மெய்ப்பசி

0 comment

பேருரு

பறவையெலாம் 

விசும்பின் அணிகலன்.

பாறையெலாம் 

போகப்போதின் 

பூரித்த மாமுலை.

நாரையெலாம் 

விண்ணை மண்ணில் 

விரித்து வைக்கும்

வெண்கருணை.

ஒளியெலாம் 

அன்பின் விந்து.

இருளெலாம்

சக்தியின் உறக்கம்.

துலக்கமெலாம் 

தூய நற்செய்தி.

கரந்தவை

காலாதீதக் கல்வி.

நரையும் திரையும் 

உயிர்ப்பறியா

உதிர்இலைகள்.

துயரெலாம் 

இலை கழுவும்

மழைக்கரம்.

மகிழ்வெலாம்

மாநிலையின் மெய்ம்முகம்.

மேவும் மெய்ப்பாடுகள்

உள்ளத்து வினைகள்.

இசையெலாம் 

இக்கணத்தின் எழுச்சியலை.

மௌனமெலாம்

நிறைவின் வளர்பிறை.

பேரண்டம் 

பிறைக்கணங்களின் உயிர்த்திரள்.

நானெலாம்

நானெலாம்

நானிலத்தின் ஓருரு

மானுடத்தின் பேருயிர்.

*

மலர்தல்

சிறுகாளான் பூப்பது போல

விண்மீன் பூப்பது போல

அமைந்த நீரில் அதுவாகக் 

குமிழி பூப்பது போல

ஒளியின் கருணையாக

அந்தி பூப்பது போல

வண்டுக்கென 

யோனி விரிந்து

மலர் பூப்பது போல

பிள்ளைக்கெனப் 

பால் சுரந்து 

முலை பூப்பது போல

பூத்ததே பூத்ததே 

என்னில் ஒன்று 

பார்த்ததே பார்த்ததே 

நானெனும் துளி.

*

சாகாநிலை

பிறந்தவாறே இருப்பதில்

துக்கம் இல்லை

ஏக்கம் இல்லை

ஏமாற்றம் இல்லை

இறப்பு இல்லை

மூப்பு இல்லை

வயது இல்லை 

அது இல்லை 

இது இல்லை என்கிறீர் ஆசானே!

காலகால

சீவ சார்பு அழியுமோ?

பற்று கெடுமோ?

அவா அறுமோ?

புலனுணர்ச்சி பொசுங்குமோ?

தொடர்புறுதல் விடுமோ?

குணம் குன்றி அழியுமோ?

நாம ரூப மயக்கம் தெளியுமோ?

உள்ளுணர்வு ஒடுங்குமோ?

மனமெனும் அலையாக்கம் மடியுமோ?

அனைத்தையும் 

ஊட்டி ஊட்டி வளர்க்கும் 

அறியாமை அழியுமோ?

அழிவன அழியாது 

பிறந்தவாறே இருத்தல் 

ஏலுமோ பகரும்?

*

தாய்மை

மழலை மாறாப்

பிள்ளையின் தாய்மையை 

எனக்குத் தா அமுதவல்லியம்மே!

உறங்கும் தாயின் 

அருகில் அமர்ந்து 

மழலைச் சொற்களால் 

அது பாடும் தாலாட்டில் 

அமைதி காணட்டும்

முரண் உற்ற 

மனுக்குலம்.

*

தன்னகம்

ஒப்புரவற்ற தன்னகத்தொடு 

உழல்பவன் நான்.

தான்மையைக் கடந்து 

துளியும் அறியாத தாகம் எனது.

தயையின் தாய்ப்பால் விடுத்து

மாயையின் மூத்திரத்திற்கு மயங்கும்

பாழும் பிள்ளை எனது அகம். 

நினைவுகளின் குறி அடங்க

மொழி விரிக்கும் யோனி 

எனது எழுத்து.

அகந்தையும் காமமும் 

அடித்துப் பிடித்து விளையாடும்

அற்பப் பிறப்பு இது.

அறிந்துணர்ந்த பிறகும்

கடக்கத் தெரியாத முடம் 

இவ்அறிவு.

தன்னகத்தின் கதவினை மீறித்

தன்னலத்தின் தினவினை மீறிச்

சதா உரைக்கிறது ஒரு குரல்: 

அறிவால் வெல்லமுடியாதது 

அறியாமை.

*

மெய்ப்பசி

மயக்கத்தின் களிக்களமாக

மதம் இருந்தது

இனம் இருந்தது

இறையும் இறைமையும் இருந்தன

மயக்கத்தின் திவ்யநிலையாகப்

பொறாமை இருந்தது

அகந்தை இருந்தது

பக்தி இருந்தது

ஞானமும் வீடுபேறும் இருந்தன.

மயக்கம் தெளிந்ததும் 

பசி எடுத்தது.

பசித்த கண்ணில் பட்டது

உயிர்த்திரள்

உயிர்களின் இயக்கம்

உணர்வுகளின் ஏக்க முயக்கங்கள்

அறியாமையின் அலையாட்டம்

பசித்து வரும் உயிர்களுக்காய்ப்

பால் சுரந்து காத்திருக்கும் 

பரிவின் தாய்முலைகள்.

*

ஐயை

ஆட்கொண்டனள் ஐயை!

ஐயம் மெய்யென உணர்ந்தவள்

மையம் பொய்யெனக் கடந்தவள்

வையம் இருப்பென வரித்தவள்

உணர்வில் இவளது உடலம்

முரண் இவளது தருக்கம்

சுயம் உருகிச் செயமாவதைக்

காண்பவள் காண் ஐயை!

பிரம்மம் மாயையை

மறுக்கும் நெருப்பு இவள்

தம்ம உயிர்ச்சுனையின்

தயை இவள்.

சூக்கும தூல பிளவெரியும் 

பிழம்பிவள்.

காமத்தின் உயிர்ப்பிவள்

களவிவள் கற்பிவள்

இப்பாலே யான் என்பவள் 

இயக்கமே யான் என்பவள்

நிலைபேறைச் சூதென்பவள்

நிலையாமை தரும் தெளிவில்

சுரக்கின்ற முலையோள் இவள்

விந்தின் ஒளியெலாம் ஐயை

கங்கின் உயிர்ப்பெலாம் ஐயை

நாதத்தொலியெலாம் ஐயை 

நாமக்கரைவெலாம் ஐயை

ரூபத்திரளெலாம் ஐயை

மோகப்புணர்வெலாம் ஐயை

உற்றுணர்ந்த ஓர்நொடியில்

பற்றறுந்த பாழ்க்கணத்தில்

ஆட்கொண்டனள் எனை ஐயை.

*

தண்நிலை

நீர்நிலை என்பது

ஓர்நிலை. 

உள்ளலைவும் ஓய்ந்த 

சீர்நிலை.

ஊடுருவ நெகிழும்

மீநிலை.

நுண்மாற்றம் நிதம் நிகழும்

அழியாப் பெருநிலை.

சுயமற்ற அருநிலையின்

பிளவற்ற திருநிலை.

நீர்நிலை எப்போதும்

ஓர் ஓக நிலை. 

தன்னில்தான் தத்தளித்துத்

தன்னில்தான் ததும்பித்

தன்னைத்தான் கண்டெடுத்துத் 

தானே தன் முகம் அடையும்

தண்மீகநிலை.

*

சாம்பல் நிலை

சாம்பலெனப் பொழிந்தது வெளிச்சம்.

எங்கும் நீற்றின் ஒளிமயக்கு. 

சாம்பல் உதிர்வாக இலைகளின் வீழ்வு.

மறைந்தவாறிருந்த 

நிலவின் கரைதலில் 

சாம்பலின் கமழ்ச்சி.

வெளியும் 

வெளியின் பல்லாயிரம் நாவுகளான 

பனித்துளிகளும் சாம்பல். 

ஓடிவர வர 

சாம்பலென உதிர்ந்துதிர்ந்து 

சூன்யமென விரிந்தது பூனைக்குட்டி.

சுடரும் சாம்பலென ஒளிர்ந்தசைந்தது வீட்டு அகல். 

காயும் உடைகளும் 

உடைகளில் சொட்டும் நீரும் சாம்பல்.

அமைதியாக வந்திருக்கும் 

அறையும் சாம்பல்.

ஏறிட்டுப் பார்த்த கண்ணாடி 

காட்டியதும் சாம்பல்முகம். 

சாம்பலில் விழும் சாம்பலாகக் 

கனலும் மனதில்

பூத்து உலையும் எண்ணங்கள்.

கங்கும் மிஞ்சாத 

நானெனும் சாம்பலின்மேல் 

பற்றி அமர்ந்தது 

அன்பெனும் சுடரொளி.

*

அமணக் குருவி

அகத்தினைக் கடைந்து 

அள்ளிப் பருகுவேன் அமிர்தம்.

முன்னை அறிவை முழுதும் எரித்து

உள்ளில் தொழுவேன் ஓங்கெரிதழல்.

நினைவினைச் சுட்டுக் குப்பையில் இட்டு

கணத்தில் உணர்வேன் காண்தகு இறை.

சொல்லை உடைத்துக் கறையை அகற்றித் 

தூய்மையாய்த் துலக்குவேன் மனத்தை.

மௌனம் எனது அமுதசுரபி.

அமணர் காட்டின்

எளிய குருவி நான்.

*

துறவி

போகும் அந்தத் துறவி

பாப்பா விளையாடுவதைப் பார்க்காமலே போகிறார்.

தேங்கிய நீரில் 

தாகம் தணிக்கும் பறவையை 

அறியாமலே போகிறார்.

கூலமணி ஒன்றைக் கவ்வி

நிரலுடன் செல்லும் எறும்பினை 

ஏறிடாமல் போகிறார்.

மரக்கிளைச் சீலைத்தொட்டிலில்

முணுமுணுக்கும் 

மழலையின் துடிப்பினைக்

கண்டும் காணாமல் போகிறார்.

நாசியைத் துளைத்து

உணர்வை முறுக்கும் 

 மல்லிகை மணத்தில் 

மயங்காமல் போகிறார்.

முதிய யாசகிக்குச் 

சோறூட்டிவிடும் சிறுமியின்

பச்சிளங்கண்களைத் 

தவிர்த்துவிட்டுப் போகிறார்.

போகிறார் 

போகிறார்

போகும் அந்தத் துறவி

பாவமன்றோ பாவையரே!

*

நான் யார்?

நஞ்சுக்கும் அமுதுக்கும் 

இடைப்பட்ட சுவை நான்

நெஞ்சுக்கும் அறிவுக்கும் 

இடைப்பட்ட புலன் நான்

இன்மைக்கும் உண்மைக்கும் 

இடைப்பட்ட வெளி நான்

நேற்றைக்கும் நாளைக்கும் 

இடைப்பட்ட நதி நான்

ஆண்மைக்கும் பெண்மைக்கும்

இடைப்பட்ட அகம் நான்

நீருக்கும் வளிக்கும்

இடைப்பட்ட சிற்றலை நான்

தான்மைக்கும் மேன்மைக்கும் 

இடைப்பட்ட விலை நான்

வாழ்வுக்கும் சாவுக்கும் 

இடைப்பட்ட திரை நான்

நுண்மைக்கும் தெளிவுக்கும்

இடைப்பட்ட இறை நான்.

*

மெய்மையின் சுவை

ஆயிரம் விளக்குகள் 

நின்றொளிரும் கல்மண்டபத்தில் 

அமர்ந்திருந்த எனக்குப்

பேரிருளைக் 

கணம் கணமாகச் சென்றடையும்

உன்மத்தம் கூடியது

முதல் விளக்கை ஊதி அணைத்தேன்

அடுத்த விளக்கை அணைத்தேன்

ஒவ்வொரு விளக்காக 

அணைத்தவாறே சென்றேன்

கடைசி விளக்கின் முன் அமர்ந்து

சூழப் பந்தலிட்ட இருளைக் 

கண்ணுற்றேன்.

அகப்பெருங்களிப்பில் 

கடைசி விளக்கையும் 

ஊதி அணைத்தேன்.

வெறும் இருளுக்கும்

சுடர் ஒளிர்ந்த இருளுக்கும்

வேறு வேறு சுவை.

*

மலர்க் கனல்

ஒவ்வொரு முறையும்

தோற்றுப்போகிறேன்.

கனன்றெரியும் அவளது காமத்தில்

கற்பூரம் ஆகிறேன்.

அவள் மலரின் ஒளிப்பெருக்கில்

குருடாகிறது எனது ஆணவம்.

வெல்விளிக்கும் அவளது பார்வை

என்னைத் தளர்வாக்குகிறது.

மூச்சு சோர்ந்து 

முதுகு அயர்ந்து 

முனகல் கரைந்து

உறங்கலாம் என நினைக்கையில்

இறுகப் பற்றி விழி கூர்ந்து

ஏறிடும் அவள் விளி

எப்போதும் என்னைத் தோற்கடிக்கிறது. 

கலவிக்குப் பிறகு

ஏக்கமுறாத 

ஆடவர் உண்டோ 

மாரா என் மன்மதனே?