மூன்றாவது தடவையாக எனது பெற்றோர் ஆஸ்திரேலியாவுக்கு வந்திருந்த போது அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகப்பெரிய உயரங்களைத் தொட்டிருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், சமகால சடுகுடு உலகின் வேகத்துக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவோடு காணப்பட்டார்கள். அவர்கள் முதல் தடவை வந்திருந்த போது உருவாக்கிக் கொடுத்த முகநூலில் “லைக்” போடுவது எப்படி என்பது மாத்திரமல்லாமல் அவர்களது முகநூல் பக்கத்தில் அவ்வப்போது நான் பதிவேற்றம் செய்துவிடுகின்ற பயணப் படங்களுக்கு யாரெல்லம் லைக் போடுகிறார்கள் என்ற விவரங்களைச் சென்று பார்த்து அறியக் கூடிய நுட்பத்தையும் அறிந்திருந்தார்கள். அறுபது வயதைத் தாண்டி விட்ட இருவரும் அதை ரசித்தார்கள்.
அப்பாவுக்கு இந்த விடயங்களை புரிந்துகொள்ளும் தன்மையிருந்தாலும் அம்மாதான் ‘ஐ பேடை’ கையாள்பவராகவும் யார் யார் தங்களது முகநூல் படங்களுக்கு லைக் போடுகிறார்கள் போன்ற விவரங்களை மாத்திரமல்லாது யார் யார் லைக் போடுவதில்லை என்ற தகவலையும் சத்தமாகச் சொல்லி அப்பாவைத் தொழில்நுட்ப ரீதியில் தனக்கு சமாந்தரமாக அழைத்து செல்பவராகவும் ஆற்றலடைந்திருந்தார்.
வெளிநாடு வந்துவிட்ட போதிலும் கூட ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே இருவரும் எழுந்து விடுவார்கள். நான் வேலைக்குப் போவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், வெளியே இவர்கள் இரண்டு பேரும் சத்தமாகப் பேசிக்கொண்டிருப்பது கேட்கும். இந்த லைக் அரசியல் தொடர்பான விரிவான விவாதம் நடக்கும்.
அந்த விவாதங்களின் போது, தங்களைத் தெரிந்தவர்கள் தங்களது படங்களுக்கு லைக் போடாததை இருவருமே மிகப்பெரிய அவமானமாகக் கருதினார்கள். இவ்வாறு லைக் போடாதவர்கள் ஊரில் எமது அயலில் உள்ளவர்கள் என்றால், அவர்களுக்குத் தாங்கள் எவ்வளவு நல்லதெல்லாம் செய்திருப்பதாகக் கூறி, அவற்றையெல்லாம் அவர்கள் மறந்து விட்டார்கள் என்று அப்பா கோபப்படுவார். பிறகு, எழுந்து வீட்டுக்குள்ளேயே அங்கும் இங்கும் நடப்பார். இனி ஊருக்குப் போன பின்னர் அவர்களுடனெல்லாம் மிகக் கவனமாகப் பழக வேண்டும் என்றும் அவர்கள் போலிகள் என்றும் சொல்வார். அம்மா அதனை வழக்கம் போல ஆமோதிப்பார்.
எனது பெற்றோர் நுழையத் தொடங்கியிருந்த தொழில்நுட்பவெளி இம்மாதிரியானதொரு அனுபவத்தைத் தான் அவர்களுக்கு கொடுத்திருந்தது. தங்களது நிகர் வாழ்வுக்கு சமாந்தரமாக பொருத்திப் பார்க்கக்கூடிய தொழில்நுட்பத்தின் ஆள்கூறுகளுக்கு அவர்கள் இவ்வளவு பெரிய முக்கியத்துவத்தை கொடுத்திருந்தார்கள். அந்தத் தொழில்நுட்பம் தொடர்பான தங்களது புரிந்துணர்வின் அடிப்படையில் மிகச் சுலபமாக நிராகரிப்புக்களுக்கு உள்ளாவதற்கும் கோபப்படுவதற்கும் புறக்கணிப்புகளை அவமானமாகக் கருதுவதற்கும் அவர்களால் முடிந்திருந்தது.
இது ஒருவகையில் பார்க்கப் போனால் தொழில்நுட்பம் சார்ந்து எனது பெற்றோரின் வயதினை ஒத்தவர்கள் கொண்டுள்ள அபத்தாமானதொரு அனுபவம் என்றாலும், எல்லோருக்கும் பொருந்தக்கூடியதே ஆகும். சமகாலத்தில் நாங்கள் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் விசித்திரமான உலகின் பிடியிலிருக்கக் கூடிய நூதனம் என்று கூட இதனைச் சொல்லலாம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த உலகம் ஒவ்வொரு வடிவத்தினாலான ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது. Feudalism, Capitalism போன்ற வெவ்வேறு விதமான பெயர்களில் வந்து எங்களின் மீது ஆதிக்கம் செலுத்தப்பட்டிருக்கிறது. சமகாலத்தில் அது ‘Corporate Culture’ என்ற போர்வையில் வர்க்கப் பேதங்களை நீக்கம் செய்த ஆக்கிரமிபபு சக்தியாக – ஒரு புனிதப் பாதையில் வந்து எங்களை உறிஞ்சிக் கொண்டு – எங்களில் ஒட்டிக்கிடக்கிறது. இந்தக் கலாச்சாரம் ஒவ்வொரு தனிமனிதனையும் நுகர்வுக்காக ஏங்கும் பிராணியாக – தர அடையாள வெறி பிடித்தவர்களாக (brand addicts) மாற்றியிருக்கிறது.
உலகம் இன்று எவ்வளவு பெரிய சமூக வளர்ச்சிகளையும் அறிவியல் உயரங்களையும் தனிமனித பொருளாதார முன்னேற்றங்களையும் கண்டுகொண்டாலும் கூட, இவற்றின் உபவிளைவாக ஒவ்வொரு மனிதனும் தனித்தனி தீவுகளாக்கப் பட்டிருக்கின்றான் என்பது தான் யதார்த்தம்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் அபரிமிதமான நீட்சி இன்று உலக ஆரோக்கியத்தின் கூர்மைத் தன்மைகளை எவ்வளவு வேகமாக உற்பத்தி செய்து கொண்டிருக்கிறதோ அதேயளவுக்கு அபத்தங்களையும் உருவாக்கியபடிதானிருக்கிறது. அவை அபத்தங்கள் என்று தெரிந்தும் கூட அவற்றைப் பரவசத்துடன் ஏற்றுக்கொள்ளவும் அந்தப் போதையின் திகைப்பில் திளைக்கவும் இந்த உலகம் தன்னைத் திருப்தியோடு ஒப்புக்கொடுத்தவண்ணமிருக்கிறது.
இந்த விகார மனநிலையின் அத்தனை விகிதாச்சாரங்களையும் பிரித்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான Black Mirror தொடராக வெளியிட்டு வருகிறது. இதுவொரு திரைத்தொடர். ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற தொடர். ஓவ்வொரு நிகழ்ச்சியும் சமகால உலகின் இயந்திர மனோநிலை மனித வாழ்வை எவ்வாறு உருட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றன என்ற சாய்வுகளை மிக ஆழமாக எடுத்துக் காட்டுகின்றது. சமகால வளர்ச்சிகள் தனிமனித உறவுகளையே எவ்வாறு அர்த்தமற்றதாக்கியிருக்கின்றன என்பதைப் பேசுகிறது. இன்னமும் எஞ்சியுள்ள நிறவெறி, வர்க்கப் பேதம், நுகர்வுக் கலாச்சாரம் போன்றவற்றை தனது வித்தியாசமான கதைகளில் அலசுகிறது.
தற்கால தொழில்நுட்ப விசித்திரங்கள் மாத்திரமல்லாமல் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அதி தீவிர முன்னேற்றங்களினாலும் மனிதனின் அன்றாட வாழ்வு எவ்வாறு கோமளித்தனமாகிறது. அவற்றின் கைகளில் ஒப்படைக்கப்படப் போகும் எமது வாழ்க்கை எந்தச் சுதந்திரமும் இல்லாத நெறிப் பிறழ்வான பாதையில் தான் இனி பயணப்படப் போகிறது என்ற எச்சரிக்கைகளையும் இந்தத் தொடர் பதிவு செய்கிறது.
எல்லா பிரச்சினைகளையும் எல்லா திசைகளிலிருந்தும் ஆராய்கிறது. சமகாலத்தில் இடம்பெறுகின்ற எப்பேர்ப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் கூட, அவற்றை மக்கள் எவ்வாறு ஒரு சாதாரண செய்தியாக கடந்து செல்வதற்கு பழகிக்கொண்டு விட்டார்கள் என்பதை இந்தத் தொடரின் காமெராக்கள் ஆழமாகச் சென்று படம்பிடித்துக் காண்பிக்கின்றன.
Black Mirror திரைத்தொடரில் மொத்தம் ஐந்து சீஸன்கள். அவை 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் அதற்கு உலகெங்கிலும் பெருவாரியான ரசிகர்கள் பெருகி இன்றுவரை இந்தத் தொடரை வெறித்தனமாக பார்த்து வருகிறார்கள். சேனல் 4 வெளியிட்டு வந்த தொடரை, தற்சமயம் Netflix கொள்முதல் செய்து ஒளிபரப்பி வருகிறது.
முதலில் குறிப்பிட்டது போல, எனது பெற்றோரால் தீவிரமாக உள்வாங்கப்பட்டிருக்கும் லைக் கலாச்சாரம் எனப்படுகின்ற சமூக வலைத்தளப் பிரச்சினை Smithereens என்ற தொடரில் பேசப்பட்டிருக்கிறது.
வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் கதைநாயகன் தனது சமூக வலைத்தளத்தில் வந்த நோட்டிபிக்கேஷனை பார்ப்பதற்காகச் சற்று நேரம் தலையைக் குனிந்து நிமிர்வதற்கிடையில் பாரிய விபத்தொன்று நிகழ்ந்து விடுகிறது. அதில் தனது மனைவியை பறிகொடுத்து விடுகிறான். இந்த இழப்பினாலும் குற்ற உணர்ச்சியினாலும் அவன் கொடூரமான மன உளைச்சலுக்கு ஆளாகிறான். அவன் டக்ஸி ஓடுபவன். ஆக, அந்தச் சம்பவத்தக்கு பின்னர், சமூக வலைத்தள தலைமையகத்திற்கு ஒவ்வொரு நாளும் சென்று அங்கிருந்து வெளிவருகிறவர்களை தனது டக்ஸியில் ஏற்றி, அவர்கள் அங்கு பணிபுரிபவர்களா என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறான். ஒருநாள், தனது வாகனத்தில் ஏறுகின்றவன் அங்கு பணிபுரிவதாகக் கூற, அவனைக் கடத்தி செல்கிறான். அவன் பணிபுரிகின்ற சமூக வலைத்தளத்தினை உருவாக்கிய அதன் உரிமையாளனுடன் பேச வேண்டும் என்று அவனை துப்பாக்கி முனையில் மிரட்டி சகல தரப்புகளிலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறான். ஈற்றில், சமூக வலைத்தள உரிமையாளர் அவனுடன் பேசுகின்ற போது, தனது மனைவி இறந்த காரணத்தையும் சமூக வலைத்தள உலகம் உருவாக்கி வைத்திருக்கின்ற கோரமான உலகத்தையும் அதற்கு தனது வாழ்வு எவ்வளவு பெரியதொரு விலையைக் கொடுத்திருக்கிறது என்பதையும் கண்ணீருடன் முறைப்பாடாகக் கூறுகிறான். அதை உருவாக்கியவன் என்ற அடிப்படையில் அதன் விளைவுகளை அதன் உரிமையாளன் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறான். தனிமனித அக வீழ்ச்சிக்கு காரணமாகியிருக்கின்ற பெரும் பூதமொன்றின் ஈவிரக்கமற்ற பாதகங்களை அவன் பட்டியலிட்டுக் காண்பிக்கிறான்.
அதற்கு சமூக வலைத்தள உரிமையாளன் பதிலளிக்கும் போது, தான் உருவாக்கிய சாதாரணமானதொரு பொழுதுபோக்கு உலகம் இவ்வளவு பெரியதொரு பொறியினுள் ஒட்டுமொத்த உலகத்தையும் இழுத்துச் செல்லும் என்று தான் எதிர்பார்க்கவே இல்லை என்கிறான். தனது கைமீறி பறந்து கொண்டிருக்கும் இந்தச் சமூக வலைத்தள உலகத்தினை தன்னாலேயே கட்டுப்படுத்த முடியாமலிருக்கிறது என்றும் மீண்டும் பழைய நிலைக்குக் கூட திரும்பிவிட முடியாதளவுக்கு இந்த உலகம் வெவ்வேறான பாதைகளிலெல்லாம் சுழலத் தொடங்கிவிட்டது என்றும் ஒப்புக்கொள்கிறான்.
இந்தப் படம், Black Mirror தொடரில் தோல்வியடைந்த படமாக பல தரப்பினராலும் சிலாகிக்கப்பட்டிருப்பதற்கு காரணம், சமூக வலைத்தளம் தருகின்ற சுதந்திரத்தை மனிதன் அளவுக்கதிகமாக நுகர்ந்து விட்டு, பின்னர் அதையே குற்றஞ்சாட்டுகின்ற மையத்தைக் கதை கொண்டிருப்பதாக இருக்கலாம். வாகனம் ஓட்டும்போது ஒரு நோட்டிபிக்கேஷனை பார்ப்பதன் மூலம் விபத்து உண்டாகியிருக்கிறதென்றால், அதற்கு சமூக வலைத்தளத்தினை குறைகூறுவதில் என்ன நியாயமிருக்கிறது என்பது இங்கு கைவிடப்பட்ட கேள்வியாக இருக்கிறது. இதில் தவறியிருப்பது தனிமனித கட்டுப்பாடா? சமூக வலைத்தளத்தில் அபரிமிதமான ஆதிக்கமா? – என்பது நேர்மையாக ஆராயப்பட வேண்டியதாகவும் உள்ளது.
அதே போல, The National Anthem என்ற தொடரிலுள்ள அதிர்ச்சிகரமான – நகைச்சுவையான – யதார்த்தபூர்வமான – உண்மைகள் இன்னொரு பரிணாமத்தில் அமைந்தவை. சமகாலத் தொழில்நுட்ப வளர்ச்சியானது எவ்வளவு குருட்டுத்தனமான சமூகமாக எங்களைத் தனது வழியில் அழைத்துச் சென்று சித்தங்களைச் சிதைத்து விளையாடுகிறது என்பதை The National Anthem படிமமாக முன்வைக்கிறது.
The National Anthem கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட தொடர் என்ற போதிலும் அது தற்போது பிரித்தானியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நிலவரங்களை – அவலங்களை – எவ்வளவு துல்லியமாக தனது கதைக்குள் பொருத்தியிருக்கிறது என்பது மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தருகிறது.
பிரித்தானிய இளவரசியைக் கடத்திச் செல்கின்ற இனந்தெரியாத ஆசாமி ஒருவன், பிரித்தானியாவின் பிரதமர் பன்றியோடு கலவி கொண்டு அதனைச் சகல தேசிய தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பினால் மாத்திரமே இளவரசியை விடுதலை செய்வதாகக் கூறி மிரட்டுகிறான்.
இது எவ்வளவு பெரியதொரு அபத்தம் என்று படம் ஆரம்பமானவுடன் முகத்திலறைந்தது போல தெரிந்தாலும் இதனைச் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் எவ்வாறு கையாளுகின்றன என்பதையும் ஒரு மௌடீக கலகம் மிகத் தீவிரமான அதிகாரத் தரப்புகளைக் கூட எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக சிந்திக்க வைக்கிறது என்பதையும் இந்தத் தொடர் அணு அணுவாகச் செதுக்கி வைக்கிறது.
கடத்தல்காரனின் செய்தி முதலில் சகல மட்டங்களிலும் கேலிக்குரியதாகவே பார்க்கப்படுகிறது. கடத்திச் சென்றவன் ஒரு மனநோயாளி போன்றதொரு விம்பம் தான் ஏற்படுகிறது. ஆனால், அன்று மாலை நான்கு மணிக்குள் பிரதமர் பன்றியுடன் கலவி கொள்ளும் காட்சி தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படாவிட்டால் இளவரசியைக் கொலை செய்யப்போவதாக அவன் அறிவித்த மணித்துளிகள் நெருங்க நெருங்க நிலைமைகள் மாறத் தொடங்குகின்றன.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு, நாட்டினை ஆட்சி செய்து கொண்டிருந்தாலும் பிரித்தானியாவின் முடிக்குரிய அரச வம்சம் எனப்படுவது அவர்களுக்கு எவ்வளவு அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் இளவரசியின் பாதுகாப்பு என்பது பிரித்தானிய பிரதமரிலும் விட எவ்வளவு உயர்ந்தது என்பதையும் திரைப்படம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்த்த ஆரம்பிக்கிறது.
அதே வேளை, இந்தக் கடத்தல் அறிவிப்பை மக்கள் மத்தியில் ஊடகங்கள் கருத்துக் கணிப்புக்குக் கொண்டு செல்கின்ற போது பொதுமக்கள் அனைவரும் முதலில் பிரதமருக்கு ஆதரவாகவே தங்களின் கருத்தை முன்வைக்கிறார்கள். கடத்தல்காரனின் கோரிக்கை எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது போலவும் எல்லா அதிகாரங்களும் பொருந்திய அரசு இந்த நாடகத்தைச் சொடுக்கு போடுவதற்குள் பஸ்பமாக்கி விட வேண்டும் என்றும் ஏளனமாகச் சொல்கிறார்கள். அரசாங்கம் எனப்படுவது சர்வ வல்லமை பொருந்தியது என்பதை பொதுமக்கள் உளப்பூர்வமாக நம்புகிறார்கள்.
மறுபக்கத்தில, நேரம் நகர நகர அரச படையினரால் கடத்தல்காரனை எவ்வளவு முயன்றும் பிடிக்க முடியாமல் போகிறது. அரசின் உயர்மட்டத்தினருக்கு அச்சம் தொற்றிக் கொள்கிறது. ஆனால், வெளியில் அதனைக் காட்டிக் கொள்ளாமல் இளவரசியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு பதில் திட்டம் ஒன்றின் ஊடாக, பிரதமரைப் போல ஒருவரைத் தயார் செய்து அவரைப் பன்றியுடன் கலவி செய்யும் காட்சியை ஒளிபரப்பினால் என்ன என்று இரகசியமாகச் சிந்திக்கிறார்கள். அது சரி வரவில்லை.
இதேவேளை, பிரதமரின் மனைவி இந்த ஒட்டுமொத்த களேபரத்தில் தனது கணவர் தொடர்பாக மாத்திரம் கரிசனைக் கொண்டு கண்ணீர் சிந்துகிறாள். பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த உயர்மட்டக் கூட்டத்திலேயே வந்து கணவரைத் தனியாக அழைத்துச் சென்று, “தயவு செய்து தியாக சிந்தனையுடன் ஏதாவது முடிவெடுத்து விடாதீர்கள்” – என்று கணவரைக் கட்டியணைத்து கதறுகிறாள். பெருமைக்குரிய பதவிகளிருப்பவர்களால் அவர்களது சுற்றத்தார் பெருமைப்படுவதெல்லாம் அந்தப் பதவிக்கு எந்தப் பிரச்சினையும் வராத வரை தான், மீறி அவர்களுக்கொரு ஆபத்து வருகின்ற சூழ்நிலையில், அவர்களை எப்பேற்பட்ட பதவியிலிருந்தும் பிடுங்கியெடுத்துக் கொள்வதற்கே அவர்கள் தலைப்படுவார்கள். அதாவது, உறவின் மகத்துவத்துக்கு முன்பாக பதவிகளின் முக்கியத்துவங்கள் அனைத்தும் துரும்பாகி விடுகின்றன. ஒவ்வொருவரும் நெருக்குவாரங்களுக்குள் அகப்படுகின்ற போது நெருக்கமானவர்கள் – குடும்ப உறுப்பினர்கள் – மாத்திரம் தான் உணர்வுப்பூர்மாக – உளச்சுத்தியோடு – கரிசனை கொள்வர் என்பதைப் பிரதமரின் மனைவியின் பாத்திரம் கலப்படமில்லாமல் காண்பித்து விடுகிறது.
அதேவேளை, இந்த முக்கியமானதொரு பிரச்சினையின் போது ஊடகங்கள் வெறித்தனமாக செய்திகளைப் பெற்று மக்களின் முன்பாக ஹீரோ விம்பத்தை பெற்றுக் கொள்வதற்கு என்னவெல்லாம் செய்கின்றன என்பதையும் இன்னொரு வழியில் திரைப்படம் சித்தரிக்கிறது. அரசு உயர்மட்டத்திலிருப்பவர்களிடம் செய்திகளைப் பெற்றுக் கொள்வதற்கு எப்படிப்பட்ட சின்னத்தனங்களையெல்லாம் அவை செய்து கொள்கின்றன என்பதைக் காண்பிக்கிறது.
நேரம் நெருங்க நெருங்க அரசுக்கு எந்த வழியும் தெரியாத நிலையில், பிரதமரை பன்றியுடன் கலவி கொள்வதற்கு கேட்பதற்காக கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது.
பிரதமர் அதிர்ந்து போகிறார்.
இதற்கிடையில், தனது கோரிக்கையில் தான் எவ்வளவு தீவிரமாக இருக்கிறேன் என்பதைக் காட்டுவதற்கு இளவரசியின் விரல் துண்டொன்றை காமெராவில் காண்பித்து அச்சுறுத்தி விடுகிறான் கடத்தல்காரன்.
அந்தக் காட்சியுடன் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டு மக்களின் மனநிலை மாறுகிறது. இளவரசியை மீட்பதற்காக பிரதமர் அவ்வாறானதொரு முடிவை எடுத்துக் கொண்டால் தப்பில்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள். மாலையில் மேற்கொள்ளப்பட்ட ஊடக கருத்துக் கணிப்பில் பிரதமரைப் பன்றியோடு கலவி கொள்ளுமாறு மக்கள் ஏகோபித்த உத்தரவைப் போடுகிறார்கள். அரச உயர்மட்டமும் அதைத் தவிர வேறு வழியில்லை என்று பிரதமரை உந்தித் தள்ளுகிறது. இளவரசியின் உயிருக்கு மாத்திரம் ஏதாவது நிகழ்ந்துவிட்டால் பிரதமரின் பாதுகாப்புக்கு தாங்கள் எந்த உத்தரவாதமும் தர முடியாது என்று மறைமுகமாக மிரட்டுகிறார்கள். இந்த இடத்தில் பிரித்தானியா உண்மையில் யாருடைய கட்டுப்பாட்டிலிருக்கிறது என்ற யதார்த்தம் மாத்திரம் காண்பிக்கப்படாமல், உயர் பதவியிலிருப்பவர்கள் உண்மையில் யாருடைய வாழ்நாள் பணயக் கைதி என்ற உண்மையும் புலனாகிறது.
பிரதமரின் மனைவியைத் தவிர, கிட்டத்தட்ட அனைவருமே பிரதமரைப் பன்றியை நோக்கித் தள்ளி விடுகிறார்கள். இறுதியில் அந்தக் காட்சி சகல அலைவரிசைகளிலும் ஒளிபரப்பாகிறது.
அதுவரைக்கும் கட்டாயம் இதை செய்வதன் மூலம் இளவரசியை மீட்க வேண்டும் என்று கூறிய அதே நாட்டு மக்கள், அந்தக் காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்ற போது, “இவன் எப்படிப்பட்ட முட்டாள். போயும் போயும் ஒரு பன்றியை கலவி கொள்கிறானே” – என்று அரியண்டத்துடன் முகம் சுளித்துக் கொள்கிறார்கள். அதாவது, முட்டாள்தனமாக முடிவுகளை எடுக்கின்ற போது அதற்காக கரகோஷம் செய்து உசுப்பி விடுகின்ற சமகாலக் கூட்டம் தான் பிறகு, அந்த முட்டாள்தனத்தை காறி உமிழ்வதற்கும் முதல்வரிசையில் நின்றுகொண்டு தங்களது நீதி போதனைகளையும் சொல்லிக் கொண்டிருக்கும் என்பதை இந்தக் காட்சி அதி அற்புதமாக காண்பித்திருக்கும்.
இளவரசி விடுதலை செய்யப்படுகிறார். அதன் பின்னர், பிரதமர் வழக்கம் போல தனது பணியில் மும்முரமாகிறார். பொது நிகழச்சிகளிலெல்லம் முன்பு போல கலந்து கொள்கிறார். மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுகிறார்கள்.
ஆனால், வெளி நிகழ்ச்சிகளுக்கு போகும்போது புன்னகை தவழும் முகத்துடன் முன்பு போல மாறாத மகிழ்ச்சியை காண்பிக்கும் பிரதமரின் மனைவி, வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவருடன் பேசாமலேயே மேல்வீட்டுக்கு நடந்து செல்கிறார். பிரதமர் தொடர்ந்து அழைக்கிறார். அவரது மனைவி திரும்பிப் பார்க்கவே இல்லை. நெருக்கமானவர்களுக்குத் தான் அது மாறாத காயங்களை ஏற்படுத்துகிறது என்பதை மிகப்பூடகமாக காண்பித்து படத்தை முடித்துக் கொள்கிறார்கள்.
எடுத்துக் கொண்ட விடயத்தினை சகல பரிமாணங்களின் வழியாகவும் திரையில் பேசியிருப்பதும் அதன் வழி, சமகால உலகின் தொழில்நுட்ப – ஊடக – அபத்தங்களை மிகத்தெளிவாக கையில் பிடித்துக் காண்பிப்பதும் இந்தப் படத்தின் மிகப்பெரிய சாதனையும் வெற்றியும் ஆகும்.
இந்தப் படத்தில் உள்ளொளிந்திருக்கும் இன்னொரு மிகப் பெரிய விடயமாக சமகால ஊடக ஆக்கிரமிப்பு பேசப்பட்டிருக்கிறது. கோப்பரேட் பூதங்களாக வளர்ச்சியடைந்திருக்கும் ஊடகங்கள் நினைத்தால் மக்களை அரசுக்கு எதிராக திருப்பி விடுவதற்கும் அரசின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தவல்ல காரணிகளை உருவாக்கிக் கொள்ளவும் கேள்வியில்லாத அதிகாரத்தை சேர்த்து வைத்திருக்கிறது என்பதை The National Anthem சூசகமாக சொல்லியிருக்கிறது. கருத்துச் சுதந்திரம் – ஊடக ஜனநாயகம் என்று அறவழியில் தங்கள் பலங்களை பத்திரப்படுத்தி வைத்திருக்கும் ஊடகங்கள் தான் இன்றைய உலகின் தீர்மான சக்திகள் என்ற ஆபத்தையும் The National Anthem உள்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தத் தொடர் பிரித்தானியாவில் மிகப்பெரிய அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தி, தற்போது ‘அரசியல் கோமாளி’ ஒருவரை அதிகாரத்தில் கொண்டு வந்து இருத்துவதற்கு காரணமான Brexit – என்ற ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிக்கப்படுகின்ற நிகழ்ச்சியை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது மாத்திரமல்லாமல் – சமகாலத்தில் உலகளவில் மேற்கொள்ளப்படுகின்ற எத்தனையோ அரசியல் கோமாளித்தனங்களையும் தொழில்நுட்ப – ஊடக – முட்டாள்தனங்களையும் நினைவூட்டிச் சென்றது.
இந்த திரைப்படத்தினைப் போலவே, Striking Vipers என்ற படமும் கூட, உறவுகளுக்கு இடையில் காணப்படுகின்ற இயல்பான பிணைப்புகளை தொழில்நுட்பம் எவ்வளவு அதிர்ச்சிகரமானதொரு திசையில் இழுத்துச் செல்கிறது என்பதைக் காண்பித்திருக்கும்.
அழகான மனைவி, குழந்தை என்றுள்ள குடும்பஸ்தன் ஒருவன் தனது நண்பனுடன் எப்போதும் மெய்நிகர் காணொலி விளையாட்டுகளில் (Virtual Video Game) ஈடுபடுகிறான். இந்த மெய்நிகர் காணொலி விளையாட்டின் போது, தனியாக வாழுகின்ற அந்த நண்பன் இந்தக் குடும்ஸ்தன் மீது அந்த விளையாட்டின் வழியாக இச்சை கொள்கிறான். இவனும் அந்த இச்சையினால் கொஞ்சம் சபலமடைகிறான். இது எப்படியானதொரு தடுமாற்றத்தை – குழப்பத்தை – இவனது குடும்பத்தில் ஏற்படுத்துகிறது என்று படம் சித்தரிக்கிறது. இறுதியில் இந்த விடயம் இவனது மனைவிக்கும் தெரிய வருகின்ற போது அவள் எப்படி இதைக் கையாளுகிறாள் என்பதைக் காண்பிக்கிறதோடு படம் முடிகிறது.
இது நேரடியாக ஒரு செய்தியை சொல்கின்ற போதும் – சமகாலத்தில் தொழில்நுட்பத்தினதும் சமூக வலைத்தளங்களினதும் கைதிகளாக உழன்று கொண்டிருக்கும் நாங்கள் குடும்ப வாழ்வின் இயல்புத் தன்மைகளிலிருந்து எவ்வாறு அந்நியப்படுத்தப்படுகிறோம் என்பதையும் அதன் தாக்கங்கள் எவ்வாறு எங்களுக்கு தெரியாமல் எங்கள் சூழலை கான்ஸர் செல் போல அரித்துக் கொல்கிறது என்பதையும் குறியீட்டுத் தகவலாக படிமப்படுத்துகிறது.
Black Mirror திரைத்தொடர் ஒருவிதமான மாயாஜாலத்தன்மையைக் காண்பிப்பது போன்ற உணர்வைத் தனது படங்களில் கொண்டிருந்தாலும் நிஜ வாழ்வின் பிடிமானங்களிலிருந்து நாங்கள் கைவிடப்படுகின்ற தருணங்களையும் அதற்கான அபாய அறிவிப்புகளையும் தான் தன்னில் பத்திரப்படுத்துகிறது. எங்கள் கைகளில் போடப்பட்டிருக்கும் விலங்குகள் எங்களை எப்படிப்பட்ட திசைகளிலெல்லாம் இழுத்துச் செல்லக்கூடிய கேளிக்கையான ஆபத்து நிறைந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
ஆனால், இந்த உலகின் மீது ஏறி நின்று உறுமுகின்ற சமகாலத் தொழில்நுட்பத்தின் மிரட்டலுக்கு மண்டியிட்டு மனிதன் பின்வாங்கி ஓடிவிட வேண்டும் என்பது போன்ற கூடுதல் அச்சுறுத்தலை இத்தொடர் தனது அத்தனை பருவங்களிலும் தருவது ஒருவகையில் அயர்ச்சியாகத்தானிருக்கிறது.
தொழில்நுட்பத்தினால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கான காரணிகளை ஆராய்வதா அல்லது ஆபத்துகளை வகைப்படுத்தி மனிதனை மிரட்டுவதா என்று பார்க்கும் போது எதிர்காலம் தொடர்பான மிரட்டல்களை அதிகம் பதிவு செய்து தன்னைத் தொழில்நுட்பத்துக்கு எதிரான காட்சிக்கலையாக முன்னிறுத்துவது போன்ற உணர்வை Black Mirror சில பருவங்களில் ஏற்படுத்துகிறது.
மனிதன் எப்போதும் தன்னலம் நோக்கிச் சிந்திக்கும் பிராணியாகவே தன்னை அதிகம் உருவாக்கியபடியிருக்கிறான். அந்த உணர்வு இன்றைய உலகில் அவனுக்குள் மேலும் மேலும் அதிகமாகியபடியே உள்ளது. ஆக, எதையும் சற்று விலத்தி நின்று பார்க்கும் உள்ளுணர்வானது அவனுக்குள் நொதித்தவண்ணம் தானுள்ளது. தனக்கான பயன்கள் அளவுக்கதிகமாக கிடைக்கின்ற போது அதனை எவ்வளவு ஆர்வத்துடன் அள்ளிக் கொள்கிறானோ அது போலவே, அது ஆபத்துகளை உருவாக்கின்ற போது அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும் தயாராகத்தானிருக்கிறான்.
அதனையும் மீறி, தன்னால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்று வருகின்ற போது அதனை கடந்து கொண்டும் அல்லது அந்தப் பிரச்சினையோடு போராடிக் கொண்டும் தனது இயல்பு வாழ்வைக் கொண்டு நடத்துவதற்கு மனிதன் இன்று பழக்கப்பட்டு விட்டான்.
இதனை இன்னொரு வகையில் கூறப் போனால், மனிதனால் உருவாக்கப்பட்டு மனிதனால் முகங்கொடுக்கப்பட்டு வரும் உலகின் எத்தனையோ பிரச்சினைகளுக்கு மனிதன் இன்று வரை எந்தத் தீர்வையும் காணவில்லை. அவையெல்லாம் அப்படியே கிடக்கின்ற நிலையில் தான் நாம் அடுத்தக் கட்டத்ததை நோக்கி நகர்கிறோம். அதனை முன்னேற்றம் என்கிறோம். அதனைத் தான் தொடர்ச்சியான வளர்ச்சியின் அளவீடுகளாகவும் முன்வைக்கிறோம். ஆக, சமகாலத் தொழில்நுட்ப பரபரப்புகள் தருகின்ற ஆபத்துகள் மீது முன்வைக்கப்படுகின்ற அதிர்ச்சி மதிப்பீடுகள் அனைத்தும் வெறுமனே அதிகாலை அலாரங்களாக மாத்திரம் தான் ஒலிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
போன வாரம் ஊரிலிருந்து அழைப்பெடுத்த அம்மா முகநூல் தொடர்பாக தனக்கொரு சந்தேகத்தைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார். “என்ன?” – என்ற போது, அவர் கீழ்க்கண்டவாறு கேட்டார்.
“தம்பி, Fake ID என்றால் என்ன?”