தப்புக்கொட்டை

0 comment

”பெத்த வவுறு பத்தி எரியுதுடா கொலகாரப் பாவி! நீனும் இப்பிடி பண்ணிட்டியடா. ஓடன ஓங் காலுல கட்ட மொளைக்கோ… ஒனக்கு ஒசன சொல்லிக் குடுத்தவ குடும்பம் அழியோ… அவ மண்ணாப் பூடோ…”

ஊரை இரண்டாய்க் கிழித்த மூக்காயியின் கூப்பாட்டை, ஒப்பாரியை மேற்கிலிருந்து பொட்டமண்ணை அள்ளிக் கொண்டு வந்த காற்று சுதி மாறாமல் வாரிக் கொண்டுபோய், ஊருக்கும் கிழக்குப்புறமாய் இருக்கும் முந்திரிக்காட்டில் தப்புக்கொட்டை பொறுக்கிக்கொண்டிருந்த சனங்களின் காதுகளில் போட்டது. சருவைச் சீய்ச்சிக் கொண்டிருந்த குச்சியைப் போட்டுவிட்டு, கூண்டுக்குள்ளிருந்து வெளியவரும் கோழிகளாய் முந்திரித் தொங்கலை விட்டு வெளியே வந்து வெட்டவெளியில் நின்று, மேற்கு பக்கமாய் உற்றுக் கேட்டார்கள்.

”என்னா, எரைச்சக் கேக்குது மேற்க.”

”யாரோ அழுவுற சத்தமாட்ருக்கு.”

”எதாவது மண்டயக்கிண்டயப் போட்டுட்டுதா?”

”தண்ணி குடிக்க தப்புக்கொட்ட பொறுக்கன காசியில தருலன்னு எவனாவுது எவ மண்டையையாவது பொளந்துட்டானா?”

மனங்கேட்காதவர்கள் முந்திரியைவிட்டு கொடிபாதைக்கு வந்து, ஓட்டமும் பெருநடையுமாய், மடியில் இருந்த முந்திரிக் கொட்டை அங்கும் இங்கும் அலைய வியர்வையில் தொடை எரிய எரிய, ஊரை நோக்கி ஓடினார்கள். வழியில் எதிர்ப்பட்டவர்களை விசாரித்தார்கள். “யாரு அழுவறது?”

”நம்ப மூக்காயிதான்.”

”அய்யய்ய, கொஞ்ச நேரத்துக்கு மின்னதான தப்புக்கொட்ட பொறுக்கிக்கிட்டு இருந்தது, நேரா நேரத்துல போயி கஞ்சி காச்சனும்னு போச்சி. போற வழியில சருவுசப்பு அடிக்கறன்னு பூச்சிபொட்டு எதாவது கடிச்சிப் போச்சா.”

”அதையாவது பூச்சி பொட்டு கடிக்கிறதாவுது.”

“அப்பறம் என்னா …”

”எல்லாம் தப்புக்கொட்ட நாளையில நடக்கறதுதான்.”

”அட, நீ ஒரு இதா இருப்பிய. நா என்னா சடசடப்புல கேக்கறன். இப்பதான் ரப்பு ராங்குல பதில் சொல்ற…”

”அட நீ வேற. ஒன்னுமில்ல, நம்ம மூக்காயி மொவன் சின்னவன் இல்ல, அந்தப் பய, மேலத்தெருவு புளிமூட்ட மொவள இழுத்துக்கிட்டு ஓடிட்டானாம். அதுக்குதான் மூக்காயி இப்பிடி ஒப்பாரி வைச்சி ஊரக் கிழிச்சி காட்டுக்கு அனுப்பறா.”

“இதானா…” உதட்டைப் பிதுக்கினார்கள்.

”அட, இதுக்கோசரம் பொழைக்கற பொழப்பப் போட்டுட்டு ஒடியாறம்.”

உப்புக்குப் பொறாத விஷயத்தைக் கேள்விப்பட்ட மாதிரி சலித்து, கையெழுத்து மறைவதற்குள் இன்னம் ஒரு நூறு நூத்தம்பது சோடி முந்திரிக்கொட்டை பொறுக்கலாம் என்று திரும்பினார்கள்.

என்னமோ ஏதோ என்று வேர்வையும் சடசடப்புமாய் ஓடி வந்தவர்களையும் மடக்கினார்கள்.

”ஒன்னுமில்ல, நம்ப மூக்காயி மொவன் சின்னவன், புளிமூட்ட மொவள இழுத்துக்கிட்டு ஓடிட்டானாம். நா வேற என்னமோ ஏதோன்னுட்டு பயந்துட்டன். சரி வாங்க இன்னஞ் செத்த நேரம் பொறுக்கிட்டுப் போவலாம்.”

”நா அப்பவே நெனைச்சன். அவனும் அந்தப் புள்ளையும் உத்திமாக்கொளத்துல குளிக்கறப்ப என்னா சாட பேசிக்கிட்டு இருந்ததுவோ தெரியுமா…”

”ஆமா, அவம் பெரிய சில்லாக் கலக்டரு, அவ ஒன்னுமில்லாத ஒட்டாங்காய்ச்சி, பழமொறத்துக்கு ஒரு கட்ட வௌக்கமாறு. இது ஒரு பெரிய கதன்னு வடிச்சிக்கிட்டு இருக்கீங்க.”

”அப்பிடியே இல்லன்னாலும், மே தாண்டி சீம போயி பொண்ணுக்கு மாப்ளயும், மாப்ளைக்குப் பொண்ணும் பாக்கப்போறானுவோ. அங்க இங்கன்னு பாத்து கடைசில உள்ளூர்லதான், செம்பைய்யனாரு சைனம் குடுத்தாருன்னு முடிச்சிட்டுப் போகப் போறானுவோ.”

”இருந்தாலும் நம்ம ஊரு படுமோசம். முக்காலே மூணு வீசமும் உள்ளூர்லதான் குடுக்கறதும், கட்டிக்கறதும்.”

”எல்லாம் இந்த முந்திரிக்காடு பண்ற வேலதான்.”

“இருந்தாலும் மூக்காயிக்கு கஷ்டந்தான். மூணு ஆணு. மூணும் இப்பிடின்னா…”

***

மோகாம்பரிக் குப்பத்திற்கு சாதகம் பார்க்கிற, இருளக்குறிச்சி ஜோசியக்காரர்கள் ஒரு கேள்விக்கு மட்டும் பயப்படாமல் ஒரே பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதுவும் அடித்துச் சொன்னார்கள்.

”பையனுக்கு எத்தினி மைலுல பொண்ண காட்டுது?”

”மூணு தப்பிடியிலேந்து முந்நூறு தப்படிக்குள்ள, மிஞ்சினா மூணு மைலுக்குள்ளதான் காட்டுது.”

தெரிந்துகொண்டே கேட்கிற கேள்விகள். ஊகித்துச் சொல்கிற பதில்கள்.

“உள்ளூர்லதான் பொண்ணுன்னு சொல்லிட்டுப் போயண்டா. இப்ப என்னா கழுத்தையா அறுத்துடப்போறாங்க” சிரித்துக்கொண்டே சொல்லும் உள்ளூர் நாட்டாமைக் கொடுக்குகள்.

”நெல்லாப் பாத்து சொல்லுடா. ஆயிரங்காலத்துப் பயிரு” நிண்டும் சிலது.

பிறகுதான் சமாளிக்கிற சாதகம். “முப்பது மைலுவரைக்கும் காட்டறதுக்கு சுக்கிரனுக்கு ரைட்டு இருக்குதுங்க.”

நெருப்பை மிதித்த மாதிரி சொல்வார்கள் “நம்ப என்னா, கலக்டரு இன்ஜினிருன்னா இருக்கறம், வுட்டுக் கெடாசிட்டுப்போறதுக்கு… காட்டுப் பொறத்து நாய்க்கி பக்கத்து வூட்ல பொண்ணு பாத்தாதான் நம்ம முந்திரிக் கொல்லையும் பாத்துக்கும், அவங்க முந்திரிக் கொல்லையையும் பாத்துக்கும்.”

***

“எனக்கு பயமாருக்குது தே…” புட்டியில் முந்திரிக் காரக்காய் பழங்களை பொறுக்கிப் போட்டுக்கொண்டே சொன்னாள், அஞ்சாலாட்சி.

”எதுக்கு…” கிளைகளின் ஊடாகத் தொரட்டுக்கழியை விட்டபடியே சின்னவன் கேட்டான்.

“ஒங்க வூட்ல சம்மதப்படுவாங்களா…”

”ஆமா, பெரிய சம்மதம் கெடக்குது…”

”அதுக்கில்ல…”

”அப்பறம்… பேசாமப் பொறுக்கன். ஒனக்கு அப்பிடியே தஞ்சாவூரு சீமையிலயும், எனக்கு துருவம் கள்ளக்குறிச்சியிலயும் சம்மந்தம் பேசி முடிக்கப் போறானுவோ. எங்க முடிச்சிப் போட்டாலும் உள்ளூர்லதான் பாப்பானுவோ. பாத்துக்கலாம் வுடு.”

”இல்ல, ஒனக்கு ஒங்க அத்த மொவ கெழக்குத்தெருவு சுலோசனாவ பாக்கறாங்கன்னு சேதி.”

”எங்க அம்மா சுலோசனவக் கட்னுங்குது. எங்க அப்பா பெரிய அத்த மொவ விசாலாட்சியக் கட்னுங்கறாரு. எங்க பாத்தாலும் பாக்குட்டும், நாம் பாத்துக்கறன், நீ கொட்டயப் பொறுக்கு.”

தொரட்டுக்கழியை விட்டு உலுக்கினான். சருகில் பொத் பொத்தென்று நிறையப் பழங்கள் விழுந்தன. அஞ்சாலாட்சி எதையும் பொறுக்காமல் கண்கலங்கிப்போய் நின்றாள்.

”என்னா அஞ்சாலாட்சி?” கிட்ட வந்து கேட்டான்.

“என்ன வுட்றமாட்டிங்கள…” குரல் அடைத்துப் போய் கேட்டாள்.

”இதுல என்னா பயம் ஒனக்கு” தலையில் கட்டியிருந்த துண்டால் துடைத்துவிடப் போனான்.

“இல்ல…” இழுத்தாள்.

”என்னா நொள்ள…”

”நா அன்னக்கே சொன்னன் வேணாமுன்னு, கேக்குல. அரசிமா கோயிலு திருநா அன்னக்கி முந்திரி இருட்டுல வேணாம் வேணாங்குள்ளவே…” சத்தம் முந்திரித் தொங்கலைத் தாண்டி வெளியே வராதபடிக்கு அழுதாள்.

உச்சியில் பழுத்த பழமொன்று, மலுக்கலுக்கு அஞ்சாமல் நின்றது, பொத்தென்று விழுந்து இருவரையும் திடுக்கிடச் செய்தது.

”அதுக்கு என்னா…’ சந்தேகமாய் கேட்டான்.

”நா இந்த மாசம் குளிக்கல…” வெடித்துக் கிளம்பிய அழுகையை முந்தானையால் அழுத்தி நசுக்கினாள்.

செவுளில் அறைந்த மாதிரி விக்கித்துப்போய் நின்றான். கொஞ்ச நேரம் கழித்துச் சொன்னான் ”சரி வுடு. பொருத்தப்பட்டாப் பாப்பம், இல்லன்னா வழி இருக்கு. என்னா நாலு நாளைக்கு வூட்டுக்குள்ள நொழையக் கூடாதும்பானுவோ அதான்.”

”இல்ல, போன வருஷம் நம்ப செல்வி கத மாதிரி ஆயிடக் கூடாது அதான்.” தேம்பினாள்.

***

செல்விக்குப் பட்டாத்தோப்புக் காவல். பத்து ஏக்கருக்கு மேல் தோப்பு. வடக்கிருப்புக்குப் போகிற வண்டிப்பாதை, அவள் தோப்பு நடுவாகத்தான் போகும். ஆத்தா அப்பன் ரெண்டு பேரும் நாலைந்து சனங்களை கூட வைத்துக்கொண்டு உள்ளே பொறுக்குவார்கள். இவளுக்கு வண்டிப்பாதையில் போகிற யாராவது கொட்டையைப் பறித்து விடுவார்களோ என்று காவல். ஊருக்குப் போகிற சனங்கள், காட்டுக்குப் போய்விட்டு வருகிற சனங்கள், உள்ளூரில் வாங்கிய முந்திரிக் கொட்டையை கிழக்கத்தி யேபாரிகளிடம் விற்க மூட்டையோடு போகும் சைக்கிள்காரர்கள் எனப் பாதையில் நடமாட்டம் இருக்கும்.  செல்வி குடி முந்திரி நிழலில் குந்தியிருந்தாள். முந்திரி பூக்க ஆரம்பித்த பருவத்தில்தான் அவளும் பூத்திருந்தாள். உள்ளூர் தாய்மாமன், மயில் போட்ட செட்டுப் பாவாடையும், தாவணியும் எடுத்துவந்து கொடுத்தது. செம்பூவமாய் இருந்தது அவள் கட்டிக்கொண்டு குந்தியிருந்தது.

கோதண்டபாணி ஒரு மூட்டையை சைக்கிளில் வைத்து, வண்டிப்பாதையின் நடுவில் ஓடிய கொடிபாதையில் மிதிமிதி என்று மிதித்தபடி வந்து கொண்டிருந்தான். நடுத்தோப்பில் ஒரு அணை. கொடி.பாதை ஒரு முந்திரியை சுற்றி வந்து அணையில் ஏறி இறங்கும். வேகமாய் மிதித்து வந்து ஏறினால்தான் உண்டு. முழு மூட்டை. கோதண்டபாணியால் ஏற முடியவில்லை. ஒரு சக்கரம் அணைக்கும் இந்தப் பக்கம், ஒரு சக்கரம் அந்தப் பக்கம். சைக்கிளை மிதித்துக்கொண்டு போகவும் முடியாமல், இறங்கித் தள்ளிக்கொண்டு போகவும் முடியாமல், ஒரு கால் தாவுகால் போட்டபடி, மறுகாலால் ஊனிக் கொண்டு நின்றிருந்தான் தத்தளித்தபடி.

குடிமுந்திரி நிழலில் குந்தியிருந்த செல்விக்கு மனமும் கேட்கவில்லை, கிட்ட போய் உதவவும் முடியவில்லை. உதவ முடியாதபடி நிலைமை.

செல்வி வகையறா ஆட்களுக்குப் போட்டியாய், கோதண்டபாணி வகையறா ஆட்கள் நிறைய ஏலத்தொகை போட்டு காடு எடுத்துவிட்டார்கள், பயங்கர சண்டை. கோயில் முன்னால் கோடு கிழித்து கல்லெறி கழியடி சண்டை. நடந்து இரண்டு மாதங்கள்கூட ஆகவில்லை .

தாவுகால் போட்டபடி நின்றவன் பரிதாபமாய் கூப்பிட்டான் “செல்வி…”

வகையறா பகை. திரும்பாமல் குந்தியிருந்தாள். ‘செல்வீ…” ஒன்றும் சொல்லாமல் திரும்பினாள். ”செத்த இந்த சைக்கிளத் தாங்கிப்புடி. எறங்கி தள்ளிக்கிறன்.” அவளுக்கு கோதண்டபாணி மீது வகையறாப் பகையையும் மீறி கொஞ்சம் மரியாதையும் இருந்தது. காரணம் இவ்வளவு சின்ன வயதில் ஒரு நாளைக்கு ஒரு மூட்டைக்கு குறையாமல் அலைந்து வாங்கி, கிழக்கத்தி ஆட்களிடம் போய் விற்று கண்ணும் கருத்துமாய் இருப்பது. இதனால் அவள் சஞ்சலப்பட்ட மாதிரி குந்தியிருந்தாள்.

திரும்பவும் கூப்பிட்டான் “செத்த வா செல்வி. மூட்ட சைக்கிளோட சாய்ஞ்சிடும் போலருக்கு.”

தயக்கமாய்த்தான் எழுந்தாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். கொடிபாதையில் நடமாட்டம் இருக்கிறதா என்று மேற்கிலும் கிழக்கிலும் பார்த்தாள். வேர்த்து விறுவிறுத்து தாவுகால் போட்டு நின்றவனிடம் கிட்டப் போனாள். ஒன்றும் பேசாமல் பின் சுமையால் முன்புறம் தூக்காதபடி, முன் சக்கரத்தை அழுத்திப் பிடித்தாள். இவன் பொறுமையாய் தாவுகால் போட்டிருந்த காலை எடுத்தான். எடுத்த வேகத்தில் சீட்டு முனையில் கைலி மாட்டியதும் தடுமாறி சைக்கிளோடு பின்னுக்கு சாய்ந்தான். பட்டென்று செல்வி சக்கரத்தை விட்டுவிட்டு சாய்கிறவனின் பின்பக்கம் தாங்கலாய் கையை நீட்டினாள். நீட்டிய கை அவன் இடுப்பை அவசரத்தில் வளைத்திருந்தது. நிலை தடுமாறிய அவன் ஒரு கை, இவள் தோள்மேல் விழுந்திருந்தது. பட்டென்று கைலியை விடுவித்த அவனுக்கும், தாங்கிப் பிடித்த அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை. பருவ விரல்கள் பட்டதும் உடல்கள் சிலிர்த்தன. சிரித்துக்கொண்டார்கள். சைக்கிள் அணைமேடு ஏறியது.

திரும்ப, தினம் தினம் அவனுக்காகக் காத்திருந்தாள். அணையில் தேங்கும்போது தள்ளிவிட்டாள், தாங்கிப்பிடித்தாள். வயது, பகையை மீறியது. முந்திரிச் சருகுகள் நொறுங்கின. முந்திரி பூக்கும் காலத்தில் பூத்தவள், காய்க்கும் காலத்தில் காய்த்தாள். எந்த ரகசியத்தையும் இரண்டாம் பேருக்கு தெரியாமல் காத்து வைத்திருக்கும் முந்திரித் தொங்கல், ஒருநாள் இவள் ரகசியத்தை உடைத்துவிட்டது. உள்ளே கொட்டை பொறுக்கிக் கொண்டிருந்த அம்மாக்காரி எதேச்சையாய் குடிமுந்திரிப் பக்கம் வந்துவிட்டாள். குடிமுந்திரி அடியில் நிழல் மட்டும்தான் கிடந்தது. ரெண்டு மூன்று முந்திரி தாண்டி ஒரு முந்திரிப் தொங்கல் அவசியம் இல்லாமல் அசைந்தது. அரக்கப் பறக்க தொங்கலை விட்டு செல்வி வெளியே வந்தாள். சந்தேகத்தோடு பார்த்தவளுக்கு முகம் இறுகியது. அந்த முந்திரிக்கு அப்பால் கோதண்டபாணி சைக்கிளை தள்ளிக்கொண்டு போனது தொங்கல் சந்து வழியாகத் தெரிந்தது.

காவல் காத்தவள், காவலில் வைக்கப்பட்டாள். நிலம் தெளிந்த ஒரு விடியக்காலையில் காவலை மீறினாள். பொட்டமண் நொய் மணலில் புழுதி பறக்க ஓடியவர்களை வழிமறித்தார்கள். ”அம்மாம் துப்பு அத்த நாயாடா நாங்க, இங்க வந்து கைய வைச்ச?” கோதண்டபாணிக்கு நரம்புக்கு நரம்பு அடி. ”அடித் தேவுடியா.. ஒன்ன வளத்ததுக்கு ஒரு முந்திரிக் கன்ன வளத்திருந்தாலும் புண்ணியமா இருக்குண்டி. நம்ப ஊர்ல எவனுமே பசங்க இல்லியா, இவந்தான் ஒன்ன பண்ணுவான்னு போறியா?” செல்வியை காசராக்கு நாரைப்போல் அடித்து உதறிக்கொண்டு போனார்கள். மறுநாள் காலையில் ஊர் ஓர முந்திரிக்கிளையில் தொங்கியிருந்தவளின் உள்ளுக்குள்ளும் ஒரு உயிர் தொங்கிப்போனது.

***

மூக்காயி ஒப்பாரியை நிறுத்தவேயில்லை. வாசலெல்லாம் முந்திரிக் கொட்டைகளும் காய்களும் இறைந்து கிடந்தன. முந்திரி மிளாரில் சிக்கிக் கிழிந்து போயிருந்த அவளின் சீலையில் விழுந்து புரண்டதில் பொட்டமண் வாசலின் சாணம் அப்பிக் கொண்டிருந்தது. சின்னவனை வாசாங்குவிட்டாள். ”நா ஆசப்பட்டு பெத்த சின்னவன் இல்லடா நீ. என்னை சின்னப்படுத்தி, சாவ அடிக்கிற நாயிடா நீ. நெல்லா இருப்பியாடா. என்ன இந்தப் பாடு படுத்திறிய, நீ நெல்லா இருப்பியா…” பெரிய மகன் கத்தியைத் தீட்டி வைத்துக் கொண்டிருந்தான். ”அந்த கம்னேட்டிப் பய. வருட்டும். கண்டந்துண்டமா வெட்டுல, ஏம் பேரு சந்திரகாசியில்ல. வருட்டும் அவங் கால நறுக்காம வுடறது இல்ல.”

அவன் பொண்டாட்டி ருக்கு வந்து அவனை இழுத்தாள் “வுடுடி, அவன…” எகிறிக் குதித்தான்.

வாசலில் புலம்பிக் கொண்டிருந்த மூக்காயிக்கு ஆத்திரம் அவன்மேல் திரும்பிவிட்டது. “அட்றா கம்னேட்டி. வூட்டுக்கு மூத்தவன் நீ, ஆத்தா அப்பன் பேச்சக் கேட்டு ஒழுங்கா நடந்திருந்தினா ஒனக்குப் பின்னால இருக்கற அவனுவோ நெல்லா இருப்பானுவோ. நீ இழுத்துக்கிட்டு ஓடி வழி காட்ன, அவனுவுளும் அதே மாதிரி பண்றானுவோ. கத்தியத் தீட்றானாம் கத்திய… எனக்கு வந்து பொறந்திங்களாடா…”

தண்ணீர் ஊற்றிய கொள்ளிக்கட்டையாய் அவன் அமுங்கிப் போனான். ருக்கு மூஞ்சியைத் தூக்கிக்கொண்டு உள்ளே போனாள்.

அந்த வருடம் மூக்காயி காடு ஏலம் எடுத்திருந்தாள். கூலிக்குக் கொட்டை பொறுக்கதான் ருக்கு வந்திருந்தாள். மூக்காயி வீட்டுக்கு பின்புறந்தான் ருக்கு வீடு. முந்திரிக்கொட்டை பொறுக்கும்போது, எல்லோரையும் வளைத்து வல்லாப் போடும் காடு அவர்களையும் வளைத்துவிட்டது. மூத்தவன் சந்திரகாசி மயங்கிப்போனான். ருக்கு என்னா பொடிமருந்து போட்டாளோ, மூத்தவன் தொம்பையில் இருந்த முந்திரிக்கொட்டையை படிபடியாய் அள்ளி, வேலிக்கும் அங்காண்டப் பக்கமாய் கொடுக்க கொடுக்க ருக்கு மடியை ரொப்பிக்கொண்டாள். தெருவில் ராத்திரியில் ஏலம் போடுகிற மூட்டைக்காரனிடம் பாவாடையும் தாவணியுமாய் வாங்கி மினுக்கினாள். அரசியம்மன் கோயில் திருவிழாவில் அவள் வாங்காத பண்டம் இல்லை. வளையல் கடையில், அவள் போட்டதிற்கு அவன் பணம் கொடுத்ததை மூக்காயி பார்த்துவிட்டாள். அவள் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. ருக்கு நல்ல வேலைக்காரி என்பது மூக்காயிக்குத் தெரியும். தலைமருமருமகளாய் வந்தால் குடும்பத்தை நெற்றிமட்டச் சுவராய்த் தாங்கிக் கொள்வாள் என்று நம்பிக்கையில் இருந்தாள்.

மண் தொம்பையில் போட்டிருந்த முந்திரிக்கொட்டை பூஞ்சாணம் ஏதாவது பிடித்திருக்கிறதா எனத் திறந்து பார்த்தவள் திடுக்கிட்டுப் போனாள். அளவு குறைந்திருந்தது. அடையாளத்திற்குப் போட்டிருந்த வேப்பிலைகள் கலைந்து மேல்கீழாய்ப் போயிருந்தன. அடி நடத்தினாள். முந்திரிக்காட்டில் சுற்றி அலைந்து கைகால் அசந்து கிடக்கிற ராத்திரியில் இவன் அள்ளிக்கொண்டு போனான். வேலியைத் தாண்டி ருக்கு மடியில் விழுகிறபோது மூக்காயி மடியைப் பிடுங்கினாள்.

மூத்தவன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துவிட்டான். மூக்காயி முடிவில் மாறவேயில்லை. ”தாலி கட்றதுக்கு மின்னியே ஏந் தொம்பைய தொறக்கறதுக்கு வழி பண்ணனவ, தாலி கட்டிட்டா ஏங் குடும்பத்தையே காலி பண்ணிடுவா. இவளாவுது எந் தலகடையில அடிவைக்கிறதாவது…”

கடந்து போய்த்தான் இழுத்துக் கொண்டு ஓடினான். நாலு மாதம் அங்க கிடந்து இங்க கிடந்து கடைசியில் வந்து ஒட்டிக்கொண்டான்.

***

“ஏங் குடும்பத்த இப்பிடி ஒன்னுமில்லாத ஆக்கனாளுவுள, அவளுவோ நெல்லா இருப்பாளுவுளா… அவளுவோ நெல்ல கதி சேருவாளுவுளா… அவளுவோ மண்ணாப் பூடோ… மாக்குன்னு பூடோ… திடுக்குன்னு பூடோ… திண்ணகரயாப் பூடோ…” மூக்காயி தெருவுப் பக்கம் வந்து வாசாங்கு விட்டாள். குறிப்பாய் முக்கூட்டு வீட்டு பூப்பொட்டலத்தைப் பார்த்துதான் பேசினாள். பூப்பொட்டலம் வீட்டில் ஏலம் எடுத்த காட்டில்தான் சின்னவன் முந்திரிக்கொட்டை பொறுக்கப் போய் இழுத்துக்கொண்டு ஓடியது.

”அவ அவ வேல ஆவனுங்கறதுக்காக கூட்டிவைச்சிக் கொடும பண்ணிட்டாளுவோ, அவ நெல்லா இருப்பாளா… ஏங் குண்டி கொல நடுங்கறமாதிரி அவ குண்டி கொல நடுங்கோ…”

”வைச்சி வேல வாங்கனாளே அவளுக்குத் தெரியாமலா இருந்துருக்கும். இதுக்குனாச்சும் ஒரு நெல்ல எடமாப் பாக்கலாம்னு இருந்தன். இந்த மாதிரி கமுக்கமா இருந்து கழுத்தறுட்டாளுவுள. அவ எண்ணத்துல இடி வுழோ…”

தன்னக் கடந்து போய்தான் முழுங்கிப் படலைத் திறந்து பூப்பொட்டலம் தெருவில் வந்தாள். பிடித்துக்கொண்டாள். “யாரடி தேவுடியா, கூட்டி வைச்சங்கற?”

”ஒன்னதான்டி தேவுடியா கூட்டி வைச்சங்கறன், ஓங் காட்ல கொட்ட பொறுக்கனது. ஒனக்குத் தெரியாமலா நடந்துருக்கும்.”

”ஆமண்டி, யாரு எங்க போறாங்கறத பாத்துக்கிட்டு இருக்கறதுதான் எனக்கு வேல. ஒம் மொவனுக்கு ஒன்னுந் தெரியாது பாரு. இப்பதான் ஊர்ல இல்லாத அதிசயமா, இவ மொவன் இழுத்துகிட்டுப் பூட்டானாம். இதுக்கு அடிச்சி மாய்ஞ்சிக்கிட்டு ஒப்பாரி வைக்கறா.” அதற்குமேல் நிற்காமல் வீட்டுக்குள் போய்விட்டாள் பூப்பொட்டலம்.

மூக்காயி விடாமல் ஊரைப் பார்த்துப் பொத்தாம் பொதுவாய் கேள்வி கேட்டுக்கொண்டு நின்றாள்.

நடுமகன் வந்து கூப்பிட்டான். ”இப்ப என்னா, ஊரெல்லாம் பேசிக்கிட்டு நிக்கிற. நம்ப வூட்ல இருக்கறது ஒழுங்கா இருந்திருந்துதுனா, ஊர்ல இருக்கறவங்க யாரு என்னா பண்ணிடுவாங்க.”

பூப்பொட்டலம் மேல் இருந்த காந்தாலத்தை நடுமகன்மேல் திருப்பினாள். ”நீ என்ன யோக்யதயா இருந்த, அவன் சரியில்லங்கற. நீ பண்ணுல, நெல் நடவுக்கு ஆளு இட்டுக்கிட்டு போடான்னா, ஒடையில இட்டுக்கிட்டுப்போயி நட்டி… அறுப்பு அறுத்து முடிஞ்சதும் அஞ்சாம் மாசம் சீர் முன்னாடி எடுத்துக்கிட்டுப் போறதா… தாலி மின்ன கட்றதான்னு வந்து சேருல, கோயில் தாலிக் கட்டிக்கிட்டு. அவனுக்கு முந்திரின்னா, ஒனக்கு நெல்லு. ஒங்களல்லாம் பெத்தம் பாரு, என்னை சொல்லனுண்டா!” கையை நீட்டி முகத்தில் ஏற்றாத குறையாய் பச்சையாய் சொன்னாள்.

”நாங்கதாம் புத்திக்கெட்டுப் பூட்டம். இவனுக்கு என்னா? வருட்டும் அவன…” ஏதோ சொல்ல வேண்டும் என்கிற மாதிரி சொன்னவனை, அவன் பொண்டாட்டி. வெள்ளச்சி கைக்குழந்தையோடு வந்து கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.

மூத்த ரெண்டு பேரும் பண்ணிய கொடுமையைப் பார்த்து சின்னவனிடம் சொல்லித்தான் வைத்திருந்தாள். ”வாணாம்பா. பொம்மனாட்டிவோ கத கட்டி வுட்ருவாளுவோ. நீனாச்சும் புத்தியா இரு. நெல்ல எடுத்துல பாத்து நாலு பேருக்கு மதிப்பா நடத்தலாம். நம்ப சொந்தத்துல பொண்ணு மேல பொண்ணாக் கெடக்குது. போற எடத்துல முந்திரிக்காட்ல பாத்து பதனமா இருந்துட்டு வா.”

எல்லாவற்றையும் சின்னவன் தூக்கியெறிந்துவிட்டுப் போய்விட்டான். மூக்காயி ஆற்றமாட்டாமல் புலம்பிக்கொண்டு கிடந்தாள்.

***

”மோகாம்பரிகுப்பத்த போய்ப் பாரு. பாதி முந்திரி. மீதி பூரா நஞ்ச. சனங்களுக்கு ஒரு நிமிஷம் ஓய்வு ஒழிச்ச கெடயாது. ஒரு ஊரு சேதிக்கு போவுணும்னாக்கூட பொழுது போயி போவுதுவோ, விடியதா வந்துடுவோ. எப்பப் பாரு கொல்லியிலியும், காட்லியுந்தான். சுத்துப்பட்டுல இன்னக்கி மோகாம்பரி குப்பம் மாதிரி முன்னேத்தம் அடைஞ்ச எந்த ஊரையும் பாக்க முடியாது.”

”ஆமம்பா, வருஷம் பூரா வேல ஒழைப்புதான். முப்போகம் மாசூலு. கொல்ல வேல முடிஞ்சிதுனா முந்திரிக் காடு. காட்டு வேல முடிஞ்சிதுனா கொல்ல வேல. போய்ப் பாரன். படுகல்லாம் பறிச்சி கரம்புல எனுமா போர் போட்டு நீர்மோட்ரு, தலய நீட்னா, தண்ணி ஆள நெட்டுது. கரும்பும் நெல்லும் முந்திரியும்…”

”ஆனா, சொல்லி வைச்ச மாதிரி ஒரு பொண்ணக் கூட வெளியில குடுக்க மாட்டங்கறானுவோ, கட்ட மாட்டங்கறானுவோ. எனுமோ சாமாஞ்செட்ட மாத்திக்கிற மாதிரி கொள்வன குடுப்பன எல்லாம் உள்ளூர்லயேதான்.”

”ஆமா, எல்லா நேரமும் ஒருத்தர் மூஞ்ச ஒருத்தரு பாத்துகிடலாம்.”

“காட்லியும் மோட்லியும் கெடந்தா என்னா ஆவும். ஒன்னுக்குள்ள ஒன்னுன்னு போவ வேண்டிதுதான்.”

”எப்பிடிப் போவுதோ. இன்னய தினத்துல மோகாம்பரிகுப்பத்த தட்டிக்கிற ஊர் எதுவும் இல்ல. ”

***

மூக்காயி ஓயவே இல்லை . ஊரைப் பேசினாள். மகன்களைப் பேசினாள். குத்துக்கல்லாய் எறவாணத்து ஓரம் குந்தியிருந்த ஆம்படையானைப் பேசினாள். குமுறிக்குமுறி நினைத்து நினைத்து வயிற்றிலடித்துக்கொண்டு அழுதாள். ஊரைக் கிழித்துக்கொண்டிருந்தாள்.

அடுத்த தெருவிலிருந்து, இருட்டில் குச்சியை ஊனிக் கொண்டு காத்தவராயக் கிழவர் வந்தார்.

”இந்தா புள்ள மூக்காயி, ஆனது ஆயிப்போச்சி. கறந்த பாலு இனி காம்புக்கு ஏறப்போறது இல்ல. வுட்டுட்டுப் போயி வேலயப் பாரு. எதுக்கு கத்திக் கெடந்து சாவற.”

”இல்ல பெரிப்பா, ஒனக்குத் தெரியாததா, தே நாளைக்கி ஒரு கல்யாணம். ஒரு பவுனுல மோதரம் எடுத்தாந்து வைச்சிருக்கறன். இதுவரைக்கும் எம்மாங் காரியத்துக்கு மோதரம், காசி, பணம்னு வரிச வம்பு செய்ஞ்சி வைச்சிருக்கறன். எனக்கு பொறந்த இந்த மூனு கம்னேட்டி பயலுவுளும் இந்த மாதிரி இழுத்துகிட்டு ஓடிட்டுதுவளே. இந்த வரிச வம்பலாம் எப்பிடி பெரிப்பா நா வாங்குவன். இம்மாம் நகநட்டு, பணங்காசி செய்ஞ்சும் ஒன்னுமில்லாமப் போச்ச. இப்பிடி ஒடம்ப ஒழைச்ச, ஊருக்கு செய்ஞ்சி ஒன்னுமில்லாமப் போவுனும்னு ஏந் தலையில் எழுதியிருக்கா பெரிப்பா, சொல்லு பெரிப்பா… சொல்லு பெரிப்பா…” மூக்காயி புலம்பிக்கொண்டிருந்தாள்.