தாலும் இதுவரை செய்தவற்றுக்குச் சிறை செல்லாமல் இருக்க அரசியல், ஆட்சி அவசியம்.
இந்தப் பின்னணியில் சிந்தியுங்கள். ஊழல் செய்த வாரிசுகளைக் கொண்ட ஒரு மாநிலக் கட்சி மத்திய அரசின் அராஜகங்களை வலுவாக எதிர்க்க முடியுமா? பெயருக்கு ஈயம் பூசல் எதிர்ப்பாகவே அமையும். அதுவே வாரிசாக அல்லாத மற்றவர்கள் கட்சியில் தவறு செய்து வசமாகச் சிக்கிக்கொண்டால் ஒரு கட்டத்தில் அவர்களைக் கை கழுவக் கட்சி தயாராகிவிடும். அங்கே கட்சியின் நலன் முன்னுக்கு வந்துவிடும். ஆனால் வாரிசைக் காப்பாற்ற கட்சி எந்த எல்லைக்கும் செல்லும், கட்சியை அடகு வைப்பதாக இருந்தாலும்.
கட்சிகளின் குற்றச் செயல்களுக்கு மக்கள்நல முலாம் பூசி நியாயம் கற்பிப்பது மூடநம்பிக்கைகளுக்கு விஞ்ஞான விளக்கம் கொடுப்பது போன்ற விஷமச் செயலே. முன்பு ஊழலே சமூக நீதிதான் என்றார்கள்; இன்று பார்ப்பனியச் சதியை முறியடிக்க வாரிசு அரசியல் அத்தியாவசியம் என்கிறார்கள். இப்படித் தம் குற்றங்களுக்குப் பொழிப்புரை எழுதும் தொண்டர்கள் உள்ளவரை கட்சித் தலைவர்களுக்குக் கொண்டாட்டம்தான்!
4
பலரும் வாரிசு அரசியலை ஆதரித்துப் பேசும்போது சொல்லும் விளக்கம் அது உட்கட்சி விவகாரம். கட்சிக்காரர்களுக்கு அதில் ஒரு பிரச்சினையும் இல்லை எனும்போது வெளி ஆட்களுக்கு என்ன வந்தது என்று கேட்பார்கள். உண்மையில் அது அபத்தமான வாதம்.
கட்சியில் யாருக்கு வாய்ப்பு, யாருக்குப் பதவி என்பது உட்கட்சி விஷயம்தான். ஆனால் நேர்மையான உட்கட்சி ஜனநாயகம் பேணப்படுகிறதா அதில்? கட்சியில் எவரும் அதை விமர்சிக்கவோ எதிர்க்கவோ இல்லைதான். ஆனால் அதன் பொருள் வாரிசு அரசியலில் அவர்களுக்கு எல்லாம் உடன்பாடு இருக்கிறது என்று அர்த்தமா? அவர்கள் சுதந்திரமாகப் பேசக்கூடிய சூழல் ஒரு கட்சியில் இருக்குமா? கட்சியின் இரண்டாவது அதிக அதிகாரம் கொண்ட தலைவர்கூடக் கட்சித் தலைமையின் வாரிசு அரசியலைக் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் நிலைமை. கேட்டால் இயல்பாகவே ஓரங்கட்டப்படுவார்கள். ஒன்று வைகோ போல் உணர்ச்சிவசத்தில் கட்சியை உடைத்து வெளியேற வேண்டும் அல்லது அன்பழகன் போல் இரண்டாம் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டு வாரிசு அரசியல் பற்றி மௌனமாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் அனுமதிக்கப்பட்டது.
இதெல்லாம் தாண்டி கட்சிக்கே வாரிசு அரசியல் பெருத்த சேதாரத்தை விளைவிக்கும். வாரிசு அரசியலினால் தகுதியுடைய சிலர் ஓரங்கட்டப்படுவர். கட்சி உடையவும் கூடும்.
வாரிசு அரசியலால் தகுதி வாய்ந்த கட்சி உறுப்பினர்கள் அக்கட்சியில் செயல்படுகிற ஆர்வத்தை இழப்பார்கள். என்ன செய்தாலும் இறுதியில் வாரிசுகளுக்குத்தான் பதவி எனும்போது எப்படி ஒரு கட்சிக்காரன் உழைப்பான்? எல்லோருமா கட்சித் தலைமைக்கு வர ஆசைப்படுவார்கள் என நீங்கள் கேட்கலாம். அது விஷயத்தின் தீவிரத்தன்மையை உணராத மொண்ணைக் கேள்வி. காரணம், பொதுவாகக் கட்சிகளில் தலைமை தனது வாரிசைக் கொண்டு வரும்போது அதைக் கட்சியில் செல்வாக்கு மிக்க இரண்டாம் மட்டத் தலைவர்கள் எதிர்க்கக்கூடாது, அதனால் கட்சி உடையக்கூடாது என்ற கவனத்தில் அந்த இரண்டாம் மட்டத் தலைவர்களின் வாரிசுகளுக்கும் வாய்ப்பும் பதவியும் வழங்கப்படும்.
உதாரணமாக, கட்சித் தலைவரின் வாரிசுக்கு எம்எல்ஏ சீட் தரப்பட்டதை நியாயப்படுத்த, கட்சியில் அதை எதிர்த்து வரக்கூடிய குரல்களை அமுக்க சுமார் 25 முக்கியஸ்தர்களின் வாரிசுகளுக்கு எம்எல்ஏ சீட் தர வேண்டியிருக்கும். ஆக, எம்எல்ஏ, எம்பி சீட்கள், மேயர், அமைச்சர் பதவிகள், கட்சியின் முக்கியப் பதவிகள், மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் என எல்லாவற்றிலும் வாரிசுகளே நிரம்புவார்கள். ஆக, எந்த இடத்திலும் ஒரு சாதாரணப் பின்புலத்தில் இருந்து வந்த ஒருவன் கட்சியில் மேலே ஏற முடியாது. கட்சித் தொண்டன் கடைசி வரை “வாழ்க! வாழ்க!” கோஷம் போட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
பொன்னியின் செல்வனில் பெரிய பழுவேட்டரையர் சோழ நாட்டின் சிற்றரசர்களிடம் சொல்வதாக ஒரு வசனம் வரும்: “[ஆதித்த கரிகாலருக்கு] இளவரசுப் பட்டம் கட்டுவதற்கு முன்னால் நம்மில் யாருடைய யோசனையாவது கேட்கப்பட்டதா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இங்கே கூடியுள்ள நாம் ஒவ்வொருவரும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக, நான்கு தலைமுறையாக, சோழ ராஜ்யத்தின் மேன்மைக்காகப் பாடுபட்ட பழங்குடியைச் சேர்ந்தவர்கள். என் பாட்டனாருக்குத் தந்தை திருப்புறம்பியம் போரில் இறந்தார். என் பாட்டனார் வேளூரில் நடந்த போரில் உயிர்விட்டார். என் தந்தை தக்கோலத்தில் உயிர்த் தியாகம் செய்தார். அம்மாதிரியே உங்கள் ஒவ்வொருவரின் மூதாதையரும் இந்தச் சோழ நாட்டின் மேன்மையை நிலைநாட்டுவதற்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். நம் ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் இளம் பிள்ளைகள் யுத்தக்களத்தில் செத்திருக்கிறார்கள். இன்றைக்கும் ஈழ நாட்டில் நம்முடைய குலத்தையும் குடும்பத்தையும் சேர்ந்த பிள்ளைகள் போர் செய்து வருகிறார்கள். ஆனால் அடுத்தபடியாகப் பட்டத்துக்கு வரவேண்டியவர் யார் என்பது பற்றித் தீர்மானிப்பதில் நம்முடைய அபிப்பிராயத்தை மகாராஜா கேட்கவில்லை. தசரதர்கூட இராமருக்குப் பட்டம் கட்டுவது பற்றி மந்திராலோசனை சபை கூட்டி யோசனை செய்தார். மந்திரிகளையும், சாமந்தகர்களையும், சேனைத் தலைவர்களையும், சிற்றரசர்களையும் ஆலோசனை கேட்டார். ஆனால் சுந்தரச் சோழ மகாராஜா யாருடைய யோசனையையும் கேட்பது அவசியம் என்று கருதவில்லை.”
இத்தனைக்கும் கதை நடப்பது மன்னர்களின் வாரிசுகளே அரசர்களாக அரியணை ஏறி வந்த முடியாட்சிக் காலம். அதற்கே அந்த மனிதர் இவ்வளவு கொதித்துப் பேசியிருக்கிறார். இந்தியாவில் பெரும்பாலும் வாரிசு அரசியல் நடக்கும் கட்சிகளில் அதை எதிர்த்து சிறு முணுமுணுப்பும் எழாது. ஆனால் மனதில் அது குறித்து மேற்சொன்னது போலவே புழுங்கிக்கொண்டுதான் இருப்பர்.
சமீபத்தில் ஒரு கட்சியின் தலைவருக்கு – அவர் ஒரு வாரிசு – ‘பிறவித் தலைவர்’ எனப் போஸ்டர் அடித்திருந்தனர். வாரிசு அரசியல் குறித்து எவ்வளவு நுட்பமான விமர்சனம்! பாதிக்கப்பட்ட சிலரால் தெரிந்தே அப்போஸ்டர் அடிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.
ஒரு கட்சியில் வாரிசுகளுக்குத்தான் வாய்ப்பு எனும்போது சிந்தனையும் திறமையும் கொண்ட யார் அக்கட்சியில் சேருவார்கள்? அப்படியே சேர்ந்தாலும் மேலே வர முடியாது. அமைச்சர் மகன் அமைச்சர்; சுவரொட்டி ஒட்டுகிறவன் மகன் சுவரொட்டி ஒட்டு என்பது மனு நீதி இல்லையா? வலதுசாரி, பார்ப்பனியக் கட்சிகள் இதைச் செய்தால்கூட ஒரு தர்க்கம் இருக்கிறது. ஆனால் பெரியாரியமும், சமூக நீதியும் பேசும் கட்சிகள் இதைச் செய்வதில் என்ன நியாயம் உள்ளது? கொள்கை என்பது எவ்வளவு போலித்தனமானது!
5
அடுத்த வாதம் மக்கள் வாரிசுகளை ஏற்றுக்கொள்கிறார்கள், மற்றவர்க்கு என்ன என்பது.
மக்கள் ஏற்றால்தான் அரசியலில் ஒரு வாரிசு நிலைக்க முடியும் என்பது ஏதோ பெரிய checkpoint போல் தோன்றலாம். உண்மையில் வாரிசு அரசியல் இந்தியாவில் கொழிக்க சம்மந்தப்பட்ட கட்சிகள் மட்டுமின்றி பெரும்பான்மை மக்களின் செண்டிமெண்ட்டும் காரணம்.
பொது மக்களில் பலர் பிரியங்கா காந்தியை இந்திராவோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். இத்தனைக்கும் இப்போதைக்கு உள்ளது வெறும் தோற்ற ஒற்றுமை. சராசரி இந்தியர்கள் ஆழ்மனதில் வாரிசு அரசியல் மீதான மாபெரும் வசீகரம் படிந்து கிடக்கிறது. அது தவறு என்றே அவர்களுக்குத் தோன்றுவதில்லை. அவர்கள் அதை ஓர் உட்கட்சி விவகாரமாகக் கருதுகிறார்கள். வாரிசு அரசியல் என்பதற்காக அவர்கள் எவரையும் நிராகரித்ததாகச் சரித்திரம் இல்லை. ஆனால் வெகுமக்களின் ஆதரவு ஒரு பிழையைச் சரியாக்கிவிடுமா?
ஜெயலலிதாவின் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறை சென்று வந்த பின்பும் மக்கள் அவரைப் பெருவாரியாக ஆதரித்து முதல்வர் ஆக்கினார்கள். அதனால் அவரது ஊழல் குற்றம் சரியென்று ஆகிவிடுமா? அதேதான் வாரிசு அரசியலிலும். மக்கள் ஒரு வாரிசைத் தேர்தலில் வெற்றிபெற வைத்துவிட்டதாலேயே கண்ணை மூடிக்கொண்டு அவரை ஆதரிக்க முடியாது. நம் மக்கள் நாயக நடிகர்களை அரசியலுக்கு வரச்சொல்லி இன்னும் அழைத்துக்கொண்டிருக்கும் பாமரர்கள்தாம். அவர்களின் ஏற்பு என்னளவில் ஒரு விஷயமே இல்லை. ஞாபகம் இருக்கட்டும், சில மாதம்கூட நீடிக்க மாட்டார் என்ற நிலையில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்குக் கணிசமாக வாக்களித்து எம்எல்ஏக்களை அள்ளி வழங்கியவர்கள் நம் ஆட்கள். நல்லவர்களையோ, திறமையானவர்களையோதான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வரையறை எல்லாம் அவர்கள் வைத்துக்கொள்வதில்லை. அது ஒரு லாட்டரி மாதிரிதான். அவர்கள் ஆதரவை வைத்தெல்லாம் ஒருவரை ஆளுமை என்றோ அவர்கள் செய்வது தவறில்லை என்றோ தீர்மானிக்கலாகாது. அது ஒருவிதமான அசட்டுச் சுயசமாதானப்படுத்தல் மட்டுமே.
இன்னொரு கேள்வி, வாரிசு என்பதாலேயே தகுதியற்றவர்கள் ஆகிவிடுகிறார்களா?
கார்த்தி சிதம்பரத்துக்கு எம்பி சீட் வழங்கப்பட்ட போது இதே கேள்வியை அவர் ஒரு பேட்டியில் எழுப்பினார் (“Being my father’s son should not qualify me to get the ticket, but nor should it automatically disqualify me either”). இதுவும் அபத்தமான சமாளிப்பு வேலைதான். யாரும் வாரிசுகள் அரசியலுக்கு வருவதை எதிர்க்கவில்லை. வாரிசு அரசியல் என்பது அதுவல்ல. ஒருவர் கட்சியில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து, அனுபவம் பெற்று, பல ஆண்டுகள் படிப்படியாக முன்னேறி, கட்சிப் பொறுப்பு, வேட்பாளர் வாய்ப்பு, அமைச்சர் பதவியைப் பெற்றால் யாருக்கும் எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால், தான் இன்னாரின் வாரிசு என்பதால் இவற்றை எல்லாம் கட்சியில் சேர்ந்த குறுகிய காலத்தில் பெறுவதுதான் வாரிசு அரசியல் என வரையறுக்கிறோம். அதைத்தான் எதிர்க்கிறோம்.
இன்னொரு விஷயம், வாரிசு குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியானவரா என்பது மட்டுமே இங்கே கேள்வி அல்ல. கட்சியில் இருக்கும் எல்லோருடனும் ஒப்பிட்டால் அவர்தான் அதிகத் தகுதி கொண்டவரா என்பதும் மிக மிக முக்கியமானது. ஆக, ஒரு வாரிசு தகுதியற்றவர் என்பதல்ல வாரிசு அரசியல் விமர்சனத்தை முன்வைப்பவர்களின் கருத்து; அவர்களைவிடத் தகுதியானவர் இருக்கையில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறதே என்பதே. அதிகத் தகுதி கொண்டோருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு என்ன பதில் என்பதே வினா.
கட்சிக்கான அடுத்த தலைமை இருப்பதிலேயே சிறந்தவரைத் தேர்ந்தெடுப்பதாகவே அமைய வேண்டும். வாரிசு என்பதே ஒருவர் தலைவராகத் தகுதியாகிவிடாது. இன்று இந்தியாவில் ஜனநாயக அரசியல் நடத்தப் பணம் முக்கியத் தேவை என்பதால் அது ஒரு வாரிசிடம் நிறைய இருக்க வாய்ப்புண்டு என்பது தாண்டி அவர் கட்சியை வழிநடத்தும் தன் அறிவை, திறமையை ஐயந்திரிபற நிரூபிக்க வேண்டும். ஆண்டுகளின் அனுபவம் ஓரளவு செல்லுபடியாகும். பேச்சிலும் செயல்பாட்டிலும் தொடர்ந்து அதை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். குறைந்தபட்சத் தகுதியோடு திருப்தியாகி விடலாகாது.
வாரிசு அரசியல் இருந்தாலும் வக்குள்ள தலைவன் அதை மீறி மேலே வருவான் என்ற பொருளில் எகத்தாளம் பேசுகிறார்கள் சிலர். ஆனால் இது நடைமுறையில் சாத்தியமா?
சிலர் வாரிசு அரசியல் இருப்பதால்தான் பெண்களால் ஓரளவுக்குப் பெரிய பதவிகளை எட்ட முடிந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு குற்றத்தின் பக்க விளைவாக ஒரு நன்மை விளைந்தால் அதனாலேயே குற்றத்தை நியாயப்படுத்திவிட முடியாது. வாரிசு அரசியலால் மட்டுமே கட்சி பலமாக இருக்கும், இந்துத்துவம் உள்ளிட்ட ஆபத்துகளை எதிர்கொள்ள முடியும் போன்ற வாதங்களையும் இதே திசையில்தான் பார்க்கிறேன்.
இன்னொரு சப்பைக்கட்டு, வாரிசு அரசியல் கூடாது என்பது ஓர் ஊடோபியன் கனவு, அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பது. அப்படிப் பார்த்தால் சமூக நீதி உள்ளிட்ட நல்ல விஷயங்கள் யாவுமே இந்த அழுக்கு உலகைப் பொறுத்தவரை ஊடோபியன் கனவுகளே. எல்லாவற்றையும் கைவிட்டு விடலாமா? என்ன மாதிரியான இரட்டை நிலைப்பாடு இது?
6
உண்மையில் தன்முனைப்பும், கட்சி மீது அக்கறையும் கொண்ட பெரும்பான்மையான கட்சிக்காரர்கள் வாரிசு அரசியலை விரும்ப வாய்ப்பு இல்லை. மீறி வாரிசு அரசியலை ஆதரிப்பவர்களை இந்த ஐந்து வகையில் அடக்கிவிடலாம்: 1) அந்த வாரிசு அதிகாரத்துக்கு வருவதால் நேரடியாக லாபம் அடையப் போகிறவர்கள். 2) லாபம் இல்லாவிடிலும் பயந்துகொண்டு வேறு வழியின்றி கட்சியில் தனக்கிருக்கும் நடப்பு இடத்தையாவது காத்துக்கொள்ளலாம் எனப் பல்லைக் கடித்துக்கொண்டு ஆதரிப்போர். 3) சுயமரியாதையும் சுயசிந்தனையும் இல்லாமல் கட்சித் தலைமை என்ன செய்தாலும் கண்மூடித்தனமாய் அதை ஆதரிக்கும் அடிமைகள். (அதற்கேற்ப மனசாட்சி இல்லாமல் தமது வாதத்தின் தர்க்கத்தைத் தினம் தினம் வளைப்பவர்கள்.) 4) கூலி வாங்கிக்கொண்டு அக்கட்சிக்கு ஆதரவாய்ப் பேசுவோர். 5) முக்கியமாக, அடுத்து தம் வாரிசைக் களமிறக்கப் போவோர்.
வாரிசு அரசியலானது கட்சியை அழிக்கும், அக்கட்சியை நம்பியிருக்கும் மாநிலத்தை அழிக்கும். சரி, அதைப் பற்றி வாரிசு அரசியல் செய்யும் குடும்பத்துக்கு அக்கறை இராது. இருந்திருந்தால்தான் வாரிசு அரசியலே செய்திருக்க மாட்டார்களே! சரி, அவர்களுக்குப் புரியும் பாஷையிலேயே வாரிசு அரசியலின் மோசமான விளைவைப் பற்றிப் பேசலாம்.
இறுதியில் வாரிசு அரசியலின் வழி பலன்கள் பெற்ற அந்தக் குடும்பத்தையே அழிக்கும்.
எப்படி? இன்று ஓர் அரசியல் குடும்பத்துக்கு வணக்கம் போடும் அடிமைகள், காசுக்குக் குரைக்கும் கூலிகள் அப்படிச் செய்வதெல்லாம் மனம் விரும்பியோ மரியாதையாலோ அல்ல, அச்சத்திலும் ஆசையிலும்தான். அந்தப் போலிகள் நிரந்தரமாக அக்குடும்பத்தின் பக்கமே இருப்பார்கள் என்று எந்த உறுதியும் இல்லை. உண்மையில் அவர்கள் மனதில் வன்மத்துடன் அக்குடும்பத்தின் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள், ஏனெனில் வேறு எவரையும்விட அவர்களுக்கு நன்கு தெரியும் அந்த வாரிசுகளின் தகுதி என்ன என்று, அவர்கள் சுலபத்தில் வந்த குறுக்கு வழி என்ன என்று, அதன் பொருட்டு தகுதியான எவர் எவர் கட்சியில் பலி தரப்பட்டார்கள் என்று. அவர்கள் அடிமைகள் அல்லர்; அடிமைகளாக நடித்துக்கொண்டிருப்பவர்கள் மட்டுமே. ஒரு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.
பாடத்தை வரலாற்றில் இருந்தும் எடுத்துக்கொள்ளலாம், அல்லது காத்திருந்து நம்மை நோக்கி ஒருவர் சுடும்போதும் எடுத்துக்கொள்ளலாம், அது அவரவர் சாமர்த்தியம்தான்.
தாத்தாவைவிட அப்பா அபாயகரமானவரா, அப்பாவைவிட மகன் அபாயகரமானவரா என்கிற சலசலப்புகளைவிட முக்கியமானது: வாரிசு அரசியல் அபாயகரமானது, தனி நபர்களுக்கும் சரி, கட்சிக்கும் சரி, நாட்டிற்கும் சரி.
7
ஒரு கட்சியின் மீதான வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் சக்தியும் அதிகாரமும் உலகில் ஒரே ஒருவருக்குத்தான் இருக்கிறது – அது அந்த சம்பந்தப்பட்ட வாரிசுக்குத்தான். அவர் சுயமரியாதையுடனும் அறத்துடனும் தன்னைச் சுயபரிசோதனை செய்துகொண்டு இவ்விவகாரத்தை அணுகினாலே தீர்வு கிட்டிவிடும்.
நான் என்னைவிடத் தகுதி குறைந்த ஒருவரைத் தலைவராக ஏற்க மாட்டேன் என்பதை ஒவ்வொரு மட்டத்திலும் கட்சிக்காரர்களும் ஆதரவாளர்களும் பின்பற்றினால் போதும்.
ஊடகங்களும் அரசியல் கட்சி வாரிசுகளுக்குத் தேவைக்கு அதிகமான உணர்ச்சிகர முக்கியத்துவத்தைத் தரலாகாது. ஒரு வாரிசுக்கு வாக்களிப்பது ஊழலை நேரடியாக ஆதரிப்பதற்குச் சமம் என்ற விழிப்புணர்வைப் பொதுமக்களும் அடைய வேண்டும்.
ஏற்கெனவே வாரிசால் தலையேற்று நடத்தப்படும் கட்சி அடுத்த தலைவராக வாரிசு அல்லாத ஒருவரை அடையாளம் காட்டினால் அது தொண்டர்களிடமும் உற்சாகத்தை ஊட்டும். நமக்கும் ஒருநாள் கட்சியில் நல்ல இடம் கிடைக்கும் என்ற நம்பகத்தன்மையை உண்டாக்கும். இதில் இன்னொரு லாபம் கட்சியின் தலைமைப் பதவிக்கே வாரிசு வர வேண்டாம் என்ற விதியைப் பின்பற்றினால் தகுதியே இல்லாமல் வாரிசு என்ற ஒரே காரணத்தாலேயே உள்ளே நுழையும், எடுத்த எடுப்பில் எம்எல்ஏ, எம்பி சீட் வாங்கிவிடும் இரண்டாம் மட்டத் தலைவர்களின் வாரிசுகளையும் தடுக்கலாம். தகுதி உள்ளவருக்கே வாய்ப்பு என்ற நிலை உருவாகும்போது கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ள பல தகுதியுள்ளவர்களுக்கு ஆர்வம் வரும். கட்சியை மிக வலுவாய் தனித்துவப்படுத்தும்.
வாரிசு அரசியல் செய்தேதான் ஆக வேண்டும், வேறு வழியில்லை என்றானால் அதில் சில குறைந்தபட்ச நியாயங்களையாவது பின்பற்றலாம். ஒரு வாரிசு கட்சியில் இருக்கும் பொழுது இன்னொரு வாரிசுக்குக் கட்சி அடிப்படை உறுப்பினர் என்பதைத் தாண்டிய பதவிகள், வாய்ப்புகள் தரக்கூடாது என்பது போல். கட்சிப் பணிகளின் வழி புதிய வாரிசு தன் முகத்தைக் கட்சியினரிடமும் மக்களுடமும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். (அவராகத் தன் முயற்சியில் கட்சியில் மெல்ல மேலே ஏறுவது நடக்கலாம், அது வேறு.)
சில கட்சிகளின் இருப்பு அவற்றின் குறைகள் தாண்டி நாட்டுக்கு முக்கியமானது. வாரிசு அரசியல் அக்கட்சிகளையே காணாமல் போகச் செய்யக்கூடியது. கொள்கைகளைக் கைவிட்டு அக்கட்சிகள் பிழைத்திருப்பதும் அழிந்து போனதற்குச் சமம்தான். அதனால் அவற்றின் முனை மழுங்காமல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதை மேலும் கூர்தீட்ட விரும்புகிறேன். கூர் தீட்டுதல் என்பது நெருப்பால், உலோக உராய்வால் ஆனது. அது அந்த ஆயுதத்துக்கு காயம் படும், வலிக்கத்தான் செய்யும். ஆனால் அது நீண்ட கால நோக்கிலானது; இன்று தேர்தலில் சொகுசாய் வெல்வதைவிட முக்கியமானது. வாரிசு அரசியலால் ஒருநாள் ஆயுதமே உடைந்து நிராயுதபாணியாக நிற்க நேரிடும். அன்று அழுது புலம்பிப் பயனில்லை. அன்று நாட்டின் பெரிய அபாயங்கள் அரசியல் சாசனத்தையே மாற்றி நம் அனைவரையும் மென்று சக்கையாகத் துப்பியிருக்கும்.
இறுதியாக ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்லிக்கொள்கிறேன்: அண்ணா வாரிசு அரசியலைத் தன் கையில் எடுத்திருந்தால் நமக்குக் கலைஞர் கிடைத்திருக்க மாட்டார்.
2 comments
அருமை அண்ணா.. ஆழமான அர்த்தம் கொண்ட பதிவு.
தற்போது நமது நாட்டின் வாரிசு அரசியலை
அக்குவேறு ஆனிவேறாக பிரிந்திருக்கும்
ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டுக்கள்
தமிழ்நாட்டு குடும்பங்களில் மூத்த தலைமுறை வாரிசு அரசியலை வளர்த்தெடுக்கிறது… இளைய தலைமுறையோ… தங்களது தலைவனை
திரையில் தேடிக்கொண்டு இருக்கிறது
என்ன செய்வது…
Comments are closed.