தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் (பகுதி 4): கு.அழகிரிசாமியின் படைப்புகளில் குழந்தைகள்

by மானசீகன்
0 comment

கு.அழகிரிசாமி குழந்தைகளைப் பற்றி மட்டுமே சிறப்பாக எழுதிய எழுத்தாளர் என்கிற பிம்பம் தமிழ் வாசக மனதில் வலுவாக இடம்பிடித்திருக்கிறது. ‘அன்பளிப்பு’, ‘ராஜா வந்திருக்கிறார்’ ஆகிய கதைகளை வைத்து உருவாக்கப்பட்ட பிம்பம் இது. பலரும் இந்தக் கதைகளை மட்டுமே படித்தவர்கள் என்பதால் அந்தச் சித்திரத்தை கேள்விகளின்றி தம் மனதில் படியெடுத்துக்கொண்டனர். உண்மையில் அவருடைய பத்து கதைகளில் மட்டுமே குழந்தைகள் குறித்த சித்திரிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். அவருடைய குழந்தை பற்றிய பெரும்பாலான கதைகளுக்கு மரபிலும் நவீனத்துவப் படைப்புலகிலும் முன்னோடிகளே இல்லை.

தமிழில் எழுதப்பட்ட புனைவுகளில் நாம் காணலாகும் குழந்தைகளின் சித்திரங்கள் கீழ்க்கண்ட வகைகளில் ஏதேனும் ஒன்றாக இருப்பதை நுண்ணுணர்வு கொண்டவர்கள் உணர முடியும்.

1. நடமாடும் அறிவுச் சுடர் (பால முருகனின் பிம்பம்)
2. லௌகீக விதிகளை கலைத்துப் போடும் குறும்பன் (பாலக்கிருஷ்ணனின் சித்திரம் )
3. தரிசனம் தரும் சக்தியின் வடிவம்
4. துயர் நிரம்பிய உலகின் ஒரு துளி புன்னகை (குழந்தை இயேசு)
5. ரொமாண்டிசிஸத்தின் நடமாடும் வடிவம்
6. ஃபிராய்டிய உளவியலின் ஒரு பகுதி

முதல் மூன்றும் இந்திய மரபின் தாக்கத்தாலும் நான்காம் வகை உலகளாவிய அளவில் பரவிய கிறிஸ்தவ மரபின் பாதிப்பாலும், கடைசி இரண்டு வகைகள் இஸசங்களின் செல்வாக்காலும் எழுத்தாளர்களின் ஆழ்மனதில் மையம் கொண்டவை என்பதை உணர முடியும்.

தமிழ் மரபிலும்கூட குழந்தைகள் என்றால் குறும்பு, விளையாட்டு என்கிற அளவிலேயே குழந்தைகள் குறித்த சித்திரிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. பாண்டியன் அறிவுடை நம்பியின் புகழ்பெற்ற புறநானூற்றுப் பாடலும் (படைப்பு பல படைத்து), பெரியாழ்வாரின் குழந்தைப் பருவத்துக் கண்ணன் குறித்த வர்ணனைகளும், பலராலும் எழுதப்பட்ட இருபால் பிள்ளைத்தமிழ் நூல்களில் காணலாகும் காட்சிகளும் இந்த எல்லைக்குள்ளேயே நின்றுவிடுகின்றன. போதாக்குறைக்கு மூன்று வயதிலேயே உமாதேவியிடம் ஞானப்பால் குடித்துவிட்டு, ‘தோடுடைய செவியன்’ பாடி சிவபாத இருதயரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஞானசம்பந்தர் மீதான வியப்பும், ஔவையையே மடக்கிய பால முருகன் மீதான வழிபாட்டுணர்வும் தமிழ்ச் சமூகத்தின் பொதுமனதில் ஆழமாகப் படிந்திருக்கின்றன. பல ஆரம்பகாலப் புனைவாசிரியர்களின் கதைகளில் இவற்றின் பாதிப்புகள் பிரக்ஞைப்பூர்வமாகவோ தற்செயலாகவோ இடம்பெற்றிருப்பதை உணர முடியும். 

கு.அழகிரிசாமியின் விதிவிலக்கான கதை:

குழந்தைகளை வயதுக்கு மீறிப் பேச வைக்கிற விசித்திரம் தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமல்ல, புனைவுகளிலும் நிகழ்ந்திருக்கின்றன. பல எழுத்தாளர்கள் நாற்பது வருஷமாக தேடிக் கற்ற அனுபவத்தின் கணத்தை, கூசாமல் தன் கற்பனையில் உதிக்கும் பாலகனிடம் ஒப்படைத்துவிட்டு ஜீவசமாதியாகி விடுகிறார்கள். கு. அழகிரிசாமியும்கூட இப்படிப்பட்ட கதையொன்றை எழுதியிருக்கிறார். ‘தெய்வம் பிறந்தது’ கதையில் அதை உணர முடியும். 13 வருஷம் கழித்துப் பிறந்த குழந்தையை அவன் தந்தை தெய்வத்தின் சாயல் கொண்ட விசேஷப் படைப்பாக உணர்கிறார். குடும்பப் புகைப்படத்தை மாட்டும் தந்தையிடம் ஜகன்நாதன், ‘நம்ம வீட்டில் நம்ம படம் எதுக்கப்பா?’ என்று கேட்பான். ‘நம்ம படத்தை நம்ம வீட்ல மாட்டாம யார் வீட்ல மாட்றது?’ என்று தந்தை பதில் கூறுவார். ‘அப்படின்னா காந்தி படம் காந்தி வீட்லதானே இருக்கனும்? ஏன் நம்ம வீட்ல இருக்கு?’ என்று கொக்கி போடுவான். அதிர்ச்சியடைந்த தந்தை, ‘காந்தி நமக்கெல்லாம் நல்லது செஞ்சவரு. அதனாலே மாட்டிருக்கோம்’ என்று பதில் தருவார். தந்தையின் பதிலில் சமாதானம் அடையாமல், ‘அப்படின்னா காய்கறி கடைக்காரன், துணி வெளுப்பவன், சவரத் தொழிலாளி படமெல்லாம் ஏன் நம்ம வீட்ல மாட்டல? அவாளும் நமக்கு நன்மைதானே செய்றா?’ என்று ஜகன்நாதன் கேட்டவுடன் துள்ளிக்குதிக்கும் ஐயர், ‘ஜக்கு என் வயிற்றிலும் தெய்வம் பிறக்குமா? இதோ பிறந்துவிட்டதே’ என்று கூப்பாடு போட்டு பரவசமடைவார். மொழிநடையை மட்டும் கழித்துவிட்டால் இது சிறுவர் மலரில் இடம்பெற வேண்டிய கதை. ஆனால் இந்த ஒரு கதையை வைத்து அழகிரிசாமியின் குழந்தை பற்றிய சித்திரிப்பை மதிப்பிட முடியாது. ஆனால் இதே பாணியில் எழுதப்பட்ட பல கதைகளில் குழந்தைகளைத் தெய்வமாக்கிய படைப்பாளிகளுக்கு விமர்சகர்களும் வாசகர்களும் நைவேத்தியம் செய்த அபத்தம் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்தேறியிருக்கிறது.

லா.ச.ரா கதைகளில் வரும் குழந்தைகள் யாருமே வெறும் குழந்தைகள் அல்ல. அவர்கள் அம்பாளின் நவ வடிவங்கள். அடுப்படிப் புகையின் பின்னணியில் கை சூப்பியபடி பாவாடையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு வரும் பெண் குழந்தைகளை அவர் சிம்ம வாஹினியாக்கி ஏழாம் வானத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவார். புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ கதையில் பெண் குழந்தை வள்ளி முருகனைப் போல் பேசி சிவனை மடக்கிவிடுவார். சக்தி தரிசனமும் அறிவின் வடிவமும் முயங்கி குழந்தையாகிற இடம் இது.

பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகளில்‘ வரும் ரோஹினியும்கூட இப்படித்தான். ‘கடவுள் ரொம்ப பாவம்பா’ என்று கடவுளுக்காக குழந்தை இரங்குவது கருணையன்று. அப்பாவின் தர்க்கத்தை ஒரு படி கூடுதலாகத் தாண்டுகிற புத்திசாலித்தனம் மட்டுமே.

‘ஒண்ணுமே புரியல’ கதையில் வரும் மணப்பெண்ணின் தம்பி, கிருஷ்ணனின் குறும்புகளால் வார்க்கப்பட்டவன்‌. கடைசியில், ‘கல்யாணம் முடிச்சு போறப்ப அக்கா சத்தம் போட்டு அழுதா, இப்ப மறுவீட்டுக்கு வர்றப்ப வண்டியோட்டிக்குக்கூட தெரியாம அழறா. எனக்கு ஒண்ணுமே புரியல’ என்று சொல்கிற போது வெளிப்படுவது குழந்தையின் ‘பேதைமை’ அல்ல. கன்னி கழிந்த பெண்ணின் புதுமாற்றம். அதைச் சொல்வதற்கான கருவியாக மட்டுமே சு.ரா. குழந்தையின் பேதைமையைப் பயன்படுத்துகிறார். காதல் கடிதத்தைக் கருவறைக்குப் பின் ஒளித்துவைக்கும் முதிரா இளைஞனின் மனநிலை இது. ஆனால் வயதுக்கு மீறிப் பேசுகிற சிறுவனின் குரலில் அவனையல்ல, அக்காவின்  கள்ளத்தனத்தையே அடையாளம் காண்கிறோம்.

ஆதவன் போன்ற நவீனத்துவப் படைப்பாளிகளின் படைப்புகளிலும் நாம் உணர்வது ஃபிராய்டிய அலசல்களையே. இருட்குகையில் வாய்க்கும் ஒரே ஒரு முத்தத்தால் ‘பெரியவனாகி’ விடுகிற சிறுவன் இதற்கு மிகச்சரியான உதாரணம். ஜெயகாந்தனின் ‘ரிஷிமூலம்’ நாவலில் வரும் ராஜாராமனின் அகப்போராட்டம், ‘ஈடிபஸ் காம்ப்ளெக்ஸாகவே’ நம் மனதில் பதிகிறது. இதன் மறுமுனையில் வேறு சில கதைகளில் அப்பாவை நெருங்க முயலும் சற்று வளர்ந்த ஆண்பிள்ளைகளின் சித்திரங்களும்கூட ஃபிராய்டிய சாயல் கொண்டவையாகவே படைக்கப்பட்டிருக்கின்றன. சுந்தர ராமசாமியின் சிறந்த கதைகளில் ஒன்றான ‘பக்கத்தில் வந்த அப்பாவில்’ இந்த உணர்வை அடையாளம் காண முடியும். ஆனால், ‘தெய்வம் பிறந்தது’ கதையைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அழகிரிசாமியை இந்த வகைமைகளுக்குள் அடங்காத படைப்பாளர் என்றே மதிப்பிட முடியும்.

கு.அழகிரிசாமியின் குழந்தைச் சித்திரிப்புகளில் ரொமாண்டிசிஸம்:

இயற்கையில் உறைந்திருக்கும் ‘அழகை’ அடையாளம் காண்பது மட்டுமே உண்மையை உணரும் வழி. அதுவே நம்மை சகல கீழ்மைகளில் இருந்தும் விடுவிக்கிறது என்று ஆழமாக நம்பும் ரொமாண்டிசிஸவாதிகள் குழந்தைகளையும் அவ்வாறே அடையாளம் காண்கின்றனர். அவர்களின் பார்வையில் நிலா, பூ, மேகம், மரம், வானவில் போன்ற இயற்கைப் பொருட்கள் மாதிரிதான் குழந்தையும். அந்தக் குழந்தையின் ஆழ்மனதை அவர்கள் உணர முயல்வதே இல்லை. அழகின் வடிவத்திற்குள் ஒளிந்திருக்கும் உணர்வுகளின் நடனத்தை அவர்கள் காண்பதே இல்லை. கை, காலை உதைத்து குழந்தை அழுவதை ஒரு புகைப்படக்காரரைப் போல் படம் பிடித்துவிட்டு நகரும் அவர்கள் அழுகைக்கான காரணங்களைத் தேடுவதே இல்லை.

ஆனால், தொடக்ககாலப் படைப்பாளிகளில் குழந்தைகளின் உலகை எந்தவித முற்சாயலும் இல்லாமல் அணுகி அந்தந்தத் தருணத்தின் அசலான உணர்வுகளோடு பதிவுசெய்த படைப்பாளியாக அழகிரிசாமியைக் கருத முடியும்.

கு.அழகிரிசாமியின் பெரும்பாலான கதைகளில் வரும் குழந்தைகள் இயல்பானவர்கள். அவர்கள் வானுலகில் உலவும் தேவதைகளோ, கருவறைக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் பால குமரன்களோ இல்லை. ஆனால், விதிவிலக்காக அவர் எழுதிய கதைகளில் ஒன்று ‘யாருக்குக் கல்யாணம்?’ இந்தக் கதையிலும்கூட குழந்தை குறித்த சித்திரிப்பு இயல்புவாத பாணியிலேயே அமைந்திருக்கிறது. தனக்குக் கிடைத்த பூப்பந்தை பிறருக்குத் தந்து, அவர்கள் அடையும் மகிழ்ச்சியைப் பார்த்துச் சிரிக்கும் குழந்தை, யாரோ ஒருவர் ‘உனக்கா கல்யாணம்?’ என்று கேட்ட உடனே அந்தச் சொல் குறித்து தன் மனதிற்குள் நிகழும் குழப்பத்தால் பதறிப்போய் பூங்கொத்தைக் கீழே போட்டுவிடுகிற இடம் அழகான ஒன்றுதான். ஆனால் இதை மீனாவிடம் சுட்டிக்காட்டி, குழந்தை இயல்பை விளக்கி மகிழும் கதைசொல்லியிடம் மீனா பதிலுக்கு, ‘குழந்தை மனசு உங்களுக்கு எங்கே இருக்கிறது?’ என்று கேட்டு மறைமுகமாகத் தன் காதலைச் சொல்லுகிறாள். இந்த இடம் கதையை ரொமாண்டிசிஸப் பாதைக்கு நகர்த்திவிடுகிறது. உண்மையில் காதல் என்பது வயதுக்கு வருவதால் உருவாவது அன்று. வயதை உதறித் தள்ளி குழந்தைமை நோக்கி நகர்வதால் உருவாகும் உணர்வு என்கிற புரிதலை கதை ஏற்படுத்திவிடுகிறது. காதலை குழந்தையின் ‘பேதைமை’ என்கிற புள்ளியில் இணைத்து புனிதப்படுத்தி விடுகிற ரொமாண்டிசிஸ சித்திரம் அழகிரிசாமியின் இயல்புக்குப் பொருந்தாமல் இந்தக் கதையில் எட்டிப் பார்க்கிறது.

இரண்டாம் உலகம்:

நம்முடன் வசித்தாலும் குழந்தைகள் நம் உலகில் வசிப்பதில்லை. அவர்கள் நம்மோடு பேசினாலும் அவர்களின் மொழி வேறு. அன்பை உணர்வதற்கும் மனிதர்களை வெறுப்பதற்கும் அவர்கள் தங்கள் ஆழ்மனதில் உருவாக்கி வைத்திருக்கும் குறியீடுகள் வேறு. அவர்கள் சிரிப்பதற்கும் அழுவதற்கும் உம்மென்று இருப்பதற்கும் கண்டுபிடித்துக்கொள்கிற காரணங்கள் வேறு. இந்த வேறுபாட்டை நுட்பமாக உணர்ந்தவனே குழந்தைகளின் உலகை மிகச்சரியாகப் படைக்க முடியும். மாறாக, நாம் கண்டுபிடித்து வைத்திருக்கிற தர்க்கங்களை, சித்தாந்தங்களை, அனுமானங்களை, தரிசனங்களை குழந்தைகளின் உலகத்தில் கண்ணாடி வைத்துத் தேடினால் அதில் பிம்பமாகத் தெரிவது நாமேதான். மீசையை மட்டும் மழித்துவிட்டு அந்தப் பிம்பத்தை ‘குழந்தை’ என்று அடையாளப்படுத்தும் அபத்தத்தையே நாம் பெரும்பாலும் செய்துவருகிறோம்.

அழகிரிசாமியின் தனித்தன்மைகளில் ஒன்று, குழந்தைகள் மட்டுமே வசிக்கும் இரண்டாம் உலகத்தில் அவரும் குடியேறியவர். அவர் தொட்டிலை விலக்கி தாலாட்டு பாடுவதில்லை. கூடவே படுத்துக்கொண்டு கால்களை உதைக்கிறார். விலகிநின்று பொம்மை தந்தபடி ‘ஜூஜ்ஜூ, ஜூஜ்ஜூ’ என்று போலியாகக் கொஞ்சுவதில்லை. அவரும் கூடவே உட்கார்ந்து பவுடர் பூசி கண்மை தேடுகிறார். இல்லையென்றால் கை வேறு, கால் வேறாகப் பிரித்துப் போட்டு சத்தம் போட்டு அழ ஆரம்பித்துவிடுகிறார். அவர் எறும்பு கடிக்கும் என்று குழந்தையை நோக்கி எச்சரிப்பவரல்ல. தன் முழங்கையில் ஏறும்போது கூசும் எறும்புக்கும் கடிக்கும் எறும்புக்கும் வித்தியாசம் தெரியாமல் அந்த வரிசையைக் கண்டு குதூகலிக்கிறவர்.

பல கதைகளில் குழந்தைகளின் அக உலகம் குறித்த அவருடைய அவதானிப்பின் நுட்பத்தை நாம் வியந்து இரசிக்க முடியும்.

சிறுகதைகள் உருவாகிவந்த தொடக்க காலத்தில், குழந்தைகள் பற்றிய தமிழ் எழுத்தாளர்களின் சித்திரங்கள் கற்பனாவாதத்தின் உச்சத்திலேயே நிலைகொண்டிருந்தன. மயில் வண்ணப் பாவாடை காற்றில் பறக்க சாலையில் நின்றுகொண்டிருக்கும் சிறுமியும், வானத்து ரோகிணியை விளையாட்டுப் பொருளாக மாற்றி விளையாடும் பங்களா வீட்டு ரோகிணியும், அவர்கள் இந்த உலகில் கண்டுணரும் சகல அவலங்களுக்கும் மருந்தாகி நிற்பார்கள். அவர்களின் அறிவு தரிசனம், சக்தி தரிசனம் இரண்டிலும் சொக்கிப்போய் ‘நாமெல்லாம் அற்பம்’ என்று உணர்வதற்காகவே குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகள், கதைகளுக்குள் இழுத்து வரப்பட்டார்கள். அந்தக் கதையை வாசிக்கும் நடுத்தர வர்க்க வாசகர்கள் அந்தக் குழந்தைகளைத் தங்கள் குழந்தைகளாக உருவகித்துப் புளகாங்கிதம் அடைந்தாலே கலைவாணியின் மூக்குத்தி இருட்டில் ஒளிர்ந்துவிடும் என்கிற நம்பிக்கை பல எழுத்தாளர்களின் மனதில் பதிந்திருந்தது.

ஆனால், அழகிரிசாமி இந்த மனோபாவத்தை உடைத்தார். அவர் கதைகளில் எந்த தேவதைத்தனமும் இல்லாத சாதாரண குழந்தைகள் நடனமாடினர். ஆனால் அவர்களை வைத்து அவர் எந்தச் சுய இரக்கத்தையும் கோரவில்லை. அவர்களின் கிழிந்த டவுசரை, ஓட்டைக் குடிசையை, பால் சுரக்காத அன்னை மார்பை, இரு பொழுதுகள் தாண்டிய பிறகும் தீயின் ஸ்பரிசம் அறியாத அடுப்பை, இரவுகளில் பசியால் எழுந்து நீடிக்கும் அழுகையை, அவர் கண்ணீர் மல்கும் சொற்களால் சித்திரித்து வாசிப்பவர்களைத் துயரத்தில் ஆழ்த்துவதில்லை. அவர்களின் அக உலகை, செயல்பாடுகளை, புன்னகையை, கண்ணீரை அப்படியே சித்திரித்தார். அதே நேரத்தில், அதன் மூலமாகவே மாபெரும் அவலமொன்றின் திரையை நம் கண் முன்னே விரித்துக்காட்டினார். மலைப் பாம்பின் விரிந்த வாய்க்கு முன்னே, அப்படியொன்று இருப்பதையே உணராமல், எல்லாவிதமான சேட்டைகளையும் செய்துகொண்டிருக்கும் சிறு முயலின் குறும்புகளே அவர் கதைகளின் படிமங்களாக நமக்குள் விரிகின்றன.

ஒரே ஒரு மரணத்தால் உடைந்து தூள் தூளாகும் குடும்பத்தின் அவலத்தை (இருவர் கண்ட ஒரே கனவு), வறுமையை வெல்வதற்காக குற்றவுணர்வோடு ஒழுக்க மாண்புகளைத் தொலைத்து காலப்போக்கில் அதுவே இயல்பாக மாறும் அதிர்ச்சி மதிப்பீட்டை (மாறுதல்), நல்ல காற்றுக்குக்கூட வழியில்லாத நகர்ப்புற ஒண்டுக் குடித்தன அவஸ்தையை (காற்று), வாழ்வின் ஒரே அர்த்தமாக நீடிக்கும் குழந்தைமையின் கனவானது யதார்த்தத்தின் குரூரத்தால் சிதைக்கப்படும் அவலத்தை (சின்னம்மா) என்று வாழ்வின் ஆதாரமான பிரச்சினைகளையும், துயரத்தில் விசும்பும் மனித மனம் உருவாக்கிக்கொள்ளும் கேள்விகளையும், அதற்குப் பிந்தைய தரிசனங்களையும் அவர் குழந்தையின் கண்களுடன்தான் தேடிக்கொண்டிருந்தார். அகத்தின் மலர்ச்சியையும் வாழ்வின் வீழ்ச்சியையும் அவர் குழந்தைகளின் திக்கித் திணறிய மழலை மொழியிலேயே உலகத்திற்குச் சொன்னார்.

இருவர் கண்ட ஒரே கனவு:

ஒரு மரணம் நிகழ்ந்துகொண்டிருக்கும் போது அது குறித்த எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் குழந்தைகள் வேறொரு உலகத்தில் நடமாடிக்கொண்டிருப்பதை பல எழுத்தாளர்கள் படைத்துக் காட்டியிருக்கின்றனர். புதுமைப்பித்தனின் ‘மாகாமாசானம்’ இதற்கு மிகச்சிறந்த உதாரணம். இந்தக் கதையிலும் அம்மா வறுமையின் காரணமாக மரணப்படுக்கையில் கிடக்கிற போது குழந்தைகளின் அக உலகம் என்னவாக இருக்கிறது என்பதை அழகிரிசாமி நுட்பமாகச் சித்திரித்திருக்கிறார். குழந்தைகள் அந்தந்த கணங்களிலேயே வாழ்கின்றனர். மரணம் என்பது அவர்களின் புரிதலில் அந்த நொடியின் இன்மைதான். இழப்புணர்வால் வரும் அழுகையின் போதும்கூட அவர்கள் தங்களை நோக்கி வருகின்ற சந்தோஷங்களை நிராகரிப்பதில்லை. யார் வீட்டிலும் வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று அம்மா விதிக்கும் கட்டுப்பாட்டிற்கும், இரண்டு நாள் பசிக்கும் இடையே நிகழும் முரண் அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே சண்டையாக உருமாறி வாங்கிய கஞ்சி தரையில் கொட்டுகிறது. தரையில் கஞ்சி கொட்டியதைப் பார்த்த பிறகுதான் ‘அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று பயமூட்டி தம்பியைத் தடுக்காமல் இருந்திருந்தால் இருவரும் பசியாறியிருக்கலாமோ?’ என்று அண்ணனும் யோசிக்கிறான். எது சரி, எது தப்பு என்று யோசிப்பதுகூட வளர்ந்த மனிதர்களின் சிக்கல்தான். பெரியவர்களின் உலகத்திலிருந்து இரவல் வாங்கி உதிர்த்த ஒற்றைச் சொல் இருவரின் பசியாறுதலுக்கு எமனாகி விட்டதை அண்ணன் உணர்ந்து அழும் இடம் அழகான ஒன்று. அம்மா இறந்த நிமிடத்திலும் தம்பி ‘அம்மா செத்து விளையாடுறாளோ?’ என்று யோசிக்கிறான். அம்மாவின்  மீது யாரோ போர்த்திய வெள்ளைப் புடவை அவர்களுக்கு இனம் தெரியாத மகிழ்ச்சியைத் தருகிறது. அம்மா சுடுகாட்டில் எரிகிற போது இருவரின் கண்களையும் சிலர் பொத்திக்கொள்கிறார்கள். அதனால்தான் அவர்கள் அழவில்லை. ஒருவேளை கண்களைப் பொத்தாமல் இருந்திருந்தாலும் அவர்கள் ‘அந்தப் புதுப் புடவை வேகிறதே என்பதற்காகவே அழுதிருப்பார்கள்’ என்று அழகிரிசாமி எழுதுகிறார்.

இந்த வரிக்குள் மெல்லிய குரூரம் இருக்கிறது. ஆனால் அம்மாவைப் பலநாள் படுக்கையில் பார்த்துப் பழகிய, புதுத் துணி என்றால் என்னவென்றே அறியாத பிஞ்சு மனம் இப்படித்தானே யோசிக்கும்? எந்தப் புது விளக்கமும் தராமல் அவர்களின் மனம் போகிற திசையெல்லாம் அவர் எழுத்தும் நிழலாய் எட்டு வைத்து நடக்கிறது. எல்லாம் முடிந்த பிறகும் அவர்கள் யாரோ தந்த முறுக்கை சந்தோஷமாக வாங்கிச் சாப்பிடுகிறார்கள். அடுத்த நிமிடமே அம்மா ஞாபகம் வந்து அழுகிறார்கள். அன்றிரவு வேறு ஒருவரின் வீட்டில் படுத்துக்கொள்ளும் போது கிழியாத நல்ல பாயைக் கண்டு குதூகலமடைகிறார்கள். படுத்த உடனேயே, ‘கூட அம்மாவும் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே’ என்று யோசிக்கிறார்கள். அந்த வீட்டுக்காரன் நள்ளிரவில் வந்து வேட்டியைப் போர்த்தி விடுகிற நிமிடத்தில் சரியாக அம்மா நிர்வாணமாக எழுந்துவந்து தன் சேலையைப் போர்த்தி விடுவதைப் போல இருவருக்கும் ஒரே நேரத்தில் கனவு வந்து எழுந்து அழுகிறார்கள். ஒரு மரணத்தின் அவலத்தை குழந்தைகளின் பேதைமை நிறைந்த அக உலகின் வழியே மட்டும் இக்கதை சித்திரிக்கிறது. அவர்களின் பேதைமை அந்த மரணத்தைவிட அச்சமூட்டுவதாக அமைந்திருப்பதே இக்கதையின் சிறப்பு.

மாறுதல்:

‘மாறுதல்’ கதையில் கிராமத்தில் வாழ்ந்துகெட்ட குடும்பம் ஒன்று நகரத்திற்கு வந்து விபச்சாரம் செய்து பிழைக்கும் அவலத்தைப் பதிவுசெய்திருப்பார். அந்தக் கதையில் ஒரு சிறுவன் வருவான். அவன்தான் வீதியில் இருப்பவர்களிடம் நுணுக்கமாக ‘அக்காவுக்கு உடம்பு சரியில்லை’ என்று சொல்லி ஆட்களை வளைப்பான். அந்த வீட்டில் நிஜமாக என்ன நிகழ்கிறது என்பது அவனுக்குத் தெரியாது. ஆள் வந்தபின் அம்மா அவனை எங்காவது அனுப்பிவிடுவாள். அந்தச் சொற்கள்கூட அவளிடமிருந்து பெறப்படுகிற இரவல்தான். சுரண்டலும் ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்கிற அற்பத்தனமும் நிறைந்த குரூரமான உலகத்தில் அவனுக்கே தெரியாமல் அவன் வெற்றிகரமாகத் தன் பயணத்தைத் தொடங்கிவிட்டான் என்று அழகிரிசாமி குறிப்பால் உணர்த்தியிருப்பார். கதையின் இறுதிக்காட்சியில் அம்மாவும் மகளும் முழு வேசிகளாக மாறி நேரடியாக அவர்களே பிறரை விபச்சாரத்திற்கு அழைக்கிற அளவுக்கு முன்னேறி நடு ரோட்டில் வந்து நிற்பர். ஆனால் அந்தச் சிறுவன் அவர்களோடு இருக்க மாட்டான். அழகிரிசாமி கதையை இப்படி முடித்திருப்பார்.

‘அந்தச் சிறுவனை மட்டும் காணவில்லை. ஒருவேளை அவன் வீட்டில் இருக்கலாம். இல்லையென்றால் செத்துப் போயிருக்கலாம். அதுவும் இல்லையென்றால் கிரிமினல் குற்றம் செய்து சிறைக்கூடத்துக்குப் போயிருக்கலாம்.’

வாழ்வின் குரூரமும் குற்றங்களின் தொடக்கமும் ‘குழந்தைமை கலைவதுதான்’ என்பதே அழகிரிசாமியின் புரிதலாக இருக்கிறது.

காற்று:

ஒண்டுக் குடித்தனத்தின் அவலத்தை ஒரு குழந்தையின் அக உலகின் வழியாக சித்திரித்த கதை ‘காற்று’.

இந்தக் கதையில் வரும் குழந்தைக்கு ‘மூச்சு முட்டாத நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும்’ என்பதுதான் ஒரே ஆசை. அதற்காகவே பக்கத்தில் இருக்கிற திண்ணைக்கு விளையாடப் போகிறாள். திண்ணைக்கு உரியவன் அவளை அடிக்கும்போது வீட்டில் சொல்லக்கூடத் தோன்றவில்லை. ‘அம்மாவும் அடிப்பாளோ’ என்று பயப்படுகிறாள். திடீரென்று இந்த வயதிலேயே அந்தக் குழந்தைக்கு எதிர்காலம் பற்றிய கவலையும், திண்ணை வைத்து வீடு கட்டாத அப்பா மீது கோபமும் வருகிறது. விஷயத்தை உணர்ந்துகொண்ட தந்தை, தன்னால் முடிந்த தீர்வாக குழந்தையை ஒரு நாள் கடற்கரைக்கு அழைத்துச் சென்று நல்ல காற்றை சுவாசிக்க வைக்கிறான். திண்ணை கட்டச் செலவாகுமே என்று யோசித்து அவளைப் பள்ளியில் சேர்த்துவிடுகிறான். அவள் பள்ளியிலிருந்து திரும்பி வீட்டுக்கு வராமல் ஒரே ஒரு நாள் அப்பா அறிமுகப்படுத்திய கடற்கரைக் காற்றைத் தேடிப்போய் வண்டியில் அடிபட்டுச் சாகிறாள். அந்தக் கடைசி வரியை அழகிரிசாமி இப்படி முடித்திருப்பார். ‘தன் வாழ்நாளெல்லாம் ஆசைப்பட்ட காற்றாகவும் மாறிவிட்டாள் என்பது யாருக்குத் தெரியும்?’ அந்தக் குழந்தை அழகிரிசாமியின் தயவால் விடுதலை பெற்று ‘காற்றாகி’ விட்டது. ஆனால், இந்த வரியைப் படிப்பவர்களுக்கு கண்டிப்பாக மூச்சு முட்டும்.

சின்னம்மா:

இந்தக் கதையில் குழந்தையின் மனதில் அழியாமல் இருக்கிற அன்பின் சித்திரம் வாழ்வின் பாடுகளால் செல்லரித்துச் சிதைந்து போகிற அவலம் பேசப்படுகிறது.

அந்தக் கதையில் சிறுவயதில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை கதைசொல்லி நீண்ட காலமாக நினைவு வைத்திருக்கிறார். அவர்களுடைய வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெண் இந்தப் பையனை அளவு கடந்து நேசிக்கிறார். சொந்தமெல்லாம் இல்லை. ஒரே ஜாதிகூடக் கிடையாது. நள்ளிரவொன்றில் திடீரென்று அந்தப் பக்கத்து வீட்டுப் பையன் குறித்து துர்கனா கண்டு அலறியடித்தபடி எழுந்துவந்து கதவைத் தட்டுகிறார். பையனின் அம்மா ஒன்றும் பிரியாமல் விழிக்கிறார். அந்தப் பெண் பதறியடித்தபடி பையனின் அருகில் செல்கிறார். அவனுக்குப் பக்கத்தில் ஒரு தேள் ஊர்கிறது. இவள் மட்டும் வராமல் இருந்திருந்தால் அந்தத் தேள் பையனைக் கடித்திருக்கும். எல்லோரும் அவளுடைய அதீதமான அன்பின் சக்தியை எண்ணி மூக்கில் விரல் வைத்து ஆச்சரியமடைகின்றனர். அன்று முதல் அந்தப் பையன் அவளைச் ‘சின்னம்மா’ என்றழைக்கிறான். பால்யத்தில் உணர்ந்த இந்தப் பேரன்பை அவன் எப்போதும் நினைவிலிருந்து மீட்டியபடி இருக்கிறான். அவன் குடும்பம் ஊரைவிட்டு வெளியூர் சென்று, அவன் வளர்ந்து வாழ்க்கையில் உயர்ந்துவிட்டாலும், சின்னம்மாவின் நள்ளிரவு கதவுத் தட்டலை அவன் மறக்கவே இல்லை. அவளை மீண்டும் பார்ப்பற்காகவே அந்த ஊருக்கு வருகிறான். ஆனால் வறுமை அவள் வாழ்க்கையைக் கொடூரமாக வேட்டையாடியிருக்கிறது. அவனைப் பற்றிய எந்த இனிப்பான நினைவுகளும் அவளிடம் இல்லை. பரவசத்தோடு அந்த இரவு நேரக் கதவு தட்டலை அவன் நினைவுகூர்கிற போதும் அவள் சலித்தபடியே நின்றிருக்கிறாள். கடைசியாக அவளிடம் பணத்தைத் தந்துவிட்டு கண்ணீரோடு நடக்கிறான். திடீரென்று உணர்வு வந்தவளாய் அவள் அவன் பெயரைச் சொல்லிக் கத்துகிறாள். அவனோ திரும்பிக்கூடப் பார்க்காமல் நடக்கிறான்.

இந்தக் கதையில், வாழ்வின் பொக்கிஷமாகத் தன் குழந்தைப் பருவத்து நினைவையே அவன் சுமக்கிறான். அவன் வாழ்வின் ஒற்றை அர்த்தமே குழந்தையாக அவன் உணர்ந்த சின்னம்மாதான். அந்த ஊருக்குள் அவளைத் தேடி வரும்போது அவர்களுடைய பழைய வீட்டின் முன் இரு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். அந்தக் காட்சியை கு.அழகிரிசாமி இப்படிச் சித்திரிக்கிறார்- ‘வீட்டு வாசலில் ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. பரவாயில்லை. வீடு பாழாகிவிடாமல் அங்கே உயிர்கள் தளிர்த்துக்கொண்டிருக்கின்றன என்பதில் தனி ஆனந்தம்.’

சின்னம்மாவைத் தேடி அவன் தொடர்வண்டியில் வருகிறபோது அவன் தன் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து அடைந்த பரவசமும், திரும்பிப் போகிறபோது சுமந்து செல்கிற துக்கமும் கதையில் விவரிக்கப்படுகிறது.

மனித வாழ்வின் மிகப்பெரிய துக்கம் அவன் குழந்தைப் பருவத்தில் உருவாக்கிக்கொண்ட உணர்வுகள் கைபட்ட சோப்பு நுரையாக அவன் கண் முன்பாகவே வெடித்துச் சிதறுவதுதான். மானுடத்தின் தீராத பிரச்சினையை கு.அழகிரிசாமி ‘குழந்தைமை சிதறும் நொடியாகக்’ காட்சிப்படுத்தி விடுகிறார்.

கு.அழகிரிசாமியின் பார்வையில் பேதைமை:

மற்ற எழுத்தாளர்களின் குழந்தைகள் குறித்த சித்திரிப்புகளில் இருந்து கு.அழகிரிசாமி முழுமையாக வேறுபடுவது குழந்தைகளின் ‘பேதைமை’ குறித்த புரிதலில்தான்.

அவர் குழந்தைகளின் பேதைமையை தூய்மையான ஒன்றாகக் கருதுவதில்லை. குழந்தைகளின் பேதைமை அந்தக் கணத்தில் உருவாக்கும் அபத்தம் அல்லது அதிர்ச்சி வழியாக நம்மை வேறொரு திசைநோக்கிப் பயணப்பட வைப்பதே அவருடைய கதைகளின் நோக்கமாக இருக்கிறது.

மற்ற எழுத்தாளர்கள் தத்துவார்த்த நோக்கிலோ, ரொமாண்டிசிஸத் தன்மைகொண்ட அழகியல் பார்வையிலோ சித்திரிக்க முயலும் ‘பேதைமையை’ அவர் அன்றாட வாழ்வின் இயல்பான தருணங்களிலேயே கண்டடைந்தார் என்பதை அவர் கதைகளை வாசிப்பவர்கள் தெளிவாக உணர முடியும்.

பால்சாக்கின் குறுங்கதை ஒன்றுக்கு அவர் ‘innocence’ என்று பெயர் வைத்திருப்பார். அந்தக் கதையில் இரண்டு குழந்தைகள் ஆதாம், ஏவாள் ஓவியத்தைப் பார்த்தபடி நின்றுகொண்டிருக்கும். ஒரு குழந்தை ‘யார் இவங்க?’ என்று வினவும். ‘இவங்கதான் முதன்முதலில் பூமியில் பிறந்தவங்களாம்’ என்று மற்றொரு குழந்தை பதில் கூறும். ‘இதுல யாரு ஆம்பள? யாரு பொம்பள?’ என்று கேட்க, ‘அதை எப்படிச் சொல்ல முடியும்? ஒருவேளை உடை அணிந்திருந்தால் அதை வைச்சு சொல்லலாம். இவங்க போடலயே’ என்று சொல்வதோடு கதை முடியும். இந்தக் கதை ‘நிர்வாணம்’ என்கிற கருத்தாக்கத்தை குழந்தைகளின் பேதைமை வழியாக விளக்க முயல்கிறது.

கு.அழகிரிசாமி கரட்டுக்காட்டில் வெயில் சுட்டெரிக்கும் மதியத்தில், லௌகீகத்தின் சுமைகள் அழுத்தும் குறுகலான அறையின் மூலையொன்றில் என்று குழந்தைகளின் ‘பேதைமையை’ அன்றாட வாழ்வின் எளிய தருணங்களில் அடையாளம் காண்கிறார்.

அவருடைய புகழ்பெற்ற இரு கதைகளான ‘அன்பளிப்பு’, ‘ ராஜா வந்திருக்கிறார்’ இரண்டையும் கவனித்தால் ‘பேதைமையை’ அவர் இருவேறு எல்லைகளில் நின்று படைத்துக் காட்டியிருப்பதை உணர முடியும்.

ராஜா வந்திருக்கிறார்‘ கதையில் இரு தரப்பட்ட வாழ்க்கையை அவர் இணை கோடுகளாகச் சித்திரித்துக்கொண்டே வருகிறார். ஜமீன்தார் மகன் விலை உயர்ந்த ஆடை அணிந்திருக்கிறான். இந்தப் பஞ்சப் பராரிகள் மூவருக்கும் அழுக்கான சீட்டி உடைகள்தாம். அவன் வீட்டில் மாடு வளர்த்தால் இவர்கள் வீட்டில் இருப்பது வெறும் கோழி. அவன் சில்க் சட்டை குறித்துப் பேசுகிறான். இவர்கள் அதைப் பார்த்ததே இல்லை. அவன் வீடு உயர்ந்து நிற்கிற பங்களா. இவர்களுடையது தலை தட்டும் குடிசை. அவன் வீட்டில் இலையில் வைத்த காய்கறிச் சாப்பாடு. இங்கோ குடிக்க வெறும் நீராகாரம். அவனுக்காகத் திறக்கும் பங்களாக் கதவுகள் இவர்களைக் காவல்காரன் வடிவில் அடித்துத் துரத்துகின்றன. மழை பெய்தால் அவன் தூக்கத்திற்கு எந்த இடையூறுமில்லை. இங்கோ தூக்கத்தைக் கலைத்து இரவை உறைய வைத்துவிடும். அவனுக்கு ‘ஒண்ணுக்கு வந்தால்’ போவதற்கு கக்கூஸ் இருக்கிறது. இவர்களுக்கோ பெய்யும் மழையிலும் வெட்டவெளிதான். அவனுக்குத் தீபாவளி என்பது வெடியும் விருந்துமான கொண்டாட்டம். இவர்களுக்கோ முதல்நாள் இரவு வரை ஒற்றை ஆடைக்குக்கூட உத்திரவாதம் இல்லை. அவனுக்குத் தனியே படுத்துக்கொள்ள கட்டில், போர்த்திக்கொள்ள போர்வை எல்லாமே உண்டு. இங்கோ பழம்பாயும் அம்மா கழட்டிப் போட்ட பீத்தல் துணியும்தான்.

பெரியவர்களின் உலகத்தில் உள்ள அதே வர்க்க வேறுபாடு இவர்களையும் பிரிக்கிறது. ஆனால் அதை இவர்கள் தங்கள் ‘பேதைமையால்’ கடந்து போகிறார்கள் என்பதுதான் கதையின் சிறப்பே. இந்தக் கதையில் வரும் மங்கம்மா பேரன்பு நிறைந்தவளோ கருணையின் வடிவமோ இல்லை. அவளை அதற்கான குறியீடாக மாற்றுகிற சிறு முயற்சிகூட அழகிரிசாமியிடம் இல்லை. அவளும் எல்லோரையும் போல் போட்டி மனப்பான்மையும் சுயநலமும் பொறாமையும் தன்னைவிடக் கீழாவனர்கள் மீதான அசூயையும் கொண்டவள்தான். ஆனால் அவளுக்கே தெரியாமல் தன்னுடைய ‘பேதைமையால்’ இருவேறு தரிசனங்களை அவள் கதையில் அளிக்கிறாள். ‘நீ என்ன சோதிக்கத்தான்டா வந்திருக்க’ என்று மனம் கசிந்து அழும் தாயம்மாவிடம், ‘அப்பா துண்ட அவன்கிட்ட கொடு ‘ என்று அவள் சொல்வதுதான் முதல் தரிசனம். அவளைப் பொறுத்தவரை இந்தச் சொல் அவளுடைய அன்றாட விளையாட்டின் ஒரு பகுதி. ‘இது எனக்குத் தோனாம போச்சே’ என்று நெகிழ்ந்தபடி தன்னிடம் சிறு தூசைப் போல் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு துளி உடைமை உணர்வையும் கடந்து தாயம்மா கணவனின் துண்டை எடுத்து நிர்வாணமாக நிற்கும் ராஜாவிடம் நீட்டுகிற போது அவள் முழுமையாக கனிந்து நிற்கிறாள். ஆனால் தன்னால்தான் இது நிகழ்ந்தது என்பதை மங்கம்மா துளியளவும் உணர மாட்டாள். அதன் அடுத்த கட்டம்தான் ‘எங்க வீட்ல ராஜா வந்திருக்காரு’ என்று சொல்லும் பண்ணையார் மகனிடம் ரேகை சாஸ்திரியைப் போல் கைகளை நீட்டி, ‘ஒங்க வீட்ல மட்டும்தான் ராஜா வந்திருக்கிறாரா? எங்க வீட்லயும்தான் ராஜா வந்திருக்காரு’ என்று மங்கம்மா சொல்கிற கடைசிக் காட்சி. இந்த இரண்டாவது தரிசனம் எந்தக் கதாபாத்திரத்திற்குமன்று, வாசகர்களுக்கு. பெரியவர்கள் உலகத்தில் அழிக்க முடியாமல் நிழலைப் போல் தொடரும் இரு வேறு வர்க்கங்களின் கோடுகளை குழந்தைகள் தம் பேதைமையால் கடக்கிற இடத்தை நாம் உணர்கிற போது உருவாகிற நெகிழ்வுதான் கதையின் சிறப்பு. ‘இப்படி தப்பா புரிஞ்சு வச்சிருக்காளே? ரெண்டு ராசாவும் ஒண்ணா?’ என்று நாம் பதைபதைக்கவும் செய்யலாம். சகலத்தையும் உதறி நிர்மலமான மனதோடு கண்ணீர் சிந்தவும் செய்யலாம். வாசக மனதில் எது நிகழ்ந்தாலும் அது மங்கம்மாவுக்குத் தெரியாது. அவள் பண்ணையார் மகனை விளையாட்டில் தோற்கடித்துவிட்ட மகிழ்ச்சியில் பாவாடையைச் சுருட்டிக் குதூகலித்தபடி குடிசைக்குள் முடங்கிவிடுவாள்.

‘அன்பளிப்பு’ இதற்கு நேர் எதிரான கதை என்று என் தனிப்பட்ட வாசிப்பில் உணர்ந்திருக்கிறேன். ‘ராஜா வந்திருக்கிறார்’ கதை முழுவதிலும் மங்கம்மா பண்ணையார் மகனைச் சீண்டிக்கொண்டே இருக்கிறாள். ஆனால் கதையில் நிகழ்வதோ கருணையின் ரசவாதம். ‘அன்பளிப்பு’ கதையில் அன்பு செய்வதாக நினைத்து தன் ‘பேதைமையால்’ சாரங்கன் பத்திரிகை ஆசிரியருக்குத் தருகிற  அதிர்ச்சிதான் கதையின் உச்சம். ஏனென்றால் அந்தக் கதையில் வருகிற பத்திரிகை ஆசிரியர், தான் குழந்தைகளை முழுமையாகப் புரிந்து வைத்திருப்பதாக நம்புகிறார். ‘உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்துகொள்வதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் விளையாட்டுணர்ச்சியும் நடிப்பும் கலந்திருக்கின்றது. குழந்தையைப் போல் பேசி குழந்தையைப் போல் ஆடிப்பாடி குழந்தையை விளையாட்டு பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்துகொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய அன்பில் அந்த விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனதில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாகவே நடத்தவில்லை. நண்பர்களாக நேசித்தேன். உற்ற துணைவர்களாகவே மதித்தேன். உள்ளன்பு என்ற அந்தஸ்தில் அவர்களும் நானும் சம உயிர்களாக மாறினோம்’ என்று தன் தரிசனத்தை முன்வைக்கிறார்.

உண்மையில் இந்தக் கோணமேகூட புதியதுதான். குழந்தைகளுடனான நம் உறவாடல்களில் வெளிப்படும் பாவனைகளை இந்தக் கூற்று மிகச்சரியாக அடையாளம் காட்டுகிறது. ஆனால் கதையின் இறுதிக் காட்சி இந்தத் தரிசனத்தையும் கலைத்துப் போடுகிறது. ‘பேதைமை’ என்கிற உணர்வால் குழந்தைகள் இயக்கப்படுகிறவரை பெரியவர்கள் என்னதான் அன்போடு முயற்சி செய்தாலும் அவர்களின் உலகத்தைத் தொட இயலாது என்பதே அவர் உணர்த்துகிற மறுதரிசனம்.  குழந்தைகள் உலகின் வேறொரு பக்கத்தை சாரங்கன் அவருக்குத் தன் செய்கையால் திறந்து காட்டுகிறான். உண்மையில் அன்பளிப்பைப் பெற்றது சாரங்கன் அன்று, கதைசொல்லிதான். அவர் பெறுகிற அன்பளிப்பு சாரங்கன் அவருக்குத் தரும் அதிர்ச்சிதான். உண்மையில் இது கதைசொல்லி மீதான சாரங்கனின் அன்பைப் பற்றிய கதை அல்ல. ஏனென்றால் அவனுடைய பிரச்சினை அந்த இரு குழந்தைகள்தான். அவர்களுக்கு மட்டும் கையெழுத்து போட்டு புத்தகம் தருவதுதான் சாரங்கன் மனதைப் பெரிய அளவில் பாதிக்கிறது. மங்கம்மா, தான் அம்மாவுக்கு கருணையைப் பரிசளித்ததை எப்படி உணராமல் இருக்கிறாளோ அது போல சாரங்கன் தன் மனதில் படிந்திருக்கிற பொறாமையை உணர மாட்டான். மங்கம்மா துண்டை எடுத்துக் கொடுக்கச் சொல்வதும், சாரங்கன் தூங்குகிற குழந்தையிடமிருந்து பொம்மையை வாங்குவது போல் அவன் கையிலிருந்த புத்தகத்தை வாங்கிவிட்டு வினயமாக கையெழுத்து போடச் சொல்வதும் பெரியவர்களின் உலகத்தில் இருந்து கற்றுக்கொண்டதை சம்பந்தமே இல்லாத இடங்களில் நகல் செய்து பார்க்கும் பேதைமைதான். அந்தப் ‘பேதைமை’ தாயம்மாவுக்கும் பத்திரிகை ஆசிரியருக்கும் நமக்கும் உருவாக்கிவிடுகிற உணர்வுகள் வெவ்வேறானவை.

இதன் நீட்சியாக வேறொரு கதையைச் சொல்ல முடியும். அந்தக் கதைக்கு அவர் வைத்திருக்கிற தலைப்பே ‘பேதைமை’.

நண்பனின் வீட்டுக்கு வருகிற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் அந்தத் தெருவில் அதிர்ச்சி தரும் காட்சியைப் பார்க்கிறான். ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின் சோற்றுத் தட்டில் இரண்டு சிறுவர்கள் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள். அதைக் கண்டு கொதிப்படைந்த ஒருவன் அந்தக் குழந்தைகளை அடித்து நொறுக்குகிறான். கதைசொல்லிக்கும் அவர்கள் மீது கோபம்தான். ஆயிரம்தான் இருந்தாலும் அவர்கள் குழந்தைகள் என்பதால் அவனிடமிருந்து இருவரையும் காப்பாற்றி அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். அவர்கள் அம்மாவிடம் புத்தி சொல்லிவிட்டு வரவேண்டும் என்பதுதான் திட்டம். தெருவும் அம்மாவும் அவர்களின் பராக்கிரமங்களை இவனிடம் ஒப்புவிக்கிறது. அவர்களின் அம்மா இவன் கண் முன்னாடியே குழந்தைகளை அடித்து நொறுக்குகிறாள். அப்போதுதான் அந்தக் குருட்டுப் பிச்சைக்காரன் அதே குடிசைக்கே வருகிறான். அவன் வேறு யாருமல்ல, அவர்களின் தந்தைதான். அந்த நொடி கதைசொல்லி மனதில் உருவாகிற உணர்வு கவனிக்க வேண்டிய ஒன்று. ‘ஓ, குழந்தைகளே.. எப்படிப்பட்ட பேதைமை உங்களுடையது. இந்தப் பேதைமைக்காக, ஒன்று அவர்களைக் கொல்ல வேண்டும் அல்லது தனிமையில் போய் அவர்களுக்காக கண்ணீர்விட்டு அழ வேண்டும்’ என்று நினைக்கிறார். உண்மையில் இது குழந்தைகளின் பேதைமை குறித்த அழகிரிசாமியின் தரிசனம்தான்.

‘பிதாவே! இவர்களை மன்னியும். இவர்கள் இன்னது செய்கிறோம் என்று அறியாமல் செய்கிறார்கள்’ என்று சிலுவையில் அறைபட்டுக் கிடந்த தேவகுமாரன் கருணை பெருக்கெடுத்துக் கூவியதைப் போல் குழந்தைகளைக் காண்கிற போதெல்லாம் தனக்குள் பேசிக்கொண்டவராகவே நான் அழகிரிசாமியை உணர்கிறேன்.

-தொடரும்.

*

முந்தைய பதிவுகள்:

1.கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம் பகுதி 1

2. கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம் பகுதி 2

3.கு.அழகிரிசாமியின் படைப்புகளில் காமம் பகுதி 3