ஆகாயத்துப் பட்சி

by சுதாகர்
0 comment

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் எப்போதெல்லாம் நான் கவிதை குறித்து நண்பர்களுடன் உரையாட நேர்ந்திருக்கிறதோ அப்போதெல்லாம் பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளைக் குறிப்பிட்டுச் சிலாகித்துப் பேசாமல் இருந்ததில்லை. எனக்குப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்ட சில கவியரங்க நிகழ்வுகளிலும் கிருபாவின் கவிதைகளையே தேர்வுசெய்து, எனது இதயத்தில் பசுமையாகப் பதிந்திருக்கும் அந்தக் கவிதைகளை இரசித்துக் கூறி மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். பல சமயங்களில் இரவின் தனிமையில் கிருபாவின் கவிதைகளைப் படிக்கும் போது அன்பினால், கருணையினால், பச்சாதப உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணீர் மல்கி இருக்கிறேன். அடுத்தநாள் கிருபாவைத் தேடி அவரது நண்பர்களின் அறைக்குச் சென்று அவரைக் காணமுடியாமல் வருத்தத்துடன் வீடு திரும்பியிருக்கிறேன். எதிர்பாராத விதமாக சாலையோரத் தேநீர்க் கடைகளிலோ அல்லது சுரங்க நடைபாதையிலோ அவரைக் கண்டபோது கட்டியணைத்து கரங்களில் முத்தமிட்டிருக்கிறேன்.

ஒரு மின்னல் வெட்டைப் போல, ஒரு குதிரையின் பாய்ச்சலைப் போல, ஒரு குழந்தையின் முறுவலைப் போல, ஒரு ஞானியின் சுடர்விழியைப் போல, சந்தியா காலவேளையில் மலரும் சேடல் மலரின் மணம் போல… கிருபாவின் கவிதை வரிகள் என்னை ஒருவித இரசவாத உணர்வுகளுக்குள் இட்டுச்செல்வதனால் அவரது கவிதைகளின் மீது எனக்குப் பேரார்வம் ஏற்பட்டது.

“அதிகாலையில் விழுந்த நாவற்பழம் இரவின் துளி” என்ற பிரான்சிஸ் கிருபாவின் வரியினைப் படித்தபோது அந்த வரி ஒரு சித்திரமாக மாறி சிந்தைக்குள் புகுந்து “….உதிர்ந்து விழுந்தது ஒரு காய்ந்த இலையல்ல, ஒட்டுமொத்த இலையுதிர் காலமுமே” என்ற ஜென் கவிதை வரிகளைத் தூண்டில் போட்டு இழுத்து வந்து கிளர்ச்சியூட்டியது.

“கொடியில் தொங்கும் திராட்சை  ஒரு கூட்டுக் கனவு” …..

“பகலில் எரியும்

மெழுகுவர்த்தியின் திரியிலிருந்து

சுருள் சுருளாய் விரிகிறது

இருள்.”

“விரித்த என் பாயில்

மீதமிருந்த இடத்தில்

படுத்து ஒடுங்குகிறது குளிர்காலம்.” 

போன்ற கிருபாவின் கவிதை வரிகளில் உள்ள படிமங்கள், உருவகங்கள், வெகு கச்சிதமான மொழி வீச்சு, இயல்பான சொற்பிரவாகம் ஆகியவை அவரைப் பெருங்கவியாக உணரச்செய்தது.

விருந்துக்கு வந்தவனை

கூலிக்குப் பேசி

வேலைக்கி அமர்த்தும்

இந்த வாழ்க்கையோடு

இன்னும் விவாதித்து

விசனப்பட்டுக் கொண்டிராமல்

ஒரு பூஞ்செடியை நட்டு

அதன் வேர்களில் என்னுயிரூற்றைப்

பின்னிவிட்டு போகவே விரும்புகிறேன்

என்னைவிட்டு!

பொய்மையைப் பெருக்கி பொழுதினைச் சுருக்கும் தந்திரம் நிறைந்த லெளகீக நடைமுறைகளில் இருந்து தனித்தொதுங்கி வாழவிரும்பும் ஆன்ம சிந்தனையோடு வெளிப்பட்டுள்ள கிருபாவின் இந்தக் கவிதை என்னை மேலும் அவருக்கு நெருக்கமாக இட்டுச்சென்றது.

“கணங்கள்தோறும் என்னை நானே தண்டித்துக்கொண்டிருக்கும் போது, ஏன் நீயேனும் கொஞ்சம் என்னை மன்னிக்கக் கூடாது…” என்கிற கிருபாவின் கவிதையானது தாயுமான சுவாமிகள் அருளிய பராபரக்கண்ணியில் இடம்பெற்றுள்ள “எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி, ஏழைநெஞ்சு புண்ணாகச் செய்தது இனிபோதும் பராபரமே” என்கிற பாடலின் ஆன்ம விடுதலை உணர்வுநிலையியோடு பொருந்தி ஒளிப்பதாக உணர்ந்தேன். அவரது அகத்தேடலை அறிந்துகொண்டேன்.

“முதலில் அண்ணன்கள் கைவிட்டார்கள், பிறகு காதலிகள் கைவிட்டார்கள்…” என்ற கவிதையில், “இறுதியாக அவனை அவனே கைவிட்டான், அதற்குப் பிறகுதான் நிகழ்ந்தது அற்புதம்” என்ற இறுதி வரியானது நிர்வாணத்தை, கைவல்யத்தை, முக்திப்பேறினை, பரம மண்டல ராஜ்ஜியத்தினை, பூரண விடுதலையினை நோக்கி வீசப்பட்ட மலரம்பாக என் இருதயத்தினை இனிமையால் நிறைத்தது.

கன்னி …. கிருபாவின் முதல் நாவல் எனச் சொல்லப்படும் நீள்கவிதை. சொற்களிலிருந்து அர்த்தங்கள் மௌனத்திற்குத் திரும்பும் வழி. அதன் வழியே நுழைந்து அச்சித்திரங்களை, மோன மொழியை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியாமல் தோன்றுப் போனவன் நான். ஈராண்டு காலங்கள் மீண்டும் மீண்டும் படித்தேன். முடிவினில் தோல்வியே சாத்தியமானது. ஏனெனில் பாண்டியின் உலகிற்குள் பயணித்து அந்தப் பித்துநிலையைப் பருகுவது அத்தனை எளிதான காரியமில்லை. கன்னியின் நாயகன் பாண்டியைப் போல, தான் கட்டமைத்து வைத்திருக்கும் அனைத்து பெருமிதங்களையும் அவரது நாயகி சாராவைக் கண்ட நொடிப்பொழுதிலேயே அவளது பாதத்தில் படையலிட்டு, தனக்குள் இடையறாது ஊறிக்கொண்டிருக்கும் சோமத்தை அருந்தி, உன்மத்த நிலையில், கட்டுப்பாடற்ற காதல் பித்தில் (Unconditional love), காலவெளி கடந்த இயல்பில் திளைத்தால் மட்டுமே அந்த உணர்வுகளை உள்வாங்கிக் கொள்ளமுடியும் என்ற உண்மையை  முடிவில் அறிந்துகொண்டேன்.

ஒரு நாவலைக் கவிதையாக வரைவது தமிழ் இலக்கியத்தில் நிகழ்ந்த அற்புதம். கன்னி நாவலின் ஒரு பகுதி கவிதையாக…

“வானத்தில் ஏழுவகை மேகங்கள் ஒரே நேரத்தில் சுற்றிச் சூழ்ந்து நேருக்கு நேர் மோதி பெரும் முழக்கம் உண்டானது. மின்னல் கொடிகள் கொதிநிலையில் நெளிந்து மறைந்தன. ஒளியும் இருளும் விரிந்தும் சுருங்கியும் பிரிவதும் சேர்வதுமாக, காட்சியை மாறிமாறிக் கிழிப்பதும் தைப்பதுமாக… எல்லாம் சீர்கெட்டுவிட்டிருந்தன. மழைத்துளிகளின் முதல் வரிசை விழத் தயாராகி உச்சியில் துடித்தது. ஆழியில் புயல் வளிமுற்றி பேயாட்டம் போடத் தொடங்கியது. கூட்டம் கூட்டமாக காகங்கள் பறந்து வந்து அவளைச் சூழ்ந்து நின்றன. அவள் முகத்தில் அச்சமயம் தன் சுய துக்கங்களிலிருந்து மீளும் தெளிவு தென்பட்டது.

வண்ணங்கள் மறைகின்றன. வானவில்லும் இல்லாமலாக காற்றோடு பாய்கின்றன மேகங்கள். ஒளியின் சிறகுகள் முன்பே முறிந்து தணிந்தன. நிழல் திரை விரிந்து பகலை மூடுகிறது. கடல் இருள்கிறது, கரைகள் பதைக்கின்றன. மின்னல் குரலில் கண்ணால் பாடுகிறது முகமற்ற வேட்கை. விண்ணைப் பார்த்திருந்த சின்ன மலரொன்று அச்சத்தில் மனம் தடுமாறுகிறது. ஆந்தையின் தலையில் ஆவலொன்று பச்சை மச்சமாகி இரவுக்காக விரிகிறது. கிழங்கை முகர்ந்து பார்த்து முத்தம் மட்டும் தந்துவிட்டுப் பசியோடு கிடைக்குத் திரும்புகிறது முயல்குட்டி. கன்னிமையின் தோளில் விழுந்து நாணத்தின் கன்னத்தில் தெறிக்கிறது மழை. மழை வலுக்கிறது. மணல் முலைகள் கரைந்தோடுகின்றன. ஏதோ ஒரு சிப்பி பெண்ணாகி இதழ் விரிக்கிறது.”

கிருபாவை எனக்கு மிகவும் பிடித்திருப்பதற்குக் காரணம் அவரது கவிதைகள் மட்டுமல்ல, அவரது இயல்பும் எனக்குப் பிடித்திருந்தது. ஆக்டோபஸ்சின் நீண்ட கரங்களாக மனிதர்களைச் சுருட்டி நெரித்து வீழ்த்தும் காரணிகளான கடும்பற்று, பொருட்பித்து, புகழ் மயக்கம், அதிகாரத் துய்ப்புணர்வு, சூழ்ச்சிகள் நிறைந்த தந்திர சிந்தனைகள் ஆகியவற்றினால் கிருபா பீடிக்கப்படாமல் எப்போதும் விலகியே இருந்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எதனையும் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ளாமல் வாழ்வதென்பது அத்தனை எளிதான காரியமல்ல. குருவின் அருட்பார்வைக்கு ஏங்கும் சீடனைப் போலவும், தனது காதலியின் அன்பு முத்தத்தைப் பெற ஆசையுற்ற காதலனைப் போலவும் தனக்கு மிக நெருக்கமாக இருந்த நண்பர்களிடம் மட்டும் அன்பாகச் சிறிய யாசகங்களைப் பெற்று வாழ்ந்தாரே தவிர, தன்னை ஸ்தாபித்துக்கொள்ளும் நோக்கோடு ஒருபோதும் கிருபா இருந்ததில்லை.

விவிலியத்திலே ஒரு வசனம் உண்டு…

“ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; இருந்தாலும் அவைகளுக்கும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்.” 

இந்த ஆகாயத்துப் பட்சிகளைப் போலவே பிரான்சிஸ் கிருபா வாழ்ந்தார். ஓரிடத்தில் இருப்புகொள்ளாமல் அலைந்து திரிந்தார். துறவிக்கும் பறவைக்கும் ஓரிடம் கிடையாது என்ற வாக்கியத்தின் வடிவாகக் கிருபா இருந்தார். திக்குத் தெரியாத காட்டில் நித்தியத்தைத் தேடி உடல் இளைத்தார். சித்தனைப் போல அலைந்தார். இறுதியாக எண்ணத்தைத் துரத்தியோடும் யுத்தத்திலிருந்து விடுதலை பெற்று கர்த்தருக்குள் நித்திரை கொண்டிருக்கும் கிருபா, காலம் உள்ளவரை கவிதையாக வாழ்வார்.