அகம் சுட்டும் முகம் (பகுதி 7): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

by எம்.கே.மணி
0 comment

ஒரு திரைப்படம் பார்த்து நிறைகிற திருப்தியை கே.ஜி.ஜார்ஜின் பெரும்பாலான படங்கள் நமக்குக் கொடுக்காது. ஏற்கனவே பலமுறை நினைவு செய்துகொண்டபடி அவர் நம்முடைய நிம்மதியைப் பிடுங்கிக்கொள்பவர். “ஆதாமின் விலா எலும்பு” (Adaminte Vaariyellu, 1983) நான் கூறுவதைக் காட்டிலும் தீவிரமானது. படத்தில் எங்கேனும் ஆசுவாசத்தின் வெளிச்சப் புள்ளி தட்டுப்படுவதேயில்லை. தற்போது வந்த இந்தியன் கிச்சன் படத்துக்கான உத்வேகம் இங்கிருந்து தொடங்கியிருக்கலாம். முன்பு பலமுறை பார்த்து இருந்ததுதான், படம் தொடங்கின அடுத்த கணம் சுகாசினி, ஸ்ரீவித்யா ஆகியோரின் முகங்களின் வழியே படம் முழுக்கத் தொடரும் துக்கத்தை அடைந்துவிட்டேன். அதுபற்றி எனக்கு விரிவாகவே தெரியும். திருமணத்துக்குக் கீழே வாழ்கிற எவ்வளவோ பெண்களின் மீது விழுந்துவிட்ட கரிய நிழல் அது. யாராவது ஒருசிலர் ஹிஸ்டீரியாவினால் தப்பிக்கிறார்கள். திரி எரிந்துகொண்டு இருக்கிற வெடிகுண்டுகளாகப் பலரும் புறுபுறுத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் வல்ல சக்திகொண்ட மரணம் தரும் களிப்பை ஒரு உடலுறவு தரும் விடுதலை போல பாவித்துக்கொண்டு கற்பனையில் திளைக்கிறவர்களைக்கூட எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இதில் திடமழிந்து போகச் சம்மதித்து விடாமல், குறுக்குச் சந்துகளுக்கு வந்து பெருமூச்சுவிட்டு, தந்திரமாக ரிலாக்ஸ் செய்துகொள்கிறவர்களுக்கு விருதுகளும் பட்டங்களும் தண்டனைகளும் காத்துக்கொண்டிருக்கின்றன.

ஜார்ஜ் தன்னுடைய படங்களை விளக்குவதில்லை. படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதில்லை. சுகாசினி செய்திருந்த வசந்தி என்கிற கதாபாத்திரம் என்ன நினைக்கிறது என்பதே நமக்குத் தெரியாது. அவள் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தெரிந்தவள்கூட அல்ல. பெரும்பாலும் விலகிச்செல்ல முயல்வதைப் பார்க்கிறோமே அல்லாது, எதிர்மனம் என்கிற ஒன்று அவளுள் செயல்படுகிறதா என்பதைச் சொல்லாத திரைக்கதை. அவளுக்கு அந்த வீட்டில் ஆதரவு இல்லை, வேலைக்குச் செல்லுவதை நிறுத்திக்கொண்ட கணவனும், ஒரு நாற்காலியைத் தேர்ந்துகொண்ட மாமியாரும் அவளுக்கு வெறும் முதலாளிகள்தான். அப்படியாக, செய்துகொண்டே இருக்க வேண்டிய அலுவல்கள் இருந்தவாறு இருக்கின்றன. செய்கிற உத்தியோகத்திலும் மனம்விட்டு யாரிடமும் மலர்ச்சியாக இருக்க முடியாத பின்னடைவு. அநேகமாக அவள் தனக்குள் பேசியவாறு இருந்திருக்க வேண்டும். பெருகிவருகிற எண்ணங்களை நிறுத்த முடியாமல் விழுந்த இடைவெளி பயமுறுத்தும்போது, அவள் அதைத் தலைவலியாக அடையாளம் காணுகிறாள். பர்மிஷன் போட்டுவிட்டு வீட்டுக்கு வருகிறாள். என்ன சொல்லுவது, வீட்டில் குடித்துவிட்டு அமர்ந்திருக்கிற கணவன் தாழ்வு தன் மனப்பான்மையை மறைத்துக்கொள்ள அபத்தமான சில கேள்விகளால் அவளைச் சிறுமைப்படுத்த முனைகிறான். அவளுடைய தலைவலியைப் போக்குவதாக அசட்டுச் சிரிப்பு சிரிக்கிறான். அவளைக் கலவிகொள்ள பலவந்தம் செய்கிறான்.

நாளடைவில், அவள் தன்னைத் திரட்டிக்கொள்ள முடியாமல் சிதறுவது நடக்கிறது.

அலுவலகத்துக்குச் செல்லாத வசந்தியைத் தேடி வந்து ஒரு விடுமுறை விண்ணப்பம் எழுதித்தரச் சொல்லுகிறாள் தோழி. அந்தக் காட்சி நம்மை உலுக்கக்கூடியது. நாம் புழங்குகிற இந்த உலகை எதிர்கொள்ள முடியாமல் போகும்போது மனம் உள்வாங்குகிறது. அப்படித் தங்களுக்குள் பிளவுபடுகிற மனிதர்கள் வாழ்வதற்கு இலாயக்கற்றுப் போகிறார்கள். யதார்த்த உலகிற்குள் கற்பனைகளில் மிதக்கிற யாருமே அப்புறப்படுத்தப்படுவது ஒரு நடைமுறை. யார் அந்நியப்படுவதாக இருந்தாலும் அதற்குச் சமூகமும் அதன் பங்காளிகளான நாமும்தான் காரணம் என்றெல்லாம் யாருக்குத் தெரிந்திருந்தாலும், அந்தக் குற்றம் பொதுவாகத் தெளிந்து வருவதில்லை. இரக்கங்கள் அவசியமாவதில்லை. கொஞ்சமாக உச்சு கொட்டிவிட்டு நாம் அப்படி நகர்ந்துவிட்டால், கொஞ்சமும் தாமதமில்லாமல் அவர்கள் ஆவியாகி காணாமல் மறைகிறார்கள்.

படத்தின் முடிவில் முகம் முழுக்கத் ததும்புகிற புன்னகையுடன் காணாமல் போகிறாள் வசந்தி.

பொதுவாகச் சொல்ல வேண்டுமெனில் இது மூன்று பெண்களின் கதையென்று சொல்ல வேண்டும். நாம் கவனிப்பதற்கு உதிரிகளாக வேறு சில பெண்களும் இருக்கிறார்கள். பெரிதாகப் பழக்கம் இல்லாத ஒரு கல்லுரி மாணவனுடன் லாட்ஜுக்கு வந்துவிடக்கூடிய ஒரு பள்ளி மாணவி இருக்கிறாள். அந்தப் பெண்ணை இழிவாக நினைத்துவிட முடியாதபடி அதன் காரண காரியங்கள் கான்கிரீட்டானவை. ஸ்ரீவித்யா நடித்திருந்த ஆலிஸ் என்கிற கதாபாத்திரத்தின் மகள் அவள்.

ஆலிஸ் தேமேயென்று இருக்கிறாள்.

முதல் காட்சியில் அவள் காட்டப்படும்போது எனது மனதில் ஓடிய வரியைத்தான் மேலே சொன்னேன். அவளுடைய ஜீவ சுரப்பிகள் அடைந்துகொண்டு விட்டன. அவள் எல்லாவற்றையும் பார்க்கிறாள். ஒன்றையும் உட்கொள்ளுவதில்லை. விஸ்கியோ, தூக்க மாத்திரைகளோ அவள் தூக்கத்திற்குப் போதுமானதில்லை என்பதுடன், அவளது நினைவுகளாக அவளை உருட்டியவாறு இருக்கிற கொடுங்கனவுகளை அவள் மறப்பதேயில்லை. மறக்க முடிவதில்லை. அவள் மனிதர்களில் சலிப்படைந்து விட்டாள். மகள் காணாமல் போய், அவளை லாட்ஜில் இருந்து மீட்டுக்கொண்டு வருகிறார்கள். பொறுப்பற்ற மனைவியைக் கண்டிக்க முயல்கிறார் கணவரான மாமாச்சன் முதலாளி. மகளைப் பற்றி அவர் பேசுவதற்குள் தடுத்து, “அவள் உங்கள் மகள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்?“ என்கிறாள் ஆலிஸ். அதிகார வட்டங்களில் வளைய வந்திருந்து பணத்தையும் செல்வாக்கையும் கூட்டிக்கொண்டே வருகிற மாமாச்சன் முதலாளிதான் வாழ்வின் படிகளில் ஏறி மேலே செல்லுவதற்கு அவளைக் கூட்டிக் கொடுத்திருக்கிறார். குறைந்தது பத்து பெயர்களைச் சொல்லுகிறாள் அவள். இவர்களில் எனது மகளுக்கு யார் தந்தையாக இருக்க முடியும் என்கிற வினா நியாயமானது அல்லவா? முற்றிலுமாக அம்மணம் காட்டிவிட்ட அந்த மனிதன் மீது பற்றை இழந்ததில் தொடங்குகிறது சலிப்பு. 

ஜார்ஜ் மிகவும் கூர்மையாக இவர்களுடைய வாழ்வுத் தருணங்களைப் படைத்துக் காட்டியிருக்கிறார்.

முக்கியமாக, வசந்திக்கு மனநலம் சிதைந்துகொண்டிருக்கிற தருணம். அவள் எப்போதும் இறந்துபோன தன்னுடைய மாமனாரை மனக்கண்ணில் கண்டுகொண்டிருக்கிறாள். அவர் இருக்கும்போது அந்தக் குடும்பம் பொறுப்போடு இருந்துகொண்டிருக்கிறது. வசந்திக்கு அன்பும் மரியாதையும் கிடைத்திருக்கிறது. இப்போதும் அது தொடருவது போல கற்பனை செய்வதன் மூலம், ஒரு கட்டத்தில் அவள் அவராகவே மாறி, பேச ஆரம்பிக்கிறாள். அது பைத்தியத்தின் உச்சகட்டம்தான். குடும்பத்தில் மரணமடைந்த மூத்தோரின் ஆவி இறங்கி வருவதாகச் சொல்லப்படுகிற அந்த மரபை வேறு ஒரு மனோதத்துவ கோணத்தில் சொல்லப்பட்டது திரைக்கதையின் வலிமையைக் கூட்டுவதாக இருந்தது. அதிலும் படத்தின் முடிவில் வசந்தி மனநல விடுதிக்குள் நுழையும் போது அங்கே இருக்கிற மாமனார் அவளை வரவேற்கிறார். அதனால்தான் அவள் புன்னகையுடன் அந்த நரகத்தில் சென்று மறைகிறாள்.

ஆலிஸ் கதையிலும் வேறு ஒன்று இருந்தது. அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான். எப்போதாவது அவள் உயிர்ப்பதே அவன் காட்டின காதல் போன்ற ஒன்றினால்தான். அவனுக்கு உடலைக் கொடுக்கும்போது அவளுக்கு மலை போல குற்றவுணர்ச்சிகள் வருகின்றன. ஒரு கட்டத்தில் அவனுக்கான நேரம் வரும்போது அவன் எளிமையாக நழுவிச்செல்கிறான். நிற்கும் நிலம் நழுவுவது போன்ற நிலை ஆலிஸிற்கு. அவளுடைய வீட்டாரும் குடும்ப கௌரவத்தின் பேரில் அவளைத் தட்டிக் கழிக்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் திரைக்கதையே அவளைக் கைவிட்டுச் செல்வதான காட்சியைச் செய்திருக்கிறார்கள். நாம் இந்தக் காட்சிகளுக்காகக் கண்ணீர்விட மாட்டோம் என்பது உறுதி. ஆனால் மனம் கனத்துப் போவது நடக்காமல் வழியில்லை.

மொத்த படமுமே ஒரு தாக்குதல்தான்.

தீர்வற்ற திக்கில் பெண்கள் நிற்கிறார்கள்.

ஆலிஸின் கணவனான மாமாச்சன் தன்னுடைய மனைவியை மிடுக்காகப் பார்க்கிறவர். அவளுக்கு முன்னால், பல தோரணைகளைச் செய்வார். தான் நினைத்தால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை என்பதாகத் தன்னை நிரூபித்துக்கொண்டிருப்பார். ஆனால் அவருக்கு அவள் மீதிருக்கிற அச்சம் அவ்வளவு எளிமையானது அல்ல. உலகமே தலையில் வைத்துக் கூத்தாடும் நிலைக்குப் போனாலும் அவளுக்கு முன்னால் தான் ஒரு புழுவாக மட்டுமே நெளிய முடியும் என்பது அவருக்குத் தெரியும். பேரழகியும், பிசாசின் உடல்வாகும் கொண்டு விஸ்தாரமாகக் கட்டு மீறி நிற்கிற அவளை உடல்ரீதியாக எப்படி அடக்கி ஆளுவது? அவளிடமிருந்து இன்பத்தைக் கறந்துவிட முடியும் என்று தோன்றினால் அது வெற்று பிரமையல்லவா? அவளுக்கு முன்னால் நிமிருகிற ஒரு ஆளுமையும் ஆண்மையும் அவருக்கு இல்லவே இல்லை. அவருக்குப் பயப்படுகிற எதோ ஒரு அடிமையிடம்தான் அவரால் தனது இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதாக வருகிற திரைக்கதை, அதற்குப் பலியான மற்றொரு பெண்ணின் வாதையையும் சொல்லுகிறது. ஒரு கணம்கூட மனசாட்சிக்கு அவசியம் இல்லாமல் அவள் துடைத்து வீசி எறியப்படுகிறாள் என்பது நம்ப முடியாத குரூரம். அம்மிணி என்பது அந்தக் கதாபாத்திரத்தின் பெயர். சூர்யா என்கிற திறமையான நடிகை அதைச் செய்திருக்கிறார்.

படத்தில் ஆங்காங்கே வந்து, முக்கியப் பாத்திரமாக மாறி, இறுதியில் படத்தை முடித்து வைக்கிறவர் அவர்தான். அந்தக் கிளைமாக்ஸ் உண்மையில் நம்ப முடியாதது. அற்புதமானது.

படத்தின் தொடக்கக் காட்சியில், டைட்டில் நேரத்தில் காட்டப்படுகிற பெண் முகங்கள், முடிவுக் காட்சியுடன் அவ்வளவு பொருத்தப்பட்டு நிற்கும்.

எம்.பி.ஸ்ரீநிவாசன், ராமச்சந்திர பாபு, எம்.என்.அப்பு போன்றவர்கள் எல்லாம் படத்தின் ஒருமைக்குக் கட்டுப்பட்டிருந்தார்கள். கள்ளிக்காடு ராமச்சந்திரன் என்பவர் திரைக்கதை எழுதியிருக்கிறார். அதை என்னவென்று சொல்லுவது? ஜார்ஜின் மனசையே எழுதிக்கொடுத்து இருக்கிறார் எனலாம். கேரள, தமிழக நிலப்பரப்புகள் என்றில்லை, இந்தியா முழுவதும் அம்மிணிகளும், ஆலிஸுகளும், வசந்திகளும் குலைந்தவாறு இருக்கிறார்கள். உலகெங்கிலும் இந்த அவலங்கள் உண்டு. குழுவினர் அனைவரும் சேர்ந்து அவர்களை, அவர்களைப் போன்றவர்களை நினைத்துக்கொள்ளும் வண்ணம் உலகப் பொதுவிலான ஒரு படம் செய்திருக்கிறார்கள்.

‘சினிமாவில் சமூகக் கோபம்’ என்பது பற்றி அசைபோடும் போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. கொஞ்ச நாட்களுக்கு முன் நடந்தது. நண்பன் பரம்பரைப் பணக்காரன். சென்னையிலும் பல ஊர்களிலும் வீடுகள், கார்கள் இன்ன பிறவை எல்லாம் இருக்கின்றன. இன்ஜினீயரிங் படித்துவிட்டு சினிமாவிற்குத் தாவினான். பிரபல ஹீரோ ஒருவருக்காக அநீதியை எதிர்க்கும் ஒரு படத்துக்கு கதை செய்தான். என்னிடம் கதை சொல்லும்போது அநீதிக்கு எதிரான தர்பார் வசனங்கள் வரும்போது கண்களை மூடிக்கொள்வான். நர்சரி ரைம்ஸ், ஜன கன மன, தமிழ்த்தாய் வாழ்த்து போல மனப்பாடம் செய்த வசனங்கள் பறக்கும். கண்களைத் திறந்து சரியாகச் சொன்னேனா என்பது போலப் பார்த்துவிட்டு, கதையை நிதானமாகத் தொடருவான். கண்களை மூடிச் சொன்னது யாவும் அவன் அறியாத பிரச்சினைகள். அதை அனுபவிப்பவர் யாராக இருக்கட்டுமே, போய்ச் சாக வேண்டியதுதானே என்பது அவன் எண்ணம். ஆனால் சினிமாவுக்குத் தேவையாக இருக்கிறது. அவனால் கோபப்பட முடியாத போதிலும், டிரெண்டில் இருக்கிற கோபத்தைச் சொன்னால் காசடிக்க முடியும் என்பது அவனுக்குத் தெரியும். காசிருப்பவன் காசைத்தானே உண்டாக்க வேண்டும்?

இது அம்மாதிரி ஜோக்கு காட்டுகிற படமில்லை என்கிறேன்.

சமூகத்தின் மீது அவ்வளவு பற்றுடன் இருந்து, காசு சம்பாதிப்பதை மறுத்து, காவியம் செய்தவர்களை இலக்காகக் கொள்ளும் காலம் வரவேண்டும்.

*

முந்தைய பகுதிகள்:

  1. ஸ்வப்னாடனம்
  2. உள்கடல்
  3. மேள
  4. கோலங்கள்
  5. யவனிகா
  6. லேகயுடே மரணம், ஒரு பிளாஷ்பேக்