அகம் சுட்டும் முகம் (பகுதி 5): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

by எம்.கே.மணி
0 comment

தீமை எங்கிருந்து புறப்படுகிறது?

உலகில் மனிதராக வாழ வேண்டியிருக்கிற யாருக்குமே எப்போதேனும் ஒரு கட்டத்தில் இந்த வியப்பு எழாமலிருக்க வாய்ப்பில்லை. அது ஒருவேளை தன்னைக் குறித்தாக இருக்கலாம் அல்லது நேரடியாகப் பாதிக்கப்பட்ட மூச்சுமுட்டலில் மனம் விதும்பும்போது, அல்லது அநீதிகளால் பிதுக்கப்படும்போது “என்ன இது, இப்படி” என்கிற ஆயாசம் உண்டாகலாம். ஒரு காரணமும் சொல்லாமல் தம்மைப் பார்த்து நிற்கிற எவ்வளவோ விரோதங்களைப் பலரும் தினம் தினம் எதிர்கொள்கிறார்கள். காந்தியைக் கொன்றவனின் மனம் என்ன என்பதை நம்மில் பலரும் உணரவே முடியாது அல்லது ஒரு லாஜிக் இருக்கக்கூடிய பாலியல் வன்முறைக்கு அப்பறம், அதைச் செய்த ஆள் அப்பெண்ணை எதற்குப் பெண்குறி உள்ளிட்ட எல்லாவற்றையும் குத்திக் கிழித்துப் போட்டு சென்றிருக்கிறான் என்பதை யோசிக்க முடிவதில்லை. எப்போதும் தீமைக்குப் பத்து முகங்கள். ஒன்றில் இருந்து துவங்கி, பல கிளை விட்டு அது தன்னை வளர்த்திக்கொண்டு செல்லக்கூடியது. இரண்டு முறை வெடித்த குண்டுகளால் ஒரு தேசத்தில் பரவின நரகத்தைப் பார்த்த பின்னரும், இன்றும் ஆயுதங்களைச் செய்து அடுக்கி வைத்துக்கொண்டுதானே இருக்கிறோம்?

முதலில் தபலா ஐயப்பன் தன்னை ஒரு கலைஞன் என்ற இடத்தில் இருந்தும், அடுத்ததாக மனிதன் என்ற இடத்திலிருந்தும் கட்டறுத்துக்கொண்டுவிட்டான். தன்னில் இருந்து தன்னையே அவிழ்த்து விட்டுக்கொண்டுவிட்டான். அதனுடைய அர்த்தம் பசித்த புலி ஊருக்குள் உலவுகிறது என்பதுதான். அவ்வப்போது அதற்கு மனித முகமூடியையும் போட்டுக்கொள்ளத் தெரியும் என்பது இன்னமும் சிக்கல். யாராவது அதை வேட்டையாடிக் கொன்றே தீர வேண்டும். ஐயப்பனே தன்னுடைய கொலையாளியைக் கூட்டி வந்து தன்னை முடித்துக்கொள்ளுகிற பகுதியே யவனிகா திரைப்படம். 

கே.ஜி.ஜார்ஜ் இந்தப் படத்தை அற்புதமான திரைக்கதையின் படமாகச் செய்திருக்கிறார் என்பதை யாரும் அறிந்துகொண்டுவிட முடியும். படம் வெளியாகிக் கொஞ்ச நாட்களில் என்னால் பார்க்க முடிந்தது. பின்னால் பிட்டுகளுடன்கூட ஒருமுறை பார்த்திருக்கிறேன். பரத் கோபி வரும்போதெல்லாம் அவர் யாரென்று தெரியாத மக்கள் கைத்தட்டிக்கொண்டிருந்தார்கள். ஒரு பார்வையில் அல்லது ஒரு உடலசைவில் என்னை நீங்கள் பொருட்படுத்தியாக வேண்டும் என்கிற அழுத்தம் காட்டி, நம்மைச் சூழ்ந்துகொண்டு விடுவார். இந்தப் படத்தில் ஐயப்பனைக் காணவில்லை என்பதில் துவங்கி, அவரைத் தேடுகின்ற துப்பறிதல் காதையுடனே அவரைப் பற்றின குணாதிசயங்களைச் சொல்லிவந்து, ஒரு தொடக்கமாக அவரை நேரடியாகக் காட்டும் திரைக்கதையை எப்படி விளக்கிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. அப்படி ஒரு காத்திரமான காட்சி அது. நீங்கள் ஐயப்பனின் மீது வைத்த பார்வையை எடுக்கவே முடியாது. அது ஒரு நடிகனின் முழுமையான வெற்றி. இயக்குநரின் எழுத்து இல்லாமல் அது சாத்தியமே இல்லை என்பதை மறக்காமல் குறிப்பிட வேண்டும். அது மட்டுமல்ல, கோபியின் ஆழத்தில் இறங்கி ஜார்ஜ் அவரை முழுமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஐயப்பன் பல பெண்களைக் கடந்து வந்தவன். அவனால் மூர்க்கம் பெற்ற ஒரு குடும்பம் படத்தில் காண்பிக்கப்படுகிறது. ஆனால் பூஞ்சையாக இருக்கிற, பலவற்றிக்கும் அஞ்சிக்கொண்டிருக்கிற ஜலஜா, ஐயப்பன் நாசம் செய்த இறுதிப் பெண்ணாக இருப்பது, மிகவும் புத்திசாலித்தனமான தேர்வு. அவளது முகத்தில் வாழ்வு செயல்படுகிறது என்று நம்புவேன். ஆமாம், அவள் வாழ்வின் பிரதிநிதியேதான். பாவனா நாடகக் குழுவில் இருக்கிற ஒவ்வொரு பெண்ணும் தனக்குக் கிடைக்கிற மின்னல்பொழுதில் தன்னை உணர்த்திவிட்டுச் செல்லுகிறார். அவர்களில் ஒருவர்கூட ஏதோ அலங்காரக் கிரகத்தில் இருந்துவந்து இறங்கியவராகப் புலப்பட்டுவிடாமல், இரத்தமும் சதையுமாக இருந்தது படத்தின் மாண்பைக் கூட்டியவாறு செல்கிறது. அதைப் போலவே ஆண்களில்கூட ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே அத்தனை குண வேறுபாடுகள். படத்தில் நடித்த அத்தனை பேரும் தங்களுடைய தனித்தன்மையைக் கூட்டிசைக்கு வேண்டி சொந்தக் குரலை விட்டுக்கொடுத்தும் இருக்கிறார்கள்.

கேரளாவில் நாடகங்களுக்கு முக்கியத்துவமுண்டு. பண்பாட்டில், அரசியலில் அவை பங்கெடுத்தன. கொட்டரக்கர போன்ற ஊர்களில் முற்போக்கு ஜாம்பவான்கள் எவ்வளவோ பாடல்களையும், வசனங்களையும் மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். பெயர் கேட்ட பல்வேறு குழுக்களும் நட்சத்திர அந்தஸ்தில் இருந்தன. புகழ்பெற்ற பல நடிகர்களும் நாடகத்தில் இருந்து வந்தவர்கள்தான். நாடு முழுக்க இருக்ககூடிய கோவில்கள், திருவிழாக்கள் மட்டுமல்ல, பல்வேறு இனத்தவரும் மதத்தினரும் நாடக உற்சவங்களைச் சேர்த்துக்கொண்டார்கள். முக்கியமாக மக்கள் நாடகங்களைப் பற்றி அறிந்திருந்தார்கள். “நடைபெறுகிறது” என்பதாகவும் “மிக விரைவில்” போன்ற அறிவிப்பாகவும் அச்சடிக்கப்படுகிற தெருப் போஸ்டர்கள் தவிர்த்து டைரி, காலண்டர்கள் எல்லாம் நாடக ஸ்டில்களைக் கொண்டிருக்கும். நாடகப் பாடல்களின் கேசட் வணிகமும் பிரம்மாண்டம்தான். பொதுவாக, கலை வாசனை ஏற்ற மனிதப் பிறவிகள் சற்று பைத்தியமாகச் சுற்றுவது ஒரு யதார்த்தம்தான் என்றால் கேரளாவில் அப்படிச் சுற்றுகிற தாடிக்காரப் பையன்கள் கும்பல் அதிகமாக இருந்தது. பாவனா தியேட்டர்சில் நாடக நடிகர், நடிகைகளாகக் காண்பிக்கபடுகிற ஜார்ஜின் கதாபாத்திரங்கள் ஒரு காலகட்டத்தின் அசல் சித்திரம். இந்தப் படத்தில் ஒரு நாடகம் தொடங்குவதற்கு முன்னால் பாடப்படுகிற டைட்டில் பாடலும், அதன் காட்சியில் நாம் ஆட்களின் முகத்தில் காண்கிற மும்முரமும், அதை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருந்த ஒழுங்கும் இசையமைப்பும் மேலே சொன்னவைகளை உறுதிசெய்யும். 

“பரத முனிவர் ஒரு களம் வரைந்தார்” என்று தொடங்குகிறது அந்தப் பாட்டு.

அப்புறம் குழுவில் ஒருவரான பால கோபாலன். பெண்களிடம் கடலை போட்டு அசட்டுச் சிரிப்புடன் அப்படி இருக்கிற நெடுமுடி, இன்றும் தொடருகிற ஒரு தலைமுறையின் முன்னோடி. ஜார்ஜ் நினைத்தால் அந்த ஒரு கேரக்டரைத் தனியாக எடுத்து வேறு ஒரு படம் செய்திருக்க முடியும். அப்படித்தான் பால கோபாலனின் மறுபக்கமாக இருக்கக்கூடிய வேணு நாகவள்ளியின் கதாபாத்திரமும்.

எனக்கு அந்தக் கதாபாத்திரம் மிகவும் பிடித்தமானதாக இருந்தது.

அது ஜார்ஜின் படங்களில் அவ்வப்போது தென்படுகிற நன்மையின் ஆள்.

அவனுக்கு யாரும் எவரும் எதையும் சொல்லிப் புரியவைக்க வேண்டியதில்லை. மற்றொரு ஆளின் துயரை அவன் இயல்பாகப் புரிந்துகொள்ளுவான். எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பைக் கொடுக்க அவனுக்குத் துணிச்சல் உண்டு. அதை மறைத்துக்கொண்டு தன் பாட்டிற்குச் செல்லும் நாகரிகமும் உண்டு. இந்தப் படத்தில் வருவது போல, அப்பழுக்கற்ற தியாகம் செய்வதற்கு முந்தி விடுவதுமுண்டு. அந்தக் கால தேசமில்லாத கதாபாத்திரத்தைப் பற்றி தத்துவார்த்தமாகச் சொல்லுவது என்றால், எவ்வளவோ படைப்பாளிகள், மாஸ்டர்கள் ஏந்திச்சென்ற அணையா தீபத்தை ஜார்ஜும் பெற்றுக்கொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஒரு பயணம் செய்து பார்த்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். வேணு நாகவள்ளி செய்த ஜோசப் என்கிற அந்தக் கதாபாத்திரம் அவ்வளவு அழகான உறுதியோடு இருக்கிறது என்கிற நிலைப்பாட்டில் இருந்து சொல்வதுதான் இது. ஐயப்பன் செய்கிற சலசலப்புகளுக்கு அவன் அஞ்சுவதே இல்லை. இன்னாருக்கு இன்னதைச் செய்துவிட வேண்டும் என்பதில் அவனுக்கு இருக்கிற தெளிவு படத்தின் முதுகெலும்பு போல. ஒருவேளை, படத்தில் நடந்துவிட்ட சம்பவங்கள் இல்லாமல் போயிருந்தால், கதாநாயகி எவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும் என்று பெருமூச்செறிந்தவர், ஜோசப்பின் நல்ல மனசைத்தான் ஏங்குகின்றனர்.

இது ஒரு கிரைம் தில்லரா? ஒரு துப்பறியும் படமாகக் கொள்ளலாமா?

இன்று நாம் ஒதுங்குகிற படங்களின் அடையாள டைட்டில் பரிதாபத்துக்குரியவை. த்ரில்லர் படத்துக்கு டிமாண்ட் இருப்பதாக ஒரு பேச்சு ஓடிற்று என்றால், அவசரமாகச் சமைக்கப்படுகிற பல படங்களில் ஒன்றிரண்டு தவிர்த்து மற்றவை எதிலும் த்ரில்லிங் இருக்கலாம். மனிதர்களும், கதையும், வாழ்வும் தவறிப்போகிறது. சக்கைகளை உருவாக்க இம்மாதிரி தூண்டல்கள் காரணமாக இருக்கின்றன. நல்லவேளையாக அன்று இப்படிப்பட்ட குட்டிக்கரணங்கள் இல்லை. ஒரு வகைமையும் இல்லாமல் யவனிகா படத்தை இது மனிதர்களைப் பற்றின ஒரு கதை என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். ஒருவன் காணாமல் போகிறான், மற்றும் ஒரு நாள் சடலமாக ஒதுங்குகிறான், அவனுக்கு என்ன நடந்தது என்பதை இருட்டு, காற்று, இசை என்று படத்துக்கு வெளியே பூச்சாண்டி காட்டாமல், ஜார்ஜ் சுவாரஸ்யமாகக் கதை சொல்லி இருக்கிறார், அவ்வளவுதான்.

ஜார்ஜின் படங்களில் இது அவருக்குச் சற்றே அதிகமாகப் புகழ் கிடைத்த படம்.

சினிமா இரசிகர்களுக்கு படத்தின் முழு உன்னதங்களும் எட்டின என்று சொல்ல முடியாது. புரிந்துகொண்ட வரையில் அதை விரும்பினார்கள்.

அதற்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தன. ஒரு கொரில்லாப் போராளியின் துப்பாக்கி போல அடக்கமாகப் பதுங்கி வேலை செய்த ஒளிப்பதிவாளரின் இயக்கத்தில் நூறு அர்த்தங்கள் இருந்தன. ஒவ்வொரு சம்பவத்தையும் அணுகி அருகே செல்வது மட்டுமல்ல, பல காட்சிகளில் வெறும் ஒரு சாட்சிக்காரனைப் போல ஓதுங்கி, ஓரமாக நின்றது அற்புதம். நாடகத்தில் வருகிற காட்சிகளில் காட்டிய விலக்கத்தால், ஒரு மேடை என்றால் என்னவென்று துலக்கம் பெறுவதை யாரும் உணரலாம். எடிட்டிங், நிஜமாகவே விசேஷம்தான். சிக்கனமான கட்டுகள். முகங்களுக்குக் கொடுக்க வேண்டிய அளவற்ற மரியாதையைத் தாரளமாக வழங்கவும் தயங்கவில்லை. எம்.பி.சீனிவாசன் படத்தின் தரம் அறிந்து உழைக்கிறவர். அவருக்கு இசை எவ்வளவு தெரியுமோ, அவ்வளவு அனுபவங்களும், உலகப்போக்கும், வாழ்வுப் போக்கும் பழக்கம். மனித உணர்ச்சிகளின் கனம் அறிவதற்கு முன்னாலே வந்து, வந்ததை வாசிப்பேன் போன்ற அழிச்சாட்டியங்களுக்கு ஜார்ஜ் போன்றவர்கள் திரும்பிக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். 

ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு, நடிகர் பரத் கோபி, இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ்

கண்டிப்பாக சினிமா அல்ல நாடகம்.

ஒரு நேரடி நிகழ்த்துக் கலையைக் காண மக்கள் கூட்டம் கூடுகிறார்கள். நடிகர், நடிகைகள்  மக்களை நேரடியாக வெறித்துக்கொண்டே தங்களுடைய கோணங்களை நடித்தவாறு இருக்கிறார்கள். நல்ல நாடகத்துக்கு மறைமுகமாக வந்துவிடுகிற ஒரு காவியத்தன்மையும் நேரடியானது. மக்கள் வாய்விட்டுச் சிரித்தும், கண்ணீர் மல்கியும் தங்களைப் பார்த்துக்கொண்டிருப்பதை அறியும் ஒரு கலைஞனுக்குத் தன்னுடைய பெருமிதங்களைக் காட்டிலும், உலகச் சுகங்களைச் சுரண்டித் தின்னுவது பெரிய விஷயம் அல்ல. ஒருவேளை தீமையின் மூட்டையாக இருந்து அழிந்த தபலா ஐயப்பன், நல்ல நடிகனாக மக்களைச் சந்தித்துக்கொண்டிருந்தால், அப்படி இருந்திருக்க மாட்டானோ என்னமோ?

படத்தில் மேதைமையான ஒரு விஷயம், ஐயப்பனின் மகன் அவனிடம் காசு கேட்க வருவது. தியேட்டர் அதிபர் திலகன் பணம் இல்லையென்று விரட்டுகிறார். அதற்கு முன்பே வப்பாட்டியும் காசில்லை என்று சொல்லியாயிற்று. பணம் இல்லையென்ற அவமானகரமான விஷயத்தைச் சொந்த மகனிடம் சொல்ல முடியாமல், அவனுடைய முகத்தை நேரிட முடியாமல் ஐயப்பன் பம்ம வேண்டியிருந்தது. அப்போதே அவனது வாழ்க்கை தோல்விதான். அவனது சாவிற்கு அப்புறம், அவரைக் கொல்கிற சந்தர்ப்பத்தை நான் எதிர்பார்த்திருந்தேன், அது கிடைக்கவில்லை என்று அந்த மகன் சொல்லும்போது ஐயப்பனின் தோல்வி வாழ்க்கை பூரணமடைகிறது. அவன் குடிப்பதைத் தவிர்த்து, ஆத்திரம் வரும்போது எவளாவது ஒருத்தியிடம் இச்சையைத் தணித்துக்கொண்டு தூங்குவது அல்லாமல் அவனுக்குச் செய்ய என்ன இருக்க முடியும்?

வெற்றி பெற்றவர்கள் சிகரங்களை உயர்த்துவது இருக்கட்டும், தோல்வி அடைகிறவர்கள் பாதாளம் துருவுகிறார்கள். அது பொதுவாகவே யாருக்கும் நல்லது அல்ல. 

*

முந்தைய பகுதிகள்:

  1. ஸ்வப்னாடனம்
  2. உள்கடல்
  3. மேள
  4. கோலங்கள்