இசையின் முகங்கள் (பகுதி 8): இசையில் இருவர் – சங்கர் கணேஷ்

0 comment

சங்கர் – கணேஷ் இருவரும் திரையிசை உலகில் பரபரப்பாக கிட்டத்தட்ட இருபத்து மூன்று வருட காலத்திற்கு மேலாக இயங்கியவர்கள். சங்கர் ராமன், இசை மேதை சி.ஆர்.சுப்பராமனின் உடன் பிறந்தவர். அவரது மறைவுக்குப் பிறகு எம்.எஸ்.வி.யிடம் இசைக்கலைஞராகத் தன் திரைவாழ்வைத் தொடங்கியவர். கணேஷூம் எம்.எஸ்.வி.யிடம் பணிபுரிந்தவரே. இந்த இருவரும் சேர்ந்து இசையமைப்பில் ஈடுபடத் தொடங்கி முதல் படமாக நகரத்தில் திருடர்கள் என்ற படத்திற்கு இசையமைத்தனர்.அந்தப் படம் முழுவதும் வளரவில்லை. அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான கவியரசர் கண்ணதாசன் இந்த இருவரின் இசை மீது கொண்ட பரிவுதான் தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளராக இவர்களை ஆக்கிற்று. 1967ஆம் ஆண்டு தேவர் பிலிம்ஸின் மகராசி படத்தில் இசையமைக்கத் தொடங்கிய இருவரின் இசைப்பயணம் சங்கரின் மறைவுக்குப் பிறகும் சங்கர் கணேஷ் என்கிற பேர் பிரியாத பந்தத்தோடு இன்றளவும் தொடர்கிறது.

எழுபதுகளில் தமிழ்த் திரையுலகம் உள்ளும் புறமுமாகப் பலவகை மாற்றங்களைச் சந்தித்தது. திரைப்படம் தன் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் எடுக்கும் முறையிலும் கதையிலும் வழங்கும் விதத்திலும் பல மாறுதல்களைச் சந்தித்தது. தொழில்நுட்ப மேன்மையும் வெவ்வேறு நிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் ஒருங்கிணைந்து படங்களில் பங்கேற்பதும் பெருகிற்று. புதிய அலை சினிமாவுக்கான தாக்கமும் வரவேற்பும் முன்பைவிடப் பிரகாசித்தது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, திரையிசை 1970-லிருந்து 1985 வரைக்கும் பலவகை மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டிருந்தது. அதற்கு முன்பு பாடல் உருவாக்கத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த, பெரிய மாற்றங்களைச் சந்தித்திராத பாடலின் வழங்குமுறை முற்றிலுமாக மாறத்தொடங்கியது. எழுபதுகளின் தொடக்கத்தில் இருந்தே பெரும் செல்வாக்கு பெற்ற பாடகர்களின் பாடல்களை அவர்தம் குரல்களின் மூலம் குவிப்பது குறையத் தொடங்கியது. வகைமை ஒரு சொல்லாக மெல்ல மெல்லத் திரைப்படப் பாடல்களில் தன்னுடைய இருப்பை உறுதிசெய்யத் தொடங்கியது. திரையிசையில் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த மேதைகள் பல மொழிகளிலும் படங்களை இசைப்பது முன்பிருந்த காலத்தைவிடச் சற்று அதிகமாகத் தொடங்கியது. அறுபத்து ஐந்தாம் வருடம் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் பிரிந்த பிறகு, சியாம் பிலிப்ஸ் இருவரும் ஓரிரு படங்களுக்குச் சேர்ந்து இசையமைத்தார்கள். இருந்தாலும், மெல்லிசை மன்னர்களுக்குப் பிறகு அறுபதுகளின் எல்லையில் இசையமைக்க வந்த சங்கர் கணேஷ் கடைசிவரை பிரியாமல் பணிபுரிந்த இரட்டையர்கள் என இந்தியத் திரை நிலத்தில் அறியப்படுபவர்கள்.

ராஜன் – நாகேந்திரா, கல்யாண்ஜி – ஆனந்த்ஜி, லக்ஷ்மிகாந்த் – பியாரிலால், சங்கர் – ஜெய்கிஷன் எனப் பலரும் இணை இசைஞர்களாக இசையுலகில் பணிபுரிந்து பேரும் புகழும் பெற்றிருக்கின்றனர். அந்த வரிசையில் சங்கர் கணேஷ் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட அறுநூறுக்கும் மேற்பட்ட படங்களை இசையமைத்து இருக்கக்கூடும். இது என் கணக்கு. ஏடுகள் அவர்கள் ஆயிரம் படங்களைத் தாண்டி இசையமைத்ததாகச் சொல்கின்றன.

எழுபதுகளின் ஆரம்பத்தில் தமிழில் பெரிய நட்சத்திரங்கள் என்று புகழப்பட்ட எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய முதல்நிலை நாயகர்களைத் தாண்டி ஜெய்சங்கர், முத்துராமன், ஸ்ரீகாந்த், ஜெய் கணேஷ், சிவச்சந்திரன், ரவிச்சந்திரன், நாகேஷ், ஏவிஎம் ராஜன் என ஒரு டஜனுக்கும் மேலான நாயகர்களின் படம் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருந்தன. சினிமா நிகரில்லாத கொண்டாட்டமாகத் தன் செல்வாக்கின் உச்சத்தை நோக்கி நடை போட்டுக்கொண்டிருந்தது அந்தக் காலகட்டத்தில் இந்திப் பாடல்களை அவற்றின் செல்வாக்கால் தென் மொழிகளில் மீள் உருவாக்கம் செய்வதென்பது சினிமா இசை தொடர்ந்து சந்தித்த புறவய நிர்பந்தமாக இருந்தது. மேலும் மேற்கத்திய இசை ஆல்பங்கள், திரைப்படம் சாராத பாடல்கள், செவ்வியல் இசைக்கோவைகள் எனப் பலவற்றையும் பாடலுருவாக்கத்தில் பயன்படுத்துகிற நடைமுறையை சினிமா தன் இயல்பாகக் கொண்டிருந்தது. இவற்றுக்கெல்லாம் வளையாமல் உறுதியோடு தன் சொந்த மெட்டுகளை மாத்திரம் படைத்தவர்களும் மேதைமையினூடான பிடிவாதத்தோடு உறுதி காட்டியவர்களும் ஒருபுறம் இருக்க, மறுபுறம் சினிமாவின் வணிக நிர்பந்தத்தையும் அதன் மிகு பசியையும் உணர்ந்து, வளைந்து கொடுத்து, இசை உருவாக்கம் செய்தவர்களும் இருந்தார்கள். சங்கர் கணேஷ் இரண்டாவது வகையைச் சார்ந்த இசைக்கலைஞர்கள். அவர்கள் இசை உலகில் கோலோச்சிய காலகட்டத்தை இரண்டாகப் பிரித்துக்கொண்டால் 1980ஆம் ஆண்டுக்கு முன் பின் எனப் பகுப்பது நியாயமாக இருக்கும்.

1980ஆம் ஆண்டுக்கு முன் சங்கர் கணேஷ் இசைத்த படங்களும் பாடல்களும்:

சங்கர் கணேஷ் இசையமைக்க வந்த காலகட்டம் தமிழில் மட்டுமல்லாது தென்னக மொழிகளில் திரையிசைப் பாடல்கள் உச்சபட்ச செல்வாக்கில் இருந்த காலம் என்று சொல்ல முடியும். இந்தக் காலத்தில் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி, எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கோவர்தனம், புகழேந்தி, டி.ஆர்.பாப்பா, வேதா, வி.குமார் எனப் பலரும் தனித்த இசை வழியும் பாடல் மொழியும் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருந்தனர். அந்த வேளையில் தங்களது இசை அமைப்பைத் தொடங்கிய சங்கர்-கணேஷ், எழுபதுகளின் மத்தியில் இளையராஜா என்கிற பெரும் புயலின் வருகைக்கு முன்பின்னாக தமிழ் திரையிசை இரண்டாகப் பிளவுபட்ட நிகழ்வையும் தாண்டி இசையுலகில் நின்று வென்றவர்கள்.

கிளப் பாடல்களாகட்டும் டூயட் பாட்டுக்களாகட்டும் இயன்றவரை கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் சின்னச்சின்ன நகாசு வேலைகளைச் செய்தவண்ணம் இசைத்திருப்பது இசையிருவரின் சிறப்பு. இப்படிப் பல நூறு பாடல்களை நம்மால் எடுத்துக்காட்ட முடியும். இசையமைப்பு என்பது பாடலை உருவாக்குவது மட்டும் அல்ல, அதைத் தனிக்கச் செய்வதும் அதனொரு பாகம்தான். அந்த விதத்தில் பரந்து விரிந்த குரல் உபயோகமாகட்டும், இசைக்கருவிகளின் பயன்பாடாகட்டும், சங்கர் கணேஷின் பாடல்கள் பலவற்றில் அப்படித் தனிப்பதற்கான கூறுகளைக் கண்ணுற முடிகிறது.

எழுபதுகளின் ஆரம்பத்தில் இரட்டையரின் இசையில் இரண்டு பாடல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒன்று, கண்ணதாசன் எழுதிய கண்ணன் வருவான் படப் பாடல். பூமியைப் படைத்தது சாமியா என்று தொடங்கியது. இதை டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். இந்தப் பாட்டு ஜெய்சங்கருக்குப் பதிலாக அந்தக் காலகட்டத்தில் சிவாஜிக்கு அமைந்திருந்தால் இன்னும் பெரிய வரவேற்பைச் சென்றடைந்திருக்கும் என்பது என் கணிப்பு. எப்போது கேட்டாலும் மனத்தினுள் சிவாஜி பாடலாகவே இதனை உணர்ந்திருக்கிறேன். இதன் வரிகள் மனத்தைத் துளைக்கும் சொற்தோட்டாக்கள். மீதமின்றித் தன்னைக்கொண்டு நேயமனதை வகுத்துப் பார்க்கும் விடையிலிப் பாடல் இது. 

பூமியைப் படைத்தது சாமியா

இல்லை சாமியைப் படைத்தது பூமியா

தினம் பாலுக்கும் கூழுக்கும்

ஏழைகள் அழுகையில்

ஆயிரம் கோயில்கள் தேவையா

பிறப்பும் இறப்பும் அவன் பொறுப்பு

இங்கு சிரிப்பும் அழுகையும் யார் பொறுப்பு

இரவு இங்கே வெளிச்சம் அங்கே

என்ன வேலை இறைவனுக்கு

இவன் வேர்வையின் துளிகள் அவன் சூடிடும் மணிகள்

இந்த ஏழையின் உழைப்பு அந்த மாளிகை மதிப்பு

பருந்து அங்கே கிளிகள் இங்கே

இரண்டின் நடுவில் இறைவன் எங்கே

அது ஆலயமணியா என் ஆசையின் ஒலியா

அவன் பூஜையின் குரலா என் கேள்விக்குப் பதிலா

வயிறு இங்கே உணவு அங்கே

இரண்டுக்கும் நடுவே இறைவன் எங்கே

ஒரு பாதையில் போனால் மறு பாதையில் வரலாம்

இது சாலைக்கு நியாயம் எது ஏழைக்கு நியாயம்

பாதை இங்கே பயணம் எங்கே

இரண்டுக்கும் நடுவே இறைவன் எங்கே

அடுத்தப் பாடல், மாணவன் என்ற படத்துக்காக அப்போதைய பதின்பருவ நடிகர்களான குட்டி பத்மினி, கமல்ஹாசன் இணைந்து தோன்றிய பாடல். விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா என்ற அந்தப் பாடல் மிகப் பிரபலமடைந்தது. பின்நாட்களில் சுந்தர் சி பாபு இசையில் “வாளை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” என்று இந்தப் பல்லவிதான் மீவுருக் கண்டது. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்னும் அளவுக்கு மாணவன் படப்பாடலில் இருந்து எழுந்ததுதான் வாளை மீன் பாடல்.

தெய்வம் பேசுமா என்ற படத்தில் இடம்பெற்ற ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம் என்ற டூயட் ஒருமாதிரி மனங்கிளர்த்தும் பாடலாக ஒலித்தது. பாலுவும் ஜானகியும் சேர்ந்து பாடிய ஐஸ்க்ரீம் தூறல் இந்தப் பாடல். காதலின் அளவுகடந்த செல்லங்கொஞ்சலாகவே இந்தப் பாடல் ஒலித்தது. பல்லவி தொடங்கியதிலிருந்து உணர்வூக்கமும் கிறக்கமும் வளர்ந்துகொண்டே செல்லும். தாளவொண்ணாத பெரும்பிரியக் கணமொன்றில் பாடல் நிறையும். சற்றே காதல் கனம் கூடிய பாடற்பாகு இது. பஞ்சு அருணாச்சலம் எழுதியது. இந்தப் பாடல் எழுபதுகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியவற்றுள் மறக்க முடியாத அழகான டூயட் பாடல். பாலுவை இரசிப்பவர்களால் வெளிவர முடியாத வேகமாயை இந்தப் பாட்டு.

சங்கர் கணேஷ் இசையில் எண்ணற்ற பாடல்கள் உண்டெனினும் அவரது சிறந்த பத்துப் பாடல்களில் இதனை நான் முன்வைப்பேன். இந்தப் பாடல் நகர்ந்து செல்லக்கூடிய மெட்டின் திசைவழி இருக்கிறதே, அது அபாரமானது. பாடலின் இடைவழி யாவும் அரிதினும் அரிய சங்கதிகளின் பூவாரியாய்ப் பெருகும் விதம் அழகு. மறக்க முடியாதவர்களின் மனநாயகம் இந்தப் பாடல். சுழலிசைப் பாடல்களின் பேரகராதியிலும் இந்தப் பாட்டுக்கொரு மகுட இருத்தல் நிச்சயம் உண்டு. எனக்கு இதன் வரிகளையும் குரல்களையும் இசை நகர்தல்களையும், எதை முதலில் எதைக் கடைசியில் எதை நடுவில் இரசிப்பது என்று முடிவெடுக்க முடியாமலே, மூவாயிரம் முறைகளுக்கு மேல் கேட்டயர்ந்த ஞாபகம் மன அணுக்கமாய் இந்தப் பாடலை எப்போது உணர்த்தும்.

இதே படத்தில் “பனி நிலவே” எனத் தொடங்கும் பாடல். கே.ஜே.யேசுதாஸ் பாடியது. இசையொழுங்கும் ஆதுரமும் சேர்ந்து ஒழுகும் மிதமழை போன்றதொரு பாடல். புலமைப்பித்தன் எழுதியது. “முத்துமாலையிலே உன்னைத் தொடுத்தானோ, உந்தன் மேனியிலே தங்கத் தாமரை போலொரு ஓவியம் வரைந்தானோ” என்று சரணம் முடியும் இடம் பாந்தமாய் ஈர்க்கும்.

அவள் என்பது கலர் படம். 1972ஆம் ஆண்டு வந்தது. ஏ.சி.திருலோக்சந்தர் இயக்கிய படம். சசிக்குமார், வெண்ணிற ஆடை நிர்மலா இருவருக்கும் அமைந்த ஒரு டூயட். கீதா ஒருநாள் பழகும் உறவல்ல என்ற பாடல். வாலி எழுதியது, எஸ்.பி.பாலுவும் சுசீலாவும் பாடியது. சற்றே வேகமாய் ஓடி நிறைந்தது இந்தப் பாடல். பேராசிரியர் ராதாகிருஷ்ணனின் மகனான சசிக்குமார் இராணுவத்தில் பணியாற்றி முடித்துவிட்டு வீடு திரும்பியவர். நடிகராக ஜொலிக்க ஆரம்பித்த நிலையில் அடுப்பறையில் தன் மனைவியை கேஸ் வெடிப்பில் இருந்து காக்கச் சென்றபோது தானும் உயிர் துறந்தவர். இன்னும் பல வேடங்களில் மிளிர்ந்திருக்க வேண்டியவர். ராஜபார்ட் ரங்கதுரை, தெய்வாம்சம், அரங்கேற்றம், பாரத விலாஸ், மனிதனும் தெய்வமாகலாம் உட்பட பல படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்கள் அவர் பேர் சொல்கிறவை.

நான் ஏன் பிறந்தேன் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த எம்.ஜி.ஆர் படம். நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் என்ற பாடல் திசையெல்லாம் ஒலித்தது. உனது விழியில் எனது பார்வை பாடலாகட்டும் தம்பிக்கு ஒரு பாட்டு பாட்டாகட்டும் இதே படத்தின் புகழ் பகிர்ந்த பாடல் மலர்கள். எம்ஜி.ஆர் நடித்த இதயவீணை படம் இரட்டையர் இசையில் பெரும் வெற்றி பெற்றது. வாலி ஐந்து பாடல்களையும் புலமைப்பித்தன் ஒரு பாட்டையும் எழுதிய படம் இது. காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர், பொன் அந்தி மாலைப் பொழுது ஆகியவை சூப்பர் ஹிட் பாடல்கள். திருநிறைச் செல்வியோ நான் தேடிய தலைவியோ பாடல் காற்றாண்ட கானம். இந்தப் படத்துக்கு வரலாற்றுப் புகழொன்று உண்டு. எம்.ஜி.ஆர் தி.மு.க.விலிருந்து வெளியேறிய பிறகு வெளிவந்த முதல் படம். 150 தினங்களைக் கடந்து ஓடி வெற்றிபெற்றது எனினும் முதல் ஷோவிலிருந்து படத்துக்கு உள்ளும் புறமும் சூழ்ந்திருந்த அழுத்தம் முன்னர் இல்லாத புதியது. ஆனாலும் வென்றது.

ராமு கரியத் தயாரித்த படம் கண்ணம்மா. பாடல்கள் கண்ணதாசன், இசை இருவர் இசைத்த படம். கே.ஆர்.விஜயா முதன்மைப் பாத்திரம். எங்கெங்கும் உன் வண்ணம் பி.பீ.சீனிவாஸ் பாடிய பாடல் நிறை தித்திப்பு. தென்னைமரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம் என்ற தெம்மாங்குப் பாட்டு சுசீலாவும் டி.எம்.எஸ்ஸூம் சேர்ந்து பாடியது. ஸ்டைலான பாடல்.

தென்னைமரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்

நீ சேலை காயப்போடும்போது பார்த்த ஞாபகம்

பார்த்த ஞாபகம்

முன்னே வந்து நின்னதாக கொஞ்சம் ஞாபகம்

முன்னே வந்து நின்னதாக கொஞ்சம் ஞாபகம்

என்னை முழுசாகப் பார்த்ததாக எனக்கு ஞாபகம்

எனக்கு ஞாபகம்

எனக்கும் ஞாபகம்

(தென்னைமரத் தோப்புக்குள்ளே…)

உதவி செய்யச் சொன்னதாக ஏதோ ஞாபகம்

உடம்பைக் கொஞ்சம் தொட்டதாக எனக்கு ஞாபகம்

உதவி செய்யச் சொன்னதாக ஏதோ ஞாபகம்

உடம்பைக் கொஞ்சம் தொட்டதாக எனக்கு ஞாபகம்

இன்னும் கொஞ்சம் தொடட்டுமான்னு கேட்ட ஞாபகம்

கேட்ட ஞாபகம்

இதுவரைக்கும் போதுமுன்னு சொன்ன ஞாபகம் 

சொன்ன ஞாபகம்

(தென்னைமரத் தோப்புக்குள்ளே…)

காதலாக இருந்த போது கனவு வந்தது – அது

கல்யாணத்தில் முடிந்தபோது கைக்கு வந்தது 

காதலாக இருந்த போது கனவு வந்தது – அது

கல்யாணத்தில் முடிந்தபோது கைக்கு வந்தது

போதையாக இருந்ததெல்லாம் புரிந்துவிட்டது – நான்

புரிந்துகொள்ள முயலும்போது விடிந்துவிட்டது

விடிந்துவிட்டது

(தென்னைமரத் தோப்புக்குள்ளே…)

எளிமையும் இனிமையும் கொண்ட இந்தப் பாடலில் நன்கறிந்த சொற்களினூடே பொதிந்து கிடக்கிற காதலெனும் பெரும்பொருள் கேட்கக் கேட்க இனிமையாய் விரியக்கூடியது.

புகுந்த வீடு படத்தில் ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் சேர்ந்து பாடிய டூயட் ஒன்று செந்தாமரையே செந்தேன் இதழே என்ற பாடல் இன்றும் கேட்டால் இரசிக்க முடிகிற பாடல் மது. இதன் பல்லவி முடிந்து முடிந்து சுழன்று தொடர்வது பேரழகு. விசித்ரா என்ற புதியவர் எழுதிய பாடல் எனத் தெரிகிறது.

செந்தாமரையே செந்தேன் இதழே

பெண்ணோவியமே கண்ணே வருக

கண்ணே வருக

முல்லைக்கு தேர் கொடுத்த மன்னவன் நீயோ

மல்லிகையின் நல்ல மது வண்டோ

(செந்தாமரையே)

புகுந்த வீட்டின் புது வரவு

நீ பூத்துக் குலுங்கும் புது நினைவு

மங்கை என் வாழ்வில் ஒளி விளக்கு

இது மன்னவன் ஏற்றிய திரு விளக்கு

இளமை தரும் மயக்கம்

இனிமை அதில் பிறக்கும்

(செந்தாமரையே)

நீல வானின் முழு நிலவே

உன்னை நெருங்கி மகிழும் என் மனமே

ஆசை மனதின் இன்னமுதே

உன்னை அருந்தத் துடிக்கும் என் உறவே

கொடுத்தேன் என்னைக் கொடுத்தேன்

எடுத்தேன் அள்ளி எடுத்தேன்

(செந்தாமரையே)

முல்லைக்கு தேர் கொடுத்த மன்னவன் நீயோ

மல்லிகையின் நல்ல மது வண்டோ

செந்தாமரையே

படம் பெயர் வரவேற்பு. “பொன்வண்ண மாலையில் நீ தொடும் போது எண்ணத்தில் என்ன சுகமோ” என்ற விரைவான டூயட் பாடல். சுசீலாவும் டி.எம்.சவுந்தர்ராஜனும் பாடினர். ஆலங்குடி சோமு எழுதியது. இந்தப் பாடலை டி.எம்.எஸ் பாடிய விதம் கவனிக்கத்தக்கது. “இன்பத்தின் அறிமுகமோ” என்ற சொற்களை அவர் உச்சரிக்கும் விதம் அவ்வளவு அழகாக இருந்தது. அத்தனை மென்மையாக பாடுவதென்பது அவரால் மட்டுமே இயலக்கூடிய காரியம்.

ஆடு ராட்டே என்ற பாடல் நத்தையில் முத்து படத்தில் சீர்காழி கோவிந்தராஜனும் ராதா ஜெயலக்ஷ்மியும் பாடியது.

வாக்குறுதி படத்தில் வாலி எழுதிய கண்ணே தேடி வந்தது யோகம் ஓடி வந்தது மேகம் ஸ்டைலான பாடல். இதே படத்தில் கண்ணதாசன் எழுத்தில் ஏ ராதா ஏ ராதா என்ற கொஞ்சும் பாடலொன்று இடம்பெற்றது. பாடங்களைச் சொல்லிடவா பார்வையிலே என்னை அள்ளிடவா என்ற பாட்டு அது. டி.எம்.சவுந்தர்ராஜனின் உச்சகாலத்தில் அமைந்த பாடல்களில் ஒன்று. குளுமையான டூயட் பாட்டு இது.

வந்தாளே மகராசி படத்தில் ராக்கம்மா ராணி என்ற சின்னஞ்சிறிய பாடலொன்று இடம்பெற்றது. டி.எம்.எஸ்., சீர்காழி சேர்ந்து பாடிய குழுப்பாடல் அது. ஒன்றரை நிமிடமே இடம்பெறக்கூடியது. இன்றும் கேட்டால் புதியதாகவே ஒலிப்பது. இதே படத்தில் கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம்ஸ் என்ற பாட்டு இடம்பெற்றது. இதை சவுந்தர்ராஜனோடு இணைந்து பாடினார் ஜெயலலிதா.

ஓரிடம் உன்னிடம் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற படம் வீட்டுக்கு ஒரு மருமகள். இந்த டூயட்டை டி.எம்.எஸ்.ஸோடு சேர்ந்து பாடினார் வாணி ஜெயராம். இதுதான் தமிழில் அவரது முதற்பாடல்.  இதே படத்தில் ஏ.எம்.ராஜா, ஜிக்கி டூயட் ஒன்று இடம்பெற்றது. ஒருவன் ஒருத்தி துணை சேர்ந்துவிட்டால் என்று ஆரம்பித்தது.

கண்ணருகே வெள்ளி நிலா கையருகே வண்ணப் புறா என்று பி.சுசீலா பாடிய அட்டகாசமான சோலோ பாடல் இடம்பெற்ற படம் டாக்டரம்மா.

ஏ.பி.ராஜ் இயக்கத்தில் கை நிறையக் காசு என்ற படத்தின் டைட்டில் பாடல் கை நிறையக் காசு எனத் தொடங்கிற்று. இதைப் பாடியவர் கணேசன் (சங்கர்-கணேஷ்)

பத்து மாதப் பந்தம் படத்தில் ஏ.எம்.ராஜா, ஜிக்கியின் அழகான டூயட் ஒன்று அமைந்தது. கண்ணதாசன் எழுதியது. எதைக் கேட்பதோ எதைச் சொல்வதோ என்ற பாடல். இந்தப் பாடல் மனதின் அடியாழத்தில் எதோவொரு திறக்க முடியாத ஞாபகக் கதவொன்றைத் திறந்து வைத்துவிடுகிறது.

ஆரம்பம் இன்றேதான் என்ற பாடல் சொர்க்கத்தில் திருமணம் படத்தில் பாலு பாடியது.

தேவியின் திருமுகம் பாடல் எழுபதுகளின் சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்று. டி.எம்.எஸ், சுசீலா பாடிய காதல் லாலிபாப் இந்தப் பாடல். மருதகாசி எழுதியது, இடம்பெற்ற படம் வெள்ளிக்கிழமை விரதம். சிவக்குமார், ஜெயச்சித்ரா நடித்த வண்ணப்படம் இது.

அன்பு ரோஜா படத்தில் ஏ.எம்.ராஜா, சுசீலா பாடிய டூயட் ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம் என்ற பாடல். சர்க்கரையைக் கொட்டித் தேனில் கலந்த பாடல். கண்ணதாசன் எழுதிய கானம் இது.

வாணி ஜெயராமுக்கு அமைந்த ஆரம்பகாலத் தேன் பாகுப் பாடல்களில் முக்கியமானது என இதனைச் சொல்வேன். என் உள்ளம் அழகான வெள்ளித்திரை, சினிமாப் பைத்தியம் படத்துக்காக இசையிருவர் உருக்கொடுத்த அற்புதம். இதனை எழுதியவர் கண்ணதாசன்.

என் உள்ளம் அழகான வெள்ளித்திரை

என் உள்ளம் அழகான வெள்ளித்திரை

அதில் உன் வண்ணமே பொன்னோவியம்

நிழலாடும் படம் என்றும் நீ அல்லவா

என் உள்ளம்

கண்ணாடி திருமேனி அவன் தந்தது

நீ கண் வைத்துப் பாராமல் துயர்கொண்டது

பொன்மஞ்சள் பூந்தேகம் பொன் போன்றது

அது பொலிகின்றது உன்னை வலம் வந்தது

என் உள்ளம்

இதமான இதழ் உண்டு படம் போடவே

தினம் இசை கூட்டும் இடை உண்டு ஒலி கேட்கவே

கனிகின்ற முகம் உண்டு ஒளி பார்க்கவே

நீ கதை நாயகன் மங்கை கதை நாயகி

என் உள்ளம்

எழுபதுகளில் தொடங்கி இன்றும் நன்றேயென ஒலித்திருப்பது இதன் சொல்வழி சாகசம்தான் இல்லையா?

மதுவிலே பழையது மங்கையில் புதியது என்ற பாடல் எங்க பாட்டன் சொத்து படத்துக்காக வாணி பாடிய வேகமான கிளப் வகை விரைவிசைப் பாடல். கண்ணதாசன் எழுதியது. “தாவி விழுந்தொரு காவியம் செய்வோம் ஆவி கலந்தாட” என்று பாடும்போது தன் குரலின் வேறொரு பிரதியை உண்டாக்க முனைந்தார் வாணி ஜெயராம்.

பிஞ்சுமனம் படத்தில் இடம்பெற்ற வித்தியாசமான டூயட் வாணியும் ஜேசுதாஸூம் பாடியது. வானம் பொழிந்தது எனத் தொடங்கும் இந்தப் பாடல், தான் நிகழ்ந்த காலத்திலிருந்து தன்னை எளிதாக விடுவித்துக்கொள்கிறது. இன்றைய புத்தம் புதிய காலத்தின் கானமாக ஒலித்துச் சிறக்கிறது. “என்னை நான் கொடுத்தேன்” என்ற வரியை ஜேசுதாஸ் பாடும் இடமானது எத்தனையோ ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தோன்றுகிற துருவ நட்சத்திரத்தின் மினுங்கல் வருகை போன்றது. சட்டுச்சட்டென்று பாடலின் நகர்திசை வேகம் மாற்றமெடுப்பது இந்தப் பாடலின் கூடுதல் சிறப்பு. ஜேசுதாஸ் பிற்காலங்களில் பாடிய பல பாடல்களுக்கு அப்பாலும் இதனைத் தேடிக் கேட்கையில் முன்னர் அறியாத புதிய இரகசியத்தைக் கேட்கும் கணமாகவே மனத்தை மயக்குகிறது. எண்பதுகளின் ஆகச்சிறந்த டூயட் பாடலான “அழகிய விழிகளில் அறுபது கலைகளும்” பாடலின் மைய இசையைத் தொட்டுச் செல்லக்கூடிய இந்தப் பாடலின் இசைத் தோகைகளின் இயல்பொருமித்தல் கேட்கும் யாவரையும் வசீகரிக்கும். இம்மாதிரியான பாடல்களை மட்டும் எடுத்துத் தொகுத்தால் இந்தப் பாடல் இதற்குத் தொடர்புறாத வேறொரு காலத்தின் மற்றொரு பாடலுக்கு முன்பின்னாய்த் தன்னை செருகிக்கொள்ளவல்லது. இசையை எடுத்துத் தொகுக்கும் போது மட்டும் ஏற்படக்கூடிய விசித்திர பந்தம் அது.

தாயில்லாக் குழந்தை படத்தில் நீர் மேகம் ஆனால் என்ன என்ற மெலடி பாடல் ஈர்த்தது. டி.எம்.எஸ், சுசீலா டூயட் இது. கண்ணதாசன் எழுதியது. இந்தப் பாடலிலும் சொல்லில் வராத வித்தியாசமான சோகமும் வேகமும் சேர்ந்தொலிப்பது ரசம். அந்தக் காலகட்டத்தின் அபாரமான பெருவெற்றிப் பாடல்களுக்கு நடுவே இந்தப் பாடல் சரியாக உள்வாங்கப்படவில்லை என்கிற ஆதங்கம் எனக்குண்டு. இப்படியான பாடல்களை நின்று நிதானித்து உள்நுழைந்து பார்க்கையில் பண்டிகை நாளின் மிதமிஞ்சிய சுவைகூடிய விருந்தொன்றின் மனத்திருப்தி ஒன்றினை உணர முடிகிறது.

எழுபதுகளில் சங்கர் கணேஷ் இசையமைத்த பாடல்கள் பல. அவசியம் கேட்டாக வேண்டிய பாடல்கள் என்று நான் கருதுபவற்றில் மேலும்  சிலவற்றை இங்கே வரிசைப்படுத்தியிருக்கிறேன்.

முதலில், நல்லதுக்குக் காலமில்லை என்ற படத்தில் Happy Returns all my brothers எனத் தொடங்கும் கோரஸ் பாடல். இதன் கோரஸ் உப குரல்களின் உன்னதம் மெச்சத்தக்கது. இன்றுவரை இனித்து ஒலிக்கும் நற்பாடல். அடுத்து, உங்களில் ஒருத்தி படத்தில் சாமத்தில் பூத்த மல்லி சந்திரனை சாட்சி வச்சேன் என்ற பாடல். ஜெயச்சந்திரன், வாணி பாடியது. வாலி எழுதியது. இதே படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் இருவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிதான் என்ற கண்ணதாசன் எழுதிய பாடல்.

மீனாட்சி கோயில் கொண்ட மணியோசை என்ற பாடல் ஆசை மனைவி படத்தில் இடம்பெற்ற சுசீலா, டி.எம்.எஸ் டூயட்.

ஜப்பான் நாட்டுக் கப்பலேறி ஒருத்தி வந்தாளாம் என்ற பாடல் இன்ஸ்பெக்டர் மனைவி படத்துக்காகக் கண்ணதாசன் எழுதியது. சுசீலா சோலோ. இதிலேயே இளமையின் உறவிலே என்ன சுகம் டூயட்டானது ஜெயச்சந்திரனும் சுசீலாவும் பாடிய மெலடி. சின்னப்பொண்ணா இருக்கையிலே ஜேசுதாஸ், சுசீலா டூயட். மனமார வாழ்த்துங்கள் படம். கண்ணதாசன் எழுதிய பாடல் இது.

ஆறு புஷ்பங்கள், ஆட்டுக்கார அலமேலு, அண்ணன் ஒரு கோயில் ஆகியவை தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின. ஆட்டுக்கார அலமேலு எதிர்பாராத சூப்பர் ஹிட் ஆனது. சுசீலாவும் டி.எம்.எஸ்ஸூம் பாடிய டூயட்டான பருத்தி எடுக்கையிலே பாடல் வானம் கடந்த கானமானது. உயர்ந்தவர்கள் படத்தில் இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இதை ஜேசுதாஸ் பாடினார். இதே படத்தில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய ராமனும் நீயே என்பதும் முக்கியமான பாடலே. பாலாபிஷேகம் படத்தில் குன்றில் ஆடும் குமரனுக்கு என்ற பாடல் இனித்தது. கரகம் சுமந்தபடி நடிகை ஸ்ரீப்ரியா பாடுவதாகக் காட்சி இருந்தது. சொர்க்கம் நரகம் படத்தில் சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு என்ற பாடல் இடம்பெற்றது. கராத்தே கமலா படத்தில் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் பாடிய டூயட் கதை சொல்லும் சிலைகள். புலமைப்பித்தன் எழுதிய பாடல். ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ பாடல் மீனாட்சி குங்குமம் படத்தில் ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் பாடிய டூயட்.

இனிக்கும் இளமை படத்தில் ஒரு ஜாலி பாடல் மாலை மயங்கினால் இரவாகும் என்று தொடங்கும். பி.பீ.சீனிவாஸ், எஸ்.பி.ஷைலஜா இணைந்து பாடிய டூயட். ஆலங்குடி சோமு எழுதியது. மாம்பழத்து வண்டு படத்தில் ஐ லவ் யூ பனித்தேன் மலையே என்ற பாடல் இடம்பெற்றது. வாணி ஜெயராம் பாடினார். விசில் சப்தத்தோடு தொடங்கும் இன்னொரு பாடல் மீனா ஹலோ மீனா என்று தொடங்கிற்று. ஜெயச்சந்திரன் பாடிய ஸ்டைலான பாடல் இது. மாந்தோப்புக் கிளியே படப்பாடல் பூவோ மலர்ந்திருக்கு. வாலி எழுதி பஞ்சபூதம் படத்தில் ஜெயச்சந்திரன், ஜானகி பாடியது என் ராஜாத்தி ஒரு ரோஜாப்பூ.

சோழனின் மகளே வா என்ற பாடல் டி.எம்.எஸ், வாணி ஜெயராம் பாடிய டூயட். படம் நெஞ்சுக்கு நீதி. நான் இசைக்கும் ராகமெல்லாம் என்ற டி.எம்.எஸ் பாடிய பாடல் இடம்பெற்ற படம் சிரி சிரி மாமா. குமரிப் பெண்ணின் உள்ளத்திலே படத்தில் மதுக்கடலோ பாடல் மிகப் பிரபலமான ஒன்று. அதிலேயே வான் மேகமே பூந்தென்றலே என்ற பாடலும் இனித்தது.

1979ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் நாள் வெளியானது பி.வி.பாலகுரு இயக்கத்தில் எஸ்.ஏ.ராஜ்கண்ணு ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் சார்பாக தயாரித்த கன்னிப் பருவத்திலே திரைப்படம். இந்தப் படத்தில் ராஜேஷ், பாக்யராஜ், வடிவுக்கரசி, ஜி.சீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ஒரு மியூசிக் ட்ரீட். ஆவாரம்பூ மணி என்ற பாடலை ஜானகியும் நடய மாத்து என்ற பாடலை மலேசியா வாசுதேவனும் ஜானகியும் பாடினார்கள். பட்டு வண்ண ரோசாவாம் என்கிற புலமைப்பித்தன் எழுதிய பாடலை மலேசியா வாசுதேவன் தனியாகவும் ஜானகி தனியாகவும் பாடினார்கள். “பட்டு வண்ண ரோசாவாம்” பாடல் ஒரு சோகத் தாமரை. கேட்பவர் உள்ளங்களைப் பள்ளம் செய்து கண்ணீரை நிரப்பிய கானவாரி.

சங்கர் கணேஷ் இசையமைத்து எண்பதாம் ஆண்டுவரை தவிர்க்க முடியாத முக்கியப் படங்கள் என மாணவன், தேன் கிண்ணம், நான் ஏன் பிறந்தேன், இதயவீணை, காசி யாத்திரை, கண்ணம்மா, பட்டிக்காட்டு ராஜா, எங்க பாட்டன் சொத்து, சினிமாப் பைத்தியம், ஆட்டுக்கார அலமேலு, இனிக்கும் இளமை, நீயா, தாயில்லாமல் நானில்லை, கன்னிப் பருவத்திலே, பசி ஆகிய படங்களைச் சொல்லலாம்.

எழுபதுகளின் இசை வரலாற்றை எழுத முனையும்போது சங்கர் கணேஷ் பெயர்களைத் தவிர்த்துவிட்டு நிச்சயமாக அதனைப் பூர்த்தி செய்துவிட முடியாது. இந்தியத் திரையிசைச் சரித்திரத்தில் இரண்டு பேர் சேர்ந்து இசையமைப்பது எல்லா மொழிகளிலும் நிலங்களிலும் பொருந்தியும் பொருந்தாமலும் எப்போதும் இருந்து வருவது. சங்கர் – ஜெய்கிஷன், ராஜன் – நாகேந்திரா, கல்யாஞ்சி – ஆனந்தி, விஸ்வநாதன் – ராமமூர்த்தி போலவே சங்கரும் கணேசனும் முதன்மையானவர்கள். இருவரில் ஒருவர் காலமான பிறகும் “சங்கர் – கணேஷ்” எனும் பெயரிலேயே இன்றுவரை கணேஷ் இயங்கி வருவது அவர்கள் இணைப்பின் சிறப்பு.

கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி, வி.குமார், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, வேதா எனப் பலரும் கோலோச்சிவந்த காலத்தில் சங்கர் – கணேஷ் இசைக்கத் தொடங்கினார்கள். வேண்டியவர்க்கு வேண்டியதைத் தந்த வகையில் சுமார் இருபதாண்டு காலம் இரு வெவ்வேறு தசாப்தங்களில் மிகப் பரபரப்பாக இசையமைத்த பெருமை அவர்களுக்கு உண்டு. இதில் கவனிக்க வேண்டியது, விஸ்வநாதனுக்கும் மகாதேவனுக்கும் இளையராஜாவுக்கும் இடைப்பட்ட காலத்தில் இசைக்கத் தொடங்கி, இவர்கள் மூவரோடும் வாய்ப்புச் சமர் புரிந்து எதிர்நீச்சல் அடித்த வகையில், இது மிக முக்கியமானதொரு காலகட்டம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. இசையின் வடிவமும் தேவையும் மக்களின் இரசனையும் ஆர்வமும் திரையுலகின் எதிர்பார்ப்பும் என எல்லாமும் மிக அதிகமான மாறுதல்களுக்கு உட்பட்ட அதே காலகட்டத்தில், நிற்க நேரமில்லாமல் கூடியவர்களில் இவ்விருவருக்கும் நிச்சயம் இடமுண்டு.

எந்தவிதமான பற்றுதலும் நிர்பந்தமாக மாறாத வண்ணம் திரையிசை, பாடலிசை, குரல்கள் எனப் பலவற்றையும் திறம்படக் கையாளத் தெரிந்தவர்கள் சங்கர் கணேஷ். பாடல் உருவாக்கத்தில் தங்களுக்கென்று தனித்த திட்டங்களைச் செயல்படுத்தியவர்கள். தமிழ்த் திரையுலகில் ரீமேக் செய்யப்பட்ட வேற்றுமொழிப் படங்களின் மூலப்பிரதியிலிருந்த பாடல்கள் பலவற்றைத் தமிழில் மீவுரு செய்திருக்கின்றனர். ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, ஒரியா, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிப் பாடல்களின் தாக்கத்திலும் தமிழில் பல்வகைப் பாடல்களை உருவாக்கியவர்கள் சங்கர் கணேஷ். திரையிசைத் தேவை என முன்வைக்கப்படுகையில் இப்படியான பாடல்களை மறுதலிக்காமல் உருவாக்கிய சங்கர் கணேஷ் இருவரும் அதிகம் அறியப்படாத பாடல்கள் பலவற்றில் உயிரை அள்ளித் தெளித்து இசையமைத்திருக்கின்றனர் என்பதுதான் திரை இசை எனும் பதத்தின் விநோதமான இரண்டு பக்கங்கள். சங்கர் கணேஷின் பல பாடல்கள் யூகத்திற்கு அப்பாற்பட்ட விசித்திரங்கள். குரல்களாகட்டும், இசைக்கருவிகளாகட்டும், தேர்ந்த உபயோகமும் புத்தம் புதிய மேலெழுச்சியும் கொண்ட பல பாடல்களை அவர்கள் படைத்தனர். மாபெரும் பார்வை மாற்றுக் காலத்தில் தங்களை இசையமைப்பாளர்களாக நிலைநிறுத்திக்கொண்ட வேறு யாரைவிடவும் அழகான, அரிதான, விரும்பத்தக்க பல பாடல்களைப் படைத்தவர்கள் என்று நிச்சயமாக சங்கர் கணேஷ் இருவரையும் சொல்ல முடியும். பட்ஜெட் படங்களின் மெல்லிசை மன்னர்கள் என்று கேலிச்சொல்லாடல் ஒன்றைப் புழங்குவார்களாம். அதில் ஒளிந்துறையும் கேலியைத் தாண்டியும் அப்படிச் சொல்வதற்கான அர்த்தமும் தகுதியும் கொண்ட பல பாடல்களை அள்ளித்தந்த இசை வள்ளல் தன்மை அவர்களிடம் இருந்தது என்பது தகர்க்க முடியாத கருத்துருதான்.

திரையிசை அமைப்பு என்னும் மகா கலையில் தமிழ் சினிமா தொடங்கிய நாள் முதல் எண்ணற்றோர் பணியாற்றி இருக்கின்றனர். தமிழ்த் திரையிசைச் சரித்திரத்தின் சக்கரவர்த்திகளாக ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி, எம்.எஸ்.வி (தனியே), இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் காலத்தின் திரைத் தேவை, திரையிசையின் திசை, பாடலின் உரு ஆகியவற்றில் தங்கள் முத்திரைகளைப் பதித்தவர்கள். மேதைமையும் சவால்களைச் சுக்கு நூறாக்கிய வல்லமையும் தனித்துவமும் இன்னபிறவும் இவர்களைத் தனித்துயர்த்தியது. நூறாண்டை நெருங்குகிற தமிழ்த் திரையிசை வரலாற்றில் மேற்சொன்னவர்களைத் தவிரவும் அவசியம் குறிப்பிட்டே ஆகவேண்டிய இசைஞர்கள் பலரும் உண்டு. அப்படித் தவிர்க்க முடியாதவர்கள் ஒவ்வொரு தசாப்தத்தில் இருந்தும் உயர்ந்தும் குன்றியும் தத்தமது இசைவிளக்கை ஏற்றி ஒளிர்ந்தவர்களே. அவர்களில் முதன்மையான பெயராகக் குறிப்பிட வேண்டிய பெயர்கள்தான் சங்கர்-கணேஷ். அறுபதுகளின் பிற்பகுதியில் தொடங்கி தொண்ணூறுகளின் தொடக்கம் வரை தமது பெயரை நிலைநாட்டி, பல படங்களில் முக்கியமான பல்வேறு பாடல்களை உருவாக்கியவர்களான இசையிருவர் சங்கர் கணேஷ், கே.வி.மகாதேவன் தொடங்கி இளையராஜா வரையிலான முக்கியமான மேதைகளின் மகாவுயரக் காலத்தில் அவர்களுக்குப் படர்க்கையில் படகோட்டியவர்கள் என்று பெருமையோடு குறிப்பிடப்பட வேண்டிய பெயர்கள்தான். பேராழிக் காலத்தின் பெருமைக்குரிய இசை மாலுமிகளாக விளங்கிய இருவரும் 1980ஆம் ஆண்டுக்கு அப்பால் இசையமைத்த படங்கள், பாடல்களைக் குறித்து இதற்கடுத்த அத்தியாயம் இன்னும் அருகே சென்று விளங்கத் தரும்.

-தொடரலாம்.

*

முந்தைய பகுதிகள்:

  1. கமல்ஹாசன்
  2. வீ.குமார்
  3. ஷ்யாம்
  4. மலேசியா வாசுதேவன்
  5. ஹரிஹரன்
  6. பி.ஜெயச்சந்திரன்
  7. ஹரீஷ் ராகவேந்திரா