மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 4): மண்ணில் விரிஞ்ஞ நிலா – இளையராஜாவின் மலையாளப் படங்களை முன்வைத்து

by ஆத்மார்த்தி
0 comment

கர்நாடக சங்கீதத்தின் மீது பிற எந்தத் தென் மாநிலத்தை விடவும் அதிகப் பற்றுகொண்ட திரைமாநிலம் கேரளம். எல்லா விதமான படங்களும் உருவாகி வருகிறதான திரைக்கதை, படவுருவாக்கத்தின் மறு எல்லையில் இசையைப் பொருத்தவரை பாரம்பர்யத்தின் வேர்வரை ஆழப் பற்றிக்கொள்கிற ஆதார மனோபாவம் குறிப்பிடத்தக்கதாகிறது. மண் சார்ந்த கலைகள், தொன்மங்கள், தங்களுக்கு உரிமைப்பட்ட இசை என்பனவற்றைப் பற்றியெல்லாம் அவ்விடத்திற்கென்று தனித்த பாலிஸிகள் உண்டு.

போனி எம்-மையும் மைக்கேல் ஜாக்ஸனையும் ப்ரிட்னி ஸ்பியர்ஸையும் இரசித்துக்கொண்டே தங்கள் ஆதர்ஸ மாற்றத்தை நிகழாமல் பேணி வருகிற இரசனை சந்ததி கேரளத்தின் தனி அம்சமாகிறது. தமிழ்ப் படங்களையும் பாடல்களையும் மிக அதிகமாக விரும்பினாலும் ஒப்பீடற்ற ஓர்மையோடு தங்கள் மொழிப் பாடல்களை அணுகுகிற சலனமற்ற தெளிவு பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது.

எல் சுப்ரமணியன், ஷங்கர் ஜெய்கிஷன், பாஸ்கர் சந்த்ராவர்க்கர், ராஜீவ் தாராநாத், ஹரிப்ரஸாத், சவுராஸியா, ஆனந்த் ராஜ் ஆனந்த், பப்பிலஹிரி, எல்.வைத்யநாதன், லக்ஷ்மிகாந்த் ப்யாரிலால், நௌஷாத் வரை இந்தியத் திரையிசைப் பெருமுகங்கள் பலரையும் கேரளம் அவ்வப்போது அழைத்து, தனக்கென இசைத்துத் தரச் செய்யும். ஆனால் நெடுங்காலம் நிறைய எண்ணிக்கை என நீடித்துக் கடந்தவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். எம்.எஸ்.விஸ்வநாதன் (75க்கும் மேற்பட்ட படங்கள்), சலில் சவுத்ரி (26 படங்கள்), சங்கர்-கணேஷ் (30க்கும் மேற்பட்ட படங்கள்), பாம்பே ரவி (15க்கும் மேற்பட்ட படங்கள்), சுரேஷ் பீடர்ஸ் (14 படங்கள்) ஆகியோர் மலையாளத்தில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான படங்களுக்கு இசையமைத்த பிற மொழி இசையமைப்பாளர்கள். இன்றளவும் வி.எஸ்.நரசிம்மன், கங்கை அமரன் (8 படங்கள்), ஆர்.ஆனந்த் (4 படங்கள்), ஏ.ஆர்.ரஹ்மான் (டப்பிங் 14, நேரடி 3) சந்திரபோஸ் இசையமைத்த ஒரே ஒரு மலையாளப் படமான சங்கமசந்த்யா வெளிவரவில்லை.

புத்திசை மாற்று இசை, அரிய இசை ஆகியவற்றின் தேடல் – கண்டடைதல், மொத்த இசைக் கொள்கையை மாற்றுவது ஆகியவற்றை மிக மெல்லவே நடைமுறைப்படுத்துவது அவர்களது வழக்கம். படத்தின் இசையைப் பொருத்த வரை இரண்டு மூன்று பேர் ஆளுக்கு ஒன்றிரண்டு பாடல்கள் வழங்கித் தருவதெல்லாம் சர்வ சாதாரணம். பாடல் இசையை மட்டும் ஒருவர் அல்லது இருவர் மேற்கொள்ள படத்தின் பின்னணி இசையை வேறொரு இசைஞர் செய்தளிப்பதெல்லாம் கேரளத்தின் அடிப்படையாகவே நிலைபெற்று விட்ட ஒரு அம்சம். இளையராஜா, தான் அறிமுகமான படத்திலிருந்தே, தான் ஒருவரே படத்தின் இசை மற்றும் பின்னணி இசை இரண்டையும் மேற்கொள்வதை நடைமுறைப்படுத்தியவர் என்பது அறிந்த ஒன்றுதான்.

86 மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. அவற்றில் வெளிவராதவை சைத்ரம், மாயமோஹிதாச்சந்த்ரன், எம்சும் பெண்குட்டியும் ஆகிய மூன்று படங்கள்.

பாலநாகம்மா, தளபதி, அஞ்சலி, நாயகன், சின்னத் தம்பி, மௌனம் சம்மதம் ஆகிய படங்கள் அதே பெயரிலும் (உறவாடும் நெஞ்சம்) ஆறுமணிக்கூர், (மூடுபனி) மஞ்சு மூடல் மஞ்சு, (பன்னீர் புஷ்பங்கள்) பனிநீர்ப்பூக்கள், (பயணங்கள் முடிவதில்லை) ராகதீபம், (தூங்காதே தம்பி தூங்காதே) வசந்தோல்சவம், (மகளிர் மட்டும்) லேடீஸ் ஒன்லி, (கிளிப்பேச்சுக் கேட்கவா) கிளிமொழிக் கின்னாரம், (மது) ஸ்னேகதூவல்,(ஜூலிகணபதி) சக்கரவாளம், (காதல் கதை) ஒரு ப்ரேம சல்லாபம், (நான் கடவுள்) ஞான் பிரம்மா ஆகியவையும் சேர்த்து மொத்தம் தமிழில் இருந்து 17 படங்கள்.

தெலுங்கில் இருந்து மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டவை – லேடீஸ் டெய்லர், சாகரசங்கம், ப்ரதிகாரஜ்வாலா, ருத்ரமாதேவி, கீதாஞ்சலி, ஜெகலோகவீருடு, அதிலோக சுந்தரி, ஸ்ரீராமராஜ்யம் ஆகிய 7 படங்களும் கன்னடத்தில் இருந்து மைத்ரி – ஆக மொத்தம் 25 படங்கள் இளையராஜா இசையில் மலையாளத்தில் டப்பிங் . நேரடி செய்யப்பட்டிருக்கின்றன. மலையாளத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியான படங்களின் எண்ணிக்கை 58 படங்கள். இவற்றில் மை டியர் குட்டிச்சாத்தான் மட்டும் ரீமாஸ்டர் வடிவமாக்கப்பட்டு மீவெளியீடு செய்யப்பட்டது. அதைக் கழித்தால் 57 படங்கள். 1978ம் ஆண்டு தொடங்கி 40 வருட காலத்தில் இந்தப் படங்களில் என்ன வகையான பாடல்களை உருவாக்கினார் இளையராஜா என்பது சுவாரசியமான விவரணை விரிவுதான்.

பழம்பெரும் இசையமைப்பாளர் வீ.தக்ஷிணாமூர்த்தியுடன் இணைந்து இளையராஜா இசையமைத்த மலையாளப் படம் ‘காவேரி.’ 1986ம் ஆண்டு வெளியான இதன் பாடல்களை எழுதியவர் காவலம் நாராயணப் பணிக்கர். இதே நாராயணப் பணிக்கருடன் இணைந்து இளையராஜா இசையமைத்த மலையாளப் படம் ‘ஆலோலம்’ (1982). இவற்றைத் தவிர பாலுமகேந்திரா இயக்கத்தில் 1985ம் ஆண்டு வெளியான யாத்ரா படத்தின் இசையை இளையராஜா மேற்கொண்டார். இதில் 1968ம் ஆண்டு வெளியான மலையாளப் படமான ‘அசுர வித்து’ படத்தில் கே.ராகவன் இசையமைப்பில் சி.ஓ.அண்டோவும் பி.லீலாவும் இணைந்து பாடிய டூயட் பாடலான ‘குன்னத்தொரு காவுண்டு’ பாடல் மீவுரு செய்யப்பட்டது. யாத்ராவுக்காக பின்னணி இசை ஏதுமின்றி பாடலை அதன் ராக ஓர்மையுடன் மீவுரு செய்தார் இளையராஜா. இதனைப் பாடியவர் கொச்சின் அலெக்ஸ். பாடலாசிரியர்களைப் பொருத்தமட்டில் அதிகபட்சமாக மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் 65 பாடல்களை எழுதி உள்ளார். அடுத்ததாக கிரிஷ் புத்தஞ்சேரி 54 பாடல்களைப் புனைந்தார். கைதப்றம் 34 பாட்டுகள், பிச்சு திருமலா 31 பாட்டுகள், ஓ.என்.வி குருப்பு 29 பாடல்கள் வரை எழுதியுள்ளனர்.

மான்கொம்பு கோபாலகிருஷ்ணன்

இயக்குனர்களைப் பொருத்தமட்டில் மணிரத்னத்தின் ஒரே மலையாளப் படமான உணரு படத்தின் இசை இளையராஜா. ப்ரதாப் போத்தன் இயக்கிய 12 படங்களில் சைதன்யா தெலுங்குப் படத்துக்கு ராஜாதான் இசை. தமிழில் மீண்டும் ஒரு காதல்கதை, வெற்றிவிழா, மகுடம், மைடியர் மார்த்தாண்டன், ஆத்மா ஆகிய ஐந்து படங்களுக்கும் இசைத்த இளையராஜா, மலையாளத்தில் அவரது ஒரே ஒரு படத்திற்கு இசையமைத்தார். அது  “ஒரு யாத்ரா மொழி”. 1997ம் ஆண்டு வெளிவந்த இதில் மோகன்லால், சிவாஜி கணேசன், நெடுமுடி வேணு, பாரதி சோமன், ப்ரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். கேரளத் திரையின் பன்முக ஆளுமையான சத்யன் அந்திக்காடு உடன் இளையராஜாவின் இணைவு 2000ம் ஆவது ஆண்டில்தான் முதன்முறை நிகழ்ந்தது. ‘கொச்சுக் கொச்சு சந்தோஷங்கள்’ தொடங்கி 2013ம் ஆண்டு வெளியான ‘புதிய தீரங்கள்’ வரை மொத்தம் 10 படங்களுக்கு இளையராஜா இசையமைத்தார். பெரும்பாலான படங்களின் அனேகப் பாடல்கள் பேசப்பட்டன. புத்திசை முயல்வுகளையும் பரவலாக செய்து பார்த்திருப்பதை அந்தப் படங்களின் பின்னணி இசை, பாடலிசை இவற்றை அடிப்படையாகக் கொண்டு உணர முடிகிறது. ப்ரியதர்சனுடன் தமிழில் கோபுரவாசலிலே படத்தில் இணைந்த ராஜா மலையாளத்தில் பீரியட் படமான ‘காலாபானி’ படத்தில் இணைந்தார். இரு மொழிகளிலுமே பாடல்கள் பெரிய அளவில் கவனம் ஈர்த்தன. அந்த ஆண்டின் பெரிய பிரபல வரிசையில் இடம்பெற்றன.

தமிழில் பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு,  பூவே பூச்சூடவா, வருஷம் பதினாறு, அரங்கேற்ற வேளை, கிளிப்பேச்சு கேட்கவா, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ஒருநாள் ஒரு கனவு, இளையராஜாவின் சொந்தப் படமான கற்பூர முல்லை, தெலுங்குப் படமான கில்லர் ஆகிய 11 படங்களில் இளையராஜாவுடன் சேர்ந்து பணியாற்றியவரான மலையாளத்தின் முன்னணி இயக்குனர் ஃபாஸில் – மலையாளத்தில் இயக்கிய மொத்தப் படங்களின் எண்ணிக்கை 20 – அவற்றில் பாப்பாயொடே சொந்தம் அப்யூஸ் மற்றும் எண்டே சூர்யபுத்திரிக்கு ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே இளையராஜாவுடன் இசையில் இணைந்தார். தமிழில் பரதன் இயக்கிய படங்கள் 3. அவற்றில் ஊஞ்சலாடும் உறவுகள் மட்டும் சக்ரவர்த்தி இசை. மற்ற இரு படங்களான தேவர் மகன் மற்றும் ஆவாரம்பூ இரண்டும் இளையராஜா இசை. பரதனின் கடைசிப் படமான மஞ்சீரத்வனியில் மட்டும் மலையாளத்தில் இருவரும் இணைந்தனர். பி.பத்மராஜனுடன் மூணாம் பக்கம், சீஸன் ஆகிய இரண்டு படங்களிலும் இசையமைத்துள்ளார்.

வினயனின் மலையாளப் படம் ‘அனுராகக் கொட்டாரம்’ இளையராஜா இசைத்தது. தமிழில் என் மனவானில், காசி ஆகிய இரண்டு படங்களிலும் இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றியுள்ளனர். ராஜீவ் அஞ்சலின் குரு, கமலின் பச்சக்குதிரா, சித்திக் இயக்கிய ஃப்ரெண்ட்ஸ் ஆகியவையும் முக்கியத்துவம் பெற்றவையே. பிஜி விஸ்வாம்பரன் இயக்கிய சந்த்யாக்கு விரிஞ்ஞ பூவு, பின்னிலவு, ஒண்ணாணு நம்மாள் மூன்றுக்கும் ராஜா இசை. மோஹன் இயக்கத்தில் ஆலோலம், மங்களம் நேருன்னு போன்ற இரண்டு படங்கள் இசைத்தார். டி.ஹரிஹரனின் கேரளவர்மா பழசிராஜா படம் அதன் பின்னணி இசைக்காகவும் பேசப்பட்டது. ராஜாவுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். இளையராஜாவின் நெருக்கமான சகாவான பாலுமகேந்திரா இயக்கத்தில் யாத்ரா, ஊமக்குயில், ஓளங்கள் ஆகிய மூன்று படங்களை இசைத்தார் ராஜா. அனில்குமார் இயக்கிய களியூஞ்சல், ஜோமோன் இயக்கிய ஜாக்பாட் என 31 படங்களும் மேலும் 26 படங்களுமாக அவரது கேரள இசை வரைபடம் நிறைகிறது.

ராஜா இசையில் ஸோலோ பாடல்களில் அதிகப்படியாக ஜேசுதாஸ் 31 பாடல்களைப் பாடியுள்ளார். எம்ஜி.ஸ்ரீகுமார் 14, ஜெயச்சந்திரன் 12, சித்ரா 30 சோலோவும், எஸ்.ஜானகி 19 பாடல்களும், மஞ்சரி 4 பாடல்களும் பாடியது அதிகம் என்றாகிறது. டூயட்களில் ஜேசுதாஸ் – ஜானகி 13 பாடல்கள் பாடியுள்ளதுதான் இரு நபர் அதிகம். ஜேசுதாஸ் சித்ராவுடன் 4, கல்யாணி மேனன் மற்றும் மாதுரி இருவருடனும் தலா 2 பாடல்கள், சசிரேகாவுடன் 1 என அதிகம் பாடியவராகிறார். இருவருக்கு மேற்பட்டோர் இணைந்து பாடும் குழுப்பாடல்களில் சுசீலா – சித்ரா இருவருடனும், ஜானகி – ஜெயச்சந்திரன் இருவருடனும், இளையராஜா – பவதாரிணி இருவருடனும், சித்ரா – பிஜூ நாராயணன் இருவருடனும், காவலம் ஸ்ரீகுமாருடனும் கிருஷ்ண சந்திரனுடனும் விஜய் யேசுதாஸ் உடனும் சேர்ந்து பாடியுள்ளார் கே.ஜே.யேசுதாஸ். நூற்றுக்கும் அதிகமான பாடகர்களை தன் படங்களில் பயன்படுத்தி உள்ளார் இளையராஜா. விதவிதமான குரல்களைப் பயன்படுத்திய வகையில் மற்ற எந்த மொழியை விடவும் மலையாளத்துக்கு ராஜா தந்திருக்கும் முன்னுரிமை தனித்து உணர வேண்டியதாகிறது.

ராகங்களைப் பொருத்தமட்டில் சரசாங்கி, பகடி, ஸ்ரீரஞ்சனி, ராகவர்தினி, தர்மாவதி, கர்நாடக-கமாஸ், சிம்மேந்திர மத்யமம், ஆனந்த பைரவி, ஸ்ரீராகம், ஹம்ஸத்வனி, ஆடங்க், ஹிந்தோளம், மாயா-விநோதிநி, காபி, அதிபதிப்ரியா, கர்நாடகா-காபி, ஷண்முகப்ரியா, குந்தளவரளி, சிந்துபைரவி, மத்யமாவதி, சுத்த ஸாவேரி, ஹரி காம்போஜி, கம்பீரநாட்டை, ருக்மாம்பரி, சுபபந்துவராளி, மாயாமாளவகௌள, ஹம்ஸநாதம், நடபைரவி, ஹம்ஸநந்தி மற்றும் அம்ருதவர்ஷினி போன்ற பல ராகங்களில் தன் மலையாளத் திரைப்பாடல்களை உருவாக்கினார் இளையராஜா. அதிகம் பயன்படுத்திய ராகங்களில் மோகனம், சுத்த தன்யாஸி, கீரவாணி, கல்யாணி, சங்கராபரணம், ஆபேரி, தர்பாரி, கானடா, சிவரஞ்சனி போன்றவற்றை வகைப்படுத்த முடிகிறது. ராகங்கள் சங்கமிக்கிற ராகமாலிகாவிலும் அவரது பாடல்கள் மனம் வருடின.

என் கணக்கின்படி 86 படங்களில் 400 பாடல்களுக்குக் குறையாமல் மலையாளத்தில் இளையராஜா இசையமைத்திருக்கக் கூடும். 1000 படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, தமிழுக்கு வெளியில் இசையமைத்த மொழிகளில் மலையாளத்தைப் பொருத்தவரை பலவிதமான பாடல்களை உருவாக்கியது திண்ணம். நூற்றுக்கும் அதிகமான பாடகர்களை தன் பாடல்களுக்குப் பயன்படுத்தி இருப்பது கவனிக்கத்தகுந்த கூற்று. வணிக அமைவுக்கு உட்பட்டு தனக்கு வாய்த்த 57 படங்களில், தான் உருவாக்கிய பாடல்களிலும் பின்னணி இசையிலும் என்னென்ன செய்திருக்கிறார் ராஜா..? இளையராஜாவின் அனேக மலையாளப் பாடல்களை எடுத்துத் தொகுத்துப் பேசவேண்டியதற்கான காரணங்கள் உண்டு என்பது அவற்றின் பின்னே இருக்கக்கூடிய முதல் சுவை.

கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய வ்யாமோஹம் (1978) ராஜா நேரடியாக இசையமைத்த முதல் மலையாளப் படம். டாக்டர் பவித்ரன் பாடல்களை எழுதினார். 1980இல் நேரடி மலையாளப் படமாக ஜெஸி இயக்கத்தில் ‘தூரம் அரிகே’ வெளிவந்தது. இதில்தான் ஓ.என்.வி குருப்பு முதன்முதலாக ராஜாவோடு கை கோர்த்தார்.

டப்பிங் படங்களான ஆறுமணிக்கூர் படத்தில் ஜேசுதாஸ்-ஜானகி இரு பாடல்களையும் அனிதா – ஜெயச்சந்திரன் இருவரும் ஒரு பாடலும் பாடினர். ‘ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்’ என்று தமிழில் பெரிதும் பேசப்பட்ட பாடல். இங்கே பாலுவும் ஜானகியும் பாடியதை அவ்விடத்தில் தாஸேட்டன் ஜானகியுடன் பாடினார். அந்தப் பாடல் பெரும் ஹிட் ஆனது. மூடுபனியில் தமிழில் கங்கை அமரன் எழுதிய ‘என் இனிய பொன் நிலாவே’ பாடிய ஜேசுதாஸே அங்கே ‘என் மதுர பொன் நிலாவே’ என்று துடிக்க விட்டார். பாடல் தமிழை விட அவ்விடத்தில் கலக்கிற்று. கேரளா தன் ஆட்கள் வரிசையில்தான் பாலு மகேந்திராவை இன்றைக்கு வரை சொல்லிக்கொள்ளும். கமல்ஹாஸன், பாலுமகேந்திரா இருவருக்கும் அப்படி ஒரு அந்தஸ்து. மற்ற பலரையும் இரசிக்கும் என்றாலும் இந்த இருவர் மீது அதைத் தாண்டிய பித்து மொத்தக் கேரளத்தின் மனோநிலையின் ஆழத்திலுமே ஸெட் ஆகியிருப்பது ரசம்.

பனிநீர்ப்பூக்கள். இங்கே பாரதி-வாசு எடுத்த பன்னீர்ப் புஷ்பங்களின் டப்பிங் உரு. மான்கொம்புதான் பாட்டு. ‘தாருண்யமோஹம் பூக்கும் காலம்’ – இங்கே உமா ரமணன் சோலோ பாடலான ‘ஆனந்த ராகம் கேட்கும் காலம்’ பாட்டை, அதுவொரு மாண்டேஜ் பாடல் என்பதால், வாயசைப்புத் தொந்தரவு இல்லாதது நிஜ நிம்மதி. அதனால் மலையாளத்தில் பெயர்க்கும் பொழுது அவ்விடப் பின்புலத்தில் ஜேசுதாஸ் குரலில் தேனொழுகப் பாட வைத்து படத்தில் வழங்கினார்கள். இளையராஜாவின் இசையைத் திரும்பிப் பார்க்க வைத்த பற்பல தமிழ்ப் பாடல்கள் அதற்குள் வந்து விட்ட பொழுதிலும் நம் ஊரின் பெரும்பாலான படங்களும் – முக்கியமாகப் பாடல்களும் – அவ்விடத்தில் அப்படியே தமிழிலேயே கேட்கப்படுவது இயல்புதான் என்பதை எல்லாம் தாண்டி, தமிழில் நன்கு அறிமுகமான பன்னீர்ப்புஷ்பங்கள் உமா ரமணன் வெர்ஷனைத் தாண்டி, ஜேசுதாஸ் கையாண்ட இலாவகம் அந்தக் காலகட்டத்தில் நல்ல செல்வாக்கு பெற்றது. பொதுவாகவே கேரள இசைத் தீர்மானம் ஒரு அளவுக்கு மேல் தனிமையும் அந்தகாரமும் வன-உலாவலும் அடிப்படையாகக் கொண்ட பாடல்களைப் பெருமளவு முயல்வது வழக்கம். ஃப்யூஷனில் கூட லேசாக சோகச் சாய்வும் மன நடுக்கமும் இல்லாமல் போகாது. இது அந்த நிலத்தின் தன்மை. இதனை நன்கு உணர்ந்த இசையமைப்பாளராகவே இளையராஜாவும் இருந்தார். இதே படத்தில் ‘பூந்தளிராடி’ என்ற டூயட்டை தமிழில் பாலுவுக்குப் பதிலாக ஜேசுதாஸ் பாடினார். உடன் ஜானகி பாடிய இந்தப் பாடல் வேறேதும் இசைமாறுதல்கள் இன்றி அதே பாடலின் கேரளப் பதிப்பாகவே வந்தது.

ஓளங்கள் (1982) பாலுமகேந்திரா இயக்கம். ‘வீழாம்பல் கேயும் வேனல் குடிரும் பாடல் மிதமிஞ்சிய மெலடி டூயட் பாடல். திரையில் அமோல் பாலோகரும் பூர்ணிமா ஜெயராமும் தோன்றும் இதனை ஜானகியும் ஜேசுதாஸூம் பாடினார்கள். சற்றே அதிகமான ஹம்மிங்கை பாடலுக்கு நடுவே பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் இடம்பெறச் செய்தார் இளையராஜா. இளையராஜாவின் சர்வதேசப் பாடலான ‘தும்பி வா தும்பக் குடத்தே‘ இதில் இடம்பெற்றது. அந்தப் பாடலின் வான் தாண்டிய பிரபலம் இதில் இடம்பெற்ற மற்ற இரு பாடல்களையுமே முற்றிலுமாக அழுத்திக் குறுகச் செய்தது என்றால் அது மிகையற்ற நிஜம் தான். இன்றைக்கும் எல்லாத் தென் மொழிகளிலும் தனித்தனிப் பாடலாகவும், இந்தியில் ‘அவுர் ஏக் ப்ரேம் கஹானியில்’ ஒரு முறையும், 2004ம் ஆண்டு இத்தாலி கான்ஸெர்ட் வரை நில்லாமணி மழையாகக் காற்றில் இன்னும் தன் அலைதலை முடித்துக் கொள்ளாமல் உயிர்த்துக்கொண்டே இருக்கிறது அந்தப் பாடல். மலையாளத்தில் அது முதன்முறை நிகழ்ந்தது இந்தப் படத்துக்காகத் தான் என்பதும் அதனை மலையாளத்தில் எஸ்.ஜானகி பாடினார் என்பதையும் இங்கே பதிவது தகும்.

மோகன் இயக்கத்தில் பரத்கோபி, நெடுமுடி வேணு, ஷங்கராடி, கே.ஆர்.விஜயா போன்றவர்களின் நடிப்பில் உருவான படம் ‘ஆலோலம்’.  இதன் பாடல்களை காவலம் நாராயணப் பணிக்கர் மேற்கொண்டு வழங்கினார். பூவாச்சல் காதர் பாடல்களை எழுதினார். படத்தை இயக்கியவர் ஜோஷி. மம்மூட்டி, சோமன் ரத்தீஷ், கொச்சின் ஹனீஃபா எனக் கலந்தடித்த படம். இப்படத்தில் ஒரு ஐடம் ஸாங் – ‘மாரோர்ஸவம் ஈ ராத்ரியில்’ என்ற குழுப்பாடலை ஜெயச்சந்திரன், கல்யாணம், கிருஷ்ண சந்திரன் மூவரும் பாடினார்கள். இந்தப் பாடல் நம்மூரில் ‘ஓரளவுக்கு தோளின் மேலே பாரம் இல்லே’ என்ற பாடல் சாயலை லேசாய் நிரடிச் செல்லும். மலையாளத்தில் அந்தப் பாடல் உற்சாக கிறக்கக் கொண்டாட்டப் பாடலாக அமைந்தது. மம்மூட்டி, மோகன்லால், மது இணைந்து தோன்றிய படம் பின்னிலவு. இதன் இயக்குனர் பிஜி.விஸ்வாம்பரன். பாடல்கள் யூசுஃபலி கச்சேரி.

மானே மதுரக்கரிம்பே மலர்த்தேனே மதனக்குழம்பே

மம்மூட்டி, பூர்ணிமா ஆடிப்பாடும் பாட்டு. ஜேசுதாஸ் பாடிய பாடல்.

ஓடிவா கறிஃபிஷ் கண்ணாளேபாடிவா லவ்கானம்ஓடிவா கறிஃபிஷ் கண்ணாளேபாடிவா லவ்கானம் நாணமெந்த்தே ச்சொல்லுச்சொல்லு நாவிரங்கிப் போயோ

ஓடிவா கறிஃபிஷ் கண்ணாளே
பாடிவா லவ்கானம்
ஓடிவா கறிஃபிஷ் கண்ணாளே
பாடிவா லவ்கானம்
நாணமெந்த்தே ச்சொல்லுச்சொல்லு
நாவிரங்கிப் போயோ

இத்தனை ஜாலியான பாடலை வேறு எந்த மொழியிலும் ஜேசுதாஸ் பாடியிருக்கவில்லை என்றே சொல்ல முடியும்.

இதே படத்தில் மோஹன்லாலுக்கு ஒரு பீட் ஸாங்.

பாபபாபபா நிஷாமனோஹரி
மாமமாமமா விகாரமஞ்சரி
தேவசுந்தரி

இந்தப் பாடல் நைட் சாங். பெப்பி டான்ஸ் வகைப் பாடல். முற்றிலும் அடர்த்தியான இசைக்கோர்வைகளுடன் சின்னச்சின்ன சரணங்களுடன் வலிந்து ஒலிக்கும் தாள இசை பெருகும் பாடலாக அமைந்தது.

‘ப்ரியனே உயிர் நீயே வாழ்வின் பொருள் நீயே’ பாடல் ஜேசுதாஸ் – எஸ்.ஜானகி இணைந்து பாடிய பாட்டு. சோமனும் அருணாவும் படத்தில் பாடினார்கள். இந்தப் பாடல் முழுமையான மெலடி. இணைப்பிசைக் கோர்வைகள் வலிந்து ஒலித்தபடி கடப்பவை. பின் நாட்களில் தமிழில் அவர் இசைத்தளித்த ‘மலரே தென்றல் பாடும் ராகம் இது’ பாடலுக்கும் இந்தப் பாட்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இரண்டின்  நகர்வுகளின் தருணங்கள் ஒத்திசைந்து ஒலிப்பவை.

மம்மூட்டியும் சீமாவும் இணைந்து தோன்றும் ‘மிழியில் மீன் பிடைஞ்ஞூ’ என்ற பாடல் ‘இலேசாக தழுவாத கைகள்’ படத்தில் இடம்பெறும் ‘விழியே விளக்கொன்று ஏற்று’ பாடலின் ஏற்றச்சாயலுடன் ஒலித்தது. இதன் இணைப்பிசை மிகுந்த வேகமும் உக்கிரமுமாகப் பெருகும் கிடார் தாளக் கூட்டிசை. தாசேட்டனின் குரல் சரணங்களின் இறுதியை எடுத்தொலிப்பது பேரழகு. அதிலும் “சாளிச்சதெல்லாம் செந்தூரமாய்” என்ற வரியைக் கடப்பது ஐஸ்க்ரீம் அலை. இப்பாடல் 1984ம் ஆண்டு வெளியான ‘சந்த்யாக்கு விரிஞ்ஞ பூவு’ படத்தில் இடம்பெற்றது. இதை இயக்கியவர் பிஜி.விஸ்வாம்பரன். ‘புல்புல் மைனே புல்புல்’ என்ற தனிப்பாடல் வேகத் துடிப்பிசையுடனான ஸோலோ பாடல். இப்படத்தின் கடைசிப் பாடலான, இலேசான தெம்மாங்குத் தன்மையோடு தாளக்கட்டைப் பின்பற்றியபடி செல்லக்கூடிய தன்மையிலான, ‘மஞ்சும் குளிரும் குளிருக் கிளியும்’ எனத் தொடங்கும் மோகன இசைப்பாடல், கிருஷ்ண சந்திரன் – எஸ்.ஜானகி பாடியது. ஒரு தலை ராகம் ஷங்கரும் உமா மருதபரணியும் ஆடிப்பாடும் சந்தோஷ நடனப் பாட்டு. கிருஷ்ண சந்திரனின் தொழுதலும் ஆனந்தமும் இணைந்து பெருகும் அரியவகைக் குரலில் நனைந்து கசியும் இன்பம் பொங்கும் பாட்டு இது. தெம்மங்குத் தன்மையும் தாளப் பெருக்கமுமாக இதன் பின்னிசையை அமைத்தார் ராஜா. பிசிறே இல்லாத நகர்தலும் யூக வழமை மிகாத நனைதலுமாக அமைந்திருந்தது இப்பாடல்.

மங்களம் நேருன்னு – எம்.டி ராஜேந்திரன் பாடல்கள் எழுத மோகன் இயக்கிய படம்.

அல்லியிளம் பூவோ
இல்லிமுளம் தேனோ..
தென்னிள நீரோ தேன்மொழியோ
மண்ணில் விரிஞ்ஞ நிலாவோ

கிருஷ்ண சந்திரன் பாடிய இந்தப் பாடல் ஒரு மிதமிஞ்சிய மெலடி. ஸ்ரீ ராகத்தில் அமைந்த தாலாட்டு கானம். சரண இறுதியில் சற்றே வலிந்து மிகுந்தொலித்து மீண்டும் மென்மையாய்க் குழையும் கிருஷ்ண சந்திரனின் குரல் வினோதமான  விலக்கம் ஒன்றினைக் கொள்ளும் இயல்புடையது. இந்தப் பாடல் அதற்கான உதாரணப் பாட்டாகவும் திகழ்கிறது. நெடுமுடி வேணு குழந்தை ஷாலினியைத் தூங்கச் செய்யும் கானம் இது.

ரிதுபேத கல்ப்பன சாருத நல்கிய
ப்ரியபாரி தோஷிகம் போலே
ஒரு ரோமஹர்ஷத்தின் தான்யத புல்கிய
பாரிரம்பனக் குளிர் போலே

என்று ஆரம்பம் ஆகிற மென்மைப் பாடல். ஜேசுதாஸ் கல்யாணி மேனன் இணைந்து பாடியது.

ஊமக்குயில் படப்பாடல் – ‘ஓர்மகளாய் ஆடியும் வரு’. ஜேசுதாஸ் – ஜானகி ஹிஸ்ஸிங் குரலில் அமைந்த மென் மெலடி பாடல். என் இனிய பொன் நிலாவே பாடல் சாயலை ஒரு ஞாபகத்துக்கு ஒப்பிடலாம். நின்று நிதானித்து நகரும் இசையும் ஏறி இறங்கும் மலையிறக்க சஞ்சாரத் தன்மையுடனான சரண ஒழுங்கும் இடையிசையின் துடிப்பிசை ஒலித்தலின் அபரிமிதமும் குறுகலுமாக இப்பாடல் போதைக் கிறக்க கானம். ‘ஸ்னேஹிக்குவானாய் ஜீவிக்கும் நம்மள்’ என்ற வரியை உச்சம் போய்த் தொட்டெடுப்பது ஜேசுதாஸ் – ஜானகி இருவருமே லாவகலயம் பொங்கக் கையாண்ட விதம் அழகு.

தாழம்பூ தாளில் நின் ப்ரேமலேகம் கண்டு ஞான்
தாரிளம் காற்றில் நின் ப்ரேம கீதம் கேட்டு ஞான்

வேக இசை மிகுந்தொலிக்கும் ஊகமாற்றாகப் பெருகும் இடைமத்திய இசைக்கோர்வைகளுடனான தாளவகை மெலடி பாடல். இதனை ஜானகி பாடியதற்கும் இசைநகர்கிற வேகத்துக்குமான சிறிய இடைநெகிழ்தல் குறிப்பிடத்தக்க உப வசீகரம். நகரும் வேக மாற்றத்தை ஒரு கூடுதல் இசைக்கருவி போலவே இந்தப் பாடலில் கையாண்டார் இளையராஜா.

மை டியர் குட்டிச்சாத்தான் அப்பச்சன் தயாரித்த இந்தியாவின் முதல் 3டி படம். ராஜா இசையில் பாடல்களை எழுதியவர் பிச்சு திருமலா.

நீலாமினுங்ஙும்‘ என்ற பாடல் தமிழில் ‘பூவாடைக்காற்றே சுகம் கொண்டு வா’ என்று அறிந்த ஹிட் பாடல்தான் என்றாலும் மலையாளத்தில் ஜேசுதாஸின் கழிவிரக்கத் தன்மை மிகுந்தொலிக்கும் தொனியை முழுவதுமாக உற்சாகக் கொண்டாட்டத்துக்கான இடுபொருளாக பாடலின் வேகம் மற்றும் மைய இசை இழைதல் ஆகியவற்றினூடாக மாற்றி வைத்திருப்பார் இளையராஜா. தமிழில் அது இலேசான சோகம் தன்னறியாமல் குழைந்தபடி பெருகியது. கேரளத்தில் அவரது  குரலில் குழந்தமைப் பரவசமும் விளையாடல் கணங்களுமாய் இசைவழி பெருகியது. அன்னிய மொழிகளில் மிக இலேசாக உலர்ந்து இறுகி விடுவதென்பது ஜேசுதாஸ் குரலின் பொதுவான தன்மை. அது மலையாளத்தில் பெருவாரிப் பாடல்களில் இல்லாமல் வேறாவதையும் அவரை இசையினூடாகத் தொடர்வோர் உணர்ந்த ஒன்றுதான்.

இதே படத்தில் ‘ஆளிப்பழம் பெறுக்கான்’ என்ற பாடலும் (தமிழில் ‘செல்லக் குழந்தைகளே’ என்று வந்தது. வாணி ஜெயராமும் சுஜாதாவும் பாடியது). எஸ்.ஜானகி மற்றும் எஸ்.பி.ஷைலஜா இருவரும் பாடிய பாட்டு. குழந்தைகளுக்கான இசைமிகு பாடலான இதனூடாக தெம்மாங்குப் பரவசமும் பகடித் துள்ளலும் மையமாக விரவியிருந்தது. ‘கல்கண்டம் சுண்டில் கற்பூரம் கண்ணில்’ பாடல் மயக்கும் இசைப் பாட்டு வகை. ஜேசுதாஸ் ஜானகி பாடியது. ‘ஒண்ணானு நம்மாள்’ படத்தில் பிச்சு திருமலா எழுதியது. ‘ஜீவனுள்ள நாள்வரே’ என்ற வரியை தாஸேட்டன் கடப்பது கொள்ளை அழகு.

இதே படம். வாலிட்டெழுதிய ‘நீல கடக்கண்ணில் மீனோ‘ என்ற பிசிறேதுமற்று ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த பாடல். படத்தில் பூர்ணிமா ஜெயராமுடன் மோகன்லால் இணைந்து தோன்றும் பாடல். இதை ஜேசுதாஸ் பாடினார். ஹம்மிங் மட்டும் எஸ்.ஜானகி தந்திருப்பார். கொஞ்சலும் தன்மகிழ்வுமாகப் பெருகும் பாடல். படமாக்கப்பட்டதும் இயல்பை மீறாத கவித்துவத்தோடு அமைந்தது. இதையே தமிழில் ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் ‘தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி’ என்ற பாடலாக மீவுரு செய்தார் ராஜா. இடையிசையைப் பொருத்தமட்டிலும் சிறு மாற்றங்களுடன் தமிழில் அந்தப் பாடலைப் பாடியவர் பி.சுசீலா

மணிரத்னம் இயக்கிய மலையாளப் படம் உணரு. மோகன்லால் சபீதா – ஆனந்த் இணைந்து நடித்த இதன் இரண்டு பாடல்களையும் யூஸூஃபலி கச்சேரி எழுதினார். அதில் ஒன்று, ‘தீரம் தேடி ஓலம் பாடி‘ என்ற பாட்டு. தமிழில், ‘ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்’ பாடலின் மறுவுரு. இதைப் பாடியவர் எஸ்.ஜானகி. மெல்லிய சோகம் ததும்பும் ஸோலோ தனிப்பாடல். இதன் செல்திசையில் இலேசான மாற்றங்களும் தொடர்பிசைச் சரடுகளில் கூடுதலாக்கப்பட்ட உடனொலிக் கோர்வைகளுடன் பாடலின் கட்டுமானம் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. தமிழில் இதுவே டூயட் ஆகவும் பேதாஸ் சோலோவாகவும் கிடைத்த பாடல் என்பது கூடுதல் தகவல். இதே படத்தில் ‘எல்லார்க்கும் இன்னானு திருநாளு’ என்ற பாடலும் இடம்பெற்றிருந்தது.

‘யாத்ரா’ பாலுமகேந்திரா இயக்கிய படம். ‘தன்னன்னம் தானன்னம்’ இன்றளவும் ஒலிக்கும் பிரபல கானம். பிரயாணக் கொண்டாட்டப் பாடல். ஜேசுதாஸ் – ஜானகி பாடியது. மையமாக எல்லோரும் கலந்துகொண்டு பாடக் கூடிய உடனொலி. ஒவ்வொரு சதுக்கமும் முடிவடைகிற இடத்தில் அலாதியான தனிமையும் இருளுமாகக் குன்றிப் பூர்த்தியாவது இதன் தனித்துவம். தரையில் துள்ளுகிற மீனின் உச்சபட்ச உலாவலை இசைத்தாற் போல் இதன் இசையின் நடை அமைந்திருந்தது.

பூமுகப்பாடியில் நின்னேயும் காற்று‘ – மம்மூட்டி, மோகன்லால், ரஹ்மான் நடிக்க பத்ரன் இயக்கிய இரண்டே பாடல்கள் அடங்கிய படம்.

ஜேசுதாஸும் தக்ஷிணாமூர்த்தியும்

வீ.தக்ஷிணாமூர்த்தியுடன் இளையராஜா இணைந்து இசையமைத்த படம் காவேரி. இந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் காவலம் நாராயணப் பணிக்கர் எழுதினார். அவற்றைப் பாடியவர் பாலமுரளி கிருஷ்ணா. அம்ருதவர்ஷினி ராகத்தில் ‘நீலலோகினி ஹிதகாரிணி’ பாடல் அமோகமாய் ஒலிக்கும்.

மூணாம் பக்கம் படத்தில் ஸ்ரீகுமாரன் தம்பி எழுதிய ‘உணருமீ கானம் உருகுமென் உள்ளம்’ – கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல். இதனைப் பாடியவர் ஜீ.வேணுகோபால். அனேகமாக ராஜாவுடனான ஆரம்ப இணைதல்களில் ஒன்றாக இப்பாடல் இருக்கக்கூடும். இதே பாடலின் பேத்தாஸ் வெர்ஷனையும் வேணுவே பாடினார். சித்ராவும் எம்ஜி.ஸ்ரீகுமாரும் பாடுகிற டூயட் – ‘தாமரக்கிளி பாடுன்னு தைதை தகதோம்’ என்ற பாடல், இந்தப் படத்தின் அழகிய பாடலாயிற்று. இதன் இடையே வருகிற ஹம்மிங்கை இளையராஜா பாடினார். சரணம் நின்றொலிக்கையில் பாடல் நிதானமாய்ச் சற்றே சரிந்தொலித்து வலுக்கும் இடையிழைகளின் துல்லிய அலைதல் நேர்த்தி கூட்டும்.

பத்மராஜன் எழுதி இயக்கிய சீஸன் (1989) இன்றளவும் மலையாளத்தில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த த்ரில்லர் படமாக மதிக்கப்படுகிறது. இதில் ‘போய்வரூ போய்வரூ’ என்ற பாடலை வித்தியாசமாக அமைத்திருந்தனர். காட்சிப் புலத்தே நகர்ந்து நிறையும் மாண்டேஜ் பாடல். போய்வரூ என்ற ஒரு சொல் மட்டும் தொடர்ந்து கானமாய்ப் பாடப் பெறும். பல்லவி, சரணம், அனுபல்லவி என்பதான வழமையான கட்டுமானம் ஏதுமில்லாத பாடல் இது. போய்வரூ என்பதைத் தொடர்ந்து ‘ஸ்வாகதம்’ என்ற சொல்லோடு பாடல் நிறையும். ‘ஸ்வப்னங்கள்தான் தெய்யம்’ என்ற பாடலும் கோவளத்தின் எழில்வெளியில் விரியும் இன்னோர் பாடல். சித்ரா பாடியது.

‘அம்பிளிக்களயும் நீரும் திருஜடயிலணியுன்ன தம்புராண்டே பாதிமெய்யாம் பகவதியே துணையருளு’ என்ற சித்ரா பாடிய பாடல். குருப்பு எழுதியது. டென்னிஸ் ஜோஸப் இயக்கத்தில் அதர்வம் (1989) படத்தில் மொத்தம் 4 பாடல்கள். கீரவாணி ராகத்தில் எம்.ஜி.ஸ்ரீகுமார் பாடிய ஓ என்வி குருப்பு எழுதிய ‘பூவாய் விரிஞ்சூ பூந்தேன் கினிஞ்ஞூ’ பாடல் மென்மெலடி பாடல். இன்னொரு பாடல் ஸ்லோகம் அடிப்படையிலானது. இந்தப் படத்தின் பெருவெளிச்சப் பாடல் ‘புழையோரத்தில் பூந்தோணி எத்திலா’ என்பது. சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை கே.எஸ்.சித்ரா பாடினார். இதற்கடுத்த வருடம் தமிழில் வெளியான படம் ‘எங்கிட்டே மோதாதே’. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய இதில் அதர்வம் படத்தின் புழையோரத்தில் பாடலை ‘சரியோ சரியோ நான் காதலித்தது’ என்று மீவுரு செய்தார் இளையராஜா. சிவரஞ்சனி ராகத்தில் தமிழில் உருவாக்கப்பட்ட இன்னுமோர் சிறந்த பாடலாயிற்று.

மேற்படி இரண்டு பாடல்களுக்கும் மைய இசை பொதுவாக இருந்த போதிலும் முதலில் உருவாக்கப்பட்ட அதர்வம் படப் பாடல் அபூர்வமான அமைதியும் அதிரடிப் பின்னிசையும் கலவையாய் வினோதமொன்றின் உள்ளுருவென விரிந்தது. சித்ராவின் குரலில் தென்பட்ட அந்த மிருதுவான தன்மையைத் தமிழில் பாடிய மலேசியா பிரதிபலித்தார். உடன் பாடிய எஸ்.ஜானகியின் குரல் அதற்கு நேர்மாறான குதூகலத்தை உணர்த்தியது இரண்டு பாடல்களுக்கும் இடையிலான பிரதம வேறுபாடாயிற்று. ஒரே மனோநிலையில் சென்று இயங்கித் தீர்ந்த பாடலாக புழையோரத்தில் பாடல் விளங்கியது. தமிழில் டூயட் பாடல் இரண்டிரண்டாகக் கிளைத்துத் திரும்புகிற பின்னலின் உட்பிரிகளாகவே இயங்கித் தீர்ந்தது. இது அடுத்த வித்தியாசம்.

நின்றொலிக்கும் மலையாளப் பாடலுக்கும் நில்லாதொலிக்கும் தமிழ்ப் பாடலுக்குமான இணைப்பிசை மூன்றாவது வேறுபாடாயிற்று. மொத்தத்தில் முன்பின்னாய் வெவ்வேறு நிறங்கள் ஏற்றப்பட்ட துவாலை ஒன்றின் பொது மென்மை ஒன்றைப் பிரதிபலிக்கிற வெவ்வேறு மன ஒழுங்கில் இயங்கும் ஒரே பாடலின் இரண்டு பதிப்புகளாக தமிழிலும் மலையாளத்திலும் இவை அமைந்தன.

ஜீ.எஸ்.விஜயன் இயக்கத்தில் 1989ம் ஆண்டு வெளியாக இருந்த வெளிவராமற் போன ‘சைத்ரம்’ படத்தில் இடம்பெற்ற இரு பாடல்களில் ஒன்றாக ‘பாடு சகீ பாடு கீதம் ப்ரேமகீதம்’ பாடல் எம்.டி.ராஜேந்திரன் எழுதியது. பாடியவர் ஜேசுதாஸ். 1984ம் ஆண்டு தமிழில் வெளியான ‘நிலவு சுடுவதில்லை’ படத்தில் எம்.ஜி.வல்லபன் எழுதிய பாடல் ‘பூவே பனிப்பூவே’. தமிழில் இது பெண்குரல் பாடல். எஸ்.ஜானகி பாடியது. இரண்டு பாடல்களுக்கும் இடையிலான இடையிசை நெளிதல்களில் சின்னச்சின்ன வேறுபாடுகள் இருந்தன.

‘ஹ்ருதயராக பாவதாள லய சங்கீதம்’ என்ற பாடல் ஜானகியும் ஜேசுதாஸூம் இணைந்து பாடிய கிறங்க வைக்கும் டூயட் பாடல். மழையில் அலையும் இலக்கற்ற ஆட்டகால ஈர சந்தோஷமாய் மனதில் விரியும் குரல்களும் மைய இசையின் நீடித்தொலிக்கும் பலமான வயலின் இழைதல்களும் ஒரு பரவசத்தின் பிரதிகளாய்க் கேட்கும் மனங்களுக்குள் நேர்ந்தன. இந்தப் பாடலை, தன் கொஞ்சும் குரலால் மிளிரச் செய்தார் ஜானகி. பாடல் முடிகிற இடம் அத்தனை அழகானது.

ஜோமோன் இயக்கத்தில் மணியன் பிள்ளராஜூ தயாரித்த படம் மம்மூட்டி நடித்த ‘அனஷ்வரம்’. பாடல்களை ஜே.கே.கோபி எழுதினார். ‘தாராபதம்’ என்ற பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – சித்ரா இணைந்து பாடியது. இன்னொரு பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், சீடீ ஆண்டோ மூவரும் இணைந்து பாடிய ஜாலியான துள்ளாட்டப் பாடல்.

கல்லெல்லாம் கற்பூரமுத்து போலே
ஈ புள்ளெல்லாம் கஸ்தூரிமுல்ல போலே
கடலெல்லாம் நம்மள்க்குப் பாணபாத்ரம்
ஈ கரயெல்லாம் நம்மள்க்கு தேவலோக
ஹே டானீ டானீ
எந்தா டாடீ டாடீ
ஆகமொத்தம் டோட்டல் சுகம்
ஈ வீஞ்சிண்டே குமிளப்போல் டக்கர டக்கர

பரவசம் குன்றாத பாடலின் நகர்விசை ராஜாவின் சிலபல தமிழ்ப் பாடல்களை நினைவுபடுத்தும்.

ஃபாஸில் இயக்கத்தில் ‘எண்டே சூர்யபுத்திரிக்கு’ படம் 1991ம் ஆண்டு வந்தது. இருமொழித் தயாரிப்பான இதே படம் தமிழில் ‘கற்பூர முல்லை’ என்ற பெயரில் வந்தது.

ஜேசுதாஸ் பாடிய ‘ஆலாபனம்’ – தர்பாரி கானடா ராகத்தில் அமைந்தது. தமிழில் ‘பூங்காவியம் பேசும் ஓவியம்’ என்ற பாடலிது. இதன் பெண்குரல் பாடலான ‘பூந்தென்னலோ கண்ணீர்த் தும்பியோ’ என்ற பாடலை பி.சுசீலா பாடினார். ‘கற்பூர முல்லை ஒன்று காட்டாற்று வெள்ளம் என்று கெளம்பிடத்தான்’ என்ற பாடலை, ‘ராப்பாடிப் பக்ஷிக்கூட்டம்’ என மலையாளத்தில் இரண்டையும் சித்ரா பாடினார். கீரவாணி ராகத்தில் அமைந்தது இந்தப் பாடல். ‘ராக்கோலம் வந்ததாலே’ என்ற பாடல்தான் தமிழில் ‘வாம்மா வா சண்டிராணி’ என்ற துள்ளாட்டப் பாடல். இரு மொழியிலும் சித்ரா பாடினார். இந்தப் பாடல் ‘கேளடி என் பாவையே’ என்ற ‘கோபுர வாசலிலே’ படப் பாடலின் இசையுருவின் சாயலோடு அமைந்திருப்பது கூடுதல் தகவல். சொல்வழி வேகமும் அடிவகை இசைக்கட்டும் மிகுந்த பாடலாக இது நேர்ந்தது.

1992ம் ஆண்டு வெளியான படம் ‘அபராதா’. ரஹ்மான், சுகன்யா நடித்த இதில் இடம்பெற்ற ‘மெல்ல வந்நு சேர்ந்நு ஒரு பூக்காலம்’ என்ற பாடல் கே.ஜே.யேசுதாஸ் – சித்ரா இணைந்து பாடிய டூயட் பாடல். சிவரஞ்சனி ராகத்தில் இதனை அமைத்தார் இளையராஜா. இதே வருடம் தமிழில் வெளியான ‘தெய்வ வாக்கு’ படத்தில் இடம்பெற்று இமயம் தொட்ட பாடல், ‘வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்’. இதனை இளையராஜாவும் எஸ்.ஜானகியும் பாடினர். இளையராஜா சொந்தக் குரலில் பாடிய பாடல்களில் இன்றளவும் முதல் சில இடங்களுக்குள் இடம்பெறவல்ல டூயட் பாடல் இது.

‘பாப்பாயொடே சொந்தம் அப்யூஸ்’ படம், 1992ம் ஆண்டு, தமிழில் ‘பூவே பொன் பூவே’ எனும் பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. ‘என் பூவே பொன் பூவே ஆரீராரம் பூவே’ – ஜானகி பாடிய மெலடி. ‘மஞ்சு பெய்யும் ராவில் ஈ மனசுறங்கியோ’ என்ற பாட்டு சித்ரா பாடியது. ‘ஓலத்தும்பத் திருனூயலாடும் செல்லப் பைங்கிளி’ என்ற பாடல் தமிழிலும் ‘சோலைப் பூந்தென்றலில் ஊஞ்சலாடும் செல்லப் பைங்கிளி’ என  அறியப்பட்ட பாடலாயிற்று. தனிக்குரல் குதூகலக் களிப் பாடல்களின் வரிசையில் இதற்கொரு தனியிடம் எப்போதும் உண்டு.

‘முங்கி முங்கி முத்தடக்கி’ – சித்ரா கிருஷ்ணசந்திரன் பாடியது. ஜோமோன் இயக்கத்தில் மம்மூட்டி, மாலா, அரவிந்தன் நடிப்பில் 1993ம் ஆண்டு வெளியான படம் ‘ஜாக்பாட்’. இதில், ‘தாழ்வாரம் மான்பூவே தீக்காயும் பெண்பூவே’ ஜேசுதாஸ் – சித்ரா பாடிய அதி மென்மைப் பாடல். இரவுத் தாலாட்டு வகைமையில் பல்வேறு பாடல்களை உருவாக்கியிருக்கிறார் ராஜா. இந்தப் பாடல் தொடக்கம் முதலே குறித்த இடைவெளிகளுடன் தோன்றி மறையும் சின்ன வயலின் இழைதலும் தாள இசை தொடர்ந்தேறி ஒலிப்பதுமாக நின்று நிதானித்து சுழன்று ஒலிக்கிற பா வகை. இதனை எழுதியவர் பிச்சு திருமலா. நடு இசைத் தோரணப் பிரிகள் யாவையும் வலிந்து ஒலிக்கும் வண்ணம் இருந்ததும் சேர்விடம் மீண்டும் குழைவதுமாக கேட்கச் சலிக்காத நற்கானமாயிற்று.

‘மேன் ஆஃப் தி மேட்ச்’ படத்தில் மத்யமாவதி ராகத்தில் ராஜா அமைத்தளித்த பாடல் கதிரும் கொத்தி பதிரும் கொத்தி. தமிழில் இதே ராகத்தில் அமைக்கப்பட்ட ‘தங்க நிலவுக்குள் நிலவொன்று’ பாடலை இலேசாக நினைவுபடுத்தும் இந்தப் பாடலின் இடையிசை இழைதல்கள் வேகக் கோர்வைகளாக அதிகப் புதிர்த்தன்மையோடு பெருகுவது வசந்தம். பிஜூ மேனனும் வாணி விஸ்வநாத்தும் தோன்றும் இந்தப் பாடல், இன்றும் விரும்பப்படுகிற கேரளக் காதல் பாடல்களில் ஒன்று.

இதே காலத்தில் வெளியான இன்னொரு படம் ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ இரண்டாம் பாகம். முதல் பாகத்தின் ‘மின்னமங்கலம்’ பாடல் அப்படியே ரிபீட் ஆனது. மேலும் பாடல்கள் இடம்பெற்றன. ‘த்ரிலோகம்’ பாடலை சித்ரா பாடினார்.

காலபானி – தமிழில் சிறைச்சாலை ஆனது. மோகன்லால், பிரபு நடித்த பீரியட் படம். தமிழிலும் மலையாளத்திலும் வெகு பிரபலமான பாடல்கள் இதில் இடம்பெற்றவை. பாடல்களை எழுதியவர் கிரிஷ் புத்தஞ்சேரி.

‘ஒரு யாத்ராமொழி’ ப்ரியதர்ஷனின் கதையை ப்ரதாப் போத்தன் இயக்கினார். சிவாஜி கணேசன், மோகன்லால் நடித்தனர். இதில் இடம்பெற்ற பாடல்களை கிரீஷ் புத்தெஞ்சேரி எழுதினார். ‘எரிகனல் காட்டில்‘ என்ற பாடல் மித மயக்கப் பாடல். இதனை எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இருவரும் பாட இரு பதிவுகள் இடம்பெற்றன. தமிழில் பயணத்தின் மொழி என்ற பேரில் இப்படம் டப் செய்யப்பட்டது.

‘கல்லு கொண்டொரு பெண்ணு’ படத்தில் ‘தித்தாரம் தையாரம் பாடும்’ என்ற டூயட் பாடல் ஓ.என்.வி குருப்பு எழுதியது. எம்.ஜி.ஸ்ரீகுமார், கே.எஸ்.சித்ரா பாடியது.

வினயன் இளையராஜா கூட்டணியில் வந்த படம் ‘அனுராக கொட்டாரம்’. ‘சிரிச்செண்டே மனசிலே’ பாடல் கைதப்ரம் எழுதிய வேக இசை டூயட் பாடல். சித்ராவும் ஜேசுதாஸூம் பாடிய ஸ்டைலிஷ் பாடல். திலீப்பும் சுவலட்சுமியும் தோன்றிய கனாப் பாட்டு.

‘பொன்மானம் ஈ கைகளில்’ என்ற பாடல் பிஜூ நாராயணன் – ஸ்ருதி பாடியது. இந்தப் படத்தின் டைட்டில் பாடல் மெல்லிய சோகச் சாய்வும் ஏற்படுத்திக்கொண்ட உற்சாகமுமான பொருந்தாமையின் பூக்களாய் விரிந்தோங்கும் பாடல். இதன் வெகுபலமான தாளப்பின் இசையும் பாடலை நகர்த்திச் சென்ற வேகத் தொனியும் பலமாக அடித்துப் பெய்யும் மழையாகவே பொழிந்து அடங்குவது.

மோஹன ராகத்தில் மனம் வருடும் ‘பொன்னும் திங்கள்’ பாடலை ஜேசுதாஸ் பாடினார். அதிர்ந்து பெருகியபடி மென் துகள்களாய்ப் படரும் முரணிசை நகர்தல்களுடன் சரணம் தொடங்கும். மிதமிஞ்சிய அடங்கலாய், தாழ்ந்த ஸ்தாயியிலிருந்து சட்டென்று உச்சம் ஏகும் விமானத் தாலாட்டாகவே இதனைப் பாடினார் ஜேசுதாஸ். சற்றே இறங்கி இரகசியம் பகிரும் குரலொன்றில் எம்.ஜி.ஸ்ரீகுமார் உடன் இயங்கும் உபகுரல்களுடன் இணைந்து பாடிய பாட்டு, ‘தேன் சூடிப்பூவே மான்மிழிக்கனவே’. கிளர்ந்து ததும்பும் இசையும் குரலுமாய் நல்லதொரு வேகப் புத்திசைப் பாடல் இது. ஓர் அந்தரங்க சேதி அறிவித்தலாய், ஏகாந்த அலைதலாய் மனதின் ஆழப் புதைய வருகிற பாடல் இது.

அனில்பாபு இயக்கத்தில் மம்மூட்டி, திலீப், ஷோபனா, ஷாலினி நடித்த படம் ‘களியூஞ்சல்’. எல்லாப் பாட்டையும் கைதப்றம் எழுதினார். ஹரி காம்போதி ராகத்தில் எள்ளலும் துள்ளலுமாகப் பெருகி ஒலிக்கும் பீட் ஸாங் ‘மணவாட்டி பெண்ணிண்டே மனசொரு கரிம்பிண்டே’ என்ற பாடல். ‘நான் வாழ வைப்பேன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயம் மேலே பாதாளம் கீழே’ பாடலின் வடிவ வேக மாறுபாட்டுப் பதிவொன்றின் உணர்தலை இப்பாடலின் சில நுட்பமான இடங்கள் நினைவுறுத்துவது சிறப்பு. ‘கல்யாணப் பல்லக்கில் லேலிப்பய்யன்’ பாடல் கீரவாணி ராகத்தில் அமைந்தது. இதனைப் பாடியவர் பவதாரணி. தொன்மமும் இருளுமாய்ப் பெருகும் பின்னிசையை மேலதிகம் பிரதிபலித்தபடி அவரது குரல் ஒத்திசைந்திருக்கும். மிதமிஞ்சிய மெலடி பாடல் இது. ஜேசுதாஸ் பாடிய சோலோ ‘மணிக்குட்டிக் குரும்பிலோர் அம்மிணிப் பூவாளி’. வழக்கமான ஜேசுதாஸ் மெலடி.

சத்யன் அந்திக்காடுடன் இளையராஜா

சத்யன் அந்திக்காடுடன் இளையராஜா இணைந்த பத்து படங்களில் நிறைய பாடல்கள் வசீகரிப்பவை. ஒரு பாடலை உதாரணமாகச் சொல்வதன் மூலம் இந்த அத்தியாயத்தை நிறைவு நோக்கி நகர்த்தலாம் என்று விழைகிறேன். முன்பாக ஷெனாய் இசைக்கும் திரைப்பாடல்களுக்கும் இடையிலான பந்தம் என்ன என்பதை முதலில் நோக்கலாம். அளவற்ற துக்கப் பெருக்க இசைப்பொழிவை சாத்தியம் செய்யும் தன்மை ஷெனாய் இசையின் அடிப்படை. தொட்டால் பூ மலர்வதைப் போல் ஷெனாய் என்றாலே மனம் கசியும். தமிழில் ‘ஹே பாடல் ஒன்று’ எனும் ப்ரியா படப் பாடல், பன்னீர்ப் புஷ்பங்களில் ‘ஆனந்த ராகம் கேட்கும் காலம்’, சாதனை படத்தில் ‘அங்கே நான் கண்டேன் கதை நாயகி’, எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் ‘மதுர மரிக்கொழுந்து வாசம்’, எங்க தம்பியில் ‘மலையோரம் மாங்குருவி’ ஆகிய பல பாடல்களில் ஷெனாயை இளையராஜா பயன்படுத்தியிருக்கிறார். சரசம் பொங்கும் பாடல்கள் சிலவற்றில் ஒரு கட்டுப்பாட்டு வளை கயிறைப் போலவே இதனைப் பயன்படுத்தவும் செய்தார். சகலகலா வல்லவனில் ‘நேத்து ராத்திரி யம்மா’, உள்ளே வெளியேவில் ‘சக்கரக் கட்டி சக்கரக் கட்டி சந்தனப் பெட்டி’ என அதற்கும் பல உதாரணங்கள் உண்டு.

அரிய வகையில் ‘பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா’ பாடலில் நடுவாந்திரம் ஷெனாய் இசையைக் கொண்டு உற்சாகத்தை அதிகரிக்கும் வண்ணம் உபயோகம் செய்திருப்பார். இவற்றுக்கெல்லாம் அப்பால் 2008ஆம் வருடம் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால், மீராஜாஸ்மின் நடித்த படம் இன்னத்த சிந்தா விஷயம். அதில் ஒரு பாடல் இடம்பெறுகிறது. மதுபாலகிருஷ்ணனும் ஸ்வேதாவும் இணைந்து பாடும் ‘மனசிலொரு பூமாலா என்ற பாடல். அதன் ஆரம்பமே ஒரு பொய் வேலையாய்ப் பூக்கும். காகித மலரில் தேங்கும் நிஜத் தேன் போன்ற அபூர்வத்தை இசைத்தளிப்பது.

ஆங்கிலத்தில் மிதமிஞ்சிய கிறக்க மொழியில் வரிசையாகப் பாடியபடி பாடலுக்குள் நுழையும் கணம் ஸ்வேதாவின் குரல் வெட்டுப் பெறும். மதுபால கிருஷ்ணன் பாடலைத் துவக்கும் முன் ஷெனாய் இசை பரவத் தொடங்கும். கீரவாணி ராகத்தில் அமைந்த மென் மெலடி பாடல்களில் மறக்க முடியாத இன்னொன்றாக இந்தப் பாடல் நிறைந்து நிரவும். இந்தப் பாடலில் இதுவரை இல்லாத அளவு ஷெனாய் இசையைக்கொண்டு அல்டிமேட் வருடலை சாத்தியம் செய்தார் இளையராஜா. தமிழ் உள்ளிட்ட வேறு எந்த மொழிக்கும் கிடைக்காத கொடுப்பினையாகவே அந்தப் பாடல் இன்றளவும் சலிக்காத தென்றலாய் காற்றை நிறைக்கிறது.

அந்தரங்கமான தொழுதலை, ஆன்மாவின் சரணாகதியை, ஈடுசெய்ய முடியாப் பேரன்பை, ஒப்பிடத் தேவையற்ற ஆதுரத்தை, மறக்கவே முடியாத நல்வாக்கை, எளிதில் யார்க்கும் ஒலித்திடாத வாழ்த்தொலியை, நம்ப முடியாத பேரன்பின் மீவருகையை, இன்னபிறவற்றையெல்லாம் தன் ஒரு பாடலின் மூலமாக இசைவழி சாத்தியப்படுத்தினார் இளையராஜா. எளிதாக யாராலும் செய்ய முடியாததைத் தான் பொதுவாக மேஜிக் என்போம். இந்தப் பாடல் நிச்சயமாக ஒரு மேஜிக்.

பாடல்களின் உருவம், உள்ளடக்கம், செல்லும் திசை, அவற்றின் பின்னதான மன எழுச்சி, வாத்திய உபயோகம், ராக ஒழுங்கு, குரல் வகைமை, புத்திசைப் பயனுறுத்தல், உப-நிறைவுகள், உடனொலி, உபகுரல், கட்டுமானம், வரிகளின் அமைவு, குரல் துல்லியம், மொத்தப் பாடலின் வழங்கல் வரை எல்லாவற்றிலும் நுட்பமும் நுணுக்கமும் மிகுந்த திறன்-பயன் ஆகவே தன் மலையாள மொழிப் பாடல்களை உருவாக்கித் தந்தார் இளையராஜா. பின்னணி இசையிலும் அபாரமான வழங்கலையும் தேர்ந்தெடுத்த மௌனத்தையும் சர்வதேசக் கோர்வைகளையும் புத்தம் தன்மை மிகுந்த உட்கட்டுமானத்தையும் உருவாக்கித் தந்தார்.

கேரளத்தில் ராஜா புனைந்தளித்த அபாரமான பல பாடல்கள் அவற்றின் ஆழ்தகுதிக்கு நிகரான நோக்குதலையோ எதிர்கொள்ளலையோ இன்னமும் பெற்றுவிடவில்லை என்பது இத்தனை பாடல்களை மொத்தமாகக் கேட்க முனைந்த போது இன்னுமொரு முறை தோன்றவே செய்கிறது. பாடல்கள் காலத்தின் மனோநிலையாக தம்மை தயாரித்துக் கொள்பவை. மேலதிகமாக பாடல்களை ஊடாடிக் காலத்தின் ஆழத்தில் சென்று திரும்ப முடியும் என்று நம்புகிற பெருங்கூட்டத்தினரின் மாறாப் பற்றுதலாக இசைப்பாடலின் செல்வாக்கு அபரிமிதமான ஒற்றையாக நிரந்தரிக்கிறது. தன் வாழ்க்கையின் ஊடுபாவாய்க் காலத்தைக் கருதுகிற அதே மனோபாவ நீட்சியாகவே அவரவர் பெருவிருப்பப் பாடல்கள் மீதான பற்றுதலை வகைப்படுத்திக்கொள்ள முடிகிறது.

இளையராஜாவின் தமிழ்ப் படங்களின் பின்னணி இசைக்கும் பாடல்களுக்கும் பெரிய எண்ணிக்கையிலான இரசிகர்கள் கேரளத்தில் பெருங்காலத்தைத் தொடர்ந்தவண்ணம் வந்துகொண்டிருப்பது நிசம். என்றாலும், அவரது முழு மேதமைக்கு ஈடுசெய்யக் கூடிய கேட்பு-பெறல்-சவால் நிறைந்த அதிகப் படங்களை அவர் மலையாளத்தில் இசையமைத்தாரா என்பது முற்றிலும் ஆமோதிக்க முடியாத பதிலையுடைய வினாவாக்வே எஞ்சுகிறது. மலையாளத்தில் தன் உச்சபட்ச வெரைட்டி பாடல்களை தமிழைப் போலவே அளித்தார் இளையராஜா என்பதில் கருத்து மாற்றில்லை. ஏதோ ஒன்று கூடுதலாக இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு அதிக-மலரைப் போலத் தோன்றிய வண்ணம் தொடர்வதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அடிபொளி என்று கேரளத்தின் அழகுச்சொற்பதம் ஒன்று உண்டு. அப்படிச் சொல்வதற்குண்டான பல படங்களை- பின்னணி இசையை- பாடல்களை உருவாக்கினார் இளையராஜா என்பதில் கருத்து மாற்றில்லை.

பலமான குரலில் “அடிபொளி” என்று சொல்லிக் கேட்பது ஆனந்தமானதல்லவா?

அடிபொளி

-தொடரும்.

*

முதல் பகுதி: இளையராஜாவின் முதல் ஐந்து ஆண்டுகள்

இரண்டாம் பகுதி: ராஜா பாடிய பாடல்கள்

மூன்றாவது பகுதி: வழித்தடங்களும் வரைபடங்களும்