முழு துஷ்டனாக உருமாறிவிட்ட பேபிச்சாயன் என்கிற பேபியை அவனது உறவினரும், அந்த ஊரின் சர்ச் பாதருமான கோபி, அவனை முழுமையாக வளைத்துவிட முடியும் என்கிற நம்பிக்கையில் இறுதிக் கேள்வியாக ஒன்றைக் கேட்கிறார். “நீ உன் குடும்பத்தின் மீது அன்பாக இருக்கிறாய் அல்லவா?“
பேபி இல்லை என்கிறான்.
அவர் துணுக்குறுகிறார். மேலே பேசுவதற்கு வழியே இல்லை. பதற்றத்துடன் “ஏன் அப்படி?“ என்கிறார்.
“என்னிடம் யாரும் அன்பாயில்லை. நானும் இல்லை” என்கிறான் அவன்.
எப்படிப் பார்த்தாலும் இதுதான் கதையின் மையப்புள்ளி.
“இரைகள்“ (1985) கே.ஜி.ஜார்ஜின் தனித்துவமான படம்.
பிரபஞ்சம் மிகப் பெரியது. இயற்கையைப் பயந்து அதற்கு முன்னால் மண்டியிட்ட மனிதனின் பயம் விட்டுப்போகாமல் அது இரத்தத்தில் தொடர்கிறது. அவனுக்குப் பக்கத்தில் யாரேனும் வேண்டும். பராமரிக்கப்பட வேண்டும். நம்மை யார் கவனிக்கிறார்கள், நம்மிடம் யார் கருணை செகிறார்கள், நம்மை யாரெல்லாம் காதலிக்கிறார்கள் போன்ற கவனங்கள் அவனைவிட்டு விலகுவதில்லை. என்னதான் கூட்டம் கூட்டி வாழ்ந்தாலும், உலகம் ஒரு பெரிய அநாதை விடுதியின் சன்னல்தான். யாருடைய வருகைக்காகவோ நாம் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். யாருடைய அன்புக்காகவோ ஏங்கிக்கொண்டிருக்கிறோம். நல்லவன், கெட்டவன் என்று பிரிக்கப்பட்டு எவ்விதமாக ஒருவன் அடையாளம் காணப்பட்டாலும் அதன் மூலக்கூறுகள் ஒன்றே. பேபி தன்னை மறைத்துக்கொள்ள இப்படத்தில் குற்றங்களுக்குள் ஒளிகிறான். நமக்குப் பிடிக்காத எவ்வளவோ பேரை நாம் மனதால் கொன்று பார்த்திருப்போம், பேபி நிஜத்தில் கொஞ்சமாவது செய்துபார்க்கிறான்.
பேபியைக் கதாநாயகனாகக் கொண்ட படம், அவன் எப்படி இதற்குக் கதாநாயகன் ஆக முடியும் என்பதற்குத் திரைக்கதையாக அவனைச் சுற்றிலும் ஒரு குடும்பத்தை நிறுத்தியிருக்கிறது. ஜார்ஜின் மேதமையை அதில் பார்க்க முடியும். ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுடைய காரியங்களை பார்த்துக்கொள்வதாகத்தான் இருக்கின்றன, ஆயின் அவர்களின் இருப்பு அவனை நிலைகுலையச் செய்கிறது. அன்பு, பாசம், நேசம் எனப்படுவனவற்றில் கசிந்துவிடுகின்ற அவர்களுடைய ஊழல்கள், அதனால் சுற்றிச் சூழ்கிற பொய்கள், எப்போதும் தனிமையை வெறிக்கச் செய்வதாக இருந்துவிடுகின்றன. பலவற்றிற்கும் அவன் ஒரு சாட்சி போலிருந்து வேடிக்கை பார்த்துக் குமைகிறான்.
பார்வையாளர்கள் யாருமே கவனிக்கக்கூடிய, பின்தொடரக்கூடிய கதாபாத்திரங்கள். திலகன் நிலங்களை வாங்கிச் சேர்த்துக்கொண்டே இருக்கிறார். நிற்க அவகாசமில்லாமல் பல்வேறு உத்திகள் மூலம், உபாயங்கள் மூலம் எதற்கு இதைச் சேர்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு அவரிடம் பதில் இருக்காது. மேலும் சொல்லப்போனால் எஸ்டேட்டுகளில் எலும்பு முறிய உழைக்கிற மக்களின் உழைப்பைச் சுரண்ட அவரைச் செலுத்திக்கொண்டிருப்பது எது? எல்லாக் காரியங்களும் பணத்தினாலும், செல்வாக்கினாலும் நிவர்த்தி செய்யப்படுகிறவை என்கிற அவருடைய நம்பிக்கை கடைசியில் எதில் சென்று முடியக்கூடியதாக இருந்தது?
மூத்த மகன் அப்பாவைப் பின்தொடர்ந்து வந்து, தற்போது அவர் எட்டு என்றால், இவன் பதினாறுக்குத் தாவிக்கொண்டிருக்கிறான். அக்காவுடன் முரண்டு பிடித்து, விலகிச் செல்லப் பார்க்கிற அவள் கணவனைப் பலவந்தமாக இழுத்துச் சென்று சோபாவில் தள்ளி சமரசத்துக்கு உட்கார வைக்கிற ஒரு காட்சி போதும், அதிகாரம் என்பது எவ்விதமாக வன்முறையைக் கைகொள்ளும் என்பதை உணர்த்துவதற்கு. இளைய மகன் அந்தக் குடும்பத்தில் சேர முடியாமல் மிதக்கிறான். மிதக்கிறான் என்பதற்கு உள்ளே மற்றொரு பொருளும் உண்டு. அவனது குடி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அப்பனுக்குக் காரியதரிசியாக இருந்து வேலை பார்த்துக்கொண்டு அநீதிகளைச் சகித்துக்கொண்டிருக்க முடியாதவன். அவன் வீட்டில் இருந்து வெளியேறி சுதந்திரமாக இருக்க விரும்புகிறான். அதே நேரம் செய்வதற்குப் பெரிய பணிகள் ஏதும் இல்லாததால் குடித்துக்கொண்டிருக்கிறான். கே.ஜி.ஜார்ஜ் முதலாளித்துவம் பற்றிக் கோடிக் காட்ட விரும்புகிறார். செல்வத்தைக் குவிக்கும்போது உண்டாகிற தேக்க நிலையில்தான் படத்தின் மொத்தச் சம்பவங்களும் நிகழ்கின்றன. இதைப் பற்றி முக்கியமான பலரும் புனைவு செய்திருக்கிறார்கள். பல மாஸ்டர்களின் கதைக் கருப்பொருள் என்று சொல்ல வேண்டும்.
ஆனி என்கிற கேரக்டரில் ஸ்ரீவித்யா. பலவேறு இடங்களில் நான் இதுபற்றி எழுதியிருக்கிறேன். ஏனெனில் வில்லியாக இருக்கிறவர்களைத் தவிர்த்து, இப்படி முற்றிலும் ஒழுக்கம் கெட்ட ஒரு பெண்ணை யாரும் முழுமையாகச் சித்தரித்தது இல்லை. தேவையான அனைத்தும் கைக்கு அருகில், சொடக்கு போட்டால் கிடைத்துவிடும் தூரத்தில் இருக்கிறது. அதுவே பெரிய அலுப்புதான். வெறுமனே இருக்கும்போது நாம் தாண்ட விரும்புகிற எல்லைகள், அதிலும் மந்த புத்திகொண்ட ஒரு பெண்ணின் முட்டாள்தனங்கள் என்று ஆனியின் விஸ்தரிப்பு அட்டகாசம். அவளுக்குப் பசித்துக்கொண்டே இருக்கிறது. வயிற்றிலும், உடம்பிலும், மனதிலும். இப்படம் சில பழக்கங்களை வைத்திருக்கிற பெண் படி தாண்டிச் செல்லுவதாக கட்டம் கட்டவில்லை, நாம் எவற்றையும் செய்ய முடியும் என்கிற ஸ்திதியில் இருப்பதால் தன்னை மீறின ஒழுகின்மைக்கு அவள் நகர்ந்து சென்று சீர்கேட்டில் இருப்பதைத்தான் ஜார்ஜ் கூறுகிறார். அவளால் பலருக்கும் பல பாதிப்புகள் பெருகுவதை நாம் அறிய முடியும். குறிப்பாக அவளுடைய கணவனாக நடிப்பதற்கு நெடுமுடியைத் தேர்வுசெய்தது பிரமாதம். கட்டுக்குள் நிற்காத மனைவியின் அத்துமீறல்களில் பிதுங்குபவராக வருகிறார். நிச்சயமாக அந்த முகத்தை மறக்கவே முடியாது. எல்லாம் நடத்திக்கொண்டிருந்துவிட்டு, ஒன்றுமறியாத குழந்தை போலச் சிணுங்கிக்கொள்கிற பாத்திரத்தைச் செய்த ஸ்ரீவித்யாவின் உடல்மொழி இந்தப் படத்தின் முக்கியமான ஒன்று. ஒரு இயக்குநரின் கற்பனை இல்லாமல் அந்தச் சாதனையை அடைந்திருக்கவே முடியாது.
படத்தில் மற்றொரு பெண் பாத்திரம் நிர்மலா. ராதா நடித்திருந்தார். அவள் பேபியின் பால்ய காலத்துச் சகியாக இருந்து தொடர்ந்திருக்கக் கூடும். பேபியின் முரட்டுத்தனங்களைக் காணாதது போலிருப்பது ஆகட்டும், மெல்ல அதிலிருந்து நழுவி மற்றொருவனைத் திருமணம் செய்வதற்கு இசைந்து கொடுப்பதாகட்டும், எல்லாமே வழக்கத்தை மீறியவை. ஆனால் நிரந்தரமான உண்மைகளாக இருப்பவை. ஜார்ஜ் இம்மாதிரி வந்துவிடுகிற கசப்பான இடைவெளிகளில் தர்க்கங்களை நிரப்பி யாரையும் புனிதப்படுத்திக்கொண்டிருக்கவில்லை. ஆனால் என்ன செய்வது, கருத்துகள் நம்மை ஆள்கின்றன. பேபி போன்ற காதலர்களையும்தான். பொதுவாக எந்த ஆணுக்கும் தன்னை விரும்பும் ஒரு பெண், தன்னை வெறுத்து அவள் தனது வழியில் செல்ல முடியும் என்பதையே நம்ப விரும்புவதில்லை. வேறு ஒரு ஆண் அவளுக்குள் உதித்துவிட முடியும் என்றால் அவ்வளவுதான், கொந்தளித்துவிடுவார்கள். நிர்மலா என்கிற பெண்ணில், ஒரு நடிகையாக ராதா செய்வதற்கு ஒன்றுமில்லை, ஆயின் மெஜாரிட்டி சினிமா ரசிகர்களுக்குத் திகைப்பு உண்டாக்குகிற ஒரு கதாபாத்திரம். அது சொல்லப்படுகிற நீண்ட கதைக்கு அவள் மிகவும் தேவையாக இருந்தாள். அது இந்தப் படத்தின் திரைக்கதைக்கு மற்றுமொரு தூண்.
பேபியாக நடிக்க வந்தவரும்கூட குறிப்பிடத்தக்க திறமைகள் கொண்டவர் அல்ல. கணேஷ் குமார் என்பது அவருடைய பெயர். வருவதும், போவதும், நடப்பதும், படுத்துக்கொண்டிருப்பதுமான ஒரு இளைஞன். அவனுடைய முதல் சாய்ஸ் தற்கொலைதான். அவன் தன்னைக் கொன்றுகொள்ளத் தயாராக இருந்து சுற்றிக்கொண்டு வருகிறான். ஒரு நண்பனிடம் வீட்டில் இருக்கிறவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘போர்’ என்கிறான். இன்னொரு சந்தர்ப்பத்தில் எல்லோரும் பேசுகிற பொய்களைக் கேட்டுக் கேட்டு உண்மைகள் எது என்பது பற்றிப் புரியாமல் போய்விட்டது என்கிறான். மனம் என்கிற ஒன்று, பல சுரணைகளை இழந்த நிலையில் அவனுடைய வார்த்தைகள் எல்லாம் சாரமற்று இருக்கின்றன. அதற்கு உள்ளே மறைந்திருக்கிற கனத்தை யாரும் புரிந்துகொண்டிருக்கவில்லை. அவன் செய்துகொண்டிருக்கிற செயல்கள் எட்டப்படுவதில்லை. உண்மையில் அதையெல்லாம் கவனிக்கக்கூடிய நேரமேகூட யாருக்கும் இருப்பதில்லை. அவனைக் காதலிக்கிற பெண்ணேகூட பல காரணங்களைக் கூறி அவனிடமிருந்து ஓட வேண்டியதாக இருக்கிறது. அவைகளை அவன் புரிந்துகொண்டிருக்க முடியும் என்பதைவிட, மனம் நொறுங்கிய ஒரு ஆளின் காத்திருப்பு உதாசீனப்படுத்தப்படும் போது நிலவுகிற பதற்றமே வேறு. நன்றாக யோசித்துப் பார்க்கையில் பேபி பல குற்றங்களைச் செய்துவிட்ட குற்றவாளியும் கொலைகாரனும்தான். மற்றொரு கோணத்தில் அவனால் நல்ல துறவியாகவும் இருந்திருக்க முடியும் என்பதாக எனக்குப் பட்டது.
காடுகள் சூழ்ந்திருந்த இடத்தில் வந்து குடியேறி, மிருகங்களையும் பறவைகளையும் நேசித்து வணிகம் செய்து, பின்னால் வந்த தலைமுறைக்கு வழிவிட்டுக் கொடுத்து, இன்று படுக்கையில் விழுந்துவிட்ட ஒரு தாத்தா படத்தில் இருக்கிறார். வீட்டு ஜனங்களை ஒன்றாகக் காணும்போது அவர் அடைகிற பரவசம், கடந்த காலத்தின் மகத்துவங்களைக் குறிப்பிடும் ஒன்றுதான். படத்தில் அவலமான காரியங்கள் நடந்துகொண்டிருக்கையில் அவருடைய குரல் கேட்டுக்கொண்டேயிருப்பது காட்சிகளின் விட்டங்களை விரிவுபடுத்துகின்றன. ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு கதாபாத்திரத்தை எப்படிக் கையாளுவது என்கிற சூட்சுமத்தை இவர் மூலம் அறிந்துகொள்ள முடியும். முதிர்ச்சி கொள்ளாமல் இவைகளை நடைமுறையில் புழங்க முடியாது.
முதலில் சொன்னது போல, தனித்துவம் என்பதற்கு எல்லாத் தரப்புகளில் இருந்தும் வந்த பங்களிப்புகள் பிரமாதமாக இருந்தன. பெரிய அழகியல்களைக் கொண்டுவர வேண்டும் எனும் முனைப்பில்லாத போதும், ஒரு படத்தின் திரைக்கதையைச் சொல்லுவது என்கிற முறையில் வேணு தனது ஒளிப்பதிவில் வாழ்க்கையைக் கொண்டுவந்திருந்தார். ஒலித்துக்கொண்டேயிருப்பது என்று அந்தக் காலப் படங்களின் பலவீனத்தைச் சகித்துக்கொண்டு விட்டால், எம்.பி.ஸ்ரீனிவாசனின் இசையும் அப்படியே.
எவ்வளவு நல்ல கதைகளைச் சொல்லி வந்தபோதும் அடிப்படையில் ஜார்ஜ் முதலில் ஒரு இயக்குநர். நிகழ்த்துக் கலையின் வீச்சுகள் பற்றிய கான்ஷியசுடன் செயற்படுபவர். சினிமாவில் ஸ்டேஜிங் என்கிற அயிட்டம் இருக்கிறது. அது பார்வையாளர்களை உளவியல் கொண்டு பாதிப்பை உண்டாக்குகிற ஒரு திட்டம். உதாரணமாக, இந்தப் படத்தில் அநாகரீகமான முறையில் அடித்து அவமானப்படுத்தப்படும் வீட்டின் மருமகனான நெடுமுடி, சோபாவின் மீது அமராமலும் இறங்கிவிடாமலும் அதன் விளிம்பின் மீது அமர்ந்துகொண்டு பேசுகிற நிமிடம். அந்த நேரத்தில் ஒரு பார்வையாளனுக்கு என்ன உணர்வு தோன்ற வேண்டுமோ, அதை எழ வைத்து இயக்குநர் அங்கே வெற்றி பெறுவதைச் சொல்லலாம், அல்லது ஆனி தன்னுடைய கள்ளக்காதலனைத் தேடிக்கொண்டு வீட்டைச் சுற்றி வரும் ஒரு நடை. உண்மையில் ஜார்ஜின் ஷாட்டுகள் நம்மோடு உரையாடியவாறு இருக்கும்.
மேலும் இந்தக் காலத்தில், அதாவது தீர்வுகள் வேண்டி சினிமாக்கள் முழக்கம் எழுப்பும் காலத்தில், அல்லது காண்டம் பாக்கெட்டுகள் போலத் தீர்வுகளை சினிமாக்கள் பொட்டலம் மடித்துத் தரும் காலத்தில், அனைவருமே நாயகன் நாயகிகளாக மாறிவிட்டோம். வில்லன்கள் என்பது தனியாக ஒரு வகைமை, அவர்கள் வேற்றுக் கிரகத்தவர் போல. அது கூடவே, அனைவரும் நம்மிடம் இனிமேல் குறைகளும், குற்றங்களும் இருந்துவிட முடியாது என்று நம்பத் தலைப்பட்டுவிட்டோம்.
நமது சினிமாக்கள் வெறும் சுவீட் டப்பாக்களாகி விட்டன.
சிந்திக்கத் தோது செய்வதில் யாருக்கும் அனுபவங்களே இல்லை.
என்னதான் செய்வது ?
ஒரு வழி இருக்கிறது.
இந்தச் சீரழிவுகளுக்கு முகம் கொடுக்காமல் மனிதரை ஆராயத் தலைப்பட்ட ஜார்ஜ் போன்ற கலைஞர்களைச் சூடு சுரணை உள்ளவர்களுக்கு மறு அறிமுகம் செய்வது. அவர்கள் ஆழ்ந்து மூழ்கி முத்தெடுத்த உண்மைகளைத் தொகுத்து, சினிமா அதையும் மீறி செல்வது.
இந்தக் கட்டுரைகளுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்பதைச் சொல்ல வருகிறேன்.