விழைவின் துயரமும் இசைவின் மகத்துவமும்: இவான் இலியிச்சின் மரணம்

1 comment

என் தாயார் அன்று ஊரில் இல்லை. அடிபட்டிருந்த என் மாமாவின் மனைவியைப் பார்த்துக்கொள்வதற்காக கல்கத்தா சென்றிருந்தார். ஒருமாத காலமாக அங்கேயே இருந்தார். நான் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது. “ராமா பாட்டி செத்துப்போய்ட்டாடா. இன்னிக்கு காத்தால பதினோரு மணிக்கு. கெளம்பி வந்துடு.” அவ்வளவுதான். ஃபோனை வைத்துவிட்டார். மேலும் எனக்கு எதுவும் கேட்க வார்த்தை வரவில்லை. அவரும் சொல்லவில்லை. அம்மாவிடம் அவள் கிளம்பிப் போனபோது பேசியிருந்ததுதான். அதன்பின் பேசவில்லை. கல்லூரிக்கு விடுப்பு கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். மரணம் பற்றி புரியத் துவங்கும் வயதில் நான் எதிர்கொண்ட முதல் மரணம் இதுதான்.

அம்மா வந்துவிட்டிருந்தாள். பாட்டி கடந்த ஆறுமாத காலமாக படுத்த படுக்கையாய் கிடந்தவள். முதல் நாளே உயிர் போய்விடும் என்று அம்மாவுக்குச் சொல்லியிருந்தார் அப்பா. இருநாட்கள் முன்பே மருத்துவர் பாட்டியைப் பார்த்துவிட்டு அப்பாவிடம் சொல்லியிருந்தாராம்.

ஆனால் பாட்டி அம்மா வரும்வரை உயிரோடு இருந்திருக்கிறாள். அம்மா நுழைந்ததும் அவள் கண்கள் கண்ணுருளைகளில் சுழன்றனவாம். அம்மாவின் வருகையை உணர்ந்துவிட்டவள் போல அறையின் வாயிலை எதிர்நோக்கி படுக்கையில் இருந்தே காத்துக்கொண்டிருக்கிறாள் பாட்டி. அம்மா பாட்டியைக் கண்டதும் விரைவாக அருகில் வந்து அவளது கையைப் பிடித்துக்கொண்டு அழுதபடியே அமர்ந்திருக்கிறாள். பாட்டி கடைசியாக ஒருமுறை அம்மாவை தன் பீளை அடர்ந்த கண்களால் உருட்டிப் பார்த்துவிட்டு, எஞ்சியிருந்த தன் உள்ளங்கையின் வெப்பத்தை, தான் இறுகப் பற்றியிருந்த அம்மாவின் விரல்களின் இடுக்கில் கடைசியாக கடத்திவிட்டு, குளிரத் துவங்கினாளாம்.

அப்பா இதனைச் சொன்னபோது எந்த ஆர்ப்பாட்டமும் அவரிடம் இல்லை. அம்மா உள்ளிருந்து வந்தவளாக, “சாவு வீட்டுக்குள்ள நுழையறப்போ வான்னு கூப்டக் கூடாது” என்று சொல்லி என்னருகே வந்து கண் கசிந்தாள். “போன மாசம் கொஞ்சம் தெம்பாயிருந்தா. தேறிடுவானு நம்பி விட்டுட்டு போயிருக்கக்கூடாது. என்னைச் சொல்லணும். நெத்தி ராத்திரிக்கிலாமே முடிஞ்சுடும்னு டாக்டர் உங்கப்பா கிட்ட சொல்லிட்டாராம். நேத்து காலம்பர உங்கப்பா போன் பண்ணிச் சொன்னதும் சுப்புணி அவசர அவசரமா ஃப்ளைட் புக் பண்ணிக் கொடுத்து அனுப்பிச்சு வச்சான். மெட்ராஸ் வந்து வந்தாகனுமே நான். காத்தால பதினோரு மணிக்கு நுழையறேன். நான் வர வரை போகற உயிரப் புடிச்சு வச்சுண்டு படுத்துண்டு இருந்துருக்கா. நான் வந்து பார்த்த ரெண்டாவது நிமிஷம் பிராணன் போயிடுத்து” என்றாள் அம்மா.

“உயிரப் புடிச்சு வச்சுண்டு இருந்துருக்கா” அது என்ன கயிற்றுப் பிடியா? அப்படியெல்லாம் இருக்க முடியுமா என்ன? “ஒடம்பு போதும்ன்னு சொன்னதுக்கு அப்புறமும் உயிரால கொஞ்ச நேரத்துக்கு ஒட்டிண்டு இருக்க முடியுமா என்ன?” இந்தக் கணத்தில் மரணத்தை ஒத்திப்போடச் செய்வது எது? எந்த விசை அப்படி இயக்குகிறது? அந்த விசையை எப்படி பொருட்கொள்வது?

பாட்டியின் பதிமூன்றாம் நாள் காரியம் வரை அம்மா அழுதும் புலம்பியும் தீர்த்துவிட்டாள். வந்தவர்கள் போனவர்கள் எல்லாம், “உன்ன கடைசியா ஒரு வாட்டி பாத்துட்டு போகணும்னு அவளுக்கு இருந்துருக்கு. உயிர கையில புடிச்சுட்டு இருந்துருக்கா” என்று அவளிடம் சொல்லி துக்கம் விசாரித்துவிட்டு சென்றனர்.

அம்மாவுக்கு மேலும் துக்கம் கூடியது. ஒருமாத காலம் அவள் கல்கத்தா சென்றிருக்கக் கூடாதோ?  பாட்டியைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்க வேண்டுமோ? தவறு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வு துக்கமாக அவளிடம் எஞ்சியது.

ஆனால், அப்பா அவ்வளவு துக்கம் கொள்ளவில்லை. 13 நாட்கள் ஈமச் சடங்குகளையும் மாத மாதம் செய்யப்படும் ஊனமாசிகம், சோதம்பம் போன்ற கிரியைகளை சிரத்தையாகத்தான் செய்தார். பத்தாம் நாள் காரியத்தின் போது ஒருமுறை புலம்பித் தீர்த்த அம்மாவிடம், “என்னடி இன்னும் அழுக வேண்டிக்கிடக்கு? ஒரு சாவு விழுந்தது, அவ்வளவுதான?” என்று கடிந்துகொண்டார்.

“ஒரு சாவு, அவ்வளவுதானா?” இந்தத் தொனியை எப்படி விளங்கிக்கொள்வது? ஓர் இரக்கமற்றத்தனம் இதற்கு இருக்கிறதே? ஓர் அலட்சியத்தன்மை. ஓர் இருப்பின் நிராகரிப்பு கூடிவருகிறது அல்லவா? ஒரு மரணத்தை அவ்வளவு எளிதாக கடக்க முடியுமா?

பாட்டி தன் உயிரை உடலில் இருந்து வடிய விடாமல் பிடித்துக்கொண்டிருந்த திடகாத்திரத்துடன் அப்பாவின் இந்த அலட்சிய மனநிலையை எப்படி முடிச்சிடுவது? கண்டிப்பாக அப்பா பாட்டியின் நோய்மையையும் படுக்கையில் கிடந்த அவரது இருப்பையும் ஒருபோதும் சங்கடமாக கருதியதில்லை. சலித்துக்கொண்டதில்லை. அனைத்தையும் கடமை வழுவாமல் பாட்டிக்குச் செய்தார். நன்றாக பார்த்துக்கொண்டார். ஆனால், இப்படியோர் உதாசீனத்தை எப்படி கைவரப்பெற்றார்?

இந்த இருமை நிலைகளுக்கு (இழுத்து வைத்து கட்டுவதற்கும், சடாரென அறுந்து விழுவதற்குமான நிலை) மத்தியில் இருந்துதான் எனக்கான மரணத்தைப் பற்றிய ஒரு வரைவை நான் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்.

*

தல்ஸ்தோயின் “இவான் இலியிச்சின் மரணம்” குறுநாவலில், மரணம் ஒரு சௌகரியமாக, ஆசுவாசமாக, விடுதலையாக காட்சிப்படுத்தப்படுகிறது. இவான் இலியிச்சுக்கு அவனது நாற்பத்து ஐந்தாவது அகவையில் மரணம் நிகழ்கிறது. அவன் அந்த மரணத்தையும் அதற்குக் காரணமாக இருந்த அவனது உடல் வலியையும் வினவ ஆரம்பிக்கிறான். தான் வாழ்ந்த வாழ்க்கையை எடைபோட்டுக்கொள்ளும் சந்தர்ப்பம் அவனுக்கு வாய்க்கிறது.

இரண்டாம் அத்தியாயம் இப்படித் துவங்குகிறது. “இவான் இலியிச் ஒரு சாமானிய வாழ்க்கையைக் கொண்டிருந்தான். அதனாலேயே அது பரிதாபகரமானதும் கூட.” ஒரு சாமானியனின் வாழ்வில் எந்தவொரு பராக்கிரம அம்சங்களும் இருந்திராது. வெறும் நேர்க்கோட்டு வாழ்வுதான் அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே அவனுக்கு ஏற்படும் பேரிடியும் பெருந்துயரும் அவன் வாழ்க்கைக்கு அவலத்தைச் சேர்க்கிறது. அவனது வாழ்க்கைக்கான புனைவு அவனது அந்த அவலத்தில் இருந்தே துவங்குகிறது.

இந்நூலை வாசிக்கையில், பதினெட்டாம் நூற்றாண்டு ரஷ்ய உயர்குடிகள் மரணத்தை மறந்தே வாழ்கிறார்கள் எனும் சித்திரம் கிடைக்கிறது. அப்படி வாழும் ஒருவன் மரணத்தை அணுகிப் பார்த்தால் என்னவாகும் என்பதே புனைவாக்கப்பட்டிருக்கிறது.

https://images.squarespace-cdn.com/content/579da0b944024362eb0141d7/1483258484598-8HL2OJ53KGKT37LKLOZD/?content-type=image%2Fjpeg

இவான், பதினெட்டாம் நூற்றாண்டின் ரஷ்ய உயர்குடி வர்க்கத்தைச் சேர்ந்தவன். அவனுடைய தந்தைக்கு மூன்று மைந்தர்கள். இவான் அவர்களில் இரண்டாமாவன். அவன் அந்த உயர்குடி வாழ்க்கைக்காக பயிற்றுவிக்கப்படுகிறான். தனக்குரிய இடத்தை அடைய எல்லா வழியிலும் தயார்படுத்திக்கொள்கிறான். நீதிபதியாக உயர்கிறான். பிரஸ்கோவ்யா என்கிற பெண்ணை மணம் செய்துகொள்கிறான். வாழ்க்கையை எந்தக் குறையும் இல்லாமல் கொண்டு செல்கிறான். அலுவலக வாழ்க்கையையும் இல்வாழ்க்கையையும் பிரித்தறிந்து அத்துணை இலாவகமாக அவனால் கொண்டு செல்ல முடிகிறது. அவனுக்கு வேண்டுமென்கிற பதவியுயர்வும் கிடைக்கிறது. அவன் வேண்டுகிற மாதிரியான வாழ்க்கை எந்த இடர்களும் இல்லாமல் நேர்க்கோட்டில் செல்கிறது. ஒரு புதிய வீட்டில் குடிபுகுகிறான். வீட்டின் அறையில் சாளரத்தைத் தூக்கிக் கட்டும்போது ஒரு பக்கமாக விழுந்து இடது வயிற்றில் அடிப்பட்டுக்கொண்டு விடுகிறான். ஆனால் அப்போது வலி தெரியவில்லை. ஆனால் பின்னாட்களில் அந்த வலி கொஞ்சம் கொஞ்சமாக அவனை நிறைக்கிறது. எப்போதெல்லாம் அவன் வலி தெரிய வருகிறதோ அப்போதெல்லாம் அவன் வாய் கசக்கிறது. எங்கேயிருந்து வருகிறது இந்த வலியும் இந்த வாய்க் கசப்பும் என்று வினவுகிறான். அவனது மனமும் கூடவே கசந்துவிடுகிறது. மருத்துவர்களிடம் செல்கிறான். அவர்களால் எந்த நோய்க்குறியையும் கண்டறிய முடியவில்லை. தன் மனைவியிடம் தனது வலியை உணரவைக்க முடியவில்லை.

தன் நோய்க்குறியைப் பற்றிய எந்தத் துப்பும் அவனுக்குக் கிடைக்கவில்லை. மற்றவர்கள் அவனிடத்தில் இருக்கும் அந்த வலியை மறுத்துவிடுகிறார்கள். “இவனுக்கு வெறும் மனநோய். வலியென்று எதுவுமில்லை. மிகைப்படுத்தி அரற்றுகிறான்” என்கிறார்கள். வாசகர்களுக்கும் அந்த ஐயம் எழாமலில்லை. “இன்னதென்று அறியப்படாத வலி” என்பதே ஒரு குறியீடாய் கதையின் போக்கில் செயல்படுகிறது.

தொடக்கத்திலிருந்த ஆரோக்கியம் X நோய்வாய்ப்படுதல் என்கிற எண்ணம், இறுதியில் வாழ்வு X மரணம் என்று பிறழ்வு கொள்கிறது. கடைசியில் மரணத்தின் பக்கம் வந்துவிடுகிறான். தான் வாழ்ந்த வாழ்க்கை நிறைவானதுதானா? தவறாக வாழ்ந்து விட்டோமா என்று புலம்புகிறான். தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முற்றிலும் போலியானது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறான்.

அவனது மனைவியும் மகளும் நல்ல உடை அணிந்தால் அவனுக்கு கசந்துவிடுகிறது. அவர்களைத் தூற்றுகிறான். அவனது நோய்க்குறியைக் கண்டறிய முடியாத உயர்குடி மருத்துவர்களை ஏசுகிறான். தன்னைச் சூழ்ந்துள்ளவை எல்லாம் போலிகள் என்று தன் பக்கம் நியாயப்படுத்திக்கொள்கிறான். அவனுக்காக பணிக்கப்பட்ட வேலையாள் கெராசிம், ரஷ்யாவின் குடியானவ சமூகத்தைச் சேர்ந்தவன். அத்தனை போலிகளுக்கு மத்தியில் இவானின் ஒரே ஆசுவாசம் அவனே. “இந்த மரணம் எல்லாருக்கும் சம்பவிக்கக் கூடியதுதானே” என்கிறான் கெராசிம். இவானை நல்லபடியாக பார்த்துக்கொள்கிறான். தன் காலை ஒரு பக்கமாக தூக்கிப்பிடித்தால் அந்த வலி தெரிவதில்லை என்று இவான் சொல்லியதும் தயங்காமல் அவனது காலை தன் தோள்மாட்டில் வைத்துக்கொள்கிறான் கெரசிம். ஒரு கட்டத்தில், கெராசிம் போன்றவர்களின் பகட்டில்லாத இந்த வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கையோ? நாம் இதனை வாழத் தவறிவிட்டோமா என்று வேதனை அடைகிறான்.

அவ்வப்போது அவனுக்கொரு துர்கனவு வருகிறது. எவரோ தன்னை இருள் நிறைந்த மூட்டைக்குள் தள்ளிவிடுவது போன்று. இவான் மரணத்தைத் தயங்குகிறான். பயப்படுகிறான். தன் கடைசி மூன்று நாட்களில் வலி தாளாமல் மரண ஓலத்தை எழுப்புகிறான். மீண்டும், “எதுவோ சரியில்லை” என்று உணர்கிறான். “எது சரி என்பதை எப்படிக் கண்டறிவது?” என்ற கேள்வியில் அலைக்கழிகிறான்.

சாவதற்கு ஒருமணி நேரம் முன்பு, அவன் மகன் அவனது அறைக்கு வருகிறான். பேரோலத்துடன்  கைகளை அறைந்து துடிதுடிக்கும் தன் தந்தையின் விரல்களைப் பற்றி முத்தமிட்டு அழுகிறான். அவனைத் தொடர்ந்து ப்ரஸ்கோவ்யாவும் வருகிறாள். அவளும் வருந்துகிறாள்.

அவர்களைக் கண்டு, “நான் உங்களை கஷ்ட்ப்படுத்திவிட்டேன். என்னை மன்னியுங்கள்” என்கிறான் இவான். “Forgive me” (மன்னித்து விடு) என்கிற வார்த்தைப் பதம் முழுதாகிவிடாமல் “Forgo me” (விட்டுவிடு) என்று அவர்களுக்கு கேட்டுவிடுகிறது. பின்னர், இவான் அந்த இருள் நிறைந்த மூட்டைக்குள் விழுந்துவிடுகிறான். அதன் இறுதி விளிம்பில் ஒரு சிறு வெளிச்சத்தைக் கண்டடைகிறான்.

“மரணமே இல்லை. வெறும் ஒளி” என்கிறான்.

“ஏ வலியே? ஏ பயமே? எங்கே நீங்கள்?”

“எவ்வளவு எளிதானது?”

“ஆம், எவ்வளவு எளிதானது?”

“மரணம் முடிந்துவிட்டது.”

“ஆம் முடிந்துவிட்டது. என்ன ஒரு ஆசுவாசம்?”

அவன் மூச்சு பாதியில் இழுபட்டு நின்றுவிடுகிறது. அவன் இறந்துவிட்டான்.

இவானின் இத்தகைய வாழ்க்கையை நம் மத்திய தர வாழ்க்கையோடு எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். குறுநாவலின் ஆரம்ப அத்தியாயங்களில் (முதலாம் அத்தியாயம் தவிர) அவனது பெருவாரியான வாழ்க்கையும் அவனது இடப்பெயர்வுகளும் முழுவீச்சுடன் சொல்லப்பட்டு விடுகின்றன.

குறுநாவலின் வடிவம் ஒரு பூஜ்ஜியப் புள்ளியை நோக்கி குறுகுகிறது. அதாவது அவனது மரணத்தை நோக்கி. ஒவ்வொரு அத்தியாயத்திற்கு அடுத்த அத்தியாயத்தில் இவானின் காலம் குறுகுகிறது. இரண்டாம் அத்தியாயத்தில் அவனது பத்தாண்டுகால வாழ்க்கை சொல்லப்படுகிறது. மூன்றாம் அத்தியாயத்தில் அவனது ஏழாண்டுகால வாழ்க்கை. கடைசி அத்தியாயத்தில் அவனது கடைசி ஒரு நாள். அதற்கு ஏற்றாற்போல் அத்தியாயங்களின் பக்க எண்ணிக்கையும் வார்த்தை எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.

கூடவே, அவனது வெளியும் சுருங்குகிறது. ஆரம்பகட்ட நகர்வுகளாக அவன் வெவ்வேறு ஊர்களுக்கு அலைந்து திரிதலில் இருந்து ஒரு புதிய இடத்தில் தனக்கென ஒரு வீடு பார்த்து இடம் பெயர்வது வரை. கடைசி அத்தியாயங்கள் அவனது அறைக்குள் நிகழ்கின்றன. வலியால் அவதியுற்றவன் இறுதியில் அவனது அறையின் சோஃபாவில் முடங்கிக் கிடக்கிறான். அங்கேயே அவன் உயிர் பிரிகிறது. அவன் உயிர் காலவெளிகள் அற்ற உலகத்திற்கு பிரவேசிக்கிறது. அதுவொரு மறுபிறப்பும் கூடத்தான்.

இவானின் அறையை ஒத்திருக்கும் தல்ஸ்தோயின் படுக்கையறை.

இந்தப் பிரதியை வைத்துக்கொண்டு நாம் எங்கு வந்தடைவது என்கிற குழப்பம் முதலில் என்னிடம் எழுந்தது. இவான், அப்படியென்ன பாவப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தான்? அவன் இப்படிப்பட்ட சாவுக்குத் தகுதியானவன்தானா? எளியவனான கெராசிம்தான் நல்வாழ்க்கை வாழ்கிறானா? ரஷ்ய மேட்டுக்குடிகளின் வாழ்க்கை பகட்டானதாக கூறப்பட்டிருக்கிறதே? அதனால் ஒரு சாய்வுநிலை / சார்புநிலை உருவாகியிருக்கக் கூடுமோ? பக்கத்துக்குப் பக்கம் அத்தகைய வாழ்க்கையைச் சாடுகிறார் தல்ஸ்தோய். (மேதகு மாந்தர்கள், மேன்மை பொருந்தியவர்கள் என்று) அதனால் இது ரஷ்யாவின் எளிய மக்களுக்கான பிரதியாகிவிடுமா? சரி, இவான் உயர்குடிகளுள் ஒருவராய் பிறந்தது எவருடைய தவறு என்கிற கேள்வி எழும் இல்லையா?

ஆனால், இந்தச் சார்புநிலைகளைக் கடந்து, எந்தவொரு வாழ்க்கையுமே வீண்தான் என்கிறார் தல்ஸ்தோய். “Life has nothing to offer. It has no meaning” என்கிற பதத்திற்கு வந்தடைகிறார். இது எளிய மக்களுக்குத் தெரிந்து அவர்கள் அதனை உணர்ந்து வாழ்கிறார்கள் (கெராசிம் போன்று). ஆனால் அவரைப் போன்ற மேட்டுக்குடியினரோ அதனை உணர முடியாமல் இருக்கின்றனர் என்பதே இந்தக் குறுநாவலின் சாரமெனப்படுகிறது.

இக்குறுநாவலைத் தொடர்ந்து அவர் எழுதிய “A Confession” என்கிற அவரது சுயசரிதக் குறிப்புகள் கொண்ட தொகுப்பில், இவான் இலியிச் போன்றே தனது இளம்பிராயத்தில் வலிவேதனையினால் அவதியுற்று மரணித்த அவரது சகோதரனைப் பற்றி குறிப்பிடுகிறார். “அவன் வலியில் உழன்று மரணப் படுக்கையில் போராடிக்கொண்டிருந்த காலங்களில், என்னாலும் சரி, அவனாலும் சரி, எந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலும் தர்க்கத்தின் அடிப்படையிலும் இவையெல்லாம் ஏன், எதற்கு என்று விளக்கிக்கொள்ள முடியவில்லை” என்கிறார். காரண காரணிகளுக்கு அப்பால், கால வெளிகளுக்கு “அப்பால்”, மனித வாழ்க்கையை எப்படிப் பார்ப்பது என்கிற கேள்விக்கு, “அப்பாலென்ன, அப்பால்” என்று சொல்லி ஒரு அவநம்பிக்கையான பதிலைச் சொல்கிறார். “காரண காரணிகளுக்கு ‘உட்பட்டு’ காலவெளிகளுக்கு ‘உட்பட்டு’ இயங்கும் இந்த வாழ்க்கைக்கு என்னால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. அபத்தங்கள் மட்டுமே எஞ்சுகின்றன” என்கிறார்.

இந்த “அவநம்பிக்கைச் சிந்தனைக்கு” தன் வாழ்நாள் முழுவதும் தல்ஸ்தோய் இடமளித்தாரா என்பதைப் புரிந்துகொள்ள அன்று அவரை வெகுவாக பாதித்த ஷோப்பனோவரையும் அவருடைய தத்துவத்தையும் சற்று அலசிப்பார்க்க வேண்டும். ஷோப்பனோவர் (Arthur Schopenhauer) பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மானிய சிந்தனையாளர். தத்துவவியலாளர். அவருடைய தத்துவத்தின் தாக்கம் தல்ஸ்தோயிடம் வெகுவாக காணப்பட்டது. அவரோடு தல்ஸ்தோய் பலவாறு உடன்பட்டார். அப்போது “இலட்சியவாதம் அல்லது கருத்துமுதல்வாதம்” (Idealism) பற்றி ஜெர்மனியில் பல்வேறு தத்துவ விவாதங்கள் உருவாகி வந்தன. பல்வேறு தத்துவவியலாளர்களின் நிரை ஜெர்மனியில் எழுந்துவந்தது.

இம்மானுவேல் காண்ட், ஹெகல், ஷோப்பனோவர் போன்றவர்கள் அவர்களுள் முக்கியமானவர்கள். பெரும்பாலான தத்துவ விவாதங்கள் மனித இருப்பு, மரணம், கடவுள் பற்றிய கேள்விகளை ஆராயத் துவங்கின. அவற்றை விளக்க முற்பட்டன. அவற்றை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி விளக்கினார்கள். பெரும்பாலான விவாதங்களை கீழ்க்காணும் சொல் எதிரீடுகளை வைத்து பொருத்திப்பார்த்து புரிந்துகொள்ளலாம்.

1.இருப்பு X இன்மை (Being X Non-being)
2.தூய நிலை X சார்புநிலை (Absolute X Relative)
3.அகநிலை X புறநிலை (Subjective X Objective)

ஷோப்பனோவர் தனது ‘The world as will and representation’ என்கிற புத்தகத்தில், “தூய பெரும் பாவம் என்பது மனிதனின் இருப்பே” என்கிறார். இம்மானுவேல் காண்ட்டின் “மீறுநிலை இலட்சியவாதத்தை”, தனது “விழைவு” (Will) என்ற கருதுகோளை முன்வைத்து விளக்கி ஷோப்பனோவர் மறுக்கிறார்.

https://kwize.com/pics/Arthur-Schopenhauer-quote-about-world-from-The-World-as-Will-and-Representation-1c4589.jpg

இம்மானுவேல் காண்ட்டின் “மீறுநிலை இலட்சியவாத” (Transcendental idealism) தத்துவத்தை இப்படி வரையறுக்கலாம். அவர் இப்பிரபஞ்சத்தை நிகழ்தல்கள் நிறைந்த பிரபஞ்சம் (Phenomenal Universe)  என்கிறார். அதற்கு எதிராக நிகழ்தலற்ற ஒரு பிரபஞ்சத்தை (Noumenal Universe) நிறுவுகிறார்.

இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு பொருளின் (object) தோற்றமானது நம் மனம் சார்ந்தது, உள்ளுணர்வு சார்ந்தது, அகநிலை சார்ந்தது (subjective)  என்கிறார். அதாவது நிகல்தல்களால் நிறைந்த பிரபஞ்சம். நிகழ்தல் (phenomenon) என்பதை இப்படி விளக்கலாம். நாம் ஒரு மரத்தைப் பார்க்கிறோம். அப்போது மரம் பார்க்கப்படுகிறது. பார்த்தல் என்கிற “நிகழ்வு” நடக்கிறது. இப்படி புலனுணர்தலால் பதிவன அனைத்தும் “நிகழ்தல்” மூலம் ஏற்படுகிறது. நாம் கண்ட மரம், நாம் கண்ட மரம் மட்டுமே. அப்படியென்றால் மரத்தின் நிஜ இருப்பை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. “அது அதுவாகவே” (thing in itself) நிலையில் இருக்கும் அதன் இருப்பை உணரமுடியாது. ஆனால், இந்த உலகில் எந்தப் பொருளுக்கும் அப்படியோர் இருப்பு உண்டு என்கிறார். அங்கே நிகழ்தலே இராது. அதனை நிகழ்தலற்ற உலகம் (Noumenal Universe) என்று வகைபடுத்துகிறார். நாம் கட்டுண்டு இருக்கிறோம். நம்மை மீறி அங்கு “நிகழ்தலற்ற உலகம்” ஒன்று உள்ளது. அந்த மீறலைத்தான் “transcendence” என்கிறார். காலமும் வெளியுமே நம் அகநிலை சார்ந்தவை என்கிறார். அவற்றின் இருப்பு இந்த நிகழ்தலின் உலகத்தில் மட்டுமே. அவை இந்த நிகழ்தலின் உலகத்தின் அனுபவ நிலைகள் என்கிறார். (empirically real, transcendentally ideal) மனித மனம்தான் காலத்தையும் வெளியையும் பகுப்பாய்ந்து வைத்திருக்கிறது என்கிறார்.

எமனை காலதேவன் என்கிறோம். ஒருவர் இறந்தால் “அகால மரணம் எய்தினார்” என்கிறோம். அப்படியென்றால் காலமில்லாத – நிகழாத வெளிக்கு பிரவேசிப்பது என்றும் சொல்லலாம்தானே? இம்மானுவேல் காண்ட்டின் மொழியில் “நிகழ்தலற்ற உலகிற்கு” பிரவேசிக்கிறோம். இறப்பின்போது காலமும் வெளியும் சுருங்கி பூஜ்ஜிய நிலை அடைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது, இல்லையா?

மேலே சொன்ன எடுத்துக்காட்டை இன்னும் கொஞ்சம் நிராகரித்தால், கீழைத்தேய மெய்யியலான பெளத்தத்தில், நாகார்ஜூனர் கண்ட மாத்யாமிக தரிசனத்தை அடையலாம். நாகார்ஜுனரின் தரிசனத்தில் காண்ட் சொன்ன “அது அதுவாகவே” இருக்கும் நிலை என்பது இல்லை. அப்படி அது அதுவாகவே என்கிற நிலை இருந்தால், “சாரம்” என்கிற ஒன்று உருவாகிவிடும். ஆனால், அப்படியேதும் இங்கு இல்லை. அதாவது, “நாம் அந்த மரத்தினைப் பார்க்கிறோம். பார்க்கப்படுதல் நிகழ்கிறது. அப்போதுதான் பார்க்கப்படும் பொருள் தெரிய வருகிறது. “பார்க்கப்படுதல்” நிகழாவிட்டால் “பார்க்கப்படும் பொருள்” என்பது இல்லையென்றே கொள்ளலாம். “நிகழ்தலில்லாத தனித்த இருப்பு” என்ற ஒன்று இல்லை. “தனித்த சாரம்” என்ற ஒன்று இல்லை. இதையே பெளத்த மெய்மையாக நாம் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், காண்ட்டின் “அது அதுவாகவே” கருத்தை ஷோப்பனோவர் வேறுவிதமாக மறுக்கிறார். “அது அதுவாகவே” இருக்கும் நிலையை மனிதன் உணர்ந்துகொள்ள (அறிந்துகொள்ள) முடியாது என்கிற இம்மானுவேல் காண்டின் கருத்தை, “இல்லை, அப்படி இல்லை. அறிந்துகொள்ள முடியும்” என்ற தனது வாதத்தை, ‘The world as will and representation’ என்கிற நூலில் நிறுவுகிறார். இவருமே நம் பெளத்த மெய்மையை அணுகி வருவதை உணரலாம்.

ஷோப்பனோவர் “Will” என்கிற கருத்தாக்கத்தை முன்வைக்கிறார். அதனை, “அடிப்படை விழைவு, இச்சை, ஆசை” என்று கொள்ளலாம். காண்ட்டின் “அது அதுவாகவே” இருக்கும் இருப்பென்பது இத்தகைய “விழைவு”களால் நிறைந்த ஒன்று. அவ்விழைவின் வெவ்வேறுபட்ட பிரதிநிதிகள்தான் நாம். இந்த உலகத்தின் அத்தனை பொருட்களுமே அந்த “விழைவின்” பிரதிநிதிகளாய் (Representation) இருக்கின்றன. மனிதனின் காமம், குரோதம், மோகம் எல்லாம் இந்த விழைவுகளின் விளைவுதான். மனிதனை முற்றுப்பெறாத விழைவுகளின் தொகுதியாக உருவகிக்கிறார் ஷோப்பனோவர்.

மனிதனின் துயரத்தை, தனது “விழைவு” கருத்தாக்கம் வாயிலாக எடுத்துரைக்கிறார். விழைவு காரணமாக “இச்சையும் ஆசையும்” பெருகுகிறது. அதன் காரணமாய் “துயரம்” நேர்கிறது. வாழ்க்கையே வெறும் துயரக் களஞ்சியம், துயரத்திற்கும் வெறுமைக்குமான ஊசல். ஏனென்றால், அது அடிப்படையில் இச்சை வெளியில் இயங்குவது என்ற அவநம்பிக்கைக் கோட்பாட்டுக்கு வந்தடைகிறார்.

இந்த விழைவுக்கும் துயரத்திற்கும் எந்த அர்த்தத்தையும் கண்டடைந்துவிட முடியாது. ஏனென்றால் அப்படி எந்தவொரு அர்த்தமும் இல்லை. அதனால், ஒருவனது விழைவுக்கு அவன் எப்படி காரணமாக மாட்டானோ அவனது துயரத்திற்கும் அவன் பொறுப்பாவதில்லை என்கிறார். பெளத்தத்தின் “துக்கம்” என்கிற கருத்தை இங்கு நாம் பொருத்திப்பார்க்கலாம்.

https://methods.sagepub.com/images/virtual/epistemology-and-metaphysics-for-qualitative-research/10.4135_9781473982956-fig10.jpg

நெப்போலியனின் படையெடுப்பையும் அவனது தொடர் வெற்றிகளையும் குறித்து ஷோப்பனோவர் இப்படிச் சொல்கிறார். “நெப்போலியனும் அடிப்படையில் சாமானிய மனிதன்தான். அவன் விழைவை சரிகட்டக் கூடிய ஆற்றல் அவனிடம் இருந்தது. அவ்வளவுதான்.” இப்படி, மனிதனை அவரவர் விழைவை நிகர் செய்யக்கூடிய அவரவரது ஆற்றலைக் கொண்டு எடைபோடுகிறார்.

மனிதனின் இப்படிப்பட்ட துயரங்களுக்கு அவன் எந்த வகையிலும் பொறுப்பில்லை என்கிற புள்ளிக்கே தல்ஸ்தோய் வந்தடைகிறார்.  ஷோப்பனோவரின் சிந்தனைகளை தன் சொந்த சகோதரனுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் வாயிலாக மதிப்பிட்டுப் பார்க்கிறார். “வாழ்க்கை இப்படித்தான், மரணம் அவ்வளவுதான்” என்று எடுத்துரைக்கிறார்.

ஷோப்பனோவர் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர். அவரைப் பொறுத்தவரை, மரணம் என்பது  மீட்சியில்லை. வீடுபேறு இல்லை. வெறும் விடுதலை மட்டுமே. விழைவுகளில் இருந்து, துயரங்களில் இருந்து. மகிழ்ச்சியே கூட ஒரு எதிரீவு நிலைதான் என்கிறார். பின்னர் எப்படித்தான் ஆசுவாசத்தினை தேடிக்கொள்வது? அவர் அதற்கு “கலையையும் பேரன்பையும்” முன்வைக்கிறார். சக உயிர்களிடம் காட்டும் அன்பு, நம்மில் சமநிலையைப் பேணி, கொஞ்ச காலத்திற்கேனும் நம் விழைவுகொள்ளும் வீரியத்தைக் கட்டுப்படுத்தி வைக்கும்.

மேலும் கலையில் தொலைந்து போதல் நம் விழைவின் இயக்கவிசையில் இருந்து நம்மை ஆற்றுப்படுத்தும் என்கிறார். முக்கியமாக, இசைக்கலை. “இசை” என்பது நகலெடுக்கப்படாத – பிரதியெடுக்கப்படாத கலை வடிவம். தூய கலை வடிவம். ஓவியம் அப்படியில்லை. அது ஒன்றை பிரதியெடுப்பது என்று இசையை ஏற்று ஓவியத்தை நிராகரிக்கிறார். “விழைவின் வேற்றுருவே இசை” என்கிறார்.

ஷோப்பனோவரில் இருந்து முரண்பட்டு, இவான் இலியிச்சின் மரணத்தில் மரணத்தை மீட்சியாக முன்வைக்கிறார் தல்ஸ்தோய். இவான் இலியிச் மரணத்தைக் கண்டு பயப்படுவதில் இருந்து அதனை ஏற்றுக்கொள்ளுதலுக்கு நகர்கிறான். அங்கே “மரண ஏற்பு” நிகழ்கிறது. அங்கே கதை திறந்துகொள்கிறது. அவன் காண நேர்ந்த அவன் மகனது கண்ணீர் ஷோப்பனோவரின் “பேரன்பின்” வெளிப்பாடாக அமைகிறது. மேலும், இவானை கடைசியாக நிறைக்கும் ஒளியானது அவனுக்கு மீட்சியாகப்படுகிறது.

https://3.bp.blogspot.com/_VYU37CYdVZ4/S7077Vva0GI/AAAAAAAAABs/bo4GbupUIU4/s1600/flag.blackened.nettolstoy..jpg
தல்ஸ்தோயின் இறுதி ஊர்வலம்

இதிலிருந்து தல்ஸ்தோய் ஷோப்பானவரின் முழு அவநம்பிக்கைக் கொள்கையில் இருந்து விலகி ஒரு நுனிக்கீற்று நம்பிக்கையை தனது மனதில் கொண்டிருந்தார் எனலாம். இக்கதையை எழுதி முடித்த பின்னர், மேலும் முப்பதாண்டுகளுக்கு அவரை நீட்டுவித்தது அவரது அந்த நம்பிக்கைதானோ என்னவோ?

புதுமைப்பித்தன் “மகா மசானம்” எனும் கதையில் இப்படி பகடி செய்கிறார். “அங்கே சாலை ஓரத்தில் ஒருவன் சாவகாசமாக செத்துக்கொண்டிருந்தான்.” அவர் அதனை சமுதாயத்தை நோக்கிய எள்ளலாய் உபயோகிக்கிறார். ஆனால், “சாவகாசமாக சாவது” என்பது ஒரு உய்நிலை. ஒருவன் தன் மரணத்தை ஏற்றுக்கொள்ளுதலில்தான் அது நிகழ முடியும். மரணத்திற்கு முன் நாம் அந்த சாவகாசத்தை அடைந்து விடவேண்டும். அதுதான் நம்மை மரண ஏற்புக்கு வழிவகுக்கும். மரணம் அந்த ஏற்பின் கணத்துக்காகக்கூட நீளும். என் பாட்டியில் இருந்து இவான் இலியிச் வரை தொடர்வது அதுவே. நம் உள்ளம் கூற வேண்டும், “இனி சாகலாம்” என்று. “சாவு அவ்வளவுதான்” என்று. அந்த ஏற்பு நிகழும்வரை வாழ்க்கையும் மரணமும் வெறும் பயமே. நாம் செய்யக்கூடுவது அந்த ஏற்பெனும் கணத்தை உணர்ந்து அந்த ஏற்புக்காக பழகிக்கொள்ளுதலே.

1 comment

Comments are closed.