அவன் எதிர்பாராத வினாடியில் அவர்கள் மூவரும் அவனை மறித்து நிறுத்தியபோது, அவனது கையில் ஒரு கறுப்பு கேரிபேக்கில் சுற்றப்பட்ட நாப்கினும் பிரெட் பாக்கெட்டும் இருந்தன. சடுதியில் அவன் சுதாரித்து நழுவ முயலுகையில் தங்கவேலு ஓங்கி ஓர் அறைவிட்டார். அதிகாலை பஜாரின் ஆட்கள் சட்டென கவனிக்க ஆரம்பிப்பதை உணர்ந்தபடி, தங்கவேலுவின் கைகள் தன்னிச்சையாக பின்பக்க பெல்ட்டில் சொருகி வைக்கப்பட்ட வாக்கி-டாக்கியின் பட்டனை ஆன் செய்தது. வாக்கி டாக்கியின் இரைச்சலும் அதிகாரமுமிக்க ஆணியால் கிறுக்குவதைப் போன்ற ஒலிக்குறிப்புகள் அங்கே நின்று பார்ப்பவர்கள் எல்லோரது முதுகுத்தண்டிலும் கண்ணுக்குத் தெரியாத அச்சத்தைப் பாய்ச்சியதை உணர முடிந்தது. அவனது கண்களில்கூட முழுவதும் தோற்றுவிட்ட ஒரு சாயல் வந்திருந்தது.
அறை விழுந்த கன்னத்தைத் தடவியபடி, அவன் வலியை மென்றபோது, தங்கவேலு அசாத்திய உரிமையோடு அவனது சட்டைப் பாக்கெட்டுக்குள் கை நுழைத்து அவனது செல்போனை எடுத்துக்கொண்டார். சுற்றியிருந்த அனைவரும் பார்த்தபடியிருக்க, அவன் மேலும் அவமானத்தில் குன்றிப்போனான்.
அவர்கள் அவனது சட்டைக்காலரைப் பற்றிக்கொண்டு நெட்டித்தள்ளினார்கள். தூரத்தில் மறைந்திருந்த கார் வெளியே வந்து அவர்களை நோக்கி ஒருமுறை ஹார்ன் அடித்தது. தங்கவேலு முன்னால் நடந்தபடி யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தார். சந்தேகமேயில்லாமல் ஜே.பி. கூடத்தான் இருக்கும்.
அவன் மெதுவான குரலில் இடப்புறமிருந்தவனிடம் திரும்பி, “ஒரு நிமிஷம் ரத்தத்தை துடைச்சிக்கவா.. எல்லாரும் பாக்குறாங்க” என்றான். உதட்டு விளிம்பில் அறைந்த விரலின் நகம் பிளேடைப் போல இறங்கியிருந்தது. லேசான தாடியும் ஒரு மாதிரி வெகுளியான கண்களும் அவனுக்கிருந்தன. கொஞ்ச நேரம் பேசினால் பிறகு மறக்கவே முடியாத ஏதோவொரு ஞாபகத்தை தனது சிரிப்பின் வழியாகப் பதியச் செய்திடும் திறன்கொண்ட புன்னகை அவனுக்கிருக்க வேண்டும். முற்றிய ஆரோக்கியமான பல்வரிசையும் கோடுகள் விழாத தெளிந்த நெற்றியும் அவனை ஏதோவொரு வகையில் தீங்கற்றவனாகக் காட்டின. பிடி இலேசாகத் தளர்ந்தது.
2
வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை மென்மையாகக் கேட்டது. கால்களுக்கிடையே தன்னைக் குழைத்திருந்த கேண்டியை விலக்கிவிட்டு நான் எழுந்து நின்றேன். அது ‘ஏன்’ என்பதுபோல ஒருமுறை பார்த்துவிட்டு முகத்தைத் தரையில் பொருத்திப் படுத்துக்கொண்டது.
நான் முற்றிலும் தளர்ந்திருந்தேன். இந்தப் பத்து நாட்களில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதற்கான விடைகளை மாற்றி மாற்றிப் போட்டுப் பார்த்த குரூரமான சுவாரஸ்ய விளையாட்டு இன்று அதிகாலை பாரூக் போன் செய்தவுடன் முடிந்திருந்தது. உடலின் மொத்த ஆவேசமும் தளர்ந்து, கடுமையான ஏமாற்றத்தின் சோர்வில் நொறுங்கியிருந்தேன். உள்ளறையில் அம்மா விழித்துவிட்டிருந்தாள் என்பது தெரிந்தது. பாரூக் போன் செய்யும்போது மிக கவனமாக அம்மாவிற்குத் தெரியாமல்தான் பேசினேன். ஆனாலும் அவள் யூகித்திருப்பாள் எனவும் அப்போதே தோன்றியது.
உள்ளே போய் அவளைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. இந்த நேரத்திற்கு அம்மா தலைக்குக் குளித்து, நரைமுடியை அருவிபோல் விரித்துவிட்டுத் திகைத்தபடி அமர்ந்திருப்பாள். அவளுக்கு எப்போதுமே உணர்ச்சிகளில் கொந்தளிக்கும் முகம். அப்பா இருந்தவரை தன்னை மறைத்தபடி புன்னகைக்கும் கலையை அவளுக்குப் பயிற்றுவிக்க எவ்வளவோ முயன்றார். ஆனால் எதுவும் பயனில்லை. அதிர்ச்சியோ, ஆனந்தமோ அவளுக்கு முகம் முழுக்க சிறுசிறு உயிர்களாக பிரகாசமாகி தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் போனதேயில்லை. இந்த நேரத்தில் அவளது முகத்தில் எவ்வளவு அகாலம் குடிகொண்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அஞ்சினேன்.
இந்த வீட்டில் பத்துநாட்களாக இருந்த இருள் மொத்தமும் இப்போது கடைசிப் புள்ளியாக அவளது முகத்தில் திரண்டிருக்கும். தண்ணீரைப் போல பிரதிபலிக்கிற வழுவழுப்பான தரையின் மீது எனது பிம்பத்தைப் பார்த்தபடி வெளியே வந்தேன். முருகேசன் வாசலோரமாக உறங்கிக்கொண்டிருந்தான். தூசியும் சேறுமாக டஸ்டர் நின்றுகொண்டிருக்க, கடந்த பத்து நாட்களில் ஆபரணம் போல மினுங்கிய வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களிலும் மனிதர்களிலும் கண்ணுக்குத் தெரியாத துரு ஏறியிருப்பதை உணர முடிந்தது.
பாரூக் அமைதியாக கதவைத் திறப்பதற்கான ப்ளக்கை ஒலித்தான். நான் ஏறிக்கொள்ளும் முன் ஒருமுறை வீட்டைப் பார்த்தேன். நிச்சயமாக, இதன் ஒளி நீங்கிவிட்டிருக்கிறது. சுவரை வெறித்தபடி அமர்ந்திருக்கும் அம்மா, பத்து நாட்களாக தூங்காமல் கொள்ளாமல் தெருத்தெருவாக தினமும் பலநூறு கிலோமீட்டர்கள் அலைந்து வந்து விரக்தியில் உறங்கும் முருகேசன், அபத்தமான மனநிலையைத் தருகின்ற தொட்டிச் செடிகளின் வரிசை, ஏன் கேண்டியின் இருப்புகூட விலங்கு என்பதாகவும், தூசிபடிந்து நிற்கின்ற – எனக்கு மிகப்பிடித்த – டஸ்டர்கூட ஒரு சாதாரண வாகனம் என்கின்ற பதத்திற்கும் வந்து விட்டிருக்கின்றன.
”ஒன்னும் பெருசா யோசிக்காத, அங்க இருக்க மூணுபேரும் நம்ம ஆளுகதான். விஷயம் கைக்குள்ளேயே முடிஞ்சிடும். நீ அப்நார்மலா பிஹேவ் பண்ணிடாத” என்றபடி காரைக் கிளப்பினான். சீருடை அணியாமல் வந்திருந்தான். மேலேறிக்கொண்டிருந்த ஜன்னல் கண்ணாடி இரைச்சலை, காற்றை, வெளியிலிருக்கும் காட்சிகளை, ஊமையாக்கியபடி மூடியது. கண்ணாடிப் பரப்பில் இலேசாகப் பிரதிபலித்த எனது முகத்தைப் பார்த்தேன். இந்தப் பத்து நாட்களில் ஒருமுறைகூட நான் ஷேவ் பண்ணாமல் இருந்ததில்லை. வழக்கமான டீஷர்ட், நீரைப் போலான ஸ்பெக்ஸ் என அவள் விட்டுச்சென்றிருந்த எந்தவொன்றையும் துளி மாறாமல் செய்துவந்தேன். அவ்வாறு செய்வதை நிறுத்துவதுகூட தீயசகுனம் என நம்பினேன்.
திலகா இறந்து போன இரண்டு வருடங்களுக்குள் எனக்கு உயரிய பதவி வந்தது. அவளது இழப்போடு சேர்த்து நான் மல்லுக்கட்ட வேண்டிய பணி இடர்களும் சேர்ந்து மிகச் சோர்ந்துவிட்டவனாகக் காட்டின. அம்மா இரண்டாவது திருமணம் குறித்துப் பேச்செடுத்த போது அது எனக்கு இயல்பாகவே தேவையான ஒன்றாகப்பட்டது.
அப்போது வந்த பெண் வரிசைகளில் நான் இவளைத் தேர்ந்தெடுக்க அவளது இளவயதும், இரசனையான உடைத்தேர்வும் காரணமாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அம்மாவிடம் ஆரம்பத்திலேயே இதிலொரு உஷார்த்தன்மை இருந்ததாக இப்போது உணர்கிறேன். முதலில் அம்மா, வேறு பெண் பார்ப்போமே எனப் பட்டும்படாமல் கூறினாள். அவளது அச்சம் நியாயமான ஒன்று. எனக்கும் அவளுக்கும் பதிமூன்று வருட இடைவெளி இருந்தது. சமீபகால பணிச்சுமையின் பொருட்டு நான் வயதிற்கு மீறிய வயோதிகனாகக் காணப்பட்டேன். ஆனால் புதிய பதவியுயர்விற்குப் பிறகுதான் நான் அதிகாரத்தின் வழியே, பொருளாதாரத்தின் வழியே வாழ்க்கையை அலங்கரிக்கின்ற இவ்வளவு பொருட்களையும் விஷயங்களையும் அறியத் துவங்கியிருந்தேன். இதனை அடைவதற்கு என் வாழ்நாளின் பாதிப்பங்கு கழிந்திருக்கிறது. இன்னும் மீதியிருக்கும் காலம் முழுவதும் நான் தோள்பற்றிப் பயணிக்க, என்னால் வாங்கமுடியாத இளமை தேவைப்பட்டது. ஆகவே நான் இவளை விரும்பித் தேர்ந்தெடுத்தேன்.
அவள் வந்தபிறகு, என்னைச் சுற்றியிருந்த அலுப்பின் சுவடுகளை தனது துள்ளலான ரசனையின் வழியே முழுவதும் துடைத்தெறிய முற்பட்டாள். சட்டை என்பது எவ்வளவு வயதான அலுவலக உடை என்பதை தனது டீஷர்ட் தேர்வுகளின் வழியே வேறுபடுத்திக் காட்டினாள். பழுப்பான அலுவலத் தாள்கள் சிதறிக்கிடக்கும் வீட்டின் மூலைகளிலெல்லாம் சிறிய தாவரங்களைக் கொண்டுவந்து வைத்தாள். வீடு முழுவதும் இளமையான குளிர்ச்சி பரவத் துவங்கிய காலம் அது.
நானும்தான் எவ்வளவு மாறத் துவங்கினேன் அப்போது. தினசரி சவரம் செய்கிற முகத்தில் வந்துவிடுகிற காய்ந்த களிமண் பொம்மையின் சாயலை நீக்க அவள் இந்த ப்ரேம் இல்லாத கல்படிகத்தைப் போன்ற ஸ்பெக்ஸை அணியச் சொன்னாள். எல்லா டீஷர்ட்களிலும் துளியூண்டு சாக்லேட் பெர்ஃப்யூம் தெளித்தே மடித்து வைப்பாள். எனது கொஞ்சம் வயதான தோற்றத்தின் மீது இந்த இளமையான சந்தோஷத்தை நான் விரும்பி சிரமப்பட்டு ஏற்றுக்கொண்டேன். ஆனால் ஒவ்வொரு கணமும் பராமரிக்க வேண்டிய இளமைத் தோற்றமாகவும் அது இருந்தது. அவளது முத்தங்களின் பொருட்டு அதனை அவ்வளவு நேர்த்தியாக நான் செய்தேன்.
யாரையும் எதற்காகவும் நான் நம்பியதேயில்லை. அப்பா இறந்த பிறகான வறுமையில் அம்மா எனது கல்வியைத் தின்னக் கொடுத்துவிடுவாள் என அஞ்சி படுமோசமான அரசாங்க விடுதிகளில் பால்யத்தைக் கழித்தபடி படித்தேன். சர்வீஸ் கமிஷனில் தேர்வாகி, வயதான சக அலுவலர்களுக்குக் குட்டி அதிகாரியாக வந்தமர்ந்தபோதும், “அனுபவஸ்தன்…. சொல்றேன், கேளு தம்பி…” என்கிற அன்பான குழைதல்களைப் புறக்கணித்தபடி வளர்ந்தேன். எனக்கான வாய்ப்புகளைத் துளிகூட விட்டுத்தராதவனாக, எனது வளர்ச்சிக்கு நடுவே எவரையும் பொருட்படுத்திப் பார்க்கின்ற நேரமில்லாதவனாக உயர்ந்தேன். திலகாவைத் திருமணம் செய்தபோது இந்த வேட்டைப் பாய்ச்சலுக்கு நடுவிலிருந்த ஒரு காலம். எனது வாழ்க்கையில் அவள் வந்ததும், சிறிது காலத்திலேயே இறந்ததும் இப்போதும் கனவா நனவா எனப் பிரித்தறிய முடியாத ஞாபகங்களாக இருக்கின்றன.
ஆனால் இவளைத் திருமணம் செய்தபோது, நான் ஆயுதங்களைத் தளரவிடுகின்ற மனநிலைக்கு வந்திருந்தேன். ஒரு சட்டையைக் கழற்றிவிட்டு டீஷர்ட் அணிந்தவுடன் எனக்குள் பரவுகின்ற இனிய மலர்தல்களில் நான் விரும்பி மயங்கினேன். அலுவலக ரீதியான என் கண்காணிப்பின் சிறு கவனம்கூட இல்லாத மயக்கம் இது. வாய் முழுவதும் கசந்துவிட்டதைப் போல ஓருணர்வு. டேஷ்போர்டில் கிடந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தேன்.
”பாரு ஜே.பி., வீணா உன்னோட செல்ஃபை ரொம்ப கழிவிரக்கமா மாத்திக்காத. உன்னால முடிந்தளவு திடமா இருக்க முயற்சி செய். இரக்கமில்லாதவனாக்கூட இரு, தப்பில்ல. ஆனா கழிவிரக்கத்துல விழுந்துடாத. அது மோசமான புதைமணல்….”
-கார் போய்க்கொண்டிருந்தது.
குடித்து நசுக்கிப் போட்ட டீ கப்கள் காரைச் சுற்றிக் கிடந்தன. புறநகரின் வயல்கள் துவங்குகின்ற இடத்திற்கருகே அவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தனர். தங்கவேலு மீதமிருந்த இரண்டு நபர்களையும் அனுப்பிவிட்டு, பாரூக்கிற்கு உடல்மொழியில் ஒரு வணக்கம் வைத்தார்.
காரை நெருங்க நெருங்க எனக்குள் அப்படியொரு ஆவேசம் கூடிவந்தது. பின்னிருக்கையில் அவன் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான். நடந்தபடியே பாரூக் எனது விரல்களை மெதுவாக மொத்தமாகப் பற்றி அழுத்தினான்.
சிரமமாக என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாலும், உடல் முழுக்க நடுங்கியபடி இருந்தது. இந்தப் பதட்டத்தை மூர்க்கமாக ஏதேனும் செய்யாமல் வெல்ல முடியாது. தங்கவேலு அவனிடம் கைப்பற்றிய செல்போனை பாரூக்கிடம் நீட்டினார். பாரூக் அதை அலட்சியமாக வாங்கிக்கொண்டு தங்கவேலுவை முன்னால் ஏறிக்கொள்ளச் சொன்னான். அவனது இருபுறமும் நானும் பாரூக்கும் அமர்ந்துகொள்ள கார் கிளம்பியது.
நான் இன்னமும் அவனது முகத்தை முழுதாகக்கூட பார்க்கவில்லை. அவன் தனக்குள் முழுமையாக ஒளிந்துகொள்ள விரும்புபவனைப் போல தலைகவிழ்ந்திருந்தான். கைகளில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த கருப்புநிற கேரிபேக்கைப் பார்த்தவுடன், அதை மேலும் தனது கைகளுக்கிடையே பதுக்கிக்கொள்பவனைப் போல சுருட்டிக்கொண்டான். எனக்குள் கங்குகள் உடையும்போது எழுகின்ற பிரகாசமான வெளிச்சம் போல ஆவேசம் பொங்கித் தளர்ந்தது. பாரூக் அவனது தலைக்கு பின்புறமாகக் கைநீட்டி எனது தோளைத்தட்டி அந்த செல்போனை நீட்டினான். நான் அதை வாங்கியபடி, எனது டீஷர்ட்டின் விளிம்புகள் அவனைத் தொடுவதைத் தவிர்க்கும் விதம் கூசியவனாக ஒதுங்கி அமர்ந்தேன். அதை அவன் உணரும்படியே செய்தேன். அவனுக்குத் தெரிய வேண்டும்- தான் ஒரு சாக்கடை எலி என்று. அவனது சிறிய உதட்டு விளிம்பில் ஒரு துளி குருதி காய்ந்து கிடந்தது. அது இல்லாவிடில் அவை பூரணமான அழகிய உதடுகள். சட்டென என்னையே வெறுத்தவனாக, அசுவாரஸ்யமாகப் பார்ப்பவனைப் போல, உள்ளூர பரபரப்படைந்தபடி அந்தச் சிறிய செல்போனின் குறுஞ்செய்திகளைப் படித்தேன். இரண்டு மூன்று குறுஞ்செய்திகள் மட்டுமே இருந்தன. அதிலொன்று இன்றைய காலையில் சற்று நேரத்திற்குமுன் அனுப்பப்பட்டிருந்தது.
“வர்றப்ப முடிஞ்சா ஒரு நெஸ்கஃபே பாக்கெட்…”
திடுக்கென வாந்தி கிளம்புவதைப் போலிருந்தது. அவளேதான். அதற்குள் எனது உள்ளங்கைகள் பிசுபிசுத்து வியர்வை ஊறிக்கிடந்தன. அந்தச் சிறிய செல்போன் சூனிய சிலையைப் போல அதற்குள் கிடந்தது. நான் இவனை இப்போது என்ன செய்ய வேண்டும்? ஒரு கொலையை தடயமில்லாமல் நிகழ்த்தி முடிப்பது ஒன்றும் பெரிய விசயமல்ல. பாரூக்கின் நட்பும் எனது பதவியும் அதை எளிதாக நிறைவேற்றிவிடும். ஆனால் இவனிடம் இருக்கின்ற ஏதோவொன்றை நான் இவ்வளவு நாளாக முயன்றும் அடைய முடியாமலே இருக்கிறேனென உள்ளுணர்வு கூறுகிறது. என்ன அது? முகத்தைத் திருப்பாமல் ஓரக்கண்களால் மீண்டும் அவனை அளந்தேன்.
இலேசான தாடி, வெளிறிய நிறத்திலான கட்டங்கள் போட்ட சட்டை, ஒழுங்கற்ற தலைமுடிகளுக்குள் ஒரு சுதந்திரம் இருக்கிறது. பாதங்களுக்குக் கீழே தன்னை உறுத்தலாக வெளிக்காட்டிக்கொள்ளாத தேன் நிற செருப்பு.
எனது செல்போனில் பாரூக்கிற்கு, “ஏன் இப்படி?” என ஒரு வரி அனுப்பினேன். அதனை வாசித்த பாரூக், செருமிக்கொள்வதாக பாவனை செய்து அவனை முழுமையாக ஒருமுறை பார்த்துவிட்டு எனக்குப் பதிலனுப்பினான். “ஆயிரம் காரணம் இருக்கலாம். முக்கியமாக அவளது இரசனை. ஒருவரின் அந்தரங்கத்தின் மையத்தில் நுழைவதற்கான கதவு அவர்களது இரசனையைக் கண்டுபிடிப்பது. இரசனையின் வழியாக சந்தித்துக்கொள்பவர்கள் தங்களது சப்கான்ஷியஸில் பரஸ்பரம் காதலிக்கத் துவங்குகிறார்கள். கான்ஷியஸாக அவர்கள் பிரிந்தாலும் அந்தச் சூழ்நிலையில் இருவரது ஆன்மாவும் இணைந்தே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு புள்ளியை அவளிடம் இவன் தொட்டிருக்கலாம். யாருக்குத் தெரியும், ஒருவேளை அவளது அதீத இரசனை உன்னை அலங்கரித்து முடித்துவிட்ட பருவமாயிருக்கலாம் இது. இப்போதுதான் செதுக்கிய சிறிய தேக்கு சிலையைப் போல வறுமையின் உளித்தீற்றல்களோடு, அலங்காரமில்லாமல் நிற்கின்ற இவனது நிர்வாணமான புறத்தோற்றம்கூட அவளை வீழ்த்தியிருக்கலாம். இவ்வாறெல்லாம் நாம் ஆயிரம் காரணங்களைக் கற்பிதம் செய்துகொண்டாலும், அது நம்மால் அறியவே முடியாத ஆயிரத்துக்கு அப்பாலான ஒன்றாகவும் இருக்கலாம்”. வாசித்து முடித்தவுடன் நான் மிகச் சுருங்கிய மனிதனாக உணர்ந்தேன். அலங்கரிக்கப்படுகின்ற ஒரு பொம்மையின் உயரமே கொண்ட மனிதனாக.
பாரூக்கின் இந்தச் செய்தியில் என்னால் தாங்கிக்கொள்ள முடியாத ஏதோவொரு உண்மை இருப்பதாக உணர்ந்தவுடன், பதற்றமாக, “இவனை என்ன செய்யலாம்?” என அடுத்த செய்தியை அனுப்பினேன். “எனக்குப் புரிகிறது ஜே.பி. சற்றுப் பொறு” என பதில் அனுப்பினான்.
நான் ஜன்னல் கண்ணாடியைக் கீழே இறக்கிவிட்டேன். அதுவரை காருக்குள் அபத்தமான இசையைப் போல் அலைந்த சாக்லேட் பெர்ஃப்யூமின் வாசனை காற்றில் சிதறி மறைந்தது.
ஆங்காங்கே சில வீடுகளுடன் அந்தப் பகுதி இன்னமும் வயல்வெளிகளின் பசுமைக்குள்ளே கிடந்தது. தூரத்தில் பென்சில் தீற்றல்களைப் போல தென்னந்தோப்புகள் திசைகளுக்குச் சரிகை கட்டியிருந்தன. வயலை அழித்துப் போடப்பட்ட நொறுநொறுப்பான செம்மண் சாலை புத்தம் புதிதாக இருக்க, அதனை ஒட்டியபடியிருந்த சிறிய கால்வாயில் ஆற்றுநீர் போய்க்கொண்டிருந்தது. கார் வேகம் குறைந்துகொண்டே சென்று ஓரிடத்தில் நின்றது. அவன் இன்னமும் தலைகுனிந்தே அமர்ந்திருந்தான். தங்கவேலு திரும்பி, ”எந்த வீடுடா?” என்றார்.
அவன் பார்த்த திசையில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட சிறியதொரு வீடு இன்னமும் மெருகு குலையாமல் பக்கவாட்டில் கம்பிகளைத் துருத்திக்கொண்டு, அவிழ்க்காத சாரப் பலகைகளோடு பச்சை வயலுக்கு நடுவே இருந்தது.
அவளுக்குத் தாவரங்கள் மிகப்பிடிக்கும். அது போல சிறிய வெண்கலப் பொருட்களும். எனது கடல் போன்ற வீட்டின் எல்லா இடங்களிலும் நீர் நிறைத்து வைக்கப்பட்ட வெண்கலப் பாத்திரங்களை அவள் பரப்பி வைத்தபோது அவை புகழ்பெற்ற ஓவியங்கள் தருகின்ற வசீகரத்தைவிட கூடுதல் அழகை வீட்டிற்கு அளித்திருந்தன. இங்கே இருப்பதைப் போல கருவேலங்களும், புளிய மரங்களுமற்ற, அழகிய பூக்கள் கொண்ட எண்ணற்ற தொட்டிச் செடிகளால் ஒரு வனத்தையே வீட்டிற்குள் சமைத்திருந்தேன் நான். விதவிதமாக வழிகின்ற வர்ணங்களோடு அவ்வளவு மலர்கள் தவறாமல் பூக்கின்ற காலை வேளையை அவளுக்கு உறுதிசெய்து தந்திருந்தேன். அவளைச் சுற்றிலும் அவளது இரசனையின் ஒரு அங்குலத்தைக்கூடச் சேதம் செய்திடாமல் வெல்வட் உலகத்தையே நான் கொடுத்திருந்தேன்.
சிறிய செம்மண் தடம் ஓடிமுடிகின்ற இடத்திலிருக்கும் இந்தச் சுண்ணாம்பு பூசப்பட்ட சிறிய வீட்டிற்குள் அவள் எப்படித் தன்னைப் பொதிந்துகொண்டாள்? என்னால் நம்பவியலவில்லை. பாரூக் எனது தோளைத் தட்டினான். நான் இறங்கியபடி எனது உடைகளைத் திருத்திக்கொண்டேன். ஏதேதோ யோசனையில் என் முகத்திலிருந்து வழிந்துவிட்ட கடுமையை மீண்டும் பூசிக்கொண்டேன். ஒரு வலுவான அதிர்ச்சியை எதிர்நோக்கியபடி இதயம் மகத்தான துடிப்புகளோடு நெஞ்சுச் சதையை முட்டிக்கொண்டிருந்தது. தங்கவேலு எங்களுக்குக் கைகாட்டி, பொறுத்துவருமாறு சொல்லியபடி அவனது தோளில் மெலிதாக கைபோட்டபடி வீட்டை நோக்கி அழைத்துச் சென்றார். நான் ஞாபகமாக, கோபத்தின் சிறிய துண்டைக் காட்டுவதைப் போல, அவனது செல்போனை அவர்களுக்குப் பின் எறிந்தேன். அவன் குனிந்து அதைப் பொறுக்கிக்கொண்டான்.
கார் அமைதியாக பின்னால் ரிவர்ஸ் எடுத்துச்சென்று மரச்செறிவுக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டது. பாரூக் எனது காதருகே முணுமுணுத்தான். “அவங்க முன்னால போகட்டும் ஜே.பி. தங்கவேலு உள்ளார போனபிறகு நாம் நுழையலாம். ஏன்னா, நிறைய சடன் சூசைட்ஸ் இந்த முதல் கணத்துல நிகழ்ந்திருக்கு. அலறிக்கிட்டே ஓடிப்போய் கிணத்துல குதிச்சிடறது, சட்டுனு கதவைச் சாத்திட்டு நரம்பை வெட்டிக்கிறதுனு. மெதுவா போவோம்”.
அவர்களுக்கு இருபதடி தொலைவில் நாங்கள் நடந்துசென்றோம். எனது கால்கள் வேர்த்து ஒழுகி நடுங்கத் துவங்கியிருந்தன. வீட்டிற்கு வெளியே சிறிய தூரத்தில் கீரை விதைகள் தூவி அவை பசுங்கால் மிதியைப் போல முளைத்திருந்தன. பெட்ரோல் பங்க்குகளில் வீசியெறியப்படுகின்ற சர்வோ ஆயில் டப்பாக்களில் மண் நிரப்பி குட்டிக் குட்டிச் செடிகள் தங்களின் ஒரே வார்த்தையைப் போன்ற ஒற்றைப் பூக்களோடு நின்றிருந்தன. வயல்வெளிக்கு நடுவே அபசுரம் போல நின்ற வீட்டை மெல்ல இசைமைக்குத் திருப்புகின்ற சின்னச் சின்ன அலங்கரித்தல்கள் நிகழ்ந்திருந்தன.
தங்கவேலுவும் அவனும் வீட்டைச் சமீபித்தார்கள். வீட்டிற்குள் இயல்பாகப் புழங்கிக்கொண்டிருக்கிற பெண்ணுக்கான சமிக்ஞைகளை நாங்கள் உணர்ந்தோம். வீட்டு வாசல் முன்பு அவனோடு நின்றபடி தங்கவேலு கதவு திறக்கின்ற நொடிக்காகக் காத்திருந்தார். உள்ளே ஓசைகள் நின்றன. பிறகு, “எவ்வளவு நேரம்டா எரும…” என்றபடி, உற்சாகமான பாடலைப் போல கொலுசுக் கால்கள் கதவை நோக்கி ஓடிவருகின்ற ஓசை அருவி வீழ்கின்ற புத்துணர்ச்சியோடு கேட்டது.
குட்டி மலர்களாலும், சிறிய கீரைத் தோட்டத்தாலும், நீர் நிரம்பி வைக்கப்பட்ட சிறிய வெண்கல கலயத்தாலும் அலங்கரிக்கப்பட்ட வீட்டிற்குள்ளிருந்து வருபவளின் காதல் வழிகின்ற முகத்தைக் காணத் தன்னை மறந்து நின்றுகொண்டிருந்த கணத்தில், சிறிய துணுக்குறலோடு தங்கவேலு திரும்பிப் பார்த்தார். கொலுசின் சப்தம் சமீபத்திருந்த அந்தக் கணத்தில், பாரூக் மௌனமாக தலை கவிழ்ந்து நின்றிருக்க, அவரிடம் பிணைத்திருந்த தனது உள்ளங்கையை நெகிழ்த்திக்கொண்டு ஜே.பி திரும்பி நடந்துகொண்டிருந்தார். மிக உலர்ந்த நிறம் கொண்ட அந்த டீஷர்ட்டின் முதுகுப் புறத்தில் கொலுசின் மகிழ்ச்சியான ஓசை மோதமோத அவரது நடையில் தளர்வு கூடிக்கொண்டே சென்றது.
1 comment
[…] டீ-ஷர்ட் […]
Comments are closed.