ஒரு பணம் கண்ட திருட்டுப் பயலைப் போல, அடிக்கடி உள்ளங்கையை முகர்ந்து பார்க்கக் கூடாதெனத் தனக்குள் சொல்லிக்கொண்டான் வளன். ஆச்சி அந்தக் கதையை அவனுடைய சின்ன வயதிலிருந்து அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கும். எதற்காக அவனிடம் அதைச் சொல்கிறது என யோசித்தும் இருக்கிறான். புதுத் திருடன் ஒருத்தன் கொள்ளையடிக்கப் போனானாம். ஒட்டடைக் குச்சியையொத்த தேகம் கொண்டவன், அரும்பாடுபட்டு ஓட்டைப் பிரித்து இறங்கியதில் ஒரேயொரு மூட்டை மட்டும் சிக்கியிருக்கிறது. வீட்டிற்கு வந்தவன் காடா விளக்கொளியில் அதை விரித்துப் பார்த்த போது, அதில் ஒரு பணம் மட்டும் இருந்திருக்கிறது. கூடவே கண்ணாடிச் சில்லுகளைப் போல ஏதோ, சுருக்குப் பையில் முடிந்து பொதியப்பட்டுக் கிடந்திருக்கின்றன.
நன்றாகத் தெரிந்த அந்த ஒரு பணத்தைக் கண்டதும் அவனுக்குத் தலைகால் புரியவில்லை. பையைத் தூக்கித் தூரப் போட்டுவிட்டு, “எண்ட்ட ஒரு பணம் இருக்கே. எண்ட்ட ஒரு பணம் இருக்கே” என அரற்றிக்கொண்டே இருந்தானாம். அந்த இரவில் அவனது கட்டைக் குரல் சுவரில் மோதி, ஊரே கேட்கும்படி இரட்டித்து ஒலித்ததாம். காவல்காரன் வந்த போதுகூட அவன் “எண்ட்ட ஒரு பணம் இருக்கே” எனத் தன்னை மீறிச் சொல்லிக்கொண்டிருந்தானாம். அவனைக் கைதுசெய்து போனவர்கள் கையோடு எடுத்துப்போன மூட்டையைப் பிரித்துப் பார்த்தால், அத்தனையும் விலைமதிக்க முடியாத முத்துக்களாம். “ஒரு பணம் கண்ட பயலுக்கு பூராம் முத்தும் புளிய முத்தா போச்சா” என்று சொல்லிக் கதையை முடிப்பாள் ஆச்சி.
ஒருவேளை பிற்காலத்தில் தான் இப்படி ஆவோம் என ஆச்சி முன்னுணர்ந்திருப்பாளோ என்று யோசித்த போது உடனடியாகச் சிரிப்பு வந்தது வளனுக்கு. பாம்படத்தை தராசைப் போல முன்னும் பின்னும் ஆட்டி, எளக்காரமாய் அதைச் சொல்லும் ஆச்சியை நினைத்தபடி அனிச்சையாகச் சுற்றிலும் நோட்டம்விட்டான். அவன் நின்றுகொண்டிருந்த முச்சந்தியில் கனி வியாபாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. சுற்றுலா முடித்து மலை இறங்குகிறவர்கள் மொய்த்திருந்தனர். அங்கு அடர்த்தியாய் நின்றிருந்த தணக்கு, கும்ளா, கொணக்கு மரங்களைத் தாண்டிக் குதித்து, பட்டணம் மூக்குப் பொடி மணம் மட்டும் தனியாக நீந்திவந்து அவனது நாசியை நிறைத்தது.
அது எப்போதும் துரத்தி வருகிற அவனுடைய ஆச்சியினுடைய நினைவின் மணம் என்பதை அறிந்திருந்ததால், முன்பைப் போல, அதிர்ச்சியில் தலையைச் செம்மறியாட்டைப் போலக் குலுக்கித் தும்மவில்லை அவன். ஆச்சி இருந்திருந்தால் கையில் மூக்கில் கிடப்பதையெல்லாம் விற்றாவது இதுமாதிரியான தொழிலில் அவன் ஈடுபடுவதைத் தடுத்திருப்பாள் என்பதை நினைத்த போது, அவனுக்குள் எருக்கம் பால் பிசினைப் போலக் குற்றவுணர்வு முட்டிக்கொண்டு பொங்கியது.
“புளுகாண்டி” என ஆச்சி அழைக்கையில், அவள் காட்டும் உதட்டுச் சுழிப்பு துல்லியமாக வளனுக்கு நினைவிற்கு வந்தபோது, நெஞ்சை அடைப்பது போல ஒரு எரிச்சல் வந்தது. இத்தனைக்கும் நெஞ்செரிச்சல் மாத்திரையை கால்சட்டைப் பையிலேயேதான் வைத்துக்கொண்டு திரிகிறான். கையிலிருந்த தண்ணீர் பாட்டிலில் வாய் வைத்துக் கொஞ்சம் உறிஞ்சியதும் அந்த எரிச்சல் மட்டுப்படத் துவங்கியது. யாரும் பார்க்கிறார்களாவெனப் பார்த்துவிட்டு மீண்டும் உள்ளங்கையை எடுத்து மூக்கைச் சொறிவதைப் போல, மூச்சை இழுத்து முகர்ந்தான். அடர்த்தியான சந்தன மணம் நுரையீரல் குழாய் வரை பரவியது.
கைமுழுக்க எண்ணெய்ப் பிசுபிசுப்பு. எத்தனை கழுவினாலும், சீக்கிரம் அது போகாது எனத் தண்டபாணி சொன்னது சரிதான் போல. அதுவரை அவன் கைமாத்துகிற பொருளைக் கையில் தொட்டதோ, பலநேரங்களில் கண்ணால்கூட பார்த்ததோ இல்லை. விற்கிறவனையும் வாங்குகிறவனையும் தள்ளி நின்று தொடர்புபடுத்தி விட்டுப்போகிற இந்த வேலை எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் அமைந்தும் வந்தது வளனுக்கு. மற்ற தொழிலைக் காட்டிலும் அதிகப்படியாகக் கிடைத்ததால் இதிலேயே தங்கிவிட்ட அவனுக்கு மேல் இன்னொரு பெரிய கூட்டாளி இருக்கிறான்.
வலது கை தொக்காக இருந்தவனை அவனுடைய கூட்டாளி, குமைய விடாமல் நன்றாகப் பார்த்துக்கொள்ளவும் செய்தான். கணக்கு வழக்குகளை மட்டும் ஒப்படைத்து வளனை நோக்கிப் பெரிய அளவிற்கு வம்பு வழக்கு வராமல் பார்த்தும் கொண்டான்.
தவிர்க்க முடியாத அவசரத்தின் பொருட்டு சரக்கை எடுத்துப் போக வளன் வரவேண்டியதாகப் போயிற்று. “நல்ல சந்தன வைரத்தோட எண்ணெய் கையில பட்டா காடே திரும்பிப் பார்க்கிற மாதிரி அப்படி மணக்கும். காட்டிலாகா ஆட்க காட்டுக்குள்ள போயிட்டு வர்றவன் அத்தனை பேரோட கையையும் அரிவாளையும்தான் மொதல்ல மோந்து பார்ப்பான். வாடை வந்திருச்சுன்னு வச்சுக்கோ அய்யோன்னாலும் முடியாது, ஆத்தான்னாலும் முடியாது. அடிச்சுத் தொவைச்சு ஈசலை மூட்டைகட்டி அள்ளிட்டு போற மாதிரி போயிருவான்” எனத் தண்டபாணி சொன்னதை நினைத்ததும் நடுக்கம் வந்தது. யாருக்கும் தெரியாமல் இந்த நடுக்கத்தை மறைக்கிற தோதில், வளனின் பிழைப்பு ஓடிக்கொண்டிருந்தது.
தண்டபாணி வருகிற வரை அங்கேயிங்கே என நகரவும் முடியாது. அந்த இடமொன்றும் அவனுக்குப் புதிதுமல்ல, ஆனாலும் முதன்முறையாக நேரடியாகக் கையில் சரக்கைக் கையாள்வதால் வருகிற பதற்றம் அது எனத் தன்னைச் சமாதனமும் செய்துகொண்டான். “ரெண்டாம் நம்பர் ஏவாரம்னு தெரிஞ்சுதான் செய்றோம். அங்க வந்து நொண்டியடிச்சிக்கிட்டு இருக்கக்கூடாது. துணிஞ்சு எறங்கிடணும். நோகாம நொங்கையே எடுக்க முடியாது. முன்னூறு ரூவா கூலி கிடைக்கிற எடத்தில மூவாயிரம் வருதுன்னா கூடமாட சிக்கலையும் அது கூப்டுகிட்டு வரத்தான செய்யும்? இடுப்பையாட்டிக்கிட்டு கூப்ட வொடனே வர்றதுக்கு லட்சுமி என்ன நம்ம வப்பாட்டியா? வந்தா மலை, இல்லாட்டி ஜெயிலு” என அந்த வியாபாரத்தில் பல மலை ஏறி இறங்கிய முருகேசன் சொன்னதை நினைத்துக்கொண்டான்.
தண்டபாணி, முருகேசனுக்கே தொழில் கற்றுக்கொடுத்தவன். ரெண்டாம் நம்பர் தொழிலில் பதற்றங்கள் எதுவும் இல்லாமல் எப்படி ஓடியாடுவது என்பதைத் தண்டபாணியிடம்தான் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். “இந்தத் தொழிலுல பதட்டமும் பயமும் வந்திருச்சுன்னு வை. சீக்கிரமே வயசாயிடும். வெறும் வரட்டிய திங்குறதுக்கா காடு மலைன்னு ஏறி எறங்குறது. காட்டுக் காத்தை உள்ளுக்குள்ள இருந்து சுவாசிக்கறவங்க எப்பயும் யானை மாதிரி பயக்காம திரியணும்” என்றான் ஒருதடவை 1848 சரக்கடிக்கையில்.
எவ்வளவு குடித்தாலும் தண்டபாணியின் மூக்கு முதுகு எல்லாமும் சகலத்தையும் வேவு பார்த்தபடியே இருக்கும். முதுகிற்குப் பக்கவாட்டில் இருக்கிற புதர்ச் செடி காற்றடித்து அசைந்ததாக மற்றவர்கள் சொல்கையில், சருகு மானொன்று கடந்து போனதாகத் தடத்தைச் சுட்டிக்காட்டுவான் தண்டபாணி. அவனுடைய அப்பா காலத்தில் இருந்து சந்தன மரம் வெட்ட அந்தச் சுற்று வட்டார மலைகளில் ஏறி இறங்குகிற தண்டபாணி, மற்ற ஆட்களைப் போல இல்லை. ஒருதடவை மலையேறி விட்டால், குறைந்தது பத்து நாட்களாவது தங்கல் போட்டுவிட்டே வருவான். ஃபாரஸ்டர்களுக்குத் தெரியாமல் சமையல் சாமான்களைப் பாறைப் பொந்தில் ஒளித்துவைத்துக் கொள்வான்.
காட்டில் அவன் தனியாக அலைவது குறித்து வளன் கேட்டபோது, “எதிரே என்ன வருதுன்னு நமக்கும் தெரியும். எதிரே வர்றதுக்கும் தெரியும். ஒரட்டி தெம்புராயனுக்கு களியும் கருவாடும் கொடுத்துட்டா மிச்சத்தை அவம் பாத்துக்குவான். நம்ம நோக்கமெல்லாம் வைரம் பாஞ்ச கட்டை மட்டுந்தான். மத்த உசிரு இல்லையே? சோத்துக்கு தவுத்து வேற உயிர் எதையும் வலுக்கட்டாயமா கொல்லாம இருந்தாலே காடே உன்னை பத்திரமா பாத்துக்கும். வைரம் பாஞ்ச கட்டை ஒன்னும் லேசில தட்டுப்பட்டிராது. பாக்குற எல்லாத்திலயும் வைரம் இருந்திடவும் செய்யாது. பல காலம் அது வெயிலையும் பனியையும் தாங்கி உள்ளுக்குள்ள பொத்தி பொத்தி மரகதக் கல்லு மாதிரி வளர்றது. எல்லா கண்ணுக்கும் அது தெரிஞ்சிடவும் செய்யாது. ஆத்மார்த்தமான தொழில்காரனுக்கு மட்டும்தான் வைரம் கண்டவொடனே தட்டுப்படும். இங்க வைரம் பாஞ்ச கட்டைக்கு மட்டும்தான் மதிப்பு. எல்லா மரத்துக்கும் அந்த அமைப்பு கூடியும் வந்திடாது. மத்ததெல்லாம் நீளமா வளந்திருந்தாலும் வெறும் குச்சிதான். சக்கைதான்” என்றான் தண்டபாணி.
அவன் சொன்னதில் உள்ள உள்ளர்த்தங்களை ஆழமாக உள்வாங்கிய வளனுக்கு, அதை எல்லா இடங்களிலும் பொருத்திப் பார்க்கலாம் என்றும் தோன்றியது. தண்டபாணி ஒருமலையில் தங்கல் போட்டுவிட்டால், மத்தாட்களுக்கு ஒரு மரத்தை விட்டு வைத்திருக்க மாட்டான் என அந்தத் தொழிலில் இருப்பவர்கள் பேசிக்கொள்வார்கள். தண்டபாணியோடு தொழில் தொடர்பில் இருந்த இந்த இடைப்பட்ட காலத்தில், ஒருதடவைகூட பிசிறுடைய சரக்கை அவன் கொண்டு வந்ததேயில்லை என்பதைக் கண்டிருக்கிறான் வளன். “இந்த தொழிலுல இருந்துக்கிட்டு வைரத்தோட பிசினு கைல ஒட்டாட்டி எப்டீ” எனக் கேட்டு அந்தத் தடவை அவன்தான் வளனுடைய உள்ளங்கையை விரித்துத் தேய்த்துவிட்டான்.
வாயகன்ற வட்டக் கட்டையில் வைரம் பாய்ந்திருந்ததைக் காட்டினான். இரண்டரை அங்குலத்தில் படுக்கப் போட்ட சங்கைப் போலத் தோற்றமளித்த, அதனைச் சுற்றிலும் எண்ணெய்ப் பிசுபிசுப்பு மஞ்சள் படலமாய்ப் படர்ந்திருந்தது. அச்சங்கில் ஆழத் துளையிட்டுத்தான் சந்தன எண்ணெயை உறிஞ்சி எடுக்கிறார்கள். அந்த இரண்டரை அங்குலத்தைத் தேடித்தான் உலகெங்கும் காடு, மலை கடந்து ஓடுகிறார்கள் என நினைத்தவாறு வளன் எழுந்துகொண்ட போது, “வைரம் பாயாத கட்டையைத் தவிர வேற எதையும் தொடவே கூடாது. வீம்புக்கு சும்மா நிக்கறத வெட்டுறது பாவம்” என்றான் தண்டபாணி.
அகிலாண்டேஸ்வரி துணை என மேலே எழுதப்பட்ட குட்டி யானை வருவது தட்டுப்பட்டவுடன் அமர்ந்திருந்த எல்லைக் கல்லில் இருந்து எழுந்து நின்ற வளனுக்கு, தண்டபாணியோடு முருகேசனும் ஜோடி போட்டு வருவது தெரிந்தது. வளனுக்கு அருகில் வண்டியை நிறுத்தியதும் முருகேசன் பின்னால் கூண்டுக்குள் தவ்வி ஏறினான்.
“எத்தனை கிலோ கட்டை” கூட்டாளியிடமிருந்து வளனுக்கு தொலைபேசி வந்தது.
“எறநூத்தி நாப்பது கிலோ” என்றான் வளன். தனது தொலைபேசிச் சத்தத்தைக் குறைத்த வளன் வண்டியை ஓரமாக நிறுத்தச் சொல்லிவிட்டு, ஒன்னுக்கடிக்கப் போவதைப் போல தள்ளிப் போய் ஜிப்பை திறந்து விட்டு நின்றான்.
“பார்ட்டிகிட்ட அவனுகளை கூப்டு போயிடாத. ஏதாச்சும் சொல்லி தாக்காட்டி விட்டிரு. ரத்த ருசி கண்டிட்டா நம்மளை தாண்டிப் போயிருவானுக. அவனுங்க எதுவும் தெரியாத காட்டானுக மாதிரி இருக்கற வரைக்குந்தான் நம்ம பொழைப்பு ஓடும்” என்றான் கூட்டாளி கதிரேசன்.
வண்டியைத் தோட்டமொன்றினுள் நிறுத்திவிட்டு காசை எடுத்துக் கொடுத்து, டாஸ்மாக்கிற்கு இருவரையும் இன்னொரு வண்டி போட்டுக் குடிக்க அனுப்பினான் வளன். “எல்லார் பொழப்பும் ஓடணும்ல? பத்து கை நீந்தி சரக்கு போனாலும் அந்த பத்து கையும் சோத்துக்குத்தான நீளுது” என்றான் கிளம்பும் போது தண்டபாணி.
வளன் திரும்பி வந்தபோது, அவர்கள் வழக்கமாக வந்துபோகும் ராமலட்சுமி ஒயின்ஸ் பாரில், முருகேசன் மட்டும் தனித்திருந்தான். “மேல பெரிய சீவன் ஒன்னு வேட்டையில சிக்கிருக்கு. அறுத்துக் கூறுபோட ஆளில்லாம கூப்டதால தண்டபாணி பஸ்ல போயிக்கிறேன்னு கிளம்பிட்டான். எப்டீயும் நாளைக்கு சாயந்திரம் போலத்தான் மலையிறங்குவான்” என்ற போது, நல்லவேளையாகப் போயிற்று என வளன் நினைத்துக்கொண்டான். முருங்கை மரக் கோந்தைப் போல தண்டபாணியோடு எப்பவும் ஒட்டித் திரியும், முருகேசனோடு தனியாகப் பேசப் பல நாட்களாகவே காத்திருந்தான்.
கடைப் பையனுக்குக் காத்திருக்காமல் எழுந்து போய், பீரும் விஸ்கியும் வாங்கிக்கொண்டு வந்து டேபிளில் அமர்ந்த வளன், இரண்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை பைக்குள் இருந்து யார் கண்ணுக்கும் தெரியாமல் உருவி, முருகேசனிடம் கொடுத்த போது, புரியாமல் நிமிர்ந்து பார்த்த, அவனது கறுத்த முகத்தில் மூக்கிற்கு அருகே மஞ்சள் மிக்சர் துணுக்கொன்று ஒட்டியிருந்தது.
“வச்சுக்கோ. தண்ணி அடிச்ச பெறவு கொடுத்தா போதையில தந்தேன்னு சொல்லுவ. உனக்குத் தரணும்னு ரெம்ப நாளா தோணிச்சு” என்றான் வளன். பணிவாகக் கைகளில் ஏந்தி கண்ணில் ஒற்றிக்கொண்ட முருகேசனுக்கு, குடியைவிட தீனிதான் அதிகமும் பிடிக்கிறது என்பதைக் கண்ட வளன், “ஈரல் ப்ரை வாங்கித் தின்னு பாரு. இங்க நல்லா இருக்கும்” என்றான்.
“பேசாம ரூம் போட்டு இன்னைக்கு நைட் இங்க இரு. நாளைக்கு கருக்கல்ல எந்திருச்சு கெளம்பிடு” என்றான் முருகேசன்.
“ரூம்ல இருந்து என்ன செய்ய? அங்கயும் போயி குடிக்கத்தான போறோம். ஒடம்பெல்லாம் சூடா இருக்கு. மசாஜ் பண்ண ஆட்க கெடைப்பாங்களா” என்றான் வளன்.
முருகேசன் யோசித்துவிட்டு, “குத்தாலம் பக்கம் மாதிரில்லாம் இங்க கெடைக்க மாட்டாங்க” என்றான்.
“காசு கொஞ்சம் கூடுதலா குடுத்திடலாம் யார்ட்டயாவது பேசிப் பாரு” என்று சொல்லிவிட்டு அவனுடைய கண்களைக் கூர்ந்து பார்த்து மேஜையினை விரல்களால் சத்தமிடத் தட்டினான்.
“ஆமா நானே கேட்கலாம்ணு இருந்தேன். அடிக்கடி இங்க வந்து போறீயே. ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்க என்ன பண்றன்னு” என்று சொல்லிய முருகேசன் தன்னுடைய தொலைபேசியை எடுத்து எண்களை நோண்டத் துவங்கினான்.
ஸ்பீக்கரில் போட்டு ஒருத்தியை அழைத்தான். “நெனைச்ச நேரத்துக்கு எப்டீ சட்டுன்னு கெளம்பி வர்றது. இங்க திருவிழா நடந்துகிட்டு இருக்கு. பிள்ளைகளுக்கு ஸ்கூலு லீவு வேற. இன்னொரு நாள் வரட்டா. ஆனா காலைல வந்துட்டு மதியத்துக்குள்ள போயிடுவேன்” என்றாள் அவள்.
முருகேசன் உதட்டைப் பிதுக்கிவிட்டு வேறு எண்ணைத் துழாவிக்கொண்டிருந்த போது, “நாங் காட்டுற ஆள் வேணும். ட்ரை பண்ண முடியுமான்னு பாரு” என்றான் வளன்.
அந்தப் போதையிலும் நிமிர்ந்து கூர்மையாகப் பார்த்த முருகேசனின் கண்கள் அரைக் கிறக்கத்தில் தவழவும் செய்தன. அடிக்கடி இந்தப் பக்கம் வந்துபோகும் போது அவளைப் பார்த்திருக்கிறான் வளன். அவளது பெயர் துர்கா என்பதை அறிந்தும் வைத்திருந்தான். அடிவாரத்திலிருந்து மலைக்கு சாலை ஏறுகிற இடத்தில் கம்பங்கூழ் கடை போட்டிருந்தாள். பூப்பெய்துகிற நிலையிலிருந்து அவளது பருவம் முட்டி நிற்பது வரை, அவ்வப்போது இடைவெளி விட்டு வந்து போகையில் தொடர்ந்து கவனித்திருக்கிறான். குறுகிய காலத்திற்குள்ளாகவே அவளது மார்பகங்கள் விளாம்பழத்தைப் போல பழுத்து உருண்டதைப் படிப்படியாகக் கவனித்திருக்கிறான்.
அவன் கவனிப்பதை அவளும் அறிந்திருந்தபடியால், ஈரிழைத் துண்டால் மார்பை மூடிக்கொள்வாள். எல்லாவற்றையும் மீறி ஒருதடவை உள்ளே ஒன்றும் போடாத நிலையில் சங்கிலி தொட்டுத் தடவிய மார்புப் பிளவை வைத்த கண் வாங்காமல் பார்த்தும் இருக்கிறான். பிளவின் வலது ஓரத்தில் மச்சம் ஒன்றிருக்கிறது. சிகரெட்டை பற்ற வைத்தபடி அந்தக் கடைக்கு அவன் சிலநேரங்களில் போய் நிற்கையில், அவள் அம்மாவிடம் அவனைக் காட்டி கூழைக் கொடுக்கச் சொல்வாள். வளன் கிளம்புகிற வரை ஏதாவதொரு பாத்திரம் ஒன்றை எடுத்துப் போய் தூரத்தில் வைத்து அலம்பிக்கொண்டிருப்பாள். அவளது சிவந்த கெண்டைக்காலில் கருப்புக் கயிறொன்று கட்டப்பட்டிருக்கும். முப்பத்து மூன்று வயதான வளன் அவளை நினைத்துப் பலநேரங்களில் கைவேலை செய்கையில் அந்த மச்சத்தை கண்ணுக்குக் கிட்டே கொண்டு வரப் போராடி இருக்கிறான். ஏனோ அவளைச் சம்போகம் செய்ய நினைத்தாலே கசிந்துவிடும் அவனுக்கு.
அப்போதுகூட தன்னிலை தவறி முருகேசன் இருப்பதைக்கூட மறந்து கால்சட்டையின் மேல்புறமாகவே விரலை மேயவிட்டு, உள்ளே கோலிக் குண்டை அழுத்திவிட்ட வளன், உடனடியாகச் சுதாரித்தும் கொண்டான்.
“அப்பனில்லாத பொண்ணு. ஆத்தா மாதிரி இருந்திடக் கூடாதின்னு ஒரு ஊக்கத்தில இருக்கா. அதுமாதிரி ஊக்கத்தை நான் கண்டதில்லை. அந்தத் தேரு தெருவுக்கு வராது” என்றான் முருகேசன்.
“அவதான் வேணும்னுல்லாம் சொல்லலை. ரெண்டு மூணு தடவ ஏக்கமா பாத்த மாதிரி இருந்துச்சு. அதான் வேற ஆட்களுக்கு அவ இருந்தா பாக்கலாம்ணு தோணுச்சு. தப்பா எடுத்துக்காதண்ணே. சின்னப் பய்யன் புத்தின்னு மன்னிச்சு விட்டிரு” என்றான் கவனமாக முருகேசனிடம். தண்டபாணி இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் உடனடியாகவே கதிரேசன் காதிற்குக் கொண்டு போய்விடுவான். பொழைக்கப் போகிற இடத்தில், அதுவும் ரெண்டாம் நம்பர் தொழிலில் இதுமாதிரியான பெண் சகவாசம் இருக்கவே கூடாது என அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பான் கதிரேசன்.
“அதெல்லாம் வாய்ப்பே இல்ல. தங்கமான பொண்ணு. சங்கை எதுக்கு வீம்புக்கு சுட்டு பாக்கணும்? புதுசாட்டும் இருக்குன்னு சும்மா பாத்திருப்பா” என்றான் முருகேசன் தீவிரமான குரலில். அதற்கு மேல் அதை வலியுறுத்தாமல் முருகேசனைக் கிளப்பிக்கொண்டு போய் அறை எடுத்தான் வளன்.
அவளுடைய ஆத்தாளிடம் கொடுக்கச் சொல்லி ஐயாயிரம் ரூபாயைத் தந்தனுப்பிய போதே, நிச்சயம் இரண்டாயிரத்து சொச்சத்தை மட்டுமே முருகேசன் தருவான் என வளன் கணக்கும் போட்டான். அதுவரை அவளது ஆத்தாளை அவன் உடல்மேய உற்றுக் கவனித்ததில்லை. அவளது சிவந்த மேனி கொஞ்சம் தளர்ந்திருந்தாலும், அறைக்குள் வந்தவுடன் கொஞ்சம் பாலீசாக தெரிந்தாள். தனிமையும் தனியறையும் தூக்கலாகச் சிலவற்றை எடுத்துக்காட்டி விடுகிறது.
படுக்கையில் முதுகிற்கொரு தலையணையை வைத்து, கால்களை நீட்டிச் சாய்ந்து அமர்ந்திருந்த வளனின் மீது பக்கவாட்டில் படர்ந்து உடலை அழுத்தினாள் அவள். உடனடியாகப் படுக்கையில் மல்லாக்க அவளைத் திருப்பிப் போடத் தோன்றாததால் ஒப்புக்கு அவளது தலைமுடியை இடது கையால் கோதிவிட்டு, அவ்வப்போது வலது விரல்களால் உதட்டை வலிக்காமல் கிள்ளிக்கொண்டிருந்த அவனது அந்தச் செய்கை ரொம்பவும் பிடித்துவிட்டதைப் போல கண்களைச் சொருகியவள், அவனது விரலை இழுத்து மெல்லமாய்க் கடிக்கவும் செய்தாள்.
“சரக்கடிக்கிறீயா? காசைப் பத்தி யோசிக்காத. இன்னும் எக்ஸ்ட்ராவாவே தர்றேன். எனக்கு ஒடனடியா மேட்டர் பண்ண முடியாது. மனசு லேசாகணும் முதல்ல. அதுக்கு டைம் ஆகும்” என்றான் வளன்.
“அய்யோ வீட்டுக்குப் போகணுமே. மக தனியா இருப்பா. எவ்ளோ தருவ? வேணும்னா நைட் பத்து மணிவாக்கில போயிடட்டுமா” என்றாள். ஐந்து மணி நேரம் இவளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என யோசித்த வளன், “பத்தாயிரம் ரூவா. சரியா திருப்தியா பண்ணி விட்டீன்னா அடிக்கடி வருவேன்” என்றான்.
“அதெல்லாம் எல்லாரும் சும்மா சொல்றது. புதுசு வேணும்னு தேடற ஆம்பளைக்கு இந்த நிமிஷமே பழசுதான்” என்றாள்.
அவளை அப்படியே இழுத்து உதட்டைக் கவ்வி சில நிமிடங்கள் நீடித்த வளனிடம், “இவ்ளோ நேரம் மவுத் கிஸ் கொடுப்பீயா? கொடுத்து வச்சவ உம் பொண்டாட்டி” என்றவளிடம், “எனக்கு கல்யாணம் ஆகலை” என்றான்.
”ஆயி அப்பால்லாம் எங்க இருக்காக” என்றாள் நம்பிக்கை வராத பாவனையில்.
“அவுங்க இல்லை. ஆச்சி ஒன்னு இருந்துச்சு. அதுவும் தவறிடுச்சு” என்று வளன் சொன்ன போது அவள் நிமிர்ந்து கண்களைப் பார்த்தாள். ஒன்றுமில்லை என்பதைப் போல அவன் குனிந்து தம்ளரில் விஸ்கியை நிரப்பினான். அவளது கையை இழுத்துச் சொடுக்குப் போடத் துவங்கினான். ஆற அமர குடிக்கத் தெரியவில்லை எனினும் அவனுக்கு இணையாக விஸ்கியை உறிஞ்சினாள். இடையில் அவனை மடியில் படுக்கச் சொல்லித் தலையைக் கோதிவிட்டபடி பேசிக்கொண்டிருந்தாள். அவன் கழுத்தைத் திருப்பி அவள் வயிற்றைக் கடித்தான்.
அவளது உடலைப் படிப்படியாக வருடிக்கொண்டிருந்த வளன், தொடையில் கடித்தால், அவளுக்குக் கண்சொக்கும்படியாகப் பிடித்திருக்கிறது என்பதைக் கண்டும் கொண்டான். அவளைக் கைக்குள் போட வேண்டுமென்கிற முனைப்போடு முன்னேறிச் செயல்படத் துவங்கிய வளனிடம், வேண்டுபவற்றைக் கேட்டுப் பெற்றவள், “இப்டீயே இருந்திரவா? நீ விட்டாலும் இனிமே நான் விட மாட்டேன் உன்னை” என்றாள் காதருகே கிசுகிசுத்து.
அதற்கடுத்து ஒருநாள் தனியாகக் குட்டி யானையை எடுத்துக்கொண்டு அடிவாரத்திற்குப் போன வளன், தூரத்தில் வண்டியை நிறுத்திவிட்டுத் தயங்கி நின்றான். தற்செயலாக நிமிர்ந்த துர்கா கண்களை விலக்காமல் அவனையே பார்த்தாள். தைரியத்தைத் திரட்டிக்கொண்டு, ஆட்கள் யாருமே இல்லாத கூழ்க் கடையை நோக்கி முன்னேறினான். அவளுடைய ஆத்தாள் கட்சிக் கூட்டமொன்றிற்குப் போயிருக்கிறாள் என்பது தெரியும் அவனுக்கு.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு, கடையாத தயிரைக் கூழோடு கலந்து, ததும்பி வழிகிற மாதிரி ஊற்றி சில்வர் சொம்பை அவனை நோக்கி நீட்டியபடி, “எங்கம்மா ஒரே டார்ச்சரு” என்று சொல்லிய போது, அவளது ஆள்காட்டி விரல் அவனது கையை வருடி விலகியது.
சொம்பைக் கீழே வைத்துவிட்டு, அவனது உள்ளங்கையை முகரத் தூக்குகையில், வெண்ணெய்ப் பசை வளவளவென இருந்ததைப் பார்த்தவுடன், நுனி கசிந்தது அவனுக்கு.