காவி – கார்ப்பரேட் பிடியில் சித்த மருத்துவம்

0 comment

2016ல் மத்திய அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் மருத்துவத்திற்காகச் செய்யும் செலவில் 100 ரூபாயில் 52 ரூபாய் மருந்துகளுக்காகவே செலவிடுகின்றனர். உலக வங்கியின் அறிக்கையின்படி இந்தியர்களின் மருத்துவச் செலவீனங்களில் 30 சதவிகிதம் மட்டுமே அரசின் பங்களிப்பு உள்ளது. அதாவது மக்களின் மருத்துவச் செலவில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக மட்டுமே அரசின் பங்களிப்பு உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகள்கூட மருத்துவச் சேவைகளுக்காக இந்தியாவைவிடக் கூடுதல் நிதிப் பங்களிப்பு செய்கின்றன. ஆனால் இந்திய அரசோ மருத்துவத்திற்கான 70 சதவிகித செலவுகளை மக்களின் மீதே திணித்து தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. இதன் விளைவாக மருத்துவத்திற்குச் செலவுசெய்வதால் மட்டும் ஆண்டுதோறும் இந்திய மக்கள் தொகையில் 7 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் தள்ளப்படுகின்றனர்.

நோய்களுக்கான மருந்துகளைத் தனியார் நிறுவனங்களே தயாரிக்கின்றன. மருந்துத் தயாரிப்பும் அதன் வணிகமும் உலகளாவிய அளவில் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் உள்ளன. மருத்துவத் துறையில் அறிவியல் முன்னேற்றத்தின் போக்கையும் திசையையும் கட்டுப்படுத்தும் சக்திகளாக பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன. எந்த நோய்களுக்கு மருந்துகளின் தேவை அதிகம் உள்ளதோ அவற்றுக்கான மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில்தான் இந்த நிறுவனங்கள் அதிகக் கவனம் செலுத்துகின்றன. ஆய்வில் கண்டறியப்பட்ட மருந்து குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் காப்புரிமைச் சொத்தாக இருப்பதால், அந்த மருந்துக்கான சந்தை விலையை நிர்ணயிப்பதில் அந்நிறுவனத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

காப்புரிமை பெற்ற மருந்து ஒன்றின் தயாரிப்புச் செலவு 10 காசுகளாக இருந்தாலும், அதற்கு அந்நிறுவனம் 100 ரூபாய் விலை நிர்ணயம் செய்யும் உரிமை அந்நிறுவனத்துக்கே உண்டு. மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு மருந்தின் விலையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் எந்த அரசுக்கும் இல்லை. இதை பன்னாட்டு நிறுவனங்கள் உலக வர்த்தகக் கழகத்தின் வர்த்தகம் சார் அறிவுச்சொத்துடைமை (WTO-TRIPS) ஒப்பந்தந்தின் மூலம் சட்டமாக்கியுள்ளன.

உலக வர்த்தகக் கழகத்தின் வர்த்தகம்சார் அறிவுச்சொத்துடைமை (WTO-TRIPS):

முதலாளித்துவத்தின் ஆரம்பகட்டத்தில் ஆலை மூலதனத்தை மட்டுமே நம்பியிருந்த முதலாளி வர்க்கம் பின்னர் ஏகாதிபத்தியமாகப் பரிணமித்தபோது நிதி மூலதனத்தை ஏற்றுமதி செய்து அதிலிருந்து வரும் வட்டியில் ஊறித் திளைத்தனர். தற்போது மறுகாலனியாக்கக் காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால் மூலதனம் முழுவதையும் புதிய ஆராய்ச்சிகளில் முதலீடு செய்கின்றனர். இதனால் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகளை அறிவுசார் சொத்துடைமையாகப் காப்புரிமை (patent/copyright) செய்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் லாபம் அதிகம். இதனால்தான் உலகின் பெரும் பணக்காரனான பில்கேட்ஸ் தன் லாபத்தின் பணத்தை நோய்களுக்கான புதிய மருந்துகள், தொழில்நுட்பங்கள், ஊட்டச்சத்துள்ள புதிய தானியங்கள் போன்றவற்றைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் முதலீடு செய்கிறார். கேட் மிலிண்டா பவுண்டேசன் என்ற அமைப்பின் மூலம் நடத்தப்படும் இவ்வாராய்ச்சியில் வாரன் பப்பெட், முகநூலின் மார்க் ஸூக்கர்பர்க் ஆகியோர்கூட முதலீடு செய்துள்ளனர்.

இத்தகைய ஆய்வுகள் மூலம் பெறப்படும் அறிவியல் தொழில்நுட்பங்கள் மீதான அறிவுசார் சொத்துரிமையும் உலகப் பெரும் பணக்காரர்களின் கையில் கிடைத்த பொன்முட்டையிடும் வாத்து போன்றது. இதனால்தான் ஏகபோக முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக 2005-ல் உலக வர்த்தகக் கழகத்தின் கீழ் Trade Related Intellectual Property Rights (TRIPS) என்ற வணிகம்சார் அறிவுச்சொத்துடைமைக்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா இணைத்தது. அதன்பின் ஒவ்வொரு நாட்டிலும் அறிவுசார் சொத்துடைமைக்கான சட்டத்தை உருவாக்கவும் அது அமெரிக்க நலனை மட்டும் பிரதிநிதிப்படுத்துவதற்கும் பயன்படுத்தி வருகிறது. இதற்கு ஒத்துக்கொள்ள மறுக்கும் நாடுகளை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிகள் குழு (இது அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு வர்த்தகம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கும் குழு- Unted states Trade Representatives – USTR) தனது சிறப்பு 301 (special 301) என்ற பொருளாதார ஆயுதத்தால் மிரட்டுகிறது.

2016-ல் மோடி அரசு வெளியிட்ட அறிவுசார் சொத்துடைமைக் கொள்கை வர்த்தகம் சார் அறிவுச் சொத்துடைமை (TRIPS) ஒப்பந்தத்தை அடியொற்றியே உருவாக்கப்பட்டது. இருந்தும்கூட இந்தியாவைச் சிறப்பு 301ன் முதன்மைக் கண்காணிப்பு வரிசையில் (priority watch list) வைத்து மிரட்டியது. காரணம் 2013-ல் ஜெனிரிக் மருந்துகள் சம்பந்தப்பட்ட நொவார்டிக்ஸ் உட்பட்ட இரண்டு வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக அமைந்தன. அத்தீர்ப்பில் இந்திய மருந்துக் கம்பெனிகள் ஜெனிரிக் மருந்துகளைத் தயாரிக்க விரும்பினால் காப்புரிமை வைத்திருப்பவர்களிடம் அனுமதி பெறாமல் இந்திய அரசு அதற்கென அமைத்துள்ள கமிட்டியில் கட்டாய உரிமம் பெற்று உற்பத்தி செய்யலாம் எனக் கூறியது.

அறிவுசார் சொத்துரிமைக்கு எதிரான இத்தீர்ப்பை எதிர்த்த ஏகாதிபத்தியங்கள், கட்டாய லைசென்ஸ் வழங்கும் கமிட்டியை கலைக்க வேண்டும், இந்தியா இனி கட்டாய லைசென்ஸ் வழங்காது என அறிவிக்க வேண்டும் என நிர்பந்தித்தன. இதற்கு அடிபணிந்த இந்திய அரசும் அவ்வாறே அறிவித்தது. மேலும் இந்திய அறிவுசார் சொத்துரிமைக் கொள்கை வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே மோடி அரசு மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதித்தது. அறிவுசார் சொத்துரிமையின் காரணமாக, உயிர்காக்கும் மருந்துகளின் விலையைப் பன்னாட்டு நிறுவனங்கள் பலநூறு மடங்கு ஏற்றின.

கடந்த ஆண்டு இறுதியில்கூட அமெரிக்க மருந்துக் கம்பெனி எய்ட்ஸ் நோய்க்கான மருந்தின் விலையை 5500 மடங்கு உயர்த்தியது. இத்தகைய கொள்ளையை நியாயப்படுத்திய அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி இம்மருந்திற்கான ஆய்வில் முதலீடு செய்தவர்கள் இதைவிட அதிக விலை நிர்ணயிக்க விரும்புகின்றனர் எனக் கூறினார். அறிவுசார் சொத்துடைமை மனிதனை, மூலதனமாகவும் அறிவைப் பொருளாதாரமாகவும் பார்க்கிறது. இவற்றின் மீதான முதலீடு மாபெரும் லாபத்தைத் தரும் என ஏகாதிபத்தியங்கள் புரிந்து வைத்துள்ளன. பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் மருந்து உற்பத்தி நோய்களுக்கான மருந்து உற்பத்தியை பன்னாட்டு நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. உதாரணமாக, இன்று நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்களைப் பாதிக்கும் காசநோயைக் கட்டுப்படுத்த புதிய மருந்துகளைக் கண்டறிய வேண்டிய தேவை உள்ளது. காச நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்துகள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பின் அந்த நோய்க்கு எதிரான செயல்தன்மையை இழந்துவிடுகிறது. காசநோய்க் கிருமிகள் மருந்துகளிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் தன்னைத் தகவமைக்கின்றன. இந்த நிலை MDR-TB (Multi Drug Resistant Tuberculosis) என்று அழைக்கப்படுகிறது.

அரசு சார் நிறுவனங்கள் மற்றும் பொதுப் பங்களிப்புடன் (US National Institute of Health, US National Institute of Allergy and Infection, T.B.Alliance) MDR-TBக்கான பிடாகுலின் (Bedaquiline) என்ற புதிய மருந்து கண்டறியப்பட்டது. இம்மருந்து ஜான்சன் & ஜான்சன் என்ற பன்னாட்டு நிறுவனத்தால் காப்புரிமை வாங்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது. இந்நிறுவனம் பிடாகுலின் (Bedaquiline) மருந்திற்கு 264 அமெரிக்க டாலர்கள் விலை நிர்ணயித்துள்ளது. அமெரிக்க அரசு சார், பொதுப் பங்களிப்புடன் Bedaquiline மருந்தைக் கண்டறிய நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம் மருந்தின் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதாகும். இந்த ஆராய்ச்சி விதிகளின்படி கண்டறியப்பட்ட மருந்தின் விலை 8 முதல் 16 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டால் இலாபகரமானதாக இருக்கும் என்று மருந்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்களால் முடிவு செய்யப்பட்டது. ஆனால் சந்தைக்கு வந்தபின் மருந்தின் விலை 264 அமெரிக்க டாலர்கள் என்று காப்புரிமை பெற்ற ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தால் விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்ளை லாபம் பார்க்கப்படுகிறது.

பொதுவாக, வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களையே காசநோய் பாதிப்பதால் தன் வருவாயின் பெரும் பகுதியை மருந்திற்காகச் செலவழிக்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது. அவன் செலவழிக்கும் 100 ரூபாயில், 1 ரூபாய் மட்டுமே மருந்தின் தயாரிப்பு செலவு, மீதம் உள்ள 99 ரூபாய் பன்னாட்டு நிறுவனத்தின் லாபத்திற்காகக் கொடுக்கும் தொகையேதான். இப்படி நோயைக்கூட லாபம் பார்க்கும் சந்தை வாய்ப்பாகக் கருதித்தான் பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. காப்புரிமை விதிகளின்படி 20 வருடங்களில் Bedaquiline மருந்தின் காப்புரிமை முற்றுப்பெறுகிறது. ஆனால் மருந்துகளின் வேதியியல் மூலக்கூற்றில் சில மாற்றங்களை ஏற்படுத்தி காப்புரிமையைப் புதுப்பித்து கொள்ளை லாபத்தைத் தக்கவைக்கும் முயற்சியை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மேற்கொள்கிறது. உலக சுகாதார நிறுவனம் MDR-TBக்கான மருந்தாக Bedaquiline மருந்தைப் பரிந்துரை செய்துள்ளது. MDR-TBக்கு மருந்துகள் வேறு எதுவும் இல்லை. எனவே, சுகாதாரத் துறை அரசுடமையாக்கப்பட்ட நாடுகளில்கூட ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் நிர்ணயித்த கொள்ளை விலையில்தான் மருந்தைக் கொள்முதல் செய்யும் சூழலில் உள்ளது.

பாரம்பரிய மருந்துகளே நவீன மருந்துகளுக்கு அடிப்படை:

ஆராய்ச்சியில் மருந்துகளுக்கான மூலக்கூறுகளைக் கண்டறியவும், ஆராய்ச்சியின் போக்கை நிர்ணயிக்கவும் காரணிகளாக அமைபவை அந்த நோய்களுக்குப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் மூலிகைகள் பற்றிய தகவல்களே. மூலிகைகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட வேதியியல் மூலக்கூறுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, செறிவுபடுத்தப்பட்டு புதிய மருந்தாகப் பன்னாட்டு நிறுவனங்கள் சந்தையில் அறிமுகம் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, புற்றுநோய்க்கான மருந்துகளான Vincristine, Taxol இருமலுக்கான மருந்தான Vasicine, வலி நிவாரணியான Morphine, மலேரியாவுக்கான மருந்தான Quinine உட்பட நூற்றுக்கணக்கான மருந்துகள் பாரம்பரிய மருத்துவ முறைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கான மருந்தாகப் பரிந்துரைக்கப்படும் மூலிகைகளில் இருந்து கண்டறியப்பட்டு தனி வேதியியல் மூலக்கூறுகளாகச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டவையே.

இதய நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் Aspirin கண்டறியப்பட்ட வரலாறு, ஐரோப்பியப் பழங்குடிகள் சுரத்திற்கு வெள்ளை வில்லோ (White willow) மரப்பட்டை பயன்படுத்தியதிலிருந்து தொடங்குகிறது. White willow மரப்பட்டையில் இருந்து கண்டறியப்பட்ட Salicin என்ற மூலக்கூற்றில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, செறிவுபடுத்தப்பட்டு Aspirin என்ற மருந்தாக உருமாற்றம் செய்யப்பட்டது. ஒரு நாடு சுகாதாரத்திலும் மருத்துவத்திலும் தன்னிறைவு பெற புதிய மருந்துகளைக் கண்டறியும் ஆராய்ச்சியில் அரசின் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். பாரம்பரிய மருத்துவ முறைகளைச் சரியான கோணத்தில் அணுக வேண்டும். பாரம்பரிய மருத்துவ முறைகளில் மூட நம்பிக்கைகள் தொடர்பான கூறுகளை நீக்கி, அறிவியல் கூறுகளை மீட்டெடுத்து, அதை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் துணைகொண்டு அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் செயல்திட்டத்திற்கான அரசியல் பார்வையுடன் செயல்பட வேண்டும். சீனப் பாரம்பரிய மருத்துவத்திலிருந்து மலேரிய சுரத்திற்கு மருந்து கண்டுபிடித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

1967ஆம் ஆண்டு வியட்நாம் போரின் போது அந்நாட்டு வீரர்கள் பலர் மலேரியா நோயினால் செத்து மடிந்தனர். அப்போது பரவிய மலேரியா, வழக்கமாகப் பரிந்துரைக்கப்படும் Chloroquinine மருந்திற்குக் கட்டுப்படவில்லை. அப்போது சீனாவிலும் மலேரிய சுரம் பெரிய தொற்றுநோயாக உருவெடுத்தது. வடக்கு வியட்நாமின் கம்யூனிஸ தலைவரான ஹோ சி மின், சீன அதிபர் மா சே துங்கிடம் மலேரிய சுரத்திற்கான புதிய மருந்து கண்டறிவதற்கான ஆராய்ச்சிக்கு உதவி கோரினார். மா சே துங்கின் முயற்சியால் Project 253 என்ற செயல்திட்டம் முன்மொழியப்பட்டது. யூ யூ து என்ற பெண் ஆராய்ச்சியாளர் Project 253இன் தலைவராக நியமிக்கப்பட்டார். சீனப் பாரம்பரிய மருத்துவ நூல்களையும் பாரம்பரிய மருத்துவர்களின் பரிந்துரைகளையும் ஆய்வுசெய்தவர், மலேரியவுக்கு சீனப் பாரம்பரிய நூல்களில் குறிப்பிடப்பட்ட மூலிகைகளை வகைப்படுத்தினார். பலகட்ட ஆய்வுகளுக்குப் பின் ‘Artemisia annua’ என்ற தாவரத்தில் இருந்து Artemisin என்ற மருந்தைக் கண்டறிந்தார். இன்று உலகம் முழுவதும் உள்ள மலேரியா நோயாளிகளைச் சாவில் இருந்து பாதுகாக்கும் அருமருந்தாக அது விளங்குகிறது.

சீனப் பாரம்பரிய மருத்துவத்தின் பல்லாண்டு கால அனுபவப் பதிவு அறிவியல்பூர்வமான உரிய அணுகுமுறையால் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தப்பட்டு மக்களுக்கு பயன் அளிக்கிறது. ஆனால் இந்தியாவிலோ பாரம்பரிய மருத்துவ முறைகளும் மருத்துவ அறிவும் பார்ப்பனியம், ஏகாதிபத்தியம் என்ற இருபெரும் தாக்குதல்களால் பெரும்பான்மை மக்களுக்குப் பயன்படாமல் உள்ளது.

சித்த மருத்துவ வரலாறும் பார்ப்பனிய எதிர்ப்பும்:

இந்தியாவில் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி ஆகிய மூன்று பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளன. பாரம்பரிய மருத்துவ முறை என்பது ஒவ்வொரு இனக்குழுவும் தான் வாழும் சுற்றுச்சூழலில் ஏற்படும் நோய்களுக்கு அங்கு கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக்கொண்டு தீர்த்துக்கொள்ளும் மருத்துவமுறை ஆகும். இந்தப் பாரம்பரிய மருத்துவ அறிவை பல ஆயிரம் ஆண்டுகள் இயற்கையோடு நடத்திய போராட்டத்தாலும் இயற்கை குறித்த தத்துவ அறிவு வளர்ச்சியாலும் ஒவ்வொரு இனக்குழுவும் சேகரித்து வைத்துள்ளது. இந்திய நிலப்பரப்பு பன்மைத்தன்மை கொண்டது போல் ஆங்காங்கு வசிக்கும் இனக்குழுக்களுக்கும் பன்மைத்தன்மை உண்டு. இந்தப் பன்மைத்தன்மையைப் பாரம்பரிய மருத்துவ அறிவிலும் காணலாம். இதில் தனிச்சிறப்பானது தமிழர்களின் பாரம்பரியச் சித்த மருத்துவம் ஆகும்.

தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த பல்லுயிர்ச் சூழலில் உள்ள தாவரங்கள் ஏனைய சீவராசிகளின் மாமிசங்கள் போன்ற இயற்கைப் பொருட்களை மருந்தாக உபயோகிப்பது பற்றிய அறிவை, பல்லாயிரம் வருட கால அனுபவத்தின் வாயிலாகப் பெற்றனர். இதனுடன் சீனா, கிரேக்கம் போன்ற நாடுகளுடன் கொண்ட வணிகத் தொடர்பால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் தன்மையைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்தனர். தமிழகத்தில் இருந்த ஆசீவகம், சமணம், பௌத்தம் போன்ற கடவுள் மறுப்புச் சமயங்களின் தத்துவ அறிவால், ஏற்கனவே சேகரிக்கப்பட்ட அனுபவ அறிவு பகுத்தாய்வு செய்யப்பட்டு மேலும் செறிவடைந்தது. பின்னர் சித்தர்களின் பங்களிப்பால் மேலும் வளர்ச்சியடைந்தது. இன்று சித்த மருத்துவம் என்ற பெயரில் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ அறிவாக அடையாளம் காணப்படுகிறது.

ஆசீவகம், சமணம், பௌத்தம் போன்ற சமயங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழர் மருத்துவ அறிவியல் வேத மதத்தை எதிர்த்தே நின்றது. இந்தச் சமயங்கள் பார்ப்பனியத்தால் அழித்தொழிக்கப்பட்டு அதன் அறிவியல் பதிவுகள் பார்ப்பனர்களால் திருடப்பட்ட காலகட்டத்தில், கேட்க ஆளின்றி அடையாள அழிப்பு நிகழ்ந்துகொண்டிருந்த போது சித்தர்கள் சமூகப் புரட்சியாளர்களாக உருவெடுத்து தமிழ்ச்சித்த மருத்துவ வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினர். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின்போது இந்தியாவில் சித்த மருத்துவம் உட்பட பிற இனக்குழுக்களின் மருத்துவ முறைகளை ஆயுர்வேதம் என்று முத்திரை குத்தும் சூழ்ச்சி மேற்கோள்ளப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து இனக்குழுக்களின் பாரம்பரிய மருத்துவ அறிவும் பார்ப்பனியத்தால் சுவீகரிக்கப்பட்டு ஆயுர்வேதம் என மாற்றப்பட்டது. ஒவ்வொரு பாரம்பரிய மருத்துவ முறையையும் வேத-சாஸ்திரங்களோடு தொடர்புபடுத்தியும் அல்லது அதற்கு வேத முலாம் பூசுவதின் வாயிலாகவும் இவ்வேலைகள் நடந்தேறின.

தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளைப் பேசுகின்ற மக்களிடம் உருவான மருத்துவத்தை சம்ஸ்கிருத மொழிவழி உருவான ஆயுர்வேதம் என முத்திரை குத்தப்பட்டது. ஆனால், தமிழ் மருத்துவத்தை சம்ஸ்கிருத மயமாக்குவதற்கு எதிர்ப்புகள் தீவிரமடைந்திருந்தன. இப்போராட்டத்தில் அயோத்திதாசப் பண்டிதர், எஸ்.எஸ்.ஆனந்தம் பண்டிதர் போன்றவர்களின் முயற்சியால் தமிழர்களின் மருத்துவம் சித்த மருத்துவமே என்ற அடையாளம் காக்கப்பட்டது. சித்த மருத்துவர்களான இவர்கள் சித்தர்களைப் போல சாதி அமைப்பை எதிர்த்த சமூகப் போராளிகளாகவும் இருந்தனர். சித்த மருத்துவத்தைக் காக்கும் போராட்டத்தில் பல்வேறு சமூகத்தினரும் பங்களிப்பு செய்துள்ளனர். காதிருமுகையிதீன் இராவுத்தர் என்ற தமிழ் வைத்தியர் 1920-ம் ஆண்டு தமிழ் வைத்தியக் களஞ்சியம் என்ற பத்திரிகையில் திராவிட வைத்திய முறையை ஆயுர்வேதத்திடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற அறைகூவலை வெளியிட்டார். அதில் ”உலகத்தார் யாவராலும் விரும்பக்கூடிய தங்கக்கட்டியைக்கூடத் தன் கவனக்குறைவால் ஒருவன் இழந்து விடுகிறது போல் நாமும் நம்முடைய கவனக்குறைவால் எல்லாச் சரீரிகளுக்கும் தேவையுள்ளதாகிய நம் வைத்திய முறைகளை இழக்கக்கூடிய தறுவாயிலிருக்கிறோம்.
நம்மைச் சுற்றிச் செய்யப்படும் இதர வைத்திய முயற்சிகள் நமது வைத்திய சாஸ்திரங்களையும், தொழிலாளர்களையும் நசுக்கிவிடப் பார்க்கிற இப்போதாவது விழித்தெழுங்கள். ஒன்றுகூடுங்கள். சபைகளையும் சங்கங்களையும் ஏற்படுத்தி அதன் மூலமாய் நம் வைத்திய முறைகளைப் பிரபலப்படுத்துங்கள்” என்று கூறுகிறார்.

ஆனந்தம் பண்டிதரோ தமிழ்ச் சித்த மருத்துவத்தின் தனித்தன்மையை நிலைநிறுத்த 1928-ம் ஆண்டு மருத்துவன் என்ற இதழைத் தொடங்கினார். அதில் தமிழ் மருத்துவம் குறித்த செய்திகளையும் தமிழ் மருத்துவத்தை சம்ஸ்கிருத மயமாக்கும் பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியும் செய்திகள் வெளியிட்டார். ‘தமிழ் வைத்தியமும் சம்ஸ்கிருத வைத்தியமும்’ எனத் தலைப்பிட்டு தொடர்க் கட்டுரையையும் எழுதினார். இக்கட்டுரையில் ‘சித்த மருத்துவம் சம்ஸ்கிருதத்திலிருந்து உருவானது’ எனக்கூறி அதைக் கபளீகரம் செய்வதை எதிர்த்து தமிழர்களுக்கென மருத்துவ அறிவுப் பாரம்பரியம் இருப்பதை எடுத்துரைத்தார். தமிழ்ச் சித்த மருத்துவம் சுயமாக உருவாகி, பிற மருத்துவ முறைகளின் துணையின்றித் தனித்துச் செயல்படுகிறது என்ற வாதத்தை முன்வைத்தார்.

மேலும் சம்ஸ்கிருத வேத சாஸ்திரங்களை வெள்ளையர்கள் அள்ளிக்கொண்டு போய் ஏரோபிளேன், வயர்லெஸ் டெலிகிராம் போன்ற அறிவியல் சாதனங்களைச் செய்கிறார்கள் என்ற பார்ப்பனர்களின் வாதத்தையும் எள்ளி நகையாடினார். பார்ப்பனமயமாக்கலை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் லாப நோக்கத்திற்காக பிரிட்டிஷ் அரசால் திணிக்கப்பட்டு வந்த அலோபதி மருத்துவத்தின் தீமைகளை அம்பலப்படுத்தியும் பேசினார். தமிழ் மொழியில் மருத்துவப் படிப்பு நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

1955-ம் ஆண்டு நடைபெற்ற சித்த மருத்துவ மாநாட்டில் பேசிய ஆனந்தர், “சுமார் நான்கு கோடி தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டில் பல்கலைக்கழகம் ஏன் தமிழ் மொழியில் நடைபெறக்கூடாது? அயல்நாடுகளில் அணுகுண்டு ஆராய்ச்சிகூட அவரவர் நாட்டு மொழிகளில் நடைபெறுகின்றது. நம் நாட்டில் என்ன நடைபெறுகின்றது? இந்திய மருத்துவப் பள்ளியில் மருத்துவம் படிக்கத் தமிழில் நல்லறிவு வேண்டும். ஆங்கிலம் கட்டாயமில்லை எனத் தீர்மானிக்க வேண்டும். ஆங்கிலேய ஆட்சி போனபின் இந்திய மருத்துவக் கல்லூரியில் ஸ்கூல் பைனல் படிப்பு போதாதெனவும், கல்லூரிப் படிப்பு, இண்டர்மீடியட் படித்துத்தான் இந்திய வைத்தியம் படிக்க வேண்டுமெனவும் முடிவுசெய்து நடத்துவதால் தமிழ் மாணவர் பலர், அக்கல்லூரியில் தமிழ் மருத்துவம் படிக்கவியலாமல் இருக்கிறார்கள். இந்தியாவில் இந்திய மருத்துவம் படிப்பதற்கு ஆங்கிலம் இண்டர் படிப்புவரை வேண்டுவதில்லை. அதை மாற்ற வேண்டும். ஆங்கிலேயர் காலத்தில் சென்னையில் அவர்கள் ஏற்படுத்திய ஆங்கில மருத்துவக் கல்லூரியை இந்திய மருத்துவக் கல்லூரியாய் மாற்ற வேண்டும்” என்றார். இந்திய விடுதலைக்குப்பின் திராவிட இயக்கத்தினரின் பங்களிப்பால் சித்த மருத்துவத்திற்கு எனத் தனி கல்லூரிகள் நிறுவப்பட்டன. இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழர் பாரம்பரிய மருத்துவ அறிவியலைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன.

வேதங்களில் மருத்துவ அறிவு உள்ளனவா?

வேதங்களில் மருத்துவம் பற்றிய கற்பனைக் கதைகளே உள்ளன. மருத்துவம் தொடர்பான எந்த அறிவியல் குறிப்புகளும் இல்லை. உதாரணமாக, சிவனை மதியாது தக்கன் செய்த வேள்வியில் கலந்துகொண்ட சூரியனின் பல்லை வீரபத்திரர்கள் உடைத்ததாகவும் அதற்குத் தேவ மருத்துவர்களாகிய அஸ்வினிகள் மருத்துவம் செய்ததாகவும் சந்திரனுக்கு ஏற்பட்ட குறைநோயைச் சரிசெய்ததாகவும் சனீஸ்வரனின் முடமான ஒரு காலை இரும்பினாலான காலைக்கொண்டு அஸ்வினிகள் சரிசெய்ததாகவும் கதைகள் உண்டு என ஆனந்தம் பண்டிதர் கூறுகிறார். நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தில் மட்டும் நோய்களைத் தீர்ப்பதற்கான சில மந்திரங்கள் உள்ளன. அவை எல்லாம் ஒரு கோர்வையாக இல்லாமல் 1 முதல் 9ஆம் தொகுதி, 19ஆம் தொகுதிகளில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த மந்திரங்கள் அனைத்தும் எந்தத் தர்க்க அடிப்படையும் இல்லாமல், கிராமத்துப் பூசாரி பேய் ஓட்டச்சொல்லும் மந்திர உச்சாடனங்கள் போல் உள்ளன. எடுத்துக்காட்டாக, கடவுள்களின் கோபமே சுரம் உண்டாவதற்கான காரணம் என்று கூறும் அதர்வண வேதம், அந்தக் கடவுள்களைச் சாந்தப்படுத்தும் மந்திர உச்சாடனங்களைச் சுரத்திற்கான மருத்துவமாகக் குறிப்பிடுகிறது.

வேதங்களில் குறிப்பிடப்படும் ஒரு சில மூலிகைகள் பற்றிய குறிப்புகள்கூட மருத்துவக் குறிப்புகளாக இல்லாமல் புராணக்கதை தொடர்புடையதாக, அந்த மூலிகைகளைப் புராணக் கதைகளின் கதாபாத்திரங்களாக உருவகப்படுத்தும் வகையிலும் உள்ளன. இப்படி எந்தவிதத் தர்க்க அடிப்படையும் இல்லாத ஹாரி பாட்டர் வகைக் கதைகளும், மந்திரவாதியின் மந்திரங்களின் தொகுப்புதான் வேத- சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள மருத்துவம் சார்ந்த குறிப்புகளாகும்.

வேதங்களில் மருத்துவருக்கு அளிக்கப்படும் மரியாதை:

வேதங்கள் மருத்துவத்தை இழிந்த தொழிலாகத்தான் கருதுகின்றன. அஸ்வினி குமாரர்கள் என்பவர்கள் தேவ மருத்துவர்கள் (கடவுள்களின் மருத்துவர்கள்) என வேதங்கள் சொல்கின்றன. விண்ணில் உள்ள அஸ்வினி தேவர்களின் மருத்துவ அறிவே பூலோகத்தில் ஆயுர்வேதமாக மாறியதாக புராணக்கதைகள் கூறுன்றன. இதே கதையைத்தான் ஆயுர்வேதம் உருவான வரலாறு என்று அரசுசார் ஆராய்ச்சித் துறைகள்கூட கூறுகின்றன. ஆயுர்வேத மருத்துவத்தின் மூலவர்களான அஸ்வினி குமாரர்களுக்கு எந்த வகையான மரியாதை கொடுக்கப்பட்டது என்பதை தைத்திரேய சம்ஹிதையில் உள்ள சில சுலோகங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

அஸ்வினி குமாரர்கள் அசுத்தமானவர்கள் என்பதால் வேள்வியில் பங்குபெறும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. அவர்கள் யாகத்தில் பங்குபெற அனுமதி வேண்டிய போது, அவர்களைச் சுத்தப்படுத்தும் சில சடங்குகள் செய்யப்பட்டன. பஹிஸ்பவமான ஸ்தோத்திரம் என்ற மந்திர உச்சாடனம் மூலம் அவர்கள் சுத்திகரிக்கப்படுகின்றார்கள். பின்னர் அஸ்வினி குமாரர்கள் தங்களுடைய மருத்துவச் சக்தியை மூன்று பங்காக்கி ஒன்றை அக்னிக்கும், ஒன்றை நீருக்கும், ஒன்றைப் பிராமணனுக்கும் பகிர்ந்து அளிக்கின்றார்கள். இந்தச் சடங்குகள் முடிந்த பின்னரே யாகத்தில் பங்கு பெற அனுமதிக்கப்படுகின்றார்கள்.

சதாப்த பிராமணம் என்ற நூலும் அஸ்வினி குமாரர்கள் அசுத்தமானவர்கள் என்று கூறுகிறது. மனு நீதி நூல், மருத்துவர்களை விலக்கி வைக்கப்பட வேண்டியவர்களாகச் சித்தரிக்கின்றது. அவர்கள் கொடுத்த உணவைச் சாப்பிடுவதுகூட தீட்டு என்று கூறுகிறது. இது குறித்து தேவிபிரசாத் சட்டோபாத்யாய தன் நூலில் விரிவாகப் பேசுகிறார்.

இப்படி மருத்துவம் தொடர்பான எந்தத் தர்க்க அடிப்படையும் இல்லாமல், மருத்துவத் தொழிலையே தீட்டாகக் கருதும் வேதங்களும் பிற சம்ஸ்கிருத நூல்களும் தர்க்க அடிப்படையில் நோய்களை அணுகும் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு எப்படி அடிப்படையாக இருக்க முடியும்? ‘ஆயுர்வேதம்’ என்ற பெயரில் ‘வேதம்’ என்ற சொல் இருந்தாலும் ஆயுர்வேதத்திற்கும் வேதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை வேதங்கள் முழுவதையும் படித்தால் தெளிந்துகொள்ளலாம்.

ஆயுர்வேதத்தின் மூலம் எது?

ஆயுர்வேத மருத்துவத்தின் முதல் நூலாகக் குறிப்பிடப்படும் நூல் சரகர் என்பவரால் இயற்றப்பட்ட சரக சம்ஹிதை ஆகும். சரக சம்ஹிதையின் காலம் பற்றி பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதன் காலம் 2ஆம் நூற்றாண்டு முதல் 4ஆம் நூற்றாண்டு வரை என்றும், கி.பி 6ஆம் நூற்றாண்டுதான் சரக சம்ஹிதை எழுதப்பட்ட காலம் என்றும் இரு வேறு கருதுகோள்கள் உள்ளன. வேதகாலம் என்று குறிக்கப்படும் காலகட்டத்திற்கும் சரக சம்ஹிதையின் காலத்திற்கும் இடையே பல நூற்றாண்டு கால இடைவெளி உள்ளது. வேதத்தில் சொல்லப்பட்ட மருத்துவ அணுகுமுறைக்கும், சரக சம்ஹிதையின் மருத்துவ அணுகுமுறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வேதகாலத்து அறிவியலின் தொடர்ச்சியே சரக சம்ஹிதை என்று குறிப்பிடவும் எந்த ஆதாரமும் இல்லை. பல நூற்றாண்டு கால இடைவெளியில் வேதம் தர்க்க அடிப்படையிலான மருத்துவ அறிவாகப் பரிணாமம் அடைந்தது என்று கருதவும் முடியாது.

ஏனெனில், சரக சம்ஹிதை எழுதப்பட்ட காலத்தில் வேதமும் வேத மதமும் எந்த மாற்றத்துக்கும் தன்னை உள்ளாக்காமல் இறுக்கத்துடன் இருந்தது. இன்று வரை அதே நிலைதான் தொடர்கிறது. சரக சம்ஹிதையின் மூலம் வேதம் இல்லை என்றால், சரக சம்ஹிதை எதன் அடிப்படையில் எழுதப்பட்டது? சரக சம்ஹிதைக்கு அடிப்படையான தர்க்க வாதமும் அதன் தத்துவ அணுகுமுறைக்கு அடிப்படையான அறிவும் எங்கிருந்து பெறப்பட்டது?

சரக சம்ஹிதையை எழுதியவராக அறியப்படுபவர் சரகர். கனிஷ்கரின் அவையில் இருந்த சரகர் என்பவர்தான் சரக சம்ஹிதையை எழுதிய சரகர் என்று நம்பப்படுகிறது. ஆனால் சம்ஸ்கிருதத்தில் ‘சரகர்’ என்ற வேர்ச்சொல்லை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், சரகர் என்றால் ‘நாடோடி’ என்று பொருள் கொள்கின்றனர். இந்தியத் துணைக்கண்டத்தில் வேதங்களுக்கு எதிராக உருவான சமயங்களான ஆசீவகம், சமணம், பௌத்தம் போன்ற சமயங்களின் துறவிகள் ‘சிரமணர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் ஒரு இடத்தில் தங்கியிருக்காமல் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு மருத்துவமும் செய்துவந்தனர். சரக சம்ஹிதை என்பது ஒரு குறிப்பிட்ட நபரால் எழுதப்பட்ட நூல் அல்ல, பல நாடோடி மருத்துவ அறிஞர்களின் தொகுப்பு என்று இந்தியாவின் பாரம்பரிய அறிவியல் வரலாறை ஆராய்ந்த அறிஞரான தேவிபிரசாத் சட்டோபாத்யாயா குறிப்பிடுகின்றார்.

சரக சம்ஹிதையையும் தொல்காப்பியத்தையும் ஒப்புநோக்கி ஆராய்ந்த பேரா.நெடுஞ்செழியன், இவை இரண்டும் ஒரே அமைப்பு முறையில் இருப்பதை ஆராய்ந்து ‘தொல்காப்பியமும் சரக சம்ஹிதையும்’ என்ற நூலைப் படைத்துள்ளார். தமிழர்களின் வாழ்வியல் நெறிமுறைகளையும் இங்கு நிலவிய சமயங்களின் தத்துவ அடிப்படையையும் கொண்டு எழுதப்பட்ட தொல்காப்பியமே, சரக சம்ஹிதைக்கு மூலநூலாக இருந்தது என்று விரிவான ஆதாரங்களுடன் நிறுவி உள்ளார். சமண மத நூலான பகவதி சூத்திரத்தில் ஆசீவக மத முன்னவரான மற்கலி கோசரைச் சந்தித்து தத்துவங்கள் கற்றுக்கொண்ட ஆறு சிரமணர்கள் பற்றிய குறிப்பு உள்ளது. அதில் ஒருவரான அக்னிவேசரே சரக சம்ஹிதையில் சரகரின் குருவாகக் குறிப்பிடப்படும் அக்னிவேசர் என்று ஏ.எல்.பாஷம் குறிப்பிடுகிறார். மொத்தத்தில் கடவுள் மறுப்பு, வேத எதிர்ப்புச் சமயங்களான ஆசீவகம், சமணம், பௌத்தம் வளர்த்தெடுத்த தர்க்கவாத தத்துவ அடிப்படையில் அமைந்ததே ஆயுர்வேத மருத்துவ நூல்கள்.

ஆயுர்வேத மருத்துவ நூல்களில் பெரும்பாலானவை பௌத்தர்களால் எழுதப்பட்டவை. பௌத்தர்கள் அல்லாத மற்ற நூலாசரியர்களால் இயற்றப்பட்ட நூல்களும்கூட வேத மறுப்பு சமயங்களின் தத்துவ அடிப்படையில் எழுதப்பட்டவையே. ஆனால் இவை அனைத்தும் சம்ஸ்கிருத மொழியில் அமைந்த ஒரே காரணத்தால் ஆயுர்வேதம் வேதத்தின் மருத்துவ அறிவு என்றும் கடவுளால் விண்ணில் இருந்து மண்ணுக்கு இறக்கி வைக்கப்பட்டது என்றும் கட்டுக்கதைகளைக் கூறி காவிக்கூட்டம் வரலாறை இருட்டடிப்பு செய்கிறது.

வேத மறுப்பு சமயங்களான ஆசீவகம், சமணம், பௌத்தம் என அனைத்தும் மக்களின் துன்பத்திற்குக் காரணமான நோயைப் போக்கும் வழியை பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்தன. நோய்களுக்கான காரணம், அதற்கான மருத்துவம், மருந்துகள் என அனைத்தையும் பொருள்முதவாதக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பாரம்பரிய மருத்துவ அறிவியலைத் தர்க்க அடிப்படையில் வரையறுத்தனர். இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள பல்வேறு இனக்குழுக்களின் மருத்துவ முறையைத் தொகுத்து தாங்கள் வகுத்த தத்துவங்களின் அடிப்படையில் ஆராய்ந்து நூல்களாகப் பதிவுசெய்தனர். நாலந்தா பல்கலைக்கழகம் போன்ற பௌத்த மத நிறுவனங்கள் இதில் தனிக்கவனத்தைச் செலுத்தின. அப்போது ஆதிக்க மொழி சம்ஸ்கிருதம் என்ற காரணத்தால், வாதத்தின் மூலம் கருத்துகளை நிறுவும் உபாயத்தைக் கையாண்ட பௌத்தர்கள், அதிகாரத்தின் துணைகொண்டு தங்கள் மதத்தை வளர்ந்த வேதியர்களுடன் வாதம் செய்ய வசதியாக தங்களுடைய பதிவுகள் பலவற்றையும் சம்ஸ்கிருத மொழியில் நூல்களாக வடித்தனர்.

மோடி அரசின் பார்ப்பனியமயமாக்கல் நடவடிக்கை:

பிரிட்டிஷ் காலனியாதிக்க காலத்தில் பார்ப்பனர்கள் செய்ததுபோல் இன்றைய மறுகாலனிய இந்தியாவில் ஒற்றை நாடு, ஒற்றைக் கலாச்சாரம் என்ற காவிக் கொள்கையின் அடிப்படையில் இந்திய மருத்துவத்தின் பன்மைத்தன்மையை அழித்துவிட்டு ஆயுர்வேத மருத்துவமே இந்தியப் பாரம்பரிய மருத்துவம் என்ற கருத்தை BJP/RSS கும்பலும் ஆளும் வர்க்கமும் முன்னிறுத்துகிறது. அதிகாரத்தின் துணைகொண்டு சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பார்ப்பனியத்தின் அங்கமாக முன்னிறுத்தும் காவிக் கூட்டத்தின் சூழ்ச்சிகள் மோடி ஆட்சியில் தீவிரமாகியுள்ளன.

உதாரணமாக,

1.இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் பெயரை ‘இந்திய மருத்துவம் (Indian medicine)’ என்பதிலிருந்து ‘ஆயுஸ்’ (AYUSH) என்று மாற்றம் செய்திருக்கிறார்கள். AYUSH என்பதன் விளக்கம், A-Ayurveda, Y-Yoga, U-Unani, S-Siddha, H-Homeopathy என்பதாகும். AYUSH என்ற சம்ஸ்கிருத பெயர் ஆயுர்வேதமே இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறை என்ற ஒற்றை அடையாளத்தை உலக அரங்கில் உருவாக்கவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

2.மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சித்த மருத்துவ நூல்களை ஆயுர்வேதம் என்று பதிவுசெய்து சட்டப்படியான அறிவுத் திருட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புலிப்பாணி என்ற சித்தர் எழுதி தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட ‘புலிப்பாணி வைத்திய சாஸ்திரமு’ என்ற நூலை எந்த அடிப்படையும் இல்லாமல் ஆயுர்வேத மருத்துவ நூலாகச் சட்டப்படி பதிவுசெய்யும் முயற்சி நடந்து வருகிறது.

3.வர்ம மருத்துவத்திற்கும் ஆயுர்வேதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற போதும், மொழிக்கலப்பைக் காரணம் காட்டி, தமிழில் உள்ள வர்ம மருத்துவ நூல்கள் எல்லாம் ஆயுர்வேதம் என்று கூறி அவற்றை ஆயுர்வேத ‘மர்ம மருத்துவமாக’ மாற்றுவதற்குத் தீவிர முயற்சிகள் நடக்கின்றன.

4.தமிழகத்தில் ஆயுர்வேதக் கல்லூரிகளை அரசே திறந்து வைத்து அதில் படித்து வெளியேறும் மருத்துவர்களைக் கொண்டு ஆயுர்வேதம்தான் தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவமுறை என்று பதிவுசெய்யும் முயற்சி ஒரு அரசியல் செயல்திட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

5.’திருக்குறளில் ஆயுர்வேத மருத்துவக் கருத்துகள்’ என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஒரு நூலை வெளியிட்டுள்ளார். ‘திருக்குறள்- மனுதர்மத்தின் சாரம்’ என்ற நூலை நாகசாமி வெளியிட்டுள்ளார். இவர் தற்போது செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ளார். நவீன கண்டுபிடிப்புகள் அனைத்தும் வேத சாஸ்திரங்களிலேயே சொல்லப்பட்டுள்ளன என்பது போன்ற மூடநம்பிக்கைகளே இன்று மனிதவள மேம்பாடு அமைச்சகம், அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கொள்கை முடிவுகளாகியுள்ளன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் யோகா, ஆயுர்வேதம், சம்ஸ்கிருத மொழி ஆகியவை பாடங்களாகியுள்ளன. பாபா ராம்தேவ், ரவிசங்கர் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் ஆன்மீகம், ஆயுர்வேதம், யோகா என்ற போர்வையில் இந்துத்துவக் கருத்தியலை மக்களிடம் பரப்புபவர்களாகவும் அதன் மூலம் பல்லாயிரம் கோடி லாபமீட்டக்கூடிய முதலாளிகளாகவும் மாறியுள்ளனர்.

ஆயுர்வேதம் எனும் பொன்முட்டையிடும் சந்தை:

பாபா ராம்தேவ், ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் வெளிப்படையாகவே BJP/RSSன் இந்துத்துவக் கொள்கைகளை யோகா, ஆன்மீகம், ஆயுர்வேதம் என்ற பெயர்களில் மக்களை ஏற்றுக்கொள்ள வைக்கின்றனர். அதே வேளையில் இதன் மூலம் பல்லாயிரங்கோடி லாபம் ஈட்டுபவர்களாகவும் அதிகார மையங்களாகவும் மாறியுள்ளனர். பாபா ராம்தேவினுடைய பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேதப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது.

இவர் 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். இதற்கு வெகுமதியாக Z-பிரிவு பாதுகாப்பு, யோகா மேம்பாட்டிற்காகத் தனித்தீவுகள், மிகக்குறைந்த விலையில் பதஞ்சலி நிறுவனத்திற்காகப் பல நூறு ஏக்கர் நிலம், பதஞ்சலி பொருட்களை அரசு கேண்டீன்களில் விற்பனை செய்வதற்கு முன்னுரிமை எனப் பல சலுகைகளை மோடியும் BJP ஆளுகின்ற மாநில அரசுகளும் செய்து தந்துள்ளன. இதன் விளைவாக 2011-ம் ஆண்டு 350 கோடியாக இருந்த பதஞ்சலி நிறுவனத்தின் மொத்த வருவாய், 2017-ல் 10,500 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது ரவிசங்கரும் ஆயுர்வேதப் பொருட்களை விற்பனை செய்வதற்காக ‘Sri Sri Ayurveda Trust’ என்ற அமைப்பின் கீழ் 1000 விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

நெஸ்லே, யுனிலிவர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள்கூட தங்களுடைய பொருள்களுக்கான விளம்பரங்களில் ‘வேதங்களில் சொல்லப்பட்ட அறிவைக்கொண்டு’ ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்டவை என விளம்பரப்படுத்துகின்றன. உதாரணமாக, கோல்கேட் பற்பசையில் சில மூலிகைகளின் மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டு ‘வேத சக்தி’ என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படுகிறது. பார்ப்பன மேலாதிக்கத்திற்காகப் பல தேசிய இனங்கள், இனக்குழுக்களின் மருத்துவ முறையை ஆயுர்வேதமாக மாற்றிய பார்ப்பனர்கள், தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களோடு சேர்ந்து ஆயுர்வேதத்தைப் பல்லாயிரங்கோடி வருவாய் ஈட்டித்தரக்கூடிய மருத்துவ முறையாகச் சந்தைப்படுத்தியுள்ளனர்.

பாரம்பரிய மருத்துவத்தை மக்களுக்கானதாக மாற்றுவோம்:

இன்றைய தனியார்மயச் சூழலில் மருத்துவ வணிகம் மக்களை வறுமைக்கோட்டிற்குக் கீழ் தள்ளும் முதன்மையான துறையாக உள்ளது. அதை எதிர்கொள்ள மருத்துவத் துறையை அரசுமயமாக்குவது மட்டுமே தீர்வாகாது. புதிய மருந்துகளைக் கண்டறியும் மருத்துவ ஆராய்ச்சித் துறையையும் மருந்து உற்பத்தியையும் அரசுடமையாக்க வேண்டும். பாரம்பரிய மருத்துவ முறைகளில் இருந்தே மருத்துவ ஆராய்ச்சி வேர் கொள்வதால் பாரம்பரிய மருத்துவ அறிவியலை, நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் துணைகொண்டு ஆராய்ந்து நம் மக்களின் நோய்களுக்கான மருத்துவத் தீர்வுகளை உருவாக்குவதே சிறந்த வழியாக இருக்க முடியும். இந்தத் தீர்வை நோக்கிய பயணத்தில் முதல்படி பார்ப்பனியத்தின் பிடியில் இருந்து மருத்துவ அறிவியலை விடுவித்து அதன் புனிதப் பிம்பத்தை உடைத்து ஆய்வுக்கு உட்படுத்துவதுதான்.

இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் மருத்துவத்துறையும் மருந்து உற்பத்தியும் நோய்களுக்கான மருந்து ஆராய்ச்சியும் அதன் உரிமைகளும் இந்தியத் தரகு முதலாளிகளிடமும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. நீட் தேர்வு உட்பட மருத்துவம் சார்ந்த அனைத்து கொள்கை முடிவுகளும் ஏகாதிபத்தியங்களின் கட்டளைக்கு உட்பட்டே எடுக்கப்படுகின்றன. இந்த அரசும் அதன் அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் வெளிப்படையாகவே தனியார்மயத்தின் புரவலராக மாறியுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவக் கல்வியிலும் மருத்துவத்துறையிலும் புகுத்தப்பட்ட தனியார்மயக் கொள்கையினால் பொது சுகாதாரத்திற்கான அரசின் நிதி ஒதுக்கீடு வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் கொள்ளை லாபத்தினால் பெரும்பான்மையான மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்படுகின்றனர். தற்போது பாரம்பரிய மருத்துவ முறைகளும் தனியார்களின் லாபமீட்டுவதற்காக ஒழுங்கமைக்கப்படுகிறது. அதற்காகவே ஆயுஸ் (AYUSH) என்ற அமைச்சகத்தை மோடி அரசு உருவாக்கியுள்ளது.

இச்சூழலில் பாரம்பாரிய மருத்துவத்தை பெரும்பான்மை மக்களுக்குப் பயன்படக்கூடியதாக மாற்ற வேண்டுமென்றால் பார்ப்பனியத்தோடு பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருந்தும் இந்திய மருத்துவத்தை விடுவித்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

*

நூல்: “காவி – கார்ப்பரேட் பிடியில் சித்த மருத்துவம்”.
வெளியீடு: பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, நெல்லை.