கதைநிலத்தின் விதைநெல்: இராசேந்திர சோழன் சிறுகதைகள்

0 comment

இராசேந்திர சோழனுடைய எழுபத்து ஏழு சிறுகதைகள் தமிழினி பதிப்பகத்தால் ஏறத்தாழ ஆயிரம் பக்கத் தொகைநூலாகத் தொகுக்கப்பட்டு டிசம்பர் 2014-இல் வெளியாகியிருக்கிறது. அஸ்வகோஷ் என்ற புனைப்பெயரிலும் அவர் எழுதியிருக்கிறார் என்ற தகவல் இலக்கிய வாசகர்கள் ஏற்கெனவே அறிந்ததுதான். தன்னுடைய இலக்கிய – அரசியல் செயற்பாட்டின் நெடிய அனுபவத் திரட்சியோடு இந்தத் தொகைநூலுக்கு அவர் எழுதியிருக்கும் பின்னுரை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. தொகுப்பை வாசித்து முடித்தபின் அவருடைய கதைகளைக் குறித்து எனக்குள் திரண்ட கருத்துகளும் தன் கதைகளைக் குறித்து அவரே சொல்லும் மதிப்பீடுகளும் ஒரே இணைகோட்டில் இருந்தன.  

இலக்கிய அழகியலைப் பொறுத்தமட்டில் மிக நவீனமான பார்வையைக்கொண்டிருக்கும் இராசேந்திர சோழன், தமிழ்ச் சிற்றிதழ் இயக்கத் தொன்மங்கள் அல்லது  நம்பிக்கைகளிலிருந்து, தான் வேறுபடும் இடங்களைத் தன் பின்னுரையில் விவாதித்திருக்கிறார். மேற்கத்திய இலக்கியக் கோட்பாடுகளால் ஆளுகை செலுத்தப்படும் தமிழ் எழுத்தாளர்கள் தம் எழுத்தில், சொந்த நிலத்தின் வாழ்க்கைக்கு போதுமான முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதையும் சுட்டுகிறார். இலக்கியம் குறித்த இவ்வளவு ஆழமான புரிதலோடு இயங்கியவர் அரசியலுணர்வால் களப்பணிக்குச் சென்றது முரண்தான். 

கதைமொழியின் மீதான இராசேந்திர சோழனின் ஆளுமையைக் கவனிக்கும்போது உள்ளடக்கம் (புனைவம்சம் கூடியதாகவோ அல்லது அன்றாட யதார்த்தத்தின் மேலே கட்டப்பட்டவையாகவோ) எவ்விதத்தில் இருப்பினும் அவருடைய மொழியோட்டம் ஆற்றொழுக்கு கொண்டது. பிசிறுகளற்றது. கற்பனையோடு வினையாற்றக்கூடிய புனைவின் உள்ளடுக்குகள் கூடியிராமல் எளிய சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த கதைகளிலும்கூட வாசிப்பு சுவாரசியம் குறைவுபடாமல் இருப்பதற்கான காரணங்களாக உரையாடற் சித்தரிப்புகளையும் மொழியாளுமையையும் குறிப்பிடலாம். 

இராசேந்திர சோழன் கதைகளை அடிப்படையில் மூன்றாகப் பகுக்கலாம். சமூகப் படிநிலையில் எளிய வர்க்கத்தைச் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கை, தமது சுற்றத்தின் மீதான அவர்களுடைய கரிசனை போன்றவற்றை அவருடைய தொடக்ககாலச் சிறுகதைகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை செம்மலர் இதழில் பிரசுரமானவை. ஆண், பெண் உறவுநிலைகளைக் குறித்த உளவியல் பார்வையோடு இருபாலருக்குள் இயங்கும் பாலியல்பையும் பாலுணர்வையும் அடிப்படையாகக்கொண்டவை இரண்டாவது வகைக் கதைகள். சமூகத்தில் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலுணர்ச்சிகள், விலக்கப்பட்டவை என எதிரெதிர் கோணங்களை விவாதிக்கின்ற கதைகள் இவ்வகைப்பாட்டில் உண்டு. 

நிறுவனமாகிவிட்ட, இராசேந்திர சோழனின் மொழியிலேயே சொல்வதானால், ’பக்திமார்க்கமாக’ மாறிவிட்ட இடதுசாரி அமைப்புகளின் மீதான ஆக்கப்பூர்வமான விமர்சனத்தோடு எழுதப்பட்டிருக்கும் மூன்றாம் வகைக் கதைகளின் ஆதார அச்சாக பகடியைச் சொல்லலாம். தமிழ்ச்சமூகத்தின் மீதான விமர்சனக்கூறுகளும் இவ்வகைக் கதைகளில் உண்டு. இவை தவிர அவரே குறிப்பிடுவதுபோல விதையாகப் பயன்படாவிட்டாலும் உண்ணுவதற்குச் சுவையான நன்னிப்பயிறு வகையிலான கதைகளும் உண்டு. பிற அழுத்தமான கதைகளோடு ஒப்பிடுகையில் முழுமை கூடாமல் சித்தரிப்பு என்ற அளவில் நின்றுபோனவையும் இருக்கின்றன.

மனதின் ஆதாரமான பண்புகளையும் இயங்குநிலைகளையும் பேசும் படைப்புகள் எக்காலத்திலும் பழுப்படைவதில்லை. செவ்வியல் படைப்புகளின் இயல்பான அம்சம் இது. இராசேந்திர சோழன் 1970-களில் எழுதிய சிறுகதைகள் பல தம்முள் இயல்பான மானுட நீதியுணர்ச்சியோடு இருக்கின்றன. அதே தருணத்தில் பிரச்சாரத் தன்மையிலிருந்து விலகி இலக்கிய அழகியலோடே அக்கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. மார்க்சிய செயற்பாட்டாளரான அவருக்கு இலக்கிய அழகியல் குறித்து இருந்த நம்பிக்கையும் புரிதலும் இவ்வகை வெளிப்பாட்டில் நுட்பமான பங்கை வகித்ததாகவே கருதுகிறேன். ஒருபார்வைக்குச் சாதாரணமாகவும் ஆழமற்றவையாகவும் தோற்றமளிக்கும் பல கதைகள் தம்முற் தொழிற்படும் மனித உணர்வுகளின் பெறுமதியால் தவிர்க்கமுடியாத இடத்தை அடைந்துவிடுகின்றன.

மனித உறவுகளில் தற்கணப் பிணக்கைக் கடந்து ஒருவர் மற்றவர்க்கு ஆதுரமாக இருக்க வேண்டியிருப்பது இயற்கையின் மறுகண விதியாக இருக்கிறது. மனங்களின் கரட்டுத்தன்மைதான் கனிவாக இளகுகிறது. இனிக்கும் பழமாக வேப்பங்காய் கனியும் ரசவாதம் இது. இராசேந்திர சோழனின் கதைகளில் பெண்கள் வெளிப்படுத்தும் கனிவு, குறிப்பாக ’எங்கள் தெருவில்’, ரோதனை’ போன்ற கதைகளில் தோன்றும் பெண்களின் கனிவு தனித்துச் சுட்டப்படவேண்டியது. இவ்விரு கதைகளிலும் புறநிலையிலும் அகநிலையிலும் மனம் இயங்கும் நுட்பங்கள் காணக் கிடைக்கின்றன. இந்த குணாம்சத்தின் வேறுவிதமான பரிமாணத்தை, குறிப்பாக கணவன் – மனைவி உறவில் ஒவ்வொரு நாளும் மறைந்து மறைந்து தோன்றுகின்ற பிணக்கையும் இணக்கத்தையும் ’தனபாக்கியத்தோட ரவ நேரம்’, ’இழை’ ஆகிய கதைகளில்  காணலாம். ஒரே கருப்பொருள் வெவ்வேறு அடர்த்திப் பரிமாணங்களோடு இருகதைகளிலும் சொல்லப்பட்டிருக்கிறது. ‘ஆண்’ என்ற வார்ப்பிலிருந்து ஆண்கள் எள்ளவும் மாறாமல் இருக்கும் நிலையில், இடையிலான பிணக்கில் முதலில் தணிய பெண்ணே  நிர்ப்பந்திக்கப்படுகிறாள். அமைப்பினால் அவள் அப்படி வார்க்கப்பட்டிருக்கிறாள். குடும்ப உறவுகளில் காவியத்தன்மை இருப்பதில்லை. பிரியத்தையும் பாசத்தையும் போலவே பரஸ்பர முரண் உணர்வும் உறவின் அடிப்படைகளில் ஒன்றாக இருக்கிறது. 

குடும்பம் என்ற அமைப்பின் அடிப்படையாக இருக்கும் ஆண்-பெண் உறவுக் கட்டமைப்பில் பெண்கள் கொண்டிருக்க வேண்டியதாக விதிக்கப்பட்டிருக்கும் பாலியல்புத் தகுதியையும் கடமைகளையும் குறித்துப் பேசும் இரண்டு கதைகள் ’சடங்கு’, ‘தோது’ ஆகியவை. இங்கே பெண்ணின் பாலியல்புத் தகுதி என்பது தூய்மையான யோனியும் வளமான கருப்பையும்தான். இவற்றை இழந்துவிட்ட அல்லது வாய்க்கப் பெறாத பெண், அமைப்பின் மையத்திலிருந்து விளிம்புக்குத் தள்ளப்படுகிறாள். ’சடங்கு’ கதையில் ஒரு பெண்ணின் அரற்றலும் தவிப்பும் அவசங்களும் இருக்கின்றன. கதையில் விவரிக்கப்பட்டிருக்கும் தற்கணச் சம்பவங்களின் வழியே அவளுடைய துயரத்தின் காரணம் மிக நுட்பமான குறிப்பாகச் சுட்டப்படுகிறது. காதலுறவில் கர்ப்பிணியாகி கருவழித்து வீட்டுக்குள் முடங்கிவிட்ட மகளை திருமண ஏற்பாட்டுக்குள் பொருத்திவிடத் துடித்து அந்த முயற்சியில் நிராகரிப்பை எதிர்கொள்ள நேர்கின்ற தாயொருத்தியின் மனப்பதட்டங்கள் ’தோது’ கதையில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. 

இராசேந்திர சோழனின் இரண்டாம் வகைக் கதைகளில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு பண்பு, பாலியல்புத் தூய்மைவாதம் குறித்து மனங்களுக்குள் பொதிந்திருக்கும் பூச்சுக்களையும் போலித்தனங்களையும் அதன் அயக்கங்களுடனும் விநோதங்களோடும் இணைத்து அடையாளப்படுத்துவது. கோணல் வடிவங்கள் என்றொரு கதை. தான் ’தொடுப்பு’ வைத்திருக்கும் பிறன்மனை ஒருத்தி வேறொரு ஆணோடு தொடர்பிலிருக்கிறாள் என்று கற்பித்துக்கொண்டு அவள் ’கற்பின்’ மீது சந்தேகப்பட்டு அப்பெண்ணை அடித்து வதைத்துப் பிதிர்கெடும் ஆண் ஒருவனை இங்கே காண்கிறோம். கதையின் இறுதி வாக்கியத்தில் ஒரு கிண்டலைப் புதைத்துவைத்து அவனுடைய கேலிச்சித்திரத்தை முழுமைப்படுத்திவிடுகிறார் இராசேந்திர சோழன். கோணல் வடிவங்கள் கதையின் மறுபக்கத்தை ’நாய் வேஷம்’ கதையில் பார்க்கலாம். முன்னதில் கள்ள உறவில் கற்பை எதிர்பார்க்கும் ’உக்கிரமான’ ஆண் என்றால் இதில் பரபுருஷனோடு உறவிலிருக்கும் மனைவியின் மடிபுதைத்து அழும் நொய்மையான ஆண் ஒருவன் இருக்கிறான்.

மேற்சொன்ன பண்பின் தொடர்ச்சியை நாட்டம், புற்றில் உறையும் பாம்புகள், ஊனம், சூழல் போன்ற கதைகளில் கவனிக்கலாம்.  நாட்டம் கதையில் பெண்ணின் மோகம் மிக நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதையை வாசிக்கும்போது தி.ஜானகிராமனின் ’பசி ஆறிற்று’ என்ற கதை நினைவுக்கு வந்தது. கணவனல்லாத வேறு ஆண்மீது பெண் கொள்ளும் மயக்கம் என்ற கருப்பொருளை இரண்டு கதைகளும் வெவ்வேறு விதங்களில் பேசியிருக்கின்றன. மோகத்தில் மனங்கொள்ளும் கோலங்களையும் அது நிறைவேறாதபோது எதிர்கொள்கின்ற ஏமாற்றங்களையும் பிறகு மனம் தன்னை யதார்த்தத்தோடு பொருத்திக்கொண்டு சமாதானமடைய நேர்வதையும் செகதலா என்ற பெண்ணின் வழியே பார்க்கிறோம்.

பாலியல்பில் பெண்மனம் பயிலும் பாவனைகளும் போலித்தனங்களும் என்ற கோணத்தில் ‘புற்றில் உறையும் பாம்புகள்’ கதையை வாசிக்கிற அதே தருணத்தில் ஆண், பெண் என்ற இருமை எதிர்வில் செயல்படும் மறைமுகமான இயங்குவிசைகளையும் பார்க்க முடிகிறது. சமூக நடைமுறை, தனியுயிர் விழைவுகள் ஆகிய இரண்டிற்கு இடைப்பட்ட புலத்தில் மனம் உருவாக்கிக்கொள்ளும் தந்திரங்களை இக்கதையில் காணலாம்.  ஒன்றை சதா விலக்கிக்கொண்டே இருந்தால் அதனோடான பிணைப்பு அறுபடவில்லை என்பதே உள்ளுறைந்த பொருள். இந்தக் கதையில் வரும் பெண், பாவனையான அசூயை அல்லது கரிப்பின் வழியே, தான் பிற ஆண்களால் பார்க்கப்பட வேண்டியவள் என்னும் தன் பாலியல்பு இருப்பை நிறுவிக்கொண்டே இருக்கிறாள். கோணல் வடிவங்கள் கதையில் எப்படி அதன் இறுதி வாக்கியத்தால் கதைக்கு வேறொரு நிறம் கிடைக்கிறதோ அதே தொழில்நுட்பமே இங்கும் செயல்படுகிறது. பல கதைகளின் இறுதிச் சொற்றொடர் தனித்துப் பார்க்கையில் சாதாரணமாய்த் தோன்றினாலும் கதைகளின் சூழலில் அவை உருவாக்கும் அர்த்தப்பெறுமதி மிக அதிகம்.

https://gumlet.assettype.com/vikatan%2F2019-07%2Fae998c55-8b0c-4f06-96ea-0feca2bd198c%2Fp6b.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.0

இந்த வகைமை கதைகளில் வரும் பெண் பாத்திரங்கள் ஒருவகை பாலியல்பு மீறலை நிகழ்த்துபவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் குடும்ப அமைப்புக்குள் இருந்துகொண்டே இதனைச் செய்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டியது. இந்த மீறலுக்கான பிரதான காரணங்கள் ’சூழல்’, ‘ஊனம்’ ஆகிய கதைகளில் அகவயமானதாக இருக்கின்றன. ‘சூழல்’ கதையின் முற்பகுதி சித்தரிப்பு ‘வாலிப வயோதிக அன்பர்களுக்கு’ இன்பமூட்டும் பிரதியாக மாறிவிடும் விபத்திலிருந்து நூலிழையில் தப்பியிருக்கிறது. ஆயினும் மனித மனங்களில் இயங்கும் முன்னூகங்களின் விசித்திரங்களையும் அவை எப்படி உண்மையை மறைக்கும் திரையாக இருக்கின்றன என்பதையும் ’சூழல்’ கதையில் அவதானிக்கலாம். ஆண் – பெண் அல்லது கணவன் – மனைவி இணையில் தவிர்க்கவே முடியாமல் தோன்றும் அத்தனை வெறுப்பையும் சஞ்சலங்களையும் முரண்களையும் மீறி இயற்கை ஸ்தாபித்திருக்கும் ’ஓருயிர்’ முழுமையை எது பூரணப்படுத்துகிறது என்பதையும் அது எப்படி சிதைவுறுகிறது என்பதையும் ’ஊனம்’ கதையில் காணலாம். இராசேந்திர சோழனின் கதைகளில் எங்கெங்கெல்லாம் ஒரு பெண் பாலியல்பு மீறல்களை நிகழ்த்துகிறாளோ அங்கெல்லாம் ஆண் பலகீனமானவனாகவோ வெள்ளந்தியாகவோ இருப்பதையும், தான் கொண்டாடப்பட வேண்டுமென்ற பெண்ணின் விழைவையும் கவனிக்க முடிகிறது. ஆணின் மீதான ஒருவித ருசிப்புணர்வோடு இருக்கும் பெண்கள் ஏன் ’தன்னுடைய ஆண்’ மீது மட்டும் விலகலுணர்வோடு இருக்கிறார்கள் என்பது ஒரு கேள்விதான்.

விடலை ஆணுக்கு பெண்ணின் மீது, குறிப்பாக திருமணமான பெண்ணின் மீது தோன்றும் ஈர்ப்புணர்வையும் பிறகு அது விலகும் தருணத்தையும் ’சிதைவுகள்’, ‘எதிர்பார்ப்புகள்’ போன்ற கதைகளில் பார்க்கலாம். ஆனால் சிதைவுகள் கதையை முழுமையாக இந்த நோக்கில் மட்டும் பார்க்க முடியாது. கி.ரா எழுதிய ‘கன்னிமை’ கதையின் வேறொரு எளிய வடிவாக இந்தக் கதையை வாசிக்கலாம். வாழ்க்கைச் சுழற்சியில் பெண்களுக்கு மிக முக்கியமான காலகட்டமான தாய்மைப்பேறு, அதன் பின்பருவத்தில் உருவாகும் மன அழுத்தங்கள், அவர்களுடைய ஆளுமையில் உருவாக்கும் எதிர்மறை மாற்றங்களை கி.ரா, இராசேந்திர சோழன் ஆகியோரது கதைகள் பேசுகின்றன. பேரழகு திரிந்தால் பேரவலம்.

வறுமை, பொருளியல் நிர்பந்தங்களின் காரணமாக பாலியல் தொழிலுக்குள் இரகசியமாக நுழைய நேரும் பெண்களை, ஒரே வார்ப்பிலமைந்த கதைகளான ‘சில சந்தர்ப்பங்கள்’, ’பாசிகள்’ ஆகியவற்றில் பார்க்கலாம். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் மீதான பொதுப்புத்தி சார்ந்த அணுகுமுறையானது அவர்களது துயரமிக்க வாழ்க்கையையும் பின்புலத்தையும் அறியநேரும்போது எப்படிக் கரிசனையுடையதாக மாற்றமடைகிறது என்ற நோக்கை இவ்விரு கதைகளும் வெளிப்படுத்துகின்றன. பொதுவெளியில் அதிகம் புழங்கும், மக்கட்திரளை கவனிக்கும் வாய்ப்புடைய டாக்ஸி டிரைவர்களின் வழியே இக்கதைகளின் கோணம் காட்டப்படுகிறது. சிறுகதை உருவாக்கத்தில் உத்தியைத் தேர்வது என்னும் விதத்தில் இதுவொரு நுட்பம்தான். இதே வகையான உத்தி, ’அவரோட லோகம்’ கதையிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கவனிக்கலாம்.

பொதுவெளியில் நிகழும் சம்பவங்களைப் பின்புலமாகக்கொண்டு எழுதப்பட்ட கதைகளில் மதராசும் மன்னார்சாமியும், பக்கவாத்தியம், சாம்பல் குவியலில் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதிகாரத்தின் பொறிமுறைகளையும் அவை எவ்வாறு எளிய மனிதர்களை நசுக்குகின்றன என்பதையும் முதலிரண்டு கதைகள் சித்தரிக்கின்றன. ஒரு திரையரங்கின் முன்னால் அடுத்த காட்சிக்கான இடைவெளியில் நிகழும் அவலமான காட்சிகள் சாம்பல் குவியலில் கதையில் காட்டப்படுகின்றன. இராசேந்திர சோழனின் கதைகள் பலவற்றில் ’வெளி’யும் ஒரு பாத்திரமாக இருப்பதைக் கவனிக்க முடியும். அதாவது வெளியில் அலையும் ஆண் ஒருவனின் பார்வைகளாக இருக்கும் இக்கதைகளில் மனத்தொந்தரவூட்டும் விஷயங்களால் அவன் கசப்புணர்வை அடைகிறான். அந்த வெளியில் மனிதர்கள் தம் சுயநலத்தையும் பாதுகாப்பையும் விருப்பத்தையும் விட்டுக்கொடுக்காத வகையில் இயங்கும்போது உருவாகும் இருண்மையான நாடகீயத்தை இக்கதைகள் காட்டுகின்றன.

பறிமுதல், அவுட்பாஸ், சுழல்காற்றும் சருகுகளும், வரம்பு, மடை போன்ற கதைகள் சிறுவர்களின் மனவுலகத்தை மையமாகக்கொண்டவை. வளர்பருவத்தில் அவர்கள் எதிர்கொள்ள நேர்கின்ற துயரங்கள், அழுத்தங்கள், மகிழ்ச்சியின்மை, நிராசைகளாகக் கழியும் ஆசைகள் போன்றவை இவற்றுக்குள் ஊடுபாவியிருக்கின்றன. சலிப்பாக இருக்கும்போது சட்டென்று நிகழ்கின்ற ஒரு மகிழ்ச்சியான விஷயம் மனிதர்களின் மனநிலையில் உருவாக்கும் மாற்றங்களை ’காசுக்காக அல்ல’, ‘நான் பண்ணாத சப்ளை’ ஆகிய சுமாரான கதைகளில் பார்க்க முடிகிறது. மனக்கணக்கு கதையை புதுமைப்பித்தனின் ’செல்லம்மாள்’ கதையின் இன்னொரு எளிய வடிவாய் வாசிக்கலாம். ஆங்கிலத்தில் fetish (‘உடலோடு இயையும் பொருட்களின் வழியே பாலியல் விருப்புறுதல்’ என்று நான் எளிமையாக மொழிபெயர்த்துக்கொள்கிறேன்) எனப்படும் பாலியல் உணர்வு நுட்பமாய் சொல்லப்பட்டிருக்கும் கதை ‘டெய்லர் கந்தசாமி’.

அண்மைய தசாப்தங்களுடைய இராசேந்திர சோழனின் கதைகள், முந்தைய வடிவத்திலிருந்தும் கருப்பொருட்களிலிருந்தும் முற்றிலும் விலகிவிட்டன. அவருடைய எழுத்து அகவயமான உணர்வுகளிலிருந்து விலகி முற்றிலும் புறவயமானதாகவும் அரசியல் அமைப்புகள்- இயக்கங்கள் குறித்தான நீண்ட உரையாடல்களோடு எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு அரசியல் கண்ணோட்டம் முன்வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்தான் என்றாலும் வாசக மனதைத் தொடும் அம்சங்கள் எதுவும் இக்கதைகளில் இருப்பதில்லை. பல நுட்பமான கதைகள் எழுதியவர் என்பதால் இது பிரக்ஞைப்பூர்வமாக அவராகவே தேர்ந்துகொண்ட களமாக கருதவேண்டியிருக்கிறது.

அமைப்பில் இருக்கும் ஆண்களின் குடும்பச்சூழல், குடும்பத்தில் உள்ள பெண்களை அரசியல்படுத்துதல், அமைப்பின் சித்தாந்தங்களுக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளி, அமைப்போடு முரண்பட்டு விமர்சிப்பவர்களை துரோகி என்றும் எதேச்சதிகார கைக்கூலி போன்ற முத்திரை குத்தி வெளியேற்றுதல்,  பீடமாக மாறிவிடும் இயக்கத் தலைமையின் இரட்டை வேடங்கள், சாதாரணத் தொண்டர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரிடுகின்ற இன்னல்கள், புரட்சிப்பயணத்தின் சவால்கள் போன்றவை இக்கதைகளின் ஆதார அம்சங்களாக அமைந்திருக்கின்றன. உருவகம் என்ற உத்தி பரவலாய் பயன்படுத்தப்பட்டிருக்கும் இவற்றை கதைகளின் வடிவிலமைந்த விவாதங்கள் எனக் கருதலாம். வாய்விட்டுச் சிரிக்குமளவிற்கான பகடி புழங்கியிருக்கும் ‘சவாரி’ என்ற கதை குறிப்பிடத்தக்கது. ’சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள்’ கதையையும் தனித்துச் சொல்லலாம். தனித்தமிழின் முக்கியத்துவம், பட்டிமன்றப் பேச்சாளர்களின் நாவன்மை, மாநாடுகளின் புதுமையற்ற செக்குமாட்டுத் தன்மை, அமைப்பு சார்ந்த பத்திரிகைகளின் பாவனையான உள்ளடக்கம் என்று சமூக வாழ்க்கையின் பல்வேறு விஷயங்களைக் குறித்த விவாதங்களை நிகழ்த்தியிருக்கிறார் இராசேந்திர சோழன்.

நான் முதலில் குறிப்பிட்ட பகுப்பில், இரண்டாவது வகைமையான ஆண் – பெண் உறவுநிலைகளையும் பாலியல்பையும் மையமாகக் கொண்டிருக்கும் கதைகளை அவருடைய முதன்மையான கதைகளாகத் தேர்வேன். கலையில் இயல்பாகக் கூடும் உச்சம் இந்தக் கதைகளில் நிகழ்ந்திருக்கையில் மற்ற இரண்டு வகைமைகளையும் மாற்றுக் குறைந்தவை என்று நிராகரிக்கவும் முடியாது. வாசகர்கள் உணரவும் அறியவும் அவற்றிலும் நிறைய உண்டு. இராசேந்திர சோழன் இப்படிச் சொல்கிறார்- ”எனக்கென்று இலக்கியக் கோட்பாடு எதுவும் இருக்குமானால் அதன் சாரம் இதுதான். உண்மை… உண்மை. உண்மைக்குப் புறம்பான யாதொன்றுக்கும் கலையில், படைப்பில், வாழ்வில் என எங்குமே அதற்கு இடம் இல்லை என்பதுதான்”.  இக்கதைகளின் வழியே அவர் நமக்குக் கையளிப்பது அந்த உண்மையைத்தான்.

*

இராசேந்திர சோழனின் கதைகளை வாசிக்க:

1. கழுதையின் வாயில்
2. உளைச்சல்
3. நாய் வேஷம்
4. சுழல்காற்றும் சருகுகளும்

*

இராசேந்திர சோழன் சிறுகதைகள், தமிழினி வெளியீடு.