இசையின் முகங்கள் (பகுதி 2): வி.குமார்

3 comments

இசை பிரபஞ்சத்திற்கு ஒரு ஆன்மாவையும், மனதிற்குச் சிறகுகளையும், கற்பனைக்கு விமானத்தையும், எல்லாவற்றிற்கும் வாழ்வையும் தருகிறது என்பது ப்ளேட்டோவின் கூற்று. இசை நம்மை உணர்வுப்பூர்வமாகத் தொடுகிறது. வார்த்தைகளால் அது முடியாது என்றார் ஜானி டிப். மொஸாட்டின் பார்வை நூதனமானது. இசை என்பது இசைக்குறிப்புகளில் இருப்பதல்ல. மாறாக இருபுறமும் அணைக்கும் நிசப்தத்தில் இருப்பது என்கிறார். தல்ஸ்தோய் சொன்னது எனக்கு மிகவும் உவப்பான இசைமொழி. “இசை என்பது உணர்வுகளின் சுருக்கெழுத்து”. என்ன அற்புதமான சொல்லாடல்?

ஜிமி ஹென்றிக்ஸ் சொல்வதுதான் சரி. இசை எனது மதம் என்கிறாரல்லவா?

இசையைக் கனவாக வரித்துக்கொள்வது மகோன்னதம். இசையைத் தன் பேச்சு மொழியாகவே மாற்றிக்கொள்வது ஒருவகை தியானம். இசையன்றி வேறேதும் அறிவதற்கில்லை என்றாகும் போது மனம் காற்றில் அலைகிற இறகு போல் மிக மெல்லியதாகிறது. இசைஞர்களின் வாழ்வு நிதானப்பட்டு விடுகிறது. அவர்களது கடிகார முட்கள் வெறுமனே சப்தித்த வண்ணம் நகர்வதில்லை. மாறாக, இசைத் துடிப்புகளால் ஆகிறது காலம்.

இசைக்கருவிகளின் பிடியிலேயே எப்போதுமிருக்கின்ற போக்கினைத் தன்னாலான அளவு மாற்ற முயலுவது இசைஞர்களின் வழக்கமான பிரியம்தான். முற்றிலும் புழக்கத்தில் இல்லாத புதுவகை வாத்தியங்களைப் பயனுறுத்துவதும் மேலதிகமாக இசையற்ற சப்தங்களை இசைக்குள் நகர்த்திக் கொணர்வதுமான சவால்களின் மீது இசைஞர்களின் பிடிமானம் எப்போதும் நிலைகொள்வதும் வழக்கம். மனோபாவங்களை இசைப்பதுதான் இசைத்தலின் ஆகக் கடினமான பகுதி. அதனை அனாயாசமாகச் செய்து பழகியவர்கள் பெரும்பாலும் தன் வியப்பு இன்றித் தங்கள் இசைத்தலினின்றும் துண்டித்துக்கொண்டு மௌனத்தின் இருள் ஆழத்தை நோக்கி எளிதில் உருமாற்றம் கொண்டவாறே பயணிக்கக் கூடியவர்கள். மனத்தின் திசைகளெங்கும் உலாவித் திரும்புகிற வல்லமை இசைவழி சாத்தியமே!

திரை இசை என்பது கட்டுப்பாடுகளுடன் கூடியே எப்போதும் இயங்கத் தலைப்படுவது. படைப்புருவாக்கத்தில் சுதந்திர வாதமும், தன்முனைப்பும், சுய அபிமானத் தீர்மானக் கண்டடைதல்களும் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் வழங்கப்படுகிறாற் போல் தொனிப்பது தோற்ற மாயை. அப்படியான மாயை நிரந்தரமாக நிலைத்துத் தெரிந்தாலும் கண்ணுக்குத் தெரியாத நிர்பந்தங்களின் நீள அகலங்களுக்குள்ளாகவே பரிபாலிக்க வேண்டிய நிர்பந்தம் திரைத்துறையில் எப்போதும் இருப்பது. மக்கள் விருப்பம், தனிநபர் வெற்றி ஆகிய இரண்டு பெரிய காரணிகளுக்கு உட்பட்ட தாள ஆட்டம்தான் கதையாகவும், வசனமாகவும், நடிப்பென்றும், இயக்கமென்றும், இசை, பாடல், வரி என எல்லாமுமாய் வியாபிப்பது. ஒருவர் தனித்து அறியப்படுகிற வெற்றிக்கோட்டைத் தொடுவது வரை செய்தாக வேண்டிய சமரசம், வெற்றிக் காற்று வீசத்தொடங்கிய பிறகு மெல்ல மாற்றம் பெறும். எழுந்து நிற்பதற்கே, கால் கடுக்கப் பலமணி நேரம் நின்றாக வேண்டும் என்பது ஆசன நுனியில் அமர்வதன் மீதான ஏக்கத் தேட்டத்தை நியாயம் செய்துவைக்கும். பெயரெழுதிய நாற்காலியைச் சென்றடைவதற்குள் பலமுறை மரித்துப் பிறந்தாக வேண்டும். இந்த இடத்தில் இசை, குரல், பாடல் புனைவு ஆகியவை திரைப்படத்தின் பின்புல உருவாக்க நடைமுறையின் கீழ் தொடங்கி முடிவது. இத்தகைய கலையின் பின்னுறையும் வலியைக் கையளிப்பதற்கான சதவிகிதத்தைச் சற்றே மாற்றியமைக்கக்கூடும்.

பாடல் நிசமாகவே ஒரு வினோத பண்டம். அடுத்து மக்களுக்கு எது பிடிக்கும் என்பதை ஏற்கனவே பிடித்ததைச் சலித்துச் சலித்து, இழைத்து உருவாக்க வேண்டிய நிர்பந்தமும் ஒருங்கே புத்தம் புதியதை ஆக்குவதற்கான கட்டாயமும் முள்ளொடு மலரென ஏக காலத்தில் உயிர்க்கக் கூடியது. தென்னிந்தியத் திரையிசையைப் பொறுத்தவரை, மலையாளப் படப்பாடல்கள் பெரிதும் பாரம்பரியச் சாய்வுடன் திகழ்ந்துகொண்டிருந்த போது, தெலுங்குப் பாடல்கள் மேற்கத்திய சார்புகளோடு உருவாக்கப்பட்டன. கன்னடப் பாடல்கள் சற்றே தேக்கத்தோடு தெலுங்குத் திரையிசையின் சார்புடனும் கர்நாடக இசைச் சாய்வுகளோடும் உண்டாகின. அந்த நேரத்தில் மற்ற மொழிகளைக் காட்டிலும் மேலோங்கிய உருவாக்கத்தோடு திகழ்ந்துகொண்டிருந்தது தமிழ்த் திரையிசை. போலச்செய்தலும் தழுவலுமான பாடல்கள் திரையிசை உருவாக்கத்தில் சர்வ காலத்திலும் இருந்துகொண்டிருந்த போதிலும் அச்சு அசலான உருவாக்கங்களோடு ஒப்பிடுகையில் அவ்வகையிலான தழுவல்களின் சதவீதம் மிகவும் குறைவு என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

திரைப்படம் கதையில் தொடங்கி உருவம், உள்ளடக்கம், வசனம் எனப் பல விதங்களிலும் மெல்ல நெகிழத் தொடங்கிய காலம் என்று அறுபதுகளின் பிற்பாகத்தைச் சுட்ட முடிகிறது. மாய மந்திர அரச கதைகள் மிகுந்திருந்த திரையுரு நாற்பதுகளில் தொடங்கி ஐம்பதுகளில் சமூக- சரித்திரப் படங்களாக இருமை கொண்டது. அறுபதுகளில் அதிபுனைவு- சமூகம்- புராணம்- சரித்திரம் என்று உட்பகுப்புக் கண்டது. எழுபதுகளில் உலர்ந்த மேலோட்டமான சிற்றிழையை ஊதிப் பெருக்கிய கதைகள் அதிகம் புனையப்பட்டன. குடும்ப நாடகீயக் கதைகளும் பெரும்பான்மை எண்ணப்போக்கிலிருந்து விலகத் தலைப்பட்ட மீறல்களையும் விழுமிய உடைபாடுகளையும் கதைப்படுத்திய படங்கள் எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து ஆங்காங்கே செல்வாக்கு பெறத்தொடங்கின.

முதல் வண்ணப்படம்

அதே நேரத்தில் அறுபது-எழுபதுகளின் பிரம்மாண்டம் படங்களை வண்ணப் படங்களாக எடுப்பதில் தொடங்கிற்று. கருப்பு வெள்ளைப் படங்கள் இரண்டாம் படிநிலைகளில் நின்றுகொண்டன. சில படங்கள் பெரும்பகுதி கருப்பு வெள்ளையில் எடுக்கப் பெற்று ஒரு சில பாகம் மட்டும் வண்ணம் பொழிந்ததும் நிகழ்ந்தது. வண்ணம் எந்தவிதமான தனி விளைச்சலையும் தரவல்லதா என்பது தெரியாத வரைக்கும் அதன் மீது செலவழித்துப் பார்க்கிற துணிச்சல் எல்லோர்க்கும் ஏற்படவில்லை. ஆங்காங்கே கலர்ப் படங்கள் வென்றன என்றாலும் கையடக்கமாக சிக்கனமான உருவாக்கத்துக்குத் தோதாகத் திகழ்ந்தவை கருப்பு வெள்ளைப் படங்களே.

தமிழ்த் திரை-இசை என்பதைப் பொறுத்தமட்டில் 1960 தொடங்கி 1979ஆம் ஆண்டு வரையிலான இரண்டு தசாப்த காலத்தில் பல்வேறு வளர்சிதை மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன.

தமிழின் ஆகச்சிறந்த திரையிசை இருவரான மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும் டி.கே.ராமமூர்த்தியும் 1965ஆம் ஆண்டில் தனித் தனியாகப் பிரிந்து இசையமைக்கத் தொடங்கினார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழ்த் திரையிசையின் உச்சத்தில் அடுத்த 10 ஆண்டுகள் வீற்றிருந்தார். அவரோடு சரியாசனம் கொண்டு சமநிகர் வலம் வந்தார் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன். டி.ஆர்.பாப்பா, எஸ்.எம்.சுப்பையா நாயுடு எனப் பல ஜாம்பவான்களின் பெயர்களை வரிசைப்படுத்தும் போது மறக்கவும் மறுக்கவும் முடியாத இன்னொரு பெரும் மேதையின் பெயருண்டு.

அவர்தான் மெல்லிசை மாமணி வி.குமார் என்கிற வி.கே.

வி.குமாரின் இசையுலகம் அலாதியானது. மெல்லிசைப் பாடல்களின் சக்கரவர்த்தி குமார். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆகச்சிறந்த பல பாடல்களை எழுபதுகளில் இசைத்தவர் குமார். பின்னணி இசை, பாடல் இசை பற்றிய தெளிவான தீர்மானம் கொண்டவர் வி.கே. எண்பதுகளில் தமிழ்த் திரைப்பாடலின் அடையாள மாற்றங்களை எழுபதுகளில் தீர்மானித்த பல ஆதாரமான பாடல்களை குமார் உருவாக்கினார். பாடலின் தொடக்கம், இசையின் மேல் எழுச்சி, குரலில் துவக்கம், பல்லவியை தொடங்கி தருகிற இசை, மைய இசை, குரலின் தன்மை, பாட்டின் தொனி, இடையிசை என எல்லாவற்றிலும் வித்தியாசங்களை உட்படுத்திப் பல பாடல்களை இசைத்தார்.

ஒரு பாதுகாப்பான அறிமுகமாக கே.பாலச்சந்தருக்கு தெய்வத்தாய் திரைப்படம் அமைந்தது. ஏற்கனவே சென்னை மாநகரத்தில் தன்னுடைய தொடர்ச்சியான நாடக வெற்றியின் மூலமாக கவனத்தை ஈர்த்திருந்த கே.பாலச்சந்தர், சினிமாவில் ஒரு கதை வசனகர்த்தாவாக அறிமுகம் ஆனது அடுத்த நிலையை நோக்கிச் செல்வதற்கான ஒரு வழியைத் திறந்து வைத்தது. மாதவன் இயக்கத்தில் தெய்வத்தாய் திரைப்படம் மிக நல்ல வெற்றியை அடைந்தது என்றபோதும், கதை வசனகர்த்தாவாக தொடர்ச்சியாக அவர் எம்.ஜி.ஆர் திரைப்படங்களை நோக்கி நகராமல் தன் அடுத்த படங்களைத் தேடலானார். அவருடைய கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றோடு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் சர்வர் சுந்தரம் திரைப்படம் வெளிவந்து தேசிய விருது வரை அதன் வெற்றி அமைந்தது. நாகேஷ் மிக ஒரு வலுவான இரசிகர் கவனத்தை இந்தப் படத்தின் மூலம் ஏற்றார், ஈர்த்தார். அதற்குப் பிறகு மூன்றாவதாக முக்தா சீனிவாசன் இயக்கத்தில், அவருடைய தயாரிப்பில், கே.பாலச்சந்தர் கதை, வசனம் எழுதிய பூஜைக்கு வந்த மலர் திரைப்படம் வெளியாயிற்று. இந்தப் படமும் ஒரு வெற்றிப் படமாகவே அமைந்தது.

இந்த மூன்று படங்களுக்குப் பின்னால் கே.பாலச்சந்தர் முதன்முதலில் இயக்கிய நீர்க்குமிழி திரைப்படம் வெளிவந்தது. பின்னரும் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த மாதவனின் இயக்கத்தில் உருவான நீலவானம் திரைப்படத்திற்குத் திரைக்கதை வசனத்தை எழுதினார் பாலச்சந்தர். இதற்குப் பிறகு பாலச்சந்தர் இயக்கிய நாணல் திரைப்படம் வெளியானது. பாலச்சந்தருக்கும் குமாருக்கும் இடையிலான நல்லுறவு மிக இறுக்கமான பந்தமாக அமைந்திருந்தது. திரைப்பட உலகம் ‘புரிதல்’ என்கிற அடித்தளத்தின் மீது கட்டப்பட்ட அரண்மனைதான். அந்த அடிப்படையில் அடுத்தடுத்து பாலச்சந்தர் இயக்கத்தில் நீர்க்குமிழி, நாணல், மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், இரு கோடுகள், பத்தாம் பசலி, நூற்றுக்கு நூறு, வெள்ளி விழா, அரங்கேற்றம் ஆகிய படங்களில் கிட்டத்தட்ட எட்டு வருட காலம், 9 படங்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடல்கள் என இந்த இருவர் கூட்டணி இணைந்து மின்னியது. கே.பாலச்சந்தரைப் பொறுத்தவரை மொத்தம் 100 படங்களை அவர் இயக்கியிருக்கிறார். அவரோடு இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் 36 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். கே.வி.மகாதேவன் 2 படங்களும் இளையராஜா 6 படங்களும் வி.குமார் 10 படங்களும் இசைத்திருக்கின்றனர். பாலச்சந்தரின் படங்கள் என்றாலே பாடல்களைப் பார்த்துப் பார்த்து உருவாக்குவார் என்கிற பேருண்டு. அதற்கேற்ப குமாரும் பாலச்சந்தரும் இணைந்த படங்களில் பல பாடல்கள் என்றும் ஒலித்து ஒளிர்ந்து மிளிர்பவையே.

ஓர் இயக்குநராக பாலச்சந்தர் இயக்கிய முதல் படம் நீர்க்குமிழி. தமிழ்த்திரைச் சரித்திரத்தில் பலவிதங்களில் முதன்மையான நோக்க வேண்டிய அம்சங்கள் நீர்க்குமிழி படத்துக்கு உண்டு. நாகேஷ் எனும் கலைஞன் பேருருக்கொண்ட திரைப்படம் இது. அதுவரை மேடை நாடகங்களை எழுதி இயக்கிக்கொண்டிருந்த பாலச்சந்தர், ஒரு கட்டத்தில் அவற்றிலிருந்து மடை மாறி தமிழ்த் திரைப்பட உலகத்தில் தன்னுடைய காலைப் பதித்து ஒரு எழுத்தாளராக உருவெடுத்திருந்தார். உண்மையில் சினிமாவை நோக்கி அழைத்து வரப்பட்டவர் பாலச்சந்தர். அவர் பேனா பிடித்த முதல் படமே பி.மாதவன் இயக்கத்தில் சத்யா மூவிஸ் தயாரிப்பில் உருவான தெய்வத்தாய். இந்தப் படத்தின் திரைக்கதையை ஆர்.எம்.வீரப்பன், டி.என்.பாலு ஆகியோருடன் பகிர்ந்து அமைத்தார் பாலச்சந்தர். மேலும் இந்தப் படத்தின் வசனங்களைப் பாலச்சந்தர் எழுதினார்.

இயக்குநராக அவர் அறிமுகமான படம் நீர்க்குமிழிதான். அதில் அவர் அறிமுகம் செய்த இசையமைப்பாளர் வி.குமார்.

https://img.discogs.com/74Km_R2Yt2aozKXl0F-FGgkv8DM=/600x676/smart/filters:strip_icc():format(jpeg):mode_rgb():quality(90)/discogs-images/A-2575098-1478653000-7933.jpeg.jpg

கன்னி நதியோரம்” என்ற டூயட் பாடலை டி.எம்.எஸ்- சுசீலா பாடியது, “ஆடி அடங்கும் வாழ்க்கையடா” பாடல் சீர்காழி கோவிந்தராஜன் பாடியது. இரண்டும் பெரும்புகழ்ப் பாடல்கள். முன்னதை ஆலங்குடி சோமுவும் பின்னதை சுரதாவும் எழுதினர். இந்தப் படத்தின் டைட்டிலுக்கான இசையை Paul Francis Webster பாடிய “The Green Leaves of Summer” என்ற பாடலை (Dimitri Tiomkin இசைத்தது) அடிப்படையாக்கி இசைத்தார் குமார். சொல்லொணா சோகத்தைச் சொல்லவல்லதாக அமைந்தது அந்த மெல்லிசைத் தோய்வு.

“Desperate Hours” என்கிற புகழ்பெற்ற படத்தின் கதையைத் தழுவி கே.பாலச்சந்தர் உருவாக்கிய நாடகம் நாணல். அதே பெயரில் படமாக்கம் கண்டது. “விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம்” என்று சுரதா எழுதிய பாடல் நன்கு கவனம் பெற்றது. பாடலுக்கு நடுநடுவே உரையாடலோடு அமைந்திருந்தது இந்தப் பாடல். சின்னச்சின்னச் சொற்பிளவுகளைக் கொண்ட இதே பாணியை விரித்தெடுத்துப் பிற்காலத்தில் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் “சிப்பியிருக்குது” பாடலை உருவாக்கினார் கே.பாலச்சந்தர்.

அடுத்து உருக்கொண்டது மேஜர் சந்திரகாந்த். “கல்யாண சாப்பாடு போடவா” பாடல் இன்றும் நன்றொலிக்கும் நற்கான மழை. டி.எம்.சௌந்தரராஜனின் யூகங்களுக்கு அப்பாற்பட்டு ஒலிக்கும் குரல் தூறலில் விளைந்து வந்த மெலடி மாலை. கேட்பவர் கண்களிலிருந்து நீர்த்தாரைகளைக் கிளப்பித் தரும் செல்ல மெட்டு. தேவையற்ற சோகச் சாய்வை நிகழ்த்தி அதை இடையிசைத் தூவல்களால் நிகர்செய்து இந்தப் பாடலை நிகழ்த்தினார் குமார். குமாரின் முதல் பெருவெற்றிப் பாடல் என்னளவில் இதுதான். இலேசான கஜல் தன்மையோடு ஒலிக்கும் இந்தப் பாடலின் ஆழ இசையாக மிகப் பலமான மேள இசையைப் புகுத்தினார் குமார். சிந்துபைரவி ராகத்தில் அமைந்த திரைப்பாடல்களின் வரிசையில் இந்தப் பாடலொரு விண்மீன். பாடலெங்கும் வாத்தியப் பங்கேற்புக்கான விளையாட்டாகவே அதகளப்படுத்தினார். இதே படத்தில் “நானே பனி நிலவு” என்ற பாடல் விநோதமான உபகுரல்களின் அணிவகுப்போடு அமைந்த ஸோலோ. வாலி எழுதி சுசீலா பாடி ஜெயலலிதா தோன்றி நடித்த பாடல் இது.

மோகன ராகத்தில் அமையப்பெற்ற “அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா” என்று தொடங்கிய பாடல் அடைந்த பெருவெற்றி, நாகேஷை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட அடுத்த கே.பி. படமான எதிர்நீச்சலுக்கான முதல் விளம்பரமாகவே மாறிற்று. டி.எம்.எஸ்., சுசீலா, வாலி என யாவர்க்குமான வெல்லக்கட்டி மழையாகவே இதன் வெற்றி பொழிந்தது. “வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா” பாடலைத் தன் பலமான குரலால் கட்டியெழுப்பினார் சீர்காழி. “சேதி கேட்டோ சேதி கேட்டோ” பாடலைச் சொல்லில் வராத சோக மாங்கனியாகப் படைத்தார் குமார். ஸ்வர்ணா, சுசீலா, ஜமுனா ராணி இவர்களோடு எஸ்.சி.கிருஷ்ணன் பாடிய இந்தப் பாடல் விண் தாண்டி வென்றது. கன்னட தேசத்து கிராமப்புற பக்திப் பாடலான “சோஜுகாதா சூஜுமல்லிகே” என்கிற பாடல் கர்நாடகத்தில் மாபெரும் செல்வாக்குப் பெற்றது. இதன் பல்லவி எடுப்பும் மைய இசைப் பரவலும் அப்படியே “சேதி கேட்டோ சேதி கேட்டோ” பாடலினூடாடி அமைந்திருப்பது தற்செயலெனினும் குமாரின் மேதைமையைப் பறைசாற்றுவதற்குப் பயன்படுகின்றதல்லவா? இந்தியாவின் ஆகச்சிறந்த நூறு மெலடிப் பாடல்களைத் தொகுத்துப் பார்த்தால் பி. பி.ஸ்ரீனிவாஸ், சுசீலாவோடு சேர்ந்து பாடிய “தாமரைக் கன்னங்கள் தேன்மலர்க் கிண்ணங்கள்” என்ற பாடல் அதனுள் வரும். பல்லவிக்கு முந்தைய பாடலின் ஆரம்பத்தையே அட்டகாசமாய்த் தொடங்கியிருப்பார் குமார்.

இத்தனை இசைவெள்ளத்தை ஒரே படத்தில் அள்ளித் தந்தார் குமார். இரு கோடுகளில் “புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்” பாடலும் நன்கு ஒலித்தது. நூற்றுக்கு நூறு படத்துக்காக குமார் உருவாக்கிய பாடல், “நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்”. பின்னாளில் “இளமை இதோ இதோ” பாடல் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்பதற்கான பெருந்தமிழ்த் திரைப்பாடலாக மாறிய பின்னரும் இன்றளவும் அதற்கான மாற்றுப் பாடலாக, புத்தாண்டுப் புதுவரவுப் பாடலாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது நூற்றுக்கு நூறு படப் பாடல். முன்னது முழுவதுமாக சந்தோஷச் சாய்வுடனான உற்சாகப் பரவல் பாடல் என்பதிலிருந்து விலக்கம் கொண்டு “உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்” பாடல் சொல்லித் தீராத அமானுடத்தை, வன இருள் அலைதலை, தொன்மத் தேடலை, திடுக்கிடும் திருப்பங்களுடனான திகைத்தலை எல்லாம் பாடலுக்குள் உட்படுத்தி ஒலிக்கிறது. அந்த வகையில் இந்தப் பாடல் புத்தாண்டைத் தாண்டிய பாடலாக மற்ற தினங்களுக்குள்ளேயும் ஒலிநடை போடுகிறது என்றால் தகும். 80-90களில் பல இந்திப் பாடல்கள் மேற்காணும் இந்தப் பாடலின் சரண பூர்த்தியைத் தழுவி உருவாக்கப்பட்டன என்பது சுவை கூட்டுகிறது.

நவகிரகம் படத்தில் “உன்னைத் தொட்ட காற்று வந்து” என்ற பாடல் பெருவரவேற்பைப் பெற்ற மெலடிப் பாடல். இதே கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் அதைப் பற்றிப் பேசலாம். பத்தாம் பசலியில் “வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று” என்ற பாடல் ஆலங்குடி சோமு எழுத்தில் டி.எம்.எஸ் பாடிய இன்னொரு நாகேஷ்- மெலடி-ஸோலோ பாடல். தெம்மாங்குச் சாய்வுடனான தாலாட்டுப் பாடலான இதன் குன்றித் திகைத்து நகரும் விதம் கேட்போரைக் கலங்கடித்துத் தன்னுள் ஆழ்த்திக்கொண்டது என்றால் பொருந்தும். பாடல் முடிகின்ற இடத்தில் சிறு ஏற்ற இசைத் துளியைத் தூவுவார். அதுதான் குமார் என்பதற்கான முத்திரை வருடலாக நிகழ்ந்திருக்கும்.

எந்த ஒரு இசைஞருக்கும் உயிர்நிகர் பாடலாக ஒரு பாட்டு அமையும். அது அவர்களுக்குச் சாதாரணமாக இன்னுமொரு பாட்டாகத் தொடங்கிப் பூத்து நகர்ந்து உருக்கொண்டு நிறைந்து கடந்துமிருக்கும். ஆனால், பேருருக்கொண்டு, புகழின் உச்சிக்கு ஒரு உச்சி இருந்தால், அங்கே போய் தன்னை இருத்திக்கொள்ளும். அதற்குப் பிறகு அப்படி இன்னொரு பாடல் அதற்கு இணை சொல்கிறாற் போல் இல்லாமலே போகுமளவுக்கு அடைந்த உயரமே அதன் பின் கானலாய் மாறும் வாழ்வின் விசித்திரம். பாடுகிறவர், எழுதுகிறவர், இசைஞர் என இந்த இருத்தலின் விதி யாவர்க்குமானது. அப்படி ஒவ்வொருவரின் பாடல்கள் எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்தாலும், அதன் முதற் பொதுமையாக, காலம் கடத்தல் எனும் காரணி விளங்கும். அவை வெளியான காலத்தில் அடைந்த புகழ், தற்கணம் வரை அதிகரித்துக்கொண்டே செல்லும். அதை உருவாக்கிய கலைஞர்களுக்கு அதன் மேல் ஓர் அபத்த வியத்தலும், உலர் விலகலுமே காணப்படும். இன்னும் சொல்லப்போனால் சிலருக்கு முத்துறையும் தொடக்கக் காலத்திலேயே அது அமையக்கூடும், சிலருக்கு நடுக்கடல் காற்றாக அது வீசும், வேறு சிலருக்கோ அது முகிழப்போகும் தருணம் அந்தி வெயிலென வலம் வரும். ஆனாலும், அதற்கு முன்னும் பின்னும் அப்படியொன்று இல்லவே இல்லை என்பது மட்டும் பொருந்தும். அந்த வகையில், மெல்லிசை மாமணி வி.குமார் இசையமைப்பில் எத்தனையோ பாடல்கள் எத்தனை எத்தனையோ படங்கள் இருந்தபோதிலும் அவரது உச்சபட்ச உயரவிதானமாக விளங்குகிற ஒரு பாடல், ‘காதோடுதான் நான் பாடுவேன்’ என்கிற வெள்ளி விழா படப்பாடல்.

ஒன்பது படங்களில் கிட்டத்தட்ட நாற்பது பாடல்கள் வரை வி.குமார், பாலச்சந்தருக்கு நல்கியிருக்கக்கூடும். இதன் அத்தனை முரண்களும் அர்த்தச் சத்தியங்களென, காரணத் தூண்களாய், கான மண்டபத்தைத் தாங்கி நிற்பது முரண் அழகு. சுசீலா பாடியிருக்க வேண்டிய இன்னுமொரு பாடலாக இந்தப் பாடலை எளிதில் நம்மால் கடந்துவிட முடியும். ஆனால், எல்லோரும் ஒருபுறம் நிற்க, இது தன் தனிப்பெரும் திறன், எனவே இந்தப் பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய விதம் வசீகரம். ஒரே ஒருமுறை மாத்திரமே சென்றுவந்த தூரதேசப் பயணத் தலத்தின் புகைப்படத்தில் உறைந்துவிடும் கணத்தோன்றல் கிளர்த்தித் தருகிற ஞாபக ஒருமையின் மீவருகைகளென இந்தப் பாடலைப் பாடினார் ஈஸ்வரி. குமாரின் லீலை இதே படத்தில் ‘நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்’ என்கிற பாடலைச் சுசீலாவைப் பாட வைத்ததுதான்.

குமாரும் பாலச்சந்தரும் இணைந்த கடைசிப் படமானது அரங்கேற்றம். அதுவரை இல்லாத வழக்கமாய் அந்தப் படத்தில் 11 பாடல்கள் அமைந்தன. அவற்றில் 9 சோலோக்கள். ‘ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது’ என்ற சுசீலா பாட்டு குமாரின் வரிசைக்குள் அடங்கியொலிக்கும் இன்னுமோர் தூறற் தூவலானது. கூட்டணிகள் உடைவதும் புதிய அணிகள் சேர்வதும் எல்லாத் துறைகளை விடவும் சினிமாவில் சர்வ சாதாரணம். ஆன போதிலும் குமார் – பாலச்சந்தர் இணை ஒன்பதே படங்களில் இணைந்திருந்த போதிலும் மேற்சொன்ன ஒவ்வொரு பாடலுமே ஒவ்வொரு முறையும் ஓரொரு திருவிழாவைத் திறந்து தரவல்லவை. காலத்தின் மேனியில் நிரந்தர நல்மச்சங்களாய்த் ததும்புகிறவை.

குமாரின் இசையுலகம் நுட்பங்களாலானது. குமார் சினிமாவுக்குள்ளே மத்திய வர்க்கத்தின் மகாதேவனாகவே திகழ்ந்தவர். ஒரு எம்.ஜி.ஆர் படம்கூட இசைக்கக் கிடைக்காத போதிலும் வெகு சில சிவாஜி படங்களே இசைக்கக் கிடைத்த போதிலும், நூறு படங்கள் மட்டுமே இசைத்திருந்த போதிலும், தமிழ்த் திரையிசை உலகச் சரித்திரத்தின் மிக முக்கியமான பக்கங்களில் ஒன்று குமாருடையது. கே.பாலச்சந்தர் – குமார் இணை ஒன்பது படங்கள், அத்தனையிலும் தேனினும் இனிய பாடல்கள். எழுபது முதல் எண்பது வரையிலான திரைக்காலத்தின் இசை முகங்களில் முதன்மையான முகம் குமார். கண்ணதாசன், வாலி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், இந்த மூன்று பெயர்களின் முக்கியமான பாடல்களில் பலவற்றை இசையமைத்தவர் குமார். குமாரின் இசை மிக நளினமான கோர்வைகளால் ஆனது. மேதைமையான வாத்தியப் போக்கைக் கொண்ட பாடல்கள் அவை. முற்றிலும் புதிய இசைக் கொள்கை ஒன்றை வகுக்க முனைந்தவர் குமார். சோகம், தவிப்பு, அனாமதேயம், தோல்வி, தேடல், வெறுமை, இயலா மௌனம், பித்துக்குளித்தனம், கேவல், ஆனந்தம், பயம், விபரீதம், கலக்கம், மந்தம், பூரிப்பு, குழப்பம், மதுக்கிறக்கம், நோய்மை எனப் பல்வேறு நுணுக்கமான உணர்தருண மலர்தல்களாகத் தன் பாடல்களைப் படைக்க விழைந்தார் குமார். பெரும் காற்றுக்குத் தப்பி நெடுநேரம் சுடர்ந்துகொண்டே இருக்கும் சிறு அகல் திரி நுனிச் சலனங்கள் ஒலியூடிய நடனங்களாகத் தன் பாட்டுகளை வழங்கினார் குமார்.

https://i.ytimg.com/vi/yPizzgiE8g8/maxresdefault.jpg

பெரிதும் கருப்பு வெள்ளைப் படங்களுக்கு அதிகதிகம் இசையமைத்தார் குமார். அவர் போலச் செய்த பாடல்கள்கூட மூலப் பாடலிலிருந்து விலகி, தான் இன்னொரு அசலாகிக் காற்றை ஆண்டது நம்பச் சிரமமான பரவச வரலாறு. அவர் போலச் செய்தது அவரது பாடல்களைத்தான் என்பது சரியா மகுடம். தன் பாடல்களின் பல பகுதிகளை உடைத்து உடைத்துப் புதிய பாடல்களைப் படைத்துக்கொண்டே இருந்தார் குமார். வாத்தியங்களை மாற்றுவது, தொனி வேகத்தை மாற்றியமைப்பது, குரலின் தன்மையை மீவுருச் செய்வது என ஒவ்வொரு பாடலின் பல்வேறு வெர்ஷன்களை ஒரு பருவ காலத்தின் அடுத்தடுத்த மழைகளைப் போல் தோற்றுவித்தார் குமார். தனிப்பாடல்களின் அரசனாகத் திகழ்ந்தார். கிடைத்த சொற்ப வாய்ப்புகளில் விசுவநாதனுக்கு இணையாகச் சோகப் பாடல்களைப் படைத்துக் காட்டினார்.

புறவயப் பற்றுதல்களை முற்றிலுமாக இரத்து செய்துவிடும் வல்லமை கொண்டவை குமாரின் தனிப்பாடல்கள். தீய மனிதர்களின் பெருங்கால ஒத்திகைக்குப் பிறகான கபடத்தின் அதே துல்லியத்தோடு, கேட்பவர்களைப் பாடலுக்குள் சிறை பிடிப்பவை. ஒழுங்குமீறலை இசையாக்கிய முதல் இசையமைப்பாளர் குமார், அடுத்தவர் இளையராஜா. ஒரு பால்ய தைரியம் இதைச் செய்து பார்த்தால் என்ன என்று சர்வகாலமும் வினவிக்கொண்டே இருக்கும். சப்த நிசப்தங்களை மாற்றித் தருவதில் தொடங்கி, நாராசப் பேரோசைகளை நிர்வகிப்பது வரை, இசையின் மையப் பொழிவைவிட, அதன் உப ஜாலங்களே கடினமானவை. மேலும், எந்த ஒரு பாடலின் கட்டமைவும் ‘இதுதான் பல்லவி, இவைதான் சரணங்கள்’ எனத் திறந்த அனுபவமாக நிகழ்கிற அதே நேரம், யூகிக்க முடியாத தொனித் திருப்பங்களை, இடைப் புன்னகையை, நின்றொலிக்கும் சிறுகண நிசப்தத்தை, ஏற இறங்கக் கூடிக்குறையும் குரல் விநோதங்களை என அதன் நகாசுத் தன்மைகள், “பாடல்” என்பதைப் பெரிய காரியத்தனமாக மாற்றித் தருபவை. இதில் மிகச் சிறந்து விளங்கிய எழுபதுகளின் இசை மேதை குமார்.

சற்றே தொனியை நீட்டிப்பதாகட்டும், குரலைப் பருக்க வைத்து மீண்டும் சட்டெனச் சாதாரணப்படுத்துவதாகட்டும், வாத்தியப் பயன்பாட்டில் உண்டு பண்ணுகிற மிதமான அலட்சியமாகட்டும், பெரும்பாலும் புதிரில்லாத் திகைத்தலோடே குமாரின் பாடல்கள் பிரயாணித்தன. எஸ்.பி.பி, குமார் இருவருக்குமே ஒரு புரிதல் தேவையற்ற பொதுமை இருந்ததை உணர முடிகிறது. இசையும் குரலும் அவரவர் ஆளுமையின் பாகங்கள் என்பதே அது. டி.எம்.எஸ்-குமார் இணை, ‘பூவே தாமரைப் பூவே’ (அவளுக்கு நிகர் அவளே), ‘எழுதாத பாடல் ஒன்று’ (தேன் சிந்துதே வானம்), ‘பனிமலரோ குளிர் நிலவோ’ (பொன்வண்டு), ‘நல்ல நாள் பார்க்கவோ’ (பொம்மலாட்டம்), ‘உன்ன நெனச்சா இனிக்குது’ (ஜானகி சபதம்), ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ (அதிர்ஷ்டம் அழைக்கிறது), ‘சிவப்புக்கல்லு மூக்குத்தி’ (எல்லோரும் நல்லவரே), ‘காதல் பொன்னேடு’ (கலியுகக் கண்ணன்), ‘நீ போட்ட மூக்குத்தியோ’ (மல்லிகைப் பூ) எனப் பல பாடல்களில் இணைந்தனர். ‘சரவணன் சொன்னான்’ என்கிற வித்தியாசமான ஒரு பாடல், வாலி எழுதி, ‘ஒருவனுக்கு ஒருத்தி’ படத்தில் இடம்பெற்றது. யேசுதாஸும் டி.எம்.எஸ்ஸும் இணைந்து பாடிய பாடல் இது. ‘சொந்தமடி நீ எனக்கு’ என்று ஒரு படம், சுசீலாவுடன் ஜெயச்சந்திரன் பாடிய ஒரு பாட்டு, ‘பெண்ணல்ல நீ ஒரு பொம்மை’. பொம்மலாட்டத்தைப் படமாக்க மூலமாகக் கொண்டு இந்தப் பாடலை உருவாக்கினார் குமார். 

யேசுதாஸ் குமாரின் இசையில் பாடிய சாகாவரப் பாடல், ‘தேன் சிந்துதே வானம்’ படத்தில் நிகழ்ந்தது. என் மன நம்பகத்தின்படி இந்தப் பாடலும் எஸ்.பி.பி பாடியிருக்க வேண்டிய குமார் பாடல்தான் என்றே தோன்றும். வாலி எழுதி, குமார் இசைத்த பாடல், ‘உன்னிடம் மயங்குகிறேன்’. ஒரு நேர்த்திக் கடனை நிறைவேற்றும் தருணத்தில் வேண்டிக்கொண்ட கணத்தின் நடுக்க மிச்சம் நிச்சயமாக வந்து வந்து போகும். அதனைப் பாடச் சொன்னாற் போல் இந்தப் பாடலைப் பாடினார் தாஸ்.

“Dependency” என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு, சார்தல் எனப் பொருள். ‘வேறு வழியில்லை, ஏனென்றால்’ என்று அதற்கான பதிலாக அந்தச் சார்தல் வந்து நிற்கும். அன்பின் ஓரங்கள் அதற்கு மேல் பயணிக்க முடியாத எல்லையறிதலில் பட்டுத் திரும்பும் கணங்கள், பெயரளவே பேரளவாகும் பித்து நிசம், சுருக்கமாகச் சொல்வதானால், தருகிற கொஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு, எல்லையற்றதைத் திரும்பத்தர முனையும் ஓர் அன்னை- தன் குழந்தை மீது வைக்கிற அன்பைப் போல் பன்மடங்கை ஊதிப் பெருக்கித் தன் குழந்தையின் குழந்தை மீது வைக்க முற்படுவது. அப்படியான சார்தலை இந்தப் பாடலுக்கான சரணங்களில் இசைத்திருப்பார் குமார், பாடியிருப்பார் தாஸ். சரண முடிவு குறுகலான குளிர் நடுக்கம் ஒன்றைப் பிறப்பிக்கும். தமிழில் யேசுதாஸ் பாடிய ஆரம்பக் கானங்களில் அதிசிறந்த பத்தில் இந்தப் பாடல் நிச்சயம் இடம்பெறத் தகுதிகொண்டது.

எஸ்.பி.பி.யின் தாய்மொழி தெலுங்கு. அவர் பாட வந்த காலத்தில் தெலுங்கில் அனேகமாக மிகக் கனமான குரலே இல்லை எனும் அளவுக்கு எல்லோருமே மென்மையில் பூத்த மலர்கள். தமிழில் ஒருபுறம் திருச்சி லோகநாதன், சீர்காழி, டி.எம்.சௌந்தரராஜன் போன்ற குரல் காத்திரர்களும், இந்தப் பக்கம் டி.ஆர்.மகாலிங்கம், ஏ.எம்.ராஜா, ஏ.எல்.ராகவன், பி.பி.ஸ்ரீநிவாஸ் போன்ற மென் தொனி மன்னர்களும் பாடல் தேரை வடம் பிடித்துக்கொண்டிருந்தார்கள். எஸ்.பி.பி முறைப்படி சாஸ்திரிய சங்கீதம் கற்றவர் இல்லை என்பது அவருக்குப் போதுமான போதாமையாகவே இருந்தது. ஒரு பக்கம் எஸ்.பி.கோதண்டபாணி, எஸ்.தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள், டி.ஆர்.பாப்பா, எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன், கண்டசாலா, எம்.எஸ்.விசுவநாதன் போன்ற மாஸ்டர்களின் முன்னே தனக்குப் பாட அளிக்கப்பட்ட வாய்ப்புகள் ஒவ்வொன்றிலும் மிகுந்த பயபக்தியோடும், தொனிப் பணிவுடனும் ஒவ்வொரு பாடலையும் வங்கிப் பணிக்கான பரீட்சை போலவே எழுதிக்கொண்டிருந்தார் பாலு.

எழுபதாம் வருடங்களில் பாலு வந்தடைந்த இடம் மெல்ல மெல்ல பல நூறு பாடல்களைப் படிகளாக்கி ஏறிச் சென்றடைந்த கானமலை. எண்பதாம் வருட வாக்கில் தன் திக்விஜயத்தை முடித்துக்கொண்டு பாடல் பெருந்தேசத்தின் பேரரசனாக எஸ்.பி.பி திகழத்தொடங்கிய போது ஒரு பெருநெடுங்காலம் இளையராஜாவுடன் பாலு பணியாற்றிய பல நூறு பாடல்கள் அந்த வெற்றிகரத்தை அர்த்தமூட்டுபவை. முன் சொன்ன மாஸ்டர்களிடமிருந்து மேஸ்ட்ரோவுக்கு இடம் மாறிய இடைக்காலத்தின் திக்விஜயத் தடங்களை பாலுவுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது மூன்று முக்கிய இசையமைப்பாளர்கள். அத்தனை மாஸ்டர்களுக்கு அப்பாலும் தொடர்ந்து இவர்களது பாடல்கள், பாலு தன்னைப் பொன் புடம் போட்டுக்கொள்ளப் பெரிதும் உதவின. முதலாமவர் சங்கர்-கணேஷ், அடுத்தவர் விஜயபாஸ்கர், மூன்றாமவர் இந்தக் கட்டுரையின் நாயகர், மெல்லிசை மாமணி, வி.குமார் என்கிற வி.கே.

என்னதான் சொல்லுங்கள், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ் எனப் பலரும் பாடினாலும் முன்சொன்ன அந்தச் சமகாலப் புரவிகள் பாலுவும் குமாரும். நான் அறிந்த வரையில் ஒரே ஒரு தெலுங்குப் படத்தைத் தவிர, தமிழ் தவிர வேற்று மொழிகளில் பெரிதாக இசையமைக்கவில்லை வி.குமார். நூறு படங்களுக்குள் இசையமைத்திருக்கக் கூடும். அவற்றில் பாலச்சந்தரின் ஒன்பது படங்கள், தவிர கிருஷ்ணன் பஞ்சு, முக்தா சீனிவாசன், துரை போன்றவர்களின் படங்கள். தவிர, எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரு துருவங்களுக்கும் இசையமைக்காத இசையமைப்பாளராக ஒரு கடுமையான சவால் காலத்தில் தோன்றி, இசைக்கத் தொடங்கி, இத்தனை நிர்பந்தங்களுக்கு நடுவே தன் பாடல்களைப் பேசவைத்தவர் குமார்.

ரங்க ராட்டினம் படத்தில் எஸ்.பி.பி.யின் மந்திரவாதமாய் மயக்கிடும் சோலோ,

மல்லிகை மொட்டு மழைத்துளி பட்டு

சில்லென பூத்தது இதழ்விட்டு

இந்தப் பாடல் குமார் தனித்த முத்திரையோடு உருவான சோலோ பாடல். “சில்லெனப் பூத்தது இதழ்விட்டு” என்கிற வரியை இரண்டாவது முறை பாடும் போது ஒரு சிறு துடிப்பைச் சேர்த்திருப்பார் எஸ்.பி.பாலு. கண்ணதாசன் எழுதியது இந்தப் பாடல். அதே படத்தில் “தங்கத் தொட்டில் பட்டு மெத்தை” என்கிற பாடல் உண்டு.

தங்கத்தொட்டில் பட்டு மெத்தை தாய் வீட்டிலே

பாசம் மட்டும் உண்டு எந்தன் தாலாட்டிலே

(தங்க)

தன்னைத் தானே மறந்திருந்தாள் உன்னைப் பெற்ற அன்னை

திரும்பி வந்த நினைவிருந்தும் மறந்ததென்ன என்னை

இமையை விழிதான் மறப்பதுண்டோ காட்சி வந்த பின்னே

எனது நிலையை எடுத்து சொல்ல தூது போ என் கண்ணே

(தங்க)

கண்ணன் வந்தான் நண்பனுக்குத் தேரோட்ட அன்று

தந்தை வந்தான் பிள்ளைக்காக காரோட்ட இன்று

வானில் உள்ள தேவன் இந்த விந்தை கண்டு சிரிப்பான்

வாழ்ந்து பார்க்க வேளை வந்தால் நம்மை ஒன்று சேர்ப்பான்

(தங்க)

இரண்டிரண்டு முறை ஒலிக்கும் வரிகளின் ஏறி இறங்கும் தொனி, சற்றே நெடிதொலிக்கும் தன்மை, குழலிசையின் துல்லியம், சோகத்தை எதிர்கொண்டு வேரறுத்து விடுகிற மனோதிடத்தைப் பாடினாற் போலப் பாடியளித்த பாடல். குறையாத நம்பிக்கையைக் குரலில் குழைத்துப் பாடினார் பாலு. “சிரிப்பார்” என்ற சொல்லைச் சிரித்துக் கடந்த விதம், பாடல் முடியும் வரியில் வழியும் நம்பிக்கை பெருகும் நேர்மறை எண்ணம், அதை இரண்டு முறை பாடிய தன்மை, இடையிசை, பாடலின் மைய இசை, பாலுவின் குரல் சென்ற விதம், குரலின் கனபரிமாணம், ஏற்ற இறக்கங்கள், வேறு யாருமே தந்திடாத பாடலாக இது அமைந்தது. இலேசான சிரிப்பும் குரலின் மாறுபாடும் குரலுறுதியும் இதன் வித்தியாசங்கள்.

‘சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்’, கே.ஆர்.விஜயா- (சட்டக்காரி) மோகன் இணைந்து நடித்த கலர் பாடல். அஷோகா பிரதர்ஸ் விஜயாம்பிகா ஃபிலிம்ஸ் தயாரித்து வழங்கிய வண்ணப் படம் நாடகமே உலகம் 1979ஆம் ஆண்டு வெளியானது. கண்ணதாசனும் வாலியும் பாட்டெழுத எஸ்.பி.பாலு, பி.சுசீலா, வாணி,ஜெயராம், உஷா உதூப் ஆகியோர் பாடல்களைப் பாட வி.குமார் இசையமைத்திருந்தார். இசையமைப்பில் உதவியவர் சுந்தர்ராஜன். இயக்கியவர்கள் கிருஷ்ணன் பஞ்சு. குறைவான வார்த்தைகள் கொண்ட பாடல் இது. கண்ணதாசனின் அற்புதங்களில் ஒன்று.

ஸ்ரீகாந்த் நடித்த படம் ‘ஏழைக்கும் காலம் வரும்’. வாலி இதன் பாடல்களை எழுதினார். தன் ஸ்டைலிஷான மெல்லிசை கொண்டு இதன் பாடல்களை அமைத்தார் குமார். ‘மோகம் என்னும் ராகம்’ என்று ஒரு பாடல், தாஸும் சுசீலாவும் பாடியது. இன்னொரு டூயட் ‘ஆட்டத் தலைவனின்’ எனத் தொடங்கும். இதனை சசிரேகா, சுசீலா இருவரோடும் சேர்ந்து பாடினார் பாலு. இதே படத்தில் இன்னும் ஒரு பாடல் இடம்பெற்றது. ‘ஓராயிரம் கற்பனை’ எனத் தொடங்கும் சோலோ பாடல். என் மனமொப்ப இதைத்தான் குமாரின் ஆகச்சிறந்த பாடலாக முன்வைக்க விரும்புகிறேன்.

“ராகமே தாளமே பாவமே ஓடிவா ஓடிவா” என்று பாடுகையில் பாலுவின் குரல் சென்று திரும்புகிற இடம் இருக்கிறதே…. சிகரம்!! பாடல் முழுவதுமே பாலுவின் ஆதிக்கம் பெருகி வழியும். மிகுந்த கட்டளைத்தனம் பெருக்கெடுக்கும் குரல்வாகு பாலுவுக்கு இயல்பாகவே அமைந்திருப்பதை நன்கு உணர்ந்து பாடல்கள் பலவற்றில் அதனைத் தொட்டெடுத்துப் பல மாய விநோதங்களை இசைவழி பிறக்கச் செய்தவர் குமார். அதற்கான சிறந்த சான்றாவணம் இந்தப் பாட்டு. பாடக வாழ்வின் பூரணத்துவத்தைப் பறைசாற்றுகிற சாரமாகவே இதன் சொற்களை வடித்தெடுத்தார் வாலி. பாலு தனக்காகவே பாடிக்கொண்டாற் போன்று காற்றை வருடுகிறது இந்தப் பாடல். இதன் அர்த்தம் நம்மைப் புன்னகைக்கும் கண்கசிவுக்கும் இடையிலான சிறு புள்ளியில் நிறுத்திவிடுகிறது அல்லவா?

ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக வந்தாலும்

உறவாடும் உள்ளம் இசை பண்ணோடு

எத்தனைக் காலம் வாழ்ந்தாலும்

என்னென்னக் கோலம் கொண்டாலும்

என்னுயிர் நாதம் சங்கீதம்

கீதமே நாதமே ஓடிவா

‘நங்கூரம்’ படத்துக்கு பிரேமஸ்ரீ கெமதாஸாவுடன் இணைந்து இசையமைத்தார் குமார். கண்ணதாசன், எஸ்.பி.பி, குமார் ஆகியோர் இணைந்து பணியாற்றிய பாடலான ‘ஒரு பார்வை பார்க்கும்போது’ நல்வரவேற்பை அடைந்தது. “என்னோடு என்னென்னவோ ரகசியம்” ஒரு திறந்து சிறந்த கான மாமழை. ஜெயச்சந்திரனும் ஸ்வர்ணாவும் பாடிய டூயட். நாட்டுக்கொரு நல்லவன் படத்தில் இடம்பெற்ற ரஜினி பாடலான ‘சின்னக் கண்ணம்மா’ பாடல் அடைந்த பெருவெற்றி அறிந்ததே. அந்தப் பாடலுக்குள் பெருமளவு மேற்படி என்னென்னவோ ரகசியம் பாடலின் சரண ஆதிக்கம் இருப்பது வசீகரம்.

‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என்ற படத்தில், ‘கண்ணெல்லாம் உன் வண்ணம்’ பாடலை சொர்ணாவோடு பாடினார் எஸ்.பி.பி. பாடல் முழுவதுமே இலேசான எதிரொலித்தலை உள்ளடக்கினாற் போல் நகர்ந்தொலிக்கும். இணைப்பிசை வழமைக்கு மாறான வேகத்தோடு அமைந்திருக்கும். சரணங்களில் அத்தனை பலமாகவும் இலேசான கிறக்கத் திறப்போடும் பாடினார் பாலு. “நீயொரு பாதி தந்தால்” என்ற வரியை பாலு பாடுவது ஜீராமழை. இலேசான கட்டளைத் தன்மையோடு முழுப்பாடலுமே ஒலிக்கும். இதன் இணைப்பில் நடுவே தபலா சின்னதோர் இழையில் வருவது அலாதியாக இருக்கும். “தென்றலே நீ வளர்க, தெய்வங்கள் வாழ்த்துரைக்க” என்ற வரியை இருமுறை பாலு கையாளுவார் பாருங்கள்… பிரியத்தின் மடியில் கலைகிற உறக்கக் கணத்துப் புன்னகை போல் இணை சொல்ல முடியாத பேரின்பம் அது. கண்ணதாசன் எழுதிய சிறப்பான மெலடி இந்தப் பாடல்.

‘எல்லோரும் நல்லவரே’ படத்தில் பஞ்சு அருணாச்சலம் எழுதி குமார் இசையமைத்த பாடல், ‘படைத்தானே பிரம்மதேவன் பதினாறு வயதுக் கோலம்’. ‘அவளும் பெண்தானே’ படத்தில் ‘வார்த்தைகள் என் நெஞ்சம்’ பாடலை சுசீலாவோடு பாடினார் பாலு. ‘இவள் ஒரு சீதை’ படத்தில் கண்ணதாசன் எழுதிய காலத்தால் அழியாத பாடல், ‘பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு’. ‘கண்ணாமூச்சி’ படத்தில் கண்ணதாசன் மூன்று பாடல்கள் எழுத, அனைத்தையும் பாடினார் பாலு. ‘கண்ணே உலகமே’ என்ற பாடலும், ‘இரவில் பார்த்தேன்’ என்கிற டூயட்டும் தவிர இன்னொரு மகாமந்திர மாய கானம், ‘பொன்னை நான் பார்த்ததில்லை’.

தூண்டில் மீன் படத்தில் ‘வாழ்வில் சௌபாக்கியம் வந்தது’ என்ற டூயட் அலாதிப் பூந்துருவல். இதிலும் ‘சட்டக்காரி’ மோகன் நாயகனாகத் தோன்றினார். எஸ்.பி.பி, சுசீலா பாடிய டூயட் பூமழை. உப்பில் கலந்த சர்க்கரை போல் தனித்துத் திரிந்து உறையும் பாடலின் நகர்திசை அத்தனை அபாரம். ஹிந்துஸ்தானி இசைப்பரவலும் குழலிசைச் சேர்தலுமாக இசையில் விளையாடினார் குமார். “நானறியாத இரகசியம் ஒன்று, நூலிடை பார்த்தேன் தெரிந்தது இன்று” என்ற இடத்தை எடுத்தாளும் போது பாலுவே நிசமாய்க் காதலித்திருப்பார் என்று தோன்றும். பாடலின் எதிர்பாராமையைத் திறந்தாற் போல், “ஆரிரோ ஆரிரோ” என்று திடீரென்று ஒரு ஆலாபனையைச் சுசீலா முன்னெடுக்க அதன் ஆழத்தில் பாலுவின் உடன் வருகையுமாக மழைப்பொழுது தித்திக்கும் வெம்மையாய் ஒலிக்கும்.

‘கண்களால் நான் வரைந்தேன்’ என்று ஒரு பாடல், ‘மங்கள நாயகி’ என்ற படத்துக்காக, ‘பொன்னை நான் பார்த்ததில்லை’ பாடலின் இன்னொரு வடிவமாகவே இதை அமைத்தார் குமார். இந்தப் பாட்டும் குமாரின் தனித்துவம் பகிரும். இந்த இரண்டோடும் சேர்ந்து தேன் சிந்துதே வானம் படத்தில் ஜேசுதாஸ் பாடிய ‘உன்னிடம் மயங்குகிறேன்’ பாடலும் அதே மெட்டின் வெவ்வேறு திசைகளைக் கோணங்களைப் பகிர்ந்துகொள்வது பாடலுருவப் பேரழகு.

துரை இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த, அவரது ஆரம்பகாலப் படங்களில் ஒன்று, ‘சதுரங்கம்’. அதில் இடம்பெற்ற ‘மதனோற்சவம் ரதியோடுதான்’ என்கிற பாடல் ரஜினியின் அழகான ஆரம்பங்களில் ஒன்று. மேலும், அந்தப் படத்தில் அவர் ஏற்ற ஒரு மென்மையான வெள்ளந்தி கதாபாத்திரத்துக்குத் தொடர்பற்ற கம்பீர-அதிகம் செய்யப்பட்ட புனைவுக் காட்சியாக்கம் கொண்ட பாடலும்கூட. இந்தப் பாடல் ஒரு சிறிய சோகத்திலிருந்து விடுபட்டுத் தன்னைச் சமாளித்துக் கொள்ளக்கூடிய சுய தணிக்கைத் தொனியோடு, சிறு பிசிறாக அந்தச் சோகச் சாய்தலை ஒலித்தடங்கும் பாடலாக அமைந்தது. இந்தப் பாடல் ஒரு ஸ்பின்னர். முடிந்து முடிந்து தொடங்கும் சுழல் இசைப்பாடல். குமாரின் இன்னுமொரு ரசவாதம், பாலுவின் கூட்டுடன். இந்தப் பாடல் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஆதித்யன் இசைக்க, அதே பாலு பாட, தனிப்பாடலாக “அழகோவியம் உயிரானது” என்ற பாடலாகப் பெருந்தழுவல் கொண்டு உருவானது சுவைநாதம்.

‘சொன்னதைச் செய்வேன்’ என்கிற சிவக்குமார் படத்தில் சுசீலா, வாணி ஜெயராமுடன் பாலு பாடிய பாடல், ‘எங்கெங்கோ சில மணிகள்’, ‘இது இவர்களின் கதை’ படத்தில் எம்.ராஜா, சுசீலா பாடிய ‘ஆனந்த இல்லம்’, ‘ஆயிரத்தில் ஒருத்தி’ படத்தில் எஸ்.பி.பி- சுசீலா பாடிய ‘நினைத்ததை முடிப்பது’ பாடல், முத்துராமன் நடித்த ‘அவள் ஒரு காவியம்’ படத்தில் புலமைப்பித்தன் எழுதி, சுசீலா- ஜெயச்சந்திரன் பாடிய பாடல் ‘நானோ உன் அடிமை’, ‘காரோட்டி கண்ணன்’ படத்தில் பாலு- சுசீலா பாடிய ‘பொட்டழகு கொஞ்சக் கொஞ்ச’, ‘ரங்கராட்டினம்’ படத்தில் ஏ.எம்.ராஜா – எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘முத்தாரமே உன் ஊடல் என்னவோ’, குமார் இசையில் மனோரமா ஏழெட்டு பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பதும் செய்தி. அவற்றில், ‘சிங்கப்பூர் சீமான்’ என்ற படத்தில் ‘மொள்ளமாரி கேப்மாரி சோமாரி’ என்று தொடங்கும் பாடல் ஒன்று உண்டு. மதுரை மணியம் எழுதியது இந்தப் பாடல். இப்படி குமாரின் இசைவார்ப்பில் கேட்க வேண்டிய பாடல்கள் பலப்பல.

1978க்குப் பிறகு மெல்ல மெல்ல குமாரின் பட எண்ணிக்கை குறைந்தது. இந்தக் காலகட்டத்திற்குப் பின்னால் அவர் இசையமைப்பில் அதிகபட்சம் 10 படங்கள் வந்திருக்கக் கூடும். ‘காலம் ஒருநாள் மாறும்’ என்கிற படத்தில் கங்கை அமரன் எழுதி, ‘இந்த மனதில் ஒரு இனிப்பு’ என்கிற பாடலை பாலுவும் ஜானகியும் பாடினார்கள். வட இந்தியத் தன்மையோடு ஒலித்தது இந்தப் பாடல். ‘ஷங்கரி’ என்ற படத்தில் குமார் இசையில், வாலி எழுத்தில், வாணி ஜெயராம்- ராஜ்குமார் பாரதி பாடிய இரண்டு டூயட் பாடல்கள் உண்டு. ‘பாரதிக்கு ஒரு கண்ணம்மா’ பாடல் தியாகராஜனும் சரிதாவும் நடித்தது. ‘மஞ்சள் வெயில் செவ்வானத்தில்’ என்கிற பாடலும் மேற்சொன்ன இணையின் இன்னொரு பாடல். கேட்டால் திகட்டாத மென்மையை இசைகூட்டி மேலெழுதுவதில் தான் யாருக்கும் சளைக்கவில்லை என்பதை “மெல்லிசை மாமணி” வி.குமார் நிறுவினாற் போல் இந்தப் பாடல் இன்றும் நின்றொலிக்கிறது.

முழுவதுமாகச் சவால் மிகுந்த ஓட்ட காலம் மட்டுமே அனுமதிக்கப்பட்டவர் குமார். ‘மீண்டும் மகான்’ படத்தில் வி.கே என்ற பெயரில் குமார் இசையமைத்தார். ‘மீண்டும் மகாத்மா’ என்று பெயரிட்டு, அந்தப் பெயர் முழுவதுமாக ஆட்சேபிக்கப்பட்டு, ‘மீண்டும் மகான்’ ஆக வெளிவந்த படம். முரளி, ரகுமான், பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் எனப் பலரும் தோன்றிய படம் இது. ‘மாடியின் அழகு நிலாவே’ என்கிற பாடலை எஸ்.பி.பி பாடினார். அனேகமாக, இதுவே குமாரின் கடைசிப் படமாக இருக்கலாம்.

தடைகளை இசைக்கருவியாக்கி, மெல்லிசை மெட்டுகளால் தன் பாடல்களை ஏகோபிக்கச் செய்தவர் குமார். காலத்தின் பழுப்பேறிய போதிலும், ராகத்தில் உயிர்ப்பு குன்றாத புல்லாங்குழலைப் போலவே குமாரின் பாடல்கள் தாலாட்டுகின்றன. எண்பது வருடத் தமிழ்த் திரையிசைப் பயணத்தைத் தொகுத்துப் பார்க்கையில், அதன் நடுவாந்திரம் வந்திசைத்துச் சென்றவர் குமார். பாலச்சந்தரின் நாடகங்களில் தொடங்கி, சட்டென அவரோடு சேர்ந்து அவரது முதல் படத்தில் தானும் அறிமுகமாகி, தனக்கென்று தனித்துவம் பொழிகிற பாடல்களை நிகழ்த்திக் காட்டினார். பெரிய நாயகர்களுக்கு இசைக்கவில்லை என்பதில் ஆரம்பித்து, நிறைய மெலடிப் பாடல்களை அமைத்து “மெல்லிசை மாமணி” என்று பெயர் பெற்ற குமாரின் தனித்துக் குறிப்பட வேண்டிய வசீகர விநோதங்கள் அனேகம். அதிகம் தனிப்பாடல்களை இசைத்தவர் குமார். மேற்கத்திய இசைப்போக்கில் முழுவதுமாகத் தன் திரைப்படல்களைத் தந்தவர் குமார். இந்துஸ்தானி, கஜல் துவங்கி தொன்ம இசை வரை பல முறைமைகளில் புழங்கியவர் எனினும், மிகமிகச் சொற்பமாகவே கர்நாடகச் சங்கீதத்தைச் சார்ந்தன குமாரின் பாடல்கள். பாடலின் போக்கை, இசையின் திசைகளை, பத்து வருட காலம் மாற்றிக்கொண்டே தன் பாடல்களை உருவாக்குகிற தைரியம் மிகுந்தவை குமாரின் பாடல்கள். மெல்லிசை மன்னர்களின் பாடல்களுக்கும், பிறகு எம்.எஸ்.விசுவநாதன் தனியே இசையமைத்த பாடல்களுக்கும், கே.வி.மகாதேவனின் பாடல்களுக்கும்கூட இடையிடையே இது இவரா அவரா என்கிற சிறு குழப்பம் நேர்வது உண்டு. ஆனால் அவர்களது பெரும் ஆதிக்கக் காலத்தில் இசைத்த, இசைக்க வந்த யாரைவிடவும் “இது வேறார் பாடலும் இல்லை, இது குமாரின் பாடல்” என்று தனியே தன் பாடல்களை நிற்கச் செய்தவர் குமார்.

எண்பதுகளுக்கு அப்பால் தமிழ்த் திரையிசை நகர்ந்து பயணிக்கப் போகிற நதியோட்ட வளைவு நெளிவுகளை, குறிப்பாக, வாத்திய அமைவு, பாடல் பரவல், செல்திசை நகர்தல் எனப் பல நுட்பங்களைத் தன் பாடல்களில் முன்கூட்டி இசைத்துப் பார்த்தவர் குமார். மெலடி என்கிற ஒரு பண்டத்தில் அவருடைய சமகாலச் சகாக்களான ஜி.கே.வெங்கடேஷ், சங்கர் கணேஷ், இளையராஜா, சந்திரபோஸ், கங்கை அமரன், வி.எஸ்.நரசிம்மன், ஷ்யாம், ரவீந்திரன் தொடர, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர் வழியில் ஏ.ஆர்.ரகுமான் வரை தமிழ்த்திரையிசை ஆளுமைகள் பலரது பாடலாக்கங்களிலும் வி.குமாரின் நேரடி, மறைமுக பாதிப்பு கொஞ்சமேனும் இருந்திருப்பது அவரது இசையளிப்பின் உற்று உணர வேண்டிய மாபெரும் செய்தி. குரல்களைக் கையாளுவதிலிருந்து பாட்டில் நகர்வேக மாறுதல்கள் வரை, பல முத்திரைகளைப் பதித்தவர் குமார். காலமும் காற்றும் உள்ளவரை, கானமும் பாட்டும் உள்ளவரை, பல புன்னகைத் தருணங்களையும், விழிநீர்க் கசிதல்களையும், நல்லிசை கொண்டு மெல்லிசை செய்த உணர்விசை மேதை வி.குமாரின் பெயர் ஓங்கி ஒளிரும்.

வாழ்க இசை!

-தொடரலாம்.

*

முந்தைய பகுதிகள்:

  1. கமல்ஹாசன்

3 comments

S senthil kumar August 30, 2021 - 7:41 pm

இப்படி ஒரு இசை மேதையை அறிந்துகொள்ள காரணமாக இருந்த உங்களை வாழ்த்தி வழங்குகின்றன.

Uma August 31, 2021 - 2:53 am

மிக அழகான கட்டுரை. பல அருமையான பாடல்கள் குறித்த அற்தபுமான தகவல். வாழ்த்துக்கள் ??

V. Sridharan March 14, 2022 - 6:23 pm

மிக அற்புதமான பாடல்…..திருக்கோயில் தேடி ரதி தேவி வந்தாள் சிலைபோன்ற மாறன் முகம் காண வந்தாள்…. படம் தெரியவில்லை. MSV அவர்களின் பக்தனாக நான் இருக்கும் போதும் இந்தப் பாடல் பென்டதால் முகர்ந்து விட்டவனின் உணர்வு போல ஒரு மயக்கத்தை தரும் பாடல் இன்றளவும். அருமையான கட்டுரை. நன்றி. வாழ்த்துகள்.

கானப்ரியன்

Comments are closed.