அமலன் ஸ்டேன்லியின் வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’ நாவலிலிருந்து ஓர் அத்தியாயம்

*

பல்லாவரம் வழியே தோல் தொழிற்பேட்டை செல்லும் சாலையில் கைனடிக் ஸ்கூட்டர் ஓடியது. அப்போதுதான் மழைபெய்து ஓய்திருந்தது. கடும் மழையால் பள்ளங்கள் நீரால் முடியிருக்க மிக கவனம் காட்ட வேண்டியிருந்தது. ஓடுபாதையில் அப்பகுதிக்கே உரித்தான தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் தோலும் வேதிப்பொருளும் கலந்த மணம். ஏறத்தாழ ஒரு குடிசைத் தொழில் மாதிரி இப்பகுதியில் தோல் பதனிடுதல் நடைபெற்று வருகிறது. ஓரிரு மாட்டுத்தோல்கள் தொங்க விடப்பட்டிருந்தன சில சிறு தொழிற்சாலைகளில்.

மாட்டுவண்டிகள் பதப்படுத்தப்பட்ட தோல்களை ஏற்றிச் செல்கின்றன. இப்பகுதிகளில் வாழும் மக்களைப் பார்த்தால் ஆச்சர்யமே மேலிடுகிறது. நிலத்தடி நீரும் பாழ்பட்டுப் போய்விட்டது. குரோமியம் செறிந்த சாயக்கலவை நீர் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறது. காற்றுவெளி வேதிக்கலவையின் மணத்தைச் சுமந்து வருகிறது. இருப்பினும், அடுக்குமாடிக் குடியிருப்புகள் புதிது புதிதாய் முளைத்தவண்ணமே உள்ளன.

கழிவில் காணப்படும் குரோமியம் இரு வேதிநிலைகளில் காணப்படுகிறது. மூன்றாம் நிலை நச்சு மிகுந்தது. பதனிடு தொழிலாளர்களை இது மிகவும் பாதிக்கிறது. தசைநார்களைத் தொய்வுறச் செய்யும். புற்றுநோய், சுவாசக் கோளாறுகளையும் உண்டுபண்ணும். வெளியேறும் கழிவுகள் மண்ணுயிர்களையும் தாவரங்களையும் பாதிக்கும். ஆனால், ஆறாம் நிலை குரோமியம் நிலையற்றது, நச்சு மிகுந்ததாயினும். அது மண்ணுக்குள் புகுந்ததும் மூன்றாம் நிலைக்கு மாறி விடுகிறது. நீண்டநாள் மண்ணில் தங்கியிருக்கக் கூடியது. ஆனால் அவ்வளவு பாதகமூட்டுவதில்லை. இது ஏறத்தாழ புளூரைடு வேதிக்கலவை போன்றதே. புளூரைடும் தன் இயல்நிலையில் நச்சு மிகுந்தது. ஆனால் நிலையற்றது. நிலையற்றது தான் அதிக விளைவூட்டக் கூடியதாக உள்ளது.

முன்னே இரு மாட்டுவண்டிகள் காலியாக போய்க்கொண்டிருந்தன. மூப்பெய்திய எருதுகள். கிழடுதட்டிப் போன அவ்வண்டிக்காரர்கள் தமது வம்சத்தின் கடைசி வண்டியோட்டியாகத் தான் இருப்பார்கள். அநேகமாக இவர்களின் அடுத்த தலைமுறை குறைந்தபட்சம் ஆட்டோவேனும் ஓட்டுவார்கள். ஓரிரு கழிக்கப்பட்ட தோல்கள் வண்டியில் கிடந்தன. மாமிசத்தை விடவும் விலங்குத் தோலுக்கே விலை. தோல்பதனிடும் தொழிற்கூடங்களில் ஏற்றுமதியாகும் தொல்பொருட்கள் மூலம் அரசுக்கு நல்ல அந்நியச் செலாவணி.

பணியிடம் சார்ந்த சுகாதாரக் கேடுகளும், தொழிற்சாலைக் கழிவுகளும், சுற்றுச்சூழல் மாசும் மூன்றாந்தரத் தோலுமே இங்குள்ளோருக்கு. வளர்ந்த நாடுகள் தமது சூழலையும் மக்களையும் பாதுகாத்துக் கொண்டு, சூழல் முறைகேடுகளுடன் உற்பத்தி செய்து இங்குள்ளோரை பாதிக்கும் பல தொழில்களில் இதுவுமொன்று.

திருப்பூர் ஆடைகள் கூட அப்படித்தான். ஏன் இப்போது தழைத்து வரும் தகவல் தொழில்நுட்பக் கூடங்களும்தான். மேலைநாடுகளில் இப்படிப் பணியாளர்களையும் சுற்றுச்சூழலையும் சுரண்ட முடியாது.

ஸ்கூட்டர் திருநீர்மலையைக் கடந்து சென்றது. மிக அழகான ஊராக ஒருகாலத்தில் இருந்திருக்க வேண்டும். மலையடிவாரத்தில் கோயில் குளம். மலையைச் சுற்றி இருபுறமும் பழைய ஓட்டு வீடுகள். நகரத்தின் நாற்புறத்திலும் வளர்ச்சியினூடே இவ்வூர் மிகப் பின்தங்கியிருந்தாலும் தனது அடையாளங்களை மிக மெதுவாக மாற்றிக் கொண்டிருந்தது. சாலை சற்றே கொண்டையூசி போல் வளைந்து சென்றது. திருப்பத்தில் ஒரு குப்பைக் குவியலின் முன் மனம் பேதலித்ததாய் ஒருவன் தென்பட்டான். பார்வையை நேராகச் சந்தித்தான், உணர்வு ஏதுமற்று. சாலையின் இருபுறமும் நகரக் குப்பைகளையும் தொழிலகக் கழிவுகளையும் முறையற்று கொட்டியிருந்தனர். தேவையற்றுப் போன கான்கிரீட் கலவையையும் கழித்துவிட்டிருந்தனர்.

பின்னர் சட்டென்று ஓர் ஆற்றுப்பாலம் குறுக்கிட்டது. மழை பெய்திருந்ததால் சிறு நீரோட்டம் இருந்தது. புறப்பட்டு வரும் ஆறு இவ்வழியே ஓடி நந்தம்பாக்கத்தினூடே சென்னை நகருக்குள் புகுந்து சைதாப்பேட்டையைத் தாண்டி அடையாறாக மாறி கடலுக்குள் சங்கமிக்கிறது. பாலம் கடந்ததும் மீண்டும் கிராமச் சூழல் படர்ந்தது. நாட்டு ஓடுகள் வேயப்பட்ட பழம்பெரும் திண்ணை வீடுகள் நிறைய சிதிலமாகியிருந்தன. எல்லோரும் நகரத்தில் எங்கேயோ போய் அமைந்திருப்பார்கள். இவ்வழி வருவது இதுவே முதல்முறை. சாலையோரத்தில் விபஸ்ஸனா பயிற்சி மையம் இன்னும் இரண்டரை கிலோமீட்டர் என்றொரு அறிவிப்புப் பலகை சொல்லிற்று. எப்படியிருக்குமோ அந்த மையம் என்றொரு படபடப்பு.

பத்து நாட்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டும். யாரிடமும் பேசக்கூடாது. எதுவும் படிக்கவோ எழுதவோ கூடாது. தகவல்தொடர்பு, உலகத் தொடர்பு முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும். என்னால் முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

வண்டி தியான மையம் அடைந்தது. இத்தனை நாள் தங்கிப்போக முடியுமா என்கிற யோசனை அழுத்தியது. தொடர்ந்து யாருடனும் பேச்சற்ற நாட்கள் என்பது மேலும் அச்சுறுத்தியது. எல்லா நேரமும் ‘நோபிள் சைலன்ஸ்’ எனும் உன்னத அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அப்பெரிய தியானக்கூடத்தில் ஒருவர் கால்மடக்கி உட்காருமளவிற்கு நீலவுறையிட்ட சதுர மெத்தைகள் வரிசையாக ஒருவருக்கொருவர் தேவையான இடைவெளிவிட்டு இடப்பட்டிருந்தன. ஒவ்வொருவரின் அடையாளச் சீட்டு இணைக்கப்பட்டிருந்தது. மின்விசிறிகள் தாழ்வேகத்தில் சுழன்றன. எல்லோரும் அவரவரிடத்தில் அமர்ந்தனர். எதிரே ஒரு நாற்காலியில் ஆசிரியரொருவர் அமர்ந்திருந்தார். ஒலிநாடா இயக்கப்பட்டது. உலகமெங்கும் விபஸ்ஸனா தியானப் பயிற்சி மையங்களை அமைத்து நடத்திவரும் கோயாங்காஜி பேசினார்.

இவர் பர்மாவில் வாழ்ந்துவந்த இந்தியர். விபஸ்ஸனா பயிற்சியில் தேர்ந்தவர். சாயாகி யுபாகின் அவர்களின் மாணவர். விபஸ்ஸனா எனும் உள்ளொளித் தியானம் புத்தரால் உருவாக்கப்பட்ட பயிற்சிமுறை. தேரவாத பௌத்தத்தைச் சேர்ந்த இம்முறை புத்தரின் போதனை, பயிற்சி முறைகளைப் பிறழாமல் மரபு வழியாகக் கடைப்பிடித்து வரும் ஒரு பிரிவாகும். விபஸ்ஸனா பயிற்சிகள் தற்போது உலக நாடுகள் முழுவதும் இவரால் பயிற்றுவிக்கப்படுகிறது. பத்து நாட்கள் கட்டாயம் பயிற்சியெடுக்க வேண்டும். உணவும் தங்குமிடமும் தரப்படும். கட்டணம் ஏதுமில்லை. உலகமுழுதும் இப்பயிற்சி தானத்தில் நடத்தப்படுகிறது. தானமாக பயிற்சி பெற்றவர்கள் கொடையளிக்கலாம், விருப்பப்பட்டு.

“உங்கள் வாழ்வில் பத்து நாட்களை அத்தியானத்திற்கு ஒப்புவித்தது ஒரு சிறந்த சாதனை. இதன் பலனை இறுதியில் நீங்களே கண்டடைவீர்கள். சொல்லிக் கொடுப்பவற்றை, விதிமுறைகளைப் பிசகாமல் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் அதன் பலனைப் பல மடங்காகப் பெறுவார்கள் என்பது உறுதி. தேவைப்பட்டாலொழிய ஆசிரியரிடமோ தம்மா சேவகர்களிடமோ கூடப் பேசாதீர்கள். பூரண உன்னத மௌனம் மிகமிக முக்கியம். இந்தப் பத்து நாட்களும் நீங்கள் சந்நியாசிகளாக வேடம் தரித்துள்ளீர்கள். உங்கள் அன்றாட அடிப்படைத் தேவைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சொல்லிக் கொடுப்பதை அப்படியே கடைப்பிடிப்பது மட்டும்தான். இங்கே தங்கியிருக்கும் பத்து நாட்களில் நீங்கள் ஐந்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது மிகமிக அவசியம். பொய் கூறாதிருப்பது, பிறர் பொருளை நாடாமல், எவ்வுயிரையும் கொல்லாமல், தகாத பாலியல் உறவு தவிர்ப்பது, மது, போதை தவிர்த்தல் ஆகிய ஐந்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

‘கொலை களவு கள்காமம் கோபம் விட்டாலன்றோ மலை இலக்கா நின்னருள்தான் வாய்க்கும் பராபரமே’ என்று பரப்பிரம்ம அருள் வாய்க்க இவ்வைந்தும் விடவேண்டுமென்கிறது கூறுகிறது தாயுமானவரின் பராபரக்கண்ணி.

“முதல் மூன்று நாட்கள் ‘ஆனாபான’ எனும் சுவாசப் பயிற்சி மேற்கொள்வீர்கள். ஆசையும் வெறுப்பும் நம்மை ஆட்டுவிக்கிறது. இரண்டிற்கும் இடைப்பட்டொரு மயக்கம். உள்ளதை உள்ளபடி பார்க்க, பயில மெல்லத் திரை விலகுகிறது. தெளிவும் விழிப்பும் உண்டாகிறது” என்றார். இதையே ‘காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்’ என்கிறது வள்ளுவம்.

“உள்சென்று வெளியேறும் சுவாசத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். கட்டுப்படுத்தக் கூடாது. ஒவ்வொருவருக்கும் இயல்பான சுவாசத்தை விழிப்போடு கண்ணுறுவீர்கள். ஆனால் கண்களை மூடியபடியே. நான்காவது நாள் விபஸ்ஸனா கற்றுக்கொடுக்கப்படும். முதலில் ‘ஆனாபான’ கற்றுக் கொள்வோம். அதற்குமுன் புத்தம், தம்மம், சங்கமெனும் மும்மைக்குள் சரணடையுங்கள்.” பாலி மொழியிலான வாக்குறுதியை யாவரும் திருப்பிக் கூறினோம், மும்மைச் சரணை மும்முறை. ‘ஆனாபான’ பயிற்சிக்கு நீங்கள் உங்களுக்கு உகந்தபடி உட்கார்ந்து கொள்ளலாம். இப்படித்தான் உட்கார வேண்டுமென்ற எக்கட்டுப்பாடுமில்லை. தலை சற்றே நிமிர்ந்திருக்க வேண்டும். தண்டுவடம் நேராக இருக்க வேண்டும். அதேநேரம் கடுமையாக இல்லாமல் சுலபமாக உட்கார்ந்துகொள்ள வேண்டும். இப்போது ‘ஆனாபான’ கற்றுத் தரும்படி ஆசிரியரை வேண்டிக் கொள்ளுங்கள். பாலி மொழியில் கோயங்காஜி உரைத்ததை அப்படியே மறுபடி ஒலித்தோம். இப்போது தொடங்குங்கள் பயிற்சியை. கண்களை மூடுங்கள். மெதுவாக, நிதானமாக சலனமற்று வெறும் மூச்சைப் பாருங்கள். கவனமாக, ஒவ்வொரு உள்ளிழுப்பையும் வெளியேறலையும் பாருங்கள்.”

கூடம் அமைதியாயிற்று. வெளியே ஏதோவொரு பறவை தன்னியல்பை ஒலித்துக் காட்டியது. மழை மண்படரும் சலசலப்பு. மூச்சு சீராக இல்லை, தடைப்பட்டது. சுவாசமும் வயிறு ஏறி இறங்குவதும் முரண்பட்டிருப்பதாக உணர்த்திற்று. வீட்டில் எல்லோரும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? இப்படி மூச்சைப் பார்த்துக்கொண்டு உட்காரச் சொல்கிறார்களே, பத்துநாளும் மூச்சைப் பார்த்து என்ன செய்ய? என்ன பயிற்சி இது? தெரியாமல் வந்துவிட்டோமோ, பணியிலிருந்து நீண்ட விடுப்பு எடுத்துவிட்டு? தெளிவாக இருந்தோமே, எது குழப்பிற்று? எந்தவொரு பயிற்சியோ செய்முறையோ தேவையில்லை, புரிதல்தான் அவசியமென்று உறுதியாக இருந்தோமே. எது மாற்றிற்று? எது இங்கே வரவழைத்தது?

எல்லோரும் உறங்கப் போய்விட்டனர். இரவில் மரங்களின் கீழ் உலவினேன். இலைகளின்வழி மழைநீர் சொட்டியது. தூரத்தில் வானவெளியில் வெளிச்சம் தென்பட்டது. வெளிச்சம் வளர்ந்து கொண்டே வந்தது. ஒளி அதிகரிக்க விண்ணதிர்ந்தது. உறுமியது. பெரிய விமானம் தலைக்குமேல் அண்மை நிலையம் நோக்கித் தாழ்ந்தது. இரைச்சலும் ஒளியும் அடங்கின. சந்தேகம் வலுத்தது. படபடப்பு அதிகமாயிற்று.

“எல்லோரும் அமைதியாக அவரவர் தங்கும் அறைகளுக்குச் செல்லுங்கள். காலை நான்கரை மணிக்கு மீண்டும் இப்பயிற்சியைத் தொடரலாம். மெல்ல கலைந்து செல்லுங்கள்.” அறிவிப்பைத் தொடர்ந்து மெல்ல தட்டுத்தடுமாறி எழுந்து இருப்பிடம் சென்றேன்.

*

வெண்கல மணி ஒலித்தது. ஓங்காரம் அடங்கச் சில விநாடிகளாயின. அந்த மணி பர்மாவிலிருந்து கொண்டுவரப்பட்டது. பயிற்சி முன்னறிவிப்புக்கென மணி ஒலிக்கப்படும் அட்டவணைப்படி. கிட்டத்தட்ட முப்பது கிலோ இருக்கும். பளபளப்பும் வனப்பும் கொண்டிருந்தது. வடிவமைப்பில் வித்தியாசமிருந்தது. தோட்டத்தின் ஓரமாய் தொங்கவிடப்பட்டிருந்தது. மிக ரம்மியமான தோட்டம். அங்குள்ள அனைத்துமே தானத்தினால் தருவிக்கப்பட்டவை. அதுவே கூடுதல் சிறப்பு.

மூன்றாவது நாள் பயிற்சி தீவிரமடைந்திருந்தது. முதலிரண்டு நாட்கள் போலன்றி உடலும் மனமும் சூழலுக்கு தன்னைத் தகவமைத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தன. ஒருமணி நேரம் கால் மடக்கி அமர்ந்து ‘ஆனாபான’ செய்வதின் சிரமம் கணிசமாகக் குறைந்துவிட்டிருந்தது. முதல் நாள் உடலை செவ்வனே அசைத்து நிமிர்த்தி முறுக்கிச் சரிசெய்து கொள்ள வேண்டியிருந்தது. ஏற்கெனவே பள்ளி நாளில் காதல் திட்டத்தில் சைக்கிள் விபத்தால் உண்டான ஒருபக்க உடல் வலி, முழங்கால் குடைச்சல் மூன்றாவது நாளில் மட்டுப்பட்டிருந்தது. பயிற்சியால் ஏற்பட்ட அந்தப் புதிய வலி எப்போதுமிருந்து வந்த வலியை மழுங்கடித்து விட்டது. எல்லோரும் தமது அறையில் ஓய்வெடுக்க, பொழுதின் இடைப்பட்ட அட்டவணைப்படியான ஓய்வு நேரத்தில் நடந்தவாறு சுவாசத்தை விடாப்பிடியாக கவனித்து வந்தேன். விட்டுவிட்டு மழை பெய்ததால் அவ்வளவாக நடக்க முடியவில்லை.

முந்தைய இரவெல்லாம் கனமழை. வீட்டின் நினைவு வந்தது. மழையில் குழந்தைகள் என்ன செய்யும்? கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியாளாய் அவள் எப்படிச் சமாளிப்பாள்? வீட்டண்மையில் பெரிய ஏரி நிறைந்து உடைப்புண்டானால் என்ன செய்வது? மருட்சியும் வருத்தமுமாய் ராக்காலம் மழையில் கரைந்தது. எப்படியெல்லாமோ வாழ்வு பிறழ்ந்து பின் நேராகி வருகிறது.

நிகழ்ந்த வலியும் அவமானமும் வெகு அதிகம். காயங்கள் ஆற காலங்கள் ஆகும்போல. நிகழுமென்று கனவிலும் நினையாதவை நடந்தேற உள்ளே கனத்து நிமிர்ந்த மாண்பும் மதர்ப்பும் கொண்ட மேதகு விருட்சமொன்று செருக்கு அற, உளுத்துக் கெட்டுப் போனதாய், பட்டுப்போய் விட, மெல்ல மெல்ல அதன் வேர்களில் தழை ஊட்டமேற்றி, கிளைகளைக் கத்தரித்து, சுற்றித் தரையில் மூடாக்கு இட்டு தாதுக்களை நீரோடிட்டு புத்திலைகளை பழம்பச்சையத்தை ஒவ்வொரு அணுவாக மீட்டெடுத்து மீண்டும் கர்வத்துடன் பழைய மேன்மையுடன் காற்றை, வெய்யிலை, புயலை எதிர்கொண்டு நிற்பது ஒரேநேரத்தில் உயர்நவிற்சியும் தாழ்ச்சியுமாய் இருக்கிறது.

சித்திரக் கதைகளை பெரிய அண்ணன் வாங்கித் தருவார். பல சரித்திரக் கதைகள் படிக்கக் கிடைக்கும். புத்தரதும்தான். எனினும் ரஜபுத்திரனான ராணா பிரதாப் சிங் முகலாயரிடமிருந்து தப்பித்து தலைமறைவாகி காடுமலைகளில் தஞ்சமாகி இருந்த அப்படம் மிகவும் அழுத்திற்று. அக்பருடைய மான்சிங்கை எதிர்த்துப் போருக்குக் கம்பீரமாகச் சென்று பாதியில் பின்னடைந்து ஓடியொளிந்ததைப் பார்க்கப் பரிதாபம் மீதுற்றது. ஆனாலும் அவ்வோட்டம் இன்னொரு போர் நாளுக்கான ஆயத்தம். மீண்டும் உதயப்பூரைக் கைவசமாக்கியதன் சாகசம்.

வராந்தா விளக்கு வெளிச்சத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன், கொசுவலைக்குள் உலகின் நடப்பு பற்றி எத்தகவலும் அறிய வாய்ப்பில்லை. கொட்டித் தீர்க்கும் மழையைத் தவிர.

காலையுணவு இடைவேளையில் நடந்தபடி பயிற்சி செய்தவாறு, தியானக் கூடத்தின் பின்புறம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பகோடா எனும் அமைதிக் கோயில் பக்கமாகச் சென்றேன். ஒரு தொழிலாளி ஓடுநீரைத் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தார். யாரும் பார்க்கவில்லை. அவரை நெருங்கி ஏதும் வெள்ளமா எனக் கேட்க வாயெடுத்தேன். பேச்சு வரவில்லை. மூன்றுநாள் பூரண மௌனத்தாலும் சுவாசப் பயிற்சியாலும், குரல்வளை இயங்க மறுத்தது. தொண்டையைச் சரி செய்தபடி, “மழை வெள்ளமா?” என்று கேட்டேன். மிகத் தாழ்ந்து போயிருந்தது குரலொலி. “எங்கேயும் மழைதான். ரொம்ப அதிகம்” என்றார். என்னை யாரோ பார்ப்பதாய் உணர்ந்து அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே நடக்க ஆரம்பித்தேன். தம்மா சேவகர் நான் பேசியதற்காக மிகவும் கடிந்து கொண்டார். வீடு பற்றிய பயமும் கவலையும் வதைக்கத் தொடங்கியதை அவர் அறியமாட்டார். கவலையோடு தியானக் கூடத்திற்குள் நுழைந்தேன்.

“மிகக் கவனமாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் தொடங்குங்கள். சுவாசத்தின் மிக நுட்பமான உணர்வினை கவனியுங்கள். விழிப்புடன் கூர்மையாக, கண்மூடி” என ஒலிநாடாவில் போதிக்கப்பட்டது. சுவாசம் சீராகப் போய்வந்து கொண்டிருந்தது. மூச்சின் வெப்பம், நாசியின் உட்சுவர்களில் உணரப்பட்டது. மும்முரமடைந்தது கவனம். மனவிழிப்பு.

சற்று நேரத்திற்குப் பிறகு எக்காரணமுமற்று தொண்டையில் ஏதோ அடைத்தது. கமறிற்று. தொண்டையை சரிசெய்தேன். எம்முகாந்திரமுமற்று ஏனிப்படி தொண்டை அடைபட்டதென்று மயங்கினேன். அவ்வடைப்பால் குரல் இன்னும் கம்மிப் போனதை அறிந்தேன், கமறலினூடே. மீண்டும் ‘ஆனாபான’ தொடர்ந்தது. அது விசுத்தியின் ஸ்தானம்.

“உடல் சட்டென இயந்திரம்போல் செயல்படுவதாகத் தோன்றிற்று. வந்துபோகும் மூச்சுக்கேற்ப வயிற்றுப்பகுதி விரிந்து லயத்தில் குவிந்தது கவனம். ஒருகட்டத்தில் உடலும் வெறும் மூச்சாயிற்று. மனம் வெறும் கவனிப்பாயிற்று. அதையும் தாண்டி சற்றைக்கெல்லாம் கவனமும் மூச்சும் ஒன்றாயிற்று.

திடுமென வானம் உருண்டது. சரளமாக முழங்கிற்று. பேய்மழை பிடித்தாட்டிற்று வெளியே. கூடம் சில்லென்றாயிற்று. மூடிய விழிக்குள் உடலென்ற நினைவுப்பகுதி கண்ணாடித் தாளாயிற்று. ஒளியூடுருவல் கொண்டது. வாளால் உடல் வகுபட்டாலும் அதைப் பிளக்க இயலாதெனும் உணர்வு. உடலும் மனமும் ஒன்றற பிரபஞ்சத்தோடு எவ்வாறாயினும் பிரிக்க இயலாதபடி ஐக்கியப்பட்டுள்ளது போல. ‘உள்ளத்தின் உள்ளே உறப்பார்த்து ஆங்கு ஒண்சுடரே மெள்ளத்தான் அர்ச்சிக்கும் ஆறு’ என ஒளவைக்குறள் உணர்த்தும் உடல், மனம் உள்வெளி தாண்டிய மாசற்ற ஒளிச்சுடர் அனுபவப்பட்டது.

விண்ணதிர ஏதோ விமானம் சமீபித்தது. நெருங்கிற்று, முட்டிற்று. விழிப்புணர்வு என்ற ஒன்றினூடே கிழித்துப் பாய்ந்தது. வெளியோடு வெளியாகிப் போன ஊன் பரப்பு உணரப்படவில்லை. ஒரு சாமுராய் வந்தெந்தன் தலையறுத்துப் போகட்டும். விழிப்பின் பரந்த வெளிமட்டும் உணரத்தக்கதாய் இருப்பின் உயிர்ப் பொருளாய்த் தொடருமென்ற சூட்சுமம் புரிபட்டது. மழை ஓய்ந்தது. தலைக்கு மேல் குரலறிமுகமில்லாப் பறவையென்று விட்டு விட்டு ஒலித்தது.

அச்சின்னப் பறவையின் பெயர் தெரியவில்லை. கர்வமிகு கூர்கொண்டை. கண்ணுக்குக் கீழே ஒரு சிகப்புத்திட்டும் வெண்திட்டும். மீசையுண்டு. உடல் மேற்புறம் பழுப்பு, அடிப்பாகம் வெண்மை. குதத்தில் இன்னுமொரு சிகப்புத்திட்டு. செம்மீசைக் கொண்டைக்குருவி எனக் கலைக்களஞ்சியம் சொல்லிற்று. மூன்று அல்லது நான்கு அலைநீளங்களில் நீட்டி சீழ்க்கையொலியாய் இனிதுபாடும் குருவி. முதன்முதலில் அந்த ஆறாம் நாளன்று மழைப்பொழுதில் பாடிற்று. மதியம் நடைத் தியானம் பயில்கையில் மிக அருகே நின்று பாடிற்று. புதிதானவனாயன்றி மிக நெருக்கமாய் உணர்த்திற்று.

வீட்டில் தியானிக்கையில், அதிகாலையில் அண்மைத்திடலின் தாவரங்களூடே நின்று பாடியது. சிலசமயங்களில் ஆச்சரியப்படுத்தும் வகையில், தியானத்தின் உச்சநிலையைத் தொடுகையில் ‘ஆம் சரியாகச் செய்தாய்’ என்பதாகப் பாடிற்று. அது கொடைக்கானலில் போதி ஜென்டோவிலும் தொடர்ந்தது மட்டுமல்ல, தில்லியில் ஹோட்டல் கட்டட மாடியில் நடைத் தியானம் செய்கையிலும் நிகழ்ந்தது பேராச்சரியம். அதே இனக்குருவி அடையாளங்கண்டு தொடர்வது என்ன? எப்படி? அதன் அர்த்தம்தான் யாது? எனினும் அது பாராட்டிவரும் நட்பு மனதிற்கு இதமாகவும் இனிய பெருங்கொடையுமாகவும் ஆயிற்று.

நான்காம் நாள் மணியொலித்தது. பயிற்சி தொடங்கியது. விபஸ்ஸனா கொடுக்கப்பட்டது. சுவாசத்தின்பாலான கவனத்தை சற்றே திருப்பி உடலிலேற்படும் ‘வேதனைகள்’ எனும் சூடு குளிர்ச்சி, வறட்சி ஈரம், கடினம் மிருது, குத்தல், அரிப்பு, வலி போன்ற பலதரப்பட்ட உணர்ச்சித் தோன்றல்களை உணர்ந்து அவற்றின் நிலையற்ற தன்மையை கவனத்திற்குள்ளாக்குதல். பாலியில் வேதானா என்பது உணர்ச்சி. தலை முதல் கால் வரை ஒரு நிரலாக ஆராய வேண்டும் கண்மூடியபடி. ஆய்ந்தறிய ஆய்ந்தறிய உடலும் மனமும் கிளைத்துக் கிளைத்து உள்ளுக்குள் உணர்வுகளாகப் படர்ந்தன. பார்க்கப் பார்க்க அவை வெறுமை கொண்டிருந்தன.

இரவு விபஸ்ஸனா முடிந்தபோது உடல் மிகமிக களைப்புடன் இருந்தது. மலையைப் பெயர்த்ததான களைப்பு. சோர்வு. நடக்கக்கூடத் திராணியற்று, ஒரு பிணியாளனைப் போல அறை வந்து படுத்தாயிற்று. அதீத அசதியால் தூக்கம் வரவில்லை. திடீரென்று மறுபடியும் கால்கள் குடைந்தன. தூக்கம் பிரிந்தது. புரண்டு புரண்டு படுத்து அப்படியே அடங்கிப் போனேன்.

ஐந்தாவது நாளும் அதே பயிற்சி. ஆனால் நாள் முடிவில் அதற்கான களைப்பேதுமில்லை. எல்லாம் இயல்பாக, மிக இயல்பாகத் தொடர்ந்தன. உடல் வலியில்லை. மனம் தெளிந்திருந்தது ‘வேதனை’ எனப்படும் உணர்ச்சிகள் மட்டுமே அவ்வப்போது ஆழமாயிருந்தன. உள்ளுக்குள் ஊசியாய் இறங்கின அவ்வப்போது. தோன்றித் தோன்றி மறைந்தன.

ஆறாம் நாள் மாரா எனும் துர்குணத்தவனின் நாளாகக் கருதப்பட்டது. மணி ஒலித்தது. ஒலிநாடா உரைத்தது. “மீண்டும் தொடங்குங்கள், மீண்டும் தொடங்குங்கள் நிதானமாக. பொறுமையுடன் பயிற்சியைத் தொடருங்கள்.” சுவாசத்தில் ஆரம்பித்து, கவனத்தைக் கூர்மையாக்கி, மூச்சின் மிக நுட்பமான உணர்வுக்குள் புகுந்து, பின்னர் அங்குலம் அங்குலமாக ஊனின் வேதனைவுணர்வுகளை ஆய்ந்தெடுத்தது. சற்றைக்கெல்லாம் முழுக்கவனமும் ஒருமிப்புக்குள்ளானது. தலையின் உச்சியில் ஏதோ மிக நுண்மையாக ஊர்வதை உணரமுடிந்தது. அமர்ந்தபின் உடலசைவுகளைப் பெரும்பாலும் தவிர்ப்பது நல்லதென்பதால் தொட்டுப் பார்க்காமல், அவ்வுணர்ச்சியைக் கூர்ந்தாராய, தலைமுடியின் ஓரிழை மெல்ல அசைவதாக, ஒரு புழுவைப் போல நெளிவதாகத் தொடர்ந்த உணர்வு. திடீரென முடிக்கற்றை எழுந்தாடுவதாய்ப் பட்டது. பிறகு மயிரிழை நெளிந்தது. புருவ மத்தியில் அதே நெளிவுணர்வு தோன்றிற்று. புருவ முடிச்சின் மிகச்சிறிய சதை பிடித்திழுத்தது. துடித்தது. ஆக்ஞா ஸ்தானம்.

நேரமாக ஆக இவ்வுணர்வுகள் அதிகமாயின. மூச்சு மிகச் சீராக இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அதில் கவனம் செலுத்தத் தேவையற்றிருந்தாற் போல இவ்வுணர்ச்சிகள் தானாக முளைத்தன. கிளர்த்தின. யாதென்று அறிய முடியவில்லை. நேரப்போக்கில் தலைமுழுதும், குறிப்பாக, முகப்பகுதி இறுகியது போல் உணர்ந்தது. உடல் இயல்பாக அன்றி எதனாலோ இயக்கப்படுவதாக உணர்த்திற்று, எவ்வியக்கமும் தன் கட்டுப்பாட்டிலில்லை என்பதாக மனம் கலவரப்பட்டது. என்ன ஆகிறது? முன்னர் ஏற்பட்ட சில கணங்களே நின்ற அனுபவம் நீடித்து விரிவாயிற்று. வளர்ந்தது. அதுவே அச்சுறுத்தியது. கண் திறந்து பார்த்தேன். எதிரே ஆசிரியர் கண்மூடி அமர்ந்திருந்தார். சுற்றியிருந்த எல்லோருமே தீவிரத்துடன் காணப்பட்டனர். வெகுசிலரே கால் நீட்டி, கவனங்களைத் தவறவிட்டு அமர்ந்திருந்தனர். உட்கார முடியாத சிலர் நாற்காலியில் அமர்ந்தபடி பயிற்சியை மேற்கொண்டிருந்தனர்.

ஏதோ பெரிதாக நிகழப்போவதாக உள்ளுணர்வு சொல்லிற்று. குறிப்பிட்ட நேரத்தில் தான் ஆசிரியரை அணுகலாம். பத்து மணிக்கு ஒரு இடைவேளையுண்டு, பத்து நிமிடம். அதைப் பயன்படுத்தத் தயாரானேன். குறிப்பிட்ட நேரத்தில் ஆசிரியரை அணுகி விபரம் சொல்ல முயன்றேன். குரல் வரவில்லை. மிகத் தாழ்ந்த ஒலியில் உணரப்படுவதை எடுத்துக் கூறினேன். “அதொன்றுமில்லை, பயப்படாதே, இது மாரா நாள். அப்படித்தானிருக்கும்.” ஏதோ விளக்க வந்து பிறகு நிறுத்திவிட்டார். தனக்குப் பல வருடங்களாக இப்படி இருக்கிறதென்று தன் நெற்றிப் பொட்டைக் காண்பித்தார். அப்பகுதி வெளுத்திருந்தது, வட்டமாய்.

அவரின் பதில் திருப்தியும் தரவில்லை, தைரியமும் தரவில்லை. மாறாக நான் இன்னும் கலவரப்பட்டு பயந்தேன். எழுந்து வெளியே நடந்தேன். ஓடிப் போய்விடலாமா என்றெண்ணினேன். குறுக்கே தம்மா சேவகர் எதிர்ப்பட்டார். சைகையால் மறைவாய் வரும்படி வேண்டினேன். என் கலவரமுணர்ந்து கூடவே வந்தார். பயிற்சியின் விளைவாக சில பயங்கள் இருப்பதாகக் கூறினேன். அவர் பேசவில்லை. வாயில் கைபொத்தி “ஆசிரியரைக் கேளுங்கள்” என்று கூறி நகர்ந்துவிட்டார். முற்றிலும் நம்பிக்கையற்றுப் போய்விட்டது.

தங்கும் அறைக்கு அப்புறம் மதில் சுவரிருந்தது, கம்பிக் கதவுமிருந்தது. ஒரு லாரியிலிருந்து செங்கற்களை இறக்கிக் கொண்டிருந்தனர். லாரி கிளம்புகையில் பெட்டியுடன் தாவியேறி ஓடிவிடலாமா என்று வெறி எழுந்தது. தியானப் பயிற்சி என்ற பெயரில் இப்படித் தனியாக வந்து மாட்டிக்கொண்டு விட்டோம் என மனம் குமைந்தது. இக்கடும் மழையில் கட்டாயம் வெள்ளம் ஏற்பட்டிருக்கும். வீட்டண்மை ஏரி உடைந்து விடுமோ? ஒருகால் இவ்வதிசய உடலுணர்வுகள் மெல்ல எனதனைத்தையும் ஆட்கொண்டு, மனம் முற்றிலும் பழைய நினைவுகளை மறந்துவிட்டால் என்னாவது? நான் யாராக மாறுவேன்? யாரை நினைவுபடுத்துவேன்? யாரை மறப்பேன்? நாளை எனது அடையாளங்கள் என்னவாகும்? ஒருவேளை, எவ்வடையாளமும் இருக்காதோ? என் மக்களையாவது அடையாளம் காண்பேனா? அப்படிக் காணாவிடில் நிலைமை என்னவாகும்? என்ன மாதிரி உறவு தொடரும்? மனம் மருண்டது. வானம் உறுமிற்று. வெண்கல மணி ஒலித்தது.

நான் தியான அறைக்குள் போகவில்லை. புத்தரைப் பற்றி படித்தவை உள்ளோடின. அவர் உரைத்தது பொய்யாகுமா? அவ்விபஸ்ஸனா பயிற்சி உலகமுழுதும் நடத்தப்படுகிறதே. இதை நடத்திவரும் கோயங்காஜியும் தன் மனைவியுடன் சம்சாரியாகத் தானே எல்லா இடங்களுக்கும் சென்று பயிற்சியைத் தொடங்கி வைக்கிறார். இவர்கள் நிறுவிய மையமும் கற்றுக் கொடுக்கும் பயிற்சி முறையும் தவறாகிப் போகுமா? புத்தர் கண்டறிந்த இவ்விபஸ்ஸனா இதுநாள் வரை தொடர்ந்து பின்பற்றப்படுகிறதே, அதெப்படி அதில் தவறான விளைவுகள் வரும் என்று மனம் பல பதில் கேள்விகளையே தந்தது.

“என்ன வலிக்கிறதா?” எனப் பங்கேற்ற ஒருவர் கேட்டார். நான் பேசவில்லை. “எனக்கு வலி, பயங்கரத் தலைவலி” என்றவாறு கடந்து சென்றார்.

கோயங்காஜீயை மனதுக்குள் வணங்கினேன். புத்தரை வணங்கினேன். “உங்களின் வார்த்தைகளை நம்பி என்னைப் பணயம் வைத்து, இதோ உம்முன் சரணடைகிறேன். எல்லாவற்றிலும் மேலாக உங்களின் வாக்குறுதிகள் என்னை வழி நடத்தட்டும். நான் திரும்பியோட மாட்டேன். இதோ உடன் பயிற்சிக்குத் தயாராகிறேன். ஆசிர்வதியுங்கள்.”

“என் வயது முதிர்ந்துவிட்டது.
வாழ்வின் கடைசி விளிம்பில் நிற்கிறேன்.
உங்களை விட்டுச் செல்கிறேன்.
நான் மட்டுமே என்னுடன்.
சீடர்களே, விடாமுயற்சியோடு தொடருங்கள்.
உங்கள் தீர்மானங்களில் உறுதியாய் இருங்கள்.
உங்கள் இதயங்களை ஊன்றி கவனித்து வாருங்கள்.
தளராமல் உண்மையையும் விதியையும் பின்பற்றி வருபவர்கள் தான்
வாழ்வெனும் கடலைக் கடப்பார்கள்.
துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள்!”

 

இறக்கும் தறுவாயில் சால் மரங்களின் கீழ் உரைத்த புத்தரது கடைசி வரிகள். தியான அறைக்குள் நுழைந்தேன், நிதானமாக தைரியத்துடன். மீண்டும் தொடங்கினேன். பொறுமையுடன் பயிற்சியின் பாற்பட்ட அனைத்து அனுபவங்களுக்கும் தயாராக. அப்போது பயிற்சியுடன் அதிட்டானமும் காக்க வேண்டும். அதாவது உட்கார்ந்த இடத்தில் அசையாது ஒரு மணிநேரம் அப்படியே உட்கார்ந்திருக்க வேண்டும். ஒருநாளில் மூன்றுமுறை இது நிகழும். மெத்தையை சரிசெய்து, நீலத்துணி உறையை ஒழுங்கு செய்து கால்களை மடக்கியமர்ந்தேன். சட்டையின் மேல் பொத்தானை விலக்கினேன். இடுப்பில் கால்சட்டைப் பொத்தானையும் விலக்கித் தளர்த்தினேன். ஆசனப் பகுதியை முறைப்படி அமர்த்தினேன். சுவாசம் சீர்பட்டது உடனடியாக. கண் மூடியது. மெல்ல ‘ஆனாபான’வுக்கான சுவாசத்தின் மேலோட்ட நிலையிலிருந்து நுண்ணிலைக்குக் கவனம் திரும்பிற்று. அது நிலை கொண்டபின் மெதுவாக உச்சந்தலையில் கவனம் ஏறிற்று விபஸ்ஸனாவுக்கென, உடல் முழுதும் வேதனாவின் ஆய்வுக்கென.

நெற்றியோடமைந்த நாசியின் மேற்பக்கத்திலிருந்து ஒரு நீர்க்கோடு வடிந்து நாசியின் நுனியில் திரண்டது. தலையுச்சியில் மயிர்க்கால்கள் எழுந்தன, அசைந்தாடின. தலைக்கடியில் ஊறலெடுத்தது. உச்சந்தலை முடியைப் பிடித்திழுப்பது போன்ற, ஆனால் வலியற்ற உணர்வாடியது. ‘ஏறு மயிர்ப்பாலம் உணர்வு இந்த விஷயங்கள் நெருப்பு ஆறு எனவும் நன்றாய் அறிந்தேன் பராபரமே. ‘உச்சந்தலையில் ஏற்படும் தலைமயிர் அசைவாடல் போன்ற உணர்வு நெருப்பாறு எனும் சுவாச தியானப் பயிற்சியில் வருவது என அறிவேன்’ என்கிறார் தாயுமானவர்.

புருவ மத்தி துடிப்புற்றது. தன்வயமற்று நிகழ்வதைப் பார்த்தபடியிருந்தது விழிப்புநிலை. வேதனாவை ஆய்ந்தறியாமல் வெறுமனே நிகழும் உணர்வுகளை வேடிக்கை பார்த்தேன். முதுகுத்தண்டை நிமிர்த்த வேண்டும் போலிருந்தது. நிமிர்த்தினேன். மூச்சு தன்னார்வத்தில் சீராக ஓடிற்று. முகத்தின் தசையும் சருமமும் பரபரவென்றன. மீண்டும் புருவ மத்தியிலிருந்த நீர்க்கோடு வடிந்து நாசி நுனியில் திரண்டு நின்றது. நாசியின் முன்பகுதியை குறுக்கில் அறுப்பது போலிருந்தது. ஓர் அறுவை சிகிச்சைக்காகக் கூரிய கத்திமூலம் மிக சாதுர்யமாக வலியற்று அறுப்பதாக. தாடையின் அடிப்பக்கம் இழுபட்டது. அது நாக்கின் வேரையும் சேர்த்திழுத்தது. தொண்டை அடைத்தது. ஒரு கையின் காந்தத்துண்டு மறு கையின் இரும்புத்துண்டை கவரும் போது ஏற்படும் இழுப்பும் அழுத்தமுமான ஒரு ஓட்டம். காந்தப்புலம் போல. தொண்டையும் இழுபட்டது. தாடையிலிருந்து இடது நெஞ்சின் மேற்பகுதியும் இழுபட்டது.

மீண்டும் புருவ மத்தியிலிருந்து நீர்க்கோடிறங்கி நாசி நுனி தொட்டது. சற்றைக்கெல்லாம், நாசி நுனியிலிருந்து நீர்த்தாரை சீராய் ஒழுகி வேகத்தில் வெளியோடியது. பின்னர் பேரலை போல நீர்த்தாரை நாசி நுனிக்கு வெளியே பின்பக்கமாய்ச் சுழன்று குழாயிலிருந்து பீறிட்டுவரும் தாரையென எழுந்து உச்சந்தலைக்குப் பாய்ந்தோடியது. மெய் சிலிர்த்தது. ஓடையை அடைந்தவர் நிலையது. நான்கு தியானநிலையின் முதலாவது. பிறகு புருவ மத்தியிலிருந்த நீர்த்தாரை புறப்பட்டு மேல்பக்கமாய்ச் சுழன்று உச்சந்தலைக்குள் பாய்ந்தது. ஓட்டம் தொடர்ந்தது. கனவோ எனக் கண் திறந்து பார்க்க விருப்பேற்பட்டது. ஆனால் அதிட்டானத்தைக் கலைக்கக் கூடாதென்பதால் கண்களை இறுகமூடி மீண்டும் பார்வையாளனாய் நிகழ்வுகளைக் கண்ணுற்றேன்.

நடு முதுகுக்கு சற்று கீழே தண்டுவடத்தின் மையத்தில் மற்றுமொரு உடைப்பேற்பட்டது. மணிப்பூரக ஸ்தானம். உண்மையிலேயே ஓடொன்று உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைப் போல இருந்தது. உச்சந்தலையில் பாய்ந்த தாரைப் பிரவாகம் ஓயவில்லை. சஹஸ்ரார ஸ்தானம். பின்பு நாசி நுனியில் பெருக்கெடுத்த நீர்த்தாரை நேரே இடது நெஞ்சின் மேற்புறத்தில் பாய்ந்தது. நெஞ்சுப் பகுதியில் மட்டும் சற்றே வலியுணர முடிந்தது, வேறெங்குமில்லை. அனாகத ஸ்தானம். பரவசமேற்பட்டது. ஆனாலும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது விழிப்புநிலை மாத்திரமே. நிகழ்வதனைத்தும் ஒரு தொடர் காட்சியாக உணரப்பட்டது.

அதிட்டானம் முடிந்து எல்லோரும் பத்து நிமிட ஓய்வுக்கு வெளியே செல்வதாய் உணர்ந்தேன். நான் எழவில்லை. அப்படியே அமர்ந்திருந்தேன். தாரைப் பிரவாகம் சற்றே வேகம் குறைந்தது. ஆனாலும் நெஞ்சிலும், தாடையினடியிலும், புருவமத்தியிலும் உச்சந்தலையிலும் வடிந்து கொண்டிருக்கும் ஊற்றைப் போல சற்றே கொப்பளித்தபடி ஓடிக்கொண்டேயிருந்தது. இரண்டு மணி நேரமிருக்கும். நான் எழவேயில்லை, எழவேண்டும் என்கிற எண்ணமுமில்லை. தியானக்கூடத்தில் நடப்பவை எதுவும் விளங்கவில்லை. ஒலிநாடாவின் உரைகளில் கவனமில்லை. அக்கறையில்லை என்பதைவிட அதுபற்றிய எவ்விதத் தேவையோ வேண்டுமென்ற உணர்வோ எழவேயில்லை. எல்லாமும் நிகழ்ந்தவண்ணம் காணப்படுகின்றன. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் உணரப்படுகின்றன.

இப்போது குறுக்காய் அறுபட்ட நாசியின் முன்பாகம் மறுபடியும் கீறப்படுவதான உணர்வு. நாசிமேட்டின் இருசிறகிலும் கீறல் இறங்கியோடிற்று. ஒரு சிற்றெறும்பு ஊர்ந்தோடுவதைப் போல. இரு கன்னங்களைத் தாண்டி மிக நிதானமாக, கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ந்தோடியது. நேரே செவியின் உள்பக்கமாய், காது குத்துமிடத்திற்கு மேலேயுள்ள வளைவான குழியில் நின்றது. அக்குழியில் ஊசி குத்தும் வலியேற்பட்டது. சுரீரென்று உணர்த்திற்று. பிறகு இரு கன்ன மேட்டில் இருபக்கமும் மேலுமொரு குத்தல், ஊடுருவுவதாய்.

அக்கோடு சட்டென இடதுபக்க நெஞ்சில் இறங்கிற்று. முகம் புலப்படாத வெளிர்பொன் மஞ்சளாய் தோன்றிய நிழலுருவங்கள் மூன்று நெஞ்சருகே நின்றன. இன்னார் என்றில்லாத உருவங்கள். மெல்ல நெஞ்சுப்பகுதியை அறுத்தன. உண்மையிலேயே ஒரு அறுவை சிகிச்சை நடப்பது போன்றே தோன்றியது. ஒரு நிலத்தின் மேற்பகுதியை அறுத்தெடுப்பது போல் நீள் வட்டத்தில் வெட்டியெடுக்கப்பட்ட குழியில் அதே வெளிர்பொன் மஞ்சள் நிறத்தில் பெட்டி போன்றதொரு கூடு வைக்கப்பட்டது. மீண்டும் தைக்கப்பட்டது; நிதானமாக சுமார் மொத்தம் ஐந்தரை மணிநேரம் கண்விழிக்காமல் நிகழ்வதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். நெஞ்சுப்பகுதி மூடப்பட்டு மீண்டும் நாசிநுனியினில் நுழைந்து ஊறல் உண்டாயிற்று.

மாலை ஓய்வுக்கென எல்லோரும் சென்று விட்டிருப்பதை உணர்ந்தேன். தியானக்கூடத்தில் யாருமில்லை. வலது கன்னத்திலேற்பட்ட கீறல் தைக்கப்படுவதான உணர்வு. கன்னம் வழியாக தையல் வலது கண்ணைச் சுற்றி முன்னேறியது. நீர்த்தாரையும் அறுவை சிகிச்சையும் முடிந்து போனதாக உள்ளுணர்வு கூற நிகழும் உணர்வினைப் பரிசோதிக்க எண்ணி மெல்ல கண்திறந்தேன். யாருமேயில்லை கூடத்தில். மஞ்சள் விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. வலது நாசியிலிருந்து இறங்கிப் புறப்பட்ட தையல்கோடு கண் விழித்த சில கணங்களில் நின்றது. நின்ற இடத்தை நினைவில் குறித்துக்கொண்டு கூடத்திலிருந்து வெளியேறினேன். மழை மெலிதாய் தூறிக் கொண்டிருந்தது. தெளிவும் நம்பிக்கையும் தைரியமும் கூடின. புத்தரை வணங்கினேன். கோயாங்காஜியை வணங்கினேன். உணவறை சென்று தேநீர் அருந்தி பின்னர் ஒரு பச்சை வாழைப்பழம் தின்றேன்.

திபெத்திய லாமாக்களில் மறுபிறவி எடுத்து வரும் மூத்தவர்களை சிறுவயதிலேயே அடையாளம் கண்டெடுத்தது பயிற்சியளித்து வாலிபத்தில் இறுதியாக மரணச் சுவையூட்டும் பதனிடலில் இதுபோன்ற மிக வயது முதிர்ந்து, வெறும் பொன்னொளி உடலாய் ஆனால் காலத்தால் உடல் காய்ந்து, புடமிடப்பட்டு காணப்படும் லாமாக்கள் மூவர் இருள் வெளிக்குள் வழிநடத்துவர். ஸ்தூல உடலும் சூட்சுமமும் பிரித்துக் காட்டும் சற்றேயான மரணவழி பதப்படுத்தல் முறையது.

நேரே தியானக்கூடம் சென்றேன். அங்கு யாருமில்லை. எனதிருக்கையில் அமர்ந்தேன். ஆழ மூச்சையிழுத்து விட்டேன். கால் மடக்கி மெல்ல அமர்வை சரிசெய்தேன். மீண்டுமொரு ஆழ்ந்த மூச்சு. கண் மூடினேன். என் வருகைக்கென்றே காத்திருந்ததாய் நாசிச் சரிவில் வலது பக்கத்தில் கண்ணுக்குக் கீழே துல்லியமாக விட்ட இடத்திலிருந்து, தொடங்கியது தையல்போடும் உணர்வு. கண்ணுக்கு மேலே புருவத்தைச் சுற்றி அதே வேகத்தில் நிதானமாக ஓடிற்று. இது கனவல்ல மெய்யானதோர் அனுபவமென்பது புரிந்து போயிற்று. உறுதிப்பட்டது நிகழ்வின் நிஜம்.

பயிற்சி முடிந்து ஒளிப்படம் மூலம் கோயங்காஜியின் அன்றாடப் பேருரைக்கெனப் பத்து நிமிடம் இடைவெளி தரப்பட்டது. கண் திறந்தேன். எதிரே அமர்ந்திருந்த ஆசிரியரை நன்றியோடு வணங்கினேன். எழுந்து வெளியே வந்தேன்.

எதுவுமே நடக்காதது போலிருந்தது. எல்லாமே நின்றுவிட்டது. ஆனால் அளப்பரிய அமைதியையும் நிறைவையும் உணர முடிந்தது. முதுகுத்தண்டின் மத்திய நரம்பு மண்டலப் பெருந்தூண்டலில், உடல் தாதுக்களில் காந்தப்புலம் மீதுற, உன்மத்தம் கொண்டிருந்தது இருப்பு. சற்றே உயரம் ஏறியதாய் நிமிர்ந்தது உடல்.

பத்தே நிமிடத்தில் திரும்பி வந்தேன். எல்லோரும் ஓய்வெடுக்கச் சென்றனர். சிலர் மட்டுமே தீவிர முகத்துடன் காணப்பட்டனர். நல்லவேளை, ஓடப் பார்த்தேனே என எண்ணினேன். பேரனுபவமொன்றை இழந்திருப்பேன். ஆச்சர்யமாயிருந்தது, எப்படி ஐந்தரை மணி நேரம் என்னால் அப்படியே இருந்த இடத்தை விட்டு நகராமல் அமர்ந்திருக்க முடிந்தது என்று. நிகழ்ந்த அனுபவம் நிஜந்தானா என்று என்னையே கேட்டுக்கொண்டேன். பெருமிதம் பொங்கிற்று. ஆனந்தப் பரவசம். பூரண நிறைவு. பெரும்பேறு. நன்றியுணர்வு.

மணி ஒலித்தது. மீண்டும் எல்லோரும் கூடத்தில் அமர்ந்தனர். பயிற்சி தொடர்ந்தது. நான் கண் திறக்காமல் அமர்ந்திருந்தேன். காந்தத்தால் கட்டுண்டு போயிருந்தது முழுவுடல். நெற்றியிலும் உச்சந்தலையிலும் சுழன்று திரும்பிற்று காந்தப்புல உணர்வு. தண்ணென செங்கனல் குளிர்மை கொண்டு தகித்தது. பழகப்பழக பேரானந்தமும் பரவசமும் வடிந்து நிறைவும் நிச்சலனமும் நேர்ந்தது. வெண்ணிறைவு. ஒண்சுடர். ஆழ்ந்து போகப்போக யாக்கை தக்கையாக உணர்வற்று, சூட்சுமமாய், வெறும் உயிர்வளியாய்த் திகழும் சுயமெனும் தன்வெளி. அங்கே சுயமில்லை. தற்கண லயிப்பு மட்டுமே, அதுவே சூன்யமாகவும் பூரண ஒளிப்பாழாகவும் அவரவருக்கு அப்பொழுதில் வாய்க்கிறது. ‘யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலைநின்றது தற்பரமே’ எனும் அருணகிரிநாதர் அனுபூதி வாக்கு எதிரொலித்தது.

*

விபஸ்ஸனா முடிந்து வீடு நோக்கிப் புறப்பட்டாயிற்று. மண்பாதை அண்மையில் ஓடிய குன்றத்தூர் சாலையில் ஏறி நின்றது. அதற்கு சற்று முன்னே ஓடையொன்று குதித்தோடிக் கொண்டிருந்தது. அன்று அவ்வழியில் தியான முகாம் வந்தபோது அவ்வோடை எங்கு போயிருந்தது என்று தெரியவில்லை. இப்படி பத்துநாளில் ஓடைகள் முளைத்தோடுமா என்று ஆச்சர்யமாய் இருந்தது. சிறுவர்கள் ஓடுமீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தனர். தயக்கத்துடன் கைனடிக்கை ஓடையிலிறக்கிக் கடந்தேன். சிரமத்துடன் இறங்கி வெளியேறிற்று. கருஞ்சாலையிலேறிப் புறப்பட்டது.

சேவியருக்கு இவ்வனுபவங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். புரிந்துகொள்வானா? கிண்டலாய் சிரிப்பான். பிறகு பரிவோடு கேட்பான். ‘குறிப்பின் குறிப்பு உணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தான் கொளல்’.

அவனைச் சந்தித்து நீண்ட இடைவெளியாயிற்று. கொளத்தூருக்குப் போனதிலிருந்து அவ்வப்போது கெல்லிஸில் இருக்கும் அவனது துணை மின்வாரிய அலுவலகத்தில் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்படி சொல்லாமல் போய்ச் சந்திப்பது நிகழும். சீக்கிரம் சந்திக்க வேண்டும். இன்னும் நிறைய இருக்கிறது அவனிடம் பகிர.

உலகம் புதிதாய்த் தென்பட்டது. சாலையின் இருபுறமும் வெள்ளம் பரவியிருந்தது. தமிழகமே வெள்ளத்தில் திண்டாடியதை வீடு சென்ற பின்னர்தான் அறிய முடிந்தது. எதிர்ப்பட்ட ஆற்றுப்பாலம் தொட்டு வெள்ளம் கரை புரண்டோடியது. வானத்தில் விமானமொன்று வட்டமடித்தது.

“இத்தியானத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள், ஒரு வேளையோ இரு வேளையோ. விட்டுவிடாதீர்கள். அவசியமிருந்தால் திரும்பவும் வாருங்கள். பயிற்சிக்கு வலிமை சேருங்கள். பயிற்சியின்றி முயற்சியின்றி எதுவும் முடியாது. தொடர்ந்த பயிற்சி அவசியம்.”

“பழக்கங்கள் பயிற்சியாலேயே வலிமை பெறுகின்றன. தீயவற்றிலிருந்து விடுபடவும், காத்துக் கொள்ளவும், நல்லவற்றை வளர்க்கவும் தொடர்ந்து பராமரிக்கவும் பயிற்சி தேவை.”

“உள்ளதை உள்ளபடி பார்க்க இப்பயிற்சி உதவும். இப்பத்து நாள் பயிற்சி ஒரு தொடக்கமே. ஒரு மலர்தலை நீங்கள் உணர்த்திருக்கலாம். அது காயாகிக் கனிய வேண்டும். கனியும் போது புசிப்போர்க்கு சுவை கூட்டும். அன்பும் கருணையும் கனியிலிருந்து கசியும். பிறர் மகிழ்ச்சியில் எங்கும் நிறைவுண்டாகும்!”