அகம் சுட்டும் முகம் (பகுதி 8): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

by எம்.கே.மணி
0 comment

அரசியல் ஒரு சாக்கடை என்பதெல்லாம் போதாது. ஆயிரமாயிரம் இடுக்குகளும் சிடுக்குகளும் உள்ள மனித வாழ்க்கை என்கிற பிரம்மாண்டமான சக்கரத்துக்கு முன்னால் அது ஒன்றுமேயில்லை. எங்குமே யாராவது யாரையாவது சுரண்டித் தின்னுகிறார்கள், பிடுங்கித் தின்னுகிறார்கள், காலில் விழுந்தோ கழுத்தைப் பிடித்தோ தின்று முடிக்கிறார்கள். அது ஒரு துறை. அதற்குள் நல்லது செய்துவிடலாம் என்று நினைத்து விடுகிறவன் புகுந்துவிட முடியாது. அவன் விரட்டப்படுவான். இவைகளையெல்லாம் உலகின் ஒரு பக்க நியதி, இப்படி நடக்கத்தான் செய்யும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். வீராப்பு பேசாமல், அலட்டிக்கொள்ளாமல் திருடர்களைச் சகித்துக்கொள்ளுவது என்பது வந்தால்தான் தனிப்பட்ட மனிதர்களின் அழுத்தம் குறையும். வைத்திய செலவு மிச்சமாகும்.

நமக்கு வாழ்வதற்கு வேண்டிய முஸ்தீபுகளில் இதைச் சேர்த்துக்கொள்ளாமல் போகும்போது, நாம் திருடர்களாக மலியக்கூடிய வாய்ப்புகளும் குறைகிறது. ஜார்ஜ், பேதங்களே வைக்கவில்லை. இப்போது பேசப்போகிற பஞ்சவடிப் பாலம் (1984) படத்தில் உள்ள அரசியல்வாதிகள் மொத்த பேரும் திருடர்களே. அவர்கள் இலட்சியம் பேசினாலும், கொள்கைக் கோட்பாடுகளை நுரைக்கத் தள்ளினாலும், சாதி மதம் என எதைக் கைகளில் எடுத்துக்கொண்டாலும் அவர்கள் திருடர்கள் மட்டும்தான் என்பதில் ஐயமில்லை என்கிறார் அவர். அதுவும் வெட்கம், மானம், நளினம், நாசூக்கு என்கிற ஒரு சுரணையும் இல்லாத திருடர்கள். 

நாங்கள் உங்களைத் திருடுவோம், நீங்கள் எங்களை என்ன செய்துவிட முடியும் என்று முகத்துக்கு முகம் சந்தித்து, நம்மைத் தட்டிக்கொடுத்துவிட்டுப் போகிற திருடர்கள். இந்தத் திருடர்களின் பெருக்கம் எவ்வாறு நிகழ்ந்து, திகழ்ந்து வருகிறது என்பது படத்தின் முக்கியமான செய்தி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

பஞ்சவடிப் பாலம் படப்பிடிப்பில் கே.ஜி.ஜார்ஜ்

காத்தவராயன் என்றொரு கதாபாத்திரம். உடல் ஊனமுற்றவர். சக்கரப் பலகையின் மீது அமர்ந்து ஊர் முழுக்க கைகளால் நீந்தி வருபவர். சின்னக் குழந்தைகள் மைக்கு செட்டு போட்டதும் கூட்டம் கூடி கும்மாங்குத்து நடனம் ஆடுவதைப் போன்ற ஒரு கேளிக்கை மனநிலை. நல்லதொரு பொதுக்கூட்டம் நடந்து, அதில் ஒரு அமைச்சர் பேச்சைக் கேட்டு எவ்வளவு நாட்களாகிறது என்று வருத்தமாக, நெடுமூச்சு விட்டுக்கொள்கிறார். அதை ஒரு பஞ்சாயத்து மெம்பரிடம் கூறவும் செய்கிறார். எல்லாக் கட்சிக் கூட்டங்களையும் ஆவேசமாகக் கவனிக்கிறார். பதவி பணத்துக்காக வேட்டியை கழட்டி விட்டுக்கொண்டு ஓடுகிற மானக்கெட்ட பயல்களைக்கூட அவர் வேடிக்கைதான் பார்க்கிறார். அவருக்கு அதைப் பற்றின எந்த அபிப்ராயங்களுமில்லை. ஏதாவது துணுக்குற வைக்கிற சம்பவங்கள் நடந்துகொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் அவரது அன்றாட துடிதுடிப்பு. எவனாவது ஒரு திருட்டு பேமானி அவருக்கு ஒரு டீ வாங்கிக் கொடுப்பதாகக்கூட படத்தில் இல்லை. இப்பேர்ப்பட்ட ஒரு வினோத ஜந்து யாராக இருக்கக்கூடும்? மிஸ்டர் பொதுஜனமாக ஸ்ரீநிவாசன் ஏற்றிருந்த கதாபாத்திரம் அட்டகாசம்.

இந்தப் பொதுஜனம்தான் கேட்கிறது. ஏன் நமது ஊரில் வெகுகாலமாக சுவாரசியமாக ஒன்றுமில்லை?

இங்கிருந்துதான் பஞ்சவடிப் பாலம் படத்தின் கதை தொடங்குகிறது.

பொதுமக்களின் கருத்தை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால், வளர்ச்சி எப்படி வரும் என்று குரூப்பு பேசுவதாகப் படத்தில் ஒரு வசனம் வருகிறது. நானேகூட ஒரு பெரிய பூங்காவின் சுவரை ஆறு மாதத்துக்குள், ஏழு முறை இடித்துக் கட்டுவதைப் பார்த்திருக்கிறேன். அந்த வழியில் தங்களுடைய வளர்ச்சியைப் பார்ப்பதற்கு, நன்றாக இருக்கிற பஞ்சவடிப் பாலத்தை இடித்துக் கட்ட திட்டங்கள் தொடங்குகின்றன. எச்சைக் குடி குடித்துவிட்டு, காரிலிருந்து இறங்கி ஆட்டமாக ஆடுகிற அரசுப் பொறியியலாளர், பாலம் அபாயத்தில் இருக்கிறது என்பதாகவும் அறிக்கை சமர்பித்துவிடுகிறார். ஆளுகிறவர் அள்ளிப் போட்டுக்கொண்டு போவதென்ன என்பது பாம்பறியும் பாம்பின் கால் கதையாக இருக்கும்போது, எதிர்கட்சியினர் பொருமியாக வேண்டும். மக்களிடம் அதற்கு என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம், அவர்கள் ஜாலியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கத்தானே பழகி இருக்கிறார்கள்? இரண்டு கட்சியினருக்கும் அவர்களால் இலாபம் குவிக்கப் போகிற முதலாளிகளிடம் இருந்து பணம் பாய்கிறது. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்கிற ஜனநாயக வழிமுறையின் பொருட்டு, வரலாற்றில் திரும்பத் திரும்ப வந்தவாறு இருக்கிற கூவாத்தூர் சம்பவங்கள், அதில் பணம், பாட்டில்கள், பெண்கள், ஆள் கடத்தல் சாகசங்கள் என்று என்னதான் குறைச்சல்?

ஜார்ஜ் இப்படத்தை வெறும் அரசியல் நையாண்டியாக எடுத்துக்கொள்ளவில்லை.

பாரபாஸ் என்று இன்னசென்ட் ஏற்றிருந்த கதாபாத்திரம் அது பாட்டுக்கு அது செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருந்தாலும், உண்மையில் அதன் நிதானம் நம்மை அவமானப்படுத்தக்கூடியது. நமக்கு இப்படி ஒரு அரசியல் பிரதிநிதி இருக்க முடியும் என்கிற நம்பகத்தன்மை உருவாகி வரும்போது நம்மால் கைகளைப் பிசையாமல் இருக்க முடியாது. அதைப் போலவே திலகன் ஏற்றிருந்த கதாபாத்திரம். என்ன சுறுசுறுப்பு, என்ன ஒரு காரிய வெறி, எவ்வளவு ஆவேசமான முழக்கங்கள், அவருடைய பெருமிதங்கள்? வெளுத்து வாங்கியிருந்தார். மக்கள் அவரிடம் ஏமாந்தவாறு இருக்க முடியும். அவர்களை அடிமை நாய்களாக வாலாட்ட வைக்க அவரிடம் இருக்கக்கூடிய நேர்கொண்ட பார்வையைக் கை தட்டிக்கொண்டேயிருக்கலாம். ஒரு கணம்கூட இடைவெளியில்லாமல் பொய்யில் புழங்கும்போது ஒரு அரை இன்ச் தயக்கம்? இல்லவே இல்லை. நான் இதை இவ்வளவு விவரணை செய்யக் காரணம், இதில் எல்லாம் நடிகர்களைப் பயன்படுத்திக்கொண்டு, இயக்குநரே இருந்தார். ஆமாம், அதில் அவருடைய ஆறாத கோபங்கள் இருந்தன. நிச்சயமாக, ஏதாவது மக்கள் பிரச்சினைகளை ஊறுகாய் தொட்டுக்கொண்டு மக்களிடம் பிக் பாக்கெட் அடிக்கக்கூடிய படங்களுடன் சேர்த்து இதைக் கற்பனை செய்துகொண்டுவிடக் கூடாது என்பது முக்கியம்.

முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களில் பரத் கோபியும் ஸ்ரீவித்யாவும் நடித்திருந்தார்கள். அறிவே இல்லாத ஒரு அப்பட்டமான கோமாளியாக இருக்கக்கூடிய குரூப் என்கிற அந்த மனிதன் ஒரு ஊரின் பஞ்சாயத்து தலைவராக இருப்பது எப்படி என்பதை விசனம் கொள்ளாமல் இருக்க முடியாது. ஆனால் அந்தக் கேள்வி அந்த ஊருக்கே மட்டுமாக முடிந்துவிடக் கூடியது அல்ல. ஒவ்வொரு அடுக்காகக் கேள்வி கேட்டுக்கொண்டு போனால், ஐநா தலைவராக இவர் எப்படி இருக்கிறார் என்பதில்கூட முடியாது. பணம், சாதி, போலி முழக்கங்கள் எவற்றையெல்லாம் செய்ய முடியும் என்பதற்கான நிரூபணங்கள் அவை. புலன்கள் தொழிற்படாத மக்களின் மந்தத்தன்மையைச் சுட்டிக் காட்டுகிற சந்தர்ப்பம். பாலம் கட்டுவதற்கு வருகிற சிமெண்ட் மூட்டைகளில் ஒரு பகுதி அவருடைய வீட்டின் முன் இறக்கப்பட்டு, அந்த வீடு விஸ்தாரம் கொள்ளுவதை அவர்கள் பார்க்காமலா இருக்கிறார்கள்? அல்லது ஒரு பிரமுகராக குவிந்து வருவதற்கு அவர் பிரயோகிக்கிற உபாயங்களை, தந்திரங்களை, அத்துமீறல்களை, அராஜகங்களை அறியாமல்தான் இருக்கிறார்களா? அவருடைய மனைவி கிச்சன் காபினெட் ஒன்றை நடத்துகிறார். அவரைத் தொழுவதைக் காட்டிலும் அவருடைய பத்தினியைத் தொழுவதில் உள்ளூர் அரசியல் நடக்கிறது.

ஸ்ரீவித்யா முற்றிலும் வேறு ஒரு பெண்ணாக இருந்தார்.

அவரது கண்களில் பேராசை எரிந்தது.

இந்தப் படத்தில் மற்றொரு பஞ்சாயத்து உறுப்பினராக வந்த சுகுமாரி மூலம் சில உண்மைகள் கூறப்படுகின்றன. அது ஆணும் பெண்ணும் சமம் என்பது. நாம் தாய், தாரம் என்றெல்லாம் சந்தர்ப்பத்துக்கு கும்மி கொட்டி விளையாடினாலும், ஆண்களுக்காக எதிலும் பெண்கள் பின்தங்க வேண்டியதில்லை என்பது ஒரு பாடம். சரிக்குச் சமமாக மல்லுக்கட்டி, தனக்குத் தேவையானதைப் பேரம் பேசி, அவசரத்துக்கு ஒரு சபலப் பிண்டத்துக்குக் கண்ணடித்துக் காட்டியும்கூட, தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார் அவர். எல்லாவற்றிலும் பங்கு கேட்கிறார். நான் ஒரு வேளை ஆட்டத்தை மாற்றி ஆடக்கூடும் என்று எச்சரிக்கை செய்து சொந்தக் கட்சியில் இருந்தே பணம் பார்க்கிறார். சொல்லப் போனால் அவர் வருகிற காட்சிகள் எல்லாம் பரவசமாக இருந்தன. அதாவது, ஜார்ஜின் பட்டவர்த்தனத்தை வியக்காமல் இருக்கவே முடியாது. பாலத்தைக் காவல் காக்க வந்த போலீசு, ஆண் இல்லாத வீட்டில் புகுந்து தின்றதும் இல்லாமல், அந்த அலுப்பு தீர முற்றத்தில் பாய் போட்டு படுத்துக்கொண்டு மயங்குகிறார். அந்தப் பெண் அவருக்கு விசிறிக் கொடுக்க வேண்டும். வீட்டுக்குத் திரும்பின அப்பா, பற்களை நறநறத்தாலும் மகள் சாந்தமாக யாரும் ஒப்புக்கொள்ளக்கூடிய கேள்வியைக் கேட்கிறாள். “அவங்க போலீசு இல்லையா வாப்பா? அவங்க சொன்னா நாம கேக்காம இருக்க முடியுமா? “ அவளைக் கொண்டுசென்று கையில் ஒரு குழந்தையோடு அவளைத் திருப்பி அனுப்புவதும் படம் முடிவதற்குள் வருகிறது.

கொள்ளையடிக்க வேண்டி, ஒரு பாலம் கட்டுகிற காரியத்தில் தனி மனிதர்கள் பாதிக்கப்படுவது இருக்கட்டும். அந்த இடத்தில்தான் பாலம் கட்ட வேண்டுமா, சர்ச்சுக்கு அருகே கட்டினால் என்ன என்று கிறிஸ்துவர்களை முழங்க வைக்கிறார்கள். இது என்ன அநியாயம் என்று அதற்கு எதிராக ஹிந்துக்களை எழுச்சி கொள்ள வைக்கிறார்கள். ஊரே இரண்டு பட்டு மோதல் சென்றுகொண்டிருக்கும்போது, இரண்டு தரப்பு திருடர்களும் சமாதானம் செய்துகொள்கிறார்கள். திருட்டை விரிவு செய்து, இரண்டு தரப்பினரும் அடிக்கிற கொள்ளையைப் பங்கு பிரித்துக்கொள்ளுவது என்பதாக முடிவாகிறது. கட்சி பேதங்கள் எதுவுமில்லாமல் அங்கே சந்தோசம் கரை புரண்டோடுகிறது.

மிஸ்டர் பொதுஜனம் எல்லாவற்றையும் படு உற்சாகமாக வேடிக்கை பார்த்துவிட்டார். தூணிலும் இருந்து, துரும்பிலும் இருந்து காண முடிந்த மல்டி சீன்ஸ். ஊனமுற்று இருக்கிற அவலத்தை எல்லாம் மறந்து ஊரெங்கும் நீந்தி வந்து எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. இந்தியா முழுக்க நடப்பது போலத்தான். ஏறக்குறைய ஒரு தேர்தல் திருவிழாவில் மக்கள் கேளிக்கையாகத் திரிவது போலத்தான். இனி பாலத்தைத் திறக்கும் போது ஒரு அமைச்சரின் ஆவேசமான பேச்சைக் கேட்க முடியும். நாம் நமது மானம் காக்கிற துணிகளை உருவிச் செல்வோரின் சிலைகளை நிறுவி, நம்முடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுவது வழக்கம். அதற்குக் குறை எதுவும் வந்துவிடாமல், குரூப்பின் சிலை திறக்கப்படப் போகிறது. முன்னே சொன்னது போல, மைக்கு செட்டு போட்டதும் கும்மாங்குத்து ஆடும் குழந்தைகளைப் போல குதூகூலத்துடன் திரண்டிருக்கிறது ஊர்.

ஊர்வலம் பாலத்தில் முன்னேறிச் செல்லும்போது, பாலம் இடிகிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

ஆற்றில் பெரிய வெள்ளமெல்லாம் இல்லை. அடித்துப் பிடித்துக்கொண்டு அவ்வளவு பேரும் கரையேறுகிறார்கள்.

திருவாளர் பொது ஜனத்தின் சக்கரப்பலகை ஆற்றில் மிதக்கிறது. அவரை யாரும் கவனிக்கவில்லை,  காப்பாற்றவும் இல்லை.

*

முந்தைய பகுதிகள்:

  1. ஸ்வப்னாடனம்
  2. உள்கடல்
  3. மேள
  4. கோலங்கள்
  5. யவனிகா
  6. லேகயுடே மரணம், ஒரு பிளாஷ்பேக்
  7. ஆதாமிண்டே வாரியெல்லு